எலும்புக்கூடு சித்தாந்தம்

0
கதையாசிரியர்:
கதைத்தொகுப்பு: கிரைம் த்ரில்லர்  
கதைப்பதிவு: August 12, 2017
பார்வையிட்டோர்: 73,827 
 
 

மனிதர்களுக்கு செல்லப்பெயர் இருப்பதைப்போல் ஒருகாலத்தில் நாடுகளுக்கும் செல்லப் பெயர்கள் இருந்தன. சுறுசுறுப்பான மனிதர்களைக் கொண்ட ஜப்பானுக்கு ‘தேனீ; எல்லா மொழிகளையும் பேசும் இந்தியாவுக்கு வானவில்; மற்ற மனிதர்களைக் கண்டால் எப்போதும் புன்னகைக்கும் ஸ்ரீலங்காவுக்கு புன்னகை; கடலையே கண் வாங்காது பார்த்துக் கொண்டிருப்பதால் மாலைதீவுக்கு நீல நயனம். இப்படியே இன்னுமொரு நாடு இருந்தது. அதன் செல்லப் பெயர் ‘வெள்ளிக்குற்றி’. இந்தப் பெயர் வந்த காரணம் என்னவென்றால் அந்நாட்டு மக்களின் கைகளில் எப்போதும் பத்து வெள்ளி நாணயக் குற்றிகள் இருக்கும். வெள்ளி நாணயக் குற்றிகளைப் போடுவதெற்கென்று முச்சந்திகளிலும், நாற்சந்திகளிலும் காசுப்பெட்டிகள் இருந்தன. பெட்டிகள் என்று அழைத்தாலும் அவை முட்டை வடிவில், நட்சத்திர வடிவில் என்று எல்லா ரூபங்களிலும் காட்சியளித்தன. பெட்டிகளில் மின்விளக்குகள் மின்னிமின்னி ஒளிர்ந்தன; பாடல்கள் ஒலித்தன; சில இடங்களில் அரை நிர்வாண காணொளிகளில் நடனமாதர்கள் தோன்றினார்கள். இந்தப் பெட்டிகளைக் கடந்து யாரும் கண்டும் காணாத மாதிரி போக முடியாது. அந்தளவுக்கு உள்ளத்தை அவை ஈர்த்தன.

காசுப்பெட்டித் துளைகளுக்குள் பத்து வெள்ளிக் காசுகளைப் போட, போட்ட மாத்திரத்திலேயே வர்ண அட்டை வெளியே வரும். அதற்குப் பெயர் காசுஅட்டை. காசு அட்டை திங்கட்கிழமைகளில் பொன்னிறத்திலும், செவ்வாய்க்கிழமை ஒலிவ் பச்சையிலும், புதன்கிழமை கடல் நீலத்திலும், வியாழக்கிழமை கிறிம்சன் சிவப்பிலும், வெள்ளிக்கிழமை செம்மஞ்சல் நிறத்திலும் இருக்கும். இந்த அட்டைகளைப் பெற்றுக்கொள்வதற்காக மதகுருமாருகளும், பெண்களும், சிறார்களும், அரசாங்க உத்தியோகத்தர்களும், பேராசிரியர்களும் காலை ஏழு மணியிலிருந்து கால் கடுக்கக் கடுக்க நின்றார்கள். ‘பத்துவெள்ளி ஒரு தூசு; அதைப் போடுங்கள்; கோடியை வெல்லுங்கள்’ என்ற வாசகங்கள் எல்லா இடங்களிலும் காணப்பட்டன.

மாலை நான்குமணியானதும் காசுஅட்டையின் முடிவுகள் வெளிவரும். எண்பது இலட்சம் பேர் தொலைக்காட்சிகளை சூழ்ந்து நிற்கும் அவ்வேளை நாடு ஸ்தம்பித்துவிடும், இதயங்கள் படபடக்கும், காசு அட்டையின் எண்கள் மீது கண்கள் குத்திட்டு நிற்க அதிர்ஷ்டக் குலுக்கல் நடைபெற்று வெற்றியாளன் அறிவிக்கப்படுவான். வெற்றி பெற்றவன் அரசனாகி விட அவனுக்கு அரசனுக்குரிய ஆடைகளை அணிவித்து அரியணையில் அமர வைத்து கிரீடம் சூடி பட்டாசு கொளுத்தி, கோடீஸ்வர மகான் என்று பிரகடனம் செய்து கோடி தங்க நாணயங்களை அவனுடைய கையிலே கொடுப்பார்கள். பரிசு கிடைக்காத 7999999 குடிமக்களும் கோடீஸ்வர மகான் ஆவதற்கு ஆசைப்பட்டு மீண்டும் காசுப்பெட்டியை நோக்கி முண்டியடித்துக் கொண்டு ஓடுவார்கள்.

பிர்வா நப்லாவுக்கு வயது நாற்பது. அவனும் வெள்ளிக்குற்றி நாட்டில் தான் பிறந்தான். அவன் பிறந்த திகதி ஏழு, பிறந்த மாதம் ஜூலை, ஏழாம் மாதம், பிறந்த ஆண்டின் கூட்டுத்தொகை ஏழு, பிறந்த நேரம் காலை ஏழு ஏழு என்று அத்தனையும் அதிர்ஷ்டமான ஏழாம் எண் என்பதால் அவன் பிறந்தபோது அவனுடைய பெற்றோர்கள் மிகவும் மகிழ்ச்சியடைந்ததோடு பிர்வா நப்லா என்றோ ஒருநாள் கோடீஸ்வர மகானாகி விடுவான் என்றும் திடமாக நம்பினார்கள். பிர்வா முண்டியடித்துக் கொண்டு காசுப் பெட்டியடியில் நிற்பதில்லை. அவன் வாழ்ந்த தெருக்கோடியிலே வசித்து வந்த மதகுரு அவனுடைய வீட்டுக்கே வந்து காசு அட்டைகளை கொடுத்துச் செல்வார். காலை ஆறுமணிக்கே அவர் கதவைத் தட்டும்போது கண்களைக் கசக்கிக்கொண்டு மதகுருவின் முகத்தில்தான் பிர்வா விழிப்பான். நேர்மை தவறாத பிர்வா சம்பளம் எடுத்த உடனேயே மதகுருவின் வீட்டிற்குச் சென்று மூவாயிரம் வெள்ளிக்காசுகளை ஒப்படைப்பhன். கணக்குப் படி சம்பளத்தில் சரிபாதி.

பிள்ளைகள் பட்டினியாக இருக்கும் போதும், பாடசாலைக் கட்டணத்தைச் செலுத்த வழியில்லாமல் தவிக்கும் போதும், மழைக் காலத்தில் கூரை ஒழுகும் போதும் தினசரி பத்து காசு அட்டைகள் பிர்வா வாங்குவதைக் குறித்து மனைவி சண்டை பிடிக்கும்போது பிர்வா நப்லா “எனக்கு கோடி தங்க நாணயங்கள் கிடைத்து விட்டது என்று வைத்துக்கொள். நான் அரசனுக்குரிய சிம்மாசனத்தில் அமருகிறேன் என்று வைத்துக்கொள். நீ பகட்டான பட்டாடைகளை உடுத்திக்கொண்டு மோட்டார் காரில் பவனி வருகிறாய் என்று வைத்துக்கொள். அப்போது இந்த சண்டை சச்சரவுகளுக்கெல்லாம் நீ என்ன பதில் சொல்லுவாய்?” என்று கேட்பான். உடனே அவளுடைய வாய் ஓய்ந்துவிடும்.

பிர்வா நப்லாவின் மனைவியும் லேசுப்பட்ட ஆளல்ல. அவளுக்கு இங்கிலாந்தோடு நிறையத் தொடர்பு இருந்தது. Epsom, Ffos Las, Ludlow, William, Ladbroke Racing Post, AtTheRaces, CheHenham, Jockey, Jehannedare, Red Avenger, Bantam, Eghnaa, Miyachiku என்பன அவளுக்குப் பரிச்சயமான சில சொற்கள். அவள் ஆங்கில இலக்கணத்தைக் கரைத்துக் குடித்தவள் என்று நினைத்தால் அது தப்பு. அவளுக்கு அடித்தாலும் ஆங்கிலம் பேசவோ எழுதவோ வராது. ஆங்கில அரிச்சுவடியில் இருபத்தாறு எழுத்துக்கள் இருக்கின்றன என்ற விஷயம்கூட இதுவரை அவளுக்குத் தெரியாது. ஆனால் இங்கிலாந்து பந்தயத் திடல்களில் ஓடும் எல்லாக் குதிரைகளின் பெயர்களும் அவளுக்கு அத்துப்படி. காலை ஐந்து முப்பதுக்கே எழுந்து அருகிலுள்ள Book Makers நிலையத்திற்குப் போய் வெற்றி பெறப்போகும் குதிரைமீது பந்தயப்பணம் கட்டிவிட்டு வந்த பிறகு தான் அவளுக்குத் தொண்டையில் தேநீர் இறங்கும். அவளுக்கும் எல்லா இலக்கங்களும் ஏழில் அமைந்திருந்ததால் கணவனா மனைவியா அதிக அதிர்ஷ்டசாலி என்பதில் இருவருக்கும் போட்டி நிலவியது.

ஒரு வெள்ளிக்கிழமை மதகுரு நீண்ட நேரமாகக் கதவைத் தட்டியும் பிர்வா கதவைத் திறக்கவில்லை. கொஞ்ச நேரம் கழித்து மனைவி தான் கதவைத் திறந்தாள். பிர்வா கட்டிலில் தூங்கிக் கொண்டிருந்தான். பிர்வா நப்லாவின் நெற்றில் கைவைத்துப் பார்த்த மதகுரு அதிர்ச்சியடைந்து “ஐயோ காய்ச்சல்” என்றதும் கண்களைத் திறந்த பிர்வா “மதகுருவே, காய்ச்சல் இல்லை, கவலை” என்றான்.

“என்ன கவலை?”

“இருபத்தைந்து வருடங்களாக காசு அட்டை வாங்கியும் இன்னமும் கோடிஸ்வர மகானாக மாற முடியவில்லையே என்ற கவலைதான்” என்று பிர்வா புலம்ப பிர்வாவின் கரங்களை அன்புடன் பற்றிய மதகுரு “பிர்வா, இப்போது எதை நீ சொன்னாயோ அதே விஷயத்தைத் தான் நான் இரவு முழுவதும் யோசித்து ஒரு முடிவோடு வந்திருக்கிறேன்” என்று சொல்லியவாறே கையிலிருந்த பெரிய வரைபடத்தை அவன் முன்னால் விரித்தார்.

“இது என்ன?”

என்று பிர்வா வியப்புடன் கேட்க “பிர்வா யாருக்கும் சொல்லிவிடாதே, அடுத்த வாரம் நாங்கள் புதையல் தேடப் போகிறோம். அதற்குரிய வரைபடம் தான் இது” என்றார் மதகுரு.

“புதையலா?”

“ஆமாம். புதையலென்றால் லேசுப்பட்ட புதையல் அல்ல இது. கோடானு கோடி தங்க நாணயங்களும், வைரங்களும், நகைகளும் நம் கைக்கு வரப் போகிறது” என்றார் மதகுரு.

கவலைக் காய்ச்சல் பறந்தோட உற்சாகம் பீறிட எழுந்து உட்கார்ந்தான் பிர்வா நப்லா. இருவரும் நீண்ட நேரம் திட்டம் தயாரித்தார்கள்; மந்திராலோசனை நடத்தினார்கள்; புதையல் ஆராய்ச்சி மிகவும் இரகசியமாக இருக்க வேண்டுமென்று மதகுரு கட்டளையிட பிர்வாவும் அதனை ஏற்றுக் கொண்டான். நீண்டதூரப் பயணம் என்பதால் அதற்கேற்றவாறு பிரயாண ஏற்பாடுகளைப் செய்ய ஆரம்பித்தான் பிர்வா. பிர்வா நப்லாவின் மனைவி சுறுசுறுப்பாக ஆடியோடினாள்; பட்சணங்களைத் தயார் செய்தாள்; ஆடைகளைப் பொதிசெய்தாள்; கண்ணாடி, சீப்பு, பற்பசை, பிரஸ் இவைகளை எல்லாம் சேகரித்தாள். இருவருமாக கடைத்தெருவுக்குச் சென்று மதகுரு கொடுத்த பட்டியலில் உள்ள சாமான்களை வாங்கினார்கள்.

பூட்ஸ் இரண்டு சோடிகள், சாதாரண சப்பாத்து ஒன்று, கென்வஸ் பை ஒன்று, டோர்ட் லைட் பெரியது ஒன்று, பற்றரிகள் பத்து, நீண்ட காக்கிச் சட்டை ஐந்து, குட்டை காற்சட்டை ஐந்து, உள்ளாடைகள் ஐந்து, தொப்பி சிவப்பு ஒன்று, கறுப்பு ஒன்று, கொக்ள்ஸ் (goggles) ஒன்று, நீர்புகா கைக்கடிகாரம் ஒன்று, முகமூடிகள் இரண்டு, மப்ளர் இரண்டு, காது சுத்தமாக்கி ஒன்று, இலவம் பஞ்சுரோல் ஒன்று என்று நீண்டு கொண்டு போனது பட்டியல். கடைக்காரனுக்கு பிர்வா நப்லாவை நீண்டகாலமாகத் தெரியும். பிர்வா இப்படியான ஆடைகளை ஒரு போதும் வாங்கியது கிடையாது, சாமான்கள் வாங்கியதும் கிடையாது, அணிந்ததோ பாவித்ததோ கிடையாது. எனவே ஆச்சரியமுற்றவனாக “பிர்வா, இவற்றையெல்லாம் எதற்காக வாங்குகிறாய்?” என்று கேட்டான். ‘ஒன்றுமில்லை, வேட்டையாடப் போகிறேன். அதற்காகத் தான்’ என்று சமாளித்தான் பிர்வா.

‘வேட்டையாடுவதற்கா? உனக்கு விளையாட்டுத் துப்பாக்கியைக் கூட எப்படிப் பிடிப்பதென்று தெரியாதே. எப்படி வேட்டையாடப் போகிறாய்?’ என்று கடைக்காரன் எகத்தாளமாகக் கேட்க பிர்வா திருதிருவென்று விழித்தான்.

மதகுரு எச்சரித்திருந்ததால் வாயைத் திறக்க அவனுக்குப் பயமாக இருந்தது.

“உண்மையைச் சொல் பிர்வா, பெரிய காரியமொன்றில் நீ இறங்கப் போகிறாய் என்பதுதான் உண்மை. என்னிடம் மட்டும் சொல்லு. நான் யாரிடமும் சொல்ல மாட்டேன்” என்று சத்தியமிட்டுச் சொன்னான் கடைக்காரன்.

மனைவி சும்மா இருக்க வேண்டுமே! அவள் ஒன்றையுமே யோசிக்காமல் புதையல் வேட்டைக்குப் போகின்ற உண்மையை உடைத்துப் போட்டாள். முகம் பூரித்துப் போன கடைக்காரன் தன்னையும் புதையல் வேட்டைக்கு கூட்டிப் போகும்படி கெஞ்சினான்.

“பிர்வா, நீ வாங்கிய எந்தப் பொருளுக்கும் பணம் வேண்டாம். எல்லாவற்றையும் என்னுடைய அன்பளிப்பாக எடுத்துக்கொண்டு என்னையும் கூட்டிப்போ” என்று மன்றாட ஆரம்பித்தான் கடைக்காரன்.

பிர்வா நப்லா தடுமாறினான்.

“கடைக்காரரே, நீங்கள் பணக்காரர். உங்களுக்கு பெரிய பங்களா இருக்கிறது; ஆடம்பர கார் இருக்கிறது; மிகவும் சௌகரியமாக வாழ்கிறீர்கள். உங்களுக்கேன் வீண் வம்பு? இருப்பதையும் இழந்து ஓட்டாண்டியாகப் போகிறீர்கள்” என்றான் பிர்வா.

கடைக்காரரோ அடம்பிடித்த குழந்தை போலக் காணப்பட்டார். சாக்குப் போக்குகள் சொல்லியும் அவர் அடங்குவதாகவேயில்லை.

“பிர்வா எனது அந்தஸ்தைப் பற்றிக் கவலைப்படாதே, என்னை உனது வேலைக்காரனாக வைத்துக்கொள். எல்லா வேலைகளையும் மனங்கோணாது செய்து தருகிறேன், உன்னுடைய பூட்ஸ்களைத் துடைக்கிறேன், ஆடைகளைத் துவைத்துத் தருகிறேன், உன்னைக் குளிப்பாட்டி சோப்புப் போடுகிறேன், எது வேண்டுமானாலும் சொல்லு. நீ காலால் இட்ட வேலையை நான் என் தலையால் செய்கிறேன்” என்றார் கடைக்காரர்.

இதற்குமேல் எதைச் சொன்னாலும் கடைக்காரர் செவிமடுக்க மாட்டார் என்றபடியால் வேறுவழியின்றி கடைக்காரரையும் புதையல் வேட்டைக்குச் சேர்த்துக் கொண்டான் பிர்வா நப்லா.

பயணம் ஆரம்பமானது. பிர்வாவும் மதகுருவும் பகட்டான ஆடைகளை அணிந்து கொண்டு முன்னே நடக்க, கடைக்காரர் மூடைகளை முதுகில் சுமந்துகொண்டு தலையைத் தொங்கப் போட்டவாறே அவர்களுக்கு பின்னே நடக்கலானார். நகர பேரூந்து நிலையத்திலிருந்து அவர்களை ஏற்றிக் கொண்டு பேரூந்து புறப்பட்டது. நானூற்றி எழுபத்தெட்டு கிமீற்றர்களுக்கப்பால் காடுகள் அடர்ந்த இடமொன்றில் சாரதி பஸ்ஸை நிறுத்தி, அவர்களை இறக்கி விட்டு “நீங்கள் குறிப்பிட்ட இடம் இதுதான்” என்றான்.

மதகுரு வரைபடத்தைப் பிரித்துப் பார்த்துவிட்டு சரியென்று தலையாட்டினார். வரைபடத்தின்படி புதையல் இருக்குமிடத்தைச் சென்றடைவதற்கு தேனிமலையூடாகப் பயணம் செய்யவேண்டும். அவர்கள் நடக்க ஆரம்பித்தார்கள்.

கொஞ்சதூரம் போனதும் தேய்ந்த எழுத்துக்களில் எழுதப்பட்ட துலக்கமில்லாத பழைய பெயர்ப்பலகை ஒன்று சுருண்டுபோய், அம்புக்குறி ஆலமரமொன்றின் உச்சியைப் பார்த்துக் கொண்டிருந்தது. ஒற்றையடிப் பாதையையும் விட கொஞ்சம் அகலமான பாதை. வாகனங்கள் போகமுடியாது.

தோட்டமொன்றில் பையன் கத்தரிச் செடிகளுக்கு நீரூற்றிக் கொண்டிருக்க “தம்பி, தேனிமலைக்குச் செல்லும் பாதை இதுதானா?” என்று கேட்டான் பிர்வா நப்லா.

பையன் அவர்களை நிமிர்ந்து பார்த்து விட்டு “நீங்கள் என்ன புதையல் வேட்டைக்கா வந்திருக்கிறீர்கள்?” என்று கேட்டதும் பிர்வா கண்களில் ஆச்சரியக் குறியுடன் “எப்படியப்பா இலகுவாகக் கண்டு பிடித்தாய்?” என்று கேட்டான்.

“உங்கள் மூவரின் முகரக்கட்டையையும் பார்த்தால் யாரும் இலகுவாகக் கண்டு பிடித்து விடுவார்கள்” என்று இளக்காரமாகச் சொன்னான் பையன்.

“கோபிக்க வேண்டாம் பையனே, நாங்கள் தூரத்து ஊரிலிருந்து வருகிறோம். இரண்டு வெள்ளி நாணயங்கள் தருகிறேன். தயவு செய்து தேனீமலைக்குச் செல்லும் பாதையைக் காட்டிவிடு” என்று பணிவாகச் சொன்னார் மதகுரு.

“எங்கே, உங்கள் உள்ளங்கைகளை விரித்துக் காட்டுங்கள்” என்று பையன் கட்டளையிட ஒன்றும் புரியாதவர்களாக வேறு வழியின்றி மூவரும் உள்ளங்கைகளை விரித்துக் காட்டினார்கள்.

“நான் நினைத்தது சரியாகி விட்டது” என்று தனக்குள் தானே முணுமுணுத்துக் கொண்ட பையன் “நீங்கள் பணம் தர வேண்டியதில்லை. கத்தரிச் செடிகளுக்கு நீரூற்ற எனக்கு உதவி செய்யுங்கள்” என்று பதிலளிக்க அவர்கள் மூவரும் சரியென்று தலையாட்டினார்கள்.

அவர்களுக்கு அது புது அனுபவம். வாழ்க்கையில் எந்தச் சந்தர்ப்பத்திலும் அவர்கள் வியர்வை வரும் வரைக்கும் உடலை வருத்தி வேலை செய்தது கிடையாது. இன்று வியர்வை வடிந்து மேனி வெள்ளமானது புது அனுபவம்தான்.

“உங்கள் உள்ளங்கைகளைப் பாருங்கள். ஷோரூம் பொம்மை மாதிரி வேலையே செய்யாமலிருக்க உங்களுக்கு வெட்கமாக இல்லையா?…. பரவாயில்லை. இப்போதைக்குப் போதும். இன்னும் கொஞ்சம் உடம்பை அசைத்தீர்களென்றால் கொழுப்பு கரைந்துவிடும்” என்று சொன்ன பையன் நீரூற்றும் பணி முடிந்ததும் பாதை விளக்கத்தைச் சொன்னான்.

“நீங்கள் இரண்டரைக் கிலோமீற்றர் நடக்க வேண்டும். நீங்கள் நினைப்பதைப் போல் இது இலகுவான பாதையல்ல. சேறும் சகதியும், முட்பற்றைகளும் நிறைந்த கரடுமுரடான பாதை. பூட்ஸை மாட்டிக் கொள்ளுங்கள், நீளக் காற்சட்டையை மடித்துக் கொள்ளுங்கள், பயங்கரமான குளிர் தாக்கலாம். மப்ளரைச் சுற்றிக் கொள்ளுங்கள்” என்று பையன் உபதேசித்ததைப் போல் பாதை நடக்க முடியாதபடி கஷ்டமாகத் தான் இருந்தது. கடைக்காரரின் நிலைமையோ மிகவும் மோசமாகி அவர்களுக்குப் பின்னால் இழுபட்டுக் கொண்டு போன அவருடைய மேனியிலிருந்து முட்கள் குத்தியதால் குருதி கசிந்து கொண்டிருந்தது.

பார்த்த பார்வையிலே தேனீமலை வித்தியாசமான ஊராகத் தான் இருந்தது. வழமையாக ஊர் ஆரம்பிக்குமிடத்தில் தேநீர்க்கடை இருக்கும். கடைக்கு முன்னால் இரண்டு வாங்குகள் போடப்பட்டு வாங்குகளில் நான்கைந்து பேர் எப்போதும் சீட்டாடிக் கொண்டிருப்பார்கள். சீட்டாடாத நாட்களில் ஒருவன் பழைய தினசரியொன்றை வாசித்துக் கொண்டிருப்பான்; ஒருவன் சுருட்டு புகைத்துக் கொண்டிருப்பான்; ஒருவன் சண்டை பிடித்துக் கொண்டிருப்பான்; ஒருவன் அரட்டை அடித்துக் கொண்டிருப்பான். தேனீமலைக் கிராமத்திலும் தேநீர்க்கடை இருந்தது. ஆனால் வாங்கு இல்லை; அரட்டை அடிப்போர் இல்லை; சிறிசு முதல் கிழடுவரை ஏதோவொரு காரியத்தை செய்து கொண்டிருந்தார்கள். வீணாக சுற்றிக் கொண்டிருப்போர் எவரும் பாதையில் இல்லை. பிர்வா நப்லாவுக்கு பசி வயிற்றைப் புரட்டி எடுக்கவே தேனீர்க்கடைக்குள் நுழைந்து பகலுணவுக்கு ஓடர் கொடுத்தான்.

களைத்திருந்த மூவரும் ஆவலோடு சோற்;றைச் சாப்பிட்டார்கள். வயிறு நிறையாத படியால் பணியாளரை அழைத்து இன்னும் சோறு கொண்டு வரும்படி கட்டளையிட்டான் பிர்வா. பணியாளன் மேலதிக உணவு கொண்டுவர மறுக்கவே கோபமடைந்த பிர்வா நப்லா முகாமையாளரிடம் சென்று முறையிட்டான்.

“ஹோட்டல் சிப்பந்தி செய்த வேலையைப் பார்த்தீர்களா?”

“சொல்லுங்கள், என்ன பிரச்சனை?”

“வாடிக்கையாளர்களின் தேவைகளை அறிந்து அவர்களின் மனம் கோணாத படி கவனிப்பதுதான் ஹோட்டல் ஊழியனின் கடமை. அவனோ கடமை தவறிவிட்டான். நான் மேலதிகமாக சோறு கொண்டுவரும்படி சொல்லியும் அவன் கொண்டுவர மறுத்து விட்டான்” என்று பொரிந்தான் பிர்வா.

“அவன் அப்படி மறுத்ததில் தவறேதும் இல்லையே”

“எங்களிடம் போதியளவு பணம் இருக்கிறது”

“நீங்கள் சொல்வது நியாயம்தான் என்றாலும் தேனிமலையில் இருக்கும் சட்டம் வேறு. இங்கு நாங்கள் பணத்தை முன்னிலைப் படுத்துவதில்லை. இரைப்பையை மூன்று பகுதியாகப் பிரித்து ஒரு பகுதி நிரம்பும் அளவில்தான் சாப்பிட வேண்டும். இரண்டாவது பகுதியை தண்ணீரால் நிரப்புதல் வேண்டும். எஞ்சிய பகுதியை வெறுமையாக விட்டு விடுதல் வேண்டும். இதுதான் இங்கே நடைமுறையில் இருக்கும் நியதி”

“நீங்கள் சொல்லும் சட்டம் வினோதமாக இருக்கிறதே”

“உங்களுக்கு அது வினோதமாகத் தோன்றினாலும் உடல் ஆரோக்கியத்தைப் பேணுவதற்கு இதுதான் அவசியமான சட்டம். இந்தக் கிராமத்தில் நீங்கள் இதய வியாதியால் பீடித்த ஒருவரைக் காண மாட்டீர்கள், இரத்தஅழுத்த நோயாளியைக் காணமாட்டீர்கள்” என்றார் முகாமையாளர்.

தேனிமலைக் கிராமம் சிறிய கிராமம். முதலில் நாற்சந்தி. வலதுபுறம் பாடசாலைக்குச் செல்லும் வீதி. நேராகச் செல்லும் வீதி பறங்கிமலைத் தோட்டம் என்ற பிரதேசத்தை ஊடறுத்துச் செல்லும். கைவசமிருந்த வரைபடத்தின் படி அந்தப் பாதையால் தான் புதையலிருக்குமிடத்திற்குச் செல்ல வேண்டும். கேட்டுத் தெரிந்து கொள்ளலாமென்றால் கிராமவாசிகளிடம் கேட்பதற்கே பயமாக இருந்தது. வருவது வரட்டும் என்ற அசட்டுத் தைரியத்தில் மூவரும் பாதையால் நடக்க ஆரம்பித்தார்கள்.

வீடுகள் குறைவாக இருந்த அந்தப் பாதையில் எங்கு பார்த்தாலும் பழத் தோட்டங்களாகவே காட்சியளித்தன. பழங்கள் காய்த்துத் தொங்கின. வாழைப்பழம், மாம்பழம், பப்பாசிப்பழம், மாதுளை, தூரியம் என்று எண்ணிலடங்காக் கனிகள். கைக்கெட்டும் தூரத்தில் அவை இருந்தன. வாயூறியது. ஏற்கனவே நிரம்பாத வயிற்றில் இன்னும் பசியெடுத்தது. மூவரும் ஒருவர் முகத்தை ஒருவர் பாரத்துக் கொண்டார்கள். பின்னர் கண்ஜாடை செய்தவர்களாக தோட்டத்திற்குள் நுழைந்த அவர்கள் பழங்களைப் பறித்து ஆசைதீருமட்டும் உண்டார்கள்; களைப்பாறினார்கள்; தேவைப்படலாம் என்று இரண்டுமூன்று பைகளில் பழங்களைச் சேகரித்துக் கொண்டபோது கிழவர் வந்தார். தோட்டத்துச் சொந்தக்காரர்.

“பிள்ளைகளே, நான் பழமரங்களை நட்டேன்; நானே நீரூற்றினேன்; நானே வியர்வை சிந்தினேன். நீங்கள் இப்படிப் பழங்களைப் பறித்ததும் உண்டதும் நியாயமாகுமா?” என்று கேட்டார் கிழவர்.

ஒன்றுமே பேசாமல் ஊமையாகி விட்ட அவர்கள் தலையைக் குனிய மதகுரு வாயைத் திறந்தார்.

“பெரியவரே, நீங்கள்தான் தோட்டத்திற்குச் சொந்தக்காரர் என்று எங்களுக்கு சத்தியமாகத் தெரியாது. உண்ட பழங்களை வாந்தியெடுக்க முடியுமா? முடியாது. பறித்த பழங்களை மீண்டும் ஒட்ட முடியுமா? முடியாது. ஆகவே பெரியவரே. பழங்களுக்குக் கிரயமாக வெள்ளிக் காசுகளைத் தருகிறேன். எவ்வளவு என்று சொல்லுங்கள்” என்றார் மதகுரு.

“நீங்கள் புதையல் வேட்டைக்கா வந்திருக்கிறீர்கள்?” என்று கேட்டார் கிழவர்.

“ஆமாம்”

“எனக்கு வெள்ளிக்காசுகள் வேண்டாம். கோடரி தருகிறேன். பட்ட மரமொன்று இருக்கிறது. அதனைப் பிளந்து விறகாக்கி தந்தீர்களென்றால் எனக்குப் போதும்” என்று சொன்ன கிழவர் அவர்களுடைய பதிலுக்குக் காத்திராமல் மூன்று கோடரிகளைக் கொண்டு வந்து அவர்களின் கைகளிலே ஒப்படைக்க மூவரும் வேறு வழியின்றி மரத்தைப் பிளக்க ஆரம்பித்தார்கள்.

நடப்பதையெல்லாம் அவதானித்துக் கொண்டிருந்த ஓர் இளைஞன் அருகே வந்து “நீங்கள் எல்லாம் யார்?” என்று கேட்டான்.

“நான் பிர்வா நப்லா” என்றான் பிர்வா

“நான் மதகுரு” என்றார் மதகுரு.

“நான் வியாபாரி. இப்போது வேலைக்காரணாக இருக்கிறேன்” என்றார் வியாபாரி.

“எதற்காக வந்திருக்கிறீர்கள்?”

“தேனிமலை என்ற இந்த ஊரிலிருந்து பதினாறு கிலோமீற்றர் கிழக்காகப் போனால் புதையல் இருக்கிறதாம். அதனைத் தேடி வந்திருக்கிறோம்”

“நான் நெடு நேரமாக உங்களை அவதானித்துக் கொண்டுதான் வருகிறேன். நீங்கள் படும் கஷ்டங்களைப் பார்க்க பரிதாபமாக இருக்கிறது. நான் என் தந்தையிடம் உங்களை அழைத்துச் செல்லுகிறேன். புதையல் பற்றிய எல்லா விபரங்களையும் அவர் விலாவாரியாக உங்களுக்கு சொல்லித் தருவார்” என்றான் இளைஞன்.

“இந்தக் கிராம மக்களுக்கு புதையலைப் பற்றிய இரகசியங்கள் தெரியுமா?”

“எல்லோருக்கும் தெரியும்”

“அப்படியானால் புதையலைத் தேடிச்செல்லாமல் ஏன் இப்படி சோம்பேறிகளாக இருக்கின்றார்கள்?”

“இந்தக் கிராமத்துக்கு தேனீமலை என்ற பெயர் வந்தது எப்படியென்று தெரியுமா?”

“தெரியாது, எப்படி?”

“இந்தக்கிராமத்து மக்கள் தேனீக்களைப் போல் எப்போதும் சுறுசுறுப்பாக இருப்பார்கள். நீங்கள் நினைப்பது போல் அவர்கள் சோம்பேறிகள் அல்லர். அதிர்ஷ்டத்தை நம்பாமல் வியர்வை சிந்தும் தங்கள் தேகத்தை நம்புபவர்கள்” என்று காட்டமாகப் பதிலளித்தான் இளைஞன்.

இளைஞனின் தந்தை ஒரு மருத்துவர். பெயர் ரெட்டிராய். அவர் மருத்துவ நிலையம் நடத்தி வந்தார். பழைய கட்டடமொன்றிலே அது இயங்கி வந்தது. கட்டடத்திற்குள் நுழைந்ததுமே ஒரு புகைப்படத்தின் மேலே மூவரின் பார்வையும் விழுந்தது. ஆளுயர புகைப்படம். படத்திலே டாக்டர் ரெட்டிராய் நிற்கிறார். அவருக்குப் பக்கத்திலே கதிரையிலே எலும்புக்கூடு அமர்ந்திருக்கிறது. என்ன வினோதமான புகைப்படம்! பிர்வா அதனை ஆராய்ந்து கொண்டிருக்கும் போதே டாக்டர் ரெட்டிராய் வர இளைஞன் அவர்களுக்கு தந்தையை அறிமுகப்படுத்தி வைத்தான்.

“டாக்டர், சுவரிலே மாட்டி வைத்திருக்கும் புகைப்படம் வினோதமாக இருக்கிறது. உங்களோடு அமர்ந்திருக்கும் எலும்புக்கூடு யாருடையது?” என்று கேட்டார் மதகுரு.

டாக்டர் ரெட்டிராய் சிரித்தார்.

“புகைப்படத்திற்குக் கீழே தரப்பட்டுள்ள புகைப்பட விளக்கத்தைப் பார்க்கவில்லையா?”

“இல்லை”

“அந்த எலும்புக்கூடு இறப்பதற்கு முன் பேசிய வசனங்களை வாசித்துப் பாருங்கள்”

“என்னுடைய முடிவு புதையலைத் தேடிவரும் ஒவ்வொரு ஆணுக்கும் பெண்ணுக்கும் பாடமாக அமையட்டும். நான் மரணித்தவுடன் என்னைப் புகைப்படமெடுத்து சுவரிலே மாட்டி வையுங்கள். இங்கே வரக்கூடியவர்கள் அதிலிருந்து படிப்பினை பெறட்டும்” என்று வாசித்தான் பிர்வா.

“டாக்டர் நீங்கள் சொல்லும் இந்த விஷயம் ஒரு கட்டுக்கதை. ஏதோ நீங்கள் நாடகமொன்றிலே நடித்த காட்சியைப் புகைப்படமாக எடுத்து எங்களை ஏமாற்றுகிறீர்கள்” என்றார் மதகுரு.

டாக்டர் அவர்களை வேறொரு விசாலமான மண்டபத்திற்கு அழைத்துச் செல்ல அங்கே ஏற்கனவே இருந்ததைப்போல் நூற்றுக்கணக்கான புகைப்படங்கள் இருந்தன. ஒவ்வொரு எலும்புக்கூட்டுடனும் டாக்டர் ரெட்டிராய் இருக்கும் புகைப்படங்கள். ஒவ்வொரு படத்திற்கும் கீழே அதேமாதிரியான வசனங்கள்.

“இத்தனை பேரும் உங்களைப் போல் புதையல் தேடி வந்தவர்கள் தான். நான் எவ்வளவோ எடுத்துச் சொல்லியும் எதையுமே அவர்கள் காதில் போட்டுக் கொள்ளவேயில்லை. ஐயோ பாவம்! கடைசியில் ஊருக்குத் திரும்பிச் செல்லாமல் இங்கேயே சமாதியாகி விட்டார்கள்” என்று டாக்டர் ரெட்டிராய் சூழ்கொட்ட மூவரும் டாக்டரை ஏளனத்தோடு பார்த்தார்கள்.

“டாக்டர் நீங்கள் கவலைப்பட வேண்டாம். நாங்கள் அவர்களைப் போல் கோழைகள் அல்லர், பலசாலிகள். எதற்கும் தயாராக வந்திருக்கிறோம். நீங்கள் விவரங்ளைச் சொன்னால் போதும், கோடி தங்க நாணயங்களோடு நாங்கள் திரும்பிப் போவதை நீங்கள் பார்க்கத்தான் போகிறீர்கள்” என்றான் பிர்வா நப்லர.

“நீங்கள் முடிவுடன் தான் வந்திருக்கிறீர்கள். புதையல் இருக்குமிடத்தைக் கண்டுபிடிப்பது ஒன்றும் கஷ்டமான விஷயமல்ல. ஆனால் ஒரு நிபந்தனை. ஒரு நேரத்தில் ஒருவர் மட்டுமே அங்கே போகலாம். யார் போகப் போகிறீர்கள்?” என்று கேட்டார் டாக்டர்.

“நான்.. நான்.. நான்..” என்று மூவரும் ஒரே நேரத்தில் கூவினார்கள்.

“டாக்டர் சொல்வதைப் பார்க்கும் போது போனவர்கள் எல்லோரும் உயிரற்ற ஜடமாக அல்லது குற்றுயிராகத்தான் திரும்பி வந்திருக்கிறார்கள். அதற்குக் காரணம் எனக்குத் தெரியும். அங்கு பிசாசுகளின் தொல்லை இருக்கிறது. பிசாசுகளை விரட்ட எனக்கு மட்டுமே தெரியும். ஆகவே நான் போவதுதான் நல்லது” என்றார் மதகுரு.

வியாபாரி விருட்டென்று எழுந்தார். “மதகுருவே, நீங்கள் இப்படிப் பேசுவது நல்லதல்ல. இந்தப் புதையல் வேட்டைக்காக நான் எல்லாவற்றையும் இழந்து விட்டு வந்திருக்கிறேன். இங்கே வந்து உங்களுக்குப் பின்னால் நாயாய் பேயாய் அலைகிறேன். ஆகவே எனக்குத்தான் முன்னுரிமை வழங்க வேண்டும்” என்றார் வியாபாரி உரத்த தொனியில்.

பிர்வா நப்லா தன்பாட்டுக்கு வாயைத் திறந்தான்.

“இருவரும் பேசி முடித்து விட்டீர்களா? என்னுடைய பெயர், பிறந்த திகதியுடன் கூட்டுத்தொகை எல்லாவற்றையும் சுத்தமாக மறந்து விட்டீர்களா? எனக்குத்தான் அதிர்ஷ்ட இலக்கம் இருக்கிறது. நான் போனால் தான் புதையல் கைக்குக் கிடைக்கும். நான் போய் எடுத்துக் கொண்டு வருகிறேன். மூவரும் பிரித்துக் கொள்ளலாம்” என்றான் அவன். மூவரும் மாறிமாறி தங்களுக்குள் தர்க்கிக்க நிலைமை முற்றி கைகலப்பு ஏற்படுமளவுக்கு களேபரம் அங்கு உண்டாகிற்று.

நிலைமை விபரீதமடைந்து கொண்டு செல்வதை அவதானித்த டாக்டர் ரெட்டிராய் “நிறுத்துங்கள்” என்று சப்தமிட்டு “இது நோயாளிகள் வருமிடம். உங்கள் சண்டையை வேறெங்காவது வைத்துக் கொள்ளுங்கள். நான் வழி சொல்கிறேன். திருவுளச்சீட்டு போட்டுப் பார்ப்போம். யாருடைய பெயர் வருகிறதோ அவர் புதையலை எடுக்கச் செல்லட்டும்” என்று தீர்ப்பளித்தார்.

அது நல்ல முடிவாகத் தெரியவே அவர்களும் அதற்குச் சம்மதிக்க டாக்டர் மூன்று வெள்ளைக் கடதாசித் துண்டுகளிலே மூவரின் பெயரையும் தனித்தனயே எழுதி மடித்தபின் அங்கிருந்த சிறுமியைக் கூப்பிட்டு துண்டொன்றை எழுமாறாக எடுக்கச் சொன்னார். இந்த ஓரிரண்டு நிமிடங்களுக்கிடையில் பிர்வா நப்லா, மதகுரு, வியாபாரி ஆகிய மூவரும் வானத்தை அண்ணாந்து பார்த்து கடவுளை நூறு தடவையாவது கூப்பிட்டார்கள். பிர்வா நப்லாவின் பெயர் விழுந்திருக்கிறது என்று டாக்டர் அறிவித்ததும் பிர்வாவின் முகம் பிரகாசத்துடன் ஒளிர்ந்தது. சிறு பிள்ளையைப் போல் துள்ளிக் குதிக்க ஆரம்பித்தhன் பிர்வா. மற்ற இருவரின் முகங்களைப் பார்க்க வேண்டுமே! இஞ்சி தின்ற குரங்கு போல் அவர்கள் இருந்தார்கள்.

பிர்வாவை தனியறையொன்றுக்குள் அழைத்துச் சென்று வரைபடங்களை ஒப்படைத்து புதையலை எப்படி எடுக்கவேண்டும் என்ற விபரங்களை விலாவாரியாக எடுத்துச் சொன்னார் டாக்டர். பிர்வா நப்லா புதுமாப்பிள்ளை தேனிலவுக்குச் செல்வதைப் போல் அங்கிருந்து புறப்பட்டுச் சென்றான். அன்றிரவு மதகுருவுக்கும் வியாபாரிக்கும் தூக்கம் வரவேயில்லை. பிர்வா தங்களுக்குத் தெரியாமல் புதையலையும் எடுத்துக் கொண்டு கம்பிநீட்டி விடுவானோ என்ற பயம் காரணமாக இருவரும் விடியும்வரை கொட்டக் கொட்ட விழித்திருந்தார்கள்.

காலைக் கடன்களை முடித்துவிட்டு வெளியே வந்த மதகுருவும் வியாபாரியும் டாக்டரின் மருத்துவ நிலையத்தை நோக்கி வெண்ணிற ஆடை அணிந்த கிராம மக்கள் சாரிசாரியாக வந்து கொண்டிருக்கும் அதிசயத்தைக் கண்டார்கள். அவர்களின் முகங்களிலே அளவிட முடியாச் சோகம் அப்பிக் கிடந்தது. டாக்டர் சுறுசுறுப்பாக அங்குமிங்கும் ஓடியாடி இயங்கிக் கொண்டிருந்தார்.

“டாக்டர் உங்கள் உறவினர்கள் யாரும் இறந்து விட்டார்களா?” என்று கேட்டார் மதகுரு.

“மதகுரு அவர்களே, நான் சொல்வது உங்களுக்குப் புரியாது. எப்படிச் சொன்னாலும் புரியாது. புதையல் எடுக்கப் போனவர்கள் எவரும் உயிரோடு திரும்பியது கிடையாது. இப்போது உங்கள் நண்பர் குற்றுயிரும் குலையுயிருமாக திரும்பி வரும் நேரம். அவருடைய மரணச் சடங்கில் கலந்து கொள்ளத்தான் கிராமமக்கள் வந்து கொண்டிருக்கிறார்கள்” என்றார் டாக்டர் ரெட்டிராய் கோபத்துடன்.

அப்படிச் சொல்லிக் கொண்டிருக்கும் போதே தள்ளாடித் தள்ளாடி வந்து சேர்ந்தான் பிர்வா நப்லா. நாக்கு உலர்ந்து ஒட்டிப்போயிருந்தது; உதடுகள் வீங்கிப் புடைந்திருந்தன; அவனால் பேசமுடியவில்லை; மேனி; திட்டுத்திட்டாக உரிந்து இரத்தம் கசிந்து கொண்டிருந்தது; சதைகள் பிய்ந்து தொங்கின; எலும்புகள் வெளியே தெரிந்தன.

பிர்வா கடதாசியொன்றையும் பேனையையும் கொண்டு வரும்படி சைகை காட்டினான். மிகவும் சிரமப்பட்டு கடதாசியில் ஏதேதோ எழுதி டாக்டரிடம் நீட்டினான். டாக்டர் அதனை வாங்கி எல்லோரும் கேட்கக் கூடியதாக வாசித்தார்.

‘அன்புள்ள டாக்டருக்கு, உங்கள் உபதேசத்தை அலட்சியம் செய்தமைக்கு என்னை மன்னியுங்கள். தயவுசெய்து என்னோடு சேர்ந்து புகைப்படமெடுத்து சுவரிலே தொங்கவிடுங்கள். என்னுடைய புதையல் பேராசையின் விபரீதம் எல்லோருக்கும் ஒரு பாடமாக அமையட்டும்’

பிர்வா கேட்டுக் கொண்டபடி கதிரையிலே அவனை அமரவைத்து அருகில் நின்றுகொண்டார் டாக்டர் ரொட்டிராய். தயாராக இருந்த கெமராமேன் புகைப்படமொன்றை எடுத்ததும் பிர்வாவின் உயிர் பிரிந்தது.

பிர்வா நப்லாவின் மரணச்சடங்கில் ஊர்மக்கள் எல்லோரும் கலந்து கொண்டார்கள். டாக்டர் ரெட்டிராய் புகைப்படத்தைப் பிரேம் பண்ணி சுவரிலே தொங்கவிட்டார். எல்லாக் காரியங்களும் முடிந்து கிராமமக்கள் புறப்பட்டுச் சென்றபின் மதகுருவும் வியாபாரியும் டாக்டர் ரெட்டிராயின் அருகே வந்தார்கள்.

மதகுரு சொன்னார், “டாக்டர் மீண்டும் சச்சரவில் ஈடுபட நாங்கள் விரும்பவில்லை. நாங்கள் உங்களைப் பரிபூரணமாக நம்புகிறோம். நீங்களே எங்கள் பெயரை எழுதுங்கள்; நீங்களே திருவுளச்சீட்டைப் போடுங்கள்; நீங்களே ஒரு பெயரைத் தெரிவு செய்யுங்கள். அது யாராயிருந்தாலும் பரவாயில்லை”

டாக்டர் ரெட்டிராய் ஒன்றுமே பேசவில்லை. அவர் திருவுளச்சீட்டைப் போட்டு துண்டை எடுக்க மதகுருவின் பெயர் வந்தது. மதகுரு சகல ஆயத்தங்களோடும் வரைபடத்தோடும் புதையல் வேட்டைக்குப் புறப்பட்டார்.

– இக்கதை சொர்க்கபுரிச் சங்கதி என்ற தொகுதியிலிருந்து எடுக்கப்பட்டது.

Print Friendly, PDF & Email

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *