ஆகஸ்ட் 25, 2017. வெள்ளிக்கிழமை.
மாலை மூன்றுமணி.
அல்கொய்தாவின் தலைமையகம்.
இஸ்லாமாபாத், பாகிஸ்தான்.
தலைமை நிர்வாகி தங்கள் இயக்கத்திலுள்ள இரண்டு தீவிரவாத இளைஞர்களை வரச் சொல்லியிருந்தார். கொதிநிலையில் காணப்பட்டார்.
அவர்கள் இருவரும் வந்ததும், அவர்களின் வலது இடது தோள்களை மாறி மாறி அணைத்து சலாம் அலைக்கும் சொன்னார். பிறகு அவர்களை எதிரே அமரச் செய்தார்.
அவர்கள் இருவரும் முறையே பஷீர் மற்றும் சலீம்.
“உங்கள் இருவருக்கும் இந்தியாவில் ஒரு முக்கியமான அசைன்மென்ட் இருக்கிறது…அதை இந்தவருட இறுதிக்குள் நிறைவேற்ற வேண்டும், செய்வீர்களா?”
“கண்டிப்பாக. என்ன செய்யவேண்டும் சொல்லுங்கள்….காத்திருக்கிறோம்.”
“நீங்கள் ஒரு கொலை செய்யவேண்டும். அதுவும் சாதாரணக் கொலை அல்ல…மிகப்பெரிய அரசியல் கொலை. .நீங்கள் இதை வெற்றிகரமாக முடித்தால், நம் இயக்கத்தின் சரித்திரத்தில் இடம் பெற்று விடுவீர்கள்.”
“……………………..?”
“முதலில் அவரைப்பற்றி ஒரு வீடியோவைப் பாருங்கள்….பிறகு அவரைப்பற்றி நிறைய சொல்லுகிறேன்.”
வீடியோவைப் பார்த்ததும் இருவரும் அதிர்ந்தார்கள். இருப்பினும் இயக்கத்திற்காக எதையும் செய்ய வேண்டும் என்பது அவர்களுக்கு இடப்பட்ட கட்டளை.
பஷீர் “எதற்கு என்பதை மட்டும் முடிந்தால் சொல்லுங்கள்…” என்றான்.
“கண்டிப்பாக சொல்கிறேன். இரண்டு நாட்கள் முன்பு, பாரத சுப்ரீம்கோர்ட் முத்தலாக் முறைக்கு ஒரு ஆரம்ப முயற்சியாக ஆறு மாதங்கள் மட்டும் இடைக்கால தடை விதித்தது. அதன்பிறகு மறுபடியும் அனைத்து நீதிபதிகளும் அமர்ந்துகொண்டு அதை மறுபரிசீலனை செய்வதாக உத்தேசம். இது மத நம்பிக்கை சம்பந்தப்பட்ட விஷயம் என்பதால் அவர்கள் படிப்படியாக மிகக் கவனமாக இதைக் கையாள நினைத்திருந்தார்கள்.”
“ஆனால் அதற்குள் முந்திரிக்கொட்டைத் தனமாக ‘இது மிக நல்ல தீர்ப்பு…பெண்களுக்கு மிகுந்த நல்ல செய்தி’ என்று பாரதப் பிரதமர் தனது ட்விட்டரில் ட்வீட் செய்துள்ளார். இது மிகவும் கண்டிக்கத்தக்கது. ஒரு மதச்சார்பற்ற நாட்டின் பிரதமராக இருந்துகொண்டு மத சம்பந்தப்பட்ட ஒரு இடைக்கால தீர்ப்பைப் பற்றி அவசரமாக கருத்துச் சொன்னது மிகவும் தவறு.”
சலீம் “அவர்தான் இந்து மதச் சார்புடைய பிரதமர் என்பது எல்லாருக்கும்தான் தெரியுமே? இது ஒன்றும் புதிதல்லவே!” என்றான்.
“ஆமாம் புதிதல்லதான்…ஆனால் அவரின் இந்தக் கருத்து சுப்ரீம்கோர்ட் நீதிபதிகளின் இறுதித்தீர்ப்பை நிச்சயமாக இன்ப்ளூயன்ஸ் செய்துவிடும்….இதில் இன்னொரு வெட்கக்கேடான விஷயம் என்னவென்றால் இவரே மனைவியை தலாக் செய்தவர்தான். பிரதமராக ஆனபிறகும் அவர் தன் மனைவியை தன்னுடன் அழைத்து வைத்துக்கொள்ளவில்லை என்பது இன்னும் அசிங்கம். இது எப்படியிருக்கு?
“உண்மைதான் இது எங்களுக்குத் தோன்றவில்லை….”
“அதுதவிர இன்று ‘கணபதி பப்பா மோரியா’ என்று இந்துக்களுக்கு மட்டும் வாழ்த்துச் சொன்னார். இந்துச் சாமியார்கள் கூப்பிட்டால் எந்த நிகழ்ச்சியிலும் தவறாது கலந்துகொள்வார்.”
“…………………………..”
“ஆனால் அவரைக் கொல்வது அவ்வளவு எளிதல்ல…அவருக்கு பாதுகாப்பு மிக அதிகம். அவர் மிகவும் சுறுசுறுப்பானவர், தினமும் யோகாசனம் செய்து தன் உடம்பை ட்ரிம்மாக வைத்திருப்பவர். நீங்கள் வீடியோவில் பார்த்திருக்கலாம், அவர் விமானத்தில் ஏறும்போதும், இறங்கும்போதும் பக்கவாட்டு கைப்பிடிகளை பிடித்துக்கொள்வதில்லை. இந்தியாவின் மக்கள் விரும்பும் பிரதமர்….பல அதிரடிகளை அரங்கேற்றி இந்தியாவை முன்னேற்றப் பாதையில் கொண்டுசெல்ல மிகவும் மெனக்கிடுபவர்…ஒருவிதத்தில் அவரை சுட்டு வீழ்த்தினால் நாம் இந்தியாவையே வீழ்த்தியது மாதிரிதான்….”
“புரிகிறது….அவரை கண்டிப்பாக வீழ்த்துவோம்.”
“நீங்கள் நேப்பாளம் வழியாக இந்தியா செல்லுங்கள்…அது மிகவும் சுலபம்.. உங்களின் போலி பாஸ்போர்ட்டையும், ஐடியையும் யூஸ் பண்ணுங்கள். இந்தியாவில் எங்கு வேண்டுமானாலும் நமக்கு ஐஎஸ் ஐஎஸ் தீவிரவாதிகள் உதவத் தயாராக இருக்கிறார்கள்…கவனமாகவும், பொறுமையாகவும் செயல் படுங்கள். காரியம் முடிந்ததும் என்னைத் தொடர்பு கொள்ளுங்கள்.”
“சரி…”
இருவரும் விடைபெற்றனர்.
ஆகஸ்ட் 26. இருவரும் இஸ்லாமாபாத்திலிருந்து கிளம்பி நேபாளம் சென்று அங்கிருந்து விமானம் மூலமாக பாட்னா வந்தனர்.
பிறகு ரயில் மூலம் புதுடெல்லி வந்தனர்.
ஆகஸ்ட் .27,2017. காலை பத்துமணி. புதுடெல்லி.
டெல்லியில் இருந்த சில ஐஎஸ் ஐஎஸ் தீவிரவாதிகளை தொடர்பு கொண்டு பேசியதில், பிரதமர் டெல்லியில் மட்டும் முழுக்க முழுக்க குண்டு துளைக்காத வெள்ளைநிற லிமோசின் காரைத்தான் உபயோகப்படுத்துவதாகவும், எனவே டெல்லியில் வைத்து அவரை தூக்குவது மிகவும் சிரமம் எனவும் அவர் அடுத்து இந்தியாவிற்குள் எங்கு செல்கிறார் என்பதை மோப்பம் பிடித்து கொலையை அரங்கேற்றலாம் எனவும் புத்திமதி வழங்கினர்.
அன்றே பகலில் பஷீர் டெல்லியின் சவுத்ப்ளாக் சென்று பிரதமரிடம் அப்பாவியாக மனு கொடுக்க முனைந்தான். பிரதமர் மிகவும் பிஸி என்று சொல்லி அவனை விரட்டினர்.
ஒரு ஐயாயிரம் செலவழித்தபின் பிரதமர் தன் கட்சி அலுவலகத்தைத் திறக்க ஞாயிற்றுக்கிழமை செப்டம்பர் மூன்றாம்தேதி பெங்களூர் செல்வதை அறிந்துகொண்டான். உடனே அவர்கள் பெங்களூர் புறப்படத் தயாரானார்கள்.
ஆகஸ்ட் 27, இரவு பத்துமணி.
இரவு விமானத்தில் பெங்களூர் வந்து சதாசிவநகரில் உள்ள ஒரு பெரிய வீட்டில் தங்கினர். அந்த வீட்டின் சொந்தக்காரர் ஐஎஸ் ஐஎஸ் அமைப்பின் தீவிர உறுப்பினர்.
ஆகஸ்ட் 28. இருவரும் தீவிரமாக யோசித்தனர். இன்னமும் ஆறு நாட்கள்தான் இருக்கின்றன. அதற்குள் இந்தியப் பிரதமரை ஸ்கெட்ச் போட்டுத் தூக்க வேண்டும்.
ஆகஸ்ட் 29. அன்றைய காலை செய்தித் தாள்களில் பிரதமர் பெங்களூர் வரும் விவரத்தை வெளியிட்டிருந்தனர். தனி விமானத்தில் இரண்டு கர்நாடக மத்திய அமைச்சர்களுடன் செப்டம்பர் மூன்றாம்தேதி பகல் 2.30 மணிக்கு பெங்களூர் வருவதாகப் போட்டிருந்தது. கவர்னர் மாளிகையில் சற்று ஓய்வெடுத்தபின் மாலை ஆறுமணிக்கு மல்லேஸ்வரத்தில் உள்ள கட்சியின் புதிய கட்டிடத் திறப்புவிழா. அன்று இரவே புதுடெல்லி சென்றுவிடுவதாகப் போட்டிருந்தது.
பஷீரும், சலீமும் சுறு சுறுப்பானார்கள்.
ஐஎஸ் ஐஎஸ் சதசிவநகர் உறுப்பினர் மூலம் மேலும் நான்கு திறமையான தீவிரவாதிகளை தங்களுடன் சேர்த்துக்கொண்டு, ஒரு பஜெரோ வண்டியில் ஏர்போர்ட் சாலையில் மெதுவாகப் பயணித்து தங்களுக்கு தோதான இடத்தைத் தேடினர். அந்தத் தோதான இடத்தில் ஆறுபேரும் சந்தேகம் வராமல் புகுந்து கொண்டால், அங்கிருந்தபடியே பிரதமரை மிகத் திறமையான பைனாகுலர் மெஷின்கன்னால் சல்லடையாக துளைத்து விடலாம் என்பது அவர்கள் திட்டம்.
ஆகஸ்ட் 29,30 தேதிகளில் தீவிரமாகத் தேடியதில் அவர்கள் தேர்வு செய்த இடம் ஆஸ்டர் ஹாஸ்பிடல். அதற்கு கரணம் அந்த ஹாஸ்பிடலில் யார் வேண்டுமானாலும், எப்போது வேண்டுமானாலும், எங்கு வேண்டுமானாலும் பெரிய பெரிய பைகளுடன் உள்ளே சுற்றிக் கொண்டிருக்க முடியும். பார்வையாளர்கள் நேரம், பார்வையாளர்களாக இத்தனைபேர்தான் உள்ளே செல்ல முடியும் என்கிற விதிகள் எதுவும் கிடையாது.
அதை மீண்டும் மீண்டும் உறுதிப் படுத்தும் விதமாக அந்த ஆறுபேரும் மாறி மாறி அந்த ஹாஸ்பிடலின் ஒவ்வொரு தளத்திற்குள்ளும் புகுந்து புகுந்து சுலபமாக வெளியேறினார்கள்.
கண்டிப்பாக மெஷின்கன்களை நான்காவது தளத்திற்கு எடுத்துச்சென்று தாராளமாக உபயோகிக்கமுடியும் என்பதை உறுதி செய்து கொண்டார்கள்.
அடுத்தது ஹாஸ்பிடலில் அட்மிஷன்.
செப்டம்பர் 2. மாலை ஐந்து மணி.
பஷீரும், சலீமும் டாக்டர்களைப் பார்த்து ரெகுலர் செக்கப் என்று வெகு சுலபமாக பொய்க் காரணம் சொல்லி அந்த ஹாஸ்பிடலின் நான்காவது தளத்தில் உள்ள அறை எண்கள் 405, 406 ஆகிய சிங்கிள் ரூம்களை எடுத்துக் கொண்டனர். அங்கிருந்து கண்ணாடி ஜன்னல் வழியாகப் பார்த்தால் 300 மீட்டர்கள் தூரத்தில் பிரதமர் பயணித்து பெங்களூருக்குள் வரும் ஏர்போர்ட்ரோடு மிகத் தெளிவாகத் தெரிந்தது.
கண்ணாடியை வெட்டி எடுத்துவிட்டால் மட்டும் போதும்.
ஆளுக்கு ஒன்று என ஒரு அறைக்குக்குள் மூன்று மெஷின்கன்களை எளிதாக கடத்திச் சென்றனர்.
மற்ற நான்கு தீவிரவாதிகளும், இரண்டிரண்டு பேராக ஒவ்வொரு அறைக்குள்ளும் விசிட்டர்களாக தங்கினர். எனவே ஒரு அறையில் மூன்றுபேர்…மூன்று மெஷின்கன்கள்.
செப்டம்பர் 3, ஞாயிற்றுக்கிழமை. .
பிரதமர் எத்தனையாவது காரில் ஏறிப் பயணிக்கிறார் என்பதைத் தகவல் சொல்ல ஒரு தீவிரவாதி ஏர்போர்ட்டில் காத்திருந்தான்.
மணி பிற்பகல் 2.40.
பிரதமர் வந்த விமானம் தரையிறங்கியது.
அவர் கூடவே இரண்டு கர்நாடக மத்திய மந்திரிகளும் இறங்கினர்.
மாலை மரியாதைகளுக்குப் பிறகு பிரதமர் ஐந்தாவது கறுப்பு நிறக்காரில் ஏறி அமர்ந்துகொள்ள அந்த இரண்டு மந்திரிகளும் அவருடன் ஏறிக்கொண்டனர்.
மணி 2.45.
ஐந்தாவது கருப்புநிறக் கார் என்று பஷீருக்கும், சலீமுக்கும் தகவல் வந்தது.
3.15 – 3.20 க்குள் ஆஸ்டர் ஹாஸ்பிடலை பிரதமரின் கார் கடக்கும்.
போலீஸ் பைலட் காரைப் பார்த்ததும் பைனாகுலர் பொருத்திய மெஷின்கன்களால் தொடர்ந்து சரமாரியாகச் சுட ஆரம்பித்தால் அடுத்தடுத்த கார்களில் குண்டுமழை பொழிந்து ஐந்தாவது கருப்புநிறக் காரும் கண்டிப்பாக சல்லடையாகி விடும். பிரதமருடன் மேலும் பலர் உயிரிழக்க நேரிடும். பல உயிரிழப்புகள் என்பது ஒரு சதித்திட்டம் நிறைவேற்றும்போது ஏற்படுவது இயல்புதான்.
ராஜீவ்காந்தி கொலையிலும்தான் ஏகப்பட்ட உயிரிழப்புகள் நேர்ந்தன.
அந்த ஆறுபேரும் தயார் நிலையில் இருந்தனர்.
3.20….
பைலட் காரைப் பார்த்தவுடன் குண்டுமழை பொழிந்தன. இரண்டிலிருந்து ஆறாவது கார்கள்வரை குண்டுமழை பொழிய, அதில் இரண்டு கார்கள் தீப்பற்றி எரிந்ததைப் பார்த்தனர்.
எல்லாம் திட்டமிட்டபடி அரங்கேறியது.
கண்டிப்பாக பிரதமரின் காரை குண்டுகள் எளிதாகத் துளைத்திருக்கும்.
பஷீரும், சலீமும் பேஷண்ட்ஸ் என்பதால் தங்கள் அறையிலேயே கன்களுடன் படுத்துக்கொள்ள, மற்ற நால்வரும் அமைதியாக தங்கள் கன்களுடன் லிப்டை நோக்கி நடந்து, லிப்டினுள் சென்று தரைதளத்திற்கு வந்து, ஹாஸ்பிடலை விட்டு வெளியேற முயற்ச்சிக்கையில், அங்கு ஏகப்பட்ட போலீஸ்கள் குவிந்திருந்தனர். எவரையும் வெளியே, உள்ளே அனுமதிக்காது கண்ணாடிக் கதவை நிரந்தரமாக பூட்டிவிட்டனர்.
அந்த நால்வரும் ரிசப்ஷனில் அமர்ந்துகொள்ள, விரைந்து ஒரு பெரிய போலீஸ்படை ஒவ்வொரு தளமாக சென்று குற்றவாளியைத் தேடியது.
நான்காவது தளத்தில் பஷீரின் அறைக்குள் நுழைந்தபோது அவன் முகத்தை சோகமாக வைத்துக்கொண்டு அப்பாவியாக படுக்கையில் இருந்தான்.
அவனிடம் ஒரு இன்ஸ்பெக்டர் பேச்சுக் கொடுத்தபோது, அறை ஜன்னலின் வெனிஷிங் பிளைன்ட் காற்றில் வேகமாக ஆடி திறந்துகொள்ள, ஜன்னலின் வெற்றிடத்தைப் பார்த்தவுடன், “செர்ச் திஸ் ரூம்” என்று கத்தினார். ஒரு கான்ஸ்டபிள் பஷீரின் கட்டிலுக்கு அடியில் இருந்த மெஷின்கன்னைப் பார்த்து சார் என்று அலற, பஷீர் ஒரு நொடியில் அந்த இன்ஸ் மற்றும் இரண்டு போலிஸ்களைச் சுட்டுத்தள்ள, பதிலுக்கு பஷீர் மற்ற போலீஸ்களால் சுட்டுத்தள்ளப்பட்டு கொல்லப்பட்டான்.
அடுத்த அறையில் இருந்த சலீம் பாத்ரூமுக்குள் சென்று கதவைத் தாழிட்டுக்கொள்ள, நீண்ட நேரப் போராட்டத்துக்குப்பின் கதவை உடைத்து அவனை சுட்டுக் கொன்றனர் போலீஸார்.
மற்ற ஏராளமான போலீஸார் ஒவ்வொருவரையும் சோதித்தபோது தீவிர வாதிகள் நான்குபேரும் சில நோயாளிகளையும், டாக்டர்களையும் தங்களது பிடியில் வைத்துக்கொண்டு, அவர்களைக் கொன்றுவிடுவதாக பயமுறுத்தினர்.
இதற்கிடையில் மாலை நான்கு மணிக்கு பிரதமரும், மற்ற இரண்டு மத்திய மந்திரிகளும் வேறு காரில் திணிக்கப்பட்டு, கவர்னர் மாளிகைக்கு விரைந்து அனுப்பப்பட்டனர்.
மற்ற இரண்டு மந்திரிகளும் அங்கிருந்து தங்கள் வீடு நோக்கி தனித்தனிக் காரில் ஓட்டம் பிடித்தனர்.
கவர்னர் மாளிகையில் பிரதமர் ஏராளமாக வியர்த்தார். எனினும் பதட்டத்தை வெளிக் காட்டிக்கொள்ளாமல், இந்திய ஜனாதிபதியைத் தொடர்புகொண்டு உடனடியாக ஒரு இண்டியன் ஏர்போர்ஸ் விமானத்தை பெங்களூரின் பழைய ஏர்போர்ட்டுக்கு அனுப்பச் செய்தார்.
அடுத்த இரண்டு மணி நேரத்தில் ஏர்போர்ஸ் விமானம் பழைய ஏர்போர்ட்டுக்கு வந்துசேர, அதில் ஹெவி செக்யூரிட்டிகள் படைசூழ பிரதமர் பத்திரமாக டெல்லி போய்ச் சேர்ந்தார்.
இரவு பத்துமணிக்கு ஆஸ்டர் ஹாஸ்பிடலில் நீண்ட துப்பாக்கிச் சண்டைக்குப் பிறகு போராட்டம் முடிவுக்கு வந்தது.
அதில் மீதமிருந்த நான்கு தீவிரவாதிகளும்; போலீஸ் படையில் பத்துப்பேரும்; நோயாளிகள் இருபதுபேரும்; பார்வையாளர்கள் நான்கு பேரும்; டாக்டர்கள் இருவரும் கொல்லப்பட்டனர்.
செய்தி உலகெங்கும் பரவியது.
பல வெளி நாட்டுத் தலைவர்களும், இந்தியத் தலைவர்களும் பிரதமரை அக்கறையுடன் நலம் விசாரித்தனர்.
பிரதமர் கேட்காமலேயே அவரின் பிரத்தியேக வசதிக்காக, தனது சொந்த உபயோகத்திற்காக வைத்திருந்த கருப்புநிற லிமோசின் காரை தற்செயலாக ஏர்போர்ட்டுக்கு அனுப்பி வைத்த கட்சியின் பெல்லாரி சகோதரர்களை இந்தியாவே வாழ்த்தியது.
எதற்காக தன்னைக்கொல்ல முனைந்தார்கள் என்பதைப் புரியாத பிரதமர், மறுநாள் தனது ட்விட்டரில் “தீவிரவாதிகளை ஒடுக்க தான் தொடர்ந்து பாடுபடப் போவதாக” ட்வீட் செய்தார்.