கதையாசிரியர்:
கதை வகை: தொடர்கதை
கதைத்தொகுப்பு: கிரைம் த்ரில்லர்
கதைப்பதிவு: June 12, 2024
பார்வையிட்டோர்: 5,149 
 
 

(1963ல் வெளியான நாவல், ஸ்கேன் செய்யப்பட்ட படக்கோப்பிலிருந்து எளிதாக படிக்கக்கூடிய உரையாக மாற்றியுள்ளோம்)

அத்தியாயம் 21-30 | அத்தியாயம் 31-40

அத்தியாயம்-31

“எத்தனையோ காரியங்கள், எனக்குத் தெரிந்தும் தெரியாமலும் நடந்தன. யார் யாரோ திப்பிலி யாருடைய உத்தரவுப்படி யார் யாரையோ கொலை செய்தார்கள் அப்புறப்படுத்தினார்கள். நான் அதிலெல்லாம் சம்பந்தப்பட்டுக் கொள்ளவில்லை. பொதுவாக நடந்தது என்ன என்று தெரியும்; அவ்வளவுதான்.” 

“பொதுவாக ராஜவேலுவும் திப்பிலியாரும் சண்டை போட்டுக் கொண்டு பிரிந்து போன பிறகு தான் யுத்தம் மும்முரமாக நடந்தது. இரண்டு தரப்பிலும் பணம் ஏராளமாகப் புரண்டது”. 

“ராஜவேலுதான் இருந்த பணத்தையெல்லாம் குடியும் கூத்தியுமாகத் தீர்த்துவிட்டான் என்று சொன்னாயே திப்பிலியாருக்குப் போட்டியாக எதுவும் செய்ய அவனுக்கு எப்படிப் பணம் கிடைத்தது?” என்று கேட்டேன். 

“அது ஒரு பெரிய கதை. அதையும் எனக்குத் தெரிந்த அளவில் சொல்லிவிடுகிறேன். திப்பிலியார் கொணர்ந்த புதுச்சேரி சரக்குகளை மார்க்கெட் பண்ண அவருக்கு உதவியவர் நகரத்து டாக்டர் ஒருவர் என்று சொன்னேனில்லையா?” 

“ஆமாம். டாக்டர் சுந்தரம் என்பது அவர் பெயர். அவரையும் எனக்குத் தெரியும்.” 

“இந்த ஊரில் உங்களுக்குத் தெரியாதவங்க யாரு? அந்த டாக்டர் சுந்தரத்திடம் திப்பிலியார் என்றுமே நேரில் போக்கு வரத்து வைத்துக்கொண்டது கிடையாது. டாக்டர் பரம்பரை யாகவே நல்ல சொத்துக்காரர். டாக்டர் பரம்பரையாகவே நல்ல சொத்துக்காரர். காண்டிராக்ட், வியாபாரம் என்று பலதுறை களிலுமாக ஈடுபட்டுப் பல லக்ஷங்கள் சேர்த்திருந்தார். டாக்டர் நல்ல கைராசிக்காரர் என்றும் பெயருண்டு அவருக்கு; நல்ல மெடிக்கல் பிராக்டிஸ். திப்பிலியாருடைய அழைப்பின் பேரில் ராஜவேலு இங்கு வந்து, புதுச்சேரிக் கள்ளக்கடத்தலில் ஈடுபட்ட பிறகு, அந்த டாக்டர் மூலமாக, வந்த சரக்குகளை வியா பாரத்துக்கு அனுப்பலாமே என்று யோசனை அவனுக்குத்தான் தோன்றிற்று. பணக்காரர் முனிசிபல் கவுன்சிலர், சேர்மன் என்று கௌரதையாக, டாக்டராகவும் இருப்பவன் இதில் ஈடுபடுவானா என்று திப்பிலியாருக்குச் சந்தேகமாகத்தான் இருந்தது. ‘அவரை நான் சரிக்கட்டி விடுகிறேன்’ என்றான் ராஜவேலு.” 

“எப்படிச் சரிக்கட்டினான்?” என்று கேட்டேன். 

“அது பின்னர்தான் எனக்குத் தெரியவந்தது. டாக்டர் சுந்தரத்தின் மனைவி ஒரு தினுசான பேர்வழி. படாடோபம், ஆடம்பரம் எல்லாம் மிகுந்தவள். நல்ல வயது மிடுக்கில் இருந்த ராஜவேலுக்கு அவளை வலை வீசிப் பிடிப்பதில் அதிகச் சிரமம் எதுவும் இருக்க வில்லை. ராஜவேலு எப்பவுமே ஸ்திரீ லோலன். பெண்களை வசியப்படுத்தும் சக்தி அவனுக்கு இயற்கையாகவே இருந்தது; டாக்டர் இருக்கிறபோதும் இல்லாத போதும் போய், டாக்டர் சுந்தரத்தின் சுந்தரியை பெயர்ப் பொருத்தம் அவர்களுக் கிடையே இருந்தது வலைவீசிப் பிடித்து மயக்கிவிட்டான். ஒரு சமயம் டாக்டர் சென்னைக்குப் போயிருந்தபோது மூன்று நாட்களும் ராஜவேலு பகிரங்கமாகவே அவளுடன் அவள் வீட்டில், அவள் புருஷன் போலவே இருந்தான் என்று ஊரார் சொன்னார்கள்.” 

“டாக்டர் சுந்தரமும் ஸ்திரீ லோலர்தான். ஆகவே அவர் தன் மனைவிக்குப் பெட்டிப் பாம்பாக அடங்கியிருக்க வேண்டிய நிலைமை இருந்தது. தவிரவும் டாக்டருடைய பணத்தில் ரொக்கத்தில் பெரும் பகுதியை சுந்தரி அம்மாள் சுயாதீனப் படுத்திக் கொண்டுவிட்டாள். டாக்டர் அவள் சொன்னபடி ஆடவேண்டிய அவசியம் ஏற்பட்டுவிட்டது. அதற்குப் பிறகு டாக்டருக்குத் தெரிந்தே அவர் மனைவியும் ராஜவேலும் பழகுவது, காதலர்களாக இருப்பது என்று ஏற்பட்டுவிட்டது.” 

அத்தியாயம்-32

“உன் யசமானனும் ராஜவேலுவும் சண்டை யடித்துக்கொண்டு பிரிந்தவுடன் டாக்டர், தன் மனைவியின் நண்பன் என்பதற்காக ராஜவேலுவுடன் சேர்ந்து கொண்டாரா?” என்று விசாரித்தேன். 

“அதுதானில்லை. ராஜவேலுவால் திப்பிலியார் இல்லாமல் தனியாகப் புதுச்சேரி வியாபாரத்தை நடத்த முடியாது. அவனிடம் பசை கிடையாது என்பது டாக்டருக்கும் தெரியும். அவருக்குத் திப்பிலியாருடன் தொடர்ந்து சிநேகம் பூண்டிருப்பதுதான் லாபகர மானது. அவர் அப்படிச் செய்வதாகத்தான் உத்தேசித் திருந்தார். ஆனால் சுந்தரியம்மாள் ராஜவேலுவின் கட்சியில்தான் இருந்தாள். ஆரம்பத்தில் அவனுக்கு ஏராளமாக, ரகசியத்தில், தன் பணத்தைக் கொடுத்து உதவினாள். ராஜவேலும் தனக்குத் தெரிந்த அளவில் புதுச்சேரிச் சரக்கு வியாபாரத்தைச் சொல்ப அளவில் சுந்தரி அம்மாளின் பணத்தின் உதவியைக்கொண்டு தொடங்கினான். அந்த நிலைமையில் இந்த வியா பாரத்துக்கு உதவியது தன் பணம் தான் என்று தெரிந்தோ தெரியாமலோ, டாக்டர், திப்பிலியார் ராஜவேலு இருவரிடமுமே தொழில் நடத்தி லாபம் அடை யலாமே என்று எண்ணினார்.”

“அவர் மனைவிக்கு அது இஷ்டமில்லை. தன் கணவனிடம் ராஜவேலுவைத்தான் ஆதரிக்க வேண்டும் என்று சண்டை போட்டாள். பலிக்கவில்லை. தன் மனைவி இப்படி ஒரு மீசைக் கார ராஜவேலுவுக்கு அடிமைப்பட்டுக் கிடப்பது டாக்டருக்குப் பிடிக்காத விஷயமாக இருந்தது. இந்த நிலைமையை நீடிக்க விடக்கூடாது என்று ராஜவேலு ஒரு காரியம் செய்தான்.” 

“என்ன?” என்றேன். 

“டாக்டர் சுந்தரத்துக்கு ஒரே ஒரு மகன். நடராஜன் என்று பெயர். அப்போது ஏழு வயது இருக்கும். அந்தப் பையனை சுந்தரியின் சம்மதத்துடன் தானோ என்னவோ ராஜவேலு எங்கேயோ அப்புறப்படுத்தி வைத்துவிட்டான். டாக்டர் தனக்கு உதவி செய்யாவிட்டால் பையனுடைய உடல் மட்டும்தான் அவருக்குக் கிடைக்கும், பையனைக் கொன்றுவிடுவேன் என்று பயமுறுத்தினான். இந்தப் பயமுறுத்தலுடன், ராஜவேலுவிடம் அவன் என்ன செய்வானோ என்று உண்மையிலேயே பயந்து விட்ட சுந்தரியின் பரிதாபமான ஓலங்களும் சேரவே, தனது ஒரே பையனைக் காப்பாற்ற, உயிருடன் திருப்பிப் பெற, ராஜவேலு சொல்வதை எல்லாம் செய்வதாக அவர் வாக்களிக்க வேண்டிய தாக இருந்தது. வாக்களித்ததுடன் நிற்காமல், ராஜவேலு மேல் எவ்வித ஆக்ஷனும் எடுப்பதில்லை என்றும் எழுதித் தந்தார். அத்துடன் ராஜவேலுக்கு உடனடியாகத் தேவைப்பட்ட ரொக்கத் தையும் அதற்குப் பிறகு என்ன தேவைப்பட்டாலும் அதையும் தருவதாக ஏற்றுக்கொண்டார். இப்படியாக டாக்டர் சுந்தரத் தையும் அவர் மனைவி சுந்தரியையும் தனக்கு அடிமையாக்கிக் கொண்டுவிட்டான் ராஜவேலு. அதற்குப் பிறகு திப்பிலியாரிடம் இருந்ததைப் போல இரட்டைப் பங்கு ரொக்கம் அவனுக்கு இருந்தது என்று சொல்ல வேண்டும்.” 

“டாக்டரையும் அவர் மனைவியையும் பற்றிப் பல தரப்பட்ட கதைகளை நான் கேட்டிருக்கிறேன். நீ சொல்வது அந்தக் கதைகளையெல்லாம் தூக்கியடிப்பதாக இருக்கிறது” என்றேன் நான். “டாக்டருடைய பையன் என்னவானான்?” 

“அவனை உபயோகப்படுத்திக்கொண்டு ராஜவேலு அவனைத் தன் தகப்பனாரிடம் சேர்ப்பித்துவிட்டான்; அந்த அளவில் அவன் யோக்கியன்தான்” என்றான் சம்பந்தம். “தவிரவும் ராஜவேலுவுக்கு சுந்தரி அம்மாளின் தயவு பணம் காசு தவிர மற்ற விதங்களிலும் தேவைதான். ஆகவே பிசகாக எதுவும் நடந்துவிடாமல் பார்த்துக் கொண்டுவிட்டான்.” 

அத்தியாயம்-33

சம்பந்தம் தன் கதையைத் தொடர்ந்து சொன்னான்: “டாக்டர் வீட்டு அம்மாளை நான் பல தடவைகள் தூரத்திலிருந்தே பார்த்திருக்கிறேன். ஒரே ஒரு தரம்தான் நெருங்கிப் பார்த்திருக்கிறேன். அந்தத் தடவை அந்த அம்மாள் என்னைக் கூப்பிட்டனுப் பினார்கள். ராஜவேலுவும் என் யசமானும் பிரிந்து மூன்று நான்கு வருஷங்களிருக்கும். திப்பிலியாருடைய வீட்டுக்கும் அவருடைய காருக்கும் நானே முழுக் காவலன் என்று ஏற்பட்ட பிறகு நடந்தது இது. நம்பகமான எங்கள் ஆள் ஒருவனிடம் கடிதம் கொடுத்தனுப்பினாள் அந்தச் சுந்தரி அம்மாள்.” 

“அவுங்களுக்கு அப்போது வயது முப்பத்தைந் துக்கும் அதிகம் இருக்கும் என்றாலும், மிகவும் அழகாகத்தான் இருந்தாங்க. மிகவும் கம்பீரமான தோற்றம். ராணி மாதிரி இருந்தாங்க. அவங்களோடு ஒப்பிட்டுப் பார்த்தால் டாக்டர் மிகவும் நோஞ்சான்; கூனல் முதுகும் குறுகிய பார்வையும் கம்பீரமில்லாத வராகவும்தான் இருப்பார். ஆட்களை மேய்ப்பதில், அவர்களை அழைப்பதில் அம்மாளுக்கிருந்த சாமர்த்தியம் ரொம்ப ஆம்பிள்ளைகளுக்குக்கூட வராது.” 

“வா அய்யா சம்பந்தம், உட்காரு அப்படி” என்று ஒரு நாற்காலியைக் காட்டினாங்க சுந்தர அம்மாள். ஏதேது, ரொம்பவும் ஜாக்கிரதையாக இருக்கவேண்டும் என்று தீர்மானித்துக் கொண்டே ஊஞ்சலில் உட்கார்ந்து லேசாக ஆடிக்கொண்டிருந்த அம்மாளை விட்டுக் கண்ணை எடுக்காமல் பார்த்துக்கொண்டே நின்றேன். 

“உங்கள் எதிர்க்கட்சிக்காரரான ராஜவேலுவின் கட்சியிலே இருக்கிற அம்மாள் கூப்பிடுறாங்க என்று தெரிந்தும் தைரியமாக வந்துவிட்டியே சம்பந்தம்!” என்று கேலி செய்கிற மாதிரி சொன்னாங்க. 

“என் யசமான் கிட்டே சேவகம் செய்கிறவன் நான். எனக்குக் கட்சி எதிர்க்கட்சி யெல்லாம் ஏதுங்க? நீங்க கூப்பிட்டனுப் பினீங்களேன்னு யசமானரிடம் சொன்னேன். போய்க் கேட்டு விட்டு வா என்று யசமானர் உத்தரவிட்டார், வந்துட்டேன். என் தைரியம் என்ன இதிலே?” என்றேன். இப்படி மறைமுகமாக நான் அங்கு வந்திருப்பது திப்பிலியாருக்குத் தெரியும் என்று அவுங்களுக்குத் தெரிவித்துவிட்டதில் எனக்குப் பரம திருப்தி. 

“அப்படியா?” என்ற அம்மாள் ‘காபி கொண்டு வரச் சொல்லட்டுமா? அல்லது வெய்யிலா இருக்கிறதே கூல்டிரிங்க் கொண்டுவரச் சொல்லட்டுமா?’ என்று கேட்டாங்க. 

“அதெல்லாம் ஒன்றும் வேண்டாங்க எதுக்காக கூப்பிட்டனுப் பினீங்க? விஷயத்தைச் சொல்லுங்க!” என்றேன். 

“அவசரமான ஜோலி ஏதாவது இருக்கிறதா?” 

“யசமான் பாங்குக்குப் போயிருக்காரு. பாங்கிலே அரைமணி வேலையிருக்கு என்றாரு. அந்த இருபத்தைந்து நிமிஷ நேரம் நான் இருக்கலாம். அவசரம் ஒண்ணுமிலைங்க” என்றேன். 

“ராஜவேலு சொன்னதிலிருந்து நீ விசுவாசமான ஆள், கெட்டிக்காரன் என்று கண்டு கொண்டேன். நீயும் எங்களுடன் இருக்க வேண்டும் என்று விரும்பினோம்.” 

“நேரடியாகச் சொன்னதுக்கு நன்றிங்க அம்மா”

“திப்பிலியாருடைய மனைவி எனக்கு மகள் போல.” 

“அவள் எங்க ராஜவேலுக்குத்தானே மகள்?” 

“அதுதான் இல்லை என்று உதறிவிட்டு வந்து விட்டதே!” என்றேன் நான்.

“தவிரவும் திப்பிலியார் யசமான்கிட்ட இப்ப சத்தியாக எனக்கு ஒருவிதமான அதிருப்தியும் இதுவரையில் இல்லை.” 

“தெரிகிறது” என்றாள் அந்த அம்மா. “உனக்கு என்ன சம்பளம் தருகிறார்கள்?” 

“அதையெல்லாம் ஏன் கேட்கிறீங்க வெட்கக் கேடு” என்றேன். 

“அவ்வளவு குறையவா தருகிறார் திப்பிலியார்? அவர் தாராள மனசு படைத்தவர்னு கேள்விப்பட்டிருக்கேன்” என்றாள் சுந்தரி அம்மாள். 

“அவர் எத்தனை வேணும்னு கேட்டாலும் தரத் தயார்தான். நான்தான் வெட்கத்தைவிட்டுச் சம்பளம் இல்லாமே வேலை செய்கிறேன். எனக்கு அப்படி ஒரு விதி” என்றேன். 

“உடனடியாகக் கையில் இருபதினாயிரம் தரச் சொல்றேன். இங்கே டாக்டருக்கு ஒரு நம்பகமான ஆள் வேண்டும்.” 

“நான் பதில் சொல்லவில்லை. ஒரு நிமிஷம் கழித்து அந்த அம்மாளே சொன்னாள். இருபதினாயிரம் போதாது என்றால்…” 

“போதாது என்றா நான் சொன்னேன்?” என்றேன். 

“அப்போ நாளை முதலே வேலைக்கு வந்து விடுகிறாயா?” 

“அதெப்படிங்க முடியும்? நான் திப்பிலியார் வீட்டு வேலையைத் தவிர வேறு வேலை பார்ப்பதில்லை என்று ஏழுமலையான் மேல் சபதம் செய்திருக்கிறேன்” என்றேன். 

“எந்த ஏழுமலையான் மேல்? இலங்கையிலிருந்து வந்து திப்பிலியாருடைய ஆஸ்திக்கெல்லாம் அஸ்தி வாரமாக அமைத்து விட்டானே அந்த ஏழுமலையான் மேலா?” என்று கேட்டாள் அந்த அம்மாள். 

“ஒரு தம் அடித்து விட்டுப்போக நேரம் இருக்கு, வரட்டுமா?” என்றேன். 

“நீதான் தம் அடிப்பதில்லை, குடிப்பதில்லை, ஸ்திரீகள் இருக்கிற பக்கமே திரும்பிப் பார்க்கிறதில்லை என்று நான் கேள்விப்பட்டிருக்கிறேனே?” என்றாள் அந்த அம்மாள். 

“அதனால்தான் அம்மா எனக்கு இங்கே டாக்டர் கிட்ட வேலைக்கிருக்கப் பயமாக இருக்கிறது” என்றேன். 

“அதைக் கேட்டுவிட்டு கலகல் வென்று சிரித்தாள் அவள். ‘உங்க யசமானரின் மனைவி மிகவும் அழகாக இருப்பாளாமே!’ என்று கேட்டாள். 

“என் மகள் அழகா இல்லையா என்பது பற்றி நான் சிந்திப்பதில்லை. அவள் என் மகள் என்பதுதான் எனக்கு முக்கியம்” என்றேன். 

அப்படியானால் இங்கு வேலைக்கு வருவது பற்றி ஐம்பதினாயிரம் கிடைத்தால்கூட யோசிக்கமாட்டாயா நீ?” 

“லக்ஷம் கிடைத்தாலும் யோசிக்க மாட்டேன், வரட்டுமா? என்று பதிலுக்குக் காத்திராமல் திரும்பிவிட்டேன்” என்றான் சம்பந்தம். 

அத்தியாயம்-34

நான் காபியில் கடைசிவாயை ருசிபார்த்துக் கொண்டே சிந்தித்தேன். இந்த சம்பந்தம் படிக்காதவன் அல்ல அவனே சொன்னது மாதிரி அவனுக்குக் கவிதை வந்தாலும் வரும். தன்னை உயர்த்திச் சொல்லிக் கொள்ளப் போதிய அறிவும் ஆற்றலும் அவனுக்கு இருந்தது. சுயசரிதம் எழுதுவதில் ஈடு பட்டுள்ள பலருக்கும் உள்ள ஆற்றல் அது. சம்பந்தம் தன் சுயசரிதத்தைச் சற்று சிறப்பாகவே சொல்லி என்னை நம்ப வைத்து விடுவான் என்று தோன்றியது எனக்கு. கதை சொல்லத் தெரிந்தவன் தன் குணாதி சயங்கள் வெளியாகும்படியாகக் கதையைச் சொல்லிக் கொள்வதில் அவனுக்குத் திறமை இருந்தது. 

எனக்கு வெகு நாளாக இருந்த சந்தேகம் ஒன்றைத் தீர்த்துக் கொள்ள இதுதான் சமயம் என்று தோன்றிற்று. கேட்டேன். “புதுச்சேரிச் சரக்கு புதுச்சேரிச் சரக்கு என்கிறாயே அது முக்கியமாக மதுவை மட்டும் குறித்தோ அல்லது பட்டு, கடிகாரம், தங்கம், செண்டு, இந்தமாதிரித் தீர்வையில்லாமல் புதுச்சேரியில் வந்திறங்கி மற்ற இடங்களைவிட மலிவாகப் புதுச்சேரியில் கிடைக்கிற எல்லா சரக்குகளையுமே குறிக்குமா?” என்றேன். 

“எல்லாச் சரக்குகளையும் தான்.”

“அவற்றை எப்படிக் கஸ்டம்ஸ் அதிகாரிகள் கண்களில் படாமல் கொணருவது?”

“அதெல்லாம் எத்தனையோ ரகசியமான வழிகளில் சாத்தியம். அது தெரிந்தால் எத்தனையோ பேர் இந்த இருபது முப்பது வருஷங்களில் கொள்ளைப் பணக்காரர்களாகி யிருப்பார்களே?” என்றான் சம்பந்தம். 

“உனக்கே இதுபற்றி வழிவகைகள் தெரியாது என்கிறாயா அல்லது பொதுவாகப் பலருக்குத் தெரியாது என்கிறாயா?” என்று கேட்டேன். 

“திப்பிலியாருக்கு ஒரு இருபது வருஷங்கள் லாபம் தந்துவந்த வியாபாரம் இந்தக் கள்ளக் கடத்தல் வியாபாரம்தான். அந்த இருபது வருஷங்களில் ஒரு பன்னிரண்டு வருஷங்களுக்கும் அதிகமாகவே நான் அவருடன் நெருங்கிய விதத்தில் பழகி யிருக்கிறேன். எனக்கே கள்ளக் கடத்தல் வழிகள் ஒன்றிரண்டு தான் தெரியும். உள்ள வழிகள் பலவற்றைப்பற்றி நான் நினைத்துப் பார்த்ததேயில்லை. ‘உனக்குச் சம்பந்தமில்லாததை நீ தெரிந்து கொள்ளாதிருப்பதே நல்லது என்பார்’ யசமானார்.” 

“இந்த வழிகளில் ஒன்றிரண்டு பற்றி மட்டுமே உனக்குத் தெரியும் என்கிறாயா?” 

“ஆமாம். அந்த இரண்டில் ஒன்றைப்பற்றி மட்டும் சொல்கிறேன்” என்றான் சம்பந்தம். “புதுச்சேரியில் குறிப்பிட்ட நபர்கள் மூலமே சரக்குகளை வாங்கிச் சௌகரியமான இடத்தில் சேர்த்துக் கொள்வார்கள். அவற்றை உரியபடி பாக் செய்து, வாட்டர் புரூப் கித்தான்கள் போட்டு உள்ளே தண்ணீர் புகுந்து சாமான்கள் வீணாகாதபடி செய்து கொள்வார்கள்.”

“எதற்காக?” 

“சொல்கிறேன். இந்தக் கட்டுகளை, கட்டுமரம் அல்லது படகின் அடிப் பாகத்தில் இருக்கும் வளையங்களில் மாட்டித் தொங்கவிட்டு விடுவார்கள். இந்தப் படகுக்கு இந்தக் கனத்துக்கு மேல் தாங்காது என்று தீர்மானித்துச் செய்வார்கள். படகுகள் சாதாரணமாக மிதந்து கொண்டிருக்கும். கள்ளச் சாமான்கள் உண்மையில் படகுக் கடியிலிருந்து கடலுக்குள் தொங்கிக் கொண்டிருக்கும். படகைச் சோதனை போட்டாலும் ஒன்றும் தெரியாது. அடியிலும் சோதனை போடுவார்கள் போல இருந்தால் அடிக் கொக்கிகளைச் சமயம் பார்த்து அவிழ்த்து விட்டு விடுவார்கள். சாமான்கள் இருந்த சுவடே தெரியாமல் கடலில் ஆழ்ந்துவிடும். கள்ளச் சாமானுடன் பிடிபட வேண்டிய தில்லை.” 

“சாமான் நஷ்டந்தானே?” 

“கள்ளச் சாமானுடன் அகப்பட்டுக் கொள்வதை விட சாமான் போகட்டும் என்று விட்டுவிடுவது நல்லது. நஷ்டப்பட்டதை அடுத்த டிரிப்பில் சமாளித்துவிடலாம் என்கிற தெம்புதான். இலங்கைக்கு அரிசியேற்ற வந்தவன் படகுகள் மூலம் இந்த வழியேதான் ஆயிரக்கணக்கான மூட்டைகளைக் கள்ளத்தனமாகக் கொண்டு போய்ச் சேர்த்தான். ஒரே ஒரு தடவை தான் இப்படி வந்த சாமான்கள் நஷ்டமாயின என்று நான் கேள்விப்பட்டேன்” என்றான் சம்பந்தம். 

“இலங்கையிலிருந்து வந்து ஒன்பது லக்ஷத்தையும் உயிரையும் பறிகொடுத்த அந்த ஏழுமலையால் திப்பிலியாருக்கு எவ்வித தொந்தரவும் ஏற்படவில்லையா? அந்த அரிசி வியா பாரியையோ அவன் கொண்டு வந்த ஒன்பது லக்ஷத்தையோ தேடிக்கொண்டு யாரும் வர வில்லையா?” என்று கேட்டேன். 

“யார் வருவார்கள்? யாருக்கு என்ன நிச்சயமாகத் தெரியும்? இந்த வியாபாரத்தில் எல்லாம் அவரவர் பாடு என்று ஒருவரை விட்டு ஒருவர் ஒதுங்கியே இருந்து விடுவார்களே தவிர வேறு எதுவும் செய்யமாட்டார்கள். கூட்டுச் சேர்ந்து ஏழுமலையைக் கொன்று கொள்ளையடித்த அதுதானே அவர்கள் செய்தது? ராஜவேலுவும் திப்பிலியாரும் சண்டை போட்டுக் கொண்டு ஒருவர் சாவுக்கு ஒருவர் காரணமானது ஒன்றுதான் விளைவு. அவர்கள் இருவருடைய பணத்துக்கும் முடிவுக்கும் காரணமாக, அஸ்திவாரமாக அமைந்தது ஏழுமலைதான்.” 

அத்தியாயம்-35

“பாக்கியையும் சொல்லி முடித்துவிடு, நேர மாகிறது, போகலாம்” என்றேன். 

“பாக்கி சொல்ல என்ன இருக்கிறது? எல்லா வற்றையும்தான் வரிசைப்படுத்தாவிட்டாலும் காமா சோமா என்று சொல்லி முடித்துவிட்டேன். சொல்ல இனி என்ன பாக்கியிருக்கிறது?” என்றான் சம்பந்தம். 

“ராஜவேலு இறந்தது யாரால்?” என்று நேரடி யாகவே கேட்டேன் நான். “நான் தான் அவனைக் கொன்றுவிட்டேன் என்று போலீஸார் குற்றம் சாட்டினார்கள். ஆனால் மீசைக் கார நடேசனைக் கொன்றதாகக் குற்றம் சாட்டப் பட்டிருந்தேன். இறந்தது 

மீசைக்கார நடேசன் அல்ல, ராஜவேலுதான் என்று சந்தேகமறத் தெரிந்த பின் என்னைக் குற்றவாளியல்ல என்று விட்டு விட்டார்கள். ஏன் குற்றம் சாட்டினார்களோ ஏன் விட்டார்களோ எனக்கே தெரியவில்லை.” 

“அதெல்லாம் கேட்கவில்லையே நான், ராஜவேலு இறந்துவிட்டான் யாராலோ சுட்டுக் கொல்லப் பட்டு. அவன் இறந்துவிட்டது உண்மைதானே?” 

“ஆமாம், போய்விட்டான். நான்தான் அவன் செத்துக் கிடந்ததைப் பார்த்தேனே!” 

“யார் கொன்றது அவனை?” 

“எனக்கு நிச்சயமாகத் தெரியாது, ஆனால் என்னால் ஒருவாறு யூகிக்க முடியும்.” 

“என்ன யூகிக்கிறாய் நீ?” 

“அந்த டாக்டர் சுந்தர்தான்…” 

“என்ன!” என்று ஆச்சரியத்துடன் கூவினேன் நான். 

“அதில் ஆச்சரியம் என்னங்க அவ்வளவு? கூட்டாளியா யிருக்கிறவங்களுக் கிடையே பகை மூளுவது சகஜந்தானுங்களே! திப்பிலியாரும் ராஜவேலுவும் உதாரணமில்லீங்களா?” 

“உண்மைதான். ஆனால் டாக்டர் சுந்தர் எதற்காக ராஜவேலுவைக் கொன்றிருக்க வேண்டும்?” என்று கேட்டேன். 

“அதற்கான காரணங்களையும் நான் யூகித்துத் தான் சொல்ல முடியுமே தவிர நேரடியாக அறிந்து சொல்ல முடியாது.’ 

“சொல்லு.” 

“டாக்டர் சுந்தரத்திடம் இருந்த பணத்தில் பெரும் பகுதியும் கரைந்துவிட்டது. ராஜவேலுவுக்கோ புதுசு புதுசாகத் தேவைகள் தோன்றிக் கொண்டிருந்தன. மேலும்…” 

“மேலும் என்ன?” என்றேன். 

“இதுதான் கேள்விப்பட்டது. சுந்தரி அம்மாள் மோஹத்தை மறந்துவிட்டு ராஜவேலு வேறு ஒரு சுந்தரியை நாட ஆரம்பித்து விட்டான் என்று டாக்டர் வீட்டு அம்மாளுக்குக் கோபம் வந்துவிட்டது.” 

“இந்த வயதிலா?” 

“வயது இதிலெல்லாம் ஒரு கணக்குங்களா?” 

“அப்படியிருந்தால் அந்த அம்மாள் அன்றே அவனைக் கொன்றிருக்க வேண்டும்.” 

“மறைமுகமாக அவுங்கதான் சொன்னாங்க. தன் கணவனிடம் தக்க காரணங்களைச் சொல்லி ராஜவேலுவைத் தீர்த்துவிடா விட்டால் தங்களுக்கு ஆபத்து என்று அவரை நம்ப வைக்கக் கெட்டிக்காரியான அந்த அம்மாளுக்கு எவ்வளவு நேரமாகி யிருக்கப் போகிறது. அதுவும் பணமும் பெரும்பகுதி கரைந்து விட்டபோது அவரை நம்ப வைப்பது மிகவும் சுலபமாகவேதான் இருந்திருக்கும்,” என்றான் சம்பந்தம். 

“நீ எப்படி அந்தக் கொலையைச் செய்ததாக மாட்டிக் கிட்டாய்? இப்படித் துண்டு துண்டாகச் சொல்வதற்குப் பதில் அந்தக் கதையை விவரமாகச் சொல்லு” என்றேன் நான். 

“நான் சாதாரணமாகப் புதுச்சேரி சாமான்களைக் கையாளுகிற கோஷ்டிகளுடன் சேருவதில்லை. அதற்குப் போதுமான சாமர்த்தியக் காரரான, பழக்கப்பட்ட ஆட்கள் திப்பிலியாருக்கு இருந்தார்கள். அவர்களில் ஒருவன் நகரில் தனியாக அகப்பட்டுக் கொண்டான் என்று அவனை ராஜவேலுவும் அவன் ஆட்களும் கழுத்தை முறித்து ஆற்றிலே எறிந்துவிட்டார்கள். அது திப்பிலியாருக்கே பின்னர்தான் தெரியும். அந்தச் சமயம் வண்டி ஓட்டிக்கொண்டு போக ஒரு ஆசாமி குறையவே, எனக்கு வண்டி ஓட்டத் தெரிந் திருந்ததால் எனக்கும் அச்சமயம் முக்கியமான வேலை இல்லாததால் என்னை வண்டி எடுத்துக்கிட்டுப் போகச் சொன்னார். அதற்கு முன்னும் சில சமயம் அப்படி நேர்ந்ததுண்டு. நடப்பது எதிலும் பட்டுக் கொள்ளாமல் நான் வண்டி ஓட்டிக்கொண்டு அது திப்பிலியாருடைய சொந்த பக்கார்டு அல்ல குறிப்பிட்ட ஒரு இடத்துக்குப் போய் ஆசாமிகளை இறக்கி விட்டுவிட்டு உடனே திரும்பிவிடுவேன். போன ஆசாமிகளை ஏற்றிச் செல்ல வேறு வண்டி வேறு தெருவில், திருப்பத்தில் காத்திருக்கும்.” 

“டாக்டர் சுந்தரம் எங்களுக்கு விரோதியாகப் போனபின் சாமான்களைக் கையாள நகரில் வேறு ஒருவர் தேவையாக இருந்தது. ஷாப்புக் கடை வைத்திருந்த ஜெயராம் முதலியாரை நாங்கள் இதற்கு உபயோகித்து வந்தோம். அந்தக் குறிப்பிட்ட ஊரில் ஜெயராம் ஷாப் மூலம்தான் எங்கள் புதுச்சேரிச் சரக்குகள் விலைபோய் வந்தன. கடைவீதிக்குப் பின் பக்கம் ஒரு குறு கலான சந்தில் ஒரு சிறு கேட்டைத் திறந்து கொண்டுபோனால் ஒரு பெரிய கிட்டங்கி இருந்தது. வெளியிலிருந்து பார்க்க அங்கு அவ்வளவு பெரிய கட்டிடம் இருப்பதே தெரியாது. வாசல் பக்கம் யாரோ பிச்சைக்காரர்கள் ஒதுங்கியிருப்பார்கள் அப்படி அவர்கள் ஒதுங்கி யிருப்பதற்கு அவர்களுக்கு நாள் ஒன்றுக்கு ஒரு ரூபா சம்பளம். பத்துப் பேராவது இருப்பார்கள். சாமான்களைக் கையாளுவதில் அவர்களில் நம்பகமான சிலரும் பங்கு பெறு வார்கள். கார் மட்டும் இல்லை. பெரிய கார் கூட உள்ளே போய் விடலாம். போய்க் கேட்டுக் கதவுகளை மூடிக்கொண்டு விட்டால் யாருக்கும் எதுவும் தெரியாது. அந்தக் கிட்டங்கிக்கும் ஜெயராம் ஷாப்புக்கும் இடையே ஒரு பாதை இருந்திருக்கவேண்டும். நான் அந்தக் கிட்டங்கிக்குள்ளோ, ஜெயராம் முதலியார் கடைக் குள்ளோ என்றைக்குமே போனதில்லை.” 

அத்தியாயம்-36

“அன்று வண்டியை எடுத்துக்கொண்டு அந்தக் கிட்டங்கி கேட்டுக்கு வெளியே என்னுடன் வண்டியில் வந்த ஆசாமிகளை இறக்கிவிட்டேன். உள்ளே போக வேண்டிய அவசியம் இல்லை. ஏனென்றால் பெரிய சாமான்கள் எதுவும் வரவில்லை. நூற்றுக்கணக்கான கடிகாரங்கள் மட்டும் கொண்டு வந்திருந்தார்கள். அதைச் சிறு கைப் பெட்டியிலோ, வேறு பாக்கெட் களிலோ மறைத்து வைப்பது சுலபமாக இருந்தது. கேட்டண்டை, உண்மையில் அந்தப் பக்கத்துச் சந்து திரும்பாமல் முனையிலேயே ஆட்களை இறக்கி விட்டேன். அவர்கள் மூவரும் ஒருவர் பின் ஒருவராகக் கேட்டைத் திறந்துகொண்டு உள்ளே போனபின் நான் வண்டியைத் திருப்பிக்கொண்டு திப்பிலியாபுரம் போகக் கிளம்பினேன். அநாவசியமாக நகரில் இருந்து, ராஜவேலு அல்லது டாக்டர் வீட்டு அம்மாள் யாருடைய கவனத்தையாவது கவர நான் விரும்பவில்லை. அநாவசியமாக வம்பு எதிலாவது மாட்டிக் கொள்வானேன்? தவிரவும் என் கடமை என் யசமானர் வீட்டைப் பாதுகாப்பதுதான். அது சற்றுச் சுலபமான வேலையும் கூட. ஏனென்றால்

ராஜவேலு தன் மகளைத் தன்பக்கம் இழுத்துக்கொள்ள எப்படி எப்படியோ முயற்சி செய்தான். சமயம் நேர்ந்த போதெல்லாம் சொல்லி யனுப்பினான். ஆனால் திப்பிலியாருடைய மகனைத் தவறுதலாகக் கொன்று தலையைக் கொய்த பிறகு, அந்தக் கமலத்துக்கு எதுவும் ஆபத்து விளைவிக்கும் படியாக எதுவும் செய்யவில்லை. ஆனால் அதுவே போதும் போதும் என்றிருந்தது கமலத்துக்கு. இருந்த ஒரு பிள்ளையோ போய்விட்டான்; கணவனுக்கும் எந்த நிமிஷத்தில் என்ன ஆபத்து நேருமோ என்ற பயமும் கவலையும் வேறு ஆளே உருமாறிவிட்டாள். பழைய அழகு, உடல் வலு, திடம் எல்லாம் கரைந்துவிட்டது. என் கண் எதிரிலேயே இரண்டு வருஷங்களில் நாற்பது வருஷங்கள் அதிக வயது ஆகிவிட்டது போலக் கிழவியாகிவிட்டாள் அவள். அவளைப் பாதுகாப்பதுதான் என் கடமை.”

“நான் செங்கழுநீர்ப் பிள்ளையார் கோயில் தெரு திரும்பிக் காரைக் கொள்ளிடக்கரை நோக்கி ஓட்டிக் கொண்டிருக்கும் போது என் கண் எதிரே ஒருவன் நடுரோட்டில் துள்ளி விழுவது தெரிந்தது. அடுத்த விநாடியே துப்பாக்கிச் சப்தமும் கேட்டது. குறுகலான தெரு. உயரமான வீடுகள் பல உள்ள தெரு. துப்பாக்கிச் சப்தம் எங்கிருந்து கேட்டு எப்படி எதிரொலித்தது என்று தெரியவில்லை. எங்கேயோ வீட்டுக்குள்ளிருந்து மாடி வராண்டாவில் நின்றபடியோ, ஜன்னல் வழியாகவோ சுட்டிருக் கிறான் என்று அனுமானிக்க முயன்றேன்.” 

“காரைக் கொண்டுபோய் நிறுத்தி நான் இறங்கி ஆசாமியைப் பார்ப்பதற்குள், எதிரிலிருந்த புஸ்தகக் கடை வாசல் கதவைத் திறந்துகொண்டு புஸ்தகக் கடை அய்யா வந்துவிட்டார். கீழே கிடந்தவன் இறந்துவிட்டான். இனி நான் செய்யகூடியது ஒன்றும் இல்லை. போகலாம் என்று திரும்புகிற சமயத்தில் வேறு நாலு பேர் வந்துவிட்டார்கள். அதில் இருவர் டாக்டர் சுந்தரின் ஆட்கள் என்று ஓரக்கண்ணால் கவனித்தேன். அவர்கள் நால்வரும் என்னைக் கெட்டியாகப் பிடித்துக்கொண்டு கூக் குரலிடவே கூட்டம் கூடிவிட்டது. நான் தப்பித்துக்கொண்டு போயிருக்கலாம். அப்படிப் போயிருந்தால் நான்தான் அவனைக் கொன்றுவிட்டு ஓடிவிட்டேன் என்று ஊர்ஜிதம் ஆகியிருக்கும். என் மடியில் துப்பாக்கியிருந்தது. அதை நான் எடுக்கவே யில்லை. எடுத்திருந்தால் துப்பாக்கியைக் குறிபார்த்துச் சுடத்தான் எனக்கு ஆசையிருந்திருக்கும். துப்பாக்கி என் கையிலிருந்தால் என் விரல்களைக் கட்டுப்படுத்த என்னால் முடிந்திருக்காது. கூட்டத்தில் ஒருவன் என்னை அடிக்கக்கூட அடித்துவிட்டான். அதையும் பொறுத்துக் கொண்டு பேசாதிருந்தேன்.” 

“போலீஸ் வந்தது. கீழே குப்புற விழுந்து கிடந்த மனிதனை அவர்கள் புரட்டிப் போட்டதும் நான் மீசைக்கார நடேசன்!” என்றேன். 

“ஃபிரான்ஸிஸ் தான் போலீஸ் கோஷ்டியுடன் வந்திருந்தார். ‘இந்த ஆசாமியைத் தெரியுமா உனக்கு?’ என்றார்.” 

“தெரியும். திருவாலூரான். மீசைக்கார நடேசன் என்று பெயர்” என்றேன். முதலில் அப்படித்தான் நினைத்தேன். பிறகுதான் மீசையில்லாத நடேசன் அவன் ராஜவேலுவேதான் – என்று எனக்குத் தெரிய வந்தது. இருவரும் உருவத்தில் ஒத்திருப்பார்கள் இரட்டையர்கள். இவர்களில் ஒருவருக்குப் பிறந்தவள்தான் அந்தக் கமலம் யாருக்கு என்று நிச்சயமாக அவர்களுக்கே தெரியாது. அவள் தாயாருக்குக் கூடத் தெரியாது என்று சொல்வார்கள். இரட்டையர்கள் இருவருக்குமே வைப்பாக இருந்தவள் கமலத்தின் தாயார். 

“இதெல்லாம் உங்களுக்குச் சொன்னேன். நான் போலீஸ் காரர்களிடம் வேறு எதுவும் சொல்லவில்லை. ‘நீ திப்பிலி யாருடைய டிரைவர்தானே? உன் பெயர் சம்பந்தம், இல்லையா?’ என்று கேட்டார்.’ 

“ஆமாம்” என்றேன், மறைப்பானேன்? 

“இந்த ஆசாமி உங்களுக்கு எதிரியான ராஜவேலுவின் ஆள் இல்லையா?” என்றார் ஃபிரான்ஸிஸ். 

“அது எனக்குத் தெரியாது. ராஜவேலுவும் மீசைக்கார நடேசனும் சகோதரர்கள் இரட்டையர்கள்” என்றேன். 

“அப்படியா? ஏ 834! போய் ராஜவேலுவை அழைத்துவா!” என்று ஒரு கான்ஸ்டேபிலுக்கு அவர் உத்தரவிட்ட போதுதான் கீழே செத்துக் கிடப்பது ராஜவேலுதான், மீசைக்கார நடேசன் என்று நான் எண்ணியது பிசகு என்று எனக்கே 

தெரிந்தது. நான் ராஜவேலுவைப் பார்த்தே பல வருஷங்களாகிவிட்டன. அதனால் தான் உடனே அவனை அடையாளங் கண்டு கொள்ள முடிய வில்லை. யசமானுக்குச் சொல்ல நல்ல செய்திதான் இது என்று மனசில் பூரித்துப் போனேன். அங்கிருந்தவர்களிடம் நான் எதுவும் சொல்லவில்லை. 

“உனக்குத் துப்பாக்கி சுடத் தெரியுமா?” என்று கேட்டார் போலீஸ் ஹேட். 

“நன்றாகச் சுடுவான். சம்பந்தத்தின் குறி தப்புவதில்லை” என்றார் ஃபிரான்ஸிஸ் எனக்குப் பதிலாக. 

“துப்பாக்கி என் மடியில் இருக்கிறது. குறி ஏதாவது சொல்லுங்கள், சுட்டுக் காண்பிக்கிறேன் நான் குறி தப்பாதவன் என்பதை” என்றேன். 

“நாலைந்து வருஷங்களாகவே திப்பிலியார் வீட்டுத் திண்ணையில் உட்கார்ந்து கைத்துப்பாக்கியை வைத்துக் கொண்டு மாறி மாறிக் குறிபார்த்துச் சுட்டுப்பார்ப்பதை ஒரு சாதகமாகச் செய்தவன் நான். எந்தப் புள்ளி போன்ற குறியைக் காட்டினாலும் இரு நூறு அடிக்குள் இருந்தால் பிசகாமல் சுட்டுவிடுவேன். அதுபற்றி இன்ஸ்பெக்டர் ஃபிரான்ஸிஸுக்கும் தெரியும் போலும்.” 

“என் மடியில் துப்பாக்கி யிருக்கிறது என்று கேள்விப் பட்டதும் கூட்டம் சற்றுக் கலகலத்தது. போலீஸ்காரர்களுக்கே சற்று பயந்தான். ஆனால் நான் அலக்ஷியமாக ‘இன்று இன்னமும் துப்பாக்கியை எடுக்கவில்லை. நீங்களே எடுத்துப் பார்த்துவிட்டு மீசைக்கார நடேசனைக் கொன்றவனைக் கண்டு பிடித்ததும் திருப்பிக் கொடுத்துவிடுங்கள்” என்று ஃபிரான்ஸிஸிடம் தந்து விட்டேன். 

“அத்துடனேயே என்னை விட்டிருக்க வேண்டும் இன்ஸ் பெக்டர். அவருக்கு நான் கையில் சிக்கிவிட்டது பற்றிப் பரம சந்தோஷம். ராஜவேலு அவருக்கு அவ்வளவு பணம் தளர்த்தி யிருந்தான் என்றுதானே அர்த்தம் அதற்கு? என்னை லாக்கப்பில் அடைத்துவிட்டார் என் துப்பாக்கி அன்று சுடப்படவே யில்லை. 

மறுநாள் தகவல் கிடைத்ததும் உடனே திப்பிலியார் வந்து எனக்கு பெயில் வாங்கித் தந்தார். கீழ் போலீஸ் விசாரணையும் செஷன்ஸ் விசாரணையும் அநாவசியமாகவே நடந்தது. ராஜ வேலுவை எங்கும் காணவில்லை எனினும், இறந்தது ராஜ வேலுதான் என்று முதலில் ஃபிரான்ஸிஸுக்குத் தெரியவில்லை. மீசைக்கார நடேசனைக் கொன்ற குற்றத்துக்காகவே என்னை விசாரித்தார்.” 

“திப்பிலியாருடைய வக்கீல், அந்த மீசைக்கார நடேசன் எங்காவது உயிருடனிருந்தால் கொண்டு வந்தால் கேஸ் நம் பக்கம் ஜெயமாகிவிடும் என்று யோசனை சொன்னார். நான்தான் அந்த நடேசனைக் கண்டுபிடித்து வந்தேன். அவனுக்கு திப்பிலியார் ராஜவேலு விவரங்கள் எதுவுமே தெரியாது. கும்பகோணத்திலே எங்கோ ஒரு மூலையில் ஒரு பெட்டிக் கடை வைத்துக் கொண்டு பிழைத்து வந்தான். அவனை ஆஜர் படுத்தினதும், அவன்தான் மீசைக்கார நடேசன் என்று ருஜுப் பித்தும், இறந்தது யார் என்கிற பிரச்னை எழுந்தது. விஷயம் அதற்குள் ஃபிரான்ஸிஸ் கையை விட்டுப் போய்விட்டது. ராஜ வேலுவைக் கொன்றவர்கள் ஏராளமான பணத்தைப் போலீஸுக்குத் தந்து இறந்தது யார் என்கிற பிரச்னை தீராமலே செய்து விட்டார்கள். ராஜவேலுதான் இறந்தது என்று கோர்ட்டார் கேஸ் எடுத்தால், ராஜவேலு உயிருடனிருப்பதாகவும் தங்கள் அலுவலாக அவன் மலேயா போயிருப்பதாகவும், மீசைக்கார நடேசனைப் போலவே அவனைக் கோர்ட்டில் ஆஜர் செய்து போலீஸைப் பார்த்து ஊர் சிரிக்கும் படி செய்து விடுவேன் என்றும், டாக்டரும் அவர் மனைவியும் போலீஸ் துரையிடம் சொன்னதாகக் கேள்விப்பட்டேன். இதை யெல்லாம் வைத்துத்தான் டாக்டர் தம்பதிகள் மூலமாகத்தான் ராஜவேலு இறந்திருக்க வேண்டும் என்று அனுமானித்துக் கொண்டேன்.” 

அத்தியாயம்-37

“அதற்குப் பிறகு நீ டாக்டரைப் போய்ப் அது பார்க்கவில்லையே!” என்று கேட்டேன். 

“பார்க்காமலிருப்பேனா? நேற்றுக்கூடப் போய்ப் பார்த்தேன். டாக்டர் கண்ணில் படவில்லை. டாக்டர் வீட்டு அம்மாளைத்தான் பார்த்தேன். ‘இப்படி யெல்லாம் நடந்துவிட்டதே. ராஜவேலு அநியாய மாகப் போய்விட்டானே’ என்று அப்போது துக்கமே விசாரித்தேன். ‘நிஜமாகவே நீ துக்கப்படுகிறாயா?’ என்று கேட்டாள் அந்த அம்மாள். ‘நான் துக்கப்பட வில்லை. அப்படிச் செத்தது ராஜவேலுதான் என்று நீ நினைத்தால் அது உண்மையாகவும் இருந்தால், அவன் அப்படித் துப்பாக்கியினால் இறந்தது நியாயமே என்று எனக்குத் தோன்றுகிறது!” 

“இருந்தாலும் என் யசமானி அம்மாளின் தகப்பனார் அல்லவா?” என்றேன் நான். 

“திப்பிலியாரும் தீர்ந்துவிட்டால்….” என்று சொல்லி வாக்கியத்தை முடிக்காமலே நிறுத்தினாள் அந்த அம்மாள். 

“அந்த அம்மாளுடைய கெட்டிக்காரத்தனம் எனக்குத் தெரிந்தது. அந்த வழியில் சிந்தனை செய்து எப்படியாவது திப்பிலியாரையும் இல்லாமல் ஆக்கிவிட்டால் இந்த யுத்தமும் அதன் விளைவுகளும் ஒரு வழியாக முடிந்துவிடும். அதற்குப் பிறகும் புதுச்சேரிச் சரக்குகளுக்கும் கிராக்கி யிருந்துகொண்டு தான் இருக்கும் யாராவது அந்த வியாபாரத்தைத் தொடர்ந்து நடத்திக் கொண்டுதான் இருப்பார்கள். ஆனால் நம்மைப் பிடித்த தொல்லையும் வெறியும் நீங்கிவிடுமே என்ற யோசனை எனக்கு.” 

“யோசிக்க யோசிக்க அது ஒன்றுதான் சிறந்த வழி என்று தோன்றிற்று எனக்கு. அதைத் திப்பிலியாரிடமும் சொன்னேன். ‘பெரிய சாம்ராஜ்யம் தான் அது லக்ஷக் கணக்கில் பணம்தரக் கூடிய சாம்ராஜ்யம் அது. ராஜவேலு எவ்வளவோ முயன்றும், வீணாகிவிடாத சாம்ராஜ்யம்தான் அது. இன்னமும் பல லக்ஷங்கள் வாரிக் கொணர்ந்து தரக்கூடிய வியாபாரம் தான் அது. அவ்வளவையும் விட்டுவிட்டு என்ன பண்ணுவது எப்படிப் பொழுது போகும் என்று’ திப்பிலியார் வெகுவாகத் தயங்கினார். நான் வற்புறுத்திச் சொல்லச் சொல்ல, கமலம் படுகிற துயரமும், திப்பிலியார் வெளியே கிளம்பிவிட்டால் கவலையும் ஏக்கமும் அவளைப் பீடிப்பதும் தாங்க முடியாத கனமான சுமையாகத்தான் இருந்தன. கமலத்திடம் விரிவாக எங்கள் திட்டத்தைச் சொல்லவும் முடியாது. எங்களிருவரையும் தவிர விஷயம் யாருக்கும் தெரியாமல் முடிய வேணும்.” 

“என்ன திட்டம்? என்ன விஷயம்?” என்று கேட்டேன். 

அத்தியாயம்- 38

“பெரிய கதாசிரியர் என்கிறீங்க? இத்தனை சின்ன விஷயம் புரியல்லியே உங்களுக்கு” என்று என்னைக் கேலி செய்தான் சம்பந்தம். “எதிரி செத்து மடிந்தான். திப்பிலியாருக்கிருந்த ஒரு பிள்ளையும் போய்விட்டது. யாருக்காக அவர் சம்பாதிக்க வேண்டும்? நாலு நாள் திப்பிலியார் ஈசுவரன் சந்நிதானத்திலே போய் நின்றுவிட்டு வந்து நான் சொன்ன வழி தான் சிறந்தவழி என்று தீர்மானித்து ஏற்றுக் கொண்டார்.” 

“திப்பிலியார் செத்துவிட்டதாக நாடகம் ஜோடித்து விட்டு அவரை மறைய வைத்துவிடவேண்டும். கமலத்துக்குக்கூட இது முதல்லே தெரியக்கூடாது. வேறு ஊரில் போய்க் கொஞ்சம் பணத்தை வைத்துக் கொண்டு ஏதாவது ஒரு வீட்டை வாங்கிக்கொண்டு புது வாழ்வு வாழத் தொடங்க வேண்டும். தொந்திர வில்லாமல் ஏதாவது தொடங்கவேண்டும். இதுதான் யோசனை.” 

“இதெல்லாம் ஏதோ அமெரிக்கக் கதைப் பத்திரிகையில் படிக்கிறமாதிரி இருக்கிறதே தவிர நம் ஊரில் நடப்பதாகத் தெரியவில்லையே!” என்றேன். 

“நம் ஊர்க்காரர்களைப் பற்றி நீங்கள் மட்டமாக நினைக் கிறீர்கள், அவ்வளவுதான்” என்றான் சம்பந்தம். “நம் ஊரில் அதைவிடவும் அதிசயமாகப் பல விஷயங்கள் நடக்கின்றன, அவற்றைப் பரபரப்பு செய்து நம் பத்திரிகைகளில் போட்டு எழுதுவதில்லை. வெள்ளைக்காரன் எழுதியிருக்கிற கதையையே எழுதிவிட்டுப் பலரும் ஆசிரியர்கள் என்று சொல்லிக்கொண்டு நடமாட வந்து விடுகிறார்கள்.” 

“உனக்கு இலக்கிய விமரிசனம்கூட வரும் போல இருக்கு.” 

“அப்படியென்றால்….?” என்றான் சம்பந்தம். 

“எனக்கு என்னவோ நம்பிக்கையில்லை” என்றேன். 

“எனக்கு ஒரு கதையை இப்படி ஜோடித்துச் சொல்லத் தெரியுமா சொல்லுங்கள்” என்றான் சம்பந்தம். 

“எனக்கே வராது. நான் தமிழ் நாட்டுத் தொடர் கதை ஆசிரியன் அல்ல என்பதனால் நடக்காத நடக்கமுடியாத சுவாரசிய மான சம்பவங்களை ஜோடித்துச் சொல்ல எனக்கே வராது” என்றேன். 

“நடந்ததைத் தவிர வேறு எதையும் நான் சொல்லலைங்க” என்றான் சம்பந்தம். “போலீஸ் காரனிடம் புளுக வேண்டும். உங்களிடம் புளுகுவானேன்? உண்மையைத் தான் அப்படியே எனக்குத் தெரிந்தவரையில் சொன்னேன்.” 

“உண்மை எது? புளுகு எது? நடந்தது எது என்று யார் சொல்வது? நீ சொன்னதில் நாலைந்து பகுதிகளை நானும் அவ்வப்போது அது நடந்த சமயத்தில் அறைகுறையாகக் கேள்விப் பட்டும் இருக்கிறேன். ஆகவே நீ சொல்வது பூராவும் உண்மை யாகவே இருக்கலாம் என்றுதான் எனக்குத் தோன்றுகிறது” என்றேன் நான். 

“உண்மைதான் பூரணமாக நம்பலாம்” என்றான் சம்பந்தம். 

அத்தியாயம்-39

சுற்றுமுற்றும் யாருடைய வரவையோ எதிர் பார்ப்பவன் போலப் பார்த்தான் சம்பந்தம். பிறகு “அதோ இடது பக்கத்தில் மூன்றாவது மேஜையில் தனியாக வந்து உட்கார்ந்திருக்கிறாரே பெரியவர் அவருக்கு உங்களிடம் ஏதோ வேலையிருப்பது போல இருக்கிறது. அடிக்கடி உங்களையே பார்க்கிறார்” என்றான். 

நான் திரும்பிப் பார்த்தேன். வயது அறுபதிருக்கும் சிவந்த மேனியும், பருத்த தொந்தியும், சட்டை யில்லாத உடம்பும், குறுக்கே போட்டிருந்த அங்க வஸ்திரமுமாக உட்கார்ந்திருந்த மனிதரை எனக்குத் தெரியவில்லை. பளிச்சென்றிருந்த நெற்றியிலே பளிச்சென்று நாலு விரல் படிய விபூதியிட்டு அதன் மேல் சந்தனமும் குங்குமப் பொட்டும் வைத்திருந் தார். அவர் என்னையேதான் பார்த்துக் கொண்டிருந்தார். 

“தெரியவில்லையே எனக்கு… எதற்காக அவர் என்னைத் தேடப் போறார்?” என்றேன். 

“கூப்பிட்டுக் கேட்டு விடுவோமே!” என்றான் சம்பந்தம். கையை, “வா” வென்று அவரை நோக்கி ஆட்டினான். 

அதற்காகவே காத்திருந்தது போல எழுந்து வந்த பெரிய வரிடம் “கமலாவைத் தேடுறீங்களா?” என்றான் சம்பந்தம். 

“இல்லையே!” 

“தெரியுமா இவரை யாருன்னு?” என்று சம்பந்தம் மீண்டும் விசாரிக்கவே வந்த பெரியவர் “உன்னோடு பேசிக் கொண்டிருப்பது யார் என்று சின்னையாவை விசாரித்து அறிந்து கொண்டேன்” என்றார். 

“உன்னோடு” என்று அவர் சொன்னவுடனேயே நான் விஷயத்தைப் புரிந்துகொண்டேன். நான் புரிந்துகொண்டேன் என்பதை சம்பந்தமும் கண்டு கொண்டான். 

“உட்காருங்கள் ஐயா, உங்களைப் பற்றித்தான் இத்தனை நேரமும் சம்பந்தம் சொல்லிக்கொண்டிருந்தான்” என்றேன். 

“பேஷ்!” என்றான் சம்பந்தம். “பெயரெல்லாம் சொல்ல வேண்டாமுங்க.” 

“என்னைப் பத்தியா? என்னைப் பத்திச் சொல்ல என்ன இருக்கிறது? சம்பந்தத்துக்கும் என்ன தெரியும்?” 

“அது போவட்டும். ஐயாகிட்ட அந்தத் திப்பிலியாரை எப்படிக் காப்பாத்தி, அவர் செத்துவிட்டதாகப் பிறரை நம்ப வைத்து, அப்புறப் படுத்திவிட்டோம் என்று சொல்லிக் கொண்டிருந்தேன். குறையையும் கேளுங்க. ஒரு நாள் மந்திரி குமாரி கிட்ட வாங்கின காரிலே அதை இன்னும் வித்துப் போட வில்லை. இனிமே வித்துப்போடலாம் திப்பிலியார் உட்காருகிற மூலையில் நான் உட்கார்ந்து சவாரி செய்தேன். அதைத்தான் இன்ஸ்பெக்டர் ஃபிரான்ஸிஸ் சொன்னார். என்பக்கத்தில் உட்கார்ந்திருந்த திப்பிலியாரைச் சமயம் பார்த்துச் சுட்டுக் கொன்றுவிடுவது என்று ஏற்பாடு. நிர்மானுஷ்யமான பாதை அது. புது டிரைவர் ஒருவன் காரை ஓட்டிக்கொண்டு வந்தான்.”

“ஒரு மூலையில் ஒரு போலீஸ்காரனை கார் ஓட்டத் தெரியாத போலீஸ்காரன் ஒருவனை வரச்சொல்லி யிருந்தேன். அவன் திரும்பி சைக்கிளில் பாதையில் வருகிற சமயம் பார்த்து நான் துப்பாக்கியெடுத்துச் சுட்டேன். செத்து விழுந்தவர் போலத் திப்பிலியார் காருக்குள்ளேயே விழுந்தார். கார் ஓட்டி வந்தவன் சட்டென்று காரை நிறுத்திவிட்டுத் திரும்பியே பார்க்காமல் ஓடி மறைந்துவிட்டான். அப்படிச் செய்வதற்காக அவனுக்கு ஒரு ஆயிரம் கூலி பேசியிருந்தேன். அவன் ஊருக்குப் புதியவன் பட்டணத்திலிருந்து வந்தவன். நாங்கள் யார் என்றுகூட அவனுக்குத் தெரியாது. போலீஸ்காரன் துப்பாக்கிச் சப்தம் கேட்டுச் சற்றுத் தயங்கினான். அவன் பக்கம் நான் துப்பாக்கியை நீட்டியதும் அவன் சைக்கிளைத் திருப்பிக் கொண்டு பறந்து விட்டான் உதவி தேடிக்கொண்டு போலீஸ் படையுடன் வர அவனுக்கு முக்கால் மணி நேரத்துக்கு மேல் வேண்டும்.”

“அந்த முக்கால் மணி நேரத்தில் மறைவாக நிறுத்தி வைத்திருந்த ஒரு காரில் ஏற்றிக்கொண்டு நான் ஓட்டிவர, சில நாழிக்குள் கும்பகோணத்துக்கு வண்டியேறிவிட்டார். நான் நேரே திப்பிலியாபுரம் சென்று கமலத்தம்மாளிடம் திப்பிலி யாருடைய கடிதத்தை ஏற்கெனவே யோசித்துத் தயார் செய்து வைத்திருந்த கடிதம் அது கொடுத்துவிட்டுப் போலீஸ்காரரின் வரவுக்குக் காத்திருந்தேன்.”

“கமலத்தம்மாவுக்கு திப்பிலியாரே கைப்படக் கடிதம் எழுதியிருந்தார். தான் செத்துவிட்டதாகப் பாசாங்கு செய்து கொண்டு மறைந்திருக்க வேண்டிய அவசியம் இருந்ததாகவும், போலீஸ்காரர்கள் வந்து என்னைத் திப்பிலியாரைக் கொலை செய்ததாகக் குற்றம் சாட்டினால் நம்பிவிடக் கூடாது என்றும், அன்று பகல் பூராவும் நான் வீட்டைவிட்டே போகவில்லை என்றும், கார் எடுத்துப் போகவில்லை என்றும் திடமாகப் போலீஸிடம் சாட்சி சொல்ல வேண்டும் என்றும் திப்பிலியார் எழுதியிருந்தார். ஒன்றிரண்டு வருஷங்களில் கமலம் தன்னுடைய சொத்து சுதந்திரங்களை எல்லாம் விற்று எடுத்துக்கொண்டு தன்னுடன் வந்துவிடலாம் என்றும், அதுவரையில் விதவையாகி விட்டது போல் நடிக்க வேண்டியது அவசியம் என்றும், கடிதத்தைப் படித்து விட்டு அடுப்பில் போட்டு எரித்துவிடவும் என்றும் எழுதியிருந்தார்.’ 

“அப்படியே நடந்தது. போலீஸ்காரன் நான் திப்பிலியாரைச் சுட்டதாகச் சாட்சி சொன்னான். கமலத்தம்மாளோ நான் வீட்டை விட்டுப் போகவேயில்லை என்றும், பாகார்டு காரை வேறு யாரோ எடுத்துப் போனான் என்றும், புதுக் காரோட்டியும், புது ஆளும் என்றும் சொன்னாள். பாகார்டு கார் நாங்கள் விட்ட இடத்திலேயே இருந்தது. அதில் ஸீட்டில் ரத்தக் கறை எதுவும் இல்லை. 

“பெரிய துரையே வந்தார்: ‘உன்னை அரெஸ்டு செய்யப் போகிறேன். என்ன சொல்கிறாய்?’ என்றார்.” 

“எதற்காக?” என்றேன். 

“திப்பிலியாரைக் கொலை செய்ததற்காக” என்றார். 

“திப்பிலியார் கொலையுண்டு விட்டாரென்றால் அவர் உடல் எங்கே?” என்றேன். ‘முன் ஒரு தரம் யாரையோ கொன்று விட்டேன் என்று என்னை அரெஸ்ட் செய்து நீங்கள் செத்ததாகச் சொன்ன ஆசாமி உயிரோடு இருப்பதைக் கண்டதும் முகத்தில் கரிபூசிக் கொண்டீங்க. அதேமாதிரி ஆகப் போவுது இப்பவும், என் யசமான் சாகவில்லை’ என்றேன். 

“அம்மா அழறாங்களே!’ என்றார் துரை.” 

“நான் பதில் சொல்லவில்லை.” 

“மறுநாள் போலீஸ் கண்காணிப்பு சரிவர இல்லாத சமயம் பார்த்து ஏதோ ஒரு கொடும்பாவி கட்டி அதை மயானத்துக்கு இழுத்துச் சென்று கொளுத்திவிட்டு, அன்று மாலையே எலும்புகளைப் பொறுக்கிக் கரைக்கிற சடங்கையும், எலும்போ பிரேதமோ இல்லா விட்டாலும் செய்து முடித்தோம்.”

“ஊரார் மூலம் விஷயம் அறிந்த போலீஸார் கமலமும் திப்பிலியார் கொலைக்கு உடந்தையோ என்று சந்தேகித்து வாட்ட ஆரம்பித்துவிட்டார்கள். ஆனால் அவள் வீட்டை விட்டுக் கிளம்பவில்லை என்பதும் தெளிவாகியது. கணவன் இறந்துவிட்டான் என்று கமலம் அழுதாள். நான் திப்பிலியார் இறக்கவேயில்லை என்று சந்தித்தேன். என்னை அரெஸ்டு செய்து லாக்கப்பில் ஒருவாரம் அடைத்து வைத்தார்கள். ஒரு வாரத்தில் என் குற்றத்தை நிரூபித்து விடுகிறேன் என்று சவால் கூறினார் துரை. ஆனால் அந்த ஒரு வாரத்திற்குள் அவர்கள் என்னை விடுவித்துவிட்டார்கள்.” 

“இந்த நிலைமையில் நீங்கள் இங்கு வருவது நல்ல தல்லவே” என்று புதிதாக வந்த பெரியவரைக் கேட்டேன் நான். 

“அதிலே தவறில்லை” என்று சம்பந்தம் கூறினான். அவர் சொன்ன பதிலால் அவர் எவ்வளவு தூரம் சம்பந்தத்தை நம்பி யிருந்தார் என்பது தெரிந்தது. 

“என்னங்க தப்பு? போலீஸ்காரங்க திப்பிலியாருடைய சவத்தைத் தேடிக்கிட்டிருக்காங்க! அந்தத் தேடலைக்கூட அவுங்க முன்னரே கைவிட்டிருப்பாங்க. ஒருத்தரே ஒருத்தர்தான் நம் எதிரிகளிலே ஒருத்தருக்குத்தான் விஷயம் தெரியும் அதுவும் எனக்கு நேத்துத்தான் தெரிந்தது.” 

“யாருக்கு? டாக்டர் வீட்டு அம்மாளுக்கா?” என்று கேட்டேன் நான். 

“உண்மையிலேயே நீங்க கெட்டிக்காரருதான் ஐயா” என்றான் சம்பந்தம். எனக்குத் திருப்தியாக இருந்தது. 

அத்தியாயம்-40

“நேற்றுப் போய் அந்த அம்மாளைப் பார்க்கப் போனேன்; கொழுப்புதான். போகாதிருந்தால் நிம்மதியாக இருந்திருக்கும். போனவுடனேயே அம்மா கேட்டாங்க ‘திப்பிலியார் புது இடத்திலே சௌகரியமாக இருக்காங்களா? எப்ப கமலத்தம்மா வெல்லாம் அங்கே போறாங்க?’ என்று கேட்டாள்.” 

“எனக்குத் தூக்கிவாரிப் போட்டது. ‘எங்கே இருக்காங்கன்னு கூடச் சொல்லிடு வீங்களோ?’ என்றேன்.” 

“விசாரித்துத் தெரிஞ்சுக்கறது சிரமம் இல்லை. நமக்கு எதற்கு அதைப்பற்றிக் கவலை என்று விட்டு விட்டேன்” என்றாங்க. 

“போலீஸிடம் காட்டிக் கொடுக்காதிருங்க. புண்ணிய முண்டு” என்றேன் கெஞ்சினாப் போல. 

“போலீஸ்காரங்க எங்களுக்கு மட்டும் வேண்டிய வங்களோ?” என்று கேட்டாள் அந்த அம்மணி. அதற்கப்புறம்தான் எனக்கு நிம்மதியாயிருந்தது. 

இப்படிச் சம்பந்தம் சொல்லிக் கொண்டிருக்கும் போதே ஒரு அம்மாள் சின்னையா பின் தொடர உள்ளே வந்தாள். அவள் அழகும் காம்பீர்யமும் சேர்ந்து அவள் தான் டாக்டர் சுந்தரத்தின் மனைவி சுந்தரியாக இருக்க வேண்டும் என்று புரிந்துகொள்ள எனக்கு நேரமாகவில்லை. ஒருதரம் சம்பந்தத்தை நிமிர்ந்து பார்த்தேன். அவன் முகமே காட்டியது அவன் மனோ நிலையை. 

அருகில் வந்ததும் சின்னையா முதலில் என்னை அந்த அம்மாளுக்கு அறிமுகம் செய்து வைத்தான். எழுந்து நின்று நான் “நமஸ்காரம்” என்றேன். “நமஸ்தே” என்று பதில் வணக்கம் தெரிவித்த டாக்டரின் மனைவி “எங்க அண்ணாரு, சம்பந்தம். அவரை உங்களுக்குத் தெரியும்” என்று சின்னையன் சொன்னதைக் காதில் வாங்காமலே எங்களிருவருடன் புதிதாக வந்து உட்கார்ந்து பேசிக் கொண்டிருந்த பெரியவரை அணுகி “நான் உங்களை இதுவரை நேரில் பார்த்ததில்லை. ரொம்பவும் கேள்விப்பட்டிருக்கிறேன். வணக்கம்” என்றாள். 

“வணக்கம்” என்று தடுமாறினார் பெரியவர். 

“ஊரைவிட்டே போய்விடுவது என்று தீர்மானித்து விட்டீங் களாம். அதுவும், உங்கள் தீர்மானம் என்பதனால் நல்லதுதான். உங்கள் மனைவியையும் அழைத்துக்கொண்டு போகிறீர்களாமே! அதுவும் நல்ல முடிவு தான். அந்த அம்மா ரொம்பவும் கஷ்டப் பட்டு விட்டாங்க. திப்பிலியாபுரம் வந்ததிலேயிருந்தே அவுங் களுக்கு ஒரு சுகமும் இல்லை.” 

“ஆமாம்.” 

“திப்பிலியாபுரத்து மில்லை என் தம்பி ஒருவனுக்காக வாங்கித் தர வேண்டும் என்று டாக்டரும் நானும் பேசிக் கிட்டிருந்தோம். விற்பதாயிருந்தால், முதல்லே எங்களுக்குச் சொல்லுங்க. நாங்க வாங்காவிட்டால் வேறு யாருக்காவது தரலாம்” என்றாள் டாக்டரின் மனைவி. 

“விற்கிறதாக இருந்தால் உரியவர்களிடம் சொல்லி உங்களுக்குத் தெரிவிக்கச் சொல்றேன்” என்றார் பெரியவர். 

“வரட்டுங்களா?” என்று எங்கள் பக்கம் திரும்பிப் பார்க்காமலே போய்விட்டாள் டாக்டரின் மனைவி. 

என் மனத்திலிருந்ததை சம்பந்தம்தான் வாய்விட்டுச் சொன்னான்: “ராஜவேலுவுக்கும் திப்பிலியாருக்கும் இடையில் நடந்த பத்து வருஷத்து யுத்தத்தில் ஜெயித்தது டாக்டர் மனைவி சுந்தரியம்மாள்தான்.” 

அப்படித்தான் எனக்கும் தோன்றிற்று!

(முற்றும்)

– அவரவர் பாடு (மர்ம நாவல்), முதற் பதிப்பு: ஜனவரி 1963, குயிலன், சென்னை.

Print Friendly, PDF & Email

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *