குளிர்

0
கதையாசிரியர்:
கதைத்தொகுப்பு: கிரைம்
கதைப்பதிவு: May 13, 2023
பார்வையிட்டோர்: 7,339 
 

என்னை பற்றி உங்களிடம்  அறிமுகப்படுத்திக்கொள்கிறேன்.நான் ஒரு குடும்பஸ்தன், மிகவும் பயந்த சுபாவம் உள்ளவன், விவரம் வந்த குழந்தைகள், மனைவி இவர்களுடன் இந்த சமுதாயத்தில் கெளரவமாக வாழ போராடிக்கொண்டிருப்பவன்.தனியார் துறையில் சாதாரண உத்தியோகம், பற்றாக்குறை வருமானம் அவ்வளவுதான்.

என்னை பற்றி உங்களிடம் சொல்ல என் மனம் ஒத்துக்கொள்ளாவிட்டாலும் என்ன செய்வது நான் சந்தித்த பிரச்சினையை பற்றி சொல்லவேண்டியிருப்பதால், நீங்கள் என்னை பற்றி நல்லவிதமாக நினைக்கவாவது தோன்றுமல்லவா?

ஒரு நாள் !  வெப்பம் மிகுந்த கோடைக்காலத்தில் அந்த நாளின் இரவு பனிரெண்டுக்கு மேல்!

நல்ல உறக்கத்தில் ஆழ்ந்திருந்த நான் திடீரென்று ஏற்பட்ட குளிர்ச்சியின் வேகம் தாங்காமல் சட்டென விழித்தேன். போர்வை என்னை விட்டு விலகி இருந்தது.எடுத்து முழுவதும் போர்த்திக்கொண்டு படுத்தேன். ஹூஹூம் குளிர் அடங்குவதாய் தெரியவில்லை. என்ன இது? இந்த கோடைக்காலத்தில் இப்படி ஒரு குளிர்ச்சி !

பக்கத்தில் படுத்திருந்த மனைவி குழந்தைகளை பார்த்தேன்.அவர்கள் போர்த்தியிருந்த போர்வைகள் கலைந்து கிடந்தது, ஆனாலும் அவர்கள் எந்த சலனமும் இல்லாமல் ஆழ்ந்த உறக்கத்தில் இருந்தனர். ஒருவர் கூட அசங்க காணோம். அப்படியானால் எனக்கு மட்டும் ஏன் இப்படி குளிர்கிறது.

இப்பொழுது தள்ளி கிடந்த மனைவியின் போர்வையையும் எடுத்து போர்த்திக்கொண்டேன். முடியவில்லை, குளிர் உடலின் உள்ளுக்குள் ஊடுருவி எலுமபை தாக்க ஆரம்பித்தது.குளிர் காய்ச்சல் வந்திருக்குமோ?அப்படியும் தெரியவில்லை, காய்ச்சலுக்கு வரும் உடல் உபாதைகள் எதுவும் தென்படவில்லை.நன்றாகத்தான் இருக்கிறேன், அப்படியானால் ஏன் இப்படி குளிர்கிறது. புரியாமல் எழுந்து குளிரில் குறுகி உட்கார்ந்தேன்.

காதோரம் மெல்லியதாய் ஒரு குரல்…எடுத்து மாற்றிவிடு… சட்டென திரும்பி மனைவி ஏதாவது சொன்னாலா?பார்த்தேன். அவளோ எந்த அசைவுமின்றி ஆழ்ந்து உறங்கிக்கொண்டிருந்தாள். அப்படியானால் காதோரம் வந்த குரல் யாருடையது ?

மீண்டும் அந்த குரல் உடலை மாற்றிவிடு..மனதுக்குள் திகில் வந்தது. இப்பொழுது குளிருடன் இந்த பயமும் சேர்ந்து கொண்டது. என் உடலை மாற்றிடு.தொட்டிக்குள் இருந்து மாற்றிவிடு….குரல் தெளிவாக கேட்டது. நாளை ரங்கனாதன் வீட்டுக்கு…அவ்வளவுதான் சட்டென அந்த குரல் நின்று போனது.

ஆச்சர்யம் உடலை துளைத்துக்கொண்டிருந்த குளிர் காணாமல் போயிருந்தது. உடல் பழைய வெப்பத்தை அடைய போர்வைகளை உதறிவிட்டு படுத்தேன். ரங்கநாதன்? எந்த ரங்கநாதன், சட்டென ஞாபகம் வரவில்லை, படுத்தவாறு யோசித்தேன்..ஆபிஸ் கிளார்க்..இல்லை அவர் அவ்வளவு பழக்கமில்லை, வேறு யார் ? அட தம்பு சாமி தெருவில் குடியிருந்த போது மூன்றாவது வீட்டுக்காரர்.          

தூக்கம் காணாமல் போயிருந்தது. அங்கு மூன்று வருடங்கள் இருந்திருப்போமா? ம்..இருக்கலாம், தினமும் வேலை முடிந்து வந்த பின் வீட்டுக்கு வந்து பேசிக்கொண்டிருந்து விட்டு அப்படியே ஒரு”நடை பயணம்” சென்று விட்டு அவர் வீட்டில்  ஒரு காப்பி சாப்பிட்டு பிரிவோம், அவரா? பார்க்கலாம் , யோசிக்க யோசிக்க தூக்கம் என்னை அறியாமல்…..

காலையில் விழித்த பின் இரவு நடந்தது கனவா? மனதில் எண்ணமிட்டவாறே அலுவலகம் கிளம்ப ஆயத்தமானேன்.அவ்வளவுதான். காலை நேர பரபரப்பு எல்லோரையும் விழுங்க அவரவர்கள் பறந்து விட்டோம். இரவு தூங்க போகுமுன் கூட அந்த நினைவுகள் எதுவுமில்லை..ஆனால் சொல்லி வைத்தாற்போல் இரவு பனிரெண்டுக்கு மேல் என் உடம்பில் நேற்றைய குளிர் தாக்க திகைத்து போய் எழுந்து உட்கார்ந்து மனைவி குழந்தைளை பார்க்க அவர்கள் ஆழ்ந்த உறக்கத்தில்…

காதில் அதே குரல் ரங்கநாதான் வீட்டுக்கு..ரங்கநாதன் வீட்டுக்கு…என் உடல் என்னையும் அறியாமல் விதிர்விதித்து போனது. கடவுளே..மனதுக்குள் சொல்லிக்கொண்டே அந்த குளிரில் நடுங்கிக்கொண்டிருக்க…பக்கத்தில் படுத்திருந்த மூவரும்  புழுக்கம் தாங்காமல் புரண்டு கொண்டு..

என்ன ஆனாலும் சரி நாளை ரங்கநாதன் வீட்டுக்கு போய் பார்த்து விடுவது. மனதிற்குள் உறுதி எடுத்த மறு நிமிடம் குளிர் காணாமல் போயிருந்தது. மீண்டும் உடலில் வெப்பம் புழுக்கம்.இது என்ன ஆச்சர்யம்? படுத்தவன் தூங்கவே முடியவில்லை.

காலை நிதானமாக எழுந்து குளித்து தயாரானவனை ஆச்சர்யமுடன் பார்த்த என் மனைவி என்ன வேலைக்கு கிளம்பலையா? இல்லை கொஞ்சம் வெளியே வேலையிருக்கு, மெளனமாய் சொல்லி விட்டு கிளம்ப ஆயத்தமானேன்.

என்னிடம் எந்த வாகனமும் கிடையாது, ஓட்டவும் தெரியாது. மெல்ல தெருமுனைக்கு வந்தவன் டவுன் பஸ் கிடைக்குமா என்று பார்த்தேன்.த ம்பு சாமிதெரு ஐந்தாறு வருடங்களுக்கு முன்னால் பார்த்தது அப்படியேதான் இருந்தது. நான் முன்னர் குடியிருந்த வீட்டை  நோக்கி நடக்க ஆரம்பித்தேன்.

நான் வசித்த வீடும் கூட எந்த மாற்றமில்லாமல்தான் இருந்தது. அதனை தாண்டி ஒன்று இரண்டு மூன்று..ம்..இதுதான் ரங்கனாதன் வீடு..கதவு சாத்தியிருக்க..மெல்ல விரலால் கதவை தட்டினேன்..

கதவை திறந்த பெண்மணி என்னை உற்றுப்பார்த்து யோசிப்பது போல் நின்று கொண்டிருக்க, நான் கணைத்து என்னை அடையாளம் தெரிகிறதா? அஞ்சாறு வருசத்துக்கு முன்னால இங்க குடியிருந்தேன், உங்க வீட்டுக்காரருக்கு நண்பன், தினமும் சாயங்காலம் “வாக்கிங்” போயிட்டு உங்க வீட்டுகு வருவோமே…இழுத்தவனை சோக புன்னகையுடன் உள்ளே வாங்க, உங்களை அடையாளம் தெரியுது..          

வீட்டுக்கு உள்ளே ஓரளவு வசதியிருந்தாலும், சோகம் அப்பட்டமாய் தெரிந்தது, பையன்..இழுக்க உள் அறையிலிருந்து பையன் எங்கோ கிளம்பும் உடையில் வெளியே வந்தான். என்னை பார்த்ததும் சட்டென அடையாளம் கண்டு கொண்டவன் எப்படியிருக்கறீங்க அங்கிள்? நான் மெல்லிய புன்னகையுடன் நான் நல்லாயிருக்கேன். காலேஜுக்கா? ஆமா அங்கிள், சாரி எனக்கு “டைம்” ஆயிருச்சு தப்பா நினைச்சுக்காதீங்க, நீங்க அம்மாகிட்டே பேசிட்டு சாப்பிட்டுட்டுத்தான் போகணும், சரியா? பொறுப்பாய் சொன்னவனை மெல்லிய புன்முறுவலுடன் சரி நீ பார்த்துப்போ..அவனை வழி அனுப்பினேன்.

அதற்குள் காப்பி கொண்டு வந்த கொடுத்த ரங்கநாதன் மனைவியிடம் இப்ப காப்பி எல்லாம் வேண்டாம், சொன்னாலும் அவர்கள் மனம் சங்கடப்படக்கூடாது என்று..வாங்கியவன், ரங்கநாதன்…! .குரலில் கூடுமானவரை வருத்தத்தை சேர்த்துக்கொண்டேன்.

அவர் காணாம போய் ஒரு மாசமாச்சு !.கண்கலங்க சொன்னாள் அவர் மனைவி. நான் திகைப்புடன் ஒரு மாசமாவா? போலீஸ் கம்பிளெயிண்ட் ஏதாவது பண்ணுனீங்களா? எப்படி காணாம போனாரு?

போன மாசம் வெள்ளிக்கிழமைன்னு நினைக்கிறேன், ஏழு மணிக்கு மேல இருக்கும், நீங்க உட்கார்ந்திருக்கற இடத்துலதான் உட்கார்ந்திருந்தாரு, என்ன நினைச்சாரோ திடீருன்னு நான் ஒருத்தரை பார்த்துட்டு வரேன்னு சட்டைய மாட்டிகிட்டு கிளம்புனாரு, இராத்திரி முழுக்க வரவே இல்லை, பையன் எல்லா இடமும் போய் தேடி பார்த்தான். சரி வந்துடுவாரு வந்துடுவாரு அப்படீன்னு இரண்டு நாள் பொறுத்து பார்த்தோம். கடைசியில போலீஸ் கம்பிளெயிண்ட் பண்ணிட்டோம்.ஆனா இது வரைக்கும் எந்த பதிலும் இல்லை, போய் கேக்கும்போது கண்டிப்பா கிடைச்சா சொல்றோம் அப்படீன்னு சொலறாங்க.

அவர் பிரண்ட்சுக கிட்ட எல்லாம் கேட்டீங்களா? எல்லார்கிட்டேயும் கேட்டாச்சு, நாங்க  “பி. கே.நகருல” புதுசா வீடு ஒண்ணு கட்டிகிட்டிருந்தோம்.அந்த ஏரியாவுலயும் போய் விசாரிச்சு பார்த்துட்டோம் ஒரு தகவலும் கிடைக்கவேயில்லை.

அது எங்க இருக்கு ?இங்கிருந்து மூணு கிலோ மீட்டர்தான். அங்க எங்களுக்கு கொஞ்சம் பூமி இருக்கு, சரி அதுல ஒரு வீட்டை கட்டி விட்டா வாடகைக்கு விடலாமே அப்படீன்னு ஆரம்பிச்சாரு. அதை ஆரம்பிச்ச நேரமோ என்னமோ அவரையே காணோமுன்னு நிக்கறோம். அழ ஆரம்பிக்க சட்டென்று தப்பா நினைச்சுக்காதீங்க, நான் வர்றேன், திரும்பியவன்,

ஆமா உங்க வீட்டுல தொட்டி இருக்குதா? கேட்டவனை ஆச்சர்யமுடன் பார்த்தாள் ரங்கனாதன் மனைவி. ஆமா வெளியில் ஒரு தொட்டி இருக்கும் வெளியில இருந்து வர்ற தண்ணி, எங்க” போர்ல” இருந்து வர்ற தண்ணி இரண்டையும் ரொப்பி வச்சுக்குவோம், அதுல இருந்து பக்கத்துல வாடகைக்கு இருக்கறவங்க எடுத்து உபயோகப் படுத்திக்குவாங்க. எதுக்கு கேக்கறீங்க? அவளின் கேள்விக்கு என்ன பதில் சொல்வது என்று தெரியாமல் அது எங்க இருக்குது? நீங்க உள்லே வந்தீங்கல்ல, பக்கத்துல பாக்கலயா? நான் மெளனமாய் தலையாட்டிவிட்டு போகும்போது பாக்கறேன், சொல்லியவாறு வெளியே வந்தேன். ஆம் வெளிபுறமாய்  நீர் நிறைந்திருக்கும் தொட்டி ஒன்று கட்டப்பட்டிருந்தது. ஆனால் அதில் எதுவும் வித்தியாசமாய் தெரியவில்லை. ஏமாற்றமுடன் கழட்டி வைத்திருந்த செருப்பை மாட்டிக்கொண்டு கிளம்பினேன்.

அன்று இரவு நானே குளிரை எதிர்பார்த்தேன். பனிரெண்டுக்கு மேல் அந்த குளிர் என்னை தாக்க, இப்பொழுது காதை நன்றாக கூர்மையாக்கிக்கொண்டேன். புது இடம் புது இடம்..இது மட்டுமே சொன்னது அந்த குரல், அதற்கு மேல் எதுவும் கேட்கவில்லை. புது இடம்..மனதுக்குள் சொல்லிக் கொண்டே படுத்தேன்.

விடியற் காலையில் கதவை திறந்த ராமனாதன் மனைவி என்னை பார்த்த்தும் ஆச்சர்யமுடன் என்ன இந்த நேரத்தில் ? என்பது போல் பார்வையால் பார்த்தாள். சதீஷ் இருக்கானா? ராமநாதனின் மகனை அழைத்தேன்.சதீஷ்…உள்ளே அழைக்க, சதீஷ் வெளியே வந்தான். அங்கிள் என்ன இந்த நேரத்துல? சதீஷ் எங்கூட கொஞ்சம் வெளியே வரமுடியுமா?

இதோ வந்துட்டேன், உள்ளே போனவன் உடைகளை மாற்றிக்கொண்டு வந்தான். சதீஷ் நாம இப்ப நீங்க புதுசா வீடு கட்டியிருக்கற இடத்துக்கு போகணும்  முடியுமா?

இதா வண்டிய எடுத்துட்டு வர்றேன். இரு சக்கர வாகனத்தை எடுத்து வந்தான். வீடு கட்டிக்கொண்டிருந்த இடம் பொட்டல் வெளியாகத்தான் இருந்தது.

அங்கொன்றும் இங்கொன்றுமாக வீடுகள் முளைத்திருந்தன. இவன் புதிய வீட்டு முன் வண்டியை கொண்டு போய் நிறுத்தியதும், இவர்கள் காவலுக்கு வைத்திருந்த ஒருவன் பக்கத்திலிருந்த குடிசையில் இருந்து வெளியே வந்தான்.

வாங்க தம்பி ஐயா கிடைச்சுட்டாரா? ச்சு..வருத்தத்துடன் தலையாட்டிய சதீஷ் நீங்க உள்ளே வாங்க அங்கிள், எதுக்கு வீட்டை பாக்கணும்னு கேட்டீங்க? இதை கேட்ட அந்த வாட்ச்மேன் சந்தேகமாய் என்னை பார்த்து வீட்டை பாக்கணும்னாரா? எதுக்கு?அவன் கேள்விக்கு நான் பதில் சொல்லாமல் உள்ளே போய் பாக்கலாம், சதீஷை அழைத்துக்கொண்டு அந்த வீட்டை சுற்றி பார்க்க ஆரம்பித்தேன்.

எல்லாவற்றையும் சுத்தி பார்த்து விட்டு வீட்டுக்கு வெளியில் இருக்கும் எல்லா இடங்களையும் உற்றுப்பார்த்தேன். எங்களுடனே சுற்றி வந்த வாட்ச்மேன் என்னையே ஆச்சர்யமாய் பார்த்துக்கொண்டே வந்தவன், மெல்ல சதீஷ் தம்பி சார் யாரு? எதுக்கு வீட்டை சுத்தி பாக்கறாரு.சதீஷ் விளையாட்டாய் அவர் போலீஸ்காரரு, எங்க அப்பாவை கண்டு பிடிக்கறதுக்கு வந்திருக்காரு. அதுதான் இந்த வீட்டையும் சுத்தி பாக்கறாரு.

அரை மணி நேரத்தில் சதீஷுடன் வண்டியில் வந்து கொண்டிருந்த நான் சதீஷ் நீ அப்பாவை காணோமுன்னு போலீஸ் ஸ்டேசன்ல புகார் கொடுத்திருக்கே இல்லையா? என்னைய நீ புகார் கொடுத்த ஆபிசர்கிட்டே கொண்டு போய் விட்டுடறியா?

நல்ல வேளை அவர் ஸ்டேசனில் இருந்தார். சதீஷ் அப்பாவின் நண்பர் என்று என்னை அறிமுகப்படுத்தினான். நான் அவரிடம் ஒரு சில சந்தேகங்களை சொன்னேன்.அவர் நம்பிக்கையில்லாமல் என்னை பார்த்தார்.

வியற்காலை போனில் சதீஷ் அழைத்தான். அங்கிள்..குரலில் அழுகை, அப்பா கிடைச்சுட்டாரு ஆனா ஆனா..அழுகையுடன் சொன்னவனை நான் ஆறுதல் படுத்தும் வகையில் மனசு விட்டுறாத சதீஷ், நான் வந்துடறேன்.

செலவானாலும் பரவாயில்லை என்று ஆட்டோ பிடித்தேன். வாசலில் காத்திருந்த சதீஷ் ஓடி வந்து என் கையை பிடித்துக்கொண்டு அப்பாவோட..உடம்பெல்லாம் போயிடுச்சு, ஹாள்பிடல்ல வச்சிருக்காங்க, போஸ்ட் மார்ட்டம் முடிஞ்சு பத்து மணிக்கு கொடுத்திடுவாங்கலாம், அப்படியே எரிக்கறதுக்கு கொண்டு போயிடலாம்.. அழுதவாறு சொன்னான். அம்மா..அவங்கதான் பாவம் வீட்டுக்குள்ளே மயக்கமா கிடக்கறாங்க.

எல்லா காரியங்களும் முடித்து வீட்டுக்கு வந்து பச்சைத்தண்ணீரை தலையில் ஊற்றியவனுக்கு அப்பாடி என்றிருந்தது. பாவம் அந்த நேரத்துக்கு ராமநாதனுக்கு  புது வீட்டு வாட்ச்மேன் மேல் சந்தேகம் வர இரவு போய் பார்க்க அவன் அங்கிருந்த ‘கம்பி’ ‘ சிமிண்ட்’ இவைகளை கடத்திக்கொண்டிருப்பதை கண்டு பிடித்தவர் முட்டாள்தனமாய் தனியாய் போய் சத்தம் போட்டிருக்கிறார். அவன் இவரை முடித்து அப்பொழுதுதான் தோண்டி போட்டிருந்த “செப்டிக் டேங்க்” தொட்டிக்குள் போட்டு மண்ணை மூடி விட்டவன், மறு நாள் அவசர அவசரமாய் சிமிண்ட் தளத்தையும் போட்டு மூடிவிட்டான்.

போலீஸ் நான் சொன்னதை அசட்டையாய் கேட்பது போல் இருந்தாலும், அன்று இரவு வாட்ச்மேனை கண்காணித்ததில் காலையில் நாங்கள் வீட்டை சுற்றி பார்த்த்தில் மிரண்டு போயிருந்த வாட்ச்மேன் இரவில் அந்த தளத்தை உடைத்து ராமநாதனின் உடலை வெளியே எடுத்து எங்காவது போட்டு எரிக்க முயற்சி செய்திருக்கிறான். காத்திருந்த போலீஸ்……

உங்களுக்கு இதுவெல்லாம் எப்படி தெரியும் என்ற கேள்விக்கு நான் என்ன பதில் சொல்ல முடியும்?சொன்னால் நம்பவா போகிறீர்கள்.

Print Friendly, PDF & Email

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *