காமம் இல்லாத காமக் கதை

0
கதையாசிரியர்:
கதைத்தொகுப்பு: கிரைம்
கதைப்பதிவு: September 2, 2012
பார்வையிட்டோர்: 13,103 
 
 

யோகம் டீஸ்டாலில் ஒரு டீயும் வடையும் எனக்குள்ளே சென்று கொண்டிருந்த போது புரட்டிய செய்தித்தாளில் இருந்த பெரும்பாலான செய்திகள் பெரிதாக ஈர்க்கவில்லை. ஆனால் மூன்றாம் பக்கத்தில் இருந்த செய்தியை விலாவாரியாக படிக்க வேண்டும் போன்றிருந்தது. “கணவனின் நண்பருடன் உல்லாசம். தட்டிக் கேட்ட கணவனை கூலிப்படை வைத்துக் கொன்ற மனைவி”. இந்தச் செய்தியின் “உல்லாசம்” என்ற வார்த்தை செய்திக்குள்ளாக என்னை இழுத்துவிட்டது. என்னைப் போன்ற அரைகுறைகளை எப்படி செய்திகளுக்குள் விழச் செய்வது என்பதெல்லாம் டீக்கடைக்கு வரும் பத்திரிக்கைகளின் ஆசிரியர்களுக்கு அத்துப்படி. இது போன்ற உல்லாச செய்திகளை மட்டும் நான் எந்த பத்திரிக்கையிலும் தவறவிடுவதில்லை. முழுமையாக படித்து ஒரு விதமான திருப்தியை அடைவது என் எட்டாம் வகுப்பிலிருந்து தொடரும் பழக்கம். ஒரு ஏழாம்தர மலையாளப் படத்தின் அளவுக்கு கிளுகிளுப்பான செய்திகளை டீக்கடை செய்தித்தாள்களைத் தவிர வேறு பத்திரிக்கைகள் தர முடியாது என்பதும் என் அபிப்பிராயம்.

இந்த பத்திரிக்கை புராணத்தை விடுங்கள். நீங்கள் இந்த செய்தியை ஏற்கனவே படித்திருந்தால் திரும்ப படித்து நேரத்தை வீணடிக்காமல் இதே புத்தகத்தில் வேறு கட்டுரையையோ அல்லது கதையையோ படியுங்கள். அதுவே நீங்கள் என்னைப்போன்ற ‘உல்லாச’ கதை பிரியராகவோ அல்லது நேரத்தை எப்படியாவது கழிக்க வேண்டும் என்றிருந்தாலோ நான் சொல்லப்போகும் இந்தக் கதையை தொடர்ந்து வாசியுங்கள்.

மேற்சொன்ன சம்பவம் நடந்தது எங்கள் பக்கத்து ஊர் வள்ளியாம்பாளையத்தில் என்பதால் என் அம்மாவுக்கு பேப்பரை படிக்காமலே தெரிந்திருந்தது. அம்மா ஆத்தாவுக்கெல்லாம் இப்பேற்பட்ட விஷயங்கள் பக்கத்து ஊரில் இல்லை, சுற்றுவட்டாரத்தில் எங்கு நடந்திருந்தாலும் தெரிந்திருக்கும் என்பது வேறு விஷயம். ஆனால் என்னிடம் இது பற்றியெல்லாம் விலாவாரியாக பேச மாட்டார்கள். அதனால் ஐஸ்க்ரீம் பார்லர் வைத்திருக்கும் லலிதாவிடம் ஆரம்பிப்பேன். அவள் அஜால் குஜாலாக கதையைச் சொல்லி கிறுகிறுப்பூட்டுவாள்.

பூங்கொடி குன்னத்தூர்க்காரி. சரவணனுக்கு கட்டிக் கொடுத்து பதினான்கு வருடம் ஆகிறது. திருமணமான அடுத்த வருடம் மகன் சந்தோஷ் பிறக்க, இப்பொழுது சாரதா ஸ்கூலில் ஏழாவது படிக்கிறான்.

கொஞ்ச வருடங்களுக்கு முன்பாக பூங்கொடியின் பிறந்த வீட்டில் நிகழ்ந்த சொத்துச் சண்டையில் பங்காளிகள் சேர்ந்து பூங்கொடியின் குடும்பத்தை மொத்தமாக முடித்துவிட்டார்கள். முடிப்பது என்றால் சாதாரணமாக இல்லை. கர்ண கொடூரமாக. அரிவாள்களால் பூங்கொடியின் அம்மா, தங்கை, அண்ணன், அண்ணன் மனைவி, அண்ணனின் குழந்தை என்று சரமாரியாக வெட்டியிருக்கிறார்கள். முனகிக் கொண்டு கிடந்தவர்களை யாராவது மருத்துவமனையில் சேர்த்து பிழைத்து வைக்கலாம் என்பதால், அருகில் நின்றிருந்த ட்ராக்டரில் இருந்த டீசலை எடுத்து அனைவரின் மேலும் ஊற்றி தீயை கொளுத்தியிருக்கிறார்கள். அக்னி சமாதி.

கடைக்கு முட்டை வாங்கச் சென்ற பூங்கொடியின் அப்பா மட்டும் அந்த பயங்கர தாக்குதலில் தப்பித்துவிட்டார். கொலை செய்வது பெருமிதச் செயல் என்ற போக்கிரிகளிடம் தப்பித்த பின்னர் பூங்கொடியின் குடும்பத்தோடு வள்ளியாம்பாளையத்தில் தங்கிவிட்டார்.அந்த ரணகளத்திலும் சொத்து கைவிட்டு போய் விடக் கூடாது என்று கேஸ், கோர்ட் என்று சரவணன் இதுவரைக்கும் மாமானார் ஊர் பங்காளிகளுக்கு எதிராக அலைந்து கொண்டிருந்தான். சரவணன் பண விஷயத்தில் தில்லாலங்கடி. ஏற்கனவே தம்பி சம்பத்தையும், அக்கா நளினியையும் ஏமாற்றி சொத்துக்களை தாறுமாறாக சேர்த்திருந்தான். இப்படி மாமனார் ஊர் பங்காளிகளில் இருந்து , உள்ளூரில் சொந்தப் பங்காளி வரைக்கும் பங்குக்கு வருபவர்களோடு எல்லாம் எசகுபிசகான உறவுதான் சரவணனுக்கு.
அதற்காக சரவணனை மொத்தமாக கெட்டவனாக்கி விட வேண்டாம். தன் சொந்த பந்த குடும்பத்தாரிடம் தான் பண விவகாரத்தில் கறாராக இருந்திருக்கிறான். ஆனால் வெளியாட்களிடம் தாராளமாகவே வரவு செலவு வைத்திருக்கிறான். அரிசிக்கார பழனிச்சாமிக்கு கூட பத்து லட்சம் ரூபாய்கள் வரை வட்டியில்லாத கடனாக கொடுத்திருக்கிறான் . அரிசிக்கார பழனிச்சாமி நெல் ப்ரோக்கராக இருந்தவன். நெல் விற்றல் வாங்கலில் தரகராக வயிற்றுக்கும் வாய்க்கும் அளவாக சம்பாதித்திருக்கிறான்.நெல் புரோக்கராக இருப்பது மிச்சம் ஒன்றும் செய்ய முடியாத வருமானம் மட்டுமே தரும் தொழில். சரவணனிடம் நான்கு இலட்சம் வாங்கி ரூபாய் வாங்கி உள்ளூரில் அரிசிக்கடையை ஆரம்பித்ததும் அதுவரை நெல் புரோக்கர் என்று அறியப்பட்ட பழனிச்சாமி அரிசிக்கார பழனிச்சாமி ஆகிவிட்டான். சரவணனுக்கும் மிக நெருங்கிய தோழனாகியிருக்கிறான்.
நீங்கள் தினமும் டீக்கடை தமிழ் பேப்பர் படிப்பவரென்றால் இந்த இடத்தில் உங்கள் மூளைக்குள் ஒரு பல்ப் எரிய வேண்டுமே. அந்த பல்ப் வெளிச்சத்தில் பூங்கொடியும், பழனிச்சாமியும் சல்லாபித்துக் கொண்டிருக்க வேண்டுமே. நீங்கள் தமிழரல்லவா? உங்களின் யூகம் எப்படி தவறாகும்?அப்படித்தான் ஆகிப் போனது. உல்லாசம் பற்றி பேசும் போது ஓரிரு வரிகளாவது பூங்கொடியின் அழகு பற்றிச் சொன்னால்தானே கதையின் ‘கியர்’ மாறி கொஞ்சம் வேகம் எடுக்கும். நல்ல வாட்டசாட்டமான பெண், மாநிறத்தில் குதிங்கால் கொஞ்சம் எம்பி இறங்கும் படியாக ஒரு குதிரையின் நடையை ஒத்ததாக நடப்பாள். மிக நேர்த்தியாக புடவையைக் கட்டி, இடுப்பில் சாவிக் கொத்தின் நுனியை மட்டும் செருகியிருப்பாள்.

ஒரு நேர்பார்வையை உங்கள் கண்களின் வழியாக செருகி ஒரு இதமான புன்னகையை உதிர்த்துச் செல்வாள். நீங்கள் திரும்பி அவளது நடையசைவை ரசிக்கப்பதற்கான ஆயத்தம் செய்து கொண்டிருக்கும் போது அவள் உங்களை கடந்திருப்பாள். இப்படி ஒரு ‘கிக்’கான புன்னகையை எல்லோரும் அவளிடம் இருந்து பெற்று விட முடியாது. அவளுக்கு நீங்கள் அறிமுகமானவராக இருக்க வேண்டும். மேலும் இந்தப் புன்னகை உங்களை படுக்கைக்கு அழைக்கும் புன்னகை என்று நினைத்தால் நீங்கள் ஏமாறுவீர்கள். இது வெறும் ஸ்நேகமான புன்னகைதான். அவள் வேறொருவனிடம் தொடர்புடையவள் என்பதெல்லாம் வெளியுலகுக்கு தெரிவதற்கான வாய்ப்பே இல்லை. அந்த அளவிற்கு தன் நடைமுறையை வடிவமைத்திருந்தாள்.

ஒரு நாள் தோட்டத்திற்கு சென்றிருந்த சரவணன் திரும்ப வரும் போது, பழனிச்சாமியும் பூங்கொடியும் அலங்கோலமாக இருந்ததை பார்த்துவிட்டதாக பேப்பர்க்காரன் எழுதியிருக்கிறான். சரவணன் இருவரையும் நேரடியாக பார்த்தோனோ அல்லது யூகத்தில் கண்டறிந்தானோ தெரியாது, ஆனால் பூங்கொடியை அடித்துவிட்டான்.

இதன் பிறகு சரவணனும், பூங்கொடியும் எலியும் பூனையுமாக மாறிவிட்டார்கள். பூங்கொடியின் பெயரில் இருந்த சொத்துக்களை எல்லாம் விற்பதற்கோ அல்லது தனது பெயரிலும் மகனின் பெயரிலும் மாற்றுவதற்கான முயற்சிகளில் சரவணன் இறங்க, தினம் சண்டையும், கண்ணீரும், மூக்கு ஒழுகலுமாக மாறியிருக்கிறது வீடு.

இடையிடையே பழனிச்சாமி வீட்டிற்குள் திருட்டுப்பூனையாக சட்டி பானையில் வாய் வைத்ததோடு இல்லாமல் சரவணனை ஒழிப்பதற்கான தூபத்தையும் போட்டிருக்கிறான். மந்திரத்தில் கட்டுண்டவள் போல் பூங்கொடி தலையாட்டியிருக்கிறாள்.

கொலைக்கான கூலிப்படை பவானியில் செட்டப் செய்யப்பட்டது. பவானியில்தான் காவிரி ஆறும், பவானி ஆறும் இணைகின்றன. இந்த இரண்டு ஓடைகளும் இணைந்து ஓடும் ஊர்தான் ஈரோடை, அதாவது ஈரோடு. இந்த ஈரோடு பற்றி எல்லாம் எதற்கு சொல்ல வேண்டும் என்று நீங்கள் கேட்கலாம். ஆனால் கதை சொல்பவர்கள் எல்லாம் இப்படி எதையாவது சொல்லி தங்கள் அறிவை நிலைநாட்ட வேண்டும் என்பது நியதி.

நேற்று காலையில் பழைய சோறும் வறுத்த மோர் மிளகாயும் தின்றுவிட்டு தோட்டத்திற்கு சைக்கிளில் சென்றிருந்த சரவணனை காரில் கடத்திச் சென்றிருக்கிறார்கள் கூலிப்படையினர்.
இதற்கு மேல் இந்தக் கதையை டைப் செய்ய எனக்கு கை வலிப்பதால், கூலிப்படையில் ஒருவன் வாக்குமூலம் கொடுக்க அதை எழுதிய போலீஸ் ஏட்டு சண்முகத்தின் அனுமதியோடு (அவர் சில ரகசியங்களை எடிட் செய்தது போக மீதமானவற்றை) இங்கே பேஸ்ட் செய்கிறேன். ஓவர் டூ கூலிப்படை வாக்கு மூலம்.

என் பேர் சச்சான்(என்கிற) சச்சுதானந்தம். பவானி மார்கெட்டில் தக்காளி வியாபாரம் செய்து வருகிறேன். அடிதடிக்கு எல்லாம் அவ்வப்போது போய் வருவதால் மார்கெட்டில் ஏதாவது பிரச்சினை என்றால் என்னை அழைப்பார்கள். அடிதடியில் பெரிதாக வருமானம் இல்லை. அதிகபட்சம் ஆயிரம் ரூபாய் கிடைக்கும். பிரியாணி தின்பதற்கும், கொஞ்சம் சரக்கடிக்கவும், கூத்தியாவிடம் போய் வரவும் சரியாக இருக்கும். டாக்ஸி டிரைவர் நாராயணன் யாராயாவது கடத்தி பணம் கேட்கலாம் என்று சொல்லிக் கொண்டிருந்தான். நல்ல ‘லம்ப்’ ஆக கிடைக்கும் என்றான். நானும் அது பற்றி யோசித்துக் கொண்டிருந்தேன். அந்தச் சமயம்தான் யாரையோ விசாரித்து பழனிச்சாமி என்னிடம் வந்திருந்தான். சரவணன் என்பவனின் கதையை முடிக்க வேண்டும் என்றும் அதற்காக இரண்டு இலட்சம் ரூபாய் தருவதாகவும் பேச்சு. ஒரு இலட்சம் ரூபாய் அட்வான்ஸ். மீதி காரியம் முடிந்த பிறகு என்று சொன்னான். அத்தனை பணத்தை பார்த்ததே இல்லை என்பதால் நான் நிறைய கொலைகள் செய்திருப்பதாகவும், அவன் என்னைப்பற்றி நம்ப வேண்டும் என்பதால் இது எல்லாம் எனக்கு மிகச் சாதாரணமான விஷயம், நான் பல கொலைகளைச் செய்திருப்பதாகவும் சொன்னேன். கடத்தி காரியத்தை முடிப்பதற்கு நாராயணன் தனது காரை ஓட்டி வருவதாகவும் அதற்கு ஒரு இலட்சம் ரூபாய் தர வேண்டும் என்றான், கடைசியாக எழுபத்தைந்தாயிரத்துக்கு ஒத்துக் கொண்டான். பின்னர் வெங்காயக் கடை ராஜு, பட்டறையில் வேலை செய்யும் விநாயகன், சால்னாக்கடை விஜியன் ஆகியோருக்கு ஆளுக்கு இருபத்தைந்தாயிரம் தருவதாக பேசி செவ்வாய்க்கிழமை காலை ஒன்பது மணிக்கு பவானியிலிருந்து கோபிக்கு கிளம்பிச் சென்றோம். வழியில் கருப்பராயன் கோயிலில் ஒரு தேங்காய் உடைத்து சாமி கும்பிட்டு விட்டுத்தான் வண்டியை எடுத்தோம்.

கோபிக்கு வந்தவுடன் பழனிச்சாமிக்கு போன் செய்தேன். அவன் வள்ளியாம்பாளையத்தில் இருக்கும் சரவணனின் தோட்டத்துக்கு வழியைச் சொல்லிவிட்டு தானும் அவனோடு இருப்பதாகச் சொன்னான். கொஞ்சம் படப்படப்பாக இருந்தாலும் காட்டிக் கொள்ளாமல் போனை வைத்துவிட்டேன். சரவணனும் பழனிச்சாமியும் தென்னை மரத்திற்கு அடியில் நின்று பேசிக் கொண்டிருந்தார்கள். அவர்கள் எங்களை கவனித்தாலும் மிக இயல்பாகவே நின்றார்கள். நாங்களும் அருகில் செல்லும் வரை இயல்பாகவே காரில் சென்றோம். சரவணனுக்கு மிக அருகில் சென்றவுடன், கார் கதவை திறந்து சரவணனை உள்ளே இழுத்தோம். சத்தம் போட்டான். திமிறியதால் விஜியன் அவன் மண்டையில் ஓங்கி ஒரு அடி அடித்தான். ஏற்கனவே வாங்கி வைத்திருந்த நைலான் கயிறை வைத்து நான் கழுத்தில் இறுக்கியதில் அவனுக்கு கண்கள் பிதுங்கிக் கொண்டு வந்தன, நாக்கை பயங்கரமாக கடித்தான். நாக்கிலிருந்து ரத்தம் கசிந்தது. மற்றவர்கள் கைகால்களை இறுக்கிப் பிடித்துக் கொண்டார்கள். ஐந்து நிமிடத்திற்குள்ளாக கதையை முடித்துவிட்டோம். பிறகு வண்டியின் வேகத்தை குறைத்து, அந்தியூர் வாய்க்காலில் அவனது லுங்கியில் ஒரு கல்லைக் கட்டி எறிந்துவிட்டோம்.

இரவு மூன்று மணிக்கு பழனிச்சாமி போன் செய்தான். ஊர் முழுவதும் சரவணன் கடத்தப்பட்டது பற்றி பேசிக் கொள்வதாகவும், காரை சமையல்காரன் முருகன் பார்த்ததாகவும் ஆனால் அவனுக்கு கார் நெம்பர் தெரியாததால் யாரும் கவலைப்பட வேண்டியதில்லை என்றும் சொன்னான். அந்த இரவில் பழனிச்சாமிதான் பூங்கொடிக்கு இட்லி, வடை வாங்கிக் கொடுத்தாகவும் மீதி ஒரு இலட்சம் ரூபாயை நாளைக்கு தருவதாகவும் சொன்னான். கொஞ்சம் நிம்மதியாக இருந்தது, டாஸ்மாக்கில் மது அருந்தியிருந்தோம் தூக்கம் பயங்கரமாக வந்ததால் தூங்கிவிட்டோம். என்ன நடந்தது என்று தெரியவில்லை, அடுத்த நாள் காலை ஆறு மணிக்கு எல்லாம் போலீஸ் பழனிச்சாமியை கைது செய்துவிட்டார்கள், எங்களைத் தேடி மாலை மூன்று மணிக்கு போலீஸ் வந்துவிட்டது.
இனி கதையை நானே சொல்கிறேன்.

போலீஸ் அடித்த அடியில் சரவணனை கொல்லச் சொல்லி பூங்கொடிதான் பணம் கொடுத்தாள் சரவணன் தனது வாக்குமூலத்தில் சொல்லியிருக்கிறான். அதன் பேரில் பூங்கொடியை போலீஸ் கைது செய்திருக்கிறார்கள்.

பழனிச்சாமியோடு தனக்கு நெருக்கம் இருந்தது உண்மை எனவும் ஆனால் சரவணனை தான் கொலை செய்யச் சொல்லவில்லை என்று கைதாவதற்கு முன்பாக உறவினர்களிடம் பூங்கொடி சொல்லியிருக்கிறாள்.

ஊர் பிரசிடெண்ட் கந்தசாமி கடத்தூர் காவல்நிலையத்தில் பூங்கொடியை பார்க்கச் சென்றபோது அவளது முகம் போலீஸ் அடியில் வாங்கி வீங்கி இருந்ததாம். அடி வாங்கியதற்கு பிறகு போலீஸிடம் என்ன வாக்குமூலம் பூங்கொடி கொடுத்தாள் என்று தெரியவில்லை.

பழனிச்சாமிக்கும் , பூங்கொடிக்கும் இருக்கும் தொடர்பை இனி துண்டிக்க முடியாது என்று நினைத்த சரவணன் தன் மனைவியை நண்பனுக்கு விட்டுத் தர சரவணன் முடிவு செய்துவிட்டதாகவும், ஆனால் தனக்கு செய்த துரோகத்துக்கு அவள் தண்டனை அனுபவிக்க வேண்டுமென பழனிச்சாமியோடு சேர்ந்து திட்டம் தீட்டிவிட்டு, தலை மறைவு, சந்நியாச வாழ்க்கையை மேற்கொண்டதாக குரு பிரசாத் சொல்கிறான்.

எனக்கு தலை சுற்றுகிறது. உங்களுக்கு?.

தலை சுற்றவில்லையென்றால் இன்னும் சில குறிப்புகள்.
1. சரவணன் சாகும் போது அவனது சத்தத்தை கேட்கவேண்டும் என்றும் அதற்காக செல்போனை ஆன் பண்ணி வைக்க கூலிப்படையினரிடம் பூங்கொடி சொன்னாள் என்று சொல்கிறார்கள்.
2. சரவணனின் மகன் சந்தோஷ், பூங்கொடியோ அல்லது பழனிச்சாமியோ தனது தந்தையை கொலை செய்யவில்லை என்று உறுதியாக நம்புகிறான்.
3. இப்பொழுது ஜாமீனில் வெளி வந்திருக்கும் பழனிச்சாமியும், பூங்கொடியும் சேர்ந்து அளுக்குளியில் வீடு எடுத்து தங்கியிருப்பதாகவும் ஊருக்குள் பேசுகிறார்கள்.
4. இந்தக் கொலைக்கு பூங்கொடியின் அப்பாவும் உடந்தை என்ற பேச்சும் உண்டு.

– ஆகஸ்ட் 24, 2009

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

* Copy This Password *

* Type Or Paste Password Here *