கானல் நீர்..!

0
கதையாசிரியர்:
கதைத்தொகுப்பு: கிரைம்
கதைப்பதிவு: May 15, 2012
பார்வையிட்டோர்: 9,896 
 
 

டிடிங்….டிடிங்…..டிடிங் ….அழைப்பு மணி அடித்தது….
யாராயிருக்கும்…..? மனதின் கேள்வியோடு…கதவைத் திறந்தேன்…
நீல வண்ண சுடிதாரில்..அழகி….பத்மா நின்று கொண்டிருந்தாள்…ஆனால்….அவள் முகம்….வழக்கத்துக்கு மாறாக வாடி இருந்தது….
இதே பிளாட் ல் ஐந்தாவது மாடியில் வசிக்கும் பத்மா…இந்த நேரத்தில் எதற்காக வந்திருப்பாள்.? .
அந்த அடுக்குமாடி குடியிருப்பில் இருக்கும் வெறும் வாய்களுக்கு மெல்லும் அவல்….அவள்… தான்..!
உள்ளே வா…பத்மா..
இல்ல ஆன்ட்டி..வெளியில் கிளம்பறீங்க போலத் தெரியுது…
ம்ம்…வாக்கிங் போகத் தான்……கிளம்பியிருக்கேன்..
சரி…போயிட்டு வாங்க….நான் போறேன்…!
ம்ம்ம்….சொல்லு பத்மா…என்ன விஷயம்?
அவள் தயங்கினாள்……திரும்பிப் போக எட்டு வைத்தாள்.
உடனே நான்…இதோ… வாக்கிங் கிளம்பிண்டு இருக்கேன் ..வந்ததும் உன்னைக் கூப்பிடறேன் …..வா…என்று சொல்லி விட்டு கிளம்பி விட்டேன்…
பத்மாவின் முகத்தில் பேயறைந்தது போல கருமை நிழல்…

அந்தி சாயும் மாலைப் பொழுது…..சூரியன் தனது வேலையை முடித்துக் கொண்டு அஸ்தமனமாகிக் கடலில் குளிக்கத் தரை இறங்கியாச்சு….இன்று பௌர்ணமி வேறு…முழு நிலவு…சிங்காரமாய் சிரித்துக் கொண்டு வானத்துச் சாளரத்தில் நின்று வேடிக்கை பார்க்கிறது…பாண்டிச்சேரி கடல் காற்றுக்கு கேட்கவா வேண்டும்.?….அந்த அழகிய ஊருக்கு மேலும்….அழகு சேர்ப்பது அந்தக் கடலும் தான்….!

எப்போதும் போல் நான் மாலை வாக்கிங் சென்று விட்டுத் திரும்பும் வேளை…வீட்டை நோக்கி வரும்போது நிலாவைப் பார்க்க மேலே தலை உயர்த்திப் பார்க்கிறேன்…..சூர்யா டவர்ஸ்..மின்னும் எழுத்துக்களோடு .மோகன் நகரின் பிரம்மாண்டமான ஐந்து மாடி குடியிருப்பு….மயங்கும் வேளையிலும் வைரமாய் மின்னிக் கொண்டிருந்தது……வெள்ளை வெளேரென்று….!

அப்படியே……அங்கு…. நான் கண்ட காட்சி என்னை ஒரு நிமிடம் நிலை தடுமாறச் செய்தது….நீல வண்ண உடையணிந்த பெண்…..மேலிருந்து கீழே எட்டிப் பார்ப்பது போல்…..உடனே எனக்குப் பொறி தட்டியது..யாரிந்தப் பெண்…..ஒ….பத்மா….இவள் இந்த நேரத்தில் இங்கே என்ன செய்கிறாள்? …….நான் வருவதற்குள்………நான் எண்ணி முடிப்பதற்குள் … அவள்…காற்றைக் கிழித்துக்கொண்டு அசுர வேகத்தில் தரையில் மோத..விழுந்து கொண்டிருந்தாள். தற்கொலை செய்து கொள்ளப் போகிறாள் என்று நான் .கொஞ்சம் கூட நினைத்துப் பார்க்கவில்லை…
..
இப்போது என் கைவசம் மொபைல் கூட எடுத்து வரவில்லை…யாராவது காப்பாற்றுங்களேன்…….. யாராவது காப்பாற்றுங்களேன்……என் குரல் எனக்கே கேட்கவில்லை….தொண்டைக் குழியில் ஏதோ அடைப்பது போல்…நான் சுதாரிப்பதற்குள்….அது…. நடந்து விட்டது. காலடியில் தொப் பென்று சுட்டு வீழ்த்திய பறவை போல் வந்து விழுந்தாள் பத்மா…. சிமெண்ட் தரையில் பீறிட்டுப் பரவி வழிந்தோடியது ரத்த வெள்ளம்…நடுவில் நீல வண்ணம் மெல்ல மெல்ல ரத்தத்தில் தோய்ந்து சிகப்பாக மாறிக் கொண்டிருந்தது….அவளது குத்திட்ட பார்வை…அவள் பறந்து போனதை சொல்லி விழித்தது. என் இதயம் துடிக்க மறந்து “திக்” கென உறைந்து நின்றது….

நான் சென்று வந்த இந்த ஒரு மணி நேரத்திற்குள் அவளுக்கு அவ்வளவு அவசரமா? இதற்குத்தான் நான் போகிறேன்… என்று என்னிடம் சொன்னாளா? நான் வரும் வரைக்கும் காத்திருக்கக் கூடாதா? பத்மா…உன் இறுதி நொடியை நான் பார்த்தும் என்னால் உன்னைக் காப்பாற்ற முடியவில்லையே….என் இதயம் சுக்கு சுக்காக நொறுங்கிக் கொண்டிருந்தது..என்ன செய்வேன்…? உன் முடிவுக்கு நானும் ஒரு காரணமாகி விட்டேனே..என என் மனசாட்சி குற்ற உணர்வில் என்னை வாட்டத் துவங்கியது…

இதோ…உன்னைச் சுற்றி சாக்பீசால் கோடுகள்…நீ விழுந்து அழிந்த இடத்தைச் சுற்றி ரத்தக்கறையோடு சேர்ந்து சாக்பீஸ் கோலம் வரைந்து வைத்துவிட்டு உன்னை மட்டும் ஆம்புலன்ஸில் தூக்கிப் போட்டுக் கொண்டு சென்று விட்டார்கள். நான்…இந்த அதிர்ச்சியில்…நடந்தது….நடப்பது…நடக்கப் போவது..என அனைத்தையும் ஒரு இயந்திர கதியில் வாயடைத்துப் போய் வெறித்துப் பார்த்துக் கொண்டிருந்தேன்.

என்ன சொல்ல வந்தாய் பத்மா என்னிடம்.?..என்ன கேட்க வந்தாய் பத்மா…? என் மனது இந்தக் கேள்வியையே கீறல் விழுந்த இசைத்தட்டு போல மறுபடியும் மறுபடியும்…கேட்டுக் கொண்டிருந்தது.

அதற்குள் சூர்யா டவர்ஸ் ல் வசிக்கும் அத்தனை வீடுகளுக்கும் விஷயம் காட்டுத்தீ போல பரவி கூடி நின்று பேசிக் கொண்டிருந்தார்கள்…அவர்கள் அனைவரும் பொதுவாகச் சொன்ன ஒரே வார்த்தை…இன்னைக்குக் காலைல தானே இந்தப் பொண்ணு எங்க வீட்டுக்கு வந்து எங்களோட பேசிட்டு போச்சு…..சாயங்காலம் இப்படி ஒரு முடிவுக்குவர என்ன காரணமோ..?

என் இதயத்தில் யாரோ ஊசியால் சுருக்கென்று குத்தியது போல வலி..! ஓ…பத்மா…எனக்குத் தெரியும் உன் குணம்….நீ என்ன நினைத்துக் கொண்டு ஒவ்வொரு வீடாக
சென்று உன் இறுதி தரிசனத்தை காட்டிவிட்டு வந்திருக்கிறாய் என்று…உனக்கு மட்டுமே தெரியும் நீ..போட்ட திட்டம்….கோழை போல் நீ எடுத்த தற்கொலை முடிவு…..அது எங்கள் அறிவுக்கு எப்படித் தெரியும்…?…இப்படிச் செய்து கொண்டாயே……..உன் அம்மா…அப்பா வந்து கேட்டால் இங்கு நாங்கள் என்ன பதில் சொல்லப் போகிறோம்….? உன்னை இந்த நிலைக்கு தள்ளியவனை நீ என்ன செய்யப் போகிறாய்…? என் மனம் பிதற்றிக் கொண்டே இருந்தது.

இந்த கோர நிகழ்வு நடந்து அரைமணி நேரத்திற்குள்…போலீஸ்…பிரஸ்….புகைப்படக்காரர்கள்….தொலைகாட்சி செய்திகள் குழு மற்றும் வேடிக்கை பார்க்கும் கூட்டம் என்று இது போன்ற நிகழ்வுக்காகவே காத்திருப்பது போல சலசலத்தார்கள்….அவரவர் பங்குக்கு கொஞ்சமும் கருணையில்லாமல் கயிறு திரித்துக் கொண்டிருந்தார்கள்..பின்னே..
தற்கொலை செய்து கொண்டது வயசுப் பெண்ணாச்சே…மேலும்…அவர்கள் வீட்டுப் பெண்ணும் இல்லையே…!

நான் அவர்களை விட்டு மெல்ல நகர்ந்து வெளியேறினேன்…பத்மா கடைசியாக நின்ற இடம் எது ..?…..மொட்டைமாடி…அங்கே சென்று பார்க்கலாம்….என லிப்டில் ஏறி
மொட்டைமாடிக்கு சென்றேன்…நல்லவேளை…. அங்கே யாரும் இல்லை.அவள் நின்ற இடத்தை நான் நெருங்கியதும் என் மனம் பதறியது.
வயிற்றில் எதுவோ திரண்டு புரண்டது….ஒரு இனம் புரியாத உணர்வு வயிற்றைப் கலக்க ..மெல்ல சென்று அங்கிருந்து கீழே பார்த்தால்…அதல பாதாளமாய்…என் ..தலை கிறுகிறு வென்று சுற்றி…நா… வரண்டது…..பத்மா…எங்கிருந்துதான் …….உனக்கு இவ்வளவு தைரியம் வந்ததோ ….நினைத்துக் கொண்டே நிலாவைப் பார்க்கிறேன்..

“நிலாவே…என்னோடு சேர்ந்து நீயும் தானே…இதற்கு சாட்சி..?” என் கண்கள் நிலவைக் கேள்வி கேட்டது.

காற்றில் சட சட வென்று காகிதம் அடித்துக் கொள்ளும் சத்தம்..காலடியில் .கேட்க.. குனித்து பார்க்கிறேன்…அது ஒரு டயரி….!
மின்னலென அதை கையில் எடுத்துக் கொண்டு யாராவது பார்க்கிறார்களோ என்று அக்கம் பக்கம் பார்த்துக் கொண்டே….இன்னும் ஒருவரும் மாடிக்கு வரவில்லை…ஊர்ஜிதப்படுத்திக் கொண்டு .வேக வேகமாக கீழே இறங்கி என் வீட்டுக்குள் நுழைந்து கதவைத் தாளிட்டேன். நெஞ்சு திக் திக் கென அடித்துக் கொள்ள….டயரியைப் அவசரமாகப் புரட்டிப் பார்க்க…..அதில்… பத்மாவின் மணி மணியான கையெழுத்து….மார்ச் 6 – 2012…என கொட்டையாக எழுதி கையெழுத்து போட்டிருந்தது…கடைசியாக அவள் எழுதிய வரி இதுவாகத் தான் இருக்கவேண்டும்….நினைத்த மாத்திரத்தில் கண்களில் இருந்து என்னையும் அறியாமல் கண்ணீர் ..தாரை தாரையாய் வழிந்தது.

நினைவுக்கு வந்தவளாய்….அப்படியானால்…அவள் எழுதிய பேனா….??? ஒ…..நான் அதை எடுக்க எப்படித் தவறினேன்….? மீண்டும் மாடிக்கு கையில் பென்டார்ச்சை..எடுத்துக் கொண்டு தட தட வென்று ஓடி…மெல்ல தரையை பார்த்து பேனாவைத் தேடும் விதமாக ஒளியடிக்கிறேன்.. ..நான் நினைத்தது போலவே…அந்தப் பேனா கைப்பிடி சுவர் ஓரமாக தேங்கிக் கிடந்தது.. அசுர வேகத்தில் பேனாவை எடுத்துக் கொண்டு கீழே வந்து வீட்டிற்குள் புகுந்து கதவைத் தாளிட்டேன்…பயத்துடன் மூச்சு வாங்கியது….ஆமாம்…நான் ஏன்.. அவளது டயரிக்காக இவ்வளவு பதட்டப் படுகிறேன்…எனக்கே புரியவில்லை..வெறும் ஆர்வம்..மட்டும் தான்..

இன்னும் டயரியில் வேறு என்ன எழுதி இருக்கிறாள் பார்க்கலாம் என புரட்டிய போது…..சூர்யா டவர்ஸ்..புராணம்……அழகாக ஆங்கிலத்தில் பத்மா…இதில் வசிக்கும் ஒவ்வொரு வீட்டைப்பற்றியும் அங்கே இருப்பவர்கள் பற்றியும் எழுதி வைத்திருந்தாள்…அப்படி என்றால் இது ரொம்ப ஆபத்தான டயரி தான்…இது என்கிட்டயே இருக்கட்டும்…இப்போ முதலில் அதை ஒளித்து வைக்க வேண்டும்….அவளைத் தான் என்னால் காப்பாற்ற முடியவில்லை..இந்த டயரியை எப்படியாவது காப்பாற்ற வேண்டும்….ஏதோ வேகத்தில் செய்வது குற்றம் என்று தெரிந்தும்…ஒரு அசட்டு தைரியத்தில்…டயரியை ஒளித்து வைக்க இடம் தேடினேன்…மனதுக்குள் ஒரு எதிர்பார்ப்பு…என்னைப் பற்றி என்ன எழுதி இருப்பாள் பத்மா….நினைத்த மாத்திரத்தில் புரட்டியவுடன்..அந்தப் பக்கம் வந்தது…..G2 ப்ரியா ஆன்ட்டி….ஆம் அது நான் தான்….படிக்க ஆரம்பிக்கிறேன்…….

டிடிங்…டிடிங்….அழைப்பு மணி சத்தம்…!

திகிலோடு டயரியை மூடி…..புத்தக அலமாரிக்குள் திணித்துவிட்டு…கதவைத் திறக்கிறேன்…..வாசலில் போலீஸ்…! அத்தனை குளிரிலும் எனக்கு வியர்த்து கொட்டியது..

நீங்க…ப்ரியா மேடம் தானே….வந்திருந்த போலீசின் குரலில் ஆச்சரியப் படும் வகையில் ஒரு மென்மை….இழைந்தது.

ஆமாம்…..இந்த மாதிரி அந்தப் பொண்ணு செய்துகொள்வாள் என்று நாங்க யாரும் எதிர்பார்க்கலை….

ம்ம்ம்…இதுபோல் நடந்து விடுவதை யாராலும் யூகிக்க முடியாது தான்…பாவம்…எனக்கு நீங்க கொஞ்சம் இந்த விஷயத்தில் ஒத்துழைப்பு தரணம்……செய்வீர்களா?

எனது நேரம் வீணாகாதிருந்தால்…..அவசியம் செய்வேன்….என்னால் அலைய முடியாது….

நோ…நோ…அவ்வளவு சிரமம் தர மாட்டோம்….

இப்போ கொஞ்சம் அந்த பெண்ணோட பிளாட்டுக்கு வரீங்களா….கொஞ்சம் சின்ன விசாரணை…இருக்கு…மேலும் அந்தப் பெண்ணோடு கூட இருந்தவனின் கைபேசி எண் உங்களிடம் இருந்தால்…அதையும் தாருங்கள்.

இதோ…வருகிறேன்…..நீங்கள் செல்லுங்கள்……ஐந்தாவது மாடி …நம்பர் .502….அந்தப் பையன் பெயர் பிரமோத்…இதோ அவனது மொபைல் நம்பர்…என்று என் மொபைலில் இருந்து எடுத்து நீட்டினேன்…..

தேங்க்ஸ் மேடம்..

அவரும் அந்த எண்ணுக்கு அடித்துப் பார்த்து விட்டு…போன் சுவிட்ச்… ஆப்…. பண்ணி இருக்கிறதே..என்றார்…

இப்போ… அந்த பெண் உங்களுக்கு சொந்தமான பிளாட்டில் தான் குடி இருப்பதாக சொன்னார்கள்…. நீங்களும்..அவங்களோட நல்ல நட்புன்னு சொன்னாங்க…அதோடு இல்லாமல்…..இந்த நிகழ்வை நீங்கள் தான் முதலில் பார்த்ததாகவும் பேசிக் கொண்டார்கள்…அதனால் தான் நான் உங்களைத் தேடி வந்தேன்..

அதெல்லாம் சரி தான் சார்..அந்த பிளாட் என் மகனுடையது தான்…என் மகன் இப்போது துபாயில் இருக்கிறார்…இவர்களுக்கு வீட்டை வாடகைக்கு விட்டிருக்கோம்.. அவ்ளோதான். ஆனால் எனக்கு அவளது இந்த முடிவின் பின்னணி நிச்சயமாகத் தெரியாது…கடந்த இரண்டு வருடங்களாக அவள் ஒரு இளைஞனோடு கூட்டு வாழ்க்கை நடத்துவதாக இங்க குடி வந்தாள்..அதனாலேயே இங்கே இருக்கும் யாருக்கும் அவள் மேல் ஒரு நல்ல அபிப்பிராயம் இல்லை..

வாய்க்கு வந்ததை கண்டபடி எல்லாம் பேசுவார்கள். ஆனால் அவள் அதை ஒரு பொருட்டாகவே எடுத்துக் கொண்ட மாதிரி தெரியாது……அவர்கள் இருவரும் சந்தோஷமாகத் இருப்பது போல் தான் தெரியும்…ஆனால் நாளடைவில் ஒருவேளை..இவர்களின் பேச்சு அவளுக்கு மனவருத்தத்தை தந்திருக்கலாம்…ஆனாலும் அதெல்லாம் இதுக்கு காரணமாய் இருக்க முடியாது….ன்னு எனக்குத் தெரியும்..

அவளும் சின்னப் பெண் தானே…முதலில் மூன்றாவது மாடியில் இருக்கும் பிளாட்டுக்கு தான் குடி வந்தார்கள்…போன வருஷம் தான் அந்த பிளாட் ஓனர் வற்புறுத்தி காலி செய்ய சொன்னதாக சொல்லி ஆறு மாதம் முன்னால் தான் எங்கள் பிளாட்டுக்கு மாற்றிக் கொண்டார்கள்…ஒருமுறை என்னிடம் வருத்ததோடு சொன்னாள்…இதற்கு முன்பு இருந்த வீட்டின் சொந்தக்காரங்க இவள் கொடுத்த அட்வான்ஸ் பணத்தை ஏதேதோ காரணம் சொல்லி கணக்குக் காட்டி..ரூபாய் நாற்பதாயிரம் .திரும்பக் கொடுக்காமல் கழித்து விட்டதாகவும் அதனால் அவளுக்கு நிறைய கடனாகி விட்டதாகவும் வருத்தப்பட்டு சொன்னாள்.

இத்தனைக்கும் ரெண்டு பேரும்…இன்ஜினியரிங் படிச்சு முடிச்சு கைநிறைய சம்பாதிக்கிறவங்க தான்..என்ன..கொஞ்சம் சுதந்திரமா…..முற்போக்கா… சிந்திகறதா நினைத்துக் கொண்டு…..இப்படி….ஆனா அதுவே…இப்போ….அவளது உயிரைப் பறிச்சிடுச்சு.

இந்த பிளாட்டின் இன்னொரு சாவி உங்களிடம் இருக்குமே…துப்பு துலக்க வசதியாக இருக்கும்…அனாவசியமா பூட்டை உடைக்க வேண்டாமே..கைரேகை எடுப்பவர்…வந்திருக்கார்…தற்கொலைக்கு எதாவது துப்பு…சீட்டு…குறிப்பு….!!

அவர் சொன்னதும் என் கால்கள் கிடு கிடு வென நடுங்க ஆரம்பித்தது……பேசாமல் டயரியை கொடுத்துவிடு…உனக்கெதுக்கு வீண் வம்பு…? உள்ளிருந்த நல்ல மனம் ஆணையிட்டது….ஆனால்…ஆசை யாரை விட்டது…

இதோ இருக்கு சார்..என் சாவிக்கொத்தோடு அந்த வீட்டின் சாவியும் இணைந்து இருந்தது…நல்லதாக ஆயிற்று….இந்தாங்க…502….எடுத்துக் கொடுத்தேன்.

அதற்குள் பிளாட்டின் முன்பும் கணிசமாக கூட்டம்…வேடிக்கை பார்க்க….அப்போ..நான் கிளம்பறேன்….சார்..மெல்ல நழுவினேன்….

வாங்க மாடம்…ரொம்ப தேங்க்ஸ்….நான் சாவியை போகும்போது வந்து கொடுத்துட்டுப் போறேன்….
என் பதிலுக்குக் காத்திராமல் …கூட்டத்தைப் பார்த்து இங்க யாரும் கூட்டம் போட்டு எங்க வேலைக்கு தொந்தரவு கொடுக்காதீர்களேன்….அவர் பத்மா வீட்டுக்குள் நுழைந்தார்..அவரோடு கூட அவரது சகாக்களும்…

நான் என் வீட்டுக்குள் நுழையும் போதே..எனக்குள் ஒரு எண்ணம்….மோப்ப நாய் வருமோ..இவர்களோடு கூட…! நினைப்பே…திக் கென்றது….வரும்போது பார்த்துக்கலாம்…!
எனது அசட்டு தைரியம் எப்பவுமே பச்சைக் கொடியோடு தயாராயிருக்கும்.

உள்ளே நுழைந்ததும்…மீண்டும் டயரியை எடுத்து…வேக வேகமாக படிக்க….அதில் விசேஷமாக ஒன்றும் இல்லை….ஒவ்வொரு வீட்டிலும் அவள் கண்ட சிறு சிறு விஷயங்கள்…இரண்டாவது மாடியில் இருக்கும் மணி தான் மனைவியை அடித்து துன்புறுத்தி…வரதட்சிணை கொண்டு வரும்படி படுத்திய பாடு…தினசரி சண்டையில் அவளை அடித்து துவைப்பது……

அவள் வீட்டின் பக்கத்து வீட்டில் இருக்கும் காஞ்சனாவின் கணவன் வேறொரு பெண்ணோடு குடும்பம் நடத்தும் ரகசியம் காஞ்சனாவுக்குத் தெரிந்ததும்…இவளிடம் வந்து
வருத்தப் பட்டு சொன்னது….தனது வயதான காலத்தில் கூட தனக்கென ஒரு பாதுகாப்பின்மையை உணர்வதாக நினைத்து அழுதது.

பழைய வீட்டுக் காரம்மா..இவளின் நாற்பதாயிரத்தையும் தராமல் ஏமாற்றி இவளை கடனாளி ஆக்கியது…அதனால் ப்ரமோதுக்கும்..தனக்கும் ஏற்பட்ட மனஸ்தாபங்கள்..
அப்படியே..அடுத்து….என்னைப் பற்றி…..எனக்குள் ஒரு ஆவல்….நிமிர்ந்து உட்காருகிறேன்…பத்மா..நல்ல புத்திசாலியும்…எழுதும் திறன் படைத்தவள் தான் என்றும் அவள் எழுத்து நடை சொல்லிக் கொண்டே போனது.

ப்ரியா ஆன்ட்டி….எனக்கு ரொம்பப் பிடிக்கும்…ரொம்ப நல்ல குணம் தான்…இருந்தும் ஏன் இவர்களை இவர்களின் கணவன் நிராகரித்தான்…..இவர்களை விட வேறு எந்தப் பெண் அவரது வாழ்வில் மலர்ச்சியை ஏற்படுத்தி விட முடியும்..?…என்று முடித்திருந்தாள் . என்றோ..நான் சொன்ன சில விஷயங்களின் தொகுப்பாக எழுதி இருந்தாள்..

அடுத்து சில பக்கங்கள் காலியாக….அதன் பின்….பிரமோத்….நீ செய்வது அநியாயம்…என்னை இப்படி ஏமாற்றி விட்டாயே….நான் எப்படி என் பெற்றோர்கள் முகத்தில் விழிப்பேன்….நான் செய்தது தவறு என்று எனக்குப் புரியும் போது…நீயும் இல்லை என் அருகில்…என் சுய மரியாதை…எனது தைரியம் எதுவும் என்னோடு இல்லாமல் போனதே….நானே தான் என் வாழ்வின் முடிவுக்குக் காரணம்….திட்டவட்டமாக…நான் தான் காரணம்…. அழுத்தி அழுத்தி….எழுதி இருந்தது…மேலும் .ஐ…லவ்…பிரமோத்…. எழுதி பத்மா பிரமோத்…கையெழுத்திட்டு ஒரு ரோஜாப்பூ… வரைந்து வைத்திருந்தாள்…

அதை படித்து விட்டு நான் பிரமை பிடித்தவள் போல் அமர்ந்தேன்……இவள் ஏன் இதை எல்லாம் அவளின் அத்தனை வேலைகளின் ஊடே இவர்களைப் பற்றியெல்லாம் எழுதி வைத்திருக்கிறாள்..? தான் சுயநலமாக எடுத்துக் கொண்ட வாழ்க்கையை நியாயப் படுத்தவா…? அடுத்தவரின் வாழ்வோடு தன் வாழ்க்கையை ஒப்பிட்டுப் பார்க்கவா? இல்லையென்றால்…கல்யாணம் செய்தவர்கள் எல்லாருமே இப்படித் தான் கஷ்டப் படுகிறார்கள்…அதனால் இனிமேல் நான் வாழ முடிவெடுத்தார்போல்
தனது சிநேகிதிகளுக்கு புத்தி சொல்லவா…? அடி அசட்டுப் பெண்ணே….இவ்வளவு திட்டம் போட்டாயே…கடைசியில் என்னாச்சு….உன்னால் உன் மனதையே கட்டுக்குள்
வைத்துக் கொள்ள முடியவில்லையே……

என் ஆராயும் சிந்தனைக்கு நல்ல தீனி….ஆம்…அம்மி மிதித்து அருந்ததி பார்த்து மணம் செய்து கொண்ட பெண்கள் … பின்னாளில் எப்படி எல்லாம் கணவனின் கொடுமைகளுக்கு ஆளாகிறார்கள்…இதை எல்லாம் பார்த்தால் தான் வாழ்வது…கல்யாணம் ஆகாமலேயே சேர்ந்து வாழ்ந்து புரிந்து கொண்டுப் பொருந்தி வந்தாள் மேற்கொண்டு வாழ்வது இல்லாத பக்ஷத்தில் விலகி வெளியே வருவது மிகவும் பாதுகாப்பானது என்று எண்ணி இருப்பாள்..போல….அதனால் தான் அவளை யார் அவதூறாகப் பேசினாலும்..அதை பொருட்படுத்தாமல் பக்குவமாய் ஏற்றுக் கொண்டிருக்கிறாள்….ஆனால் எப்போது…. தான் எடுத்த இந்த முடிவில் பிரமோத் அவளை ஏமாற்றிவிட்டதாக உணர்ந்தாளோ …..அந்த நொடியே அவள் மனத்தால் இறந்து விட்டாள்.கல்யாணம் செய்து கொள்பவனே..ஒரு குடும்பமாக குழந்தைகளோடு வாழும் போதே…..சமயத்தில் வேறொரு நட்போடு சென்று விடும் போது….இவன் திருமண பந்தமே இல்லாமல் கூட வாழும் ஒருத்தியை தனக்கு வேண்டாத போது அறுந்த செருப்பாய் உதறுவது போல் கழட்டி விடுவது ஒன்றும் கஷ்டமில்லையே….?.இதை அனுபவமாக உணர்ந்ததும்……அந்தக் கணமே…..அவளது பாதுகாப்பு வளையமும் கழன்று விழுந்து விட்டது.

தான் எடுத்த முடிவின் கோரம்…அவளைப் பார்த்து சிரித்திருக்கிறது….அவள் ஆதரவாக சாய்ந்து கொள்ள ஒரு தோளும்…ஏற்காத போது….வீடு வீடாக வந்து..
பார்த்து….தான் நல்லவள் தான் என நிரூபித்துக் காட்டுவதற்காகவே…இப்படி ஒரு கோர முடிவைத் தானே தேடிக் கொண்டாளோ….!

அவள்..கீழே விழும்போது….என்னவெல்லாம் எண்ணியிருப்பாள்….என் கற்பனை எகிற….நிச்சயமாக அவளது மனக் கண் முன்னே….ஒவ்வொருவரின் வீட்டு நிகழ்ச்சியும் வந்து போயிருக்கும்.

பத்மாவின் ஆவி நினைக்குமோ……அத்தனை வீடுகளிலுமே ஏதோ ஒரு பிரச்சனையைத் தானே ஒவ்வொருவரும் நித்தம் சமாளித்துக் கொண்டு வாழ்கிறார்கள்…நான் மட்டும் அவசரப்பட்டு விட்டேனோ….என்று…!

வாழ்க்கை என்பதே கானல்நீர் போல் தானோ..?

நினைத்த மாத்திரத்தில் ஆமாம் என்பது போல அழைப்பு மணி அடிக்க….

ஒரு தீர்க்கமான முடிவுடன்….டயரிக்கு நடுவில் அந்தப் பேனாவை சொருகி வைத்து….கையோடு எடுத்துக் கொண்டு கதவைத் திறந்தேன்.

எதிர்பார்த்தபடியே..அந்த போலீஸ் ஆபீசர்….சாவிக் கொத்தோடு….

சார்..நானே…. மேலே வந்து பார்க்கணும்னு.. இருந்தேன்…வீட்டைப் பூட்ட முடியாது… சாவி உங்க கிட்ட மாட்டி கொண்டது….

இன்று…. மாலை நான் வாக்கிங் கிளம்பும்போது அந்தப் பெண் பத்மா வந்தாள்…நான் அவசரமா கிளம்பறேன்..வந்ததும் பேசறேன்னு சொன்னேன்….அந்த நேரத்தில் எனக்கே
தெரியாமல் என்.. வீட்டு டேபிள் மேல அவள் தனது டயரியை வைத்து விட்டு போயிருக்காள் …நான் இப்போ வந்து தான் கவனித்தேன்……இது உங்களுக்கு மிகவும் உபயோகமாக இருக்கலாம் …சொல்லிக் கொண்டே அவரிடம் அந்த டயரியை நீட்டினேன்..

என் நெஞ்சில் இருந்து ஒரு பெரிய பாறாங்கல்லை இறக்கி வைத்த நிம்மதி..ஒ….அடப் பாவமே…உங்களுக்கு ரொம்ப நன்றி மேடம்…பத்திரமாக வைத்துக் கொண்டார்..

அந்த டயரி .உள்ளே ஒரு பேனா…என்றேன்…என் கவலை எனக்குத் தானே தெரியும்.

அதையும் கையில் எடுத்து வைத்துக் கொண்டார்.

என் மூச்சு இப்போது தான் சீரானது…

அவர் கிளம்பத் தயாரானதும்…..

சார் என்று இடைமறித்தேன்…

சொல்லுங்க…மேடம்…..என்றார்..

எங்கள் வீடு எந்தப் பிரச்சனையும் வராமல் காலி செய்து கொடுக்க நீங்கள் தான் உதவ வேண்டும்….ப்ளீஸ்…என்றேன்…

அந்தப் பெண்ணோட அம்மா அப்பாவிடம் தொடர்பு கொண்டு பேசியாச்சு…அந்தப் பையன் பிரமோதை…ட்ரேஸ் பண்றோம்……கண்டிப்பாக…நாங்க உங்களுக்கு உதவி செய்து தருவோம்…கவலைப் படாதீர்கள்……நம்பிக்கையோடு சொல்லிவிட்டு நகர்ந்தார்.

இத்தனை பேரின் தலையை பிய்த்துக் கொள்ள செய்து விட்டு…பத்மா நிம்மதியாகப் பறந்து விட்டாள்…
இனிமேல் சூர்யா டவர்ஸ்-ல் வெறும் வாய்கள் மெல்ல பத்மா என்ற அவல்…..இல்லை.

Print Friendly, PDF & Email

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *