கதையாசிரியர்:
கதை வகை: தொடர்கதை
கதைத்தொகுப்பு: கிரைம் த்ரில்லர்
கதைப்பதிவு: June 12, 2024
பார்வையிட்டோர்: 5,869 
 
 

(1971ல் வெளியான தொடர்கதை, ஸ்கேன் செய்யப்பட்ட படக்கோப்பிலிருந்து எளிதாக படிக்கக்கூடிய உரையாக மாற்றியுள்ளோம்)

அத்தியாயம் 11-12 | அத்தியாயம் 13-15

விஷயம் கொஞ்சம் சிக்கலாகும்

பதின்மூன்றாம் அத்தியாயம்

தியேட்டர் வாசலிலேயே அவர்களிடம் விடை பெற்றுக்கொண்டு என் அறைக்குச் செல்ல டாக்சியைப் பிடித்தேன். ஏமாற்றம், துக்கம், எல்லாவற்றிற்கும் அர்த்தம் என்ன என்று தெரியாத அற்ப நிலை. பின்னிரவு. மனச்சாட்சி சம்மதிக்காத எத்தனையோ சந்தர்ப்பங்கள். டாக்சியின் உள்ளே தனிமையில் நான் பலவித உணர்ச்சிகளின் கதம்பமாகச் சென்றேன். சென்றதும் ஒரே ஒரு அவுன்ஸ் சாப்பிட்டு விட்டு படுத்தவன்தான். நல்ல பகலில் எழுந்தேன். எழுந்ததற்கு காரணம் பிடிவாதமாகத் தட்டப்பட்ட என் அறை முகப்புக் கதவு தான். உலகத்தை சபித்துக்கொண்டு எழுந்து திறந்ததில் தெரிந்தவன் அதிக உயரமாக, “வரச் சொன்னார்” என்றான். சிக்கனமாக “யார்” என்று கேட்டதற்கு மறுபடி “வரச் சொன்னார்” என்றான். நிஷாவின் தந்தைதான் இருக்க வேண்டும். அவன் சொக்காயைக் கழற்றினால் எப்படி இருப்பான் என்று சற்று நேரம் யோசித்தேன். இந்த யோசனை நான் சாதாரணமாகப் பெண்களைப் பற்றித்தான் யோசிப்பேன். இந்தப் பிரத்தியேகன், துஷ்ட காரியங்களுக்கென்றே ஏற்பட்டவன் போலத் தோன்றியதால் சமயம் வரும்போது என்னைப் பந்தாடப் போகிறான் என்று எனக்கு உள்ளங்கை நெல்லிக் கனிபோல் தெரிந்ததால், அந்த மாதிரி நினைக்க வேண்டியதாக இருந்தது. 

சட்டென முகத்தில் தண்ணீரை அடித்துக் கொண்டுவிட்டு, பற்பசை தேய்த்துவிட்டு, காப்பி கூட சாப்பிடாமல் கிளம்பினேன்.


மறுபடி சாணக்கியபுரி. 

நிஷாவின் தந்தை என்னை மூலையில் உட்கார வைத்தார். முதலிலிருந்து கடைசி வரை எல்லாவற்றையும் கமா, புல்ஸ்டாப் விடாமல் கேட்டார். நான் சொன்னேன். லக்னோ, பிஸ்வாஸ், நிஷா, விமானம், கோளாறு, இறங்கல், இரவு புறப்பாடு, ‘டில்லி’ காமிராப் பையன், சிகரெட் நெருப்பு, நிஷா எங்கே? வரைக்கும்] அவள் பேசின ஒவ்வொரு வாக்கியத்தையும் திருப்பிச் சொல்லச் சொன்னார். இயன்றவரைக்கும் சொன்னேன். நேற்றிரவு சுருக்கமாகச் சொன்ன பயமுறுத்தலை விஸ்தாரமாகச் சொன்னார். “காப்டன் ஜேகே! இன்று சாயங்காலத்துக்குள் அவளை நீங்கள் என்னிடம் சேர்ப்பிக்க வேண்டும்” என்றார். 

“எப்படி ஸார்” என்று கேட்டதற்கு அவர், “எனக்குத் தெரியாது” என்றார். நான் சிரித்தேன். அவர் என்னைப் பார்த்த பார்வையில் சிரிப்பு பாதியில் உறைந்த காமிராச் சிரிப்பாகியது. “ஸார் உங்களுக்கு நீங்கள் ஒரு பெரிய சர்க்கார் அதிகாரி. உங்களால் முடியாதது என்னால் முடியுமா? அவள் டில்லியில்தான் இருக்கிறாள். அவளை நான் ஒண்டியாள் எப்படிக் கண்டுபிடிக்கப் போகிறேன். என்ன விளையாட்டாக இருக்கிறது?” 

அது விளையாட்டு இல்லை என்பதை நான் இன்று மாலை தெரிந்துகொள்ளப் போகிறேன் என்றார் பெரிய ஸார்.

“சரியாக மாலை 6.30க்கு நீங்கள் மறுபடி அரெஸ்ட் செய்யப்படுவீர்கள்.”  

“எதற்கு?”

“அதே குற்றத்துக்கு. ஓப்பியம் கடத்தியது. கள்ளநோட்டு பரப்பியது…”

“ஓ! முதல் இரண்டு அத்தியாயங்களா? அது இன்னும் ஞாபகம் இருக்கிறதா உங்களுக்கு?”

“நன்றாக.”

“அதாவது 6.30க்குள் நிஷாவை நான் சேர்ப்பிக்காவிட்டால்.” 

“ஆம்.” 

“கொண்டு வந்து விட்டால்.” 

“விடுதலை.” 

“நீங்கள் உதவி செய்வீர்களா? கண்டுபிடிப்பதற்கு போலீஸ் உதவி, கார் உதவி, அப்புறம் ஏதாவது கைச் செலவுக்கு.”

“கேட்டது கிடைக்கும்.”

“6.30?” 

“ஆம்.” 

“கண்டுபிடிக்கிறேன் ஸார், நிச்சயம்!”

“இவரைக் கொண்டு விடு” என்று ஆணையிட்டார்.

“அந்தப் பெரிய இம்பாலாவை எடுத்து வா பையா ! 6.30 வரை கொஞ்சம் வாகன பாக்கியமாவது இருக்கட்டும்.” 

எனக்கு எதும் பிடிபடவில்லை. ஏதோ கண்டுபிடிக்கிறேன் என்று சொல்லிவிட்டேனே தவிர, அந்தப் பெண்ணை – அதுவும் தப்பித்துப் போன பெண்ணை டில்லி ஜனங்களின் மத்தியில் கண்டுபிடிப்பது – பத்து மாடிக் கட்டடத்தின் உச்சியிலிருந்து எச்சில் துப்பி அது கீழே ஸ்கூட்டரில் விரைவாகச் செல்லும் என் நண்பர் வரதாச்சாரியின் வழுக்கையான மண்டையில் படுவது எவ்வளவு சாத்தியமோ அவ்வளவு தான்.

இம்பாலா காரில் நீ போயிருக்கிறாயா ஜயந்தி! உள்ளே உட்கார்ந்ததும் ஏர் கண்டிஷனர் மெதுவாக உறும ஆரம்பித்து, ஏதோ ஒரு பெருமுச்சுக்குள் உட்கார்ந்து செல்வதுபோல சுகம். அதை கனாட் ப்ளேஸ் வரை ஓட்டிச் சென்றேன். அங்கே இறங்கிக் கொண்டு ஒரு கப் காப்பி வாங்கிச் சாப்பிட்டேன். மெத்தென்று ஸாண்ட்விச்கள், கடித்துக் கொண்டேன். தனியாக ஓட்டல் மேஜையில் உட்கார்ந்து யோசித்தேன். எப்படித் தேடுவதை ஆரம்பிப்பது? 

பேசாமல் தேடாமலேயே இருந்துவிட்டு அறைக்குப் போய் கொஞ்சம் தபலா தட்டிவிட்டு நேராக ஸ்டேஷனுக்கு நடந்துவிட்டால் என்ன? நல்ல அருமையான யோசனைதான். அல்லது கைவசம் கப்பல் கார் இருக்கிறது. 6.30 வரையாவது அனுபவிக்கலாமே!

கிர்ர்ரக் கிர்ரக் கிர்ர்ரக் கிர்ரக் என்று கைலாஷ் காலனியைக் கழற்றினேன். 

“ஜ்யோ!” 

“தூங்குகிறார்கள்” என்றான் வேலைக்காரன்.

“மணி பத்து, எழுப்பு ரொம்ப அர்ஜெண்ட் என்று சொல்.”

“நீங்கள் யார் பேசறது?” 

“அவள் பெரிய மாமா கான்பூரிலிருந்து பேசுகிறேன்.”

“சற்று நேரம் இருங்கள். வைத்துவிடாதீர்கள். உடனே கூப்பிடுகிறேன்.” 

“ஹு இஸ் இட்” என்றாள் ஜ்யோ கொட்டாவி கலந்து. 

“நான்தான் ஜேகே! ஜ்யோ நேராக ஷவருக்குப் போ. குளி. எதையாவது கடி. தயாராக இரு. நான் வருகிறேன். யூ ஸி ஜ்யோ! காலைதான் ஒரு இம்பாலா வாங்கினேன், திறப்புவிழா செய்ய வேண்டும்.” 

‘ஜேக்! நீ என்ன சொல்கிறாய்?” 

“என் அருமை சகோதரி! பதினைந்து நிமிஷம். ரெடியாக இரு” என்று டெலிபோனை வைத்தேன்.

எவ்வளவு பைசா?


‘ரப்பட்டீர ரப்’ என்று டிரம் தட்டிக்கொண்டிருந்தான் ஒரு வழுக்கை. ரம்ப்பம் ரும்ப்பம் என்று ஸாக்ஸபோனில் வழிந்து கொண்டிருந்தான் ஒரு பரட்டை.

தொம் தொம் என்று டபிள் பேஸை மிதித்துக்கொண்டிருந்தான் ஒரு சலவை செய்யாத கோட். 

மைக்கை மார்பில் செருகிக்கொண்டு ‘ரெய்ன் ட்ராப்ஸ் கீப் ஃபாலிங்’ பாடிக்கொண்டிந்தாள் ஒரு லோகல். 

ஐந்தாறு பேர் லஞ்ச் மென்று கொண்டிருந்தார்கள்.

“ஜ்யோ நான் ஒரு ஸைஃபர்” என்றேன்.

“நாட் இன் பெட்” என்றாள் ஜ்யோ. 

“ஜ்யோ! டில்லியில் ஒரு குறிப்பிட்ட பதினெட்டு வயது நக்ஸலைட் பெண்ணை எப்படி நான்கு மணி நேரத்திற்குள் கண்டுபிடிப்பது?” என்று கேட்டேன். 

அவள், “கண்டுபிடிக்க வேண்டாம்” என்றாள். 

“ஜ்யோ ஜெயிலில் வந்து என்னை அடிக்கடி பார்க்கிறாயா”

“நானும் உன்னுடன் ஜெயிலுக்கு வந்துவிடுகிறேன். அந்த ஆளின் ஸாக்ஸபோனைப் பிடுங்கி அட்டகாசம் செய்யட்டுமா?” என்றாள்.

“ஹல்லோ ஜேகே” என்று ஒரு மூலையிலிருந்து பலத்த குரல் கேட்டது. திரும்பினால் ஹுஸேன். 

“வந்துவிட்டாயா?” என்றேன். ஹுஸேன் என் நண்பன். பத்திரிகை நிருபன். ஏ.பி.ஸ்தாபனம். ஹுஸேன் தாடி என்று சொல்லும்படியாக ஒரு சிக்கலான சமாச்சாரம் தாடையில் வளர்த்திருந்தான். அதைச் சென்ற மார்ச் மாதத்திற்கு அப்புறம் சீர்படுத்தியதாகத் தெரியவில்லை. முரட்டுக் கதரில் ஷர்ட் அணிந்திருந்தான். கூர்மையான கண்கள். புருவங்கள் இரண்டு பூச்சிகள். நடந்தால் மூக்கு முன்னால் போகும். அப்புறம்தான் அவன் பேசுவான். அவ்வளவு தீர்க்கமான மூக்கு. குரல் எப்போதுமே இரண்டு மூன்று டெஸிபல் உச்சம். அட்டகாசச் சிரிப்பு.

அகலமான கை கொடுத்துக் குலுக்கினான். பெரிய சுருட்டுப் பிடித்துக்கொண்டிருந்ததை ஆஷ்டிரே கொள்ளாமல் திணித்து அணைத்துவிட்டு ஜ்யோவைப் பார்த்து ‘ஹலோ’ என்றான். நாற்காலியை எங்கேயோ ‘எக்ஸ்கியூஸ் மீ’ சொல்லிவிட்டு இழுத்து வந்து எங்களருகில் உட்கார்ந்தான். “ஜ்யோத்ஸ்னா என் கஸின்” என்றேன். ஜ்யோ என்னைப் பார்த்தாள். ஒதுங்கி உட்கார்ந்து கொண்டாள். 

“ஜேகே. வேர் ஆர் யூ தீஸ் டேஸ்?” என்றான்.

“இன் ஜெய்ல்” என்றேன். 

“அப்படியா?” என்றான். 

“இது ஹுஸேன். என் சினேகிதன், பத்திரிகை நிருபன்” என்றேன்.

“அப்படியா?” என்றாள். ஜ்யோவின் சுத்தமான அழகிற்கும் ஹூஸேனின் புஷ் ஷர்ட் அணிந்த காட்டுமிராண்டித் தனத்துக்கும் சரியான எதிர்மறை தெரிந்தது.

“ஹுஸேன்! என்ன சாப்பிடுகிறாய்?” என்றேன்.

“யாஹ்யா கான் வேண்டும்.” 

“ஓ, எஸ். பங்களா தேஷ் அண் வாட் நாட். இங்கே ஏதோ உலக மாநாடு கூடுகிறார்கள் போலிருக்கிறதே?” 

“ஆண்ட்ரே மால்ரோ என்ன சொன்னான் தெரியுமா? ஏண்டா சோம்பேறிப் பயல்களா, பங்களா தேஷூக்காக மகாநாடு கூடுகிறீர்கள்? அங்கே போய் சண்டை போடுங்களேன் என்றான்! ப்ரெஸ் ரிப்போர்ட் எல்லாம் தப்பு, எல்லோரும் கல்கத்தாவிலிருந்து கொண்டு எழுதுகிறார்கள். ஜேகே இங்கே இருந்துகொண்டு என்ன செய்கிறாய்? ப்ரெஸ் கிளப் வாயேன், பீர் சாப்பிடலாம்” என்றான். மேலும் ஐயோவைப் பார்த்து, “ப்ரெஸ் கிளப் பார்த்திருக்கிறாயா?” என்று கேட்டான் அவன். “இல்லை” என்று சொல்ல, “சரியான மெனாஜெரி” என்றான். 

பீர் என்ற சொல் உற்சாகத்தைக் கொடுத்தது எனக்கு. ஜெயிலுக்குப் போவதன் முன் இலவசமாக வரும் தாக சாந்தியை ஏன் விட வேண்டும்? ஜ்யோ இஷ்டமில்லாமல்தான் வந்தாள். அவள் கூட்டமில்லாத சினிமாவுக்குப் போகலாம் என்று சொல்லிக் கொண்டிருந்தாள். 

இம்பாலாவை நான் திறந்தபோது ஹுசேன், “ஜேகே காரைத் திருட உத்தேசமா?” என்று கேட்டான். “என் கார்தான், வா” என்றேன். 

விஸில் அடித்துவிட்டு, “நோட்டு அச்சடிக்கிறாயா?” என்று கேட்டான். 

“இல்லை. இன்று சாயங்காலம்வரை ஒரு தற்காலிகக் கார்…”


ப்ரெஸ் கிளப்பின் பழைய கட்டடத்தில் பழைய பிரம்பு நாற்காலி களில் உட்கார்ந்தோம். மூலையில் ஒரு டெலிவிஷன். கீழே கயிற்றுப் பாய்கள். வெயிட்டர் வந்து எங்களைத் தற்காலிக மெம்பர்கள் ஆக்குவதற்கு ஹுஸேனிடம் கையெழுத்து வாங்கிக் கொண்டு போனான். 

பத்திரிகை ஆசாமிகள் ஒரு தனி ரகம். தனி ஸ்பீஸிஸ். அவர்கள் பொய்களை ஜோடிப்பவர்கள். உண்மைகளை வார்த்தைகளில் கரைப்பவர்கள். பின்னிரவில் டைப்ரைட்டரின் முன் உட்கார்ந்து கொண்டு ஒரு வார்த்தைக்காக ஒரே ஒரு வார்த்தைக்காக வெள்ளமாக டீ குடித்து சிகரெட் புகைத்து யோசித்துக் காத்திருப்பவர்கள். அவர்கள் காதுகளில் எப்பொழுதும் டெலி பிரிண்டர் இரையும். அவர்கள் வார்த்தைகளில் எப்பொழுதும் அரசாங்கம் மிதக்கும். தனி ரகம்தான், எத்தனையோ ரத்தங்கள் பார்த்தவர்கள்; எத்தனையோ. விமானங்களில் சென்றவர்கள். அச்சியந்திரத்தின் அவசரகதியில் அவர்களின் ஒரே எதிரி காலம்.

யார் யாரோ ஹஸேனை ‘ஹலோ’ செய்தார்கள். அன்றைய கணத்தின் அரசியலை சங்கேத பாஷையில் அலசினார்கள். நான் அவர்களில் அன்னியனாக உணர்ந்தேன். எனக்காவது சில்லென்று பீர் இருந்தது. ஜ்யோதான் என்னையே முறைத்துக் கொண்டிருந்தாள். என்னை இங்கே கொண்டு வந்துவிட்டாயே என்று குற்றம் சாட்டினாள் கண்களால். 

சுற்றிலும் பங்களா தேஷ், இந்திரா, அமெரிக்கப் பொருளாதார நெருக்கடி, பாகிஸ்தான் பார்லிமெண்ட்… ஹுசேன் ஜ்யோவை ஏதோ கேட்க, அவள் அசுவாரஸ்யமாகப் பதில் சொல்ல, நான் சடக்கென்று நின்றேன். “ஹுசேன்!” 

“எஸ். ஜேகே!” 

“அந்தப் பையனை உனக்குத் தெரியுமா?”

ஹுசேன் நான் காட்டியவனைத் திரும்பிப் பார்த்தான். “தெரியாது. போட்டோகிராபர். இது நிச்சயமாகச் சொல்லலாம். எத்தனையோ ப்ரெஸ் போட்டோகிராபர்கள் வருவார்கள்…”

நான் அந்தப் பையனையே பார்த்தேன். அவன் எங்களிடமிருந்து முப்பது அடி தள்ளி எதிரே ஒரு குறுந்தாடி இளைஞனுடன் பேசிக் கொண்டிருந்தான். அவன்தான் நேற்று என்னை விமான நிலையத்தில் சிகரெட் நெருப்புக் கேட்டவன்; என்னை மறைத்து நிஷாவைத் தப்பிக்க வைத்தவன். அவன் எதிரே ஒரு கண்ணாடி டம்ளரில் சாப்பிட்டுக்கொண்டிருந்தான். மது இருந்தது. அதை அவசரப்படாமல் கொஞ்சம் கொஞ்சமாகச் சாப்பிட்டுக் கொண்டிருந்தான்.

“ஹுசேன், அவன் யார் என்று கண்டுபிடிக்க முடியுமா?”

“ஏன்?” 

“ஒரு முக்கியமான காரியம்…” 

“வா, அவனையே போய்க் கேட்டுவிடலாம்.”

“வேண்டாம். அவன் அறியாமல் தெரிந்துகொள்ள வேண்டும்.“

“என்ன இது ஸ்பை வேலையாக இருக்கிறது!”

“ஹுஸேன், நான் விவரமாக இதைச் சொன்னால் நேரம் பிடிக்கும். முடியுமா முடியாதா? சொல்.” 

“அவன் எதிரே உட்கார்ந்து பேசிக்கொண்டிருப்பவன் எனக்குத் தெரிந்த ஆள். ‘ஹெரால்ட்’ ஆசாமி. நான் அவனைச் சந்திக்கப் போவதுபோல் செல்கிறேன்.”

“கொஞ்சம் இரு ஹுசேன்!” என்று சுற்றுமுற்றும் பார்த்தேன்.

“அந்த ரூமில் என்ன இருக்கிறது?” 

“அங்கேயும் நாற்காலிகள்…மேஜைகள்.”

“நாங்கள் அங்கே போகிறோம். போனபின் நீ போய் விசாரி” என்றேன். 

“எதற்கு என்று சொல்லேன்…” 

“அப்புறம் விவரமாகச் சொல்கிறேன்.. கம் ஆன் ஜ்யோ…”

நானும் அவளும் அடுத்த அறைக்குள் நுழைந்து அங்கே போய் உட்கார்ந்தோம். அந்த அறைக் கதவின் பாதிக் கண்ணாடி வழியாக அந்தப் போட்டோ இளைஞன் தெரிந்தான். அவன் இன்னும் மெதுவாகப் பேசிக்கொண்டிருந்தான். நிச்சயம் என்னைப் பார்க்க வில்லை. 

ஹுஸேன் கையில் கிளாசுடன் அவர்களிடம் போவது தெரிந்தது. அந்தப் பையனுக்கு எதிரே உட்கார்ந்திருந்தவனுடன் கைகுலுக்கி விட்டு ஒரு நாற்காலியை இழுத்துக்கொண்டு உட்காருவது தெரிந்தது. அவர்கள் பேசுவது தெரிந்தது. ஹுஸேனின் நண்பன் அந்தப் பையனை ஹுஸேனுக்கு அறிமுகம் செய்வது தெரிந்தது. ஹுஸேன் அவனுடன் பேசுவது தெரிந்தது. 

“ஹுஸேன் கெட்டிக்காரன்” என்றேன். 

“ஜேகே! எனக்கு ஒன்றும் புரியவில்லை. வா போகலாம்!”

“எனக்கு என்னவோ தோன்றுகிறது. இன்று மாலைக்குள் நான் நிஷாவைக் கண்டுபிடித்துவிடுவேன் என்று..”

“நிஷா யார்?” என்றாள் ஜ்யோ. 

“நிஷா – வயது பதினெட்டு – ஒரு இனிய வெடிமருந்து” என்றேன். “அவளைத்தான் நான் நேற்று விமானத்தில் கொண்டு வந்தேன்”. 

ஹுஸேன் ஏதோ ஜோக் சொல்ல, அவர்கள் இருவரும் சிரிப்பது தெரிந்தது. கேட்கவில்லை. அந்தப் பையன் சற்று அடக்கத்துடன், சிரித்துச் சுற்றும் முற்றும் பார்த்தவன்… 

என்னைப் பார்த்து விட்டான். அவன் சிரிப்பு நின்றுவிட்டது. சட்டென்று தன் பானத்தை ஒரு மடக்கில் குடித்தான். அவர்களிடம் ஏதோ மன்னிப்புக் கேட்பதுபோல் தெரிந்தது. மறுபடி என்னை ஒரு தடவை பார்த்துவிட்டு எழுந்து அவர்களிடம் கைகுலுக்கிவிட்டு விருட்டென்று சென்றுவிட்டான். 

“ஹுசேன், ஹுசேன்! அவனைப் பிடி.” என்றேன். ஹுசேன் இன்னும் உட்கார்ந்திருந்தான். என்னைப் பார்த்தான். நான் எழுந்து நின்றேன். அவனைக் கூப்பிட்டேன். ஹுஸேன் மிச்சமிருந்தவனுடன் இன்னும் கொஞ்சம் பேசிவிட்டு எழுந்து என்னை நோக்கி வந்தான்…

“ஹுஸேன்! அவன் எங்கே போய்விட்டான்?” என்றேன். 

“வேலை இருக்கிறது என்று கிளம்பிவிட்டான்”. 

“ஹுஸேன்! அவனைப் பிடிக்க வேண்டும்! உடனே பிடிக்க வேண்டும்.”

“அவன் யார் என்று தெரிந்துகொள்ளத்தானே விரும்பினாய்?” 

“அவன் யார் ?” 

“அவன் ஒரு போட்டோகிராபர். தனிப்பட்டவன். ஃப்ரிலான்ஸர். ப்ரெஸ் வேலைகள் செய்வானாம். கனாட் பிளேசில் எங்கேயோ ஜி பிளாக்கில் ஒரு சின்ன ஸ்டுடியோ வைத்திருக்கிறானாம். ரெயின்போ ஸ்டுடியோவோ என்னவோ சொன்னான்.” 

“இதை அவனே சொன்னானா?” 

“இல்லை. அவன் போனபின் அவன் நண்பனிடம் கேட்டேன். எங்கே போகிறாய்?” 

“எனக்கு வேலை இருக்கிறது! கமான் ஜ்யோ, ஹுஸேன், எல்லாவற்றிற்கும் தாங்க்ஸ். மறுபடி சந்திப்போம்.” என்று ஜ்யோவை இழுத்துக் கொண்டு கிளம்பியவன் மறுபடி தயங்கினேன். “ஹுசேன்! இங்கே டெலிபோன் இருக்கிறதா?” என்றேன். 

அவன் என்னை அழைத்துச் செல்ல, டெலிபோனுக்குச் சென்று நிஷாவின் தந்தைக்கு டெலிபோன் செய்தேன். 

“காப்டன் ஜேகே பேசுகிறேன். ஒரு முக்கியமான விஷயம்.”

“காப்டன், எங்கே இருக்கிறாய்? அப்பாடா! உன்னை எங்கெல்லாம் தேடுவது..?” 

“நான் அலைந்துகொண்டிருந்தேன். நிஷா நேற்றுத் தப்பித்தாளே, அதற்கு உடந்தையாக இருந்தவனைப் பற்றி கொஞ்சம் தகவல் தெரிந்தது. கானட் பிளேசில் ஜி பிளாக்கில்…”  

“காப்டன் ஜேகே!” 

“எஸ் ஸார்!” 

“உனக்குத் தெரிய வேண்டியது நிறைய இருக்கிறது.” 

“என்ன ஸார்!” 

“உடனே என் வீட்டுக்குக் காரை எடுத்துக்கொண்டு வா. விஷயம் ரொம்ப சிக்கலாகிவிட்டது.”

“இல்லை ஸார். நிஷாவைக் கண்டுபிடிக்காமல்.. “

“நிஷாவைக் கண்டுபிடிக்க வேண்டாம்.” 

“ஏன்?” 

“அவள் இங்கு என்னிடம் இருக்கிறாள். இப்போதுதான் வந்தாள். ஆனால்!” 

“ஆனால் என்ன?” 

“நீ நேரே வா, சொல்கிறேன்.”

சற்றுப் புரிய கஷ்டமாக இருக்கும்

பதினான்காம் அத்தியாயம்

“நிஷாவைச் சந்திக்கிறாயா, ஜ்யோ?” என்றேன். 

“உன் நண்பன் ஹுஸேனைத் தவிர வேறு யாரை வேண்டுமானாலும் சந்திக்கத் தயார். பார்வையாலேயே என் சட்டையைக் கழற்றி விட்டான்” என்றாள். 

நான் கடமைக்குச் சிரித்தேன். என் மனம் பூராவும் நிஷாவின் வினோத நடத்தைதான் வியாபித்திருந்தது. காருக்குச் சென்றோம். நிஷாவை முதலில் சந்தித்ததிலிருந்து அவளைத் தவறவிட்டதுவரை அவள் பேசின வார்த்தைகள் ஞாபகம் வந்தன. பிரயாணத்தின்போது நேற்று முதல் நாள் இரவு அந்த விமான நிலையத்தின் ரெஸ்ட் ரூமில்… அங்கே அவள் சுலபமாகத் தப்பித்திருக்கலாம். காலை என்னிடம் சாவியை எறிந்துவிட்டு, “தப்பிக்க இன்னும் சமயம் வரவில்லை” என்று அவள் சொன்னதில் தென்பட்ட ஒரு நிர்ணயம். ஒரு குறிக்கோள்… அங்கு ஏன் தப்பிக்கவில்லை! இங்கு டில்லியில் ஏன் தப்பித்தாள்? தன் தந்தையைச் சந்திக்க விரும்பவில்லையா? (கார் சென்று கொண்டிருந்தது) அப்படியும் இல்லையே! தானாகவே தந்தையிடம் வந்து சேர்ந்துவிட்டாளே! இந்த இடைநேரத்தில் என்னதான் செய்தாள்? யாரைச் சந்தித்தாள்? அந்தப் போட்டோ இளைஞனுடன் எங்கு சென்றாள்? 

பொதுவாகவே நேற்று நிகழ்ந்த சம்பவங்களின் வானிலையில் ஓர் எச்சரிக்கை இருக்கிறதாகத் தென்பட்டது எனக்கு. அந்த எச்சரிக் கையை என்னால் சரியாகப் படிக்க முடியவில்லை. 

மறுபடி நிஷாவின் தந்தையின் வீட்டை அடைந்தேன். ஜ்யோ, “நான் வரவேண்டுமா? காரில் இருக்கிறேனே?” என்றாள்.

“கார் இனி நமதில்லை கண்ணே” என்றேன். 

இருவரும் முகப்பறையில் காத்திருந்தோம். நிஷாவின் தந்தை துண்டால் முகத்தைத் துடைத்துக்கொண்டு வந்தார். “காப்டன் ஜேகே! அட்லாஸ்ட்” என்றார். 

“அவள் எப்படி இருக்கிறாள்? எங்கே போயிருந்தாளாம்” என்றேன்.

“பேசவே மாட்டேன் என்கிறாள். ஒன்றும் சொல்ல மாட்டேன் என்கிறாள். மாடியில் உட்கார்ந்திருக்கிறாள். சாப்பிட மறுக்கிறாள்” என்றார்.

“நான் அவளைச் சந்திக்கிறேன். என்னிடம் பேசுவாள்” என்றேன் 

“ட்ரை” என்றார்.

ஈவ்ஸ் வீக்லியைப் புரட்டிக்கொண்டிருந்த ஜ்யோவை “இரு வருகிறேன்” என்று உட்கார வைத்துவிட்டு மாடிப்படி ஏறி அவர் காண்பித்த அறைக் கதவைத் திறப்பதற்கு முன் கீழே நிஷாவின் தந்தையின் கவலை தோய்ந்த முகத்தை ஒரு தடவை பார்த்தேன்.

நான் உள்ளே சென்றேன். அவள் ஜன்னலுக்கு வெளியே பார்த்துக் கொண்டிருந்தாள். 

“நிஷா” என்றேன். 

நிஷா என்னைத் திரும்பிப் பார்த்தாள். 

இங்கே தான் இந்தக் கதையின் சிக்கலான முடிவு ஆரம்பம். ஓர் அரைமணி நேர நிகழ்ச்சியை நான் இப்பொழுது சொல்லப் போவதில்லை. அதற்கு என்று சமயம் வரும்போது சொல்கிறேன். காட்சியை அரைமணி தள்ளி அமைப்பதற்கு அனுமதி கேட்டுக் கொள்கிறேன்.

நான் ஜ்யோவுடன் மறுபடி அந்தக் காரில் விரைந்தேன். பின்சீட்டில் நாங்கள் உட்கார்ந்திருக்க, முன்னே எனக்கு ஒத்தாசைக்காக அனுப்பப் பட்ட ஒருவன் மௌனமாக செலுத்திக்கொண்டிருந்தான். என் மனம் விவரம் புரியாத இந்த நிழல் தேடும் விந்தையில் குழம்பி இருந்தது. கனாட் பிளேஸில் ஜி பிளாக் என் முதல் அவசரம். ஞாபகம் இருக்கிறதா நிஷா தப்பிப்பதற்கு உடந்தையாக இருந்தவன் ஒருத்தனை – அந்த இளைஞனை மறுபடி நான் ப்ரெஸ் கிளப்பில் பார்த்தேனே! பார்த்து என் நண்பன் ஹுசேன் மூலம் அவன் யார், அவன் ஜி ப்ளாக்கில் போட்டோ ஸ்டுடியோவில் இருக்கிறான் என்று கண்டு கொண்டேனே! என்னைப் பார்த்ததும் ஓடி விட்டானே… 

ஜி பிளாக் அருகில் நிறுத்தச் சொன்னேன். அந்த ஸ்டுடியோ உள் வட்டத்துக்கும் வெளி வட்டத்துக்கும் இடையில் அகப்பட்டுக் கொண்ட வட்டத்தில் இருந்தது. வாயிலில் சில பெண்கள் மார் திறந்து சிரித்துக் கொண்டிருந்தார்கள். போட்டோக்களில், இந்தியாவில் செய்யப்பட்ட பாக்ஸ் காமிராக்கள் ஜன்னலை அலங்கரித்தன. ஒரு ஆளையே ஆறு போஸ் எடுத்து இரண்டு ரூபாய் கேட்டது விளம்பரம். ஸ்டுடியோவுக்கு உள்ளே செல்லவில்லை. எதிரே இருந்த பஞ்சாபி ஓட்டலில் நுழையத் தீர்மானித்தேன். ஒரு கண்ணில்லாத பையன் மாலைச் செய்தித்தாள் விற்றுக்கொண்டு தடவி நடந்து சென்றான். அவனை நிறுத்தி அவன் கையில் காசு வைத்துவிட்டு ஓட்டலில் நுழைந்து முதல் மேஜையில் உட்கார்ந்து எதிரே ஸ்டுடியோவைக் கண்காணித்தேன். ஒரு டீ ஆர்டர் செய்தேன். பேப்பரைப் பிரித்தேன். “பங்களாதேஷ் அகதிகள் ஒன்பது மில்லியன் எண்ணிக்கையைக் கடந்துவிட்டார்கள்” டீ வந்தது எதிரே ஸ்டுடியோவைப் பார்த்தேன். சலனமில்லை. “மல்ஹோத்ரா புதிய பாலத்தை இன்று திறக்கிறார். எத்தனையோ லட்சம் செலவில் கட்டிய பாலம்.” டீயை ஆறவைத்து எதிரே பார்த்துக்கொண்டே குடித்தேன். “நேருக்கு நேர் அன்று மாலை பிரதமர் இளம் பெண்களைச் சந்திக்கிறார்”. அந்த ஸ்டுடியோவிலிருந்து அந்த இளைஞன் வெளிவந்தான். அவன் தான்! நான் செய்தித்தாளால் முகத்தை மறைத்துக்கொண்டேன். அதற்காகத் தானே வாங்கினேன். 

அவன் ஒரு காமிரா வைத்திருந்தான். ஸ்டுடியோவுக்கு எதிரே நிறுத்தப்பட்டிருந்த ஒரு ஸ்கூட்டரைத் திறந்து உதைத்துக் கிளப்பினான். உடனே புறப்பட்டான். நான் அவசரமாக முப்பது பைசாவை சர்தார்ஜியிடம் இறைத்துவிட்டுக் கிளம்பி எங்கள் காருக்கு வந்தேன். “அதோ பார் ஒரு ஸ்கூட்டர் போகிறதே டி எல் எச் 2520 அதைப் பின்பற்று” என்று அவசரம் கலந்தேன். மௌனமாகப் புறப்பட்டது கார். 

ரீகல் தாண்டி பார்லிமெண்ட் தெருவில் திரும்பி ஜந்தர் மந்தர் வரை சென்று சாலை ஓரத்தில் அவன் நிறுத்தினான். நாங்கள் சற்று பின்வாங்கி நின்றோம். அவன் நடந்தான். பெரிய கேட்டுக்குள் நுழையாமல் சுவரோடு நடந்து சந்து முனைக்குச் செல்வது தெரிந்தது. நாங்கள் ஊர்ந்தோம். சந்து முனையில் ஒரு பியட் கார் அருகே சென்றான். அதன் பின்பக்கத்தில் உட்கார்ந்திருந்த யாரிடமோ தன் காமிராவைக் கொடுத்துவிட்டு திரும்ப தன் ஸ்கூட்டரை நோக்கி நடந்தான். பியட் கார் உடனே புறப்பட்டு எங்கள் அருகில் வந்து கடந்தது. அதில் மூன்று பேர் இருந்தார்கள். ஒரு பெண்! காமிராவை அவர்கள் ஆராய்ந்து கொண்டிருந்தார்கள். அந்தக் கார் சாலையில் மற்ற கார்களுடன் கலந்து, நான் மேலே என்ன செய்யலாம் என்று யோசிப்பதற்குள், கரைந்து மறைந்துவிட்டது. 

இளைஞன் தன் ஸ்கூட்டரை உதைத்து ஏறிக்கொண்டான். என் டிரைவர், “என்ன செய்ய?” என்றான். 

“அந்த பியட் காரைத் தொடர நினைத்தேன்” என்றேன். “எந்த பியட் கார்?” என்றான். சரிதான் என்று அலுத்துக்கொண்டு, “அந்த ஸ்கூட்டரைத் தொடரு” என்றேன். 

இளைஞன் மறுபடி ஜி பிளாக் சென்று அந்த ஸ்டுடியோவுக்கு எதிரே தன் ஸ்கூட்டரை நிறுத்தினான். நிறுத்தி உடனே உள்சென்று ஒரு கதவைத் திறந்து உள்ளே செல்வது தெரிந்தது. “ஜ்யோ! சீக்கிரம் என்னுடன் வா” என்றேன் 

ஜ்யோவும் நானும் அந்த ஸ்டுடியோவுக்குள் நுழையுமுன் அவளிடம், “ஒன்றும் பேசாதே. சும்மா அழகாக இருப்பது உன் வேலை. பேசக்கூடாது” என்றேன். 

“திஸ் இஸ் த்ரில்லிங்” என்றாள் ஜ்யோ. 

போட்டோ ஸ்டுடியோவில் நடுத்தர வயது ஆசாமி ஒருத்தன் பட்டைக் கண்ணாடிக்குக் கீழே சிரித்தான். அவன் தலையில் பழைய ரூபாய் அளவுக்கு வழுக்கை தெரிந்தது.

“குட் ஈவினிங்” என்றேன்.

“குட் ஈவினிங்” என்றான் ஜ்யோவைப் பார்த்துக்கொண்டு, “என்ன வேண்டும்?” 

“இந்தப் பெண்ணை போட்டோ எடுக்க வேண்டும்?”

அவன் உடனே ஜ்யோவை இன்னும் சுவாரஸ்யமாகப் பார்த்தான். ஜ்யோ மிக அழகாகச் சிரித்தாள். 

“ஹலோ” என்றாள். 

“என்ன சைஸ்” என்றான். 

“36” என்றாள் ஜ்யோ. 

“நான் போட்டோவின் சைஸைச் சொன்னேன்” என்றான். அவள் காதுகளின் ஓரத்தில் சிவந்தாள். ஏற்கெனவே ஜ்யோ சாலையில் போக்குவரத்தை நிறுத்தக்கூடியவள். இன்று அவள் மிகவும் விண் என்று இருந்தாள். அவள் சிரிப்பு அந்த நடுத்தர வயது மனிதனின் இளமை ஞாபகங்களைக் கிளறியிருக்க வேண்டும். 

“நாலைந்து போஸ்களில் எடுக்க வேண்டும். சற்று கவர்ச்சிகரமாக” என்றேன். அவன் கைகளை உரசிக்கொண்டான். என் கவனம் அந்த இளைஞன் உள்ளே சென்ற அந்தக் கதவிலேயே இருந்தது. “க்ளாட்லி ஸார். ஒன்மினிட். ஸ்டுடியோ ரெடியாக இருக்கிறதா என்று பார்க்கிறேன்” என்று சொல்லிவிட்டு தனக்குப்பின் இருந்த நீலத்திரைக்குள் மறைந்தான். நான் அவசரமாக “ஜ்யோ, நான் வரும்வரை இவனுடன் பேச்சுக் கொடுத்துக் கொண்டிரு” என்று சொல்லிவிட்டு அந்த இளைஞன் சென்ற கதவைச் சட்டென்று திறந்து பார்த்தேன். மாடிப்படி தெரிந்தது. உள் சென்று கதவை மூடிக்கொண்டேன். குறுகலான இடம். குறுகலான மாடிப்படி. நான் சற்று நிதானித்துக்கொண்டேன். நின்றேன். 

“எங்கே அவர்?” என்று கதவுக்கு வெளியே கேள்வி கேட்டது. “கார் வரை போயிருக்கிறார். செக் புத்தகம் எடுத்துவர” என்றாள் ஜ்யோ. குட் ஓல்ட் ஜ்யோ. 

“அவர் உங்கள் கணவரா?”

“ஆம்” என்றாள். “சற்று இருங்கள். அவர் வந்துவிடுவார். அந்த காமிரா என்ன விலை?” 

நான் கவனமாக மாடிப்படி ஏறினேன். மேலே செல்லச் செல்லப் பேச்சுக் குரல் கேட்டது. நிரம்பக் குப்பையாக இருந்தது. ஏதோ ஒரு வருஷத்துக்கு முன்பு போட்ட நாடகத்தின் சாதனங்கள் போல சில கண்டா முண்டா சாமான்கள் கிடந்தன. ஒரு காரிடார் தெரிந்தது. ஜன்னல் தெரிந்தது. உள்ளேதான் பேச்சுக் குரல் கேட்டது. ‘தியேட்டர் கிராஃப்ட்ஸ்’ என்று போர்டு தெரிந்தது. 

சுவரோடு சுவராக ஒட்டிக்கொண்டு சென்று ஜன்னலுக்கு உள் எட்டிப் பார்த்தேன். அது சிறிய அறை. சுவரில் சிவப்பில் ஒரு பெரிய கூட்டல் அடையாளம். குழந்தை கிறுக்கல் போலத் தெரிந்தது. மாடர்ன் ஆர்ட்? அல்லது ரத்தமா? அறை ஓரத்தில் கட்டாத வெற்றுக் காகிதங்கள் அடுக்கி இருந்தன அந்த அறையின் மட்டத்துக்குச் சற்று உயரம் அதிகமாக மற்றொரு அறை தெரிந்தது. அது பூட்டியிருந்தது. 

ஒரு மேஜை அருகில் இரண்டு கிழட்டு நாற்காலிகள் இருந்தன. அதில் இரண்டு இளைஞர்கள் உட்கார்ந்திருந்தார்கள். ஒருவன் எழுதிக்கொண்டிருந்தான். மற்றவன், ஸ்டுடியோ டெலிபோனில் எக்ஸ்டன்ஷன் போலும், அதில் பேசிக்கொண்டிருந்தான். அவன்தான் நான் பார்த்தவன்; நான் தொடர்ந்தவன். 

அவன் பெங்காலி பாஷையில் பேசிக்கொண்டிருந்தான். எனக்கு பெங்காலியில் தெரிந்த ஒரு சில வார்த்தைகள், நடுநடுவே தப்பித்த ஒருசில இங்கிலிஷ் வார்த்தைகள், சில பெயர்கள் இவைகளை வைத்துக்கொண்டு எனக்குப் புலப்பட்டது இவ்வளவே: 

மாலை 

6.45 

காமிரா 

ஸப்தர்ஜங் ரோடு 

தயார் 

விஜயம் 

“அமி ஆல்சி” என்று டெலிபோனை வைத்தான். 

“ஷொலோன்” என்றான். அவர்கள் எழுந்தார்கள். நான் உடனே கிளம்பி ஓடத் துவங்க, ஒரு டப்பா உருண்டது. அவர்கள் இருவரும் வெளியே பாய்ந்து வந்தார்கள். நான் தயங்கிவிட்டேன். 

அவர்கள் இருவரும் என்னைப் பார்த்தார்கள். “யார் நீ” என்றான் ஒருவன். நான் ஓடி இருக்கலாம். ஆனால் அந்த இளைஞர்களிடம் எனக்குப் பயம் ஏற்படவில்லை. அந்த அறைக்குள் என்னதான் செய்கிறார்கள் என்று பார்க்க ஆவல். மற்றவன் என்னை அடையாளம் கண்டுகொண்டுவிட்டான். பெங்காலியில் பேசினான். பைலட் என்று ஒரு வார்த்தை தென்பட்டது. 

“ஓ!”

மற்றவன், “எதற்காக நீ இங்கு வந்தாய்?” என்றான். அவர்களை நெருங்கினேன். “மே ஐ கம் இன்?” என்றேன் அறை வாசலில். அவர்கள் இருவரும் என்னை மிகவும் சந்தேகத்துடன் பார்க்க, ஒருவன் சடக்கென்று உள் சென்று டிராயரைத் திறந்து கத்தியை எடுத்து அதை மடக்கித் திறந்தான். 

“வாட் இஸ் ஆல் திஸ்?” என்றேன். 

“கிட்டே வராதே. கிழித்து விடுவேன்” என்றான். 

“நான் சண்டை போட வரவில்லை. சில கேள்விகள் கேட்க வந்தேன். அந்தப் பெண்ணை நேற்று எங்கே அழைத்துச் சென்றீர்கள்?” 

“எந்தப் பெண்? என்ன சொல்கிறாய்?” 

“எனக்கு எல்லாம் தெரியும்” என்றேன். அவர்கள் இருவர் கண்களிலும் உடனே பயம் தென்பட்டது.

“தருண்! கில் ஹிம்” என்றான். 

சின்னப் பையன் கத்தியுடன் என்மேல் பாய்ந்தான். நான் அவன் கையைப் பற்றிக் கத்தியை உதிர்த்து அவனை சுவரில் ஒரு மோது மோதினேன். மற்றவன் ஆயுதம் தேடி, நாடக சாதனங்களில் ஒரு கதை போல் எதையோ எடுத்து என் தலைமேல் மோதினான். அட்டையாதலால் வலிக்கவில்லை. அவன் தாடையில் என் இடது கையை வைத்துத் தள்ளின தள்ளலில் அவன் டேபிளின்மீது விழுந்தான். அவர்கள் இருவரும் என்னிடம் மறுபடி வர, நான் செமையாக ஒருவன் விலாவில் முழங்காலால் முட்டினேன். மற்றவன் ஒல்லியான கைகளை வீசியது சுவரில் பட்டது. மிக இளைஞர்கள். என்னவோ அசுத்தமாகக் காட்டடிதான் தெரிந்திருந்தது. தருண் என்பவன் எழுந்திருக்கும் வரை காத்திருந்தேன். “கதவைத் திற கதவைத் திற” என்று கத்தினான். மற்ற இளைஞன் மேஜை டிராயரை இழுத்து சாவிக்கொத்தை எடுத்தான். நான் அவனை அடைந்து சுலபமாக. சாவிக்கொத்தைப் பிடுங்கிக்கொண்டேன். அவன் வாய் ஓரத்தில் ரத்தம் வர ஒரு தடவை முஷ்டியால் அடித்தேன். நான் நல்ல திமிரில் இருந்தேன். அரிசிச் சோறு தின்னும் ‘தியரி’ பேசும் இளைஞர்கள் – சாமர்த்தியமில்லாமல் சண்டை செய்யும் ஒல்லிகள். எனக்கு அவர்களைத் தட்டத்தட்ட சூடு பிறந்தது. காகிதங்கள் சிதறின. டெலிபோன் தொங்கியது. மேஜைக் கால்கள் வானம் பார்த்தன. மூக்கோட்டையில் ரத்தம் கசிந்தது. ஒரே சப்தம். 

ஜன்னல் வழியாக இரண்டு முகங்கள் தெரிந்தன. 1. ஜ்யோவின் முகம். 2. அந்த ஸ்டுடியோ ஆசாமியின் முகம், “பாப்ரே என்ன சண்டை!” என்றான். 

“ஜ்யோ! உடனே கீழே போய் போன் செய்து போலீஸ் அனுப்பச் சொல்லு.” 

போலீஸ் என்று சொன்னதும் அந்த இளைஞர்களுக்குத் தீவிரமான சக்தி வந்திருக்க வேண்டும். ஒரே மோதலில் இருவரும் அறை வாசலை நோக்கிப் பாய்ந்தார்கள். நான் அவர்களைப் பிடிப்பதற்காகத் தகுதியான இடத்தில் இல்லை. ஒருத்தனின் சட்டை மட்டும்தான் அகப்பட்டது. வெளியே ஓடினார்கள். 

மாடிப்படி அதிருவது கேட்டது. நான் ஓடி இறங்கி ஸ்டுடியோ வாசலுக்கு வந்தேன். அவர்களைக் காணவில்லை. மிக சுறுசுறுப்பாகக் கார்களும், சைக்கிள்களும் விரைந்து கொண்டிருந்தன. இடது வலது பக்கம் பார்த்தேன். ம்ஹும், தப்பித்துவிட்டார்கள். 

மறுபடி மாடிக்கு வந்தேன். “சாச்சா!” என்று வழுக்கை ஆசாமியைக் கூப்பிட்டேன். “சாச்சா! நான் யார் தெரியுமா? நான் போலீஸ், இவர்கள் யார் சொல்லு.” 

“ஹுஸுர், எனக்கு ஒன்றும் தெரியாது. நான் கூலிக்காரன்!”

“சாச்சா, உதை வேண்டுமா?”

“வேண்டாம்.” 

“இந்த இளைஞர்கள் யார்?” 

“அவர்கள் விவகாரமே எனக்குத் தெரியாது. சின்னப் பயல்கள் வந்து போகிறார்கள். மேலே அறையில் கூடிக்கூடிப் பேசுகிறார்கள். இந்த ஸ்டுடியோ ஓனருக்கு எல்லோரும் சினேகிதம். நான் வெறும் கூலிக்காரன்… காமிராவை ரிப்பேர் செய்து கொடுத்தேன்…” 

“சாச்சா என்னுடன் வா” என்று மறுபடி மாடிக்குச் சென்றேன். அந்த அறைக்குச் சென்று என் கையிலிருந்த சாவிக்கொத்தில் இருந்த சாவிகளை ஒன்றொன்றாகப் பார்த்து ஒரு சாவியால் அந்த உள்ளறையைத் திறந்தேன். இருட்டாக இருந்தது. சுவரில் தடவி விளக்குப் போட்டேன். 

ரகசிய அறை அது. அதில் ஒரு டிரெடில் அச்சியந்திரம் இருந்தது. காகிதங்கள் இறைந்திருந்தன. கெரோஸின் வாசனை அடித்தது. ஒரு டின் கெரோஸின் ஓரத்தில் இருந்தது. சில பாட்டில்கள் கிடந்தன. திரிகள்! ப்ளாஸ்டிக் பலூன்கள்! டெலிபோனை எடுத்து ‘எக்ஸ்சேஞ்ச்’ பட்டனை அழுத்தி நிஷாவின் தந்தைக்கு டெலிபோன் செய்தேன். 

“ஸார், காப்டன் ஜேகே ஸார். நான் கானட் ப்ளேஸில் ஜி.பிளாக்கில் அந்த போட்டோ ஸ்டுடியோவிலிருந்து பேசுகிறேன். விஷயம் விபரீதமாக இருக்கிறது.” 

“என்ன?” 

“மாடியில் ஒரு அச்சகம் இருக்கிறது. இரண்டு இளைஞர்கள் தப்பித்து ஓடினார்கள். கெரோஸின் வைத்து ப்ளாஸ்டிக் பாம், மாலடாவ் காக்டெய்ல் தயாரிக்க சாதனங்கள் எல்லாம் இருக்கின்றன…” 

“இஸ் இட்!” என்றார். “அங்கேயே இரு. நான் பார்லிமெண்ட் ஸ்டிரீட் போலீஸ் நிலையத்துக்குச் சொல்லி உடனே ஃப்ளேயிங் ஸ்குவாடை அனுப்பச் சொல்கிறேன். வேறு ஏதாவது தெரிந்ததா?”

“அவர்கள் பேசிக் கொண்டிருந்தது கொஞ்சம் கேட்டது. பெங்காலியில் பேசிக் கொண்டிருந்தார்கள். சரியாகப் புரியவில்லை. ஆனால் அவர்கள் ஏதோ பெரிசாக உத்தேசிக்கிறார்கள் என்று தோன்றுகிறது. அந்த இளைஞன் மாலை ஒரு காமிராவைக் கொண்டு போய் காரில் காத்திருந்த ஒரு கோஷ்டியிடம் கொடுத்துவிட்டு இங்கு திரும்பி வந்தான். டெலிபோனில் யாரிடமோ பேசிக் கொண்டிருந்தான். மாலை 6.45 என்றான். ஸஃப்தர் ஜங் ரோடு என்றான். காமிரா என்றான்…” 

“ஸஃப்தர் ஜங் ரோடா?” 

“ஆம்!”

“ஜேகே! கேள்! இப்பொழுது நேரம் என்ன?” 

“6.35” 

“ஜேகே! விஷயம் மிகத் தீவிரம். போலீஸ் வருவதை மற! உடனே புறப்பட்டு நம்பர் ஒன்று ஸஃப்தர் ஜங் ரோடுக்கு வா! உடனே உடனே! நான் உன்னை அங்கு சந்திக்கிறேன். மிக அவசரம்” என்றார். ‘கடக்’ என்று வைத்தார். 

“கமான் ஜ்யோ!” என்றேன். 

“எங்கே?” என்றாள். 

“பாரதப் பிரதமரின் வீட்டுக்கு” என்றேன். “இப்பொழுது மணி 6.35. 6.45க்குள் நான் அங்கு இருக்க வேண்டும்” என்றேன்.

“முடியுமா?” என்றாள். 

ஜேகே உங்களிடமிருந்து விடைபெறும்

பதினைந்தாம் அத்தியாயம்

அரை மணிநேர நிகழ்ச்சியைச் சொல்லாமல் விட்டிருந்தேன் அல்லவா? அதைச் சொல்லிவிடுகிறேன்! 

மாடிப்படி ஏறி அந்தக் கதவைத் திறந்து – நிஷாவின் வீட்டில் – ‘நிஷா’ என்று கூப்பிட்டேன் அல்லவா ? அந்தப் பெண் திரும்பினாள் அல்லவா? அவளைப் பார்த்ததும் நான் அதிர்ச்சியுற்றேன். உடனே அறையைவிட்டு வெளியே வந்து கீழே நிஷாவின் தந்தையைக் கூப்பிட்டேன். அவர் நிமிர்ந்து என்னைப் பார்த்தார். 

“ஸார்! அறையில் இருக்கும் பெண்தான் உங்கள் மகள் நிஷாவா?”

“ஆம், ஏன்?” 

“நான் விமானத்தில் கூட்டி வந்தது இவளை அல்ல ஸார். விஷயம் விபரீதமாக இருக்கிறது. சற்று மேலே வாருங்கள்.”

அவர் இரண்டிரண்டாகப் படி ஏறி மேலே வந்தார்.

“ஜேகே, என்ன சொல்கிறாய் நீ?” 

“இந்தப் பெண் எப்படி இங்கே வந்தாள்?”

“இவள்தான் நிஷா! வந்ததிலிருந்து அவள் பேசவே இல்லை. பிரமித்து நிற்கிறாள். நீ கூட்டி வந்தாய் என்றுதான் முதலிலிருந்தே நான் நினைத்துக் கொண்டிருக்கிறேன். அதை நான் சந்தேகிக்கவே இல்லை.” 

“இவள் பேசவே இல்லையா ?” 

“இல்லை. சற்று விட்டுப் பிடிக்கலாம் என்றிருந்தேன்.” 

நான் உள்ளே சென்றேன். “நிஷா” என்றேன். 

அவள் என்னைப் பார்த்தாள். அவள் கண்கள் அகலமாக இருந்தன. தலைமுடி இரண்டு பக்கங்களிலும் தொங்கியது. பெரிய மலர்கள் விரவிய சட்டையை அணிந்திருந்தாள். வேறு பெண்! அவளல்ல இவள்! 

“நிஷா, என் பெயர் ஜேகே. நான் ஒரு பைலட். நான் ஒரு பெண்ணை விமானத்தில் அழைத்து வந்தேன். உன்னை என்று நினைத்துக்கொண்டு, அதாவது நீ என்று நினைத்துக்கொண்டு. அது நீ இல்லை. அது யார் என்று கண்டுபிடிக்க வேண்டும். அதற்கு உன் உதவி வேண்டும்; நான் கேட்கும் கேள்விகளுக்குப் பதில் சொல்ல வேண்டும். ப்ளீஸ்!” என்றேன்.

“புரியவில்லை” என்றாள். 

மறுபடியும் முதலிலிருந்து அடியைப் பிடித்து விவரமாகச் சொன் னேன். “நீ எப்படி இங்கு வந்தாய்? கல்கத்தாவில் நீ ஹாஸ்டலை விட்டு எங்கு சென்றாய்?”

“பனாரஸ்” என்றாள்.

“யாருடன்?”

“சில நண்பர்களுடன்.”

“பனாரஸில் என்ன செய்தாய்?”

“உண்மையைத் தேடினேன்.” 

சரிதான். இது ஹிப்பி ரகம் போலிருக்கிறது.

“எத்தனை நாட்கள் உண்மையைத் தேடினாய்?”

“ஒரு வாரம். என் நண்பர்கள் என்னிடமிருந்த எல்லாவற்றையும் திருடிக்கொண்டு என்னை விட்டுவிட்டார்கள்.” அவள் மூக்கு சுருங்கியது, அழுகைக்கு அஸ்திவாரமாக. 

“ரயிலேறி இங்கு வந்துவிட்டாயா, டிக்கெட் இல்லாமல்?”

“ஆம்” என்று சொல்லி விசித்து அழ ஆரம்பித்தாள். 

“தேர் யூ ஆர்; ஸாரி ! நிஷா, அழாதே! ஒன்றும் நடந்துவிடவில்லை. உன் அப்பா இன்னும் உன்னை நேசிக்கிறார்! உன் அப்பா உனக்காக…”

“அந்த பாய்ஸ் மிகவும் கெட்டவர்கள்!” 

“அவர்களைப் பிடித்துவிடலாம், கவலைப்படாதே நிஷா..”

“ஜேகே நீ கூட்டிவந்த பெண் யார்?” 

“ஸார்! நீங்கள்தான் சொல்ல வேண்டும். அந்தப் பெண் ஒரு நக்ஸல் பெண். என்னுடன் அவள் வந்ததிலிருந்து ஒரு திட்டம், நன்றாக அமைக்கப்பட்ட திட்டம் இருந்திருக்கிறது. வழியில் அவளுக்குத் தப்பிக்க இரண்டு சந்தர்ப்பங்கள் இருந்தன. அவள் தப்பிக்க வில்லை. டில்லியில்தான் தப்பித்தாள். அந்த இளைஞன் உதவியிருக்கிறான். அவன் ஒரு ஃப்ரீலான்ஸ் போட்டோகிராபர். கனாட் ப்ளேஸில் ஜி பிளாக்கில் ஸ்டுடியோ ஒன்றில் இருக்கிறானாம்; இன்று தெரிந்து கொண்டேன்… ஆனால் புரியவில்லை ஸார்!” 

“என்ன?” 

“நீங்கள் உங்கள் மகளுக்காக அனுப்பிய விமானம் பற்றி அவர்களுக்கு எப்படித் தெரிந்தது?” 

“ஒரே ஒரு சம்பந்தம் இருக்கிறது. பர்த்வானில் கைதான மாணவர்கள், நிஷா – என் மகள் நிஷாவின் கல்லூரியைச் சேர்ந்தவர்கள். கைதானவர்களில் உன்னுடன் வந்த நக்ஸல் பெண்ணும் ஒருத்தியாக இருந்திருக்க வேண்டும். அவர்களுக்கு சில தினங்களுக்கு முன் காணாமற் போன நிஷா என் மகள் என்பது தெரிந்திருக்க வேண்டும். என்னைப் பற்றியும் என் அதிகாரத்தைப் பற்றியும் தெரிந்திருக்க வேண்டும். பர்த்வான் போலீஸிடம் அந்தப் பெண்ணைத்தான் என் மகள் என்று பொய் சொல்லச் சொல்லி இருக்க வேண்டும். அவளை விடுவிக்க நான் முயற்சி செய்வேன் என்ற நோக்கத்தில்.” 

“இருந்தாலும் இந்த விதத்தில் விடுவிப்பீர்கள். இப்படி விமானம் அனுப்புவீர்கள், இப்படி விமானம் பழுதாகும், ஒருநாள் டிலே ஆகும் – இதெல்லாம் அவர்களுக்குத் தெரிந்திருக்குமா? டில்லியில் தயாராக அந்த இளைஞன் காத்திருந்தானே! இது பெரிய ஆர்கனைஸேஷன் என்று தோன்றுகிறது. டில்லியிலும் பரவி.. ஒன் மினிட் உங்களுக்கு இந்த ஐடியா யார் கொடுத்தது?” 

“எந்த ஐடியா?”

“இம்மாதிரி விமானம் அனுப்பி உங்கள் மகளைக் கூட்டி வரும்படி!”

“ராம்குமார்.” 

“ராம்குமார் யார்?” 

“என் அந்தரங்கக் காரியதரிசிகளில் ஒருவன். அவன்தான் முழுவதும் இதைக் கவனித்துக் கொண்டான்.” 

“என்னிடமிருந்து ஸிக்னல் வந்தது. என் ஃப்ளைட் ‘டிலே’ ஆனது எல்லாம் அவனுக்கு…” 

“அவன்தான் மெஸ்ஸேஜ் எல்லாம் வாங்கியது, கொடுத்தது எல்லாம். அவன்தான் இந்தத் திட்டத்தின் மூளை!” 

“அவனைக் கூப்பிடுங்கள். அரஸ்ட் ஹிம்!”

“ஏன்?” 

“ஆயிரம் வாட் விளக்கில் உட்கார வைத்துக் கேள்விகளால் துளையுங்கள். சுண்டு விரலை மடக்குங்கள். விஷயம் வெளிவந்துவிடும். அதற்குமுன்…” 

“ஓ அதற்குமுன்…” 

“நான் கனாட் ப்ளேஸ் சென்று அந்த போட்டோகிராபரைச் சற்று விசாரித்துப் பார்க்கிறேன். துடியாக ஒரு ஆளை என்னுட அனுப்புங்கள் ஸார். இந்த விஷயம் சுவாரசியமாக இருக்கிறது. ஐஸ்பர்க்போல் பத்து சதவிகிதம்தான் நீருக்கு மேலே தெரிகிறது. பாக்கி உள்ளே இருக்கிறது. அது என்ன என்று பார்த்துவிட வேண்டும். நீங்கள் ராம்குமாரை விடாதீர்கள்; கொஞ்சம் தட்டி விசாரியுங்கள். ஸம்திங் ராங் ஸம்வேர்! உங்கள் பெண் காணாமல் போயிருக்கிறாள். உங்கள் பெண் வேறு ரகம். இளைஞர்களுடன் பனாரஸ் சென்று காஃப்காவில் கடவுளைத் தேடுகிற ரகம் என்று நினைக்கிறேன். உங்கள் பெண் பெயர் சொல்லி விமானத்திலிருந்து தப்பித்து, காசு தீர்ந்தவுடன் திரும்பி வந்திருக்கிறாள். அதற்குள் வேறு பெண், இந்த நகரத்தில் எங்கே இருக்கிறாள். எங்கே? எதற்கு? முதல் அந்தப் பையன்!” 

“நிஷா! நான் உன்னை மறுபடி சந்திக்கிறேன். டேக் ஈட் ஈஸி. உன் அப்பா மிகவும் நல்லவர். பைபை” என்று கீழே சென்றேன். உடன் அவர் வந்தார். “ஏதாவது அபாயத்தில் அகப்பட்டால் எனக்குப் போன் செய்.” 

“ஜ்யோ வா!” என்றேன். 

அதற்கு அப்புறம் நிகழ்ந்தது உங்களுக்குத் தெரியும் என நினைக்கிறேன்…


பாரதப் பிரதமரின் வீட்டை முதல் தடவை பார்க்கிறவர்களுக்கு அதன் எளிமை சட்டென்று புரியும். வாயிற்பக்கம் டெண்ட் அடித்து செக்யூரிட்டி, ரிஸப்ஷன் ஆசாமிகள். நாலா பக்கமும் வழக்கம் போல போலீஸ். சுற்றிலும் புல்வெளி. வயல்போலக் கொஞ்சம் இடம்… (கோதுமை பயிரிட) மாடியில்லாத கட்டடம். 

உள்ளே புல்வெளியில் ஷாமியானா போட்டு அதில் வெளிச்சம் வழிந்துகொண்டிருந்தது. ஆர்வத்துடன் இளம்பெண்கள் காத்திருந்தார்கள். நடுவே ஒரு மைக் காத்திருந்தது. மைக் அருகில் அரை வட்ட வடிவில் காலி இடைவெளி காத்திருந்தது. டெலிவிஷன் வண்டி காத்திருந்தது. சினிமாக் காமிராக்கள் காத்திருந்தன. காமிரா உதவியாளன் அடிக்கடி ஆர்க்லைட்டைப் போட்டு இணைப்புகளைப் பரிசோதித்துக்கொண்டிருந்தான். வெளியில் பத்திரிகைக்காரர்கள் காத்திருந்தார்கள். அவர்களிடமிருந்து காமிராக்கள் கண் சிமிட்டக் காத்திருந்தன.

நான் என் கைக் கடிகாரத்தைப் பார்த்தேன். 6.50. ஜ்யோ என் பின்தொடர முகப்பில் இருந்த டெண்டுக்குள் சென்றேன். டெலிபோன்கள்; வெள்ளைக் கோட்டு ஆசாமிகள்; அரசாங்கம்! 

அவர்கள் என்னைச் சட்டென்று கவனித்தார்கள்.

“எஸ் ப்ளீஸ்?” என்றார் உயரமான ஆசாமி ஒருவர்.

“பிரதமர் வந்துவிட்டாரா?” 

“நீங்கள் யார்?” 

“தனியாக வருகிறீர்களா? ஒரு முக்கியமான விஷயம்.”

“வாட் ஈஸ் இட் கன்னா?” என்று மற்றொருவர்.

“அந்தக் கூட்டத்தை உடனே நிறுத்த வேண்டும்.” 

“மறுபடி சொல்லுங்கள்.” 

‘ஊய்ய்’ என்று சைரன் ஒலித்தது; காமிராக்கள் தயாராயின.

“கூட்டத்தை நிறுத்துங்கள்” என்று கத்தினேன். 

அவர் என்னைத் தனியாகத் தள்ளினார். 

வெளியே மண்டையில் சிவப்புக் கண் சிமிட்ட ஒரு நீலக் கார், மற்றொரு கார், மற்றொரு கார், மோட்டார் சைக்கிள் போலீஸ், பிரதமரின் கார்! அது மட்டும் நேராக உள்ளே சென்றது; நின்றது. 

ஓடி வந்து ஒரு கதர் ப்யூன் காரைத் திறக்க, கூட்டத்தின் ஆரவாரமும் பரபரப்பும் துவங்கியது! பிரதமர் நேராக அந்தப் பந்தலுக்குள் சென்றார். 

“ஆபீசர்! அந்தக் கூட்டத்தை நிறுத்த முடியுமா உங்களால்?”

“மிஸ்டர். யூ வாண் டு கெட் அர்ரெஸ்டட்? தெளிவாகப் பேசுங்கள், என்ன ஆயிற்று?” 

நான் உடனே நிஷாவின் தந்தை பெயரைச் சொல்லி அவர் வந்தாரா என்று கேட்டேன்! 

“இல்லை” என்றார் கன்னா, என்னைச் சந்தேகத்துடன் பார்த்தபடி!”

“அவருக்குப் போன் செய்யுங்கள்.”

“என்ன வேண்டும் உனக்கு..” என்று கத்தினார். முட்டாளே; முட்டாளே என்று சொல்லவில்லை.

சக்கென்று மற்றொரு கார் வந்தது. நிஷாவின் தந்தை அதிலிருந்து இறங்கினார். 

“இதோ! அவரே வந்து விட்டார்!” அவரைப் பார்த்ததும், அந்த ஆபீசர் அவருக்கு சலாம் போட்டார். 

பிரதமரின் குரல் ஒலிபெருக்கிகளில் புறப்பட்டுச் சோலைகளில் எதிரொலித்தது. 

“ஸார். உடனே வாருங்கள். இங்கே இருக்கிறேன். என் பேச்சைக் கேட்க மறுக்கிறார்கள்.” 

நிஷாவின் தந்தை உள்ளே பார்த்தார். ஆபீசரைத் தனியாக அழைத்துச் சென்று சிக்கனமாக, வேகமாகப் பேசினார். அவர் கைகள் வேகமாகச் சைகைகள் காட்டின. 

அந்த அதிகாரியின் நிலையில் மாறுதல் ஏற்பட்டது; திடீரென்று நிமிர்ந்து என்னைப் பார்த்தார்! 

“மிஸ்டர் உடனே வாருங்கள்” என்று உள்ளே கூட்டத்தின்பால் சென்றார். 

“ஜ்யோ நீயும் வா!” என்றேன். ஏதோ ஒரு ஞாபகத்தில் ஒரு பெண் உள்ளே தேவைப்படுவாள் எனத் தோன்றியது. 

உள்ளே எத்தனை சுலபமான பெண் முகங்கள். எல்லோரும் பிரதமரின் வார்த்தைகளிலேயே தொத்திக்கொண்டிருந்தார்கள். த்தனை இளம் பெண்கள், எத்தனை பின்னல்கள்! எத்தனை பவுடர், எத்தனை கண்ணாடிக்கு முன் வீணாக்கிய கணங்கள்…என் அருகே அதிகாரி. 

“மிஸ்டர்! யார் அது காட்டுங்கள். ஆனால் ஜாக்கிரதை, பதட்டப் படாதீர்கள்…” 

நான் அந்தப் பெண்ணை அந்த முகங்களில் தேடினேன். எல்லோரும் தற்காலிகமாக உட்கார்ந்திருந்தார்கள். பின்னால் ஓர் அரை வட்ட வரிசையில் சிலர் நின்றுகொண்டிருந்தார்கள். 

“நீங்கள் இந்த நாட்டின் எதிர்காலத்தை அமைக்கப் போகிறீர்கள்.” பிரதமரின் கீச்சுக் குரல், ஒலி பெருக்கிக்கொண்டிருந்தது. ‘இந்த நாட்டின் நம்பிக்கை நீங்கள்”. எங்கே அவள்.  எங்கே அவள்.  “இந்த தேசம் உங்கள் தேசம்” முகங்கள் ஷர்மிலா, சாரதா, ஷகிலா, ஷமரா, பிரமீளா, பானு…

நிஷா! போலி நிஷா.. பார்த்துவிட்டேன். அவள் மெல்ல அந்தக் காமிரா. அந்த வெளிவட்டத்திலிருந்து மெதுவாகப் பிரதமரை நோக்கி நகர்ந்து கொண்டிருந்தாள். அவள் கழுத்தில் மாலையாக கேமிரா இருந்தது. அந்தக் காமிரா…

“தேர் ஷி இஸ்” என்றேன். 

“எங்கே?” 

“அதோ நகருகிறாளே, குரு கலரில் சட்டை, எதையோ மெல்கிறாளே… காமிரா வைத்திருக்கிறாளே! ஜ்யோ தெரிகிறதா?” ஐயோ, “ஆம்” என்றாள். “ஜ்யோ நீ பின்பக்கமாகப் போய் முதலில் அவளை மறை. அந்தக் காமிரா! அதில்தான் ஏதோ இருக்கிறது.” அந்தப் பெண் இன்னும் அருகில் வந்துவிட்டாள். “ஸார். அந்தப் பெண்ணைக் கலவரமில்லாமல் அப்புறப்படுத்த வேண்டும்” என்றேன். 

“நான் பார்த்துக் கொள்கிறேன். அங்கேயே இருங்கள்” என்றார். “க்விக்! ஃபார் ஹெவன்ஸ் ஸேக்!” என்றேன். அந்தப் பெண் அப்போது பிரதமருக்குப் பத்து அடி தூரத்தில் இருந்தாள். மெதுவாகத் தன் காமிராவை எடுத்து அதை வயிற்றில் வைத்துக்கொண்டு வ்யூ ஃபைண்டரில் பிரதமரைப் பார்த்தாள்: அவள் விரல் காமிரா ஷட்டரைத் திறப்பதற்குள் ஜ்யோ குறுக்கே வந்துவிட்டாள். 

அவள் சட்டென்று சுதாரித்துக்கொண்டு ஜ்யோவைத் தன் இடது கையால் ஒதுக்கி, போட்டோ எடுக்க வேண்டும் என்று பாவனை காட்டினாள். ஜ்யோ திரும்பி என்னைப் பார்த்தாள். எல்லோர் கவனமும் பிரதமரிடம் இருந்தது. “நீங்கள் எந்த மொழி பேசுபவராக இருந்தாலும் எந்தப் பிரதேசத்திலிருந்து வந்தாலும் என் அன்பிற்கும் மதிப்பிற்கும்”. இப்பொழுது இரண்டு மூன்று செக்யூரிட்டி ஆசாமிகள் அந்தப் பெண்ணுக்குப் பின் வந்துவிட்டார்கள். அவள் மறுபடி காமிராவை லாவகமாக வைத்துக்கொள்வதற்கு முன் மிக லாவகமாக அந்தக் காமிரா அவளிடமிருந்து பிடுங்கப்பட்டது. அவள் சட்டென்று ஆச்சரியப்பட்டுப் பின்னால் பார்ப்பதற்கு முன் மற்றொரு செக்யூரிட்டி ஆசாமி அவள் முன்னே வர, பின்னாலிருந்து ஒருவன் அவள் வாயைப் பொத்த, மற்றவர்கள் சூழ்ந்து மறைத்துக் கொள்ள…

சிறிது நேரத்தில் அவளைக் காணவில்லை. மௌனமாகக் கரைந்து விட்டார்கள். பிரதமர் இன்னும் பேசிக்கொண்டிருந்தார். “என்னுடன் சேர்ந்து சொல்லுங்கள் பார்க்கலாம் ஜெய்ஹிந்த்” 

“ஜெய்ஹிந்த்.” 

“போதாது. இன்னும் உரக்க, ‘ஜெய்ஹிந்த்” இளம் குரல்கள் அதிக சக்தியுடன், “ஜெய்ஹிந்த்” என்றன.

“உங்களைக் கன்னா ஸார் கூப்பிடுகிறார்” என்று ஒருவன் என் தோளில் தட்டினான். 


பிரதமர் சட்டென்று அந்தக் கூட்டத்திலிருந்து வலது பக்க வீட்டின் பக்கவாட்டு வாயிலில் நுழைந்தார். அவரைத் தொடர ஓடிய பெண்களைப் பலர் தடுத்துச் சீரமைத்தார்கள். நான் வெளிப்புறம் இருக்கும் டெண்ட் பக்கம் சென்றேன். அங்கே பலர் சூழ்ந்திருக்க நட்ட நடுவில் அந்தப் பெண் ஒரு நாற்காலியில் உட்கார்ந்திருந்தாள். டெலிபோனில் ஒருவன் பேசிக்கொண்டிருக்க, நிஷாவின் தந்தை ஒரு மேஜைமேல் உட்கார்ந்து அந்தப் பெண்ணையே பார்த்துக் கொண்டிருக்க, “யார்?” என்று ஒருவர் கேட்டார். அவள் பதில் சொல்லவில்லை. 

“ஹலோ ஜேகே! சற்று ஒதுங்குங்கள். அந்த ஆசாமிக்கு வழிவிடுங்கள்” என்றார் நிஷாவின் தந்தை. 

நான் அவள் அருகில் சென்றேன். அவளுடன் நான் செலுத்திய வினோத விமானப் பிரயாணம் ஞாபகம் வந்தது. “உன் பெயர் நிஷா இல்லையா?” என்றேன். என்னை நிமிர்ந்து பார்த்தாள். என்னை அடையாளம் கண்டுகொண்டதற்கு எவ்வித சலனமும் அவள் முகத்தில் ஏற்படவில்லை. “காப்டன் ஜேகே! இவளைப் பேசவைக்க முடியுமா உங்களுக்கு?” என்றார். 

அவள் எதிரே நின்றேன். அவள் என்னை ஒரு தடவை பார்த்து மறுபடியும் நேர்ப்பார்வை பார்த்தாள். 

“காப்டன், யூ நோ ஸம்திங்? இவள் வைத்திருந்தாளே காமிரா அதில் என்ன இருந்தது தெரியுமா? அந்தக் காமிராவைக் கொண்டு வாப்பா.” 

“என்ன இருந்தது?” என்றேன். அவர் குரலை தழைத்துக்கொண்டு, “காமிராவுக்குள் மிகச் சாமர்த்தியமாக மறைக்கப்பட்ட சிறிய துப்பாக்கி, காமிராவின் கிளிக்குடன் இணைந்து செயல்படக்கூடிய துப்பாக்கியின் விசை, ஒரு கிளிக்! அவ்வளவுதான். நாளை செய்தித்தாள்களில் ஒன்றரை அடி உயர எழுத்துகளில் செய்தி வந்திருக்கும்” என்றார். 

காமிரா வந்தது. அதன் வயிறு திறந்திருந்தது. சிக்கலான லீவர்க லென்ஸ் இருக்க வேண்டிய இடத்தில் துப்பாக்கியின் கண் காமிராய் பெட்டிக்குள் அடக்கமாகிவிடக்கூடிய சிறிய துப்பாக்கி. ஒரு ஸ்பிரிங் இணைப்பு.. அந்தப் போலீஸ் ஆபீசர் காமிராவை மூடிட்டு ஷட்டரை ஒரு தடவை தட்டினார். துப்பாக்கியின் ஸ்பிரிங் விடுதலை ஆகும் ‘டிர்ரக்’ சப்தம் அதனுள் கேட்டது… 

“தோட்டாக்களை எடுத்துவிட்டோம். பயப்படாதீர்கள்!” என்று சிரித்தார். 

“இன்ஜீனியஸ்!” என்றேன். “நிஷா! அப்படித்தான் அவனை அழைக்க வேண்டியிருந்தது. இதற்காகத்தான் நீ என்னுடன் டில்லிக்கு வந்தாயா?” 

அவள் பதில் சொல்லவில்லை. “ரிகாயிலுக்காக வயிற்றில் அழுத்திக் கொண்டு சுட நினைத்திருக்கிறாள்”.

“காப்டன் ஜேகே! உங்களுக்குத் தெரியுமா? நீங்கள் இன்று பிரதமரின் உயிரைக் காப்பாற்றி இருக்கிறீர்கள்!”

“ஜ்யோ! இவள்தான் அதற்குக் காரணம்! இவள்தான் தைரியமாகச் சென்று மறைத்தாள்”.

“எனக்கு முன்னமே தெரிந்திருந்தால்…” என்று ஜ்யோ ஆரம்பித்தாள்.  

“ஜ்யோ! சும்மா இரு!” என்றேன்.

“இந்தப் பெண் யார்?” 

“இவளையே கேட்கலாமே?” 

“பேசமாட்டாள். அவர்கள் நிறைய தாங்கக்கூடியவர்கள்.” எனக்குத் திடீரென்று ‘நிஷா’ அன்றிரவு அந்த விமான நிலையத்தில் அந்த அறையில் பிரதமரின் போட்டோவையே வெறித்துப் பார்த்துக் கொண்டிருந்தது புரிந்தது. என்ன திட்டம் அது? எப்பொழுது ஆரம்பித்தது? எங்கெங்கே பரவி இருக்கிறது? எத்தனை தைரியம், எத்தனை வேகம், தப்பான வேகம், மரண பயமில்லாமல் ஒருவிதக் கவலை இல்லாமல் இவளைச் செலுத்துகிற ஆதாரமான கான்ஸரை எங்கே தேடப் போகிறார்கள்? எங்கே பிடிக்கப் போகிறார்கள்? எனக்கு அந்தப் பெண்ணின் மீது திடீரென்று இரக்கம் ஏற்பட்டது. அவள் என்ன ஆவாள்? அரெஸ்ட் செய்வார்கள். இந்த விஷயம் ரகசியமாக இருக்கும். நீங்கள் இந்த விஷயத்தைப் பத்திரிகைகளில் படிக்க முடியாது. மௌனமாக யாவும் நடக்கும். அந்தப் பெண் ஏதோ ஒரு சிறையில் ஏதோ ஒரு மூலையில் வியர்க்கப் போகிறாள். அவளைக் கெஞ்சுவார்கள். கேட்பார்கள். மிஞ்சுவார்கள். அவளிட மிருந்து உண்மையைக் கறக்க, அவளது கூட்டாளிகளைக் காட்டிக் கொடுக்க அறுபத்து நாலு சாகசங்கள் செய்வார்கள். எத்தனை தினம் தாங்கப் போகிறாள்? அவள் இன்னும் ஏதோ மெஸ்மரிஸத்துக்கு வசப்பட்டவள் போல் நேர்ப்பார்வைதான் பார்க்கிறாள். இதுவரை ஒரு வார்த்தை பேசவில்லை.

*ஜேகே! உன் ஊகம் சரியாகிவிட்டது!” என்றார் நிஷாவின் தந்தை. 

“என்ன ஸார்?” 

“ராம்குமார். அவன்தான் இதில் ஐந்தாம்படை செய்திருக்கிறான். அவனைக் காணவில்லை. தேடச் சொல்லி இருக்கிறேன்!” 

“இதில் எத்தனையோ பேர் சம்பந்தப்பட்டிருக்க வேண்டும் ஸார். அந்த ஜி பிளாக் போட்டோ ஸ்டுடியோ அதன் மாடியில் நான் பார்த்த பிரிண்டிங் பிரஸ்…” 

“வளைக்கச் சொல்லி இருக்கிறேன். அது பெரிய கும்பல் ஆனால் எல்லோரையும் பிடித்து விடுவோம். அதற்கெல்லாம் முதலில், காப்டன் ஜேகே! உங்களுக்கு வந்தனம் சொல்ல வேண்டும்” என்றார் நிஷாவின் தந்தை. “உங்களுக்கு…”

“எதற்கு ஸார்?” 

“நீங்கள் முதலில் சந்தேகப்பட்டு அந்தப் பையன் யார் என்று கண்டுபிடித்து அந்தப் போட்டோ ஸ்டுடியோவிலிருந்து அவர்கள் பேச்சை ஒட்டுக் கேட்டு அதை, மிக முக்கியம், எனக்கு போன் செய்தீர்களே! அது நடந்திரா விட்டால் இது கதையே வேறு விதமாக முடிந்திருக்கும்.” 

“இல்லை. உங்களுக்குச் சட்டென்று ஸஃப்தர்ஜங் ரோடு என்றதும், இரண்டையும் முடிச்சுப் போட முடிந்ததே!” 

“அது ஒன்றுமில்லை. டூ அண்ட் டூ அவ்வளவுதான்.”

“எனவே…கன்னா, பிரதமரிடம் சொல்லி விட்டீர்களா!”

“இல்லை. இந்த இடத்தை விட்டு விஷயம் இன்னும் வெளியே செல்லவில்லை. பிரதமரிடம் அப்புறம் சொல்லி விட இருக்கிறேன். காபினெட் செக்ரட்டேரியட்டிலிருந்து அவசரமாக ஒரு நோட் வந்திருக்கிறது…” 

“காப்டன் ஜேகே! ஒரு முக்கியமான விஷயம்! இந்தச் சம்பவத்தைப் பற்றி நீங்கள் எவருடனும் பேசக்கூடாது. எவருக்கும் எழுதக்கூடாது…”

“எழுதினால்கூட நம்ப மாட்டார்கள். ரீல் விடுகிறான் என்று நினைத்துக்கொள்வார்கள், ஸார். ஆனால் ஒரு விஷயம். இந்த ப்ளாட்டை எப்படி முறியடிக்கப் போகிறீர்கள். எத்தனை பேர் இதில் சம்பந்தப்பட்டிருக்கிறார்கள்?” 

“ஒவ்வொருத்தரையும் கண்டுபிடித்துவிடுவோம். கவலைப்படாதீர்கள்… லீட் கிடைத்துவிட்டது. மிஸ், என்னுடன் வருகிறாயா?”

“தாங்க் யூ வெரி மச் காப்டன்! க்ரேட் ஒர்க். யூ நீட் சம் ரிலாக்ஸேஷன்” என்று ஜ்யோவைப் பார்த்தார். “இவள் யார் என்று சொல்லவில்லையே?” 

“இவள் என் ரிலாக்ஸேஷன், பாரதப் பிரதமர்களை ஆபத்திலிருந்து காப்பாற்றாமல் இருக்கிற சமயங்களில் இவளுடன் நான் சுற்றுவேன். மேலும் இவளைக் கல்யாணம் செய்துகொள்ளுவதாக ஒரு சிறு உத்தேசம் இருக்கிறது.”

“நாட் எ பாட் ஐடியா!”

ஜ்யோ என் சட்டைக்குள் முதுகுப் பக்கத்தில் கிள்ளினாள். சந்தோஷமாக இருக்கும்போது அவள் அப்படித்தான் செய்வாள். 


பாரத சர்க்காரின் மூன்று சிங்க முத்திரையுடன் ப்ரைம் மினிஸ்டர்ஸ் செக்ரடேரியட் அச்சுடன் அந்தக் கடிதம் என் அறையின் கதவடியில் கிடந்தது. 

அதைப் பிரித்தால் : 

காப்டன் அண்ட் மிஸஸ் ஜோகேஷ் குமார்! பாரதப் பிரதமர் உங்களை சனிக்கிழமை அக்டோபர் 16, 1971 மாலை ஐந்து மணிக்கு அவர் உறைவிட நம்பர் ஒன்று ஸஃப்தர்ஜங் ரோடில் தனிப்பட்ட தேனீருக்கு அழைக்கிறார். 

பாரதப் பிரதமருக்காக 
ஒப்பம். 

ஜோகேஷ் குமார்! அதுதான் என் பெயர்.. 

“ஜ்யோ! ஏதாவது உடுத்திக்கொள். பாரதப் பிரதமர் நம்மைக் கூப்பிடுகிறார்” என்றேன்.

(முற்றும்)

– ஜே.கே., முதற் பதிப்பு: 1971.

Print Friendly, PDF & Email

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *