சிவா கையில் லைசென்ஸும் இல்லை, ஹெல்மெட்டும் கொண்டு வரவில்லை. தூரத்தில் போக்குவரத்து போலீசார் சோதனை செய்தபடி இருந்தனர். பயம் உடலெங்கும் பற்றிக் கொண்டது.
டிராஃபிக் சார்ஜண்ட் ஒருவர் ரோட்டுக்கு முன்னேறி வந்து, சிவாவின் வண்டியை ஓரம் கட்டச் சொன்னார்.
எங்கிருந்து வர்றே.?
சார், குழந்தைக்கு உடம்பு சரியில்லை…
லைசன்ஸ் எங்கெ?
மருந்து வாங்க வந்த அவசரத்துல மறந்துட்டேன் சார்!
உண்மைதானே?
சத்யம் சார்..!
அவரிடமிருந்து விலகி, ‘அப்பாடா, எந்தஃப் பிரச்னையும் இல்லாம தப்பிச்சோம் என்ற நிம்மதிப் பெருமூச்சோடு நகரின் பிரபல செல்போன் கடையின் முன் வண்டியை நிறுத்தி, பின் பக்கமாய் போய் சுவரில் ஓட்டைப் போடத் துவங்கினான்.
செல்போன் கடைகளில் நடக்கும் கொள்ளையைத் தடுக்க…கமிஷனர் உத்தரவின் பேரில் போலீசார் செல்போன் கடைக்கு உள்ளே காத்திருந்தனர்.
– ச.குணசேகரன் (ஏப்ரல் 2013)