கதையாசிரியர்:
தின/வார இதழ்: விகடன்
கதைத்தொகுப்பு: கிரைம்
கதைப்பதிவு: August 7, 2012
பார்வையிட்டோர்: 14,492 
 
 

‘‘நீங்க செய்யச் சொல்றது ரொம்பப் பெரிய பாவம்கிறது உங்களுக்குத் தெரியாதா?’’

கண்களை அரை நிமிடம் மூடி, தன் இடக்காது மடலை விரல்களால் மெல்ல இழுத்துவிட்டபடி, எதிரே அமர்ந்திருந்த மருதநாயகத்தையே உற்றுப் பார்த்தபடி கேட்டார் சங்குண்ணி மாந்திரீகர்.

சங்குண்ணிக்கு வயது சுமார் ஐம்பது இருக்கலாம். ஒல்லியான தேகம். கூர்மையான நாசி. வேட்டி உடுத்தி, வெற்று மார்பில் ஏராளமாகச் சந்தனம் பூசியிருந்தார். நெற்றியில் பெரிய கருநிறப் பொட்டு. மலையாள நெடி கலந்த தமிழில் பேசினார்.

மருதநாயகம் கோயமுத்தூரில் பெரும் தொழிலதிபர். ரியல் எஸ்டேட், சினிமாப் பட விநியோகம், ஸ்பின்னிங் மில் எனப் பல தொழில்களிலும் வெற்றிக்கொடி நாட்டியவர். நாற்பது வயதுக்குள், மாவட்டத்தின் முதல் பத்துப் பணக்காரர்கள் பட்டியலில் இடம் பிடித்தவர்.

அப்படிப்பட்டவர் வெறும் தரையில் சப்பணமிட்டு, சங்குண்ணி முன் தலை கவிழ்ந்து உட்கார்ந்திருந்தார். ‘‘ஐயா! பாவம்னு தெரியும். ஆனா, எனக்கு வேற வழி தெரியலே. அதனாலதான் உங்களைத் தேடி வந்தேன்’’ என்றார் சன்னமான குரலில்.

‘‘சரி! கொஞ்ச நேரம் வெளியே இருங்க. யோசிச்சு சொல்றேன்’’ என்றார் சங்குண்ணி.

வெளியே இருந்த திண்ணை யில் அமர்ந்தவாறு, தூரத்தில் ஓடும் நூல்புழா ஆற்றையே வெறித்துப் பார்த்தபடி உட்கார்ந்திருந்தார் மருதநாயகம்.

நீலகிரி மலைச்சாரலில் கூடலூர் தாண்டி, கேரள எல்லையில் அமைந்திருந்தது பத்தேரி என்கிற அந்த அழகிய சிறு கிராமம். ஊரின் ஒதுக்குப்புறத்தில் விஸ்தீரணமான பரப்பில், கேரளாவுக்கே உரிய பாணியில் இரண்டு அடுக்குகளாக அமைந்திருந்தது சங்குண்ணி மாந்திரீகரின் வீடு. வீட்டில் அவருக்கு உதவியாளர்களைப் போல் இரண்டு ஆண்கள் தென்பட்டனர். அவர்களும் அதிகம் பேசிக் கொள்ளவில்லை. ஒருவித அச்சம் தரும் அமைதி அங்கே மண்டிக் கிடந்தது.

மருதநாயகத்தின் மனம் சியாமளாவின் நினைவுகளில் மூழ்கியது. அவரது தியேட்டர் மேனேஜர் சந்தோஷின் மனைவிதான் சியாமளா. சந்தோஷ் வீட்டு கிரஹப் பிரவேச விழாவில்தான் சியாமளாவை முதன்முதலாகப் பார்த்தார் மருதநாயகம். அந்த நிமிடமே அவர் சியாமளாவின் அதி அற்புத அழகில் கிறங்கிப்போனார். செதுக்கிவைத்த சிற்பம் போன்ற அவளது தேகக் கட்டுடலும், சொக்க வைக்கும் தேன் குரலும் மருத நாயகத்தை வாட்டி எடுத்துவிட்டன. அன்று முதல், அவர் மனதில் காமப் பேய் புகுந்து ஆட்டத் தொடங்கியது. ஒரு தடவை, ஒரே ஒரு தடவை என்று மனசு கிடந்து தவியாய்த் தவித்தது. தனது சமூக அந்தஸ்து, வெளிநாட்டில் பெற்ற எம்.பி.ஏ. பட்டம் எல்லாவற்றையும் புறந்தள்ளி மோக அவஸ்தையில் மூழ்கித் துடிதுடித்துப் போனார்.

அந்தச் சமயத்தில்தான், அதிரூப் தியேட்டர் அதிபர் மாதப்பன் போன வாரம் கிளப்பில், சங்குண்ணி மாந்தி ரீகரைப் பற்றி யதேச்சையாகச் சொன்னது நினைவுக்கு வந்தது.

‘‘பிளாக் மாஜிக்னு சொல்றதெல்லாம் உண்மைதான் மிஸ்டர் நாயகம். கேரளாவுல பத்தேரிப் பக்கம் சங்குண்ணினு ஒரு மாந்திரீகர் இருக்காராம். அங்கே போய் தன் காரியத்தை சக்சஸ்ஃபுல்லா முடிச்சுக் கிட்டது பத்தி, என்னோட நண்பர் ஒருவர் என்கிட்ட ரகசியமா சொன்னார். அந்த விஷயத்தை இங்கே என்னால் சொல்ல முடியாது. அது நமக்குத் தேவையும் இல்லை. ஆனா, அவர் சொன்னதை வெச்சுப் பார்க்கும்போது மாந்திரீக மெல்லாம் உண்மையா இருக்கும்னுதான் தோணுது.’’

அப்போதே மருதநாயகம் சங்குண்ணியைப் பார்ப்ப தென்று தீர்மானித்து விட்டார். தானே காரை ஓட்டி வந்து, இதோ இன்று மதியம் சங்குண்ணியிடம் மறைக்காமல் பயபக்தியோடு தன் வேண்டுகோளையும் முன் வைத்துவிட்டார்.

சங்குண்ணியின் உதவியாளன் ஒருவன் வந்து, ‘‘மூப்பர் விளிச்சு’’ என்று மருதநாயகத்தை மீண்டும் உள்ளே அழைத்துச் சென்றான்.

இப்போது சங்குண்ணியின் முன்பாகச் சில சோழிகள் கிடந்தன.விநோதமான கோட்டுச் சித்திரங்கள் சில அவர் முன் தரையில் வரையப்பட்டு இருந்தன.

மருதநாயகத்தை உட்காருமாறு சைகை செய்த சங்குண்ணி, ‘‘நீங்க அந்தப் பெண்மணியை நிரந்தரமா அடைய விரும்புறீங்களா?’’ என்று, காற்றில் கோடுகள் வரைந்தபடியே கேட்டார்.

‘‘இல்லீங்கய்யா! அதெல்லாம் சரிப்படாதுங்க. ஒரே ஒரு நாள் மட்டும் அவகூட இருந்தாப் போதும். அதுக்கு ஏதாவது வழி சொல்லுங் கய்யா!’’ என்று வெட்கத்தை விட்டு, மன்றாடும் குரலில் கேட்டார் மருதநாயகம்.

‘‘அடுத்தவன் சம்சாரத்து மேல இவ்வளவு ஆசை வெச்சிருக்கீங்களே! ஏன், உங்க பாரியாள் மேல ஏதாவது அதிருப்தியோ?’’

‘‘ஐயோ! அதெல்லாம் இல்லீங்க. என் மனைவி கல்பனாவும் நல்ல அழகிதான். அற்புதமான ரெண்டு குழந்தைங்க! என்னோட பிஸினஸை எல்லாம் அவளே தனியா கவனிச்சுக்கிற அளவுக்கு அதி புத்திசாலி. என் மேல உசிரையே வெச்சிருக்கா!’’

சங்குண்ணி கண்களை அரை நிமிடம் மூடி, தன் இடக் காது மடலை விரல்களால் மெல்ல இழுத்துவிட்ட படி, ‘‘உம்… அப்ப பரகாயப் பிரவேசம் தான் ஒரே வழி!’’ என்றார். குழப்பமாகப் பார்த்தார் மருதநாயகம்.

சங்குண்ணியே தொடர்ந்தார்… ‘‘அதாவது, கூடு விட்டுக் கூடு பாயறது! அதுக்கு எதிராளி காலடி மண் வேணும். ஒரு மண்டலம் ஜீவன் ப்ரவேச வைராக்ய பூஜை பண்ணணும்! அப்புறம், நீங்க விரும்பின அந்தப் பெண்ணோட புருஷன் உடம்பிலே புகுந்து, உங்க விருப் பத்தை நிறைவேத்திக் கலாம். பரகாயப் பிரவேசத்தில் ரெண்டு வகை இருக்கு. ஒண்ணு, தற்காலிகமாக வேறொரு உடம்பில் கொஞ்ச நேரம் அல்லது கொஞ்ச நாள் புகுந்து இருக்கிறது. இன்னொண்ணு, உங்க இப்போதைய உடலை நீங்கி, நிரந்தரமாய் வேறொரு உடம்பில் குடி போயிடறது. இந்த ரெண்டாவது வகையில், நீங்க உங்க பழைய நிலைக்குத் திரும்ப முடியாது. உங்க உடல் ஆவி போய் விட்ட சடலமாகி விடும்.’’

மருதநாயகம் குபீ ரென்று எழுந்து, உரக்கக் கூவினார்… ‘‘ஐயோ! அதெல்லாம் வேண்டாங்க! ஒரே ஒரு நாள் மட்டும் போதும். இத்தனை சொத்து, சுகம், குடும்பம், வாழ்வு இதையெல்லாம் விட்டுட்டு, சாதாரண தியேட்டர் மேனேஜராகக் காலம் தள்ள நான் தயாரில்லை!’’

‘‘பதற்றப்படாதீங்க! விவரமாகச் சொல்லணும்னுதான் அதைச் சொன்னேன். நீங்க கவலைப்படாம போய், அந்தப் பெண்மணியோட புருஷன் காலடி மண்ணை மட்டும் கொண்டாங்க. மிச்சத்தை நான் பார்த்துக்கறேன்’’ என்று சொன்னபடி, மீண்டும் கண்களை அரை நிமிடம் மூடி, தன் இடக் காது மடலை விரல்களால் மெல்ல இழுத்துவிட்டுக்கொண்டார் சங்குண்ணி.

மறுநாளே, சந்தோஷின் காலடி மண்ணை எப்படியோ சேகரித்து, மீண்டும் பத்தேரி வந்து சங்குண்ணியிடம் சேர்ப்பித்தார் மருதநாயகம்.

‘‘இன்னியிலேர்ந்து நாப்பத் தெட்டாவது நாள் நெறைஞ்ச அமாவாசை! சரியா ராத்திரி பந்தரண்டு மணிக்குப் பரகாயப் பிரவேசம் நடக்கும். போய் வாங்க!’’ என்று விடை கொடுத்தார் சங்குண்ணி.

நாற்பத்தேழு நாட்கள் பறந்தன. நாற்பத்தெட்டாவது நாள் காலையில், சங்குண்ணி வீட்டின் முன் சிறு கூட்டம். உதவியாளன் ஒருவன் வருத்தத்தோடு சொல்லிக்கொண்டு இருந்தான்… ‘‘மாந்திரீகர் நேத்து வரைக்கும் நல்லாதான் இருந்தார். காலையில் பார்த்தா பிராணன் போயிருக்கு.’’

அதே சமயம்… மருதநாயகத்தின் வீட்டில் அவரது கார் நுழைந்தது. டிரைவர் பவ்யமாகக் கார் கதவைத் திறந்ததும், பின் சீட்டில் இருந்து இறங்கிய தன் எஜமானரைப் பார்த்து அவர் வீட்டு நாய் வாலை ஆட்டுவதற்குப் பதிலாக ஆக்ரோஷமாகக் குரைத்தது. மருதநாயகத்தின் மனைவி கல்பனா ஆவலுடன் அவரை வரவேற்றாள். கண்களை அரை நிமிடம் மூடி, தன் இடக் காது மடலை விரல்களால் மெல்ல இழுத்துவிட்டபடியே வீட்டுக்குள் நுழைந்தார் மருதநாயகம்.

– பெப்ரவரி 2006

Print Friendly, PDF & Email

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *