கதையாசிரியர்:
தின/வார இதழ்: கல்கி
கதைத்தொகுப்பு: கிரைம்  
கதைப்பதிவு: December 18, 2012
பார்வையிட்டோர்: 28,991 
 
 

நான் எழுந்திருக்கும்போது விடியற்காலை நாலு மணி. சாராய ரெய்டுக்குப் போய் ராத்திரி ஒரு மணிக்குத்தான் வந்து படுத்தேன். அடித்துப் போட்டாற்போல உடம்பில் அப்படியொரு வலி. எழுந்து அவசரமாகக் குளித்துவிட்டுக் கிளம்பினேன். இப்ப பஸ் பிடிச்சால்தான் மதியத்துக்காவது திருச்சி போய் ஆஜராக முடியும்.. இன்றும் நாளையும் பந்தோபஸ்து டியூட்டி.. போன வாரம் சி.எம். ஃபங்ஷனுக்குப் போய், மூன்று நாட்கள் போட்ட யூனிஃபார்மோட, கால்களில் இழுத்துக்கட்டிய பூட்ஸ்களோட, ஐயோ! கொளுத்தும் வெய்யில், வியர்வையில் உள்ளாடைகள் மொடமொடத்துப் போய் அறுத்துவிட, நடக்க முடியாமல் எரிச்சல். வீட்டிற்கு வந்து பூட்ஸ்களைக் கழட்டி வீச, கால்விரல்கள் தெறிக்கும் வலி. பாதங்கள் சிலுத்துப் போய் உணர்ச்சியில்லை. அப்புறம் பாக்கியம்தான் தைலம் தேய்த்து, மஸாஜ் பண்ணி, வெந்நீர் ஊற்றி…. நேற்றிலிருந்துதான் வலி பரவாயில்லை. இப்ப உடனே திருச்சி போகணும்.ஒக்காளி…! எங்களை மட்டும் இரும்பாலயா அடிச்சி வெச்சிருக்கு?.

சில திருட்டுகள்

இன்று காலையிலேயே ஸ்டேஷனலிருந்து அவசர கால். கான்ஸ்டபிள் அய்யாதுரைதான் பேசினார்.ஈஸ்வரன் கோவிலிலிருந்து மூன்று ஐம்பொன் சிலைகள் திருடு போய்விட்டன. கிழிஞ்சிது. எவனவன் வந்து நம்ம தலையை உருட்டப் போகிறானோ?.ஒரு விதத்தில் ரிலீஃப். திருச்சி ப்ரோக்ராம் ரத்து. ஜீப்பில் ஸ்பாட்டுக்கு விரைந்தேன். வெளியே ஊர் திரண்டிருந்தது. மேற்கு வாசல் பூட்டை உடைத்துவிட்டு நுழைந்திருக்கிறார்கள். நிதானமாய் கோவிலை சுற்றிச் சுற்றி வந்தேன். ஒரு இடத்தில் புகைத்துப் போட்ட ஏழெட்டு ஃபில்டர் சிகரெட் துண்டுகள் கிடந்தன. காஸ்ட்லி சிகரெட்கள்.. களவு போன சிலைகள் அத்தனையும் முந்நூறு வருஷங்கள் தொண்மையானவை. கான்ஸ்டபிள்கள் கும்பலை விரட்டிக் கொண்டிருந்தனர். நான் தடயம் தேடி மீண்டும் சுற்றிவர, வடக்கு வாயிற்பக்கம் மண்டிக் கிடந்த புதரில் ஏதோ தெரிய, ஓடினேன். புதரில் வாட்ச் மேன் கழுத்து அறுபட்டு செத்துப் போயிருந்தான்.

கடவுளே! கொலை வேறயா?.அவசரமாக மேலிடத்திற்கு தகவல் அனுப்பிவிட்டு, ஃபொரன்ஸிக் துறைக்குக் கால் போட்டேன். அந்நேரம் வீட்டு நினைப்பு வந்தது. ச்சே! பிள்ளைகள் சந்தோஷத்தில் இந்த தடவையும் மண் தான் இன்றிலிருந்து நாலாம் நாள் குடும்பத்துடன் முக்கொம்பு,கல்லணை,ஸ்ரீரங்கம், என்று டூர் கிளம்பவிருந்தோம். லீவு கூட போட்டாச்சி. என்ன புண்ணியம்?.சிலைதிருட்டு ப்ளஸ் கொலை. சீரியஸ் அஃபென்ஸ். டி.எஸ்.பி.யிலிருந்து,ஐ.ஜி வரைக்கும் வந்து டேரா அடிப்பார்கள். பத்து நாட்களுக்கு மண்டைகாயும். எங்கியும் நகர முடியாது. த்சு! பிள்ளைகளோடு நான் எங்கியும் போனதில்லை. சினிமா என்றால் கூட அம்மா,பிள்ளைகளோடு சரி. மதியத்திற்கெல்லாம் டி.எஸ்.பி. வந்திறங்கி விட்டார்.
“என்னய்யா துரைசாமீ! ஏதாவது க்ளூ?.”

“சீக்கிரமே புடிச்சிடலாம் சார்.”—–கடுகடுவென்று என்னை முறைத்தார். தலை கவிழ்ந்தேன்.

“என்ன ஜோஸ்யமா?.மொதல்ல இந்தமாதிரி தாளம் தட்றதை நிறுத்து. இதோ பாரும்யா! ஒண்ணுக்கும் பிரயோசனம் இல்லாமல் சீட்டை தேய்ச்சிக்கிட்டு இருக்கிறதாலதான் இன்னும் எஸ்.ஐ.. லெவல்லியே இருக்கீரு.பதினெட்டு வருஷம், லாங் சர்வீஸ். உன் கொலீக்ஸ் எல்லாம் எப்பவோ உன்னைத் தாண்டி புரமோஷனில் போயாச்சு. புரிஞ்சிக்கோ. இங்கே ஆக்டிவ்வா இல்லேன்னா குப்பை கொட்ட முடியாது. இது உமக்கு ஒரு நல்ல சான்ஸ். சமீபத்தில இந்திய அளவில் நிறைய சிலைகள் திருடு போயிருக்கு. ஒருத்தனையும் இதுவரை பிடிக்க முடியல. ஒருத்தன் சிக்கினால் போதும் மொத்த கும்பலையும் வளைச்சிடலாம். நீ ரொம்ப மெனக்கெடத் தேவையில்லைய்யா.வெகுளி ஜனங்க, அவங்களே துப்பு சொல்லுவாங்கய்யா. முயற்சி வேணும், அலையணும், நிறைய பேசிப் பார்க்கணும். வெறுமனே மாசத்துக்கு ரெண்டு ப்ராத்தல் கேஸு, பப்ளிக் நியூசன்ஸ், ஒரு பத்து சாராய கேஸு…..உன் கரியருக்கு இது போதாது. சரி…சரி இது உன்னால
ஆவாதுன்னு நினைக்கிறேன். பேசாம வேற டீமை ஏற்பாடு பண்ணிரட்டுமா?.”

“நோ..நோ..சார்!..ஐ வில் டூ மை பெஸ்ட் சார்.”

“தட் ஈஸ் த ஸ்பிரிட்.. குட் ஓகே!.”

யோசிக்க ஆரம்பித்தேன்..மொத்தம் மூணு சிலைகள். ஒவ்வொன்றும் எழுபது கிலோ. உள்ளூர் ஆட்கள் துணையில்லாமல் இது நடந்திருக்காது.. முதல் காரியமாய் லோக்கல் கேடிகளின் லிஸ்ட்டை ஏட்டு கணபதியிடம் கொடுத்தேன்.

“இன்னைக்கு சாயந்திரத்துக்குள்ளே எல்லாரையும் அமுக்கி நம்ம கஸ்டடிக்கு கொண்டுவந்திடணும். க்விக்!.”

மறு நாள் காலையிலிருந்தே அறநிலையத்துறையில் ஆரம்பித்து, யார் யாரோ வந்து விசாரணை நடத்தி விட்டுச் சென்றார்கள். மதியம் ஒரு மணிக்கு மோப்ப நாய் வந்தது. ஊரே கூடி நின்று வேடிக்கைப் பார்க்க, அது வாட்ச்மேன் சடலம் கிடந்த இடத்தை மோந்துவிட்டு, மெய்ன் ரோடுவரை சுமார் அரை கிலோ மீட்டர் தூரம் ஓடியது. இளவட்டங்கள் டேய்! அது தூர போய் ஒண்ணுக்கு அடிக்க ஓடுதுடா!—என்று சிரிக்க, அதுவும் யரையும் பிடிக்காமல் மைல் கல் மேல் ஒண்ணுக்கு அடித்துவிட்டு, திரும்பி வந்து விட, எல்லோரும் சிரித்தார்கள். அடுத்த இரண்டு நாட்களும் கேடிகளை உள்ளே தள்ளி, ஸ்டேஷன் கசாப்புக் கடைதான். ரத்தக்களரி, ரணக்களரிதான். ஆனால் ஒரு துப்பும் கிடைக்கவில்லை. கான்ஸ்டபிள் மணி வந்து
“சார்! ஒரு கான்ஸ்டபிள் போய் நமக்கு சொல்றதா?ன்னு நினைக்காதீங்க. இவனுங்க ரேஞ்ஜே வேற சார். பிக்பாக்கெட், தூங்கற வீட்ல அகப்பட்டதை சுருட்றது, தோண்டி, குடம், இப்படி. அப்புறம் கழனியில நெல்லு பிசையறது, இப்படித்தான் சார். இந்த சிலையை திருடிம் போனால் யார் வாங்கிக்குவாங்க?ன்னு கூட இவங்களுக்குத் தெரியாது சார்..”

வருத்தமாய் இருந்தது. விட்டுவிடச் சொல்லிவிட்டேன்.சே! பழைய கேடி என்பதற்காக நிரபராதிகளை என்ன அடி அடிச்சிட்டோம்?.வேட்டி, சட்டையெல்லாம் ஒரே ரத்தமாய் தலைதெறிக்க ஓடினார்களே. உள்ளே மனசு விம்மியது. இது அதற்கான துக்கமில்லை. என் மனசுக்குத் தெரியும். என் நெருக்கடிகளைப் புரிந்துக் கொள்ளாமல் பிக்னிக் கேன்ஸலான நாளிலிருந்து, பாக்கியமும், பிள்ளைகளும் என்னை விரோதியாய் பார்க்கிறார்கள்., முகங்கொடுத்துப் பேசறதில்லை. பெரியவன் பிரகாஷ் தன் கேனான் டிஜிட்டலை சார்ஜ் பண்ணி வைத்திருந்தானாம். பாக்கியம் தனக்கு பளிச்சென்று இரண்டு செட் புடவை,ப்ளவுஸ், பிள்ளைகளுக்கு இரண்டிரண்டு செட் ட்ரெஸ்கள் சூட்கேஸில் தயாராய் பேக் பண்ணி வைத்திருந்தது.. எனக்குத்தான் யாரும் எதுவும் எடுத்து வைக்கக் காணோம்.ஐயோ மறந்துப் போச்சி என்றாள் பாக்கியம். அவர்களுடைய உலகத்தில நான் இல்லை என்கிற நிஜம் சப்பென்று முகத்திலறைந்தது… அப்போது விழுந்த அடி, சுய இரக்கம், கண்ணீர் திரள்கிறது.

இன்றைக்கு முழுவதும் அலைச்சல். நிலத் தகராறில் ஒருத்தனையொருத்தன் வெட்டிக் கொண்ட மாரிநல்லூர் கேஸ் இன்றைக்குத்தான் ஃப்ர்ஸ்ட் ட்ரையல். கோர்ட்டுக்குப் போயிட்டு அப்படியே கழனிப்பாக்கம் ஃபெஸ்டிவல் டியூட்டி. முடிச்சிட்டு வீட்டிற்குள் நுழையறப்ப ராத்திரி பத்து மணி. ரொம்ப களைப்பாய் இருந்தது. சர்க்கரை வியாதியின் பாதிப்பு வந்ததிலிருந்து முன்னே மாதிரி சுத்த முடியவில்லை. உடம்பு ஓய்வுக்கு கெஞ்சுகிறது. உட்கார்ந்தேன். பாக்கியம் வந்து ஆரம்பித்தாள்.

“இந்தா! பிரகாஷ் பையனை கூப்பிட்டு விசாரி. அவன் போக்கே சரியில்லை.”

வந்த எரிச்சலை அடக்கிக் கொண்டேன்.இங்கிதமில்லா மனைவி.

“கிட்ட வந்தா சிகரெட்டு நாத்தம் புடுங்குது. குடிக்கிறான்னு கூட சொல்றாங்க. சின்னவன் கூட இதிலகூட்டாம் சொல்றாங்க”

“வுட்றீ! தொரைங்க வளர்ந்துட்டாங்க. எந்த போலீஸ்காரன் குடும்பம் உருப்பட்டிருக்கு?.. வுடு எல்லாம் தலையெழுத்துப்படி தான் நடக்கும்.”

ஏற்கனவே அவனைப் பற்றிய நிறைய விஷயங்கள் என் காதுகளுக்கு வந்துவிட்டன.. உடைகளை மாற்றிக் கொண்டு, மொட்டை மாடியில் போய் உட்கார்ந்தேன். உள்ளே பிரச்சினைகள் அழுத்தும் போது இப்படி தனிமையில் வந்துவிடுவது வழக்கம்.. மறுநாள் காலையில் டியூட்டிக்கு கிளம்பும் முன்பு பிரகாஷை கூப்பிட்டேன்.. அவனுக்குப் புத்தி சொல்லணும்.விட்டால் உருப்படாமல் போய்விடுவான். தப்பு என்னிடமும்தான். மாத்திக்கணும்.தோளுக்கு மேல வளர்ந்துட்டவங்க, ஒரு நண்பனைப் போல பழகணும். எதையும் திணிக்காமல், அன்பாய், ஆதரவாய்,…. பிரகாஷ் வந்து நின்றான். பார்த்த பார்வையிலேயே திமிர் தெரிந்தது.

“என்னா?.”—-எடுத்தெறிந்த பார்வை.

“என்னான்னு சீக்கிரம் சொல்லு. கீழ என் ஃப்ரண்டு வெய்ட் பண்றான்.. போவணும்.”—— எவ்வளவு திமிர்?.சுர்ரென்று எழுந்த கோபத்தை அடக்கிக் கொண்டேன். கூடாது அன்பாய்…அன்பாய்..

‘உட்காருப்பா கொஞ்சம் உங்கிட்ட பேசணும்.”

“இப்பத்தான் உனக்கு டைம்மா?. ராத்திரிக்கு பேசு. நான் சீக்கிரம் போவணும்.”—–சொல்லிவிட்டு என்னை பொருட்படுத்தாமல் அவன் பாட்டுக்கு கிளம்பிவிட்டான்.

“டேய்! தெரியும்டா. நீ எதுக்கு இப்படி பறக்கிறன்னு தெரியும். நேரா ஈஸ்வரன் கோவிலுக்குப் போவணும், போயி அங்க போற வர்ற பொண்ணுங்களை கலாட்டா பண்ணணும். ராஸ்கல்! டெய்லி நீ எங்க போற? என்னா பண்ற?, எல்லாம் தெரியும்.”

“சரி அதுக்கு என்னா இப்ப?.”

அலட்சியமாய் உதட்டை சுழித்து விட்டு போக ஆரம்பித்தான், அப்பன் என்ற மரியாதை இல்லாமல், பதில் கூட சொல்லாமல். என்னால் முடியவில்லை.நேற்று கோவிலில் ஒரு பெண்ணிடம் எல்லோரும் பார்க்க அசிங்கமாய் நடந்துக் கொண்டிருக்கிறான்.. அந்தப் பெண்ணோட ஆட்கள் வந்து என்னிடம் கத்தி விட்டுப் போகிறார்கள். ஜென்மமே குன்றிவிட்டது. பி.எஸ்.ஸி யைக்கூட ஒழுங்காய் முடிக்க துப்பில்லை. ஃபைனலில் நாலு பேப்பர் பெண்டிங். நேர்மையாய் வாழணும்னு வாழற எனக்கு இப்படியொரு பிள்ளை.

‘ராஸ்கல்! பண்றதையும் பண்ணிட்டு.”——எட்டி அவனைக் கொத்தாய்ப் பற்றி, அந்த நொடியிலிருந்து அப்பா பிள்ளை என்ற உணர்வுகள் மறைந்து, சப்-இன்ஸ்பெக்டராய், அவன் ஒரு குற்றவாளியாய்…பெல்ட்டை உருவ,, அவன் முயற்சிகள் எதுவும் பலனின்றி, போலீஸ் அடியைத் தாளமுடியாமல் சோர்ந்து விழுந்து விட்டான். போச்சு…போச்சு…எதை செய்ய நினைத்தேனோ அதற்கு எதிர்மறையாய் செய்து கெடுத்து விட்டேன்.. இதற்கப்புறம் பிள்ளைகள் இன்னும் தூர விலகிப் போனார்கள்.

அடுத்த வாரம் நடந்த ரெவ்யூ மீட்டிங்கின் போது சக சப்-இன்ஸ்பெக்டர்களும், இன்ஸ்பெக்டர்களும் சிலைத் திருட்டைப் பற்றி ஆளாளுக்கு அக்கறையுடன் விசாரித்தார்கள். என் ஜூனியர்களெல்லாம்கூட எனக்கு அட்வைஸ் டிப்ஸ் தந்தார்கள். எனக்குத் தெரியும் இப்போது பேசிய அத்தனை வாய்களும், என் முதுகுக்குப் பின்னால் குசும்பு பேசிச் சிரிக்கும், சிரித்திருக்கிறது. என்ன செய்ய?. என் முயற்சிகள் எல்லாம் எப்போதும் தோற்றுப் போகின்றன..
அடுத்த நான்கு நாட்களும் இந்த கேஸ் சம்பந்தமாகவே இலக்கில்லாமல் சுற்றியலைந்துக் கொண்டிருந்தேன். ஒரு சின்ன துப்பு கூட கிட்ட வில்லை. ஒரு விஷயம் மட்டும் உள்ளே உறுத்திக் கொண்டிருக்கிறது. கோவிலில் கிடைத்த சிகரெட் துண்டுகள், காஸ்ட்லி. ப்ராண்ட்—மேக்ரோபோலோ. இங்கே அதைப் பிடிக்கிறவன் யாரு?.இங்கே இருப்பது மொத்தம் இருபத்தெட்டு பீடி சிகரெட் கடைகள்.ஒவ்வொரு கடையிலும் தரோவாக விசாரித்தேன். எந்த கடியிலும் மேக்ரோபோலோ சிகரெட் விற்கப்படவில்லை. சரி யாராவது வந்து அந்த சிகரெட் இருக்கான்னு கேட்டாங்களா?.. ஒருத்தன் மட்டும் யோசித்து விட்டு ஆமாம் என்றான்..

“என்னைக்கு?.’

“நம்மூர்ல சிலை திருடு போச்சே அன்னைக்கு ஒரு நாள் முன்னால சார். வேத்து மூஞ்சி, ஒசரமாய்,செவப்பாய், மாருதி வேன்ல வந்தான் சார். கோவிலைப் பார்க்க வந்தவன்னு நெனைச்சேன் சார்.”

இப்ப ஒரு விஷயம் கிளியர். சிகரெட் ஆசாமி வெளியூர் பார்ட்டி. திருட்டுக்குத் துணை போன உள்ளூர் கேடி யார்னுதான் தெரியவில்லை. ஒரு வாரம் முழுக்க தேடி சல்லடை போட்டதுதான் மிச்சம்., பலன் பூஜ்யம். டி.எஸ்.பி. தினசரி போனில் கூப்பிட்டுத் திட்டுகிறார், வார்னிங் கொடுக்கிறார். என்னதான் பண்றது?. நான் மட்டும் சும்மாவா ஊரைச் சுத்தி வர்றேன்?.. கடவுளே! எனக்கு சரியான வழி காட்டு.. ம்..ம்… களவு போன சிலைகளின் மொத்த எடை இருநூற்றுப் பத்து கிலோ. காரில்தான் கொண்டுபோயிருக்க முடியும். சடாரென்று பொறி தட்ட பைக்கை உதைத்தேன்.. சே! இப்படியொரு கோணத்தை நாம ஏன் யோசிக்கத் தவறினோம்?. இங்கிருந்து பனிரெண்டாவது கிலோ மீட்டரில் கடுகனூர் செக்போஸ்ட்.. அங்கே ரெஜிஸ்டரை எடுத்து, சிலை திருடு போன அன்றும், மறுநாளும் இந்த வழியை கிராஸ் பண்ணிச் சென்ற வாகனங்கள் எத்தனை? என்று சோதித்தேன். மொத்தம் நூற்று பத்து.. அதில் முப்பத்தியெட்டுட்ரிப் லாரிகள், நாற்பத்தி இரண்டு ட்ரிப் பஸ்கள், எட்டு வேன்கள், இருபத்தீரண்டு கார்கள். அதில் ஆறு அம்பாசிடர், நாலு இண்டிகா, ஐந்து சேண்ட்ரோ, ஐந்து டாடா சுமோ, இரண்டு மாருதி. இதில் ஒன்று மாருதி ஸென், ஒன்று மாருதி வேன். வெரி குட் மாருதி வேன் சிக்கிவிட்டது. நெம்பர்—டி.என்.-04—83983 ஹய்யா! . இது மேக்ரோபோலோ சிகரெட் கேட்ட அதே வேனாகத்தான் இருக்கும்..இன்னும் துருவிப் பார்க்க முந்நாள் வந்த மாருதி வேன், மறு நாள் அதாவது சிலை திருடு போன அன்று மதியம் தான் திரும்பிப் போயிருக்கிறது.. வெரி குட்! பட்சி. வலையில் .சிக்கியாச்சி. வண்டியின் ஓனர் பற்றிய விவரங்களைக் கேட்பதற்காக ஆர்.ட்டி.ஓ. வுக்கு கால் போட, மாருதி வேனின் சொந்தக்காரர் என்.பரசுராமன், 8/19—நேரு தெரு, கிண்டி, சென்னை.. உடனே கிளம்பிவிட்டேன்.

பரசுராமன், வயது—62, ஆன்மீக சொற்பொழிவாளராம், பக்திமான்..விசாரிப்போம். . எந்த புற்றில் எந்தப் பாம்போ?.கார் நெம்பரைச் சொன்னவுடனே முகம் பிரகாசமாய் கார் கிடைச்சிடுச்சா?, என்றார்.. அது திருடு போய் மூணுமாசமாகுதாம்.. லோக்கல் ஸ்டேஷனில் கேஸ் பதிவாகி இருந்தது.எஃப். ஐ..ஆர். போட்டிருந்தார்கள்.. ஹும்! கேஸ் முட்டிக்கிட்டு நிற்கிறது. இது என் ராசி சார். உப்பு வித்தால் மழை பெய்யும், மாவு வித்தால் காத்து அடிக்கும். நான் சோர்ந்து விட்டேன். சம்பவம் நடந்து ஒரு மாசம் ஆகப் போகிறது, சுற்றிச் சுற்றி ஓடியதுதான் மிச்சம். ஆரம்பித்த இடத்திற்கே இப்போது வந்து விட்டேன். வாழ்க்கையில் எனக்கு எப்போதுமே தோல்விதான்.. புரிந்துக் கொள்ளாத நச்சரிப்பு மனைவி, எதிர்த்து நிற்கும் உருப்படாத பிள்ளைகள், இன்னமும் ஒரு துப்பும் கிடைக்காத சிலைதிருட்டு கேஸ், பின்னால் குசும்பு பேசிச் சிரிக்கும் சக அதிகாரிகள், மிரட்டிக் கொண்டிருக்கும் டி.எஸ்.பி.. இவைகளிலிருந்து எப்படி மீளப் போகிறேன்?, எப்போது?.

இன்று காலையிலேயே டி.எஸ்.பி. யிடமிருந்து போன்.

“என்னய்யா?, துரைசாமீ! எனி ப்ராக்ரஸ்? ஒருத்தனையாவது மடக்கியிருக்கியா?.”

“இல்லை சார். சீக்கிரமே….”

“தெரியும். உன்னால முடியாதுய்யா. இனிமே காத்திருக்க முடியாது. .ஐ.ஜி. போன்ல காச்சு காச்சுன்னு காச்சறார். உனக்கு பதிலாக பரணின்னு ஒருத்தரை அப்பாய்ண்ட்மெண்ட் பண்ணியிருக்காங்க. இந்த வாரக் கடைசியில வருவார், சம்பந்தப்பட்ட ஃபைலை அவர்கிட்ட ஒப்படைச்சிடு..”—- லைனை கட் பண்ணிட்டார். ஆத்திரமாய் இருந்தது. என்கிட்ட என்ன குறை?.

சின்ஸியராகத்தானே தேடிக்கிட்டு இருக்கேன்?.. அட போங்கடா!. என் மனசாட்சிக்கு உண்மையாத்தான் வேலை செய்கிறேன்.. அவந்தான் வந்து புடுங்கட்டுமே.. யார் வேண்டான்னது?. மன உளைச்சல் குறைய இரண்டு நாட்கள் லீவு போட்டுவிட்டுக் கிளம்பிவிட்டேன். வசதியாய் பெங்களூரில் என் தாய்வழி உறவுக்காரப் பெண்ணின் திருமணம் ஒன்று வந்தது.. போய்த் தீரவேண்டிய கல்யாணம். ஏற்கனவே எங்களுக்கு மொய் வெச்சிட்டிருக்கிறவங்க.. இட்டவனுக்கு இட்டாகணுமே. மொய் என்ற பிடிப்பு மட்டும் இல்லேன்னா இன்றைக்கு கல்யாணத்தில கும்பல் சேர்க்க முடியாது.

கல்யாணம் முடிந்ததும் காந்தி நகர் போலீஸ் ஸ்டேஷனுக்குக் கிளம்பி விட்டேன். அங்கே என் பழைய நண்பன் பண்டரி இன்ஸ்பெக்டராக இருக்கான். நாங்கள் சைனிக் ஸ்கூலில் ப்ளஸ்டூ வரைக்கும் ஒன்றாய் படித்தவர்கள். அன்றைக்கு சாயங்காலம் வரைக்கும் பழைய கதைகளையெல்லாம் கதைத்து விட்டுக் கிளம்பினேன்.. வெளியே வரும்போது தற்செயலாகத்தான் அது என் பார்வையில் பட்டது. அந்த ஏரியா கேடிகளின் போட்டோ ஆல்பம் அதில் ஒரு முகம்…? பெயர்—-தர்மன். பரிச்சயமான முகமாய் தெரிகிறது.. இவனை…இவனை…எங்கியோ பார்த்திருக்கிறேன். எங்கே… .எங்கே? .ஊஹும் எவ்வளவு கசக்கியும் நினைவுக்கு வரவில்லை.மண்டை காய்கிறது.. மறுநாளெல்லாம் அதே சிந்தனைதான். ஊஹும்.
காலையில் எழுந்திருக்கும் போதே பாக்கியம் பத்ரகாளி மாதிரி வந்து நிற்கிறாள்.

“பெரியவனை இன்னான்னு கேக்கறதில்லை, சின்னவனும் இப்ப ஒழுங்கா இல்லை. அதையும் கேக்கறதில்லை.வீட்டை மாத்தணும்னு கத்திக்கிட்டே இருக்கேன், காதிலேயே வாங்கறதில்லை. உங்களுக்கு எதுக்கு குடும்பம்?..”—-

ஓயாமல் கத்திக் கொண்டே இருக்கிறாள். சேச்சே! இங்கே நிற்கவே கூடாது, நரகம். ஸ்டேஷனுக்குக் கிளம்பி விட்டேன். கடை வீதியைக் கடந்து அரசு மேநிலைப்பள்ளி, அதைத் தாண்டி ஈ.பி. ஆபீஸ், சந்தைமேடு, அடுத்ததாய் சன்னதித் தெருவில் நுழையும் போது, எதிரில் ஈஸ்வரன் கோவிலின் நாதஸ்வர கோஷ்டி வந்துக் கொண்டிருந்தது. பிரம்மோற்சவ விழாக்காலம். எல்லோரும் குளித்து விட்டு ஒரே அச்சாய் பட்டைபட்டையாய் விபூதி பூசிக் கொண்டு சிவபழமாய் இருந்தார்கள். என்னைப் பார்த்ததும் பவ்வியத்துடன் குனிந்து வணங்கினார்கள். அவர்களில் அதோ அந்த ஒரு மாதத்து மொட்டை, தவில் வாசிக்கிறவன். அவன்….அவன்….?. அந்த கோஷ்டி என்னை கடந்து போகட்டும் என்று காத்திருந்து குரல் கொடுத்தேன்.

“தர்மா! “

அனிச்சையாய் திரும்பிப் பார்த்துவிட்டு திடுக்கிட்டவனை கப்பென்று அமுக்கினேன். முடிந்தது. ரகசியமாய் தனியறையில் வைத்து ஒரு நாள் முழுக்க அவனை சாத்திய சாத்தலில் மொத்த ஜாதகங்களும் வெளியே வந்து விட்டன. பின்னே?, என்னா அடி?.அடித்த அடியில் ஆட்காட்டி விரல் உடைந்தது. அவன் கக்கியதில் தேசிய அளவில் அந்த கோஷ்டியின் விஸ்தாரம் தெரிந்தது.. படாபடா ஆத்மீக்களுடன் இவனுக்கு இருந்த தொடர்புகள், அவர்களுடன் எடுத்துக் கொண்ட புகைப்படங்கள், கடிதங்கள், அவர்களுடன் தொடர்பு கொள்ள வேண்டிய செல் நெம்பர்கள்,.இத்தியாதி….இத்தியாதி. தமிழ்நாட்டில் இவன் ஒரு முக்கியமான ஏஜெண்ட். எல்லாவற்றையும் வாங்கி பத்திரப் படுத்தினேன்.இரண்டு நாட்கள் அவனுக்கு தொடர்ந்து வேப்பிலை அடித்ததில், பக்குவமாக எடுத்துச் சொல்லியதில் அவன் அப்ரூவராக மாற ஒத்துக் கொண்டான்.. அவன் கொடுத்த ஒப்புதல் ஸ்டேட்மெண்ட் முழுவதையும், அவனை பேசவைத்து, வீடியோ கேசட்டில் பதிவு செய்தேன். ராஸ்கல் ஏற்கனவே மூணு சிலை திருடினது போதாதென்று உற்சவர் சிலையையும் எடுக்கிறதுக்காகத்தான் இன்னும் இங்கே காத்திருக்கிறானாம்.எவ்வளவு கொழுப்பு?.

இப்போதைக்கு தர்மன் பிடிபட்ட விஷயம் ரகசியம். யாருக்கும் தெரியக் கூடாது ஜாக்கிறதை என்று கான்ஸ்டபிள்களுக்கு உத்திரவு போட்டுவிட்டுக் கிளம்பினேன். மனம் கொள்ளாத சந்தோஷம். கடைசியில் ஜெயித்து விட்டேன். என் சந்தோஷங்களை யாரிடமாவது பகிர்ந்துக் கொள்ள வேண்டும். யார்?.பாக்கியம் தான். அடியே பாக்கியம்! பார்றீ! என்று கெத்தா நிக்கணும். மறக்காமல் ஸ்வீட்டும், பழங்களும் வாங்கிக் கொண்டேன். வீட்டிற்குள்ளே நுழையும்போதே சத்தம் போட்டு எல்லோரையும் ஹாலுக்குள் வரவழைத்தேன். சிலைத்திருடனை வளைத்த கதையைச் சொன்னேன். அதன் மூலமாக நான் இந்திய அளவில் புகழ் பெறப் போவதையும், ஜனாதிபதியிடம் விருது வாங்கும் அதிர்ஷ்டம் வரப் போகிறது என்பதையும் மகிழ்ச்சி பொங்கச் சொல்லிச் சிரித்த போது, அந்த சிரிப்பும், உற்சாகமும் ஒவ்வொருவரிடமும் தொற்றிக் கொள்ள, அதில் பழைய குரோதங்களும், வெறுப்புகளும் மறைந்துப் போக, பாக்கியம் என்னை நெருங்கி வந்து நிறைவாய் சிரித்தாள்.. சிரித்த வாயில்ஸ்வீட்டை திணித்தேன்.

பிரகாஷ் சிரித்துக் கொண்டே வந்து கங்கிராட்ஸ்பா! என்று என் கையைப் பிடித்து குலுக்கி விட்டு ஸ்வீட்டை எடுத்துக் கொண்டான். சின்னவன் ஓடி வந்து எனக்கு முத்தம் கொடுத்து விட்டு ஸ்வீட்டை எடுத்துக் கொண்டான். உள்ளே நெகிழ்ந்துப் போயிருந்தேன். அப்பாடா..என் குடும்பச்சூழல் கணப் பொழுதில் ஒரு நாடகத்தின் அடுத்தக் காட்சி போல எப்படியெல்லாம் மாறிவிட்டது?. ராத்திரியெல்லாம் சந்தோஷக் கிளர்ச்சியில் தூக்கம் வரவில்லை.. விடிநேரம் சற்று கணயர்ந்த போது, கனவில் ஐ.ஜி. என்னைக் கட்டித் தழுவுகிறார். பெரிய ஒரு அரங்கத்தில் என் பெயரைக் கூப்பிட்டு ஜனாதிபதி மெடல் குத்துகிறார். கரகோஷத்தில் அரங்கம் அதிர்கிறது. சந்தோஷத்தின் உச்சம் தாங்காமல் நான் அழுகிறேன்.

காலையில் ஜரூராக கிளம்பிவிட்டேன்.இனிமேல் தாமதம் கூடாது. அந்த புதுக் கொம்பன் வந்து ஃபைலை வாங்கறதுகுள்ளே எஃப்.ஐ.ஆர். போட்டு விட்டு டி.எஸ்.பி. யின் முன்னே போய் ஒரு நிமிஷமாயினும் திமிராய் நிற்கணும். எஸ்! திமிர்ராய் நிற்கணும். அப்போது என் செல் சிணுங்கியது. லைனில் டி.எஸ்.பி..

“ யோவ் துரைசாமி! கங்கிராஜுலேஷன்ஸ்யா! ஜெயிச்சிட்டியே.குட்.”
“சார்! உங்களுக்கு எப்படி?.”

“ஏட்டு போன் பண்ணான்யா.”——-ஹும் ஆள் காட்டிப் பசங்க..

“என்னய்யா சைலண்ட் ஆயிட்ட?. சரி ஜாக்கிரதை. மேட்டரை லீக் அவுட் பண்ணிடப் போற?உஷார். ரகசியமா வெச்சிக்க.. அந்த கல்பிரிட் தர்மன் அங்க இருக்கக் கூடாதுய்யா. ஆமா. எதிரிங்க ரொம்ப பவர்ஃபுல். அரசியல் செல்வாக்கு அதிகம். உன் ஸ்டேஷனில் வெச்சே அவனை தீர்த்திட்டுப் போயிடுவானுங்க..”

“இல்ல சார். நான் பார்த்துக்கிறேன் சார்.’

“ச்சூ! சிறுபிள்ளைத்தனமாய் அடம் பிடிக்காதே. அவங்க பலம் உனக்குத் தெரியாது. இப்ப செக்யூரிட்டியோட என் கார் வரும். நீ என்ன பண்ற. இந்த கேஸ் சம்பந்தமான எல்லா ஃபைல்களையும் எடுத்துக்கிட்டு, அவனுக்கு ஹேண்ட்கப் மாட்டி இங்கே இழுத்துக்கிட்டு வா. அவனை வேற பாதுகாப்பான இடத்துக்கு தூக்கணும். ஹும் எந்தந்த மந்திரிங்க கிட்டயிருந்தெல்லாம் போன் வரப் போவுதோ?..எவனாயிருந்தாலும் சமாளிக்கணும்.உம் நீ சீக்கிரம் வாய்யா.”

அதற்குள் விஷயம் இன்ஸ்பெக்டர், சப்-இன்ஸ்பெக்டர் மட்டங்களில் கிடுகிடுவென பரவிவிட, என் செல்போன் ஓயாமல் ஒலித்துக் கொண்டிருந்தது. அன்பான விசாரிப்புகள், வாழ்த்துச் செய்திகள், ஆசிகள். எனக்கு மகிழ்ச்சியில் தரையில் கால் பாவவில்லை.
நான் எதிரில் உட்கார்ந்திருக்க, டி.எஸ்.பி. அரை மணி நேரமாய் ஃபைலையும், வீடியோகேஸட்டையும், பார்த்து முடித்துவிட்டு நிமிர்ந்தார். நேசமாக என்னைப் பார்த்து விட்டு தட்டிக் கொடுத்தார். பெருமையாக இருந்தது.

“அருமையாய் டீல் பண்ணியிருக்கீங்க. இவ்வளவு திறமைகளை இத்தனை நாளா எங்கேய்யா வெச்சிருந்த?. வெரி குட்! உன் ப்ரமோஷனுக்கு நான் ஏற்பாடு செய்யறேன். ரெண்டு மாசத்தில ஆர்டர் வந்துவிடும். கலால்ல போடச் சொல்லட்டுமா? நல்லா வரும்படி கிட்டும். என்ன?.”

”எனக்கு அதெல்லாம் வேண்டாம் சார்.. என் சர்வீஸை நான் நேர்மையா இருந்து முடிசிட்டுப் போயிட்றேன் சார்!.”

“சரி..சரி…ஆர்டர் வந்தப்புறம் என்னை வந்துப் பார். என்ன இப்ப சந்தோஷந்தானே?. ஓகே! இந்த ஃபைல், கேஸட்டு எல்லாம் இங்கியே இருக்கட்டும்.. ஒண்ணுத்துக்கும் கவலைப் படாதே. சொன்னபடி எல்லாம் நடக்கும்.. ஓகே! இந்த கேஸைப் பத்தி எங்கியும் மூச்சு விடக்கூடாது. புரியுதா?.”

எதுவும் புரியாமல் மாடுமாதிரி தலையாட்டத்தான் முடிந்தது என்னால். அந்த வாரத்திலேயே தர்மன் கொடுத்த தகவலை வைத்து, சிலைத்திருட்டு நெட் ஒர்க்கிலுள்ள பெரும்பாலான திருடர்களை பிடித்தாயிற்று. இன்றைய எல்லா தினசரியிலும் முதல் பக்கத்தில் பிரதான செய்தி. என்ன தெரியுமா?. சமயோசிதமாய் சிலைத் திருடன் தர்மனைப் பிடித்த டி.எஸ்.பி. கண்ணபிரானைப் பாராட்டி செய்திகள் வெளியாகியிருந்தன. ஐ.ஜி. டி.எஸ்.பி. யை மனந்திறந்து பாராட்டியிருந்தார். பேப்பர்ல முதல் பக்கத்தில அந்த போட்டோவைப் பாருங்களேன்.. மாலையைப் போட்டுக்கிட்டு வெள்ளந்தியாய் சிரிக்கிறாரே அவர்தான் சார் எங்க டி.எஸ்.பி.. அவர் கையைப் பிடித்துக் கொண்டு சிரிக்கிறாரே அவர்தான் எங்க ஐ.ஜி. மேடையின் ஓரமாய் நிற்கும் மற்ற எஸ்.ஐ கள் கூட்டத்தில் ஒருத்தர் மட்டும் கையை கட்டிக் கொண்டு சிரிக்கிறாரே அதான் சார் நான்..

– 22-05-2011

நான் திருவண்ணாமலை மாவட்டம் செய்யாறு என்ற ஊரைச் சேர்ந்தவன். ஓய்வு பெற்ற அரசு ஊழியர். எழுபத்தைந்துக்கு மேற்பட்ட சிறுகதைகளையும், இரண்டு அறிவியல் நாவல்களையும் செய்யாறு தி.தா நாராயணன் என்ற பெயரில் எழுதியுள்ளேன்,எழுதிகொண்டுமிருக்கிறேன். சிறுகதைகள் என் கதைகள் குமுதம், தினமணி கதிர், தினமலர், இலக்கியப்பீடம், கலைமகள்,கணையாழி, செம்மலர் ,தாமரை, கிழக்கு வாசல் உதயம், தாராமதி, போன்ற இதழ்களிலும், அவைகள் நடத்திய சிறுகதைப் போட்டிகளிலும், திண்ணை டாட்காம் போன்ற இணையதள இதழ்களிலும், இலக்கிய…மேலும் படிக்க...

5 thoughts on “சில திருட்டுகள்

  1. திரு.பாலாஜி அவர்களுக்கு, என்னை ஊக்கப்படுத்தியமைக்கு நன்றி.

    1. திரு.சிவாவுக்கு என் நன்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *