சிசிடிவி

0
கதையாசிரியர்:
கதைத்தொகுப்பு: கிரைம்
கதைப்பதிவு: August 9, 2024
பார்வையிட்டோர்: 2,052 
 
 

சென்னை உள்நாட்டு விமான நிலையத்தில் அவள் வேகமாக நடந்தாள்.  வலது கையில் சிறிய சூட்கேஸ், சிகப்பு நிறம், அவளைவிட வேகமாக சுழன்று சுழன்று நகர்ந்தது போல இருந்தது.  இடது தோளில் சிகப்பு நிற ஹேண்ட்பேக்.  அவளுடைய வெள்ளை நிற சுடிதார், சிகப்பு நிற குர்தா, சிகப்பு பூக்கள் போட்ட வெள்ளை துப்பட்டா  – எல்லாமே மற்ற பயணிகளின் தலையை திருப்பச் செய்தது.  கோவை செல்லும் விமானம் புறப்பட இன்னும் நாற்பது நிமிடங்களே என்று தெரிந்ததும் அவள் நடை வேகம் கூடியது.  அவளை மிடில் ஏஜ் என்றுதான் சொல்லவேண்டும்; ஆனாலும் ஏதோ விவரிக்க முடியாத அழகு எனலாம். அவள் பின்னாலயே சிறு கூட்டம் போகிறதோ என்றுகூட தோன்றியது.  

விமான நிலைய சிசிடிவியில் அவள் போவதையும் அவளையே திரும்ப திரும்பப் பார்க்கும் மற்ற பயணிகளையும் கவனித்த டெக்னிசியன் சுரேஷுக்கு சிரிப்பை அடக்க முடியவில்லை…இருந்தாலும், அந்த பெண் இருந்த சில நிமிட வீடியோவை ஒரு நகல் எடுத்துக் கொண்டான்.  ஒரு முக்கிய காரணத்துக்காக…

கதவைத் திறந்த நளினி திடுக்கிட்டு நின்றாள்.  

வெளியே காம்பீர தோற்றமுடன் ஏ. சி. பி. முரளியுடன் இரண்டு போலீஸ்காரர்கள்…

“நான்தான் ஏ.சி.பி. முரளி…உள்ளே வரலாமா?”  முரளியின் குரல் கணீரென்று ஒலித்தது.  

நளியின் பதிலுக்கு காத்திராமல் உள்ளே நுழைந்தது போலீஸ்.  

“உங்க கணவர்…கார்த்தி இருக்காரா?”   கேட்டது முரளிதான்.

 “அவர் எப்படி இங்கே இருப்பார்?  நாங்க டிவோர்ஸ் வாங்கி இருபத்தி இரண்டு மாசம் ஆச்சே…அவரோட பிளாட்டுல இருக்கலாம்…”

“நீங்க அவரை கடைசியா எப்போ பாத்தீங்க?”

“ஏன் கேக்கறீங்க?”  நளினிக்கு குரல் கம்மியதை முரளி கவனித்துக்கொண்டார்.

“கேட்ட கேள்விக்கு பதில் தேவை…”

“கிட்டத்தட்ட நாலு மாசம் இருக்கும்…ஸ்பென்சர் பிளாசாவுல பாத்தேன்… ஏன் சார், ஏதாவது….” நளினி முடிக்கவில்லை…

“தெரியாத மாதிரி கேக்கறீங்களே…?” 

“தயவு செஞ்சி சீக்கிரம் சொல்லுங்க சார்…உங்க பேச்சு, கேள்வி…எல்லாமே புதிரா இருக்கு…”

“புதிர் எங்க போலீஸ் டிபார்ட்மெண்ட்டுக்குதான் …உங்க ஹஸ்பண்ட்…கார்த்தி…”

“எக்ஸ்…”

“சரி…சரி… உங்க எக்ஸ் ஹஸ்பண்ட்…அவருடைய பிளாட்ல கொலை செய்யப்பட்டு கிடந்தார்…”

நளினிக்கு தலை சுற்றியது…கீழே சாயப் பார்த்தவளை முரளி தாங்கிப்பிடித்து சோபாவில் உட்காரவைத்தார்.  சில நிமிடங்களில் நளினி மெல்ல கண் விழித்து முரளியைப் பார்த்து கேட்டாள்…

“யார்…யார்…கார்த்தியை…”

“இங்க பாருங்க நளினி…நான் டைரெக்ட்டா மேட்டருக்கு வர்றேன்…அவர் கொலை செய்யப்பட்டு சுமார் நாப்பது மணி காலம் ஆகியிருக்கு…உங்க மேல எங்களுக்கு பலத்த சந்தேகம்…நீங்க எங்களோட வரணும்…இப்போவே…”

“சார்,  நீங்க சொல்ற டைம் பிரேம்ல நான் கோயம்பத்தூர் போயிருந்தேன்…பிளைட்ல போனேன்…சென்னையிலே எப்படி நான் கார்த்தியை…”

போலீசுடன் போவதை நளினியால் தவிர்க்க முடியவில்லை. சந்தேகத்தின் பேரில் அவள் மீது குற்றம் பதிவானது.  கொலை வழக்கு தொடர்ந்தது.

நளினியின் மீது சாட்டப் பட்ட கொலைக்குற்றம் தவறானது, அவள் நிரபராதி என்று நீதிமன்றத்தில் தீர்ப்பானது.  கார்த்தி கொலை செய்யப்பட்ட அதே நேரத்தில் நளினி சென்னை விமான நிலையத்தில் கோவை செல்லும் விமானத்துக்காக காத்திருந்ததை நளினியின் வக்கீல் நிரூபித்தார்.  அன்று எடுக்கப்பட்ட சிசிடிவியை நீதிமன்றத்தில் பதிவு செய்தார்.  அதில் நளினி பிளைட் டிக்கெட் செக் பண்ணும் பெண்ணிடம் பேசியதையும் சுட்டிக் காட்டினார்.  

நளினியின் பிளாட்டை சோதனை போட்டபொது, சிசிடிவியில் பதிவான அவளுடைய சிகப்பு நிற சூட்கேஸ், சிகப்பு நிற ஹேண்ட்பேக், வெள்ளை நிற சுடிதார், சிகப்பு நிற குர்தா, சிகப்பு பூக்கள் போட்ட வெள்ளை துப்பட்டா  – எல்லாமே கிடைத்தன.  ஒரே நபர் ஒரே நேரத்தில் இரண்டு இடங்களில் இருப்பது சாத்தியமில்லை என்னும் எளிய ஆனால் வலுவான வாதத்தால் நளினி குற்றமற்றவள் ஆனாள்.  

மீண்டும் ஏ.சி.பி. முரளி கார்த்தி கொலையாளியை தேடுவதில்  தீவிரமாக இறங்கினார். வழக்கு நடந்து சில மாதங்களுக்குப்பிறகு ஒரு நாள்…

சிசிடிவி டெக்னிசியன் சுரேஷ், நளினியை சந்திக்க நுங்கம்பாக்கத்தில் ஒரு குறுகிய சந்தில் இருந்த கடையில் நுழைந்தான்.  

“என்ன நளினி… என் பங்கு தயாரா?”  சுரேஷ் நேரடியாக விஷயத்துக்கு வந்தது நளினிக்கு சற்று அதிர்ச்சியை அளித்தது.

“சுரேஷ்…இவ்வளவு கறாரா பேச ஆரம்பிக்கிறே…”

“இந்த விஷயம் சீக்கிரம் முடியணும்…என் பார்ட்னருக்கு, அதான் மணிக்கு நான் ஷேர் கொடுக்கணும்.  பணத்தை கொடுத்துட்டு புறப்படு.  நாம பேசினாப்போல, பிப்டி பிப்டி…பத்து கோடி முப்பது லட்சம் என் பங்கு…”

“திட்டம் போட்டு முடிச்சது நான்…நீ செஞ்சது முக்கியம்தான்…இல்லேன்னு சொல்லலே.  இருந்தாலும்… பிப்டி பர்சென்ட் அதிகம்…”

சுரேஷுக்கு முகம் சிவந்தது.  “இது பேரம் பேசற விஷயமும் இல்லை, நேரமும் இல்லை. நான் சிசிடிவி வீடியோவை எடுத்து மணிகிட்ட சொல்லி நச்சுன்னு மாத்தி ஹெல்ப் பண்ணலைனா உனக்கு இவ்வளோ பணம் கிடைச்சிருக்குமா? கார்த்தியை கொலை செய்ததற்காக நீ ஆயுள் தண்டனையிலே கிடந்திருப்பே…”

அதுவரை மறைவிலிருந்த ஏ.சி.பி. முரளி, ‘இதுதான் சரியான தருணம்’ என்று கணித்து, உள்ளே வந்தார்.  நளினி மீது சந்தேகம் தீராமல், டிபார்ட்மென்ட் ஆதரவுடன் அவளையே நிழலாக தொடர்ந்த முரளியின் உழைப்புக்கு பலன் கிடைத்தது.

நளினி, சுரேஷ் மற்றும் அவனுக்கு உதவிய கம்ப்யூட்டர் ஹாக்கர் மணி மூவரையும் கைது செய்து போலீஸ் கமிஷினர் ஆபீஸுக்கு விரைந்தார் ஏ.சி.பி. முரளி.  கார்த்தி கொலை வழக்கு மீண்டும் நீதி மன்றத்துக்கு வந்தது. 

கார்த்தி கொலை வழக்கை வெற்றிகரமாக முடித்து, தான் எழுதிய ரிப்போர்ட்டுக்கு முற்றுப்புள்ளி வைத்தார் ஏ.சி.பி. முரளி.

‘கார்த்திக்கு அவனுடைய கிராமத்தில் கோடிக்கணக்கில் சொத்து இருப்பதை தெரிந்து கொண்ட நளினி முதலில் அவனை டிவோர்ஸ் செய்தாள்.  கார்த்தியை கொலை செய்ய திட்டிமிட்டாள்.  எப்படியும் போலீஸ் தன்னை தேடி வரும் என்று சரியாகவே எடை போட்டாள்.  கார்த்தியை முடிக்கும் அதே நேரத்தில் தான் சென்னையிலேயே இல்லை என்று நிரூபிக்க என்ன வழி?   இங்குதான் ஆர்டிபிஷியல் இன்டெலிஜென்ஸ் டெக்னாலஜியை பயன்படுத்தலாம் என்று சுரேஷ் சொன்னான்.  சுரேஷை ஏற்கெனவே நளினிக்கு அறிமுகப் படுத்தியதே கார்த்திக் என்பதுதான் ஸ்விதியோ?

கோவை போவதாக சென்னை விமான நிலையத்தில் நளினி சிசிடிவி யில் பதிவு செய்யப்பட்டால்?  நளினி திட்டமிட்ட நாளில், சுரேஷ் சிசிடிவி யில் யாரோ ஒரு பெண்ணின் வீடியோவை எடுத்து, மணியிடம் தந்தான்.  மணி, ஏஐ மூலமாக ‘வாய்ஸ் குளோனிங்’ மற்றும் ‘டீப்  ஃபேக்’ என்ற நுட்பங்களை லாவகமாக பயன்படுத்தி ஒரு போலி சிசிடிவி தாயாரித்தான்.  நளினியின் வக்கீல் கோரிக்கையை அனுமதித்த கோர்ட், ஏர்போர்ட் சிசிடிவி வீடியோவை கேட்டது.  சுரேஷ்-மணி இருவரும் ஏ. ஐ. மூலம் தயாரித்த போலி வீடியோவினால் நளினி விமான நிலையத்தில் இருந்ததாக தவறாக முடிவு செய்யப்பட்டது.  அந்த தவறு இப்போது கிடைத்த தடயங்களால் சரிப்படுத்தப் பட்டது. நளினி செய்த கொலைக்கு சுரேஷ் மற்றும் மணி இருவருமே உடந்தை என்பது உறுதியானது.

 இத்துடன் கார்த்தி கொலை சம்பந்தமான ஆவணம் மூடப்படும்.’

வாழ்க சிசிடிவி! வளர்க ஏ.ஐ. டெக்னாலஜி!

Print Friendly, PDF & Email
பிறப்பு: உத்திரன்மேரூர், தமிழ்நாடு வசிப்பு: வாஷிங்டன் டி.சி. அருகில் விழுப்புரத்தில் உயர்நிலைப்பள்ளி முடித்துவிட்டு, சென்னை விவேகானந்தா கல்லூரியில் இளங்கலை, முதுகலை பட்டங்கள் பெற்றபின், அமெரிக்கா சென்று கலிபோர்னியா பல்கலைக் கழகத்தில் வேதியிலில்முனைவர் பட்டம் பெற்றார். ஐந்து ஆண்டுகள் வேதியியலில் ஆராய்ச்சி முடிந்தபின், பால்டிமோர் வட்டாரத்தில்கல்லூரியிலும் பல்கலைக் கழகத்திலும் வேதியியல் பேராசிரியராக பணிபுரிந்து சில ஆண்டுகளுக்கு முன்வேலை ஓய்வு பெற்றார். வாஷிங்டன் - பால்டிமோர் வட்டாரத் தமிழச்சங்கத்தின் பொறுப்புகள் ஏற்று, பிறகு…மேலும் படிக்க...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *