கவரிமான்

0
கதையாசிரியர்:
கதைத்தொகுப்பு: கிரைம்
கதைப்பதிவு: November 5, 2024
பார்வையிட்டோர்: 3,086 
 
 

டாக்டர் மோகன் தன் இருக்கையில் அமர்ந்திருந்தார். படுக்கையில் நடுத்தர வயதான ஒரு நபர் சொகுசு மெத்தையின் மேல் சாய்ந்துகொண்டு கூரையை பார்த்துக்கொண்டிருந்தார். டாக்டரின் இருக்கை படுத்திருந்த நபரின் தலைமாட்டில் இருந்ததால் படுத்திருப்பவருக்கு டாக்டரின் குரல் மட்டும் தான் கேட்டது. அந்த நபரின் பெயர் ஃபைலில் “கே” என மட்டும் குறிப்பிட்டிருந்தது. டாக்டர் மோகன் பொதுவாக அவருடைய நோயாளிகளை பற்றி யாரிடமும் பேசுவதில்லை. மனநல டாக்டர் என்ற முறையில் தன்னிடம் வருபவர்களில் தனிமையை மிகவும் மதித்தார். தொழில்ரீதியாக தன் சக டாக்டர்களிடம் மட்டும் தான் பேஷண்டுகளை பற்றி பேசுவார் அதுவும் கவனமாக.

கே மெதுவாக பேச ஆரம்பித்தார், “எனக்கு கொஞ்ச நாளா…விபரீத எண்ணங்கள் மனசுல வந்துக்கிட்டிருக்கு டாக்டர்…என்னால அத கட்டுப்படுத்த முடியல..எனக்கு கல்யாணமாகி பதினேழு வருஷமாச்சு..வயசுக்கு வந்த மகனிருக்கான்…என் மனைவி நல்லவ…எங்களோட உறவும் நல்லாத்தான் இருக்கு…”

பிறகு மௌனம். மேலும் என்ன சொல்லலாம் என தெரியாமல் சில வினாடிகள் கே யின் கண்கள் மேலும் கீழும் நகர்ந்ததை கவனித்தார் மோகன்.

“கொஞ்ச நாளா…எனக்குள்ள ஒரு உணர்ச்சி..நான் ஒரு பெண்ணா.. …ஒரு பெண்ணாகனும்னு ஒரு ஆசை வந்திருக்கு…”

மௌனம். இதை சொல்ல கொஞ்சம் கஷ்டப்பட்டார் கே. அனுபவத்தினால் கே நிச்சயமாக உண்மையைத்தான் சொல்கிறார் என புரிந்துகொண்டார் மோகன்.

“என் மனைவி, மகன் இல்லாத நேரம்பார்த்து..ஆபீசுலேருந்து சீக்கிரம் வீட்டுக்கு வந்து..என் மனைவியோட சேலை, உள்ளாடைகளை போட்டுக்கிட்டு கண்ணாடில அழகுபார்…”

ஒவ்வொரு வார்த்தையாக மெதுவாக சொன்ன கே யின் பேச்சு கடைசி வார்த்தையில் மூச்சு முட்டி ஸ்தம்பித்தது. டாக்டர் எதுவும் பேசாமல் காகிதத்தில் எழுதிக்கொண்டிருந்தார். அறை நிசப்த்தமாக இருந்தது. கே மீண்டும் பேச ஆரம்பிக்க கொஞ்சம் நேரமானது.

“ராத்திரில தூங்கும்போது நான் ஒரு பெண்ணாமாறி இனொரு பெண்ணோட உறவு வெச்சிக்கிற மாதிரி கனவு வருது..எனக்கு என்ன செய்யறதுன்னே தெரியல டாக்டர்…இவ்வளவு நாளா இதை போல இருந்ததில்லை…நான் ஒருவேளை உள்ளுக்குள்லெருந்தே ஒரு பொண்ணா மாறிக்கிட்டிருக்கேனோன்னு பயமா இருக்கு..”

சில நிமிடங்கள் கண்ணை மூடிக்கொண்டார் கே. கண்களிலிருந்து மெலிதாய் நீர் கசிந்தது. ஆழ் மனதில் பதுங்கி இருந்த எண்ணங்கள் வெளிவரும்போது அடக்கமுடியாமல் கண்ணீர்வருவது மனித இயல்பு. அழுத்தத்திலிருந்து விடுபடும் மனதின் அறிகுறி. மோகனுக்கு இது புரிந்தது. இருப்பினும்,

“வேற ஏதாவது சொல்லனுமா?” டாக்டர் கேட்டார்.

“இல்ல..எனக்கு…”

“சொல்லுங்க..” டாக்டர் ஊக்குவித்தார்.

“இந்த மாதிரி செஞ்சதுக்கப்புறம் ரொம்ப வெட்கமா இருக்கு…வேலைல கான்செண்ட்ரெட் பண்ண முடியலே..வீட்ல இப்ப யாரும் இருக்க மாட்டாங்க..போகலாமான்னு ஒரு எண்ணம் வந்துட்டா அதுலேருந்து வெளிய வரமுடியால..”.

முழு விவரமும் வந்துவிட்டதா என மோகனுக்கு தெரியவில்லை “சரி..”, என்றார்.

“அவ்வளவுதான் டாக்டர்”

மோகன் கொஞ்சநேரம் பொருந்திருந்தார். கே கண்களை மூடிக்கொண்டு படுத்திருப்பதை பார்த்து மெலிதாக சொன்னார், “கொஞ்சநேரம் ஓய்வெடுத்துகோங்க..அப்புறம் என்னை வெளி அறைல வந்து பாருங்க.. take your own time …no problem” என சொல்லி அறையை விட்டு வெளியேறினார் மோகன். நோயாளிகள் தங்கள் வாக்குமூலங்களை சொல்லியபிறகு அவர்களுக்கு தனிமை மிகவும் அவசியமென மோகனுக்கு தெரியும்.

ஐந்து நிமிடங்களுக்கு மேல் ஆனதும் கே மெதுவாக வந்து டாக்டர் முன் உட்கார்ந்தார். டாக்டரிடம் கண்னோடு கண் சேர்க்கவில்லை. முகம் மெலிந்து, தோள்கள் குறுகி, வெறிச்சோடி இருந்தார்.

“நீங்க கவலைப்படறதுக்கு ஒரு விஷயமும் இல்ல. இது மனித இயல்பு. உளவியல்ல இதுக்கு விளக்கமிருக்கு. ஆணுக்குள்ள பெண் குணங்களும், பெண்ணுக்குள்ள ஆண் குணங்களும் இருக்குறது இயல்பு. உயிரிலியல் ரீதியா நீங்க எப்பவுமே ஆணாகத்தான் இருப்பீங்க. அது மாறவே மாறாது. நாடகங்கள்ல பெண் வேடங்கங்கள்ல ஆண்கள் நடிக்கறதால அவங்களுக்கு பெண் அம்சங்கள் வர்றதில்லை. கருணை, அச்சம் ,வெட்கம், தன்னடக்கம் போன்ற குணங்களை பெண் குணங்களாகவும், தைரியம் , வீரியம், வலிமை ஆதிக்கம் ஆண் குணங்களாகவும் இந்த உலகம் பார்க்குது. ஆனா இந்த குணங்கள் ஆணுக்கும் பெண்ணுக்கும் இயற்கையாவே சமமா இருக்கு. இதிஹாசத்துல தைரியமான பெண்களும், மெல்லிய குணமுடைய ஆண்களுக்கும் பல உதாரணங்கள் இருக்கு. அதனாலே நீங்க கவலைப்பட தேவையேயில்லை. உங்களை மாதிரி நிறைய பேருக்கு இந்த மாதிரியான எண்ணங்கள் வரும். அவங்கள்ல நிறைய பேர் தங்களை ஆரம்பத்துல விநோதமா பார்தாங்க …. ஆனா போக போக தங்களோட இயல்பா ஏத்துக்கிட்டு வாழறாங்க. இதை மறைக்கிறதாலேயோ…”

“இது எப்ப போகும் டாக்டர்?”

“நீங்க இந்த எண்ணங்களை இயற்கைன்னு ஏத்துக்கும்போது”

“இத குணப்படுத்த ஏதாவது மருந்திருக்கா?”

“இல்ல. உடல்ரீதியா உங்களுக்கு எந்த பாதிப்புமில்லைன்னு ரிப்போர்ட் சொல்லுது. மனசுக்கு அமைதிதான் மருந்து. உங்களை நீங்களே விநோதமா பார்க்கறத நிறுத்தும்போது இந்த மன அழுத்தம் நீங்கிடும். உங்களுக்குள்ள இருக்குறது ஒரு conflict. உங்களுக்கு விருப்பமிருந்தா ஒரு அமைப்போட விலாசம் தர்றேன்…”

“வேண்டாம் டாக்டர்..”

“பேசும்போது தான் உங்க மன உளைச்சல் குறையும். கலந்துரையாடல் சிகிச்சை தான் உங்களோட மனநிலைக்கு மருந்து. சரி, உங்க மனைவிக்கு இந்த விஷயம் தெரியுமா?”

“நோ. அவங்ககிட்ட நான் இன்னும் பேசல…”

“உங்க மனைவிகிட்ட இதை சொல்றதுல தப்பில்லைனு நினைக்கறேன். அவங்களே கண்டுபிடிக்கும் போது சிக்கல்கள் வரலாம்…நீங்க அனுமதி கொடுத்தா நான் உங்க முன்னாடியே அவங்ககிட்ட….”

“வேண்டாம் டாக்டர்…நானே சொல்லிடறேன்…”

“சரி. நீங்க எனக்கு எப்பவேண்ணாலும் ஃபோன் பண்ணலாம்”

முதல் சந்திப்பில் கே விற்கு டாக்டர் மேல் அதிகம் நம்பிக்கை வரவில்லை. ஆனால் மோகன் சொன்னது கொஞ்சம் எதமாக இருந்தது. கே ஒரு நோயாளியல்ல என்பதும், இந்த எண்ணங்கள் இயற்கை என்பதும், உடலளவில் எந்த மாற்றங்களும் ஏற்படவில்லை என்பதும் மனசுக்கு ஓரளவுக்கு சுகமாக இருந்தது. சில நாட்கள் ஆனதும் டாக்டரிடம் மீண்டும் நேர்காணல் கேட்டார் கே. இந்த முறை கே பார்ப்பதற்கே பயந்திருப்பதை கவனித்தார் டாக்டர்.

“டாக்டர்..கொஞ்ச நாளா..அலிகளை பார்த்தாலே ஒரு இனம் புரியாத வெறி வருது..டிராபிக்ல அதுகளை பார்க்கும்போது…பொறுக்க முடியல.. வெட்டிடலாம்போல தோணுது..நேத்து ஒருத்திய…. ஒருத்தன…அடிக்க போய்ட்டேன்..அதுவும் என்னை அடிக்க வந்து ஒரே அல்லோலமாயிடுச்சு…அதோட அந்த எண்ணங்களும் பலத்துக்கிட்டே போய்கிட்டிருக்கு…”

மோகனுக்கு இப்போது இந்த பிரச்சனை பேச்சின் மூலமாக தீர்க்கமுடியுமென தோணவில்லை. இவருக்கு உடனடியாக நேரடி சிகிச்சை கொடுக்க வேண்டுமென தீர்மானித்தார்.

“நீங்க என் கிளினிக்ல உடனடியா சேரனும். நாங்க உங்களை பார்த்துக்கோவோம். சில மருந்துகள் முழு ஓய்வுலத்தான் எடுத்துக்கணும். நான் திருப்பியும் சொல்லறேன். உங்களுக்கு ஒண்ணுமில்லை. நர்ஸ்…”

“டாக்டர் வேண்டாம்…கொஞ்சம் பொறுங்க.. நான்…என் வீட்டுல…”

“நீங்க உங்க மனைவி கிட்ட இன்னும் பேசலையா?”

மௌனம்.

“சரி இப்ப அட்மிட் ஆய்க்கோங்க…நான்..”

எதுவும் பேசாமல் எழுந்து நடக்க தொடங்கினார் கே. “கொஞ்சம் நில்லுங்க..உங்களுக்கு உதவி அவசியம்…”,

“வீட்ல சொல்லிட்டு வர்றேன் டாக்டர்”

“நிச்சயமா வரணும். ஒரு வாரம்தான். நீங்க இங்க இருக்குறது யாருக்கும் தெரியவேண்டாம். வேணும்னா வேலை விஷயமா வெளியூர் போறேன்னு சொல்லிட்டு வாங்க. ப்ளீஸ்”

“சரி டாக்டர். தேங்க்ஸ்”

ஆனால் கே அன்று வரவில்லை, வேலை நெரிசலில் கே பற்றி மறந்துபோனார் டாக்டர் மோகன். இது நடந்து ஒரு வாரம் ஆனதும் காலை நாளிதழில் ஒரு செய்தி பார்க்க நேர்ந்தது, “திருநங்கை கோரமாக வெட்டி கொலை “. செய்தியை பார்த்தபோது மோகனுக்கு ஒன்றும் தோன்றவில்லை ஆனால் ஒரு மாதமானதும் அதே காலை நாளிதழில்,

“தொடர் கொலைகள் : திருநங்கைகளை கொல்பவர் யார்?.

கடந்த ஒரு மாதமாக நான்கு திருநங்கைகளை கொன்ற மர்ம நபர் யாரென்று போலீசார் தேடி வருகின்றனர். நான்கு போரையும் ஒரே நபர்தான் கொன்றிருக்கிறார் என்பது விசாரணையில் நிரூபணமாகி இருக்கிறது. இது தொடர்பாக பொது மக்களிடம் ஏதேனும் தகவல் இருந்தால் போலீசாரை தொடர்புகொள்ளுமாறு கேட்டுக்கொள்ள படுகின்றனர்”

என்ற செய்தியை படித்த போது மோகன் மனதில் திடீரென்று கே யின் நினைவு வந்தது. கடைசி நேர்காணலில் கே திருநங்கைகளின் மேல் தனக்கிருந்த வன்முறை எண்ணகன்ங்களை பற்றி சொன்னது ஞாபகம் வந்தது. கொலை செய்யும் அளவுக்கு கே யின் நோய் முற்றி விட்டதா? இருக்காது. ஒரு வேளை நேர்காணலில் கே யின் நிலைமையை சரியாக மதிப்பிடவில்லையா?. மனநோய் கொலைகாரன், செய்யும் கொலையில் ஒரு அலாதி இன்பம் இருக்கையினால்தான் கோல்பான். மனநோயின் வளர்ச்சிக்கு கால வரம்புகள் இல்லை. நோய் அறிகுறிகள் யாவதும் அன்றி கொலை செய்பவர்கள் நிறைய பேர் உண்டு. வெளித்தோற்றத்தில் மிக நார்மலாக இருப்பவர்கள் உள்ளுக்குள் வெறியாளராக இருப்பார்கள். மோகன் சைக்கோ கொலைகாரர்கள் இயல்பை பற்றி ஆராய்ச்சி செய்ததில்லை. பெரும்பாலும் அவரிடம் வருபவர்கள் மன அழுத்தத்தினால் பாதிக்கப்பட்டவர்கள். அவர்களுடைய சிகிச்சை முறை வேறு. மோகன் சொன்னபடி கே யின் மனைவியிடம் கே தனக்கு இருந்த பழக்கத்தை பற்றி சொன்னாரா என தெரியவில்லை. அன்று முழுவதும் மோகனுக்கு குழப்பத்தில் போனது. கடைசியில் கே யின் ஃபைலை எடுத்து அதிலிருந்த கே யின் தொடர்பு எண்ணிற்கு தொடர்புகொள்ள முயன்றார் ஆனால் பதிலில்லை. அன்றாட நோயாளிகளின் சிகிச்சையில் இந்த விஷயத்தை மறந்து போனார் மோகன்.

ஓரிரண்டு மாதங்கள் போனபின் கொலைகள் மீண்டும் துவங்கின. இந்த முறை போலீசார் வேறு யுக்தியை கையாண்டனர். மனநோய் மருத்துவர்களிடம் இந்த மாதிரியான கொலைகளை செய்பவரின் மன பாவனை, சூழ்நிலை போன்ற விவரங்களை கேட்டறிய பிரபல மனநல மருத்துவர்களிடம் நேர்காணல் மேற்கொண்டனர். இதிலேருந்து கொலையாளியின் அடையாளத்தை பற்றி ஏதாவது துப்பு கிடைக்கலாம் என நினைத்தனர்.

“டாக்டர் மோகன். நீங்க இந்த மாதிரி கொலைகளை செய்யற நபரை பற்றி என்ன நினைக்கிறீங்க?”, கேட்ட போலீஸ்காரர் நடுத்தர வயதவர் மூன்று ஸ்டார் தோள்பட்டை அணிந்த இன்ஸ்பெக்டர்.

“பால்ய பருவ பாதிப்புகள், கசக்கும் நிகழ்வுகள் இல்லன்னா பால்ரீதியான குழப்பங்களால ஏற்படலாம். ஒரு ஆண் தனக்குள்ள இருக்குற பெண் தன்மையை அழிக்க நினைக்கும் போதும் கூட இந்த மாதிரி ஏற்படலாம். இந்த கொலையாளி மனநோயாளிதாங்கறத எப்படி உறுதியா சொல்றீங்க?”

“என் சர்வீஸ்ல பல கொலைகளை பார்த்திருக்கேன். தற்காப்பு கொலைகள்ல கொல்லப்பட்டவர் மேல ஒரு ரெண்டு குத்து விழும். பெரும்பாலும் வயத்துல இல்லேன்னா முதுகுல. பழிவாங்கறதா இருந்தா முகத்துல, மார்புல இல்ல கழுத்துல குத்து விழும். முகத்துல குத்தறது அந்த தருணத்துல கொலைகாரன் எதிராளியோட முகத்தை அழிச்சிடம்னு நினைக்கறதால. ஒரு வித identity erasement. இந்த கொலைகள் எல்லாத்திலேயுமே குத்து பால் குறில விழுந்திருக்கு. சில சமையம் குறியையே அறுத்திருக்கான். இதபோல என் சர்வீஸ்ல பார்த்ததில்லை. ஒரு முழு சைக்கோ தான் இதை செஞ்சிருப்பான்”

“கொலையாளி ஆண்தான்னு நம்பறீங்களா?. திருநங்கைங்க கூட பிறப்பால ஆண்கள்தான்.”

“ஒருவேளை அவங்க இனத்துல ஒருத்தன் தான் இதை செஞ்சிருப்பான்னு நினைக்கிறீங்களா? இருக்கலாம். முதல்ல கொல்லப்பட்ட அலி சுமார் ஐந்தடி பத்து அங்குலம். நல்ல உடல் வலிமை இருக்குறவன். அவனை பால் உறவுக்கு ஆசைகாட்டி காட்டுக்குள்ள கூட்டிட்டு போய், சாராயம் வாங்கி கொடுத்து அவன் அசந்த போது கொன்றுகாண். கிட்டத்தட்ட அதே மாதிரி தான் நாலு கொலைகளும் நடந்திருக்கு. இதுல ஒரு விஷயம், அலிங்க போட்டிருந்த ஆடைகளை கழட்டி கொலைகாரன் அவன்மேல் போட்டு அழகு பார்த்திருக்கான். கொலைகாரன் அலியா இருந்தா ஏன் இப்படி செய்யணும்? கொலை நடந்த இடத்துல ஒரு கண்ணாடி, போட்டு அட்டை கிடைச்சது” போலீசார் சொன்னதும் தூக்கி வாரி போட்டது மோகனுக்கு.

“கே!”

ஒருபுறம் டாக்டருக்கும் நோயாளிக்கும் இருந்த ரகசியத்தன்மை மறுபுறம் போலீஸ்காரர் சொன்ன விஷயங்கள் “கே” யின் நோய் அடையாளங்களை ஒத்த இருந்த உண்மை. இதை தற்செயல் என நினைப்பதா?

“உங்க கிட்ட நான் ஒன்னு சொல்லலாமா?” மோகன் கேட்டார்.

“ஓ தாராளமா”

“சில மாசத்துக்கு முன்னாடி ஒருத்தர் என்கிட்ட வந்தார். உள்லேருந்தே பெண்ணாக மாறிடுவோமோனு பயமா இருக்குன்னு சொன்னார். அத்தோட தன் மனைவியோட ஆடைகளெல்லாம் போட்டு பார்க்கறதா சொன்னார்” மோகன் நிறுத்தினார்.

“சொல்லுங்க..ஏன் நிறுத்திடீங்க”

“பாருங்க சார். ஒரு டாக்டருக்கும் பேஷண்டுக்கும் இருக்குற ரகசியத்தன்மையை முறிச்சிட்டு…”

“யோவ்! என்னயா பெரிய ரகசியம்? செத்துக்கிட்டிருக்காங்க..வெட்டின பொணத்த பார்த்தேன்னா வாந்தி எடுத்துருவ..சொல்லு யாரவன். அவன் பெர்றேன்ன?”

கொஞ்சநேரம் யோசித்த மோகன், “அவரா இருக்காதுன்னு நினைக்கிறன்..ஏன்னா அவர் குணமாயிட்டார்”

மனநோயாளி வேண்டுமென்றால் மருத்துவரிடம் தன் நோயை மறைக்கலாம் ஆனால் போலீசாரிடம் பொய்யை மறைக்க முடியாது.

“டாக்டர். i am sorry. நான் அப்படி கத்திருக்க கூடாது. உங்களுக்கும் அவர்தானான்னு சந்தேகம் இருக்கலாம். என்னை நம்புங்க நாங்க அவரை நல்லதனமா தான் விசாரிப்போம். நீங்க வேணும்னா கூட இருக்கலாம். ப்ளீஸ் சொல்லுங்க. நீங்க கொடுக்குற இன்போர்மேஷன்ல சில உயிர்களை காப்பாத்தலாம், இன்னைக்கு அலி நாளைக்கு பெண்கள். இவன் நிறுத்தமாட்டான்னு எனக்கு தோணுது. சொல்லுங்க”

அவர் சொன்னதில் ஒரு ஞாயம் இருந்தது. “கே” பற்றிய விவரங்களை போலீசிடம் கொடுத்தார் மோகன். அன்று முழுவதும் ஒரு தர்ம சங்கடம். அவர் செய்தது சரிதானா? டாக்டரின் தொழில் தர்மத்தை கடைபிடித்தாரா? கே யின் நோய் தீவிரத்தை சரியாக மதிப்பிட தவறிவிட்டாரா? அப்படியென்றால் நடந்ததில் அவருக்கும் பங்குண்டா? இந்த கேள்விகளில் மூழ்கி போனார் மோகன். மாலை ஒரு ஃபோன் வந்தது.

“டாக்டர், நான் இன்ஸ்பெக்டர் பேசறேன். நீங்க சொன்ன ஆளை போய் பார்த்தோம். ஆனா கொலைகாரன் அவனில்ல. கொலை நடந்த நாள்ல அவன் வேற எங்கேயோ இருந்திருக்கான். அத்தாட்சியோட காண்பிச்சான். Anyway , நீங்க பண்ண உதவிக்கு நன்றி. வேற ஏதாவது தகவல் கிடைச்சா சொல்லுங்க” என்ற போது ஒரு பெரிய பாரம் மனதிலிருந்து அகன்றது போல இருந்தது மோகனுக்கு.

” நீங்க விசாரிக்கும் போது அவர் எப்படி இருந்தார்? நார்மலா பேசினாரா?”

“அப்படிதான் தோணிச்சு. ஆனா அவரோட மனைவி கண் விரிச்சு பார்த்துகிட்டு இருந்தாங்க”

” ஓ காட். அவர் இன்னும் தன் பழக்கத்தை அவர் மனைவிகிட்ட சொல்லல போலிருக்கு”

“அதை நீங்க ரெண்டுபேரும் பேசிக்கோங்க. தேங்க்ஸ்”

இரண்டு நாட்களுக்கு பின் காலை நாளிதழில் ஒரு சிறிய செய்தியை பார்த்தார்.

“பெண் உடை அணிந்துகொண்டு ஆண் ஒருவர் தூக்கு மாட்டி தற்கொலை”.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

* Copy This Password *

* Type Or Paste Password Here *