ஒரு சிபிஐயின் போன் கால்

0
கதையாசிரியர்:
கதைத்தொகுப்பு: கிரைம்
கதைப்பதிவு: August 12, 2020
பார்வையிட்டோர்: 17,981 
 
 

மங்களூரின் ஒரு பெளிகே (காலை) நேரம். காப்பி டம்ளரைக் கையிலெடுத்து ரசித்துக் குடிக்க ஆரம்பிக்கவில்லை. அதற்குள் மொபைல் மிரட்டி முணுமுணுத்தது.

தோரணையுடன் பேசினவர் அடுத்த முனையில்,

“ மிஸ்டர்.சேகர்! நான் சி.பி ஐ. நட்ராஜ். உங்களை எப்ப மீட் பண்ணலாம்? இப்ப எங்கே இருக்கீங்க? …” என்றார்.

“என்ன சி.பி.ஐ யா?” (மனதுக்குள்) – ஃபேனுக்கடியில் நின்றாலும் நெற்றியில் பொடிப் பொடியாக வியர்க்க ஆரம்பித்தது. நட்ராஜ் குரலில் நட்பா? கடமையா என்று புரிபடவில்லை.

சில வருஷங்களுக்கு முன்னால், அரசு வங்கியில் உயர்ந்த வேலையில் இருந்ததால், உடனே ஒரு பயம் மண்டையைக் குடைய ஆரம்பித்தது.

“எந்த பிரான்ச் விஷயமோ? என்ன புதுப் பிரச்சினையோ?” தைரியம் கொஞ்சம் கொஞ்சமாக டாட்டா சொல்ல ஆரம்பித்தது.

ஊ லா லா லா பாடவேண்டிய வேளையில் இந்த போன் வந்ததால் ஊளையிட வைத்து விடுமோ?

ராங்க் நம்பரிடமும் அதிகமாகப் பேசுவது வழக்கமாகிவிட்ட இக்காலத்தில் சற்றே சமாளித்தபடி நானும் புது பவ்வியத்துடன், “ஸார்! இப்போது நான் சென்னையில் இல்லை. மங்களூரிலிருந்து வியாழன் அன்றுதான் கிளம்புகிறேன். வெள்ளி அன்று சந்திக்கலாமா?. வந்ததும் போன் பண்ணட்டுமா?”

“ஓ! மங்களூரிலா? கங்கிராட்ஸ்!…” என்று அழைப்பைத் துண்டித்தார் அந்தப் புதியவர். “சே! விஷயம் என்ன என்று கேட்டிருக்கலாமே!” மடையன்-இடியட்-ஸ்டுப்பிட்– என்னை நானே திட்டிக் கொள்ளலாமல்லவா?

பக்கத்திலிருந்த என் மனைவி நிர்குணாவிற்கு அதற்குள் ஒரு குழப்பம்! “யாரிந்த மனிதர்?…. அதுவும் சி.பி.ஐக் காரர். தெரிந்தவரா அல்லது…. என்று இழுத்தாள்”. நிறைய சீரியல்கள் பல மொழிகளில் பார்ப்பாள். நீயா … நானா? வாராவாரம் பார்ப்பாள். அதனால் என்ன பாதிப்பு ஏற்பட்டதோ! மனசுக்குள் மத்தாப்பா, தீப்பொறிகளா என்று புரிபட வில்லை. ஒரு கலக்கம், மிரட்சி கண்களில் தெரிந்தது!

அவள் மிகவும் பயந்துதான் போனாள். அரசு வங்கிகளில் நடக்கும் பலிகடா சம்பவங்களை அவளும் கேள்விப் பட்டிருக்கிறாள். சர்வீஸில் இருந்தபோது எனக்கு நடக்காத “சாத்து முறைகளா?”- அவள் மறக்கவில்லை. எனக்கு வெவ்வேறு எண்ணங்கள் மனதில் ஊடாடின. “ சட்டி சுட்டதடா!” என்று பாடத் தோன்றியது. யாரிந்த சி.பி.ஐ மனிதர்? எப்போது பார்த்தோம்? எதற்காக இந்த அவசர மீட்டிங்? இதில் நான் சந்தேகக் குற்றவாளியா? சாட்சியா? பயனாளியா? ஒன்றும் தலைக்குள் பிராஸஸ் ஆனதாகத் தெரியவில்லை.

பெரிய கேஸா இருந்தா பேப்பர்ல வந்திருக்கும்- அர்ஜன்ட் என்று சொன்னாரே -அதுவும் உடனடியாக மீட் பண்ண வேண்டிய அவசியம் என்ன?- என்றெல்லாம் எறும்புகளாக இருந்த எண்ண ஓட்டங்கள், ஒட்டகமாக மாறி ஊர்ந்தன.

அதற்குள்ளாகவே, பெருமளவிலான ஒரு புலன் விசாரணை ‘விரைந்து’ நடக்கத் தொடங்கியது மனதிலும் வீட்டிலும்! அழைத்தவர் சொந்தக்காரர் இல்லை என்று புரிந்தது. ரிடையர் ஆன என்னை வேறு யார் வந்து பார்க்கப் போகிறார்கள்! நெருங்கிப் பழகிய வட்டமும் இல்லை! அப்படியானால், கண்டிப்பாக ஏதோ ஒரு மர்மம் நெருடுகிறது.

“என்னங்க! யாரு? எதற்காக உங்களைப் பார்க்க வர்ராங்க?” மிரட்சியுடன் மீண்டும் சோத்யம் செய்தாள் நிர்குணா. அவளுடைய மிரட்சியிலும் ஒரு நியாயம் இருந்தாற்போலிருந்தது அன்றைய கணக்கில்! அவளுடைய துக்கத்தை அதிகரிக்கவும், தூக்கத்தைக் கெடுக்கவும் புதியதாக என்ன பிரச்சினை?

“அப்படியெல்லாம் இல்லை!” திடமாக பதில் சொன்னாலும், மனசில் திடமில்லை. ஒரு வேளை சென்னை குடித்தனக்காரி, பியூட்டி பார்லர் சுபத்ரா யாரையாவது அனுப்பி ‘இப்பல்லாம் காலி பண்ண முடியாது! என்னை நன்றாகப் பார்’ அப்படீன்னு சொல்லி நெற்றிக் கண்ணைத் திறக்கிறாளோ? ஆளை அனுப்ப வர்ராளோ? இல்லை கொடேஷன் கொடுத்து ஆளை மிரட்ட வழியோ? ஆனால் சிவில் மேட்டருக்கு சிபிஐ எதுக்கு?

ஒருவேளை, வருமானவரித் துறையிலிருந்து, வீடு கட்டின கணக்கு வழக்குகளை ஆராயவும், வரி கட்டவில்லை என்று சொத்து விபரம் கேட்கவும் இப்பல்லாம் சிபிஐ வர ஆரம்பித்து விட்டதோ? இந்த வருடம்தான் இதுவரை ரிடர்ன் பதிவு செய்ய வில்லை. அரசாங்கம் முனைப்பாகச் செயல் படுகிறதோ! ஆடிட்டரைக் கேட்டால்தான் தெரியும்-வில்லங்கம் இருக்கிறதா என்று! அதிலும் சிபிஐ எதுக்கு? நான் தொள்ளாயிரம் கோடி லோனைத் திருப்பிக் கட்டாத தாடிக் காரன் கூட இல்லையே?

இல்லையானால், வங்கியில் நான் சாங்ஷன் செய்த பழைய வாராக்கடன் வசூல் கணக்குகள் பற்றிப் புதிய அக்கவுன்டபிலிடி, போலிப் பத்திரத்தை அடமானம் வாங்கி விட்டேனா? எந்த பிரான்ச்சில்? எந்த வருஷம்? பிராடு, குறித்து விசாரணை யாராவது நடத்துகிறார்களா?

சாத்தாங்குளம் கொண்டுபோவார்களா? அல்லது சாஸ்திரி பவன்தானா?

இதுல சிபிஐ க்கு ஆயுசு ஜாஸ்திதான்! கற்கால கேஸைக் கூட அவர்கள் தோண்டி எடுக்கலாம்! மீ டூ மாதிரி!

மீ டூ என்றதும் மீண்டும் ஒரு கலக்கம்!

‘ஐயோ! ஒருவேளை எவளாவது என்னை மீ டூவில மாட்டி விட்டுட்டாளா?’ என்ற கலக்கமும் வந்தது.

‘மறுபடியும் அவருக்கே போன் பேசிக் கேட்டுவிட்டால்?’

‘வேலியில் போகிற ஒடக்கானைக் காதில விட்டுக்கணுமா கண்ணு?’ என்று வடிவேல் உபதேசம் சொன்ன மாதிரித் தோன்றியது. நானே சமாதனம் செய்து கொண்டு வேறு நினைவுகளில் மேய்ந்தேன்.

என் கூட ரிடையர் ஆன ஷெட்டியிடம் பேச செல் போனைக் கூப்பிட்டதில், “தூஸ் ரீ கால் பர் ……………வியஸ்த் ஆஹி!” என்று வெறுப்பு ஏற்றிக் கூவியது மறுமுனையிலிருந்த மராட்டிக் குரல்.

மீண்டும் அழைத்தபோது, நம்ம ஷெட்டியின் போன் சுவிட்ச் ஆஃப் நிலையில் அவமதித்தது.

“என்னங்க! வழக்கம்போல எல்லாத்தையும் உளரிக் கொட்டாமல் சாமர்த்தியமாகப் பேசிட்டு வாங்க. ஏதாவது பிரச்சினை இருந்தால், என் அண்ணா தாஸ் கிட்ட சொல்லிட்டு, திரும்பி வந்திடுங்க. அவனுக்கு சிபிஐ யில் ஆள் இருக்காக்கும்!

“ஆமாமா!”- (வெளிப்படையாக)

ஆமாமா! அங்கே முறைவாசல் செய்யற கான்ஸ்டபிள் பிரெண்டுதான் கிடைக்கும்- (இது மனதுக்குள்).

இதற்கெல்லாம் மூல காரணமும் இருந்தது. எனக்கு சிநேகிதமும் சிநேகிதிகளும் மிக அதிகம். தாட்சண்யத்தால், ரி.மு, ரி.பி காலங்களில் (ரிடையர்மென்ட்டுக்கு முன், ரிடையர்மென்ட்டுக்குப் பின்) நிறையவே அனுபவித்திருக்கிறேன்- இழந்துமிருக்கிறேன். ரிட்டையர் ஆன இரண்டு வருடங்களில் சாதனைகளை விட, சோதனைகள்தான் மிச்சம்.

கிடைத்த பணத்தை ஹாய்யாக டெபாசிட் செய்து விட்டு வட்டியில் வாழக் கொடுத்து வைக்க வில்லை. மாறாக அத்தனையும் கடன்களின் அட்ஜஸ்ட்மென்டில் ஓட்டி மீதமுள்ள பென்ஷனில் மட்டும் வாழ வேண்டும் என்ற கட்டாயம்.

உனக்கு என்னடா கஷ்டம்? ‘மூன்று சிங்கக் குட்டிகள் தாங்கு தாங்கென்று தாங்குவார்கள்’ என்று எங்கேயோ எரிந்த வயிறு(கள்), என்னை நிம்மதியில்லாமல் செய்து விட்டது.

இரண்டு சிங்கக் குட்டிகள் அவரவர் விஷயங்களையே கவனிக்கத் தடுமாறிக் கொண்டிருந்தபோது, மூன்றாம் சிங்கக் குட்டி மேல் படிப்பை முடித்திருக்கவில்லை. மருத்துவப் படிப்பு முன்னேறிக்கொண்டிருந்தது.

இதைத் தவிர, இப்போது தங்கும் வீட்டுக் கடன், ரிட்டையர்மென்ட் ஆவதற்கு முன்னால் வாங்கியது- வில்ஸ் சிகரெட் மாதிரி, இழுக்க இழுக்க துன்பம்- இறுதிவரை!

குடித்தனக்காரி, மேக்கப் சுபத்திரா, எல்லாருக்கும் பூசிய சாயத்தை எனக்கு மட்டும் நாமமாகப் போட்டுவிட்டு ‘ இப்போது காலி செய்ய முடியாது’ என்று முதலில் மன்றாடியவள் பின்னர் சீரியல் பார்த்துவிட்டு, ‘இடம் என்னுது’ என்ற போராட்டத்தைத் துவங்கி விட்டாள். வீடும் திரும்பக் கிடைக்கவில்லை! வாடகையும் இல்லை! பத்து வருடங்களாக. அடியாள், போலீஸ், கோர்ட்டு, அரசியல்வாதி என்று, யார் காலையும் தொடாமல் விட்டு வைக்கவில்லை.

பொருளாதார ரீதியில், மொத்தத்தில், பென்ஷன் மட்டும் பத்தவில்லை என்பதுதான் நிஜம்! டென்ஷன் மட்டும்தான் தடங்கலில்லாமல் கிடைத்த சோலார் சப்ளை!

சாரி! விஷயத்துக்கு வருவோம்!

இத்தனை ஈதி பாதைகளில் இன்னொரு பூதமா? என்று மனசு அஞ்சியது!. வாழ்க்கையில் பணம்தான் பிரதானம் என்று ஆகிவிட்டது. சினேகிதங்களைத் தவிர்த்தேன். உறவுகளைத் தவிர்த்தேன். வேலைகள் தேடி அமர்ந்தேன். அப்போதும் ஓடம் ஆட்டம் காண ஆரம்பித்து விட்டது நன்றாகத் தெரிந்தது. இப்போது எனக்கு இடுக்கண் களைய திருவள்ளுவர்தான் வர வேண்டும். வேறு ‘நண்பேண்டா’ யாரும் கிடையாது.

எப்படி இருந்தாலும் அந்த ஆசாமியை நேரில் பார்க்கவேண்டுமே! அப்புறம்தானே துப்பு துலங்கும்? அவர் துப்பைத் துலக்குவாரா அல்லது என்னை வெளுப்பாரா? ‘போரப் போ!’ அந்த சர்ஃப் சிறுவனின் முகம் தெரிந்தது. போர் ரப் போர்!- ஊற்று! தேய்! ஊற்று! (தமிழாக்கம் பரவாயில்லையா?)

சிபிஐ நட்ராஜ் பாம்குரோவில் தங்கி போன் பண்ணினார்.

கூட ஒரு இளம் பெண்ணும் வந்தாள்- சுஜாதாவின் ‘அனிதா இளம் மனைவி மாதிரி. ஐயோ இது யார்? இவள்தான் மீ டூவா? என்ன பின்னணி? தலை சுற்றியது.- கனவில் கூட இவளைப் பார்த்ததில்லையே!

“ஸார்! நான் நட்ராஜ்; இது உங்க ரமா’. நாங்கள் புனேயில் இருக்கிறோம்.

“எங்கே? யாரு,…..எங்க ரமா?” என்று இழுத்தபடியே கை குலுக்கினேன்- இயந்திரமாக.

“ஸாருக்கு இன்னும் அடையாளம் தெரியவில்லை என்று நினைக்கிறோம். நாம்ப நேரில் பார்த்ததும் இல்லை, போனில் பேசினதும் இல்லை- சரிதானே? என்று கொக்கி போட்டான் நட்ராஜ். நாப்பது வயதிருக்கும். சிபிஐ முகத்திலும் பேச்சிலும் தெரிந்தது. ஆனால் யார் இந்த ரமா? என் ரமா? கண்டிப்பா மீ டூ கேஸ்தான் போலிருக்கு!

விஷயம் என்ன? என்றபடி பார்த்தேன் துருவலாக ஆனால் அசடு வழிய! பயம் வெளியில் தெரியாமல்.

‘வாங்க! ரெஸ்டாரென்டில் அமர்ந்து பேசலாம்!’ என்று உள்ளே நுழைந்தான் நட்ராஜ்.

அவனைப் பின் தொடர்ந்த ரமா, ’அங்கிள், உங்களை எனக்கு ரொம்பப் பிடிக்கும். சின்ன வயசுலயே நான் உங்க கூட பேசியிருக்கிறேன்’ என்று புதிர் போட்டாள்.

என்னடா இது? மாட்டிகிட்டேனா?

எங்கே? எப்போது? தலையைக் குடைந்து பலனில்லை. வயசானால் அம்னீஷியாவா? பெண்கள் திடீரென்று பெரியவர்களாகவும் அழகாகவும் ஆகி விடுகிறார்கள்!

ரமா குனிந்து என் கால் விரல்களைத் தொட்டு வணங்கினாள். நட்ராஜும்தான்.

அட! கதையே மாறிவிட்டதா? எனக்கு நம்பிக்கையில்லை.

ரமா ஒரு போட்டோ ஆல்பத்தைக் காட்டினாள். நானும் நிர்குணாவும் அவள் வீட்டு பிறந்த நாள் விழாவில்! ரமா-சின்னப் பெண். ஓ! கோவாவில் எங்கள் பக்கத்து வீட்டுப் பெண்-ரம்மி. அப்பா அம்மா வேலைக்குப் போனதால், பள்ளி முடிந்ததும் எங்கள் வீட்டில் தான் வந்து தங்கிவிட்டுப் போவாள். படிப்பாள் விளையாடுவாள்; சண்டையும் போடுவாள். ரம்மியின் அப்பா ஏதோ ஒரு பேங்கில்தான் இருந்தார். அம்மா ஆஸ்பத்திரியில் நர்ஸ்!

இப்போ கொஞ்சம் கொஞ்சமாகப் புரிந்தது! நிர்குணாவிற்கு நன்றாகவே புரியும். இவளை மிகவும் நன்றாகவே கவனித்துக் கொண்டாள். ஊட்டி வளர்த்தாள். பெண் குழந்தை இல்லாத குறைக்கு, ரமா எங்கள் வீட்டுப் பெண்ணாகவே வளர்ந்தாள். கொஞ்ச நாட்களில் நாங்கள் டிரான்ஸ்பரில், டில்லிக்குச் சென்றுவிட்டோம். பின்னர், தடங்கலுக்கு வருந்துகிற மாதிரி, தொடர்பு அறுந்தது. ரமாவை வேறு ரூபத்தில், ரூபவதியாக அதுவும் சிபிஐ பாதுகாப்புடன் பார்த்தது ரொம்பவும் குதூகலமாக இருந்தது. ஆனால் இப்படியா சி பி ஐ மிரட்டலுடன்? எப்படி பதறிப் போனோம்? நினைத்தாலே மீண்டும் வியர்வை முளை கட்டியது.

‘சரி! மிக்க மகிழ்ச்சி! இப்போ என்ன அவசரமான சென்னை மீட்டிங்?’ கேட்டே விட்டேன்.

ஏன் சிபிஐ ன்னு பயந்திட்டீங்களா? உங்களுக்கு ஒரு சர்ப்ரைஸாக இருக்கட்டுமே என்றுதான் இழுத்தான் நட்ராஜ்.

ரமா ஒரு லாப்டாப்பைத் திறந்தாள். ஒரு பிபிடி ஸ்லைடும் பின்னர் ஒரு வீடியோவும் ஓடவிட்டாள். அதில் அழகான ஒரு வீடு தெரிந்தது. அது முடிந்ததும் ஒரு மருந்துக் கம்பெனியும் சில இயந்திரங்களும் அட்டகாசமாகத் தெரிந்தன.

‘அங்கிள், இது தாம்பரத்தில் இருக்கிறது. வேங்கைவாசல் அருகில்.’

‘நாங்கள் இப்போது சென்னையில் குடியேறப் போகிறோம். இவருக்கு சாஸ்திரி பவனில் வேலை- இப்போது எஸ்.பி ஆக இருக்கிறார். அடுத்த மாதம் டிஐஜி ஆக பிரமோஷன் சார்ஜ் எடுக்கவேண்டும். புனேயில் என்னுடைய சொந்த கம்பெனியில் நாங்கள் தயாரிக்கும் அதே மருந்துகளை இங்கே பல்லாவரத்தில் தயாரிக்க ஃபேக்டரி ரெடி பண்ணிவிட்டேன்.. உங்க ரமாதான் ஓனர்! திறப்பு விழா அடுத்த வாரம்! இதுதான் இன்விடேஷன்.’ அடுக்கிக் கொண்டே போன ரமாவை சற்றே திரும்பிப் பார்த்தான் நட்ராஜ்

ரமாவின் கைகளில் ஒரு தட்டு நிறைய பழங்கள்! கிருஷ்ணா ஸ்வீட்ஸ் மைசூர்பா பெட்டி!, கொஞ்சம் மல்லிப்பூ, நடுவில் அசத்தலான ஒரு இன்விடேஷன்!. ‘என்ன இது?’ சற்றே நிமிர்ந்து கைகளில் வாங்கினேன்.

சகல மரியாதைகளுடன் திறப்பு விழா அழைப்பிதழ்-

அதில் சிறப்பு விருந்தினராக என் பெயரும், நிர்குணாவின் பெயரும்! அதிர்ச்சிதான்..

அங்கிள்! அப்பாவிற்குப் பின் நீங்கள்தான் என்னுடைய ரோல் மாடல். உங்கள் நல்ல குணம், சகிப்புத்தன்மை, வர்சடைல் க்வாலிட்டி எல்லாம் எனக்கு ரொம்பப் பிடிக்கும். என் அப்பா இப்போது இல்லை. ஆன்டியையும் எனக்கு ரொம்பப் பிடிக்கும். இந்த ஃபேக்டரியை உங்கள் கையால் திறந்து வைக்க வேண்டும் என்று என்னுடைய ஆசை! இதை முன் கூட்டியே கேட்டு நடத்துவதென்றால் நீங்கள் மறுத்து விடுவீர்களோ என்று எனக்கு பயம்! அதனால்தான் இதில் முன்னதாகவே உங்கள் இருவரின் பெயரைச் சேர்த்தும் விட்டேன். மன்னிக்கவேண்டும். உங்கள் சம்மதம் பெற்றபின் ஆன்டியைப் பார்த்து அழைக்க வீட்டிற்கு வர இருக்கிறோம்’ என்று சொல்லி மீண்டும் காலில் விழுந்தாள் ரமா.

சி.பி.ஐ. நட்ராஜ் புன்னகையுடன் நின்று கவனித்துக் கொண்டிருந்தான்.- இல்லை இல்லை—கொண்டிருந்தா….ர்.

விஷயம் இதுவாக இருக்க, நான் என்னென்ன கோணத்தில் அதீத சிந்தனையில் விழுந்து எழுந்து….. வேண்டாத வேலைதான்! ‘மாற்றி யோசி’ நல்ல உத்திதான்! ஆனால் தலைகீழா யோசிக்கக் கூடாது! அனாவசிய மனக் குழப்பங்கள் வரும்! அப்புறம்…..போகவே போகாது!

எனக்கு ஒன்று மட்டும் புரிந்தது. நாம் செய்த பல நன்மைகளில் சில நன்மைகள் ஒரு சிலரால் மட்டும் நினைவில் கொண்டுவரப்படும்! அதுதான் செய் நன்றி. செஞ்சோற்றுக் கடன் என்பதன் பிரதிபலிப்பு!

ஆனால் நம்முடைய சில தீமைகள் பலராலும் நினைவில் இறுக்கி முடிந்து வைக்கப் படும்! அதுவே ஊழ்வினையின் திறப்பு விழாவாகவும் இருக்கக் கூடும்.

நல்லவேளை- இந்தக் கேஸில நான் பிழைத்துக் கொண்டேன். எல்லா தெய்வங்களையும் மனசாரக் கும்பிட்டு, காதலித்து, மண்டியிட்டு அப்பப்பா! தப்பித்தோம். ‘இப்ப பாட்டுப் பாடலாம்’ என்று மனசு சொல்லியது.

நிர்குணாவிடம் போனில் சொன்னதும் அவள் மனசும் நிம்மதியடைந்தது. பெருமூச்சு சத்தம் எனக்குக் கேட்ட மாதிரியிருந்தது.

Print Friendly, PDF & Email

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *