தங்கம்…தங்கம்…தங்கம்

0
கதையாசிரியர்:
கதைத்தொகுப்பு: கிரைம்
கதைப்பதிவு: May 29, 2024
பார்வையிட்டோர்: 1,250 
 
 

பதினொன்றை தாண்டி பனிரெண்டை நோக்கி கடிகார முள் சென்று கொண்டிருக்க…! !

அரபிக் கடலின் இந்திய துறைமுகத்திலிருந்து நானூறு கிலோ மீட்டர் தள்ளி பேரலைகளின் தள்ளாட்டத்தில் அங்கும் இங்கும் ஊசலாடிக்கொண்டு நின்று கொண்டிருந்தது அந்த கப்பல். சுமார் நானூறு அல்லது ஐநூறு டன் எடைகளை தாங்கும் வடிவமைப்பில் இருந்தது அந்த கப்பல்.

கப்பலின் மேல் தளத்தில் அந்த இடத்தின் ஓங்கி மோதும் அலைகளையோ அல்லது கப்பலின் வடிவத்தை காட்டக்கூடிய அளவிலோ வெளிச்சம் தரும் மின் விளக்குகள் வெளிச்சத்தை உமிழவில்லை, என்றாலும் ஒரு சில விளக்குகள் மெல்லிய அழுகையுடன் வெளிச்சத்தை உமிழ்ந்து கொண்டிருந்தன.

கடலுக்குள் இறங்கும் நீச்சல் உடையுடன் இருவர் இடுப்பில் கயிற்றுடன் இறக்கப்படுகிறார்கள். ‘படுக்கை மட்டமாக’ கடலின் அலையை தொட்டவுடன்,ஏற்பட்ட மெல்லிய சூடு பட்டதும் அவர்கள் போதும் என்று தலைக்கவசத்துக்குள் இருக்கும் ஹெட் போன் வழியாக சொல்லிவிட்டு, இடுப்பு கயிற்றை விடுவித்து கொண்டு கடலுக்குள் ஆழ..ஆழ..அமிழ்கிறார்கள்.

எங்கும் இருள், எதிரில் எதுவும் தெரியவில்லை என்றாலும் அலையின் உள் ஆட்டம் இவர்களால் உணரபட்டது. இருவரின் உடமபை தொட்டு உரசி செல்லும் மீன்களோ, அல்லது வேறெதுவோ, இவர்களை எதுவும் செய்ய முடியவில்லை.. அவர்களின் ஒவ்வொரு செயலும் இவர்கள் இது போல் பல வருடங்கள்

கடலுக்குள் நீச்சலடிப்பதில் கரை கண்டவர்கள் என்பது தெரிந்தது. தனது அடுத்த செயலாக தலை கவசம் மீது பொருத்தியிருந்த மின் விளக்கை எரிய விடுகிறார்கள்.

பளீரென்ற ஒளி வெளிச்சம் இவர்கள் தலைக்கவசத்திலிருந்து கிளம்பி அந்த கடல் நீருக்குள் ஊடுருவி கடலுக்கு வெளிபுறமும், உட்புறமும் இருட்டாய் இருந்தாலும் கடலுக்குள் போக போக, அங்கு வாழும் உயிரினங்கள் தங்களது அசைவை இவர்களை தொட்டு உரசி காண்பித்து கொண்டு இருந்தது. அமைதி..அமைதி ஆழ் கடலின் அமைதி.

அடுத்ததாக அவர்கள் இருவரும் கட்டை விரலை உயர்த்தி காண்பித்து விட்டு தலை கீழாய் ஆழத்தை நோக்கி வேகமாய் நீந்தூகிறார்கள்…ஆழம்…ஆழம்..உள்ளே செல்ல அவர்களின் தலை கவசத்திலிருந்து வரும் வெளிச்சமும் அடர்த்தியாகிக் கொண்டே போகிறது. இருள்..எங்கும் இருள்..இவர்களின் தலையிலிருந்து கிளம்பும் ஒற்றை வெளிச்சங்க்கள் மட்டும்.

சரியாக ஒரு இடத்தில் இவர்கள் சந்திப்பு நிகழ இருவர் காதிலும் ஹெட் போன் ஆர் யூ ஆல் ரைட்.? யெஸ்..நீங்கள் இப்பொழுது நூறு மீட்டரை தாண்டி இருக்கிறீர்கள். பட் இதற்காக நாற்பத்தி ஐந்து நிமிடங்களை கடத்தியிருக்கிறீர்கள். நீச்சலில் கரை கண்டவர்கள் இப்படி கால தாமதம் செய்வது நம் தலைவருக்கு வருத்தம் தருகிறது..போனில் ஒலித்த கொஞ்சம் காரமான வார்த்தையை கேட்ட இவர்கள் தங்களின் கட்டை விரல் சைகயை காட்டி ‘யெஸ் வீ வில் மூவ்’..அடுத்த நொடி அவர்களின் நீச்சல் வேகம் ஆழத்தில் வேகமாய் ஊடுருவுகிறது.

மீண்டும் அவர்கள் சந்திந்த போது ஹெட் போன் “குட் நீங்கள் முந்நூறு மீட்டரை தொட்டிருக்கிறீர்கள். பட் அதே முக்கால் மணி நேரத்தில். நம் தலைவர் உங்களை வாழ்த்த சொல்லியிருக்கிறார். நமக்கு நேரம் குறைவினாலேயே, அதாவது விடியலுக்குள் இந்த வேலை முடியவேண்டுமே என்று நம் தலைவர் உங்களிடம் சிறிது கோபப் பட்டார். என்பதை நினைவில் கொள்ளுங்கள்”.

அடுத்த நிமிடம் இருவரும் கட்டை விரலை காட்டி மீண்டும் ஆழத்துக்குள் நீந்தி செல்ல ஆரம்பிக்கிறார்கள்.

கிஷோர் ஜாக்கிரதை..உன் அருகில் ஏதோ..சலனம் தெரிகிறது. உன் தலையை அப்படியே வலது பக்கம் திருப்பு, கிஷோர் காதில் ஹெட் போன் ஒலிக்க சட்டென தலையை திருப்பி பார்த்தான். இவன் தலையில் இருந்து வெளி வந்து கொண்டிருந்த வெளிச்ச கோடுகள் எதிரில் இவனை விழுங்க வந்து கொண்டிருந்த மிகப்பெரிய மீனுக்கு இடைஞ்சல் தர, நொடி நேரத்தில் தனது வேகத்தை இடது புறம் திரும்பி அந்த மீனின் வயிற்றுப்பக்கமாய் சென்று அதை கடந்து சென்றான்.

சற்று தொலைவில் பார்த்துக்கொண்டிருந்து ஆகாஷ் சற்று அதிர்ச்சியாகி நின்றவன், ஓ தேங்க் காட் கொஞ்சம் தவறியிருந்தால் இந் நேரம் அந்த மீனை சுட்டு வயிற்றை கிழிக்க நேரிட்டிருக்கும்.

சிரித்தான் கிஷோர், அப்படியிருந்தாலும் நான் உயிரோடு இருந்திருப்பேன் என்பது என்ன நிச்சயம்? அவர்கள் இருவரும் தலைக் கவசத்துக்குள் வார்த்தையாடிக் கொண்டார்கள்.

அவர்கள் இருவரின் தலைக் கவசத்துக்குள்ளிருந்து வந்த குரல் அவர்களை நிற்க வைக்க கிஷோர் ஆகாஷின் அருகில் வந்தான். இப்பொழுது. நீங்கள் நாம் குறிப்பிட்டிருந்த எல்லைக்குள் வந்து விட்டீர்கள், இப்பொழுது நீங்கள் அறுநூறு மீட்டரை தாண்டி விட்டீர்கள். உங்களது பயணம் இப்பொழுது பக்கவாட்டில். வலது புறம் திரும்புங்கள்..

அவர்கள் தங்களை திருப்பிக் கொள்ள “குட்”..அடுத்து இரண்டு கிலோ மீட்டர் அளவுக்கு உங்கள் பயணம் பக்கவாட்டில் இருக்க வேண்டும். ஜாக்கிரதை இந்த இடத்தில் அழுத்தம் அதிகமாக இருக்கும். உங்களது வாயு சிலிண்டர் அழுத்தம் தாளாமல் வெடித்து விடலாம். மூச்சு இழுப்பை குறைத்து கொள்ளுங்கள். நிதானம்.

உங்களின் பாதுகாப்பை நாங்கள் கவனப்படுத்திக் கொள்கிறோம். ஆகவே நீங்கள் கவலைப்படாதீர்கள்

ஆகாஷ் சிரித்தான் நம் பாதுகாப்பை அவர்கள் கவனப்படுத்தி கொள்கிறார்களாம்.

கிஷோர் ஏன் சிரிக்கிறாய், உண்மைதானே, இருவர் குடும்பத்துக்கும் இருபத்தி ஐந்து லட்சம் ரூபாய் கொடுப்பதாக உறுதி கொடுத்திருக்கிறார்களே.

ஆகாஷ் சிரித்தான் முட்டாளே, நாம் பத்திரமாய் மேலே போய் அவர்கள் தேடிய பொருளை ஒப்படைத்தால்தான் கிடைக்கும் அந்த பணம்.

ஆம் நாம் நெருங்கி விட்டோம், பார்.. இந்த இடம்தானே,..கொஞ்சம் இரு கூப்பிடுகிறார்கள்..”யெஸ்”..நாங்கள் பக்கவாட்டில் இரண்டு கிலோ மீட்டர் தாண்டி வந்து விட்டோம்.

தெரிகிறது..ஆகாஷ் ஏதோ நம்பிக்கையில்லாமல் பேசுவதாக எங்கள் தலைவருக்கு தெரிகிறது. மீண்டும் சொல்கிறோம், உங்கள் உயிருக்கு நாங்கள் பாதுகாப்பு தருகிறோம், அதே நேரத்தில் நீங்கள் எங்களை நம்புவது அவசியம்..

ஆகாஷ் சட்டென்று சொன்னான், சாரி பயண களைப்பு சில நேரங்களில் என்னை இப்படி பேச வைத்து விடுகிறது. ஓ..கே..அடுத்து என்ன செய்வது?

கிஷோர் ஆகாஷின் பக்கத்தில் வந்து முணு முணுத்தான். ஜாக்கிரதையாக பேசு ஆகாஷ், அவர்களுக்கு நாம் பேசுவதும் கேட்கும். உன் குரலை தாழ்த்தினால் அவர்களுக்கு நாம் என்ன பேசிக்கொள்கிறோம் என்பது குழப்பமாக இருக்கும்.

புரிந்தது என்பது போல் தலையாட்டிய ஆகாஷ், அடுத்து நாங்கள் என்ன செய்வது?

இப்பொழுது உங்கள் பார்வையை வட கிழக்காக திருப்புங்கள், அவர்கள் தங்களை திருப்பிக் கொள்ள நீங்கள் காலை ஊன்றி நடக்க முடியும், அந்த இடம் கொஞ்சம் மணல் திட்டான பகுதி..

இருவரும் தங்கள் நீச்சல் உடையுடன் இருந்த்தால் கால்களை மென்மையாக மணல் மேல் வைக்க அது உறுதியாய் இரு[ப்பதை உறுதி செய்த பின் தங்களது முழு எடையையும் காலுக்கு கொண்டு வந்து ஊன்றி நின்றனர்.

ஜாக்கிரதை நீங்கள் நின்று கொண்டிருக்கும் பகுதி உங்களுக்கு மூச்சு திணறலை ஏற்படுத்தும், அழுத்தம் அதிகபட்சத்தை காட்டுகிறது. மூச்சு திணறல், தலை சுற்றல் வருகிறதா?

இருவரும் ஆம் என்று தலையசைக்க, இப்பொழுது நீங்கள் உங்கள் மூச்சு குழாயை ஒரு நொடி எடுத்தாலும் போதும், அடுத்த நொடி இரத்தம் மூக்கிலும் வாயிலும் வெளி வந்து விடும். ஆகவே உங்கள் மூச்சை மெதுவாக விடுங்கள் உங்கள் உயிருக்கு நாங்கள் பொறுப்பு, கவலைப்படாதீர்கள். ஐந்து நிமிடம் நடந்தால் அங்கு நீங்கள் ஒரு சிறு கப்பலை காண்பீர்கள்..

இருவரும் மணல் திட்டில் உடலை பக்குவமாய் நடத்திக்கொண்டு சென்றார்கள். அவர்கள் எதிர்பார்த்தது போல சிறு கப்பல் பாதி உடைந்த நிலையில் தென்பட..அவர்கள் இருவருக்கும் பரபரப்பு தொற்றியது. “வீ சீன் தட் ஷிப்” பட்டனை தட்டி மேலிருப்பவர்களுக்கு சிக்னல் தர..

குட்..அடுத்து அதனுள் இறங்கி இடது புறம் திரும்புங்கள், பாதி உடைந்தது போல் காணப்பட்ட அக் கப்பலில் அவர்கள் இறங்கினர். தண்ணீருக்குள் கால்கள் சரியாக பதியாமல் வழுக்கலாய் இருந்ததால் சிறிது சிரமபட்டனர். இடது புறம் திரும்ப அப்படியே நடந்து செல்லுங்கள்…..இப்பொழுது ஒரு அறை தென்படுகிறதா?

ஆம்..அதை திறங்கள்..

கதவு நீண்ட நாட்கள் தண்ணீரில் ஊறியிருந்ததால் திறக்க மறுத்தது. பக்கத்தில் தண்ணீருக்குள்ளே கையை விட்டு துழாவிய போது கிடைத்த கம்பி போன்று ஒன்று தென்பட அதை எடுத்த கிஷோர் அறைக்கதவின் தாழ்ப்பாளை கஷ்டப்பட்டு விடுவித்தான்.

அதனுள் நடந்து செல்லுங்கள்…நடந்தார்கள்…சிறிது தூரத்தில் ஒரு மேடை தெரிகிறதா ? அதனருகில் உட்கார்ந்து கீழ்ப்புறமாய் பாருங்கள். குறுகிய சிறு சதுரம் போல் தென்படுகிறதா அதை பாருங்கள். அடுத்து கீழே உட்கார்ந்து பார்த்தால் அதற்குள் ஒரு அறை போன்று கண்ணுக்கு தெரிகிறதா?

இருவரும் தண்ணீருக்குள்ளே குத்துக்காலிட்டு உட்கார்ந்து குனிந்து பார்க்க படிக்கட்டுக்கள் போன்று அதில் இறங்குவது தெரிந்தது. ஆனால் தண்ணீர் நிறைந்திருந்தது.

படி போல் தெரிகிறது, அதில் இறங்குங்கள் இருவரும் இறங்கினார்கள்.. இப்பொழுது.அங்கு மூன்று பெட்டிகள் தெரிகிறதா? ஆம் தெரிகிறது. மூன்று பெட்டிகளையும் மேலே கொண்டு வாருங்கள்..

மிகுந்த பிரயாசைப்பட்டு அந்த மூன்று பெட்டிகளையும் மேலே கொண்டு வந்தார்கள். அதுவும் அந்த குறுகிய சந்துக்குள் அந்த பெட்டியை சாய்த்து வெளியே கொண்டு வர மிகுந்த சிரமபட்டார்கள். கொண்டு வந்தவுடன் மேலே தகவல் தெரிவித்தார்கள்

நல்லது, இப்பொழுது அதை அந்த மணல் திட்டு இறுதி வரைக்கும் இழுத்து வர முடியுமா? முயற்சிக்கிறோம்.

அப்படியே இழுத்துக்கொண்டு வந்தார்கள். திட்டின் இறுதியில் நின்றவர்களிடம் நல்லது, இப்பொழுது உங்கள் உடுப்பின் வலது புறம் கை விட்டு பார்த்தால் அதில் இரப்பர் வளையம் இருக்கும். இரண்டு பேரும் அதை எடுத்து மூன்று பெட்டிகளையும் இணையுங்கள். மூன்று பெட்டிகளையும் இணைத்த ஆகாஷ் வியர்த்து போயிருந்தான்.

கிஷோர் திடீரென எனக்கு மூச்சு திணறுகிறது, மயக்கமாய் வருகிறது என் உடல். ஓய்ந்து போய்க் கொண்டிருக்கிறது, என்று தெரிகிறது. என்னால் முடியவில்லை.

ஆகாஷின் அருகில் வந்த கிஷோர் “பயப்படாதே ஆகாஷ்”நீ நெர்வசாக இருக்கிறாய் என்று நினைக்கிறேன். மெதுவாய் என்னை பின் தொடர்ந்து வா., நான் முதலில் கிளம்புகிறேன். நீ என் பின்னால் வர முயற்சி செய்.

உன் ஒருவனால் முடியுமா? ஆகாஷ் தடுமாறி கேட்டான். இருநூறு மீட்டர் வரை மேலே சென்று விட்டால், அவர்கள் அதற்கு மேல் ஒரு இரப்பர் கயிற்றை இறக்கி விடுவார்கள், அதில் இவைகளை மாட்டி விட்டால் போதும் அவர்கள் இழுத்துக் கொள்வார்கள்.

நான் முயற்சி செய்து இழுத்துக் கொண்டு மேலே போகிறேன், நீ மெதுவாக என் பின்னால் வா.

கிஷோர் வேகமாக மேல் நோக்கி செல்ல ஆரம்பிக்க அவனது உடையில் மாட்டியிருந்த அந்த இரப்பர் வளையம் அந்த பெட்டிகளை இழுத்தவாறு பின் தொடர்ந்தது.

ஆகாஷ் மணல் திட்டின் இறுதியில் நின்று முகம் எல்லாம் வேர்வை வழிய கண்களில் மரண பீதியுடன், மேலே செல்லும் கிஷோரை பார்த்துக் கொண்டிருந்தான்.

கிஷோர்..லைனில் இருக்கிறாயா? யெஸ் பாஸ், ஆகாஷ் எங்கு விட்டு வந்தாய்?

அந்த மணல் திட்டிலேயே நின்று விட்டான். என்னால் முடியவில்லை என்று சொல்லி விட்டான். நல்லது அவனால் இரண்டு மணி நேரத்துக்கு மேல் உயிரோடு இருக்க முடியாது. அவனுக்கு உன் மேல் சந்தேகம் இல்லையே?

இல்லை பாஸ், அவனை சமாதானப்படுத்தி பின்னால் மெதுவாக வர சொல்லி விட்டேன். அநேகமாக அவன் மேலே நீந்தி கொண்டு இருநூறு மீட்டர் வருவதற்குள் அவன் உயிர் பிரிந்து விடும்.

நல்லது அவனது ஆக்சிஜன் குழாயில் கொஞ்சம் மருந்தை கலந்து வைத்தோம். அது ஒரு மணி நேரம் கழித்து அவனை பரலோகம் அனுப்பி விடும். நீ எங்கிருக்கிறாய்.?

நான் மேலே வந்து கொண்டிருக்கிறேன் நீங்கள் இரப்பர் கயிற்றை அனுப்பி விட்டீர்களா?

இந்நேரம் அது முந்நூறு மீட்டரை தாண்டி வந்து கொண்டிருக்கலாம்.. பெட்டியை இழுத்து வருவதில் உனக்கு சிரம்மாக இருக்கும் என்று தெரிகிறது. கொஞ்சம் பொறுத்துக்கொள். உன் சேவைக்கு தலைவர் மிகுந்த பலனை அளிக்க போகிறார்.

இருநூறு மீட்டர் தாண்டி சற்று தூரம் நீந்தியவாறு மேலே இழுத்து வந்தான். கிஷோர். அவனுக்கு செய்தி ஹெட் போனில் வர கிஷோர் கிஷோர் எங்கிருக்கிறாய்?

இதோ இருநூறு மீட்டர் தாண்டி வந்து விட்டேன். கொஞ்சம் இரு உன் உடையில் வலது இடுப்பருகில் ஒரு பட்டன் இருக்கும் பார் அதை அழுத்தி விடு. ஆம் அப்படித்தான். இப்பொழுது அந்த பட்டன் அளிக்கும் சமிக்ஞையில் இந்த இரப்பர் கயிறு உன் அருகிலேயே வரும்..

அரை மணி நேரத்தில் இரப்பர் கயிறு இவன் முதுகை தொட ‘அப்பாடி”என்ற பெருமூச்சுடன் அந்த இரப்பர் கையிறுடன் அந்த பெட்டி வளைத்தையும், தன்னையும் இணைத்துக் கொண்டான். கயிறு இவர்களை மெல்ல இழுக்க ஆரம்பித்தது.

“சக்ஸ்ஸ்” மேல் தளத்தில் கூவினர் அங்கிருந்த மூன்று பேர். திடீரென..ஸ்.. தலைவர்..வருகிறார்..தங்களுகுள் முணு முணுத்து வழி விட வந்தவருக்கு வயது அறுபதுக்கு மேல் இருக்கும்.

என்னாச்சு? பெட்டியும், கிஷோரும் மேலே வந்து கிட்டிருக்காங்க, அநேகமாக இன்னும் நாற்பத்தைஞ்சு நிமிஷத்துல பெட்டி மூணும் நம்ம கைக்கு வந்துடும்.

அப்பா இதைய கண்டு பிடிக்க எத்தனை வருஷ உழைப்பு. கிட்டத்தட்ட அதுக்குள்ள இருக்கற தங்கத்தோட மதிப்பு “முந்நூறு கோடிக்கும்” மேலே, அப்படியே கனவு காண்பது போல நின்ற தலைவரின் கண்களில் கனவு விரிய..

கிட்டத்தட்ட முப்பது வருடத்துக்கு முன்னால் மும்பை துறை முகத்தில் நின்று கொண்டிருந்த சிறிய ரக கப்பலில் ஒரு வங்கியில் இருந்து கொண்டு வந்த தங்கம் ஏற்றப்படுகிறது. எல்லாம் கரெக்டா இருக்கா? செக் பண்ணிட்டீங்களா? இது இரகசிய பயணம். தங்கம் வெளி நாட்டு வங்கிக்கு போறது தெரிஞ்சா, கேள்வி மேல கேள்வி வரும்., பத்திரிக்கை காரனுங்களுக்கு தெரிஞ்சா இன்னும் பிரச்சினையாயிடும். செக்கிங்குல ஒண்ணும் மாட்டிக்கலையே. இல்லை, பெட்டிய அப்படியே பதுக்கிட்டோம், கவலை வேண்டாம். எப்படி செக் பண்ணீனாலும் கிடைக்கறதுக்கு வாய்ப்பே இல்லை.

யார் யார் போறாங்க, வில்லியம்ஸ்சும், இராபர்ட்டும்தான் போறாங்க, இரண்டு பேரும் இதுக்கு முன்னால இரண்டு மூணு முறை நமக்கு வேலை செஞ்சு கொடுத்திருக்காங்க

வில்லியம்ஸ் கப்பலை ஓட்டிக்கொண்டிருந்தான். அருகில் நின்றிருந்த இராபர்ட் மிகுந்த மகிழ்ச்சியுடன் வில்லியம், கிட்டத்தட்ட மூணு பெட்டி அளவுக்கு

தங்கத்தை எடுத்து கிட்டு போறோம். இதை எந்த இடத்துல இறக்க சொன்னாங்க, நாம அவங்க சொன்ன இடத்துல கொண்டு போய் சேர்க்க போறோமா?

வில்லியம்ஸ் சிரித்தான். இதைய கொண்டு போய் அவங்க சொன்ன இடத்துல சேர்த்தறதுக்கு நமக்கு என்ன பைத்தியமா? அவங்க நம்மளை நம்புனாங்களே? குழப்பமாய் இராபர்ட் கேட்டான். அவங்க நம்பறதுக்குத்தான இரண்டு பெரிய வேலைய செஞ்சு கொடுத்து நம்பிக்கையை காப்பாத்தி இருக்கோம். எப்படியும் அடுத்த புராஜெக்ட் இதுதான்னு எனக்கு தெரியும். அதுக்காகத்தான் காத்துகிட்டிருந்தேன்.

இராபர்ட் பயந்தான், வில்லியம்ஸ் அவங்க ரொம்ப மோசமானவங்க, நம்மளை உயிரோட விடமாட்டாங்க, பயத்துடன் சொன்னவனிடம்

வில்லியம்ஸ் நாம மட்டும் உயிரோட இருக்கவா போறோம் சிரித்து கொண்டே சொன்னான் .

வில்லியம்ஸ் என்ன சொல்றே? பயத்தில் கூவினான் இராபர்ட்.. என்ன பேச்சு பேசறே? நாம உயிரோட இருக்க மாட்டோமா?

வேடிக்கையை பாரு வில்லியம்ஸ் சொல்லி விட்டு கப்பலை ஓட்டுவதில் தீவிரமானான். அவன் முகம் பெருத்த சிந்தனையில் ஆழந்து போனது. அவன் முகத்தை சற்று நேரம் பார்த்து கொண்டிருந்த இராபர்ட் எதுவும் புரியாமல் அங்கிருந்து நகர்ந்தான்.

ஒரு நாள் முழுவதும் நகர்ந்தது மறு நாளிரவு வில்லியம் இராபர்ட்டை அழைத்தான். தயாராக இரு, நாம் நானூறு கிலோ மீட்டர் தாண்டி இருக்கிறோம். இன்னும் கொஞ்ச நேரத்தில் ஒரு கப்பல் வரும் இந்த தங்கத்தை இடம் மாற்றுகிறோம், அப்படியே அந்த கப்பலுக்கு தாவி விடுகிறோம். பாகிஸ்தான் வழியா தப்பிச்சு போறோம், எல்லாம் பக்காவா ஏற்பாடு பண்ணிட்டான் என் நண்பன். நாம் செய்ய வேண்டியது ஓண்ணே ஒண்ணூதான், நாம இந்த கப்பல்ல இருக்கறோம், வெடி விபத்துல கடலுக்குள்ள மூழ்கிப்போறோம், இது மட்டும் உலகத்துக்கு தெரியும், ஆனா “நாம எஸ்கேப்.” வெறியுடன் சிரித்தான் வில்லியம்ஸ்.

புரிந்தது போல் தலையாட்டினான் இராபர்ட்.

சற்று தொலைவில் கப்பல் ஒன்று வர உஷாரானான் வில்லியம்ஸ்..அந்த கப்பல் மெல்லிய வெளிச்சத்தை காட்டியபடி இதன் அருகில வந்து இருளோடு இருளாய் அருகில் நின்றது..

இராபர்ட் நாம இந்த கப்பலை எப்படி முழுகடிக்க முடியும்? அவனை பார்த்த வில்லியம்ஸ்

எல்லாம் ரெடி பண்ணிட்டேன். இன்னும் இருபது நிமிசத்துல நாம் இந்த பெட்டியை கடத்தி அந்த கப்பலுக்கு போயிடணும். அதுக்கு இருபது நிமிசம் மட்டும் எடுத்துக்கறோம் இருபது முடிஞ்சு இருபத்தி ஒண்ணாம் நிமிசம் நான் செட் பண்ணி வச்சிருக்கற வெடி தானாகவே வெடிச்சிடும்.

இப்ப சீக்கிரம் வா, நமக்கு நேரமில்லை. வேகமாக ஒடினார்கள். மேலே வந்த அவர்கள் அந்த கப்பலுக்கு சிக்னல் காட்டிவிட்டு வேலையை ஆரம்பிக்கலாம் என்று நினைத்து இருவரும் மேல்தளத்தில் வந்து நிற்க ‘டுமீல்’துப்பாக்கி குண்டு ஒன்று வில்லியம்சின் நெஞ்சில் பாய அப்படியே சாய்ந்தான் வில்லியம்ஸ், நெஞ்சை பிடித்து விழுந்தவன் ‘குயிக்’ இராபர்ட் கடல்ல குதிச்சிடு, என்னைய ஏமாத்திட்டான் அந்த துரோகி, நம்ம இரண்டு பேரை கொன்னுட்டு அந்த தங்கத்தை எடுத்து போக பிளான் பண்ணிட்டான். சொல்ல சொல்ல அவன் தலை சாய்ந்த்து

உங்களை உயிரோடு விடுவோம் என்று நினைக்கிறீர்களா? இராபர்ட்டை நோக்கி அடுத்த குண்டு வர அப்படியே கடலுக்குள் பாய்ந்து விட்டான். அடுத்த கப்பலுக்குள் இருந்து இந்த கப்பலுக்கு வர கயிறை கட்டி இழுத்து திமு திமுவென நான்கைந்து பேர் இந்த கப்பலுக்குள் குதித்து தங்கத்தை தேட முயற்சிக்கும் பொழுது இருபது நிமிடம் கடந்திருக்க…..”டமார்” தீப்பிழம்புடன் வெடித்த அந்த கப்பல் அப்படியே தங்கம் இருந்த பெட்டிகளுடன் ஆழத்தில்…மிக ஆழத்தில் அமிழந்து போனது நான்கைந்து பேர்களின் உடலுடன்.

சட்டென்று தன் பழைய நினைவுகளில் இருந்து மீண்ட இராபர்ட் அருகில் நின்றவர்களை பார்த்து இப்ப கயிறு எந்த ‘பொசிசன்ல’ இருக்கு? ஜஸ்ட் நூறடிதான் பாஸ்,

ஓகே, தன் அருகில் இருந்தவனுக்கு கண்ணை காட்ட ..அவன் எங்கோ வேகமாக சென்றான்.

அதுவரை கயிற்று இழுவையில் நிம்மதியாய் வந்து கொண்டிருந்த கிஷோர் திடீரென மூச்சை அடைக்க, சுவாசத்துக்காக திணறினான். ‘பாஸ்..திடீருன்னு” எனக்கு மூச்சு முட்டுது, என்ன பண்ணுதுண்ணே தெரியலை, தலை கவசத்திற்குள் கத்தினான். ஹூஹூம்..எந்த பதிலும் கிடைக்கவில்லை. ஆகாஷின் கதி இவனுக்கும் வர ஆரம்பித்தது. கொஞ்சம் கொஞ்சமாக தன் நினைவுகளை இழந்து அப்படியே அந்த கயிற்றிலேயே தனது உடலுடன் தொங்க ஆரம்பித்தான்.

இராபர்ட் கண்களில் முப்பது வருட காத்திருத்தலின் வெறி தெரிய காத்திருந்தான். கயிறு அவனது உணர்வுகளுக்கு எதிராக மெதுவாக வருவது போல தோன்றியது. அவனது உதவியாளன் எங்கோ சென்றிருந்தவன் இராபர்ட் அருகில் வந்தான். என்னாச்சு? கேள்வியாக கண்னை விரித்தான்.

மேலே அவன் பிணம்தான் வரும். நாம் பெட்டியை எடுத்து மறைச்சுட்டு இவனை அரசாங்கத்துக்கு சட்டபூர்வமாக கடல்ல மூச்சு திணறி இறந்துட்டதா காண்பிச்சுடலாம்.

அந்த பெட்டிகள் அவைகளை எடுக்க சென்ற இருவரையும் இழந்து மெல்ல..மெல்ல மேலே வந்து கொண்டிருந்தது.

மூன்று பெட்டிகளையும் முப்பது வருட ஆசையுடனும், ஒரு வித வெறியுடனும் பார்த்த இராபர்ட் சுற்றி இருந்தோரை அப்புறப்படுத்த பக்கத்தில் இருந்த உதவியாளனிடம் கண்ணை காட்டினான். அவன் இந்த பெட்டிகளை உள்ளறையில் கொண்டு போய் வையுங்கள், மூவருக்கும் உத்தரவிட கயிற்றை இழுத்து பெட்டியை தளத்தில் வைத்த மூவரும் மெளனமாய் அந்த பெட்டியை

உள்ளே கொண்டு போய் வைத்தனர். உயிரற்று இருந்த கிஷோர் தனியாக படுக்க வைக்கப்பட்டான்.

உள்ளறையில் ஆவலுடன் இராபர்ட் பெட்டியை பார்த்துக்கொண்டிருக்க அவன் உதவியாளன் ஒரு கம்பியை கொண்டு பெட்டிகளை சிரமபட்டு திறந்தான்..உள்ளே…… பாறைகள், பாறைகள், பாறைகள்…. மூன்று பெட்டிகளிலும் நிறைந்திருந்தது.

“யேய்” பெருங்கூச்சலுடன் கூவினான் இராபர்ட் பக்க்த்தில் இருந்த உதவியாளன் மிரண்டு தள்ளி நிற்க, வெளியில் நின்றிருந்த மூன்று ஆட்களும் உள்ளே ஓடி வந்தனர்.

மும்பையின் மிகப்பெரிய மனநல மருத்துவமனையில் இராபர்ட் அனுமதிக்கப்பட்டு தீவிர சிகிச்சையிலிருக்கிறான். அவன் பெரும் குரலில் தங்கம்…தங்கம்..தங்கம்..எங்கே? கேட்டுக்கொண்டே இருக்கிறான்..

முப்பது வருடத்துக்கு முன்னால் மும்பை துறை முகத்தில் நின்று கொண்டிருந்த சிறிய ரக கப்பலில் ஒரு வங்கியில் இருந்து கொண்டு வந்த தங்கம் ஏற்றப்படுகிறது. எல்லாம் கரெக்டா இருக்கா? செக் பண்ணிட்டீங்களா? இது இரகசிய பயணம். தங்கம் வெளி நாட்டு வங்கிக்கு போறது தெரிஞ்சா, கேள்வி மேல கேள்வி வரும்., பத்திரிக்கை காரனுங்களுக்கு தெரிஞ்சா இன்னும் பிரச்சினையாயிடும். செக்கிங்குல ஒண்ணும் மாட்டிக்கலையே. இல்லை,

கப்பல்ல போறது யாரு? நம்ம வில்லியம்ஸ்சும், இராபர்ட்டும் தான்.

ஓகே, இப்ப அவங்க எங்க, நம்ம ஆபிசுல உட்கார வச்சிருக்கறோம், நாம் தங்கத்தை ஏத்தறது அவங்களுக்கு தெரியக்கூடாதுன்னு அவங்களை அங்கேயே உட்கார வச்சிருக்கறோம். “குட்”

வேகமாக வந்த ஒருவன் கப்பல் தளத்தில் நிற்பவரிடம் ஏதோ சொல்ல, அவர் தன் உதவியாளனை கூப்பிட்டு அந்த பெட்டியில இருக்கற தங்கத்தை அப்படியே கொண்டு போய் நம்ம லாக்கர்லயே வச்சிடுங்க.

ஏன் பாஸ், என்னாச்சு?

இருநூறு மீட்டர் தள்ளி நம்ம தங்கத்தை கொள்ளை அடிக்க ரெடியா இருக்கறாங்களாம், பேசாம தங்கம் இருக்கற இடத்துலயே இருக்கட்டும்.

அப்ப அந்த மூணு பெட்டி? இந்த ட்ரிப்? எதையும் நிறுத்த வேண்டாம். பெட்டிக போற மாதிரியே இருக்கட்டும், ஆனா பெட்டிக்குள்ள தங்கம் மட்டும் இருக்க வேண்டாம். புரிஞ்சுதா? குயிக்..குயிக்..கப்பல்ல போற இரண்டு பேருக்கும் இது தெரிய கூடாது, சீக்கிரம்.

யெஸ் பாஸ், பத்து நிமிசத்துல ஏற்பாடு பண்ணிடறோம். .

. ஆனால் இடையில் வில்லியம்ஸ்சும், இராபர்ட்டும் வேறொரு திட்டம் வைத்து இந்த தங்கத்தை களவாட முயற்சிப்பார்கள் என்று எதிர்பார்க்கவில்லை. இத்தனை களேபரமும் இவர்களால் தான் நடந்தது என்றும் இவர்கள் அறியவில்லை.

முப்பது வருடங்களாய் இருந்த இடத்திலேயே இருந்த தங்கம் இன்னும் எத்தனை பேரை பலி வாங்குமோ தெரியவில்லை.

Print Friendly, PDF & Email

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *