கொள்ளைக்காரன்

0
கதையாசிரியர்:
கதைத்தொகுப்பு: கிரைம்
கதைப்பதிவு: March 15, 2023
பார்வையிட்டோர்: 5,765 
 

மாந்தோப்புகளின் அழகை அநுபவிக்க வேண்டுமானால், தமிழ்நாட்டின் செங்கோட்டை, தென்காசி தாலுகாக்களில் உள்ள ஏதாவதொரு சிற்றூரில் சில நாட்கள் வசித்துப் பார்க்கவேண்டும்.

மாந்தோப்பைப் பற்றி நினைக்கும்போது பல வருடங்களுக்கு முன்னால் நடந்த அந்த பயங்கர சம்பவங்கள் என் நினைவுக்கு வருகின்றன. நினைத்துப் பார்த்தால் ஏதோ கற்பனைக் கதை மாதிரித்தான் இருக்கிறது.

ஆயிரத்துத் தொளாயிரத்து நாற்பதாம் வருடம், தென்காசியில் சப் இன்ஸ்பெக்டராக இருந்தேன். அப்போது வைகாசி மாதத்தில் ஒரு நாள், பக்கத்திலுள்ள காசி மேஜர்புரம் என்ற கிராமத்தில் ஒரு கொலைக்கேஸ் விஷயமாக நாள் முழுவதும் சுற்றி அலைந்துவிட்டு. மாலை ஆறுமணிக்குத்தான் வீடு திரும்பியிருந்தேன்.

உடுப்புக்களைக் கழற்றிவிட்டு, ஈஸிசேரில் சாய்ந்தேன். ஆபீஸிலிருந்து ஏட்’ தலைதெறிக்க ஓடிவந்தான். “என்ன சங்கதி? ஏன் இவ்வளவு அவசரம்?” என்று கேட்டேன்.

“இலஞ்சி நெல்லையப்பப் பிள்ளை வந்திருக்கிறாருங்க; ஏதோ அவசரமா ரிப்போர்ட் செய்யணுமாம்.”

“நல்ல அவசரம் போ.” நான் அலுத்துக்கொண்டே புறப்படத் தயாரானேன். போலீஸ் உத்தியோகத்துக்கு நேரம் காலம் ஏது? அந்தப் பிராந்தியத்திலேயே பெரிய மனிதர் நெல்லையப்பப் பிள்ளை; நிறைய தோட்டம் துரவுகளுக்குச் சொந்தக்காரர். அவர் ரிப்போர்ட்’ செய்ய ஓடிவந்திருக்கும் போது, நான் போகாமலிருந்தால் நன்றாக இருக்குமா? எனவே, உடனே கிளம்பினேன். ஸ்டேஷனுக்குப் போய் நெல்லையப்பப் பிள்ளை கூறிய விஷயத்தைக் கேட்டபோது, எனக்கு ஆச்சரியம் நிலை கொள்ளவில்லை.

குற்றாலத்துக்கும் இலஞ்சிக்கும் நடுவில் நெல்லையப்பப் பிள்ளைக்குச் சொந்தமான பெரிய மாந்தோப்பு ஒன்று இருந்தது. மாமரங்களைத் தவிர, பலா, தென்னை முதலிய வேறு மரங்களும் அந்தத் தோப்பில் உண்டு. இருபது முப்பது ஏக்கர் விஸ்தீரணமுள்ள பெரிய தோப்பு அது.

மாமரங்களும் பலா மரங்களும் கிளைகள் இற்று விழுந்து விடுமோ என்று எண்ணும்படி காய்த்துக் குலுங்கின. இன்னும் ஓரிரு வாரங்களில் தோப்பைக் குத்தகைக்கு விட்டு விடலாம் என்று தீர்மானித்திருந்தார் நெல்லையப்பப் பிள்ளை. சாதாரணமாக ஏழாயிரம் எட்டாயிரம் என்ற தொகைக்கு மேல் அந்தத் தோப்பு குத்தகை போனது இல்லை. அந்த வருடத்தில் பத்து, பன்னிரண்டாயிரம் வரைகூடக் குத்தகைக்காரர்கள் கேட்டார்கள் குத்தகைக்காரரிடம் ஒப்புவிக்கிற ஒரு பூ பிஞ்சுகூடக் களவு போய் விடக்கூடாது என்று அக்கறையாகக் காவலுக்கு ஏற்பாடு செய்திருந்தார் பிள்ளை. ஒன்றுக்கு நாலு பேராகக் காவற்காரர்களை நியமித்திருந்தார் அவர். நாலு காவற்காரரும் இராப்பகலாகக் காத்து வந்தனர். அப்படி இருக்கும் போது தான் பயங்கரமான அந்தத் திருட்டு நிகழ்ந்துவிட்டது. நெல்லையப்பப் பிள்ளை கூறியபடியே அதை நான் எழுதுகிறேன்.

“சார்! நேற்று அமாவாசை. நான் ஒரு காரியமாகக் கடையநல்லூர் போய்விட்டு இன்று மத்தியானம்தான் திரும்பினேன். நேற்று இரவு இவ்வளவு பயங்கரமான முறையில், என் தோப்பில் கொள்ளை போகும் என்று நான் கனவில் கூட எதிர்பார்க்கவில்லை, ஸார்! இதுவரை இந்த மாதிரி களவு போனதில்லை.

“எங்கள் தோப்புக்கு நாலுபுறமும் வாசல் உண்டு. வாசல் என்றால் வேறொன்றுமில்லை. மூங்கில் பிளாச்சுகளால் செய்யப்பட்ட சாதாரண அடைப்பான் கதவுதான். காய்ப்புக் காலத்திலே நாலுபக்கத்து வாசலிலேயும் காவலாட்கள் இருப்பது வழக்கம். அதே போல் நேற்று அமாவாசை இரவும் ஆட்கள் காவலுக்குப் படுத்திருந்திருக்கிறார்கள். இன்று காலையில் போய்ப் பார்த்தபோது வடக்கு, மேற்கு தெற்கு ஆகிய மூன்று திசையிலும் காவல் இருந்த ஆட்கள் இரத்தம் கக்கிச் செத்துக் கிடந்தார்களாம். கிழக்குப் பக்கம் காவல் காத்துக் கெண்டிருந்த ஆள் இருபது இருபத்தைந்து கெஜ தூரம் ஓடி வந்து மயங்கிக் கிடந்தானாம். சுமார் ஆயிரம் ரூபாய்க்கு மேல் பெறுமானமுள்ள நல்ல ஜாதி மாங்காய்களும் பலாப்பழங்களும் தோப்பிலிருந்து களவாடப் பட்டிருக்கின்றன. உயிரோடு பிழைத்த கிழக்குப்புறத்துக் காவலனை மயக்கம் தெளிவித்துக் கேட்டுப் பார்த்தால் அவன் கூறுவதை யாரும் நம்ப முடியவில்லை. நள்ளிரவில் பூதாகாரமான ஒரு ஆள் சிவபெருமான் மாதிரிக் கழுத்தில் பாம்பு படம் விரித்தாடக் கையில் நெருப்பு ஏந்திப் பயங்கரமாகக் குதித்துக் கொண்டு ஓடி வந்தானாம். கையில் நெருப்பு, கழுத்தில் நல்ல பாம்புமாகப் பூதம் மாதிரி இருந்த அந்த உருவம் தன்னைத் துரத்தியதாகவும் தான் கொஞ்ச தூரம் ஓடி மயங்கி விழுந்து விட்டதாகவும் அவன் கூறினான். எனக்கு நம்பிக்கை இல்லை.” கூறி முடிப்பதற்குள் நெல்லையப்பப் பிள்ளைக்கு முகத்தில் முத்து முத்தாக வியர்வை அரும்பிவிட்டது. கூறும்போது நடுநடுவே அவருக்கே வாய் குழறியது.

“ஏன் பிள்ளைவாள்? இரத்தம் கக்கிச் செத்துப் போனதாகச் சொன்னீர்களே; மூன்று காவற்காரர்கள், அவர்கள் பிரேதங்களை என்ன செய்தீர்கள்?”

“லோகல் பண்டு ஆஸ்பத்திரியிலே பரிசோதனைக்கு அனுப்பித்திருக்கிறேன். டாக்டர் உங்களையும் வைத்துக் கொண்டுதான் பரிசோதிக்க வேண்டும் என்கிறார்…”

“அது சரி! உயிர் தப்பிய காவற்காரன் உங்கள் வசம் பாதுகாப்பில் தானே இருக்கிறான்? ஆளை வேறெங்கும் விட்டுவிட வில்லையே?”

“இல்லை சார்! அவன் அங்கேதான் இருக்கிறான்.”

“சரி; அப்படியானால் வாரும் போகலாம்!” நான் நெல்லையப்பப் பிள்ளையையும் அழைத்துக் கொண்டு அவரோடு உடனே இலஞ்சிக்குப் புறப்பட்டுச் சென்றேன்.

துர்மரணம் அடைந்த காவற்காரர்கள் மூன்று பேரையும் பரிசோதித்த டாக்டர் எனக்குப் பயன்படும்படியான விசேஷத் தகவல் எதனையும் கூறவில்லை . “பயம் மிகுதியில் அதிர்ச்சியடைந்து மூச்சு நின்று இறந்திருக்கிறார்கள். இவர்கள் இரத்தம் கக்கி இறந்ததற்கு வைத்திய ரீதியாக எந்தக் காரணமும் தென்படவில்லை !” அவர் கூறியதைக் குறித்துக் கொண்டு காவற்காரர்களின் பிரேதங்களை உரிய உறவினர்களிடம் ஒப்படைத்தேன். இறுதிக் கிரியைகளுக்கு ஏற்பாடு செய்யப்பட்டது. அப்போது இரவு ஏழரை மணி இருக்கும்.

“நெல்லையப்பப் பிள்ளை! ஒரு பெட்ரோமாக்ஸ் லைட்டை எடுத்துக்கொள்ளும். உயிரோடு இருக்கும் கிழக்குப் பக்கத்துக் காவற்காரனையும் கூட்டிக் கொள்ளும். இப்போதே போய் உம்முடைய தோப்பையும் பார்வையிடவேண்டும்” என்றேன் நான். அவரும் சம்மதித்தார். காவற்காரன் பெட்ரோமாக்ஸ் லைட்டோடு வந்தான். மூவரும் தோப்புக்குச் சென்றோம். அமாவாசைக்கு மறுநாள் ஆயிற்று; நல்ல இருட்டு. போகும் போதே காவற்காரனிடம் பேச்சுக் கொடுத்துப் பார்த்ததில் அவன் தோப்பிற்குள் நுழைவதற்கே நடுங்குகிறான் என்று தெரிந்தது.

“என்னப்பா? தோப்பிலே படுத்துத் தூங்கி ஏதாவது கனவு கினவு கண்டாயா? சிவபெருமான் மாதிரி அப்படி இப்படி என்று உளறுகிறாயே?” ஏதாவது புதிய உண்மையை அறியலாம் என்று அவனை நையாண்டி செய்வதுபோல் அவன் வாயைக் கிண்டினேன்.

“ஐயோ! சாமீ… நான் பொய் ஏன் சொல்றேனுங்க, சாமி?… நிசமோ, இல்லையோ; அதைக் கண்ணாலே கண்டதும், அது என்னை ஓடிப் பாஞ்சு துரத்தினதும், நான் மயங்கி விழுந்ததும் இன்னும் நல்லா நினைவிருக்குதுங்க!” – என்று கூறினான் அவன். அந்தக் குரலில் உண்மையாகவே பதற்றம் இருப்பதையும் நான் கவனித்தேன்.

பெட்ரோமாக்ஸ் லைட்டின் துணையால் மாந்தோப்பின் நான்கு பக்கமும் சுற்றிப் பார்த்தோம். காய்களும் பழங்களும் களவாடப்பட்ட மாமரங்களையும் பலா மரங்களையும் அருகில் அழைத்துச் சென்று எனக்குக் காண்பித்தார் நெல்லையப்பப் பிள்ளை . அம்மரங்களின் கீழே ஒடிந்து கிடந்த சிறு கிளைகளையும், உதிர்ந்து கிடந்த இலைகளையும் பிற அலங்கோலங்களையும் காணும் போது, திருடியவர்கள் பதற்றத்தோடும் அவசரமாகவும் திருடியிருக்கிறார்கள் என்பதை அனுமானிக்க முடிந்தது.

ஒரு பலாமரத்தின் கீழே விளக்கு வெளிச்சத்தில் ஏதோ மின்னியது. நான் விளக்கைத் தரையை ஒட்டித் தணித்து பிடிக்கச் சொன்னேன். காவற்காரன் அப்படியே eசெய்தான் கீழே குனிந்து அதை கையில் எடுத்தேன் அது ஒரு சலங்கைக் கொத்து! நாட்டியமாடுகிறவர்கள் காலில் கட்டிக் கொள்வார்களே; அந்தப் பாணியில் வரிசையாக ஒரு பட்டுக் கயிற்றில் சலங்கைகள் தொடுக்கப்பட்டிருந்த அதைக் கைவசம் பத்திரமாக வைத்துக் கொண்டேன். மீண்டும் ஏதாவது தடையம் கிடைக்குமா என்று எல்லா மரங்களின் அடியிலும் சுற்றி விட்டுத் திரும்பினோம்.

“ஏனப்பா? நேற்றிரவு அந்தச் சிவபெருமானைப் போன்ற பயங்கர உருவம் உன்னைத் துரத்தியபோது வேறு ஏதாவது ஓசைகள் கேட்டதா? அல்லது அந்த உருவம் ஏதாவது வாய் திறந்து பேசியதா? நன்றாக யோசித்து நினைவு படுத்திக் கொண்டபின் சொல்!” – தோப்பிலிருந்து திரும்பி வரும்போது நான் காவற்காரனை நோக்கிக் கேட்டேன்.

அவன் சிறிதுநேரம் யோசித்துவிட்டு எனக்குப் பதில் சொன்னான் : “அப்போ இருந்த நடுக்கத்துலே நான் அதெல்லாம் ஒண்ணும் தெளிவா கவனிக்கலீங்க. ஏதோ வெண்கலத் தாம்பாளத்தை மடமடன்னு உருட்டின மாதிரியும், பத்து இருபது மணிகளை ஒரே சமயத்திலே குலுக்கின மாதிரியும், நடுவிலே சலங்கை ஒலியும் கேட்ட மாதிரியும் இருந்திச்சுங்க. ஆனால், அது வாயைத் திறந்து பேசலேங்கறது மட்டும் எனக்கு நல்லா நினைவிருக்குங்க!” என்று கூறினான்.

மறுநாள் காலை ஒரு கான்ஸ்டபிளை இலஞ்சிக்கு அனுப்பி நெல்லையப்பப் பிள்ளையையும் காவற்கார சிவனாண்டியையும் ஸ்டேஷனுக்கு வரவழைத்தேன். பிள்ளையிடம், முறைப்படி ஒரு ‘கம்ப்ளெயிண்’டும், காவற்காரனிடம், நடந்ததாக அவன் கூறிய செய்திகளடங்கிய ஒரு வாக்குமூலமும் எழுதி வாங்கிக் கொண்டேன்.

“பிள்ளைவாள்! இனி ஆகவேண்டியதை நான் கவனிக்கிறேன். பழைய படியே மீண்டும் தோப்புக் காவலுக்கு நாலு ஆள் நியமித்து வையுங்கள், கூட இரண்டு மூன்று பேர் நியமித்தாலும் பரவாயில்லை. ஆனால் ஒன்று. எதற்கும் அசைந்து கொடுக்காத நல்ல தைரியசாலிகளாகப் பார்த்துக் காவலுக்கு அமர்த்துங்கள். இந்த நிகழ்ச்சிகளையெல்லாம் முன்பே அவர்களுக்குக் கூறி, எதற்கும் பயப்படக் கூடாது என்று எச்சரியுங்கள். சிவனாண்டியும் பழையபடி இருக்கட்டும். அதோடு இந்த வருஷம் தோப்பைச் சொந்தத்திலேயே வைத்துக் கொள்ளுங்கள். குத்தகைக்கு விட வேண்டாம். அதனால் என்ன நஷ்டம் ஆனாலும், சரி.” – என்று சில விவரங்களை அவருக்குக் கூறிய பின் அவரையும் காவற்காரனையும் அவர்கள் இருப்பிடத்துக்கு அனுப்பிவிட்டேன்.

இதற்குப் பிறகு ஏற்கனவே என்னிடம் வந்திருந்த காசி மேஜர்புரத்துக் கொலைக் கேஸ் விஷயமாக அலையும் செயலை மேற்கொண்டதனால், இந்த மாந்தோப்பு விவகாரத்தைச் சில நாட்கள் கரடியாக மருந்து போகும்படி நோட்டு விட்டது நெல்லையப்பப் பிள்ளையின் ‘கம்ப்ளெயிண்’டும் சிவனாண்டியின் வாக்குமூலமும், தடையமாகக் கிடைத்திருந்த சலங்கைக் கொத்தும் என்னுடைய மேஜை டிராயரில் தூங்கின. நான் என்ன செய்வது? நான் சும்மா இருக்கவில்லையே? இதற்கு முன்பே நடந்த வேறோரு கேஸைக் கவனிக்க வேண்டிய பொறுப்பும் எனக்கு இருந்தது. காசி மேஜர்புரத்துக் கொலையில் சம்பந்தப்பட்ட முக்கியமான ஆள் ஒருவன் ஆலப்புழையில் இருப்பதாக எனக்கு ஓர் இரகசியத் தகவல் கிடைத்தது.

மலையாளத்திற்குப் போய் ஆலப்புழையில் மறைந்திருக்கும் குற்றவாளியை நாமே தேடப்போவதா? அல்லது இலாகாவிலுள்ள ஸி.ஐ.டி.களில் யாரையாவது அனுப்பலாமா? இப்படி யோசித்துக் கொண்டிருந்தேன்.

இந்தச் சமயத்தில் நானே ஆலப்புழைக்கு போய்ச் சேர வேண்டிய வேறு ஓர் அவசியம் ஏற்பட்டது. ஆலப்புழைக்கு அருகில் அம்பலப்புழை என்று ஒரு ஊர் இருக்கிறது. அங்கே எனக்கு ஒரு பழம்பெரும் நண்பர் உண்டு. அவர் எங்கள் இலாகாவில் பெரிய உத்தியோகத்திலிருந்து ஓய்வு பெற்றவர். நாராயணமேனன் என்று பெயர். ஆவணி மாத நடுவில் மலையாளத்தில் கோலாகலமாகக் கொண்டாடப்படும் ஓணம் பண்டிகை வருகிறதென்றும், அதற்கு நான் கட்டாயம் வந்து குறைந்த பட்சம் ஒரு வாரமாவது தன்னோடு தங்கிப் போக வேண்டுமென்றும் அவர் எனக்குக் கடிதம் எழுதியிருந்தார். ஏற்கனவே, பலமுறை அவருடைய அழைப்பை நிறைவேற்ற முடியாமல் தட்டிக் கழித்திருந்தேன்; இந்தத் தடவையும் அப்படிச் செய்வதற்கில்லை. கேஸ் விஷயமாகவும் அலைந்தாற் போலிருக்கும் என்று எண்ணிக்கொண்டு, செங்கோட்டை வழியாகத் திருவனந்தபுரம் போய், அங்கிருந்து மோட்டார் போட்’ மூலம் அம்பலப்புழை போய்ச் சேர்ந்தேன். என்னைக் கண்டதும் நாராயணமேனனுக்கு மகிழ்ச்சி நிலைகொள்ள வில்லை.

“இல்லை! இல்லை! நான் கால்வாசிதான் உங்கள் விருந்தினராக ஓணம் பண்டிகைக்கு வந்திருக்கிறேன். முக்கால்வாசி என் உத்தியோக காரியமாகச் சில ஆட்களைத் தேடி வந்திருக்கிறேன்” என்று சிரித்துக்கொண்டே அவருக்குப் பதில் சொன்னேன். வெகு நாட்களுக்குப் பின்பு ஏற்பட்ட அருமையான சந்திப்பால், பொழுது சிரித்தும் பேசியும் கழிந்து கொண்டிருந்தது. சாயங்காலம் ஆயிற்று.

“இன்று இங்கே கிருஷ்ணன் கோவில் வாசலில், கதகளி, ஒட்டந்துள்ளல் முதலிய ஆட்டங்கள் சிலவற்றுக்கு ஏற்பாடு செய்திருக்கிறார்கள். இந்தக் கதகளி நாட்டியமும் ஓட்டந்துள்ளல் ஆட்டமும் எங்கள் கேரளத்துக்கே உரிய சிறப்பான கலைகள், ஸார். நீங்கள் வராதவர் வந்திருக்கிறீர்கள். இன்றிரவுதான் இப்படிக் கழியட்டுமே, போய்ப் பார்க்கலாம், வாருங்கள் !” என்று அழைத்தார் நாராயணமேனன். நான் முதல் நாள் பிரயாணம் செய்து வந்த அலுப்பையும் பொருட்படுத்தாமல் கதகளி நாட்டியம் பார்க்கப் போவதற்கு இணங்கினேன்.

நானும் நண்பர் நாராயணமேனனும், இரவு ஏழரைமணி சுமாருக்கு அம்பலப்புழையிலுள்ள பிரசித்தி பெற்ற கிருஷ்ணன் கோவிலுக்குப் போய்ச் சேர்ந்தோம். கோவில் வாசலில் நாட்டியத்திற்காக, அலங்கரிக்கப்பெற்ற பந்தற் போட்டு அரங்கம் அமைத்திருந்தார்கள்.

நாட்டியம் ஆரம்பித்தது. புராண இதிகாசங்களிலிருந்து சில காட்சிகளை நாட்டியமாக ஆடிக்காட்டினார்கள். கதகளி நாட்டியத்தின் அமைப்பும், ஆடை அணிகளும், பாணிகளும் ஒருவிதமான கம்பீரத்துடன், பார்ப்பவர்கள் பிரமிக்கும்படி அமைந்திருந்தன. முகமூடி, வரிந்து வரிந்து அடுக்கடுக்காகக் குஞ்சங்கள் தொங்கும் ஆடை, அவற்றின் நுனியில் சிறுசிறு மணிகள், கை, கால்களில் சலங்கைகள், இந்த அலங்காரத்தால் பூதம்போல் தோன்றும் சரீரம் – இப்படிச் சிலர் வந்து மேடைமேல் ஆடிக் கதையைச் சித்தரித்துக் காட்டினார்கள். வெண்கலத் தாம்பாளத்தில் தட்டுவது போன்ற ஓசை ஒன்று அடிக்கடி பின்னாலிருந்து இசைக்கப்பட்டது. வேகமாக ஓடித்துள்ளுகிற ஓட்டந்துள்ளல் ஆட்டமும் பார்க்க விறுவிறுப்பாக இருந்தது. நாட்டியம் முடியும்போது இரவு பத்தரை மணி. “மேனன் சார்! கேரளத்தின் சிறப்புக்கு இந்த நாட்டியக் கலையும் ஒரு காரணந்தான். இரண்டு மணி நேரத்திற்குள் என் மனத்தைக் கொள்ளை கொண்டுவிட்டதே இந்தக் கலை! என்ன அருமையான ஆட்டம்!” என்று பாராட்டினேன் நான்.

“ஆமாம்! கேசவ குரூப் ஆட்டம் என்றால், மனம் என்ன? சமயா சமயங்களில் எல்லாமே கொள்ளை போய் விடும்!” என்று அவர் கூறினார்.

“யாரைக் கேசவ குரூப்’ என்கிறீர்கள்? எனக்கொன்றும் புரியவில்லையே?”

“அவன்தான் சார், இந்த நாட்டியக் கோஷ்டிக்குத் தலைவன். இன்றைக்கு ‘முருமகஜனனம்’ நடந்தபோது சிவன் வேஷத்தில் மேடைமேல் பயங்கரமாகப் பாய்ந்து பாய்ந்து ஆடினான், பாருங்கள் ! அவன்தான் கேசவ குரூப்!”

“அவனுக்கென்ன? அவனிடம் ஒரு தினுசாகச் சிரித்துக் கொண்டு ஏதோ பேசிக்கொண்டிருந்தீர்களே?” நான் ஆவலோடு மேனனைக் கேட்டேன்.

“அதில்லை ! இந்தப் பயல் சிறுவயதிலிருந்து எனக்குப் பழக்கமானவன். அற்புதமான கலைஞானம் இந்தக் கதகளியில் இவனுக்கு இருக்கிறது. இருந்தென்ன பிரயோஜனம்? நடத்தை மோசம்.”

“எந்த நடத்தையைச் சொல்கிறீர்கள்?”

“வேறொன்றுமில்லை; இந்த நாட்டியத்தை வைத்துக் கொண்டு இவனால் சம்பாதித்துப் பிழைக்க முடியவில்லை. இவனுடைய கோஷ்டிக்கு முழு வயிறு நிறைய இந்தக் கலை மட்டும் போதவில்லை. அதனால் நாட்டியமில்லாத இரவுகளில் கோஷ்டியாகத் திருடப் புறப்பட்டு விடுகிறான்… அதுவும் அவன் திருட்டு எல்லாம் நூதன முறைகள்”.

என் சந்தேகம் வலுப்பட்டுவிட்டது. நான் மேலும் தொடர்ந்து நாராயண மேனனிடம் கேசவ குரூப்பைப் பற்றியும் அவனுடைய ‘கதகளி’ நடன கோஷ்டியைப் பற்றியும் பல விவரங்களைக் கேட்டுத் தெரிந்துகொண்டேன்.

“ஒன்றரை மாதம் இரண்டு மாதத்துக்கு முன்னால், திடீரென்று, இவனும் இவன் கோஷ்டியாரும் ‘நாட்டிய ஸீஸன்’ டல்லாயிருந்தபோது, மாம்பழமும் பலாப்பழமும் விற்க ஆரம்பித்து விட்டார்கள். என் வீட்டுக்குக் கூடை நிறைய பழங்களோடு விற்பனைக்கு வந்து சேர்ந்தான் இவன். என்னடா, குரூப்! நீ எப்போது மாம்பழ வியாபாரியானாய்? கதகளியும் ஓட்டந்துள்ளலும் என்ன ஆயிற்று? இதென்ன, விலைக்கு வாங்கி வந்து விற்கிற மாம்பழந்தானா? அல்லது…” என்று கேட்டேன் நான்.

“சும்மாக் கேலி செய்யாதீங்க. போங்க…” என்று குழைந்தான் இவன். எனக்குத் தெரிந்துவிட்டது. பயல் எவன் தோப்பிலோ சரியாகத் தேட்டைப் போட்டுக் கொண்டு வந்திருக்கிறான் என்று அனுமானித்துக்கொண்டேன். கதகளி ‘சான்ஸ்’ குறைந்த சமயங்களில், ரஸிகர்களின் மனத்தைக் கொள்ளை கொண்டு ஆடுவதுபோலவே வேறு விதமான கொள்ளையில் ஈடுபட்டு விடுவான் இவன்!” நாராயணமேனன் கூறிக்கொண்டே இருந்தார். எனக்குக் கிடைக்கவேண்டிய குற்றவாளி சுலபமாகக் கிடைத்துவிட்டான்; நான் எல்லா விவரங்களையும் மேனனிடம் கூறினேன். அதோடு, கேசவ குரூப்பை அன்றிரவே கைது செய்து கொண்டுபோக ஏற்பாடு செய்யவேண்டும் என்றேன்.

“ஸார்! நானும் போலீஸ் இலாகாவில் இருந்தவன்தான். ஆனால், ஒரு வேண்டுகோள். இந்தக் கேசவ குரூப் செய்தது பெரிய கொள்ளைதான். தவிர மூன்றுபேர் இறக்கக் காரணமாகவும் இருந்திருக்கிறான். இவனைக் கைது செய்ய வேண்டியது அவசியம்தான். ஓணம் பண்டிகைக்கு இன்னும் மூன்று நாட்கள் இருக் கின்றன. தயவு செய்து அதுவரை வெளியே இருக்கட்டும். அல்லாமலும் ஓணத்தன்று இவனுக்குச் சில நாட்டிய புரோகிராம்கள் இருக்கின்றன. தான் மகிழ்வது பிறரை மகிழ்விப்பது’ – என்பது எங்கள் ஓணத்தின் தத்துவம். நீங்கள் என் விருந்தினராக வந்த தோஷத்திற்காகவாவது இதற்கு இணங்க வேண்டும். ஓணம் முடிந்த மறுநாளே நான் கூட இருந்து உங்களுக்கு இவனைப் பிடித்துத் தருகிறேன்.” நாராயணமேனன் உருக்கமாக வேண்டிக்கொண்டார். நானும் மறுக்க முடியாமல் இணங்கினேன். உடனே தென்காசியில் எங்கள் ஸ்டேஷனிலிருந்த ‘ஏட்டுக்கு ஒரு தந்தி கொடுத்தேன்; “என் மேஜை டிராயரிலுள்ள சலங்கைக் கொத்தையெடுத்துக் கொண்டு நெல்லையப்பப் பிள்ளை , காவற்காரச் சிவனாண்டி இவர்களோடு நீ உடனே புறப்பட்டு வா” – என்று.

என் தந்தி கிடைத்ததுமே ‘ஏட்டு’ முதலிய மூவரும் புறப்பட்டு திருவனந்தபுரம் மார்க்கமாக அம்பலப் புழைக்கு வந்து சேர்ந்தனர். அவர்கள் மூவரும் என்னோடு நாராயணமேனனின் விருந்தாளியாகவே தங்கியிருந்தனர்.

ஓணத்தன்று இரவு முன்பு நடந்த அதே கிருஷ்ணன் கோவில் வாசலில், கேசவ குரூப் கோஷ்டியார் சிவபார்வதி நடனம் ஆட இருந்தார்கள். மணிபுரி, கதக், பரத நாட்டியம் இவைகளைக் காட்டிலும் கதையை விறு விறுப்பாக அமைத்துக் காட்டும் தன்மை கதகளிக்குப் பொருந்தியுள்ளது. அதனால் தான் கதைத் தொடர்பின்றிக் கதகளி சிறப்பதில்லை.

நாராயணமேனனோடு நானும் நெல்லையப்பப் பிள்ளை, ஏட், சிவனாண்டி ஆகியோரும் அன்றிரவு சிவ பார்வதி நடனம் பார்க்கப் போயிருந்தோம். போகும் போதும் மாந்தோப்பில் அகப்பட்ட தடையமான சலங்கைக் கொத்தையும் எடுத்துச் சென்றிருந்தேன் நான். நாங்கள் அரங்கிற்கு முன் முதல் வரிசையில் வரிசையாக உட்கார்ந்து கொண்டோம். வேண்டுமென்றே காவற்காரச் சிவனாண்டியை என் பக்கத்தில் உட்கார்த்தியிருந்தேன் நான்.

நாட்டியம் ஆரம்பமாயிற்று. அதே வெண்கல ஒலி, தபேலே, சலங்கைகளின் ஒலி எல்லாம் கலந்து ஒலித்தன. முதல் முதலாக கேசவ குரூப்தான் சிவபெருமான் வேஷத்தில் பயங்கரமான தோற்றத்துடன் முழுவும் தீப்பந்தமும் ஏந்திக் கழுத்தில் நல்ல பாம்பு அணிந்து (விஷப்பல் பிடுங்கி பழக்கப்பட்ட பாம்பு) ஓட்டந்துள்ளல் பாணியில் தாவித்தாவி மேடையதிர ஆவேசமாக ஆடினான்… அவ்வளவுதான் ! என் பக்கத்தில் இருந்த காவற்காரச் சிவனாண்டி “ஐயோ! இதே பூதம்தான்.. விடாதீர்கள்…. பிடியுங்கள்.” என்று பயங்கரமாக அலறிக்கொண்டே எழுந்திருந்து விட்டான் எழுந்த வேகத்தில் மூர்ச்சையாகிப் பொத்தென்று கீழே விழுந்தான். இந்தச் சப்தத்தால் ஆட்டத்தை நிறுத்திவிட்ட கேசவ குரூப் மேடையிலிருந்து சிவனாண்டியையும் போலீஸ் உடையிலிருந்த ஏட்டை யும் பார்த்துவிட்டான். குபீரென்று விளக்குகள் அணைந்தன. கேசவ குரூப் ஓடத் தயாராகிவிட்டான். நானும் ஏட்டு’ம் மேடைமேல் பாய்ந்தோம். வேஷத்தை அவசர அவசரமாகக் கலைத்துக்கொண்டிருந்தான் குரூப். அவனைப் பிடித்துக் கைது செய்துவிட்டோம். கையில் விலங்கு மாட்டிய போது, கேசவ குரூப்பின் வலது கையில் கட்டியிருந்த சலங்கையின் சரத்தைப் பார்த்தேன். அந்தச் சரத்தின் ஒரு பகுதி மூளியாகி இருந்தது. என்னிடமிருந்த தோப்பில் கிடைத்த, சலங்கைக் கொத்தை அந்த மூளிப் பகுதியில் வைத்துப் பார்த்தேன். அது சரியாகப் பொருந்தியது.

இதற்குள் மேனனும் பிள்ளையுமாக சிவனாண்டியின் மூர்ச்சையைத் தெளிவித்திருந்தார்கள். கேசவ குரூப் கோஷ்டியைச் சேர்ந்த வேறு சிலரையும் கைது செய்தோம். கோஷ்டியாக ஒரு லாரியில் சென்று நாலைந்து பேர் கதகளி வேடந்தரித்து, காவற்காரர்களை மருளச் செய்தபின், தோப்பில் புகுந்து கொள்ளையடித்து, லாரியிலேயே, காய் பழங்களுடன் மலையாளம் திரும்பிவிட்டதாக நடந்ததை மறுக்காமல் குற்றத்தை ஒப்புக்கொண்டு விட்டான் கேசவ குரூப். “என்னய்யா? இவரு என் மனத்தையே கொள்ளை கொண்டு சிவபெருமான் மாதிரி ஆடினாரு. இவரைப் போய் கைது செய்திருக்கீங்களே!” – என்றார் பிள்ளை.

“மனத்தை மட்டுமல்ல; தோப்பைக் கொள்ளை கொண்டவனும் இவன்தான்” என்றேன் நான். மேனனுக்கு என் மேல் கொஞ்சம் வருத்தம். நிபந்தனைக்கு முன்பே ‘குரூப்’ பைக் கைது செய்துவிட்டேன் என்று!

– 1963-க்கு முன், நா.பார்த்தசாரதி சிறுகதைகள் (இரண்டாம் தொகுதி), முதற்பதிப்பு: டிசம்பர் 2005, தமிழ்ப்புத்தகாலயம், சென்னை

Print Friendly, PDF & Email

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *