கதையாசிரியர்:
கதை வகை: மொழிபெயர்ப்பு
கதைத்தொகுப்பு: கிரைம்
கதைப்பதிவு: January 24, 2013
பார்வையிட்டோர்: 16,395 
 

Un Bandit Corse : கோர்சிப் போராளி
மூலம் : கய் தே மாப்பசான்
தமிழில் : மா. புகழேந்தி

ஐத்தோன் காடு வழியாக சாலை மெல்ல முன்னேறியது. எங்களது தலைக்கும் மேல் பைன் மரங்கள் கூடாரமிட்டு இருந்தன. வீசிய காற்று எதோ ஓர் இசைக் கருவியை இசைப்பது போல் வித்தியாசமான ஒலியை எழுப்பிக் கொண்டிருந்தது.

மூன்று மணி நேர நடைக்குப் பின் ஒரு வெட்ட வெளி தென்பட்டது, சிறிது இடைவெளிக்குப் பிறகு ஒரு பெரும் பைன் மரம் பெரிய கூடையைப் போல் கிளை பரப்பி இருந்தது, காட்டின் முடிவுக்கே வந்து விட்டோம், சில நூறு அடிகள் கீழே, நியோலோ பள்ளத்தாக்கை நோக்கி ஒரு கணவாய் சென்றது.

கணவாய்க்கு இரு புறமும் துருத்திக் கொண்டு இருந்த குன்றுகளின் மேல், மிகப் பெரும் மரங்கள், திருகியவாறு வளர்ந்திருந்தன, பார்வைக்கு முதுகில் பொருட்களைக் கட்டிக்கொண்டு மலை ஏறுபவர்களைப் போலவும் எதோ கடும் முயற்சிக்குப்பின் அங்கு ஏறியவைகளைப் போலவும் தெரிந்தது. நாங்கள் திரும்பிப் பார்த்த போது முழுக் காடும் நீட்டிவிடப் பட்டது போல் எங்கள் கால்களுக்குக் கீழ் மாபெரும் செழிப்பான பசுமையான காடு வானை முட்டும் மலைகளுக்கிடையில் தெரிந்தது.

நாங்கள் நடக்கத் தொடங்கினோம், பத்து நிமிடம் கழித்து கணவாயில் இருந்தோம்.

அங்கு நான் குறிப்பிடத்தகுந்த நிலப்பரப்பினைக் கண்டேன். அதற்கும் பின்னால் காடு பள்ளத்தாக்கு வரை நீண்டு இருந்தது, இதற்கும் முன்னர் நான் கண்டிராத பள்ளத்தாக்காக இருந்தது. ஒற்றைக் கல் இரண்டு மலைகளுக்கும் நடுவில் இணைப்பு போல் பல அடி நீளத்துக்குக் கிடந்தது, எந்த ஒரு வயலையோ மரத்தையோ பார்க்க முடியாமல் இருந்தது. இது தான் நியோலோப் பள்ளத்தாக்கு, கோர்சித் தந்தையகம், அடைய முடியாத கோட்டை, ஊடுரவல் காரர்களால் மலையகத்தோரை விரட்டவே முடியாத இடம்.

என்னுடன் வந்தவர் சொன்னார், “இங்கு தான் நமது போராளிகள் பதுங்கி இருக்கும் இடமா? ”

விரைந்து நாங்கள் கணவாயின் குறுகிய வாயினை அடைந்தோம், அது விவரிக்க முடியாத காட்டு அழகுடன் விளங்கியது.

ஒரு புல் பூண்டு கூட இல்லை. எல்லாம் கருங்கற்கள். கண்ணுக்கெட்டிய தூரம் வரை, தகிக்கும் கற் பாலைவனமாக இருந்தது, சூரியனால் அடுப்பு போல வெம்மையூட்டப் பட்டு இருந்தது, சூரியன் தலைக்கும் மேலாக அந்த வேலைக்காகத் தான் இருப்பது போலத் தோன்றியது. எங்கள் கண்களை மலை முகத்தினை நோக்கி உயர்த்திய போது, நாங்கள் கண்டது கண்களைக் கூசச் செய்யவதாகவும் செயலை மறக்கச் செய்வதாகவும் இருந்தது. மலை உச்சிகள் பவழ மாலை போல, மின்னும் கற்களைக் கொண்டிருந்தது. தலைக்கும் மேலிருந்த வானம் நீலமாகவும் ஊதா நிறத்துடனும் மலைகளின் பின் புலத்தில் கண்டிராத காட்சியைக் கட்டியவாறு இருந்தது. கீழே கருங்கற்கள் மின்னும் சாம்பல் வண்ணத்தில் இருந்தது. காலுக்குக் கீழ் உள்ள தரை சாம்பலோ என்று எண்ணுமாறு இருந்தது. வலது புறத்தில் சிற்றாரொன்று ஒழுங்கற்று ஒலி எழுப்பிக் கொண்டு ஓடிக்கொண்டிருந்தது. நாங்கள் தடுமாறியபடி எரிச்சலூட்டும் வெப்பத்திலும் முன்னேறினோம்.

இந்த வெய்யிலில், இந்தப் புழுக்கத்தில், இந்த வறண்ட பள்ளத்தாக்கில், ஓடும் இச் சிற்றாறு, எப்போதும் வேகமாக ஓடிக்கொண்டு, பாறைகளுக்கு நீர் பாய்ச்சிக் கொண்டு இருந்தது. அவ் வெள்ளத்தை எல்லாம் சூளை போலக் காய்ந்திருந்த பாறைகள் பேராசையுடன் பருகி புத்துணர்ச்சியற்று தாகத்துடனேயே இருந்தன.

மரத்தாலான சிலுவை ஒன்று கற்களுக்கிடையில் செருகப் பட்டிருந்தது எங்கள் கண்களில் பட்டது. ஒரு மனிதன் இங்கே கொல்லப் பட்டு இருக்க வேண்டும்; என்னுடன் வந்தவரிடம் சொன்னேன்.

“உங்கள் போராளிகளை பற்றிச் சொல்லுங்கள்.”

அவர் பதிலளித்தார்:

“எனக்குத் தெரிந்த புகழ் பெற்ற ஒரு போராளியைப் பற்றிச் சொல்கிறேன். அவன் செயின்ட் லூசீ”

“இந்த மாவட்டத்தில் இருந்த ஒரு இளைஞனால் அவனது தந்தை கொல்லப் பட்டார் என்று சொல்வார்கள், செயின்ட் லூசீ அவனது சகோதரியுடன் அனாதையாக விடப்பட்டான். அவன் சிறுத்த நோஞ்சானான இளைஞன், சக்தி யற்று அடிக்கடி நோயுறுபவன். அவன் தந்தையைக் கொன்றவன் மீது சூளுரைக்க வில்லை. அவனது உறவினர்களெல்லாம் அவனைப் பழிவாங்கத் தூண்டினர், ஆனால் அவன் அதை எல்லாம் காதில் போட்டுக் கொள்ள வில்லை. ”

இருப்பினும் பழைமையான கோர்சி நடைமுறையின் படி அவனது சகோதரி பழிவாங்கும் ஆத்திரத்துடன், கொல்லப்பட்டவனுக்காக பழிவாங்கப்படவில்லை துக்கப் படவில்லை என்பதை நினைவூட்ட அவனது கருப்பு உடையைக் கொண்டு சென்றாள்.

அவன் அதையெல்லாம் பொருட் படுத்த வில்லை , வேண்டு மென்றே அவமதிப்பதைப் போல குண்டுகளால் நிரப்பப் பட்டு சுவற்றில் தொங்கிக் கொண்டிருந்த தனது தந்தையின் துப்பாக்கியினைக் கூட அவன் கண்டுகொள்ளவில்லை , மாவட்டத்தில் இருந்த மற்ற இளைஞர்களைப் பார்க்கக் கூசி வெளியில் செல்லாமல் ஒளிந்து கொண்டிருந்தான் .

அவன் அந்தக் குற்றத்தை மறந்து விட்டான் என்றே தோன்றியது. தனது சகோதரியுடன் தனிமையில் வாழ்ந்தான்.

ஆனால் ஒரு நாள் அவன் தந்தையைக் கொன்றதாகக் கருதப் பட்ட இளைஞனுக்குத் திருமண ஏற்பாடு நடந்தது.

செயின்ட் லூசீவை இச்செய்தி பாதிக்க வில்லை. ஆனால் மாப்பிள்ளைப் பையன் சுற்றிக் கொண்டு சர்ச்சுக்குப் போகாமல், எந்தக் கவலையுமில்லாமல், இரண்டு அனாதைகள் இருந்த வீட்டின் வழியாகப் போனான்.

அந்தத் திருமண ஊர்வலம், பயறுகளை உண்டுகொண்டு ஜன்னல் வழியாகப் பார்த்துக் கொண்டிருந்த இருவரின் கண்களில் பட்டது.
செயின்ட் லூசீ நடுங்கினான், ஒரு வார்த்தை கூட பேசாமல் திடீரென எழுந்தான், கைகளால் சிலுவை இட்டுக் கொண்டான், சுவற்றில் தொங்கிக் கொண்டிருந்த துப்பாக்கியினை எடுத்தான், வெளியில் வந்தான்.

“இதைப் பற்றி பிற்பாடு பேசும் போது அவன் சொன்னான்,’ எனக்குள்ள என்ன நடந்ததுன்னு எனக்குத் தெரியாது, என் ரத்தத்தில் தீப்பிடிச்சது போல இருந்தது, இத செஞ்சே ஆகணும்னு தோணிச்சு, என்னென்னவோ செஞ்சாலும் என்னால் தடுக்க முடியலை, கோர்த் போகும் சாலையில் இருந்த ஒரு குகையில் துப்பாக்கியை மறைச்சு வச்சேன்….. ”

ஒரு மணி நேரம் கழிச்சு மனதில் எந்தக் கவலையும் இல்லாமல் அவன் திரும்பினான், எப்போதும் போல சோகமான முகத்துடன் இருந்தான். அவனுக்கு வேறு சிந்தனை இனிமேல் இல்லை என்று அவன் சகோதரி நம்பினாள்.

பொழுது விழுந்ததும் அவன் காணாமல் போனான்.

அவனது எதிரி, மாப்பிள்ளைத் தோழர்கள் இருவருடன் அன்று மாலை கோர்திற்கு நடந்து புறப்பட்டான்.

பாட்டுப் பாடிக்கொண்டே மாப்பிள்ளை நடந்தான், அப்போது செயின்ட் லூசீ அவன் முன் வந்து நின்றான். கொலைகாரன் முகத்தை நேருக்கு நேராய்ப் பார்த்தான். வியப்புடன் சொன்னான் ‘இது தான் சரியான நேரம்’ , அப்புறம் மாப்பிள்ளையின் நெஞ்சில் சுட்டான்.

துணைக்கு வந்ததில் ஒருவன் ஓடிவிட்டான்; அடுத்தவன் செயின்ட் லூசீவைப் பார்த்து
“நீ என்ன செஞ்சிட்ட தெரியுமா?”, என்று சொல்லி உதவிக்கு கோர்த்தை நோக்கிச் செல்ல முற்பட்டான், அப்போது செயின்ட் லூசீ கடுமையான குரலில் எச்சரித்தான் ‘இன்னொரு அடி எட்டு வச்ச, கால்ல சுடுவேன்’
இது வரை பொறுமையாக இருந்த செயின்ட் லூசீவை அறிந்திருந்த இன்னொருவன் ‘உனக்கு அவ்வளவு தைரியம் இல்லை’ என்று சொல்லி ஓட முற்பட்டான், ஆனால் அலறியபடி விழுந்தான், அவனது தொடை குண்டுகளால் துளைக்கப்பட்டிருந்தது.

அவன் விழுந்த இடத்துக்கு வந்து செயின்ட் லூசீ அவனைப் பார்த்துச் சொன்னான் ,’ நான் காயத்தைப் பார்ப்பேன், கொஞ்சமா இருந்தா விட்டுட்டுப் போவேன், இல்லை பலமா இருந்துதுன்னா கொன்னுருவேன்’

காயத்தை ஆராய்ந்தான், பலமாக இருந்தது, மெல்ல அவனது துப்பாக்கியில் குண்டுகளை நிரப்பினான், காயம் பட்டவனை கடவுளிடம் வேண்டிக்கச் சொன்னான், பிறகு தலையில் சுட்டான்.
அடுத்த நாள் அவன் மலையில் இருந்தான்.
‘உங்களுக்குத் தெரியுமா அதற்கப்புறம் அவன் என்ன செய்தான் என்று?”

“காவல் துறையால் அவனது குடும்பத்தார் அனைவரும் கைது செய்யப் பட்டனர். இறந்து போனவனின் உறவினர்களால் குற்றம் சாட்டப் பட்டவரும் அவனைக் கொலை செய்யத் தூண்டியதாக சந்தேகத்துக்குட்பட்டவருமான அவனது மாமா சிறையில் போடப்பட்டார். ஆனால் அவர் சிறையிலிருந்து தப்பித்தார், போகும் போது துப்பாக்கி ஒன்றையும் எடுத்துக் கொண்டு ஓடிவிட்டார். காட்டுக்குள் சென்று தனது மருமகனுடன் சேர்ந்து கொண்டார்.

அடுத்ததாக செயின்ட் லூசீ தனது மாமாவைக் காட்டிக் கொடுத்தவர்கள், ஒவ்வொருத்தரையாகக் கொல்ல ஆரம்பித்தான், மற்றவர்களை எச்சரிப் பதற்காக இறந்தவர்களது கண்களைப் பிடுங்கினான், அது பார்த்தவற்றைச் சொல்லாதே என்பதாக இருந்தது.

தனது எதிரியின் குடும்பத்தைச் சேர்ந்தவர்கள் அனைவரையும் கொன்று போட்டான். தனது வாழ்வில் பதிநான்கு காவலர்களை அவன் கொன்றிருக்கிறான். அவனுக்குப் பிடிக்காத எதிரிகளது வீடுகளைக் கொளுத்தி இருக்கிறான், அவனது இறப்பு வரை அவனது செயல்கள் மிகக் கொடுமையானவை, மற்ற போராளிகளை விட அவனைப் பற்றிய நினைவுகளை எங்களது மனதில் நாங்கள் காத்து வைத்திருக்கிறோம்.”

சூரியன், மாண்டி சிந்தோ மலை முகட்டுக்குப் பின் மறைந்தது , உயர்ந்த கருங்கல் மலையின் நிழல் பள்ளத்தாக்கில் தூங்கச் சென்றது. இரவுக்குள் ஆல்பர்ட்ஆச்சியோ கிராமத்தை அடைய வேண்டும் என்று நாங்கள் வேகமாக எட்டு வைத்தோம், கூரான கற்களே பாதை முழுக்க நிறைந்திருந்தன.

அந்தக் போராளியை நினைத்துக் கொண்டு நான் கேட்டேன்

“என்ன கொடுமை உங்களது பழிவாங்கும் உணர்ச்சி”

என்னுடன் வந்தவர் பொறுமை யற்றுத் திருப்பிச் சொன்னார்,
“பிறகு நீங்க என்ன செய்வீங்களாம்? ஓர் ஆண் தனது கடமையைச் செய்தே ஆக வேண்டும்.”

– டிசம்பர் 22, 2010

Print Friendly, PDF & Email

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *