கதையாசிரியர்:
கதைத்தொகுப்பு: அமானுஷம் கிரைம்
கதைப்பதிவு: April 17, 2012
பார்வையிட்டோர்: 30,661 
 
 

ஓங்கி உயர்ந்த மரங்களுக்கிடையே கருப்பை அப்பிக் கிடந்தது அந்தக்காடு. கண்ணுக்கு புலப்படாத ஒற்றையடிப் பாதை. அந்த பாதையின் இரண்டு புறமும் மண்டிக்கிடந்த புதர்களில் இருந்து ஓயாமல் வந்துகொண்டிருந்தது சில்வண்டுகளின் க்ரீச் க்ரீச் ஒலி. அங்கொன்றும் இங்கொன்றுமாய் காட்டு நாய்களின் குரைப்பும், ஓனாய்களின் ஊளையும் கேட்டுக்கொண்டு இருந்தது. மணித்துளிகள் நடு நிசியை நோக்கி நகர்ந்து கொண்டிருந்தது. செல்போன் வெளிச்சத்தில் மணி 11:45ஐ பார்த்து விட்டு இன்னும் பதினைந்து நிமிஷம் தான் இருக்கிறது என்றான் அந்த ராட்சத பாறைக்கு பின்னாலிருந்து எட்டி அந்த குகையை பார்த்துக் கொண்டிருந்த பேய்க்காமன். அந்த மார்கழி மாத குளிரிலும் அவன் நெற்றி வியர்த்து, வியர்வை காதோரம் ஒழுகிக் கொண்டிருந்தது. அதை அவன் கருத்தில் கொள்ளாமல் அந்த குகையையே பார்த்துக்கொண்டு இருந்தான்.

“என்ன பூசாரி… அது வரும் இல்லயா? போன அமாவாசை அது இந்த எடத்துல தான வந்துச்சு ? நல்லா ஞாபகப்படுத்தி சொல்லு…”

“ஆமாங்க ஐய்யா…இங்க தான் வந்துச்சு. நல்லா ஞாபகம் இருக்கு. அந்த குகைக்குள்ள தான் போச்சு…சரியா பண்ணிரெண்டு மணிக்கு வந்துச்சு… இன்னும் பதினஞ்சு நிமிஷம் தான் இருக்கு… அது வரும் கண்டிப்பா..”

வெற்றிலையை அதக்கிக் கொண்டு தீர்க்கமாக சொன்னான் பூசாரி. பல்லில் வெற்றிலைக்கறை அப்பி இருந்தது. வெற்றிலை சிவப்பில் பல்லும், உதடும் ஒரே நிறத்தில் இருந்தது.

“அத என்னான்னு சொல்லுவாங்கன்னு சொன்னே?”

” ‘பரமசிவம்’ன்னு சொல்லுவாங்க ஐய்யா… ஊர்வன இனத்துல புழுவா பொறக்கற இந்த உசுரு பறப்பன இனத்துக்கு மாறும். அதுக்கு ஆயிரம் வருசம் ஆகும்னு சொல்லுது சுவடிகள்.”

“அப்போ ஆயிரம் வருசத்துக்கு மேலயா வாழும் அது?”

“அப்படி தான் சொல்லுது ஏடுகள். சிவனோட கழுத்துல… தொண்டக்குழில இருக்கற விசம் மாதிரியே இதுங்க கிட்டயும் விசம் இருக்கறதாவும், அத ஆயிரம் வருசமா உபயோகப்படுத்தாம பத்தரமா பாதுகாத்து வெச்சுருக்கறதாவும், அதனால தான் அத ‘பரமசிவம்’னு சொல்றதாவும் சொல்லுது ஏடுகள். சில செய்முறைகள் செஞ்சா, அந்த விசம் மனித குலத்துக்கு உபயோகப்படுமாம்”

“அப்படி இல்லாம அந்த விசத்த உபயோகிச்சுருச்சுன்னா என்ன ஆகும்? எதுக்கு அந்த விசத்த உபயோகிக்கும்?”

“உபயோக்கும் தருவாயில் அதோட விசேச சத்திகளை எல்லம் இழந்து, ஒரு சாதாரண புழு போலவே வாழ்ந்து அதுக்குரிய ஆயுட்காலம் முடிஞ்சதும் செத்துப்போய்டும் என்றும், தற்காப்புக்காக விசத்தை உபயோகிக்கும் என்றும், படைக்கப்பட்ட இந்த வகை பல ஆயிரம் புழுக்களில் ஒன்றோ, இரண்டோ மட்டுமே இந்த அபூர்வ சக்தி பெறும் என்றும் குறிக்கப்பட்டு இருக்குங்க..” தலையை ஆட்டி கண்களை உருட்டி பேசிவிட்டு ‘ப்புளூச்’ என்று எச்சிலை துப்பினான். பக்கத்தில் இருந்த அந்த பச்சை செடி வெற்றிலை எச்சிலை விழுங்கிக்கொண்டு சிவந்து போனது.

“ஊர்வன இனத்துல இருக்கும் நல்ல பாம்பே ஆயிரம் வருசத்துக்கு அப்புறம் பறக்கற இச்சாதாரி பாம்பா மாறிடும் கூட சொல்றாங்கலேப்பா… அது கூட தான் விரும்புற மாதிரி உருவத்தையும் மாத்திக்குமாமே.. அது தானா இது…? இல்ல இது வேறயா?”

“அது தான் இதுன்னு இந்த ஏட்டுல எதும் சொல்லப்படலேங்கய்யா… இச்சாதாரி, மாணிக்க கல்ல கக்கும்னும், அதோட வெளிச்சத்துல இரை தேடும்னும், அந்த கல்லு பல கோடி மதிப்புடையதாவும் சொல்லுவாங்க.. ஒரு சில ஏடுகள் இச்சாதாரியும், பரமசிவமும் ஒன்னு தான்னு சொல்லுது… ஆனா இந்த ஏடு பரமசிவம் ஒரு புழுவா உருவெடுத்து கொஞ்சம் கொஞ்சமா வளந்து ஆயிரம் வருசத்துல பத்து அடி ஆய்ரும்னு சொல்லி இருக்கு. அதோட சேந்து அதோட விசத்தன்மையும் வளருமாம்.
அதும் இல்லாம இது போல இருக்கற பெருங்காட்டுல மட்டுமே இது வாழும்னும், ஆயிரம் வருசத்துக்கு அப்புறம் கொஞ்சம் கொஞ்சமா இறக்கைகள் வளரும்னும்..
இறக்கை வளர வளர ஒடம்பு சிறுத்துப் போய். மறுபடியும் இது புழு மாதிரியே சிறுத்துப்போய் அழிஞ்சு போயிடுமாம். சில சித்தர்கள் இதப் பாத்து இருக்காங்கலாம். அதுல ஒரு சித்தர் எழுதுன சுவடி தான் நான் படிச்சது…”

‘ஓ…சரி சரி… இன்னும் பத்து நிமிஷம் தான் இருக்கு… பத்தடில பறந்து வரப்போற அத பாக்க முடியுமா இந்த இருட்டுல?”

“ஒரு உருவம் போற மாதிரி இருக்கும். சத்தம் கேக்கும். ஒரு சத்தம் குடுத்துட்டே வரும். அத வெச்சு தெரிஞ்ச்சுக்கலாம்ங்க. இது புழுவா இருக்கும் போது மேல தெரியாத பட்டுடோம்னா பட்ட அந்த எடம் மரத்துப்போன மாதிரி மாறிடுமாம்… தீண்டுன நாள்ல இருந்து ஒடம்பு முடியாம போய் அந்த உசுரு எந்த வைத்தியத்துக்கும் கட்டுப்படாம பதினேழு நாள்ல செத்துப்போகும்னும், அதவிட பலம் குறைவான உசுருகள அதோட விசத்தை கொண்டு தாக்காதுன்னும் சொல்லுது சுவடி..”

ஏதோ ஒன்று புதர்கள் மத்தியில் ஓடி ஒழிந்துகொண்டதைப் பார்த்தான் பேய்க்காமன். கையில் இருந்த டார்ச்சை அடித்துப் பார்த்தான். ஒரு எலி… பெரிய எலி…அட… “பெருச்சான் போல இருக்குது” என்றான்.

“டார்ச் போடாதீங்க ஐய்யா… அதுக்கு நாம நிக்கறது தெருஞ்சற போகுது. அப்புறம் வம்பாப் போய்டும்”

நேரம் பன்னிரெண்டை தொட இன்னும் நான்கு நிமிடமே இருந்தது.

“என்ன பூசாரி… அம்மாக்கு அந்த மருந்த போட்டா சரி ஆய்டும் இல்ல? இதுக்கு தான் இவ்வளவு கஷ்டப்பட்டுட்டு இருக்கோம்.”

“கண்டிப்பா சரியா போய்டும்ய்யா… போன மாசம் இந்த மருந்தத் தான் சந்தனக்கோட்டை ஜமீன்தாருக்கு கொடுத்தேன். பட்டுனு சரி ஆய்ருச்சு பாருங்க… ரெண்டு நாள் தான்.. ஆளே மாறிப் போய்டாரில்ல.. பழைய மிடுக்கு வந்துருச்சுன்னு எல்லாரும் சொல்றாங்க… இது தான்ய்யா மூளைச்சாவுக்கு (BRAIN DEATH) சரியான மருந்து.”

மணியைப் பார்த்தான் பேய்க்காமன். அது 11:58ஐக் காட்டியது… “இன்னும் ரெண்டு நிமிசம் தான் இருக்கு பூசாரி.”

“கவனமா பாக்கணும்ய்யா… இந்த குகைல இருக்கற அந்த அச்சுப்பாறைல அது கண்டிப்பா வந்து உக்காரும். அதுல தான நாம செம்மண்ணையும், கரிசல் மண்ணையும் கலந்து போட்டுருக்கோம். அதுட்ட இருக்கற விசம் தொடர்ந்து முப்பத்தந்சு நாளு அதோட ஒடம்புல இருந்தா அதுக்கே உயிர் போயிடுமாம். அதனால அத இந்த பாறைல கக்கி சரியா மூணு மணி நேரம் முடிஞ்சு விழுங்கிட்டு போய்டும். அதோட விசம் அந்த மண்ணுல பட்டா போதும்… மண்ணு பச்ச நெறத்துல மாறிப் போகும். அத நாலு மணி நேரத்துல கொண்டு போய் தேன்ல கலந்து வெச்சு பதமா சூடு செஞ்சு ஆறு வேளை சோத்துக்கு முன்னாடி சாப்பிடணும். அப்புறம் ரெண்டெ நாள் தான். அம்மா நடமாட ஆரம்பிச்சுருவாங்க பாருங்க… சித்தர்கள் சொல்லிவெச்சுட்டுப் போனது அத்தனையும் உண்மை. இதுவர நான் படிச்சு அதுல சொன்னது மாதிரி செஞ்சு தோல்வில முடிஞ்சதே இல்ல. இப்போ என்ட்ட இருக்கற சுவடில இல்லாத மருத்துவமே இல்லய்யா… எந்த எடத்துலெ… எந்த முறைலன்னு எல்லா விஷயமும் அப்படியே இருக்கு. சித்தர்கள் எல்லாம் மேலயும் தெய்வப் பார்வை இருந்தது அப்பட்டமான உண்மை தான்ய்யா…”

பூசாரியின் பேச்சு பேய்க்காமனுக்கு நம்பிக்கையை கொடுத்து இருக்கவேண்டும். உருண்ட விழிகளை ஆட்டி பூசாரி சொல்வதற்க்கு “ஆமாம்…ஆமாம்..” என்றான்.

“…”

“அந்த ஏடு எங்கே இருந்து கெடச்சுது உனக்கு. இப்போ இருந்தா காட்டு பாக்கலாம். வேற எதுக்கெல்லாம் மருந்து இருக்குன்னு தெரிஞ்சுக்கலாம்?”

“அது எங்க பாட்டன் எனக்கு தந்தது. இப்படி பல ஏடுகள் நெறைய பேர்ட்ட இருக்கு. இத வேற பரம்பரைல இருக்கற மனுசங்களுக்கு காட்டக்கூடாதுன்னு சத்தியம் செஞ்சுருக்கோம்ங்க… அப்படி வேறவங்க பாத்தா ரத்தம் கக்கி செத்துப்போவோம். இத எங்க சனம் எல்லாரும் நம்புவோம். அதுக்கு கட்டுப்பட்டும் இருப்போம்.”

மணி சரியாக பண்ணிரெண்டு.

அவர்கள் காத்துக் கொண்டிருந்த அந்த சம்பவம் நடந்தது.

இருட்டில் அந்த உருவம் சுமார் ஏழு அடியில் ராட்சத உருவத்தோடு பெரிய இறக்கைகளைக் கொண்டு பறந்து வந்தது. வரும் போது ஒரு வினோதமான சத்தமிட்டுக்கொண்டே வந்தது. அதைத் தொடர்ந்து பத்து நிமிடம் கேட்டால் காது கேக்காது என்று தோன்றியது பேய்க்காமனுக்கு. சிலையாகி நின்றுவிட்டான். அந்த சத்தத்துடன் அவர்கள் எதிர்பார்த்த குகைக்குள் நுழைந்தது. குகைக்குள் போனதும் சத்தம் நின்றுபோனது.

“வந்துடுச்சுய்யா… இது தான் பரமசிவம்… ஏட்டுல சொன்ன உசுரு இது தான்…”

“….”

“ஐய்யா….ஐய்யா…” பூசாரி இரண்டு முறை கூப்பிட்டும் பேய்க்காமனிடம் இருந்து பதில் இல்லை.

‘எங்கெ போனாரு இவரு..’ என்று நினைத்துக்கொண்டே பேய்க்காமன் நின்று கொண்டிருந்த இடத்தை திரும்பிப் பார்த்தான் பூசாரி. சிலையைப்போல அந்த குகையையே வெறித்துக் கொண்டிருந்தான் பேய்க்காமன்.

“ஐய்யா…ஆ…ஆ” தோளை தட்டி கூப்பிட்டான்.

எதையோ பார்த்து பயந்து கொண்டவன் சுயநினைவுக்கு வருவது போல விழித்து, திடுக்கிட்டு பூசாரியின் முகத்தையே பார்த்தான் பேய்க்காமன். கண்ணில் கலவரம் தெரிந்தது. உடம்பெல்லாம் சகதியாய் வியர்த்துப் போய்விட்டது.

“நான் பேசரது கேக்குதாங்கய்யா…” கொஞ்சம் சத்தமாக கேட்டான்.

பேய்க்காமனுக்கு கேட்டுருக்க வேண்டும்.. “கொஞ்ச நேரம் எதுமே கேக்கல பூசாரி. அதோட சத்தத்தக் கேட்டதும் எதோ உசுரே போய்ட்டு வந்தா மாதிரி இருக்கு…”

“ஆமாய்யா…நான் சொன்னேல்னல்ல…ஒரு சத்தம் குடுத்துட்டே வரும்னு… எனக்கு மொதல் தடவ கேக்கும் போது அப்படித்தான் இருந்துச்சு… ஒரு வேள பாத்த பிரமை தான் அதுன்னு நெனச்சுட்டேன்… உங்களுக்கும் அப்படித்தான் இருந்துச்சுங்களா…?”

“ஆமாய்யா…உனக்கு இப்ப அப்படி இல்லயா?”

“நான் அந்த சத்தம் வரத் தொடங்குனதுமே காத அடச்சுட்டேன். எதுக்கு வம்புன்னு…” என்றான் பல்லைக் காட்டிக்கொண்டு.

பேய்க்காமன் ஏதும் பேசாமல் குகையை நோக்கி கவனத்தை திருப்பினான். இருட்டில் ஒன்றும் சரியாய் தெரியவில்லை. மழை லேசாக தூறல் போடத் தொடங்கி இருந்தது.

“ச்சே…என்ன இது… இப்போ போய் மழை பேய ஆரம்பிச்சுருச்சே.. என்ன பண்ண பூசாரி… இந்த பாறைக்கு கீழயே உக்காருவோமா?”

“வேண்டாம்ங்க…அது வெளிய போனதும் போய் எடுத்துட்டுஒ புறப்படலாம்ங்க. அதோட தன்மை மூணு இல்ல நாலு மணி நேரத்துல கொறய ஆரம்பிச்சுரும். அதுக்குல்ல தேன்ல கலந்து சூடு பண்ணிடனும்.”

“இப்போ மழை வேற வந்துடுச்சே… தேன் இருக்கு… ஆனா வெரகு எல்லாம் நனஞ்சு போச்சே… எப்படி சூடு பண்ண?”

“எடுத்துட்டு வீட்டுக்கு போய்டலாம்ங்க..”

“சரி..சரி…”

மழை சட சட என்று கனமாய் வர தொடங்கி இருந்தது. மழையின் சத்தம் தவிர எதும் கேட்க முடியவில்லை இப்போது. பேய்க்காமனும், பூசாரியும் முழுவதுமாக நனைந்து போனார்கள். சரியாய் மூன்று மணி நேரம். அந்த ஜீவன் வெளியில் வந்தது. அதே காதைக் கிழிக்கும் சத்ததுடன் பறந்து போனது. பேய்க்காமன் இப்போது காதை மூடிக்கொண்டான்.

“பூசாரி…அது போய்ருச்சு. வா போய் பாக்கலாம்…”

“போலாம்ங்க. கவனமா இருக்கணும். பச்ச நெறத்துல மாறுன மண்ண எடுத்து தேனுல கலந்து சூடு பண்ற வர எக்காரணத்தக் கொண்டும் நம்ம கையில….ஆங்…ஆ.அ…ஆஆஆ…” பூசாரி தலைசுற்றி சரியத் தொடங்கினான்…

“என்ன ஆச்சு பூசாரி…என்ன ஆச்சு….பூசாரீய்ய்ய்….”

ஒரு நாகம் பூசாரியைத் தீண்டிவிட்டு வேகமாய் புதருக்குள் போய் மறைந்து போயிருந்தது. பூசாரியின் கண் விழிகள் நிலைத்துப்போய் உடலில் நீலம் பாய்ந்து வாய் நுரை தள்ளியிருந்தது. கொஞ்ச உயிரும் மெதுவாய் அடங்கி உயிரற்ற சடலமாகிப் போனான்.

பேய்க்காமன் நேரத்தை வீணாக்குவதில் பயனில்லை என்பதைப் புரிந்து கொண்டு வேகமாய் குகைக்குள் ஓடினான். பூசாரி சொன்னது போலவே கரிசல் மண்ணும், செம்மண்ணும் பச்சையாய் மாறிக் கிடந்தது. ஓடிச்சென்று தான் வைத்திருந்த பையில் இருந்து மழையில் நனையாது பாதுகாத்து வைத்திருந்த சிறிய பெட்டியை எடுத்தான். பெட்டியை திறந்து வைத்து வேகமாக இரண்டு கைகளாலும் பச்சை நிறமாய் மாறிப்போயிருந்த மண்ணை எடுத்துப் போட்டான்.

ஒரு கை மட்டுமே போட்டிருப்பான். உடல் சோர்வடைந்து போனது. கை கால்கள் எல்லாம் செயல் இழந்து போனது போலானது. தொண்டை கவ்வியது.

பேய்க்காமனுக்கு பூசாரி கடைசியாய் சொல்ல வந்து பாதியில் நிறுத்திய அந்த வாக்கியம் மனதில் ஓடியது ‘கவனமா இருக்கணும்… அந்த பச்ச நெறத்துல மாறுன மண்ண எடுத்து தேனுல கலந்து சூடு பண்ற வர எக்காரணத்தக் கொண்டும் நம்ம கையில…’

‘கையில… கையில…’

‘தொடக்கூடாதுன்னு சொல்ல வந்தானோ…?’

பேய்க்காமன் உடல் நீலம் பாய தொடங்கியது. வாயில் நுரை தள்ளி கொஞ்சம் கொஞ்சமாய் நினைவு நின்று போனது.

Print Friendly, PDF & Email

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *