குறும்படம்

0
கதையாசிரியர்:
கதைத்தொகுப்பு: கிரைம்
கதைப்பதிவு: May 15, 2023
பார்வையிட்டோர்: 9,340 
 
 

நான் என்னை பற்றி அறிமுகம் செய்து கொள்ள விரும்புகிறேன். இனி ஒரு முறை எனக்கு உங்களுடன் பேசுவதற்கு வாய்ப்பு கிடைக்காமல் போய் விடலாம். ஆச்சர்யப்படாதீர்கள். இன்று இரவு என் பூவுலக வாழ்க்கையை முடித்து கொள்ள வேண்டும் என்று முடிவு செய்து விட்டேன்.

என் பெயர் விநோத், எனக்கு வயது இருபத்தி ஆறை முடிக்க ஆறு மாதங்கள் இருக்கின்றன. பொறியியல் பட்டம் பெற்றிருக்கிறேன். மற்றவர்களை போல் உடனே ஐ.டி துறைக்கு படையெடுக்காமல் என் திறமையை நான் தேர்ந்தெடுத்த பாடத்திலேயே சாதிக்க வேண்டும் என்று உறுதியோடு இன்று வரை இருக்கிறேன். இதனால் ஏகப்பட்ட துன்பங்களுக்கு ஆளாகிக்கொண்டும் இருக்கிறேன். பெற்றோரின் ஏசல்கள், நண்பர்களின் கிண்டல்கள், ‘அவனவன் பட்டம் வாங்கிட்டு எங்கியோ போயிட்டிருக்கான்’ இந்த மாதிரி ஏகாந்த பேச்சுக்கள். அடடா போதும் போது சார் !

நான் படிக்கும் போது வாகனத்தில் தேவைப்படும்போது பறக்கும் வசதியையும் அமைத்து சாதனை புரிய வேண்டும் என்று நினைத்து கொண்டிருந்தேன். அதற்காக என் மண்டையை உடைத்துக்கொண்டு நண்பர்களிடமும் விவாதித்திருக்கிறேன். அவர்களில் ஒரு சிலர் மட்டும் என்னுடன் பேசியிருக்கின்றனர். மற்றவர்கள் கிண்டலும் கேலியும் செய்திருக்கிறார்கள்.

வாகனத்தை பறக்கும் நிலைக்கு தயார்படுத்துவது என்பது சிரமம்தான் என்பது எனக்கும் தெரியும். முதலாவது அதன் எடை, அதை குறுகிய நேரத்தில் குறைத்து வானத்தில் ஏற்றுவது என்பது இயந்திரவியலுக்கு பெரும் சவால். இதுவும் புரிகிறது. அதை இலகு இரக வாகனங்களுக்கு ஏன் செய்யக்கூடாது?

கிளைடர் போன்ற அமைப்பில் செய்யலாம் என்று பார்த்தால் அதுவும் உயரம் போய் அங்கிருந்து பள்ளத்திற்குள் பாயும் முறை. அதுவும் நமக்கு சரிப்படாது. இதன் அடிப்படை வேகம் இந்த சூத்திரத்தை வைத்து முயற்சிக்க வேண்டும். 

நீங்களே சொல்லுங்கள் இப்படி எண்னமிருப்பவனை இந்த உலகம் என்ன சொல்லும் ? அதையேதான் எல்லாரும் சொன்னார்கள். சொல்வது மட்டுமில்லை ‘இதா போறான் பாரு, இவன் வானத்தில வண்டியை ஓட்டறவன்’ இந்த கிண்டல் வார்த்தையை அடிக்கடி கேட்டும் இருக்கிறேன்.

கிளம்பி விட்டேன் சார், என் நண்பன் ஒருவனுக்கும் இ-மெயில் அனுப்பி விட்டேன். இந்த உலகத்தை விட்டு போகப்போகிறேன்? நாளை எங்காவது என் உடல் கிடந்தால் இந்த உலகத்துக்கு தெரிவித்து விடு. அவன் ஏதோ பிரபலமான பத்திரிக்கையில் பணி புரிந்து கொண்டிருப்பதாக சொல்லியிருக்கிறான். சின்ன சினிமா படங்கள் கூட எடுத்துக்கொண்டிருப்பதாக கேள்வி.

இரவு ஒன்பதுக்கெல்லாம் படுக்கைக்கு போனவனை அப்பா ஒரு மாதிரியாய் பார்த்து “என்ன உன் பையன் இன்னைக்கு நேரத்துல கட்டைய சாய்க்கறான்”, “சும்மா இருங்க, அவனை எப்ப பார்த்தாலும் கரிச்சு கொட்டிட்டு இருக்கறதே உங்க வேலையா போச்சு”.

அம்மா, நீதான் என்னை புரிந்து கொண்ட ஆத்மா, இருந்தாலும் உன்னை எல்லாம் விட்டு போகபோகிறேன் என்று நினைத்து எனக்கு துக்கம் பொங்கி வழிகிறது. அப்படியே போர்வையை எடுத்து என் மீது போர்த்திக்கொண்டு மெளனமாய் கண்ணீர் விடுகிறேன்.

சட்டென விழிப்பு வர மெல்ல என் செல்லை எடுத்து மணி பார்க்க இரவு பனிரெண்டை காட்டியது. அப்படியே எழுந்தவன் போய் முகம் கை கால் கழுவி ஏற்கனவே எடுத்து வைத்திருந்த உடைகளை அணிந்து கொண்டேன்.குளிராமல் இருக்க ஒரு ஸ்வெட்டரையும் எடுத்து வைத்திருந்தேன்.அதையும் போட்டுக்கொண்டேன் (சத்தமில்லாமல்தான்) கதவை திறந்து வெளியே வந்தவன் பத்திரமாய் கதவை வெளிப்புறம் சாத்தினேன். நடக்க ஆரம்பித்தேன்.

நடக்க ஆரம்பித்த பொழுதுதான் எனக்கு உறைத்தது. ஆமாம் தற்கொலை செய்து கொள்வதாக முடிவு செய்து விட்டோம், ஆனால் எப்படி செய்து கொள்வது என்று முடிவு செய்யவில்லையே அப்புறம் தற்கொலை செய்து கொள்ள கிளம்பினவன் எதுக்கு இத்தனை உடைகள் போட்டிருக்கிறேன்? சே தலையில் தட்டிக்கொண்டவன் நடையை வேகப்படுத்தினேன். கடைகள் எல்லாம் அடைபட்டு உறங்கிக்கொண்டிருந்தன. ஒரு இடத்தில் மட்டும் ஆட்களின் சத்தம் கேட்டுக் கொண்டிருந்தது. எதுவாக இருக்கும் என நினைத்து கொண்டிருக்கிறீர்களோ அதுவேதான். உள்ளே “பார்” இருக்க வேண்டும். ஆட்களின் சத்தமும், கண்ணாடி டம்ளர்களின் உரசல்களும். மெளனமாய் அதை தாண்டி சென்று கொண்டிருந்தேன்.கடையை விட்டு சற்று தள்ளி ஒரு கார் கிளம்ப முடியாமல் தத்தளித்து கொண்டிருந்தது. வண்டியை உசுப்பி உசுப்பி புகையை மட்டும் கிளப்பி விட்டு கொண்டிருந்தான் டிரைவர். “சைலன்ஸ் பைப்பில் அடைப்பு இருக்கலாம், அல்லது இஞ்சினில் அடைப்பு இருக்கலாம்.

நிதானித்தவன், அவனிடம் சென்று ஒரு நிமிசம் நில்லு, கார் பானட்டை துக்கினேன், இஞ்சீனிலிருந்து வரும் இணைப்பை கழட்டி சுத்தம் செய்தேன், இப்பொழுது வண்டியை “ஸ்டார்ட்” செய்ய சொன்னேன். ஹூஹூம் பலனில்லை, அவனை கீழே இறங்க சொன்னேன். அவன் இறங்கினான். அப்பொழுதுதான் கவனித்தேன், நன்றாக குடித்திருந்தான். இறங்கி நிற்க முடியாமல் தடுமாறிக்கொண்டிருந்தான். மூக்கை பிடித்து காருக்குள் உட்கார்ந்தவன் குனிந்து சாவியை திருப்ப முயற்சிக்கும் பொழுதுதான் காருக்குள் இன்னும் இரண்டு மூன்று பேர் இருப்பதை உணர்ந்தேன். ஒரே மது வாடை ஆனால் பேச்சு எதுவும் கேட்காதாதால் மெல்ல திரும்பி பார்க்க அதிர்ந்தேன்.

மூன்று பேர் கடோத்கஜனாய் உட்கார்ந்திருக்க ஒரு பெண் கை கால் கட்டப்பட்டு கீழே படுக்க வைக்கப்படிருந்தாள். சட்டென கதவை திறந்து இறங்க நினைத்தவன் சரி நாம் கண்டு கொண்டதாக் காட்டிக்கொள்ள கூடாது முடிவு செய்து மீண்டும் சாவியை திருகி வண்டியை “ஸ்டார்ட்” செய்ய பட்டென பற்றிக்கொள்ள  கதவை திறந்து இறங்குவது போல கீழே காலை வைத்தவன் தள்ளாடி நின்று கொண்டிருந்தவனை அப்படியே கையை நெஞ்சில வைத்து கீழே தள்ளி விட்டு சட்டென உள்ளே புகுந்து வண்டியை ஸ்டார்ட் செய்து கிளப்பினேன்.

“தொம்” முதுகின் மேல் ஒருவன் விழ அப்படியே கழுத்தை பிடித்து முன்புறம் இழுத்தேன். போதையோடு இருந்த்தால் இழுத்தவுடன் முன்புறம் விழுந்தான். “ஸ்டேரிங்கை” அப்படியே விட்டு விட்டு ஓங்கி அவன் கழுத்தில் மிதிக்க “க்னங்” கழுத்தில் சத்தம் வர அப்படியே முன்புற இடத்தில் சுருண்டு விழுந்தான்.

ஒருவன் விழுந்ததும் மனதில் தெம்பு வர வண்டியை சட்டென பிரேக் போட்டு நிறுத்தியவன் அப்படியே சடாரென திரும்பி கண்ணை மூடிக்கொண்டு எதிரில் உட்கார்ந்தவன் முகத்தில் குத்து விட எனது கை எரிய அவன் முகத்தில் இரத்த பூச்சு பரவ ஆரம்பித்தது. அடுத்தவனின் கன்னத்தில் வாகாய் ஒரு அறை விட போதையின் வீச்சில் இருந்தவன் “ஐயோ” என்னை அடிக்காதே”

அவ்வளவுதான் சட்டென முன்புற கதவை திறந்து பின்புறமாய் சென்று கதவை திறந்து இழு மாமிச மலைகளை இழுத்து வெளியே தள்ளி விட்டு முன்புறம் வந்தவன் சுருண்டு கிடந்தவனையும் இழுத்து போட்டேன்..

ஊப் மூச்சை நன்கு இழுத்து விட்டு ஓட்டுநர் இருக்கைக்க்கு வந்தவன் வண்டியை எடுத்து பறந்தேன். ஆம் நான் இப்பொழுது என்ன செய்து கொண்டிருக்கிறேன் ? மனம் அசை போட சிணுங்கள் சத்தம் பின் புறம் வந்தது. வண்டியை அப்படியே ஓரம் கட்டியவன் முன்புறம் வந்து மயங்கி கிடந்த பெண்ணின் கன்னத்தை தட்டினேன். நான்கைந்து தட்டுக்களுக்கு பின்னால் அவள் கண்களை விழித்து பார்த்தவள் என்னை கண்டவுடன் சட்டென எழுந்தாள். சட்டென தோள் இடிக்கவும் எழ முடியாமல் தடுமாறியவள் அப்பொழுதுதான் சுற்று முற்றும் பார்த்தாள்.  

யார் நீ? நான் எப்படி காருக்குள்ள? இதை நான் கேக்கணும்? முதல்ல நீ யாரு? உன் பேரென்ன? அவள் முகசுழிப்புடன் என்னை பார்த்தவள் ஓ மை காட் நான் சூசைட் பண்ணிக்கறதுக்காக இரயில் தண்டாவாளத்துக்கு போயிட்டிருந்தேன். சரி முன்னாடி வந்து உன் கதைய சொல்லு.

என் பேரு அனிதா, நான் எம்.பி.ஏ, கிருஷ்ணா காலேஜுல படிச்சுகிட்டு இருக்கேன், சின்ன வயசுல இருந்தே ஒருத்தனை ரொம்ப நம்பினேன், அவன் கடைசியில என்னை ஏமாத்திட்டான், கவலையில் தலையை குனிந்து உட்கார்ந்தாள். எங்க வீட்டு பக்கத்துல இரயில் தண்டாவாளம் ஒண்ணு போகுது. அதுல இராத்திரி ஒன்பது மணிக்கு குர்லா எக்ஸ்பிரஸ் போகும், அதுல தலையை குடுத்துடலாமுன்னு வீட்டு பின்னாடி வழியா போயிகிட்டு இருந்தேன். யாரோ என் தோளை தொடர மாதிரி இருந்துச்சு, திரும்பி பார்த்தப்ப மூக்குல எதையோ வச்சு அழுத்தறது தெரிஞ்சது..அப்புறம் ஒண்ணும் தெரியலை.

உங்களுக்கெல்லாம் இதுவே வேலையா போச்சு, கடுமையான வார்த்தையை உபயோகித்தவன் அவனவன் வாழ்க்கையில் வாழறதுக்கு எவ்வளவு போராடறான், மனசு பேசினாலும், நான் வந்ததும் அதற்குத்தானே இடித்துக் காட்டியது. சரி இப்ப உன்னை எங்க கொண்டு போய் விடணும்?

அந்த கவலை உனக்கு வேண்டாம், என்னைய அந்த டவுன் பஸ்ஸ்டாண்ட் கிட்ட விட்டுடு, நான் எப்படியோ போயிக்கறேன். உனக்கு அறிவிருக்கா, இப்ப மணி என்ன ஒரு மணி இருக்கும், இந்நேரத்துக்கு உன்னைய பஸ் ஸ்டாண்ட்ல விட்டுட்டு போனா? சரி அதுக்காக என்னைய கூட்டிகிட்டு விடிய விடிய கார்ல சுத்திகிட்டு இருக்க முடியுமா ?

அதுவும் ஒரு பிரச்சினைதான், என்ன செய்யறது? யோசித்தேன். நான் ஒண்ணு சொல்லட்டுமா, இங்க பக்கத்துல என் பிரண்டோட ரூம் ஒண்ணு இருக்கு, அவ இப்ப அங்கிருப்பாலான்னு தெரியலை, ஆனா ஒரு சாவி எப்பவும் எங்கிட்டே கொடுத்து வச்சிருக்கா? உனக்கு பிரச்சினை இல்லையின்னா என்னைய அங்க கொண்டு போய் விட்டுடு, நீயும் முடிஞ்சா இராத்திரி அங்க தங்கிட்டு காலையில எந்திரிச்சி போயிடு. என்ன சொல்றே ?

எனக்கும் அது ஒத்துக்கொள்ளும் விசயமாகத்தான் பட்டது. சரி என்று தலையாட்ட  அவள் வழி சொல்ல ஆரம்பித்தாள். வண்டி பிளாட்டுகளாய் நிறைந்திருக்கும் ஏரியாவில் நுழைந்து அவள் குறிப்பிட்ட ஒரு பிளாட்டை அடைந்தோம்.கீழே இறங்கி அண்ணாந்து பார்த்தே, அடேயப்பா ஆறு, அல்லது ஏழு மாடி இருக்கலாம்.. வா..அவள் சகஜமாய் என் கையை பிடித்து லிப்டை நோக்கி நடக்க ஆரம்பித்தாள்.

ஸ்டூலில் உட்கார்ந்து தூங்கிய நிலையில் காவல் இருந்தவன் எங்களை பார்த்து சற்று விழித்தாலும், அந்த பெண் அவனை நோக்கி கையை காட்டவும் பேசாமல் உட்கார்ந்து கொண்டான். இவள் லிப்டுக்குள் நுழைந்து கொள்ள நானும் வேறு வழியில்லாமல் அவளுடன் நுழைந்து கொண்டேன்.

பூட்டியிருந்த அறையை சாவகாசமாய் திறந்தவள் என்னை உள்ளிழுத்துக்கொண்டு கதவை சாத்தினாள். எனக்கு ஆச்சர்யமாக இருந்தது. இவள் உண்மையிலேயே தைரியசாலியான பெண்தான், இந்த நேரத்தில் என்னைப்போனற வாலிபனுடன் இவ்வளவு சாவகாசமாய் நடந்து கொள்வது என்றால் ? இவள் எப்படி அந்த தடியன்களிடம் மாட்டிக்கொண்டாள், புரியாத புதிராகத்தான் இருந்தது. அதை விட என்னை அங்கிருந்த கட்டிலில் உட்கார வைத்தே அவள் உடை மாற்றிக்கொண்டதும், மெல்ல அருகில் வந்தவள், தலையை கலைத்து இங்கேயே தூங்கு, நான் பக்கத்து அறையில் படுத்துக்கொள்கிறேன், குட் நைட்..எதிரில் இருந்த அறைக்குள் போய் கதவை சாத்திக்கொண்டாள்.

எனக்கு தூக்கம் கண்ண சுழற்றியது. இந்த நான்கைந்து மணி நேரத்துக்குள் என்னென்னவெல்லாம் நடந்து விட்டது. அப்பாடி, தற்கொலை செய்ய வந்தவனா நான் ? வியப்புடன் வாயை திறக்க முயற்சித்து அது கொட்டாவியாய் வெளி வந்து சற்று நேரத்துக்குள் கண்ணயர்ந்து விட்டேன்.

பஸ்ஸர் சத்தம் கேட்டு கண் விழித்தேன். ஒரு நிமிடம் நான் எங்கிருக்கிறேன் என்று தெரியாமல் திகைத்தவன் படுத்திருந்த கட்டில் மெத்தையின் ஸ்பரிசத்தில் நேற்று இரவு நடந்த்து ஞாபகம் வர சட்டென எழுந்தவன் எதிர் அறையை பார்த்தேன். அது மூடி கிடந்தது. இன்னும் எழவில்லை போலும், முணங்கிக்கொண்டே எழுந்தவன் பஸ்ஸர் சத்தம் காதை பிளக்க எரிச்சலுடன் சென்று கதவை திறந்தேன்.. எதிரில் !

இரவு பார்த்த அந்த மூன்று தடியர்கள் நின்று கொண்டிருந்தனர். என்னை பார்த்தவர்கள் குரோதத்துடன் இவன்தான்..இவன்தான்..இவனை …ஒருவன் கையை ஓங்கிக்கொண்டு வந்தான்.

நான் சற்று பின்னால் நகர்ந்தேன். அதற்குள் அடுத்தவன் அவனை தடுத்து பொறு பொறு..இவன் எப்படி நம்முடைய ரூமுக்குள் வந்திருக்கிறான்? கேட்டுக்கொண்டே என் அருகில் வந்தான்.

நான் பயத்துடன் சற்று பின் வாங்கினேன். பயப்படாதே, நேற்று எங்களை அடித்து போட்டு விட்டு எங்களுடைய அறைக்குள் எப்படி வந்தாய் ?

இது உங்களுடைய அறையா? வியப்புடன் கூறியவன், அந்த பொண்ணுதான் என் பிரண்டு ரூம் இது அப்படீன்னு சொல்லி என்னை கூட்டி வந்துச்சூ. யாரு அந்த பொண்ணா? அது இப்ப எங்கே?

பக்கத்து அறையை சுட்டிக்காட்டி இராத்திரி அங்கதான் படுக்க போனா.. அப்படியா வா பார்க்கலாம், அவர்கள் அந்த அறைக் கதவை தொட்டதுமே திறந்து கொண்டது. உள்ளே யாருமே இல்லை. படுக்கை விரிப்பு கூட கலையாமல் விரித்து போட்டது போல் இருந்தது. மூவரும் என்னை பார்க்க நான் பதட்டத்துடன் ஐயோ அந்த பெண் என் எதிரில்தான் இந்த அறைக்குள் போனாள்.

மூவரில் ஒருவன், ராம் நீ எதுக்கும் நம்ம பீரோவை செக் பண்ணு, அவர்கள் மூவரும் வேக வேகமாக அவரவர்கள் அலமாரிகளையும், டேபிள் டிராயர்களையும் சோதனை செய்தனர். சே..மோசம் போயிட்டோம்.., நான் அப்பவே அவளை கொண்டு போய் போலீசுல ஒப்படைச்சுடலாமுன்னு சொன்னேன், அதுக்குள்ள இந்த எருமை வந்து நம்மளை கெடுத்துட்டான்.தலையில் கை வைத்து உட்கார்ந்து கொண்டனர்.

எனக்கு ஒன்றும் புரியவில்லை, தயக்கத்துடன் அவர்களில் ஒருவன் அருகில் சென்று சார் எனக்கு ஒண்ணுமே புரியலை. அவளை நீங்க கடத்திகிட்டு போறீங்கண்ணு நினைச்சேன்.

அவன் வெறுப்புடன் என்னை பார்த்து ஏய்யா போதையில இருந்தா நாங்க மோசமானவங்களாயிடுவமா?..நாங்க சிட்டியில் ஒரு கன்ஸ்ட்ரெக்சன் கம்பெனி நடத்திகிட்டு இருக்கோம். அன்னைக்கு நாங்க கொஞ்சம் சரக்கு அடிச்சுகிட்டு ஜாலியா உட்கார்ந்து எங்க ஆபிஸ் மொட்டை மாடியில பேசிகிட்டிருந்தோம். அப்ப ஏதேச்சையா கீழே ஏதோ சத்தம் கேக்க,, போதையிலேயே தடுமாறி கீழே வந்தா இந்த பொண்ணு எங்க ஆபிசுல எதையோ தேடிகிட்டிருந்தா, நாங்க மூணு பேரும், அவளை பிடிக்க முயற்சி பண்ணறப்போ, அவ கையிலே கத்திய வச்சுகிட்டு எங்களை தாக்க ஆரம்பிச்சா, நல்ல வேலையா கொஞ்சம் குளோராபார்ம் அவசத்துக்கு ஒரு பாட்டில்ல வாங்கி வச்சிருந்தது எங்களுக்கு ஞாபகம் வந்துச்சு, ஒருத்தன் மட்டும் சத்தமில்லாம அந்த பாட்டிலை எடுத்து அவன் கர்சீப்பில நனைச்சு அவ மூக்குல அழுத்தி வச்சோம். அதுக்குள்ள அப்பப்பா அவளுக்கு என்ன பலம், நாங்களும் போதையில இருந்ததுனால அவளை பிடிக்கவே முடியலை. எப்படியோ மயக்கம் பண்ணி அவளை இழுத்துகிட்டு வந்து கார்ல ஏத்தி போலீசுகிட்ட ஒப்படைக்கலாமுன்னு பார்த்தா…அதுக்குள்ளே நீ வந்து… கெட்ட வார்த்தையை உபயோகித்தான். .

சாரி… அந்த நேரத்துல கார்ல அந்த பொண்ணை நீங்க கட்டி வச்சிருந்ததை பார்த்த உடனே எல்லாருக்கும் தோணறதுதான் எனக்கும் தோணுச்சு, அது மட்டுமில்லை, நீங்க போதையில வேற இருந்தீங்க, அவர்களை குற்றம் சாட்டி சொன்னேன்..

சரி… ரூமுல என்னன்னவெல்லாம் போயிருக்குன்னு பாருங்க ! 

போச்சு எல்லாம் ! கவலையுடன் சொன்னான், நாம நோட் பண்ணி வாசிருந்த காண்ட்ராக்ட் கோட் வேர்ட்ஸ் எல்லாத்தையும் எடுத்துட்டு போயிட்டா, அது போக என் கிரிடிட் கார்டு, டிபிட் கார்டு எதுவுமே இல்லை.

பேங்க்ல சொல்லி பிளாக் பண்ண சொல்லலாம்,

“பிளாக்” பண்ணுறதுக்குள்ள, எல்லாத்தையும் தொடைச்சி எடுத்துடுவா

எனக்கு இவர்களை பார்க்க பரிதாபமாக இருந்த்து, சே..ஒரு பொண்ணை நம்பி பாவம் இவங்களையும் சிக்கல்ல விட்டுட்டேனே, மனம் பரிதாப்பட்டாலும் அவர்களுக்கு ஏதேனும் உதவ வேண்டும் முடிவு செய்தவன், கொஞ்சம் இருங்க, அவ எப்படியும்  உங்க பணத்தை செலவு பண்ணதான் முதல்ல முயற்சி செய்வா, அதுக்கப்புறம்தான் உங்க ஆபிஸ் டீடெய்ல்ஸூக்கு போவா, இல்லையா?

மூவரும் விரோதியாய் என்னை பார்த்தாலும், கொஞ்சம் யோசனையையும் கலந்து பார்த்தார்கள். இப்ப நாம் வெயிட் பண்ணுவோம், எப்படியும் உங்க டெபிட், இல்லை கிரிடிட் கார்டு செலவு பண்ண பிரபல கடைக்குத்தான் போக முயற்சிப்பா. காத்திருப்போம், அதுக்குள்ள பேங்க்குக்கு, முதல்ல ரிப்போர்ட் கொடுத்துடுங்க.

அவசர அவசர்மாய் பேங்கில் தகவல் சொல்லி கார்டை நிறுத்த சொன்னார்கள். அதற்குள் ஒருவன் கூவினான். அவனது செல்லுக்கு மெசேஜ் வந்திருந்த்து, ஒரு லட்ச ரூபாயுக்கு நகை எடுத்துள்ளதாக.

எந்த கடை குயிக்…அவதார்….

கம் ஆன்..நால்வரும் பறந்தோம்.

கடையில் நல்ல வேலை கூட்டம் இல்லை, அவர்கள் விசாரிக்க, சற்று முன்தான் அந்த பெண் அங்கிருந்து போனதாக சொன்னார்கள். இவர்கள் சொன்ன அடையாளத்தை அவளுக்கு நகைகளை காட்டியவன் அதேதான் என்றான். இவர்கள் நால்வரும் வெளியே வந்து யோசித்து நின்றார்கள். அடுத்து என்ன செய்ய போகிறாள் ? சட்டென நான் சொன்னேன், நிச்சயமா பசிக்கு பக்கத்துல எங்கயாவது ஓட்டலை பாத்து போயிருக்கணும், அதுக்கு அவ கிட்டே பணம் வேணுமே ?

முட்டாள் இந்நேரம் “பேங்க்ல” சொல்லி பிளாக் பண்ணியிருப்பன்னு அவளுக்கு தெரியும், இப்ப கிரடிட் கார்டு யூஸ் பண்ணலாம் !

“கிரடிட் கார்டையும்” லாக் பண்ணனும், சட்டென மெசேஸ் வர பார்த்தவன் ஐயோ கிரடிட் கார்டுல இருந்து ஐம்பதாயிரம் ரூபாய் எடுத்திருக்கா? மெசேஜ் வந்திருக்கு.

வெயிட்..எங்கிருந்துன்னு பாரு ம்…

கெவிபி…. அது ஆ..பக்கத்துலதான் இருக்கு, வாங்க, அவர்கள் விரைந்து செல்ல  வரிசையாய் மூவர் நின்று கொண்டிருந்தனர் பணம் எடுக்க..

நான் சட்டென எதிரில் இருக்கும் பிரபல ஓட்டலை காட்டினேன், நிச்சயம் அவள் இதிலிருக்க வாய்ப்பு இருக்கு, கமான். நீங்க வெளியே நில்லுங்க, நான் உள்ளே போறேன்.

நான்  மெல்ல நடந்து ஒவ்வொரு டேபிளையும் ஓரக்கண்ணால் கவனித்து முகத்தை காட்டாமல் நடந்து சென்றேன்..ஆறாவது வரிசையின் நடு டேபிளில் அவளைப்போல்..ஆம் அவளேதான் நிதானமாய் சாப்பிட்டு கொண்டிருந்தாள்..மனசு பர பரத்தது… வெளியே நின்று கொண்டிருக்கும் மூவருக்கும், ஏற்கனவே ஏற்பாடு செய்திருந்தபடி அவர்கள் எண்ணுக்கு செல்லை அழுத்தினேன். அவசரம் வேண்டாம் உஷாராகி விடுவாள், அவள் பின்புறமாய் நடந்து அப்படியே சட்டென அவள் முன்னால் இருக்கும் நாற்காலியில் உட்கார்ந்தேன்.

சாப்பிட்டு கொண்டிருந்தவள், என்னை பார்த்த்து ஒன்றும் சொல்லாமல் சாப்பிடுவதை தொடர்ந்தாள். என்ன நெஞ்சழுத்தம், நான் யாரென்று தெரியாதது போல் உட்கார்ந்து கொண்டிருக்கிறாள். அவள் எதைப் பற்றியும் கவலைபடாமல் சாப்பிட்டு முடித்து எழப்போகு முன் என்னை நோக்கி வந்த மூவரும் சட்டென அவளருகில் உட்கார்ந்து கொண்டனர்.

ஒரு நிமிடம் மூவரையும் பார்த்தவள் சற்று சலனம் காட்டினாள். இருந்தும் அலட்டிக் கொள்ளவில்லை. எனக்கு ஆச்சர்யமாக இருந்தது. பயப்படாமல் இருக்கிறாளே. அவர்கள் மூவரும்தான் படபடப்பாய் இருந்தார்கள்.. யாழினி ஒழுங்கு மரியாதையாய் அந்த“பென்டிரைவை” கொடுத்துடு. ஒருவன் அவளை மிரட்டும் தோரணையில் சத்தம் வெளியே வராதவாறு சொன்னான்.

அவள் நிதானமாய் சாப்பிட்ட வாயை தான் கொண்டு வந்த கர்சீப்பால் துடைத்துக்கொண்டவள் இப்ப உங்களுக்கு என்ன வேணும்? அப்பாடா பேசி விட்டாள்,என் மனதுக்கு தோன்றியது. அந்த     பென்டிரைவை கொடுத்துட்டு சத்தமில்லாம போயிட்டியின்னா, இதுவரைக்கும் நீ செலவு பண்ண பணத்தை கண்டுக்க மாட்டோம், இல்லையின்னா இங்க்கேயே ஒரு கொலை விழுகறதை தடுக்க முடியாது.

ஆமா நானும் அதைத்தான் சொல்ல நினைச்சேன். பாஸ் உங்க மூணு பேரையும் முடிச்சுட்டுத்தான் வர சொன்னார், நான்தான் கொஞ்சம் ஏமாந்து உங்க கிட்டே மாட்டிகிட்டேன். இப்ப நான் கிளம்பணும், நீங்களா வழி விட்டுட்டீங்கன்னா என் துப்பாக்கிக்கு வேலை இல்லை, இல்லையின்னா, பாக்கறீங்களா? அவள் கையில் துப்பாக்கி எப்பொழுது முளைத்தது என்றே தெரியவில்லை.

எனக்கு பயமாகவும் ஆச்சர்யமாகவும் இருந்தது,  இவர்கள் யார்? உண்மையில் நல்லவர்களா கெட்டவர்களா? ஒரு பக்கம் பார்த்தால் அவள் நல்லவள் போல் தெரிகிறாள், இன்னொரு பக்கம் பார்த்தால் இந்த மூவரும் நல்லவர்கள் போல் தெரிகிறார்கள். இப்பொழுது யார் பக்கம் பேச?  

 மூவரில் ஒருவன் என்னை பார்த்து கண்ணை காட்டினான். அந்த துப்பாக்கியை அவளிடம் இருந்து பறித்து விடு ! புரிந்து கொண்டேன், ஆனால் வெடித்து விட்டால், சற்று தயங்கியவனை அவன் முறைத்தான், சீக்கிரம், அவன் கண்களில் தெரிந்த அவசரம் என்னை உசுப்பி விட சட்டென எழுந்து அவள் கையில் வைத்திருந்த துப்பாக்கியை பறிக்க இதை எதிர்பார்க்காத அவள் துப்பாக்கியை இறுக்கி பிடிக்க எங்களுக்குள் நடந்த போராட்டம், சற்று நேரத்தில் துப்பாக்கியில் வெடிக்க அவ்வளவுதான் குண்டடி பட்டு அந்த பெண் அங்கேயே சரிய நான் திகைத்து துப்பாக்கியுடன் நின்று கொண்டிருந்தேன். ஐயோ செத்து விட்டாளா? கொலை செய்து விட்டேனா? சுற்றுமுற்றும் பார்த்தேன். எங்களது சண்டையை அவ்வளவு நேரம் வேடிக்கை பார்த்துக் கொண்டிருந்தவர்கள் இப்பொழுது என்னை கொலைகாரனாய் வெறிக்க பார்த்தார்கள். நான் அந்த மூவரையும் பார்க்க திரும்பினால் ! அவர்களும் எஸ்கேப்….!

பத்து நிமிடத்துக்குள் அங்கு வந்த போலீஸ் என்னை இழுத்து கொண்டும், உடன் வந்த மருத்துவ ஊழியர்கள் அந்த பெண்ணை தூக்கிக்கொண்டும் கிளம்பினர்.

ஒரு இருட்டு அறையில் நான் உட்கார வைக்கப்பட்டேன். நான் நானாக இல்லை ! பயமா? அதிர்ச்சியா? எப்படி நடந்தது இது, தற்கொலை செய்து கொள்ளவேண்டும் என்று கிளம்பியவன் இப்படி ஒரு கொலை செய்து மாட்டிக்கொள்வேன் என்று கனவிலும் நினைக்கவில்லை. இந்நேரம் வீட்டில் என்னை காணாமல் தவித்து கொண்டிருப்பார்கள். அப்பா, அம்மாவின் அருமை அப்பொழுது புரிந்தது. கடவுளே இந்த கொலைக்கு எனக்கு எத்தனை ஆண்டுகள் ஜெயில் வாசம் கிடைக்கும் தெரியவில்லையே? என்னை போலீஸ் எதற்கு இந்த இருட்டு அறையில் அடைத்து வைத்திருக்கிறது?

அரைமணி நேரம் கழிந்திருக்கும்..அந்த இருட்டு அறை கதவு திறக்க உள் வந்த வெளிச்சம் கண்கள் கூச வெளியே பார்த்தேன். இரண்டு பேர் நின்று கொண்டிருப்பது கண்களுக்கு தெரிந்தது. அவர்கள் என்னை கை காட்டி அழைப்பது புரிந்து மெல்ல எழுந்து வெளியே வந்தேன். என்னை அப்படியே பிடித்துக்கொண்டு அழைத்து சென்றனர்.

இந்த அறை கொஞ்சம் விசாலமாய் இருந்த்து, அறைக்குள் ஒருவர் உட்கார்ந்து கொண்டிருந்தார், ஆனால் போலீஸ் ஸ்டேசன் போன்ற அமைப்புகள் எதுவும் தெரியவில்லை. அவர் என்னை எதிரில் உட்கார சொன்னார். வயது நாற்பது அல்லது அதற்கு மேல் இருக்கலாம்,

எதுக்காக அந்த பெண்ணை கொன்றாய்?

நான் ஒண்ணும் அந்த பொண்ணை கொல்லணும்னு கொல்லலை, நீங்க இரண்டு பேரும் சண்டை போட்டுகிட்டு கடைசியில அவளை கொன்னேன்னு சாட்சி சொல்றதுக்கு எல்லா எவிடென்சும் இருக்கறபோது, நான் ஒண்ணும் கொல்லணும்னு நினைக்கலை அப்படீன்னு சொல்றது யார் நம்புவாங்க !

சார் உண்மைய சொல்லணும்னா என் கூட வந்த மூணு பேரும் அந்த பொண்ணு கூட சண்டை போட்டு கிட்டு இருந்ததை வேடிக்கை பார்த்துட்டு உட்கார்ந்திருந்தேன். அவ்வளவுதான். அதுல ஒருத்தன் அந்த பொண்ணுகிட்ட இருந்து துப்பாக்கியை பிடுங்குன்னு கண்ணை காண்பிச்சான், அதுனால அந்த பொண்ணுகிட்ட இருந்து துப்பாக்கியை பிடுங்க முயற்சி பண்ணினேன். அதுக்குள்ள இந்த மாதிரி நடந்துடுச்சு.

சரி அந்த மூணு பேரும் எங்கே ?

அதுதான் சார் எனக்கு தெரியலை, என் கூடத்தான் இருந்தாங்க, அந்த பொண்ணு குண்டடி பட்டு கீழே விழுந்தவுடனே இவங்களை பார்த்தா ஒருத்தரும் இல்லே.

நீ பொய் சொல்றே, உன் கூட யாருமே வரலை அப்படீங்கறதை எல்லோருமே சொல்றாங்களே.

ஐயோ..சார் அப்படித்தான் பிளான் பண்ணி என்னை முன்னாடி போக சொன்னாங்க, அங்க போய் அந்த பொண்ணு இருந்தா என்னைய போன்ல கூப்பிட சொன்னாங்க, நானும் போன் பண்ணி அவங்களை கூப்பிட்டேன். இப்பொழுது என் குரலில் ஏமாற்றம் பிளஸ் அழுகை..

ஸ்…இங்க யாரும் அழுக கூடாது, நீ அந்த பொண்ணை கொல்றதை கண்ணார பாத்த சாட்சி அங்க இருக்காங்க அவங்க என்ன சொல்றாங்கன்னு கேளு.

அவர் சுட்டி காட்டிய இட்த்தில் …அந்த மூவரும் நின்று கொண்டிருந்தனர்..சார் இவங்கதான் சார் என் கூட வந்தவங்க..கூவினேன்.

அவர்கள் அதற்குள் எதுவும் தெரியாதவர்கள் போல் பக்கத்தில் வந்து சார்..நாங்க அப்பத்தான் அந்த ஓட்டலுக்குள்ள நுழைஞ்சு அந்த பொண்ணு, இவரும் உட்கார்ந்திருந்த டேபிள்ள உட்கார்ந்தோம். இவங்க எதிர் எதிரா உட்கார்ந்து பேசிகிட்டு இருந்தவங்க திடீருன்னு.துப்பாக்கியை கையில வச்சு சண்டை போட்டுகிட்டு இருந்தாங்க..நாங்க அதிர்ச்சியாகி பாத்துகிட்டு இருக்கறப்பவே அந்த பொண்ணை இவர் சுட்டுட்டாரு.

அடேய் துரோகிகளா, கூச்சலிட்டேன், சார் நம்பாதீங்க, இவங்க என் கூடத்தான் வந்தவங்க, அந்த பொண்ணு அவங்க ரூமுல எல்லா பொருளையும் களவாண்டுகிட்டான்னு அவளை தேடிகிட்டு வந்தாங்க, நான் நேத்து அகஸ்மாத்தமா, அந்த பொண்ணுக்கு உதவ போயி, அதனால இவங்களுக்கு உதவ என்னையும் கூட்டிகிட்டு வந்தாங்க.

அவர்கள் மூவரில் ஒருவன் வாட் நான்சென்ஸ்…எங்களுக்கு இந்த பையன் யாருன்னே தெரியாது, நாங்க அந்த பொண்ணுகிட்டே ஏமாந்துட்டமா? அந்த பொண்ணு யாரு எவருன்னு தெரியாது, இவன்  கண்டபடி குடிச்சுட்டு உளர்றான், சே..எங்களை மாதிரி பெரிய ஆளுங்களை இப்படி கூப்பிட்டு வந்து டைமை வேஸ்ட் பண்ணறீங்க.

சட்டென கோபத்தில் எழுந்தவன் யாரை குடிகாரன்னு சொன்னே, நேத்து இராத்திரி கண்ணு மண்ணு தெரியாம குடிச்சுட்டு அந்த பொண்னை கடத்திட்டு வந்ததுமில்லாம, என் போறாத வேளை, அங்க இவங்க காரை “ரிப்பேர் சரி பண்ணி” தரேன்னு போய் தான் இவ்வளவு பிரச்சினை ஆயிடுச்சு அப்படியே உட்கார்ந்து தலையை கவிழ்த்துக்கொண்டேன்.

யாரோ என் தோளை தொடுவதை உணர்ந்து மெல்ல தலையை தூக்கினேன். எதிரில் உட்கார்ந்து கேள்வி கேட்டுக்கொண்டிருந்தவர் அருகில் நின்று கொண்டிருந்தார். சரி..நடந்தது நடந்துடுச்சு, இப்ப இதை எல்லாம் நீ மறந்துடு. நேத்து இராத்திரியில இருந்து இதுவரைக்கும் எதுவுமே நடக்கலை, நீ உன் வீட்டுலதான் இருக்கறே ! சரியா..

சார்…. சட்டென எழுந்தவன் வாய் குழற எப்படி சார், அத்தனை பேர் முன்னாடி ஒரு கொலைய பண்ணிட்டு, நீ வீட்டுக்கு போ அப்படீங்க்கறீங்க..

நான் சொல்றேன், அங்க எதுவுமே நடக்கலை, போதுமா, உன்னைய கூட்டிகிட்டு வந்தது நாங்கதான், உனக்கு எந்த பிரச்சினையும் வராம நாங்க பாத்துக்கறோம். உன்னைய எங்க ஆளு ஒருத்தர் கூட்டிகிட்டு போய் உன் வீட்டுல விட்டுடுவாரு. நீ எங்கேயும் போகாம நல்ல பிள்ளையா உங்கப்பா என்ன சொன்னாலும் காதுல வாங்காம அமைதியா இருந்துடு. தேவையில்லாம மறுபடி ஏதாவது பிரச்சினையில மாட்டிக்காத, புரிஞ்சுதா?

எனக்கு என்ன சொல்வது என்றே தெரியவில்லை, தலையாட்டுவதை தவிர !

பகல் பனிரெண்டு மணி அளவில் வீட்டு வாசப்படியிலே வந்து இறங்கிய என்னை அப்பாவும், அம்மாவும் முறைத்து பார்த்தார்கள். எங்கே போய் தொலைஞ்சே, இராத்திரி சீக்கிரமா படுக்க போகும்போதே நினைச்சேன், விடிய காலையில எந்திரிச்சி போனானா, இல்லை நடு இராத்திரி பேய் மாதிரி கிளம்பி போனானா? அப்பா கத்திக்கொண்டிருக்க, அம்மா பையன் இப்பவாவது வந்தானே என்று தோளை பிடித்து உள்ளே அழைத்து சென்றாள்.

குறும்பட போட்டி நடந்து கொண்டிருந்த பிரமாண்டமான விழாவில் !

என்னுடைய நண்பன் பேசிக்கொண்டிருந்தான். இந்த குறும்படம் நானும், என்னுடன் இந்த நால்வரும் இணைந்து தயாரித்தோம். முடிந்தவரை நடிப்பு என்பது தெரியாமல் எங்களுடன் ஒருவனை நடிக்க வைத்து, அவனுடன் நாங்களும் இணைந்து நடிப்பது என்பது. அதற்கு எந்தவிதமான ஸ்கிரிப்ட் கூட தயார் செய்யவில்லை. யார் கிடைப்பார்கள் என்று யோசித்து கொண்டிருக்கும் பொழுது என் நண்பன் ஒருவன் தான் தற்கொலை செய்து கொள்ளப்போவதாக எனக்கு மெயில் அனுப்பி இருந்தான், அதை பார்த்த உடன் எங்கள் ஐவருக்கும் கிடைத்த ஐடியாவை வைத்து இந்த கதையை படமெடுத்தோம்.

பாவம் என் நண்பன் இதுவெல்லாம் நடிப்பு என்பது தெரியாமலே அவன் எங்களுடன் உண்மையாய் நடந்து கொண்டு நடித்து கொடுத்திருக்கிறான். இப்பொழுது கூட என்னுடன் இருக்கும் இந்த பெண்னை கொலை செய்து விட்டோம் என்ற குற்ற உணர்ச்சியில் இருக்கிறான். அவனை இந்த விழா முடிந்தவுடன் ஐவரும் போய் சமாதானம் செய்து கொள்கிறோம்.

பெயர்: ஸ்ரீ.தாமோதரன் பிறந்த வருடம் 1966, தனியார் மருத்துவமனையின் துணை மருத்துவ கல்லூரியில் நூலகராக பணிபுரிந்து கொண்டிருக்கிறார். “மனித நேயம்” சிறுகதை தொகுப்பு வெளிவந்துள்ளது. தினமலர் வார பத்திரிக்கையில் இரண்டு மூன்று கதைகள் வெளி வந்துள்ளன. “நிலம் விற்பனைக்கு அல்ல” சிறுகதை இளங்கலை ஆங்கில இலக்கிய மாணவியால் ஆராய்ச்சிக்கட்டுரைக்கு எடுத்து கொள்ளப்பட்டது. “மஹாராஸ்டிரா மாநிலப் பாடநூலாக்கம்” மற்றும் “பாடத்திட்ட ஆய்வுக்கழகத்தால்” எனது ‘சிறுவர் சிறுகதை’ ஒன்று ஐந்தாம் வகுப்பு தமிழ்…மேலும் படிக்க...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

* Copy This Password *

* Type Or Paste Password Here *