நடக்கும் என்பேன், நடக்கும்!

0
கதையாசிரியர்:
கதைத்தொகுப்பு: கிரைம்
கதைப்பதிவு: December 14, 2022
பார்வையிட்டோர்: 8,625 
 

போன வருஷ அக்டோபரில் என்னை உங்களுக்குத் தெரியாது. நான் அப்போது பிரபலமே இல்லை. பெட்டிக் கடையில் சிகரெட்டை வாங்கிப் பற்ற வைத்தால், யாரும் கைகாட்டிப் பேசிக் கொண்டதில்லை. நானே காசு கொடுத்து எடுத்துக் கொண்டபோது கூட என்னை ஒழுங்காய் யாரும் புகைப்படம் எடுத்ததில்லை.

இப்போது என்னடாவென்றால் பேப்பரைப் புரட்டினால் நான் சிரித்துக் கொண்டிருக்கிறேன். வாக்கிங் போனால், அடடா, நீங்க நடந்து வாக்கிங் போலாமா?” என்று காரில் அள்ளிப் போட்டுக்கொண்டு ட்ராப் செய்கிறார்கள். எங்கள் பத்திரிகையில் ஒரு தொடர் கட்டுரை எழுத முடியுமா என்று ஒரு வாராமாக ஒரு நிருபர் வந்து கேட்டுக் கொண்டிருக்கிறார். டெலிவிஷன்காரர்கள் ஒரு ப்ரோக்ராம் செய்ய தேதி கேட்கிறார்கள். மதுரையில் ரசிகர் மன்றம் துவங்கியிருப்பதாக ரோஸ் கலரில் நோட்டீஸ் அனுப்பி அன்னதானத்திற்கு நிதியுதவி கேட்கிறார்கள். என்னை வைத்து நான்கு டாக்டர்கள் ஆராய்ச்சி செய்து கொண்டிருக்கிறார்கள்.

திடீரென்னு நான் ஒரு அதிசய மனிதனாக, அபூர்வ பிறவியாக மாறிவிட்டேன்.

உங்களுக்கு ஈ.எஸ்.பி. என்றால் தெரியுமா! எக்ஸ்ட்ரா சென்சரி பெர்ஸப்ஷன்!

என் பெயர் வைத்தீஸ்வரன். பிறந்தவுடன் முகம் தெரியாத என் அப்பா அந்தப் பெயரைச் சூட்டி ஒரு முத்தம் கொடுத்துவிட்டு, அதே வேகத்தில் எங்கள் விட்டுக்கு பால் ஊற்ற வந்தவளுக்கும் ஒன்ற கொடுத்து அம்மாவை அம்போவென்ற விட்டுவிட்டு அவளோடு ஓடிப் போய்விட்டார்.

ஆஸ் யூஷுவல் என் அம்மா என்னை வளர்த்து, பத்துப் பாத்திரம் தேய்த்து, பள்ளிக்கு அனுப்பி, எட்செட்ரா, ஒருநாள் மாலை என் மடியில் படுத்துக் கொண்டு, “நீ கல்யாணம் செய்துகிட்டா கடைசி வரைக்கும் உன் பொண்டாட்டியை கண் கலங்காம காப்பத்தணும்ப்பா” என்று சொல்லி நான் சரியென்று தலையாட்டு முன் செத்துப்போய் விட்டாள்.

நான் பட்டணம் வந்தது. ரிக்ஷா ஓட்டியது, போஸ்ட்டர் ஓட்டியது. காதலித்து அவள் கல்யாணத்துக்குச் சென்று பரிசளித்துவிட்டு சுட்டு விரலால் ஒற்றைத் துளிக் கண்ணீரைச் சுண்டிவிட்டு நடந்தது. பத்திரிகை ஆபீசில் புரூஃப் திருத்தம் வேலையில் சேர்ந்தது… இதெல்லாம் இந்தக் கதைக்கு அவசியமில்லை. (இதுவே நாவல் என்றால் ரொம்ப அவசியம் – கோல்! கோல்! சேம் சைட் கோல்!)

ஈ.எஸ்.பி. பற்றி பேசிக் கொண்டிருந்தோமில்லையா? அதாவது சிக்கல் செய்யாமல் சொல்வதானால் நடக்கப் போவதை முன்கூட்டியே உணரும் சக்தி!

அந்த சக்தி எனக்குள் ஆரம்பத்தில் ரொம்ப லேசாகத்தான் சுரக்கத் துவங்கியது.

ஜானகிராமன் என்று எனக்கு ஒரு அறை நண்பன். படு கஞ்சன். தீர்ந்து போன பேஸ்ட் ட்யூபுகளை எல்லா அறைகளிலும் கலெக்ட் செய்து, நசுக்கி நசுக்கி பத்து நாள் ஓட்டி விடுவான்.

அவனிடம்தான் முதலில் நான் இந்த மாதிரி என்ற விபரமாகச் சொன்னேன். மெடிட்டேஷன் செய்தால் சரியாய்ப் போய்விடும் என்று இதை ஏதோ வரக்கூடாத வியாதி போல வைத்தியம் சொன்னான். மனப்பிரமை , டிப்ரஷன் என்று என்னைக் குழப்பினான்.

“நாளைக்குக் காலைல நம்ம ராயர் மெஸ்ல என்ன டிபன். சொல்லு பார்க்கலாம். அப்ப உன் சக்தியை ஒப்புக்கறேன்.” என்றான் சவால் போல.

“முட்டாள்! நானா ஒரு விஷயத்தை யூகிக்க முடியலைடா. ஆனா திடீர்னு என் மனசுல ஒரு மின்னலா யூகம் வருது. அது அப்படியே நடக்குது” என்றேன்.

“நிரூபி” என்றான்.

“அடுத்த தடவை அப்படி ஃப்ளாஷ் வர்றப்ப சொல்றேன்.” என்றேன்.

ஒரு ஞாயிற்றுக்கிழமையில் அவனுடைய பைக்கில் அலங்கார் தியேட்டருக்குப் போய்க் கொண்டிருந்தபோது மொண்ட்ரோட்டில் எங்களுக்கு முன்னால் ஒரு பைக்கில் கணவனும், பட்டுப் புடவை கட்டின அவன் மனைவியும் சென்று கொண்டிருந்தார்கள். நான் சொன்னேன். “ஜானகி, அந்த பொண்ணுக்கு வலது தொடையில ஒரு மச்சம் இருக்குதுன்னு எனக்குத் தெரியுது.”

“பாவி! நீ எப்படா பார்த்தே ?”

“சேச்சே! அவளை நான் இதுக்கு முன்னாடி பார்த்ததில்லை.”

“பின்னே எப்படி?”

“மைகாட்! அந்த பைக் சக்கரத்தின் அவ புடவை சிக்கப் போகுது.”

“உளறாதே தலைப்பை இழுத்து இடுப்புல செருகியிருக்கா பாரு. அப்புறம் எப்படிச் சிக்கும்?” என்ற அவன் கேட்டு முடிப்பதற்குள் இடுப்புச் செருகல் தானாக நழுவி, எதிர்காற்றில் தலைப்பு பறந்து, அவள் அதை அவசரமாகப் பிடிக்க, அது தணிந்து ஆனால் முனை பின் சக்கரத்தில் சிக்கி, அய்யோ என்ற அலறிக்கொண்டு கீழே விழுந்தாள்.

சற்றுத் தள்ளிச் சென்றுதான் அவனால் பைக்கை நிறுத்த முடிந்தது.

அதற்குள் பைக்கோடு இழுத்து வரப்பட்ட அவளின் சேலை, உள் பாவாடை எல்லாம் அங்கங்கே கிழிந்து போக…

அவள் வலது தொடையில் மச்சம்!

அன்றைக்கு ராத்திரி தன் கைகளின் முடிகள் எல்லாம் விறைத்து கொண்டு நிற்க, ஜானகிராமனுக்கு தூக்கமே வரவில்லை.

“எப்படிடா கரெக்டாச் சொன்னே?” என்று நூறு தரம் கேட்டான். “திடீர்னு தோணிச்சுடா” என்றேன்.

“இன்னும் கொஞ்சம் முன்னாடியே நீ சொல்லியிருந்த அந்த இக்கட்டிலேர்ந்து அவங்களைக் காப்பாத்தியிருக்க முடியோமான்னு தோணுது.”

“ம்கூம். நடக்கப்போறதைத்தான் நான் உணர்றேன். இதுவரைக்கும் எனக்கு மனசுல தோண்ணதெல்லாம் அப்படியே நடந்திருக்கு” என்றேன்.

இப்படியாகப் பல சம்பவங்கள். திடீரென்று என்னை பிரபலமாக்கிய பெருமை இந்தியா – இங்கிலாந்து கிரிக்கெட் டெஸ்ட் மேட்ச்தான்.

சென்னையில் அதன் டெஸ்ட் மேட்ச் துவங்க நான்கு தினங்கள் இருந்தபோது, என் மனதில் டெஸ்ட் மேட்ச் முடிந்த பிறகு உள்ள ஸ்கோர் போர்டையே படிக்க முடிந்தது அன்று

கிடுகிடுவென்று பேப்பர், பேனா எடுத்து எழுதத் துவங்கினேன். எந்த ஆட்டக்காரர் எத்தனை ரன், எந்த பவுலர் எத்தனை விக்கெட், மொத்த ரன்கள், வெற்றி, தோல்வி அத்தனையும் எழுதினேன். ஜானகிராமனிடம் காட்டினேன்.

“நமக்குள்ளே பொழுது போக்கா விளையாடிக்கிட்டது போதும். உன் சக்தியை ஊர், உலகம் தெரிஞ்சுக்க வைக்கணும். அதை நான் செய்யறேன்” என்ற ஜானகிராமன் என் சார்பாக ஒரு பத்திரிகையாளர்கள் சந்திப்பை ஒரு ஹோட்டலின் மொட்டை மாடியில் ஏற்பாடு செய்தான்.

என் முந்தைய அனுமானங்கள் நிகழ்ந்ததைச் சொல்லி, நான் எழுதி வைத்த ஸ்கோர் விபரங்களைப் பிரதியெடுத்து எல்லோருக்கும் விநியோகித்து, நிச்சயமாக ஒரு இம்மி மாற்றமும் இல்லாமல் ஆட்டத்தின் போக்கு அமையும் என்றான்.

இருபத்தி எட்டு பத்திரிகைகளில் இருந்து வந்த நிருபர்களில், என் விஷயத்தைப் பொருட்டாக மதித்தது இரண்டே பேர்தான் – தங்கள் இதழ்களில் செய்தி வெளியிட்டு, ஸ்கோர் விபரங்களையும் வெளியிட்டிருந்தார்கள்.

டெஸ்ட் மேட்ச் முடிந்தது. என் அனுமானத்தில் தப்பேதும் இல்லை. உடனே பத்திரிகையாளர்கள் என் வீட்டிற்குப் படையெடுத்தார்கள்.

அன்றைக்கு முதல் என் புகழ் கன்னா பின்னாவென்று பரவி வருகிறது. அரசியல்வாதிகள் கார் போட்டுக் கொண்டு வந்து தேர்தலில் ஜெயிப்பேனா என்று கேட்கத் துவங்கினார்கள்.

இஃது இவ்வாறு இருக்க,

நேற்று அதிகாலையில், கொசுக் கடியால் உறக்கம் கலைந்து புரண்டு படுத்த போது கதவிடுக்கின் வழியே நுழைக்கப்பட்டிருந்த செய்தித் தாளைப் பார்த்தேன்.

திடீரென்று என் மனதில் பேப்பரின் தலைப்புச் செய்தியைப் படிக்க முடிந்தது.

“அமைச்சர் பலராமன் உடல் தகனம்!”

செய்தித்தாளின் தேதி 19 என்றும் இருந்தது.

மேற்கொண்டு எதுவும் தெரியவில்லை. நான் விசுக்கென்று எழுந்து கொண்டேன். எழுந்து சென்று பேப்பரை எடுத்துப் பார்த்தேன். விமானம் வெடித்து விபத்து என்று வேறு தலைப்பு செய்தியிருந்தது. தேதி 17.

உடனே நான் உறங்கிக் கொண்டிருந்த ஜானகிராமனை எழுப்பி சேதி சொன்னதும், வழக்கம் போல சிலிர்த்தான்.

“இது சின்ன விஷயமில்லைப்பா. வா என்னோட” என்றான். நேற்று காலை பத்து மணிக்கெல்லாம் இருவரும் கமிஷனர் அலுவலகத்தில் இருந்தோம். விபரங்களைச் சொன்னதும், கடகடவென்று சிரித்தார்.

“இதெல்லாம் சும்மா குருட்டாம் போக்கில சொல்றது நான் நம்ப மாட்டேன்” என்றார்.

“சார், இதுவரைக்கும் என் யூகம் பொய்ச்சதில்லை. நாளன்னைக்கு காலைல பேப்பர்ல அப்படி ஒரு சேதி வரத்தான் போகுது. அதாவது நாளைக்கு ராத்திரிக்குள்ளே அவர் சாகத்தான் போறார்” என்றேன்.

ரொம்ப யோசனைக்குப் பிறகு எங்களை அழைத்துக் கொண்டு அமைச்சர் பலராமன் வீட்டுக்கு வந்தார் கமிஷனர்.

நான் சொன்னதுமே அவருக்கு மயக்கம் வந்து விட்டது. நடுங்கிப் போய் விட்டார் அமைச்சர்.

“கமிஷனர், இந்த தம்பியைப் பத்தி ஏற்கனவே பேப்பர்ல பல சேதிகள் படிச்சிருக்கேன். எனக்கு பயமா இருக்கு. நான் உடனே என் உடம்பை தரோவா செக் பண்ணிக்கறேன். எனக்கு பக்காவான பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்துடுங்க” என்றார் பதட்டத்துடன் அமைச்சர்.

“இதெல்லாம் ஏமாத்து வேலைன்னு உங்க விஷயத்தில் நிரூபிச்சிக்காமிக்கிறேன் சார். யோவ், வைத்தீஸ்வரன், நாளன்னைக்கு வரைக்கும் நானும் இந்த வீட்லதான் இருக்கப்போறேன். நீயும் இங்கேயேதான் இருந்தாகணும்” என்றார் கண்டிப்பாக கமிஷனர்.

டெலிபோனை எடுத்து விடுவிடுவென்று உத்தரவுகள் இட்டார். அப்பல்லோ மருத்துவமனைக்குப் புறப்பட்ட அமைச்சரைத் தடுத்து, டாக்டர்களை அவர் வீட்டுக்கு வரவழைத்து சோதனை செய்தார்.

அவர்கள் முழுமையாகப் பரிசோதித்துவிட்டு மிக ஆரோக்கியமாக இருப்பதாகச் சொன்னார்கள். எல்லா ஸ்பெஷலிஸ்ட்டுகளும் கொண்ட ஒரு டாக்டர்கள் டீமை பங்களாவின் ஒரு அறையில் தயாராய் வைத்தார்.

பங்களாவைச் சுற்றி ஆயுதமேந்திய போலீஸ், வயர்லெசுடன் மஃப்டி போலீஸ், வீட்டுக்குள்ளும் போலீஸ் என்று நபர்ளை இறைத்தார். குறிப்பிட்ட பிரபல பத்திரிகைகளின் நிருபர் குழுவை மற்றொரு அறையில் தங்க வைத்தார்.

மாடியில், குளிர் அறையில் அமைச்சர் பலராமன், கமிஷனர், நான் மூவர் மட்டுமே இருந்தோம்.

ஒவ்வொரு வேளை உணவையும் இவர் பூனைக்குப் போட்டு சோதித்து அதன் பிறகே அமைச்சரைச் சாப்பிட அனுமதித்தார். அமைச்சருக்கு புல்லட் புரூஃப் ஜாக்கெட் அணிவித்து, தனது ரிவால்வரை இடுப்பில் தயாராக வைத்துக் கொண்டு இருந்தார் கமிஷனர்.

இப்போது இன்றைக்கு மணி மாலை ஆறு. நேற்று முதல் சிறைக் கைதி மாதிரி நான் வந்து மாட்டிக் கொண்டேன்.

இன்னும் சில மணிநேரங்கள் போனால் இன்றைய தினம் முடிந்துவிடும். அதற்குள் ஏதாவது ஒரு வகையில் அமைச்சருக்கு மரணம் ஏற்படும் என்பது என் யூகமாய் இருந்தாலும், நேற்றிலிருந்து கமிஷனரின் ஏற்பாடுகளைப் பார்த்து வருவதில் இந்த முறை எனக்கே சற்று சந்தேகம் ஏற்பட்டிருக்கிறது.

“பேப்பர்ல அதுக்கப்புறம் உள்ள வரிகள் எதுவும் உன் மனசில படிக்கலையா மேன்?” என்றார் கமிஷனர் கிண்டலாக.

“சார், நான் ஒரே ஒரு வரி தலைப்புச் செய்தியை மட்டும் தான் மனசில படிச்சேன். கிண்டல் செய்யாதீங்க அமைச்சர் ரொம்ப நல்லவர்ன்னும் நிறைய நல்ல திட்டங்களைச் செயல்படுத்தி வந்தவர்ன்னும் எனக்கும் தெரியும். அவர் சாகணும்னு நான் ஆசைப்படுவேனா? ஒரு உயிர் என்ன சாதாரண விஷயமா? என் யூகசக்தி இந்த தடவை பொய்யாய்ப் போகணும்னுதான் நானும் மனசில் வேண்டிக்கிட்டிருக்கேன்’ என்றேன்.

திடீரென்னு என் மனதில் பேப்பரில் மற்றொரு செய்தி வரி ஓடியது.

“சார், சார்” என்று பரபரத்து என் யூகத்தைச் சொன்னேன்.

“நான்சென்ஸ்! இது நடக்கப் போறதில்லை. இந்த ரூம்ல என் ஒருத்தன்கிட்டேதான் துப்பாக்கி இருக்கு. நான் அவர் பாதுகாப்புக்காக வந்திருக்கேன். நானே அவரை சுடுவேனா?” என்ற கமிஷனர் தனது ரிவால்வரை எடுத்து அமைச்சரிடம் காட்டினார். “இந்தாங்க, இதை நீங்களே வச்சிங்க.”

அமைச்சர் ரிவால்வரை வாங்கி ஜிப்பாவை உயர்த்தி இடுப்பில் செருகிக் கொண்டார். வியர்த்த முகத்துடன்.

எட்டு மணியை நெருங்கிக் கொண்டிருந்தபோது, விட்டத்தில் இருந்து சொத் என்று ஒரு பல்லி அவர் தோளில் விழுந்து கீழே குதித்துப் போனதும், அசூசையுடன் பாத்ரூம் சென்று கழுவிக்கொள்ள எழுந்த அமைச்சரைத் தடுத்தார் கமிஷனர்.

“நான் பக்கெட்ல தண்ணியும், டவலும் கொண்டு வர்றேன். இங்கேயே துடைச்சுங்க” என்று கமிஷனர் சென்றதும், அமைச்சர் தன் ஜிப்பாவைக் கழற்றினார்.

அவரின் வெற்று மார்பில் சிவப்புத்தோலுக்கும் அதற்கும் வியாசர்பாடி மங்களம் என்று பொடி எழுத்துக்களில் பச்சை குத்தப்பட்டிருப்பதைத் தெளிவாக என்னால் படிக்க முடிந்தது. நான் எழுந்து அவர் அருகில் வந்து, “யார் சார் அது வியாசர்பாடி மங்களம்?” என்றேன்.

“அது பழைய கதை. என்னோட முதல் பொண்டாட்டி… அசிங்கமா இருப்பா. நாகரிகமே கிடையாது. சகிச்சுக்க முடியாம் ஓடி வந்துட்டேன் அவளை விட்டு” என்று அவர் சொல்லி முடிப்பதற்குள், இடுப்பில் செருகின ரிவால்வரை உருவினேன் நான்.

“உன்னைத்தாண்டா பாவி நான் இத்தனை வருஷமா தேடிட்டிருக்கேன். நான்தான் அந்த மங்களத்தோட மகன்” என்ற நான் முகத்திலேயே நன்கு குண்டுகளைச் செலவழித்தேன்.

தற்சமயம் மத்திய சிறைச்சாலையில் எனக்கு ஆயுளா, தூக்கா என்று யூகம் எதுவும் வந்து தொலைக்க மாட்டேனென்கிறது.

Print Friendly, PDF & Email

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *