பாஸ்கோம் பள்ளத்தாக்கு மர்மம்

0
கதையாசிரியர்:
கதை வகை: மொழிபெயர்ப்பு
கதைத்தொகுப்பு: கிரைம்
கதைப்பதிவு: July 6, 2021
பார்வையிட்டோர்: 17,876 
 

முன்னுரை

நீண்ட நாட்களாகவே எழுத்துத் துறையில் அடி எடுத்து வைக்க வேண்டும் என்று நினைத்துக் கொண்டே இருந்தேன். தமிழாக்கம் செய்வதுதான் என் நிலைக்குச் சரியான வேலை என்பதால் என் கன்னி முயற்சியாக ஷெர்லாக் ஹோல்ம்ஸ் சாகசங்களில் இருந்து ஆரம்பிக்கிறேன். இந்த நூலின் மூலத்தின் ஆசிரியரான சர் ஆர்தர் கானன் டாயில் பற்றித் தெரியாதவர் இருக்கலாம். ஆனால் ஷெர்லாக் ஹோல்ம்ஸ் பற்றித் தெரியாதவர் இவ்வுலகில் யாரும் இருக்க முடியாது. அவரது சாகசங்கள் பற்றி இன்னும் புதுப் புதுக் கதைகள் வெளி வந்த வண்ணமே இருக்கின்றன. இருப்பினும் முதன் முதலாக அந்தக் கற்பனைக் கதாபாத்திரத்தை அறிமுகப் படுத்திய அந்த ஆசிரியரின் நூல்களைத் தமிழில் மொழி பெயர்ப்பதற்கு நான் கொடுத்து வைத்திருக்க வேண்டும். ஆகவே வாசியுங்கள். மொழியாக்கம் பற்றிய உங்களது மேலான கருத்துக்களை என்னிடம் பகிருங்கள்.

ஷெர்லாக் ஹோல்ம்ஸ் பற்றித் தெரியாதவர்களுக்கு ஒரு சிறிய அறிமுகம். அவர் ஒரு தனியார் உளவாளி. அவரது உடன் வேலை செய்பவர் வாட்சன். அவர் ஒரு மருத்துவர். இவர்கள் இருவரும் உண்மையான மனிதர்கள் என்று எண்ணுபவர்கள் கூட இருக்கிறார்கள். ஷெர்லாக் ஹோல்ம்ஸ் தன் கூர்மையான ஆராய்ச்சி அறிவால் ஒரு விஷயத்தை அக்கு வேறு ஆணி வேறாகப் பிரித்து மேய்ந்து விடுவார். சின்னச் சின்ன விஷயங்களையும் உற்று நோக்கும் பண்பு கொண்டவர்.

பத்தொன்பது மற்றும் இருபதாம் நூற்றாண்டின் இணையற்ற ஆங்கில எழுத்தாளர் சர் ஆர்தர் கானன் டாயில் என்று சொன்னால் மிகையாகாது. இந்தக் கதை ஷெர்லாக் ஹோல்ம்ஸ் சாகசங்கள் வரிசையில் இவரது நான்காம் படைப்பு. 1891 ஆம் ஆண்டு இங்கிலாந்தில் ஒரு ஆங்கில இதழில் வெளிவந்தது. துப்பறியும் பணியில் ஷெர்லாக் ஹோல்ம்ஸின் மூளை எவ்வளவு ஆழமாக வேலை செய்கிறது என்பதை மிகுந்த ரசனையோடு விளக்கும் விதம் மிகவும் அருமை. ஆனால் கொள்ளை அடித்து ஓடி வந்து வாழும் ஒருவனை உத்தமன் போல் சிலாகிப்பதைத்தான் ஏற்றுக் கொள்ள முடியவில்லை. அந்த ஒரு இடறல் தவிர கதை மிகவும் அருமையாக நேர்த்தியாகச் சொல்லப்பட்டிருக்கிறது. ரசிக்கலாம்.

பாஸ்கோம் பள்ளத்தாக்கு மர்மம்

காலை உணவிற்காக நானும் என் மனைவியும் அமர்ந்திருந்த போது வேலைக்காரி அந்த தந்தியைக் கொண்டு வந்தாள். அது ஷெர்லாக் ஹோல்ம்ஸ் அனுப்பியது. அதன் விவரம் என்னவெனில்…

“உன்னால் இரண்டு நாட்கள் செலவிட முடியுமா. பாஸ்கோம் பள்ளத்தாக்கு மர்மத்தைப் பற்றி மேற்கு இங்கிலாந்திலிருந்து தந்தி வந்திருந்தது. நீ என்னுடன் வந்தால் நன்றாக இருக்கும். காற்றும் காட்சியும் நன்றாக உள்ளது. பேடிங்டனிலிருந்து 11.15 க்கு கிளம்பு.”

“என்ன செய்ய போகிறீர்கள்?” என்ற என்னைப் பார்த்த மனைவி “கிளம்புகிறீர்களா?” என்று கேட்டாள்.

“என்ன சொல்வதென்று எனக்கு புரியவில்லை. இப்போதைக்கு எனக்கு தலைக்கு மேல் வேலை இருக்கிறது” என்றேன்.

“ஆண்ட்ருஸ் உங்கள் வேலையை பார்த்துக் கொள்வான். உங்கள் முகமும் கொஞ்சம் வெளிறிப் போய்த்தான் இருக்கிறது. வெளியே போனால்தான் ஒரு மாற்றம் கிடைக்கும். ஷெர்லாக் – உடன் போவதுதான் உங்களுக்கு ரொம்பப் பிடிக்குமே.”

“நான் போகவில்லை என்றால் என்னை நன்றி கெட்டவன் என்றுதான் சொல்ல வேண்டும். ஒரு தடவை அவனுடன் சென்ற போது எனக்கு ரொம்ப நல்ல அனுபவம் கிடைத்தது” என்று சொன்னேன். “ஆனால் போக வேண்டும் என்று நினைத்தால் உடனே கிளம்பி ஆக வேண்டும். ஏன் என்றால் இன்னும் அரை மணி நேரம்தான் இருக்கிறது.”

ஆப்கானிஸ்தானில் எனக்குக் கிடைத்த அனுபவத்தில் இருந்து எந்நேரமும் பயணத்திற்கு தயாரான சூழ்நிலையிலேயே தான் இருக்கிறேன். என்னுடைய தேவை மிகவும் குறைவு. அதனால் சொன்ன நேரத்திற்கு முன்பாகவே பெட்டியை எடுத்துக் கொண்டு டாக்ஸியில் ஏறி பேடிங்டன் ரயில் நிலையத்திற்குக் கிளம்பி விட்டேன்.

ஷெர்லாக் ஹோல்ம்ஸ் நடை மேடையில் இங்கும் அங்கும் உலவிக் கொண்டிருந்தார். ஆள் பார்க்கையில் ஒல்லியாக உயரமாகத்தான் இருப்பார். ஆனால் இன்று அவர் அணிந்திருந்த தொப்பியாலும் அந்த நீளமான சட்டையாலும் இன்னும் ஒல்லியாகவும் உயரமாகவும் தெரிந்தார்.

“நீங்கள் வந்தது மிகவும் நல்லதாய் போயிற்று, வாட்சன்.” என்றார். “நம்பிக்கையான ஆள் ஒருவர் உடன் இருப்பது எவ்வளவு நல்லது. உள்ளூர்க்காரர்கள் சுத்த மோசமாக இருப்பார்கள். இல்லையேல் யார் பக்கமாவது சாய்ந்து கொண்டு பொய் சொல்வார்கள். மூலையில் இருக்கும் அந்த இரண்டு இருக்கைகளில் இடம் போட்டு வை. நான் பயணச் சீட்டு வாங்கி வந்து விடுகிறேன்”

அந்த ரயில் பெட்டி முழுவதுமே எங்களுக்கு சொந்தமாய் இருந்தது ஷெர்லாக் கொண்டு வந்த காகிதக் குப்பைகளைக் கொட்டுவதற்கு. அதிலிருந்து சில காகிதங்களைத் தேடி எடுத்துப் படித்தார். கொஞ்ச நேரம் கழித்து அவற்றிலிருந்து சில குறிப்புகள் எடுத்துக் கொண்டார். சிறிது நேரம் தியானம் செய்வது போல் பாவனை செய்து விட்டுப் பின் திடீரன்று அந்த காகிதங்களை பந்து போல் சுருட்டி வீசி விட்டார்.

“இந்த வழக்கு சம்பந்தமாக எதாவது கேள்விப் பட்டீர்களா?” என்று என்னைப் பார்த்துக் கேட்டார்.

“ஒன்றும் இல்லை. நான் சிறிது நாட்களாக ஒரு தினசரி செய்தித் தாளையும் பார்க்கவில்லை”.

“லண்டன் பிரஸ் முழுவதுமாக எதுவும் செய்தி போடவில்லை. சமீபத்திய செய்தித்தாள்கள் அனைத்தையும் ஒன்று விடாமல் படித்து அலசி விட்டேன். எளிமையான ஒரு வழக்கிற்கு எவ்வளவு சிக்கல்கள் பார்.”

“அது பெரிய முரண்பாடாக தெரிகிறதே.”

“ஆனால் அது முற்றிலும் உண்மை. தனித்துத் தெரிவதுதான் பெரும்பாலும் சரியான துப்பாக இருக்கும். சாதாரணமாகவும் விளக்கங்கள் அதிகமில்லாத குற்றங்களை தீர்ப்பது மிகவும் கடினம். ஆனால் இந்த வழக்கில் கொலை செய்யப்பட்டவரின் மகன் மீதுதான் வலுவான சந்தேகங்கள் இருக்கின்றன.”

“ஓ. அப்ப இது ஒரு கொலையா.”

“இப்போதைக்கு அப்படித்தானே நினைக்கிறார்கள். நானே பார்க்கும் வரை யார் சொல்வதையும் அப்படியே எடுத்து கொள்ளப் போவதில்லை. எனக்குப் புரிந்தவரை என்ன நடந்தது என்று கொஞ்சம் உனக்குச் சொல்கிறேன்.”

“பாஸ்கோம் பள்ளத்தாக்கு கிராமங்கள் சூழ்ந்த ஒரு மாவட்டம். ராஸ் எனும் ஊருக்குப் பக்கத்தில் ஹியர்போர்ட்ஷையரில் உள்ளது. அங்கு இருப்பதிலேயே பெரும் செல்வந்தர் திரு.ஜான் டர்னர். ஊரில் பெரும்பாலான நிலம் அவருக்குத்தான் சொந்தம். ஆஸ்திரேலியா சென்று நிறைய சம்பாதித்து விட்டு சொந்த ஊரில் வந்து குடியேறி விட்டார் சிறிது ஆண்டுகளுக்கு முன். அவருக்கு சொந்தமான ஒரு பண்ணையை திரு.சார்லஸ் மக்கார்த்தி என்பவருக்குக் குத்தகைக்குக் கொடுத்திருந்தார். அவரும் ஆஸ்திரேலியாவில் இருந்து வந்தவர்தான். அங்கேயே அவர்களுக்கு பழக்கம் என்பதால் இங்கு வந்த பின்னும் ஒரே ஊருக்கு வந்து விட்டனர். டர்னர் தான் இருவரில் பணக்காரர். அதனால் மக்கார்த்தி அவரது வீட்டில் வாடகைக்கு இருக்கிறார். ஆனாலும் இருவரும் சரி சமமாகவே எப்போதும் இருப்பார்கள். மக்கார்த்திக்கு ஒரு மகன் இருக்கிறான். அவன் வயது 18. டர்னருக்கு அதே வயதுடைய பெண் இருக்கிறாள். இருவருடைய மனைவிகளும் இறந்து விட்டனர். பக்கத்துக் குடும்பங்களிடம் அவர்கள் அவ்வளவாகப் பழகுவதில்லை. ஆனால் மக்கார்த்திகள் இருவருக்கும் விளையாட்டு மிகவும் பிடிக்கு. அதனால் அந்த ஊரில் இருக்கும் மைதானத்தில் அடிக்கடி பார்க்கலாம்.

மக்கார்த்தி வீட்டில் இரு வேலையாட்கள். ஒரு நடுத்தர வயது ஆணும் ஒரு சின்னப் பெண்ணும். டர்னர் வீட்டில் ஒரு அரை டஜன் வேலையாட்களாவது இருப்பார்கள். இவ்வளவுதான் இந்த இரண்டு குடும்பங்களைப் பற்றி நான் சேகரித்த விவரங்கள். இப்போது உண்மைச் சம்பவங்கள் பற்றிச் சொல்கிறேன்.

ஜூன் மதம் மூன்றாம் தேதி திங்கட்கிழமை மக்கார்த்தி மதியம் மூன்று மணி அளவில் தன் வீட்டை விட்டுக் கிளம்பினார். நடந்தே பாஸ்கோம் ஏரிக்குச் சென்றார். பாஸ்கோம் பள்ளத்தாக்கில் ஓடும் நீரோடையில் இருந்து அந்த ஏரிக்கு நீர் செல்கிறது. அவர் தனது வேலையாளை அழைத்துக் கொண்டு காலையில் கிளம்பினார். அவசரமாக செல்ல வேண்டும் என்று அவரிடம் கூறி இருந்தார். ஏனெனில் மூன்று மணிக்கு முக்கியமான யாரையோ சந்திக்க வேண்டும் என்று கூறி இருக்கிறார். அங்கிருந்து அவர் உயிருடன் திரும்பவில்லை.

அவரது பண்ணை வீட்டிலிருந்து பாஸ்கோம் ஏரிக்கு கால் மைல் தூரம்தான் இருக்கும். அப்போது அவரை இரண்டு பேர் பார்த்திருக்கின்றனர். ஒரு வயதான பாட்டி. அவர் பெயர் சொல்லப்படவில்லை. இன்னொருவர் திரு.வில்லியம் க்ரவுடர். அவர் டர்னரிடம் விலங்குகள் பராமரிப்பிற்காக வேலை செய்கிறார். இருவருமே அவர் தனியாக நடந்து சென்றதாகத்தான் சொல்கிறார்கள். க்ரவுடர் என்ன சொன்னார் என்றால், மக்கார்த்தி சென்ற சில நிமிடங்களிலேயே அவரது பையன் ஜேம்ஸ் மக்கார்த்தி கையில் ஒரு துப்பாக்கியை மறைத்து வைத்துக் கொண்டு அவர் பின்னாலேயே சென்றான் என்றார். அந்தச் சம்பவம் நடந்த பின் தான் அதைப் பற்றியே நினைக்க ஆரம்பித்தாராம்.

க்ரவுடர் பார்வையில் இருந்து மறைந்த பின்னும் அவர்கள் இருவரையும் பார்த்தவர் உண்டு. பாஸ்கோம் ஏரியைச் சுற்றிலும் வட்ட வடிவில் அடர்த்தியான காடுதான். கரையோரம் கொஞ்சம் புல்வெளி மற்றும் நாணல்கள் இருக்கும். பேஷன்ஸ் மோரன் என்ற 14 வயதுச் சிறுமி ஒருத்தி அங்கே பூப்பறித்துக் கொண்டிருந்தாள். அவள் பாஸ்கோம் பள்ளத்தாக்கு எஸ்டேட்டின் விடுதிக் காப்பாளரின் மகள். அவள் அவர்கள் இருவரும் கோபமாகக் கத்திக்கொண்டு சண்டை போட்டுக் கொண்டிருந்ததாகச் சொல்லி இருக்கிறாள். மூத்த மக்கார்த்தி தன் மகனைப் பார்த்து மிக வன்மையான ஒரு வார்த்தை சொன்னார் என்றும் அந்தப் பையன் அவரை அடிக்கக் கையை ஓங்கியதாகவும் சொல்லி இருக்கிறாள். அவள் மிகவும் பயந்து போய் வீட்டிற்கு ஒடி விட்டாள். அங்கு நடந்ததை தன் தாயிடம் சொன்னாள். அவள் சொல்லி வாயை மூடுமுன் அவரது மகன் அங்கு ஓடி வந்து தன் தந்தையை யாரோ கொன்று விட்டதாகவும் தனக்கு உதவி தேவை என்றும் கூறி இருக்கிறான். அவன் மிகவும் உணர்ச்சி வயப்பட்ட நிலையில் இருந்தான். கையில் துப்பாக்கி இல்லை. தொப்பி அணியவில்லை. அவனது வலது கையிலும் சட்டையிலும் ரத்தம் ஒட்டி இருந்தது. அவன் கூட சென்ற போது அவன் தந்தையின் உடல் ஏரிக்குப் பக்கத்தில் புல் வெளியில் நீண்டு கிடந்தது. தலையில் கனமான ஒரு பொருளை வைத்து யாரோ பலமுறை அடித்திருக்கிறார்கள். அந்தத் துப்பாக்கியின் இன்னொரு முனையால் கூட அடித்திருக்கலாம். அவரது உடலுக்கருகில்தான் அந்தத் துப்பாக்கியும் கிடந்தது. இந்தச் சூழ்நிலையில் அவரது மகன் உடனடியாகக் கைது செய்யப்பட்டு ‘திட்டமிட்ட படுகொலை’ என்று முதல் அமர்விலேயே செவ்வாயன்று தீர்ப்பு கொடுத்து விட்டார்கள். புதன் கிழமை ராஸ் மாஜிஸ்திரேட் நீதி மன்றத்தில் ஆஜர் படுத்திய போது உயர் நீதிமன்றத்திற்கு சிபாரிசு செய்யப்பட்டிருக்கிறது இந்த வழக்கு. இதுதான் இந்த வழக்கின் உண்மையான விபரங்கள்.

இதை விட ஒரு அற்பத்தனமான வழக்கை நான் இதுவரை கண்டதில்லை. சூழ்நிலை ஆதாரங்களே ஒரு குற்றவாளியைக் காட்டிக் கொடுக்கும் என்றால், அது இந்த வழக்கில் மட்டும்தான். “சூழ்நிலை ஆதாரங்கள் மிகவும் நுட்பமானவை” என்று கொஞ்சம் யோசனையில் இருந்தபடியே சொன்னார் ஹோல்ம்ஸ். நேரடியாக ஒரு விஷயத்தைச் சொல்வது போல் இருக்கும். கொஞ்சம் யோசித்துப் பார்த்தால் அதற்கு நேர் எதிரான விஷயத்தைக் கூறும். ஆனால் ஒரு விஷயத்தை ஒத்துக் கொள்ள வேண்டும். இந்த வழக்கு அந்த இளைஞனுக்கு மிகவும் கொடுமையானதாக இருக்கும். அவனே கூட குற்றவாளியாகவும் இருக்கலாம்.

அருகாமையில் நிறைய பேர் இருக்கிறார்கள். அதில் டர்னரின் மகள் அவன் கொலை செய்யவில்லை என்று நம்புகிறாள். அந்தப் பெண் திரு.லெஸ்ட்ராடிடம் இந்த வழக்கை எடுத்துக் கொள்ளுமாறு கேட்டிருக்கிறாள். உங்களுக்கும் லெஸ்ட்ராடைத் தெரியும் என்று நினைக்கிறன். அவர்தான் ‘ஸ்கேர்லட் பற்றிய ஆய்வு’ விஷயத்தில் உதவியவர். ஆக இதனால்தான் இந்த இரண்டு நடுத்தர வயது ஆண்களும் ஐம்பது மைல் வேகத்தில் மேற்கு நோக்கிப் பறந்து கொண்டிருக்கிறார்கள் வீட்டில் அமர்ந்து காலைச் சிற்றுண்டியைச் சுவைத்து மகிழ்வதற்குப் பதிலாக.

“இதில் இருக்கும் உண்மைச் சம்பவங்கள் இவ்வளவு தெளிவாக இருக்கும் போது நமக்குச் சாதகமாக எதுவும் இருக்கும் என்று தோன்றவில்லை.” என்றேன்.

வெளிப்படையான உண்மையைத் தவிர இந்த உலகத்தில் ஏமாற்றமளிப்பது வேறெதுவும் கிடையாது என்று சிரித்துக் கொண்டே சொன்னார் ஹோல்ம்ஸ். மேலும் லெஸ்ட்ராடுக்குத் தெரிந்த வெளிப்படையான உண்மைகளையும் நாம் தெரிந்து கொள்வதற்கு இது ஒரு வாய்ப்பாக அமையும்.

என்னைப் பற்றி உனக்கு நன்றாகத் தெரியும். என்னால் அவர் சொல்லும் கருத்துக்களை அவரால் நினைத்தே பார்க்க முடியாத அல்லது செயல் படுத்தவே முடியாத வழிகளில் உறுதிப்படுத்தவோ உடைக்கவோ முடியும் என்று சொன்னால் நான் பெரிதாக பீத்திக் கொள்வதாக நீ நினைக்கலாம்.

உதாரணத்திற்கு ஒரு விஷயம் சொல்கிறேன். உனது வீட்டின் படுக்கையறையில் ஜன்னல் வலது பக்கம் இருக்கிறது. ஆனால் விளக்கமே தேவையற்ற தெளிவாக தெரியக்கூடிய இந்த விஷயத்தை திரு. லெஸ்ட்ராட் கவனித்திருப்பாரா என்பதுதான் என் கேள்வி.

“எப்படி இதெல்லாம் –”

“நண்பா. எனக்கு உன்னைப் பற்றி மிகவும் நன்றாகத் தெரியும். உன்னிடம் இருக்கும் இராணுவ ஒழுக்கம் எனக்குத் தெரியும். தினமும் காலையில் முகச் சவரம் செய்வாய். இந்தப் பருவத்தில் காலை வெளிச்சத்தில்தான் சவரம் செய்வாய். இடப்புறம் செல்லச் செல்ல சரியாக மழிக்கப் படாததால் அந்தப் பக்கம் வெளிச்சம் சரியாகப் படவில்லை. உன்னைப் போன்ற பழக்கங்கள் உள்ள ஒருவன் கண்ணாடியில் தன்னைப் பார்க்கையில் சம வெளிச்சம் இருந்தும் இப்படிப்பட்ட முடிவை ஏற்றுக் கொள்வதை என்னால் நினைத்துப் பார்க்க முடியவில்லை. கவனித்து அறிந்து கொள்வதற்கான ஒரு சின்ன உதாரணமாகத்தான் இதை நான் சொன்னேன். ஆனால் இதுதான் என் தொழில். இந்தப் புலனாய்வில் இதைப் பயன்படுத்திக் கொள்ளும் சமயம் வரும் என்று எண்ணுகிறேன். இந்த விசாரணையில் ஒன்றிரண்டு சின்ன விஷயங்கள் எனக்குச் சொல்லப்பட்டன. அது கவனிக்க தக்கதாக இருக்கும் என்று நினைக்கிறேன்.

“என்னென்ன என்று சொல்”

அவனை உடனே கைது செய்யவில்லை என்று தெரிகிறது. அவன் பண்ணை வீட்டிற்குச் சென்ற உடன்தான் நடந்தது. காவல் ஆய்வாளர் அவனைக் கைது செய்ய வந்திருக்கிறோம் என்று சொன்னதும் அவன் சலனப்படவே இல்லை. அதனால் நீதிபதிக்கும் எந்தவித சந்தேகமும் இல்லாமல் குற்றத்தை உறுதி செய்து விட்டார்.

“அது ஒப்புதல் வாக்குமூலம்” என்று சந்தோஷமாகச் சொன்னேன்.

“இல்லை. குற்றமற்றவன் என்று அவன் மறுத்துச் சொன்ன பின் தான் அது நடந்தது”.

“இவ்வளவு தூரம் பல சம்பவங்கள் நடந்ததைப் பார்க்கும்போது அது சந்தேகத்துக்கிடமான சாட்சியமாக அல்லவா இருக்கிறது”

இல்லை. அதற்கு மாறாக, அதைக் காரிருள் மேகங்களுக்கிடையில் கதிரவனின் புதிய ஒளிக் கீற்றாகத்தான் நான் பாவிக்கிறேன். அவன் எவ்வளவுதான் குற்றமற்றவனாக இருந்தாலும் சூழ்நிலை அவனுக்கு முற்றிலும் எதிராக இருக்கிறது என்பது கூடத் தெரியாத ஒரு அடி முட்டாளாக இருந்திருக்க மாட்டான். அவனைக் கைது செய்ய வரும்போது ஆச்சர்யப்பட்டிருந்தாலோ கோபப்பட்டிருந்தாலோ நான் சந்தேகப் பட்டிருப்பேன். ஏனெனில் அப்படிப்பட்ட உணர்ச்சிகள் இருக்கும் சூழ்நிலையில் அது இயற்கையானதாக இருக்காது. மாறாகக் குற்றம் செய்தவனின் செயலாகத்தான் அவைகள் இருந்திருக்கும். அவன் கபடமில்லாமல் கைதை ஏற்றுக் கொண்டதைப் பார்த்தால் ஒன்று அவன் குற்றமற்றவனாக இருக்க வேண்டும். இல்லை என்றால் சுய கட்டுப்பாடு கொண்டவனாகவோ அல்லது மிகவும் அழுத்தமானவனாகவோ இருக்க வேண்டும்.

அவன் அங்கிருந்து ஒடி விட்டான் என்று சொன்னதும் முரணாகப் படவில்லை. ஏனெனில் அவன் தந்தையின் உடலுக்கருகில்தான் அவன் இருந்தான். அதுவரை அவருக்குச் செய்ய வேண்டிய காரியங்களைப் பற்றி மறந்து விட்டிருப்பான். அந்தச் சின்னப் பெண்ணின் சாட்சியங்கள் கூட மிகவும் முக்கியமானது. அவரை அடிக்கக் கை ஓங்கினான் என்று சொன்னது. அவன் பேச்சில் வெளிப்பட்ட மன உளைச்சல்கள் அவன் மனதின் ஆரோக்கியத்திற்கான அறிகுறியே தவிர குற்ற உணர்ச்சி அல்ல.

நான் தலையசைத்துச் சொன்னேன். “ரொம்பப் பேர் இதை விட குறைவான சாட்சியங்கள் வைத்தே தூக்கிலிடப் பட்டிருக்கிறார்கள்.”

“ஆமாம். ரொம்பப் பேர் தவறாகத் தூக்கிலிடப் பட்டிருக்கிறார்கள். ”

“இந்த வழக்கில் அந்த இளைஞனின் கருத்து என்ன.”

“அவனை ஆதரிப்பவர்கள் ரசிக்கும் படியாக ஒன்றும் இல்லை. ஒன்றிரண்டு சின்ன விஷயங்கள் இருக்கின்றன. நீ இதை வாசித்துப் பார்த்தால் உனக்குப் புரியும்.” ஹோல்ம்ஸ் தனது காகிதக் கட்டில் இருந்து ஹியர்போர்ட்ஷையரில் வெளியான பத்திரிக்கை ஒன்றை எடுத்து நீட்டினார். அதில் அந்த வழக்கைப் பற்றி வந்த செய்தி இருக்கும் பக்கத்தை எடுத்து ஒரு பத்தியை சுட்டிக் காட்டினார். அதில்தான் அந்தப் பையன் தன் வாக்கு மூலத்தை சொல்லி இருந்தான். நான் இருக்கையில் சாய்ந்து கொண்டு அதைப் படித்தேன்.

இறந்தவரின் ஒரே ஒரு மகனான திரு. ஜேம்ஸ் மக்கார்த்தி அழைக்கப்பட்டார். அவர் பின்வருமாறு வாக்குமூலம் அளித்தார்.

“நான் 3 நாட்களாக பிரிஸ்டலில் இருந்து விட்டு ஜூன் 3 ஆம் தேதிதான் வீடு வந்தேன். என் தந்தை அப்போது வீட்டில் இல்லை. அவர் காரில் திரு.ஜான் காப்-உடன் ராஸ் சென்றிருப்பதாக பணிப் பெண் சொன்னாள். நான் வந்த கொஞ்ச நேரத்தில் அவரது பொறியின் சக்கர சத்தம் கேட்டது. ஜன்னலில் இருந்து எட்டிப் பார்த்தேன். அவர் வேகமாக எங்கோ சென்று கொண்டிருந்தார். எந்தப் பக்கம் செல்கிறார் என்று எனக்குத் தெரியவில்லை. நான் எனது துப்பாக்கியை எடுத்துக் கொண்டு பாஸ்கோம் ஏரிப் பக்கமாக நடக்க ஆரம்பித்தேன். ஏரியின் பின்னால் இருக்கும் முயல் வளையைப் பார்க்கலாம் என்று எண்ணிக் கொண்டு. நான் செல்லும் வழியில் வில்லியம் க்ரவுடரைப் பார்த்தேன் அவர் தன் வாக்கு மூலத்தில் சொன்னது போல. ஆனால் அவர் சொன்னது போல நான் என் தந்தையைப் பின் தொடரவில்லை. எனக்கு அவர் முன்னால் போனார் என்பது தெரியாது. ஏரிக்கு ஒரு நூறு அடிக்கு முன் “கூயி” என்ற சத்தம் கேட்டது. அது எங்களுக்குள் இருக்கும் ஒரு சங்கேதக் குறியீடு. நான் அங்கு சென்று பார்க்கும்போது என் அப்பா நின்றிருந்தார். என்னைப் பார்த்ததும் மிகவும் ஆச்சரியமடைந்த அவர் கோபத்தோடு இங்கு என்ன செய்கிறாய் என்று கேட்டார். அதன் பின் ஆக்ரோஷமான வாக்கு வாதங்கள் கை கலப்பு வரைக்கும் சென்றது. ஏனெனில் என் தந்தை மிகவும் கோபக்காரர். அவரை கட்டுப்படுத்த முடியாமல் நான் திரும்பிச் செல்ல ஆரம்பித்தேன். ஒரு 150 அடி கூட சென்றிருக்க மாட்டேன், பின்னால் பயங்கரமான கூக்குரல் கேட்டது. அதனால் திரும்பவும் ஓடிச் சென்று பார்த்தேன். அங்கு என் தந்தை இறந்து கீழே விழுந்து கிடந்ததைப் பார்த்தேன். அவர் தலையில் பலமான அடி. நான் என் துப்பாக்கியைக் கீழே போட்டு விட்டு அவரை என் கைகளில் தாங்கிக் கொண்டேன். ஆனால் அவர் கிட்டத்தட்ட இறந்து விட்டார். அவரைக் கீழே சாய்த்து விட்டு டர்னரின் விடுதிக் காப்பாளரிடம் உதவி கேட்கச் சென்றேன். ஏனெனில் அவர் வீடுதான் அருகில் உள்ளது. நான் திரும்ப வரும்போது யாரும் அவர் அருகில் இல்லை. அவருக்குக் காயம் எப்படி ஏற்பட்டது என்றும் எனக்குத் தெரியாது. அவர் பிரபலமான மனிதர் இல்லை. ஆனால் கொஞ்சம் கோபக்காரர். இருந்தாலும் அவருக்கு எதிரி என்று யாரும் கிடையாது. இதற்கு மேல் எனக்கு எதுவும் தெரியாது.”

வழக்கறிஞர்: உன் தந்தை சாகும்போது ஏதும் சொன்னாரா?

சாட்சி: முனகலாக எதோ சொன்னார். ஆனால் எலி என்ற ஒரு வார்த்தை மட்டும்தான் எனக்குத் தெளிவாகக் கேட்டது.

வழக்கறிஞர்: அதிலிருந்து உனக்கு என்ன புரிந்தது

சாட்சி: ஒன்றுமில்லை. பிரமை பிடித்து உளறுகிறார் என்று எண்ணினேன்.

வழக்கறிஞர்: நீங்கள் எதற்காகச் சண்டை போட்டீர்கள்.

சாட்சி: நான் அதைச் சொல்ல விரும்பவில்லை.

வழக்கறிஞர்: சொல்லித்தான் ஆக வேண்டும்

சாட்சி: கட்டாயம் சொல்ல முடியாது. ஆனால் இந்த வழக்கிற்கு அது சம்பந்தமில்லை என்பதை மட்டும் என்னால் உறுதியாகச் சொல்ல முடியும்.

வழக்கறிஞர்: அதை நீதி மன்றம்தான் முடிவு செய்யும். சொல்ல மறுத்தால் அது உங்களுக்குத்தான் எப்போதும் பாதகமாக இருக்கும் என்பதை நான் சொல்லத் தேவை இல்லை.

சாட்சி: பரவாயில்லை.

வழக்கறிஞர்: “கூயி” என்ற சப்தம் உங்களுக்கும் உங்கள் தந்தைக்கும் நடுவில் உள்ள சங்கேதக் குறியீடு அல்லவா?

சாட்சி: ஆமாம்.

வழக்கறிஞர்: பின் எப்படி அவர் உங்களைப் பார்க்கும் முன் நீங்கள் பிரிஸ்டலில் இருந்து வந்தது தெரியும் முன் அவ்வாறு கத்தினார்.

சாட்சி: எனக்குத் தெரியாது

வழக்கறிஞர்: அவரது அபயக் குரல் கேட்டு நீங்கள் திரும்ப வந்து பார்த்த போது சந்தேகப் படும்படி அங்கு எதாவது இருந்ததா?

சாட்சி: இல்லை.

வழக்கறிஞர்: நிச்சயமாக சொல்கிறீர்களா?

சாட்சி: அங்கு நான் சென்ற போது மிகவும் குழம்பிப் போய் இருந்ததால் என் தந்தையைப் பற்றிய சிந்தனை தவிர வேறேதும் எனக்கில்லை. ஆனால் கொஞ்சம் ஞாபகம் இருக்கிறது. அங்கு ஓடிச் செல்லும்போது எனது இடது பக்கத்தில் எதோ ஒன்று இருந்தது. சாம்பல் நிறத்தில் எதோ ஒரு கோட் போல இருந்தது. கோடிட்டும் இருக்கலாம். நான் தந்தையைக் கிடத்தி விட்டு எழும் போது அதைக் காணவில்லை.

வழக்கறிஞர்: ஆக நீங்கள் உதவி கேட்கச் செல்லும் முன் அது காணாமல் போய் விட்டது அல்லவா?

சாட்சி: ஆமாம். அது காணவில்லை.

வழக்கறிஞர்: அது என்னவென்று தெரியாதா உங்களுக்கு.

சாட்சி: இல்லை. எதோ ஒன்று இருந்தது போலத்தான் எனக்குத் தோன்றியது.

வழக்கறிஞர்: உங்கள் தந்தையின் உடலில் இருந்து எவ்வளவு தூரம்.

சாட்சி: 12 அடி இருக்கும்.

வழக்கறிஞர்: காட்டில் இருந்து எவ்வளவு தூரம் இருக்கும்.

சாட்சி: அதே தூரம்தான்.

வழக்கறிஞர்: அதை எடுக்கும் போது நீங்கள் 12 அடி தூரத்தில்தான் இருந்திருக்கிறீர்கள். இல்லையா?

சாட்சி: ஆமாம். ஆனால் அது என் முதுகுக்குப் பின்னே இருந்தது.

வழக்கறிஞர்: இத்துடன் சாட்சியின் விசாரணை முடிவடைந்தது.

விசாரணை முடிவில் ரொம்பக் காட்டமாகத்தான் இருந்திருக்கிறார் வக்கீல் என்றேன் நான். அவனது தந்தை அவனைப் பார்க்கும் முன் சங்கேத வார்த்தை சொன்னதையும் அவர்கள் இருவருக்கும் நடுவில் நடந்த உரையாடலைப் பற்றி சொல்ல மறுத்ததையும் அவர் சுட்டிக் காட்டி உள்ளார். அதுதான் இந்த வழக்கில் அந்தப் பையனுக்கு எதிராகத் திரும்பி உள்ளது.

ஹோல்ம்ஸ் மெலிதாகச் சிரித்து கொண்டே இருக்கையில் இருந்து கை கால்களை சோம்பல் முறித்தார். நீங்களும் வழக்கறிஞரும் சேர்ந்து மிகவும் கஷ்டப்பட்டு அந்த இளைஞனுக்குச் சாதகமான சில விஷயங்களைத் தனியாகப் பிரித்து விட்டீர்கள். அவனது மிக அதீத கற்பனைக்கும் மிகக் குறைந்த கற்பனைக்கும் தவறாக மாற்றி முக்கியத்துவம் அளித்து விட்டீர்கள். மிகக் குறைவு எதற்கென்றால், சண்டைக்குத் தேவையான காரணத்தைக் கற்பிதம் செய்திருந்தால் அவனுக்கு நீதியரசரின் அனுதாபம் கிடைத்திருக்கும். மிக அதீதம் என்னவென்றால், அவன் தன் உள்ளுணர்வு எவ்வளவு வளர்ச்சி அடைந்திருந்தால் இறக்கும் தருவாயில் சொன்ன எலியை பற்றிய குறிப்பு மற்றும் காணாமல் போன கோட் போன்ற அரிதான விஷயங்களைச் சொல்லி இருப்பான். ஆக நான் முடிவு செய்து விட்டேன். அந்த இளைஞன் சொன்னது சரி என்று வைத்துக் கொண்டு இந்த வழக்கு எந்த திசையில் பயணிக்கிறது என்று பார்த்து விடலாம். கொலை நடந்த இடத்தைப் பார்க்காமல் இந்த வழக்கு பற்றி இனிமேல் ஒரு வார்த்தை பேச மாட்டேன். ஸ்விண்டனில் மதிய உணவு சாப்பிடுவோம். இன்னும் இருபது நிமிடங்களில் நாம் அங்கிருப்போம்.

அழகான ஸ்ட்ரவுட் பள்ளத்தாக்கைத் தாண்டி அகலமாய் மின்னும் செவெர்ன் ஆற்றைக் கடந்து ராஸ் என்னும் அழகான சின்ன கிராமத்தை ஒரு வழியாக நாங்கள் அடைந்த போது மணி நான்காகி விட்டது. ஒரு மெலிந்த தேகமுடைய மர நாய் போலத் தோற்றமளிக்கும், தந்திரம் கள்ளத்தனமுடைய, ஒருவர் நடை மேடையில் எங்களுக்காகக் காத்துக் கொண்டிருந்தார். பழுப்பு நிறத்தில் மேல் சட்டையும் விலங்குத் தோலில் செய்யப்பட்ட முழு நீளக் கால் சட்டையும் அணிந்திருந்தார். இந்த கிராமத்திற்கு அது வித்தியாசமாகத் தோன்றினாலும் அவரை எங்களுக்கு அடையாளம் கண்டுபிடிக்க கடினமாக இருக்கவில்லை. ஏனெனில் அவர்தான் ஸ்காட்லாந்து யார்டின் திரு. லெஸ்ட்ராட். நாங்கள் அவருடன் காரில் ஹியர்போர்ட் சென்றோம். அங்கு எங்களுக்குத் தங்குவதற்கு இடம் தயாராக இருந்தது.

தேநீர் குடிக்க அமர்ந்திருக்கும் போது வண்டி ஏற்பாடு செய்து விட்டதாக கூறினார் லெஸ்ட்ராட். “நீங்கள் மிகவும் துறு துறுப்பானவர் என்று தெரியும். குற்றம் நடந்த இடத்தைப் பார்க்காவிட்டால் உங்களுக்கு நிம்மதி இருக்காது என்றும் புரிந்தது.”

“மிகவும் நன்று. பாராட்டுகளுக்கு நன்றி.” என்று ஹோல்ம்ஸ் கூறி விட்டு, “இது எல்லாம் காற்றழுத்தத்தை பொறுத்து இருக்கிறது என்றார்.” லெஸ்ட்ராட் புரியாமல் முழித்தார். “எனக்கு ஒன்றும் விளங்கவில்லை” என்றார்.

“இப்பொழுது வெப்ப நிலை என்ன? இருபத்தொன்பது. சரியா. காற்று ஒன்றுமில்லை. மேகங்களும் இல்லை. என்னிடம் ஒரு முழு சிகரட் பெட்டி இருக்கிறது புகைப்பதற்கு. இந்த மெத்தை போன்ற இருக்கை ஒரு கிராம விடுதியில் இருப்பதைப் போல் இல்லாமல் அருமையாக உள்ளது.

அதனால் நான் இன்று அந்த வண்டியைப் பயன்படுத்துவேன் என்று தோன்றவில்லை.”

லெஸ்ட்ராட் அதைக் கேட்டுச் சிரித்தார். “நீங்கள் செய்தித் தாள்களைப் படித்து ஏற்கெனவே எந்த சந்தேகமில்லாமல் ஒரு முடிவுக்கு வந்து விட்டீர்கள்.” என்றார். “இந்த வழக்கு மிகவும் எளிமையானது. மேலும் உள்ளே செல்லச் செல்ல இன்னும் எளிமையானதாகவே இருக்கும். அவள் உங்களைப் பற்றிக் கேள்விப் பட்டிருக்கிறாள். உங்கள் கருத்தைத் தெரிந்து கொள்ள விரும்புகிறாள். நான் செய்யாததை நீங்கள் எதுவும் புதிதாகச் செய்து விடப் போவதில்லை என்று திரும்பத் திரும்ப அவளிடம் நான் எடுத்துச் சொல்லி விட்டேன். இருந்தாலும், இதோ அவளது வண்டி வெளியில்தான் இருக்கிறது.”

அவர் பேசிக் கொண்டிருக்கும் போதே அந்த அறையினுள் ஒரு தேவதை போன்ற ஒரு பெண் உள்ளே நுழைந்தாள். இவ்வளவு அழகான ஒரு பெண்ணை இதுவரை என் வாழ்வில் நான் கண்டிருக்கவில்லை. அவளது கத்திரிப் பூ நிறக் கண்கள் மின்ன, உதடுகள் விரித்து ரோஸ் நிற நாக்கு அவள் உள் கன்னங்களை வருட, அவளது இயற்கைத் தோற்றம் அவளது கவலையில் கரைந்தது போல் அனைவரும் உணர்ந்தோம். “ஓ ஷெர்லாக் ஹோல்ம்ஸ்” என்று அழுதபடியே எங்களில் ஒவ்வொருவராய்ப் பார்த்தாள். பின் ஒரு பெண்ணின் விரைவான உள்ளுணர்வோடு என்னைப் பார்த்து “நீங்கள் இங்கு வந்ததில் மிகவும் மகிழ்ச்சி. அதைச் சொல்லி விட்டுப் போகலாம் என்றுதான் இவ்வளவு தூரம் காரோட்டிக் கொண்டு வந்தேன். எனக்கு நன்றாக தெரியும் ஜேம்ஸ் இந்தக் கொலையைச் செய்யவில்லை என்று. நாங்கள் சிறுவர்களாக இருந்தது முதலே இருவரும் பழகி இருக்கிறோம். அவனது குறைகள் அனைத்தும் எனக்கு அத்துப்படி. ஒரு ஈயை அடிப்பதற்குக் கூட அவனுக்கு மனம் வராது. அந்தளவுக்கு அவன் நல்ல இதயம் படைத்தவன். அவன் மீது சுமத்தப்பட்ட கொலைப் பழி என்பது பைத்தியக்காரத்தனமானது என்பது அவனைப் பற்றித் தெரிந்த அனைவருக்கும் புரியும்.”

“அவரைக் குற்றச்சாட்டிலிருந்து விடுவிக்க முடியும் என்று தான் நான் நினைக்கிறேன் பெண்ணே. என்னால் செய்ய முடிந்த அனைத்தையும் நான் செய்வேன் என்பதை நீ உறுதியாக நம்பலாம்.”

“ஆனால் நீங்கள் சாட்சியங்கள் அனைத்தையும் படித்திருப்பீர்களே. நீங்கள் ஒரு முன் முடிவிற்கு வந்திருப்பீர்கள். உங்களுக்கு ஏதும் குறைகள் தெரியவில்லையா. அவன் குற்றமற்றவன் என்று உங்களுக்கே தெரியவில்லையா”

“பெரும்பாலும் எனக்கும் அப்படித்தான் தோன்றுகிறது”

“அப்படியா” என்று அழுதவள், வெறுப்போடு லெஸ்ட்ராடை நோக்கி “அவர் சொல்வதைக் கேட்டீர்களா. அவர்தான் எனக்கு நம்பிக்கை தரும்படி பேசுகிறார்”

லெஸ்ட்ராட் தன் தோள்களை குலுக்கி “எனது சகா அவசரப்பட்டு பேசி விட்டார் போல் தோன்றுகிறது.”

“ஆனால் அவர் சொல்வது உண்மை. எனக்கு நன்றாகத் தெரியும். அவர் சொல்வது முற்றிலும் உண்மை. ஜேம்ஸ் அதைச் செய்யவே இல்லை. அவனது அப்பாவிடம் அவன் இட்ட சண்டை பற்றி ஏன் வாய் திறக்கவில்லை என்றால் அதில் நான் சம்பந்தப்பட்டிருப்பதனால்தான்.”

“எந்த விதத்தில்” என்று கேட்டார் ஹோல்ம்ஸ்.

“இனிமேலும் என்னால் எதையும் மறைக்க முடியாது. ஜேம்ஸ் அவன் தந்தையிடம் என் பொருட்டு நிறைய கருத்து வேறுபாடு இருந்தது. திரு. மக்கார்த்தி நாங்கள் இருவரும் திருமணம் செய்து கொள்ள வேண்டும் என்று மிகவும் விரும்பினார். ஆனால் நானும் ஜேம்ஸ்-உம் சகோதர பாசத்தில்தான் பழகி வந்தோம். அவனும் இளைஞன். வாழ்க்கையில் நிறைய பார்க்க வேண்டி உள்ளது. அதனால் திருமணத்திற்கு உடன்படவில்லை. அதனால் அவர்கள் இருவரும் சண்டை இட்டுக் கொண்டனர் இதைக் காரணம் காட்டி.”

“உனது அப்பா இதற்குச் சம்மதம் கொடுத்தாரா?”

“இல்லை. அவருக்கும் இதில் சம்மதமில்லை. திரு. மக்கார்த்தியைத் தவிர யாருக்கும் உடன்பாடில்லை.” அவள் அப்படிச் சொல்லி கொண்டிருக்கும் போதே ஒரு மெல்லிய வெட்கம் அவளது இளம் முகத்தில் படர்ந்தது.

“இந்த விபரங்களுக்கு நன்றி. நாளை நான் உன் அப்பாவுடன் பேச முடியுமா?”

“இல்லை. மருத்துவர் அதற்கு ஒத்துக் கொள்ள மாட்டார்”

“யார். மருத்துவரா”

“ஆம். உங்களுக்குத் தெரியாதா? பாவம் அப்பா. ரொம்ப வருடங்களாய் அவருக்கு உடம்பு முடியவில்லை. இந்த துக்கச் செய்தி கேட்டு மிகவும் உடைந்து போய் விட்டார். படுத்த படுக்கையாகி விட்டார். மருத்துவர் வில்லோஸ் அவரது நரம்பு மண்டலம் பாதிப்படைந்து விட்டதாகச் சொன்னார். அதனால் அவரால் எழுந்து நடமாட முடியாது என்றார். திரு. மக்கார்த்தி ஒருவர்தான் விக்டோரியாவில் வேலை பார்த்த நாட்களில் இருந்து அவரைத் தெரியும் ஒரே மனிதர்.”

“ஹா. விக்டோரியா. இது மிகவும் முக்கியமானது”

“ஆமாம். சுரங்கத்தில்”

“சரியாகச் சொல்வதானால், தங்கச் சுரங்கம். அங்குதான் திரு. டர்னர் தன் சொத்துக்கள் முழுவதும் சம்பாதித்தார்.”

“ஆமாம். உண்மைதான்”

“மிக்க நன்றி. மிஸ் டர்னர். நீங்கள் எனக்கு பெரிய உதவி செய்திருக்கிறீர்கள்”

“வேறு எதாவது புதிய தகவல் இருந்தால் நாளை நீங்கள் எனக்குத் தெரியப்படுத்துங்கள். ஜேம்ஸைப் பார்க்க நீங்கள் நிச்சயம் சிறைக்குச் செல்வீர்கள் என்று நினைக்கிறேன். அவனைப் பார்த்தால் அவன் குற்றமற்றவன் என்று நான் நம்புவதாக அவனிடம் சொல்லுங்கள்.”

“நிச்சயம் சொல்வேன் மிஸ்.டர்னர்.”

“நன்று. நான் இப்போது வீடு திரும்ப வேண்டும். அப்பாவிற்கு உடல் நிலை சரி இல்லாததால் நான் பக்கத்தில் இல்லையென்றால் உடனே தேட ஆரம்பித்து விடுவார். வருகிறேன். கடவுள் உங்களுக்குத் துணை புரியட்டும்.” எந்த வேகத்தில் உள்ளே வந்தாளோ அதே வேகத்தில் வெளியே சென்று விட்டாள். அவள் காரின் சக்கரங்கள் சாலையில் இரைச்சலிட்டுக் கிளம்பியது எங்களுக்கு நன்றாகக் கேட்டது.

“எனக்கு மிகவும் அவமானமாக இருக்கிறது, ஹோல்ம்ஸ்.” சிறிது நேர அமைதிக்குப் பின் ஒரு வித மரியாதையோடு லெஸ்ட்ராட் சொன்னார்.

“ஏன் நீங்கள் அந்தப் பெண்ணிடம் நம்பிக்கையை விதைக்கிறீர்கள் நிச்சயம் ஏமாறத்தான் போகிறாள் என்று தெரிந்தும். என் இதயம் மிகவும் மென்மையானது அல்ல. ஆனால் இது மிகவும் கொடுமை என்றுதான் நான் சொல்வேன்.”

“ஜேம்ஸ் மக்கார்த்தியை எப்படி விடுவிப்பது என்ற வழி எனக்குத் தெரிகிறது என்று எண்ணுகிறேன்.” என்ற ஹோல்ம்ஸ் “ஜேம்ஸைப் பார்ப்பதற்கு அனுமதி கிடைத்து விட்டதா”

“ஆம். ஆனால் நானும் நீங்களும் மட்டும் பார்ப்பதற்குத்தான் அனுமதி”

“நான் இன்று வெளியில் செல்லும் எண்ணத்தை மறு பரிசீலனை செய்கிறேன். ஹியர்போர்ட் சென்று ஜேம்ஸை இன்றிரவே சந்திப்பதற்கு இன்னும் நேரம் இருக்கிறது.”

“நிறைய”

“சரி. நாம் அப்படியே செய்வோம். வாட்சன். உங்களுக்கு நேரம் மெதுவாக செல்வது போல்தான் இருக்கும். ஆனால் நான் இரண்டே மணி நேரத்தில் திரும்பி விடுவேன்.”

நான் அவர்களோடு ரயில் நிலையம் வரை சென்றேன். அந்த ஊரின் வீதிகளில் சிறிது நேரம் சுற்றினேன். பின் விடுதிக்குத் திரும்பினேன். அங்கு சோபாவில் அமர்ந்து மஞ்சள் அட்டைப்படம் போட்ட ஒரு நாவலைப் படிக்க ஆரம்பித்தேன்.

வலுவில்லாத அந்தக் கதையின் கரு மிகவும் மெல்லியதாக இருந்தது. ஆனால் நாங்கள் இப்போது மாட்டிக் கொண்டிருக்கும் விடை தெரியாத மர்மத்தைப் பார்க்கும்போது என் மனம் கதையிலிருந்து சற்று விலகி யதார்த்த உலகிற்கு வந்தது. அதனால் அந்த நாவலைத் தூக்கி அறையின் மூலையில் விசிறி அடித்து விட்டு இன்று நடந்த நிகழ்ச்சிகளை அசை போட ஆரம்பித்தேன். உலகிலேயே மிகவும் துரதிர்ஷ்டசாலியான அந்த இளைஞன் சொல்வது உண்மை என்றே வைத்துக் கொண்டாலும் அவன் தன் தந்தையை விட்டுக் கிளம்பிய கொஞ்ச நேரத்தில் திரும்பவும் அவர் கூக்குரல் கேட்டுத் திரும்பி ஓடோடி புல்வெளிக்குள் வந்த அந்த இடைப்பட்ட நேரத்தில் அப்படி என்ன யாருக்கும் தெரியாத பிரச்சினை அங்கு நடந்திருக்கும். மிகவும் கொடூரமான கொலையில் முடியுமளவுக்கு என்னவாக இருக்கும். கொலை செய்யப்பட்டவரின் உடலில் ஏற்பட்ட காயங்களைப் பார்த்தால் நமது மருத்துவ உள்ளுணர்விற்கு ஏதேனும் புலப்படுமா?

அறையின் மணி அடித்து வாரப் பத்திரிக்கை ஒன்றைக் கொண்டு வரச் செய்தேன். அதில் அந்த வழக்கு விசாரணை பற்றி வரிக்கு வரி போட்டிருந்தார்கள். மருத்துவ அறிக்கையில் உச்சி மண்டை ஓட்டின் இடது பக்க எலும்பின் கீழ் பாகத்தில் மூன்றில் ஒரு பங்கும் பின் மண்டை எலும்பில் இடது பக்கத்தில் பாதியும் ஒரு முனை மழுங்கிய ஆயுதத்தால் உடைக்கப்பட்டிருந்ததாகத் தெரிவிக்கப்பட்டிருந்தது. நான் எனது தலையில் அதே பாகத்தைத் தடவிப் பார்த்துக் கொண்டேன். நிச்சயமாக அது பின்னால் இருந்து விழுந்த அடிதான். அது ஓரளவு அந்த இளைஞனுக்குச் சாதகமாக இருக்கும். ஏனெனில் அவன் நேருக்கு நேர் நின்றுதான் சண்டை போட்டிருந்தான். ஆனாலும் அதை வைத்து வாதிட முடியாது. ஏனெனில் அடி பட்ட போது அவர் திரும்பி இருக்க வாய்ப்பு உள்ளது. இருந்தாலும் ஹோல்ம்ஸிடம் இதைச் சொல்லி வைத்தால் நலம். இறக்கும் தருவாயில் அவர் எலியைப் பற்றிச் சொன்னது இன்னொன்று. அதன் அர்த்தம் என்னவாக இருக்கும். பிரம்மை பிடித்துச் சொல்லி இருக்க வாய்ப்பில்லை. திடீரென்று தலையில் அடி வாங்கிய மனிதனுக்கு உடனே சித்த பிரம்மை பிடிக்க வாய்ப்பில்லை. அவர் விதி எப்படி முடிவுக்கு வந்தது என்பதை அவர் விளக்க முற்பட்டிருக்கலாம். ஆனால் அவர் சொல்ல வந்ததுதான் என்ன? என் மூளையைக் கசக்கி யோசித்துக் கொண்டிருந்தேன். அப்புறம் மக்கார்த்தி பார்த்த அந்த உடை. அது உண்மையாக இருந்தால் கொலைகாரன் தனது மேலங்கியை அந்தச் சண்டையில் விட்டுச் சென்றிருக்க வேண்டும்.

ஜேம்ஸ் தன் தந்தையின் முன் மண்டியிட்டு அமர்ந்திருக்கும் போது திரும்ப வந்து எடுத்துச் சென்றிருக்க வேண்டும். வெறும் 12 அடி தூரத்திலிருந்து. வெறும் மர்மங்களாகவும் கற்பனைக்கே எட்டாத புதிர்களாகவும்தான் இவை அனைத்தும் இருக்கின்றன. லெஸ்ட்ராடின் கருத்தைக் கேட்டு நான் ஆச்சர்யப் படவில்லை அதே சமயத்தில் ஹோல்ம்ஸின் நுண்ணறிவின் மீது எனக்கு அபார நம்பிக்கை இருக்கிறது. ஒவ்வொரு புதிய கண்டுபிடிப்பும் அந்தப் பையன் நிரபராதி என்று நிரூபிக்க நினைக்கும் ஹோல்ம்ஸின் நம்பிக்கையை பலப்படுத்தும். அவர் தனியாகத்தான் திரும்பி வந்தார் லெஸ்ட்ராட் அந்த ஊரில் உள்ள விடுதியில் தங்கி இருப்பதால்.

வெப்பம் இன்னும் அதிகமாகத்தான் இருக்கிறது என்று சொல்லிக்கொண்டே உள்ளே வந்தார் ஹோல்ம்ஸ். கொலை நடந்த இடத்தை நாம் பார்வை இடுவதற்கு முன் மழை பெய்யாமல் இருக்க வேண்டும். இருந்தாலும் ஒரு மனிதன் இந்த மாதிரி வேலையைச் செய்ய ஆரம்பிக்கும் போது தன் முழு உழைப்பையும் செலுத்த வேண்டும். நீண்ட தூர பிரயாணத்தில் களைத்த நாம் இப்போது தொடர்வது சரியாக இருக்காது. நான் ஜேம்ஸ் மக்கார்த்தியைச் சந்தித்தேன்.

“அவனிடம் இருந்து புதிதாக எதாவது தெரிந்ததா?”

“இல்லை”

“ஒன்றுமே சொல்லவில்லையா?”

“ஒன்றுமே இல்லை. ஒரு கட்டத்தில் யாராவது ஒருத்தரைக் கை காட்டுவான் என்று நினைத்துக் கொண்டே இருந்தேன். எல்லோரையும் போல் அவனுக்கும் குழப்பமாகத்தான் இருக்கிறது. அவன் கலகலப்பானவன் இல்லை. ஆனால் களையாக இருக்கிறான். நல்லவனாக இருப்பான் என்று நினைக்கிறேன்.”

“அவன் ரசனைதான் எனக்குப் புரியவில்லை.” என்றேன் நான். “மிஸ் டர்னரைப் போன்ற அழகான பெண்ணைத் திருமணம் செய்ய பிடிக்கவில்லை என்பது உண்மையானால்.”

“ஆஹ். அது ஒரு பெரிய வலி மிகுந்த கதை. இந்தப் பையன் அவளை ஒரு தலையாக பைத்தியக்காரத்தனமாக காதலித்து இருக்கிறான் இரண்டு வருடங்களுக்கு முன்னால். ஆனால் அவள் அறிமுகமாவதற்கு முன்பே அவள் ஒரு விடுதிப் பள்ளியில் ஐந்து வருடங்களாய்ப் படித்துக்கொண்டு இருக்கும்போது இந்த மடையன் பிரிஸ்டலில் உள்ள மதுக்கடையில் பணி புரியும் ஒரு பெண்ணைப் பதிவுத் திருமணம் செய்திருக்கிறான். யாருக்குமே இதைப் பற்றித் தெரியாது. அவன் நிலை எவ்வளவு பரிதாபம் பார்த்தீர்களா. அவனுக்கு மிகவும் பிடித்த ஒரு விஷயத்தைச் செய்யக் கட்டாயப்படுத்தப்பட்டாலும் அவனால் அதைச் செய்ய இயலாத சூழ்நிலை. இதனால்தான் அவன் அப்பா மிஸ் டர்னரிடம் அவனைத் திருமணம் பற்றிப் பேசச் சொன்ன போது அது கைகலப்பு வரை போய் விட்டது. இருந்தாலும் அவனுக்கென்று ஒரு வேலையும் இல்லாததால் அவன் திருமணம் செய்த விஷயத்தைக் கேள்வி பட்டிருந்தால் அவனை அடித்தே கொன்றிருப்பார். அவ்வளவு கோபக்கார மனிதர் அவர். கடந்த மூன்று நாட்கள் அவன் பிரிஸ்டலில் தன் மனைவியின் வீட்டிற்குத்தான் சென்று வந்திருக்கிறான். அவன் அப்பாவிற்கு அது தெரியாது. இதை மனதில் பதிய வைத்துக் கொள்ளுங்கள். மிகவும் முக்கியமானது. கெட்டதிலும் ஒரு நல்லது நடந்திருக்கிறது. செய்தித் தாள்களைப் பார்த்து இவன் மீது குற்றம் சாட்டப்பட்டிருப்பதைத் தெரிந்த பின் இவன் எப்படியும் தூக்கில் தொங்கி விடுவான் என்ற நம்பிக்கையில் அவன் மனைவி இவனுக்கு ஒரு கடிதம் எழுதி இருக்கிறாள். தனக்கு ஏற்கெனவே ஒரு திருமணம் ஆகி விட்டதாகவும் அவள் கணவன் பெர்முடாவில் உள்ள ஒரு துறைமுகத்தில் வேலை செய்வதாகவும் சொல்லி இருக்கிறாள். அதனால் அவனுக்கும் அவளுக்கும் இனி எந்த சம்பந்தமும் இல்லை என்றாளாம். அந்த விபரம் தெரிந்த பின் ஒரு ஆறுதலாய் இருந்திருக்கிறது அவனுக்கு இவ்வளவு நடந்த பின்னும்.

“அவன் கொலை செய்யவில்லை என்றால் வேறு யார்தான் செய்தது.”

“ஆஹ். யார். நான் உங்களுக்கு இரண்டு விஷயங்கள் சொல்கிறேன். ஒன்று. கொலை செய்யப்பட்டவர் யாரையோ பார்ப்பதற்காகத்தான் ஏரிக்கு சென்றார். அது அவரது மகன் கிடையாது. அவன் ஊரில் இல்லை. எப்போது வருவான் என்றும் அவருக்குத் தெரியாது. இரண்டு. கொலை செய்யப்பட்டவர் கூயி என்று கத்தி இருக்கிறார் தன் மகன் வந்து விட்டான் என்று தெரியும் முன்பே. இந்த இரண்டு விஷயங்களில்தான் இந்த வழக்கே இருக்கிறது. இப்போது ஜார்ஜ் மெரிடித் என்பவரைப் பற்றிப் பேசுவோம். மற்ற விஷயங்களை நாளை பார்த்துக் கொள்வோம்.”

ஹோல்ம்ஸ் எதிர் பார்த்ததைப் போல் மழை எதுவும் பெய்யவில்லை. தெளிவான வானமாகவே மறு நாள் விடிந்தது. ஒன்பது மணிக்கு லெஸ்ட்ராட் வண்டி அனுப்பி இருந்தார். நாங்கள் ஹேதர்லி பண்ணைக்கும் பாஸ்க்கோம் ஏரிக்கும் செல்லலாம் என்று புறப்பட்டோம்.

“இன்றைக்கு ஒரு துக்கமான செய்தி.” என்று லெஸ்ட்ராட் ஆரம்பித்தார். “திரு. டர்னர் அவர்களது நிலைமை மிகவும் மோசமாகி விட்டதால் நம்பிக்கை போய் விட்டதாக சொல்லப்படுகிறது.”

“மிகவும் வயதான மனிதர் என்று எண்ணுகிறேன்” என்றார் ஹோல்ம்ஸ்.

“60 வயது. அவரது வெளிநாட்டு வாழ்க்கை அவரை மிகவும் படுத்தி விட்டது. மேலும் வெகு நாட்களாக உடல் நிலையும் சரி இல்லாமல்தான் இருந்தார். இந்தத் தொழில் அவரது உடம்பை மிகவும் பாதித்து இருக்கிறது. அவர் மக்கார்த்திக்கு மிக நெருங்கிய நண்பர். அவருக்காக மிகவும் உதவி செய்திருக்கிறார். ஹெதர்லி பண்ணை வீட்டை வாடகை வாங்காமலேயே இலவசமாக கொடுத்திருக்கிறார்.”

“அப்படியா. ஆச்சர்யமாக இருக்கிறதே” என்றார் ஹோல்ம்ஸ்.

“ஆமாம். இன்னும் பலவிதமாக அவருக்கு உதவி செய்திருக்கிறார். இந்த ஊரெல்லாம் அதைப் பற்றிய பேச்சாகத்தான் எப்போதும் இருக்கும்.”

“உண்மையாகவா. இதிலிருந்து உங்களுக்கு ஒன்று புரிகிறதா. திரு.மக்கார்த்தி தன்னிடம் எதுவுமே இல்லாத நிலையிலும் எவ்வளவோ திரு.டர்னருக்குக் கடன் பட்டிருந்த போதும் அவரது மகளைத் தன் மகனுக்கு மணம் முடிக்க வேண்டும் என்று கட்டாயப்படுத்தி இருக்கிறார். மிஸ்.டர்னர் அந்தச் சொத்துக்களுக்கு எல்லாம் வாரிசாகி விடுவாள் என்றும் அவருக்குத் தெரியும். எவ்வளவு புத்திசாலித்தனமாகத் தன் மகனை வைத்துக் காய் நகர்த்தப் பார்த்திருக்கிறார். அவரது மகள் இவ்வளவு விஷயங்கள் சொல்லி இருக்கிறாள். இதிலிருந்து ஒன்று புரிந்து கொள்ள முடிய வில்லையா உங்களால்?”

“நாங்கள் ஏற்கெனவே தீர்மானித்து முடித்து விட்டோம்” என்று கண்ணடித்துக் கொண்டே சொன்னார் லெஸ்ட்ராட். “எனக்கு உண்மைகளை சந்திப்பதற்குத்தான் பயமாக இருக்கிறது ஹோல்ம்ஸ். அனுமானங்களையும் கற்பனைகளையும் கண்ட பிறகு.”

“நீங்கள் சொல்வது மிகச் சரி” என்றார் அடக்கமாக. “உங்களுக்கு உண்மைகளைக் கண்டு பயமாகத்தான் இருக்கிறது”

“இருந்தாலும் இதிலிருந்து உங்களால் புரிந்து கொள்ள முடியாத ஒரு உண்மை எனக்குத் தெளிவாகத் தெரிகிறது.” என்று லெஸ்ட்ராட் கொஞ்சம் கடுப்புடன் சொன்னார்.

“அது என்ன” என்று கேட்டார் ஹோல்ம்ஸ்.

“வயதான மக்கார்த்தியைக் கொன்றது இளைய மக்கார்த்திதான். மற்ற அனைத்தும் நிலவின் ஒளி போன்றதே.”

“பனி மூட்டத்தை விட நிலா ஒளி நல்லதே” என்று சிரித்துக்கொண்டே சொன்னார் ஹோல்ம்ஸ். ஆக இப்போது நாம் வந்திருப்பது ஹெதர்லி பண்ணை என்று நினைக்கிறேன்”

“ஆமாம். அதேதான்”

அது மிகவும் பெரிதாய் அரண்மனை போன்று இருந்தது. இரண்டு மாடிகள். கருங்கல் கூரை. சாம்பல் நிற சுவர்களின் மேல் மஞ்சள் நிறக் கொடி வகைகள் படர்ந்து இருந்தன. விரித்து விடப்பட்ட ஜன்னல் திரைச் சீலைகள் புகை வராத புகை போக்கிக் கூண்டுகள் இதையெல்லாம் பார்க்கும் போது பாதிக்கப்பட்டது போல் தெரிந்தது. இந்த பயங்கரத்தின் அழுத்தம் இன்னும் அதன் மேல் பயணிப்பது போல் தெரிந்தது. கதவைத் தட்டியபோது பணிப்பெண் வந்தாள். அவளது முதலாளி சாகும்போது அணிந்திருந்த காலணிகளை ஹோல்ம்ஸ் கேட்டுக் கொண்டதால் காண்பித்தாள். அவரது மகனின் காலணிகளையும் காண்பித்தாள். இருந்தாலும் அதை அவன் அப்போது அணிந்திருக்கவில்லை. அதை எல்லாம் நன்றாகக் கவனித்த பின் பாஸ்கோம் ஏரி நோக்கிச் சென்றோம்.

இப்படி ஒரு மணத்தை நுகர்ந்த அவர் முகமே மாறி விட்டது. பேக்கர் தெருவில் இருந்து வந்த அமைதியான சிந்தனையாளராகவும் தர்கவியலாளராகவும் இதுவரை அவரை அறிந்தவர்களுக்கு ஆச்சர்யமாக இருந்திருக்கும். அவரது முகம் எதையோ பறி கொடுத்தவர் போலவும் கருப்பாகவும் மாறி விட்டது. அவரது புருவங்கள் இரண்டு கரும் கோடுகள் போலாகி விட்டன. அதற்கு நடுவிலிருந்து அவரது கண்கள் எக்கு போல் பிரகாசித்தன. அவரது முகம் சிறிது கவிழ்ந்தது. தோள்கள் குவிந்தன. உதடுகள் இறுக்கமடைந்தன. நீளமான உறுதியான அவரது கழுத்து நரம்புகள் புடைத்து சாட்டை போல் காட்சியளித்தன. அவரது நாசிகள் விரிந்து வேட்டையாடும் ஒரு விலங்கு ஓடத் தயாராக இருப்பது போல் இருந்தது.

இந்த வழக்கில் அவரது முழு கவனமும் இருந்ததால் அவருக்கு யார் சொல்வதும் காதிலேயே விழுந்திருக்காது. மிஞ்சி மிஞ்சிப் போனால் ஒரு உருமல்தான் பதிலாகக் கிடைத்திருக்கும். மித வேகத்தில் அமைதியாக அந்தக் காட்டு வழிப் பாதையில் நடந்தார். அந்தப் புல் வெளிகள் தாண்டி பாஸ்கோம் ஏரியை அடைந்தோம். அந்த இடம் ஈரமான சதுப்பு நிலமாக இருந்தது. இன்னும் சொல்லப் போனால் அந்த மாவட்டமே அப்படிப்பட்ட நிலம்தான். அங்கே பல காலடித் தடங்கள் இருந்தன. நடைபாதையிலும் இரு புறமும் இருந்த சிறிய புல் வெளிகளிலும். சில நேரங்களில் வேகமாக நடப்பார். சில இடங்களில் திடீரென்று நிற்பார். ஒரு இடத்தில் திரும்ப வந்து புல் வெளிக்குள் நுழைந்தார்.

லெஸ்ட்ராடும் நானும் அவர் பின்னால் சென்றோம் கர்வமுள்ள நேர்மையான ஒரு துப்பறிவாளன் பின். அவரது ஒவ்வொரு செயலும் சரியான ஒரு முடிவிற்கு இட்டுச் செல்லும் என்ற நம்பிக்கையில். நாணல்கள் விளைந்த ஒரு ஐம்பதடி விட்டமுடைய நீர் கொண்டது பாஸ்கோம் ஏரி.

ஹெதர்லி பண்ணைக்கும் டர்னருக்குச் சொந்தமான பூங்காவிற்கும் நடுவில் அமைந்திருந்தது. அந்தக் காட்டுக்கு சிறிது மேலே தூரத்தில் துருத்திக் கொண்டிருந்த இரண்டு கோபுரங்கள் அந்த பணக்கார மனிதரின் வீடு இருக்கும் இடத்தைக் காண்பித்துக் கொண்டிருந்தன. ஹெதர்லி பண்ணை பக்கம் காடு மிகவும் அடர்த்தியாக வளர்ந்து இருந்தது. ஈரமான புற்கள் நிறைந்த குறுகலான புல் தரை இருபது அடி நீளம் வரை சென்றது. மரங்களின் முடிவில் நாணல்கள் வளர்ந்திருந்தன ஏரி நீரை ஒட்டி. இறந்த உடல் இருந்த சரியான இடத்தை லெஸ்ட்ராட் காட்டினார். அவ்வளவு ஈரம் இருந்ததால் அவர் விழுந்த இடம் சரியாகத் தெரிந்தது. ஹோல்ம்ஸின் ஆர்வமான முகத்தையும் ஊடுருவும் கண்களையும் பார்க்கும் போது உடைந்து கிழிந்திருந்த புற்களில் இருந்து அவருக்கு நிறைய விஷயங்கள் புலப்பட்டது போல் தெரிந்தது. அவர் வட்டமாக ஒரு நாய் மோப்பம் பிடிப்பது போல் சுற்றி வந்தார். அதன் பின் என்னைப் பார்த்துக் கேட்டார்.

“நீங்கள் ஏன் ஏரிக்குள் சென்றீர்கள்” என்று கேட்டார்.

“நான் ஒரு கம்பை வைத்து ஏரித் தண்ணீரில் கிளறி எதாவது ஆயுதமோ அல்லது வேறு எதாவது தடயம் கிடைக்குமா என்று பார்த்தேன். ஆனால், எப்படி…”

“போதும். போதும். எனக்கு நேரமில்லை. உள்நோக்கி இருக்கும் உங்கள் இடது கால் தடம் எல்லா இடத்திலும் இருக்கிறது. ஒரு பெருச்சாளி அந்தப் பாதையில் சென்றால் அந்த நாணல்களுக்குள் மறைந்திருக்கும். அவர்கள் ஒரு எருமைக் கூட்டம் போல் இங்கு வந்து எல்லா இடத்திலும் புரள்வதற்கு முன் நான் இங்கு வந்திருந்தால் மிகவும் எளிதாக இருந்திருக்கும். இங்கேதான் விடுதிக் காப்பாளரின் குடும்பம் வந்து இறந்த உடலைச் சுற்றி ஒரு ஆறு எட்டடி கால் தடங்கள் பதித்திருக்கிறார். இங்கே அதே கால்கள் வேறு மூன்று தடங்கள் பதித்திருக்கின்றன. அவர் ஒரு பூதக்கண்ணாடியை எடுத்து எல்லாவற்றையும் பார்த்துப் பெரும்பாலும் தனக்குத் தானே பேசிக் கொண்டார். எங்களைப் பார்த்துப் பேசியது மிகவும் கம்மி.

“இவைதான் இளைய மக்கார்த்தியின் பாதச் சுவடுகள். இரு முறை அவர் நடந்து போய் இருக்கிறார். ஒரு முறை வேகமாக ஓடி இருக்கிறார். அதனால்தான் முன்னங்கால்கள் நன்றாக அழுந்தி இருக்கின்றன. குதி கால்களின் சுவடுகள் தெரியவே இல்லை. அது அவன் சொன்னதை ஒத்து இருக்கின்றன. அதுதான் அவனது அப்பாவின் மேலும் கீழும் நடந்ததால் ஏற்பட்ட சுவடுகள். இது என்ன. அவனது துப்பாக்கியின் பின் புறம். அவன் அப்பா சொல்வதைக் கேட்டு நின்றிருந்த இடம். பின் இது என்ன. முன்னங்கால் தடம். சதுரமாக இருக்கிறது. மிகவும் வித்தியாசமாகவும் இருக்கிறது. வருகின்றன, போகின்றன, பின் திரும்பவும் வருகின்றன. ஆம் தன் மேலங்கியை எடுப்பதற்காக. அவை எங்கிருந்து வருகின்றன.”

அவர் மேலும் கீழுமாகச் சென்றார். சில நேரங்களில் தடங்கள் கிடைத்தன. சில நேரங்களில் மறைந்தன. இப்படியே செல்லும் போது அது காட்டின் எல்லையில் இருந்த ஒரு பெரிய மரத்தின் நிழல் வரை கொண்டு சென்றது. அந்த மரம்தான் இந்தக் காட்டிலேயே மிகப் பெரியது. அதன் கடைசி வரை சென்ற ஹோல்ம்ஸின் முகத்தில் ஒரு திருப்தி தெரிந்தது. அவர் அங்கு நீண்ட நேரம் இருந்தார் இலைகளையும் சுள்ளிகளையும் புரட்டிப் போட்டபடியே. அவரது பூதக் கண்ணாடியை வைத்து நிலத்தில் மட்டுமல்லாது அந்த மரத்தின் கிளைகளையும் எவ்வளவு தூரம் முடியுமோ அவ்வளவு தூரம் ஆராய்ச்சி செய்தபடி இருந்தார். பாசிகள் படர்ந்த ஒரு இடத்தில் உடைந்த கல் ஒன்றைக் கண்டார். அதைக் கவனமாக எடுத்து ஆராய்ந்து பார்த்து விட்டு பத்திரப்படுத்திக் கொண்டார். பின் காட்டு வழியே சென்று கொண்டே இருக்கும் போது மரங்கள் எல்லாம் மறைந்த பின் நெடுஞ்சாலை தெரிந்தது.

“இந்த வழக்கு இப்போதுதான் சூடு பிடிக்க ஆரம்பித்து உள்ளது.” என்று சொல்லிவிட்டுப் பழைய நிலைமைக்கு வந்தார். “இந்தச் சாம்பல் நிற வீடுதான் விடுதிக் காப்பாளரின் வீடாக இருக்கும் என்று நான் நினைக்கிறேன். நான் உள்ளே சென்று மொரானிடம் பேசி விட்டுச் சில குறிப்புகள் எடுக்கலாம் என்று எண்ணுகிறேன். அதன் பின் நாம் மதிய உணவு சாப்பிடச் செல்வோம். நீங்கள் காருக்குச் சென்று கொண்டிருங்கள். நான் சிறிது நேரத்தில் வந்து விடுகிறேன்.”

நாங்கள் பத்து நிமிடத்தில் காருக்கு வந்து விட்டோம். அங்கிருந்து ராஸ் நகருக்குச் சென்று கொண்டிருந்தோம். அந்தக் காட்டிலிருந்து எடுத்து வந்த கல்லை இன்னும் ஹோல்ம்ஸ் தன் கையிலேயே வைத்திருந்தார்.

“லெஸ்ட்ராட், இது உங்களுக்குப் பிடிக்கும்.” என்று சொல்லிக்கொண்டே அந்தக் கல்லைக் காண்பித்தார். “இதுதான் கொலை செய்யப் பயன்படுத்தப்பட்ட ஆயுதம்”

“இதில் எந்தவொரு அடையாளமும் இல்லையே”

“ஆமாம் இல்லை”

“பின் எப்படி உங்களுக்குத் தெரியும்”

“அதற்குக் கீழே புற்கள் வளர்ந்திருந்தன. அந்தக் கல் மூன்று நாட்களாகத்தான் அங்கு இருந்திருக்கிறது. அது எங்கிருந்து எடுக்கப்பட்டது என்பதற்கு எந்த அடையாளமும் இல்லை. காயங்களோடு இது ஒத்துப் போகிறது. வேறெந்த ஆயுதம் இருந்ததற்கான அடையாளமும் இல்லை.”

“அப்புறம் அந்தக் கொலைகாரன்”

“நல்ல உயரமான இடது கைப் பழக்கமுள்ள வலது கால் நொண்டியாய் உள்ள தடிமனான குதிகால் கொண்ட பூட் அணியக் கூடிய சாம்பல் நிற கோட் அணியக் கூடிய இந்தியச் சுருட்டு பிடிக்கக் கூடிய சுருட்டு பிடுப்பி பயன்படுத்தக் கூடிய மொன்னையான பேனாக் கத்தி சட்டைப் பையில் வைத்திருக்கக்கூடிய ஒரு ஆள்தான் இந்தக் கொலையைச் செய்திருக்க வேண்டும். இன்னும் நிறைய அடையாளங்கள் உள்ளன. ஆனால் தற்போதைக்கு இவைகள் போதும் நாம் தேடிச் செல்ல.”

லெஸ்ட்ராட் சிரித்தார். “எனக்கு இன்னும் சந்தேகமாகவே இருக்கிறது. உங்கள் அனுமானங்கள் எல்லாம் நன்றாக இருக்கிறது. ஆனால் இந்த மர மண்டைகள் உள்ள பிரிட்டிஷ் நீதிமன்றத்தை எப்படிச் சமாளிக்கப் போகிறீர்கள். “நாமேதான்” என்று அமைதியாகச் சொன்ன ஹோல்ம்ஸ், “நீங்கள் உங்கள் வழிமுறையைப் பின் பற்றுங்கள். நான் எனது வழிமுறையைப் பின் பற்றுகிறேன். இன்று மதியம் எனக்கு வேலை இருக்கிறது. அதனால் இன்று சாயந்திர புகை வண்டியில் லண்டன் வருகிறேன்.”

“வழக்கை பாதியில் விட்டு விட்டா?”

“இல்லை. வழக்கு முடிந்தது”

“பின் அந்த மர்மம்”

“அது தீர்க்கப்பட்டது”

“யார் குற்றவாளி?”

“நான் விளக்கம் கொடுத்த அதே ஆள்தான்”

“ஆம். ஆனால் யார் அது”

“அவரைக் கண்டுபிடிப்பது ஒன்றும் கடினமாக இருக்காது. இந்த ஊர் ஒன்றும் அவ்வளவு ஜனத் தொகை உள்ள ஊர் அல்ல.”

லெஸ்ட்ராட் தோள்களைக் குலுக்கினார். “நான் நடைமுறையான ஆள்.” என்று சொன்ன அவர் “ஊரில் உள்ள ஒவ்வொருத்தரையும் போய்ப் பார்த்து இடது கைப் பழக்கம் உள்ள நொண்டி ஆளைத் தேடிப் பார்ப்பது என்னால் முடியாது. ஸ்காட்லேண்ட் யார்ட் முழுவதும் என்னைப் பார்த்துக் கை கொட்டிச் சிரிக்கும்.”

“சரி.” என்றார் ஹோல்ம்ஸ் மிக அமைதியாக. “நான் உங்களுக்கு நல்ல வாய்ப்பு கொடுத்திருக்கிறேன். நீங்கள் தங்க வேண்டிய இடம் வந்து விட்டது. நீங்கள் கிளம்புவதற்கு முன் ஒரு வரி எழுதி விட்டுப் போகிறேன். வருகிறேன்.”

லெஸ்ட்ராடை அவர் விடுதியின் முன் இறக்கி விட்டு விட்டு நாங்கள் எங்கள் அறைக்கு சென்றோம். அங்கு எங்களுக்கு மதிய உணவு தயாராக இருந்தது. ஹோல்ம்ஸ் மிக அமைதியாக இருந்தார். மிகவும் யோசனையில் ஆழ்ந்திருந்த அவர் முகத்தில் வலி மிகுந்த உணர்ச்சியே மிகுந்திருந்தது குழப்பத்தின் உச்சியில் இருப்பவரைப் போல.

“வாட்சன், இங்கே பாருங்கள்.” என்ற அவர் “இந்த நாற்காலியில் அமருங்கள். உங்களுக்கு ஒரு சிறிய போதனை செய்யப் போகிறேன். நான் என்ன செய்யப் போகிறேன் என்று எனக்குத் தெரியவில்லை. உங்கள் ஆலோசனை எனக்குத் தேவை. சுருட்டைப் பற்ற வையுங்கள். நான் விவரிக்க ஆரம்பிக்கிறேன்”

“ஆரம்பியுங்கள்”

“இந்த வழக்கில் இளைய மக்கார்த்தியைப் பற்றி உடனடியாக நம்மைப் பாதித்த இரண்டு விஷயங்கள் உள்ளன. இரண்டுமே அவனுக்கு சாதகம் என்று நான் நினைத்தேன். நீங்கள் எதிரானது என்று சொன்னீர்கள். ஒன்று. அவர் தன் மகனைச் சந்திக்கு முன் கூயி என்று கத்த வேண்டும். இரண்டு. எலியைப் பற்றி அவர் சொன்னது. அவர் நிறைய வார்த்தைகளை உளறினார். ஆனால் அவர் மகனுக்குக் கேட்டது எலி என்ற வார்த்தை மட்டுமே. இந்த இரண்டு விஷயங்களில் இருந்துதான் நமது ஆராய்ச்சி தொடங்க வேண்டும். அவன் சொன்னது உண்மை என்ற அடிப்படையில் இருந்து அதை ஆரம்பிப்போம்.”

“கூயியைப் பற்றி என்ன செய்வது?”

“உறுதியாக அது தன் மகனுக்காக சொன்னது இல்லை. அவரைப் பொறுத்தவரை அவன் பிரிஸ்டலில் இருந்தான். அவன் அங்கு வந்தது தற்செயலாக நிகழ்ந்தது. அவர் கூயி என்று கூப்பிட்டது அவர் அங்கே சந்திக்க வேண்டிய மனிதருக்கானது. ஆனால் இந்தக் கூயி என்ற சத்தம் முற்றிலும் ஒரு ஆஸ்திரேலியா சம்பந்தப்பட்டது. ஆஸ்திரேலியர்கள் தங்களுக்குள் பயன்படுத்தி கொள்ளும் சங்கேத வார்த்தை. அதனால் மக்கார்த்தியை அன்று சந்திக்க வேண்டியவர் நிச்சயமாக ஆஸ்திரேலியா சென்று வந்தவராகத்தான் இருக்க வேண்டும்”

“எலி பற்றிச் சொன்னது…”

ஷெர்லாக் ஹோல்ம்ஸ் தன் சட்டைப் பையிலிருந்து ஒரு மடித்த காகிதத்தை எடுத்தார். மேஜையின் மேல் வைத்து விரித்தார். “இது விக்டோரியா மாகாணத்தின் வரைபடம். நேற்று பிரிஸ்டலுக்கு தந்தி அடித்து வரவழைத்தேன்.” வரைபடத்தின் ஒரு பகுதியில் கை வைத்து “இதைப் படியுங்கள் என்றார்”

“அரட்” என்றேன்.

“இப்பொழுது” என்று கையை எடுத்தார்.

“பல்லரட்”

“மிகவும் சரி. அதுதான் அந்த மனிதன் சொன்ன வார்த்தை. அதில் கடைசி இரு அசைச் சொற்களை மட்டும்தான் அவரது மகன் கேட்டிருக்கிறான். அவர் கொலையாளியின் பெயரை உச்சரிக்கத்தான் முயன்றிருக்கிறார். பல்லரட்டில் இருந்து வந்த ஒருவர் என்று.”

“அருமை.” நான் ஆச்சர்யத்தில் கத்தினேன்.

“இது வெளிப்படையாகி விட்டது. இப்போது நமது துறையை மிகவும் குறுக்கி விட்டேன். சாம்பல் நிற மேலங்கி வைத்திருந்தது மூன்றாவது விஷயம். அவர் மகனின் வாக்குமூலத்தை வைத்துப் பார்க்கும் போது சரியாகத் தோன்றுகிறது. அது உறுதியானதும் கூட. முற்றிலும் தெளிவற்ற ஒரு சூழ்நிலையிலிருந்து இறுதியான முடிவுக்கு வந்திருக்கிறோம். ஆஸ்திரேலியாவின் பல்லரட்டில் இருந்து வந்த சாம்பல் நிற மேலங்கி பயன்படுத்தும் ஒருவர் என்று.”

“நிச்சயமாக”

“அந்த ஒருவரும் இந்த மாவட்டத்தில் தன் வீட்டில் இருந்திருக்க வேண்டும். இந்த ஏரியில் வெளியாட்கள் யாரும் சுற்ற முடியாது. ஏனெனில் பண்ணை வழியாகவோ அல்லது எஸ்டேட் வழியாகவோதான் இந்த ஏரியை அடைய முடியும்.”

“நிச்சயமாக”

“இன்று நமது பயணத்தை ஆரம்பிக்க வேண்டிய நேரம் வந்து விட்டது. நான் நிலத்தில் தேடிக் கொண்டிருக்கும்போது கண்டுபிடித்த சில அற்பமான விஷயங்களை அந்த முட்டாள் லெஸ்ட்ராடிடம் சொன்னேன். குற்றவாளி எப்படிப்பட்டவன் என்று.”

“ஆனால் அவைகளைப் பற்றி எப்படித் தெரிந்தது?”

“உங்களுக்கு எனது வழிமுறை பற்றித்தான் தெரியுமே. அற்பமான விஷயங்களை உற்று நோக்குவதுதான் அதன் அடிப்படைத் தத்துவம்.”

“அவரது உயரத்தை அவரின் இரு அடிகளுக்கு நடுவில் உள்ள தூரத்தை வைத்து உத்தேசமாகச் சொல்லி விட்டீர்கள். அவரது பூட் பற்றி சுவடுகளை வைத்துச் சொல்லி விடலாம்.”

“ஆமாம். அவைகள் வித்தியாசமானவைதான்.”

“அவர் நொண்டி என்பது எப்படித் தெரிந்தது”

“வலது கால் சுவடு அவ்வளவு தெளிவாக இல்லை. அந்தப் பக்கம் குறைந்த அழுத்தம்தான் இருந்தது. ஏனென்றால் அது ஒச்சம். அவர் ஒரு நொண்டி.”

“அவரது இடது கைப் பழக்கம் எப்படி தெரிந்தது?”

“மருத்துவ அறிக்கையை வாசிக்கும் போது அடிபட்ட விதம் உங்களுக்கே வினோதமாக தெரிந்ததா இல்லையா. பின் புறமாக இருந்துதான் தாக்குதல் நடந்திருக்கிறது இடது பக்கத்தில். இடது கைப் பழக்கம் உள்ளவன்தான் அப்படிச் செய்து இருக்க முடியும். அப்பாவும் மகனும் பேசிக் கொண்டிருக்கும்போது மரத்தின் பின் ஒளிந்து இருந்தான். அங்கு ஒரு சுருட்டு கூட புகைத்திருக்கிறான். நான் அந்தச் சுருட்டின் சாம்பலைக் கூடப் பார்த்தேன். புகையிலை சாம்பலைப் பற்றி எனக்கு ஏற்கெனவே மிக நன்றாகத் தெரியும். அதனால் அது இந்தியச் சுருட்டு என்பதை எளிதாகக் கண்டுபிடித்து விட்டேன். நான் கிட்டத்தட்ட 140 வகையான பைப், சுருட்டு, சிகரட் புகையிலை பற்றி ஆராய்ச்சி செய்து கட்டுரை எழுதி இருக்கிறேன் என்பது உங்களுக்கே தெரியும். சாம்பலைப் பார்த்ததும் அங்கே சுற்றிப் பார்த்து அவன் வீசிய துண்டைக் கண்டு பிடித்தேன். ரொட்டர்டாமில் சுருட்டப்பட்ட இந்தியச் சுருட்டு என்பது தெளிவாயிற்று.”

“சுருட்டைத் தாங்கிப் பிடிக்கக் கூடிய பிடிப்பான் பற்றி”

“சுருட்டின் முனை அவனது வாயில் இல்லை என்பது தெரிந்தது. அதனால் அவன் பிடிப்பான் பயன்படுத்தி இருக்கிறான். சுருட்டின் முனை வெட்டப்பட்டிருந்தது கடிக்கப்படவில்லை. வெட்டும் சீராக இல்லை. அதனால் மொன்னையான ஒரு பேனா கத்தியாகத்தான் அது இருக்க வேண்டும்”

“ஹோல்ம்ஸ். அந்த மனிதனைச் சுற்றி அவன் தப்பிக்கவே முடியாதபடி ஒரு வலை பின்னி விட்டீர்கள். மேலும் ஒரு நிரபராதியை தூக்குக் கயிற்றில் இருந்து காப்பாற்றி இருக்கிறீர்கள். இங்கிருந்து எப்படி இந்த வழக்கு நகரும் என்று என்னால் யூகிக்க முடிகிறது. ஆக அந்தக் குற்றவாளி ….”

“திரு. ஜான் டர்னர்” என்று விடுதியின் பணியாள் ஒருவன் கத்திகொண்டே நாங்கள் அமர்ந்திருந்த அறையின் கதவை திறந்து ஒரு ஆளை உள்ளே அனுப்பினான்.

உள்ளே நுழைந்த ஆள் சற்று வித்தியாசமாகவும் வசீகரமாகவும் இருந்தான். அவனது மெதுவான நொண்டி அடிக்கும் நடையும் வளைந்த தோள்களும் அவனைப் பலவீனமாகக் காட்டினாலும் அவனது கரடு முரடான தோற்றமும் நீளமான கைகளும் அவனை ஒரு பலசாலியாகக் காட்டியது. அவனது பின்னிய தாடியும் நரைத்த முடியும் தனித்துத் தெரியும் தொங்கிய புருவங்களும் அவன் மேல் மரியாதையும் அவன் தோற்றத்தில் ஒரு சக்தி வாய்ந்தவனாகவும் காட்டியது. அவன் முகம் வெளுப்பாய் இருந்தது. அவன் உதடுகளும் நாசி ஓரமும் ஒரு வித நீல நிறத்தில் இருந்தது. எதோ ஒரு கொடிய நோயில் ஆட்பட்டவன் போல் இருந்தான்.

“தயவு செய்து அமருங்கள்.” என்று ஹோல்ம்ஸ் மெதுவாகச் சொன்னார். “எனது கடிதம் உங்களுக்குக் கிடைத்திருக்கும் அல்லவா”

“ஆமாம். விடுதிக் காப்பாளர் கொடுத்தார். நீங்கள் என்னை இங்கு சந்திக்க விரும்புவதாகக் கூறினார் பிரச்சினை ஏதும் வராமல் இருக்க.”

“ஆமாம். கூடத்தில் பலர் பேசிக் கொண்டிருப்பார்கள்.”

“ஏன் நீங்கள் என்னைப் பார்க்க விரும்பினீர்கள்?” என்று என் நண்பனை விரக்தி வழியும் களைப்புற்ற கண்களால் பார்த்தபடியே கேட்டான் அவன் கேட்ட கேள்விக்கு பதில் கிடைத்தது போல.

“ஆம்.” என்று அவரது வார்த்தைகளை விட பார்வைக்கே பதில் அளித்தார். “எனக்கு மக்கார்த்தியைப் பற்றி அனைத்தும் தெரியும்”

அந்த வயதான மனிதர் தன் கைகளில் முகத்தைப் புதைத்துக் கொண்டே சொன்னார். “கடவுளே. என்னைக் காப்பாற்று!” என்று அழுதார். “அந்த இளைஞனை மாட்டி விட வேண்டும் என்று நான் நினைக்கவே இல்லை. உயர் நீதி மன்றத்தில் இந்த வழக்கு அவனுக்குப் பாதகமாக வந்தால் நிச்சயம் நான் உண்மைகளை எல்லாம் சொல்லிவிடலாம் என்றுதான் நினைத்திருந்தேன்.”

“நீங்கள் அவ்வாறு சொன்னது மிக்க மகிழ்ச்சி” என்று சொன்னார் ஹோல்ம்ஸ் மிக இறுக்கமாக.

“என் மகளுக்காக பார்க்கிறேன். இல்லையென்றால் இப்போது கூட பேசி இருப்பேன். நான் கைதாவதைப் பார்த்தால் அவள் தாங்க மாட்டாள்.”

“விஷயம் அவ்வளவு தூரம் போகாது” என்றார் ஹோல்ம்ஸ்.

“ஏன்”

“நான் அரசாங்க அதிகாரி இல்லை. உங்கள் மகள்தான் என்னை இந்த வழக்கில் ஈடுபடுத்தி இருக்கிறாள். அதனால் அவள் சொல்வதைத்தான் கேட்க முடியும். இருந்தாலும் இளைய மக்கார்த்தியும் வெளியே வர வேண்டும்.”

“என் கடைசிக்காலம் நெருங்கிக் கொண்டிருக்கிறது.” என்றார் டர்னர். “எனக்கு நீரிழிவு நோய் ரொம்ப காலமாக இருக்கிறது. எனது மருத்துவர் நான் இன்னும் ஒரு மாதம் இருப்பதே கடினம் என்றார். அதனால் என் வீட்டிலேயே நான் சாக விரும்புகிறேன். சிறையில் அல்ல.”

ஹோல்ம்ஸ் எழுந்து மேஜையில் பேனாவும் ஒரு காகிதக் கட்டையும் கொண்டு வந்து வைத்தார்.

“உண்மையைச் சொல்லுங்கள்.” என்றார். “நான் எழுதிக் கொள்கிறேன். நீங்கள் கையெழுத்திடுங்கள். வாட்சன் சாட்சிக் கையெழுத்திடுவார். நான் உங்கள் வாக்குமூலத்தைக் கடைசி நேரத்தில் நீதி மன்றத்தில் சமர்ப்பித்து மக்கார்த்திக்கு விடுதலை வாங்கிக் கொடுப்பேன். நிச்சயம் தேவையான சமயத்தில் மட்டுமே இதைப் பயன்படுத்துவேன் என்று உங்களுக்கு உறுதி கூற என்னால் முடியும்”

“நல்லது. அதுவரை நான் உயிருடன் இருப்பேனா என்று எனக்குத் தெரியாது. அதனால் இது ஒன்றும் பெரிய விஷயமே இல்லை. ஆனால் என் மகளுக்கு அதிர்ச்சி கொடுக்காமல் இருக்க வேண்டும். அதுதான் இப்போது என் விருப்பம். இப்பொழுது நான் எல்லா உண்மைகளையும் சொல்லி விடுகிறேன். ரொம்ப நாள் நடித்து விட்டேன். ஆனாலும் சொல்வதற்கு அவ்வளவு நேரம் ஆகாது.”

“உங்களுக்கு இறந்த மக்கார்த்தியைப் பற்றித் தெரியாது. அவன் ஒரு சாத்தானின் மறு உருவம். கடவுள் அவனைப் போன்ற மனிதர்களிடம் இருந்து உங்களைக் காக்கட்டும். என்னை அவன் கட்டுக்குள் இருபது வருடங்களாக வைத்திருந்தான். என் வாழ்க்கையே அவனால் நாசமாகி விட்டது. அவன் பிடியில் எப்படி வந்தேன் என்பதை முதலில் சொல்லி விடுகிறேன்.”

“அப்போது அறுபதுகளின் ஆரம்ப காலம். சுரங்கத் தொழிற்சாலையில் வேலை பார்த்துக் கொண்டிருந்தேன். எனக்கு வாலிப வயது. சூடான இளம் ரத்தம். கட்டுப்பாடில்லாமல் பொறுப்பில்லாமல் சுற்றிக் கொண்டிருந்த பருவம். எதைச் செய்வதற்கும் அஞ்சுவதில்லை. கெட்ட சகவாசத்தால் தண்ணியடிக்கக் கற்றுக் கொண்டேன். வேலை செய்யப் பிடிக்கவில்லை. அதனால் புதர்களில் மறைந்து இங்கே சொல்வார்களே நெடுஞ்சாலைக் கொள்ளைக்காரன், அப்படி ஆகி விட்டேன்.

நாங்கள் ஆறு பேர் இருந்தோம். சுதந்திரப் பறவைகளாய்த் திரிந்தோம். எங்களுக்குப் பிடித்த இடத்தில் தங்குவோம். சுரங்கத்திற்குச் செல்லும் வண்டிகளை நிறுத்துவோம். என் பெயர் பல்லாரட்டின் கருப்பு ஜாக். அந்த ஊரில் பல்லாரட் கும்பல் என்று சொன்னால் இன்னும் பயப்படுவார்கள்.

“ஒரு நாள் தங்கத்தை ஏற்றிக் கொண்டு சில குதிரை வண்டிகள் பல்லாரட்டிலிருந்து மெல்பன் சென்று கொண்டிருந்தன. நாங்கள் அதைக் குறி வைத்துக் காத்துக் கொண்டிருந்தோம். அவர்கள் ஆறு பேர் நாங்கள் ஆறு பேர். சரி சமமாய் இருந்தது. முதல் தாக்குதலிலேயே நாங்கள் நான்கு வண்டிகளைக் காலி செய்து விட்டோம். எங்கள் கூட்டத்தில் மூன்று பேரை இழந்தோம் பொருள் கிடைக்கும் முன்பே. நான் வண்டி ஓட்டிகளின் தலைவனது தலையில் துப்பாக்கியை வைத்து அழுத்தினேன். அவன்தான் இந்த மக்கார்த்தி. நான் அன்றே அவனைக் கொன்றிருக்க வேண்டும். விட்டது என் தவறு. அவன் குரூர விழிகள் என்னையே பார்த்துக் கொண்டு இருந்தன அங்குலம் அங்குலமாக அலசி நினைவில் வைத்துக் கொள்வது போல. நாங்கள் தங்கத்தை எடுத்து விட்டுத் தப்பி ஓடி விட்டோம். பெரும் பணக்காரர்கள் ஆகி விட்டோம். யாரும் சந்தேகப்படாதபடி இங்கிலாந்து திரும்பி வந்து விட்டோம். என் கூட்டாளிகளிடம் பங்கு போட்டு விட்டு எதாவது ஒரு நல்ல இடத்தில் அமைதியாக கவுரவமாக வாழலாம் என்று நினைத்தேன். இந்த எஸ்டேட்டை வாங்கினேன். என் பணத்தை வைத்துச் சில நல்ல கார்யங்கள் செய்யலாம் என்று எண்ணினேன் நான் செய்த பாவங்களுக்குப் பரிகாரம் தேடுவதற்காக. திருமணமும் செய்து கொண்டேன். என் மனைவி சிறிது காலத்திலேயே இறந்து விட்டாள் என் மகள் ஆலிஸைப் பெற்ற பின். அவளது பிஞ்சுக் கரங்களை நான் பற்றும் போதெல்லாம் அவள் நான் செய்த பாவங்களை மறக்கடிக்கச் செய்து நல்லதோர் வழியில் என்னை அழைத்துச் செல்வது போல் இருந்தது. ஒரு வகையில் நான் பழையதை முழுவதும் மறந்து விட்டு ஒரு புதிய அத்தியாயத்தை எழுதிக் கொண்டிருந்தேன். எல்லாம் நல்லபடியாக போய்க் கொண்டிருந்த போதுதான் திடீரென்று இந்த மக்கார்த்தி என் வாழ்வில் வந்து நுழைந்தான்.

நான் ஒரு முதலீடு செய்வதற்காக நகரத்திற்கு சென்றிருந்த பொது ரீஜண்ட் தெருவில் அவனைப் பார்த்தேன். அவனிடம் அப்போது ஒரு மேலங்கி கூட இல்லை. நல்லதொரு பூட் கூட அவன் அணிந்திருக்கவில்லை. “இங்க பாரு ஜாக்” என்று என்னைத் தொட்டபடியே பேசினான். “நாங்கள் உனக்கு ஒரு குடும்பத்தைப் போல துணையாய் இருப்போம், நானும் என் மகனும். நீதான் எங்களை ஆதரிக்க வேண்டும். இல்லையென்றால், இங்கிலாந்து, சட்ட திட்டங்களை மதிக்கும் நல்ல நாடு. அப்புறம் கூப்பிடு தூரத்தில்தான் காவல்காரர்களும் இருக்கிறார்கள். நல்ல முடிவாய் எடு” என்றான்.

“பின் என்ன, அவர்கள் என்னோடு வந்து தங்கி விட்டார்கள். அவர்களை என்னால் உதறி விடவே முடியவில்லை. என்னுடன் இருப்பதிலேயே மிகச் சிறந்த வீட்டில் அவன் வாழ்நாள் முழுவதும் வாடகை இல்லா விருந்தாளியாக தங்கிக் கொண்டான். அன்றிலிருந்து என் நிம்மதி பறி போய் விட்டது. எங்கு திரும்பினாலும் அவனது கபட முகம்தான் என் கண்களில் விழுந்தது. ஆலிஸ் வளர வளர என் பயம் இன்னும் அதிகமாகிக் கொண்டே சென்றது. காவல்துறைக்கு பயந்ததை விட அவளுக்கு எனது கடந்த காலம் தெரிந்து விடுமோ என்றுதான் அஞ்சினேன். அவனுக்கு என்ன பிடிக்கிறதோ அது உடனே எந்தக் கேள்வியும் இல்லாமல் அவன் கைக்கு வந்தாக வேண்டும். நிலம், பணம், வீடு என்று எல்லாத்தையும் நான் அள்ளிக் கொடுத்திருக்கிறேன். ஒரு நாள் நான் கொடுக்க முடியாத ஒரு பொக்கிஷத்தைக் கேட்டான். ஆம் என் மகளை அவன் மகனுக்கு மணம் முடித்து வைக்கச் சொல்லிக் கேட்டான்.”

“அவனது மகனும் வளர்ந்து விட்டான். அதனால் அவனுக்கும் ஆசை வந்து விட்டது. என் உடல் நிலையும் மோசமாகி விட்டதால் அவர்களுக்கு எல்லாமே எளிதாகி விட்டது. எனது எல்லா சொத்துக்களையும் ஒரே அடியில் அடைந்து விடலாம் என்று கணக்கு போட்டு விட்டான். ஆனால் நான் உறுதியாக இருந்தேன். என் சந்ததி அவனால் கெட்டு விடக் கூடாது என்று நினைத்தேன். அந்தப் பையன் மேல் எனக்கு எந்த வெறுப்பும் கிடையாது. ஆனால் அவனும் அதே ரத்தம்தானே. அது போதாதா. அதனால் நான் உறுதியாய் மறுத்தேன். மக்கார்த்தி என்னை மிரட்டினான். என்ன வேண்டுமானாலும் செய்து கொள். ஆனால் முடியாது என்று சொல்லி விட்டேன். அதனால் இருவரும் சந்தித்துப் பேசி தீர்த்துக் கொள்ளலாம் என்று ஏரியில் சந்திப்பதாக முடிவெடுத்தோம்.

“நான் அங்கு சென்றபோது அவன் தன் மகனிடம் பேசிக் கொண்டிருந்தான். அதனால் அந்த நேரத்தில் ஒரு மரத்தின் பின்னால் நின்று கொண்டு நான் ஒரு சுருட்டைப் பற்ற வைத்துப் புகைத்துக் கொண்டிருந்தேன். அவன் பேசப் பேச என் ரத்தம் கொதித்தது. அவன் தன் மகனிடம் அவளை எப்படியாவது திருமணம் செய்து கொள்ளச் சொல்லி வற்புறுத்திக் கொண்டிருந்தான். அவளது சம்மதம் எதுவும் அவர்களுக்குத் தேவை இல்லாதது போலவும் எதோ ஒரு அனாதை போலவும் அவன் பேசிக் கொண்டிருந்தான். இப்படி ஒரு மோசமான மனிதனிடம் என் உயிரினும் மேலான மகள் மாட்டிக் கொள்ளப் போகிறாளே என்று நினைக்கும் போதே என் நெஞ்சமெல்லாம் பதறியது. இப்படியே இதை வெட்டி விட முடியாதா? நானும் ஏற்கெனவே செத்துக் கொண்டிருக்கும் மனிதன்தான். மனத் தெளிவும் கைகளில் திடமும் இருந்தாலும் என் தலைவிதி நிச்சயிக்கப் பட்டு விட்டதைப் போலவே உணர்ந்தேன். ஆனால் என் மகள். அவனது கொடூரமான நாக்கை வெட்டினால்தான் எனக்கு நிம்மதி. நான்தான் அவனைக் கொன்றேன். ஹோல்ம்ஸ். இவ்வளவு பெரிய பாவத்தை செய்து விட்டு ஒரு தியாகி போல வாழ்ந்து கொண்டிருந்தேன் அந்தப் பாவத்தைக் கழுவும் விதமாக.

நான் விழுந்த வலையிலே என் அருமை மகளும் விழுந்து விடுவாளோ என்று எண்ணித்தான் நான் மிகவும் பயந்தேன். அதனால்தான் அவனை ஒரு நச்சுப் பாம்பைக் கொல்வது போல் கொன்று விட்டேன் எந்தவிதக் குற்ற உணர்ச்சியும் இல்லாமல். அவன் சத்தம் கேட்டு அவனது மகன் திரும்ப வந்து விட்டான். அதற்குள் நான் காட்டுக்குள் மறைந்து விட்டேன். ஆனால் எனது மேலங்கியை எடுப்பதற்குத் திரும்ப வர வேண்டியதாய்ப் போயிற்று. இது தான் நடந்தது. நான் சொன்னதனைத்தும் உண்மை.

“நல்லது. நீங்கள் செய்தது சரி தவறு என்று நான் சொல்ல முடியாது.” என்றார் ஹோல்ம்ஸ் அவர் கையழுத்திட்ட காகிதத்தை வாங்கிய படியே. “இனிமேல் இது போல் நமக்கு நடக்கக் கூடாது என்று வேண்டிக் கொள்கிறேன்”

“நிச்சயமாக. ஆனால் நீங்கள் என்ன செய்யப் போகிறீர்கள்?”

“உங்கள் உடல் நிலையைப் பார்க்கும்போது நான் எதுவும் செய்யப் போவதில்லை. நீங்கள் செய்த குற்றங்களுக்கு எல்லாம் உயர் நீதி மன்றத்திற்கும் மேல் இருக்கும் மன்றத்தில் நீங்கள் பதில் சொல்லியே ஆக வேண்டும். நான் உங்கள் வாக்கு மூலத்தை வைத்திருப்பேன். மக்கார்த்திக்கு தண்டனை அறிவித்தால் உறுதியாக இதை நான் பயன்படுத்துவேன். அப்படி இல்லையென்றால் இது யார் கண்ணுக்கும் தெரியாமல் மறைத்து விடுவேன். நீங்கள் உயிரோடு இருந்தாலும் இறந்தாலும் இந்த ரகசியம் எங்களுடன் மட்டுமே இருக்கும்.”

“அப்போ நான் சென்று வருகிறேன்.” என்றார் அழுத்தமாக. “நீங்கள் எனக்குக் கொடுத்த நிம்மதியான இறுதி வாழ்க்கையினால் உங்கள் மரணப் படுக்கை மிகவும் எளிமையானதாக இருக்கும்.”

அவ்வளவு பெரிய உருவம் கொண்ட அவர் நடுங்கிக் கொண்டு தள்ளாடிக் கொண்டு அந்த அறையை விட்டுச் சென்றார்.

“கடவுளே நீங்கள்தான் எங்களைக் காப்பாற்ற வேண்டும்” என்றார் ஹோல்ம்ஸ். “பரிதாபகரமான புழுவைப் போன்றவர்களிடம் விதி ஏன் இவ்வளவு தூரம் விளையாடுகிறது. இந்த மாதிரி வினோதமான வழக்குகளைச் சந்திக்கும் போதெல்லாம் எனக்கு பேக்ஸ்டரின் வார்த்தைகள்தான் ஞாபகத்துக்கு வருகின்றன. ‘ஷெர்லாக் ஹோல்ம்ஸ் தன் வழியில் பயணித்துக் கொண்டே இருப்பான் கடவுளின் கருணையோடு'”

ஜேம்ஸ் மக்கார்த்தி உயர்நீதி மன்றத்தில் வழக்கில் இருந்து விடுவிக்கப்பட்டான் வாதித் தரப்பு வக்கீலிடம் ஹோல்ம்ஸ் எடுத்துக் கொடுத்த ஆட்சேபணைகளின் திறத்தால். வயதான டர்னர் ஏழு மாதங்களுக்குப் பின் இறந்து விட்டார். தங்கள் வாழ்வில் நடந்த கருப்பு தினங்களை அறியாமலேயே அந்த இருவரும் மண வாழ்வில் மகிழ்ச்சியாகக் காலடி எடுத்து வைக்கவும் நிறைய வாய்ப்புகள் உள்ளன.

– ஷெர்லாக் ஹோல்ம்ஸ் சாகசங்கள், தமிழாக்கம்: சு.சோமு

Print Friendly, PDF & Email

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *