ஒரு கொலைகாரனின் வாக்குமூலம்

0
கதையாசிரியர்:
கதைத்தொகுப்பு: கிரைம்
கதைப்பதிவு: May 7, 2021
பார்வையிட்டோர்: 5,302 
 
 

ஹலோ…! உங்களைத் தாங்க.. உங்க கிட்ட நான் ஒரு ரகசியத்தை சொல்லப் போறேன்…உங்ககிட்ட மட்டும்தான்…ஆனா நான் சொல்றதக் கேக்க முன்னாடி உங்களைக் கொஞ்சம் தைரியப் படுத்திக்குங்க ..நீங்க ஒரு ‘ஹாட்’ வீக்கான ஆளா இருந்து அப்புறம் நான் சொல்றதக் கேட்டு அதிர்ச்சியில நீங்க ‘ பொட்’டின்னு போயிட்டா என்னைத் தான் எல்லாரும் குறை சொல்லுவாங்க…… மத்தவங்க Feelings க்கும் நாம மதிப்புக் கொடுக்கணும் இல்லியா ..? நான் அப்படித் தாங்க.

முதலில என்னைப்பத்தி ஒரு சின்ன அறிமுகம் .அதுக்கப்புறம் Matter ற – விஷயத்த சொல்றேன். அதுக்கு முன்னாடி அவசரமா உங்களுக்கு ஏதாச்சும் வேலை இருந்தா செஞ்சுமுடிச்சிட்டு வந்துடுங்க. .நானும் இந்தக் காஸெட்டைப் போட்டு ஒரு பாட்டை அதுக்குள்ள ரசிச்சு முடிச்சிருறேங்க.

‘கண்ணாளனே..’ன்னு சித்ராவோட குரல் எப்படிக் கொழையுது பாத்தீங் களா? கேக்கறப்போ எங்கேயோ கொண்டிட்டுப் போயிடுதுங்க. பிரிவுத் துயரை அப்படியே புழிஞ்சு கொடுக்குதில்லீங்களா? ‘ரெத்தம் கொதி கொதிக்கும் – உலை கொதிச்சிடும் நீர்த் துளி போல’ன்னு ரொம்ப ரச்சிங்கா’ எழுதியிருக்காருங்க கவிஞர். வைரமுத்துவோட கவிதைங் கன்னா எனக்கு ரொம்பப் பிடிக்குங்க… .இந்தப் புதுக் கவிதைன்னு இப்பல்லாம் பேப்பர்ல வருதுங்களே – நமக்கு அதுக எதுவுமே சுத்தமாப் புரியறதில்லீங்க. சரி விடுங்க. வாழ்க்கையில எல்லாமே எல்லாருக்குமே புரிஞ்சுதான் போயிடுதா? ஏன் என்னையே எடுத்துக் குங்களேன்.ரொம்பப் பேருக்கு நானும் ஒரு புரியாத புதிர் தானுங்க.

இப்பதான் நான் ஒரு கொலையை செஞ்சிட்டு வந்து உக்காந்துட்டி ருக்கேன். என்னங்க நான் சொல்றத உங்களால நம்ப முடியல்லியா? ‘என்னடா இவன் ஒரு கொலையை முழுசா செஞ்சிட்டு இப்பதான் ‘காப்பி’ சாப்பிட்டேன்னு சொல்ற மாதிரி, ‘ஹாயா’ உக்காந்து பாட்டு வேற கேட்டுகிட்டு ரொம்ப சிம்பிளா சொல்றானேன்னு நெனைக்கி றீங்களா? நெஜமாத் தாங்க.என்னை நீங்க புரிஞ்சுக் கிட்டீங்கன்னா நான் சொல்லுறதும் உண்மைதான்னு நம்புவீங்க.

நீங்க இப்ப என்ன நெனைக்கிறீங்கன்னு எனக்கு நல்லா புரியுதுங்க. என்னைத் தான் மத்தவங்க புரிஞ்சுக்கல்லன்னாலும், மத்தவங்களோட உணர்ச்சிகளை, இயல்புகளை நான் ரொம்ப நல்லாவே புரிஞ்சுக்கு வேங்க.சின்ன வயசில இருந்தே நான் ரொம்ப Sensitive ஆன ஆளுங்க. Soft Nature ம்பாங்க யாராச்சும் எதுக்காச்சும் என்னை ஏசினா உடனே அழுதுடுவேங்க.

நாங்க ரொம்ப High Class family ங்க. எங்கப்பா – Dad – famous ஆன ஒரு Doctor . அம்மா University Lecturer .நான்தான் அவங்களுக்கு ஒரே பையன். அதனால வீட்டில நான் செல்லப்பிள்ளைங்க. நான் எது கேட்டாலும் இல்லேங்காம வாங்கித் தந்துடுவாங்க.வீட்டுல எனக் கின்னு தனியா TV, Phone, Audio Player, Video Deck எல்லாமே இருக் குங்க.என் ரூமை வந்து பாத்தீங்கன்னா மலைச்சுப் போயிடுவீங்க.

சினிமால தாங்க அந்த மாதிரி ரூமை நீங்க பாத்திருப்பீங்க. கையில ஒரு ஆயிரம் ரூபா இல்லாம நான் College க்குப் போகவே மாட்டேங்க. சொந்தக் காரு. அவசரம்னா Motor Bike எல்லாமே இருக்குங்க. கையில காசிருந்த கேட்கணுமா? என்னைச் சுத்தி எப்பவுமே கூட்டாளிங்க பட்டாளம் தாங்க.

சனி ஞாயிறுன்னா Friends கூட ஜாலியா Trip அடிக்கப் போயிடுவேங்க. அப்படிப் போறப்ப தான் ஒரு தடவை ஒரு சேரிப் பையன காரால அடிச்சுட்டேங்க.பாவிப் பய காருக்கு குறுக்க வந்து விழுந்திட்டான். Sixty Miles Speed ல வந்து கிட்டிருந்தமா – Control பண்ண முடியில்லீங்க. தண்ணி வேற போட்டிருந்தமா தடுமாறிப் போயிட்டம்ங்க. நின்னு மினக்கெட்டாப் பிரச்சினை பெரிசாயிடும்னு escape ஆகி வந்து சேர்ந்துட்டமுங்க. மத்த நாத்துப் பேப்பர்ல அதப் பத்தி நியூஸ் எல்லாம் வந்துச்சுங்க. ஆனா நல்ல வேளை நம்மள யாரும் Trace பண்ணி வரல்லீங்க. நம்ம Friends ங்க ரொமப் ஒத்துமை யான பசங்க. யாரும் அதப்பத்தி மூச்சு விடல்லீங்க. ஆனா நம்மைப் பொறுத்த மட்டில அது ஒண்ணும் கொலை இல்லீங்க. ஒரு Accident நாட்டு ஜனத் தொகையில் ஒண்ணு கொறைஞ்சிடுச்சு. அவ்வளவு தாங்க.

இந்த AC ரூமில இருந்தும்கூட எனக்கிப்படி வியர்க்குதுன்னா பாருங் களேன். கை வேற கொஞ்சம் நடுங்குது. கொஞ்சம் தாங்க. பயத்தில ன்னு சொல்லப் போறீங்க. அதெல்லாம் ஒண்ணும் இல்லீங்க. இந்த Powder அடிக்க ஆரம்பிச்சாப் பொறவுதான் இப்படி. பவுடர்ன்னா என்னதுன்னு உங்களுக்கு சிலநேரம் புரியாம இருக்கலாம். இந்த ‘குடு’ன்னு சொல்லுவாங்களே, அதைத்தாங்க சொல்றேன். பாவிப் பயலுக-பழக்கிப் புட்டாங்க. அதில்லாம இப்பல்லாம் இருக்கவே முடியுது இல்லீங்க.

விஸ்கியில இல்லன்னா பிராந்தியில கொஞ்சம் ஊத்திக்கிட்டு ஒரு பாட்டைப் போட்டுக் கேட்டாக்க சும்மா அப்படியே தூக்கிடுங்க. அந்த சொர்க்கத்தில மெதக்கறாப்பல இருக்குங்க. இப்பெல்லாம் ‘பெத்தட்டின்’ Injection ஒண்ணு போட்டாத்தான் சரிப்படுதுங்க.

நான் ஒரு ஊசி போட்டுக்கற வரைக்கும் கொஞ்சம் Wait பண்றீங்களா? ஒரு நல்ல பாட்டா போட்டு விடுறேன். கேட்டுகிட்டு இருங்க.

இந்த ஒரு பாட்டுக்காகவே ‘காதல் தேசம்’ படத்தை பத்து முறை பாத் திருப்பேங்க. இந்தப் பாட்டைக் கேக்கிறப்ப எல்லாம் எனக்கு எப்ப வும் அவ ஞாபகம் தாங்க வரும். என் மனநிலையைப் புரிஞ்சுகிட்டு எனக்காகவே கவிஞர் இந்தப் பாட்டை எழுதின மாதிரி இருக்குங்க. அவ ஒரு பார்வை பாத்தான்னா காணுங்க. தீக்குச்சி இல்லாமலே என் உடம்பு கதகதன்னு நெருப்புப் பிடிச்சாப்பல ஆயிடுங்க. ஆமா, அவ அவங்கறனே யாரு அவன்னு கேக்கறீங்களா? அவதாங்க – நான் ஒரு கொலை செஞ்சேன்னு சொன்னேன்ல– அவளைத் தாங்க கொன்னுட் டேன்.

என் காதலிங்க. என் மனசில இடம் பிடிச்ச, நான் உண்மையாவே காதலிச்ச ஒரே பொண்ணு அவதாங்க. அவ பேரு…. எதுக்குங்க இப்ப அதெல்லாம்? செத்தாப் பொறவு பேரு என்னங்க பேரு? பொணம் தானுங்களே. வேணும்னா நாளைக்கு பேப்பர புரட்டிப் பாருங்க. விலா வாரியா எல்லாம் போட்டிருப்பான். பாட்டில வந்தாப்பல ‘உன்னைக் காணவில்லையே நேற்றோடு. உயிர் ஓடிப் போனதோ காற்றோடு’ ன்னு யாரெல்லாம் புலம்பப் போறாங்களோ தெரியல்ல.

அவ அழகுக்கு அடிமைப்பட்டு அவ பின்னாடி சுத்தினவங்க ரொம்ப பேருங்க. அவளுக்காக உசிரைக் கொடுக்கவும் ரெடியா இருந்த பய லுங்க நம்ம Set லேயே இருக்காங்க. அவளை ஒரு முறை பாத்தீங் கன்னா அப்புறம் நீங்க தியேட்டர் பக்கமே தலை வச்சுப் படுக்க மாட் டீங்க. இந்த சினிமாவில வர்ற நடிகைங்க எல்லாம் அவ முன்னாடி Nowhere ங்க.

அவ அழகை வர்ணிக்கணும்னா அதுக்கு ஆறு கட்டு Note Bookகும் காணாதுங்க. அதைவிடுங்க. செத்துப் போனவளை இனி வர்ணிச்சு என்னங்க ஆகப் போகுது? Parts Partsஸா வர்ணிச்சு ரசிக்க வேண்டிய அவளை இப்ப நான் பார்ட்ஸ் பார்ட்ஸாக் கூறு போட்டுக் கிட்டிருக் கேன். இதுவும் ஒரு கலை தாங்க. Medical College ல தவளையையும் எலியையும் தாங்க வெட்ட விடுவாங்க, அதில ஒரு Thrill இல்லீங்க. நெஜமான ஒரு ஆளோட உடம்ப வெட்டிறப்ப – அதுவும் இளசான ஒரு பொண்ணோட Body ய வெட்டிறப்ப – அந்த அனுபவமே வேற தாங்க.

சில ஆளுங்களுக்கு கோழியக் கூட சரியா வெட்டத் தெரியாதுங்க. நம்ம கூட்டாளிப்பய ஒருத்தன் இருக்கான் ரெத்தத்தைப் பாத்தாப் போதுங்க. தலைய சுத்தி தரையில விழுந்திடுவான். நாம எல்லாம் அப்படி இல்லீங்க. சின்னதுல இருந்தே இந்த மாதிரி பாத்து பாத்து பழகிடிச்சுங்க. ஷாம்பெயினைப் போல இந்த ரத்தத்தோடு Red Colour பாக்க எவ்வளவு Bright ரா இருக்குதுங்க .இதையெல்லாம் ரசிக்கத் தெரியாத பயலுக தான் சும்மா பயந்து பயந்து சாவாங்க.

எதுக்கும் ஒரு துணிச்சல் – ‘தில்’ வேணுங்க. கொலை செய்யறதுக்கு அது கொஞ்சம் ஜாஸ்தி தேவை.அவ்வளவு தாங்க.கோழியக் கொல்றதுக்குக் கூட Art இருக்குங்க. இந்த கயித்தில கட்டித் தொங்க விட்டு, அது றெக்கைய அடிச்சு, காலை உதறி , வவுத்தால கழிஞ்சு…சேச்சேச் சே …அதெல்லாம் கண்ராவிங்க.

நம்ம கையில தந்து பாருங்க. நைஸாக் கழுத்தைப் பிடிச்சு டக்குன்னு ஒரு Twist. அவ்வளவு தாங்க. ஆட்டம் குளோஸ். என்ன இம்மட்டு ஈஸியா சொல்லுறானேன்னு பாக்கிறீங்களா? எல்லாமே Experience தாங்க.

அணில், வவ்வாலு, புறா, முசலு ஆமை, உடும்பு, உள்ளான்னு எல்லாத் தையுமே ஒரு கை பாத்திருக்கேங்க. ஆமை ரொம்ப ஈஸிங்க. கவுத்துப் போட்டுட்டு கிறு கிறுன்னு வெட்ட வேண்டியது தான். வெட்ட வெட்டப் Parts எல்லாம் துடிச்சுக்கிட்டே இருக்கும். அந்த Movements பார்க்க ஜோரா இருக்குங்க.

முசலு இறைச்சி ரொம்ப Soft ங்க. மான் அவ்வளவா கிடைக்க மாட்டு துங்களாம். ரெண்டு மூணு தடவை தான் சாப்பிட்டிருக்கேன். நல்ல Taste ங்க. By the By சமையல் கலையிலையும் நான் நல்ல Expert ங்க. எனக்குப் பிரியமானதுகளை வகை வகையா சமைச்சு சாப்பிடுவேங்க. சாப்பாடு நல்ல இருந்தா ரெண்டு பிளேட் வெட்டுவேனுங்க. என்னை நீங்க ஒரு ‘சாப்பாட்டு ராமன்’னு நெனைக்கலாம்.பரவாயில்லீங்க. நாம வாழுறதே இந்த ஒரு ஜாண் வயத்துக்குத் தானுங்களே?

சாப்பாட்டைப் பத்திப் பேசறப்ப என்னடா நம்ம வயிறு கபகபங்கு தேன்னு பாத்தேன். வேற ஒண்ணும் இல்லீங்க. காலைல இருந்து நான் எதுவும் சாப்பிடவே இல்லேங்கிறது இப்பதான் ஞாபகம் வருது பிரிட்ஜில இறைச்சி ஏதாச்சும் இருக்கும். எடுத்து Fryபண்ணினா Bread டோட கொஞ்சம் சாப்பிடலாங்க. இந்த சாப்பாட்டைப் பத்தி நெனச்ச தும் அந்த ‘பிஸ்தா’ படத்தில வர்ற பாட்டுத் தாங்க எனக்கு ஞாபகத் துக்கு வருது. அந்த Scene னை இப்ப நெனச்சாலும் சிரிப்புத் தான் பொத்துகிட்டு வருதுங்க.

என்னங்க நீங்களும் ‘பிஸ்தா’ பின்னாடியே போய்ட்டீங்களா? பசி வந் தாப் பாத்ததும் பறந்து போயிடும்னு சொல்லுவாங்க. அது சரியாத் தான் இருக்கு. நாம ஆரம்பிச்ச வேலைய முடிக்காம நானும் எங் கேயோ போயிட்டேன் பாத்தீங்களா?

கொலையை செஞ்சா மட்டும் காணுங்களா? மத்தவங்க யாரும் சந்தே கப்படாத வகையில Body ய Dispose பண்ணனும். Evidence எதுவும் விட்டு வைக்காம காரியத்தை கச்சிதமா முடிக்க வேணும். அதுதாங்க முக்கியம். விஷயம் தெரியாதவங்கதான் முட்டாள் தனமா மாட்டிக்கு வாங்க.

ம்..முதலில இந்த பார்ட்ஸ்ஸ எல்லாம் Pack பண்ணி முடிச்சிடணும். அப்பறம் ரூமை சுத்தமா Clean பண்ணிடணும். துண்டு துணுக்கு எது வும் விட்டு வைக்கப்படாது. எல்லாத்தயும் எரிச்சு Toilet Commode டில போட்டு தண்ணி அடிச்சு Flush பண்ணிடணும். அப்பறம் இந்த தோடு, காப்பு, சங்கிலி சமாச்சாரங்க. எல்லாமே Gold டு தான். ஆனா தங்கம் கறதுக்காக அதுகளை மறைச்சு வச்சு மாட்டிக்கக்கூடாது. அதுங்களை யும் எங்கயாச்சும் தூரமா கொண்டு போய் கடாசிடணும். தங்கத்துக்கு ஆசைப்படுறவன் யாரும் எடுத்து வச்சிருந்து மாட்டிக்குவான். மாட்டிக் கட்டும். இந்த வேலை எல்லாம் Complete டா செஞ்சு முடிக்க ஒருThreeHours ஆச்சும் தேவைப்படும் போல இருக்கு.

ம்..நான் தனியாவே தான் இதெல்லாத்தையும் செஞ்சு தொலைக்க வேண்டியிருக்கு. என்னங்க செய்யிறது? கூட்டாளிங்க எத்தனையோ பேரு இருக்காங்கதான். ஒரு Phone போட்டுக் கூப்பிட்டா அடுத்த ‘நிமிட்டே’ ‘என்ன உதவிவேணும்’னு கேட்டு கிட்டு வந்து நிப்பாங்க. ஆனா இந்த விஷயத்தில அப்படி யாரையும் கூட்டு சேர்த்துக்கிட்டா நமக்குத் தாங்க ஆபத்து. எப்படியாச்சும் விஷயம் வெளியில Leakஆயிடும். இல்லேன்னா இதை வச்சு நம்மளையே Black Mail பண்ண ஆரம்பிச்சிடுவாங்க. எமகாதகப் பயலுக.

இதெல்லாம் தனியா செய்யிறது கொஞ்சம் Strain ஆகத்தாங்க இருக்கு. என்ன செய்யிறது? எப்படியாச்சும் முடிச்சுத்தானே ஆகணும். ஒழுங் காப் படிக்கலேன்னா கசாப்புக் கடையில தான் நீ வேலை செய்ய வேண்டி வரும்னு நம்ம டாடி அடிக்கடி சொல்லுவாரு. இப்ப நான் படிச்சுப்பிட்டும் அந்த வேலையத் தாங்க செய்ய வேண்டி வந்திருக்கு. நல்ல வேளை போன மாச நியூஸ் பேப்பர் எல்லாம் எடைக்குப் போடாம வீட்டிலேயே தங்கிடிச்சு. இல்லேன்னா இதுகளை Pack பண்ண பேப்பர் இல்லாம நான் தவிச்சுப் போயிருப்பேன்.

‘ஆமா காதலிச்சேன்கிறே, அப்புறம் அவளை ஏன் நீ கொலை செஞ்சே’ ன்னு நீங்க கேக்க நினைக்கறீங்க. இல்லியா? Reason இருக்குதுங்க. காரணம் இல்லாம நான் ஒரு எறும்பைக் கூட கொல்ல மாட்டேங்க. புத்தரோட தத்துவமெல்லாம் எனக்கும் அத்துப்படிங்க.

அவ எனக்குத் துரோகம் பண்ணிட்டாங்க. என்னை அவ Love பண்ண லன்னாலும் பரவாயில்லீங்க. என்கூடப் படிக்கற பனாதைப் பய – என் ஒண்ணாம் நம்பர் Enemy – அவனைப் போய் அவ லவ் பண்ணிட்டாங்க. செய்யலங்களா? அதுதாங்க எனக்குப் பொறுக்கல்ல. எனக்கு கிடைக் காத அவ இந்த உலகத்தில இருந்தென்ன? இல்ல செத்துத் தொலைஞ் சால்தான் என்ன? அதுதாங்க கொன்னுட்டேன்.

இந்த ரூமில வச்சுத் தாங்க அவளைக் Close பண்ணினேன். அவ எப்படி என் ரூமுக்கு வந்திருப்பான்னு யோசிக்கிறீங்க இல்லியா? அங்க தாங்க என்னோட அதிர்ஷ்டம் வேல செஞ்சிருக்கு. கடவுள் எப்பவும் நம்மைப் போல ஆளுங்களுக்குத் தாங்கSupport பண்ணுவாரு.

ரெண்டு நாளுக்கு முன்னாடி தாங்க ஒரு Letter எழுதி போட்டேன். அவ வீட்டு Address க்கு. அவங்க ரெண்டு பேரையும் பத்தி நாக்கைத் புடிங் கிக்கற மாதிரி, பச்சை பச்சையா எழுதி அனுப்பி வச்சேங்க. அந்த மொட்டைக் கடிதம் இவ்வளவு தூரம் வேலை செய்யுமின்னு நான் நினைக்கவே இல்லீங்க. பட்சி தானாவே வந்து நம்ம வலையில மாட்டிக்கிச்சுங்க.

கையில காயிதத்தையும் தூக்கிகிட்டு பத்ரகாளி கணக்கா நம்ம வீடு தேடி வந்திச்சிங்க. அப்பகூட அவ அழகு ஒரு மாத்து கூடக் கொறை யல்லீங்க. நல்ல வேளையா அந்தக் கடிதம் அவங்கப்பன் கையில கெடைக்கல்லியாம். ஏன் இப்படியெல்லாம் Cheap பா Behave பண்றீங்க ன்னு கேட்டு தையத் தக்கான்னு குதிச்சா. எனக்கு கோபமே வரல் லீங்க. அவ அழகை ரசிச்சுகிட்டே அவ மேல எனக்கிருந்த காதலை உடைச்சு சொன்னேங்க. அப்ப எனக்கு அழுகையே வந்துட்ட்டுதுங்க..

அதுக்கு அவ என்ன சொன்னா தெரியுங்களா? என்னை அவளுக்குப் புடிக்கல்லியாம். என்னைப் பாத்தாலே அருவருப்பா இருக்குதாம். நான் ஒரு குடிகாரனாம். Drug Addict ராம். என்னென்னமோ எல்லாம் சொல்லித் திட்டினா. என்னால தாங்க முடியல்லீங்க. என்னை ஒரு ஆம்பளையாக்கூட அவ மதிக்கல்லீங்க. என் உணர்ச்சிகளை அவ புரிஞ்சிக்கவே நெனைக்கல்லீங்க. நான் எப்ப கத்தியக் கையில எடுத் தேன், எப்படி அவளைக் குத்தினேன்னு கூட எனக்குத் தெரியாதுங்க. செத்துப் போய்ட்டாங்க. ஒரே குத்துத் தாங்க. ‘பொசுக்’கின்னு சரிஞ் சிட்டாங்க. இப்படி ஆவும்னு சத்தியமா நான் நெனைக்கல்லீங்க. பாவம்க அவ. இந்த சின்ன வயசில அவளுக்கு சாவு வந்திடுச்சு. நெனைச்சா அழுகை அழுகையா வருதுங்க.

நல்ல வேளையா உங்க கிட்ட பேசிக் கிட்டே வேலை செஞ்சதில களைப்புத் தெரியல்லீங்க. வெட்டின துண்டுக எல்லாத்தையும் கடதாசி யில சுத்தி நீற்றா Pack பண்ணி Suit Case லயும் வச்சு மூடிட்டேங்க. அம்மாடி…பொண கனம் கனக்குதுங்க. நான் ஒரு மடையன். நெஜ மாவே இப்ப அது பொணம் தானுங்களே. 50 கிலோ தங்கச் சிலை இப்ப இந்த Suit Case க்க அடக்கம். இதை கடத்துறது தான் இனி அடுத்த வேலை.

இதைக் கொண்டிட்டுப் போய் நைஸா கடல்ல கவுத்துப் புட்டா அம்புட்டுத் தாங்க. நம்ம பாரம் கொறைஞ்சிடும். மீனுகளுக்கு ஒரு வேளை தீனியாயிடும். ம்..பொழுதும் சாஞ்சிடிச்சு.. .இன்னும் கொஞ்ச நேரம் இருட்டு மட்டும் காத்திருக்கணும்.Wait until dark. இன்னும் ஒரு ரெண்டு மணி நேரம் கடந்திடிச்சின்னா ஊரும் உறங்கிடும். நம்ம வேலையும் ஈஸியா முடிஞ்சிடும்.

அவ நம்மைத் தேடி வந்த விஷயம் யாருக்கும் தெரியப் போற தில்லை. அவளை நான் கொலை செஞ்ச விஷயமும் தெரியப் போற தில்லை. எந்தத் தடயமும் வைக்காமலே கச்சிதமாக் காரியத்தை முடிச்சிட்டேங்க. நல்ல வேளையா நான் எழுதின மொட்டைக் கடிதத் தைக் கூட அவ கையோட கொண்ணாந்திருந்தா. அதுவும் கூட இப்ப சாம்பலாப் போயிடிச்சு.

தப்பு ஏதும் வந்திடாம ரொம்ப அவதானமா காரியம் நடத்தணும். வீட்டு வாசல் பக்கமா போகக் கூடாது. பின் வழி தான் Safe . ஆட்டோ வில் எல்லாம் போகப்படாது. அப்புறம் ஆட்டோ ட்ரைவரப் போட்டு உருட்டி மெரட்டினா கதை கந்தலாயிடும். தனியா செய்ய ஆரம்பிச் சாப்பல தனியாவே தான் செஞ்சு முடிக்கணும். நம்ம Motor Bike ல பின்னாடி வச்சு டக்குன்னு போயிடலாம். கொஞ்சம் பொறுங்க பின் கதவைத் தொறந்து வச்சிட்டு வந்துடறேன்

அப்பாடா எல்லாம் ஓக்கே. இப்பதான் நிம்மதியாயிருக்கு. ம். .வெளிய யாரோ ஓடுற மாதிரி சத்தம் கேட்குதே.. உங்களுக்கு கேக்கல்லியா? எனக்கு கேட்டுதுங்க. கதவில வேற யாரோ தட்டுறாங்க. யாராயிருக் கும்? ஆ…இன்ஸ்பெக்டர்!

என் நெஞ்சுத்துடிப்பு ஒரு கணம் நின்னு போயிடிச்சுங்க. திக்கினு ஆகிப் போச்சுங்க. வேற ஒண்ணும் இல்லீங்க. விஷயம் என்னான்னா யாரோ ஒரு கொலைகார பய ரிமாண்டிலே இருந்து தப்பி ஓடி யாந்திட்டானாம். அவனைத் தேடித் தான் வந்திருக்காரரு. அது தானே பாத்தேன். நாம கொலை செஞ்சது ஒரு குருவிக்கு கூட தெரியாதே. கொஞ்ச நேரம் ஆடிப் போய்ட்டேங்க. “Sorry for the disturbance” ன்னு ரொம்ப மரியாதையா சொல்லிட்டு அவர் புறப்பட்டாப்புறம்தான் என் நெஞ்சுக்க தண்ணியே வந்திச்சு.

வாசல் வரைக்கும் போனவர் ஏன் திரும்பிப் பாக்குறாரு..நானும் இப்பத்தாங்க கவனிச்சேன். எங்க இருந்து எப்ப வந்திச்சோ தெரியல்ல ஒரு கறுத்தப் பூனை. மியாவ் மியாவ்ன்னு கிட்டு, நாக்கை வேற சுழட்டி கிட்டு, நம்ம சூட்கேசையே சுத்தி சுத்தி வந்து நக்கி கிட்டு நிக்குது..சனியன். எனக்கு வந்த ஆத்திரத்தில..கத்தி தான் கையில அம்பிட்டுது. பூனையத் தொரத்துறதுக்கு நான் கத்திய எடுத்து கிட்ட மாதிரிலதான் தப்பு பண்ணீட்டேன் போல.

போகப் புறப்பட்ட இன்ஸ்பெக்ட்டர் திரும்பி வந்தாரு. சந்தேகத்தோட அவர் பார்வை சூட் கேசில் பதிஞ்சுது. அப்பவே எனக்குப் புரிஞ்சு போச் சுங்க – வசமா நான் மாட்டிகிட்டேன்னு. பூனை ஒண்ணு குறுக்க பூந்து காட்டிக் குடுத்து எல்லாத்தையும் கவிட்டிருச்சு பாத்தீங்களா? ம்..நான் போட்ட கணக்கு தப்பாத் தான் போயிடிச்சிங்க.இனித் தப்ப முடியா துங்க. தூக்கு கயிறு நிச்சயம். அதில சந்தேகம் இல்லீங்க. குத்தம் செஞ்சவன் எப்படியாச்சும் பிடிபட்டுத்தானே ஆகணும், உப்பைத் தின்னவன் தண்ணி குடிச்சுத் தானுங்களே ஆகணும்.

[‘இசையும் கதையும்’ நிகழ்ச்சிக்காக எழுதப்பட்டு இலங்கை வானொலி, ‘வானம்பாடி’ சேவையில் 16/12/1997 ஒலிபரப்பானது.]

Print Friendly, PDF & Email

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *