ஸார்!’ குரலில் பணிவின் குழைவும் நெகிழ்வும் தெள்ளந் தெளியப் புரிந்தன.
‘ஸார்!’ என்று குரல் கேட்டு பைல்களைப் புரட்டிக் கொண்டிருந்த லோகநாதன் தலை நிமிர்ந்தார்.
‘யாரப்பா? சின்னசாமியா?’
‘ஆமாம் ஸார்’.
‘என்னப்பா விஷயம்? ஆபிசுலே வந்து பார்க்கிறதுக்கென்ன?’
‘நீங்க தான் ஸார் காப்பாத்தணும்!’ நெடுஞ்சாண் கிடையாக விழுந்தான் சின்னசாமி.
‘எழுந்திருப்பா, இதெல்லாம் எனக்குப் பிடிக்காது. என்னால் உனக்கு உதவ முடியுமானால் நீ சொல்ல வேண்டியதே இல்லை’.
‘நீங்க பணம் கையாடல் விஷயமான அந்த பேப்பரைக் கொஞ்சம் மாத்தி எழுதிட்டீங்கன்னா, என் குடும்பத்தைக் காப்பாற்றிய புண்ணியம் உங்களுக்கு கிடைக்கும் ஸார்…’
‘ஆமாம்பா, ஆபீஸ் அறிந்த உண்மையை நான் எப்படியப்பா மாற்றி எழுத முடியும்?’
‘அந்த விஷயம் வெளியானா நான் கம்பியெண்ணும் நிலையிலே நிக்கணும் ஸார்.’
‘உனக்காக நான் ரொம்ப வருத்தப்படறேம்பா. ஆனால் நான் ஒண்ணும் செய்ய முடியாத நிலைமையிலே இருக்கேன். உனக்கு குறைவான தண்டனை கிடைக்கும் வகையில் என்னாலான முயற்சிகள் செய்கிறேன்.’
‘அப்போ பேப்பரை மாற்றி எழுத மாட்டீங்க?’ பணிந்திருந்த குரலில் குரோதம் கொந்தளித்தது.
‘முடியாது’. அதிகாரியின் குரலிலும் கடமையின் கண்டிப்பு மிளிர்ந்தது.
சர சரவென்று சின்னசாமி விரைந்து சென்றது சினம் கொண்ட சர்ப்பத்தை நினைவூட்டியது.
கடல் போல் குமுறிய அவன் உள்ளம் சுழற்காற்றில் சிக்கிய துரும்புப் போலத் தவித்தது. கவிஞனின் கற்பனை போல் மின்னல் வேகத்தில் ஒரு வஞ்சகத் திட்டம் தீட்டிவிட்டான் சின்னசாமி. அவன் முகத்தில் தோன்றிய பெருமிதம் வலையைப் பின்னி முடித்து இரைக்காகக் காத்திருக்கும் சிலந்தியின் நிலையை ஒத்திருந்தது.
மதியம்:
‘எஜமான்!’
‘யாரையாது?’
‘லஞ்ச ஒழிப்பு அதிகாரி வீடு இது தானுங்களே, யஜமான்?’ கூனிக் குறுகிக் குழைந்து நின்றான் ஒருவன்.
‘ஆமாம், உனக்கு என்ன செய்யணும்?’ சிம்மத்தின் கர்ஜனை.
‘எஜமான் கிட்ட முக்கியமா ஒரு விஷயம் சொல்லணுமுங்க’.
‘என்ன விஷயம்’
‘இன்னைக்கு மாலையிலே ஏழு மணிக்கு கோபாலன் தெருவிலே பதினெட்டாம் நம்பர் வீட்டிலே லோகநாதன்ங்கற அதிகாரிக்கு லஞ்சம் கொடுக்கப் போறாங்களாம். அதைச் சொல்லத்தான் இத்தினி அவசரமா ஓடியாந்தேன்’.
‘உனக்கு எப்படித் தெரியும்?’
‘நான் முனிசிபல் குடியிருப்பிலே இருக்கேனுங்க. பக்கத்துலே சின்னசாமின்னு ஒரு பய இருக்கான். அவன் வீட்லே பேசிக்கிட்டது காதுலே விழுந்துட்டுதுங்க. ஏதோ பேப்பரை மாத்தி எழுதி வாங்க விலையுயர்ந்த கடிகாரம் கொடுக்கப் போறானாம். ஏழு மணிக்குப் போனா கையும் களவுமா பிடிச்சிடலாமுங்க’.
‘சரி,.நான் பார்த்துக்கறேன் போ’.
‘ஏழு மணி மறந்துடாதீங்க எஜமான். நம்மைப் பத்தி வெளியே வுட்றாதீங்க. வெளியே தெரிஞ்சா மத்தவங்க பகை நமக்கு வந்து சேரும். நம்மகெதுக்குங்க வம்பு?’ என்று கோணல் சிரிப்புடன் விலகிச் சென்றான். சின்னசாமியால் ஏவப்பட்ட வீரய்யன்.
மாலை:
‘கந்தசாமி’
‘எஸ் ஸார்!’ போலீஸ் ஸல்யூட்டுடன் நின்றான் கந்தசாமி, இன்று ஒரு கேஸ் பிடிபடப் போகிறது. ஆறேமுக்கால் மணிக்கு நீ கோபாலன் தெருவிலே, லோகநாதன் வீட்டிலே மப்டி உடையிலே போய் மறைந்திருந்த அங்கு நடக்கும் விஷயங்களைக் கவனித்துக் கொண்டிரு. நான் ஏழு மணிக்கு வருகிறேன்.’
ஆறே முக்கால் மணி. லோகநாதனின் வீட்டில் அவர் ஆபிஸ் ஜன்னலுக்கு வெளியே கந்தசாமி யாருமறியாத வண்ணம் பதுங்கி மறைந்திருந்தான். அதற்கேற்றாற் போல் முல்லைப் பந்தற் கொடியும் குரோட்டன்ஸ் செடிகளும் உதவின. உள்ளே பேச்சுக் குரல் கேட்டதும் கூர்ந்து கவனித்தான். அவன் முகம் ஆச்சரியத்தினால் கலவரமடைந்தது. அவன் மூளை துரிதமாக
இயங்கியது. பத்து நிமிடங்களில் அவன் அதி விரைவாய் அவ்விடத்தை விட்டு அகன்றான்.
மணி ஏழு. லோகநாதன் எதிரில் சின்னசாமி பணிவுடன் நின்றிருந்தான்.
‘ஸார்! இந்த வாட்ச் இலங்கையிலே இருந்து தருவிச்சது ஸார். உங்களுக்காகவே ஸ்பெஷலா கொண்டு வந்திருக்கேன் ஸார்!’
‘ஏது சின்ன சாமி, நாடகம் திசைமாறுகிறது போல் இருக்கிறதே! குரலில் ஏளனம் மண்டிக் கிடந்தது.
‘ஒன்ணுமில்லே ஸார். சும்மா தமாஷுக்கு, என் நடிப்புத் திறமையை ஒங்க கிட்ட காட்டுகிறதுக்கு ஒரு நாடகம் ஆடினேன் ஸார்’.
‘ஆமாம். அதற்கு இதென்ன?’ என்று வாட்சை சுட்டிக் காட்டினார். அவர் முகத்தில் கோபம் கொந்ததளித்தது.
அதே சமயம் வாசலில் போலீஸ் ஜீப் வந்து நின்றதையடுத்து, போலீஸ் அதிகாரி ‘டக், டக்’ என்ற ஒலியுடன் அறையுள் நுழைந்தார்.
திடீரென்று போலீஸ் அதிகாரியின் வருகை லோகநாதனுக்குத் திகைப்பாய் இருந்தது. சந்தர்ப்பம் அறியாது முன்னறிவிப்பின்றி வந்தது ஏதோ போல் தோன்றியது.
இருந்தாலும் ‘வாருங்கள்’ என்று வரவேற்றார்.
‘சும்மா உங்களைப் பார்த்துப் போகலாமென்று தான் வந்தேன்’ என்று சொல்லிக் கொண்டே நாற்காலியில் அமர்ந்தார் போலீஸ் அதிகாரி.
சுற்றிலும் கண்ணோட்டம் விட்ட அதிகாரியின் கண்களுக்கு மேஜை மேல் பள பளவென்று மின்னிக் கொண்டிருந்த ‘வாட்ச்’ தென்பட்டது.
‘இது எங்கே வாங்கினீங்க? பிரமாதமாக இருக்கிறதே?’ என்று கூறிக் கொண்டே லோகநாதன் மீது ஒரு பொருள் பொதிந்த பார்வையை வீசினார்.
அதன் பொருளுணர்ந்த லோகநாதனின் எண்சாண் உடலும் ஒரு சாணாகக் குறுகியது.
நெஞ்சம் துடிதுடிக்க ‘அது என்னுடையது அல்ல ஸார்’. என்று சுருக்கமாகப் பதில் அளித்தார்.
‘அப்படியானால் உங்கள் மேஜை மீது இருக்க வேண்டிய அவசியம்?’
சின்னசாமியின் பக்கம் பார்வையைத் திருப்பினார் போலீஸ் அதிகாரி.
‘இது உன்னுடையதாப்பா?’
‘இல்லீங்க ஸார்’. வெகு பவ்யமாகப் பதில் அளித்தான் சின்னசாமி.
‘அப்படியானால் இது யாருடையது?’ போலீஸின் மிடுக்குடன் கேள்வி பிறந்தது.
‘அது..அது…’ என்று மென்று விழுங்கினான் சின்னசாமி. ‘என்ன அது?’ உறுமலாக வெளிப்பட்டது கேள்வி.
‘அது எஜமானுக்காக வாங்கி வந்ததுங்க’ போலி வணக்கத்துடன் குழைந்தான்.
லோகநாதன் தன் உடலை உலுக்கி எடுத்தது அவன் பதில்.
‘எஜமானுக்கு நீ ஏன் வாங்கி வரணும்?’ குறுக்கு விசாரணை தொடர்ந்தது.
எஜமான் ரொம்ப நாளாகவே இந்த வாட்சுக்குப்பிரியப்படறதா தெரிஞ்சுதுங்க’.
‘அப்போ, உன்னை இவர் வாட்ச் வாங்கி வரச் சொன்னார். இல்லையா?’
‘அதெல்லாம் ஒண்ணுமில்லீங்க. சும்மா நான் தான்….’ என்று அசட்டுச் சிரிப்புச் சிரித்தாலும், ‘ஆமாம்’ என்ற பதில் முகத்தில் எழுதி ஒட்டியிருந்தது.
‘மிஸ்டர் லோகநாதன்! உங்களை சந்தேகத்தின் பேரில் கைது செய்கிறேன்.’
லோகநாதனின் மனம் பதறியது. ‘ஸார்! இதற்காக நீங்கள் பிறகு வருத்தப்பட நேரிடும்!’ வார்த்தையில் உஷ்ணம் ஏறி நின்றது. சின்னசாமி நின்ற திக்கைப் பார்க்கவே வெறுப்படைந்து முகத்தைத் திருப்பிக் கொண்டார்.
சின்னசாமிய்ன் முகத்தில் வெற்றிக் களிப்புத் தாண்டவமாடியது.
இவ்வளவு நேரம் மறைவிலிருந்து யாவற்றையும் கவனித்துக் கொண்டிருந்த லோகநாதனின் மனைவி புழுவாய்த் துடித்தாள்.
‘ஸார், தயவு செய்து அவரைக் கைது செய்யாதீர்கள். அவர் உத்தமர். கனவில் கூட இப்படி எண்ணியவரில்லை. உங்களை கெஞ்சிக் கேட்டுக் கொள்கிறேன். அவரை விட்டு விடுங்கள். இதில் ஏதோ தவறு நேர்ந்திருக்கிறது’.
‘அம்மா! நான் கடமைக்குக் கட்டுப்பட்டவன். என் கடமையை நான் செய்கிறேன். விசாரணையின் போது விவரமாய் எல்லா விஷயங்களையும் கவனிப்போம்’ என்று எழுந்து போலீஸ்காரர்களுக்கு உத்தரவு கொடுத்தார் அதிகாரி.
அந்த அம்மாள் துயரம் தாள முடியாமல் தவித்தாள். அதைக் காண சகியாத லோகநாதன், ‘கெளரி, பகுத்தறிவு பெற்ற மனிதர்களின் நெஞ்சம் கல்லாய் இறுகிக் கிடக்கும். கல்லாய் நிற்கும் இறைவனின் நெஞ்சம் என்றும் நெகிழந்து இருக்கும். தேவி உலகநாயகியைத் தியானம் செய். உண்மை நிலைக்கும். தர்மம் தழைக்கும்’. என்று கூறிவிட்டு விரைந்து சென்று போலீஸ் ஜீப்பில் ஏறிக் கொண்டார்.
தேவி என்று அலறியபடியே அம்மாள் படத்தின் முன்பு மயங்கி விழுந்தாள் கெளரியம்மாள்.
இரவு:
‘ஸார்!’
‘ஸார், கந்தசாமியா? எங்கே போனாய் நீ?’
‘ஒரு பெரிய தவறு நடந்துவிட்டது ஸார். உங்களைக் காணத்தான் குறுக்கே விரைந்து வந்தேன். அதற்குள் காரியம் மிஞ்சி விட்டது.’ அவன் குரலில் பதற்றம் நிறைந்திருந்தது.
‘என்ன தவறு?’ என்று கடிந்து கொண்டார் போலீஸ் அதிகாரி.
‘லோகநாதனைக் கைது செய்திருக்க வேண்டியதில்லை ஸார். இதைக் கேளுங்கள் என்று ஒரு டேப் ரிக்கார்டரை எடுத்து வைத்தான். உயிரில்லா அந்த இயந்திரம் பேசத் தொடங்கியது.
‘பேப்பரை மாத்தி எழுதறது பற்றி ஏதாவது மறுபரிசீலனை செய்தீர்களா?’ சின்னசாமியின் கிண்டலான கேள்வி கணீரென்று ஒலித்தது.
‘பரிசீலனைக்கு உரிய விஷயம் அல்ல அது’ லோகநாதனின் குரல் சாவதானமாக ஒலித்தது.
‘அப்போ அதன் பலனை அனுபவிக்கத் தயாராயிட்டீங்க. என் பேச்சை மீறி இந்த ஆபிசில் இதுநாள் வரை எவருமே எதிர்த்ததில்லை’.
‘அதனால்தான் உறுதியாய்க் கூறுகிறேன். இம்முறையும் உன் குற்றம் மறைக்கப்பட மாட்டாது’. என்று துணிவுடன் வந்தது பதில்.
‘என்னை எதிர்த்தவர்களின் பலனை நீ அறிய மாட்டீங்க!’
‘ஹா! ஹா! என்ன செய்து விடுவாய்?’
‘செய்வதைச் சற்று நேரத்தில் காணப் போகிறாய்!’
‘செய்வதைச் செய்’ உறுதியுடன் நின்றது பதில்.
‘என்னைக் கம்பி எண்ண வைக்கப் போகும் உங்களை கம்பி எண்ண வைத்துப் பழிக்கு பழி வாங்காது விட மாட்டேன். இன்னும் கொஞ்ச நேரத்தில் இந்த சின்னசாமியின் திறமையைப் பாத்துடுவீங்க!’
இந்த சம்பாஷணையைக் கேட்ட லஞ்ச ஒழிப்பு போலீஸ் அதிகாரியின் முகம் வேதனையால் வாட்டமுற்றது.
‘பெருந்தவறு நேர்ந்துவிட்டது கந்தா. லோகநாதனைக் கண்டு உடனே மன்னிப்புக் கேட்க வேண்டும்’
‘என்னையும் மன்னிக்க வேண்டும் ஸார்’. கந்தன் தலை குனிந்து நின்றான்.
‘எதற்கு?’ முகத்தில் கேள்விக்குறி எழுந்தது.
‘வேறு ஒரு கேஸிற்காக நீங்கள் வாங்கி வரச் சொல்லியிருந்த டேப் ரிகார்டரை உங்கள் அனுமதியின்றி உபயோகித்து விட்டேன் ஸார்!’
அதிகாரி சிரித்துக் கொண்டே மெளனமாக அவனை அசீர்வதித்தார்.
(தினமணி கதிர் 22.7.1966 இதழ்)