கதையாசிரியர்:
கதை வகை: தொடர்கதை
கதைத்தொகுப்பு: கிரைம் த்ரில்லர்
கதைப்பதிவு: June 8, 2024
பார்வையிட்டோர்: 15,265 
 
 

(1971ல் வெளியான தொடர்கதை, ஸ்கேன் செய்யப்பட்ட படக்கோப்பிலிருந்து எளிதாக படிக்கக்கூடிய உரையாக மாற்றியுள்ளோம்)

அத்தியாயம் 7-8 | அத்தியாயம் 9-10 | அத்தியாயம் 11-12

ஜேகே நிஷாவை விமானத்தில் அழைத்துச் செல்லும்

ஒன்பதாம் அத்தியாயம் 

ஒரு சிறு சீறிவிட்டு விமானத்தை நிறுத்தினேன். பிஸ்வாஸ் என் அருகில் வந்து ப்ரொபல்லர் நிற்கிற வரைக்கும் காத்திருந்துவிட்டு கதவைத் திறந்து என் கையைக் குலுக்கினார். “பெட்ரோல் போட வேண்டுமா?” என்றார். “வேண்டாம்” என்றேன். 

பிஸ்வாஸ் பெங்காலி என்பதைச் சுலபமாகச் சொல்ல முடிந்தது. பெங்காலிகளுக்கு என்றும் சில அடையாளங்கள் உள்ளன. சதுர முகம், சாதாரணமாகவே வகிடு எடுக்கப்படாத பின்தள்ளி வாரப்பட்ட தலை மயிர், கண்கள் சற்று, சற்றுத்தான், மங்கோலியத்தனம் காட்டும். அவர்கள் சாப்பிடும் மீன், அவர்கள் மொழி, அவர்கள் கலாசாரம், எளிதில் சூடாகும் இரத்தம் எல்லாமே எப்படியோ வார்த்தைகளில் அகப்படாத விதத்தில் அவர்கள் தோற்றத்தில் பிரதிபலித்துவிடுகின்றன. அவர்களைச் சொல்வது சுலபம். தோற்றத்தில் தெரியவில்லை என்றாலும் அவர்கள் இங்கிலிஷ் பேச்சிலிருந்து நிச்சயம் கண்டுபிடித்து விடலாம். ‘வோல்ட்’ என்று சொல்லச் சொல்லுங்கள்; ‘போல்ட்’ என்பார்கள். ‘போல்ட்’ என்று சொல்லச் சொல்லுங்கள்; ‘வோல்ட்’ என்பார்கள். 

பிஸ்வாஸ், “காப்டன், கொஞ்சம் தனியாக வருகிறீர்களா?” என்றார். 

நான் அவருடன் சில கெஜங்கள் நடந்தேன். அவன் என் மிக அருகே வந்து “ரூப் தேரா மஸ்தானா” என்று காதில் மெலிதாகப் பாடியிருந்தால் ஆச்சரியப்பட்டிருக்க மாட்டேன். “அவளை எப்படிக் கொண்டு போவதாக உத்தேசம்?” என்றார். மற்றவர்கள் காத்திருந்தார்கள். என்னையே பார்த்துக் கொண்டிருந்தார்கள்.

“நீங்கள் சொல்லுங்கள்” என்றேன். 

“நீங்கள் சொல்லுங்கள். உங்கள் பத்திரம் முக்கியம்” என்றார்.

“அவள் விலங்கிடப்பட்டிருக்கிறாளா?”

“ஆம்.” 

“எப்படி?”

“கைகள் பின்பக்கமாகப் பூட்டப்பட்டிருக்கின்றன.” 

“விலங்குக்குச் சாவி இருக்கிறதா?” 

“இருக்கிறது.”

“அது எனக்கு வேண்டும். நான் அவளை முதலில் சந்திக்கிறேன்” என்றேன். வான் பக்கம் நடந்தேன். அந்த முகம் என்னையே தொடர்ந்துகொண்டிருந்தது. அவர் என்னுடன் வந்தார். “திற” என்றார். 

வானின் பின் பக்கத்துக் கதவுகள் திறக்கப்பட்டன. நிஷா தனியாக உட்கார்ந்திருந்தாள். அவள் கைகளைப் பின்பக்கம் கோர்த்துக் கொண்டு முழங்கால்கள் சாய உட்கார்ந்து கொண்டிருந்தாள்.

மிக இளம்பெண். மிக மிக. அவள் ஆண்கள் சட்டை ஒன்று அழுக்கான நீலத்திலும்; அழுக்கான, கலர் லேசில் சொல்ல முடியாத ஒரு பாண்டும் அணிந்திருந்தாள். காலில் செருப்பு இல்லை. முகம் அழுக்காக இருந்தது. தலை மயிர் பரட்டையாக இருந்தது. தொள தொளவென்று சட்டை. அதில் ஒரு ஸேஃப்டி பின் ஒரு பட்டனுக்குப் பதிலாக மாட்டியிருந்தது. 

கொஞ்சம்கூடப் பவுடரோ, ஏதாவது ஒருவகை அலங்காரமோ இல்லாத பெண்ணை நான் அதுவரை பார்த்ததில்லை. அந்தப் பழக்கம் சுமார் 72 வயதில்தான் அவர்களுக்குப் போகும் என நினைக்கிறேன். நிஷா ஒரு பையனைப் போல இருந்தாள். நிஷாவை ஒரு பெண் என்று சொன்ன அவள் கட்டையான திரளான கூந்தலும், மெலிதாகத் தெரிந்த அவள் மார்பகப் பரிமாணமும்தான்.

“அவுட்” என்று அதட்டினார் பிஸ்வாஸ். “ஹலோ” என்றேன் நான். அவள் என்னை ஒரு தடவை அலட்சியமாகப் பார்த்துவிட்டுத் திரும்பிக்கொண்டாள். 

அவள் கண்களில் இன்னும் குழந்தைத்தனம் இருந்ததா? அவள் நிறம் பஞ்சாப் கோதுமையின் நிறமிருக்கலாம். அவள் உதடுகள் மெலியதாக இருந்தன. கன்னத்தில் மெலிய ரத்தக்கோடு தெரிந்தது. நகக்கீறல் போலத் தெரிந்தது. 

“வெளியே கொண்டுவாருங்கள்” என்றேன். இரண்டு போலீஸ்காரர்கள் உள்ளே நுழைய முற்பட, அவளே நகர்ந்து வந்து வெளியே குதித்தாள். குதித்தபோது எனக்கு ஒன்று புலனாகியது. அவள் வெறும் சட்டை மட்டும் அணிந்துகொண்டிருக்கிறாள்; உள்ளுடை ஏதும் அணியவில்லை என்பது. புழுதியாக இருந்தாள். 

“நிஷா! நீதான் நிஷாவா?” என்றேன். 

“அவள் பேசமாட்டாள்” என்றார் பிஸ்வாஸ். நானும் அவளும் ஒருவரை ஒருவர் எதிர் எதிர் பார்த்து நின்று கொண்டிருந்தோம். அவள் இப்போது என்னைத் தயக்கமில்லாமல் நேர்ப் பார்வை பார்த்தாள். அவள் தலை சற்றுச் சாய்ந்திருந்தது. அவள் கண்கள் என்ன உணர்ச்சி காட்டின என்பதை என்னால் தெரிந்து கொள்ள முடியவில்லை. அவள் ஐந்தடி மூன்று அங்குலம் இருப்பான் அவன் இடுப்பின் அளவை அவள் சட்டை மறைத்தது. அவள் பார்வையில் கேலி இருந்ததா? அலட்சியமா ஆர்வமா அல்லது பரிதாபமா, அல்லது…

“சாப்பிட்டாளா?” என்றேன். அவளைப் பார்த்த பார்வையை மாற்றாமல். 

“இல்லை. சாப்பிடமாட்டாள்”. 

நான் அவள் அருகில் சென்றேன். அவள் என்னையே பார்த்தாள். நான் அவளைச் சுற்றி வந்தேன். பின்பக்கம் அவள் கைகள் விலங்கிடப் பட்டிருந்த இடத்தில் கன்னிப் போயிருந்தது. அவள் கைகளை உயரத் தூக்கி ஆராய்ந்தேன்.

நான் சற்றும் எதிர்பாராதவிதத்தில் அவள் வேகமான சுற்றுச் சுற்றி விலங்குக் கைகளுடன் என் விலாப் பக்கத்தில் மோதினாள். இரும்பு பட்ட இடத்தில் வலி தெரிந்தது. 

பிஸ்வாஸ் சொன்னார்: “அவள் அபாயகரமானவள்.” 

நான் சற்று விலகிக்கொண்டு அவளைப் பார்த்தேன் அவள் என்னைத் தயக்கமில்லாமல் பார்த்தாள். நீ வேறு ஜாதி, வேறு ஜெனரேஷன், வேறு சமூக மட்டம் என்று சொல்வது போல பார்வை. அவள் அடித்த இடத்தில் எனக்கு நிச்சயம் வலித்தது. “நீ அதற்குத் திரும்பப் பெறப் போகிறாய்” என்றேன். 

“அவள் நிறைய அடி தாங்கக் கூடியவள்” என்றார் பிஸ்வாஸ். 

“அடிக்கமாட்டேன்” என்றேன்.

“வாயைக் கட்டிவிடலாமா? கடித்தாலும் கடிப்பாள்” என்றார். 

“வேண்டாம்” என்றேன். “கொண்டு செல்லுங்கள்.”

அவளை இரண்டு கான்ஸ்டபிள்கள் தள்ளிச் செல்ல நான் பின்னால் வந்தேன். அவள் விமானத்தில் ஏறத் தயங்கினாள். முரண்டு பிடித்தாள். கான்ஸ்டபிள்கள் பிஸ்வாஸைப் பார்த்தார்கள். பிஸ்வாஸ் என்னைப் பார்த்தார். நான், “வாருங்கள்” என்று அருகில் சென்று கதவைத் திறந்து, ஒரு கான்ஸ்டபிளைப் பிடித்துக்கொள்ளச் சொன்னேன். சற்று வேடிக்கை பார்க்கிறதுபோல் பார்த்துத் திடீரென்று ஒரே லாவாக லாவி அவளை உள்ளே திணித்து அமுக்கி உட்கார வைத்து முழங்கால்களின் மேல் ஸீட் பெல்டை இறுக்கிச் செருகி விட்டேன். ஒரு கன்றுக்குட்டியை லாரியில் ஏற்றுவதுபோல நடந்தது.

அவள் உட்கார்ந்திருந்த ரீதியில் இருந்த ரட்டர்பெடலை அல்லது கண்ட்ரோல் காலத்தை உதைக்க முடியும் என்று எனக்குத் தெரிந்தது. பிஸ்வாஸிடம் இன்னும் கயிறு கேட்டு கணுக்கால்களில் கட்டுப் போட்டு அதை இரண்டு பாகங்களாகப் பிரித்து இடது வலது பக்கம் அகப்பட்ட கொக்கிகளில் கட்டிக் கால்களின் கீழ்ப்பாகத்தையும் நகர விடாமல் செய்துவிட்டோம். 

“ஒரு இன்ஜெக்ஷன் கொடுத்துவிடலாமா?” என்றார் பிஸ்வாஸ்.

“வேண்டாம்” என்றேன். 

அவர் நேர்ப்பார்வை பார்த்துக்கொண்டு உட்கார்ந்திருந்தாள்.

எப்படிப்பட்ட பெண் இவள் ? பிடிவாதமா? பைத்தியமா? ஒருவிதமான ஸ்கிட்ஸோ ஃப்ரீனியாவா? இல்லை, பயமே கலக்காத ஒரு மன அமைப்பா? 

நான் விமானத்தில் ஏறிக்கொண்டு கதவைச் சாத்திக்கொண்டு ஜன்னல் வழியாகப் பார்த்தேன். பிஸ்வாஸ் அருகில் வந்து, “ஜாக்கிரதை ஜாக்கிரதை” என்றார். 

“கவலைப்படாதீர்கள்”. 

“இன்னும் கொஞ்சம் கட்டலாமா?” என்றார். 

“வேண்டாம்.” 

“அவளை பத்திரமாக டில்லி போய்ச் சேர்த்துவிடுவது உங்கள் பொறுப்பு.” 

“ஷி வில்” என்றேன். 

“பெஸ்ட் ஆஃப் லக்!” 

“தாங்க் யூ” என்று ஒரே சீறில் விமானத்தைக் கிளப்பி ரன்வே அடைந்து மிகச் சிக்கனமாக டேக் ஆஃப் செய்து இடது பக்கம் கூர்மையாக விமானத்தை மடித்தேன். அவள் என்மேல் சாய்ந்தாள். ஒரே தூக்கு தூக்கினேன் விமானத்தை. அவள் வயிறு சுருண்டு கொள்ளும். சுருளட்டும். 

விமானத்தை நேர்ப்பட வைக்க நான் அவசரப்படவில்லை. அவள் விலாவில் மோதினது இன்னும் வலித்தது. என் பக்கத்தில் நேராகப் பார்த்துக்கொண்டிருந்த நிஷாவைப் பார்த்தேன். அவள் எதிலும் ஆர்வம் இல்லாமல் வெற்றுப் பார்வை பார்த்துக் கொண்டிருந்தாள். ஒரு ஆணும் பெண்ணும் தனியாகச் சந்திக்க எத்தனை வினோதமான சூழ்நிலை! 

“அமார் பாரி, துமார் பாரி, நொக்ஷர் பாரி” என்றேன் ஞாபகத்தில்.

அவள் முகம் மாறவே இல்லை. அதே வெற்றுப் பார்வை.

“நிஷா உனக்குக் காது கேட்குமா?” என்றேன். பதில் இல்லை. “உனக்குக் காது கேட்கும் என்று நினைத்துக்கொண்டு சொல்கிறேன். நீ இந்த விமானத்தில் ஒன்றும் செய்ய முடியாது. முழுவதும் என் ஆதிக்கத்தில் இருக்கிறாய். உன்னால் நகர முடியாது. எதுவும் முட்டாள்தனமாக முயற்சி செய்தால் நீ மரணமடைவாய் என்னுடன், அனாவசியமான மரணம்… மரணம் என்பது தாய் மலை போல் உயர்ந்ததாக இருக்க வேண்டும்.” என்றேன். அவள் உதட்டோரம சற்று விரிந்தது. என்னைப் பார்க்கவில்லை.

“நாம் இருவரும் பிரயாணிகள் போல. டில்லிக்குப் போனதும் உனக்கும் எனக்கும் தொடர்பு முடிந்து விடுகிறது. நான் ஒரு கூலிக்காரன், நீ ஒரு.. நீ யார்?” என்றேன், 

ம்ஹூம்… பலிக்கவில்லை. 

“உன்னைப் பேசவைக்க முடியாது என்று நினைக்கிறாயா?” திடீரென்று த்ராட்டிலை முன் தள்ளி விமானத்தை ஆயிரம் அடி சரித்தேன். அவள் மூளைப் பக்கம் ரத்த ஓட்ட வித்தியாசம் ஏற்பட்டு ஜீவசக்திகள் வயிற்றில் பாய அவள் கண்களில் சற்று வேதனை தெரிந்தது. “சமர்த்தாக வா. நீ பேசும் வரை நான் இப்படியே செய்து கொண்டிருப்பேன். ஐ கன் மேக் யூ ஃபீல் மிஸரபிள” நான் மறுபடி த்ராட்டிலில் கை வைத்தேன்…

“என்ன பேச வேண்டும்?” என்றாள். (எனக்குத் தெரியும் சரிவது மஹா கொடுமை) அவள் குரல் மெலிதாக இருந்தது.

“எது வேண்டுமானாலும் பேசு! ஏதாவது சாப்பிடுகிறாயா?” 

“வேண்டாம்” என்றாள்.

“என்னை ஏதாவது கேள்வி கேள்” என்றேன். 

“நீ யார்?” என்றாள்.

“நான் ஒரு பைலட்.”

“அரசாங்கமா?” 

“காண்ட்ராக்ட்.” 

“என்னைக்  கொண்டு செல்வதற்காக?” 

“ஆம்.” 

“எங்கே?” 

“டில்லி. உன் அப்பா உனக்காக மிகவும் கவலைப்பட்டுக் காத்துக் கொண்டிருக்கிறார்.” 

“உனக்கு என்ன வயது” என்றாள். அவள் அப்பாவைப் பற்றி நான் சொல்வதை முழுவதும் புறக்கணித்துவிட்டு.

“நீ பிறக்கும்போது நான் ப்ளேட்டோ படித்துக் கொண்டிருந்தேன்” என்றேன். 

அவள் உதடு ஓரத்தில் சற்று, சற்றுத்தான், மலர்ந்தது. 

“வாட் ஆர் ஆல் தீஸ் நிஷா?”

“எது?” 

“இந்தக் கலவரம், கொலை, புரட்சி!” 

“நன் ஆஃப் யுவர் பிஸினஸ்”

“நிஷா! நீ கொன்றாயா?”

“நீ பேப்பர் படிக்கிறாயா?”

“ஆம்.”

“ஆஷிம் என்பவரைப் பற்றி ஏதாவது செய்தி வந்ததா?”

“ஆஷிம் போலீசால் சுட்டுக் கொல்லப்பட்டு மார்ச்சுவரியில் ஐஸில் இருக்கிறான்” என்றேன், முன்தினம் நான் படித்த செய்தியின் ஞாபகத்திலிருந்து. 

“அது ஆஷிம் இல்லை” என்றாள். 

“அதுதான் ஆஷிம் என்று பலர் அடையாளம் காட்டினார்கள். நீ ஆஷிமின் வாரிசா?” 

அவள் வெளியே பார்த்துக்கொண்டிருந்தாள். மாலை மங்கிக் கொண்டிருந்தது. கீழே அழுக்குப் பச்சைச் சதுரங்கள் மெதுவாக உருண்டுகொண்டிருந்தன. மேற்கே மாடர்ன் ஆர்ட்டிகூட தீட்டிய ஆரஞ்சுத் படுதா போல வானம். 

“பசி இல்லையா உனக்கு?” என்றேன். 

“இல்லை” என்றாள். 

நான் விமானத்தின் பானர் விளக்குகளைப் போட்டேன். அதன் பிரதிபலிப்பு அவள் முகத்தில் தெரிந்தது. 

“எத்தனை மீட்டர்கள்?” என்றாள். 

“நீ நிரம்ப அழுக்காக இருக்கிறாய்” என்று என் பையிலிருந்து கர்ச்சிஃப் எடுத்து அவள் முகத்தைத் துடைத்தேன். 

“தண்ணீர் இருக்கிறதா?” என்றாள். 

நான் பின்புறத்தில் இருந்த ஃபெல்ட் மூடிய கான்டீனை எடுத்து அவள் வாயில் ஊற்றினேன். அவள் சட்டை நனைந்தது. “போதும்” என்றாள். 

“நீ எவ்வளவு நாட்களாக பட்டினி, உண்ணாவிரதம்?” என்றேன்.

“நேற்றிலிருந்து.” 

“ஏதாவது சாப்பிடுகிறாயா?’ 

“நோ” என்றாள். 

“சிகரெட் பழக்கம் உண்டா?” என்றேன்.

“இல்லை” என்றாள். 

“எனக்கு உண்டு.” 

அவள் மௌனமானாள், சற்று நேரம். 

“டில்லிக்கு இன்றிரவே போகிறோமோ?” என்றாள்.

“ஆம்.” 

“என் நண்பர்கள் என்ன ஆனார்கள்?” 

“நண்பர்கள்?“ 

“என்னுடன் கைதானவர்கள்.”

“அவர்கள் உன்னுடன் சிறையில் இல்லை?” 

“இல்லை. அவர்கள் வேறு எங்கோ கொண்டு செல்லபட்டார்கள்: அவர்களைச் சுட்டிருப்பார்கள், இந்நேரம். நான் தப்பித்தேன். நான் ஏன் தப்பித்தேன்? சர்க்கார் அதிகாரி மகள், எனவே ஷேம்!” என்றாள். சற்று நேரம் கழித்து, ஜோம்பிஸ்! பராமினென்ட் ஜோம்பிஸ்” என்றாள். எனக்கு அந்தப் பிரயோகம் பிடிபடவில்லை 

“நிஷா!” என்றேன். 

“எஸ் டிரைவர்!” என்றாள். 

“உன்னைப் பற்றிச் சொல்லேன்” என்றேன்.

“பார்ன் 1952, நாட் ஃப்ரி எட்” என்றாள்.

திடீரென்று என்னைப் பார்த்தாள். “காப்டன்! ஒரு ஒப்பந்தம் செய்து கொள்ளலாமா?” என்றாள்.

“சொல்” என்றேன். 

‘என்னை விடுவித்து விடேன்” என்றாள். 

“அதற்குப் பதில்?” 

“அதற்குப் பதில், அதற்குப் பதில், நான்…”

அவள் அந்த வாக்கியத்தை முடிப்பதற்குள் நான் சற்றும் எதிர்பாராத ஒரு நிகழ்ச்சி அங்கே நிகழ்ந்தது. 

இந்த நாவல் முடிய இருந்து தப்பித்த

பத்தாம் அத்தியாயம்

அப்பொழுது விமானம் சற்று வினோதமாக நடந்து கொள்ளத் துவங்கியது. ஸென்னா எனக்கு அதிகப் பழக்கம் இல்லாத விமானம். ஒரே சிராகப் போய்க்கொண்டிருந்தது. திடீரென்று ‘கக் கக்’ என்று இரும ஆரம்பித்தது. கம்பஸ்சன் சரியில்லை என்றால் சில சமயம் மிஸ் ஆகுமே அதுபோல. நான் உடனே கொஞ்சம் அதிகமாக திராட்டில் கொடுத்துப் பார்த்தேன். பதில் கிடைத்தது. வேகம் அதிகமாகியது. ஆனால் சற்று நேரம் கழித்து மறுபடி இருமல். கொஞ்சம் அதனால் வேகம் குறைவதால் ‘சடக்’ என்று தூக்கிப் போட ஆரம்பித்தது. சற்று நேரம் கழித்து மறுபடி தானே சரியாகிவிட்டது. “ட்ரபிள்” என்றேன். நிஷாவிடம் அல்ல. எனக்கே சொல்லிக்கொண்டேன். 

“ஆர் வி கோயிங் டு க்ராஷ்?” என்றாள் நிஷா. “இல்லை” என்றேன். சற்று நேரம் கழித்து, “இன்னும் இல்லை” என்றேன். விமானம் மிக ஒழுங்காக, பஞ்சாகப் போய்க் கொண்டிருந்தது. இதுதான் பேஜார். இந்த மாதிரி பழுதுகளில் ‘டெவலப்பிங் ஃபால்ட்’ என்று சொல்வார்கள். அடுத்த தடவை எப்பொழுது ஏற்படும் என்று காத்திருக்க வேண்டும். சரியாக ஓடிக்கொண்டிருக்கிறது. திடீர் என்று புத்தியைக் காட்டுகிறது. எதனால் என்று கண்டுபிடிப்பதற்குள் மறுபடி சரியாகிவிட்டால் என்னத்தைச் செய்வது! 

இதோ மறுபடி! விமானம் சுத்தமாக அணைந்துவிட்டது. என் வயிற்றுக்குள் ஒரு பய சூன்யம் திடீரென்று ஏற்பட்டது. ‘க்விக், ஏதாவது செய்’ என்று மூளையின் செய்தி கைகளுக்கு எட்டுவதற்குள் சரியாகி விட்டது. 

“யூ ஸ்டுப்பிட் இடியட்!” என்றேன். 

நிஷா என்னை முறைத்தாள். 

“உன்னை இல்லை. விமானத்தை” என்றேன். 

“பயமா?” என்றாள்.

“ஆம்” என்றேன்.

“எனக்குப் பயமில்லை.” 

“குறுக்கே கடக்கும் கன்றுக்குட்டிக்கு டிராஃபிக் பயம் கிடையாது” என்றேன். மறுபடி எல்லா முட்களையும் எல்லா விளக்குகளையும், எல்லா மீட்டர்களையும் கவனித்தேன். மிகச் சீராக, ஆரோக்கியமாகத் தான் இருந்தது. 

நான் வெளியே பார்த்தேன். இருட்டு. வெல்வெட் இருட்டு, சுத்தமாக ஒரு நட்சத்திரம் தெரியாத இருட்டு. எந்த நேரமும் விமானம் நின்றுபோகும். எப்பொழுது நிற்கும் என்பது சொல்ல முடியாது. இப்பொழுது நிற்கலாம் அல்லது பத்து வரி தள்ளி அப்பொழுது நிற்கலாம். இந்த நிலையில் நீர் என்ன செய்வீர்? சொல்லுங்கள், நான் என்ன செய்ய வேண்டும்? விமானம் ஓடிக்கொண்டிருக்கும் போதே அடுத்த தடவை நிற்பதற்குள் பேசாமல் இறங்கித் தரை தொட்டபின் என்ன ‘ட்ரபிள்’ என்று பார்க்க வேண்டும். இந்த இருட்டில் எங்கே இறங்குவது? பக்கத்தில் ஒரு கட்டிப் போட்ட பெண், பொறுப்பில்லாத விமா…

மறுபடி! ‘ஜிவ்’ என்று கீழே சரிந்தது. மிகப் பிரயத்தனப்பட்டு கீழே பாயும் விமானத்தை மாற்றினேன். மறுபடி விர்ர்… உயிர் வந்துவிட்டது. சரியாகிவிட்டது. 

“இறங்க வேண்டும், இறங்கித்தான் ஆகவேண்டும்” என்றேன்.

“எங்கே? இந்த இருட்டிலா?” 

“மாவ் படித்திருக்கிறாயே, எல்லா விதமான ஆபத்திற்கும் மாவ் வழி சொல்லியிருப்பாரே! இந்த விமானத்தைச் சரிசெய்ய என்ன சொல்லியிருக்கிறார்?” 

“உனக்குப் பயம். அதுதான் உளறுகிறாய்.”

“நான் யோசிக்க வேண்டும்.” 

“இன்ஜின் பூரா அணைந்துவிட்டால் என்ன ஆகும்?”

“நாளைக்குச் செய்தித்தாளில் ஒரு ஓரத்தில் நாலு வரிச் செய்தி வரும். இந்தக் கதை இத்தோடு ‘முற்றும்’ போட்டுவிடுவார்கள்.”

ஜம்ஷட்பூரைக் கூப்பிட்டேன். பதில் இல்லை, அலஹாபாத்தைக் கூப்பிட்டேன். லக்னோ, கல்கத்தா, எல்லோரையும் ஒவ்வொருத்தராக கூப்பிட்டேன். அவர்கள் எல்லோரும் தூங்கிக்கொண்டிருக்க வேண்டும். அல்லது என் ரேடியா பழுதாகி இருக்க வேண்டும். பதில் கிடைக்கவில்லை.

நல்ல இருட்டு. எங்களைக் கரைத்து விழுங்கத் காத்திருக்கும் இருட்டு…

இப்பொழுது விமானம் அடிக்கடி பாயைப் பிராண்ட ஆரம்பித்தது. உற்சாகமாகப் போய்க்கொண்டே இருக்கும் இன்ஜின் நின்று போய்த் தூக்கிப்போடும். மறுபடி பற்றிக் கொள்ளும். 

நிஷா நான் செய்யும் தகிடுதத்தங்களை ஆர்வத்தோடுதான் பார்த்துக் கொண்டிருந்தாள். பயத்தோடு அல்ல, கவலையோடு அல்ல. எனக்குத்தான் வியர்த்தது. நாக்கெல்லாம் உப்புக் கரித்தது. அல்லது அவள் பயம அந்த மெலிய வெளிச்சத்தில் எனக்குப் புலப்படாமல் இருக்கலாம்.

“கான் ஐ ஹெல்ப்?” என்றாள். என் உதவியற்ற நிலையைப் பார்த்து.

“நோ!” என்றேன். ஒரு வழியாக நின்றுவிட்டாலும் பரவாயில்லை என்று தோன்றியது. தப்பு. ஒருவழியாக நின்று போனால் ‘கோவிந்தா’ தான். இருந்தும் இந்த மாதிரிக் கண்ணைக் கண்ணைக் காட்டிவிட்டுச் செல்லும் தப்பு எனக்கு எரிச்சல் தந்து என்னை எதிலும் கவனம் செலுத்த முடியாமல் செய்தது. பகலாக இருந்தால் பாதகமில்லை. எங்கேயாவது சமதளம் பார்த்து இறங்கிவிடலாம். இரவு. நல்ல இருட்டு, மேகப் பார்வை, எந்தப் பயலும் ரேடியோவில் பதில் சொல்லமாட்டேன் என்கிறான். ஸில்லி! 

மெதுவாக த்ராட்டிலைக் குறைத்துப் பார்த்தேன். அதிகரித்துப் பார்த்தேன். ‘மிக்ஸ்சர்’ கண்ட்ரோலை ‘ரிச்’ ஆக்கினேன். ‘லீன்’ ஆக்கினேன். ம்ஹும் எல்லாவற்றுக்கும் ‘பெப்பே’ என்றது. திடீர் திடீர் என்று புத்தியைக் காட்டிக்கொண்டுதான் இருந்தது. எவ்வளவு நேரம் தாங்கும்! இறங்கித்தான் ஆகவேண்டும். இருட்டிலா? என் ரேடியோ வேறு சரியில்லை. அதனால் நம் அதிர்ஷ்டத்தின் மேல் நம்பிக்கை வைத்துக் கொண்டு எவ்வளவு தூரம் போக முடியும்? 

மறுபடி விமானம் ஞாபகப்படுத்தியது, நின்றது! சரிந்தது; நேர்ப்பட்டது.

“அதிக நேரம் தாங்காது. அடுத்த தடவை பூரா நின்றுவிடும். நிஷா உன் கடைசி ஆசை என்ன?” என்றேன். 

“இது அமெரிக்க விமானமா?”

“ஆம்” என்றேன். 

“யாங்க்கி பாஸ்டர்ட்ஸ்!”

“நல்ல விமானம் இது. ஒரு கம்யூனிஸ்ட்டை ஏற்றுக்கொள்ள மறுக்கிறது” என்றேன். 

“மாவ் பற்றி என்ன சொன்னீர்கள் காப்டன்?” 

“எதற்கும் மாட்ஸே துங் மருந்திருக்கிறது என்று உன் போன்றவர்கள் சொல்கிறார்கள்! இந்த நிலைக்கு மருந்து இருக்கிறதா?” 

“இருக்கிறது. நம்மை அவர்தான் காப்பற்றப் போகிறார்.”

“எப்படி?”

“ஸில்லி ஃபூல்! அங்கே பார்” என்றாள். 

அவள் காட்டிய இடதுபக்கத்தில் ஜன்னலுக்கு வெளியே பார்த்தேன்.

என் உள்ளே பிரவாகமாக ஆனந்தம் பாய்ந்தது. “ய்ய்ய்ய் யிப்பி!” என்று கத்தினேன். இடதுபக்கம் தூரத்தில் ஒரு வெள்ளை விளக்கு பளிச்சிட்டது. சற்று நேரத்தில் ஒரு பச்சை விளக்கு கண் சிமிட்டியது. ஒரு விமான நிலையத்தின் பீக்கன் விளக்கு! பக்கத்தில் மிக மெல்லிய மஞ்சளில் இரட்டையாக ரன்வேயின் விளக்குச் சரம்.

“நீஷா! யூ ஆர் கிரேட்!” 

“மாவ்! அவர்தான் கிரேட்”

“லாங் லிவ் மாட்ஸே துங்! நான் உன்னை முத்தமிட அவர் அனுமதிப்பாரா?” 

“செருப்பால் அடிப்பார்.” 

“எனக்கு இந்த ரன்வேயைக் காட்டினதற்கு உனக்கு ஒரு சீனத்து கொக்கோகோலா! லாங் லிவ் சைனா. அவர்கள் செய்யும் பேனா நன்றாக வேலை செய்கிறது.” 

“உங்கள் வர்க்கமே டிஜெனரேட், இறங்குவதற்கு ஆன வேலைகளைப் பார்.” 

“இனி என்ன! இப்பொழுதே நின்றால்கூடச் சமாளித்துவிடுவேன். மிதந்து இறங்கிவிடலாம். இது என்ன விமான நிலையம் என்று தெரியவில்லை…”. 

என் காதிலிருந்து கழற்றியிருந்த ஹெட்ஃபோன் முணுமுணுத்தது. மாட்டிக்கொண்டேன். 

“…டிராஃபிக் ஸர்க்யூட். ஸே யுர் கால் ஸைன் அண் ஐடெண்டிஃபை யுர் ஃப்ளைட்” என்னைத்தான் கூப்பிட்டுக் கொண்டிருக்கிறார்கள். துல்லியமாகக் கேட்டது. ரேடியோகூட இப்பொழுது வேலை செய்கிறது.

நான் பன்னாகரிலிருந்து லக்னோ செல்லும் விமானி. நடுவில் விமானத்தில் கோளாறு ஏற்பட்டதால் அங்கே இறங்க அனுமதி கேட்டேன். அவர்கள் உடனே அனுமதி தந்தார்கள். அது ஒரு விமானப் படையின் விமான நிலையம். பெயர் சொல்ல மாட்டேன். சற்றுக் கட்டுப்பாடு ஜாஸ்தி இருக்கும். ஆனால் ஆபத்தில் எந்தவிதமான நிலையமும் உதவி செய்யத் தயங்கமாட்டார்கள்.

“ராத்திரி இங்கே தங்கப் போகிறாயா?” என்று கேட்டார்கள் டவரிலிருந்து. 

“ஆம்” என்றேன். ரன்வேயில் தரை தொட்டுப் படிந்ததும் எனக்குத் தெம்பு வந்தது. ‘நைட் பார்க்கிங்’ ஏரியாவுக்குச் செலுத்தச் சொன்னார்கள். மார்ஷலரை நோக்கிச் செல்லச் சொன்னார்கள். தூரத்தில் இரண்டு டார்ச் வைத்துக்கொண்டு ஓர் ஆள் எனக்கு வரவேற்பு செய்தான். அவனை நோக்கி ஊர்ந்தபோது நிஷாவிடம் சொன்னேன். “நிஷா! நான் உன் விலங்கை எடுக்கப்போகிறேன். இது விமானப்படை நிலையம். நான் வேலை கவனத்தில் இருக்கும்போது எங்கேயாவது ஓடிப்போக முட்டாள்தனமாக முயற்சிக்காதே. எனக்கும் நன்றாக ஓட வரும். 100 மீட்டர் 11 செகண்டில் ஓடுவேன். மேலும் இது பூரா காவல் காக்கப்பட்ட விமான நிலையம். அதிகாரிகளிடம் ஒரு வார்த்தை சொன்னால் போதும். துருவித் தீர்த்து உன்னைப் பொறுக்கிக்கொண்டு வந்துவிடுவார்கள். அதிக தூரம் ஓட முடியாது!”. 

“பார்க்கலாம்” என்றாள். 

“அப்படியானால் நீ தப்பிக்க முயற்சிப்பாயா?” 

“உனக்கு மூளை கிடையாதா? இவ்வளவு நேரம் ஒரே மாதிரி கட்டுப் போடப்பட்டு உட்கார்ந்திருந்தபின் எனக்கு இருக்கிற உடற் களைப்பில் என்னால் நடக்க முடிவதே சந்தேகம். ஓடவா போகிறேன்?”

“இருந்தும் முயற்சிக்காதே!” 


விமானத்தை அணைத்த பின் நான் நிஷாவின் விலங்குப்பூட்டை விடுவித்தேன். அவள் கால் கட்டை அவிழ்த்தேன். அவள் துடை பெல்ட்டை விலக்கினேன். விமானப்படையைச் சார்ந்த கார்ப்ரல் ஒருவர் என்னிடம் நேராக வந்தார். “நீங்கள் நேராக சென்று ட்யூட்டி வாரண்ட் ஆபிசரைப் பார்த்துவிடுங்கள்” என்றார். நிஷா “நீதான் என்னைத் தூக்க வேண்டும்” என்றாள். “எழுந்திருக்க முடியவில்லை” என்றாள். நான் இறங்கி அந்தப் பக்கம் சென்று கதவைத் திறந்து அவளை அப்படியே மார்போடு அணைத்து வெளியே கொண்டுவர வேண்டியிருந்தது. அவள் வெளியே தொய்ந்தாள். என்னைப் பிடித்துக்கொண்டு கால்களை உதறிக்கொண்டாள். கைகளை உதறிக்கொண்டாள். இடுப்பைப் பிடித்துக்கொண்டு பின்பக்கம் சாய்ந்தாள்; நொண்டி நொண்டி நடந்தாள்.

அவளையும் கார்ப்ரலையும் முன்னால் போகவிட்டு விட்டு நான் சற்றுப் பின்னால் நடந்தேன். தூரத்திலிருந்த ஸர்ச் லைட்டின் வெளிச்சத்தில் எங்கள் மூவரின் நிழல்களும் நீண்டு எங்களுடன் வர, கார்ப்ரல் நிஷாவிடம் சினேகிதம் தேட அவளை ஏதோ கேட்டுக்கொண்டே நடந்தான்.

நிஷா தலை ஆட்டங்களிலேயே பதில் கொடுத்து வந்தாள்.

வாரண்ட் ஆபீசரின் அறைக்குச் சென்று நான் என் பையிலிருந்த ஒரு துண்டுக் காகிதத்தை எடுத்து, “நான் டில்லிக்கு டெலிபோன் செய்ய வேண்டும். மிக அவசரம்” என்றேன். நிஷாவை உட்காரச் சொன்னேன். அவளை என் பார்வையிலிருந்து விலக்காமல் பேச வேண்டியிருந்தது. அவர்களிடம் அவள் யார் என்று சொல்லக்கூடாது. 

டில்லியில் ‘இன் கேஸ் ஆஃப் ட்ரபிள்’ என்று சொல்லிக் கொடுக்கப்பட்ட டெலிபோன் நம்பரை நான் கூப்பிட விரும்பினேன். அவர்களிடம் “ட்ரங்க்காலுக்கு ஆகும் கட்டணத்தைக் கொடுக்கிறேன். மிக அவசரம். எனக்காக சர்க்கார் அதிகாரிகள் காத்திருக்கிறார்கள். எல்லாம் டாப் சீக்ரெட்” என்று எத்தனையோ வாதாடியபின் என்னைப் பேச அனுமதித்தார்கள். 

“ஹலோ!” 

“ஐம் காப்டன் ஜேகே. அங்கே யார் பேசுவது?”

“காப்டன்! எங்கே அவள்? வந்துவிட்டீர்களா?”

“இல்லை. விமானம் பழுதாகிவிட்டது. நடுவில் ஒரு விமானப்படை விமான நிலையத்தில் எமர்ஜன்ஸிக்காக இறக்கி இருக்கிறேன். காலை என்ன ஃபால்ட் என்று கண்டுபிடித்து நாளை காலைதான் டில்லி வரமுடியும்!” 

“அவள்! நிஷா! எப்படி இருக்கிறாள்?”

“ஷி இஸ் ஓகே!” 

“அவள் தப்பிவிடுவாள். மிக ஜாக்கிரதையாக இருங்கள்!”

“கவலைப்படாதீர்கள்! நாளைக் காலை கிளம்புமுன் போன் செய்கிறேன்” வைத்து விட்டேன். 

“தாங்க் யூ ஆபீசர்” என்று ஆபீசரைப் பார்த்துச் சிரித்துவிட்டு, “வா நிஷா” என்று திரும்பினால் –

நிஷா இல்லை. 

– தொடரும்…

– ஜே.கே., முதற் பதிப்பு: 1971.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *