(1983ல் வெளியான நாவல், ஸ்கேன் செய்யப்பட்ட படக்கோப்பிலிருந்து எளிதாக படிக்கக்கூடிய உரையாக மாற்றியுள்ளோம்)
அத்தியாயம் 1-3 | அத்தியாயம் 4-6 | அத்தியாயம் 7-9
அத்தியாயம்-4
41வது மாடியில் தனது இருப்பிடத்தில் உட்கார்ந்து சுருட்டு ஒன்றைப் புகைத்தபடி, மதுவையும் சேர்த்துச் சுவைத்துக் கொண்டிருந்தான் ஆல்பர்ட். அவன் மனம் ஆழ்ந்த சிந்தனையுள் ஈடுபட்டிருந்தது. அவன் துன்பத்துடன் இருந்தான்.
‘எல்லாம் திட்டப்படி நடந்துவருகின்றன. சங்கர்லாலைக் கொல்லுவதில் ஒரு சிறு தவறுகூட நடக்கக் கூடாது. அதற்காகத்தான் ஜங்கிள் ஜானைத் தேர்ந்தெடுத்தேன். அந்தோணி, ஜங்கிள் ஜானைச் சுட்டுத் தீர்த்து விட்டான். நாளை இரவு உண்மையிலேயே சங்கர்லாலைத் தீர்த்துக்கட்டப் போகிறான். ஆயுள் முழுவதும் நான் வேறு குற்றங்களைச் செய்யத் தேவை இல்லை. அவ்வளவு பணம் இதில் கிடைக்கும்’ என்று. இப்படி ஆல்பர்ட் எண்ணினான்.
ஆனால் –
அவன் மனத்தில் ஏதோ துன்பம் மெல்லப் படர்ந்தது.
எங்கேயாவது ஒரு சிறு தவறு நடந்தாலும் ஆல்பர்ட்டும் அவன் கூட்டமும் பிடிபடுவார்கள். பிடிபடுவதோடு தூக்குமேடைக்குப் போக வேண்டியது வேறு வரும். இந்தத் துன்பம்தான், அவன் மனத்தில் மெல்லப் படர்ந்த அந்தத் துன்பம்!
நேரம் ஓடியது.
திடீரென்று ஆல்பர்ட்டின் அறையில் இருந்த தொலைபேசி அலறியது, காரோட்டி பேசினான் : “நம் கார்க்கூடத்துக்கு நாங்கள் திரும்பி வந்துவிட்டோம். உடனே உங்களைப் பார்க்க வேண்டும்.”
“உடனே வா” என்றான் ஆல்பர்ட்.
கொஞ்ச நேரத்தில் காரோட்டி வந்தான். அவன் உள்ளே வந்ததும், “என்ன நடந்தது?” என்று கேட்டான் ஆல்பர்ட். ‘பிணத்தை ஒரு கூடையில் வைத்துக் கடலில் தள்ளிவிட்டோம். ஆனால் நாங்கள் திரும்பும்போது இரண்டு போலீஸ்காரர்கள் ஐயத்துடன் எங்களை மடக்கினார்கள். ஓடிவந்துவிட்டோம்.”
“கார் என்ன ஆயிற்று!”
“காரைக் கொண்டு வந்து விட்டோம். டோனி, காரின் எண்களை மாற்றுகிறான்.”
“போலீசார் உங்களை மீண்டும் பார்த்தால் அடையாளம் கண்டு கொள்வார்களா?”
“முடியாது என்றுதான் எண்ணுகிறேன். நாங்கள் இருவரும் ஓவர்கோட் அணிந்திருந்தோம். காலரை இழுத்து முகத்தில் பாதியளவு மறைக்கும்படி விட்டுக் கொண்டிருந்தோம். தொப்பி நெற்றிவரை மறைத்துக் கொண்டிருந்தது. ஆகையால் அந்தப் போலீஸ்காரர்கள் எங்களை அடையாளம் கண்டு கொண்டிருக்க முடியாது.”
“நீ போகலாம். நடந்ததை மறந்துவிடு.”
“ஆகட்டும்.”
காரோட்டி போகவில்லை. நின்றான். தயங்கினான்.
“என்ன வேண்டும்?”
“ஓர் ஐயம்”.
“கேள்.”
“சங்கர்லால் கோலத்தில் ஜங்கிள்ஜான் வந்தான். அவனை அந்தோணி சுட்டுவிட்டான். அதற்கு மாறாக ஒரு வேளை ஜங்கிள்ஜான் அந்தோணியைச் சுட்டிவிட்டிருந்தால் என்ன நடந்திருக்கும்?”
“இப்போது ஜங்கிள்ஜான் பிணத்தைக் கடலில் போட்டீர்கள் இல்லையா? அதற்குப் பதில் அந்தோணியின் பிணத்தை நீங்கள் கடலில் போடும்படி ஆகியிருக்கும். உங்கள் கார்கள் இரண்டையும் தொடர்ந்துவர வேறொரு மனிதனை அனுப்பி இருந்தேன். அவன் அந்தோணியின் பிணத்தை எடுத்துக் கொண்டு வந்திருப்பான்!”
“அப்படியானால் சங்கர்லாலைச் சுடும் திட்டம் என்ன ஆகியிருக்கும்?”
“அந்தோணிக்குப் பதிலாக ஜங்கிள்ஜானை ஏற்பாடு செய்திருப்பேன்!”
காரோட்டியின் உடல் இதைக் கேட்டதும் மெல்ல நடுங்கியது!
அவன், பேசவில்லை, திரும்பினான். வந்த வழியே நடந்தான். மறைந்தான்!
அத்தியாயம்-5
மெய்யாக, சங்கர்லால் பயணம் செய்துவந்த விமானம் நியூயார்க் கென்னடி விமான நிலையத்தைத் தொட்டது. தொட்டபோது, சங்கர்லால் தூங்கிவிட்டார். கொஞ்சம் தூங்கியே விட்டார். விமானம் நின்றது. அதன் ஓசை அடங்கியது. அப்புறம்தான் அவர் கண்களைத் திறந்தார். பார்த்தார்.
விமானப் பணிப்பெண், தூங்கிவிட்ட சங்கர்லாலை எழுப்புவதாக அவர் பக்கத்தில் வந்தான்.
வந்து அவர் முகத்துக்குப் பக்கத்தில் தன் முகத்தை நீட்டினாள். நீட்டியபடி அவரை எழுப்ப எண்ணிய விமான பணிப்பெண், அவர் தன் கண்களைத் திறந்து கொண்டதைப் பார்த்தாள். பார்த்ததும், “விழித்துக் கொண்டீர்களா? விமான நிலையம் வந்துவிட்டது” என்றாள் அந்த அழகு.
“நன்றி” என்றார் சங்கர்லால்.
அவர் இடுப்பைக் கட்டியிருந்த பெல்ட்டை அவர் அவிழ்க்க முயன்றார். அப்போது அவளே அதை அவிழ்த்துவிட்டாள். சங்கர்லால் எழுந்தார். தன் கைப் பெட்டியுடன் நடந்தார்.
விமானத்திலிருந்து எல்லாரும் இறங்கிக் கொண்டிருந்தார்கள். அந்த மிகப் பெரிய ஜெட் விமானத்தில் இரண்டு வழிகள் இருந்தன. அதனால் எல்லாரும் விரைந்து இறங்க முடிந்தது. இறங்கினார்கள்.
சங்கர்லால், தான் எதற்காக நியூயார்க் வந்தோம் என்பதை நினைவுபடுத்திக் கொண்டார்.
ஒரு கிழவி, எழுபது வயதானவள். விதவை. பெரும் பணக்காரி. அவள் சங்கர்லாலை உடனே புறப்பட்டு வரும்படி மின் செய்தி கொடுத்திருந்தாள். வயதான ஒரு கிழவி தன் உதவியைக் கேட்டதும் சங்கர்லாலுக்கு அவள் மீது இரக்கம் ஏற்பட்டது. அதனால் அந்தக் கிழவிக்கு எப்படிப்பட்ட ஆபத்து ஏற்பட்டாலும் அதைத் தவிடுபொடியாக்க வேண்டும் என்று அவர் முடிவு கொண்டார். உடனே புறப்பட்டு வந்துவிட்டார்!
அந்தக் கிழவியின் பெயர் பமேலா. பல கோடி பணக்காரி. அவள் தெளிவாகச் செய்தி அனுப்பியிருந்தாள். சங்கர்லால் எந்த விமானத்தில் வரவேண்டும் என்றும், அவர் வந்ததும் நியூயார்க்கில் அவருக்காக ரோல்ஸ்ராய்ஸ் கார் ஒன்று காத்திருக்கும் என்றும் செய்தி கொடுத்திருந்தாள். செய்தி சுருக்கமாக இருந்தது. ஆனால் தெளிவாக இருந்தது. செய்தி கிடைத்த ஒரு மணி நேரத்திற்குள் அவர் கையில் விமான டிக்கெட் வந்து சேர்ந்தது. சங்கர்லால் உறுதியுடன் வருவார் என்ற முழு நம்பிக்கையுடன் டிக்கெட் எடுத்து அனுப்பியிருந்த அந்தக் கிழவியை அவர் ஏமாற்ற விரும்பவில்லை.
ஆகையால், இந்திராவிடம் அவர், துப்பறியும் நிபுணர்கள் மகாநாடு ஒன்றில் கலந்து கொள்ளப் பாரிஸ் நகரத்துக்குப் போவதாகப் பொய் சொல்லிவிட்டுப் புறப்பட்டு விட்டார். சங்கர்லால் நியூயார்க் நகரத்துக்குப் போகிறார் என்பது தெரிந்திருந்தால் அவள் ஒரு நாளும் அவரை அனுமதித்திருக்க மாட்டாள். டோக்கியோவிலிருந்து சங்கர்லால் அடிக்கடி மற்ற நாடுகளுக்குப் போய் வருவதை இந்திரா விரும்பவில்லை. என்றாலும், அவளால் தடுக்க முடியவில்லையே!
விமானத்திலிருந்து இறங்கியதும், சங்கர்லால் சுங்கப் பொறுப்பாளர்களைக் கடந்து கைப்பெட்டியுடன் வெளியே வந்தார். ஆயிரக் கணக்கில் கார்கள் நின்று கொண்டிருந்தன. அவற்றிலே ரோல்ஸ்ராய்ஸ் கார் ஒன்று. அமெரிக்கப் பணக்காரர்களில் ரோல்ஸ்ராய்ஸ் கார் வைத்திருப்பவர்கள் குறைவு. அமெரிக்கர்கள், அமெரிக்கக் கார்களைத்தாம் மிக விரும்பி வாங்குவார்கள். நாட்டுப்பற்று. ஜெர்மனியில் உற்பத்தியாகும் ரோல்ஸ்ராய்ஸ் கார்களை ஒரு சிலர் தாம் வைத்திருந்தார்கள்.
சங்கர்லால், ரோல்ஸ்ராய்ஸ் காரைப் பார்த்தார். நடந்தார்.
ரோல்ஸ்ராய்ஸ் காரின் அருகே ஓர் அழகிய பெண் நின்று கொண்டிருந்தாள். அவள் மிக அழகாக இருந்தாள். அவள் ஸ்கர்ட்டும் சட்டையும் அணிந்திருந்தாள். அவள் தலையில் தொப்பி இருந்தது. பெண் காரோட்டிகள் மேல் நாடுகளில் அணியும் வட்டமான தொப்பி அது.
அவள், சங்கர்லாலைக் கண்டதும் தொப்பியைக் கழற்றிக் கழுத்தை வளைத்து, “நீங்கள் மிஸ்டர் சங்கர்லால்தானே!” என்று சொல்லிக் கொண்டே காரின் கதவைத் திறந்து விட்டாள்
சங்கர்லால், தன் தலையை ஆட்டிக் கொண்டே கைப்பெட்டியை உள்ளே வைத்தார். வைத்துவிட்டுக் காரில் உட்கார்ந்தார். அவள் கதவைச் சாத்தினாள். சாத்திவிட்டு முன்னால் விரைந்து போனாள். போய் உட்கார்ந்தாள்.
காரைக் கிளப்பும் முன் அவள் திரும்பிப் பார்த்து, “சங்கர்லால், பயணத்தினால் நீங்கள் களைப்பாக இருக்கிறீர்கள். களைப்பு நீங்க ஏதாவது நீங்கள் பருக வேண்டுமென்றால் காரில் இருக்கும் பிரிஜ்ஜிலிருந்து எடுத்துச் சாப்பிடலாமே!” என்றாள்.
சங்கர்லாலுக்கு முன்னால், முன் சீட்டுக்குப் பின்னால் ஒரு பிரிஜ் மறைந்திருந்தது. அதன் கதவை அவள் திறந்தாள். உள்ளே வகைவகையான மதுப் புட்டிகள் இருந்தன. அவற்றைத் தவிர, ஒரு சில கோகோ கோலா புட்டிகளும் இருந்தன.
சங்கர்லால் பிரிஜ்ஜை மூடினார்.
“என்ன ஒன்றும் சாப்பிடவில்லையா” என்றாள்.
“எனக்குத் தேநீர்தான் பிடிக்கும். மற்ற எதுவும் பிடிக்காது” என்றார் சங்கர்லால்.
கார் புறப்பட்டது. அவள், சிரித்துக் கொண்டே காரை மிகவும் திறமையுடன் ஓட்டினாள்.
சங்கர்லால், கவனத்துடன் காருக்குள் இருந்தவற்றைப் பார்த்தார். அந்தக் கார், ஏர்கண்டிஷன் செய்யப்பட்டிருந்தது. இப்போது இரவில் வெளியே கொஞ்சம் குளிர். அதனால் ஏர்கண்டிஷன் இயங்கவில்லை. கார்க் கதவுகள் திறந்திருந்தன. பிரிஜ்ஜுக்குப் பக்கத்தில் ஒரு பை தொங்கியது. அதில் படிப்பதற்குச் சிற்சிலப் புத்தகங்களும் பத்திரிகைகளும் இருந்தன. பக்கவாட்டில், ஒரு தொலைபேசி இருந்தது. அந்த வானொலித் தொலைபேசியில் எப்போது வேண்டுமானாலும் எவருடன் வேண்டுமானாலும் பேசலாம். ஒரு சின்ன டெலிவிஷன் இருந்தது. ஒரு வானொலிப் பெட்டி இருந்தது. ஒரு காரிற்குள் இவ்வளவு வாய்ப்புகள் இருக்குமா?
சங்கர்லால் கார் புறப்பட்ட அதே நேரம் –
அதே நேரத்தில், அந்தோணி விமான நிலையத்திலிருந்து சங்கர்லால் வந்த காரைத் தொடர்ந்தான். தொடர்ந்து வந்தான்.
மீண்டும் ரோல்ஸ்ராய்ஸ்!
மீண்டும் ஒரு வோல்கா!
கடிகாரத்தைப் பார்த்து நேரத்தைக் கணக்கிட்டபடி வோல்காவில் சங்கர்லாலைத் தொடர்ந்து வந்து கொண்டிருந்தான் அந்தோணி.
வரிசையாகப் பல கார்கள் அவர்களுக்கு முன்னாலும் பின்னாலும் போய்க் கொண்டிருந்தன. இதனால் அந்தோணி சங்கர்லாலைத் தொடர்ந்து போவது எவருக்கும் தெரியாது. சங்கர்லாலுக்கு ஐயம் ஏற்படாது.
ரோல்ஸ்ராய்ஸ் கார், கொலை செய்யப்பட வேண்டிய திருப்பத்தை அடைய இன்னும் இரண்டு நிமிடங்களே இருந்தன!
‘திருப்பத்தில் நேற்றைப் போலவே சிவப்பு விளக்கு எரியும். ரோல்ராய்ஸ் கார் நிற்கும். நின்றதும் அடுத்து பச்சை விளக்கு வரும். அந்த நேரத்தில் அதைக் கடந்து போவதைப் போல் போய்ச் சங்கர்லாலைத் தீர்த்துக் கட்ட வேண்டும். சுட்டுவிட்டுப் பறந்துவிட வேண்டும்’ இப்படி எண்ணினான் அந்தோணி.
அவனுக்கு இப்போது எல்லாமே எளிதாக இருந்தன. வாய்ப்பாக இருந்தன!
வழக்கமாகத் திருப்பத்தை அடைவதற்கு முன்பே போக்குவரத்தில் திடீரென்று எதிர்பாராத ஒரு மாற்றம். வழியில் இரண்டு போலீஸ் வேன்கள் சாலையை மறைத்துக் கொண்டு நின்றன. இரண்டு போலீஸ்காரர்கள், கார்களை வேறு பக்கமாகத் திருப்பிவிட்டுக் கொண்டிருந்தார்கள்.
சங்கர்லாலின் காரை ஓட்டி வந்த பெண், காரை வலப்பக்கம் திருப்புவதா இடப்பக்கம் திருப்புவதா என்று சிந்தித்தாள்.
சிந்தனையுடன், “வழியில் என்ன ஆகிவிட்டது?” என்று ஒரு போலீஸ்காரனிடம் கேட்டாள்.
“வழியில் ஒரு விபத்து. இரண்டு கார்கள் மோதிக் கொண்டன. அவற்றை அகற்றக் குறைந்தது அரைமணி நேரம் ஆகும். இப்படியே போ” என்று வலப்பக்கம் தன் கையைக் காட்டினான் போலீஸ்காரன்!
அவள், காரை வலப்பக்கம் திருப்பினாள்.
ரோல்ஸ்ராய்ஸின் பின்னாலே வந்த வோல்காவைப் போலீஸ்காரன் நிறுத்தினான்.
“நீ இடப்பக்கம் போ. எல்லாக் கார்களும் ஒரே பக்கம் போனால் மீண்டும் நெரிசல் ஏற்படும்” என்றான்.
அந்தோணி, போலீஸ்காரனை மனத்தில் திட்டியபடி வேறு வழியில் காரை இடப்பக்கம் சந்தில் திரும்பினான்.
இனிமேல் சங்கர்லால் காரைத் தொடர்ந்து சென்றால் சங்கர்லாலுக்கு ஐயம் வருமோ என்ற அச்சம் அந்தோணிக்கு வந்தது!
சங்கர்லாலின் கார், இப்போது வேறு திக்கில் சந்து பொந்துகளில் புகுந்து போய்க் கொண்டிருந்தது. அது மீண்டும் ஒரு பெரிய சாலையை அடைவதற்குள் அதைப் பிடித்துவிட வேண்டும் என்று அந்தோணி பேயைப் போல் காரைச் செலுத்தினான். எதிர்பாராமல் ஏற்பட்ட இந்த மாறுதல், அவன் மனத்தில் குழப்பத்தை ஏற்படுத்திவிட்டது!
மீண்டும் சங்கர்லால் கார் எந்தப் பக்கம் வந்து பெரிய சாலையுடன் இணையும் என்று அந்தோணி கணக்குப் போட்டான். கணக்குப் போட்டபடி காரை ஓட்டினான்.
சங்கர்லால் செல்லும் காரைக் கண்டுபிடித்து விட்டால், எப்படியாவது அவரைக் கொன்றுவிடலாம் என்று எண்ணினான்.
அவன் தலைதெறிக்கக் காரை ஒட்டிக் கொண்டிருந்த போது ஒரு மோட்டார் சைக்கிள் வந்தது. மிக விரைந்து வந்தது. அதை ஓட்டி வந்தவன் மிக விரைவாக வந்து கொண்டிருந்தான். அது வோல்கா காரை நோக்கி மிக விரைந்து வந்ததால், அதை ஓட்டி வந்தவன் மதுவை அளவுக்கு மேல் குடித்திருக்க வேண்டும் என்று அந்தோணி எண்ணினான். அதனால் மோட்டார் சைக்கிள் தன் வோல்காவின் மீது மோதாமல் இருக்கத் திடீரென்று அவன் சாலையின் குறுக்கே திருப்பினான். திருப்பியபோது –
மிகப் பெரிய லாரி ஒன்று வந்து வோல்கா காரின் மீது மோதியது!
மறு விநாடி!
வோல்கா கார் அப்பளம் போல் நொறுங்கியது! அந்தோணி, காரிலிருந்து வெளியே தூக்கி எறியப்பட்டான்!
காரிலிருந்து வெளியே தூக்கி எறியப்பட்ட அந்தோணி, பெல்ல எழுந்தான். அவனுக்குத் தலையைச் சுற்றுவதைப் போல் இருந்தது.
அவன் உடலில் சில இடங்களில் இரத்தம் கொட்டியது. அவன் கொஞ்சம் சமாளித்துக் கொண்டான். சமாளித்துக் கொண்டு விரைந்து எழுந்தான். விரைந்து கொஞ்சத் தொலைவு நடந்தான். அப்போது அவன் பக்கத்தில் ஒரு கார் வந்து நின்றது. அந்தக் காரின் கதவு திறந்தது.
“ஏறிக்கொள்” என்றான் அந்தக் காரின் காரோட்டி.
அந்தோணி, அந்தக் காருக்குள் ஏறினான்.
விழுந்தான். மடனே கதவு மூடிக் கொண்டது. கார் புறப்பட்டது. மறைந்தது!
விபத்து நடந்த இடத்தில் பெரும் கூட்டம்!
தப்பிப் போன அந்தோணியை எவரும் பார்க்கவில்லை! போலீஸ்காரர்கள் சைரனை ஊதியபடி விரைந்து வந்து கொண்டிருந்தனர்!
அத்தியாயம்-6
சுற்றி வளைத்துக் கொண்டு எப்படியெல்லாமோ திருப்பி ஒரு வழியாக மீண்டும் பெரிய சாலையை அடைந்த ரோல்ஸ்ராய்ஸ், ஒரே விரைவுடன் ஓடியது. அமைதியுடன் ஓடியது. பிறகு அது ஆரவாரம் மிகுந்த அஸ்டோரியா ஒட்டலின் எல்லைக்குள் நுழைந்தது. அதன் வாயிலில் நின்றது. வெள்ளை யூனிபாரம் அணிந்த ஓட்டல் பணியாள் ஒருவன் விரைந்து வந்தான். வந்து சங்கர்லால் இறங்குவதற்குக் காரின் கதவைத் திறந்து விட்டான்.
காரை ஓட்டி வந்த பெண், சங்கர்லாலைப் பார்த்தாள். திரும்பிப் பார்த்தாள்.
“நீங்கள் தங்க இந்த ஓட்டலில் தான் ஏற்பாடு செய்யப்பட்டிருக்கிறது. முப்பதாவது மாடியில் ஒரு பெரிய அறை உங்களுக்காக ஒதுக்கப்பட்டிருக்கிறது. உலகத்திலுள்ள பெரும் பணக்காரர்களும் மன்னர்களும் அரசியல் தலைவர்களும் வந்து தங்கும் மிக ஆரவாரமான ஓட்டல் இது. இங்கே அமைதி இருக்கும். எல்லா வாய்ப்புகளும் இருக்கும்” என்று சிரித்துக் கொண்டே சொன்னாள் அவள்!
சங்கர்லால் கைப் பெட்டியுடன் இறங்கினார். ஓட்டல் பணியாள் வந்து அந்தக் கைப் பெட்டியை வாங்கிக் கொண்டான்.
காரை ஓட்டி வந்த அந்தப் பெண், காரை விட்டு இறங்கி மிகவும் அடக்கத்துடன் நின்று கொண்டிருந்தாள்.
“நாளைக் காலையில் சரியாக எட்டு மணிக்கு வந்து உங்களை அழைத்துப் போகிறேன். சரிதானே?” என்றாள் அவள்.
“ஆகட்டும்.”
“நான் வருகிறேன்”
“கொஞ்சம் நில்”
அவள் நின்றாள்.
“உன் பெயர் என்ன?”
“மர்லின்”
“நீ போகலாம்.”
சங்கர்லால் ஓட்டலுக்குள் நுழைந்தார். சங்கர்லால் உள்ளே சென்றதும், அவள் மெல்லச் சிரித்தாள். திரும்பினாள். காரில் ஏறினாள். ஏறிப் புறப்பட்டாள்.
சங்கர்லால் ஓட்டலில் கூடத்தில் இருந்த வரவேற்பாளரிடம் போய்த் தன் பெயர் சங்கர்லால் என்றும், தனக்காக இந்த ஓட்டலில் ஓர் அறை பதிவு செய்யப்பட்டிருப்பதாகவும் சொன்னார்.
வரவேற்பாளர் வியப்புடன் அவரைப் பார்த்தார்.
“என்ன! நீங்களா சங்கர்லால்! வாருங்கள். முப்பதாவது மாடியில் உங்களுக்கு அறை ஒதுக்கப்பட்டிருக்கிறது. அந்த அறையிலிருந்து பார்த்தால் நியூயார்க் நகரம் முழுவதும் தெரியும்!” என்றார்.
சங்கர்லால் சிரித்துக் கொண்டே லிப்ட் இருந்த இடத்தை நோக்கி நடந்தார். ஓட்டல் பணியாள், அவர் அறையின் சாவியை வாங்கிக் கொண்டு அவருடன் நடந்தான்.
லிப்டில் இருவரும் ஏறினார்கள். ஏறிச் சென்றார்கள். ஒரு சில விநாடிகளில் லிப்ட் முப்பதாவது மாடியை அடைந்தது. விரைந்து செல்லும் லிப்ட். நியூயார்க்கில் எல்லாமே மிக விரைந்து இயங்கின!
சங்கர்லாலுக்கு ஒதுக்கப்பட்டிருந்த அறை மிகவும் பெரிதாக இருந்தது. மிக வனப்புள்ளது. அறைக்குள் அறைகள் இருந்தன. மொத்தம் மூன்று அறைகளைக் கொண்ட பெரிய அறை அது. வரவேற்பு அறை. படுக்கை அறை. குளிக்கும் அறை. வரவேற்பு அறையில் வண்ண டெலிவிஷன். தொலைபேசி, ஆரவாரமான சோபா செட். சுவரில் பிக்காஸோ வரைந்த இரண்டு ஓவியங்கள்!
ஓட்டல் பணியாள் உள்ளே பெட்டியை வைத்துவிட்டு, அறையின் சாவியை மேசை மீது வைத்தான்.
பிறகு அவன், “உங்களுக்கு என்ன வேண்டும் என்றாலும் தொலைபேசியில் தொடர்பு கொள்ளுங்கள். தொடர்பு கொண்டு சொன்னால் போதும். நீங்கள் விரும்பியனவெல்லாம் உடனே வரும். மணியடிக்கும் விசையை அமுக்கினால் ஓட்டல் பையன் ஓடி வருவான்” என்றான்.
“நன்றி. நீ போகலாம். ஓட்டல் பையனிடம் ஒரு தேநீர் கொண்டு வரும்படி சொல்” என்றார் சங்கர்லால்.
“ஆகட்டும்” என்று பணிவுடன் சொல்லிவிட்டுப் பணியாள் போய்விட்டான். கொஞ்ச நேரத்தில் ஓட்டல் பையன் தேநீர் கொண்டு வந்தான். கொண்டு வந்து கொடுத்துவிட்டு அவன் போய் விட்டான்.
சங்கர்லால் தேநீரைப் பருகினார். உடைகளை மாற்றினார். படுக்கச் சென்றார்.
காலையில் எட்டு மணிக்கு மர்லின், ரோல்ஸ்ராய்ஸைக் கொண்டு வருவாள். அதற்குள் கொஞ்ச நேரம் அவர் தூங்க விரும்பினார்.
அவர் கட்டிலில் படுத்தார். படுத்துப் போர்வையை இழுத்துப் போர்த்தினார். போர்த்தியபோது-
தொலைபேசி மணியடித்தது!
எவராக இருக்கும்? நியூயார்க் நகரத்துக்கு வந்ததும் வராததுமாகத் தொலைபேசியில் அழைப்பது யார்?
சங்கர்லால் எழுந்தார். எழுந்து போய்க் கூடத்திலிருந்த தொலைபேசியை எடுத்தார்.
ஒரு பெண்ணின் இனிய குரல் கேட்டது.
‘”சங்கர்லால்?”
”யாரது?”
“மர்லின்”
“என்ன மர்லின்?”
“உங்களுடன் நான் உடனே பேச வேண்டும். உங்களை உடனே நேரில் நான் பார்க்க வேண்டும்.”
“என்ன சொல்லு?”
“தொலைபேசியில் சொல்ல முடியாது. இப்போது நான் ஒரு பெரிய ஆபத்தில் சிக்கியிருக்கிறேன்”
“என்ன ஆயிற்று?’ எங்கிருந்து நீ பேசுகிறாய்?”
“பொதுத் தொலைபேசியிலிருந்து நான் பேசுகிறேன். நீங்கள் ஓட்டலில் கீழே வந்து நில்லுங்கள். காரைக் கொண்டு வருகிறேன். ஐந்து நிமிடங்களில் வருகிறேன்” என்று சொல்லிவிட்டுத் தொலைபேசியை வைத்துவிட்டாள் மர்லின்.
சங்கர்லால் தன் கடிகாரத்தைப் பார்த்தார்.
மர்லின் அவரை விட்டு விட்டுச் சென்று சரியாக நாற்பது நிமிடங்களே ஆகின்றன. நாற்பது நிமிடங்களுக்குள் அவள் பமேலாவின் மாளிகைக்குச் சென்றிருக்க முடியாது. பமேலா, நியூயார்க் நகரின் எல்லையிலே கோடியில் ஒரு தனி இடத்தில் ஒரு பெரிய மாளிகையில் இருக்கிறாள். அந்த மாளிகையை அடையக் குறைந்தது ஒரு மணி நேரமாவது பிடிக்கும்!
அப்படியானால், வழியில் ஏதோ நடந்திருக்க வேண்டும்! மர்லின் திரும்பி வந்து உடனே சங்கர்லாலை அழைத்துப் போகும்படி அதற்குள் அப்படி என்ன நடந்து விட்டது?
சங்கர்லால் விரைந்தார். விரைந்து உடைகளை மாற்றினார். தலையை வாரி விட்டுக் கொண்டார். கழுத்துப்பட்டையைத் தளர்த்தியாக அணிந்து கொண்டார். ஓசை எழுப்பாத இரப்பர் ஷூக்களை அணிந்து கொண்டார். விரைந்தார். வெளியே வந்தார். லிப்டில் இறங்கினார். ஓட்டலுக்கு வெளியே வந்தார். நின்றார். அப்போது –
ரோல்ஸ்ராய்ஸ் கார் வந்தது. நின்றது.
அவர், காரில் ஏறினார். உட்கார்ந்தார். மர்லின், காரைச் செலுத்தினாள். விரைவாகச் செலுத்தினாள். கார் பறந்தது!
அவள் முகம் பேயைக் கண்டதைப் போல் இருந்தது. அவள் முகத்தில் வியர்வைத் துளிகள் அரும்பின. நின்றன. வழிந்தன! ‘என்ன நடந்தது மர்லின்? சொல்லு?’
“நடக்கக் கூடாதது நடந்துவிட்டது. உண்மை தெரிந்தால் என் வேலையே போய்விடும்!”
“சொல்லு, என்ன சொல்லு?”
“இந்தக் காருக்குள் ஒரு பிணம் இருக்கிறது!”
இப்படிச் சொல்லிவிட்டு மர்லின், சரக்கென்று காரை நிறுத்தினாள்.
சங்கர்லாலுக்கே ஷாக்!
– தொடரும்…
– நியூயார்க்கில் சங்கர்லால் (நாவல்), முதல் பதிப்பு: 1983, மணிமேகலைப் பிரசுரம், சென்னை.