முன்னுரை
ஷெர்லாக் ஹோல்ம்ஸ் பற்றித் தெரியாதவர்களுக்கு ஒரு சிறிய அறிமுகம். ஆங்கில எழுத்தாளர் சர் ஆர்தர் கானன் டாயில் தனது கதைகளுக்காக உருவாக்கிய கற்பனைப் பாத்திரம். அவர் ஒரு தனியார் உளவாளியாகச் சித்தரிக்கப்பட்டுள்ளார். அவரது உடன் வேலை செய்பவர் வாட்சன். அவர் ஒரு மருத்துவர். இவர்கள் இருவரும் உண்மையான மனிதர்கள் என்று எண்ணுபவர்கள் கூட இருக்கிறார்கள். ஷெர்லாக் ஹோல்ம்ஸ் தன் கூர்மையான ஆராய்ச்சி அறிவால் ஒரு விஷயத்தை அக்கு வேறு ஆணி வேறாகப் பிரித்து மேய்ந்து விடுவார். சின்னச் சின்ன விஷயங்களையும் உற்று நோக்கும் பண்பு கொண்டவர்.
பத்தொன்பது மற்றும் இருபதாம் நூற்றாண்டின் இணையற்ற ஆங்கில எழுத்தாளர் சர் ஆர்தர் கானன் டாயில் என்று சொன்னால் மிகையாகாது. 1911 ஆம் ஆண்டு “The Strand Magazine” என்னும் ஆங்கில இதழில் வெளியான ஒரு சிறுகதை இது. பிரான்செஸ் என்ற காணாமல் போன ஒரு பெண்ணை எவ்வாறு கண்டு பிடிக்கிறார் என்பது பற்றிய சிறு கதை.
பிரான்செஸ் தொலைந்த மர்மம்
எனது புதைமிதியடிகளையே கூர்ந்து கவனித்த வண்ணம் ஷெர்லாக் ஹோல்ம்ஸ் கேட்டார். “ஏன் துருக்கியைச் சார்ந்தது?” நான் தற்சமயம் மரத் தடியால் அண்டங்கொடுக்கப்பட்ட ஒரு நாற்காலியின் மேல் சாய்ந்திருந்தேன். துருத்திக் கொண்டிருந்த எனது கால்கள் எப்பொழுதும் ஓடிக் கொண்டே இருக்கும் அவரது கவனத்தை ஈர்த்திருக்க வேண்டும்.
சற்றே ஆச்சர்யத்துடன் பதில் அளித்தேன். “இங்கிலாந்து” என்று. “ஆக்ஸ்போர்ட் தெருவில் உள்ள லேடிமரில் வாங்கினேன்.”
ஹோல்ம்ஸ் பொறுமை இல்லாமல் புன்னகைத்தார்.
“குளியல்” என்றார் அவர். “அந்தக் குளியல்! நம் உள்ளூர்த் தயாரிப்பு உற்சாகமடைய வைக்கும். அதை விடுத்து அது ஏன் தளர வைக்கும் விலை உயர்ந்த துருக்கிக் குளியல்.”
“கடந்த சில நாட்களாய் எனது கால் முட்டி வலித்துக் கொண்டே இருந்தது. மேலும் மிகவும் வயதானது போல் ஒரு எண்ணம். துருக்கிக் குளியல்தான் மருந்துகளுக்கு ஒரு மாற்றாய் இருக்கிறது. புதியதோர் ஆரம்பமாகவும் உடம்பை நல்ல முறையில் சுத்திகரிக்கவும் பயன்படுகிறது.”
“இது மட்டுமல்ல, ஹோல்ம்ஸ்” என்று மீண்டும் ஆரம்பித்தேன். “துருக்கிக் குளியலுக்கும் எனது காலணிகளுக்கும் உள்ள தொடர்பு பார்த்தாலே தெரிந்து விடும் தர்க்க அறிவுள்ள ஒரு மனதிற்கு. இருந்தாலும் நீங்கள் அதைக் குறிப்பிட்டுச் சொன்னதும் எனக்கு மகிழ்ச்சியே.”
“உங்களது காரணங்களின் தொடர்ச்சி ஒன்றும் அவ்வளவு அர்த்தமற்றதாக இல்லை, வாட்சன்” என்றார் ஹோல்ம்ஸ் ஒரு குறும்புப் பார்வையுடன். “சிறு வயதில் ஆரம்பப் பள்ளியில் படித்த அதே தர்க்க வகுப்புகள்தான் காரணம். காலையில் வாடகை வண்டியில் உங்களுடன் வந்தது யார் என்று தெரிந்து கொள்ள அந்த தர்க்க அறிவியலை நான் மீண்டும் ஒரு முறை உங்களுக்கு எடுத்துக்காட்டுடன் சொல்லவா?.”
“எடுத்துக்காட்டு என்பது விளக்கமாக அமையும் என்பதை என்னால் ஒத்துக் கொள்ள முடியாது.” என்று கொஞ்சம் புத்திசாலித்தனமாய் பதில் அளித்தேன்.
“அருமை வாட்சன்! மிகவும் மரியாதையான தர்க்கத்திற்கு உகந்த எதிர்ப்புக் கணைகள். என்ன காரணிகள் என்று நான் பார்க்கிறேன். இறுதியில் வந்ததை முதலில் எடுத்துக் கொள்வோம். அந்த வாடகை வண்டி. உங்களது இடது கையிலும் மேலங்கியின் தோள் பட்டையிலும் சில துளிகள் சிந்தி இருக்கின்றன. குதிரை வண்டியில் நீங்கள் நடுவில் அமர்ந்திருந்தால் பெரும்பாலும் உங்கள் மேல் ஈரமே பட்டிருக்காது. பட்டிருந்தாலும் ஒன்று போல இருக்கும். அதனால் நிச்சயம் நீங்கள் ஓரத்தில்தான் அமர்ந்திருக்க வேண்டும். அதனால் உங்களுடன் ஒருவர் பயணித்திருக்க வேண்டும்.”
“அதுவும் வெகு எளிதாகத் தெரிவது”
“சாதாரணமாக அனைவர்க்கும் தெரிந்ததுதான். இல்லையா?”
“ஆனால் புதைமிதியடிகளுக்கும் குளியலுக்கும்?”
“அதே போல் சிறு பிள்ளைத்தனமானதுதான். நீங்கள் புதைமிதியடியை ஒரு பக்கமாக ஏற்றி அணியும் பழக்கம் உடையவர். அதே போல் இந்த சந்தர்ப்பத்திலும் அணிந்திருக்கிறீர்கள். மேலும் விலாவாரியான இரட்டை முடிச்சு கொண்ட கழுத்துப் பட்டையும் அணிந்திருக்கிறீர்கள். அது உங்களது இயல்பு கிடையாது. அதனால் யாரோ உங்களுக்கு உதவி செய்திருக்கிறார்கள். யாரது? மிதியடி தயாரிப்பாளர் அல்லது அந்தக் குளியலறையில் உதவி செய்யும் வேலைக்காரச் சிறுவன். மிதியடி தயாரிப்பாளராய் இருக்க வாய்ப்பில்லை. ஏனெனில் உங்கள் காலணிகள் கிட்டத்தட்ட புதிது போலவே இருக்கின்றன. அதனால் மீதி இருப்பது என்ன? குளியல்தான்! முட்டாள்தனமானது இல்லையா? இவ்வளவு இருந்தாலும் அந்தத் துருக்கிக் குளியலுக்கும் ஒரு காரணம் இருக்கிறது”
“என்ன அது?”
“உங்களுக்கு ஒரு மாற்றம் வேண்டித்தான் அதைச் செய்ததாகச் சொன்னீர்கள் அல்லவா? அதனால் நீங்கள் ஒன்று எடுத்துக் கொள்ளுங்கள் என்று பரிந்துரைக்கிறேன். லசான் எப்படி இருக்கும் என்று நினைக்கிறீர்கள், எனதருமை வாட்சன் — முதல் வகுப்புப் பயணச் சீட்டுகள், அனைத்து விதமான செலவுகளும் ஏற்கப்படும் அரசனைப் போல்”
“அருமை, ஆனால் ஏன்?”
ஹோல்ம்ஸ் தனது சாய்வு நாற்காலியில் அமர்ந்து சட்டைப் பையில் இருந்த குறிப்பேடு ஒன்றை எடுத்தார்.
“உலகில் ஒரு அபாயமான கூட்டம் என்றால்” என்று ஆரம்பித்தார். “அது நாடோடியாய்த் திரியும் உறவுகளே இல்லாத பெண்களாகத்தான் இருக்க முடியும். அவள் யாருக்கும் தொந்தரவு செய்யாதவள். அனைவருக்கும் உதவியாய் இருப்பவள். ஆனால் மற்றவர்களிடம் குற்றங்களைத் தூண்டுவதற்கு முன்னோடியாய் இருப்பவள். அவளுக்கு ஆதரவில்லை. நாடோடி. ஒரு நாட்டில் இருந்து இன்னொரு நாட்டிற்கும் ஒரு விடுதியில் இருந்து மற்றோரு விடுதிக்கும் செல்லும் அளவு வசதி படைத்தவள்தான். தெளிவற்ற ஓய்வூதியங்களுக்கும் வாடகை விடுதிகளின் புதிர் நிறைந்த வழித்தடங்களுக்குள் தொலைந்து போனவள். நரிகள் சூழ்ந்த உலகத்தில் தனியே மாட்டிக் கொண்ட ஒரு கோழிக் குஞ்சு அவள். அவளை விழுங்கும்போது நிச்சயம் தெரிந்து விடும். ஏதோ ஒரு ஆபத்து பிரான்செஸ் என்ற பெண்ணுக்கு நேர்ந்து விட்டது என்று என் மனம் பதை பதைக்கிறது.”
பொதுவான விளக்கத்தில் இருந்து நேரடியாக விசயத்திற்கு வந்தவுடன் என் மனம் கொஞ்சம் நிம்மதி அடைந்தது. ஹோல்ம்ஸ் தனது குறிப்பேட்டைப் பார்த்தபடி இருந்தார்.
“பிரான்செஸ்” என்று மீண்டும் தொடர்ந்தார். காலம் சென்ற ரூப்டன் கோமானின் குடும்பத்தில் உயிருடன் இருக்கும் கடைசிப் பெண். குடும்பத் சொத்து முழுவதும் ஆண் வாரிசுகளுக்குச் சென்று விட்டது என்று உங்களுக்கு நினைவிருக்கும். அவளுக்குச் சிறிது சொத்துக்கள் மட்டுமே கிடைத்தன. குறிப்பிடத்தக்க பழைய எஸ்பானிய வெள்ளி நகைகள் மற்றும் அருமையாக வெட்டப்பட்ட வைரங்களும் அவளிடம் இருந்தன. அவைகள் மேல் அவளுக்கு அளவு கடந்த ஆசை. மிகவும் அளவு கடந்தது–ஏனெனில் அதை அவள் தனது வங்கியில் கூட வைக்கவில்லை. எப்பொழுதும் தன்னுடனே வைத்திருந்தாள். பாவம் அவள். அழகானவள், இன்னும் இளமையான நடுத்தர வயதில் இருப்பவள். கடந்த இருபது ஆண்டுகளாகக் கவனிப்பாரற்று இருக்கிறாள் ஏதோ ஒரு மாற்றத்தினால்.”
“பின், என்ன ஆச்சு அவளுக்கு?”
“ஆஹ், என்ன ஆச்சு அவளுக்கு? உயிரோடு இருக்கிறாளா, இல்லையா? அது நமது பிரச்சினை. மிகத் துல்லியமான பழக்கங்கள் கொண்டவள் அந்தப் பெண். நான்கு ஆண்டுகளாக ஒவ்வொரு இரண்டாவது வாரமும் தவறாமல் தனது பழைய ஆளுநர் செல்வி. டாப்னி அவர்களுக்குக் கடிதம் எழுதி வந்திருக்கிறாள். அந்தப் பெண் பணியில் இருந்து ஓய்வு பெற்றுப் பல ஆண்டுகள் ஆகி விட்டன. கேம்பர்வெல்லில் அவர்கள் வசிக்கிறார்கள். அந்த டாப்னி என்ற பெண்தான் என்னைத் தொடர்பு கொண்டு செய்தி சொன்னது. கிட்டத்தட்ட ஐந்து வாரங்களாகி விட்டன எந்தச் செய்தியும் இல்லாமல். கடைசியாக வந்த கடிதம் லசானில் உள்ள நேஷனல் விடுதியில் இருந்து அனுப்பப்பட்டது. அந்த விடுதியில் இருந்து கிளம்பி இருக்கிறாள். ஆனால் எந்தவித முகவரியும் கொடுத்துச் செல்லவில்லை. அவளது குடும்பத்தினர் மிகுந்த வருத்தத்தில் உள்ளனர். அவர்கள் மிகவும் செல்வந்தர்களாக இருப்பதால் இந்த வழக்கை நாம் முடித்துக் கொடுத்தால் பணத்திற்குக் குறைவிருக்காது.”
“செல்வி. டாப்னி மட்டும்தான் நமக்கிருக்கும் ஒரே ஆதாரமா? நிச்சயம் வேறு சில தொடர்புகளும் இருக்கலாமே?”
“இன்னொரு தொடர்பும் இருக்கிறது. நிச்சயம் பயனுள்ளதாக இருக்கும், வாட்சன். அது அவளது வங்கி. தனியான பெண்களும் வாழ வேண்டுமே. அவர்களது வங்கிக் கணக்குப் புத்தகம் குறுக்கப்பட்ட நாட்குறிப்பாகும். அவளது வங்கியின் பெயர் சில்வெஸ்டர். நான் வங்கிக் கணக்கைப் பார்த்து விட்டேன். அவளது இறுதிச் செலவுக்கு முன் லசானில் ஒரு கடைக்குக் காசோலை அனுப்பி இருக்கிறாள். அது கொஞ்சம் பெரிய அளவுதான். அது போக அவளிடம் கையில் பணம் ரொக்கமாக இருந்திருக்கிறது. அதன் பின் ஒரே ஒரு காசோலைதான் எடுக்கப்பட்டிருக்கிறது.”
“யாருக்கு, எங்கிருந்து எடுக்கப்பட்டது?”
“செல்வி. மேரி டிவைன் என்பவருக்கு. எங்கிருந்து என்பதற்கு எந்தவிதக் குறிப்புகளும் இல்லை. மோண்ட்பெல்லியரில் உள்ள கிரெடிட் லியோனாய் என்ற இடத்தில் இருந்து ரொக்கமாக்கப்பட்டது மூன்று வாரங்களுக்கு முன்னால். அது ஐம்பது பவுண்டுகள் மதிப்புள்ளது.”
“யார் அந்த மேரி டிவைன்”
“அதையும் நான் கண்டு பிடித்து விட்டேன். பிரான்செஸ் அவர்களிடம் உதவியாய் இருந்த வேலைக்காரப் பெண் அவள். ஏன் அவளுக்கு இந்தப் பணம் கொடுக்கப்பட்டது என்பது தெரியவில்லை. உங்களது ஆய்வுகளில் எல்லாவித உண்மைகளும் புலப்பட்டு விடும் என்று எனக்கு முழு நம்பிக்கை இருக்கிறது”
“எனது ஆய்வுகள்!”
“உடல் நலம் பெற வேண்டி லசான் செல்லும் பயணம். வயதான ஆபிரகாம் தனது உயிர் பற்றிய பயங்கர அபாயத்தில் இருப்பதால் நான் லண்டனை விட்டு நகர முடியாது. இருந்த போதும் பொதுவாகவே நான் நாட்டை விட்டுச் செல்ல முடியாது. நான் இல்லாமல் ஸ்காட்லாந்து யார்டுக்குத் தனிமையில் இருப்பது போன்ற உணர்வு வந்து விடும். அது இங்கிருக்கும் குற்றவாளிகளுக்கு அசாதாரணமான உவகையைக் கொடுத்து விடும். அதனால் நீங்களே செல்லுங்கள், எனதருமை வாட்சன். எனது தாழ்மையான கருத்துக்கள் மிகவும் சல்லிசான விலையான ஒரு சொல்லுக்கு இரண்டு பெண்ணிகள் வீதம் கிடைக்குமாகையால் உங்களது அழைப்புக்கு இரவும் பகலும் கான்டினென்டல் தந்தி அலுவலகத்தில் எதிர்பார்த்துக் காத்துக் கொண்டிருக்கும்.”
இரண்டு நாட்கள் கழித்து நான் லசானில் உள்ள தேசிய விடுதிக்குச் சென்றேன். அங்கிருந்த விடுதி மேலாளர் திரு.மோஸர் அவர்கள் என்னை மிகுந்த மரியாதையுடன் நடத்தினார். பிரான்செஸ் அங்கு பல வாரங்கள் தங்கி இருந்ததாகத் தெரிவித்தார். அவளைச் சந்தித்த மனிதர்கள் அனைவருக்கும் பிடிக்கும் வண்ணம் நடந்து கொண்டாள். அவளுக்கு வயது நாற்பதுக்கு மேல் இருக்காது. அவள் இன்னும் அழகாகவே இருந்தாள். இளைய வயதில் பேரழகியாய் இருந்திருப்பாள் என்பதற்கு அடையாளங்கள் இன்னும் மிச்சம் இருக்கவே செய்தன. மோசருக்கு அவளிடம் இருந்த விலை உயர்ந்த நகைகள் பற்றித் தெரியவில்லை. ஆனால் அங்கு வேலை செய்த பணியாளர்கள் அவளது அறையில் இருந்த பெரிய கனமான இரும்புப் பெட்டி மிகுந்த கவனத்துடன் பூட்டி வைக்கப்பட்டிருக்கும் என்று தெரிவித்தார்கள். மேரி டிவைன் அவளது மனைவி போல் அங்கு அவ்வளவு செல்வாக்குப் பெற்றிருந்தாள். சொல்லப் போனால் அவள் அங்கிருந்த தலைமைப் பரிமாறும் பணியாளருக்கு நிச்சயம் செய்யப்பட்டிருந்தாள். அதனால் அவளது முகவரியைப் பெறுவதில் எந்தவித சிரமமும் இல்லை. அது 11 ரூ டி த்ரகான், மோண்ட்பெல்லியர். இதையெல்லாம் எழுதி வைத்துக் கொண்டேன். ஹோல்ம்ஸ் நிச்சயம் இதை எல்லாம் எளிதாகச் செய்து முடித்திருப்பார் என்று எண்ணிக் கொண்டேன்.
ஒரே ஒரு மூலை மட்டுமே இருள் மண்டிக் கிடந்தது. எத்தனையோ வெளிச்சம் பாய்ச்சியும் அவள் ஏன் சட்டென்று அங்கிருந்து கிளம்பினாள் என்பதற்கான காரணம் மட்டும் விளங்கவே இல்லை. லசானில் அவள் மகிழ்ச்சியாகவே இருந்திருக்கிறாள். ஏரியைப் பார்த்திருக்கும் அவளது ஆடம்பரமான அறையில் அந்தப் பருவத்தில் அங்கேயே ஆனந்தமாகக் கழிக்க வேண்டும் என்று அவள் நினைத்திருக்கக் கூடும் என்று நினைப்பதற்கு அனைத்து விதமான காரணங்களும் இருந்தன. இருந்தாலும் ஒரே நாளில் அவள் அங்கிருந்து கிளம்பி இருக்கிறாள். அதனால் தேவை இல்லாமல் ஒரு வாரத்திற்கான வாடகையைக் கொடுக்க வேண்டியதாய் இருந்திருக்கிறது. அந்தப் பணிப்பெண்ணின் காதலனான ஜூல்ஸ் வைபார்ட் மட்டுமே இதற்கான விளக்கத்தை அளிக்க முடியும். ஓரிரு நாட்கள் முன் வந்த உயரமான கருத்த தாடி வைத்திருந்த மனிதன் வந்த பின் தான் அவள் அங்கிருந்து கிளம்பியதாக அவன் கூறினான். “அவன் ஒரு காட்டான். உண்மையான காட்டான்.” என்று கத்தினான் ஜூல்ஸ். அவன் நகரத்தில் எங்கோ ஒரு இடத்தில் தங்கி இருக்கிறான். ஏரிக்கரைக்கு அருகில் இருக்கும் நடைபாதையில் அவன் அவர்களிடம் மிகவும் தீவிரமாகப் பேசிக் கொண்டிருப்பதைச் சிலர் பார்த்திருக்கிறார்கள். அதன் பின் அவன் தொலைபேசியில் அழைத்திருக்கிறான். ஆனால் அவர்கள் அவனைப் பார்க்க விரும்பவில்லை. அவன் ஆங்கிலேயன். அவனது பெயர் எந்தவித ஆவணத்திலும் பதியவில்லை. அதன் பின் உடனடியாக அவர்கள் இங்கிருந்து கிளம்பி விட்டார்கள். ஜூல்ஸ் வைபார்ட்டும் அவனது காதலியும் இந்த அழைப்புதான் அவர்கள் இங்கிருந்து கிளம்பக் காரணம் என்று நம்பினார்கள். ஒரே ஒரு விஷயத்தை மட்டும் ஜூல்ஸ் விவாதிக்க விரும்பவில்லை. மேரி ஏன் தனது எஜமானியை விட்டுச் சென்றாள் என்பதுதான் அது. அதைப் பற்றி மட்டும் அவன் வாய் திறக்கவே இல்லை. அது தெரிய வேண்டும் என்றால் மோண்ட்பெல்லியர் சென்று அவளிடம்தான் கேட்க வேண்டும்.
இப்படியாக முடிந்தது எனது விசாரணையின் முதல் அத்தியாயம். இரண்டாவது அத்தியாயம் பிரான்செஸ் லசானில் இருந்து கிளம்பி எந்த இடத்திற்குச் சென்றாள் என்பதைக் கண்டுபிடிப்பதற்கு ஒதுக்க வேண்டும். இதைப் பொறுத்தவரை ஒரு மர்மமாகவே இருக்கிறது. அதனால் அவள் யாரிடம் இருந்தோ தப்பிப்பதற்குத் தலைமறைவாகி இருக்கலாம் என்பதை உறுதிப்படுத்துகிறது. இல்லையென்றால் அவளது பெட்டி படுக்கைகள் எல்லாம் பேடன் என்று ஏன் வெட்டவெளிச்சமாகக் குறிக்கப்பட்டிருக்க வேண்டும். அவளும் அவளது உடமைகளும் எதோ ஒரு சுற்றி வளைந்த பாதையின் மூலமாக ரெனிஸ் கனிம நீரூற்றிற்குச் சென்றிருக்கிறார்கள். இவ்வளவும் அந்த மேலாளரின் மூலமாகத் தெரிந்து கொண்டேன். அதனால் பேடனுக்குச் சென்றேன் விசாரணை நடவடிக்கைகள் அனைத்தும் ஹோல்ம்ஸுக்குத் தெரிவித்த பின். அவரும் பாதி நகைச்சுவை கலந்த பாராட்டுக்களைப் பதிலாகத் தெரிவித்தார்.
பேடனில் தடம் ஒன்றும் அவ்வளவு மோசமானதாக இல்லை. அங்கிருந்த ஆங்கில விடுதியில் இரண்டு வாரங்கள் தங்கி இருந்திருக்கிறாள். அங்கு அவளுக்கு மரு.ஷ்லசிங்கர் அவர்களின் நட்பு கிடைத்தது. அவர் தென் அமெரிக்காவில் இருந்து வந்த மத போதகர். பெரும்பான்மையான தனித்து வாழும் பெண்கள் போலவே பிரான்செசுக்கும் மதத்தின் மேல் ஒரு சவுகர்யமும் ஈடுபாடும் ஏற்பட்டது. மரு.ஷ்லசிங்கர் அவர்களின் குறிப்பிடத்தக்க குணங்களும் அவரது முழு ஈடுபாடும், அவர் தனது போதனைகள் செய்யும் நேரத்தில் தன்னைத் தாக்கிய நோயில் இருந்து மீண்டு வந்து கொண்டிருக்கிறார் என்ற உண்மையும் அவளை வெகுவாகப் பாதித்தது. மீண்டு வருகின்ற நிலையில் அவரது மனைவியுடன் சேர்ந்து அந்தத் துறவிக்குப் பணிவிடை செய்து வந்தாள். அவர் தனது பகல் பொழுதைத் தாழ்வாரத்தில் உள்ள வரபேற்பறை நாற்காலியில் அமர்ந்து கழித்தார். அதன் இருபுறமும் பணிவிடை செய்ய பெண்கள் இருந்தனர். அவர் புனிதத் தலத்தின் வரைபடத்தைத் தயார் செய்து கொண்டிருந்தார். மிடியனைட் பேரரசு பற்றித் தனியாகக் குறிப்பு எடுத்துக் கொண்டிருந்தார். அதைப் பற்றிய தனிக் கட்டுரை ஒன்று எழுதிக் கொண்டிருந்தார். ஒரு வழியாகத் தன் உடல்நிலை முன்னேறியவுடன் அவரும் மனைவியும் லண்டன் திரும்பி விட்டனர். பிரான்செசும் அவர்களுடனே சென்று விட்டாள். இது நடந்து மூன்று வாரங்கள் ஆகி விட்டன. அதன் பின்னர் அந்த மேலாளருக்கு எதுவும் தெரியவில்லை. பணிப்பெண்ணைப் பொறுத்தவரை அதற்குச் சில நாட்களுக்கு முன்பே கண்ணீரோடு கிளம்பி விட்டிருக்கிறாள். மற்ற பணிப்பெண்களிடம் தான் நிரந்தரமாக வேலையை விட்டுச் செல்வதாகச் சொல்லி விட்டுச் சென்றிருக்கிறாள். மரு.ஷ்லசிங்கர் அனைத்துச் செலவுகளுக்கும் தானே பணத்தைச் செலுத்தி விட்டுச் சென்றிருக்கிறார்.
“பிரான்செஸ் பற்றிய விசாரணையுடன் வந்தது நீங்கள் மட்டுமல்ல.” என்று முடிவாகத் தெரிவித்தார் அந்த உரிமையாளர். “ஒரு வாரத்திற்கு முன் இன்னொருவனும் இங்கு வந்து விசாரித்துச் சென்றான்.”
“பெயர் எதுவும் அவர் சொன்னாரா?” என்று கேட்டேன்.
“இல்லை. அவர் ஒரு ஆங்கிலேயர். கொஞ்சம் வித்தியாசமாக இருந்தார்”
“ஒரு காட்டானா?” என்றேன் நான், எனக்குக் கிடைத்த தகவலின் படி.
“அதேதான்! மிகவும் பொருத்தமான சொல். பருத்த தாடி வைத்த வெய்யிலால் கருத்த உடல் கொண்டவன். அவனைப் பார்த்தால் உழவர் விடுதியில் தங்குபவன் போலத்தான் தெரிந்தான். ஆடம்பரமான விடுதிக்கும் அவனுக்கும் சம்பந்தமே இல்லை. கடுமையான கோபக்கார மனிதன். அவனிடம் யாரும் விளையாட முடியாது.”
மர்மம் கொஞ்சம் கொஞ்சமாக விலகத் துவங்கியது பனி மூட்டம் விலகிய பின் தெரியும் உருவங்கள் போல். இங்கு ஒரு பணிவான நல்ல பெண் இருக்கிறாள். அவளை ஒவ்வொரு இடமாகத் துரத்திக் கொண்டு கெட்ட சிந்தனை கொண்ட ஒருவன் விடாப்பிடியாகத் தொடர்ந்து கொண்டிருக்கிறான். அவனைக் கண்டு அவளுக்கு அச்சம். இல்லையெனில் அவள் லசானை விட்டுச் சென்றிருக்க மாட்டாள். இருந்தும் அவளைத் தொடர்ந்திருக்கிறான். என்றாவது ஒரு நாள் நிச்சயம் பிடித்து விடுவான். ஒருவேளை ஏற்கெனவே பிடித்து விட்டானோ? அதனால்தான் அவள் இன்னும் அமைதியாய் இருக்கிறாளோ? அவளுக்கு உறுதுணையாய் இருந்த நல்ல மனிதர்கள் யாரும் அவனது மிரட்டல்கள் மற்றும் கொடூரச் செயல்களில் இருந்து காக்கவில்லையோ? இவ்வளவு நீண்ட துரத்தல்களுக்குப் பின்னால் எந்தவிதமான கொடூர சிந்தனை, கெட்ட திட்டங்கள் இருக்கின்றனவோ? இதுதான் நான் கண்டுபிடிக்க வேண்டிய மர்மம்.
எவ்வளவு விரைவாகவும் முடிவாகவும் நான் இந்தப் பிரச்சினையின் வேரைக் கண்டுபிடித்து விட்டேன் என்று ஹோல்ம்ஸுக்கு நான் தந்தி அனுப்பினேன். அதற்குப் பதிலாக மரு.ஷ்லசிங்கர் அவர்களின் இடது காது எப்படி இருக்கும் என்ற விளக்கம் கேட்டு அனுப்பினார். ஹோல்ம்ஸின் நகைச்சுவை விநோதமாகவும் சில சமயம் புண்படுத்துவது போலும் இருக்கும். அதனால் அவரது தேவை இல்லாத நகைச்சுவையை நான் கண்டு கொள்ளவில்லை. இருந்தாலும் அவரது தந்தி வந்து சேருமுன் நான் கிட்டத்தட்ட மோண்ட்பெல்லியர் வந்து சேர்ந்து விட்டேன் பணிப்பெண் மேரியைத் தேடி.
அந்த முன்னாள் பணிப்பெண்ணைக் கண்டு பிடிப்பதிலும் அவள் சொன்ன அனைத்தையும் புரிந்து கொள்ளவும் எனக்கு எந்தவிதச் சிரமமும் இல்லை. அவள் மிகுந்த ஈடுபாடு கொண்டவள். அவள் தனது எஜமானியை விட்டுச் சென்ற காரணம் அவள் பாதுகாப்பான இடத்தில் இருக்கிறாள் என்று முழுமையாக நம்பியதால்தான். மேலும் தனது திருமணமும் நிச்சயிக்கப்பட்டு விட்டதால் வேறு வழியில்லாமல் பிரிய நேரிட்டது. பேடனில் இருக்கும்போது அவளது எஜமானி அவள் மேல் கொஞ்சம் கோபத்தில்தான் இருந்தாள். ஒரு முறை தனது நேர்மையைச் சந்தேகிக்கிறாளா என்றும் கேட்டதனால் பிரிவு மிகவும் எளிதாகி விட்டது.
பிரான்செஸ் அவளது திருமணப் பரிசாக ஐம்பது பவுண்டுகள் கொடுத்திருக்கிறாள். என்னைப் போலவே மேரியும் தனது எஜமானியை லசானில் இருந்து துரத்திய அந்தத் தாடிக்கார மனிதனை மிகுந்த அவநம்பிக்கையோடுதான் பார்த்திருக்கிறாள். ஏரிக்கரையின் அருகில் உள்ள நடைபாதையில் பட்டப்பகலில் அந்த மனிதன் மிகவும் பலவந்தமாகத் தனது எஜமானியின் மணிக்கட்டைப் பிடித்து முறுக்குவதைத் தனது கண்களாலேயே கண்டிருக்கிறாள். அவன் ஒரு கடுமையான மோசமான ஆள்தான். அதனால் ஷ்லசிங்கருடன் லண்டன் கிளம்பியது அவளைப் பொறுத்தவரையில் அபாய கட்டத்தைத் தாண்டியது போலத்தான் உணர்ந்திருக்கிறாள். மேரியிடம் அவள் இதைப் பற்றி விவாதித்தது கிடையாது. இருந்தாலும் தன் எஜமானி எப்பொழுதும் கொஞ்சம் பயத்துடனே வாழ்வது போன்றே சில அறிகுறிகள் தென்பட்டதாகத் தெரிவித்தாள் மேரி. அதுவரை பேசிக் கொண்டிருந்தவள் சட்டென்று தனது நாற்காலியில் இருந்து எழுந்து நின்றாள். அவளது முகம் ஆச்சரியத்திலும் அதிர்ச்சியிலும் துடித்தது. “அங்கே பாருங்கள்!” என்று கத்தினாள். “அந்த அயோக்கியன் இன்னும் தொடர்கிறான். இவனைப் பற்றித்தான் இவ்வளவு நேரம் பேசிக் கொண்டிருந்தேன்!”
வரவேற்பறையின் திறந்திருந்த சாளரக் கதவின் வழியாக ஒரு பெரிய பருத்த தாடிக்கார மனிதன் தெரு நடுவில் மெதுவாக நடந்து வந்து கொண்டிருந்தான். ஒவ்வொரு வீட்டின் கதவு எண்ணையும் உன்னிப்பாகக் கவனித்துக் கொண்டே சென்றான். இவனும் என்னைப் போலவே அந்தப் பணிப்பெண்ணைத் தொடர்ந்து வந்து கொண்டிருக்கிறான் என்பது தெளிவாகத் தெரிந்தது. நிலைமையின் தீவிரத்தை உணர்ந்த நான் சட்டென்று அவனிடம் ஓடிச் சென்றேன்.
“நீ ஒரு ஆங்கிலேயன்தானே!” என்றேன்.
“அதனால் என்ன?” என்று ஒரு மிகப்பெரிய போக்கிரியைப் போல் குரைத்தான்.
“உனது பெயர் என்னவென்று நான் தெரிந்து கொள்ளலாமா?”
“இல்லை, அதெல்லாம் உனக்குத் தேவை இல்லை” என்று முடிவாகச் சொன்னான்.
சூழ்நிலை கொஞ்சம் சரி இல்லை. இருந்தாலும் நேரடியாக இறங்குவதுதான் இப்பொழுது சிறந்தது.
“பிரான்செஸ் எங்கே?” என்று கேட்டேன்.
அவன் என்னை ஆச்சர்யமாகப் பார்த்தான்.
“அவளை என்ன செய்தாய்? ஏன் அவளைப் பின் தொடர்ந்து சென்றாய்? உண்மையைச் சொல்!” என்றேன் நான்.
அவன் கோபத்தில் கத்திக் கொண்டே என் மீது புலி போலப் பாய்ந்தான். நான் பலவிதமான சண்டைகளைப் பார்த்தவன். ஆனால் இவனது பிடி இரும்பு கோபம் பிசாசு போலவும் இருந்தது. அவனது கை என் கழுத்தில் இருந்தது. என் உணர்ச்சிகள் கொஞ்சம் கொஞ்சமாக மங்கத் தொடங்கின. அப்பொழுது திடீரென்று எதிர்ப் புறத்தில் இருந்த மதுக்கடை வாசலில் இருந்த நீல நிறச் சட்டை அணிந்திருந்த ஒரு பிரெஞ்சுக் காவலாளி தன் கட்டையுடன் வந்து என்னைப் பிடித்துக் கொண்டிருந்தவன் மணிக்கட்டில் ஓங்கி அடித்தார். அதனால் அவன் தன் பிடியைச் சட்டென்று விட்டு விட்டான். ஒரு நொடி அவன் சண்டையைத் தொடர்வதா வேண்டாமா என்ற சிந்தனையில் தயங்கி நின்றான் மிகுந்த சினத்தோடு. பின் உறுமிக் கொண்டே நான் வந்த வீட்டிற்குள் நுழைய ஆரம்பித்தான் என்னை விட்டு விட்டு. என்னைக் காப்பாற்றியவருக்கு நன்றி கூறலாம் என்று நான் திரும்பிப் பார்த்தேன்.
“வாட்சன்!” என்று ஆரம்பித்தார். “கொஞ்சம் மோசமான சண்டைதான் அது. நீங்கள் இன்றே என்னுடன் லண்டன் விரைவு வண்டியில் புறப்பட்டு விடுங்கள்.”
ஒரு மணி நேரம் கழிந்த பின் ஷெர்லாக் ஹோல்ம்ஸ் தனது வழக்கமான உடையில் நடையில் நான் ஏற்பாடு செய்திருந்த விடுதியின் தனி அறையில் என்னுடன் அமர்ந்திருந்தார். திடீரென்று சரியான நேரத்தில் அவர் அங்கு வந்ததற்கான காரணம் மிகவும் எளிமையானதாகவே இருந்தது. லண்டனில் இருந்து கிளம்ப சமயம் கிடைத்ததும் அவர் என்னை என் பயணத்தின் அடுத்த இடத்தில் சந்திக்கலாம் என்று முடிவெடுத்து விட்டார். ஒரு தொழிலாளி போல் வேடமணிந்து அந்த விடுதியின் வாசலில் எனக்காக் காத்திருந்தார்.
“நீங்கள் செய்த ஒட்டு மொத்தமான சீரான புலன் விசாரணையினால், எனதருமை வாட்சன் அவர்களே” என்றார் அவர். “நீங்கள் செய்யாமல் விட்ட பெருந் தவறுகளை என்னால் இவ்வேளையில் நினைத்துக் கூடப் பார்க்க முடியவில்லை. உங்களது நடவடிக்கைகளால் நீங்கள் ஒவ்வொரு இடத்திலும் எச்சரிக்கை கொடுக்க முடிந்ததே தவிர எதையும் கண்டுபிடிக்க முடியவில்லை”
“ஒருவேளை, உங்களாலும் இதற்கு மேல் கண்டுபிடித்திருக்க முடியாதுதானே” என்று நான் கொஞ்சம் கடுமையாகக் கூறினேன்.
“ஒருவேளை என்ற பேச்சுக்கே இடமில்லை. நான் இதைவிடச் சிறப்பாகச் செய்திருக்கிறேன். இதோ பாருங்கள். இவர்தான் திரு.பிலிப் க்ரீன் என்பவர். இவரும் இதே விடுதியில்தான் தங்கி இருக்கிறார். இவரை விசாரித்தால் இன்னும் சிறப்பான தகவல் கிடைக்கும்”
மேசையின் மீது ஒரு அட்டையை வைத்தார். அதன் பின் என்னைத் தெருவில் தாக்கிய அதே தாடி வைத்த தடியன் உள்ளே நுழைந்தான். என்னைக் கண்டதும் அவனே ஆரம்பித்தான்.
“என்ன இது, ஹோல்ம்ஸ்?” என்று கேட்டான். “நீங்கள் என்னை அழைத்ததால் இங்கு வந்தேன். அதற்கும் இந்த ஆளுக்கும் என்ன சம்பந்தம்?”
“இது எனது நீண்ட நாள் நண்பர் மற்றும் என்னுடன் வேலை செய்பவர், மரு.வாட்சன். இந்த வழக்கில் எனக்கு உதவியாய் இருப்பவர்”
அந்த அந்நியன் என்னிடம் நீண்டதொரு மன்னிப்பு கோரித் தனது வெய்யிலால் கருத்த கையை நீட்டினான்.
“நான் உங்களைத் துன்புறுத்தவில்லை என்று நினைக்கிறேன். நீங்கள் நான்தான் அவளைக் காயப்படுத்தி விட்டேன் என்று பழி சுமத்தியதும் என்னால் என்னைக் கட்டுப்படுத்தவே முடியவில்லை. சொல்லப் போனால், நான் கொஞ்சம் பொறுப்பில்லாமல் நடந்து கொண்டேன் சில நாட்களாய். என்னுடைய நரம்புகள் மின்சாரக் கம்பிகள் போல் இருக்கின்றன. ஆனால் இந்த விஷயம் என் கட்டுப்பாட்டில் இல்லை. எனக்கு என்ன தெரிய வேண்டும் என்றால், திரு.ஹோல்ம்ஸ், உங்களுக்கு எப்படி நான் ஒருவன் இந்த உலகத்தில் இருக்கிறேன் என்று தெரிந்தது.”
“நான் திருமதி.டாப்னியுடன் தொடர்பில் இருக்கிறேன். பிரான்செஸின் ஆளுநர்.”
“ஓஹ் சூசன் டாப்னியா. பெரிய தொப்பி அணிந்த வயதான பெண்மணி. எனக்கு நன்றாக ஞாபகம் இருக்கிறது”
“அவர்களுக்கு உங்களையும் நன்றாக ஞாபகம் இருக்கிறது. நீங்கள் தென் ஆப்பிரிக்காவிற்குச் செல்லுமுன் நடந்த விஷயங்கள்–”
“ஆஹ், அப்படி என்றால் உங்களுக்கு என்னைப் பற்றிய முழுக்கதையும் தெரியும். உங்களிடம் எதையும் மறைக்க வேண்டிய தேவை இல்லை. நான் உங்களிடம் உறுதியாய்க் கூறுகிறேன், திரு.ஹோல்ம்ஸ், என்னைப் போல் முழு மனதுடன் அவளைக் காதலித்தவன் இந்த உலகில் வேறு யாரும் இருக்க முடியாது. நான் கட்டுக்கடங்காத காளையாய் இருந்தேன். என் வயதொத்தவர்கள் போல் அவ்வளவு மோசம் இல்லை என்பதே உண்மை. ஆனால் அவளது மனம் வெண்பனி போல் தூய்மையானது. சிறு கடுமையைக் கூட அவளால் தாங்க முடியாது. அதனால் நான் செய்த விஷயங்கள் பற்றி அவள் காதுகளுக்குச் சென்றதும் அவளுக்குப் பேசுவதற்கே முடியவில்லை. இருந்தும் அவள் என்னைக் காதலித்தாள். அதுதான் அதிசயம். எனக்காகவே திருமணம் செய்யாமல் தன் வாழ்நாள் முழுவதும் காத்திருந்தாள். ஆண்டுகள் பல உருண்டபின், பார்பர்ட்டனில் நானும் கொஞ்சம் பணம் சம்பாதித்தவுடன் அவளை அழைத்துச் சமாதானம் செய்யலாம் என்று நினைத்தேன். அவள் இன்னும் திருமணம் செய்து கொள்ளவில்லை என்றே கேள்விப்பட்டேன். அவளை லசானில் பார்த்தேன். என்னால் இயன்றவரை முயற்சி செய்தேன். அவள் மிகவும் பலவீனமாக இருந்தாள். ஆனால் அவளது மனம் உறுதியாய் இருந்தது. அடுத்த முறை நான் தொலைபேசியில் அவளைத் தொடர்பு கொண்டபோது நகரத்தை விட்டுச் சென்று விட்டாள் என்ற தகவல் கிடைத்தது. பேடன் வரையில் பின் பற்றிச் சென்றேன். பின் அவளது பணிப்பெண் இங்கு இருக்கிறாள் என்ற தகவல் கிடைத்தது. நான் ஒரு கரடு முரடான மனிதன். கரடு முரடான வாழ்க்கையில் இருந்தே வந்திருக்கிறேன். வாட்சன் அதே போல் என்னிடம் பேசியபோது ஒரு நொடி என்னை நான் மறந்து விட்டேன். தயவு செய்து கூறுங்கள், பிரான்செஸ்ஸுக்கு என்ன ஆயிற்று?”
“நாங்கள்தான் அதைக் கண்டு பிடிக்க வேண்டும்” என்று வினோதமாக முகத்தை இறுக்கமாக வைத்துக் கொண்டு சொன்னார். “உங்களது லண்டன் முகவரி என்ன திரு.க்ரீன்”
“லேன்கம் விடுதியில் தங்கி இருக்கிறேன்”
“அப்படி என்றால் ஒன்று செய்யுங்கள். உடனே அங்கு செல்லுங்கள். தேவைப்பட்டால் நான் உங்களைத் தொடர்பு கொள்ள வசதியாய் இருக்கும். உங்களுக்குத் தேவை இல்லாமல் நம்பிக்கை கொடுக்க நான் விரும்பவில்லை. ஆனால் பிரான்சஸ்ஸின் பாதுகாப்புக்கு என்ன செய்ய வேண்டுமோ அதை நாங்கள் நிச்சயம் செய்வோம் என்று மட்டும் என்னால் சொல்ல முடியும். இது என்னுடைய தொடர்பு அட்டை. தேவைப்படும்போது உங்களுக்குப் பயன்படும். பின், வாட்சன், இப்பொழுது நீங்கள் உங்களது பெட்டியைத் தயார் செய்தால் நான் திருமதி.ஹட்ஸன் அவர்களுக்குத் தந்தி அனுப்பி நாளைக் காலையில் இரண்டு பசித்த பயணர்களுக்கு அவர்களால் முடிந்த ஏற்பாடுகளைச் செய்யச் சொல்லலாம்.”
பேக்கர் தெருவில் உள்ள எங்களது அறைகளை அடைந்தபோது அங்கே ஒரு தந்தி எங்களுக்காகக் காத்திருந்தது. அதை ஆச்சர்யத்தோடு பார்த்துப் படித்து விட்டு என்னிடம் தூக்கி எறிந்தார். “துண்டிக்கப்பட்ட இல்லை கிழிந்த என்பதுதான் செய்தி. தந்தி வந்திருந்த இடம் பேடன்.”
“இது என்ன?” என்று நான் கேட்டேன்.
“இதுதான் எல்லாமே.” என்று பதில் அளித்தார் ஹோல்ம்ஸ். “இந்த மத போதகரின் இடது காது பற்றிய தேவை இல்லாதது போன்ற ஒரு கேள்வி கேட்டு நான் அனுப்பி இருந்தேனே ஞாபகம் இருக்கிறதா? நீங்கள் அதற்கு பதில் அனுப்பவில்லை”
“நான் பேடனை விட்டு அந்நேரம் சென்று விட்டேன். அதனால் அது பற்றி விசாரிக்க எனக்கு நேரமில்லை”
“அதேதான். அதனால் அதே செய்தியை நான் அந்த ஆங்கில விடுதியின் மேலாளருக்கு அனுப்பினேன். அதற்கான பதில்தான் இது.”
“இதில் இருந்து என்ன தெரிகிறது”
“என்ன தெரிகிறதென்றால், எனதருமை வாட்சன் அவர்களே. நாம் மிகவும் அறிவாளியான ஒரு அபாயகரமான பேர்வழியைப் பற்றிச் சிந்தித்துக் கொண்டிருக்கிறோம். தென் அமெரிக்காவில் இருந்து வந்த மத போதகர் மதிப்பிற்குரிய மரு. ஷ்லசிங்கர் வேறு யாருமல்ல. அவர் புனித பீட்டர்ஸ், ஆஸ்திரேலியா உருவாக்கிய ஒரு மிகப்பெரும் அயோக்கியன். சமீப காலத்தில் உருவாகிய ஒரு இளம் நாட்டிற்கு இது ஒரு சாபக்கேடுதான். அவனது யுக்தி என்னவென்றால் தனியாக இருக்கும் இளம் பெண்களை மதம் என்ற போர்வையில் ஏமாற்றுவதுதான். அவனுக்கு அவனது ஆங்கிலேய மனைவி பிரேசரும் உடந்தை. அவனது சூழ்ச்சிகள் பற்றி ஏற்கெனவே தெரிந்ததால் உடனே புரிந்து விட்டது. மேலும் அவனது உடல் பற்றிய வினோதமான மர்மம்–அவனது காதை முடி திருத்தும் கடையில் ஒருவன் மோசமாகக் கடித்துக் குதறி விட்டான். 89 ஆம் ஆண்டு அடிலெய்டு ஊரில் நடந்த ஒரு சண்டையில்–எனது சந்தேகத்தை இறுதி செய்தது. இந்த பாவப்பட்ட பெண் அரக்கத்தனமான இருவரிடம் மாட்டிக் கொண்டாள். அவர்கள் எதற்கும் துணிந்தவர்கள் வாட்சன். அவள் ஏற்கெனவே இறந்திருக்கலாம் என்பதும் சரியான யூகமாக இருக்கலாம். இல்லாவிட்டாலும் அவள் சிறைப்பட்டிருக்கலாம். அதனால் திருமதி. டாப்னிக்குக்கோ அவர்களது மற்ற நண்பர்களுக்கோ கூடக் கடிதம் எழுத இயலவில்லை. அவள் லண்டனுக்கே வராமலும் இருக்கலாம். இல்லையேல் கடந்தும் சென்றிருக்கலாம். முதலில் சொன்னதற்கும் கூட வாய்ப்பில்லை. ஏனெனில் தங்களது பதிவு செய்யும் முறைகளினால் காவல்துறையிடம் இருந்து அயல்நாட்டவர்கள் எளிதாகத் தப்பிச் செல்ல முடியாது. இரண்டாவது சொன்னதும் நடக்க வாய்ப்பில்லை. ஏனெனில் இந்தக் கயவர்கள் தங்களிடம் உள்ள கைதியை அடைத்து வைக்கவும் நல்ல இடம் ஒன்று கிடைக்கும் என்று நினைத்துப் பார்த்திருக்க முடியாது. என் மனதிற்கு என்ன தோன்றுகிறதென்றால் அவள் லண்டனில்தான் இருக்கிறாள். இப்பொழுதிருக்கும் சூழ்நிலையில் எங்கிருக்கிறாள் என்று நமக்குச் சொல்ல இயலவில்லை. அதனால் நம்மால் செய்ய முடிந்ததை நாம் செய்வோம். நமது சாப்பாட்டை சாப்பிட்டு முடித்து விட்டு அமைதியாக உறங்குவோம். மறுநாள் நான் நமது நண்பர் ஸ்காட்லாந்து யார்டில் உள்ள திரு.லெஸ்ட்ராடிடம் ஒரு வார்த்தை பேசி விட்டு வந்து விடுகிறேன்.”
ஆனால் அதிகாரப்பூர்வ காவல் துறையும் ஹோல்ம்ஸின் சொந்த சிறிய ஆனால் திறமையான நிறுவனமும் கூட அந்த மர்மத்தைக் கண்டுபிடிக்க முடியவில்லை. லண்டனில் இருக்கும் முப்பது லட்சம் மக்கள் நெருக்கடியில் அந்த மூவர் முற்று முழுதாகத் தொலைந்து போயிருந்தனர் என்றுமே இல்லாதவர்கள் போல். விளம்பரங்கள் செய்தும் பலனில்லை. தடயங்கள் கிடைத்து அதைத் தொடர்ந்து சென்றும் பலனில்லை. ஷ்லசிங்கர் சென்றிருக்கக் கூடிய ஒவ்வொரு குற்ற நிறுவனங்களைச் சல்லடை செய்தும் பலன் கிடைக்கவில்லை. அவனது பழைய நண்பர்களைக் கண்காணித்தபோதும் அவர்கள் அவனிடம் தொடர்பு கொண்டதாகத் தெரியவில்லை. ஒரு வாரமாகத் தொடர்ந்த மர்மத்தின் முடிவில் சட்டென்று ஒரு நம்பிக்கை ஒளி புலப்பட்டது. வெள்ளியால் செய்யப்பட்ட பளபளப்பான பழைய எசுப்பானிய ஆபரணம் ஒன்று வெஸ்ட்மின்ஸ்டரில் உள்ள போவிங்க்டன் நகைக் கடையில் அடகு வைக்கப்பட்டது. அடகு வைத்தவன் நன்கு மழித்த முகம் மத போதகர் போன்ற உருவம். அவனது பெயரும் முகவரியும் முன்பே தெரிந்தது போலவே போலியானது. காதுகள் கவனிக்கப்படவில்லை. அங்க அடையாளங்களைப் பொறுத்தவரை ஷ்லசிங்கருடன் ஒத்திருந்தன.
லேங்காமில் இருந்து எங்களது தாடிக்கார நண்பர் மூன்று முறை எங்களை அழைத்து எதாவது செய்தி இருக்கிறதா என்று கேட்டார். மூன்றாவது முறை புத்தம் புதிய விஷயம் கேள்விப்பட்ட ஒரு மணி நேரத்திற்குள். அவரது பருத்த உடலில் ஆடைகள் தளர்ந்து கொண்டே இருக்கின்றன. எதிர்பார்ப்புகளினால் அவர் துவண்டு கொண்டிருந்தார். “எதாவது செய்யுங்கள்” என்றுதான் ஓயாமல் கத்திக் கொண்டே இருந்தார். இறுதியில் ஹோல்ம்ஸ் மனம் திறந்தார்.
“அவன் நகைகளை அடகு வைக்க ஆரம்பித்து விட்டான். இப்பொழுது நாம் அவனைப் பிடிக்க வேண்டும்”
“அப்படி என்றால் அவளுக்கு எதாவது ஆகி இருக்குமா?”
ஹோல்ம்ஸ் மிகவும் சோகமாகத் தலையசைத்தார்.
“அவளை இன்னும் சிறைப்படுத்தி வைத்திருக்கிறார்கள் என்று வைத்துக் கொள்வோமானால், அவளை விட்டு விட்டால் நிச்சயம் மாட்டிக் கொள்வார்கள். நாம் எதற்கும் தயாராக இருக்க வேண்டும்”
“நான் என்ன செய்ய வேண்டும்?”
“உங்களை அவர்கள் பார்த்ததில்லை அல்லவா?”
“இல்லை”
“அவன் வேறேதாவது அடகுக் கடைக்குச் செல்ல வாய்ப்பிருக்கிறது. அதனால் நாம் மீண்டும் ஆரம்பிக்க வேண்டும். இன்னொரு புறம், அவன் கேட்ட விலை கிடைத்திருக்கிறது எந்தவிதக் கேள்வியும் இல்லாமல். அதனால் அவனுக்குப் பணம் உடனே தேவைப்பட்டால் மீண்டும் அவன் போவிங்க்டனுக்கே வர வாய்ப்பிருக்கிறது. நான் அவர்களிடம் சொல்லி விடுகிறேன். அவர்கள் உங்களை அங்கே காக்க வைப்பார்கள். அவன் அங்கு வந்தால் நீங்கள் அவனைப் பின் தொடர்ந்து வீடு வரை செல்லுங்கள். ஆனால் அவசரப்படக் கூடாது. முக்கியமாக வன்முறை கூடாது. உங்கள் மேல் நம்பிக்கை வைக்கிறேன். என்னிடம் எதுவும் கேட்காமல் நீங்கள் ஒன்றும் செய்யக் கூடாது.”
இரு நாட்கள் மரியாதைக்குரிய பிலிப் க்ரீன் எந்தவிதச் செய்தியும் அளிக்கவில்லை. அவர் அதே பெயர் கொண்ட புகழ் பெற்ற கடற்படைத் தலைவரின் மகன். க்ரீமியாவில் நடந்த போரில் அவர்தான் அஸோப் படையை வழி நடத்தினார். மூன்றாவது நாள் பொழுசாயம் எங்களது வரவேற்பறைக்குள் வேகமாக நுழைந்தார். வெளிறிய முகம் நடுங்கிய உடல் வலிமையான உடம்பின் ஒவ்வொரு தசையும் உற்சாகத்தில் நடுங்கியது.
“அவன் கிடைத்து விட்டான். அவன் கிடைத்து விட்டான்” என்று கத்தினார்.
அவரது கிளர்ச்சியும் ஒரே சீராக இல்லை. ஹோல்ம்ஸ் அவரைச் சமாதானப்படுத்தி அவரை ஒரு ஆசனத்தில் வலுக்கட்டாயமாக அமர்த்தினார்.
“இப்பொழுது சொல்லுங்கள். என்ன நடந்தது என்று வரிசையாகச் சொல்லுங்கள்.”
“அவள் ஒரு மணி நேரம் முன்புதான் வந்தாள், இம்முறை வந்தது அவனது மனைவி. ஆனால் அவள் கொண்டு வந்த ஆபரணமும் வேறொருவருடையது. அவள் உயரமான வெளிறிய உடல் கொண்டவள். மரநாய்கள் போன்ற கண்கள் கொண்டவள்.”
“ஆம் அதே பெண்தான்.” என்றார் ஹோல்ம்ஸ்.
“அவள் கடையில் இருந்து கிளம்பியதும் நான் அவளைப் பின் தொடர்ந்தேன். அவள் கென்னிங்டன் தெருவின் மேல் நடந்தாள், நான் அவளைத் தொடர்ந்து சென்றேன். அப்பொழுது அவள் ஒரு கடைக்குள் சென்றாள். அது ஒரு வெட்டியானின் கடை, திரு.ஹோல்ம்ஸ்.”
எங்களது நண்பர் தொடர்ந்தார். “பின்னர்” என்று கணீரென்ற தனது குரலில் கேட்டார். அவரது இறுகிய முகத்தின் பின்னர் கனன்று கொண்டிருக்கும் இதயத்தின் குரல் அது.
“அவள் கடையில் இருந்த பெண்ணிடம் பேச ஆரம்பித்தாள். நானும் உள்ளே நுழைந்தேன். ‘இதுவே தாமதம்’ என்று அவள் சொல்வதைக் கேட்டேன். ‘இப்பொழுதே அனுப்பி விடுகிறேன்’ என்று அவள் பதில் அளித்தாள். ‘வழக்கமானது இல்லை என்பதால் தாமதமாகிறது’. அதன் பின் இருவரும் பேசுவதை நிறுத்தி விட்டு என்னைப் பார்த்தார்கள். அதனால் நானும் ஒப்புக்குச் சில கேள்விகள் கேட்டு விட்டுக் கிளம்பி விட்டேன்”
“நீங்கள் செய்தது அபாரம். அதன் பின் என்ன நடந்தது?”
“அந்தப் பெண் வெளியே வந்தாள். நான் வாசல் கதவின் பின்னால் ஒளிந்து கொண்டிருந்தேன். அவளுக்குச் சந்தேகம் வந்து விட்டது என்று நினைக்கிறேன். அதனால் திரும்பிப் பார்த்தபடி நடந்தாள். அதன் பின் ஒரு வாடகை வண்டியை நிறுத்தி ஏறிக் கொண்டாள். என் நல்ல நேரம். எனக்கும் ஒரு வண்டி கிடைத்தது. அதனால் அவளைப் பின் தொடர்ந்தேன். ஒரு வழியாக அவள் 36, போல்ட்னி சதுக்கம், பிரிக்ஸ்டனில் இறங்கினாள். நான் அவளைக் கடந்து சென்று ஒரு ஓரத்தில் நின்றேன். அதன் பின் அந்த வீட்டைக் கவனித்தேன்.”
“யாராவது இருந்தார்களா?”
“கீழ் தளத்தில் உள்ள அறைகளைத் தவிர அனைத்தும் இருட்டாகவே இருந்தது. சாளரத் திரையும் மூடப்பட்டிருந்தது. அதனால் உள்ளே பார்க்க முடியவில்லை. அடுத்து என்ன செய்வது என்று புரியாமல் அங்கேயே நின்று கொண்டிருந்தேன். அப்பொழுது மூடப்பட்ட ஒரு கூண்டுந்து இரண்டு ஆட்களுடன் வந்து நின்றது. அதில் இருந்து அவர்கள் இருவரும் இறங்கி எதோ ஒரு பொருளை எடுத்தார்கள். அதைத் தூக்கிக் கொண்டு நுழைவாயில் படியேறி கூடத்தின் கதவுகளுக்குள் நுழைந்து சென்றார்கள். திரு. ஹோல்ம்ஸ், அது சவப்பெட்டி.”
“ஆஹ்!”
“அந்த ஒரு நொடியில் சட்டென்று உள்ளே நுழைந்து விடலாமா என்று யோசித்தேன். கதவுகள் திறந்து அவர்கள் இருவர் மற்றும் தூக்கி வந்த சுமையையும் உள்ளே விட்டன. அதே பெண்தான் கதவைத் திறந்து விட்டது. என்னை ஒரு நொடி பார்த்து விட்டாள். அவள் என்னை அடையாளம் கண்டுபிடித்து விட்டாள் என்று எண்ணுகிறேன். அவள் அவசரமாகக் கதவைச் சாத்திக் கொண்டாள். உங்களிடம் கொடுத்த வாக்கு நினைவுக்கு வந்ததால் இதோ உங்கள் முன் நிற்கிறேன்”
“பிரமாதமான வேலை செய்திருக்கிறீர்கள்.” என்றார் ஹோல்ம்ஸ். ஒரு காகிதத்தில் எதோ சிலவற்றைக் கிறுக்கினார். “ஆணைப் பத்திரம் இல்லாமல் நாம் எதுவும் செய்ய முடியாது. அதனால் இந்தக் குறிப்பை காவல் துறையிடம் கொடுத்து ஆக வேண்டியதைக் கவனியுங்கள். சில தடங்கல்கள் வரலாம். ஆனால் ஆபரணங்கள் விற்ற அத்தாட்சியே போதுமானது. லெஸ்ட்ராட் இதில் உள்ள விளக்கங்களைப் புரிந்து கொள்வார்.”
“ஆனால் அவர்கள் அவளை இந்நேரம் கொன்றிருக்கக் கூடும். சவப்பெட்டிக்கு அங்கு என்ன வேலை. அவளைத் தவிர வேறு யாருக்காக இருக்க முடியும்?”
“நம்மால் முடிந்தவரை நாம் செய்வோம், திரு.க்ரீன் அவர்களே. ஒரு நொடியும் தாமதம் கூடாது. எங்களிடம் விட்டு விடுங்கள். வாட்சன்,” என்று ஆரம்பித்தார் எங்களது கட்சிக்காரர் வேகமாக வெளியேறிக் கொண்டிருந்தபோது. “அவர் வாடிக்கையான படையைத் தயார் செய்து அனுப்புவார். நாம் அப்படி இல்லை. அதனால் நமது வேலையை நாம் துவங்குவோம். இந்தச் சூழ்நிலையில் நாம் மிகத் தீவிரமான நடவடிக்கை எடுத்தாக வேண்டும். ஒரு நொடியும் தாமதிக்காமல் நாம் போல்ட்னி சதுக்கம் கிளம்பியாக வேண்டும்”
“நடந்த விஷயங்களைக் கொஞ்சம் சிந்தித்துப் பார்ப்போம்.” என்றார் அவர் நாங்கள் பாராளுமன்றத் கட்டிடங்களைக் கடந்து வெஸ்ட்மின்ஸ்டர் பாலத்தில் வேகமெடுத்துச் சென்று கொண்டிருக்கும்போது. “அந்தக் கயவர்கள் சோகத்தில் இருந்த அந்தப் பெண்மணியை மூளைச் சலவை செய்து லண்டன் வரை கடத்தி வந்திருக்கிறார்கள், முதலில் அவளது நம்பிக்கைக்குரிய வேலைக்காரியிடம் இருந்து பிரித்து. அவள் எதாவது கடிதங்கள் எழுதி இருந்தால் அதை அவர்களே கைப்பற்றி இருக்க வேண்டும். யாரோ ஒரு கூட்டாளி மூலம் ஒரு வீட்டை வாடகைக்கு எடுத்துள்ளனர். உள்ளே நுழைந்ததும் அவளைக் கைதியாக்கி இருக்கின்றனர். முதலில் இருந்தே அவளது நகைகள் எல்லாம் அவர்களது கண்களை உருத்தி இருக்கின்றன. அதனால் அதை அபகரித்திருக்கின்றனர். அதன் சில பகுதிகளை ஏற்கெனவே விற்க ஆரம்பித்து விட்டனர். அதுவும் அவர்களுக்கு மிகவும் பாதுகாப்பானதாக இருந்திருக்கிறது. ஏனெனில் அவளைப் பற்றிக் கவலைப்படுபவர் யாருமில்லை. ஒருவேளை அவளை விட்டு விட்டால் அவர்களை அவள் நிச்சயம் காட்டிக் கொடுத்து விடுவாள். அதனால் அவளை அவர்கள் விட்டு விட மாட்டார்கள். மேலும் அவளைக் கைதியாகவே வாழ்நாள் முழுவதும் வைத்துக் கொள்ளவும் இயலாது. கொலைதான் அவர்களுக்குத் தெரிந்த ஒரே தீர்வு.”
“ஆம். அது நிச்சயமான ஒன்று”
“நாம் இப்பொழுது வேறொரு வகையில் சிந்தித்துப் பார்க்கலாம். இரு வேறு வகையான சிந்தனைச் சங்கிலிகளை நூல் பிடித்துச் சென்றோம் என்றால், வாட்சன், நீங்கள் ஒரு இடத்தில் அவைகள் கூடுவதைக் காண்பீர்கள். அதில் இருந்து உண்மைகளை ஒருவாறு கண்டுபிடித்து விடலாம். இப்பொழுது அந்தப் பெண்மணியை விட்டு விடுவோம். அந்தச் சவப்பெட்டியில் இருந்து தொடங்கி அப்படியே பின்னால் பயணிப்போம். அந்தச் சம்பவத்தில் இருந்து சந்தேகத்துக்கு இடமில்லாமல் அந்தப் பெண் இறந்து விட்டாள் என்பது புலனாகிறது. அதுவும் அவர்கள் வழக்கமான நடைமுறையில் சவத்தைப் புதைக்க வழி வகை செய்து கொண்டிருக்கிறார்கள், தேவையான மருத்துவச் சான்றிதழோடு அதிகாரப்பூர்வமாக. அவள் கொலை செய்யப்பட்டிருந்தால் தோட்டத்தின் பின் புறம் அவசரம் அவசரமாகப் புதைத்திருப்பார்கள். ஆனால் இங்கு எல்லாமே வெட்ட வெளிச்சமாகச் சாதாரணமாக நடந்து கொண்டிருக்கிறது. இதற்கு என்ன பொருள்? நிச்சயம் அவளை அவர்கள் கொலை செய்திருக்கிறார்கள். மருத்துவர்களை ஏமாற்றும் விதத்தில் இயற்கையாக இறந்தது போல் காட்டுவதற்கு முயற்சி செய்திருக்கிறார்கள். நஞ்சு கலந்து கொன்றிருக்கலாம். மருத்துவர் கூட்டாளியாய் இல்லாமல் இருந்திருந்தால் எப்படி அவரை அருகில் அனுமதித்திருப்பார்கள். அதற்கும் வாய்ப்பிருக்கிறது.”
“மருத்துவச் சான்றிதழைப் போலியாக உருவாக்கி இருக்கலாமே”
“அபாயமானது, வாட்சன். மிகவும் அபாயமானது. இல்லை, அவர்கள் அதை எல்லாம் செய்திருப்பார்கள் என்று தோன்றவில்லை. வண்டியை நிறுத்துங்கள், ஓட்டுநர். இது வெட்டியானின் கடையாய் இருக்கும். ஏனெனில் அடகுக் கடையை இப்பொழுதுதான் தாண்டிச் சென்றோம். நீங்கள் உள்ளே போகிறீர்களா, வாட்சன்? உங்கள் தோற்றம் நம்பிக்கையானது போல் தெரிகிறது. நாளை எத்தணை மணிக்கு போல்ட்னி சதுக்க இறுதி ஊர்வலம் நடைபெறுகிறது என்று விசாரியுங்கள்.”
கடையில் இருந்த பெண் காலை எட்டு மணிக்கு நடைபெறுவதாக எந்தவிதத் தயக்கமும் இன்றிக் கூறினாள். “பாருங்கள், வாட்சன். எந்தவித மர்மமும் இல்லை. எல்லாமே வெட்ட வெளிச்சமாய் இருக்கிறது. எதோ ஒரு வகையில் சட்டத்துக்குத் தேவையான நடைமுறைகள் எல்லாம் கட்டுக்கோப்பாய் இருக்கின்றன. அதனால் பயமில்லை என்று அவர்கள் நினைக்கிறார்கள். நல்லது, இப்பொழுது முன்னின்று நேரடியாகத் தாக்குதல் நடத்தலாம். உங்களிடம் ஆயுதம் இருக்கிறதா?”
“எனது கம்பு இருக்கிறது”
“நிச்சயம், நமக்குப் பாதுகாப்பானதுதான். ‘கடவுள் நல்லவர்கள் பக்கம் இருப்பார்’. காவல் துறை வரும்வரை நாம் காத்திருக்க முடியாது. மேலும் சட்டத்தின் நான்கு சுவர்களுக்குள்ளும் அடைந்து கிடைக்கவும் இயலாது. வண்டியை எடுத்துக் கொண்டு நீங்கள் செல்லலாம், ஓட்டுனரே. நமது இருவரின் யோகம் எப்படி இருக்கிறது என்று சோதித்துப் பார்த்து விடலாம். கடந்த காலங்களில் சில சமயம் கை கொடுத்தது போல் இப்பொழுதும் கொடுக்கலாம்”
போல்ட்னி சதுக்கத்தில் மையத்தில் இருந்த அந்த பெரிய இருண்ட வீட்டின் அழைப்பு மணியை வேகமாக அழுத்தினார் அவர். உடனே அது திறக்கப்பட்டது. விளக்கு வெளிச்சம் கம்மியாக இருந்த கூடத்தில் உயரமான ஒரு பெண்மணியின் தோற்றம் வெளிப்பட்டது.
“என்ன வேண்டும் உங்களுக்கு?” என்று எரிச்சலோடு கேட்டாள், அந்த இருட்டில் எங்களைக் கூர்ந்து நோக்கியவாறு.
“நான் மரு. ஷ்லசிங்கரிடம் பேச வேண்டும்” என்று சொன்னார் ஹோல்ம்ஸ்.
“அப்படி யாரும் இங்கில்லை.” என்று சொல்லி விட்டுக் கதவை மூட முயற்சி செய்தாள். ஆனால் ஹோல்ம்ஸ் தன் கால்களை வைத்துத் தடுத்தி நிறுத்தினார்.
“நான் இங்கு இருக்கும் ஆளைப் பார்க்க விரும்புகிறேன் அவர் பெயர் என்னவாக இருந்தாலும் சரி.” என்று உறுதியுடன் கூறினார் ஹோல்ம்ஸ்.
அவள் தயங்கினாள். பின் அந்தக் கதவுகளைத் திறந்தாள். “உள்ளே வாருங்கள்!” என்றாள் அவள். “என் கணவர் இந்த உலகில் எந்தவிதமான மனிதர்களைச் சந்திக்கவும் தயங்கியதில்லை. கதவுகளை மூடி விட்டு எங்களைக் கூடத்தின் வலது புறம் உள்ள வரவேற்பறையை நோக்கிக் கை காட்டினாள். “திரு. பீட்டர்ஸ் இன்னும் சற்று நேரத்தில் உங்களைச் சந்திப்பார்” என்றாள்.
அவளது சொற்கள் உண்மை. நாங்கள் தூசி படிந்த அந்துப்பூச்சி சாப்பிட்ட வீட்டைச் சுற்றி நோட்டம் விட்டுக் கொண்டிருக்கும் வேளையில் கதவு திறந்தது. அங்கே நன்கு மழிக்கப்பட்ட முகம் கொண்ட ஒருவன் மெதுவாக உள்ளே நுழைந்து கொண்டிருந்தான். அவனுக்குப் பெரிய சிவப்பான முகம் இருந்தது. கன்னச் சதைகள் ஆடிக் கொண்டிருந்தன. பார்ப்பதற்கு நல்லவன் போல் தோன்றினாலும் கொடூரமான வாய் காட்டிக் கொடுத்து விட்டது.
“இங்கு எதோ தப்பு நடந்து விட்டது” என்று மென்மையாக எல்லாம் சரியாய் இருக்கிறது என்பது போன்ற குரலில் கூறினான். “உங்களுக்கு யாரோ தவறான தகவல் கொடுத்து விட்டார்கள். இதே தெருவில் இன்னும் கொஞ்ச தூரம் சென்றீர்கள் என்றால்–”
“இது போதும். ஒரு நொடி கூட நாம் வீணடிக்க முடியாது.” என்று எனது நண்பர் உறுதியாகக் கூறினார். “நீதான் அடிலெய்டில் இருந்து வந்த ஹென்றி பீட்டர்ஸ். தற்சமயம் பேடன் மற்றும் தென் அமெரிக்காவில் இருந்து வந்த மரு. ஷ்லசிங்கர். எனது பெயர் ஷெர்லாக் ஹோல்ம்ஸ் எவ்வளவு சரியோ அவ்வளவு நான் சொன்னதும் சரி.”
பீட்டர்ஸ், இனிமேல் அப்படியே அழைக்கலாம், தனது எதிராளியை மிகவும் உறுத்தலோடு பார்த்தான். “உனது பெயர் என்னை ஒன்றும் பயமுறுத்தவில்லை திரு.ஹோல்ம்ஸ்.” என்றான் மிகவும் பொறுமையாக. “ஒரு மனிதன் தெளிவான அறிவோடு இருக்கும்போது அவனை யாரும் ஒன்றும் செய்து விட முடியாது. உனக்கு என் வீட்டில் என்ன வேலை?”
“பேடனில் இருந்து உன்னுடன் வந்த பிரான்செஸ் என்ற பெண்ணை நீ என்ன செய்தாய் என்று எனக்குத் தெரிந்தாக வேண்டும்.”
“அந்தப் பெண் எங்கிருக்கிறாள் என்று சொன்னால் எனக்கும் வசதியாய் இருக்கும்” என்று பீட்டர்ஸ் நிதானமாகச் சொன்னான். “அவள் எனக்கு 400 பவுண்டுகள் தர வேண்டும். அவள் கொடுத்த சில ஆபரணங்களை அடகுக்காரன் ஏறெடுத்தும் பார்க்கவில்லை. அவள் திருமதி.பீட்டர்ஸ் மற்றும் என்னுடன் பேடனில் நெருக்கம் காட்டினாள். அந்த இடத்தில்் வேறு ஒரு பெயரை நான் பயன்படுத்தியது உண்மைதான். நாங்கள் லண்டன் வரும்வரை அவள் எங்களுடன் ஒட்டிக் கொண்டாள். நான் அவளுக்குப் பயணச் சீட்டு மற்றும் செலவுகள் செய்து கூட்டி வந்தேன். லண்டன் வந்த பிறகு அவள் எங்களை விட்டுச் சென்று விட்டாள். அவளது இந்தப் பழைய நகைகளைக் கொடுத்து விட்டுச் சென்றாள் செலவுக்கணக்காக. நீங்கள் அவளைக் கண்டுபிடித்தால் சொல்லுங்கள். நானே வசூலித்துக் கொள்கிறேன்”
“நானும் அவளைக் கண்டு பிடிக்கத்தான் விரும்புகிறேன்” என்றார் ஹோல்ம்ஸ். “நான் இந்த வீட்டைச் சுற்றிச் சோதனை செய்யத்தான் போகிறேன் அவளைக் கண்டுபிடிக்கும் வரை”
“எங்கே உங்களது ஆணைப்பத்திரம்?”
ஹோல்ம்ஸ் தனது பையில் இருந்து ஒரு கைத்துப்பாக்கியை எடுத்தார். “சரியான ஒன்று வரும் வரை இதுவே போதும் என்று நினைக்கிறேன்”
“ஏன், நீங்கள் சாதாரணத் திருடர்கள்தானா”
“அப்படியும் சொல்லலாம்” என்று மகிழ்ச்சியாகச் சொன்னார் ஹோல்ம்ஸ். “எனது நண்பனும் கொடூரமான போக்கிரிதான். நாங்கள் இருவரும் உனது வீட்டைச் சுற்றிப் பார்க்கப் போகிறோம்.”
எங்கள் எதிராளி கதவைத் திறந்தான்.
“ஒரு காவல் அதிகாரியை வரச் சொல் ஆனி!” என்றான் அவன். வேகமாக ஒரு பெண் கூடத்தில் ஓடினாள். கூடத்தின் கதவு திறந்து மூடப்பட்டது.
“நமக்குக் கொஞ்ச நேரமே இருக்கிறது, வாட்சன்.” என்றார் ஹோல்ம்ஸ். “நீ எங்களை நிறுத்த முயற்சி செய்தால், பீட்டர்ஸ், நிச்சயம் நான் சுட்டு விடுவேன். நீ வீட்டுக்குள் கொண்டு வந்த சவப்பெட்டி எங்கே இருக்கிறது?”
“அதில் இருந்து என்ன வேண்டும் உனக்கு? அதில் ஒரு பிணம் இருக்கிறது.”
“நான் அதைப் பார்க்க வேண்டும்.”
“நான் அனுமதிக்க மாட்டேன்”
“உன் அனுமதி தேவை இல்லை. ஒரு ஓரத்தில் வேகமாக அவனைத் தள்ளியபடி கூடத்தினுள் நுழைந்தார் ஹோல்ம்ஸ். பாதி திறந்த நிலையில் ஒரு கதவு தெரிந்தது. நாங்கள் நுழைந்தோம். அது சாப்பிடும் அறை. அதன் மேசையில் பாதி எரிந்து கொண்டிருக்கும் சரவிளக்குக்குக் கீழே ஒரு சவப்பெட்டி இருந்தது. ஹோல்ம்ஸ் அதன் எரிவாயுவைக் கூட்டி விட்டு மூடியைத் திறந்தார். அதனுள் ஆழத்தில் ஒரு தேய்ந்து போன உடல் இருந்தது. விளக்கின் வெளிச்சம் அந்த வயதான தேய்ந்த முகத்தில் பட்டு அடித்தது. எந்தவிதக் கொடூரமான பட்டினி போட்டோ நோயைப் பரப்பியோ கொலை செய்திருந்தாலும் இன்னும் அழகாக இருக்கும் பிரான்செஸ் ஆக இருக்க வாய்ப்பே இல்லை. ஹோல்ம்ஸின் முகம் மகிழ்ச்சையையும் நிம்மதியையும் வெளிப்படுத்தியது.
“நல்ல வேளை!” என்று கத்தினார். “இது வேறு யாரோ”
“ஆஹ், பெரிய தவறு செய்து விட்டீர்கள், திரு. ஹோல்ம்ஸ்.” என்றான் பீட்டர்ஸ் எங்கள் பின்னாடியே வந்து.
“இறந்து போன இந்தப் பெண் யார்?”
“நல்லது, உங்களுக்குத் தெரிந்தே ஆக வேண்டுமானால் சொல்கிறேன். அவள் எனது மனைவியின் வயதான தாதி. அவளது பெயர் ரோஸ் ஸ்பென்டர். அவளை நாங்கள் பிரிக்ஸ்டனில் உள்ள வயதானவர்கள் வீட்டில் இருந்து அழைத்து வந்தோம். இங்கு வந்ததும் 13, பார்பேன்க் வில்லாவில் இருக்கும் மரு.ஹார்சம் அவர்களை வரவழைத்தோம். அந்த முகவரியை நன்றாகக் குறித்துக் கொள்ளுங்கள் திரு.ஹோல்ம்ஸ். அவர்களை நன்றாகக் கவனித்துக் கொண்டோம் கிறித்துவ முறைப்படி. மூன்றாவது நாள் இறந்து விட்டாள். சான்றிதழ் முதுமையால் இறந்ததாகத் தெரிவிக்கிறது. ஆனால் அது மருத்துவரின் குறிப்பு மட்டுமே. உங்களுக்கு நன்றாகவே தெரியும். கென்னிங்டன் சாலையில் உள்ள ஸ்டிம்சன் நிறுவனத்தினரை வைத்து நாளைக் காலை இறுதி ஊர்வலம் ஏற்பாடு செய்திருக்கிறோம். இதில் எதாவது ஓட்டை இருப்பது போல் தெரிகிறதா திரு.ஹோல்ம்ஸ்? நீங்கள் ஒரு முட்டாள்தனமான தவறு செய்து விட்டீர்கள். அதற்கு நீங்கள்தான் பொறுப்பேற்க வேண்டும். ஆர்வத்தோடு ஓடோடி வந்து பிரான்செஸ்ஸை எதிர்பார்த்து மூடியைத் திறந்தபோது தொண்ணூறு வயது பிணத்தைக் கண்டு வாய் பிளந்த, நிலை குத்திய பார்வையோடு இருக்கும் உங்களது ஒளிப்படத்தை நான் எடுத்திருக்க வேண்டும்.”
ஹோல்ம்ஸின் முக பாவனைகள் அசைக்க முடியாததாய் இருந்தன. அவரது எதிராளி இவ்வளவு கடுப்பேற்றிக் கொண்டிருந்தபோதும். ஆனால் அவனது வெறுப்பேற்றுதல் காரணமாகத் தனது கைகளை இறுக்கமாக மூடிக் கொண்டிருந்தார்.
“நான் உங்கள் வீட்டைச் சோதனை செய்யப் போகிறேன்” என்றார் அவர்.
“இன்னுமா” என்று கத்தினான் பீட்டர்ஸ். நடைபாதையில் ஒரு பெண் மற்றும் வேறு பல கனமான சத்தங்களும் கேட்க ஆரம்பித்தன. “அதையும் பார்க்கலாம். இந்தப் பக்கமாக வாருங்கள், அதிகாரி அவர்களே. இந்த இருவரும் என் வீட்டினுள் அனுமதி இல்லாமல் நுழைந்து விட்டார்கள். அவர்களை என்னால் விரட்ட முடியவில்லை. நீங்கள்தான் உதவ வேண்டும்”
இரு காவலர் கதவருகில் நின்றனர். ஹோல்ம்ஸ் தனது அட்டையை எடுத்து நீட்டினார்.
“இதுதான் எனது பெயர், முகவரி. இது எனது நண்பர், வாட்சன்”
“நல்லது, உங்களை எங்களுக்கு நன்றாகவே தெரியும். ஆனால் ஆணைப்பத்திரம் இல்லாமல் நீங்கள் இங்கு இருக்க முடியாது.”
ஆம், நிச்சயம். அது எனக்கு நன்றாகத் தெரியும்”
“அவனைக் கைது செய்யுங்கள்” என்று கத்தினான் பீட்டர்ஸ்.
“இவர் தேவை என்றாலும் என்ன செய்ய வேண்டும் என்று எனக்குத் தெரியும் என்று அந்தக் காவலர் தோரணையுடன் கூறினார். “ஆனால், நீங்கள் உடனே செல்ல வேண்டும், திரு.ஹோல்ம்ஸ்”
“ஆம், வாட்சன். நாம் செல்லலாம்”
ஒரு நிமிடம் கழித்து நாங்கள் மீண்டும் தெருவில் இருந்தோம். ஹோல்ம்ஸ் எப்பொழுதும் போல் நிதானமாக இருந்தார். ஆனால் எனக்குள் அவமானத்தால் கோபம் கொப்பளித்தது. காவலர் ஒருவர் எங்களைப் பின் தொடர்ந்தார்.
“மன்னியுங்கள், திரு. ஹோல்ம்ஸ். அதுதான் சட்டம்”
“அதேதான். மாற்றிச் செய்ய இயலாது அல்லவா”
“நீங்கள் இங்கு வந்ததற்கு எதாவது ஒரு காரணம் இருக்குமே. நான் எதாவது செய்ய வேண்டும் என்றால்–”
“காணாமல் போன ஒரு பெண். இந்த வீட்டில்தான் இருக்க வேண்டும் என்று சந்தேகிக்கிறேன். நான் ஒரு ஆணைப் பத்திரம் எதிர்பார்த்துக் கொண்டிருக்கிறேன்.”
“அப்படி என்றால் அவர்களை நான் கண்காணித்துக் கொள்கிறேன், திரு. ஹோல்ம்ஸ். எதாவது இருந்தால் நான் தெரியப்படுத்துகிறேன்”
இப்பொழுது மணி ஒன்பதுதான் ஆகி இருந்தது. பாதையில் இருந்து முழுவதும் விலகி விட்டோம். நாங்கள் முதலில் பிரிக்ஸ்டனில் இருக்கும் வயதானவர்கள் இல்லத்திற்குச் சென்றோம். ஒரு தொண்டு நிறுவனம் ஒரு வயதான பெண்மணியைத் தங்களது பழைய தாதி என்று அழைத்துச் சென்றது உண்மை என்பதைக் கண்டறிந்தோம். அதற்கும் முறையான அனுமதி வாங்கி இருக்கிறார்கள் என்பதும் தெரிந்தது. அதன் பின் அவள் இறந்து விட்டாள் என்று தெரிந்தும் அவர்கள் ஆச்சரியப்படவே இல்லை.
மருத்துவர்தான் எங்களது அடுத்த இலக்கு. அவரை அழைத்துப் பரிசோதனை செய்ய வைத்தார்கள். அங்கே இருக்கும்போது கண் முன்னரே இறந்திருக்கிறாள். அதனால் மூப்பின் காரணமாக இறந்ததாக அவர் சான்றிதழ் கொடுத்திருக்கிறார். “எல்லாமே சரியாக இருந்தது. தவறாக எதுவும் நடக்கவில்லை என்பதற்கு நான் உத்தரவாதம் கொடுக்க முடியும்” என்றார் அவர். அந்த வீட்டில் சந்தேகப்படும்படி எதுவும் நடக்கவில்லை. அவர்களின் தரத்திற்கு ஒரு வேலைக்காரன் கூட இல்லை என்பது தவிர. இதற்கு மேல் ஒரு வார்த்தை சொல்லவில்லை அந்த மருத்துவர்.
ஒருவழியாக நாங்கள் ஸ்காட்லாந்து யார்டை அடைந்தோம். ஆணைப் பாத்திரம் வழங்குவதில் இன்னும் கொஞ்சம் சிக்கல் இருந்தது. சிறிது தாமதம் என்பது நடைமுறைதான். நீதியரசரின் கையெழுத்தை நாளைக் காலை வரையிலும் வாங்க முடியாது. ஹோல்ம்ஸ் ஒரு ஒன்பது மணிக்கு அழைத்தால் லெஸ்ட்ராட் உடன் சென்று என்ன முன்னேற்றம் என்பதைக் கண்டு வரலாம். அப்படியாக அந்த நாள் கழிந்தது. கிட்டத்தட்ட நடு இரவில் அந்தக் காவலர் அழைத்து தான் அந்த இருண்ட வீட்டின் மேல் வெளிச்சம் அடித்துக் கொண்டிருந்தபோதும் யாரும் உள்ளே செல்லவோ வெளியேறவோ இல்லை என்று கூறினார். பொறுமையாக நாம் நாளை வரை காத்திருப்பது மட்டுமே நம்மால் ஆகக் கூடிய காரியம்.
ஷெர்லாக் ஹோல்ம்ஸ்க்குப் பேசவும் பிடிக்கவில்லை. உறக்கமும் வரவில்லை. நன்றாகப் புகைக்கட்டும் என்று விட்டு விட்டேன். அவரது கருமையான அடர்ந்த புருவ முடிகள் முடிச்சிட்டுக் கொண்டிருந்தன. அவரது நீண்ட பதற்றமான விரல்கள் நாற்காலியின் கைப்பிடியில் தாளமிட்டுக் கொண்டிருந்தன. தனது உள்ளத்தில் இந்த மர்மத்தின் ஒவ்வொரு தீர்வுகளையும் பற்றி அசை போட்டுக் கொண்டிருந்தார். இரவு பல சமயங்களில் அவர் வீட்டைச் சுற்றி வந்து கொண்டிருந்தார். காலை ஒருவழியாக நான் தயாரானபோது அவர் வேகமாக அறையினுள் நுழைந்தார். அவர் இன்னும் தனது இரவு உடையிலேயே இருந்தார். அவரது வெளிறிய முகமும் குழி விழுந்த கண்களும் அவர் இரவில் உறங்கவே இல்லை என்பதைப் பறை சாற்றியது.
“இறுதி ஊர்வலம் எத்தணை மணி? எட்டு இல்லையா?” என்று மிக ஆர்வமாகக் கேட்டார். “இப்பொழுது மணி 7.20. கடவுளே. வாட்சன், கடவுள் எனக்குக் கொடுத்த மூளைக்கு என்னதான் பயன். சீக்கிரம், சீக்கிரம். இது வாழ்வா சாவா பிரச்சினை. சாவிற்கு நூறு வாய்ப்பும் வாழ்வதற்கு ஒரே ஒரு வாய்ப்பும் கொண்ட நிகழ்வு இது. இன்று மட்டும் தாமதமானால் நான் என்னை என்றும் மன்னிக்கவே மாட்டேன்!”
ஐந்து நிமிடம் கூட ஆகி இருக்கவில்லை. அதற்குள் நாங்கள் பேக்கர் தெருவில் குதிரை வண்டியில் சிட்டாய்ப் பறந்து கொண்டிருந்தோம். நாங்கள் பெரிய மணிக் கூண்டைத் தாண்டும்போதே இருபத்தைந்து நிமிடங்களே இருந்தன. பிரிக்ஸ்டன் தெருவில் நுழையும்போது சரியாக எட்டு அடித்து விட்டது. ஆனால் ஏனையோரும் எங்களைப் போலவே தாமதமாகவே வந்திருந்தனர். பத்து நிமிடங்கள் கழித்தும் பாடை வீட்டுக் கதவின் அருகிலேயே நின்று கொண்டிருந்தது. எங்களது நுரை தள்ளிய குதிரை நின்றபோது மூன்று பேர் தூக்கிச் சென்ற சவப்பெட்டி அருகில் தெரிந்தது. ஹோல்ம்ஸ் வேகமாகச் சென்று அதனை மறித்தார்.
“உள்ளே கொண்டு செல்லுங்கள்!” என்று கத்தினார் முன்னால் நின்றிருந்தவனின் மார்பில் கையை வைத்து. “உடனே உள்ளே எடுத்துச் செல்லுங்கள்”
“என்ன மயிருக்கு அப்படிச் செய்யணும்” என்று அவன் பதிலுக்கு கத்தினான். “நான் மீண்டும் கேட்கிறேன், உன்னிடம் ஆணைப்பத்திரம் எங்கே இருக்கிறது?” என்று கோபமாக பீட்டர்ஸ் மீண்டும் கேட்டான். அவனது சிவந்த முகம் சவப்பெட்டியின் மறு முனையில் தெரிந்தது.
“ஆணைப் பத்திரம் வந்து கொண்டிருக்கிறது. சவப்பெட்டி அது வரும்வரை வீட்டினுள் இருக்கட்டும்.”
ஹோல்ம்ஸின் குரலில் இருந்த தோரணை கொஞ்சம் வேலை செய்தது. பீட்டர்ஸ் சட்டென்று வீட்டினுள் சென்று மறைந்தான். அதனால் அவர்கள் அவர் சொன்னதைக் கேட்டு நடந்தனர். “வாட்சன், சீக்கிரம்! இதோ திருப்புளி இருக்கிறது.” என்று கத்தினார் சவப்பெட்டி மீண்டும் மேசையில் கிடத்தப்பட்டபோது. “இதோ உங்களுக்கு ஒன்று இருக்கிறது, எனதருமை நண்பனே. ஒரே நிமிடத்தில் திருகாணிகள் வந்து விட்டால் நமது நல்ல நேரமே. கேள்வி கேட்க நேரமில்லை. வேலை ஆகட்டும். நல்லது. இன்னொன்று, இன்னொன்று. இப்பொழுது மூடியை அப்படியே தூக்குங்கள். திறக்கிறது, திறக்கிறது. ஒருவழியாக வேலை செய்கிறது”
இருவரும் சேர்ந்து அதன் மூடியை நீக்கினோம். அப்படிச் செய்த போது மதி மயக்கும் மூச்சை அடைக்கும்படியாக குளோரோபார்ம் நெடி அடித்தது. அதனுள் ஒரு உடல் இருந்தது. அதன் தலை முழுவதும் பருத்திப் பஞ்சினால் சுற்றப்பட்டிருந்தது. அந்தப் பஞ்சு முழுவதும் அந்தத் திரவம் நனைக்கப்பட்டிருந்தது. ஹோல்ம்ஸ் அதை நீக்கி விட்டு அதனுள் இருந்த உருவத்தை வெளிப்படுத்தினார். அது மிகவும் அழகான ஆன்மிக மயமான நடுத்தர வயதுடைய ஒரு பெண். மறு நொடியில் அவளை அலேக்காகத் தூக்கி அமர வைத்தார்.
“இவள் இறந்து விட்டாளா, வாட்சன்? எதாவது பொறி மிச்சம் இருக்கிறதா? நாம் நிச்சயம் தாமதிக்கவில்லை”
ஒரு அரை மணி நேரமாக அப்படித்தான் தோன்றியது. மூச்சுத்திணறலாலும் க்ளோரோபார்மின் நச்சுப் புகையாலும் மீட்க முடியாத கட்டத்திற்குச் சென்று விட்டாள் பிரான்செஸ் என்றே தோன்றியது. இறுதியில், செயற்கை சுவாசம் கொடுத்து, நரம்புகளில் மயக்க மருந்து ஏற்றி அறிவியல் கையளித்திருந்த அனைத்து வகையான கருவிகளையும் பயன்படுத்திப் பார்த்ததில், ஒரு உயிரின் ஓசை, இமைகளின் அசைவுகள், கொஞ்சம் மங்கலான கண்ணாடி அனைத்தும் சிறிது சிறிதாக மீண்டு வந்து கொண்டிருக்கும் உயிர் பற்றி அறிவித்தன. வாயிலில் ஒரு வண்டி வந்து நின்றது. ஹோல்ம்ஸ் சாளரத் திரையை விலக்கிப் பார்த்து, “லெஸ்ட்ராட் ஆணைப் பத்திரத்துடன் வந்து விட்டார்.” என்றார். “அவரது பறவைகள் பறந்து விட்டன என்று அவர் அறிந்து கொள்வார். மேலும் இங்கே-” என்று மேற்கொண்டு சொல்ல ஆரம்பித்தார். அப்பொழுது ஒரு கனமான சுவடுகள் பாதையில் வந்து கொண்டிருந்தது. “நம்மை விடச் சிறப்பாக இந்தப் பெண்ணை கவனிக்கக் கூடிய ஒருவர் வந்திருக்கிறார். வணக்கம், திரு.க்ரீன். பிரான்செஸ்ஸை எவ்வளவு விரைவாக நாம் கொண்டு செல்கிறோமோ அவ்வளவு நல்லது. இடைப்பட்ட நேரத்தில் இறுதி ஊர்வலம் தொடரட்டும். அதில் உள்ள பாட்டியின் உடல் கல்லறை வரை தனியே தனது பயணத்தைக் தொடங்கட்டும்.”
“உங்களது ஆவணத்தில் இந்த வழக்கைச் சேர்த்துக் கொள்வீர்களா, வாட்சன்.” என்று அன்று மாலை கேட்டார் ஹோல்ம்ஸ். “சிறிதே நேரத்தில் தலை சிறந்த மனிதனுக்கு ஏற்பட்ட கிரகணத்திற்கு ஒரு உதாரணமாக அது இருக்கும். அது போன்ற சறுக்கல்கள் சாதாரண மனிதர்களுக்கு அவ்வப்போது நடக்கத்தான் செய்யும். அதைச் சரி செய்து வெற்றிகரமாக மீண்டு வருபவன்தான் சிறந்தவன். அதனால் அந்தப் புகழுக்கு நான் கொஞ்சம் உரிமை கோரலாம் என்று எண்ணுகிறேன். இரவு முழுவதும் நான் யோசித்துக் கொண்டே இருந்தேன். எதோ ஒரு இடத்தில் எதோ ஒரு வாக்கியம் எதோ ஒரு தடயத்தைக் குறிப்பை வெகு எளிதாக என் பார்வையில் பட்ட பின்பும் விட்டு விட்டேனோ என்ற எண்ணம் மனதை அரித்துக் கொண்டே இருந்தது. விடியற் காலையில் சட்டென்று அந்த வார்த்தைகள் மீண்டும் என்னுள் வந்து சேர்ந்தன. பிலிப் க்ரீன் சொன்னாரே வெட்டியானின் மனைவி சொன்னதாக. அவள் சொல்லி இருந்தாள், ‘இப்பொழுதே அது வந்து சேரும். வழக்கமானது இல்லை என்பதால் தாமதமாகிறது.’ என்று. அவள் அந்தச் சவப்பெட்டி பற்றித்தான் சொல்லி இருந்தாள். வழக்கமானது இல்லை. அதற்கு ஒரே காரணம்தான் இருக்க முடியும். அதைத் தேவையான அளவுகளுக்குத் தகுந்தாற்போல் செய்திருக்கிறார்கள். ஆனால் ஏன்? ஏன்? அதன் பின்புதான் தோன்றியது. அதன் ஆழம் மற்றும் அதன் அடியில் இருந்த மெலிந்த உருவம். சிறிய மெலிந்த உருவத்திற்கு ஏன் இவ்வளவு ஆழமான பெட்டி. இன்னொரு சவத்தை அதில் வைக்கத்தான். ஒரே ஒரு சான்றிதழை வைத்து இரு சவங்களைப் புதைக்கத்தான். எல்லாமே புரிந்து விட்டது, எனது கண்கள் மங்கலாகாது இருந்ததால். எட்டு மணிக்கு அவள் புதைக்கப்பட்டு விடுவாள். நமக்கு இருந்த ஒரே வாய்ப்பு அதற்கு முன் தடுப்பதுதான்.
“அவளை உயிருடன் கண்டுபிடிப்பது என்பது நம்பிக்கையே இல்லாத ஒரு வாய்ப்பு. ஆனால் நடந்த நிகழ்வுகள் அதுவும் ஒரு வாய்ப்பு என்பதை நமக்கு உணர்த்தி விட்டது. இவர்கள் என்னைப் பொறுத்தவரையில் இதுவரை கொலை செய்ததில்லை. இறுதியில் உண்மையான வன்முறையில் இருந்தே பின் வாங்கி இருப்பார்கள். அவளுக்கு என்ன நடந்தது என்றே கண்டு பிடிக்க முடியாமல் அவளைப் புதைத்திருக்கலாம். அவளை எரித்திருந்தால் கூட அவர்களுக்கு ஒரு வாய்ப்பு இருந்திருக்கும். அவர்கள் மனதில் இதெல்லாம் எண்ணி இருப்பார்கள் என்றே நான் நினைத்திருந்தேன். உங்களுக்கே கூட அது புரிந்திருக்கலாம். மேல்மாடியில் இருந்த கொடூரமான குகையை நீங்கள் கண்டீர்கள் அல்லவா. அந்தப் பெண்ணை அங்குதான் நீண்ட நாட்களாய் வைத்திருந்தார்கள். வேகமாக வந்து அவள் மேல் க்ளோரோபார்ம் தெளித்துக் கீழே எடுத்து வந்து அவளை எழ விடாமல் தடுக்க சவப்பெட்டியினுள்ளும் தெளித்து மூடி போட்டிருக்கிறார்கள். மிகவும் புத்திசாலித்தனமானது, வாட்சன். குற்றங்களில் இது புதிய நடைமுறையானது. ஒருவேளை நமது போதக நண்பர்கள் லெஸ்ட்ராடின் பிடிகளில் இருந்து தப்பித்தால் அவர்களது எதிர்காலத் தொழில்களில் இன்னும் சிறந்த சம்பவங்கள் பற்றிக் கேள்விப்படலாம்.”
அருஞ்சொற்கள்
- புதைமிதியடி – Boot
- கூண்டுந்து – Van
- அந்துப்பூச்சி – Moth
- ஆணைப்பத்திரம் – Warrant
- சரவிளக்கு – Chandelier
- தாதி – Nurse
- ஒளிப்படம் – Photograph
- திருப்புளி – Screw driver
– ஷெர்லாக் ஹோல்ம்ஸ் சாகசங்கள், தமிழாக்கம்: சு.சோமு