அவன் தன்னை மிக சிறந்த ஜேப்படிக்காரன் மற்றும் திருடன் என்று நினைத்துக் கொண்டிருந்தான். ஒரு பெரியவரிடம் இவன் திறமை தோற்று போகும் வரை.
அன்று யாராவது சிக்குவார்களா என்று நின்று கொண்டிருந்த பொழுது !
பார்ப்பதற்கு அப்பாவியாய் தெரிந்தார். மெலிந்த தேகம், தீட்சையமான பார்வை, வயது ஐம்பதாவது இருக்கலாம். பஸ் ஏறுவதை பார்த்தான். அப்படியே கண் அவரது பாக்கெட்டை பார்க்க பாக்கெட் உப்பியிருந்ததை பார்த்தவனுக்கு அது நோட்டு கட்டுகள் என்பது இவனது எக்ஸ்ரே கண்களுக்கு தெரிந்தது.
“சரியான வேட்டை” என்று மனதுக்குள் நினைத்தவன் அவரை தொடர்ந்து பஸ் ஏறினான். அவரின் முதுகை ஒட்டி தள்ளிவிடுவது போல் ஏறினான். அவர் திரும்பி பார்த்தவர் சட்டென வழி விட்டு நீங்க முன்னாடி போங்க என்று வழி விட இவன் ஒரு நிமிஷம் தடுமாறினான். என்ன செய்யலாம் என்று நினைத்தவன் பரவாயில்லை நீங்க போங்க அவருக்கு நாசுக்காய் வழி விட்டான். பரவாயில்லை என்று ஒதுங்கி நின்றவர் செல் போனை எடுத்து ஹலோ பிரபாகரன் இருக்காரா? அவர் விசாரணையில இருக்கறாரா? அவர்கிட்டே போலீஸ் ஸ்டேசன்ல இருந்து வண்டிய எடுத்துட்டு வர சொல்லுங்க, ஆமா அடுத்த ஸ்டாப்பிங்கல் இறங்கி நிக்கறேன் சரியா? சொல்லிவிட்டு இவனை பார்க்க இவன் சத்தமில்லாமல் முன் பக்கம் நகர்ந்து நகர்ந்து அப்படியே அடுத்த ஸ்டாப்பிங் வரவும் சட்டென இறங்கி விட்டான். இறங்கி திரும்பி பார்த்தால் அந்த ஆள் பஸ்ஸில் எப்படியோ சீட் பிடித்து உட்கார்ந்து செல்வதை பார்த்தான். ராஸ்கல் கண்டுகிட்டு நம்மளை ஏமாத்திட்டான். மனதுக்குள் திட்டியவாறு நகர்ந்தான்.
அடுத்து எப்போது.?
ஒரு கல்யாண கூட்டத்துக்குள் நுழைந்து விட்டான். அடித்து பிடித்து யாருக்கும் சந்தேகம் வராதவாறு நடந்து மணமகன் அறைக்குள் நுழைந்து கிடைத்ததை சுருட்டலாம் என்று நுழைய போனான். எங்கிருந்து இந்த ஆள் வந்தார் என்று தெரியவில்லை. இவனது தோளை தட்டி வாங்க தம்பி, வாங்க சாப்பிட கூப்பிடறாங்க, நாசுக்காய் அவனை தள்ளிக்கொண்டு பந்தி பரிமாறும் இடத்தில் விட்டு விட்டு நகர்ந்து விட்டார். அவனை தனியாக கவனித்து அனுப்ப சொல்லி ஒருவனை ஏற்பாடு செய்ய அவன் தனியாக கூட்டி போய்…!
இரண்டு முறை அவரிடம் இவன் தோற்று போகவும் அவர் எங்கிருக்கிறார் என்று நோட்டமிட்டான். வசிக்கும் இட்த்தை பார்த்ததும் ஓரளவு வசதியானவர் என்று முடிவு செய்தான்.. வாரிசுகள் வெளி நாட்டில் சம்பாதித்து இவருக்கு பணம் அனுப்பி கொண்டிருக்கிறார்கள் இவர் தன் மனைவியுடன் மகிழ்ச்சியாக அனுபவித்து கொண்டிருக்கிறார்.
தினமும் அவர் வீட்டு வழியாக செல்ல ஆரம்பித்தான். அதிர்ஷ்டவசமாக இந்த வீட்டுக்கு வரும் வேலைக்காரர்கள் இவன் ஏரியாவில் இருந்து வருவது இவனுக்கு வசதியாய் போய் விட்ட்து.
இந்த ஒரு வாரமாய் வீட்டை நோட்டமிடுகிறான். எந்த விதமான அசைவுகளும் காணப் படவில்லை. அங்கு ஆட்கள் இருப்பதற்கான அறிகுறியும் இல்லை
அவன் அம்மா குடிசை வாசலில் உட்கார்ந்து கொண்டு இந்த வீட்டிற்கு வேலைக்கு போகும் இந்த பெண்களிடம் பேசிக்கொண்டிருக்கும் போது இவன் குடிசைக்குள் காதை தடுப்பு கீற்றில் வைத்து படுத்துக்கொண்டே கேட்டுக்கொண்டிருந்தான்.
அதை ஏன் கேட்கறீங்க? அந்த வீட்டுல அந்தம்மா பரவாயில்லை. ஏதோ மிச்சம் மீதியாவது கொடுக்கும், சம்பளமும் கூட்டி கேட்டா கொடுக்கும், ஆனா அந்த வீட்டுக்காரர் சரியான கஞ்ச பிசினாறி, ஒரு பைசா கொடுக்க விடமாட்டார். இந்தம்மா கொடுக்க வந்தாலும் விடமாட்டார். நாங்களும் வேற வழியில்லாமத்தான் போயிட்டிருக்கோம்.
இந்த ஆளின் வீட்டுக்குள் புகுந்து, களவாடவேண்டும்.
இந்த முறை வாய்ப்பு வந்திருக்கிறது. கணவன் மனைவி இருவரும் வீட்டிலில்லை. ஒரு வாரமாய் பூட்டியிருக்கிறது. அந்த வீட்டில் கை வைத்து விடவேண்டும்
இரவு இரண்டு மணி இருக்கும். எங்கும் அமைதி. ஓரிரு வண்டிகள் அங்கும் இங்கும் போய் வந்து கொண்டிருந்தன. அந்த பங்களாவின் எதிர்புறம் இருந்த இரண்டு வீடுகளின் இடைபட்ட சந்தில் உட்கார்ந்து நோட்டமிட்டு கொண்டிருந்தான். வண்டிகள் எதுவும் ரோட்டில் வராத்தை உறுதி படுத்தியவன் சத்தமில்லாமல் எழுந்து ரோட்டை கடந்து, பூட்டியிருந்த அந்த வீட்டு காம்பவுண்டு கேட்டையும் சர்வ சாதாரணமாய் தாண்டினான்.
அடுத்து பூனை போல் மெல்ல அடியெடுத்து வாசலை நோக்கி வந்தவன் இருளில் தன் கண்பார்வையை நிலைபடுத்தி கதவருகே போய் நின்றான். கதவு பூட்டப்பட்டிருக்கும் இடத்தை கைகளால் துழாவி சாவி துளையை கண்டு பிடித்தவன் தான் கொண்டு வந்திருந்த நான்கைந்து சாவிகளில் ஒன்றை நுழைத்து அப்படியும் இப்படியும் திருப்பி பார்த்தான். சரிவரவில்லை. அதை எடுத்து விட்டு அடுத்த சாவியை எடுத்து நுழைத்தவன் சிறிது நேரம் முயற்சி செய்த பின்னால் கதவு “கிளிக்” என திறந்து கொண்டது.
மனதுக்குள் பரபர்ப்பு தொற்றிக்கொள்ள உள்ளே நுழைந்தவன் கதவை அப்படியே சாத்தி விட்டு பாக்கெட்டில் வைத்திருந்த ‘செல்லை’ எடுத்து டார்ச்சை எழுப்பினான். அந்த சிறிய ஒளி அவனுக்கு அங்கிருந்த சோபா, ஷோ கேஷ், மற்றும் கண்ணாடி மூடி வைக்கப்பட்டிருந்த பொருட்களையும் கண்களுக்கு காட்டின.
அவைகளை தாண்டி நடந்தவன் இட்து புறமாய் வரிசையாக மூன்று அறைகள் இருந்ததை பார்த்தான். முதலில் நடு கதவை திறக்க முயற்சி செய்தான். ஐந்து நிமிடத்தில் கதவு திறந்து வழி விட உள்ளே நுழைந்தவன் ‘டார்ச்சை’ அங்கும் இங்கும் சுழற்றி பார்த்தான். அந்த அறையில் முன்னறையில் இருப்பது போலவே சோபாக்களும், மேசை நாற்காலிகளும் இருந்தன. அப்படியானால் முதலாவது அறையில்தான் ஏதாவது இருக்க வேண்டும், முடிவு செய்தவன் வெளியே வந்து முதல் அறையின் கதவை ஐந்து நிமிட போராட்டத்திற்கு பின் திறந்தான்.
உள்ளே நுழைந்து தான் வைத்திருந்த டார்ச்சை அந்த அறை முழுவதும் சுழற்றினான். அங்கு நான்கைந்து பீரோக்கள் வைக்கப்பட்டிருந்த்தை பார்த்தவன் முகம் பிரகாசமாக, எப்படியும் ஏகப்பட்டது தேறும், நினைத்தபடி ஒரு எட்டு வைத்தவன் தான் கொண்டு வந்த டார்ச்சை அப்படியே மேல் புறம் அடித்து பார்க்க அங்கே அவன் கண்ட காட்சி…..
ஆண் பெண் ஜோடியாய் மேலிருந்த பேனில் கட்டப்பட்டிருந்த கயிற்றில் தொங்கி கொண்டிருந்தனர். அவர்களின் உடல் கதவை திறந்து வைத்ததால் ‘விசுக்கென்று நுழைந்த காற்றுக்கு அங்கும் இங்கும் ஆட..
பார்த்துக்கொண்டிருந்த இவனுக்கு கை கால் எல்லாம் நடுங்க, வார்த்தைகள் வர முடியாமல் அப்படியே நாக்கு குழற தடுமாறி வெளியே ஓடி வந்தவன், தலை தெறிக்க முன்னறைக்கு வந்து சாத்தியிருந்த கதவை எப்படித்தான் திறந்து வெளியே ஓடி வந்தானோ? ரோட்டுக்கு வந்த பின்னால்தான் அவனது படபடப்பு அடங்கியது. ஐயோ நம் கை ரேகைகளை விட்டு வந்து விட்டோமே? அதை போய் அழிக்க முடியுமா? நினைத்தவன் இது தற்கொலையாக இருந்தால் அதை எல்லாம் கவனிக்க மாட்டார்கள், மனதுக்குள் ஒரு தைரியம் வர இது கொலையாயிருந்தால்? மற்றொருபுறம் மனது இந்த கேள்வியை கேட்டு அவனை அதைரியப்படுத்தியது.
மறு நாள் விடிந்தவுடன் இவன் மனமெல்லாம் அந்த நிகழ்வை பற்றியே நினைத்து இருந்தது. எப்படியும் இன்று கண்டு பிடித்து விடுவார்கள், என்று அந்த பக்கமாக போகாமலேயே இருந்தான். அன்று மாலை வரை எந்த பரபரப்பும் இல்லாமல் இருந்தது.
இரண்டு நாட்கள் ஓடியிருந்தன. இப்பொழுது மனசு கொஞ்சம் தைரியப்பட அந்த ஏரியா பக்கம் அப்படியே நடந்தவன். யதார்த்தமாய் பார்ப்பது போல அந்த வீட்டை பார்க்க..
கணவன் மனைவி இருவருமாக வெளியில் நாற்காலியை போட்டு பேசிக் கொண்டிருக்க, ஒரு வேலைக்காரர் தோட்டத்தில் ஏதோ கொத்தி கொண்டிருந்தார்.. ஆச்சர்யமுடன் இவன் பார்த்துக்கொண்டிருக்க…
அப்பொழுது வெளியே வந்த இரு வேலைக்காரர்களின் தோள் மீது பெரிய மனித பொம்மைகள் இருந்தன. இதை என்ன பண்ணலாங்க?
அதைய முன்னாடி வையுங்க, வீட்டுக்கு முன்னாடி திருஷ்டி பரிகாரத்துக்கு இருக்கட்டும் பெரியவர் சொல்லியது இவனுக்கும் கேட்டது. ஒரு வேளை இவனுக்கு கேட்க வேண்டியே சொல்லியிருப்பாரோ?
அவரை வெல்ல முடியாமல் அவனது தொழில் திறமை தடுமாறியது.