எத? எவன் கண்டதச் சொல்ல? நான் கண்டது கல்லுத்தரைக் காட்டில். தடம் சொல்றன் கேளு.
பஸ்ஸு வந்து நிக்கிற மரத்தடியும் இட்டிலி சோடாக் கடையும் தாண்டினா, ரஸ்தா நேரோட்டம் போட்டு, எருமை புரள்ற சேத்துப் பள்ளத்திலே விளுந்து, அக்கரை ஏறும்போது ரெண்டு தடமாகும். ஒண்ணுக்கு இன்னும் பேர் ரஸ்தா. அதே மாதிரி கல்லிலும் புல்லிலும் prameel11கால்பட்டுத் தேய்ஞ்ச இன்னொண்ணு பேரில்லாத காட்டுத்தடம்.
வெய்யிலில் எருமைப்பள்ளம் தண்ணி வத்தி, களி காறைகட்டிப் பொளந்து கெடக்கும். ஊரெல்லாம் களிமண்ணு. கூடவே பாறைக் கல்லுத் தரையுமுண்டு. மரமில்லாம வெளிச்ச மாதிரி இருந்தாலும் கல்லுக் காட்டில் தடம் மாறிடும். மேற்கே மலைக் காட்டுக்குப் போற கோணமிருந்தா வழிகேட்டுக்கோ. சுக்கான் பயலைக் கேளு. என்னைக் கேளு.
பஸ்ஸ்டாப்பில் இட்லி சோடாக்கடேல பஸ்ஸுக்காரன் நிப்பான். அக்குளில் தோல் பட்டைப்பையிலே ரூவா சில்லறை இருக்கும். வெத்தலைச் சாறு வாய்க்குள்ளே குதகுதன்னு உப்பிக் கிட்டுக் கிடக்கும். இட்லி சோடாக்கடேல போலீஸூக்காரரும் நிப்பாரு. துண்ணுட்டுக் கணக்கில போடும்பாரு. ஆளோட்டம் பாத்துக்கிட்டு வெத்தலையிலே சுண்ணாம்பைப் போடுவாரு.
யாரோ வர்றான் – வெள்ளை வேட்டி. அவனுக்கு போலீஸுக்காரரு அக்கரபக்கரமா சலாமுகள் வைச்சு, எசமான் புண்ணியமுங்கறாரு. வெள்ளை வேட்டி பாக்காமலே, “சாவடில போயி வந்துட்டேன்னு சொல்லு”ன்னுட்டு வேட்டியை நாசூக்கா மடிச்சுத்தூக்கி, எருமைப்பள்ளத்துலே தடம்புடிச்சு அக்கரை ஏறி, ஊர்க்கோயில் பக்கம் தலையைக் காட்டிட்டுப் போறான். பிஸினஸான ஆளு. கண்ணு குடுக்காமலே ரஸ்தாவிலே போறான்.
ரெண்டுதடம்லே சொன்னேன்? ஊருக்குள் ஓடற ரஸ்தா ஒண்ணாச்சா? அதுக்கு இடத்துக்கையில மலைக்காட்டுக்குப் போற தடம். அந்தத் தடத்தைப் புடிச்சா, வயலுக்குத் தரைகாட்டதெ கல்லுகள் முளைச்ச புத்தும் இருக்கும். ஒரு கல்லுத் தூரத்துக்குள்ளார ஊர்ச் சனங்கள் வெளிக்குப் போற இடம் முடிய முந்தி ஒரு தடம் பெரிய கல்லுத் தரையிலே ஏறி திக்கில்லாமல் போகும். அங்கிட்டு கல்லுத் தெரிஞ்சுதான் தடம் புடிக்கணும். அரையாள் மட்டுக்கு கல்லுகள் முளைச்ச கல்லுத் தரைக்காடு. ஒரு கல்லைப் பார்த்தா இன்னொண்ணாட்டமிராது. ஒரு கல்லை தாண்டி இன்னொண்ணைப் பார்த்தப்ப, அதுக்குக் கிட்டத் தாண்டா கண்டேன். பொணம்டா!
கையிலே இறுக்கிப்புடிச்ச சிலம்புக் கம்பு முறிஞ்சி, காஞ்சு கறுப்பான ரத்தக்கூடு போட்ட தலையைத் திருகி எவனுகளையோ கோரமாப் பாத்த வாக்குக்கு குப்புறக் கெடக்கு பொணம்.
கல்லுதாண்டி கல்லுப்பக்கம் ஏறினப்பவே, ரெண்டு மூணு நிழல்கள் மூங்கில் முறிஞ்சதாட்டம் சடசடன்னு அடிச்சு முகத்துப் பக்கமாகத் தாக்கி ஏறினப்ப, “சீ பேயே”ன்னு கையை அலையாட்டி வீசினேன்ல? பிராந்து? இப்ப அதுகள் ஆகாசத்தில் வட்டம் போடுது. கெண்டைக்கால் இறைச்சியை உரிச்சுத்தின்னுட்ட வேகம்.
அப்போ நல்ல படபடக்கிற வெய்யில். முதநாளும் ராவுமா பழைய பிடாரன் கூட்டத்தோட பக்கத்தூரு போய் பாம்புத்தோலை வித்துக் குடுத்துட்டு, வாங்கித் தின்னுட்டு, என்னடா பிடாரா எல்லாம் கூட்டத்தில் கெளவி யாருக்கு, புள்ளை எப்படிப் பெத்தாளுகள்னு சண்டை போட்டிட்டு, பக்கம் பாத்துட்டு, பஸ்ஸடிலே தூங்கிட்டு நான் கல்லுத் தரைக்காடு பக்கமாப் போனது ஓணாணுக்கு. வெய்யில் பாட்டப் பாக்காமப் போனாத்தான் ஏதும் கிடைக்கும். மலைக்காட்டுப் பக்கம் போனா அணில் உண்டு. ஏன் ஊருக்குள்ளே மச்சு வீட்லே பொறுக்கித் திங்கிற அணில் இல்லையா? மச்சு வீடுகள் உள்ள ஊராப் பாத்துப்போ. கண்ணை மேலே ஓடவிட்டுக்கிட்டு மத்தியானம் மாறி மூணுமணிக்கு தூக்கம் விட்டு அணில் கொரைக்கிற வேளைக்குப் போ. ஊசிக் கம்பை நல்ல உயர ரெடியிலே தொரட்டிலே கட்டி ஸ்டெடியாப் புடிச்சிக் கிட்டுப் போ. அணில் குத்துறன்னுட்டு நீ மச்சில நிக்கிற மாமியாரு புட்டத்தைக் குத்தப் போறாய்.
இந்த ஊரில் மச்சுமில்லை. மச்சில மாமியாருமில்லை. அணில் கொரைக்கிறது கேக்குதுன்னு போனா, ஊரில இருக்கிற நாலு மரத்துலேயும் கொம்பு கொம்பா மாறுது. எப்படிக் குத்த? மலைக் காட்டிலும் இருந்து சத்தம் காத்தில் ஏறி வருது. நாளைக்கு அணிலக் குத்துவம், இப்ப எனக்காச்சி ஓணானுக்காச்சின்னு இங்க போனா கெடக்குது பொணம்.
அப்பத்தாண்டா நாத்தத்தைக் கண்டேன். மெத்தையால முகத்தில் அடிச்ச மாதிரி கப்புனு பொத்தி அடிச்சுது பாரு பொண வெக்கை. நானும் பாக்க காத்தும் மாறிச்சா, இல்லை, கண்ணால் பாத்த பிறகு நெஞ்சுக்குள்ளே இருந்து வந்திச்சாடா பொண வெக்கை? பொணத்தைப் பார்க்க முந்தி இல்லை. பார்த்த பிறகு வருது. பேப்பரில் பார்த்துச் சொல்லுடா நாகரீகத்தை. எப்படி பாத்த பிறகு மணம் வந்திச்சுதுனு.
ரத்தக்கூடு போட்ட தலையைப்பாத்து பொணத்தைப் பாத்து, கெண்டைக்காலு கிழிஞ்ச இறைச்சியையும் பார்த்ததும் ஒரே அடீல அடிச்சுது பாரு திகில், “வே ஏ ஏ”ன்னு வாயுளறிட்டேன்.
பிறகு பாத்தா எல்லாமா திடுதிடுன்னு ஓடி வருது. கல்லு, மண்ணு, புத்து, புதரு, ஊர்க்கோயிலு எல்லாமா என்னடா எங்கிட்ட ஓடி வருதுன்னு பார்த்தா நாந்தான் ஓடறேன். கண்ட ஓணானுகளையும் விட்டுப் போட்டு ஓடறேன். எங்கே ஓடறேடா காடா, டேய், சாவடிக்கு ஓடுடான்னு சொல்லிக்கிட்டே ஓடறேன். போலீஸு சாவடில போயி சாமி சாமின்னு சொல்றேன். வாய் பேச்சு வரல்லே. டம்ளரிலே தண்ணி குடுத்தாங்க. என்னடா விவகாரம்னாங்க. “பொணம் சாமி”ன்னு சொன்னா, நாற்காலியிலே உக்காந்த ஏட்டு சாஞ்சிக்கிட்டாரு, கேள்வி கேட்கிறாரு. நேத்து எங்கேடா நின்னே, ராத்திரி எங்கே போனே, ஏன் இங்கே வந்தே, ஏண்டா அங்கே போனேன்னு கேள்வி. எனக்கு பொணத்தைப் பாத்ததும் போதும் சாமியைப்பாத்ததும் போதுமின்னு பக்கம் பாத்தா, ஒரு ஆளும் அவன் கூட சாறிக்காரப் பொண்ணும் வந்து நிக்கிறா.
பொணத்தைப் பாத்தியா மாமியாரு மணத்தைப் பாத்தியான்னு கேள்வி. பொணத்தைத்தான் பார்த்தேன் சாமி, அப்புறமாத்தான் மணத்தைப் பார்த்தேன்னேன். அதப் புடிச்சிக்கிட்டாங்கடா!
“என்னடா உடான்ஸ் உடறே? முதல்லே மணந்தாண்டா புடிக்கும். உனக்கு ஆர்றா பொணமிருக்குன்னு சொன்னவன்? ஆர்றா இங்கே வந்து சொல்லுன்னு ஊசி குத்திவிட்டவன்”னு புடிச்சிக்கிட்டாங்கடா. நின்னுகிட்டிருந்த கான்ஸ்டேபிள் சுவத்திலே தொங்கின தடியை எடுத்துக்கிட்டாரு. தோல்வாரிலே நாலு விரலை மாட்டிப் புடிச்சிக் கிட்டாரு.
நான் கும்புட்டேன். “என்னை உடுங்க சாமி”ன்னேன்.
“சொன்னவங்ககிட்டே போய் சொல்லுடா, கபர்தார்னு சொல்லு.”
“சரி சாமி”ன்னேன். அப்புறமா ஆரு சொன்னவன்ங்கறாங்க. ஆருமில்லீங்க, நானு பார்த்தேனுங்கன்னேன். பேச்சை மாத்திட்டாங்க.
“நீங்க ஏண்டா ஓணான், நாயி, பூனையைத் திங்கிறீங்க? ஆடு மாடு இல்லியா?”
“அதுக்கேதுங்க பைசா?”ன்னேன்.
கொஞ்ச நேரம் பேச்சில்லே, அப்புறம் மெதுவா கேள்வி. “நீ எப்படா கடேசி வாட்டி மலைக்காடு பக்கமாய் போனே? யார்றா மலைக்காட்டுக்குப் போறவன் வாறவன்? சுக்கானுக்கு யார்றா மலைக் காட்லேருந்து வந்து கஞ்சா பத்திரம் சப்ளை பண்றவன்?”
சுக்கான், பத்திரம், அது இதுன்னதும் – நல்ல பாம்பைப் புடிக்கறதுக்கு சாரைப் பாம்பு விடறாங்கடா காடான்னு உஷாராயிட்டேன்.
“சுக்கான் நல்லபாம்புத் தோலை வித்து வயத்தைக் களுவுற பாவி சாமி. எங்களுக்கு இப்பல்லாம் பாடேதுங்க? எங்காவது வயலிலே வரப்பிலே பாம்பைப் புடிச்சாதாஞ் சாமி”ன்னு கும்புட்டேன்.
“எலக்சனுக்கு நில்லுடா. ஓட் போடுவான், அப்புறம் நாட்டை எல்லாம் காடா மாத்துடா. போடா! போயி கரப்பான் பூச்சியைத் துண்ணுடா”ங்கறாரு ஏட்டு.
நான் வந்து நின்ன சாறிக்காரியைப் பார்த்தேன். வாசப்பக்கம் எரு வராட்டிக் கூடையை எறக்கிவச்சிட்டு வந்திருக்கா. அவளும் அவளோட வந்த ஆளும் ஏட்டு கிட்ட ஒரே குரலா, “சாமி வராட்டி வந்திருக்கு”ன்னு சொல்லிட்டு பரபரன்னு முழிக்கிறாங்க. சாறிவாரிக்கு மேலாக்கு சாஞ்சு முலை நாய் மூக்கு மாதிரி ‘உர்’னு நிக்குது. அதப்பார்த்தேன். துணியை சரி பண்ணிட்டு, என்னடா நீ என்னைப் பாக்கற காலமாப் போச்சாடான்னு திரும்பி ஒரு முறைப்பு வைச்சா.
“நான் அப்ப போறஞ்சாமி”ன்னேன். “சாயாக்கு ஏதும் பைசா”ன்னு மெல்லிசா இளுத்தேன்.
“திமிராடா?”ன்னு தடிக்கம்புக்காரரு எதுக்க வந்தாரு. பின்னாடி கால் வச்சு, சரேலேனு கதவு வெளியே பாய்ஞ்சு ஒரே வீச்சிலே ரோட்டுக்கு வந்துட்டேன்.
2
என்னடா போலீஸ்காரங்கிட்ட பொணங்கெடக்கு, அரெஸ்ட் பண்ணு, சாட்சிக்கு நான் நிக்கேன், வா ஒரு கை பாத்துப்புடலாம்னு மஸ்த்தா போயிச் சொன்னா, ஊசி குத்திவிட்டவன் யார்றா, இங்கே ஏண்டா வந்தே? நேத்தெங்கேடா போனே? களவாணி, உடான்ஸ்ங்கறாங்க? என்ன இது புதுமாதிரி எலக்ஷன் பாடுன்னு மடீல பீடியைப் பார்த்தா, காலி. நேரே சுக்கான்கிட்டே பீடி பாக்கலாமின்னுட்டுப் போனேன்.
ஊர்க் கோயிலுதாண்டி மரத்தடியிலே தனியாக் கிடக்கான். அவன் ஆட்களைக் காணம். வாசத்திலே பார்த்தா பத்திரவாசம். பீடியிலே சுத்தி அடிச்சுக்கிட்டுக் கிடக்கான். கேட்டா வெத்து பீடிதான் கிடைக்கும். பத்திரத்தையா குடுக்கப் போறான்? பொழைப்பாச்சே. இப்போ பொழைப்போட பொழைப்பா இவனும் புகை புகையா விடறான்.
“ரான்சிட்டர் வாங்கிட்டாண்டா சுக்கான் பத்திரத்துலே”ன்னு நேத்து பிடரான் சொல்லிக்கிட்டருந்தானுல்ல? அப்படி பேச்சுதான் ஏறிட்டுது. ஆனால் சுக்கான் ரான்சிட்டரும் வாங்கலை ஒண்ணுமில்லை. இவனே புகையா விட்டா எப்படி வாங்கறது? போலீஸிலே வேறே மாட்டி ஒரு கத்தை பத்திரத்தைப் பறிகுடுத்திருக்கான். எப்படித்தான் உள்ளுக்குப் போகாம தபாய்க்கிறானோ தெரியலை. எல்லாத்துக்கும் விவரம் தெரிஞ்சிருக்கணுமில்ல?
“டேய்”னு போயி குந்தினேன்.
அவனா பேசுவான்? கண்ணுக்குக் கண்ணு குடுக்காம பத்திரத்தைப் புடிச்சிக்கிட்டிருக்கான். ஆளு மாறிட்டான். தாடியா நம்மளுக்கு முளைக்குது? அவன் தாடியைப் பாரு. கறு கறுன்னு வருது. பசிதாகம் இல்லாம பத்திரத்தைக் குடிக்கிறான். ரத்தம் தாடியாவது. கண்ணு மாறி மாறி நிக்குது.
“என்னடா, பீடி இல்லிடா”ன்னேன். அவனிட்ட சட்டு புட்டுனு பேசினா பதில் வராது. பக்கம் போயி பக்கம் வந்து பேசிப் பாரு, பதில் குடுப்பான். “ஏண்டா, ஏண்டா, ஏண்டா”ம்பான். அதுக்குள்ளே பொளுது சாஞ்சி வெள்ளி கிளம்பிடும்.
“உடான்ஸுங்கறாங்கடா, பொணத்தைப் பாத்தியா மணத்தைப் பாத்தியாங்கறாங்கடா. அப்படியும் சொல்றாங்க, இப்படியும் சொல்றாங்கடா”ன்னேன். “பொணம்டா, கல்லுத்தரைக் காட்ல செத்துக் கெடக்குதுடா பொணம்”னேன்.
சரக்குனு கண்ணு குடுத்தான். முழி விடைச்சுக் குத்துது.
“பாத்தியாடா?”ன்னான்.
“கல்லுத்தரைக் காட்லேடா.”
“நோட்டம் சொல்லு”ன்னான்.
“காலத்தாண்டா பார்த்தேன். தலையை அடிச்சுப் பொளந்து போட்டுட்டாங்கடா. பிராந்து கொத்தி கெண்டைக்கால் எலும்பு நிக்குதுடா.”
“சீ, நாயே! மாட்டுப் பொணம்டா”ன்னு ஒரு கண்ணை மூடிக்கிட்டு என்னைப் பார்த்தான்.
“மாடுன்னா அதை இறச்சி போடாம உங்கிட்டயா பீடிக்கு வருவேன்? ஏண்டா, மாடு பச்சை நிறத்திலே லுங்கியைக் கட்டிக்கிட்டாடா செத்துப் போகும்? மாடுன்னா கையும், கையிலே முறிஞ்சிபோன சிலம்புக் கம்புமாடா இருக்கும், ஏண்டா?”ன்னேன்.
“சீ, நாயே.. டேய்… வாடா, காட்டு”ன்னு ஓடினான் பாரு. நான், நீ ஓடமுடியாத ஓட்டம். ரோட்டுச் சந்திலே போய் கோயில் புறத்தாலே மாறி, குறுக்கே புதர்க்காட்டிலே பாஞ்சு, சடால்னு நின்னு என் தலை மயிரைப் புடிச்சுக்கிட்டான். “போலீஸ்கிட்டே போனயாடா? ஏண்டா போனே?”ன்னான்.
“ஏண்டா, டேய், உடுடான்”னேன்.
“பச்சை லுங்கியா சொன்னே?”ன்னான்.
“பச்சை லுங்கிடா, ஏண்டா உடுடா”ன்னேன்.
விட்டுட்டு மடியிலேருந்து பத்திரத்தை எடுத்தான். “மோப்பம் தெரியுதா? மனுச வெக்கை அடிக்குது. ஆரோ வராங்கடா வெள்ளை வேட்டி மனுச வெக்கை”ன்னான்.
“பொண நாத்தம்தானே?”ன்னேன். பொணநாத்தத்துக்கு இன்னும் அரைக்கல்லாவது போகணும். நான் சொன்னது சும்மா ஏட்டிக்குப் போட்டியா.
“ஆரோ ஆளு போறவாற வெக்கைடா”ன்னுட்டு பத்திரம் சுத்தின பீடியை எடுத்து எனக்கே குடுத்தாண்டா, “குடிடா, நாயே! வேட்டி நாத்தம் களியட்டும்”னு
தீப்பெட்டி எடுத்து நெருப்புக்கீறி “இளு”ன்னு பத்திரத்தை கொளுத்தியும் விட்டாண்டா, “இளுத்துட்டுக் கைமாத்து”ன்னு. புகையை கமுக்கம் பண்ணிட்டு சுருளைக் குடுத்தேன். வாங்கி கையாலே பொத்து வைச்சு இளுத்தான். கழுத்து நரம்பு விடைக்குது, கண்ணு மூடிக்கிட்டு கபாலத்துக்குள்ளே ஓடுது. அவ்வளோதான், பீடி முடிஞ்சி போச்சி. கமுக்கம் பண்ணிட்டு புகையை விட்டான் பாரு, ஒரு கூடாரம் புகை.
அப்போ பார்த்து, “தடம்பாத்துப்போ. வராட்டியை நல்லா அடுக்கிட்டு எரிக்கணும் போ”ன்னு யாரோ சொன்ன பேச்சு. அதுக்குப் பதிலா, “எசமான், ஆகட்டுஞ்சாமி”ன்னு ஒரு ஆணும் பொண்ணும் ஏகமாப் பேசின குரல்.
சுத்திப் பார்த்தேன். நாங்க நிக்கிற இடத்துக்குப் பின்னாடி புதர்க்காட்டுக்கு அந்தாண்டை கோயில். “காலடிச்சத்தம் வருது”ன்னான் சுக்கான். “ஆளு, ஆளு”ன்னான். ‘கிர்’ருன்னு பூச்சி, குரல் வெட்டிப் பாடற சத்தம். வெய்யில் சாயுது. மனிசனில்லாத வெளிச்சம்.
சரக்குன்னு பின்னாடி சத்தம். சடார்ன்னு திரும்பினேன். கோயில் பக்கமா இருந்து வந்திருக்கோ என்னமோ அந்த ஆளு, வெள்ளை வேட்டி. அதை மடிச்சுக்கட்டி இருந்தான். முண்டா பனியன். அந்த ஆளு என்னைப் பார்க்கான், சுக்கானைப் பார்க்கான். அந்த ஆளு! எங்கேயோ நல்லாப் பார்த்தமே அந்த ஆளை? எங்கேன்னு நினைப்பு வரல்லே. ஆளைப் பார்த்ததும் சுக்கான், ஒரு தலை உயரம் குனிஞ்சி தோளை ஒடுக்கி தலையை பக்கத்திலே சரிச்சு ஒரு இளிப்பு இளிச்சான் பாரு. நான் நீ இளிக்க முடியாத இளிப்பு. நானும் “எசமான்”ன்னு இளிச்சு வச்சேன்.
ஆளு அங்கே இங்கே சுத்தி பிஸினஸா பார்க்கான். “வேறே ஆளு நிக்காடா?”ன்னான்.
அந்தக் குரலு! அதுகூடப் பளக்கமாத்தான் கேட்டுது. நெனப்பு வரலை.
“இல்லீங்க சாமி”ன்னான் சுக்கான், “நாங்க பாக்கலை சாமி”ன்னான்.
ஈயைப் புறங்கையாலே விரட்டற மாதிரி கையை ரெண்டு அசப்பு ஆட்டி, “சரிடா, போங்கடா ஊருப்பக்கம்”ன்னான் அந்த ஆளு. நானும் சுக்கான் வாலைப் புடிச்சிக்கிட்டுப் போறேன்.
3
கோயிலண்டை போனதும், புதரடியிலே மாறி, திரும்பிப் பார்த்தோம். கல்லுத் தரைத் திக்கிலே புகை காட்டுது. “பொணத்தை எரிக்கிறானுவடா”ன்னான் சுக்கான்.
“ஏண்டா நாறவிட்டாங்க?”
“பாக்கிறவன் பாத்துக்கோ. கபர்தார்னு காட்டத்தாண்டா”ன்னான் சுக்கான்.
“யார்றா செத்துப்போன பச்சை லுங்கி? யார்றா? மோப்பம் தெரிஞ்சிருக்கு உனக்கு, ஏண்டா, டேய்?”ன்னேன்.
நான் குடைச்சல் குடுக்க அவன் பேச்சுக்காட்டாமே கோயிலத்தாண்டிப் போறான். “நேத்திக்கி நீ பிடரான்கிட்டயா போயிருந்தே?”ன்னான். பேச்சு விட்டுப் பேச்சு மாத்தறான். விட்டுப்புடிக்கலாம்னுட்டு விவரம் சொன்னேன். மரத்தடிலே குந்திக் கேட்டான்.
“ஊருக்குள்ளே இன்னிக்குப் போனயா?”ன்னான்.
“ஊருக்குள்ளயா?”
”டீக்கடையைப் போய்ப் பாரு”
“டீக்கடையா?”
ஊருக்குள்ள இருக்கற டீக்கடைப் பயல்கிட்டத்தான் சுக்கான் மொத்தமா பத்திரத்தை வாங்கி அங்கே இங்கே சில்லறையாத் தள்றான்.
“டீக்கடை யானை மிதிச்ச மாதிரி இருக்கும். போய்ப்பாரு. கட்டுக்காவல் போட்டிருக்கான். ஏதும் ஆணி போணி பொறுக்கலாமின்னு போயிடாதே, விவரம் தெரிஞ்சு போ. இப்ப பாத்தமே, அந்த ஆளு? அவனும் இன்னும் நாலஞ்சு பேருமா டீக்கடையை தூள் பண்ணிட்டாங்க. டீக்கடைக்காரப் பயகிட்ட சும்மா, ஏண்டா பச்சை லுங்கி கட்டின ஆளு இங்கே ராவிலே வந்து போறானே எங்கேடா பகல் வேளைக்குப் போறான்னு, சும்மா கேட்டான் இந்த ஆளு. அதுலேர்ந்து அரைமணி நேரமா டீக்கடைக்காரன்கிட்டே கேள்வி. டீக்கடைக்காரன் ஒம்பது பச்சை லுங்கிகாரனுக அட்ரஸு குடுக்கான். இந்தா வா, இந்தா வான்னு பதிலு குடுத்து எருமைக் குட்டைக்கு இட்டுக்குனு போகுது பேச்சு. இந்த ஆளு திடீர்னு டீக்கடைக்காரனை இழுத்து தெருவிலே தள்ளி அறைஞ்சான் பாரு. அதுக்கு அப்புறம் பதிலே வல்லே. பேசுடா பேசுடான்னு டீக்கடையை முடிச்சு, ‘இதுதாடா உனக்கு கடைசி ஓணம்’னு அவனை மிதிபோட்டு மிதிச்சாங்க. சின்னப் பயல், டீக்கடைக்காரன். என்னா அமுத்தல்ங்கறே. ஆளுங்க போனப்புறம் ஆரோ டீக்கடைக்காரனை சைக்கிள்ளே ஏத்திக்கினு போனாங்க. ராத்திரி நான் வேளை கழிச்சுத்தான் மரத்தடிக்கு வந்தேன். ரெண்டு ராவா பக்கத்தூரு போன நம்ப கூட்டமும் இல்லே. கண்ணு சொக்கறப்போ, காலடிலே இருட்டு பிச்சுக்கிட்டு வந்து நின்னு, ஆளுயர தடிக் கம்பாலே என் காலைத் தொட்டு, ‘பத்திரம் எவ்வளோ இருக்கு?’ங்குது.
‘பத்திரத்தைப் போயி ஆபிஸிலே பாரு’ன்னுட்டு புரண்டு படுத்தேன். ‘சட்டுன்னு எல்லாத்தையும் எடு. கரன்ஸியாத் தரேன்’னு குந்திக்கிட்டான். நான் எந்திரிச்சேன். ‘பட்டணம் போறேன்டா. எங்கிட்ட இருந்ததை அல்லாம் போட்டிட்டு ஓடறேன். இருக்கறதைக் குடு. பட்டணத்திலே ஆளிருக்கு விக்க’ன்னான். ’திங்க ஏதுமுண்டா, எடு துட்டு தரேன்’ன்னான். ‘நாயைத் திங்கறவங்கிட்ட திங்கக் கேக்கிறியே தாயே’ன்னேன். பத்திரத்தைப் பங்கு போட்டேன். ‘எனக்கு வாடிக்கைக்காரங்க உண்டு தாயே, பாதியை எடுத்துட்டு கரன்ஸியைத் தள்ளு’ன்னு விலையை ஏத்திச் சொன்னேன். ‘ஏண்டா நாட்டை நாய்க திங்குது நீயேண்டா நாயைத் திங்கப்படாது’ன்னான். சொல்லிக்கிட்டே நான் குடுத்த பீடியைக் கொளுத்த வத்திப் பொட்டிலே நெருப்புக் கிழிச்சான். முணுக்கு வெளிச்சத்திலே பச்சை லுங்கி பளீரடிச்சது. செகண்டு தாண்டி செகண்டு பாய்ஞ்சு திகில் புடிச்சுது எனக்கு. அதுக்குள்ளார அவன் ஏதோ எலக்ஷன்பாடா பேசறான். மலைக் காடுங்கறான். நாட்டைப் பிடிச்சு சேமம் பண்ணலாம்ங்கறான். எனக்கு ஒண்ணுமே மனசுலாகலை.
டீக்கடைக்காரனை மிதிச்சவங்க காலுதான் எனக்கு வவுத்திலே பொதக்குப் பொதக்குங்குது. ‘போ தாயே, போ, மனுச வெக்கை அடிக்குது காணலையா’ன்னு பிஸினஸை முடிச்சு, வாட்டி வச்சிருந்த எறச்சியை துணியிலேயிருந்து அவுத்து ‘ஒரு துண்டு எடுத்துக்க போ’ன்னு குடுத்து அனுப்பவும், ‘ஏண்டா கோழை மாடு’ன்னுட்டு போறான். அவன் போயி திடுக்கினு எட்டி நடக்கவும் வேறே ஆளுங்க காலோட்டம் ஏறுது. கோயில் வெளியைத் தாண்டி மேற்கே அவன் போற நோட்டம் தெரிஞ்சாப்பிலே இருட்டோட இருட்டா மூணு நாலு பேரு. கையிலே ஒவ்வொருத்தனுக்கும் தடிக்கம்பு. அடிச்சு மிதிச்சு நடையேறி, ‘டேய் அந்தா நிக்கிறாண்டா, வளைச்சு அடிங்கடா’ன்னு ஓடவும் நான் இத்தாண்டே ஓடவா – மரம் மாறி நடக்கிறதைப் பார்க்கவான்னு மூட்டையைச் சுத்தித் தூக்கறேன். பச்சை லுங்கிக்காரன் குரல் கெக்கலி போட்ட மாதிரி கேட்டு முதுகு சில்லிடுது. கோயில் வெளியிலேருந்து குபுகுபுன்னு ஊத்துப் பொங்கற மாதிரி கழி சுழல்ற சத்தம். இவனுகளோட ‘டாய் டோய்’ சத்தம். உடைஞ்சு மோதி, கல் வெடிச்ச மாதிரி நாலஞ்சு தடவை கழிகள் அடிச்சு, அப்புறம் ஒரு மினிட்டு ஒண்ணுமில்லே. ஒண்ணூமில்லேயா? நான் மூட்டையை மரம் மாத்தி மரத்துக்குக் கொண்டு போறேன். கண்ணும் காதும் மூட்டைக்குள்ளே பூந்துக்கினு கணக்குப் போடுது. மனசுக்கு அடியிலே வெட்டவெளிச்சம். ‘அடிடா டாய்’னு ஒரே முட்டா குரலுகள் ஏறி விரிஞ்சு தூர ஒடுங்கி குவியுது. கோயில் தாண்டி கல்லுத்தரை காடு பக்கமா திடு திடு சத்தம். ஊரெல்லாம் திடீர்னு நாய்கள் ஊளையிட்டு ஊரு பொளக்கக் குரைக்குது. நாயா மனுசனுகளா? நாய்கள் திடுதிடுனு அடிச்சு நடக்குமா? டாய்ங்குமா? நான் நடமாட்டம் மிதிபடாம மரம் தாண்டி மரம் மாறி சரியறேன். தூர, தூர, கல்லு சிதறுது. வெட்ட வெளிச்சத்திலே குப்புற ஓடற இருட்டு, சரசரன்னு நிழல்கூட்டம் போடுது. காலடிலே பச்சை லுங்கிக்காரன் நிக்கிறான்.
“அவன் லுங்கியிலே வெளிச்சம் விழுகுது. அந்தியோ வெடி காலையோ. சூரியனைப் பார்த்தா தீவட்டி கணக்கா புகை விட்டு எரியுது. தரையிலே கிடக்கிற இலைக் கூட்டத்துக்குள்ளே நிழலாட்டம். பல்லை வலிச்சு ‘ர்ர்’ சத்தம். பச்சை லுங்கி தரையிலே கிடக்கிற இலையைக் கழியாலே குத்தி எடுத்து ‘இந்தாடா கரன்ஸி’ன்னு ஊரெல்லாம் வீசறான். ஊரு கறுகறுன்னு பத்திரம் பத்திரமா விளையுது. தரையோட தரையா நிழல்கள் சரசரக்குது. நாலுகால் கடையிலே தலையைத் தூக்கி ‘ர்ர்ர்’ங்குது. அதப் பார்த்து ‘பல்லைப் பாத்தியா காலிலே இருக்கிற முள்ளைப் பாத்தியா’ன்னு நான் பாடறேன். பாடிக்கிட்டே பத்திரத்தைக் கிள்ளிக் கிள்ளி மடியிலே கட்டறேன். பச்சை லுங்கிக்காரன் கரன்ஸி நோட்டு கரன்ஸி நோட்டா வீசிக்கிட்டே போறான். பத்திரம் காடுகாடா ஆள் கணக்கா வளருது. தரையோட கிடந்த நிழலுகளும் ஏறி வளர்ந்து ‘ர்ர்ர்’ன்னு காடெல்லாம் குரைக்குது. சத்தம் ஏறி உறும நானும் உறுமறேன். உறுமிக்கிட்டே கண்ணை முழிக்கிறேன். சூரியன் ஊசிக் கம்பை நீட்டி மண்டைக்குள்ளே உறுமின நிழலையெல்லாம் குத்தி நிறுத்தறான்… இந்த இளுத்துட்டுக் கை மாத்து.”
நான் சுக்கான் பேச்சைக் கேட்டுக்கிட்டே அவன் கொடுத்த பத்திரச்சுருளை வாங்கி புகையை லேசா இழுத்தேன். கொஞ்ச மினிட்டு பேச்சில்லை. “போலீஸாடா”ன்னேன். ஏன் சொன்னேன்னு கணக்குச் சேர்க்கலே. அப்புறம் புகை ஓடி ஒரு சுத்து கபாலத்தைச் சுத்தி வளைச்சு இறங்கினப்ப கேட்டேன். “அந்த ஆளுதாண்டா, போயிட்டே இருங்கடான்னு வெரட்னானே வெள்ளை வேட்டி? அவன் சொன்னா போலீஸூ கேப்பாங்கடா. நான் கண்டேண்டா அதை, பஸ் ஸ்டாப்பாண்டே. யார்றா அந்த வெள்ளை வேட்டி?”
சுக்கான் ஒரு கண்ணை மூடிக்கிட்டே என்னைப் பார்த்தான். “போலீசு, லுங்கி எல்லாத்துக்கும் கரன்ஸியைத் தள்ளற ஆளுடா. மலைக்காட்டிலே மனுசன் போகாத எடத்துலே ஏக்கர் ஏக்கரா இருக்குடா அவனுக்கு. நீ அதைக் கண்டதுண்டாடா காடா?”ன்னான் சுக்கான். “ஏக்கர் ஏக்கரா என்னடா? பத்திரமாடா?”ன்னேன்.
“பச்சை லுங்கி, டீக்கடைக்காரப் பயலை எலக் ஷன் பாடாப் பேசி, நாட்டைப் புடிக்கலாம் நாடு கடந்து போயி நாகரீகம் பண்ணலாமின்னு சொல்லி வசக்கி வச்சிருக்கான்டா. பச்சை லுங்கிதாண்டா டீக்கடைப் பயலுக்கு வெள்ளைவேட்டி எஸ்டேட்டிலிருந்து திருடி பத்திரம் சப்ளை பண்றான். நான் அதிலேருந்து அடுத்த சப்ளை. வெள்ளை வேட்டி திருடு போவுது போவுதுன்னு பார்த்து மோப்பம் புடிச்சுட்டான் பச்சை லுங்கியை. அதாண்டா எல்லா நடமாட்டமும். ஏண்டா, சீ, நாயே! இளுத்துட்டுக் கை மாத்துன்னா எரிய விட்டுக்கிட்டேருக்கே”ன்னு சுக்கான் என் கையிலிருந்த சுருளைக் கபக்குனு புடுங்கிக்கிட்டான்.
– அக்டோபர் 1982