நடிகையின் மரணம்…..!

0
கதையாசிரியர்:
கதைத்தொகுப்பு: கிரைம்
கதைப்பதிவு: October 3, 2017
பார்வையிட்டோர்: 14,283 
 

‘கொலையா தற்கொலையா ? ‘ தலையைப் பிய்த்துக் கொண்டார் – இன்ஸ்பெக்டர்  சந்திரசேகரன்.

பத்தடுக்கு மாளிகை. கீழே பூமி அதலபாதாளம். சொத்தென்று விழுந்திருக்கிறாள்.

விழுந்தவள் ராஜஸ்ரீ. பெரிய நடிகை. சமீபத்தில் தேசிய விருது வாங்கியவள். நம்பர் ஒன் நடிகை. பத்து வருடங்களாக இவள் இடத்தை எவராலும் எட்டிப் பிடிக்க முடியாத உயரம். கோலவுட், பாலிவுட் என்று இந்தியாவில் எங்கும் கொடி. ஹாலிவுட்டிலும் இவள் கால் பதிப்பு. இரண்டு படங்கள் முடித்து மூன்றாவதைத்  தொடுகிறாள்.  இன்னும் கொஞ்சம் நாட்கள் உயிரோடிருந்தால் உலகத்தில் இந்தியா தெரிந்திருக்கும். நடிப்பாற்றலால் தெரிய வைத்திருப்பாள். துரதிர்ஷ்டம் பத்து நாட்களுக்கு முன் அகால மரணம்.

சட்ட சபையில் எதிர்க்கட்சத் தலைவர் கேள்வி மேல் கேள்வி கேட்டு முதலமைச்சரைத் திணறடிக்க….அவர் உள்துறை அமைச்சரை  டோஸ்விட. உள்துறை, தனக்குக் கீழ் உள்ள பெரிய போலீஸ் அதிகாரியைப் பேச……. அது படிப்படியாய்க் கீழே வந்து நேற்று டி.எஸ்.பி… சந்திரசேகரனை அழைத்து, ‘இன்னும் கண்டுபிடிக்காம என்னய்யா புடுங்கறே ? | பதவி, அதிகாரத்தில்…. கீழே உள்ளவர்களை என்ன வேண்டுமானாலும் கேட்கலாம் என்கிற இளக்காரத்தில் வாயில் வந்தபடி கேட்க….பெருத்த அவமானம்.! நடிகையைப் போல இவரும் எங்கேயாவது விழுந்து செத்திருக்கலாம். இல்லை… தூக்கு மாட்டி தொங்கி இருக்கலாம். மனைவி மக்கள் கண்ணில் நிழலாடினார்கள்.

‘சரி அந்தந்த நாய்களை  மேலிட நாய்கள் குரைத்து… கடைசி நம்மை கடித்திருக்கிறது. மேலிடத்தை அதைவிட மேலிடம் கடிக்கும்!’ என்ற நினைப்பில் மனதை மாற்றி……

“சீக்கிரம் குற்றவாளியைக் கண்டுபிடிச்சு கேசை முடிக்கிறேன் சார்.”

விரைப்பாய் சலியூட் அடித்தார்.

அதற்கும் அவர் கடுகடுப்பு மாறாமல், “இதுல ஒன்னும் கொறைச்சலில்லை.. போ!” துரத்தினார்.

‘எந்தவித ஆதாரம், அத்தாட்சி சிக்காமல் என்ன செய்வது, எப்படி முடிப்பது?| யோசனையில்தான் அவருக்கு இது கொலையா, தற்கொலையா ? மறுபடியும் சந்தேகம், குழப்பம்.

சினிமா உலகில் கொடிகட்டி பறந்தவள். சின்ன வயது. போட்டி, பொறாமை, வஞ்சம,; பெண் விசயம் எல்லாம் மலிந்த தொழில். இதில் எதை நூல் பிடித்துக் கொண்டு செல்வது ? – யோசனையில் ஆழ்ந்தார். இறுதியாய் ஒரு முடிவிற்கு வந்து…..

சந்திரசேகரன் மறுபடியும் ஒரு முறை அந்த உயரமான கட்டிட உச்சிக்கும் அவள் விழுந்து கிடந்த இடத்திற்கும் விஜயம் செய்தார்.  அங்குலம் அங்குலமாக ஆராய்ந்தார்… ஒன்றுகூட கண்ணில் பட வில்லை. கையில் சிக்கவில்லை. கண்ணில் பட்டால்தானே கையில் சிக்கும் ?! மோப்ப நாய்கள் வரைவழைத்துப் பார்த்தும் முதல் நாள்  போலவே இன்றைக்கும் அவைகள்; சிறிது தூரம் ஓடி….. ~அட! போடா…!| நின்றது. தினமும் அவைகளுக்கு ஆட்டுக்கறி, மாட்டுக்கறி, சோறு, பராமரிப்பு எல்லாம் வீண். அவள் விழுந்;த இடத்தைச் சுற்றி வரைந்த சாக்பீஸ் கோடு உருவம்,  ரத்தம் இன்னும் சரிவரக் கலையாமல் இருக்க… அதையே ஒரு நிமிடம் உற்றுப் பார்த்துவிட்டு……

‘கணவன் மனைவிக்குள் ஏதூவது ஊடலா ?’ – எட்டாவது மாடியிலுள்ள அவள் வீட்டு கதவைத் தட்டினார்.

கதவிலுள்ள லென்ஸ் வழியே வெளியில் நிற்பவரைப் பார்த்த அவள் கணவன் கணேஷ்…. சட்டென்று முகத்தில் ஏகப்பட்ட சோகத்தைத் தேக்கி கதவு திறந்தான்.

“உங்களை விசாரிக்கனும்…”

“அன்னைக்கே விசாரிச்சீங்களே…!?”

“மறுபடியும் விசாரிக்கனும்…”

“வாங்க….” கதவு திறந்து விட்டான்.

அவன் சோபாவில் அமர… இவர் எதிரில் அமர்ந்தார். அப்போதுதானே…..எதிரி முகத்தைப் பார்;க்க முடியும், படிக்க முடியும்!

“உங்களுக்குள் ஏதாவது சண்டையா?”

“இல்லே.”

“தொழில் முறையில் பகை ?”

“கெடையாது.”

“இந்த கட்டிடத்துல எதிரிங்க?

“யாரும் இல்லே.”

“இங்கே உங்க மனைவிக்கு வேண்டப்படாத ஆண், பெண் ?”

“அப்படி யாரும் கெடையாது. அவள் வீட்ல இருக்கிறதே அபூர்வம். எதிரிக்கு வேலையே கெடையாது.”

“வீட்டைச் சோதனைப் போடலாமா ?”

“தாராளமா எத்தனை முறை வேணுமின்னாலும் போடலாம்.”

அவள் புழங்கியது, புழங்காதது….. அங்குலம் அங்குலமாக அலசி எடுத்தார். எதுவும் சிக்கவில்லை. சுவரில் அம்மணக்குண்டியாய் ஐந்து வயது பெண் குழந்தை புகைப்படம் கண்ணில் பட்டது.

“இது யார் கணேஷ் ?”

“என் மனைவிதான் ராஜஸ்ரீ!”

பளிச்சென்று சந்திரசேகரன் மூளைக்குள் மின்னல்.

வீட்டிற்கு வந்தார். இரவு முழுக்க…. நெட்டில் இந்திய ‘பலான’ படங்கள் மொத்தத்தையும் தேடித் தேடிப் பார்த்தார். கணணியில் அதிகமாய் வைரஸ் (அழுக்கு) ஏறியதுதான் மிச்சம். இவர் எதிர்பார்த்தது இல்லை.

காலை காவல் நிலையம் வந்தார்.

“கண்ணாயிரம் ?” அழைத்தார்.

“யெஸ் சார் !” ஏட்டு அவர் எதிரில் வந்தார்.

“நீங்க ‘பலான’ படம் பார்த்திருக்கீங்களா ?”

கேட்டவருக்கு அதிர்வு. “சார்ர்ர்ர்…!!” சின்ன அலறலாய்த் துணுக்குற்றார்.

“தப்பாக் கேட்கலை. பார்க்கிறது சகஜம்., அந்தரங்கம். எனக்கு அதுல ஒரு பாயிண்ட் வேணும் அதுக்காகத்தான் கேட்டேன்.”

“என்ன பாயிண்ட் சார் ?”

“நடிக்க வர்ற பொண்ணு, பொம்பளைங்களை அப்படி இப்படி பேசி ஏமாத்தி…அந்தப் படத்துல நடிக்க வைச்சு காசு பார்க்கிற கும்பல் இருக்கு. ஆரம்பத்துல ராஜஸ்ரீயும் அப்படி ஏதாவது ஒரு வம்புல மாட்டி இருப்பாங்களோ  சந்தேகம்.”

“அதுக்கும் அவுங்க இறப்புக்கும் என்ன சார்  சம்பந்தம். ?”

“இப்போ ராஜஸ்ரீ உச்சத்துல இருக்கிறதுனால அதோட நகலை வைச்சு எவனாது மிரட்டலாம்.” கோடு போட்டார்.

ஏட்டு ரோடு போட்டுக் கொண்டார்.

“நான் பார்த்த வகையில் இவுங்களை நான் பார்க்கலை சார்.”

“எனக்கும் சிக்கலை. எதுக்கும் இங்கே உள்ள சி.டி கடைகள்ல அப்படிப்பட்ட சி.டிக்களை அள்ளி வாங்க. நீங்க போனா போலீசுன்னு பயந்து கொடுக்க மாட்டாங்க. யாரையாவது விட்டு வாங்கி வாங்க.”

“சரி சார்.” வெளியேறினார்;.

அவர் எல்லா இடங்களிலும் ஆள் விட்டு அலைந்து  இருபது சிடிக்களை மாலை கொண்டு வந்து இவர் கையில் கொடுத்தார்.

நேற்று போல் இன்றும் சந்திரசேகரன் கண்விழிப்பு. நெட்டில் பார்த்த  அதே குப்பைகள், கண்றாவிகள். கடைசி சிடியில்….இவர் எதிர்பார்த்தது இருந்தது. முகம் மலர்ந்தது. அவளோடு இருந்தவன்…. இப்போது கதாநாயகன்.

காலை பணிக்கு வந்ததும் முதல் வேலையாக அவன் அலுவலகத்திற்குத் தொலை பேசி செய்தார். அங்கு விபரம் கேட்டு ஆளைப் பிடித்தார். அவன் காதில் கமுக்கமாய் வியத்தைச் சொல்லி  ரகசியமான ஒரு இடத்தில் ஆளை இருத்தி சிடியை ஓட விட்டார்.

பார்த்த சிவா வேர்த்தான்.

“எப்படி ?” சந்திரசேகரன் அவன் முகத்தை ஆராய்ந்தார்.

“இ…இது வாய்ப்புக் கேட்டு அலைஞ்ச ஆரம்பம்…சார். அ….ஆனா……”

“சொல்லுங்க ?”

“எங்களுக்குப் பேர், புகழ் வர ஆரம்பிச்சதும்…. இதையெல்லாம்  தேடி வாங்கி மொத்தமா அழிச்சாச்சு. ஒன்னு மட்டும் எப்படியோ……தப்பிருக்கு.”

“இதை வைச்சி யாராவது நடிகையை மிரட்டி இருப்பாங்களா?”

“அப்படி இருக்க வாய்ப்பில்லே. அதனாலதான் நாங்க நெட் வரை போய் இதெல்லாம் இல்லாம அழிச்சோம்.  இது தப்பிருக்கு.”

“இது ராஜஸ்ரீ புருசனுக்குத் தெரியுமா ?”

“தெரியாது. தெரிய வாய்ப்பில்லே. தெரிவிக்கலைன்னும் ராஜஸ்ரீயே சொல்லி இருக்காங்க.”

“புருசன் பொண்டாட்டி அன்னியோன்யமா ?”

“அன்னியோன்யம். சந்தேகமில்லே.”

“உங்களுக்குள்ளே மறுபடியும் இந்த உறவு…?”

“இதெல்லாம் பழங்கதை சார்.”

“இவுங்களுக்குப் பெரிய பெரிய இடத்திலிருந்தெல்லாம் பாலியல் தொந்தரவு ?”

“ஆரம்பத்துல இருந்துது சார். பேர் புகழ் வர ஆரம்பிச்சதும் கொஞ்சம் குறைவு. அதுக்கப்புறம்….அவுங்க நிழலை மிதிக்கவே எல்லாருக்கும் அச்சம்.”

“அப்போ… எதுக்காக அவுங்க சாகனும், தற்கொலை செய்திருக்கனும்….?”

“எனக்கும் அதுதான் சார் குழப்பம். ஆனா மாடிக்கு எதுக்காகவோ போய் தவறி விழுந்திருக்கலாம் சார்.”

“ராஜஸ்ரீக்குத் தண்ணி அடிக்கிறப் பழக்கம் உண்டா ?”

“கெடையாது. கவுச்சிக்கூட சாப்பிடாத அளவுக்கு ரொம்ப சுத்தம்.”

“கடைசியாய் ஒரு கேள்வி. இதன் தயாரிப்பாளர் தெரியுமா ?”

“தெரியும் சார்.”

பெயரைச் சொன்னான்.

சந்திரசேகரனுக்கு அதிர்ச்சியாய் இருந்தது.

“சரி நீங்க போங்க.” அனுப்பினார்.

அப்படியே வீட்டிற்கு வந்து கண்களை மூடினார்.

இவர் உருவம் மறுபடியும் ராஜஸ்ரீ வீட்டு கதவைத் தட்டியது. கணேஷ்தான் திறந்தான்.

“கணேஷ் ! நீதான் உங்க மனைவியைக் கொலை செய்திருக்கீங்க.”

“பொய்! அபாண்டம்!.” அவன் அலறினான்.

“இல்லே….அவுங்க பலான படத்துல நடிச்சது உங்களுக்குத் தெரிஞ்சிருக்கு. அவமானம் கேட்டிருக்கீ;ங்க. ரெண்டு பேருக்கும் மாடியில வாக்குவாதம். ஆளைத் தொடாம கத்தியைக்காட்டி மிரட்டி நகர்த்தி சாய வைச்சு ஆளை முடிச்சிருக்கீங்க ?”

“இல்லே இல்லே….” அவன் கத்தினான்.

இவர் கண் விழித்தார்.

‘இப்படி ஒரு அப்பாவி மேல் பொய்யாய், புளுகாய்ப் பழியைச் சுமத்தி இந்த விசாரணை வழக்கிலிருந்து விடுதலை ஆகலாம். தன்னுடைய துன்பம், தொந்தரவிற்காக  ஒரு  நிரபராதியை இப்படி தண்டிப்பது, தண்டனைக்கு அனுப்பவது எப்படி சரி ?’ – யோசனை வந்து குழப்பியது.             ~அப்படி செய்வதை விட… அதையே இப்படி செய்தாலென்ன ?| – குறுக்கு யோசனை உள்ளே புகுந்தது. புரட்டிப் புரட்டி யோசித்து அலசினார்.

‘மேலிடம் எப்படி முடிவு செய்தாலும் தான் அப்படியே தொடர்வது!’ துணிந்தார்.

டி.எஸ்.பியிடம் சென்றார்.

“சார். ராஜஸ்ரீ சாவுக்குக் காரணம் இந்த பலான சிடி. இதைத் தயாரித்தவர் முன்னாள் சினிமா தயாரிப்பாளரான இந்நாள் உள் துறை அமைச்சர். கேசை  தற்கொலைன்னு முடிக்கவா, தொடரவா ?” கேட்டு அவர் முகத்தைப் பார்த்தார்.

டி.எஸ்.பி அதிர்ச்சியில் உறைந்தார். நெற்றியில் கை வைத்து கவிழ்ந்தார்.

Print Friendly, PDF & Email

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *