கதையாசிரியர்:
கதைத்தொகுப்பு: கிரைம்  
கதைப்பதிவு: March 12, 2017
பார்வையிட்டோர்: 23,202 
 
 

இரண்டு கான்ஸ்டபில்கள் யாரையும் கிட்ட நெருங்க விடாமல் தடுத்துக்கொண்டிருந்தனர். ஒருபக்க சுவரிற்குப்பக்கத்திலே இரத்தக்கறையுடன் கிடந்தது கத்தி. வரவேற்பறையின் நடுவிலே கிடந்தது பிணம்.

அங்கே புதினம் பார்க்க வந்திருந்த சில பக்கத்துவீட்டினர் மார்பில் அடித்தபடி அழுதுகொண்டிருந்த விஷ்னுவை பிணத்துக்குப்பக்கத்தில் போக விடாமல் பிடித்துக்கொண்டனர் .

விஷ்னு நல்லையாவின் தங்கை பையன். நல்லையாதான் அங்கே பிணமாகக்கிடக்கின்றார்.

நல்லையா ஒரு பிரமச்சாரி. பெளதிகவியல் பேராசிரியராக இருந்து ஓய்வுபெற்றவர். ஏராளமான சொத்துக்குச் சொந்தக்காரர். தங்கை மகனான விஷ்னுவை தன் மகனைப்போல வளர்த்துவந்தார்.

விஷ்னுவும் சின்னவயதில் இருந்தே நல்லையாவோடு கிட்டத்தட்ட அப்பாவோடு பழகுவது போலதான் பழகுவான். நல்லையாவின் கடைசிக்காலத்தில் அவரது தனிமையப்போக்கியது விஷ்னுவும் அவனது குழந்தைகளும் தான்.

விஷ்னு வேலை நிமித்தம் மட்டக்களப்பு நகரிலே செட்டிலாகிவிட்டான். எவ்வளவு சொல்லியும் கேளாமல் ஊரிலேயே குடியிருந்துவிட்டார் நல்லையா. தாழங்குடாவில் இருக்கும் ஐம்பது ஏக்கர் தென்னம் தோப்பை கவனித்துக்கொள்வதுதான் இப்போதைய அவரின் வேலை. இது தவிர இன்னும் பல ஏக்கர் நெல் காணியும் இருக்கு. எல்லாம் அவர் கஷ்டப்பட்டுச் சேர்த்தது. தான் உயிரோடு இருக்கும் வரைக்கும் தான் கஷ்டப்பட்டுச் சேர்த்த மண்ணில் ஒரு கைபிடியைக்கூட விற்கக்கூடாது என்று உறுதியாக இருந்தார். மண்மேல் அவ்வளவு பாசம். அந்தப் பாசத்தால்தான் ஊரில் ஒண்டிக்கட்டையாகக் கிடந்தார். அவர் வீட்டோடு சேர்த்து சிறிய ஆய்வுகூடமும், வகுப்பறையும் வைத்திருக்கின்றார் அதில் ஓய்வு நேரத்தில் மாணவர்களுக்கு இலவசமாகம் பாடம் சொல்லிக்கொடுப்பதுமுண்டு

விஷ்னு டவுனில் இருந்தாலும் நேரம் கிடைக்கும் போதெல்லாம் பிள்ளைகளோடு நல்லையாவின் வீட்டுக்கு வந்து தங்கிவிட்டுத்தான் போவான். அன்று சனிக்கிழமை வேலை இல்லாததால் காலையிலேயே நல்லையா வீட்டுக்கு பிள்ளைகளோடு வந்திருந்தான்.

கதவு திறந்தே கிடந்தது.

உள்ளே போனவனுக்கு அதிர்ச்சி…!

ஹோலின் நடுவிலே இரத்த வெள்ளத்தில் கிடந்தார் நல்லையா. இரத்தம் உறைந்திருந்தது.

அநேகமாக முதல் நாள் இரவே கொலை செய்யப்பட்டிருக்க வேண்டும்.

…………………………………………

இன்ஸ்பெக்டர் சத்தியசீலன் எல்லாத் தடயங்களையும் எடுத்துவிட்டு, உடலை போஸ்ட்மார்ட்டத்துக்கு அனுப்பி வைத்தார்.

‘ தம்பி இந்த நிலமையில் கஷ்டமாத்தான் இருக்கும்…. இருந்தாலும் உங்க மாமாவைக் கொலை செய்தவனை கண்டுபித்தே ஆகவேண்டும்….உங்களுக்கு ஏதாவது தகவல்..? உங்களுக்கு யார் மேலயும் சந்தேகம்?’

அழுதுகொண்டிருந்த விஷ்னுவை ஆசுவாசுப்படுத்திக்கொண்டே கேட்டார் சத்தியசீலன்.

‘இல்ல சேர் ..அவரு யாரோடயும் சண்டைக்குப் போக மாட்டாரே .. அப்பாவி மனுசன். ஊரில எல்லோரும் புரோபஸர் ஐயா புரோபஸர் ஐயா என்று மரியாதை குடுத்துத்தான் நடப்பார்கள்’

‘தெரியும் தம்பி. அந்த அறையில் அலுமாரி ஒன்று திறந்து உள்ளே இருந்த சாமான் எல்லாம் கீழே சிதறிக்கிடக்கு…. அதில இருந்த சாமனை களவெடுக்கவும் கொலை செய்திருக்கலாம்…

அந்த அலுமாரியில் அப்படி என்ன வைத்திருப்பார்?’

‘அதில அவரின் உடுப்புத்தான் இருக்கும் , பெண்கள் இல்லாத வீடு,ஒரு நகை கூட வைத்திருக்கமாட்டார். செலவுக்குக் கொஞ்சம் காசு வச்சிருப்பார். அதுவும் ஒவ்வொரு கிழமையும் நான் வரும்போது ஏ டி எம் யில் எடுத்துக் குடுப்பன் .

அந்தக்காசுக்காகவெல்லாமா கொலை செய்வாங்க சேர்…?’

‘இல்ல விஷ்னு, இது ஒரு சந்தேகம்தான் வேற ஏதும் காரணமும் இருக்கலாம்….நான் எல்லா கோணத்திலயும் விசாரிக்கன். நீங்க தைரியமா இருந்து ஆக வேண்டியதைப் பாருங்க…’

மீண்டும் விஷ்னுவின் முதுகைத் தட்டி ஆறுதல் சொல்லிவிட்டு வீட்டை விட்டு வெளியே வந்தார் சத்தியசீலன்.

அந்த ஏரியவில் எங்கேயும் சீ சீ டிவி கமரா இருக்க சான்ஸே இல்ல.

பக்கத்து வீட்டுக்காரர்களிடம் விசாரித்துப்பார்த்ததிலும் எந்த துருப்பும் கிடைக்கவில்லை.

பொலிஸ் ஸ்டேஷனை அடைந்தார் சத்தியசீலன்.

‘சேர் ‘

நிமிர்ந்தார் சத்தியசீலன். எதிரே கான்ஸ்டபில் மாதவன்.

‘சொல்லு மாதவன்… ஏதாச்சும் இன்போர்மேஷன்கிடைச்சுதா?’

‘ சேர் …. நல்லையா தனியாகத்தான் இருந்திருக்கார். பாக்கியம் என்றொரு வேலைக்காரி காலையில் வந்து வீட்டு வேலைகளைச் செய்துவிட்டு சமைத்தும் வைத்துவிட்டுப்போவாளாம்.

நேற்றும் காலையில் வந்து சமைச்சு வைத்துவிட்டுபோயிருக்கா’

‘அவளை விசாரிச்சியா?’

‘யெஸ் சேர்

நேற்று அவ போனப்ப தொலைபேசியில் நீண்டநேரம் பேசிக்கொண்டிருந்திருக்கார்.பிறகு மெளனமாக ஒரு புத்தகம் வாசித்துக்கொண்டிருந்திருக்கிறார்.

பாக்கியமும் சமைத்து வைத்துவிட்டு வந்திருக்கிறார். வேற எதுவும் தெரியாதாம்’

‘ஒருவேளை பாக்கியத்துக்கும் நல்லையாவுக்கும் ஏதாச்சும் தொடர்பு…?’

‘அதையும் விசாரித்துப் பார்த்தன் சேர்… ஊரில எல்லோரும் அவரைப்பற்றி நல்லதாத்தான் சொல்றாங்க இதுவரைக்கும் அவர்மேல எந்த கெட்ட அப்பிப்பிராயமும் யாருக்கும் இல்ல’

‘இல்ல மாதவன் இப்படி நல்ல வேஷம் போடுறவங்கதான் வீட்டில எல்லா அராஜகமும் செய்வாங்க….எதுக்கும் அந்த ஆங்கிளில்லயும் கொஞ்சம் விசாரித்துப்பார்…? ஒருவேளை பார்வதிக்கும் அவருக்கும் ஏதாவது தொடர்பு இருக்க அதைகேள்விப்பட்ட பாக்கியத்தின் புருஷனே ஏன் இதைச் செய்திருக்கக்கூடாது?’

‘குட் பிரிடிக் ஷன் சேர். நான் பாக்கியத்தின் புருஷனையும் விசாரித்துப்பார்க்கன் .’

‘பட் கவனம், நமக்கு சந்தேகம் வந்தது அவர்களுக்குத் தெரியாதபடி விசாரி.. தெரிந்தால் அலர்ட் ஆகிவிடுவார்கள்.’

‘ஓ கே சேர்.’

…………………………………………

போஸ்ட்மார்ட்டம் முடிந்து அன்று பின்னேரமே உடலை ரிலீஸ் பண்ணினார்கள்.

அடுத்த நாள் இறுதிக்கிரிகை செய்வதற்கு ஆயத்தம் செய்தார்கள்.

மாதவன் அன்று பின்னேரம் நல்லையா வீட்டுக்குப்போனான்.

காலையில் பிணம் கிடந்த இடத்திலே இப்போது பெட்டியில் நல்லையாவை படுக்க வைத்திருந்தார்கள்.

தலைமாட்டில் விளக்கு எரிந்துகொண்டிருந்தது. சுற்றிவர இருந்த உறவினர்களுடன், பாக்கியமும் இருந்தாள்.

பணக்கார உறவினர்கள் கையில் இருந்த துணியால் கண்ணுக்கு வலிக்காமல் கண்ணைத் துடைத்துவிட்டபடி இருந்தனர். பார்வதிமட்டுமே விட்டு விட்டு ஒப்பாரி வைத்து ஒரு மரணவீட்டு களையை ஏற்படுத்திக்கொன்டிருந்தாள்.

மாதவன் இப்போது பொலிஸ் யூனிபோர்ம் இல்லாமல் சாதாரண உடையில்தான் வந்திருந்தான்.

பார்வதி ஒப்பாரியை நிறுத்தும் நேரம் பார்த்து அவளிடம் பேச்சுக்கொடுக்கத்தொடங்கினான்.

‘பாக்கியம் …. நீங்கதான் ஐயாவை சொந்தக்காரர் மாதிரி பார்த்துக்கொண்டிருந்தீங்க என்று தெரியும், இது உங்களுக்குக் கஷ்டமாகத்தான் இருக்கும், இந்த நேரத்தில டிஸ்டேர்ப் பண்ணுறதுக்குச் சொரி…. உங்களுக்கு யார்மேலயும் சந்தேகம் …? ‘இழுத்தான் மாதவன்.

அவன் கேட்டதிலிருந்தே அவன் பொலிஸ் என்று விளங்கிவிட்டது.

பாக்கியம் இப்போது கொஞ்சம் பதட்டமடைந்தது போலிருந்தது.

‘இல்ல சார் ..ஐயா சுத்தத் தங்கம். என்னைக்கூட சொந்தத் தங்கச்சி மாதிரித்தானே நடத்துவார்?

அவரைக்குத்த எப்படி மனசு வந்துச்சோ ..’ மீண்டும் ஒப்பாரி வைக்கத் தொடங்கினாள். இந்தமுறை அவள் ஒப்பாரி நீண்ட நேரம் தொடர்ந்தது.

இதற்குமேலும் மாதவனோடு பேச விருப்பம் இல்லாததால்தான் நீண்ட நேரம் ஒப்பாரி வைக்கிறாள் என்று புரிந்தது.

அவளின் ஒப்பாரியை கூர்ந்துகேட்கத்தொடங்கினான் மாதவன்..

‘ஐயா ராசா என்ன தங்கச்சி தங்கச்சி என்டுதானே கூப்பிடுவீங்க… என்ட புருசனை ராஜா ராஜா என்று எவ்வளவு பாசமா கூப்பிடுவீங்க. அந்தப்பாவி மனுசன் காலையிலதானே கொழும்புக்குப்பானான்… உங்கட முகத்த கடைசியா பார்க்கவும் அவனுக்குக் கொடுத்து வைக்கலியே…’

பார்வதி புருஷன் ராஜா, காலையிலதான் கொழும்புக்குப் போயிருக்கான் என்று புரிந்தது மாதவனுக்கு.

சம்பந்தமேயில்லாமல் ஏன் தன்னை தங்கச்சி தங்கச்சி என்று சொல்வதையும், தன் புருசன் இங்கே இல்லை என்பதை சொல்லி அழ வேண்டும்? தன்மேலும் புருஷன் மேலும் யாருக்கும் சந்தேகம் வரக்கூடாது என்று நினைக்கிறாளோ? மாதவனின் சந்தேகம் இன்னும் கூடியது.

அவன் எந்தச் சலனமும் காட்டிக்கொள்ளவில்லை. இடையிடையே பார்வதி மாதவனைப் பதட்டத்துடன் பார்த்துக்கொண்டே இருந்தது இன்னும் உறுத்தியது.

அதற்குமேலும் பார்வதிக்கு சந்தேகம் வரவைக்க விரும்ப்பமல் அந்த இடத்தை விட்டு நகர்ந்தான் மாதவன்.

………………………………………………………….

வெளியில் பந்தல் போட்டிருந்தார்கள். ஒரு கூட்டம் கார்ட்ஸ் விளையாடிக்கொண்டிருந்தது. இன்னொரு கூட்டம் கரம் விளையாடிக்கொண்டிருந்தது. இன்னொரு வயதான கூட்டம் வெற்றிலை போட்டபடி நல்லையாவின் சின்ன வயது வாழ்க்கை பற்றி பேசிக்கொண்டிருந்தது. வெற்றிலை சாப்பிடும் சாக்கில் அந்த வயதானவர்களோடு ஐக்கியமானான் மாதவன்.

‘ஐயாவின் மற்ற சொந்தக் காரங்க யாரும் வரலயாமா?’

மாதவன் தானாகத் தொடங்கினான்.

‘யாரு? வெளிநாட்டில இருக்கிற ஆட்களா? அவங்க பிளைட் எடுத்துட்டங்கலாம் தம்பி. எப்படியும் நாளைக்குப் பின்னேரம் வந்திடுவாங்கலாம்’ ஒரு பெரியவர் சொன்னார்.

‘எவ்வளவு சொத்து இருந்தும் என்ன பிரயோசனம்? கடசியில ஒண்டிக்கடையாத்தானே போறான் …பாவம் அந்த விஷ்னு தம்பி மட்டும் தான் சொந்தம் என்று அடிக்கடி வந்து போவான்…’

பேசிக்கொண்டிருந்த ஒரு பெரியவரை இடைமறித்தான் மாதவன்.

‘ஏன் மற்ற சொந்தமெல்லாம் எங்க ஐயா?’

‘அவருக்கு மூன்று தங்கச்சி. விஷ்னுவிட அம்மா மட்டும் தான் இங்க இருந்துச்சு அதுவும் செத்துப்போச்சு. மற்ற ரெண்டு தங்ச்சியும் வெளிநாட்டில செட்டில் ஆகிட்டுகள். வேற யாரும் பெரிசா சொந்தம் என்டு இல்ல.’

‘ஓ…அப்படியா? விஷ்னுவுக்கு அண்ணன் தம்பி யாரும் இல்லையா?’

‘ஒரே ஒரு தம்பி இருந்தான் அவனும் வெளிநாடு போயிட்டான்.’

‘விஷ்னு மட்டும்தான் இங்கே இருக்கான் அதுதான் எல்லாச் சொத்தையும் அவன் பேரில எழுதி வச்சிட்டார் ஐயா.’

‘எல்லாச் சொத்தையும் விஷ்னுவுக்கு எழுதி வச்சிருக்கிறாரா? எல்லா சொத்தையும் விஷ்னுவுக்கு எழுதி வச்ச கோபத்தில வேற யாரும் கொலை செய்திருப்பார்களோ?’

ம்ம்ம் சான்ஸ் இல்ல எல்லோரும் வெளிநாட்டில… எதுக்கும் அவங்க வந்தது அவங்க மேலயும் ஒரு கண் வைக்கவேண்டும் மனதுக்குள் நினைத்தவாறே வீட்டுக்குப்போய்ச் சேர்ந்தான் மாதவன்.

………………………………………………………..

அடுத்தநாள் சத்தியசீலனின் மேசைமீது போஸ்ட்மோர்ட்டம் ரிப்போர்ட் இருந்தது.

‘என்ன மாதவன் பாக்கியத்தின் புருஷன் பற்றி ஏதும் டீட்டைல்?’

‘சேர் நேற்று காலையிலதான் வேலை விசயமா கொழும்பு போயிருக்கான்.

இங்கே சும்மா கூலி வேலை செய்துகொன்டு திரிந்தவன் திடீரென கொழும்பிலே ஒரு கடையில் வேலை கிடைத்திருக்கு என்று சொல்லிவிட்டுப்போனது சந்தேகமா இருக்கு. இங்கே இருக்கும்போதும் ஒவ்வொரு நாளும் குடித்து யாரோடயவாவது பிரச்சினைப்பட்டுக்கொண்டே இருப்பானாம். இப்போதுதான் ஊரில விசாரித்துவிட்டு வாறன்’

‘ஓ… ஐ சி ….’

‘அவன் எங்க இருக்கான் என்று உடனே கண்டுபிடிச்சாகனும்.’

‘யெஸ் சேர் ..

அவன் மொபைல் பாவிக்கிறதில்லையாம். பாக்கியத்தின் மொபைலுக்கு கொமுனிகேசனில் இருந்து போன் பண்ணுவான் என்றுதான் பக்கியம் சொல்றா இன்னும் கோல் வராதது சந்தேகமாகத்தான் இருக்கும்… பாக்கியத்தின் நடவடிக்கையிலும் கொஞ்சம் பதட்டம் இருக்கு சேர்.’

‘படிக்காத சனம் பொலிஸ் என்றாலே நடுக்கம் எடுக்கும். அதை மட்டும் வச்சு நாம முடிவெடுக்க ஏலாது மாதவன் ….. அந்த ஆங்கிளில் மட்டும் திங் பண்ணினால் , சிலவேளை வேற இம்போர்டன்ட் டீட்டையில மிஸ் பண்ணலாம்..கெயர் புல்லா இருக்கவேண்டும்.’

‘யெஸ் சேர்… இன்னொரு சந்தேகமும் இருக்கு’

‘சொல்லுங்க ‘

‘சொத்து எல்லாம் விஷ்னு பேரில எழுதி இருக்கார், மற்ற சொந்தக்காரங்க யாரும் கோபத்தில்…?’

‘அதால என்ன பயன் மாதவன்? விஷ்னுவை கொலை செய்தாலாவது அவனுக்குப் பதிலா இன்னொருத்தருக்குச் சொத்துக் கிடைக்கலாம். ஆனால் உயில் எழுதிய பின் நல்லையாவைக் கொலை செய்து என்ன பிரயோசனம்?’

‘இல்ல சேர் சொத்தில் பங்கு கேட்டு உயிலை மாற்றி எழுதச் சொல்லி யாரும் மிரட்டியிருக்கலாம், இல்ல என்றது கோபத்தில குத்தியிருக்கலாம்’

‘வெரிகுட் மாதவன். ஆனால் அதிலயும் ஒரு விடயம் உறுத்துது…’

‘பொரன்ஸிக் ரிப்போர்ட் படி இரவு ரெண்டு மணிக்கு குத்தி இருக்காங்க, கத்தியில் எந்தக் கை ரேகையும் இல்ல, சோ இது திடீரென கோபப்பட்டுக் குத்தினது இல்ல… யாரோ நல்லா பிளான் பண்ணி கிளவுஸ் போட்டு குத்தியிருக்காங்க.

சொந்தக்காரங்க ஏன் ரெண்டுமணிக்குப்போய் சொத்துக் கேட்கப்போறாங்க?’

‘அவருக்கு விஷ்னுவைத்தவிர யாருமே சொந்தக்காரங்க இல்ல சேர்… எல்லோரும் வெளிநாட்டில. நேற்று கணநேரம் தொலைபேசியில் கதைச்சுக்கொண்டிருந்ததா பாக்கியம் சொல்றா, வெளிநாட்டில இருக்கும் யாரும் உயிலை மாற்றி எழுதச் சொல்லிக் போனில் சண்டை போட்டிருக்கலாம், இல்லையென்றதால் , இங்கே யாரையும் கூலிக்கு அனுப்பி மிரட்டி உயிலை மாற்றி எழுத ட்ரை பண்ணியிருக்கலாம், மிரட்டப்போனவன் வாக்குவாதப்பட்டு கோபப்பட்டு குத்தியிருக்கலாம்.

‘ம்… இருக்கலாம் கொஞ்சம் சான்ஸ் இருக்கு மாதவன்’ ஆமோதித்தார் சத்தியசீலன்.

‘அவருக்கு நேற்றுகாலையில் வந்த அழைப்பு எந்த நம்பரில் இருந்து வந்தது என்று கண்டுபிடிங்க, கட்டாயம் ஏதும் க்ளு கிடைக்கும்’

‘யெஸ் சேர்.’

‘மாதவன்… இன்னொரு விசயத்தையும் நாம மிஸ் பண்றம்’

‘என்ன சேர்?’

‘அந்த அலுமாரி? ஏன் உண்மையிலேயே யாரும் திருட வந்து அவரைக் கொலை செய்திருக்கக்கூடாது?’

‘சேர் வீட்டில டீவி, மொபைல் என எவ்வளவோ பெறுமதியான சாமான் இருக்கு எதையுமே எடுக்கல… ‘

‘யெஸ் அதுதான் எனக்கும் சந்தேகமா இருக்கு’

‘ஏன் அந்த அலுமாரி மட்டும் குழம்பிக்கிடக்க வேண்டும்.

அந்த அலுமாரியில் ஏதோ பெறுமதியான விடயம் இருந்திருக்கவேண்டும் இல்லாட்டி நம்மளைக் குழப்ப அந்த அலுமாரியைக் குழப்பிவிட்டுப்போயிருக்க வேண்டும்?’

பெறுமதியான பொருள் என்றால், என்னவாக இருக்கும்?’

சத்தியசீலனின் முகத்தில் இருந்த குழப்பம் மாதவன் முகத்திலும் ஒட்டிக்கொண்டது.

‘ஒருவேளை உயிலாக இருக்குமோ? ‘

‘சொத்து எல்லாம் விஷ்னுபேரிலதான் உயில் எழுதப்பட்டிருக்கு என்று ஊருக்கே தெரியும்.எப்படியும் வக்கிலிடம் ஒரு ஹொப்பி இருக்குமே ?உயிலைத் திருடுவதால் என்ன பிரயோசனம் சேர்?’

‘யெஸ் கரக்ட் அப்படியென்றால் வேற என்ன இருந்திருக்கும்?’

…………………………..

‘சேர் அவரு கோல் பண்ணினார் ஒரு ஹொட்டலிலதான் வேலைக்கு சேர்ந்திருக்காராம். ‘

பாக்கியம் சொன்னாள்

‘என்ன கடை? பெயர் தெரியுமா?’

‘தெரியல சேர்…’

‘கொழும்பில எந்த ஏரியா என்றாச்சும் தெரியுமா?’

‘அதெல்லாம் எனக்குத் தெரியாது சேர் . கொழும்பில என்டுதான் சொன்னார். பாவம் இறைக்குத்தான் அவருக்கே ஐயா செத்தது தெரியும். போனிலேயே அழுதிட்டார் மனுசன். கடைசியா ஒருதடவை ஐயாவைப்பார்க்கக் குடுத்து வைக்கல அந்த மனிசனுக்கு.’

‘ஓகே …! ‘

‘திரும்ப எப்ப கோல் பண்ணுவார் ‘

‘தெரியல சேர் ‘பாக்கியம் குரலில் பதட்டம் அதிகமானது. பொலிஸ் அவள்மேல் சந்தேகப்படுவதைத் தெரிந்துகொண்டுவிட்டாள் என்று புரிந்தது. குரல் தடுமாறத் தொடங்கியிருந்தது.

‘அடுத்தமுறை கோல் பண்ணினால் ஹொட்டல் பெயர், டெலிபோன் நம்பர் வாங்கி வைக்க வேண்டும் சரியா? ‘

சரி ஐயா பயந்துகொன்டே சொன்னாள்.

பாக்கியத்தின் போனை வாங்கி அதில் ராஜன் அழைத்திருந்த கொம்னிகேஷன் நம்பரைக்குறித்து வைத்துக்கொண்டான்.

போனைத் திருப்பிக்கொடுக்கும்போதுதான் பாக்கியத்தின் கை நடுங்குவதையும் அவதானித்தான் மாதவன். சற்றுத் தள்ளி நின்று கொண்டிருந்த சத்தியசீலனிடம் ‘சேர் பேசாம பாக்கியத்தையே கொஞ்சம் மிரட்டி விசாரித்துப்பார்ப்போமா? ‘

‘வேண்டாம் அலர்ட் ஆனாள் என்றால் புருஷன் எஸ்கேப் ஆகிடுவான், அவனை சரியா லொக்கேட் பண்ணிய பிறகு விசாரிப்பம்.’

……………………………………………………..

நல்லையா வீடு.

செத்த வீட்டுக்களை கொஞ்சம் கொஞ்சமாக் மறைந்துகொண்டிருந்தது.

‘விஷ்னுமட்டும் ஒரு ஓரமாக சோகமாக இருந்தான். ‘

மற்றைய சொந்தங்கள் முகத்தில் அவ்வளவு சோகம் இல்லை. வெளிநாட்டில் இருந்த வந்திருந்த நல்லையாவின் தங்கச்சி பிள்ளைகளில் சிலருக்கு நல்லையாவைத் தெரிந்திருக்கவே வாய்பில்லை என்பது அவர்களின் நடவடிக்கையைப்பார்க்கவே புரிந்தது.

தங்கச்சிகளின் புருஷன்மாரைப்பார்க்கத்தான் கொஞ்சம் சந்தேகமாக இருந்தது.

உயிரோடு இருக்கும் ரெண்டு தங்கச்சிக்கும் ஒரு சதம் கூட குடுக்காமல், ஏன் எல்லாச் சொத்தையும் இறந்துபோன் தங்கச்சி மகனுக்குக் கொடுத்தார்? ஒருவேளை அந்த ஆத்திரத்தில் மற்றத் தங்கச்சிமாரின் புருஷன் யாராச்சும் மிரட்டப்போய் கொலையில் முடிந்திருக்குமோ …? சந்தேகத்தைப் புதிப்பித்துக்கொண்டார்கள் மாதவனும் ராமசாமியும்.

…………………….

வக்கில் சடகோபன் ஒபிஸ்.

மிஸ்டர் சடகோபன் நல்லையா கொலை சம்பந்தமா உங்க உதவி கொஞ்சம் தேவைப்படுது

‘சொல்லுங்க என்ன வேணும்’

‘அவருக்கு எதிரி யாரும்?’

‘நான் அறிஞ்ச வரைக்கும் இல்ல சேர்.’

‘அவரின் சொத்து’

‘அதெல்லாம் அவர் தங்கச்சி மகனுக்கு என்று கனகாலத்துக்கு முன்னமே எழுதி வச்சிட்டார். ‘

‘அதுதான் ஏன் ஒரு தங்கச்சியின் மகனுக்கு மட்டும்?’

‘சேர் அவரிட மற்ற ரெண்டு தங்கச்சிமாருக்கு நல்ல சீதம் கொடுத்து கல்யாணம் கட்டி வச்சதே அவருதான். அவங்க இப்போ நல்லா செட்டில ஆகி ஆகோ ஓகோ என்று இருக்காங்க.நல்லையா ஐயா என்ன நடந்தாலும் சொத்தை விற்க மாட்டார் என்று எல்லோருக்கும் தெரியும்.தங்கச்சிமாருக்கும் அண்ணாவின் சொத்தை விற விருப்பமில்லை. அவங்களால இங்க வந்து சொத்தையெல்லாம் பார்த்துக்க ஏலாது என்று அவங்களேதான எல்லத்தையும் இங்க இருக்கும் விஷ்னுவுக்குக் கொடுக்கச் சொன்னாங்க.

‘இந்தாருக்கு உயில் பாருங்க…’

உயிலைக்கொடுத்தார் சடகோபன்.

எல்லாச் சொத்தும் நல்லையாவின் மரணத்துக்குப் பின் விஷ்னுவுக்கே என்று தெளிவாக எழுதியிருந்தது.

‘ஓ கே தங் யூ ‘

ஏமாற்றத்துடன் விடைபெற்றனர் இருவரும்.

‘மாதவன் இப்போதைக்கு பாக்கியத்தின் ஹஸ்பெண்ட்டை உடனடியா கண்டுபிடிச்சாத்தான் இந்தக் கேஸை மூவ் பண்ணலாம் என்று தோனுது……!’

‘யெஸ் சேர்’ ராஜன் ஹோல் பண்ணியிருந்த கொமினிக்கெஷனுக்கு அழைப்பை எடுத்தான் மாதவன். அது மரதானையில் இருக்கும் கொமினிக்கெஷன்.

சத்தியசீலம் உடனடியாக மரதானை பொலீஸ் ஸ்டேஷனைத் தொடர்புகொண்டு ராஜனின் புகைப்படத்தை வைபரில் அனுப்பி வைத்தார்.

………………………………………………………..

ரெண்டு கிழமையாகிவிட்டது.

‘மாதவன்… ராஜன் பற்றி ஏதும் தகவல் தெரிந்ததா என்று மரதானை பொலிஸ் ஸ்டேசனைக்கேட்டுப்பார்.

இவ்வளவு நாளா பாக்கியத்துக்கு கோல் பண்ணாமல் இருந்திருக்கமாட்டான்.நம்மிடம் மறைக்கிறாள், இன்றைக்கே பாக்கியத்தை கொஞ்சம் மிரட்டிப்பார்ப்பது நல்லம் என்று நினைக்கன்.’ சொல்லியவாறே

ஒரு கையில் டீயையும் மறுகையில் பத்திரிகையையும் எடுத்தார் சத்தியசீலன்.

மாதவன் மரதானை பொலிஸ்ஸ்டேசன் நம்பரைச் சுற்றத்தொடங்கினான்.

சத்தியசீலனின் மகளுக்கு இன்னும் மூன்று மாசத்தில் கல்யாணம் , அதற்கு எப்படியும் ஒரு வீடு வாங்கிவிட வேண்டும் என்ற பதட்டமும் அவருக்கு இருந்தது.

பத்திரிகை எடுத்தும் முதல் வேலையாக விளம்பரப்பகுதிக்கே அவர் கண் போனது.

தாழங்குடாவில் 50 ஏக்கர் தென்னம் தோப்பு விற்பனைக்கு என்ற மிகப்பெரும் விளம்பரம் கண்ணைக்குத்தியது.

தாழங்குடா…ஐம்பது ஏக்கர் தென்னம் தோப்பு…?

இது நல்லையாவின் தென்னம் தோப்பல்லோ?

‘உடனடியா விஷ்னுவின் வேலை பற்றி விசாரிக்கவேண்டும் மாதவன்’

‘யெஸ் சேர்! ‘

மூன்று மணி நேரத்திலேயே தகவலுடன் வந்தான் மாதவன்.

‘சேர் விஷ்னு ஏதோ பிஸ்னஸ் செய்கிறான். ரீசன்டா ஒரு பெரிய லொஸ்ட் வந்து வாங்கின 4 கோடி கடன் இருக்குதாம். அவன் கடன் வாங்கினது ஒரு ரவுடி பொலிட்டிஸியனாம் . ரெண்டு கிழமைக்கு முன்னாலதான அந்தப் பொலிட்டிஸியன் அடியாட்களோட வந்து விஷ்னுவையும் குடும்பத்தையும் மிரட்டிவிட்டுப்போயிருக்கான்.’

மாதவன் சொல்லிக்கொண்டிருக்கும்போதே…

‘உயிரோடு இருக்குவரை சொத்தை விற்கமாட்டேன் என்று உறுதியா இருந்தார் நல்லையா ஐயா!’

என்று லோயர் சடகோபன் சொன்னதும் சத்தியசீலனின் மனதில் வந்துபோனது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

* Copy This Password *

* Type Or Paste Password Here *