கதையாசிரியர்:
கதை வகை: தொடர்கதை
கதைத்தொகுப்பு: கிரைம் த்ரில்லர்
கதைப்பதிவு: June 6, 2024
பார்வையிட்டோர்: 3,416 
 
 

(1971ல் வெளியான தொடர்கதை, ஸ்கேன் செய்யப்பட்ட படக்கோப்பிலிருந்து எளிதாக படிக்கக்கூடிய உரையாக மாற்றியுள்ளோம்)

அத்தியாயம் 5-6 | அத்தியாயம் 7-8 | அத்தியாயம் 9-10

ஜேகே பெரும்பாலும் ஒருவருடன் இரவில் பேசிக்கொண்டிருக்கும்

ஏழாம் அத்தியாயம்

திரும்பிப் பார்த்ததும் தெரிந்தவரை நான் முன்பே சந்தித்திருக்கிறேன். போலீஸ் நிலையத்தில் கப்பல் காரில் வந்திறங்கி என்னைச் சடுதியில் விடுவித்துக் கழன்றுகொண்டவர். 

“ஹலோ காப்டன்..” என்றார். 

“ஹலோ, என்னை அந்த மாதிரி பலாத்காரமாய் அழைத்துக் கொண்டு வந்ததை நான் மிகவும் ஆட்சேபிக்கிறேன் உங்களை நான் சந்தித்திருக்கிறேன்” என்றேன். 

அந்த அகலமான ஹாலில் தேசத்தலைவர்கள் யாவரும் தொங்கினார்கள், படமாக விட்டம் சற்று உயரமாகவே இருந்தது. மின் விசிறிகள் இல்லை. மிகச் சுத்தமாக விலை உயர்ந்த எளிமையாக இருந்தது. ஒரே ஒரு புலி மட்டும் சுவரிலிருந்து கழுத்து நீண்டு ஸர்க்கா 1948இல் உறைய வைக்கப்பட்ட உறுமலை இன்னும் காட்டிக்கொண்டிருந்தது. பக்கத்தில் டாக்டர் பரமேச்வரனின் தலையை வைத்தால் எப்படி இருக்கும் என்று யோசித்தேன். அதற்கு, பரமேச்வரன் உறுமினால் எவ்விதம் இருக்கும் என்று யோசிக்க வேண்டியிருந்தது. 

“உட்காருங்கள்” என்றார் அவர். 

நான் உட்கார இடம் தேடினேன். சுவரின் அருகில் முதுகு பதிய வைத்து எட்டு நாற்காலிகள் வரிசையாக இருக்க; அதில் ஒன்றில் உட்கார்ந்தேன். முழங்காலில் கையைப் பதியவைத்துக்கொண்டேன். அவர் ஹாலின் மத்தியில் நடந்தார். அவருடைய நிழல் நீண்டு இரண்டு மூன்று விளக்குகளினால் குழப்பமாக விசித்திரமாக அவரைத் தொடர்ந்தது. 

ஓர் ஆள் உள்ளே வந்து அவரிடம் ஃபைலைக் கொடுத்தான். அவர் அதைப் புரட்டினார். ஒரு பக்கத்தில் நின்றார். கண்ணாடி மாற்றிக்கொண்டார். படித்தார். 

“ஜேகே, 33. ஏ லைசன்ஸ். மெட்றாஸ் ஃபிளையிங் கிளப். அப்புறம் வில்லை. அனுபவம் ஏழு வருஷம். மூன்று விபத்துகள். ஒன்று எம்.பி.எஃப்.ஸி, டில்லி ஃபிளையிங் கிளப். 26 வயதில் பி. மணமாக வில்லை. அனுபவம் ஏழு வருஷம். மூன்று விபத்துகள் ஒன்று இரவில் நடந்த விபத்து. கலிங்காவில் தற்காலிக பைலட். அஸ்ஸாமில் ஒரு விபத்து. உயிர்ச்சேதமில்லாமல் தப்பியதற்குக் கம்பெனியிலிருந்து சர்டிபிகேட். பெரும்பாலும் காண்ட்ராக்ட் வேலை. அக்ரிகல்ச்சர் பைலட், பீச் க்ராப்ட், சிப் மங்க், எச் டி. 2. பொனான்ஸா, ஸெஸ்னா எக்ஸ்பிடைட்டர், டக்கோட்டா எல்லாவற்றிலும் எண்டார்ஸ் மெண்ட்! மொத்தம் பறந்த நேரம்…” 

என் பறந்த வாழ்வின் ஜாதகம் முழுவதும் வாசித்தார். நான் கேட்டுக்கொண்டே இருந்தேன். என் கைக்கடியாரத்தைப் பார்த்தேன். மணி இரவு பன்னிரண்டை நெருங்கிக்கொண்டிருந்தது. படக் என்று பைலை மூடினார். என்னைப் பார்த்துச் சிரித்தார். “சொல்லுங்கள்” என்றார். 

“நீங்கள்தான் சொல்ல வேண்டும். எனக்கு ஒன்றுமே புரியவில்லை”

“ஜேகே, இன்று நீங்கள் கைது செய்யப்பட்ட குற்றத்திற்கு மூன்று வருஷமாவது நிச்சயம் சிறைத் தண்டனை கிடைத்திருக்கும். உங்களுக்குத் தெரியுமா?”

“நான் அதில் அனாவசியமாக மாட்டிக்கொண்டேன். நான் அதில் கொஞ்சமும் சம்பந்தப்பட வில்லை.”

“நீங்கள் விடுதலையானது எதற்கு என்று உங்களுக்குத் தெரியுமா?”

“தெரியாது. எல்லாம் ஏதோ தூக்கத்தில் நடப்பது போல் நடக்கிறது. யாரோ வந்தார்கள். கைது செய்தார்கள். எனக்கு அடியிலிருந்தே கதை புரியவில்லை. அப்புறம் நீர் வந்தீர். விடுவித்தீர். அப்புறம் காரில் கோழிக்குஞ்சு போல என்னைப் பொறுக்கிக்கொண்டு இங்கு நிறுத்தி வைத்து என் சரித்திரத்தை இரவு பன்னிரண்டு மணிக்குப் படிக்கிறீர்கள். வாட் இஸ் ஆல் திஸ்?” 

“உங்களை விடுவித்ததற்கு நீங்கள் எனக்கு நன்றிகூடச் சொல்ல வில்லையே!”

“நன்றி! எதற்காக விடுவித்தீர்கள்?” 

“எனக்கு நீங்கள் ஒரு காரியம் செய்ய வேண்டும்.” 

“இந்த லைன் அடிக்கடி வருகிறது. இப்படித்தான் அந்தப் புரொபஸர் கேட்டார். காரியம் செய்தேன். என்ன ஆயிற்று? விலங்கு, போலி நோட்டு, கஞ்சா, என் பெட்ரூமெல்லாம் போலீஸ்காரர்கள்.”

“நான் உங்களைக் கேட்கப்போவது நம் தேசத்துக்காக.”

“அதேதான் அந்தக் கிழவரும் சொன்னார். வெளியே போகும் வழி எது?” 

“அவசரப்படாதீர்கள் நீங்கள் முதலில் செய்தது கள்ளக்கடத்தல். இப்பொழுது செய்யப்போவது தேச சேவை.”

“டெல்மி அனதர் வெளியே போகும் வழி எது என்று கேட்டேனே. ஸார்! உங்கள் பெயர் என்ன?” 

“என் பெயர் முக்கியமில்லை.”

“பஞ்சாபகேசன் என்று வைத்துக்கொள்ளட்டுமா?”

“நான் மதராஸி அல்லவே!” 

“உங்களைப் பார்த்தால் என் நண்பர் பஞ்சாபகேசனைப் போல அல்லவா இருக்கிறீர்கள். அதனால்தான் சொன்னேன். நீங்கள் யார்?” 

“அதுவும் முக்கியமில்லை.”

நான் சுற்றுமுற்றும் தேசத்தலைவர்கள் படத்தைப் பார்த்தேன், 

“நீங்கள் சர்க்கார்தானே?”

“இருக்கலாம்.” 

“போலீஸா?”

“இருக்கலாம்.”

“லிவில் ஏவியேஷனா? என் வான ஜாதகத்தைக் கடகடவென்று ஒப்பித்தீர்களே?”

“மேலே கேளுங்கள்.”

“உள்துறை மந்திரி சபையா?”

“இருக்கலாம்.” 

“மந்திரியா?”

“இல்லை” என்று சிரித்தார். “மந்திரி யார் என்றுகூடத் தெரியாதவரா நீர். பேப்பர் படிக்கிற வழக்கமில்லையா?”

“படிப்பேன். கிராஸ்வோர்ட்ஸ், மற்றும் ஸ்போர்ட்ஸ் மட்டும். நிறைய மந்திரிகள் இருக்கிறார்களே. அவர்களின் சில்லறை மந்திரியாக இருக்கலாம் என எண்ணினேன். டில்லியில் ஒரு அரைச் செங்கல்லை எந்தத் திக்கில் எறிந்தாலும் ஒரு மந்திரியை அடிக்கலாம் என்று ஜோக் உண்டு ஸார்…ஸார், சிரிக்க மாட்டீர்களா? பரவாயில்லை.  ஆனால் உங்களிடம் மந்திரி களை இருக்கிறது.” 

“அப்படி ஒரு களை இருக்கிறதா என்ன?”

“ஆம். வந்தால் போலீஸ்காரர்கள் விழுந்து சேவிக்கிறார்கள். இம்பாலா கார், கதர், தேசத் தலைவர்கள் படங்கள். அந்த ஃபைல். இளந்தொந்தி. பாலிஷ் உடம்பு…. விஷயத்தைச் சொல்லுங்கள்” 

“ஜேகே, நீங்கள் வெளியே பார்ப்பது இதெல்லாம். உள்ளே நான் வேறுவிதமானவன். நான் சோகமானவன். நான் யார் என்பதெல்லாம் முக்கியமில்லை. ஆனால் நான் உங்களைத் தப்பாக சட்ட விரோதமாக எதுவும் செய்யச் சொல்லமாட்டேன். நான் உங்களை விடுவித்ததற்குக் காரணம் உங்களைப்போல ஒரு பைலட் ஒரு முக்கியமான காரியத்திற்கு எங்களுக்குத் தேவை. அந்தக் கூட்டம் உங்களைக் கடத்தலுக்கு உபயோகப்படுத்திய கூட்டம். ஒரு சுண்டைக்காய்க் கூட்டம். அவர்களை விட்டுப் பிடிக்கலாம். எப்போது வேண்டுமானாலும் பிடிக்கலாம். ஸ்மால் டைமர்ஸ், சிக்கன் ஃபீட். அவர்கள் எல்லோரையும் எங்களுக்குத் தெரியும். ஒரு டெலிபோன் பேச்சில், ஒரு கைச் சொடக்கில் அத்தனை பேரையும் வளைத்துவிடலாம். மூன்றரை லட்சம் ஒப்பியம் எங்களுக்கு நொறுக்குத் தீனி. கோடிக்கணக்கில் சுருட்டுபவர்கள், அரசாங்கத்தை ஏமாற்றுபவர்கள் இருக்கிறார்கள். வரி கட்டாதவர்கள். எஃகு ஸ்டாக் முழுவதையும் மடக்கிக் கறுப்பு மார்க்கெட்டில் விற்பவர்கள். எக்ஸ்செஞ்ஜ் விதிகளில் சிறிய சிறிய தவறுகளில் பெரிய பெரிய லட்சங்கள் பண்ணுகிறவர்கள். சர்க்கார் உத்தியோகஸ்தர்களுக்கு லஞ்சம் தருகிறவர்கள். அண்டர் இன்வாய்ஸ் பண்ணுகிறவர்கள் என்று எத்தனையோ ரகங்களில் இருக்கிறார்கள். ஆனால் அவர்கள் செய்யும் துரோகமெல்லாம் சிறிய துரோகங்கள்; மற்றொரு துரோகம் இருக்கிறது. பெரியது. மிகப் பெரியது. மிகப் பெரியது. ஜேகே! உங்களுக்கு ஜனநாயகத்தில் நம்பிக்கை உண்டா?”

“ஜனநாயகத்தைப் பற்றி நினைப்பதற்கு எனக்கு நேரமில்லை.”

“இந்த தேசம் ஒன்று என்று நினைக்கிறீர்களா? இந்த தேசம் ஐக்கியமாக நிலைக்கும் என்று நினைக்கிறீர்களா?” 

நான் அவரை நிதானமாகப் பார்த்தேன். அவர் என் பதிலில் தான் இந்தியாவின் எதிர்காலம் தொங்குகிறது போல் ஆவலுடன் காத்திருந்தார். நான் கனைத்துக்கொண்டேன். சொன்னேன். 

“நம் தேசத்தை ஐக்கியப்படுத்துவது ஒன்றே ஒன்று! அது அயோக்கியத்தனம். அது தேசம் பூராவும் இருக்கிறது. இந்தியில், குஜராத்தியில், தமிழில், பெங்காலியில், மலையாளத்தில் எல்லாவற்றிலும் நடப்பது அயோக்கியத்தனம். என் நண்பன் ஒருவன் இருக்கிறான். பைலட், அவனுடன் பல இடங்களுக்குப் போயிருக்கிறேன்; பல மொழிப் பிரதேசங்களுக்கு ஏரோட்ரோமில் போய் இறங்கியதும், அவர்களு தெரிந்த ஓர் ஆளைக் கூப்பிட்டு, “உங்கள் பாஷையில் ‘விளக்கை அணை’ என்பதற்கு எப்படிச் சொல்ல வேண்டும்” என்று கேட்டுக் கொள்வான். தலை வாரிக் கொள்வான். கிளம்பிவிடுவான். அவனுக்கு மொழித் தகராறு எப்பொழுதுமே இருந்ததில்லை. சில பித்தலாட்டங்களுக்கு மொழியே தேவையில்லை. தேசிய ஒருமைப்பாடு விபச்சாரத்தில்தான் இருக்கிறது. பம்பாய் சென்று பாருங்கள். குஜராத்தியா, மராத்தியா, டமிலா, பெங்காலியா – எந்த மொழி வேண்டும் உங்களுக்கு? பஞ்சாப ஸிந்து குஜராத மராடா திராவிட உத்கல வங்கா!…” என்றேன். 

“ஸ்வீப்பிங் ஜேகே!” 

“பின் ராத்திரி பன்னிரண்டு மணிக்கு காரில் தரதரவென்று இழுத்துக்கொண்டு வந்து கேட்டால் அப்படித்தான் சொல்வேன்…உங்கள் ஃபைலில் என்னைப் பற்றி எழுதி இருக்குமே ‘குடிப்பேன்’ என்று. கிவ் மி எ ட்ரிங்க்” 

“ஆரஞ்சு ஜூஸ் தருகிறேன்.’ 

“இரவு 12 மணிக்கா? ஆர் யூ க்ரேஸி?”

“ஸாரி, அதை விட ஸ்ட்ராங்காக என்னிடம் எதுவும் இல்லை.”

“கவனியுங்கள். இந்தக் கதையில் எல்லோரும் சுற்றி வளைத்துப் பேசுகிறார்கள். நான்கு வார்த்தைகளில் சொல்லுங்கள். என்ன வேண்டும் உங்களுக்கு? முடியும், முடியாது என்று சொல்லிவிடுகிறேன்” 

“முடியாது என்று உங்களால் சொல்ல முடியாது.”

“ஏன்?” 

“திரும்ப ஜெயிலுக்குப் போக விருப்பமா?”

“ஓஹோ, அப்படியா செய்தி? நான் மாட்டேன் என்றால் நாளைக் காலை மறுபடி அர்ர்ர்ரெஸ்டா!” 

“ஆம்”. 

“ஹாப்ஸன்ஸ் சாயஸ்.” 

“ஆம்…” 

“என்ன வேலை?”

“ஸெஸ்னா விமானம் ஓட்டியிருக்கிறீர்கள் அல்லவா நீங்கள்?”

“ஓ எஸ். ஸெஸ்னா! நல்ல விமானம். பூ கணக்கா ஒரு இஷ்டமுள்ள வளைந்து கொடுக்கும் பெண்போலப் பறக்கும். எனக்குப் பெண் பிறந்தால் ஸெஸ்னா என்று பெயர் வைப்பேன்.”

“நாளைக் காலை ஒரு ஸெஸ்னா விமானத்தை எடுத்துக்கொண்டு ஒரு இடத்திற்குச் சென்று ஒரு… ஒரு… ஆசாமியை டில்லிக்கு அழைத்துக் கொண்டு வரவேண்டும்.” 

“அவ்வளவுதானா?”

“அவ்வளவுதான்.”

“இதில் ஏதும் சிக்கல் இருப்பதாகத் தெரியவில்லையே?”

“சிக்கல் இருக்கிறது. சொல்கிறேன்”. 

“எந்த இடம்? எந்த ஆசாமி?”

“சொல்கிறேன்”. 

“செய்ய முடியும் என்று நினைக்கிறேன். ரொம்ப சிம்பிளாகத்தான் என்னைப் பொறுத்தவரை படுகிறது.”

“மிக ரகசியமாகச் செய்ய வேண்டும்.”

“அதைப் பற்றி ஏப்பம்கூட விடமாட்டேன்.” 

“நீங்கள் கிளம்புவது பற்றியோ, நீங்கள் திரும்ப வருவது பற்றியோ ஒருவருக்கும் தெரியக்கூடாது” 

“தெரியாது”. 

“உங்களுக்காக நாளை எல்லாம் தயாராக இருக்கும். நீங்கள் செல்ல வேண்டிய அந்த விமான நிலையத்தின் பெயர் பன்னாகர், தெரியுமா உங்களுக்கு?” 

“தெரியும். நான் ஒரு தடவை இறங்கியிருக்கிறேன். கல்கத்தா அருகில் இருக்கிறது. ரன்வே ரொம்ப மோசம்”. 

“நடுவில் பெட்ரோலுக்காக நீங்கள் லக்னோவில் இறங்கிக் கொள்ளலாம்”. 

“சரி,” 

“மறுபடி திரும்பி வருகையில் அந்தப் பெண்ணை அழைத்துக் கொண்டு நேராக இரவு டில்லியில் வந்து இறங்கும்படியாக அமைக்க வேண்டும்.” 

“கம், கெய்ன், அந்த?” 

“பெண். சின்னப் பெண். அவளைத்தான் நீங்கள் அழைத்துவர வேண்டும்”. 

“வயது?” 

“இன்னும் இருபது ஆகவில்லை. காப்டன் ஜேகே. நீங்கள் மா ட்ஸே துங் படித்திருக்கிறீர்களா?” 

“ராத்திரி பன்னிரண்டு மணிக்கு ‘மாவ் திங்க்’ பற்றிக் கேட்கவா என்னை கூப்பிட்டீர்கள்? ஏன் இப்படி அடிக்கடி ஸப்ஜெக்ட் மாற்றுகிறீர்கள்? முதலில் இருபது வயதுப் பெண். அப்புறம் சேர்மன் மாவ்! ஐ டோன் ஸீ தி கனெக்ஷன்.” 

அவர் சொன்னார்: 

“Wherever there is struggle there is sacrifice and death is a common occurrence. But we have the interests of the people and the sufferings of the great majority at heart and when we die for the people it is a worthy death”. 

“சபாஷ் நன்றாகச் சொன்னீர்கள்!” 

“சொன்னது நானில்லை, மா ட்ஸே துங்!” 

“மாவ் அப்படிச் சொன்னாரா? குட் ஓல்ட் மாவ். நன்றாக நீஞ்சுவாராம். ஆனால், ஆனால் மாவ் இங்கு எப்படி வருகிறார் என்பதுதான் புரியவில்லை.” 

“அந்தப் பெண் அபாயகரமானவள்.” 

“எல்லாப் பெண்களுமே அபாயகரமானவர்கள். எல்லோர் உள்ளேயும் டி.என்.டி. இருக்கிறது. அந்தப் பெண் மா ட்ஸே துங் உட்கொண்டவளா?” 

“அவள் இறப்பதைப் பற்றி அஞ்சாதவள்.” 

“யார் இறப்பதைப் பற்றி? தானா? பிறரா?”

“இரண்டு விதத்திலும் அஞ்சாதவள். அவளை நீங்கள் தனியாக விமானத்தில் கொண்டுவர வேண்டும்”

“கவலைப்படாதீர்கள். கொணர்கிறேன். பெண்கள் என் ஸ்பெஷாலிட்டி”

“கேப்டன் ஜேகே, சமீபத்தில் கல்கத்தாவில் எட்டு இளைஞர்கள் கைதானார்கள். அவர்கள் மொத்தம் ஒன்பது அரசியல் கொலைகள் செய்தவர்கள். ஒரு பிரின்ஸிபாலை முதுகில் குத்தியிருக்கிறார்கள். ‘பான் அமெரிக்கன்’ பஸ்ஸை வெடி வைத்துத் தகர்த்திருக்கிறார்கள், போலீஸ் ஆபிஸர் மேல் அமிலம் எறிந்து அவர் முகத்தைப் பார்க்க முடியாதபடி செய்திருக்கிறார்கள். ஒரு மாணவனை ஏரியில் மிதக்க விட்டிருக்கிறார்கள். ஒரு சர்வகலாசாலையில் மாலடாவ் காக்டெய்ல், ஒரு ரெஸ்டாரண்டில் வெடி மருந்து, ஒரு…”

“போதும். தினசரி பேப்பரில் வரும் பட்டியல்தான்… சமீபத்தில் சற்று அடங்கியிருந்தது என்று நினைத்தேன்.”

“அந்த எட்டுப் பேரில் ஒருத்தி பெண். வயது பத்தொன்பது. பெயர் நிஷா. அவளைத்தான் நீங்கள் டில்லிக்குக் கொண்டுவரப் போகிறீர்கள்…” 

“அவளுடைய ‘டைப்’ புரிகிறது. கிராப் வைத்துக்கொண்டு. காலைச் சாப்பாட்டுக்கு எதேச்சாதிகாரிகளின் ரத்தம் கேட்கும் தீவிரச் சிவப்பு… எனினும் ஒரு பெண் தானே! பெண்கள் எப்பொழுதுமே சற்று இன்ஃபீரியர்! அதிருக்கட்டும். அவளை மட்டுமா டெல்லிக்குக் கொண்டுவர வேண்டும்?” 

“அவளை மட்டும்.” 

“ஏன்?” 

“அவள் என் பெண்!” என்றார். 

ஜேகே நிஷாவைப் பற்றி அறிந்துகொள்ளும் 

எட்டாம் அத்தியாயம் 

என்னைக் காப்பாற்றியவரும் என்னை நள்ளிரவில் தன் அகலமான வீட்டுக்கு அழைத்துச் சென்று, ‘பன்னாகர்’ என்கிற இடத்திலிருந்து ஒரு பெண்ணை இட்டுக்கொண்டு இரவில் டில்லி வந்து சேரவேண்டும் என்று கேட்டுக் கொண்டவருமான அந்த உயரமான மனிதர் கடைசியில் சொன்னது எனக்கு ஆச்சரியம் தந்தது. அரசியல் கைதிகளில் ஓரு இளம்பெண் இருப்பது ஆச்சரியமில்லை. இந்தக் காலத்தில் இளம்பெண்கள் எத்தனையோ புதிது புதிதாகச் செய்கிறார். சுருட்டுக் குடிக்காத குறை (அதுகூட எனக்குத் தெரியாமல் குடிக்கிறார் களோ என்னவோ). மற்றபடி சகலமும் நடக்கிறது! ஆதலால் அரசியலில் ஒரு பெண் தீவிரமாக ஈடுபடுகிறாள் என்றால் அதில் எனக்கு ஆச்சரியம் ஏற்படாததில் உங்களுக்கு ஆச்சரியம் ஏற்படாது. ஆனால் இது அவர் மகள் என்பதை என்னால் செரிக்க முடியவில்லை. இவர் ஒரு ‘டிப்பிகல்’ அரசாங்க உயர் அதிகாரி. பெரிய காரர். போலீசிடம் செல்வாக்கு, சுகவாசம்… இதற்கும் எங்கேயோ பெங்காலில் சிறைப்பட்டு பன்னாகருக்கு இழுத்துச் செல்லப்படும் யுவதி அவர் பெண் என்பதற்கும் எப்படி முடிச்சு? நம்ப மாட்டேன் என்றது என் மூளை. 

“ஸார் நம்ப முடியவில்லை” என்றேன். அவர் தன் பெண் பிறந்து வளர்ந்ததையும், வளர்ந்த சூழ்நிலையையும் 1500 வார்த்தைகளில் சொன்னார். அவள் எப்படி மாறிப் போனாள் என்பதை விவரித்தார். அதைப் பகுதி பகுதியாக இந்த அத்தியாயத்தில் இறைத்திருக்கிறேன். ஒரேயடியாகக் கொடுத்தால் ரம்பம் படம் போட்டு ஆசிரியருக்கு ‘தேனி – பால கோபாலன்’ என்று லெட்டர் எழுதுவீர்கள். எனவே மேலே நிகழ்ந்த நிகழ்ச்சிகளை சொல்லிக்கொண்டே போகிறேன். இடைவெளியில் அந்தப் பெண் நிஷாவைப் பற்றி அவர் தந்த தகவல்களையும் தருகிறேன். சம்மதமா வஸந்தி? 

மறுநாள் காலை எனக்காக ஒரு புத்தம் புது ‘ஸென்னா’ விமானம் காத்திருந்தது. அலுமினியம் பளபளக்க நின்றது. அதன் ரிஜிஸ்ட்ரேஷன் எழுத்துகள் ஆங்கிலத்தில் ஆரம்பித்ததிலிருந்து அது அமெரிக்காவில் பதிவான விமானம் என்று தெரித்துகொண்டேன். எம்பஸியைச் சேர்ந்ததாக இருக்கலாம். அல்லது நாடெங்கும் பரவி இருக்கும் எத்தனையோ அமெரிக்க ஸ்தாபனங்களின் நபர்களில் ஒன்றின் கமா ஒருவரின் விமானமாக இருக்கலாம். அதைப்பற்றி நான் கவலைப்படவில்லை.

அந்த ஸென்னா மிகப் புதிதாக இருந்தது. ஒட்டுவதற்கு எல்லா சவுகரியங்களும் இருந்தன. சின்ன விமானம்தான். ஆனால் வி.ஓ.ஆர், ஐ.எல்.எஸ்., வி.எச்.எஃப் போன்ற ரேடியோ வசதிகள் யாவும் இருந்தன. ஆட்டோ பைலட் வசதி இருந்தது. எனக்கு இந்த ஜில் வேலை எல்லாம் ஒத்து வராது. பைலட்டைச் சோம்பேறியாக்கும் சாதனங்கள் இவை. நான் பறப்பது உட்காரும் இடத்தில் அல்லது பிருஷ்ட பாகத்தில் ஏற்படுகிற அழுத்தத்தை வைத்துக்கொண்டு, எனக்கு ‘த்ராட்டில்’ கண்ட்ரோலும் மற்ற ப்ரைமர் கண்ட்ரோல்களும் போதுமானது. ஃப்ளாப் இருந்தால் உசிதம். இறக்கை வைத்த டப்பா போதும் எனக்கு. 

‘க்ளியரன்ஸ்’ எல்லாம் கையெழுத்தாகித் தயாராக இருந்தது. மெயின், ஆக்ஸிலியரி இரண்டு டாங்குகளும் பெட்ரோல் நிரம்பி இருந்தன. என் ஃப்ளைட் ப்ளான் லக்னோ வழியாக பன்னாகர் போவதற்குத் தயாராக இருந்தது. வானிலை சுத்தமாக இருந்தது. எனக்கா எல்லாரும் காத்திருந்தார்கள். நான் வந்ததும் மௌனமாக, திறமையாக தரை வேலைகள் நடந்தன. ஒரு போலீஸ் ஆபிசர் பச்சையாக ஷேவ் செய்துகொண்டு என் அருகில் வந்து, “காப்டன் ஜேகே!” என்றார். 

“ஆம்” என்றேன். 

“நீங்கள் துப்பாக்கி உபயோகப்படுத்தி இருக்கிறீர்களா?” என்று ஒரு துப்பாக்கி கேட்டார். நான் “இல்லை” என்றேன். நான் “ஏன்” என்றேன். அவர், “ஒன்றுமில்லை, கேட்டேன்” என்றார். அவர், “தேவை இருந்தால் ஒரு துப்பாக்கி தருகிறேன். தற்காப்புக்கு” என்றார். நான், “தேவையில்லை. என்னை எவரும் கற்பழிக்கப் போவதில்லை” என்றேன். அதை அவர் ரசிக்க வில்லை.

விமானத்தின் ரேடியோ சுத்தமாகக் கேட்டது. துடிப்புடன் விரலை வைத்ததும், இன்ஜின் புறப்பட்டது. ரன்வேயில் ஒரு சிறு ஓட்டம். ஒரே தூக்கல்! என்ன டாப் கிளாஸ் விமானம் அய்யா! விமானமில்லை. இறகு பொருந்திய தேவதை ஸெஸ்னா. 

தேவதையை 15,000 அடிவரைகூடக் கொண்டு செல்லலாம். ‘ஸுலிங்’ உயரம் என்று ஒன்று உண்டு. 8000, 9000 அடி எல்லாம் சுலபமாகப் பறக்கலாம். சற்றுக் குளிரும். அவ்வளவுதான். 

அதிகாலைடேக் ஆப் ஆகி, டில்லி கல்கத்தா ‘ஏர்வே’யைம் பிடித்துக்கொண்டேன். ஏர்வே என்பது வானத்தில் அமைந்திருக்கும் ராஜபாட்டை, கண்ணுக்குத் தெரியாத ரேடியோ அலைகளைக் கொண்டு வானத்தில் விரிக்கப்பட்ட வரவேற்புக் கம்பளம்போல, பூமியில் நூற்றுக்கணக்கானவர்கள் ஒத்துழைத்து உதவி செய்யும் வரவேற்பு அது. அதை விட்டு விலகுவது விமானிக்கு நல்லதல்ல. பூமியில் இருப்பவர்களுக்கும் நல்லதல்ல. டில்லி வி.ஓ.ஆரைத் திருகித் தொட்டுக்கொண்டேன். விமானம் பூவை விழுங்கியது போல் சென்றது… நிஷா! 


அவள் சிறு வயதில் மிகவும் சாதுவான குழந்தை. தன் ஐந்தாம் வயதில் தாயை இழந்தாள். நான் ஒரு தவறு செய்துவிட்டேன். அவளிடம், “உன் அம்மா செத்துப் போய்விட்டாள்” என்று நேராகச் சொல்லியிருக்கலாம். அதற்குப் பதில் “ஆஸ்பத்திரிக்குப் போயிருக்கிறாள்; நாளை வருவாள், அடுத்த மாதம் வருவாள்” என்று பொய் சொல்லிக்கொண்டே ஒரு வருஷத்தில் மறக்க அடித்துவிடலாம் என்று நினைத்தேன். அது அவள் மனத்தைப் பாதித்திருக்க வேண்டும் – அந்த ஒரு வருஷ எதிர்பார்ப்பும், ஏமாற்றமும். அவளே ஒருநாள் என்னைக் கேட்டாள்: “அம்மா செத்துப் போய்விட்டாளா?” என்று. 


என்னுடைய டில்லி – லக்னோ பிரயாணம் சம்பவமில்லாததாக இருந்தது. ஒரு வி.ஐ.பி. பிரயாணம் போல எல்லோரும் ஒத்துழைக்க காற்றுக்கூட எனக்கு வாகாக பின்புறத்திலிருந்து வீச, நான் எதிர்பார்த்துக் கணக்கிட்டதற்கு அரை மணி முன்பே லக்னோவைத் தொட்டுவிட்டேன். மணி சுமார் ஒன்பதிருக்கும். பெட்ரோலுக்காக இங்கே இறங்க வேண்டிய தேவையே இல்லை. ஆனால் எனக்குக் கொடுத்திருந்த செயற்குறிப்பின்படி நான் லக்னோவில் இறங்கியாக வேண்டும். எனக்கு மேல் விவரங்கள் சில அங்கு கிடைக்கும் என்று சொல்லி இருந்தார்கள். எனக்கு யாவுமே தெளிவில்லாமல் இருந்தது. எனக்குத் தெளிவாகத் தெரிந்திருந்தது நான் பன்னாகர் போக வேண்டும். ஒரு பெண்ணைப் பொறுக்கிக்கொண்டு டில்லி வரவேண்டும். அஷ்ட்டே! 

லக்னோவில் இறங்குகையில், ரேடியோவிலேயே சொன்னார்கள். நேராக ஹாங்கர் நம்பர் இரண்டிற்குச் செலுத்தும்படி. அவ்விடம் சென்று இன்ஜினை அணைத்ததும், சிலர் வந்து தனியாக ஒரு சிறு அறைக்கு அழைத்துச் சென்று, டீ கொடுத்தார்கள். டீ அருந்தினேன். அப்புறம் அருமையான பைன் ஆப்பிள் கேக் கொடுத்தார்கள். அதை நான் மௌனமாகச் சாப்பிட்டேன். அவர்கள் என்னையே பார்த்துக்கொண்டிருக்க எனக்குச் சாப்பிடுவதில் ஒருவிதத் தயக்கம் ஏற்பட்டது. நான் சாப்பிடும்போது செய்யும் சில சப்தங்கள்கூட அந்த மௌனத்தில் பெரிதாகத் தெரிந்தன. “ம்! ஏன் எல்லோரும் மௌனமாக இருக்கிறீர்கள்? ஏதாவது ஹர்த்தாலா?” 

அவர்கள் மேலும் மௌனமாக இருந்தார்கள். “கம் ஆன்! ஸ்பீக்! ஸே ஸம்திங்” என்றேன். முதல் பழக்கம் ஏற்படும் பெண்ணிடம் சொல்வது போல. 

“இன்னொரு கேக் வேண்டுமா?” 

“வேண்டாம். நான் பன்னாகர் போகிறேன். ஏதாவது செய்தி இருக்கிறதா எனக்கு?”

“இல்லை. சோப்ரா அவர்கள் இனிமேல்தான் வருவார். கார் வரும்வரை மற்றொரு கப் டீ சாப்பிடுகிறீர்களா?”


நிஷா சின்ன வயதில் விளையாட மாட்டாள். கொஞ்சம் பூஞ்சையாக இருந்தாள். எட்டு வயதில் அவளுக்கு டான்ஸில்ஸ் ஆபரேஷன் செய்வித்தேன். அதன்பின் அவள் வேகமாக வளர்ந்தாள். ஆனால், அவள் எப்போதுமே அதிகம் பேசமாட்டாள். புத்தகங்கள் படிப்பாள். பள்ளிக்கூடத்தில் தேவைக்கு மட்டுமே படிப்பாள். கிளாஸில் முதலிலும் இல்லை. கடைசியிலும் இல்லை. எனக்கு அவள் படிப்பினால் கவலையைத் தந்ததில்லை. அதைக் கவனிக்க எனக்கு நேரமும் இருந்ததில்லை. எப்பொழுதாவது அவள் என்ன படிக்கிறாள் என்று பார்ப்பேன். பொதுவாகவே தன் வயதுக்குச் சற்று அதிகமான புத்தகங்களைப் படிப்பாள். ஷி வாஸ் வெரி கொய்ட். ஆனால் அவள் சின்ன வயதில் கொஞ்சம் கூட அவளிடம் ‘வயலன்ஸ்’ இருந்ததில்லை. அதுதான் எனக்கு ஆச்சரியத்தைத் தருகிறது. எறும்பைக்கூட தள்ளிவிட்டு நடக்கக்கூடியவள். எனக்கு நினைவிருக்கிறது. ஒருநாள் ‘ஷெட்’டில் பூனைக்குட்டியை, கிடாப் பூனை குதறிவிட்டுப் போய் விட்டது. அதன் வயிற்றுப்பாகத்தில் சிவப்புக் குதறலுடன் குற்றுயிராய் கத்தக்கூட ஜீவனற்றுக் கிடந்தது பூனைக்குட்டி. அதை உயிர்ப்பிக்க நிஷா எவ்வளவு பாடுபட்டாள் தெரியுமா? எதிர் வீட்டு டாக்டர் மாமாவை எழுப்பி இன்ஜெக்ஷன் குத்த வைத்து, பாண்டேஜ் போட வைத்து, பூனைக்குட்டிக்கு! 

அது பிழைக்கவில்லை. 


சோப்ரா என்கிறவர் வந்ததும் என்னுடன் சிரிக்காமல் கைகுலுக்கினார். (நாற்பது வயதிருக்கலாம். காதோரத்தில் மட்டும் நரை. ஒரு காலத்தில் அழகாக இருந்திருக்க வேண்டியவர்). என்னைத் தோளில் பதிய அணைத்துத் தனியாய் அழைத்துச் சென்று, “இன்னும் அரை மணியில் டேக் ஆஃப் செய்தால் எத்தனை மணிக்கு பன்னாகர் போவீர்கள்?” என்று கேட்டார். நான், “சுமார் நாலு மணி ஆகும்” என்றேன். “உடனே பார்ட்டியுடன் திரும்ப லக்னோ வாருங்கள்” என்றார். “அங்கே இறங்கியதும் உங்களுக்கு எல்லாப் பாதுகாப்பும் செய்விக்கிறோம். பன்னாகரில் இறங்கியதும் பிஸ்வாஸ் என்கிற எஸ்.பி. உங்களைச் சந்திப்பார். அவர் அந்தப் பெண்ணுடன் தயாராக இருப்பார். அவளை விமானத்தில் ஏற்றிவிடுவார்கள். நீங்கள் விமானத்தை விட்டு இறங்க வேண்டியதில்லை.”

“ஒன் மினிட் சோப்ரா அந்தப் பெண் என் பக்கத்தில் உட்காரப் போகிறாள் இல்லையா?” 

“ஆம்!”

“நான் ஓட்டும்போது கலாட்டா செய்து, திமிறி, ஏதாவது செய்ய முற்பட்டால், விமானத்தில் அது ஆபத்தாயிற்றே” 

“அது நடக்காது. இரண்டு முறைகளில் அதைச் சமாளிக்கலாம். அவளுக்கு ஸெடேட்டிவ் கொடுத்து அரைத் தூக்கத்திலேயே கொண்டு வரலாம். அல்லது அவளைக் கட்டிவிடலாம். கைகளை பின்னுக்கு மடக்கி விலங்கிட்டுவிடலாம். சீட் பெல்ட் மாட்டி இருக்கும். கால்களைச் சேர்த்து பிணைத்துவிடலாம். நகர்த்த முடியாமல் செய்துவிடலாம். நீங்கள் எப்படி விரும்புகிறீர்களோ அப்படிச் செய்வார்கள். மேற்கொண்டு எந்தவிதமான பத்திரங்கள் தேவையோ அவைகளைச் செய்ய பிஸ்வாஸுக்கு எல்லாம் தெரியும். பெண் நகரமுடியாது. மேலும் பெண்தானே!” 

“மாட்ஸே துங் படித்த பெண். அவளை டில்லிக்குக் கொண்டு வருவதன் அர்த்தம் என்ன?” – தெரிந்தே கேட்டேன். 

“எனக்குத் தெரியாது” என்றார் சோப்ரா. 

நான் மறுபடி விமானத்தைக் கிளப்பியபோது ‘பெஸ்ட் ஆஃப் லக்’ என்று கட்டை விரலை உயர்த்திக் காட்டினார். 


நிஷா சற்று வேறுவிதமான பெண் என்று நான் தாமதமாகத்தான் தெரிந்துகொண்டேன். நான் மறு விவாகம் செய்துகொள்ளவில்லை. அரசாங்க ஃபைல்களிலேயே மூழ்கி இருந்தேன். அவளைக் கவனிக்க ஒரு பெண் வைத்திருந்தேன். நிஷாவை மிக நல்ல பள்ளிகளுக்கே அனுப்பினேன். 

சிம்லாவில் உள்ள ஒரு பப்ளிக் ஸ்கூலுக்கு அனுப்பினேன். அவள் அங்கே சில வருஷம் படித்தாள். என்ன படித்தாள் என்று கவனிக்க முடியாமல் போய்விட்டது. எனக்கும் அவளுக்கும் அன்னியோன்னியம் ஏற்பட அம்மா என்கிற இடைச்சங்கிலி இல்லாததால் அதிக வாய்ப்புகள் இல்லாமல் போய்விட்டது. அவள் பள்ளிப்படிப்பு முடிந்ததும் என்னை கல்கத்தாவுக்கு மாற்றினார்கள். அவளை அங்கே மெடிக்கல் காலேஜில் சேர்த்தேன். முதல் இரண்டு வருஷங்கள் துடியாகப் படித்தாள். அதற்குள் என்னை மறுபடி டில்லிக்குக் கூப்பிட்டு விட்டார்கள். அவளை ஹாஸ்டலில் சேர்த்தேன். அப்பொமுதே நான் அவளை இழந்துவிட்டேன். அந்த ஹாஸ்டலில் என்னதான் நிகழ்ந்ததோ அவளுக்கு! 


லக்னோ விமான நிலையத்தை விட்டு நான் கிளம்புகையில், பிற்பகலாகிவிட்டது என் கடிகாரத்தைக் கண்ட்ரோல் டவரில் ‘டைம் செக்’ வாங்கித் திருத்திக்கொண்டேன். பிற்பகல் மேகங்கள் பஞ்சப் மின்னல் பளிச்சிட்டது. அதன் இடியோசை எனக்குக் கேட்கவில்லை. பொதிகளாகத் திரண்டுகொண்டிருந்தன. தூரத்தில் ஒரு பகல் எனக்கு அளிக்கப்பட்ட உயரத்திற்கு வந்து விமானத்தின் திராட்டிலை சீரமைக்க, அதன் விர்ர்ர் எனக்கு மிக இனிய நாதமாகக் காதில் விழுந்தது. நேரடி க்ளியரன்ஸைப் பயன்படுத்தி லக்னோ வி.ஒ.ஆர். உதவி கொண்டு பன்னாகர் நோக்கிச் செல்கிறேன். அந்த மேகங்களின் ஊடே செல்ல எனக்கு விருப்பமில்லை. விமானம் சிறியது. குலுக்கல் அதிகம் இருக்கும். சுற்றுப்பாதையிலிருந்து விலகி, மேகங்களைக் கடந்ததும் மறுபடி பாதையில் சேர்ந்து கொண்டேன். என் விமானத்தைப் பார்த்தேன். பக்கத்து சீட் காலியாக இருந்தது. அதில் ஒரு பெண் வரப்போகிறாள். என் இதயம் ஜாஸ் சங்கீதத்தில் ஸின்க்கோபேஷன் போல ஒரு துடிப்பை விட்டுவிட்டு மறுபடி சேர்ந்து கொண்டது. என்னில் பயமா? 

என் பைக்குள் அந்தத் தந்தை கொடுத்த சிறிய புத்தகம் ஒன்று இருந்தது. சிவப்புப் புத்தகம். அதை எடுத்துப் புரட்டினேன். நிஷாவைப் பற்றிய புத்தகம்…

எல்லோரும் இறந்தாக வேண்டும். ஆனால் சாவுக்கு மதிப்பு மாறலாம், டஸுமா சின் என்கிற பழைய சீன எழுத்தாளர் சொன்னார்: “சாவு எல்லா மனிதர்களுக்கும் ஏற்பட்டாலும், அது தாய் மலையைவிடக் கனமாக இருக்கலாம். அல்லது ஒரு இறகைவிட கனமற்றதாக இருக்கலாம்.” மக்களுக்காக இறப்பது தாய் மலையை விடக் கனமானது. எதேச்சாதிகாரிகளுக்கும் ஏகாதிபத்தியக்காரர்களுக்கும் அடிமைப் படுத்துபவர்களுக்கும் இறப்பது ஒரு சிறகைவிடக் கனமற்றது. 


அவள் எப்படி மாறினாள்! எனக்குக் கடிதம் எழுதுவது நின்றது. ஒரு தடவை தந்தியடித்தேன். அதற்குப் பதில் வரவில்லை. வேலைத் தொந்திரவுக்கிடையில் ஒரு தடவை அவசரமாகக் கல்கத்தாவுக்குப் பறந்து சென்றேன். அவளைப் பார்த்தேன். அவள் மாறுதல் உடம்பில் தெரியவில்லை. அவள் மனம் எனக்கு விளங்கவில்லை. எத்தனை வினோதங்களைப் பதிய வைத்துக்கொண்டு நான் கேட்ட கேள்விகளுக்கு ஒற்றை வார்த்தைகளில் ஆம், இல்லை என்று பதில் சொல்லிக்கொண்டிருந்தாள்! அவள் பார்வை என் மேல் படவில்லை. தூரம் பார்த்தது! மிகக் கொஞ்சம் பேச்சு. நிஷா உனக்கு உடம்பு சரியில்லையா? ஊஹூம். டில்லிக்கு வந்துவிடுகிறாயா? வேண்டாம். நிஷா, ஆர் யூ ஆல்ரைட்? ஆம். 

ஷி வாஸ்ன்ட் ஆல்ரைட் அடுத்த மாதம் ஹாஸ்டல் அதிகாரியிடமிருந்து எனக்குத் தந்தி வந்தது. ‘நிஷா ஹாஸ்டலில் இல்லை. அவளைக் காணோம்’ என்று. நான் மேற்கு வங்காளத்தின் பிரதம போலீஸ் அதிகாரியுடன் பேசினேன். அவளை எப்படியாவது கண்டுபிடித்துத் தரவேண்டும் என்று. கல்கத்தா அக்கிரமச் செயல்களில் கொதித்தது. முதுகுகளில் குத்தினார்கள் வெடி வைத்தார்கள். சடலங்கள் மிதந்தன. சர்க்கார் வண்டிகள் எரிந்தன. பர்த்வான் அருகில் சில இளைஞர்கள் கைது ஆனார்கள். என் மகள் அதில் ஒருத்தி. அஸன்ஸால் சிறைக்கு அவர்கள் மாற்றப்பட்டிருக்கிறார்கள். “அவளை என்ன செய்வது? அவள் உங்கள் மகள் என்பதை இதுவரை வெளியிடவில்லை?”

அவளை டில்லிக்குக் கொண்டுவர வேண்டும். அவள் கொண்டு வரப்படுவது ஒருத்தருக்கும் தெரியக்கூடாது. பத்திரிகைகளுக்குத் தெரியக் கூடாது ஜேகே ! எனக்கு என் செல்லப்பெண் திரும்ப வேண்டும். அவள் எனக்கு வேண்டும். எனக்கு வேண்டும்! தகப்பன் என்கிற கடமை நான் தவறியதில்லை. அவள் என் ஒரே பெண். நான் உயிர் வாழ்வதன் அர்த்தம் அவள் அம்மாவின் பிம்பம். அவளை நான் இழக்கக்கூடாது. இழக்க மாட்டேன். அரசாங்க மெஷின் முழுவதையும் நகர்த்தி எத்தனையோ செலவுகள் செய்து, எத்தனையோ ரிஸ்க் எடுத்துக்கொண்டு என் பெண்ணுக்காகக் காத்திருக்கிறேன். அவள் எனக்குப் பத்திரமாக வேண்டும். அவள் நெஞ்சில் பதிந்திருக்கும் அத்தனை ரத்தக்கறைகளைத் துடைத்து, அவளைப் புதுப்பிக்கப் போகிறேன். அவளைக் கொண்டுவா! உனக்கு நான் எவ்வளவோ செய்வேன். நான் பெரிய அதிகாரி என்பதை மறந்துவிடு. ஒரு தந்தை, அவள் என் மகள். என் ரத்தம். அவள் மனதைக் கெடுத்த அத்தனை பேரையும் சுவரில் பதிய வைத்து மெல்லக் குறி பார்த்துச் சுடவேண்டும். டுமில்! டுமில்! டுமில்! அது அப்புறம். முதலில் என் மகள்… என்… மகள்… என்… மகள்…


பன்னாகரில் நான் இறங்கினேன். ரன்வேயின் மத்தியிலிருந்து வலது பக்கம் விலகச் சொன்னார்கள். தூரத்தில் ஒரு தகரக் கொட்டகை தெரிந்தது. அங்கே ஓர் ஆள் எனக்குச் சைகை காட்டி வரவேற்றார். பக்கத்தில் ஒரு ‘வான்’ தெரிந்தது. அதன் அருகே சற்று விலகி நான்கு போலீஸார் துப்பாக்கி தயாராக நின்று கொண்டிருந்தார்கள். நான் அருகே செல்லச் செல்ல அந்த அதிகாரி வானின் முன் பக்கத்திலிருந்து இறங்கி வெளிவருவது தெரிந்தது. இன்னும் அருகே செல்ல அவர் தோளில் டபிள்யூ பி.ப்பி. என்கிற பித்தளை எழுத்துகள் தெரிந்தன. வண்டியின் பின்கம்பி அடைப்புக்குள் ஓர் முகம் தெரிந்தது. நான் விமானத்தைக் கொண்டுவந்து அருகில் நிறுத்துவதை சிரத்தை யில்லாமல் பார்த்துக் கொண்டிருந்த முகம். 

நிஷா! 

– தொடரும்…

– ஜே.கே., முதற் பதிப்பு: 1971.

Print Friendly, PDF & Email

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *