சில்லுன்னு ஒரு கொலை

0
கதையாசிரியர்:
தின/வார இதழ்: குங்குமம்
கதைத்தொகுப்பு: கிரைம்
கதைப்பதிவு: June 2, 2020
பார்வையிட்டோர்: 24,012 
 
 

சில்லுன்னு ஒரு கொலைவெள்ளைப் பனிக்குவியலில் ஆப்பிள் போல சற்றே வெளியே தெரிந்தது லேகாவின் முகம். கண்கள் பாதி திறந்திருந்தன. அமெரிக்க போலீசார் அந்தப் பகுதியை ஆக்கிரமித்திருந்தார்கள். போலீசின் பிடியிலிருந்த ஜெர்மன் ஷெப்பர்டு நாய் லேகாவின் முகத்தைச் சுற்றிச் சுற்றி வந்து குரைத்தது. உள்ளே புதைந்திருக்கும் உடலை மோப்பம் பிடித்து பனியைக் கால்களால் குதறியெடுக்க முயன்றது.

வெளிறிப் போயிருந்த லேகாவின் முகம் பூராவும் பனித்துகள்கள் திட்டுத் திட்டாய் அப்பியிருந்தன. திரும்பிய திசையெங்கும் ஆறடி உயரத்துக்குப் பனி மேடுகள். மொட்டை மரங்களின் கிளைகள் எல்லாம் வெள்ளை உடையாகப் பனியின் மிச்சத்தை சுமந்து கொண்டிருந்தன. பதினெட்டு மணி நேரத் தேடல் லேகாவின் மரணமாக முடிவுக்கு வந்திருந்தது. வினீத்தின் எண்ணம் நிறைவேறி விட்டது.

குறுக்கும் நெடுக்குமாக நின்றிருந்த போலீஸ் கார்களுக்கு மத்தியில் புதிதாக வந்து செருகியது அந்த போலீஸ் கார். அதிலிருந்து வினீத் இறங்கினான். மைனஸ் டிகிரி குளிருக்காக அணிந்திருந்த கருப்பு உல்லன் கோட் வாடைக்காற்றில் படபடத்தது. ஊசிக்காற்று அறைந்ததில் அவன் முகம் வெளிறி உதடுகள் சட்டென உலர்ந்து போனது. சற்றே தடுமாறி நடந்த அவனை இரண்டு போலீஸ் ஆபீசர்கள் கைத்தாங்கலாகக் கூட்டி வந்தார்கள்.

Do not enter என்ற எழுத்துக்களோடு காற்றில் ஆடிய சிவப்பு ரிப்பன் வளையத்துக்கு அப்பால் லேகாவின் முகம் பனிவெளிக்குள் புதைந்திருப்பதைப் பார்த்ததுமே ெபரும் சப்தத்தோடு வீறிட ஆரம்பித்தான்.“லேகா… ஆஆஆ!”ஃப்ரீசரில் போட்ட காய்கறியைப் போல உறைந்து கிடக்கும் அவளிடம் இனிமேல் எந்த சலனமும் இருக்காது. அந்த நியான் விளக்குப் புன்னகை. ஒளி மின்ன பேசும் கண்கள். அலை அலையாய்ப் புரண்டு முகத்தின் முன்னே இழையாடும் கூந்தல். அவன் தலைமுடியை பஞ்சுக் கைகளால் அளைந்து விட்டுத் தொடுக்கும் கேள்விகள். அவளுடைய எல்லா அசைவுகளும், சப்தங்களும், ஸ்பரிசங்களும் இனி கற்பனை.

அவளுடைய உடலை நோக்கி ஓட எத்தனித்தவனை இரண்டு ஆஜானுபாகுவான போலீஸ்காரர்கள் தடுத்து நிறுத்தினார்கள்.

அவன் அப்படியே சரிந்து உறைபனியில் உட்கார்ந்து அழ ஆரம்பித்தான். அவனைத் திருமணம் செய்து கொண்டு அமெரிக்கா வந்ததிலிருந்தே இந்த வெள்ளைப் பனிப்பொழிவுக்காகத்தான் காத்திருந்தாள் லேகா. முதல் இரவை விட இந்த முதல் ஸ்நோவுக்கான எதிர்பார்ப்பு அவளிடம் ஏராளமாக இருந்தது.

வாஷிங்டன் டிசி ஏரியாவில் ஒரு மாபெரும் பனிப்புயல் தாக்கப் போவதாக அறிவிப்பு வந்ததுமே ஒரு குழந்தையைப் போல குதூகலம் அவளைச் சூழ்ந்து கொண்டது. பாலாடை திரிந்தது போல வெள்ளை வெள்ளைத் துகள்கள் வானிலிருந்து கொட்டுவதை சினிமாவில் மட்டுமே பார்த்திருக்கிறாள்.

ரோஜா அரவிந்த்சாமியும், மதுபாலாவும் பஞ்சு மெத்தை பனிப் பள்ளத்தாக்கில் கட்டிப்புரண்டு உருள்வது போல் தானும் வினீத்துடன் உருள வேண்டும் என்று ஆசைப்பட்டாள்.

“வினீத், ராத்திரி மூணு மணிக்கெல்லாம் ஸ்நோ விழ ஆரம்பிச்சிரும்னு டிவில சொல்றான். நான் அலாரம் வெச்சு எழுந்து பார்க்கப் போறேன்!”

“அவ்வளவு கஷ்டம் வேண்டாம். அந்த வெள்ளைப் பிசாசு இன்னும் நாலு நாளைக்கு கொட்டித் தீர்க்கப் போகுது. மொத்தம் ஆறடி உயரத்துக்கு நிரம்பி வழியப் போகுது. முழுசாக் கரைய பத்து நாளாவது ஆகும். நீ பார்த்து சலிக்கத்தான் போறே…”

வினீத் நிறைய பார்த்து விட்டான். பனிப்பொழிவின் அழகை விட அதன் அவஸ்தைகள்தான் அவன் கண் முன்னால் வந்து நின்றிருக்க வேண்டும்.

“வால் பேப்பர்களில் பார்க்கிற அந்த பியூட்டி எப்படி சலிக்கும் வினீத்?” தோளில் கையைப் போட்டு அவன் முகத்தை நேராகப் பார்த்துக் கேட்டாள்.

“அந்த அழகுக்குப் பின்னால் இருக்கும் ஆபத்தும் தெரிஞ்சதாலதான் இந்த சலிப்பு…”“ஆபத்தா?”

“ஆமாம். இது எக்ஸ்ட்ரீம் வெதர் கண்டிஷன். எத்தனை கார்கள் கட்டுப்பாடிழந்து பனியில் சறுக்கி விபத்தில் சிக்கப்ேபாகுதுன்னு நீ நியூஸ்ல பார்க்கத்தான் போறே. எத்தனையோ பேர் குளிரில் மாட்டிக்கிட்டு நடுத்தெருவில் நின்னு அவதிப்படப்போறதை டிவில பார்க்கத்தான் போறே. ஹைப்போதெர்மியா தெரியுமா?”“ஹைப்போதெர்மியாவா?”

“எஸ். ரொம்ப நேரம் சப் ஜீரோ குளிரில் எக்ஸ்போஸ் ஆனா உன்னை அறியாமலே உடல் சூடு மளமளன்னு இறங்கிடும். ரத்தம் உறைஞ்சு சாகவேண்டியதுதான். பனிப்புயலில் மாட்டிக்கிட்டு ஹைப்போதெர்மியாவால உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை எவ்வளவுன்னும் புள்ளி விவரம் சொல்லுவாங்க…”“ஏன் இப்படி பயமுறுத்தறே?”

“இல்லப்பா. ஸாரி, எனக்கு இந்த ஸ்நோ முன்னேற்பாடுகளில் கவனம் போயிட்டதால கொஞ்சம் டென்ஷன் ஆயிட்டேன். ஐ டின்ட் மீன் டு ஸ்பாயில் யுவர் ஃபன்…”“என்ன அது டென்ஷன்? என்ன முன்னேற்பாடுகள்? சொல்லு வினீத், நானும் தெரிஞ்சிக்கிறேன்…”

“இப்பவே க்ரோசரி ஸ்டோர் போய் பால், பழம், காய்கறின்னு அத்தியாவசியப் பொருட்கள் வாங்கி வெக்கலைன்னா ஸ்டாக் தீர்ந்துடும்…” அவன் சொல்லும்போதே டிவி நியூஸில் காலி ஷெல்ஃப்களைக் காட்டிக் கொண்டிருந்தார்கள். ‘‘ஸ்நோ ஸ்டார்ம்னால பவர் கட் ஆச்சுன்னா வீடு ஃப்ரிட்ஜ் மாதிரி ஆயிரும். ஹார்டுவேர் ஸ்டோர்ல ஜெனரேட்டர், பனியை அள்ளும் உபகரணங்கள் எல்லாம் வாங்கணும். நம்ம வீட்டு வாசலில் பனியை அள்ளி சுத்தம் செய்ய வேண்டியது நம்ம பொறுப்பு…”

“பண்ணலைன்னா?”

“யாராவது வழுக்கி விழுந்து முதுகுத்தண்டுவடத்தை உடைச்சிக்கிட்டா மில்லியன் டாலர் நஷ்ட ஈடு கேட்டு வழக்குப் போட முடியும்!”

“சீரியஸ்லி?”

“அதான் அமெரிக்கா. லாயர்களின் தேசம்…”

“பனியை அள்ளுவது எவ்வளவு கஷ்டம் தெரியுமா? பனி அள்ளிப் போடும்போது கார்டியாக் அரெஸ்ட்ல கொலாப்ஸ் ஆகி இறந்தவங்க இருக்காங்க. அமெரிக்கான்னா சொகுசுன்னு நினைக்கிறோம். ஆனா, எதுவுமே இங்கே ஈசி இல்லை லேகா. மலை மாதிரி கொட்டிக்கிடக்கும் பனியை அப்புறப்படுத்துற வரைக்கும் நகரம் ஸ்தம்பிச்சிரும். வீட்டை விட்டு வெளியே போக முடியாது.

ஆபீஸ் எல்லாம் இழுத்து மூடிருவாங்க. நோ ஒர்க். நோ சம்பளம். மன்த்லி பட்ஜெட் உதைக்கும்…”

“அதான் அய்யாவோட தலையாய கவலையா!” சிரித்தாள். “அமெரிக்க மாப்பிள்ளை கிட்டே பணம் கொழிக்குதுன்னுதானே அப்பா பார்த்துப் பார்த்து உன்னைப் பிடிச்சார்!”

வினீத் சற்றே முகம் சுருங்கி, “லேகா, மிடில் கிளாஸ் எந்த ஊருக்குப் போனாலும் மிடில் கிளாஸ்தான். பட்ஜெட் வாழ்க்கை விடாது…’’

“ஏய், ஐ வாஸ் ஜஸ்ட் கிடிங். ஓகே. என் ப்ளானில் எந்த மாற்றமும் இல்லை. அதிகாலை மூணு மணிக்கு அலாரம். வானத்திலிருந்து வந்து விழும் அந்த முதல் பனித்துகளைக் கையில் பிடிச்சு முத்தம் குடுக்கப் போறேன். இந்த ஸ்நோ பஞ்சு மெத்தை மாதிரி தரையெல்லாம் நிரம்ப எவ்வளவு நேரம் பிடிக்கும்?”

டிவியில் வெதர் சானலைப் பார்த்துக்கொண்டே சொன்னான். “இவங்க சொல்றதைப் பார்த்தா ஒரு மணி நேரத்தில் கிட்டத்தட்ட ஒண்ணரை அடிக்கு அக்குமுலேஷன் ஆயிடும் போலிருக்கு. விடியும்போது நிச்சயமா ஒரு நாலடி உயரம் ரொம்பிடும்!”“ம்ம்… காலைல விடிஞ்சதும் வழக்கமா நாம வாக்கிங் போற பார்க் டிரெய்லில் பனியில் கால் புதையப் புதைய போகணும்…”

“கொட்டும் பனியில் எல்லாரும் இழுத்துப் போர்த்தித் தூங்குவாங்க!”

“இது எனக்கு ஃபர்ஸ்ட் ஸ்நோ. நான் அப்படித் தூங்க முடியாது. நீ என் கூட வருவியா மாட்டியா?”

“காலைல பார்க்கலாம்…”

“நான் பாட்டுக்கு கிளம்பி போய்ட்டே இருப்பேன்!”

“லேகா, அட்லீஸ்ட் மூணு லேயர் டிரஸ் போட்டுக்கோ. கிளவுஸ், மஃப்ளர் கண்டிப்பா வேணும். லாங் கோட் போட்டுக்கணும். ஸ்நோ பூட்ஸ் மறந்துராதே. ஃப்ராஸ்ட் பைட்ன்னா என்ன தெரியுமா? கேள்விப்பட்டிருக்கியா?”

“ஃப்ராஸ்ட் பைட்?”

“ஆமா. குளிரில் முதலில் பாதிக்கப்படுவது பாதம்தான். பாதத்தில் இருக்கும் ரத்தம் உறைஞ்சு போச்சுன்னா உறையும் ரத்தம் விஷம் மாதிரி மளமளன்னு மேலே ஏற ஆரம்பிக்கும். உடல் மரக்கட்டை ஆயிட்டே வரும். உடனே ஆஸ்பத்திரிக்குக் கொண்டு போயிட்டா காலை வெட்டிக் காப்பாத்தலாம். லேட் ஆச்சுன்னா ஆள் அவுட்!”

“வாட்?”

“ஆமா. ரத்தம் உறைவதைத் தடுக்க அதைத் தவிர வேற வழியில்லை. ஸ்நோ ஈஸ் நாட் ஃபன் லேகா…”

மறுநாள் காலை விடிந்தும் விடியாத பொழுதில் படுக்கையில் லேகா இல்லை. சட்டென எழுந்தான் வினீத். கீழே ஓடிச் செல்ல – ஸ்நோ பூட்ஸ் மாட்டிக் கொண்டு கோட், குல்லா, கிளவுஸ் என்று கனத்த உடையுடன் கிளம்பிப் போய்க் கொண்டிருந்தாள்.

வெளியே திரும்பிய பக்கமெல்லாம் வெள்ளை வெளேரென்று ஸ்நோ நிரம்பி வழிந்தது. அடிக்கிற வாடைக்காற்றில் மேற்பரப்பில் இருந்த மெல்லிய பனித் துகள்கள் எல்லாம் பஞ்சுத் திரிகளைப் போல காற்றில் பறந்தன. நிமிஷத்தில் முகம் சில்லிட்டு உதடுகள் உலர்ந்து போயின.

வினீத் தானும் கோட்டை மாட்டிக்கொண்டு கிளம்பிய போது அவள் பார்க் டிரெயிலில் நுழைந்து விட்டிருந்தாள். அது ஒரு அடர்ந்த காடு. உள்ளே போனால் சில சமயம் திக்கு திசை எதுவுமே தெரியாது. அமெரிக்காவில் குடியிருப்புகளை ஒட்டி இப்படி காடுகளை அழிக்காமல் வைத்திருப்பார்கள்.

பனியில் கால் புதையப் புதைய வேக வேகமாய் ஓடினான் வினீத். மூச்சு வாங்க அவள் முன்னால் போய் நின்றான். “லேகா, என்னை எழுப்பி இருக்கலாமில்லே?”

“வினீத்! வந்துட்டியா? நீ குறட்டை விட்டு தூங்கிட்டிருந்தே. பாவமா இருந்தது. அதான் சத்தமில்லாம கிளம்பினேன்!”

“இந்தக் காட்டுக்குள்ள ஒரு குட்டை இருக்கு லேகா. கொட்டும் பனியில் அந்தக் குட்டையின் மேற்பரப்பு உறைஞ்சு போய் மூடியிருக்கும். தரைக்கும் பனி போர்த்தியிருக்கும் குளத்துக்கும் வித்தியாசமே தெரியாது. அதிலே ஏர் பாக்கெட்ஸ் இருக்கும். தெரியாம அது மேல நடந்து போகும்போது ஏர் பாக்கெட்ல கால் வெச்சா புதைகுழி. பனி உடைஞ்சு உள்ளே இழுத்துரும். சில்லிடும் தண்ணில மூழ்கினா நிமிஷத்தில உறைஞ்சி போயிடுவோம்.

நீ தப்பித் தவறி அந்தப் பக்கம் போயிடக்கூடாதேன்னுதான் பதறி அடிச்சி ஓடிவந்தேன். கரெக்டா அங்கேதான் போய்ட்டிருக்கே…”

அவளை எதிர்ப்பக்கம் போகச் சொன்னான். அவன் சொன்ன திசையில் வறண்ட மரங்களுக்கிடையே துள்ளித் துள்ளி ஓடி பனியை ரசித்துக் கொண்டிருந்த லேகா சற்று தொலைவு சென்றபின் சட்டென தன் காலுக்கடியில் பனித் தரை விரிசலடைந்து, தான் அப்படியே உள்ளே விழுங்கப்படுவதை உணர்ந்தாள்.

பதறித் திரும்பியபோது வினீத் தொலைவிலேயே நின்றிருந்தான். ஆளை விழுங்கும் குட்டை இங்கேதான் இருக்கிறதா? வேண்டுமென்றே வினீத் இந்தத் திசையில் என்னைப் போகச் சொன்னானா? ஏன் வினீத்? ஏன்?அவள் கண்கள் கேள்விக்குறியுடன் இருக்க – அப்படியே குட்டைக்குள் மூழ்கிப் போனாள். மைனஸ் டிகிரி ஐஸ் வாட்டர் அவளை நிமிஷ கதியில் உறையச் செய்திருக்க வேண்டும். கத்தியில்லாமல் ரத்தமில்லாமல் சில்லுன்னு ஒரு மரணம்.

அடுத்த பனிப் பொழிவு துவங்க ஆரம்பித்து காலடித்தடங்கள் எல்லாம் அழிய ஆரம்பித்தது. அந்தப் பகுதியில் இருந்த பெரிய பெரிய வீடுகள் எல்லாம் ஆழ்ந்த உறக்கத்தில் இருக்க, போலீசைக் கூப்பிட்டு தன் இளம் மனைவியைக் காணோம் என்று புகார் கொடுத்தான் வினீத்.படுக்கையில் அவளைக் காணாமல் அந்தக் குடியிருப்பு முழுவதும் தேடிவிட்டு இப்போது போலீசை அழைப்பதாகச் சொன்னான்.

பதினெட்டு மணி நேரமாய் ஒரு பக்கம் தீவிரமான தேடல். இன்னொரு பக்கம் அவனிடமும், அண்டை வீட்டுக்காரர்களிடமும் விதவிதமாக விசாரணை. அவர்கள் அந்நியோன்யமான தம்பதிகள் என்று சாட்சி சொன்னார்கள். லேகா முதல் ஸ்நோவை வெளியே சென்று ரசிக்க வேண்டும் என்று விரும்பியதாக எல்லாருமே சொன்னார்கள். ஃபேஸ்புக்கில் கூட தன் ஆசையைப் பதிவிட்டிருந்தாள். அந்த நாளின் அதிகாலையில் டிரெய்லில் போவதற்கு முன்னதாக பனிச்சரிவின் மேல் சில செல்ஃபி போட்டோக்களை எடுத்துப் போட்டிருந்தாள்.

பனிப்பொழிவை ரசிக்க அவளாகவே கிளம்பிப் போனதில் யாருக்கும் எந்த சந்தேகமும் இல்லை. சற்றே வெய்யில் அடித்து, உறையும் வெப்பநிலை அதிகரித்து வந்த போது, குட்டையில் மூழ்கிக் கிடந்த லேகாவின் முகம் சற்றே மேலே வந்து முகம் மட்டும் தெரிந்தது. வினீத்துக்கு தகவல் கொடுத்துக் கூட்டி வந்தார்கள். அதன் பின் எல்லாமே போலீஸ் சம்பிரதாயங்கள்.

விமானத்தில் எடுத்துச் செல்லும் செலவைத் தாக்குப்பிடிக்க முடியாது என்று ஊருக்குச் சொல்லி விட்டான். சவப்பெட்டிக்குள் கிடந்த அவள் வெளுத்த முகத்தை இந்தியாவிலிருந்து வீடியோவில் பார்த்துக் கதறினார்கள். க்ரிமட்டோரியத்தில் சாம்பலானாள். மின் தகனத்துக்கு வர முடியாத நண்பர்கள், தெரிந்தவர்கள், வீட்டுக்கு வந்து விசாரித்துச் சென்றார்கள். முகத்தை சோகமாக வைத்துக் கொண்டு எல்லோருடைய ஆறுதலையும் கேட்டுக் கொண்டான்.

அப்படித்தான் ஸ்டெல்லாவும், அவள் அம்மாவும் வந்தார்கள். இத்தாலியன் வம்சாவளிப் பெண். அம்மா கழிப்பிடம் சென்றபோது அவனிடம் நெருங்கிக் கிசுகிசுத்தாள். “வினீத், கைதேர்ந்த நடிப்புக்காக உனக்கு இந்த வருஷம் ஆஸ்கர் தரலாம்!”

நிமிர்ந்தான். எச்சரிக்கும் விதமாய் கண்களைச் சுருக்கி மெல்லிய குரலில், “ஸ்டெல்லா… ஷ்ஷ்…”

“இனிமேல் நமக்கு தடை ஏதும் இல்லையே?”

“உனக்கே தெரியும். ஊர்ல எமோஷனல் பிளாக்மெயில் தாங்க முடியாமத்தான் லேகாவை கல்யாணம் பண்ணிக்க வேண்டியதாயிருச்சு. ஒரு வெள்ளைக்காரப் பொண்ணை லவ் பண்றேன்னு சொல்ற தைரியம் கடைசி வரைக்கும் எனக்கு வரலை. அவளோட விதியை நினைச்சா பாவமாத்தான் இருக்கு. ஆனா, எனக்கு வேற வழி தெரியல. உன் கிட்டே வாக்களிச்ச மாதிரி ஒரு நல்ல சந்தர்ப்பத்துக்காகக் காத்திருந்தேன்.

பனிப்பொழிவு எனக்கு சாதகமா அமைஞ்சது. இனிமே கொஞ்ச நாளில் இன்னொரு கல்யாணம் பண்ணிக்கச் சொல்லி அவங்களாகவே என்னை வற்புறுத்துவாங்க. லேகாவை என்னால மறக்க முடியலைன்னு விரக்தியா சொல்லுவேன். நான் சோகத்திலிருந்து மீள இப்போ எந்தக் கழுதையா இருந்தாலும் பரவால்ல, பையனுக்கு ஒரு துணை அமைஞ்சா போதும்ன்னு நினைப்பாங்க. ஆனா அதுக்கெல்லாம் கொஞ்சம் டைம் ஆகும். பொறுமை வேணும். அதுவரைக்கும் நாம போலீசுக்கோ, மத்தவங்களுக்கோ சந்தேகம் வராதபடிக்கு உறுத்தாம நடந்துக்கணும். நோ ஃபோன் கால்ஸ். நோ டேட்டிங்…”

“கடைஞ்செடுத்த அயோக்கியன் நீ!” செல்லமாய்த் திட்டினாள். அவள் அம்மா வரும் சந்தடி கேட்டு – சட்டென இருவரும் இறுகிய முகங்களுக்கு மாறி சோகமாய் அமர்ந்து கொண்டார்கள்.எல்லாமே வினீத்தின் எண்ணப்படி ஒழுங்காக நடந்தது. அடுத்த வருஷம் சர்ச்சில் ஸ்டெல்லாவின் விரலில் மோதிரம் இட்டு அவர்கள் முறைப்படி கல்யாணம் நடந்து முடிந்து – இதோ இன்று முதல் இரவு.

ஒயினும், ரம்மும், காமமும், போதையும் நிறைந்த அந்த இரவில் சொல்லி வைத்தாற்போல இன்னொரு ஸ்நோ ஸ்டார்ம். உறையும் மைனஸ் பத்து டிகிரி ஃபாரன்ஹீட் குளிர். வினீத்தும், ஸ்டெல்லாவும் மறுநாள் விழித்து எழவில்லை. இரண்டு நாள் கழித்துதான் கதவை உடைத்து குளிரில் விறைத்துப் போன அவர்கள் சடலங்களை போலீஸ் மீட்டார்கள். ஹைப்போதெர்மியா!

ஹெச்வேக் ஹீட்டர் திடீரென வேலை செய்யவில்லை. நிலத்தடியில் எங்கோ வயர் பழுதடைந்திருக்கிறது என்று கண்டுபிடித்துச் சொன்னார் நிபுணர். இரவோடு இரவாக குளிர் சாதனப்பெட்டி போல் ஆனது வீடு. போதையில் எழத் தோன்றாமல் உணர்வின்றிக் கிடந்த நிலையில் உறைந்து போயிருக்கிறார்கள்.

மறுபடியும் சில்லுன்னு மரணம். விபத்துதான் என்று கேஸை மூடினார்கள். இவனுக்கு ஏதோ நேரம் சரியில்லை என்று அக்கம் பக்கம் பேசிக்கொண்டார்கள்.ஸ்டெல்லாவின் அம்மா சர்ச்சுக்குப் போய் பாவ மன்னிப்புக் கூண்டில் மண்டியிட்டு அமர்ந்தாள்.

– மார்ச் 2019

Print Friendly, PDF & Email

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *