பெட்டி

0
கதையாசிரியர்:
கதைத்தொகுப்பு: கிரைம்
கதைப்பதிவு: November 21, 2022
பார்வையிட்டோர்: 6,828 
 

பல்லவனுக்காக கால் கடுக்க நின்றிருந்த போதுதான் பஸ் ஸ்டாப்பில் இருநத அந்தப் பெட்டி விமலின் கண்களை உறுத்த ஆரம்பித்தது.

சிவப்புக் கலரில் வர்ணம் பூசப்பட்டு, சதுரமாய் தெர்மாஸ் போல தலையின் கைப்பிடியுடன் இருந்த அதன் கவர்ச்சி அவனை ஈர்த்தது.

“மாமா! அதைப் பார்த்தீங்களா…?” என்றான் உற்சாகத்துடன்

சேது அதற்குப் பதில் சொல்லாமல் நரசிம்மராவாய் (உம்மென்று) நின்றிருநதார். அயோத்தியோ, பஞ்சாப் பிரச்சனையோ, புதிய பொருளாதாரக் கொள்கையோ அதற்குக் காரணமில்லை. ஹர்சத் மேத்தாவும் காரணமில்லை.

எத்தனை வெட்டிவிட்டாலும் படுவா வந்து வந்து ஒட்டிக் கொள்கிறானே இவனிடமிருந்து விடுதலையே கிடையாதா என்கிற கோபம்! அவன் அந்தக் கோபத்தை கண்டு கொள்ளாமல், “மாமா! நமக்கு லாட்டரி அடிக்கப் போகுது” என்றான் அருகில் வந்து கிசுகிசுப்புடன். “அந்த பெட்டியைப் பார்த்தீங்களா…?”

“அதுக்கென்னவாம்..?”

“நாம வந்தப்போ சிட்டு ஒண்ணு அவசர அவசரமாய் கைகொள்ளாமல் பைகளுடன் ஆட்டோவுல ஏறிச்சே.. கவனிச்சீங்களா… அதுதான் இதை விட்டுடடுப் போயிருக்கணும்!”

அப்போது பல்லவன் ஓடிவந்து வழக்கம்போல் ஸ்டாப்பைக் கண்டு பயந்து தள்ளிபோய் நிற்கவும், பயணிகள் ஓட ஆரம்பித்தனர். அந்த ஓட்டத்தில் கலந்து கொண்ட சேதுவை விமல் தடுத்து நிறுத்தி, “வெயிட் எ மினிட்!” என்றான். அவனுக்கு எப்போதும் பேராசை!

“எண்டா…?”

“அக்கம் பக்கம் யாருமில்லை. அந்த பெட்டியை ரூட்டு போட்டிருவோம்!”

“எதுக்கு…?”

“எதுக்கா…? பிழைக்கத் தெரியாத ஆள்ன்னு அக்கா சும்மாவா உங்களை திட்டுது…? பொட்டியை வித்தாவே இருநூறு முண்ணூறு தேறும்!” என்று அதனை நெருங்கினான். “உன்னே. இன்னும் என்ன பொருள் இருக்கிறதோ!”

“ஏய்… ! தொடாதடா! குண்டு குண்டு…”

சேது அலற, ஒரு நிமிடம் (அதிகமில்லை ஜெண்டில் மேன் ஒரே ஒரு நிமிடம்!) ஆடிப்போனவன். குண்டாவது கிண்டாவது என ஆடிக் கொண்டே பெட்டியைத் தூக்கி வந்தான்.”அம்மாடி! செம கனம்! அப்படியே எடைக்குப் போட்டாலே. !” என்று விசில் அடித்தான்.

“வேணாண்டா. அடுத்தவங்க பொருளுக்கு ஆசைப்படக் கூடாது!”

“அதைப் போய் அயோத்தியில் சொல்லுங்க!”

“வேணாண்டா. சொற்தைக்கேளு! பேசாமல் போலீசுல ஒப்படைச்சிருவோம்!”

போலீஸ் என்றதும் அவனது முகத்தில் களவரம் தோன்றி பிறகு அதுவே பிரகாசமாயிற்று! இதற்கு முன்பு பேப்பரில் படித்திருந்த செய்திகள் மண்டைக்குள் ஓட ஆரம்பித்தன.

“ரெண்டு லட்சம் ரூபாயுடன் பெரியவர் ஒருவர் தவறவிட்டு விட்டுப் போன பெட்டியை பொறுப்பிடன் போலீஸில் ஒப்படைத்த ஆட்டோ டிரைவருக்கு கமிஷனர் பாராட்டு! அத்துடன் மேலும் ரூபாய் ரெண்டாயிரம் சன்மானமும அளித்தார்!”

அந்த ரெண்டாயிரமும், உதடுகளுக்குள் சிரிப்புமாய் போஸ் கொடுத்திருந்த ஆட்டோகாரரின் படம் அவனது கண்களில் இன்னமும் இருந்தது.

பெட்டியை சுட்டால் வெறும் பணம் மட்டும்தான் கிடைக்கும். அதையே போலீஸில் ஒப்படைத்தால் பணத்திற்கு பணம்! பாராட்டு! அத்துடன் பேப்பர்களிலெல்லாம் பெரிசு பெரிசாய் போட்டோ வரும்!

எங்களது ஜோரான நேர்மை பறைசாற்றப்படும். பேட்டி எடுக்கப்படும் ஆமாம் அதுதான் சரி!

“மாமா! கிளம்புங்க!” என்று பள்ளத்தில் குறிப்புடன் ஓடிவந்து ஆட்டோவை மறித்தான்.

“எங்கேடா…?”

“நீங்க சொன்னபடியே ஸ்டேஷனில் பெட்டியை ஒப்படைக்சிருவோம்!” என்று அவரையும் ஆட்டோவுக்குள் அழைததான். அவனுடைய திடீர் மாற்றம் அவருக்கு விளங்கவில்லை. அயோக்கிய பயல் என்ன திட்டம் போட்டிருக்கிறானோ என்று பயந்தார்.

மீட்டர் போடப்படாமலே ஆட்டோ ஓட அவனுக்கு ஆர்வம் தாங்கவில்லை. கற்பனை ஓடிற்று. பெட்டிக்குள் என்ன இருக்கும்… தங்கமா, வைரமா இல்லை வைடூரியமா….? அதை அறிந்து கொள்ள கைகளில் அரிப்பெடுத்தது.

சட்டென மூடியைத் திறந்து ஒருக்களித்துப பார்த்தான். உள்ளே காப்பி கலரில் சீசாக்கள்! எல்லாமே ரெண்டங்குல உயரம்தான்! ரப்பர் கார்க் போடப்பட்டு. டிரேயில் கச்சிதமாய் அடுக்கப்பட்டிருந்தன.

காற்றுவாக்கில் அதிலிருந்து மயக்கமாய் ஆல்கஹால் பணம்! என்ன வைகள்? மைகாட்! எங்கக்கா காட்! பாட்டில்களில் என்ன… மயக்கம் மருந்தா…?

“ஆட்டோவை நிறுத்துப்பா!”

“ஏண்டா..?”

“டிரைவர்! நீ நிறுத்துப்பா!”

ஆட்டோ சறுக்கிக் கொண்டு ஓரம் கட்டவும் இறங்கி, பத்து ரூபாய் மீட்டருக்கு மேல் மொய் கொடுத்து அனுப்பிவிட்டு, “மாமா! நல்லவேளை…. மடத்தனம் செய்யாமல் தப்பித்தோம்!”

“என்னடா சொல்றே நீ? எனக்கு ஒண்ணுமே புரியலை!”

“உங்களுக்கு என்னைக்கு புரிஞ்சிருக்கு? பெட்டிக்குள்ளே என்ன இருக்கு தெரியுமா… அவ்ளோவும் சுகரு!”

“சுகரா.?”

“ஆமாம். அத்தோட ஒரு பிரவுனையும் சேர்த்துக்குங்க! இது சாதா பொட்டியில்லை. கோடீஸ்வர பெட்டி! அது சாதாரண பொம்பளை இல்லே மாமா! கடத்தல் பொண்ணு! இதை பொட்டலம் போட்டு காலேஜ் வாசல்ல உக்காந்தாக்கூட போதும் ஒரே வாரத்துல நாம ஹர்ஷத் மேத்தாவையே மிஞ்சிருவோம்!”

“வேணாம்ண்டா.. அந்த பொண் பாவம்!”

“பாவமா. ஹாஹ்ஹா! சிங்காரிச்சுகிட்டு சென்ட்டு போட்டுகிட்டு ஆட்டோவுல ஏறினப்பவே நினைச்சேன். சரியான ஃப்ராடுன்னு!”

“அவள் எப்படியிருந்தால் நமக்கென்னவாம்! அவ தப்பு பண்ணிணால் அதை அவளே அனுபவிச்சுட்டுப் போறாள்.நாம் பேசாமல் போலீஸில் ஒப்படைப்போம் – அவங்களாப் பார்த்து கொடுக்கிற சன்மானத்தை வாங்கிகிட்டு, ஃபோட்டோ எடுத்தால் போஸ் கொடுத்துவிட்டு வந்திருவோம்!”

“உளறாதீங்க மாமா! இதைக் கொண்டு போய் கொடுத்தால் சன்மானம் கையில் கொடுக்கமாட்டாங்க! முதுவுலதான் கிடைக்கும். உள்ளே தள்ளி மயக்கமருந்து கடத்தினவர்களை போலீஸ் சாகசத்துடன் வளைத்து -ஒடித்து பிடித்துன்னு அவங்க தான் போட்டாவுக்கு போஸ் கொடுப்பாங்க!”

“ஆமாம். அதுவும் கூட சரிதான். பேசாம அந்தப் பொண்ணு கிட்டயே திருப்பி கொடுத்திருவோம்!” என்று பெட்டிமேல் இருந்த ஸ்டிக்கரைப் பார்த்தார். அதில் கைஃபா லேபரட்டரீஸ் டெல்லி என்றிருந்தது. போன் நம்பர்கூட தெளிவாயிருந்தது.

“பார்த்தீங்களா…? சந்தேகம் வரக்கூடாதுன்னு லேபரட்டரின்னு சீட்டு ஒட்டியிருக்காள்! எல்லாம் கடோத் கஜம். மாமா! இதை வச்சுகிட்டு அவளிடம் டீல் போடுவோம்!”

“என்னன்னு?”

“உன்னோட மருந்து எங்கள் கையில்! மரியாதையாய் ஒரு லட்சம் கொடுத்திட்டு இதைப் பெற்றுக் கொண்டு போ! ஒரு வாரம் டயம்! அதற்குள் லட்சம் வரவில்லையென்றால் மருந்து போலீஸ்ல ஒப்படைக்கப்படும்னு போன் போயிடுவோம்!”

“வேணாம்டா. எதுக்கு வம்பு! எத்தனை கதைகள்ல படிச்சியருக்கோம்… எவ்வளவுதான் திட்டம் போட்டு பிளாக்மெயில் பண்ணினாலும் கடைசியில் மாட்டிக்குவாங்க!நாம பேசாமல் போலீஸுல…”

“விவரம் புயித பேசாதீங்க மாமா! நீங்கள் வேணுமானால் யோக்கியமாய் நடந்து கொள்ளலாம். எல்லா போலீஸுங்களும் அப்படியே யோக்கியமாய் நடவடிக்கை எடுப்பாங்கண்ணு எதிர்பார்ப்பது முட்டாள்தனம்! நம்மைவிட அவங்க கில்லாடிங்க! காதும் காதும் வச்சமாதிரி கேஸ் பைல் பண்ணாமல் அவங்களே அந்த டெல்லி லாபரட்டரியோட டீல் போட்டுவிடக்கூடும்!”

“போலீஸ் அப்படிக்கூட செய்யுமா….?”

“ஏன் செய்யாது? ஸ்டேஷன்ல வச்சு கொலை நடக்குது, கற்பழிப்பு பேசாம வாங்க மாமா! வலிய வந்த ஸ்ரீதேவியை எட்டி உதைக்காதீங்க!”

விமல் அவரை அழைத்துக் கொண்டு, டெல்லிக்கு அந்த அட்ரஸிற்கு உடனே போன் பேச வேண்டி எஸ்.டி.டி பூத்தைத் தேடி நடக்க ஆரம்பித்தான்.

அதே சமயத்தில்-

பக்கத்து போலீஸ் ஸ்டேஷனில் அந்தப் பெண், “சார்! என்னுடைய சிகப்பு கலர் பெட்டியை பஸ் ஸ்டாப்பில் தவறவிட்டு விட்டேன். அதை நீங்கள்தான் கண்டுபிடித்துத தரவேண்டும்!” என்று புகார் கொடுத்துக் கொண்டிருந்தாள்.

“அதில் அப்படி என்னம்மா வைத்திருந்தாய்?”

“அந்த பகுதியில் காலரா பரவியிருக்கிறதென்று ஜனங்களிடமிருந்து Stool எடுத்து டெல்லி லேபிற்கு அனுப்பச் சொல்லி அரசாங்கம் சொல்லியிருந்தது!”

– வானத்ததை தொட்டவன் (மினனூல் வெளியீடு: http://www.freetamilebooks.com)

Print Friendly, PDF & Email

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *