…எனவே, இந்தக்கதை முடியவில்லை

0
கதையாசிரியர்:
தின/வார இதழ்: விகடன்
கதைத்தொகுப்பு: கிரைம்
கதைப்பதிவு: September 23, 2012
பார்வையிட்டோர்: 11,574 
 
 

காலை மெரீனா மிகவும் உற்சாகமாக இருந்தது. ப்ளூ டூத் அணிந்த தொப்பையர்களும் வழுக்கையர்களும் மெதுவாக ஊர்ந்து கொண்டிருந்தார்கள். வளப்பமான பெண்கள் தங்கள் கணவருடனோ அல்லது சடை நாயுடனோ வாக்கிக் கொண்டிருந்தார்கள். அர்த்தமில்லாமல் ஒரு கூட்டம் உரக்க சிரித்துக் கொண்டிருந்தது. பழுப்பு நிற சூரிய கிரணங்கள் அம்புகளாய் இறங்க ஆரம்பிக்க, வியர்க்க தொடங்கி விட்டது.

அவ்வளவுதான்! என் வாங்கிங் முடிந்து விட்டது. எனது காரை நோக்கி விரைந்து கொண்டிருந்தேன். அப்போதுதான் அவனை கவனித்தேன். என்னை தொடர்ந்து வந்து கொண்டிருந்தான், நிழல் மாதிரி.

“சார்! போட்டோஸ் பார்க்கறீங்களா?”

மெரீனாவில் இது போன்ற தொந்திரவுகள் நிறைய உண்டு. வேண்டாம் என்றாலும் விடமாட்டார்கள். அவனை ஒதுக்கி, எனது காரை பார்க்கிங் ஸ்லாட்டிலிருந்து ரிவர்ஸ் எடுத்தபோதுதான் அவன் டோன் மாறியது.

“ரமேஷ் சார். உங்க போட்டோஸ்தான் பார்க்கறீங்களா?”

விருட்டென நிமிர்ந்தேன். கார் கண்ணாடியில் ஒரு சாம்பிள் போட்டோவை ஒட்டிய மாதிரி எனக்கு மட்டும் காட்டினான். வெலவெலத்து போனேன். நானும், நம்ருதாவும் தப்பு காரியம் செய்து கொண்டிருந்தோம். இது எப்படி இவனிடம்? யார் எடுத்தார்கள்? எப்படி எடுத்தார்கள்? சுறுசுறுவென வெப்பம் தலைக்கேறியது. ஸ்டியரிங்கிலிருந்த கை நழுவியது.

“டேய்! யார் நீ? ஏது இந்த போட்டோஸ்?” படீரென வெளியே வந்தேன்.

“கூல் டவுன் சார். கூல் டவுன். கொஞ்சம் அப்படி ஒதுக்குபுறமா போய் பிசினெஸ் பேசுவோமா?”

என்னை ஆபத்து சூழ்கிறது. பிளாக் மெயில் செய்கிறான். பொறுக்கி! சட்டையை பிடிக்கப் போனேன். வேண்டாம்! மக்கள் அங்கும் இங்குமாக போய் கொண்டிருக்கிறார்கள்.

காரை வேகமாக ரிவர்ஸ் எடுத்து லைட் ஹவுஸ் தாண்டி ஒரு அமைதியான இடத்தில் நிறுத்தினேன். அதற்குள் அவன் கையில் ரம்மி விளையாடுவது மாதிரி போட்டோக்களை விசிறியாக்கியிருந்தான். அவன் கையிலிருந்து அனைத்தையும் பிடுங்கினேன். சரக் சரக்கென ஒவ்வொன்றாக பார்த்தேன். எல்லாம் அசிங்கமோ அசிங்கம். நம்ருதா தன் காது, மூக்கு, தொப்புள் வளையங்களைத் தவிர வேறு எதுவும் அணிந்திருக்கவில்லை. அதில் வெட்கமும் இல்லை. நானும் முழுக்க உரிக்கப்பட்டிருந்தேன். பிளடி பிட்ச்! ஆசை காட்டி லைட் போட்டு ஏமாற்றியிருக்கிறாள். ஒரு கூட்டமாக செயல்பட்டு என்னை பொறி வைத்து மாட்ட வைத்திருக்கிறாள். போட்டோக்களை அவன் முகத்தில் விசிறியடித்தேன். கிட்டத்தட்ட ஒரு எலி மாதிரிதான் என்னால் முழிக்க முடிந்தது. அவமானத்திலும் வெறுப்பிலும் மூச்சுக்காற்று தாறுமாறானது. நெஞ்சை அடைத்தது.

“மிஸ்டர் ரமேஷ். ஆர்.எல்.எம்.இன்டஸ்ட்ரீஸ் குழுமத்தின் தலைவர். இளம் தொழிலதிபர். வயசு நாற்பது. சொத்து மதிப்பு ஐநூறு கோடி இருக்கலாம். சமூகத்தில் ரொம்ப நல்ல பெயர். ஆனால் கொஞ்ச சபல புத்தி. ரகசியமாக சில தப்புகள் அடிக்கடி செய்வார். அது தெரியாமல் இருக்க என்ன விலை வேண்டுமானலும் தருவார். வீடியோவும் இருக்கு, ரமேஷ் சார். பார்க்கறீங்களா?”

“ராஸ்கல். என்ன திமிரு இருந்தா என் பேர் சொல்லி கூப்பிடுவே?”. கையை ஓங்கினேன். அது இயலாமையில் அப்படியே நின்றது. அவன் கொஞ்சமும் கவலைப்படவில்லை. நிதானமாக போட்டோக்களை பொறுக்கிக் கொண்டிருந்தான்..

“எனக்கு அர்ஜெண்டா இருபது லட்சம் வேணும். அதுவும் நாளைக்குள்ளே. எங்கே வரட்டும்” என்றான். அவன் சிரித்தபோது பல்வரிசை வாழைப்பூவை ஞாபகப்படுத்தியது.

என்னால் ஆரம்ப ஷாக்கிலிருந்தே வெளிவர முடியவில்லை. பத்தே நிமிஷ சபலம் எப்படி கொண்டுபோய் விட்டிருக்கிறது? என்னை நானே நொந்து கொண்டேன். வெறுப்பில் ஸ்டியரிங்கை குத்தினேன். “போடா. என்ன மிரட்டரயா? நீ யார் கிட்டே வேணுமின்னாலும் காட்டிக்க. நான் ஒரு பைசா கூட தர முடியாது?

“ரொம்ப உணர்ச்சிவசப்படாதீங்க. உடம்புக்கு ஆகாது. நான் வரேன் சார். நாளைக்கு ஹோட்டல் ப்ரசிடெண்ட்ல எட்டு மணிக்கு சந்திக்கிறோம். அடுத்த ரவுண்டு பேச்சு வார்த்தை நடத்தறோம். மொதல்ல ஒண்ணு புரிஞ்சுக்குங்க. போலீசுக்கு போனீங்க, அப்பறம் நடக்கறதே வேற. ஜாக்கிரதை. வர்ட்டா”

போய்விட்டான். அவன் போவதையே பார்த்துக் கொண்டிருந்தேன். பிளாட்பாரத்தில் காரை ஏற்றி அவனை கொன்று விடலாமா என்று கூட தோன்றியது. அது முடியாது என்றே பட்டது. அவன் காற்றில் கரைந்து போய் விட்டான்.

‘ரமேஷ். நான் உன்னை நினைத்து வெட்கப்படுகிறேன். ச்சீ! நீ இவ்வளவு கேவலமானவனா நீ” இது அனிதா. “உன்னை அப்பான்னு சொல்லிக்கவே பிடிக்கலே.” இது ப்ரீதி. ‘இளம் தொழிலதிபரின் காம லீலைகள்’ பத்திரிக்கைகளில் பரபரப்பு செய்திகள்.

அடுத்து என்ன செய்யலாம் என்று யோசித்தேன். இருபது லட்சமென்ன, ஒரு கோடி கொடுத்தாலும், அவன் கேட்டுக் கொண்டே இருப்பான். என்னால் நிம்மதியாக இருக்கமுடியாது. ஆனால் போலீஸ் வேண்டாம். திடீரென கிரீஷ் ஞாபகம் வந்தது. டாஷ் போர்டில் குடாய்ந்ததில் அவன் கார்டு கிடைத்தது. சென்னை ப்ரைவேட் போலீஸ்!

“கிரீஷ். ஐயாம் இன் ட்ரபுள்” எல்லா விவரங்களையும் சொன்னேன்.

“குட். நீ நேரடியாக என் அலுவலகத்துக்கு வராமல் செல்லில் பேசினாயே அதுவே ஒரு புத்திசாலித்தனம். இனி உன்னோட ஒவ்வொரு அசைவையும் அந்த கூட்டம் கவனிக்கும். அதனால ஜாக்கிரதை. இன்னிக்கு பதினொரு மணிக்கு உன் கம்பெனிக்கு வாட்டர் கூலர் விற்கும் மார்கெடிங் ஆசாமி மாதிரி என் ஸ்டாப் ரெண்டு பேர் வருவாங்க. அவங்க அடிப்படை தகவல்கள் சேகரிப்பாங்க. நீ கவலைப்படாதே. கோழியை அமுக்குவது மாதிரி எல்லாரையும் அமுக்கிடறேன்.”

கிரீஷ் சொன்ன மாதிரியே இருவர் வந்தனர். வாய்ஸ் ரெக்கார்டரில் ஆதி முதல் அந்தம் வரை எல்லா விஷயங்களையும் துருவித் துருவி கேட்டனர். நம்ருதா சம்பந்தப்பட்ட எல்லா குப்பைகளையும் கேட்டு வாங்கிக் கொண்டனர்.

“சார். எங்கள் வேலை முடிஞ்சிடுச்சு. எங்கள் தலைவர்கிட்டேயிருந்து அடுத்த கட்ட நடவடிக்கைகளுக்கான விவரங்கள் உங்களுக்கு வரும். மனசுல நோட் பண்ணிக்குங்க, இந்த கேஸின் ரகசிய சங்கேத வார்த்தை ‘ரமேஷ் சிவலிங்கம் 45’ அதாவது ‘ஆர்.எஸ்.45’. நாங்கள் வர்றோம்.”

ஐந்து மணிக்கு கிரீஷ் போன் செய்தான். “ரமேஷ் நாளைக்கு அந்த ஆளை சந்திக்கப் போ. சும்மா இரண்டு லட்சம் கொடு. இன்னும் டைம் வாங்கு. தைரியமாக எதிர் கேள்விகள் கேள். நீ எந்த டேபிளில் உட்காருகிறாயோ, அந்த டேபிளுக்கான சர்வர்களாக எங்கள் ஸ்டாப் இருப்பார்கள். ரகசியமாக போட்டோக்கள் எடுப்பார்கள். இன்னும் அரை மணியில் உனக்கு ஒரு கூரியர் வரும். அதில் ஒரு மோதிரம் மாதிரி ஒன்று இருக்கும். அதை உன் கையில் போட்டுக்கொள். அது பவர்·புல் மைக்ரோ போன். பார்த்தால் அப்படி தெரியாது. கார் பார்கிங்கிலிருந்து எங்கள் ஆட்கள் உன் பேச்சு அனைத்தையும் ரிகார்ட் செய்வார்கள்.”

“கிரீஷ்! எந்த சிக்கலும் இல்லாமல் விஷயத்தை முடித்துவிடுவாய் அல்லவா. எனக்கு பயமாயிருக்கிறது. பணம் பெரிதில்லை. ஆனால்….?’

“நான் எதிர்பார்த்ததை விட அவர்களின் நெட்வொர்க் கொஞ்சம் சிறியதுதான் என்று நினைக்கிறேன். அவர்களை ரவுண்டு கட்டி பிடிப்பதை விட அவர்கள் பிளாக் மெயில் செய்கிறார்கள் என்பதற்கான ஆவனங்களை தயார் செய்ய வேண்டும். அப்போதுதான் போலீஸ் எங்களை நம்பும். சினிமா மாதிரி அதிரடியாக செய்துவிடலாம் என்று நினைக்காதே. எங்களுக்கு பல சட்ட சிக்கல்கள் இருக்கின்றன.”

மறுநாள் எட்டு மணிக்கெல்லாம் நான் அங்கே போய்விட்டேன். ஆனால் அவன் அரை மணி கழித்துதான் வந்தான். கொடுத்த இரண்டு லட்சத்தை முகத்திலடித்தான். நான் அசரவில்லை. ‘சிங்கிள் பேமெண்ட். எவ்வளவு வேண்டுமானலும் சொல்’ என்றேன். ஒரு கோடி கேட்டான். ஒரு வாரம் டைம் கேட்டேன். ‘அதன் பிறகும் உன் தொந்திரவுகள் தொடர்ந்தால் என் நடவடிக்கைகள் வேறு விதமாக இருக்கும்’ என்று மிரட்டினேன். முனகிக் கொண்டே போனான்.

மூன்றே நாட்களில் ஒரு மாலை வேளையில் கிரீஷிடமிருந்து தகவல் வந்தது. “ஆர்.எஸ்.45 சக்ஸஸ். உடனே என் அலுவலகத்து வருகிறாயா?” என்றான். போனேன்.

“ரமேஷ். பார்ட்டி இந்த வேலைக்கு கொஞ்சம் புதுசு. மாமா வேலையிலிருந்து இப்போதுதான் பிளாக் மெயிலுக்கு வந்திருக்கிறான். உன்னை அவன் சந்தித்த அன்றைய தினமே அவன் செல் போனையும் பர்ஸையும் ஆள் வைத்து அடித்து பிடுங்கினோம். அதன் மூலம் அவன் கூட்டத்தினரின் யார்? எங்கே இருக்கிறார்கள் என்ற விவரங்கள் செல் கம்பனிகள் மூலமாக கிடைத்தது. கிரெடிட் கார்டுகள், வங்கிக் கணக்குகள் எல்லாவற்றையும் அசுர வேகத்தில் முடக்கினோம். போதுமான விவரங்கள் கிடைத்ததும், பைல் தயார் செய்து, போலீஸ் உதவியுடன் ஒவ்வொருவராக அமுக்கிவிட்டோம். அவர்கள் மேல் ஏற்கனவே பல கிரிமினல் வழக்குகள் இருந்ததால் அவர்களை பிடிக்க நாங்கள் போலீசுக்கு உதவிய மாதிரி ஆகிவிட்டது. ஸ்டில் காமிரா, மூவி காமிரா, கம்ப்யூட்டர், ஹார்ட் டிஸ்க், சிடி, பென் டிரைவ் என்று சகலத்தையும் அள்ளிக் கொண்டு வந்துவிட்டேன். எல்லாம் பிடுங்கப்பட்டதும் அவன் குதியாய் குதித்தான். போலீஸ் அனுமதியுடன் மூஞ்சியில் ஒரு குத்து விட்டேன்.”

“ரொம்ப தாங்கஸ் கிரீஷ். நான் ஒழிந்தேன் என்று நினைத்தேன். நீதான் காப்பாற்றியிருக்கிறாய். என்ன வேண்டும் என்று சொல். தருகிறேன்.”

“இந்த நாலு நாட்களில் எக்கசக்கமாக என் ஆட்கள் உழைத்திருக்கிறார்கள். ஒரு பெரிய அமௌண்டுக்கு எங்கள் கம்பனியின் சின்ன பில் வரும். செட்டில் செய்துவிடு. இது பார்ட் ஒன்”

“என்ன பார்ட் ஒன்னா?”

“ஆமாம். பார்ட் டூ. உன்னோடு இன்னொரு முக்கியமான விஷயம் பேசணுமே” என்றான் நமுட்டு சிரிப்புடன்.

நான் அதிர்ந்து போனேன். “டேய்! நீ…. நீ….”

“முட்டாளே. பதறாதே. நான் உன்னிடம் நிதி கேட்கப்போவதில்லை. நீதி சொல்லப்போகிறேன். கையில் கோடிக்கணக்கில் காசு புரண்டால் என்ன வேண்டுமானாலும் செய்யலாம் என்று நினைக்காதே. கொஞ்சம் நிதானமாக இரு. ஒழுங்காக வாழு.”

“அப்படியே ஆகட்டும் என் குருவே” ஜப்பானிய ஸ்டைலில் குனிந்து கிரீஷ¤க்கு வணக்கம் தெரிவித்தேன்.

பின் குறிப்பு:

இந்த கதை இத்துடன் முடிவடையவில்லை. சென்னை ப்ரைவேட் போலீஸ் அந்த பிளாக் மெயில் ஆசாமியை சுற்றி வளைப்பதற்கு முன்னால், அவன் தஞ்சாவூர் மாவட்டம் பட்டீஸ்வரம் கிராமத்தில் இருக்கும் தன் நண்பனுக்கு ‘ஜாக்கிரதையாக பத்திரப்படுத்து’ என்ற குறிப்புடன் ஒரு சின்ன பார்சல் அனுப்பியிருந்தான். அதற்குள்ளே இருந்த சிடியில் ரமேஷ¤ம், நம்ருதாவும் தப்பு காரியம் செய்து கொண்டிருந்தார்கள்.

புதிய நீதி – எந்த குற்றத்தையும் முழுமையாக அழிக்க முடியாது. எனவே இந்தக் கதை இன்னும் முடிவடையவில்லை.

– 16 ஜூலை 2008

Print Friendly, PDF & Email

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *