சாத்தானின் பாதச் சுவடுகள்

0
கதையாசிரியர்:
கதை வகை: மொழிபெயர்ப்பு
கதைத்தொகுப்பு: கிரைம்
கதைப்பதிவு: October 14, 2020
பார்வையிட்டோர்: 29,277 
 
 

முன்னுரை

ஷெர்லாக் ஹோல்ம்ஸ் பற்றித் தெரியாதவர்களுக்கு ஒரு சிறிய அறிமுகம். ஆங்கில எழுத்தாளர் சர் ஆர்தர் கானன் டாயில் தனது கதைகளுக்காக உருவாக்கிய கற்பனைப் பாத்திரம். அவர் ஒரு தனியார் உளவாளியாகச் சித்தரிக்கப்பட்டுள்ளார். அவரது உடன் வேலை செய்பவர் வாட்சன். அவர் ஒரு மருத்துவர். இவர்கள் இருவரும் உண்மையான மனிதர்கள் என்று எண்ணுபவர்கள் கூட இருக்கிறார்கள். ஷெர்லாக் ஹோல்ம்ஸ் தன் கூர்மையான ஆராய்ச்சி அறிவால் ஒரு விஷயத்தை அக்கு வேறு ஆணி வேறாகப் பிரித்து மேய்ந்து விடுவார். சின்னச் சின்ன விஷயங்களையும் உற்று நோக்கும் பண்பு கொண்டவர்.

பத்தொன்பது மற்றும் இருபதாம் நூற்றாண்டின் இணையற்ற ஆங்கில எழுத்தாளர் சர் ஆர்தர் கானன் டாயில் என்று சொன்னால் மிகையாகாது. 1910 ஆம் ஆண்டு “The Strand Magazine” என்னும் ஆங்கில இதழில் வெளியான ஒரு சிறுகதை இது. மர்மமான முறையில் இறந்த பெண், பைத்தியமாகி விட்ட அவளது சகோதரர்கள், இவர்களது மர்மத்தை ஷெர்லாக் ஹோல்ம்ஸ் எவ்வாறு கண்டு பிடிக்கிறார் என்பது பற்றிய சிறு கதை.

சாத்தானின் பாதச் சுவடுகள்

ஷெர்லாக் ஹோல்ம்ஸுடன் ஏற்பட்ட நீண்ட கால நெருக்கமான நட்பின் விளைவாக எனக்குக் கிடைத்த சுவையான அனுபவங்கள் மற்றும் வினோதமான நினைவுகள் அனைத்தையும் அவ்வப்போது பதிவு செய்யும் வேளையில் மிகவும் நெருடலான ஒரு விஷயம் என்னவென்றால் அவரது விளம்பரத்தின் மேலுள்ள வெறுப்புதான். அவரது சுவாரசியம் இல்லாத குறை காணும் இயல்பினால் மக்கள் அவரைப் பாராட்டுவது அவருக்குக் கொஞ்சம் கூடப் பிடிக்காது. ஒவ்வொரு வழக்கும் வெற்றிகரமாக முடிந்த பின் அதை ஒரு சராசரியான அதிகாரியின் கைகளில் ஒப்படைத்து அவர்களின் கேலியான நகைப்பிற்கு நடுவில் தடுமாற்றமான வாழ்த்துக்களைக் கேட்பது அவரை மிகவும் சங்கடப்படுத்தும் விஷயங்கள். அவரது இந்த இயல்பு மட்டுமே காரணம் வேறு எந்த சுவாரசியமான விஷயங்கள் இல்லாமல் போனதால் அல்ல நான் இவரது சில வழக்குகளை மட்டுமே சமீப காலமாகப் பொது மக்களின் பார்வையில் வைத்திருப்பது. அவரது வழக்குகளில் நான் புலன் விசாரணை செய்ய உடன் இருந்தது எனக்கு மிகவும் கவுரவம்தான். அதை நினைத்து நான் எப்பொழுதும் அடக்கமாகப் பெருமைப் பட்டதுண்டு.

போன செவ்வாய்க் கிழமை அவரிடம் இருந்து வந்த தந்தி என்னை மிகவும் ஆச்சரியப்படுத்தியது. அவர் என்றைக்கும் கடிதமே எழுதியதில்லை. சொல்ல வந்ததை ரத்தினச் சுருக்கமாகத் தந்தியிலேயே சொல்லி விடும் வல்லமை படைத்தவர் அவர். அதன் விவரம்…

அவர்களிடம் கார்னிஷ் பயங்கரத்தைப் பற்றி ஏன் சொல்லக் கூடாது — நான் எடுத்ததிலேயே மிகவும் வித்தியாசமான வழக்கு.

எந்த நினைப்பில் அவருக்கு இதெல்லாம் தோன்றியது என்று தெரியவில்லை. ஆனால் அதை நானும் நினைவில் வைத்திருப்பேன் என்று எப்படித்தான் நினைக்கிறாரோ தெரியவில்லை. வேறு எதாவது தந்தி வருவதற்குள் மக்களின் பார்வைக்கு வைக்கலாம் என்று நானும் சுறுசுறுப்புடன் தேட ஆரம்பித்து விட்டேன்.

அப்பொழுது 1897 ஆம் ஆண்டின் வசந்த காலம். விவரங்களைத் தோண்டித் துருவும் ஆவல் மற்றும் விடா முயற்சி போன்ற குணங்களாலும் தொடர்ச்சியான வேலைப் பளுவினாலும் ஹோல்ம்ஸின் இரும்பு போல் இறுகிய முகமும் இளகத் தயாராவது போன்ற அறிகுறிகள் காட்டிக் கொண்டு இருந்தன. அந்த ஆண்டின் மார்ச் மாதத்தில் ஹார்லி தெருவில் வசிக்கும் மரு.மூர் அகர் அவருடன் ஏற்பட்ட வினோதமான அறிமுகம் – அதைப் பின்னொரு நாள் விவரிக்கிறேன்- அவருக்கு புதிய உற்சாகம் கொடுத்து அவர் தனது மற்ற வேலைகள் அனைத்தையும் ஒத்தி வைத்து விட்டு முழுமையான ஓய்வெடுக்க வேண்டிய முடிவுக்கு வித்திட்டது. தனது உடம்பு முற்றிலும் செயல் இழப்பத்தைத் தடுக்க அதை விட்டால் வேறு வழி இல்லை. இருந்தாலும் அவரது உடல் நலத்தைப் பாதுகாப்பதில் அவருக்குத் துளியும் அக்கறையே கிடையாது.

ஏனெனில் அவரது மனம் முழுமையான துறவு நிலையில் இருந்தது. ஆனால் வேலையில் இருந்து மொத்தமாகத் துரத்தி விடப்படும் அபாயத்தில் இருந்து தப்பிக்க வேறு வழி இல்லாமல் விட்டுக் கொடுக்க வேண்டியதாகி விட்டது. அதனால் முற்றிலும் புதிய சூழ்நிலைக்குத் தன்னை மாற்றிக் கொண்டார். ஆக அந்த ஆண்டின் வசந்த காலத் தொடக்கத்தில் நாங்கள் இருவரும் கார்னிஷ் தீபகற்பத்தின் கோடியில் போழ்து வளைகுடாவிற்கு அருகில் உள்ள ஒரு குடிலில் தங்கி இருந்தோம்.

அது ஒரு தனிமையான இடம். எனது நோயாளியின் இறுக்கமான நகைச்சுவைக்கு உகந்த இடம். உயரமான புல் வெளி மேட்டில் அமைந்திருந்த வெள்ளை அடிக்கப்பட்ட அந்த வீட்டின் சாளரத்தில் இருந்து அபாயமான அரை வட்ட வடிவில் இருந்த மலைகள் சூழ்ந்த வளைகுடாவைப் பார்த்தோம், மரணத்தின் பொறிகளான அந்தப் பழைய மரக்கலங்கள், விளிம்பில் உள்ள கருமையான பள்ளத்தாக்குகள், அலைகள் நீராட்டும் பாறைகள், அதன் மேல் எண்ணற்ற மாலுமிகள் தங்கள் முடிவைச் சந்தித்திருக்கிறார்கள். வடக்கில் இருந்து வரும் தென்றல் காற்றின் தாலாட்டில் அவைகள் அமைதியாக பாதுகாப்பாக இருந்தன. புயலினால் அலைக்கழிக்கப்பட்ட கலங்களை அழைத்துப் பாதுகாப்பாக ஓய்வெடுக்கக் கூப்பிடுவது போல் இருந்தது அந்த தென்றல் காற்றின் மெல்லிய வருடல்.

அதைத் தொடர்ந்து திடீரென்று வந்தது ஒரு பெரும் சுழல் காற்று. கலங்கடிக்கும் வட மேற்குத் திசையில் இருந்து வந்த ஒரு புயல், அலைக்கழிக்கும் நங்கூரம், நனையாத கரை, கிரீச்சிடும் அலைகளுக்கு இடையில் ஒரு இறுதிச் சண்டை. திறமையான மீகாமன் அபாயமான அந்த இடத்தில் இருந்து தள்ளியே நின்றான்.

கரைக்கு இப்புறம் நிலத்திலும் எங்கள் சுற்றுப்புறமும் கூட கடலில் இருப்பது போலவே அபாயகரமானதாகவே இருந்தது. அந்த ஊர் முழுவதும் சுற்றிச் சுற்றிப் பொட்டல் காடுகள்தான். தனிமையாக, பழுப்பு நிறமேறி இருந்தது. எங்காவது ஓரிடத்தில் ஒரேயொரு தேவாலயம் இருந்தது இந்த ஊர் ஒரு அரதப் பழசான ஒரு கிராமம் என்பதற்குச் சாட்சியாய். அந்த ஊரில் எந்தப் பக்கம் திரும்பினாலும் ஏதோ ஒரு இனம் அழிந்து போனதற்கான சுவடுகள் தெரிந்தன. அவைகள் விட்டுப் போனதற்கு அடையாளங்களாய் கற்களால் செய்யப்பட்ட நினைவுச் சின்னங்கள், கரடுமுரடான பாறைகள் அதன் மேல் பிணங்களை எரித்த சாம்பல், ஆர்வமூட்டும் மட்பாண்டங்கள் ஏதோ ஒரு பழைய யுகத்தின் சண்டைகளை நினைவு படுத்திக் கொண்டிருந்தன. அந்த இடத்தின் மோகனமும் மர்மங்களும், மறந்து போன நாடுகளின் மோசமான சூழ்நிலைகளும் எனது நண்பனின் கற்பனைகளுக்கு விருந்தாகின. அவர் நீண்ட நேரம் தனியே உலா போவதும் அந்த ஊரின் பொட்டல் வெளிகளில் தனியே தியானிப்பதுமாய் இருந்தார். பழைய கார்னிஷ் மொழியும் என் நண்பனின் எண்ணங்களைச் சிறையிட்டன. அது பாபிலோனியர்கள் பேசும் மொழியை ஒத்திருந்தது என்று அவர் சொன்னதாக ஞாபகம். பினீஷியத் தகர வர்த்தகர்களிடம் இருந்து உருவாகி இருந்திருக்கும். அவர் ஒரு பெட்டகம் முழுவதும் மொழியியல் பற்றிய புத்தகங்களைத் தருவித்திருந்தார். ஆற அமரப் படித்து இந்தவிதமான கருத்துக்களைத் தெரிவித்த வண்ணம் இருந்தார். அப்பொழுது திடீரென்று எனக்கு சங்கடமாகவும் அவருக்கு உண்மையான மகிழ்ச்சி ஏற்படுத்தும் வண்ணமும் கனவுகளின் நாடான அந்த இடத்திலும் எங்களது வாசலுக்கு வெளியிலேயே ஒரு உபத்திரவம் காத்திருந்தது. எங்களை லண்டனில் இருந்து உந்தித் தள்ளிய பிரச்சினையைக் காட்டிலும் இது மிகவும் தீவிரமாகவும் கட்டிப் போடுவதாகவும் அளவில்லா மர்மங்கள் நிறைந்ததாகவும் இருந்தது. எங்களது எளிய வாழ்வும் அமைதியான ஆரோக்கியமான வாழ்வியலும் மிகவும் வன்மையாகத் துண்டிக்கப்பட்டது. அதன் பின்னால் நடந்த தொடர் நிகழ்வுகளால் நாங்கள் கிறுகிறுத்துப் போனோம். கார்ன்வாலில் மட்டுமல்லாது மேற்கு இங்கிலாந்து முழுவதும் அது அளவில்லா அதிர்ச்சியைக் கொடுத்தது. எனது வாசகர்கள் “கார்னிஷ் பயங்கரம்” என்று நான் ஏற்கெனவே கூறி இருப்பதை நினைவில் வைத்திருப்பார்கள் என்று நம்புகிறேன். அதன் குத்து மதிப்பான ஒரு செய்தி லண்டன் பத்திரிக்கைகளுக்குச் சென்று சேர்ந்தது. அது நடந்து பதின்மூன்று ஆண்டுகளுக்குப் பின் அதைப் பற்றிய நம்பவே இயலாத உண்மைகளை நான் மக்களின் பார்வைக்குச் சமர்ப்பிக்கிறேன்.

கார்ன்வாலின் இந்தப் பகுதியில் அங்கொன்றும் இங்கொன்றுமாகக் கோபுரங்கள் இருந்தன என்று சொல்லி இருந்தேன் அல்லவா. அதில் அருகில் இருந்தது ட்ரெடானிக் ஒல்லஸின் வசிப்பிடமாக இருந்தது. அங்கே ஒரு இருநூறு மனிதர்களின் குடிசைகள் வரிசை கட்டி இருந்தன பாசி படர்ந்த பழமையான ஒரு தேவாலயத்தைச் சுற்றி. அந்த தேவாலயத்தின் பாதிரி திரு.ரௌந்தை அவர்களைப் பார்த்தால் ஒரு தொல்பொருள் ஆய்வாளர் போல் இருந்தார். அதனால் ஹோல்ம்ஸ் அவரிடம் அறிமுகம் ஆகிக் கொண்டார். அவர் ஒரு நடுத்தர வயது உடையவராக இருந்தார். தாட்டியான உடம்பும் எளிதில் பழகக் கூடியவராகவும் இருந்தார். உள்ளூர் மனிதர்களின் நிதி உதவியும் அதிகமாகவே காணப்பட்டது. அவரது அழைப்பின் பேரில் நாங்கள் அவருடன் சென்று தேநீர் அருந்தினோம். அவர் மூலம் திரு.மோர்டிமர் ட்ரெஜென்னிஸ் என்பவரும் அறிமுகமாயினார். அவர் ஒரு தனி மனிதர். பாதிரியின் எளிய வீட்டில் இருந்து தனது பல அடுக்கு மாளிகையில் இடம் கொடுத்திருந்தார். பாதிரியும் தன்னந்தனியாய் இருப்பதனால் அவருடைய இந்த ஏற்பாடும் அவருக்குப் பிடித்திருந்தது. இருந்தாலும் அவர்கள் இருவருக்கும் இடையில் எந்தவிதமான பொதுவான பண்புகளும் இருக்கவில்லை. அந்த இடத்துக்குச் சொந்தக்காரர் ஒல்லியாய் கருப்பாய் கண்ணாடி அணிந்திருந்தார். கொஞ்சம் கூன் விழுந்து இருந்ததால் ஏதோ ஒரு உடல் குறைபாடு இருக்கிறது என்று நன்றாகத் தெரிந்தது. எங்களது சிறிய சந்திப்பிலேயே தெரிந்தது பாதிரி மூச்சு விடாமல் பேசுபவர் என்றும் அதற்கு நேர் மாறாக வீட்டுக்காரர் மிகவும் அமைதியான சோகமான முகம் கொண்டவர் என்றும். எப்பொழுதும் தனிமையிலேயே நிலை குத்திய கண்களோடு தன்னைப் பற்றிய சிந்தனைகளிலேயே ஆழ்ந்திருந்தார்.

மார்ச் 16 ஆம் தேதியன்று காலைச் சிற்றுண்டியை முடித்த சிறிது நேரத்தில் வீட்டில் இருந்தபடியே நாங்கள் இருவரும் புகைத்துக் கொண்டிருந்தோம் வெளியில் சுற்றுலா செல்லக் கிளம்புவதற்கு முன். அந்த நேரத்தில் இவர்கள் இருவரும்தான் அன்று எங்கள் வீட்டுக்குள் பட்டென்று நுழைந்தார்கள்.

“திரு.ஹோல்ம்ஸ்” என்று பதற்றமாகக் கத்தினார் பாதிரியார். “ஒரு மோசமான பயங்கரமான சம்பவம் ஒன்று நேற்றிரவு நடந்திருக்கிறது. இதுவரை இப்படி நடந்ததே இல்லை. நீங்கள் இந்த நேரத்தில் இங்கே இருப்பது கடவுளின் அருள் என்றுதான் சொல்ல வேண்டும். ஏனெனில் இங்கிலாந்து தேசம் முழுவதும் தேவைப்படும் ஒரே ஆள் நீங்கள் மட்டும்தானே.”

நான் அந்தப் பாதிரியாரை வேண்டா வெறுப்பாகப் பார்த்தேன். ஆனால் ஹோல்ம்ஸ் தனது புகைக் குழாயைத் தன் உதடுகளில் இருந்து எடுத்து தனது ஆசனத்தில் நிமிர்ந்து அமர்ந்தார் ஒரு வயதான வேட்டை நாய் அழைக்கும் ஒலி கேட்டுத் திரும்புவது போல். மெத்தாசனத்தை நோக்கிச் சைகை செய்தார். படபடப்போடு இருந்த பாதிரியும் பதற்றத்தோடு இருந்த அவருடன் வந்தவரும் அருகருகே அமர்ந்தனர். திரு.மோர்டிமர் ட்ரெஜென்னிஸ் கொஞ்சம் சுய கட்டுப்பாட்டோடு இருந்தார் பாதிரியார் போல் அல்லாமல். ஆனால் அவரது நடுங்கும் கரங்களும் அகல விரிந்த கண்களும் இருவரும் ஒரே மாதிரி உணர்ச்சிகளோடு இருந்தார்கள் என்று மட்டும் உறுதியாகச் சொல்லலாம்.

“நான் பேசட்டுமா இல்லை நீங்கள் ஆரம்பிக்கிறீர்களா?” என்று பாதிரியாரை நோக்கிக் கேட்டார் அவர்.

“நீங்களே அந்த விஷயத்தைக் கண்டுபிடித்ததால் பாதிரியார் அதைப் பார்த்திருந்தாலும் நீங்கள் பேசுவதுதான் சரியாய் இருக்கும்” என்றார் ஹோல்ம்ஸ்.

நான் அவசரமாக ஆடை அணிந்த பாதிரியாரை ஏறிட்டேன். நேர்த்தியாக ஆடை அணிந்திருந்த வீட்டு உரிமையாளரையும் கவனித்தேன். ஹோல்ம்ஸின் அந்த நுண்ணிய கணிப்பினால் ஆச்சரியமடைந்த அவர்கள் முகங்களைக் கண்டு நான் மெலிதாகச் சிரித்துக் கொண்டேன்.

“ஒருவேளை நான் முதலில் பேசுவதுதான் பொருத்தமாய் இருக்கும் என்று நினைக்கிறேன்” என்று பாதிரியார் ஆரம்பித்தார். “அதன் பின் அவரது விவரங்களைக் கேட்கலாமா வேண்டாமா என்று நீங்களே முடிவு பண்ணிக் கொள்ளுங்கள். அதே போல் அந்த மர்ம விவகாரம் நடந்த இடத்திற்கும் உடனே செல்வதா இல்லையா என்பதையும் நீங்களே சொல்லி விடுங்கள். அதன் பின் எனது நண்பர் தனது சகோதரர்கள் ஓவன், ஜார்ஜ் மற்றும் அவரது சகோதரி ப்ரெண்டா உடன் நேற்று மாலை அவர்களது இல்லமான பழைய கற்சிலுவைக்கு அருகில் உள்ள ட்ரெடானிக் வார்தாவில் இருந்த விவரங்கள் பற்றியும் நான் பேசுகிறேன். அவர்கள் வீட்டில் இருந்து பத்து மணி வாக்கில் கிளம்பினார் சாப்பாட்டு அறையில் உள்ள மேசையின் மீது சீட்டு விளையாடி விட்டு நல்ல ஆரோக்கியத்துடன், நல்ல மன நிலையுடன். இன்று அதிகாலை, விரைவாக எழும் பழக்கம் இருப்பதால், அதே திசையில் நடந்து கொண்டிருந்தார் காலை உணவிற்கு முன். அப்பொழுது மரு.ரிச்சர்ட்ஸ் அவர்களது வண்டி அவரைக் கடந்து சென்றது. அவர் மிகவும் அவசரமாக ட்ரெடானிக் வார்தாவில் இருந்து அழைப்பு வந்ததால் செல்வதாகவும் விவரித்தார். அதனால் திரு.மோர்டிமரும் இயற்கையாகவே அவருடன் சென்றார். அங்கே சென்ற பின் அவர் வினோதமான காட்சியைக் கண்டார். அவரது சகோதரர்கள் சகோதரி மூவரும் அவர் விட்டுச் சென்ற கோலத்திலேயே இருந்தனர். சீட்டுக்கள் அவர்களுக்கு முன் கலைக்கப்பட்டு இருந்தன. மெழுகுவர்த்திகள் முழுவதும் எரிந்து அணைந்திருந்தன. அவரது சகோதரி தனது ஆசனத்திலேயே இறந்திருந்தார். சகோதரர்கள் இருவரும் எந்தக் கவலையும் இல்லாமல் சத்தம் போட்டுச் சிரித்துப் பேசிப் பாடிக் கொண்டிருந்தனர் முற்றிலும் தங்களது சுய புத்தியை இழந்து. ஆனால் மூவரின் முகங்களிலும், இறந்து விட்ட சகோதரி மற்றும் புத்தி சுவாதீனம் இல்லாத சகோதரர்கள், அளவில்லா திகில் பரவி இருந்தது. அதைப் பார்ப்பதற்கே பயங்கரமாக இருந்தது. வேறு யாரும் வெளியாட்கள் இருந்ததற்கான சுவடுகளே இல்லை. திருமதி.போர்ட்டர் என்னும் வயதான பணிப்பெண்ணைத் தவிர வேறு யாரும் அங்கில்லை. அவரும் நன்றாகத் தூங்கி விட்டதால் எந்தவிதமான ஒலியும் கேட்கவில்லை என்று சொன்னார். எந்தப் பொருளும் திருடு போகவில்லை. கலையவுமில்லை. அந்த திகிலுக்கான காரணம் என்னவென்பதற்கு எந்தவித விளக்கமும் இல்லை. ஒரு பெண் இறப்பதற்கும் இரு வலிமையான ஆண்கள் புத்தியை இழப்பதற்கும் எது காரணமாய் அமைந்து விடும். அதுதான் நடந்தது திரு.ஹோல்ம்ஸ் சுருக்கமாக. நீங்கள் இதைத் தீர்ப்பதற்கு உதவினால் உங்களுக்குப் புண்ணியமாய்ப் போகும்”

எப்படியாவது என் நண்பனை மீண்டும் அமைதிப் படுத்தி விட வேண்டும் என்று நான் நினைத்தேன். அதுதான் இந்தப் பயணத்தின் நோக்கமும் கூட. ஆனால் அவரது தீவிரமான முகத்தையும் குறுக்கிய புருவங்களையும் ஒரு முறை பார்த்தவுடனே புரிந்தது நான் நினைத்தது எவ்வளவு வீண் வேலை என்று. சிறிது நேரம் அமைதியாக அமர்ந்திருந்தார். எங்கள் அமைதியைக் குலைத்த இந்த வினோதமான நாடகத்தில் சற்று அமிழ்ந்திருந்தார்.

“நான் இந்த விஷயத்தை கவனிக்கிறேன்” என்றார் இறுதியாக. “முதல் பார்வையில் இது ஒரு மிகச் சிறந்த வழக்கு போலவே தெரிகிறது. நீங்கள் அங்கு சென்று பார்த்தீர்களா, திரு.ரௌந்தை?”

“இல்லை, திரு.ஹோல்ம்ஸ். திரு.ட்ரெஜென்னிஸ்தான் அங்கு நடந்தவை பற்றி விவரித்தார். அதன் பின் நான் நேரே உங்களைக் காண ஓடோடி வந்து விட்டேன்.”

“இந்த பயங்கரம் நடந்த இடம் இங்கிருந்து எவ்வளவு தூரம் இருக்கும்?”

“கிட்டத்தட்ட ஒரு மைல் தொலைவு இருக்கும்”

“பின் நாம் அனைவரும் நடந்தே செல்வோம். ஆனால் அதைத் தொடரும் முன் நான் உங்களைச் சில கேள்விகள் கேட்க வேண்டி இருக்கிறது திரு.மோர்டிமர்.”

அவர் இவ்வளவு நேரமும் மிக அமைதியாகவே இருந்தார். எனக்குத் தெரிந்தவரை அவரது அடக்கப்பட்ட உணர்ச்சிகள் பாதிரியார் கொட்டி விட்ட உணர்ச்சிகளை விட மிக அதிகம் போலவே தோன்றியது. அவர் முகம் வெளிறி விகாரமாய் இருந்தது. அவரது கவலை தோய்ந்த முகம் ஹோல்ம்ஸையே நோக்கி இருந்தது. அவரது மெலிந்த கரங்களைக் கோணலாய்க் கட்டி இருந்தார். அவரது குடும்பத்தில் நிகழ்ந்த கொடூரமான மர்மத்தைக் கேட்டு அவரது உதடுகள் துடித்துக் கொண்டிருந்தன. அவரது கருமையான கண்கள் அங்கு நடந்ததற்குச் சாட்சி சொல்வது போல் இருந்தன.

“உங்களுக்குத் தோன்றியதை எல்லாம் கேளுங்கள் திரு.ஹோல்ம்ஸ்” என்றார் அவர் ஆர்வமாக. “அதைப் பற்றிப் பேசுவது தவறுதான். இருந்தாலும் நான் உண்மையைச் சொல்கிறேன்.”

“நேற்றிரவு நடந்தது பற்றிச் சொல்லுங்கள்”

“நான் அங்கு இரவு உணவு சாப்பிட்டேன் பாதிரியார் சொன்னது போல். எனது அண்ணன் சீட்டு விளையாடலாம் என்று அழைத்தார். நாங்கள் ஒரு 9 மணிக்கு அமர்ந்தோம். நான் கிளம்ப ஆரம்பித்த போது ஒன்பதே முக்கால் இருக்கும். நான் அவர்களை விட்டுக் கிளம்பும் போது மிக்க மகிழ்ச்சியாகவே விட்டுச் சென்றேன்.”

“யார் உங்களை வழி அனுப்பியது.”

“திருமதி.போர்ட்டர் ஏற்கெனவே உறங்கி விட்டதால் நானே கதவைத் திறந்து சென்று விட்டேன். நான் வாசற் கதவைச் சாத்தி விட்டுச் சென்றேன். அவர்கள் இருந்த அறையின் சாளரக் கதவு பூட்டித்தான் இருந்தது. ஆனால் திரைச் சீலை மூடப்படவில்லை. இன்று அதிகாலை செல்லும்போது கதவில் சாளரத்தில் எந்தவித மாற்றமும் இல்லை. அதனால் வேறு யாரவது உள்ளே நுழைந்திருப்பார்கள் என்ற சந்தேகத்திற்கே இடமில்லை. இருந்தாலும் அவர்கள் அனைவரும் அங்கேயே அமர்ந்திருந்தனர். அச்சத்தினால் பைத்தியங்களாய் மாறி விட்டனர். பயத்தில் என் சகோதரி இறந்து விட்டிருக்கிறாள். நாற்காலியின் கைப்பிடியில் அவள் தலை சாய்ந்து கிடந்தது. அந்தக் காட்சியை என் உயிர் உள்ளவரை மறக்கவே இயலாது.

“நீங்கள் சொல்லும் விதம் மிகவும் தத்ரூபமாக இருக்கிறது” என்றார் ஹோல்ம்ஸ். “அதற்கு என்ன காரணம் என்று நீங்கள் இதுவரை அறிந்திருக்கவில்லை என்றே நினைக்கிறேன்”

“இது கொடூரம், திரு.ஹோல்ம்ஸ், கொடூரமாக இருக்கிறது!” என்று அழ ஆரம்பித்து விட்டார் திரு.மோர்டிமர். “இந்த உலகம் சம்பந்தப்பட்டது போல் இல்லை. எதோ ஒன்று அந்த அறைக்குள் அன்று நுழைந்து அவர்களின் மனதில் இருந்த வெளிச்சத்தை அகற்றி விட்டுச் சென்றிருக்கிறது. எந்த வித பைத்தியக்கார மனிதன் கூட இதை செய்திருக்க சாத்தியம் இல்லை.”

“இந்த விஷயம் மனித குலத்திற்கு அப்பாற்பட்டதென்றால் நிச்சயம் என்னாலும் எடுத்துக் கொள்ள இயலாது. இருந்தாலும் அப்படி ஒரு முடிவுக்கு வருமுன் நாம் அனைத்து விதமான இயற்கையான விளக்கங்களையும் பெற முயற்சி செய்வோம். உங்களைப் பொறுத்தவரை நீங்கள் தனியாக இருப்பதைப் பார்த்தால் எதோ ஒரு காரணத்திற்காக உங்கள் குடும்பத்தில் இருந்து பிரிந்து வாழ்கிறீர்கள் என்று தோன்றுகிறது.”

“ஆம். திரு.ஹோல்ம்ஸ். அது பழைய கதை. முடிந்து போன விஷயம். நாங்கள் ரெட்ரூத் என்னும் இடத்தில் தகர சுரங்கம் வைத்திருந்த குடும்பத்தைச் சேர்ந்தவர்கள். ஆனால் எங்களது சுரங்கத்தை ஒரு நிறுவனத்திற்கு விற்று விட்டு நல்ல செல்வதுடன் ஓய்வெடுக்கச் சென்று விட்டோம். எங்களுக்கு நடுவில் பணத்தைப் பிரிப்பதில் சில மனக்கசப்புகள் இருந்தன. ஆனாலும் நாளாக நாளாக அவை மறைந்து மன்னிக்கப்பட்டு விட்டன. அதன் பின் நாங்கள் இணை பிரியா நண்பர்களாகி விட்டோம்.”

“அன்றைய சாயங்கால வேளை நீங்கள் ஒன்றாக இருந்த நேரத்தில் எதாவது ஒன்று உங்களுக்கு வித்தியாசமாக பட்டதா. நன்றாக யோசித்துச் சொல்லுங்கள். எதாவது ஒரு சிறு விஷயம் கூட இந்த வழக்கிற்கு உபயோகமாக இருக்கும்.”

“அப்படி எதுவும் இல்லை, திரு.ஹோல்ம்ஸ்.”

“நீங்கள் அனைவரும் வழக்கமான உற்சாகத்தில்தான் இருந்தீர்கள் என்று எண்ணுகிறேன்”

“அதை விட மகிழ்ச்சியான தருணம் இருந்திருக்க வாய்ப்பில்லை”

“யாராவது பதற்றமாக இருந்தார்களா. வரப்போகும் ஆபத்தை எதிர்நோக்கி பயந்தவர்களாக இருந்தார்களா?”

“அப்படி எதுவும் இல்லை”

“அப்படி என்றால் உங்களிடம் எனக்கு உதவும் எந்தவித செய்தியும் இல்லை.”

மோர்டிமர் ஒரு நிமிடம் பலமாக யோசித்தார்.

“ஒரு விஷயம் எனக்குப் புலப்படுகிறது.” என்றார் இறுதியாக. நாங்கள் அமர்ந்திருக்கும் போது என் முதுகுக்குப் பின்னால்தான் சாளரம் இருந்தது. எனது சகோதரன் ஜார்ஜ் அதை நோக்கி அமர்ந்திருந்தான். ஒருமுறை அவன் சாளரத்தை நோக்கி தீர்க்கமாகப் பார்த்தான். அதனால் நானும் திரும்பி அங்கு பார்த்தேன். சாளரத் திரை மேலே ஏற்றப்பட்டிருந்தது. கதவுகள் மூடப்பட்டிருந்தன. ஆனால் புல் வெளிக்கு அருகில் இருந்த புதர்களில் இருந்து அங்கே எதோ அசைவது போல் தெரிந்தது. அது மனிதனா இல்லை மிருகமா என்று என்னால் ஊகிக்க முடியவில்லை. ஆனால் எதோ ஒன்று இருந்தது போல் நான் நினைத்தேன். அவனை என்னவென்று கேட்டல் அவனும் அதே பதில்தான் சொன்னான். அது மட்டுமே என்னால் சொல்ல முடியும்”

“நீங்கள் அது என்னவென்று பார்க்கவில்லையா?”

“இல்லை. அது ஒன்றும் பெரிய விசயமாகப் படவில்லை”

“ஆக நீங்கள் செல்லும்போது எதுவும் அசம்பாவிதம் நடக்கப் போகிறது என்று யாரும் அறிந்திருக்கவில்லை?”

“நிச்சயம் இல்லை”

“உங்களுக்கு இன்று அதிகாலையிலேயே செய்தி எப்படி வந்தது என்று எனக்கு விளங்கவில்லை”

“நான் எப்பொழுதும் அதிகாலை விரைவாகவே எழுந்து விடுவேன். காலை உணவிற்கு முன் சிறிது நடப்பது என் வழக்கம். இன்று காலை அப்பொழுதுதான் நடக்க ஆரம்பித்தேன். அதே நேரத்தில் மருத்துவரின் வண்டி என்னைக் கடந்து சென்றது. திருமதி.போர்ட்டர் பாட்டி ஒரு சிறுவனை அவசரமான செய்தியுடன் தன்னிடம் அனுப்பி வைத்ததாகச் சொன்னார். நான் உடனே அவருடன் வண்டியில் ஏறிப் புறப்பட்டேன். அங்கு சென்றவுடன் அந்தக் கோலத்தைக் கண்டோம். மெழுகுவர்த்திகள் ரொம்ப நேரமாக எரிந்திருக்க வேண்டும். அவர்கள் விடியும் வரையும் அங்கேயே இருட்டிலேயே அமர்ந்திருக்கிறார்கள். மருத்துவர் ப்ரெண்டா இறந்து ஆறு மணி நேரமாவது ஆகி இருக்கும் என்றார். அங்கே சண்டை நடந்ததற்கான அறிகுறி எதுவும் இல்லை. அவள் தலை சாய்ந்து நாற்காலியின் கைப்பிடியில் இருந்தது. முகத்தில் மட்டும் அந்த பயம் தெரிந்தது. ஜார்ஜ் மற்றும் ஓவன் இருவரும் ஏதேதோ உளறிக் கொண்டிருந்தனர். காணச் சகிக்கவில்லை. என்னால் அங்கு நிற்கவே முடியவில்லை. மருத்துவரும் ஒரு வெள்ளைக் காகிதம் போல் வெளிறிப் போய் விட்டார். சொல்லப் போனால் அவரும் மயக்கமடைந்து ஒரு நாற்காலியில் நிலை குலைந்து அமர்ந்து விட்டார். நாங்கள் கிட்டத்தட்ட அவரைக் கைத்தாங்கலாகப் பிடித்துக் கொண்டோம்.”

“அருமை. மிக அருமை!” என்கிறார் ஹோல்ம்ஸ். பின் தனது தொப்பியை எடுத்துக் கொண்டே எழுந்தார். “நாம் உடனே ட்ரெடானிக் வார்தாவிற்குச் செல்ல வேண்டும் சற்றும் தாமதிக்காமல். முதல் பார்வையிலேயே விடை கிடைத்து விடும்படியான வழக்குகள் எப்பொழுதாவதுதான் கிடைக்கும் என்பதை நான் ஒத்துக் கொள்கிறேன்.”

அன்று காலை நாங்கள் செய்த புலனாய்வில் உருப்படியாக எதுவும் தேறவில்லை. வெளிப்பார்வைக்கு மிகவும் மோசமான உணர்வைத்தான் எங்கள் மனதில் விதைத்திருந்தது. அந்தச் சம்பவம் நடந்த வீட்டிற்குப் போகும் வழி மிகவும் குறுகலான வளைந்து நெளிந்து செல்லும் கிராமத்துத் தெருவாகவே இருந்தது. நாங்கள் சென்ற நேரம் ஒரு வண்டி வந்ததால் நாங்கள் ஒதுங்கி வழி விட வேண்டியதாயிற்று. அது எங்களைத் தாண்டும் போது அதன் மூடப்பட்டிருந்த சாளரத்தின் வழியாக மிக மோசமாகக் கோணிக் குறுகி இருந்த ஒரு முகத்தைக் கண்டேன். அதன் நிலை குத்திய பார்வையும் நற நறவென்று பற்களைத் தேய்த்த விதமும் மிகவும் பயமாக இருந்தது.

“எனது சகோதரர்கள்!” என்று கதறினார் மோர்டிமர். அவரது உதடுகள் வெளிறிப் போய் விட்டன. “அவர்களை ஹெல்ஸ்டோனுக்குக் கூட்டிச் செல்கிறார்கள்.”

நாங்கள் பயத்துடன் தள்ளாடியபடியே செல்லும் அந்தக் கருப்பு வண்டியையே கண் கொட்டாமல் பார்த்துக் கொண்டிருந்தோம். அதன் பின் நாங்கள் திரும்பவும் சபிக்கப்பட்ட, வினோதமான முடிவை அவர்கள் எட்டிய, அந்த வீட்டை நோக்கிச் சென்றோம்.

அது மிகவும் பிரமாண்டமான வெளிச்சம் நிறைந்த வீடு. மாளிகை என்றே சொல்ல வேண்டும். கணிசமான அளவு தோட்டம் நிறைந்திருந்தது. அந்தக் கார்னிஷின் காற்றில் ரம்மியமான மணம் கொண்ட வசந்த காலப் பூக்கள் நிறைந்திருந்தன. இந்தத் தோட்டத்தை நோக்கி முன் பக்கம் உள்ள அறையின் சாளரம் இருந்தது. ஆக அங்கிருந்துதான் திரு. மோர்டிமர் சொன்ன தீமையே உருவான அந்த உருவம் வந்து ஒரே அடியில் அவர்களைக் கதி கலங்கச் செய்திருக்க வேண்டும். ஹோல்ம்ஸ் மெதுவாக கவனமாக பூந்தொட்டிகளைப் பார்வை இட்டார். வீட்டின் முகப்பை அடையும் வழியையும் கவனமாகப் பார்த்தபடியே வந்தார். அவரது சிந்தனையில் அப்படியே ஊறிப் போயிருந்த அவர், திடீரென பூவாளியினுள் இருந்ததைக் கண்டு துணுக்குற்றார். அதில் இருந்ததை அப்படியே கொட்டி எங்கள் கால்களையும் தோட்டத்திற்குச் செல்லும் வழியையும் ஈரமாக்கி விட்டார். வீட்டினுள் அந்த வயதான பணிப்பெண்ணைக் கண்டோம். அவருடன் ஒரு சிறு பெண்ணும் இருந்தால். இருவரும் சேர்ந்தே அந்த வீட்டின் தேவைகளைக் கவனித்துக் கொண்டிருந்தனர். ஹோல்ம்ஸ் கேட்ட அனைத்துக் கேள்விகளுக்கும் உடனுக்குடன் பதில் அளித்தாள். இரவில் ஒன்றுமே கேட்கவில்லை என்றாள். அவரது முதலாளிகள் அனைவரும் நல்ல மன நிலையுடன் இருந்ததாகவே சொன்னாள். அவர்களது அறையில் காலையில் நுழைந்த போது அவர்களைக் கண்டு அதிர்ச்சியில் மயக்கமடைந்து விட்டதாகத் தெரிவித்தாள். அதைப் பார்த்ததும் சாளரக் கதவுகளைத் திறந்து வெளிக்காற்று வரும்படிச் செய்தாள். படியில் இருந்து இறங்கி தோட்ட வேலை செய்து கொண்டிருந்த சிறுவன் ஒருவனிடம் சென்று மருத்துவரை வரவழைத்தாள். அந்தப் பெண்மணி தனது அறையில் மாடியில் இருந்திருக்கிறாள். நாம் பார்க்க வேண்டுமென்றால் போகலாம். நான்கு பேர் சேர்ந்துதான் அந்தச் சகோதரர்களை மன நலக் காப்பக வண்டியில் ஏற்ற முடிந்தது. அந்தப் பெண்ணால் ஒரு இரவு கூட அங்கு தங்க இயலவில்லை. ஆதலால் தனது குடும்பம் உள்ள செயின்ட் ஐவ்ஸ் என்ற ஊருக்குச் சென்று விட்டாள்.

நாங்கள் மேலேறி அந்த உடலைப் பார்த்தோம். செல்வி.ப்ரெண்டா ட்ரெஜென்னில் மிகவும் அழகான பெண். இப்பொழுதுதான் நடுத்தர வயதுக்குத் திரும்பி இருக்கிறாள். அவளது கருமையான கூரிய முகவெட்டு அழகாய் இருந்தது இறந்து போய் இருந்தாலும். அதன் மேல் கடைசியாய்ப் பதிந்த அந்தக் கொடூர உணர்ச்சிதான் வெளிப்படையாய்த் தெரிந்தது. அவளது படுக்கை அறையில் இருந்து முன் பக்க அறைக்கு நாங்கள் இறங்கிச் சென்றோம். அங்குதான் இந்த வினோதமான சம்பவம் நடந்தது. இரவு முழுவதும் எரிந்த தீயின் கருகிய சாம்பல் கிராதியில் இருந்தது. மேசை மீது நான்கு முற்றிலும் எரிந்த மெழுகுவர்த்திகள் இருந்தன. சீட்டுகளும் அதன் மேல் சிதறிக் கிடந்தன. நாற்காலிகள் சுவரை ஒட்டி நகர்த்தப்பட்டிருந்தன. அது தவிர அனைத்தும் அப்படி அப்படியே கிடந்தன முதல் நாள் இரவு இருந்த நிலையிலேயே. ஹோல்ம்ஸ் வெளிச்சம் பாய்ச்சியபடியே வேகமாக அந்த அறைக்குள் நடந்தார். அவர் அனைத்து நாற்காலிகளிலும் அமர்ந்து அவர்கள் இருந்த தோரணையைக் கற்பனை செய்து பார்த்தார். அவரை அங்கிருந்து பார்த்தால் தோட்டம் எவ்வளவு தெரிகிறது என்று அளந்து பார்த்தார். தரை விதானம் கணப்படுப்பு அனைத்தயும் ஆராய்ந்தார். ஆனால் ஒருமுறை கூட அவரது கண்களில் ஒளியோ உதடுகள் இறுகியோ நான் பார்க்கவில்லை. அப்படி இருந்திருந்தால் அவர் எதோ ஒன்றைக் கண்டுபிடித்து விட்டார் என்று அர்த்தம்.

“கணப்படுப்பு ஏன் ஏற்றப்பட்டது? இந்த வசந்த காலத்தில் இந்தச் சிறிய அறையில் எப்பொழுதும் அடுப்பு எரியுமா?” என்று ஒருமுறை கேட்டார்.

மோர்டிமர் அதற்கு விளக்கம் கொடுத்தார். அன்று பொழுசாயம் குளிராகவும் ஈரப்பதம் மிகுந்ததாகவும் இருந்தது. அதனாலேயே அவர் வந்த பின் அது ஏற்றப்பட்டதாகவும் தெரிவித்தார். “இப்பொழுது என்ன செய்யப் போகிறீர்கள் திரு.ஹோல்ம்ஸ்” என்று கேட்டார்.

எனது நண்பர் சிரித்துக் கொண்டே தன் கையை என் தோள்பட்டையில் வைத்தார். “வாட்ஸன், நான் என்ன நினைக்கிறேன் என்றால், உங்களுக்குப் பிடிக்காத அந்த புகையிலை நஞ்சு விஷயத்தைப் பின் தொடரலாம் என நினைக்கிறேன்.” என்றார் அவர். “நண்பர்களே, உங்களது அனுமதியுடன் நாங்கள் எங்களது குடிலுக்குத் திரும்பலாம் என்று நினைக்கிறேன். இதற்கு மேல் வேறு எதுவும் புதிதாக இங்கு கிடைக்காது என்று தெரிகிறது. நான் சேகரித்த தடயங்களை எல்லாம் அலசி ஆராய்ந்து எதாவது கிடைத்தால் உங்களுக்கும் பாதிரியாருக்கும் நிச்சயம் செய்தி அனுப்புகிறேன். அதுவரை காலை வணக்கத்தைத் தெரிவித்துக் கொள்கிறேன்.”

நாங்கள் போழ்து குடிலுக்கு வந்து மிக நீண்ட நேரம் ஆன பின்தான் ஹோல்ம்ஸ் தனது நீண்ட கனமான மவுனத்தைக் கலைத்தார். தனது நீண்ட கைப்பிடி உள்ள நாற்காலியில் சுருண்டு அமர்ந்தார். தனது புகை குழாயில் இருந்து வெளியேறிய புகையிலையின் நீல நிற புகை மூட்டத்தில் அவரது துறவு கொண்ட முகம் சரியாகத் தெரியவில்லை. அவரது கருமையான புருவங்கள் கீழிறங்கி இருந்தன. நெற்றி சுருங்கி கண்கள் வெறுமையாக எங்கோ நிலை குத்தி இருந்தன. இறுதியாகத் தனது புகைக் குழாயைக் கீழே வைத்து விட்டு எழுந்தார்.

“அதுவாக இருக்காது, வாட்சன்!” என்று சிரித்துக் கொண்டே கூறியவர், “நாம் சரிவில் சிறிது காலாற நடந்து சிக்கி முக்கிக் கல் அம்புகள் தேடுவோம். இந்த வழக்கில் தடயங்கள் கண்டுபிடிப்பதை விட அவைகளை எளிதில் கண்டுபிடித்து விடலாம். தேவையான பொருள் இல்லாமல் மூளையை இயக்குவது என்பது வெறுமையாக இயந்திரத்தை ஓட விடுவது போலாகும். அது ஓடி ஓடி உடைந்து விடும். கடல் காற்று, கதிர் ஒளி, பொறுமை எல்லாம் வந்து விடும் வாட்சன்.”

“நாம் பொறுமையாக நமது நிலைமை என்னவென்று ஆராய்வோம்.” என்று அவர் தொடர்ந்தார் நாங்கள் சரிவுப்பாதையில் நடந்து கொண்டிருக்கும் போதே. “நமக்குத் தெரிந்த கொஞ்ச நஞ்ச விஷயங்களைப் புரிந்து கொள்ள முயற்சி செய்வோம். அப்பொழுதுதான் புதிதாக வரும் செய்திகளைச் சரியாக அதனதன் இடத்தில் பொருத்திப் பார்க்க முடியும். முதலில் நாம் இருவருமே சாத்தானின் வேலை இதுவென்பதை ஒத்துக் கொள்ளப் போவதில்லை. அதனால் அந்தச் செய்தியை நமது மனதில் இருந்தே எடுத்து விட வேண்டும். நன்று. மூன்று நபர்கள் மிக மோசமாக மனிதனின் சுய விருப்புடனோ இல்லாமலோ பாதிக்கப்பட்டுள்ளார்கள். அதில் மாற்றுக்கருத்து இல்லை. சரி, இது எப்பொழுது நடந்தது? அவர் சொன்னது சரியென்று எடுத்துக் கொண்டால், திரு.மோர்டிமர் வீட்டை விட்டுக் கிளம்பியவுடன் நடந்திருக்கிறது. அது மிகவும் முக்கியமான தடயம். அனுமானம் என்னவென்றால் அவர் கிளம்பிய சில மணித்துளிகளிலேயே நடந்திருக்கிறது. சீட்டுகள் மேசையிலேயே சிதறிக் கிடந்திருக்கின்றன. அவர்கள் உறங்க வேண்டிய நேரமும் கடந்து விட்டிருக்கிறது. இருந்தாலும் அவர்கள் தங்கள் இருக்கைகளை நகர்த்தவில்லை. அதனால் மீண்டும் சொல்கிறேன், அவர் கிளம்பிய சற்று நேரத்திற்கெல்லாம் அது நடந்திருக்கிறது. நிச்சயம் நேற்றிரவு 11 மணிக்குள்தான் நடந்திருக்க வேண்டும்.

“ஆக நமது அடுத்த கட்ட நடவடிக்கை முடிந்தவரை திரு.மோர்டிமர் ட்ரெஜென்னில் அந்த வீட்டை விட்டு வெளியேறிய பின்னர் அவர்களின் நடவடிக்கைகள் என்னெவென்று கவனிப்பதுதான். அதில் சற்றும் சிரமம் இருக்காது என்றே தோன்றுகிறது. ஏனெனில் அது சந்தேகத்திற்கு இடமே இல்லாமல் இருக்கிறது. என்னுடைய ஆய்வு முறைகள் பற்றி உங்களுக்குத் தெரியும்தானே. அந்தச் சின்னஞ் சிறு பூவாளி நீரை வைத்து அவரது காலடித்தடங்களைக் கண்டு பிடித்தேன். வேறு வடிவில் அதைக் கண்டு பிடித்திருப்பது மிகவும் சிரமம். ஈரமான மண் என்பதால் தெளிவாகத் தெரிந்து விட்டது. நேற்றிரவும் ஈரமாகத்தான் இருந்தது நீங்கள் நினைவு படுத்திப் பார்த்தால் விளங்கும். அதனால் அது சிரமமாக இல்லை-அவரது காலடித் தடங்கள் கண்டுபிடிக்கப்பட்டவுடன்-மற்ற காலடித் தடங்களுக்கு மத்தியில் அவரது நடமாட்டம் பற்றித் தெரிய. அவர் வேகமாக தேவாலயத்தை நோக்கி நடந்திருக்கிறார்.

“அப்படி இருக்கையில் திரு.மோர்டிமர் அந்த இடத்தில் இருந்து அகன்று விட்டார். இருந்தும் வேறு எதோ வெளியாள் வந்து சீட்டு விளையாடும் நபர்களைக் கதி கலங்க வைத்திருக்கிறார். நாம் அவரை எப்படிக் கண்டுபிடிப்பது. மேலும் அப்படி ஒரு பயங்கரத்தை எப்படி நிகழ்த்தி இருக்க முடியும். திருமதி.போர்ட்டரையும் நாம் நீக்கி விடலாம். அவர்களால் எந்தவிதத் தொந்தரவும் நடந்திருக்க வாய்ப்பில்லை. யாரோ ஒருவன் தோட்டத்தினுள் நுழைந்து சாளரத்தின் வழியாக எட்டிப் பார்ப்பவரைக் கதி கலங்க வைக்கும் அளவு பயங்கரத்தை நிகழ்த்தத் தேவையான தடயங்கள் எதாவது இருக்கிறதா? இதற்கும் மோர்டிமர் ட்ரெஜென்னில் சொன்னதில் இருந்தே ஒரு யோசனை தோன்றுகிறது. அவரது சகோதரர் சொன்ன தோட்டத்தில் நிகழ்ந்த ஒரு அசைவு. அது நிச்சயம் முக்கியமானது. ஏனெனில் அன்று இரவு கார்மேகமாக மழை பெய்து இருட்டாக இருந்தது. அவர்களைக் கலங்கடிக்கும் எண்ணம் கொண்ட யாரும் தனது தலையை அந்தக் கண்ணாடியில் வைக்காமல் உள்ளிருப்பவர்கள் பார்வையில் பட முடியாது. அந்தச் சாளரத்தின் வெளியில் மூன்றடிக்குப் பூச்செடிகள் வளர்ந்துள்ளன. அங்குக் காலடித்தடங்கள் இருந்த சுவடே இல்லை. அப்படி இருக்க ஒரு வெளியாள் வந்து அப்படிப்பட்ட பயங்கரத்தை எப்படி நிகழ்த்தி இருக்க முடியும். மேலும் இவ்வளவு வினோதமான விரிவான முயற்சி எடுக்கப்பட்டதற்குரிய காரணமும் என்னவென்று நாம் இன்னும் கண்டுபிடிக்கவில்லை. இதில் உள்ள கஷ்டங்கள் உங்களுக்குப் புரிகிறது என்று நினைக்கிறேன், வாட்சன்”

“மிகத் தெளிவாகவே விளங்குகிறது” என்று நம்பிக்கையோடு கூறினேன்.

“இருந்தாலும், இன்னும் கொஞ்சம் விஷயங்களை வைத்து இது முடியாத விஷயம் அல்ல என்று நான் நிரூபிக்கிறேன்” என்றார் ஹோல்ம்ஸ். “உங்களது எண்ணற்ற ஆவணங்களில் இதைப்போலப் புரியாத வழக்குகள் சில இருக்கின்றன என்று உங்களுக்குத் தெரியும் என்று நினைக்கிறேன். இந்த வேளையில், இன்னும் புது விதமான செய்திகள் வரும்வரை இந்த வழக்கைச் சிறிது ஒத்திப்போடுவோம். மீதி இருக்கும் காலைப் பொழுதை பின் கற்கால மனிதர்களைக் கண்டுபிடிப்பதில் செலவிடுவோம்”

“எனது நண்பனின் எதிலும் விலகி நிற்கும் தன்மை பற்றி நான் ஏற்கெனவே கூறி இருக்கிறேன் என்று நினைக்கிறேன். மிகவும் தண்மையாக வேறு எந்தவிதக் கொடூரமான மர்மங்களும் அவரது விடைக்காகக் காத்திருக்கவில்லை என்பது போல அன்று கார்ன்வாலில் வசந்த கால காலைப் பொழுதில் இரண்டு மணி நேரமாகக் கோடரிகள் அம்பு முனைகள் உடைந்த துகள்கள் பற்றிச் சொற்பொழிவு ஆற்றிக் கொண்டிருந்த அந்த நேரத்தில்தான் நான் அதைப் பற்றி வியந்து பார்த்துக் கொண்டிருந்தேன். நாங்கள் மத்தியானம் வெகு நேரம் கழித்து எங்கள் குடிலுக்கு வந்த பின்தான் தெரிந்தது ஒரு பார்வையாளர் எங்களுக்காகக் காத்திருப்பது. சற்று நேரத்திற்கெல்லாம் மீண்டும் அவர் எங்களை அந்த வழக்கிற்குள் கொண்டு வந்து விட்டு விட்டார். இருவருக்கும் அவர் யாரென்று அறிந்து கொள்ளத் தேவையே ஏற்படவில்லை. பருத்த உடம்பு கரடுமுரடான தையலிடப்பட்ட முகம் கோபமான கண்கள் பருந்து போன்ற நாசிகள் நரைத்த முடி கிட்டத்தட்ட எங்கள் குடிலின் கூரையை உரசி நின்றது. அந்தத் தாடி ஓரத்தில் பொன்னிறமாக இருந்தது உதட்டுக்கருகில் வெண்ணிறமாக இருந்தது, எப்பொழுதும் புகைக் குழாயைப் பயன்படுத்தி இழுக்கும் சுருட்டுகளின் ஆசியால். இவை அனைத்தும் ஆப்பிரிக்காவினைப் போலவே லண்டனிலும் நன்கு அறிமுகமாகி இருந்தன. இவை அனைத்தையும் பேராற்றல் வாய்ந்த சிங்கங்களை வேட்டையாடும் மற்றும் ஆய்வுப்பயணங்கள் மேற்கொள்ளும் திரு.லியோன் ஸ்டெர்ன்டெல் அவர்களைத் தவிர வேறு யாருக்கு இருக்க முடியும்.

அவர் இந்த மாவட்டத்தில் இருக்கிறார் என்ற தகவல் எங்களுக்குத் தெரியும். ஓரிரு முறை அவரது நெடிய உருவத்தை இந்தப் பொட்டல் வெளிகளில் கண்டும் இருக்கிறோம். அவர் எங்களை நோக்கி வரவில்லை. நாங்களும் முயற்சி செய்யவில்லை. ஏனெனில் அவர் ஒரு தனிமை விரும்பி. பயண இடைவெளிகளில் மிகவும் தனிமையாக இருக்கும் பியூச்சம்ப் எரியன்ஸ் என்னும் காட்டுப் பகுதியில் எங்கோ ஒரு மூலையில் ஒளிந்திருக்கும் அவரது சிறிய மாளிகையில் தங்குவது வழக்கம். இங்கும் புத்தகங்கள் நிலப்படங்களுக்கு நடுவில் ஒரு தனிமையான வாழ்க்கைதான் வாழ்ந்து கொண்டிருக்கிறார். அவரது எளிமையான தேவைகளை மட்டும் பூர்த்தி செய்து கொண்டும் தனது அண்டை வீட்டுக்காரர்களைப் பற்றிச் சிறிதும் கண்டு கொள்ளாமல். அதனால் எனக்கு மிகவும் ஆச்சர்யம் அவர் வந்து தனது ஆர்வமான குரலில் இந்த வழக்கில் எதாவது முன்னேற்றம் இருக்கிறதா என்று விசாரித்தது. “இந்த ஊர்க் காவல்துறை சுத்த மோசம்” என்றார் அவர். “இருப்பினும் உங்களது நீண்ட அனுபவம் நிச்சயம் எதாவது ஒரு நம்பத்தகும் விளக்கம் கொடுக்கலாம். சொல்லப் போனால் என் அம்மா வழியில் அவர்கள் எனக்கும் உறவு முறைதான். அதனால் அவர்களது இந்த மோசமான விபத்து எனக்கும் மிக அதிர்ச்சியாக இருக்கிறது. எனது ஆப்பிரிக்கப் பயணத்தில் கிட்டத்தட்ட பிளைமவுத் வரை சென்று விட்டேன். எனக்கும் இன்று அதிகாலைதான் செய்தியே கிடைத்தது. அதனால் உடனே உங்களுக்கு உதவியாய் இருக்கும் என்று விசாரணையில் பங்கேற்க வந்தேன்.

ஹோல்ம்ஸ் தனது புருவங்களை உயர்த்தினார்.

“உங்கள் பயணத்தைப் பாதி வழியில் விட்டு விட்டீர்களா?”

“நான் அடுத்த படகில் சென்று விடுவேன்”

“அருமை. அதுதான் உண்மையான நட்பு”

“அவர்கள் எனது உறவினர்கள் என்பதை நான் உங்களுக்கு நினைவு படுத்துகிறேன்”

“நிச்சயமாக. உங்கள் தாய் வழியில். உங்களது பயணச்சுமைகள் எல்லாம் கப்பலில் இருக்கிறதா?”

“கொஞ்சம் மட்டுமே. மீதி அனைத்தும் நான் தங்கிய வாடகை அறையில் இருக்கிறது”

“அப்படியா. இந்தச் செய்தி நிச்சயம் பிளைமவுத் காலைச் செய்தியில் வந்திருக்க வாய்ப்பில்லை.”

“இல்லை. எனக்குத் தந்தி வந்திருந்தது”

“யாரிடம் இருந்து என்று நான் அறிந்து கொள்ளலாமா?”

அவரது மெலிந்த முகத்தில் சற்று நிழல் பரவியது.

“நீங்கள் மிகவும் தோண்டுகிறீர்கள், திரு.ஹோல்ம்ஸ்”

“அது என்னுடைய தொழில்”

கோபத்தில் இருந்து கொஞ்சம் பிரயாசைப்பட்டு பழைய நிலைக்கு வந்தார் திரு.ஸ்டெர்ன்டெல்.

“அதைச் சொல்ல எனக்கு ஒன்றும் சிரமமில்லை.” என்றார் அவர். “திரு.ரௌந்தை பாதிரியார்தான் எனக்குத் தந்தி அனுப்பி வரவழைத்தார்.”

“நன்றி” என்றார் ஹோல்ம்ஸ். “உங்களது முதல் கேள்விக்கு என்னால் ஒரு பதில் சொல்ல முடியும். எனக்கும் ஒன்றும் இதுவரை விளங்கவில்லை. ஆனாலும் எனக்கு முழுவதும் நம்பிக்கை இருக்கிறது எப்படியாவது இந்த மர்மத்தைக் கண்டு பிடித்து விடுவேன் என்று. இப்போதைக்கு இதற்கு மேல் சொல்ல முடியாது”

“உங்களுக்கு ஆட்சேபனை இல்லை என்றால் நீங்கள் யாரைச் சந்தேகப் படுகிறீர்கள் என்று சொல்ல முடியுமா?”

“இல்லை. இன்னும் அவ்வளவு தூரம் வரவில்லை”

“அப்படி என்றால் எனது நேரத்தை வீணடித்து விட்டேன் என்றே நினைக்கிறேன். இதற்கு மேல் என் பயணத்தை நான் ஒத்திப் போட இயலாது. புகழ் பெற்ற அந்த மனிதர் கொஞ்சமும் சுரத்தே இல்லாமல் அந்த வீட்டை விட்டுச் சென்றார். ஒரு ஐந்து நிமிடம் கழித்து அவர் பின்னாலேயே ஹோல்ம்ஸ் தொடர்ந்து சென்றார். அவரை நான் மீண்டும் சாயந்திரம்தான் பார்த்தேன். அவர் மெதுவாகக் களைத்துப் போன உடலோடு மீண்டும் வந்தார். அதில் இருந்து அவர் தனது விசாரணையில் எந்தவித முன்னேற்றமும் காணவில்லை என்பது புரிந்தது. அவர் தனக்கு வந்த ஒரு தந்தியை உற்று நோக்கிப் பார்த்து விட்டுத் தூர எறிந்து விட்டார்.

“பிளைமவுத் விடுதியில் இருந்து, வாட்சன்.” என்றார் அவர். “பாதிரியாரிடம் இருந்து எந்த விடுதி என்று அறிந்து கொண்டேன். அதன் பின் தந்தி அனுப்பி திரு.லியோன் சொன்னது எல்லாம் சரிதானா என்று சரி பார்த்தேன். அவர் அங்குதான் தங்கி இருந்தார் என்றும் சிறிது உடமைகளை ஆப்பிரிக்காவிற்கு அனுப்பி உள்ளார் என்றும் தெரிய வந்தது. அந்த இடைப்பட்ட வேளையில் இங்கு வந்து விசாரணையில் பங்கேற்க வந்தார் என்பதும் உண்மைதான். இதில் இருந்து என்ன தெரிகிறது, வாட்சன்?”

“அவருக்கு இந்த வழக்கில் மிகவும் ஆர்வம் இருக்கிறது”

“மிகவும் ஆர்வம்-ஆம். நாம் இதுவரை அறியாத ஒரு நூல் இங்கு இருக்கிறது. அதைப் பிடித்துச் சென்றால் அந்த முடிச்சு இருக்கும் இடம் தெரிந்து விடும். மகிழ்ச்சி கொள்ளுங்கள் வாட்சன், நமக்கு இன்னும் தேவையான அனைத்தும் கிடைக்கவில்லை என்றாலும் அவை வந்தவுடன் நமது துன்பமெல்லாம் துலங்கும்”

ஹோல்ம்ஸின் வார்த்தைகள் எவ்வளவு தூரம் பலிக்கும் என்று தெரியவில்லை.

முற்றிலும் புதிய கோணத்தைக் கொடுத்திருக்கும் இந்த விசாரணையில் இப்பொழுது வந்து புதுத் திருப்பம் இன்னும் எவ்வளவு பயங்கரமானதாகவும் விநோதமாகவும் இருக்கும் என்று புரியவில்லை. நான் எனது சாளரத்தின் அருகில் நின்று காலையில் முடி மழித்துக் கொண்டிருந்தேன். அப்பொழுது குளம்புச் சத்தம் கேட்டது. எட்டிப் பார்த்தால் நாய்களால் இழுக்கப்படும் ஒரு வண்டி தெருவில் பாய்ந்து வந்து கொண்டிருந்தது. எங்களது வீட்டின் அருகில் நின்றது. எங்களது நண்பர் பாதிரியார் அதில் இருந்து இறங்கினார். எங்களது தோட்டப் பாதையில் வேகமாக நடந்து வந்தார். ஹோல்ம்ஸ் ஏற்கெனவே ஆடை மாற்றித் தயாராகவே இருந்ததால் உடனே நாங்கள் அவரைச் சந்திக்கத் தயாராகி விட்டோம்.

எங்களது பார்வையாளர் மிகவும் பரிதவிப்பில் இருந்தார். வார்த்தைகள் நிலை தடுமாறின. ஒரு வழியாகப் பெருமூச்சுகளுக்கு நடுவில் ஒரு பயங்கரமான கதை சொன்னார்.

“நாம் சாத்தானால் பீடிக்கப்பட்டிருக்கிறோம், திரு.ஹோல்ம்ஸ்! எனது திருச்சபை முழுவதும் சாத்தானின் வசம் சென்று விட்டது!” என்று கதறி அழுதார். “சாத்தானே நேரில் வந்து இங்கு இறங்கி விட்டது. நாம் அதன் கைகளில் ஒப்படைக்கப்பட்டு விட்டோம்!” அவர் இங்கும் அங்கும் நடனமாடிக் கொண்டிருந்தார் அவர் இருந்த உணர்ச்சிகளின் வேகத்தில். அவரது வெளிறிய முகமும் பேயறைந்த கண்களும் இல்லை என்றால் அவரைப் பார்த்து நன்றாக வாய் விட்டுச் சிரிக்கலாம். இறுதியில் அந்தக் கொடூரமான செய்தியைக் கொட்டினார்.

“திரு.மோர்டிமர் ட்ரெஜென்னில் நேற்றிரவு இறந்து விட்டார். அவரது குடும்ப உறுப்பினர்கள் போன்ற அதே சூழ்நிலையில்”

ஹோல்ம்ஸ் சட்டென்று எழுந்தார் தனது ஆற்றலெல்லாம் ஒருங்கு திரட்டி.

“உங்களது வண்டியில் எங்கள் இருவருக்கும் இடம் இருக்குமா?”

“நிச்சயமாக”

“வாட்சன், நாம் நமது காலை உணவைப் பிறகு பார்த்துக் கொள்வோம். திரு.ரௌந்தை நாம் உடனடியாகக் கிளம்புவோம். அங்கு இருக்கும் பொருட்கள் கலைந்து விடுவதற்குள் வேகமாகச் செல்வோம்.”

பாதிரியாரின் இல்லத்தில் வீட்டு உரிமையாளர் இரண்டு அறைகளை ஆக்கிரமித்திருந்தார். அவைகள் இரண்டும் ஒவ்வொரு கோணத்தில் ஒன்றன் மீது ஒன்றாக இருந்தன. கீழே ஒரு பெரிய வரவேற்பறை இருந்தது. மேலே அவரது படுக்கையறை. அவைகள் மரப்பந்தாட்டம் ஆடும் புல் வெளியை நோக்கி இருந்தது. அது அந்த அறைகளின் சாளரம் வரை நீண்டிருந்தது. மருத்துவரோ காவல்துறையோ வருவதற்கு முன் நாங்கள் அங்கே சென்று விட்டோம். அதனால் எதுவும் கலையாமல் அப்படியே இருந்தது. பனி மூட்டமாய் இருந்த அந்த மார்ச் மாத காலையில் அங்கு என்ன இருந்தது என்று நான் அப்படியே விவரிக்கிறேன். என்றுமே அழிக்க முடியாத சுவடுகளை என் மனதில் பதித்து விட்டது அன்றைய நிகழ்வு.

அந்த அறையின் சூழல் இறுக்கமாகவும் கொடூரமாகவும் இருந்தது. அந்த அறையில் நுழைந்த பணியாள் சாளரத்தின் அருகில் சென்று வாந்தி எடுத்து விட்டார். இல்லையென்றால் இன்னும் தாங்க முடியாததாகவே இருந்திருக்கும். நடுவில் இருந்த மேசை மீது ஒரு விளக்கு எரிந்து புகை கக்கிக் கொண்டிருந்ததால் இருக்கலாம். அதனருகில்தான் அந்த இறந்த மனிதன் இருந்தான். அவனது நாற்காலியில் சாய்ந்து அமர்ந்து, அவனது மெல்லிய குறுந்தாடி நீட்டியபடி இருந்தது, அவனது கண்ணாடி நெற்றியின் மீது அழுந்தி இருந்தது, அவனது ஒல்லியான கருப்பான முகம் சாளரத்தை நோக்கி இருந்தது, அவனது இறந்த சகோதரியின் முகத்தைப் போலவே அதீத அச்சத்தின் காரணமாக் கோணலாய் இருந்தது. அவனது கரங்கள் மிகவும் பரிதவித்திருந்தன, விரல்கள் பிணைந்து அச்சத்தினால் வலிப்பு வந்தது போன்று இருந்தன. அவன் முழுவதும் ஆடை அணிந்திருந்தான். இருந்தாலும் அவசரமாக ஆடை அணிந்தது போன்ற அறிகுறிகள் தென்பட்டன. அவன் படுக்கை அறையில் இருந்து எழுந்து வந்த பின் அதிகாலையில்தான் இது நடந்தது என்று ஏற்கெனவே அறிந்திருந்தோம்.

வெளிப்பார்வைக்குச் சோம்பேறி போல் இருந்தாலும் அந்த மரணம் நிகழ்ந்த வீட்டை அடைந்தவுடன் அவர் காட்டிய செயலில் ஒருவர் எரிமலைக் குழம்பு போன்ற அவரது சூடான ஆற்றலை அறிந்து கொள்ளலாம். ஒரே நொடியில் இறுக்கமாகவும் தயாராகவும் ஆகி விட்டார். அவரது கண்கள் பளிச்சிட்டன, முகம் தெம்பாகி விட்டது, கைகள் பரபரப்பாகி விட்டன. அவர் புல்வெளியில் இருந்தார், சாளரத்தின் வழியே எட்டிப் பார்த்தார், அறையின் முழுவதும் சுற்றினார், மேலேறிப் படுக்கை அறைக்குச் சென்றார் ஒரு ஓநாய் பாதுகாப்பு தேடி அலைவது போல். படுக்கை அறையில் சட்டென்று சுற்றிப் பார்த்து விட்டு ஓரிடத்தில் நின்று படீரென்று சாளரக் கதவைத் திறந்தார். அது எதோ ஒருவித மகிழ்ச்சிக்கான புதுமையான காரணத்தைக் கொடுத்திருக்கும் போல் தோன்றியது. அவர் அதன் மேல் சாய்ந்து எட்டிப் பார்த்து மகிழ்ச்சியையும் ஆர்வத்தையும் அதீதமாக வெளிப்படுத்தினார். பின் வேகமாக மாடிப்படியில் இருந்து கீழிறங்கினார். திறந்திருந்த கதவின் வழியே வேகமாக வெளியேறினார். புல் வெளியில் தன் முகம் படும்படிக் கீழே விழுந்தார். பட்டென்று எழுந்து மீண்டும் உள்ளே வந்தார். ஒரு வேட்டைக்காரன் தனது வேட்டையைத் துரத்தும் அதே ஆற்றலுடன் அனைத்தையும் செய்தார். மிகவும் சாதாரணமான அந்த விளக்கை மிகவும் நுணுக்கமாக ஆராய்ச்சி செய்தார். சில வகையான அளவுகளையும் அதன் கலத்தின் மேல் எடுத்தார். அந்த விளக்கின் மேல் இருந்த மாக்கல் மூடியைத் தனது பூதக்கண்ணாடி மூலம் ஆராய்ந்தார். அதன் மேல் ஒட்டி இருந்த சாம்பலைச் சுரண்டி எடுத்து ஒரு உரையில் போட்டுத் தன் சிறிய புத்தகத்தில் வைத்துக் கொண்டார். மருத்துவரும் காவல் துறையும் வந்த நேரத்தில் பாதிரியாரை அழைத்துக் கொண்டு புல்வெளிக்குச் சென்று விட்டோம்.

“எனது புலன் விசாரணை முழுவதும் பாலைவனமாக மாறிவிடவில்லை என்று மகிழ்ச்சியோடு சொல்லிக் கொள்கிறேன்.” என்று அறிவித்தார். “ஆனால் காவல்துறையிடம் இதைப் பகிர்ந்து கொள்ள முடியாது. ஆனால் உங்களைப் பணிவன்போடு கேட்டுக் கொள்கிறேன் திரு.ரௌந்தை அவர்களே, அந்த ஆய்வாளருக்கு என் வாழ்த்துக்களைக் கூறி விட்டுப் படுக்கை அறைச் சாளரத்தையும் கீழே வரவேற்பறையில் விளக்கினையும் காட்டி விடுங்கள். ஒவ்வொன்றும் தனித்தனியான தடயமே. அதில் இருந்து ஒருவாறு உண்மை புலப்படும். காவல்துறைக்கு வேறு சந்தேகம் ஏதும் இருந்தால் என்னை வந்து என் குடிலுக்கு வந்து சந்திக்கச் சொல்லுங்கள். இப்பொழுது வாட்சன், நாம் வேறு வேலை தேடித்தான் செல்ல வேண்டும்.”

சம்பந்தமில்லாத ஒருவர் மூக்கை நுழைத்ததால் வெறுப்பாகி இருக்கலாம் இல்லையேல் தாங்களாகவே எதாவது ஒரு தடயம் கண்டு பிடித்திருக்கலாம். என்னவென்று தெரியவில்லை, காவல் துறை இரண்டு நாட்களாக எங்கள் வீட்டுப் பக்கம் எட்டிப்பார்க்கவில்லை. அந்த இடைப்பட்ட நேரத்தைக் கொஞ்சம் புகைப் பிடிப்பதிலும் கொஞ்சம் கனவு காண்பதிலும் செலவிட்டார். ஆனால் பெரும்பாலும் தனியே ஊர் சுற்றி வருவதிலேயே செலவிட்டார். வெகு நேரம் கழித்தே திரும்ப வருவார். எங்கே போனேன் என்று என்னிடம் சொல்வதே இல்லை. ஒரு பரிசோதனை அவரது விசாரணை எந்தப் பக்கம் செல்கிறது என்பதைத் தெளிவு படுத்தியது. மோர்டிமர் ட்ரெஜென்னில் வீட்டில் மரணம் நிகழ்ந்த அன்று எரிந்த விளக்கு போலவே ஒன்று வாங்கி வந்தார். அதில் எரிக்கப்பட்ட அதே எண்ணையை இதில் ஊற்றினார். அது முழுவதும் எரிந்து முடிவதற்கு எவ்வளவு நேரம் ஆகிறது என்று கவனமாகக் கணக்கிட்டார்.

அவர் செய்த மற்றோரு சோதனை முகம் சுழிக்கும்படி இருந்தது. அதை என் வாழ்நாளில் மறக்கவும் முடியாது.

“உங்களுக்கு ஒன்று ஞாபகம் இருக்கும் என்று நினைக்கிறேன்” என்று ஒரு நாள் ஆரம்பித்தார். நமக்குக் கிடைத்த பல தகவல்களுக்கு நடுவில் ஒரே ஒரு ஒற்றுமை தென்படுகிறது. இது அந்த அறைகளின் சூழலைப் பற்றியது. ஒவ்வொரு இடத்திலும் அந்த அறையில் முதலில் நுழைந்தவர்களுக்கு ஏற்பட்ட அனுபவம் பற்றியது. மோர்டிமர் தனது சகோதரர்களின் வீட்டிற்குக் கடைசியாகச் சென்றதை விவரிக்கும் போது மருத்துவர் அந்த அறையில் நுழைந்தவுடன் நாற்காலியில் சாய்ந்து உட்கார்ந்து விட்டார் என்று சொன்னார். மறந்து விட்டீர்களா? நன்று. நான் அதற்குப் பதில் சொல்கிறேன். அப்படிதான் நடந்தது என்று. திருமதி.போர்ட்டரும் அந்த அறையில் நுழைந்தவுடன் மயக்கமாகி விட்டார் என்றும் பின்னரே சாளரக்கதவைத் திறந்தார் என்றும் சொன்னது உங்களுக்கு ஞாபகம் இருக்கும் என்று நினைக்கிறேன். இரண்டாவது வழக்கில், மோர்டிமெரின் வீட்டுக்கு நாம் சென்றபோது அவரது அறை எந்தளவு மூச்சடைத்தது என்று உங்களுக்கே தெரியும் பணியாள் சாளரக்கதவைத் திறந்து விட்ட போதிலும். அந்தப் பணிப்பெண்ணும் மிகவும் பாதிப்படைந்தால் தனது படுக்கையறைக்குச் சென்று படுத்து விட்டாள் என்பது விசாரித்த பின் தெரிந்தது. இந்த விஷயங்களை எல்லாம் பார்க்கும் போது உங்களுக்கே விளங்கும், வாட்சன். ஒவ்வொரு வழக்கிலும் இந்த நச்சுத்தன்மை வாய்ந்த சூழ்நிலைதான் முக்கியமான தடயம். மேலும் ஒவ்வொரு அறையிலும் தீ எரிந்து கொண்டிருந்ததும் அடுத்த தடயம். முதல் அறையில் கணப்படுப்பு இரண்டாவதில் விளக்கு. கணப்படுப்பு தேவையாய் இருந்தது. எவ்வளவு எண்ணெய் தேவைப்பட்டது என்று ஆராய்ந்து பார்த்தால் தெரியும் விளக்கு ஏற்றப்பட்டு வெளிச்சம் வந்த பிறகும் எரிந்து கொண்டிருந்தது. ஏன்? நிச்சயமாக இந்த மூன்று விஷயங்களுக்கும் நெருங்கிய தொடர்பு இருக்கிறது. எரித்தல், மூச்சடைக்கும் சூழல் இறுதியில் பைத்தியமான அல்லது இறந்து போன மனிதர்கள். அது புரிகிறதல்லவா?”

“ஆம் அப்படித்தான் தோன்றுகிறது”

“குறைந்தபட்சம் இது சாத்தியமான அனுமானம்தான் என்பதை நாம் ஒத்துக் கொள்ளலாம். ஆக ஒவ்வொரு வழக்கிலும் எதோ ஒன்று எரிக்கப்பட்டிருக்கிறது என்பதாக எடுத்துக் கொள்வோம். அதுதான் வினோதமான நச்சுத்தன்மை வாய்ந்த சூழலை உருவாக்கி இருக்க வேண்டும். மிக்க சரி. முதலில் நடந்த சம்பவத்தில்-திரு.ட்ரெஜென்னில் குடும்பத்தில்-இந்தப் பொருள் கணப்படுப்பில் வைக்கப்பட்டது. அதன் சாளரம் பூட்டப்பட்டிருந்தது. இருந்தாலும் எரியும் நெருப்பு அதன் ஆவியைப் புகை போக்கி வழியாகக் கடத்தி இருக்கும் இயல்பாக. அதனால் அந்த நச்சின் பாதிப்பு இரண்டாவது சம்பவத்தை விடக் கம்மியாகவே இருந்திருக்கும். இரண்டாவது சம்பவத்தில் அந்த நச்சு வெளியேறுவதற்கு வழியே இல்லை. முடிவுகளும் அதையே காட்டுகின்றன. முதல் சம்பவத்தில் மிகவும் உணர்ச்சி வயப்படும் பெண்தான் இறந்தது. மற்ற இருவரும் தற்காலிகமான அல்லது நிரந்தரமான பைத்தியமாகி விட்டார்கள். அதுதான் அந்த நச்சின் முதல் பாதிப்பு. எரியூட்டப்பட்ட ஒரு நஞ்சின் மூலமாகவே இந்தச் சம்பவங்கள் நடத்தப்பட்டிருக்கின்றன என்ற கருத்தியலை இந்தத் தடயங்கள் நிரூபிக்கின்றன.”

“இதே எண்ணங்கள் என் மனதில் ஓடிக் கொண்டிருந்ததால் திரு.மோர்டிமரின் அறையில் இயல்பாகவே நான் அந்தப் பொருள் எங்காவது படிந்திருக்கிறதா என்று ஆராய்ந்து பார்த்தேன். மாக்கல் மூடி அல்லது விளக்கின் புகை தடுக்கும் இடம் அதுதான் வெளிப்படையான இயல்பாகவே பார்க்க வேண்டிய இடம். அங்கே நிச்சயமாக நிறையச் சாம்பல் படிமங்கள் இருந்தன. அதன் ஓரத்தில் துளியூண்டு பழுப்பு நிற துகள்களும் எரியாமல் இருந்தன. அதில் பாதியை நான் எடுத்துக் கொண்டேன். அதை நீங்களே பார்த்தீர்கள். அதை ஒரு உரையில் வைத்தேன்.”

“ஏன் பாதி?”

“எனதருமை வாட்சன், அதிகாரப் பூர்வமான விசாரணைக்குக் குறுக்கே நிற்பது என் வழக்கமல்ல. நான் கண்டுபிடித்த அனைத்துத் தடயங்களையும் நான் அவர்களுக்காக விட்டு விட்டு வந்தேன். மாக்கல்லின் மீது அந்த நஞ்சு இருந்தது. அதை அவர்கள் நினைத்தால் பார்த்திருக்கலாம். இப்பொழுது, வாட்சன், நாம் நமது விளக்கை எரிப்போம். ஆனால் சாளரங்களைத் திறந்து விடுவோம். இந்த சமுதாயத்தின் மதிப்பு மிகு மனிதர் இருவர் விரைவாக இறந்து போவதைத் தடுக்க. நீங்கள் அந்தத் திறந்திருக்கும் சாளரக்கதவு அருகே சாய்வு நாற்காலியில் அமர்ந்து கொள்ளுங்கள் உங்களுக்கும் இந்தச் சம்பவத்துக்கும் எதுவும் தொடர்பில்லை என நினைத்தால். ஓ நீங்கள் பார்க்க வேண்டும் அல்லவா. உங்களைப் பற்றித் தெரியும் என்று நான் எண்ணி விட்டேன். இந்த நாற்காலியை நான் உங்களுக்கு எதிராக வைக்கிறேன். அதனால் நாம் இருவரும் அந்த நச்சிற்கு ஒரே தூரத்தில் எதிர் எதிராக இருக்கலாம். வாசற்கதவையும் நாம் திறந்தே வைத்திருக்கலாம். ஒருவர் மற்றோருவரைக் கவனிக்க வசதியாய் இருக்கும். ஆபத்தான சூழ்நிலையாய் இருந்தால் உடனே இந்தச் சோதனையை நிறுத்தவும் வசதியாய் இருக்கும். உங்களுக்கு விளங்கியதா? சரி, நான் அங்கிருந்து சேகரித்த பொடியை எடுக்கிறேன் உரையில் இருந்து. அதை அந்த விளக்கின் மேல் வைக்கிறேன். இப்பொழுது நாம் அமர்ந்து என்ன நடக்கிறது என்று கவனிப்போம்”

அவைகள் வெளிக்கிளம்ப வெகு நேரம் ஆகவில்லை. நான் நாற்காலியில் உட்காரக் கூட இல்லை. அதற்கு முன்பாகவே அடர்ந்த கஸ்தூரி மணம் மெலிதாக குமட்டலோடு எழுந்தது. அதன் முதல் அடியிலேயே எனது மூளை மற்றும் எண்ணங்கள் எனது கட்டுப்பாட்டை இழந்தன. ஒரு கருமையான அடர்ந்த புகை என் கண்களுக்கு முன் சுற்றியது. இந்த மேகத்தில்தான் எனது மிரண்டு போன உணர்ச்சிகளின் மேல், இந்த பிரபஞ்சத்தின் கற்பனைக்கே எட்டாத அனைத்துச் சீர்கேடுகளையும் ஒதுங்கி இருக்கும் தெளிவற்ற அனைத்துக் கொடூரங்களையும் பூதாகரமாக இருக்கும் அனைத்தையும் கொண்டு வந்து கொட்டி விடும் என்று என் மனம் சொல்லியது. தெளிவற்ற உருவங்கள் அந்தக் கரும்புகையில் சுழன்று நீந்திக் கொண்டே இருந்தன. ஒவ்வொன்றும் வரப்போகும் அபாயங்களை அறிவித்துக் கொண்டிருந்தன. சொல்ல முடியாத யாரோ ஒருவரின் வருகையை அறிவித்தன. அதன் நிழல் பட்டவுடனேயே எனது உயிரைக் குடிக்கும் வல்லமை படைத்திருந்தது. நடு நடுங்க வைக்கும் ஒரு பேரச்சம் என்னை ஆட்டிப்படைத்தது. எனது முடிகள் எல்லாம் நட்டமாக நிற்பதை என்னால் உணர முடிந்தது. எனது கண்கள் வெளியேறி நின்றன. எனது வாய் தானாகத் திறந்தது. எனது நாக்கு தோல் போல் இறுகியது. மூளைக்குள் நடக்கும் போரினால் எதாவது ஒன்று நிச்சயம் உடைந்து விடும் போல் தோன்றியது. நான் கத்த வேண்டும் என்று நினைத்தேன். ஆனால் எனது குரல் ஒரு தவளையின் கரகரப்பைப் போல் ஆகி விட்டது. எட்ட நின்று நான் கேட்பது போல் கேட்டது. அதே நேரத்தில் அந்தக் கார்மேகத்தின் விரக்தியில் இருந்து தப்பிக்க வேண்டி அதற்குள் நுழைந்து ஹோல்ம்ஸின் முகத்தைப் பார்த்தேன். அது வெள்ளையாய் உறுதியாய் மிரட்சியோடு இருந்தது நான் இறந்து போன அந்த மனிதர்களின் முகங்களில் கண்டது போலவே. அந்த ஒரு பார்வை எனக்கு ஒரு நொடி விழிப்புணர்வு மற்றும் வலிமை கொடுத்தது. நான் எனது நாற்காலியில் இருந்து மின்னலென எழுந்தேன். ஹோல்ம்ஸைக் கைத்தாங்கலாகப் பிடித்துக் கொண்டு இருவரும் சேர்ந்து வாயிற்கதவை நோக்கித் தள்ளாடியபடியே சென்றோம். அதன் பின் சட்டென்று புல் வெளியில் இருவரும் அருகருகே விழுந்தோம். அருமையான கதிரவனின் வெளிச்சம் மட்டுமே எங்கள் கண்களுக்குத் தெரிந்தது நரகம் போன்ற கார்மேகத்தின் கொடூரங்களைக் கிழித்தபடி. மெதுவாக அந்த எண்ணம் எங்களை விட்டு விலகியது புற்களின் மீது படிந்த பனித்துளிகள் விலகுவது போல். அமைதியும் பகுத்தறிவும் மீண்டு வந்தன. நாங்கள் புற்களின் மீது அமர்ந்திருந்தோம் எங்களது நெற்றியின் மீது படிந்திருந்த வியர்வைகளைத் துடைத்தபடி. அந்த பயங்கர அனுபவத்தின் இறுதிச் சமயங்களை நினைத்தபடி அடுத்து என்ன செய்வது என்ற கேள்வியுடன் ஒருவரையொருவர் பார்த்துக் கொண்டிருந்தோம்.

“உறுதியாகச் சொல்கிறேன் வாட்சன்” என்று ஒருவாறு மவுனத்தை உடைத்தார் ஹோல்ம்ஸ் தட்டுத்தடுமாறி. “நான் உங்களுக்கு நன்றி கூறிக் கொள்கிறேன். அதே நேரத்தில் மன்னிப்பும் கேட்டுக் கொள்கிறேன். நான் என்மேல் இந்தச் சோதனையைப் பண்ணியதையே மன்னிக்க முடியாது. அதுவும் ஒரு நண்பனுக்குச் செய்ததை ஏற்றுக் கொள்ளவே முடியாது. என்னை மன்னித்து விடு நண்பா”

நான் சிறிது ஆவலுடன் அவருக்கு பதில் அளிக்க ஆரம்பித்தேன். “உங்களுக்கு உதவியதால் எனக்கு மிகவும் மகிழ்ச்சி மற்றும் கவுரவமே”

சட்டென்று இயல்பு நிலைக்குத் திரும்பிய அவர், பாதி கேலியாகவும் மீதி வெறுப்பான மன நிலையுடன் இருந்தார். அவரிடம் நெருக்கமாக இருப்பவர்களிடம் அவர் அப்படித்தான் நடந்து கொள்வார். “நம்மை நாமே பைத்தியமாக்கிக் கொள்வதென்பது மிதமிஞ்சியது, எனதருமை வாட்சன்.” என்றார் அவர். “வெளியில் இருந்து பார்க்கும் ஒருவர் இவ்வளவு மோசமான சோதனையைப் பண்ணும் முன்பாகவே நம்மை அப்படி முடிவு கட்டி இருப்பார். இது இவ்வளவு மோசமாக இவ்வளவு விரைவாக மாறும் என்று நான் நினைக்கவே இல்லை என்பதை ஒத்துக் கொள்கிறேன்.” அவர் வேகமாக வீட்டினுள் நுழைந்தார். எரியும் விளக்கைக் கையில் ஏந்தியபடியே வெளியில் வந்தார் எட்டிப் பிடித்தபடி. முட்செடிப் புதர்களுக்கிடையில் தூக்கி வீசி எறிந்தார். “அதன் பாதிப்பு வீட்டினுள் இருந்து நீங்கச் சிறிது நேரம் பொறுத்திருந்து பார்ப்போம். ஆக உங்களுக்கு அந்த விபத்துக்கள் எப்படி நடந்தது என்பதில் கொஞ்சம் கூட சந்தேகம் இருக்காது என்று நான் எடுத்துக் கொள்கிறேன் வாட்சன்.”

“நிச்சயம் இல்லை”

“ஆனால் காரணம் என்ன என்பது இன்னும் விளங்கவில்லை. இந்தக் கொடியின் நிழலுக்கடியில் வாருங்கள். நாம் அதைப் பற்றி விவாதிப்போம். அந்த நச்சு இன்னும் எனது தொண்டையிலேயே சிக்கிக் கொண்டிருப்பது போல் தோன்றுகிறது. நான் என்ன நினைக்கிறேன் என்றால் எல்லாத் தடயங்களும் இந்த மோர்டிமர் ட்ரெஜென்னில் அவரை நோக்கியே இருக்கின்றன. முதல் வழக்கில் அவர்தான் குற்றவாளி. இரண்டாவது வழக்கில் அவரே பலியானவர். அவர்களுக்கு நடுவில் குடும்பப் பிரச்சினை இருக்கிறது என்பது நமக்கு ஏற்கெனவே தெரியும். அதன் பின் அவர்கள் சமரசமாகி விட்டார்கள். அந்தச் சண்டை எவ்வளவு மோசமானது என்றோ அவர்களது சமரசம் எவ்வளவு வலிமையற்றது என்றோ நமக்குத் தெரியாது. மோர்டிமர் ட்ரெஜென்னிஸ் அவர்களின் ஓநாய் போன்ற முகமும், கண்ணாடிக்குள் இருக்கும் அவரது விவேகமுள்ள பாசி மணி போன்ற கண்களைப் பார்க்கும் போது அவரெல்லாம் மன்னித்து விட்டு விடும் ஆள் அல்ல என்பது நன்றாகத் தெரிகிறது. அடுத்ததாக, தோட்டத்தில் எதோ நடமாட்டம் தெரிந்தது என்று அவர் சொன்னது முழுவதும் அவரது கற்பனையே. நம்மைக் குழப்ப வேண்டும் என்பதில் அவருக்கு ஒரு காரணம் இருந்திருக்கிறது. அவர் கிளம்பும் வேளையில் நெருப்பில் அவர் போடவில்லை என்றால் வேறு யார் போட்டிருக்க முடியும்? அந்த சம்பவம் அவர் கிளம்பிய உடனே நடந்திருக்கிறது. வேறு யாராவது வந்திருந்தால் அந்தக் குடும்பம் நிச்சயம் எழுந்து இருந்திருக்கும். அது போக அமைதியான இந்த கார்ன்வால் கிராமத்தில் இரவு பத்து மணிக்கு மேல் விருந்தாளிகள் யாரும் வருவதில்லை. அதனால் எல்லாத் தடயங்களும் அவரைத் தான் காட்டுகின்றன என்று நாம் நிச்சயம் கருதலாம்.”

“பின் அவரது இறப்பு ஒரு தற்கொலையாக இருக்கலாம்”

“வாட்சன், மேலோட்டமாகப் பார்த்தால் சாத்தியமில்லாத அனுமானம் இல்லை. தனது குடும்ப உறுப்பினர்களுக்கு இப்படி ஒரு கொடூரத்தைப் பண்ணிய ஒருவன் குற்ற உணர்ச்சியால் தனக்குத் தானே பண்ணியும் இருக்கலாம். ஆனால் அந்தக் கருத்திற்கு மாறாக வலிமையான காரணங்கள் இருக்கின்றன. நல்ல வேளையாக இங்கிலாந்தில் அதைப் பற்றித் தெரிந்த ஒருவர் இருக்கிறார். அவரது வாயாலேயே அந்த உண்மைகளைச் சொல்வதற்கு நான் ஏற்பாடு செய்திருக்கிறேன். ஆஹ், அவர் இவ்வளவு விரைவாகவே வந்து விட்டார். திரு.லியோன் ஸ்டெர்ன்டெல் அவர்களே நீங்கள் இந்தப் பக்கம் வாருங்கள். நாங்கள் எங்கள் அறையில் ஒரு வேதியியல் பரிசோதனை மேற்கொண்டோம். அதனால் மதிப்பு மிகுந்த எங்களது விருந்தினரை வரவேற்கத் தகுந்த நிலையில் எங்கள் வீடு இல்லை.”

தோட்டத்தின் கம்பிக் கதவு திறக்கும் சத்தம் கேட்டது. பெருமை வாய்ந்த ஆப்பிரிக்க ஆய்வுப் பணியாளர் நடைபாதையில் வந்து கொண்டிருந்தார். நாங்கள் அமர்ந்திருந்த கிராமத்து மர நிழலைச் சிறிது ஆச்சர்யத்தோடு நோக்கினார்.

“நீங்கள் எனக்கு அழைப்பு விடுத்திருந்தீர்களே, திரு.ஹோல்ம்ஸ். உங்களது செய்தி ஒரு மணி நேரம் முன்பு வந்தது. இதோ வந்து விட்டேன். இருந்தாலும் உங்களது அழைப்பை ஏன் ஏற்க வேண்டும் என்று எனக்குப் புரியவில்லை.”

“நாம் விடை பெறுவதற்கு முன் ஒருவேளை அதற்குரிய விளக்கத்தைப் பெறலாம்” என்றார் ஹோல்ம்ஸ். “அதற்கு முன், எனது அழைப்பை ஏற்று வந்ததற்கு நான் மிகவும் கடமைப் பட்டிருக்கிறேன். இந்தத் திறந்த வெளியில் நான் உங்களை வரவேற்பதற்கு என்னை மன்னிக்கவும். நானும் எனது நண்பரும் கார்னிஷ் பயங்கரம் என்ற பெயரில் தனியாக ஒரு அத்தியாயமே எழுதி இருக்கிறோம். இப்போதைக்கு இங்கு ஒரு தெளிவான சூழ்நிலை இருக்க வேண்டும் என்பதற்காகவே நாம் இங்கு சந்திக்கிறோம். நாம் விவாதிக்க இருக்கின்ற விவகாரம் உங்களை நேரிடையாக பாதிக்கும் என்பதால் யாரும் ஒட்டுக் கேட்டு விட முடியாத இடத்தில் இருப்பதும் அவசியம்.”

அந்த ஆய்வுப் பணியாளர் தனது சுருட்டை எடுத்து வாயில் வைத்துக் கொண்டே மிகவும் அலட்சியமாக எனது நண்பரைப் பார்த்தார்.

“நீங்கள் என்ன சொல்ல வருகிறீர்கள் என்று ஒன்றுமே புரியவில்லை.” என்றார். “நீங்கள் பேசப் போகும் எந்த விஷயம் என்னை வெகுவாகப் பாதிக்கப் போகிறது?”

“மோர்டிமர் ட்ரெஜென்னில் அவர்களைக் கொன்ற விஷயம்”

ஒரு நொடி நான் கையில் ஆயுதம் இருந்திருந்தால் தேவலை என்று தோன்றியது. ஸ்டெர்ன்டேல் அவரது கோபமான முகம் குருதிச் சிவப்பாய் மாறியது, அவரது கண்கள் தீப்பிழம்பாய் கொதித்தது, முடிச்சுப் போட்ட அவரது குருதி நாளங்கள் நெற்றியில் புடைத்து நின்றன. முட்டியை மடக்கி எனது நண்பரை நோக்கி வேகமாக வந்தார். அதன் பின் உடனே நின்றார். மிகவும் பிரயாசைப்பட்டு இறுக்கமான அமைதியைத் தவழ விட்டார். அவரது கோபத்தை விட இது மிகவும் ஆபத்தானது போல் தோன்றியது.

“நான் நீண்ட காலமாகக் காடுகளில் மிருகங்களுக்கு நடுவில் வாழ்ந்ததால் சட்டங்களைப் பற்றி நினைத்ததேயில்லை.” என்றார் அவர். “அதனால் சட்டத்தை என் கைகளில் எடுக்கப் பார்த்தேன். உங்களுக்கு ஒன்றும் ஆகாது, திரு.ஹோல்ம்ஸ், இந்த விஷயத்தை மறந்து விட்டாலும், ஏனெனில் உங்களைத் துன்புறுத்தும் எண்ணம் எனக்கில்லை.”

“உங்களைத் துன்புறுத்தும் எண்ணமும் எனக்கில்லை, திரு. ஸ்டெர்ன்டேல் அவர்களே. அதனால்தான் காவல்துறைக்குப் பதிலாக உங்களை நேரடியாக வரவழைத்தேன்.”

பெருமூச்சுடன் ஸ்டெர்ன்டேல் அமர்ந்தார். ஒருவேளை முதன்முறையாக இருக்கலாம், தனது துணிகரமான வாழ்க்கையில் பயந்து விட்டார். ஹோல்ம்ஸின் பாவனைகளில் அமைதியான கட்டுப்படுத்த முடியாத ஒரு ஆற்றலின் உத்திரவாதம் தெரிந்தது. எங்களது பார்வையாளர் கொஞ்சம் தடுமாறினார். அவரது கரங்கள் திறந்து மூடிய வண்ணம் இருந்தன கொந்தளிப்பில்.

“என்ன சொல்ல வருகிறீர்கள்?” என்று ஒரு வழியாகக் கேட்டார். “இது பொய்யாக இருந்தால் உங்களது பரிசோதனைக்கு நீங்கள் ஒரு கெட்ட மனிதனைத் தெரிந்தெடுத்து விட்டீர்கள், திரு.ஹோல்ம்ஸ். சுற்றி வளைக்க வேண்டாம். என்ன சொல்கிறீர்கள்?”

“நான் சொல்கிறேன்.” என்றார் ஹோல்ம்ஸ். “நான் என்ன காரணத்துக்காக உங்களிடம் சொல்கிறேன் என்றால், உண்மையாக இருந்தால் உண்மையை எதிர்பார்க்கலாம் என்பதால். நீங்கள் சொல்லப் போவதை வைத்துதான் நான் அடுத்து என்ன செய்யப் போகிறேன் என்பதை முடிவு செய்ய முடியும்.”

“நான் சொல்வதை வைத்தா?”

“ஆம்.”

“என்ன சொல்ல வேண்டும்?”

“மோர்டிமர் ட்ரெஜென்னில் அவர்களை நீங்கள் கொன்றது பற்றி”

ஸ்டெர்ன்டேல் தனது கைக்குட்டையை எடுத்து நெற்றியைத் துடைத்துக் கொண்டார். “எனது வார்த்தைக்குக் கட்டுப்பட்டு அமைதியாய் இருக்கிறேன் நான். அதனால் பிழைத்தீர்கள்.” என்றார் அவர். “உங்களது எல்லா வெற்றிகளுக்கும் பொய் சொல்வதுதான் மூலதனமா?”

“பொய்?” என்று தீர்க்கமாகப் பார்த்தார் ஹோல்ம்ஸ். “அது உங்கள் பக்கம்தான் இருக்கிறது திரு.லியோன். நிச்சயம் என்னிடம் இல்லை. சில உண்மைகளைக் கூறி இதை என்னால் நிரூபிக்க முடியும் எனது முடிவுகள் எதன் அடிப்படையில் எழுந்தது என்று. நீங்கள் ப்ளைமௌத்தில் இருந்து திரும்பியதும், ஆப்பிரிக்காவுக்குப் பெரும்பாலான பயணச் சுமைகளை அனுப்பியதும், உடனே எனக்குப் பொறி தட்டியது. இந்த வழக்கில் உங்களுக்கு நிச்சயம் சம்பந்தம் இருக்கிறது என்று.”

“நான் திரும்ப வந்தேன்–”

“நீங்கள் வந்ததற்கான காரணங்களை நான் விசாரித்தேன். அது மிகவும் தெளிவற்றதாக போதுமானதாக இல்லை. அதை நாம் விட்டு விடுவோம். இங்கு நீங்கள் எங்களைத் தேடி வந்து யார் மீது சந்தேகம் இருக்கிறது என்று விசாரித்தீர்கள். நான் பதில் சொல்லவில்லை. அதன் பின் நீங்கள் திருச்சபைக்குச் சென்றீர்கள். வெளியில் சிறிது நேரம் காத்திருந்து பின் உங்கள் வீட்டிற்குச் சென்றீர்கள்.”

“உங்களுக்கு எப்படித் தெரியும்?”

“நான் உங்களைப் பின் தொடர்ந்தேன்”

“நான் யாரையும் பார்க்கவில்லை”

“நான் பின் தொடரும் போது அப்படி இருக்க வேண்டும் என்றுதான் எனது எதிர்பார்ப்பும். உங்களது வீட்டில் நீங்கள் நிம்மதி இல்லாமல் அலைந்தீர்கள். அதன் பின் நீங்கள் ஒரு திட்டம் தீட்டினீர்கள். அதை அதிகாலை செயல்படுத்த முனைந்தீர்கள். கதிரவன் உதிக்கும் நேரத்தில் உங்களது வீட்டின் கம்பிக் கதவிற்கு அருகில் உள்ள செந்நிறக் கற்களை எடுத்துக் கொண்டு கிளம்பினீர்கள்.”

ஸ்டெர்ன்டேல் கோபமாகவும் வெறுப்பாகவும் அவரை முதலில் பார்க்க ஆரம்பித்தவர் அப்படியே ஆச்சர்யத்தின் விளிம்பிற்குச் சென்று விட்டார்.

“அதன் பின் நீங்கள் திருச்சபையில் இருந்து வேகமாக வெளியேறி விட்டீர்கள். இப்பொழுது அணிந்துள்ள கோடு போட்ட காலணிகளைத்தான் அப்பொழுதும் அணிந்திருந்தீர்கள் என்று நான் கவனித்தேன். திருச்சபையில் இருந்து தோட்டத்தின் வழியாக ஓரமாக இருந்த புதர்களைத் தாண்டி நீங்கள் வெளியேறினீர்கள். ட்ரெஜென்னிஸ் வீட்டின் சாளரம் வழியாகக் குனிந்து செல்வதைக் கவனித்தேன். அப்பொழுது விடிந்து விட்டிருந்தது. இருந்தாலும் வீட்டில் ஆள் அரவம் கேட்கவில்லை. உங்கள் சட்டைப் பையில் இருந்த கற்களில் சிலவற்றை எடுத்துச் சாளரத்தின் வழியாக எறிந்தீர்கள்.”

ஸ்டெர்ன்டேல் சட்டென்று எழுந்தார்.

“அப்படியென்றால் அந்தச் சாத்தான் நீங்களாகத்தான் இருக்க வேண்டும்” என்று கத்தினார்.

ஹோல்ம்ஸ் அந்தப் புகழ்ச்சி கேட்டுப் புன்னகைத்தார். “நீங்கள் இரண்டு அல்லது மூன்று முறை கை நிறைய அள்ளி வீசியதும்தான் அவர் அந்தச் சாளரத்தின் அருகே வந்தார். அப்பொழுது நீங்கள் அவரைக் கீழே வருமாறு அழைத்தீர்கள். அவர் ஆடை உடுத்தி வேகமாக வரவேற்பறைக்கு வந்தார். நீங்கள் சாளரம் வழியாகவே உள்ளே நுழைந்தீர்கள். உங்களுக்குள் உரையாடல் நடந்தது- சிறியதுதான்-அந்த நேரத்தில் நீங்கள் அங்கும் இங்கும் உலாவினீர்கள். அதன் பின் நீங்கள் வெளியே வந்து சாளரத்தை மூடி விட்டீர்கள். புல் வெளியில் நின்று கொண்டு சுருட்டு பிடித்துக் கொண்டிருந்தீர்கள் நடப்பதை வேடிக்கை பார்த்தபடியே. இறுதியில் அவர் இறந்ததும், வந்த வழியே சென்று விட்டீர்கள். இப்பொழுது சொல்லுங்கள், திரு.ஸ்டெர்ன்டெல், இப்படிப்பட்ட நடத்தையை எப்படி நியாயப்படுத்துவீர்கள். நீங்கள் இவைகளைச் செய்ததற்கு என்ன நோக்கம் இருந்தது? நீங்கள் பொய் சொல்வதாக இருந்தால் இந்த விஷயம் என் கைகளை மீறிப் போய் விடும்.”

எங்களது விருந்தினரின் முகம் சாம்பல் நிறமாய்க் கருக்க ஆரம்பித்தது அவர் மேல் அடுக்கடுக்காய் அடுக்கப்படும் குற்றங்கள் சுமத்துபவரைக் கண்டு. இப்பொழுது அவர் சிறிது நேரம் தன் கைகளில் முகத்தைப் புதைத்துக் கொண்டு அமர்ந்தார். அதன் பின் சட்டென்று தன் சட்டைப் பையில் வைத்திருந்த ஒரு புகைப்படத்தை எடுத்து எங்களுக்கு முன் இருந்த மேசை மீது வீசினார்.

“அதனால்தான் நான் இந்தக் காரியத்தைச் செய்தேன்” என்றார் அவர்.

அது ஒரு அழகிய பெண்ணின் புகைப்படம். ஹோல்ம்ஸ் குனிந்து அதை எடுத்தார்.

“ப்ரெண்டா ட்ரெஜென்னில்” என்றார் அவர்.

“ஆம். ப்ரெண்டா ட்ரெஜென்னில்” என்று நமது விருந்தினர் மறுமுறை சொன்னார். “நான் அவளைப் பல ஆண்டுகளாகக் காதலித்தேன். அவளும் என்னைக் காதலித்தாள். அந்தக் கார்னிஷ் தனிமையின் மர்மத்தை மக்கள் மிகவும் ஆச்சர்யத்தோடு கவனித்திருந்தார்கள். அதுதான் இந்த உலகிலேயே எனது மனதுக்குப் பிடித்த ஒரு விஷயத்தை என் அருகில் கொண்டு வந்தது. நான் அவளைத் திருமணம் செய்ய இயலவில்லை. ஏனெனில் என்னை விட்டு விலகிய மனைவி இருக்கிறாள். இங்கிலாந்து நாட்டின் கொடூரமான சட்டங்களால் அவளை மணவிலக்குச் செய்யவும் இயலவில்லை. பல்லாண்டுகளாக ப்ரெண்டா காத்துக் கொண்டிருந்தாள். ஆனால் இதற்குத்தான் காத்திருந்தது போல் ஆகி விட்டது.” அவரது பெரும் புகழை அந்தக் கொடுமையான அழுகைச் சத்தம் கரைத்து விட்டது. அவரது சாம்பலும் கருப்பும் கலந்த தாடிக்குக் கீழிருந்த தொண்டையைப் பிடித்துக் கொண்டார். அதன் பின் ஒரு பெருமூச்சோடு மீண்டும் தொடர்ந்தார்.

“பாதிரியாருக்கு இது தெரியும். அவர் எங்களது நம்பிக்கையைக் காப்பாற்றினார். அவளை அவர் ஒரு தேவதை என்றுதான் சொல்வார். அதனால்தான் அவர் எனக்குத் தந்தி அடித்தார். நானும் உடனே கிளம்பி வந்தேன். ஆப்பிரிக்காவுக்குச் சென்ற என் பயணப் பெட்டியைப் பற்றியா நான் கவலைப் படுவேன் என்னவளுக்கு இப்படி ஒரு துயரம் நடந்தது கேட்டு. அங்குதான் இருக்கிறது எனது செய்கைகளுக்கான நோக்கம்.”

“சரி. மேலே சொல்லுங்கள்.” என்று சொன்னார் ஹோல்ம்ஸ்.

திரு.ஸ்டெர்ன்டெல் தனது சட்டைப் பையில் இருந்து ஒரு காகிதச் சிப்பத்தை எடுத்து மேசை மீது வைத்தார். அதன் மீது “சாத்தானின் பாத வேர்” என்று எழுதப்பட்டிருந்தது. அதன் அருகில் சிவப்பு நிற மண்டை ஓடு படம் போட்டிருந்தது. அவர் அதை என்னை நோக்கி நகர்த்தினார். “நீங்கள் ஒரு மருத்துவர் என்று நான் கேள்விப்பட்டிருக்கிறேன். நீங்கள் இதன் செய்முறை பற்றிக் கேள்விப்பட்டிருக்கிறீர்களா?”

“சாத்தானின் பாத வேர்! இல்லை நான் அது பற்றிக் கேள்விப்பட்டதே இல்லை.”

“உங்கள் படிப்பறிவைச் சொல்லிக் குற்றமில்லை.” என்றார் அவர். “பூடாவில் இருக்கும் ஆய்வகத்தில் இருக்கும் ஒரே ஒரு மாதிரியைத் தவிர ஐரோப்பாவிலேயே வேறெங்கும் இல்லை. மருந்தகத் துறை மூலமாகவோ நஞ்சுகள் பற்றிய குறிப்பேடுகள் மூலமாகவோ இன்னும் நம் நாட்டிற்குள் அது நுழையவில்லை. அதன் வேர் ஒரு கால் போன்று இருக்கும். பாதி மனிதக் கால் போலவும் மீதி ஆட்டின் கால் போலவும் இருக்கும். அதனால்தான் அதற்கு அப்படியொரு வினோதமான பெயர் வைத்தார்கள் தாவரவியல் துறை வல்லுநர்கள். மேற்கு ஆப்பிரிக்காவில் சில மாவட்டங்களில் மரண தண்டனைக்கு இதைப் பயன் படுத்துகிறார்கள். இருந்தாலும் அது மிகவும் மர்மமாகவே பாதுகாக்கப்பட்டு வருகிறது. உபான்கி நாட்டில் இருந்து இதை நான் மிகவும் சிரமப்பட்டு வாங்கி வந்திருக்கிறேன்.” அப்படிச் சொல்லிக் கொண்டே அந்தக் காகிதத்தைப் பிரித்து அந்தச் செம்பழுப்பு நிறப் பொடியைக் காண்பித்தார்.

“நல்லது” என்றார் ஹோல்ம்ஸ் மிகவும் தீர்க்கமாக.

“நடந்தது பெரும்பாலும் உங்களுக்கே தெரிந்து விட்டது. உங்களுக்கு எல்லாம் தெரிய வேண்டும் என்று நான் முடிவு செய்ததால் அனைத்தையும் மறைக்காமல் கூறி விட்டேன். ட்ரெஜென்னில் குடும்பத்திற்கு நான் எவ்வகையில் உறவு என்பதையும் தெளிவு படுத்தி விட்டேன். அக்குடும்பத்தில் சகோதரியின் பொருட்டே சகோதரர்களிடம் நான் நட்போடு பழகி வந்தேன். பணத்தைப் பிரிப்பதில் ஒரு தகராறு ஏற்பட்டு மோர்டிமர் மட்டும் பிரிந்து விட்டார். ஆனால் அதுவும் சரி செய்யப்பட்டு விட்டது. அதனால் எப்பொழுதும் போல் நான் அவரைச் சந்தித்திருக்கிறேன். ஆனால் அவர் தந்திரமான கபட சூத்திரதாரியாக இருந்திருக்கிறார். சந்தேகிக்கப்படும்படி நிறைய தடவை நடந்திருக்கிறார். இருந்தாலும் சண்டை போடுவது போல் எதுவும் செய்து விடவில்லை.

“ஒரு நாள், இரு வாரங்கள்தான் இருக்கும், அவர் எனது வீட்டிற்கு வந்தார். நான் அவரிடம் ஆப்பிரிக்காவில் இருந்து எடுத்து வந்த சுவாரசியமான பொருட்களைக் காட்டிக் கொண்டிருந்தேன். அப்பொழுது இந்த நச்சு வேர் பற்றியும் கூறினேன். அச்சம் பற்றிய உணர்வுகளைக் கவனிக்கும் மூளையின் பகுதியை எவ்வாறு அது கிளர்ச்சி ஊட்டுகிறது என்றும், பைத்தியம் அல்லது சாவுதான் அதன் இறுதி நிகழ்வு என்பதையும் அவருக்கு நான் விளக்கிக் கூறினேன். அவரது இனத்துச் சாமியார்கள் வேண்டாதவர்களைக் கொடுமைப்படுத்தப் பயன்படுத்தும் அந்த வேர் பற்றி முழுவதும் சொன்னேன். ஐரோப்பிய அறிவியல் இதைக் கண்டுபிடிக்கும் அளவு வலிமை இல்லாதது பற்றியும் எடுத்துச் சொன்னேன். அவர் எப்படி அதை எடுத்தார் என்று எனக்கே தெரியாது. ஏனெனில் நான் அந்த அறையை விட்டு விலகவே இல்லை. இருந்தாலும் பிறகுதான் தெரிந்தது. நான் பெட்டிகளைத் திறந்து அடுக்கிக் கொண்டிருக்கும் இடைப்பட்ட வேளையில் அவர் அதை எடுத்திருக்க வேண்டும். அது வேலை செய்ய எவ்வளவு நேரமாகும், என்ன அளவு தேவைப்படும் என்றெல்லாம் அவர் துருவித் துருவிக் கேட்டது எனக்கு இன்னும் நன்றாக ஞாபகம் இருக்கிறது. ஆனால் அதை அவர் இப்படிப் பயன்படுத்துவார் என்று கனவிலும் நினைக்கவில்லை.

“பாதிரியாரின் தந்தி பிளைமவுத் வந்து அடையும் வரை நான் அதைப் பற்றிச் சிந்திக்கவேயில்லை. எனக்குச் செய்தி தெரியும் முன் இந்தப் பாவி நான் கப்பல் ஏறி விடுவேன் என்று நினைத்திருக்கிறான். அதன் பின் ஆப்பிரிக்காவில் இருந்து திரும்பி வர பல ஆண்டுகள் ஆகி விடும் என்று தப்புக் கணக்கு போட்டிருக்கிறான். ஆனால் நான் உடனே திரும்பி விட்டேன். எனது நச்சு வேர்தான் பயன்படுத்தப்பட்டிருக்கிறது என்று உறுதி செய்யாமல் நான் எந்தவித விளக்கங்களையும் கேட்டுப்பெற விரும்பவில்லை. உங்களுக்கு வேறு எதாவது விளக்கம் கொடுக்கப்பட்டிருக்கலாம் என்ற எண்ணத்தில்தான் நான் உங்களைச் சந்திக்க வந்தேன். ஆனால் ஏமாற்றமே மிஞ்சியது. மோர்டிமர்தான் கொலை செய்திருக்கிறார் என்று எனக்குத் தெளிவாகத் தெரிந்து விட்டது. பணத்துக்காக, தனது உறவுகள் எல்லோரும் பைத்தியமாகி விட்டால் பொதுவில் இருக்கும் சொத்து முழுவதும் தன் கைகளுக்கு வந்து விடும் என்ற எண்ணத்தினாலும், அவர்கள் மேல் இந்த நச்சுப் பொடியைப் பரிசோதித்திருக்கிறான். இருவர் பைத்தியங்களாகவும் ஒருவர் இறக்கவும் காரணமாகி விட்டான். நான் காதலித்த ஒரே ஒரு உயிரையும் இப்படி அநியாயமாகக் கொலை செய்து விட்டான். அந்தக் குற்றத்திற்கு அவனுக்கு என்ன தண்டனை?”

“சட்டத்திற்கு முன் அவனை நிறுத்தலாம் என்றால் ஆதாரங்களை எப்படி நான் தருவது. உண்மை என்னவென்று எனக்கு நன்றாகத் தெரியும். கற்பனைக்கே எட்டாத ஒரு உண்மையை நான் எவ்வாறு நம் நாட்டின் சட்ட மேதைகள் முன் நிரூபிக்க முடியும். முடியலாம் முடியாமலும் போகலாம். ஆனால் நான் தோற்கக் கூடாது. எனது மனம் பழி வாங்க வேண்டும் என்று கதறியது. நான் ஒருமுறை உங்களிடம் சொல்லி இருக்கிறேன், பெரும்பாலான வாழ்வை நான் சட்ட திட்டங்களுக்கு அப்பாலேயே கழித்திருக்கிறேன் என்று. அதனால் இறுதியில் நானே என் கைகளில் சட்டத்தை எடுத்து விடலாம் என்று முடிவு செய்து விட்டேன். அவன் மற்றவர்களுக்குக் கொடுத்த தண்டனையை நான் அவனுக்கே கொடுக்க வேண்டும் என்று முடிவு செய்து விட்டேன். அது இல்லாவிட்டாலும் என் கைகளாலேயே அவனைக் கொல்லவும் முடிவு செய்து விட்டேன். இந்த இங்கிலாந்து நாட்டிலேயே தன் உயிரைத் துச்சமாக மதிக்கக் கூடிய ஒருவன் என்றால் அது நானாகத்தான் இருக்க முடியும் தற்சமயம்”

“இப்பொழுது எல்லாமே உங்களிடம் நான் சொல்லி விட்டேன். மீதி உங்களுக்கே தெரியும். நீங்கள் கூறியது போலவே நான் எனது வீட்டில் நிம்மதி இல்லாமல் இருந்தேன். அதனால் அதிகாலை விடியும் முன்பே கிளம்பி விட்டேன். அவனை எழுப்புவது கொஞ்சம் சிரமமாகவே இருந்தது. அதனால் நீங்கள் கண்டது போல் ஒரு கற்குவியலில் இருந்து எடுத்து சிறு கற்களை அவன் மீது எறிந்தேன். அவன் இறங்கி வந்து என்னை வரவேற்பறையின் சாளரம் வழியாக அனுமதித்தான். அவன் செய்த குற்றத்தைக் கூறினேன். நான் ஒரு நீதிபதியாகவும் தண்டனை கொடுக்கும் அதிகாரியாகவும் அவன் முன் வந்திருப்பதாக அவனிடம் சொன்னேன். அந்தப் பாதகன் அப்படியே சாய்வு நாற்காலியில் அமர்ந்து விட்டான் எனது கையில் இருந்த துப்பாக்கியைக் கண்டு. நான் விளக்கை ஏற்றினேன். அதன் மேல் அந்தப் பொடியைத் தூவினேன். அதன் பின் வெளியே சென்று கதவருகில் நின்று கொண்டேன். வெளியில் வந்தால் துப்பாக்கியால் சுட்டு விடுவேன் என்று மிரட்டினேன். ஐந்து நிமிடத்தில் அவன் இறந்து விட்டான். கடவுளே! எப்படி இறந்தான். ஆனால் என் மனம் ஒரு சிக்கி முக்கிக் கல் போல உராய்ந்தது. எனது காதல் கண்மணி அனுபவித்ததில் நூறில் ஒரு பங்கு கூட அவன் அனுபவிக்காமல் சென்று விட்டானே. இதுதான் என் கதை, திரு.ஹோல்ம்ஸ். நீங்கள் ஒரு பெண்ணைக் காதலித்திருந்தால் நீங்களே இப்படித்தான் செய்திருப்பீர்கள். எது எப்படி இருப்பினும், நான் உங்கள் கைகளில். என்ன வேண்டுமென்றாலும் செய்து கொள்ளுங்கள். நான் ஏற்கெனவே சொல்லியது போல சாவைப் பற்றி எனக்குச் சிறிதும் அச்சமில்லை.”

ஹோல்ம்ஸ் சற்று நேரம் அமைதியாக அமர்ந்திருருந்தார்.

“உங்களது திட்டம் என்னவாக இருந்தது?” என்று இறுதியில் கேட்டார்.

“நான் மத்திய ஆப்பிரிக்காவில் மறைந்து விடலாம் என்று நினைத்திருந்தேன். எனக்கு அங்கு இன்னும் வேலை இருக்கிறது.”

“அப்படி என்றால் அங்கேயே சென்று மீதி வேலையை முடித்து விடுங்கள்.” என்றார் ஹோல்ம்ஸ். “நான் உங்களைத் தடுக்க நினைக்கவில்லை”

திரு.ஸ்டெர்ன்டெல் தனது பருத்த உடம்பைத் தூக்கிக் கொண்டு அமைதியாகத் தலை வணங்கி அந்த இடத்தை விட்டுச் சென்றார். ஹோல்ம்ஸ் தனது புகைக் குழலைப் பற்ற வைத்து விட்டு உறையை என்னிடம் கொடுத்தார்.

“நஞ்சில்லாத புகைதான் இந்தச் சூழலுக்கு உகந்தது” என்றார் அவர். “நீங்கள் இதை ஒத்துக் கொள்வீர்கள் என்று நினைக்கிறேன், வாட்சன். இந்த வழக்கில் நாம் தலையிட வேண்டும் என்று யாரும் நம்மை அழைக்கவில்லை. நமது புலன் விசாரணை தனிப்பட்டது. அதனால் நமது செய்கைகளும் அப்படியே இருந்து விட்டுப் போகட்டும். நீங்கள் அந்த மனிதரை வெறுக்க மாட்டீர்கள் என்று நினைக்கிறேன்.”

“நிச்சயம் இல்லை” என்று நான் பதில் அளித்தேன்.

“நான் யாரையும் காதலித்ததில்லை. ஒரு வேளை நான் காதல் வயப்பட்ட பெண்ணுக்கு இப்படியொரு முடிவு நேர்ந்தால் நானும் சட்டங்களுக்கு அப்பாற்பட்ட இந்தச் சிங்க வேட்டைக்காரனைப் போலவேதான் செய்திருப்பேன். யாருக்குத் தெரியும்? இருக்கட்டும், வாட்சன். நான் உங்களது அறிவுத் திறனை மட்டம் தட்ட விரும்பவில்லை ஏற்கெனவே தெரிந்ததை மீண்டும் சொல்லி. சாளரக் கதவில் இருந்த கற்கள்தான் எனது ஆராய்ச்சிக்கு முதல் புள்ளி. அது திருச்சபையின் தோட்டத்தில் இருந்தவை போல் இல்லை. திரு.ஸ்டெர்ன்டெல் மற்றும் அவரது வீட்டின் மேல் எனது பார்வை பட்டதும்தான் அதே போன்ற கற்கள் தென்பட்டன. பட்டப்பகலில் எரிந்த விளக்கும் அதன் மேல் மீதி இருந்த பொடியும் தெளிவான சங்கிலியின் தொடர் இணைப்புகளாகும். எனதருமை வாட்சன், இப்பொழுது நாம் நம் மனதில் இருந்து இந்த வழக்கை விடுவித்து விட்டுத் தெளிவான ஒரு மனதோடு பாபியலோனியர்களின் வேர்கள் பற்றிய ஆராய்ச்சியைத் தொடர்வோம். அது நிச்சயம் பெருமை வாய்ந்த செல்டிக் மொழியின் கிளையான கார்னிஷில்தான் இருக்கும்.”

அருஞ்சொற்கள்

மீகாமன் – Captain/Mariner

மெத்தாசனம் – Sofa

கணப்படுப்பு – Fireplace

பயணச்சுமை – Luggage

நிலப்படம் – Map

மாக்கல் – Talc

பொழுசாயம் – பொழுது சாயும் வேளை

சிப்பம் – packet/parcel

மணவிலக்கு – divorce

Print Friendly, PDF & Email

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *