அமாவாசையும் அப்துல்காதரும்

0
கதையாசிரியர்:
கதைத்தொகுப்பு: கிரைம்
கதைப்பதிவு: May 28, 2024
பார்வையிட்டோர்: 384 
 
 

(2008 வெளியான சிறுகதை, ஸ்கேன் செய்யப்பட்ட படக்கோப்பிலிருந்து எளிதாக படிக்கக்கூடிய உரையாக மாற்றியுள்ளோம்)

ஒரிஜினல் ஹல்வாவுக்கும் அதைவிட ஒரிஜினல் தமிழுக்கும் பேர் போன திருநெல்வேலிச் சீமையிலே சின்னதாய் ஒரு மாஜி சமஸ்தானம். சமஸ்தான மஹாராஜாவுக்கு முத்து முத்தாய் மூணு வாரிசுகள்.

முருகேச பாண்டியன், கணேச பாண்டியன், ஹரிஹரப் பாண்டியன்.

அண்ணன்மார் ரெண்டு பேரையும் ஓரங்கட்டி விட்டு சமஸ்தானத்தை சாதூர்யமாய்க் கைப்பற்றிக் கொண்ட சின்னவர் ஹரிஹரப் பாண்டியன் திடீரென்று காணாமல் போனார். மூத்த பாண்டியர்கள் ரெண்டு பேர் மேலும் சந்தேகம். ஆனால் தடயம் எதுவும் கிடைக்க வில்லை. எதையும் நிரூபிக்க முடியவில்லை.

கண்ணீரோடும் கனத்த நெஞ்சோடும் ஹரிஹரனின் ராணி காயத்ரி தேவி சமஸ்தானப் பொறுப்பை ஏற்றுக் கொண்டாள்.

காயத்ரி தேவிக்கு கனம் நெஞ்சில் மட்டுமல்ல, முழு உடம்பும் கனம்தான்.

கணவரை இழந்த சோகம் அடங்கிப் போனபின், உடம்பின் கனத்தை இன்னுங் கொஞ்சம் கூட்டிக் கொண்டாள். ரெண்டே முக்கால் கிலோ தங்க நகைகளைக் கழுத்திலும் கைகளிலும் தன்னந்தனியாய்ச் சுமக்க, அப்படியொரு ஹெவிவெய்ட் சரீரம் தேவையாய்த்தானிருந்தது.

காயத்ரி தேவியின் நாக்குக்கு ருசியாய் சமைத்துப் போட பட்லர் மாணிக்கம். அவனுடைய உதவிக்கு சிவகாமி.

சிவகாமிக்கும் மாணிக்கத்துக்கும் ஒத்துப்போகவில்லை.

காயத்ரி தேவியிடம் சிவகாமியைப் பற்றி வத்தி வைத்து அவளை அரண்மனையிலிருந்து அகற்றி விட்டான் மாணிக்கம். சிவகாமியின் டத்துக்கு, போன மாசந்தான் ஒரு புது உதவி பட்லர் வந்தான், சிவகாமியைப் போலவே அனாதை, ஆதரவற்றவன் என்கிற தகுதிகளோடு.

அப்துல்காதர்.

அப்துல்காதருக்கும் மாணிக்கத்துக்கும் நன்றாய் ஒத்துப்போனது. ரெண்டுபேரும் சேர்ந்து வகை வகையாய் ஆக்கிப் போட்டு காய்த்ரி தேவியின் சுற்றளவு கொஞ்சமும் குறைந்து விடாமல் கவனமாய்ப் பார்த்துக் கொண்டார்கள்.

அன்றைக்கு ராத்திரி, வழக்கம் போல காயத்ரி தேவிக்குச் சப்பாத்தியும் சிக்கனும், இடியாப்பமும் பாயாவும், முட்டை ஆப்பமும் தேங்காய்ப் பாலும் பரிமாறிக் கொண்டிருந்த மாணிக்கத்தைப் பாசத்துடன் பார்த்துப் பக்கத்தில் அழைத்தாள் காயத்ரி தேவி.

“இந்தாடா மாணிக்கம், ஒன்ட்ட ஒரு முக்கியமான விஷயம் பேசணும். இந்தப் புதுப் பையனுக்குக் கிச்சன்ல ஏதாவது வேல சொல்லி அனுப்பிச்சிட்டு நீ மட்டும் இங்ஙனயே இரு.”

ராணியம்மா என்றைக்குமில்லாமல் இன்றைக்குத் தன்னிடம் என்ன முக்கியமான விஷயத்தைப் பகிர்ந்து கொள்ளப் போகிறாள் என்கிற புதிரோடு மாணிக்கம், அப்துல்காதரை உள்ளே அனுப்பி விட்டு, ராணியம்மாவின் முன்னே வந்து பணிவாய் நின்றான்.

குரலைத் தணித்து காயத்ரி தேவி பேசினாள்.

“புதுப் பையன் உள்ள போய்ட்டானா?”

“போய்ட்டான் ராணியம்மா.”

“நம்ம சிவகாமி இங்கயிருந்தாளே, இப்ப அவ எங்க இருக்கான்னு தெரியுமா?”

‘அவ இப்ப எதுக்கு ராணியம்மா?”

“கேட்டதுக்கு பதில் சொல்லுடா.”

“தெரியும் ராணியம்மா. திருநவேலி டவுன்ல நெல்லையப்பர் கோவில்ப் பக்கம் பூ வித்துட்டிருக்கப்ப ரெண்டு வாட்டி பாத்திருக்கேன்.”

“அவ குடும்பம்?”

“அவளுக்கேது குடும்பம் ராணியம்மா? அனாதிக் கழுத தான அது. புள்ள உண்டாகலன்னு புருஷனும் வெரட்டி விட்டுட்டான். அனாதியாத்தான அவ அரண்மனக்கி வந்தா.”

“அப்பாடி, அதான் எனக்குத் தேவ. நீ இப்ப என்ன பண்ற, நாளக்கிக் காலைல திருநவேலிக்கிப் போயி அந்த சிவகாமியப் பாத்துப் பேசி இங்கக் கூட்டிட்டு வாற.”

“ஐயைய, என்னத்துக்கு ராணியம்மா?”

“சொன்னதச் செய்டா. இந்தப் புதுப்பையன்ட்ட சொல்லி நாளக்கி லஞ்ச்க்கு ஸ்பெஷல் ஐட்டம் ரெண்டு மூணு செய்யச் சொல்லிட்டு நீ திருநவேலிக்கு போ. சிவகாமிக்கு நாளக்கி இங்க விருந்து.”

மாணிக்கத்துக்கு ஒண்ணும் புரியவில்லை. சிவகாமி ஒரு ராங்கிக்காரி. இவனுக்குக் கீழ்ப்படியாதவள். அவளை எதற்கு ராணியம்மா அரண்மனைக்குக் கூப்பிடுகிறாள்? அதுவும் விருந்துச் சாப்பாடாம்! அழுத்திக் கேட்டால் ராணியம்மா எரிந்து விழுவாள். வேண்டாம். மரியாதையைக் காப்பாற்றிக் கொள்ள வேண்டும்.

ராணியம்மா சாப்பிட்டு முடித்துக் கை கழுவும் வரை மாணிக்கம் வாயைத் திறக்கவில்லை. பிறகு மெல்ல வாயைத் திறந்தான்.

“அப்ப ராணியம்மா, நாளக்கிக் காலைல நாம்ப் போய்…” ராணியம்மா கொஞ்சம் கீழே இறங்கி வந்து மாணிக்கத்தை ஆமோதித்தாள்.

“ஆமா, காலைல நீ போய் சிவகாமியக் கூட்டிட்டு வந்துரு. அம்பாஸடர நீயே எடுத்துட்டுப்போ. டிரைவர் வேணாம். இங்க பார், நீ போறதும் வாறதும் அவளக் கூட்டிட்டு வாறதும் யாருக்கும் தெரியக்கூடாது, என்ன?

அடுத்த நாள் காரைப்போட்டுக் கொண்டு மாணிக்கம் திருநெல்வேலி டவுனுக்குப்போய், சிவகாமியை சமாதானப் படுத்தி அரண்மனைக்குக் கூட்டிக் கொண்டு வந்தான். சிவகாமியைப் பார்த்ததும் ராணியம்மாவுக்கு சந்தோஷமோ சந்தோஷம், என்னமோ ஒரு புதையல் கிடைத்து விட்ட மாதிரி. அவளை எதிர் கொண்டு வரவேற்றாள்.

‘எப்படி எளச்சுப் போட்டியே சிவகாமி’ என்று வருத்தப் பட்டாள்.

சிவகாமியுடைய ஒட்டுப் போட்ட அழுக்குப் புடவை அந்த அரண்மனைச் சூழலுக்கு ஒவ்வாதிருந்தாலும் ராணியம்மா முகஞ்சுளிக்காமல் அவளைக் கையைப் பிடித்து வாஷ்பேசினுக்கு வழி நடத்திச் சென்றாள்.

முகம், கை அலம்பிக்கொண்டு வந்தவளை சாப்பாட்டு மேஜைக்கு முன் அமர்த்தினாள். மாணிக்கமும் அப்துகாதரும் கொண்டு வந்த ஐட்டங்களைத் தன் கையால் தானே சிவகாமிக்குப் பரிமாறி அனைவரையும் அசத்தினாள். திக்குமுக்காடிப்போன சிவகாமி, சாப்பிட்டுக் கொண்டிருக்கும் போதே ராணியம்மாவிடமிருந்து ஆறுதல் வார்த்தைகள் வந்தன.

“நேத்துத்தான் இந்தப் பய மாணிக்கம் சொன்னாம்மா, புள்ள உண்டாகலன்னு ஒன்ன ஒதுக்கி வச்சிட்டானாமே ஒம் புருஷன், என்ன அநியாயம்டி இது! புள்ள இல்லாதது ஒரு கொறையா? அப்படிப் பாத்தா எனக்குந்தான் புள்ள இல்ல, ஆனா நா எப்படி ராணியாட்டமா இருக்கேன் பாத்தியா?”

“நீங்க உண்மயிலேயே ராணி தானே ராணியம்மா?”

“ஒன்னயும் ராணி மாதிரியே நா வச்சிக்கிருதேன் சிவகாமி. இந்த ஒட்டுப்போட்ட புடவையயெல்லாம் கழட்டி எறி. நா ஒனக்கு நல்ல துணிமணி தாறேன். நீ வேல ஒண்ணும் செய்ய வேண்டாம். எனக்குத் தொணையா இரு, போதும்.”

சிவகாமிக்கு ராணியம்மா செய்கிற உபசரணைகளைப் பார்த்த போது இந்தப் பொம்பளக்கிக் கோட்டி கீட்டி புடிச்சிருச்சா என்று மாணிக்கத்தின் நினைப்பு ஓடியது. ஒன்றும் பேச முடியாமல் மாணிக்கம் பொறுமையிழந்து காத்திருந்தான், தன்னுடைய செயல்களுக்கு ராணியம்மா ஒரு விளக்கம் வைத்திருப்பாள், தன்னிடம் சொல்லுவாள் என்று.

சிவகாமிக்கு விருந்து படைத்து, உடுத்திக் கொள்ள நல்ல உடைகள் எடுத்துத்தந்து, அவளுக்கென்று ஒதுக்கியிருந்த அறைக்கு ஓய்வெடுக்க அவளை அனுப்பிவிட்டு ராணியம்மா மாணிக்கத்தைப் பார்த்து ஒரு விஷ(ம)ப் புன்னகை சிந்தினாள். அது மாணிக்கத்துடைய குழப்பத்தை அதிகரித்தாலும், இதில் ஏதோ விஷ(ய)ம் இருக்கிறது என்பது மட்டும் புரிந்தது.

மாணிக்கம் பரிமாற, ராணியம்மா மதிய உணவை ஒரு பிடி பிடித்தாள். பிறகு மாணிக்கத்திடம், சாப்பிட்ட பிறகு தன்னுடைய அறைக்கு வரும்படிச் சொல்லிவிட்டுப் போனாள்.

சஸ்பென்ஸ் தாங்காத மாணிக்கம், மளமளவென்று அள்ளிக் கொட்டிக் கொண்டு அடுத்த ஆறாவது நிமிஷம் ராணியம்மாவின் அறையில் ஆஜரானான்.

அறையில் வைத்து ராணியம்மா மாணிக்கத்திடம் கேட்ட முதல் கேள்வி, ‘புதுசா வந்திருக்கானே பையன், ஒன் அஸிஸ்ட்டன்ட், அவன் ஆள் என்ன மாதிரி?’

மாணிக்கம் கொஞ்சமும் தயங்காமல் அப்துல்காதருக்கு ஸர்ட்டிஃபிகேட் வழங்கினான்.

“சுறுசுறுப்பான பையன் ராணியம்மா. நல்ல கெட்டிக்காரன்.”

“ஆயுசும் கெட்டிதான் அவனுக்கு.”

“என்ன சொல்றீங்க ராணியம்மா?”

“வெவரமா சொல்றேன், கவனமாக்கேளு. ஒம்மேல நம்பிக்க வச்சு இதச் சொல்றேண்டா மாணிக்கம், வெளிய யாருக்கும் தெரியக்கூடாது.”

“சொல்லுங்க ராணியம்மா.”

“இந்த சிவகாமிய நா எதுக்குக் கூட்டிட்டு வரச் சொன்னேன் தெரியுமா?”

“அது தெரியாமத்தானே ராணியம்மா நேத்துலயிருந்து நா மண்டைய ஒடச்சிட்டிருக்கேன்.!”

“நா சொல்றதக் கேட்டு ஷாக் ஆயிராத. இந்த சிவகாமிய நம்ம தோட்டத்துல பலி குடுக்கப் போறேன். நர பலி.”

அதிர்ந்து போனான் மாணிக்கம்.

“ராணியம்மா!”

குரல் வளைய அழுத்திக் கொண்டு ஒலியெழுப்ப முயல்கிற மாதிரி, வால்யூமைக் குறைத்து அலறினான்.

‘டென்ஷன் ஆகாதடா மாணிக்கம்’ என்று ராணியம்மா அவனை சமனப்படுத்தினாள்.

“நீ இந்த சமஸ்தானத்துக்கு விஸ்வாசமானவன். ஒம்மேல நம்பிக்க வச்சித்தான் இந்த ரகசியத்த ஓன்ட்ட சொல்றேன். உணர்ச்சி வசப்படாம கேளு. நீ என்னோட ஒத்துழச்சா ஒனக்கு வெகுமதி கெடக்யும். என்ன, சொல்லட்டுமா?”

தோள்ப்பட்டைப் பட்டியில் சொருகியிருந்த மேஜை துடைக்கிற துணையை எடுத்து முகத்து வியர்வையை அழுத்தித் துடைத்தபடி ‘சொல்லுங்க ராணியம்மா’ என்றான் மாணிக்கம்.

ராணியம்மா ஒரு திகில்க் கதை சொன்னாள்.

“நம்ம தோட்டத்ல புதையல் ஒண்ணு இருக்குன்னு ஒரு மந்திரவாதி சொன்னாண்டா மாணிக்கம். எக்கச்சக்கமான தங்க நகை இருக்குன்னு மை போட்டுப் பாத்துச் சொன்னான். ஆனா அத எடுக்கணும்னா ரெண்டு நரபலி குடுக்கணும். எனக்கு இந்தப் புதுப்பையன் ஞாபகந்தான் சட்னு வந்தது. ஆனா, மந்திரவாதி அத ஒத்துக்கல. ஒரு பெண்பலி தான் குடுக்கணும்ங்கறான். ஏற்கனவே ஒரு ஆண்பலி குடுத்துட்டதால, இப்பப் பெண்பலி தான் குடுக்கணுமாம்.”

இந்த இடத்தில் ராணியம்மா நிறுத்தினாள்.

‘ஏற்கனவே ஒரு ஆண்பலி குடுத்துட்டதால’ என்கிற வாக்கியம் மாணிக்கத்தின் கண்களை அகலமாய் விரிய வைக்கும் என்று அவளுக்குத் தெரியும்.

மாணிக்கம் அவளை அகலப் பார்வை பார்த்துக் கொண்டிருக்க, ராணியம்மா தொடர்ந்தாள்.

“மஹாராஜா திடீர்னு காணாமப் போனது யார் வேலன்னு நெனக்கிற? அந்த மந்திரவாதி வேல தான். சரியாச் சொல்லப் போனா, அது என்னோட வேல. அடேய் மாணிக்கம், வாரிசு இல்லாத சமஸ்தானம்டா இது. வாரிசு இல்லாமப் போனதுக்கு யார் காரணம்னு நெனக்கிற? சிவகாமி மாதிரி நா மலடியா? இல்லவே இல்ல. எனக்கு வாய்ச்ச புருஷன், ஒங்க மஹாராஜா ஒரு வடிகட்டின மலடன். ஆண்மையில்லாத ஆத்மா. அந்த ஆளால எனக்கு வாழ்க்கையில ஒரு சந்தோஷமுமில்ல, ஒரு ப்ரயோஜனமுமில்ல. புதையல் எடுக்கவாவது அந்த மனுஷன் ப்ரயோஜனப் படட்டுமேன்னு மந்திரவாதி கூட சேந்து மஹாராஜாவப் பரலோகத்துக்கு அனுப்பி வச்சேன். இப்ப மந்திரவாதி சொல்றான், அந்தப்பலி பத்தாது, ஒரு பெண் பலியும் இருந்தாத்தான் பலி பூரணமாகும், அப்பத்தான் புதையல் எடுக்க முடியும்னு. அதுக்காகத்தான் இந்த சிவகாமியத் தள்ளிட்டு வர ஒன்ன அனுப்பிச்சேன். இல்லாட்டி இந்த சனியனுக்கு எங்கையால விருந்து பரிமாறணும்னு எனக்கென்ன தலையெழுத்தா! அனாதிக் கழுத கமுக்கமா காரியத்த முடிச்சிட்டா கேக்க ஆளிருக்காது. நீ என்ன செய்ற, ராத்திரி சாப்பாட்டுக்குப் பெறகு ஐஸ்க்ரீம்லயோ காப்பிலயோ மயக்க மருந்து கலந்து சிவகாமிக்கிக் குடுத்துர்ற. ராத்திரி மந்திரவாதி வருவான். மீதி வேலய அவன் பாத்துக்குவான். ராத்திரி கவனமாயிரு. இப்ப நீ போகலாம்.”

நடைப்பிணம் மாதிரி ராணியம்மாவின் அறையிலிருந்து வெளியே வந்தான் மாணிக்கம். அவனுடைய பேயறைந்த முகத்தைப் பார்த்துக் கலவரமடைந்த அப்துல்காதர், என்ன விஷயமென்று விசாரித்ததற்கு பதிலெதுவும் சொல்லாமல் பாத்ரூமுக்குள் புகுந்து கொண்டு கொஞ்ச நேரம் தனிமையிலிருந்தான்.

தனிமையில் சிந்தனை கன்னாபின்னாவென்று ஓடியது.

அந்த சிவகாமி இவனுக்குக் கீழ்ப்படிய மறுத்தவளாயிருக்கலாம். அதற்காக அந்த அப்பாவிப் பெண்ணைக் கொலை செய்வதற்குத் தான் உடந்தையாயிருப்பதா? புதையலுக்காகப் புருஷனையே தீர்த்துக் கட்டினவளாமே இந்த ராணியம்மா! இந்தப் பஞ்சமா பாதகியிடமிருந்து அந்த அபலைப் பெண்ணைக் காப்பாற்ற ஏதாவது செய்தாக வேண்டுமே என்று சிந்தித்தான். சின்னதாய் ஒரு பொறி தட்டியது. சுதாரித்துக் கொண்டு போய் ராணியம்மாவின் அறைக்கதவைத் தட்டினான். மதியத் தூக்கம் தடைப்பட்ட கடுப்பில் கதவைத் திறந்து இவனை முறைத்த ராணியம்மாவைப் பணிவாய் நமஸ்கரித்து, ‘ராணியம்மா, நீங்க கோச்சுக்கலன்னா நா ஒரு சின்ன யோசன சொல்லலாமா’ என்றான். வேண்டா வெறுப்பாய் அவள் அனுமதி கொடுத்ததும் இவன் ஆண்டவனை நினைத்துக் கொண்டு வார்த்தைகளை விட்டான்.

“ராணியம்மா, இந்த மந்திரவாதி, புதையல், சமாசாரம் நானும் எங்க கிராமத்துல கேள்விப்பட்டிருக்கேன். பலியாகிற ஆள் சத வச்சு வாட்டசாட்டமா இருந்தாத்தான், புதையலக் காவல் காக்கற சாத்தான் பலிய ஏத்துக்குமாம். இந்த சிவகாமி மாதிரி எலும்புந் தோலுமான ஒரு பொம்பளப்பலி குடுத்தா, அத ஏத்துக்காதுன்னு சொல்லுவாங்க. மஹாராஜா வெய்ட் கூடின ஆள், சரி. ஆனா, இந்த நோஞ்சான் பொம்பளயப் பலி குடுத்து அது வீணாப் போயிரக் கூடாது ராணியம்மா.”

“அதுக்கு என்ன செய்யணுங்கற?

“நம்ம தோட்டத்துப் புதயல் எங்க போயிரப் போகுது ராணியம்மா? கொஞ்சம் லேட் பண்ணுவோம். ஒரு ரெண்டு மாசம் நல்ல தீனி போட்டு இந்தப் பொம்பளயத் தேத்துவோம். ரெண்டு மாசத்துல ஒங்கள மாதிரி கொழு கொழுன்னு ஆயிருவா. அதுக்கு நா கியாரண்டி. அதுக்குப் பெறவு ஜோரா பலி குடுப்போம்.”

ராணியம்மா யோசனையில் ஆழ்ந்தாள். மாணிக்கத்துக்கு நம்பிக்கை வந்தது.

‘நீ சொல்றதும் சரியாத்தாண்டா தெரியுது மாணிக்கம்’ என்றாள் ராணியம்மா.

“கெணத்துத் தண்ணிய வெள்ளமா கொண்டு போயிரப் போகுது? மந்திரவாதி வந்தான்னா நா அவனத் திருப்பி அனுப்பிச் சிர்றேன். நீ சொல்ற மாதிரி நாம லேட் பண்ணுவோம். சனியன் நல்லாக் கொழுக்கட்டும்.”

நிம்மதிப் பெருமூச்சோடு மாணிக்கம் தன் இடத்துக்குத் திரும்பினான். சிவகாமி மேலே அவனுக்கொரு பரிவு ஏற்பட்டது. அரண்மனைச் சாப்பாட்டை நன்றாய் சாப்பிடட்டும் என்று அவளுக்கு விதவிதமாய் ஆக்கிப் போட்டான்.

ஒரு மாதம் விர்ரென்று ஓடிவிட்டது.

அன்றைக்கு மதிய உணவு நேரம், ராணியம்மா மாணிக்கத்தைத் தனியாய் அழைத்தாள். “நேத்து மந்திரவாதி ஃபோன் பண்ணாண்டா மாணிக்கம். இன்னிக்கி நைட்ல காரியத்த முடிச்சுப் புடலாம்னான்” என்றொரு குண்டைத் தூக்கிப் போட்டாள்.

மாணிக்கத்துக்கு பகீரென்றது.

“இது… வந்து… ராணியம்மா, இன்னும் ரெண்டு மாசம் முடியலியே ராணியம்மா!”

‘ரெண்டு மாசம்னு ஒரு கணக்காடா இருக்கு?” என்று அவனை மறுத்தாள் ராணியம்மா.

“இன்னிக்கி அமாவாசயாம் இன்னிக்கி செஞ்சிருவோம்னான், நானும் சரின்னுட்டேன். இந்தச் சனியன் என்ன தீவனம் திங்கிது! இதுக்கு ஆக்கிப் போட்டே கஜானா காலியாயிரும் போலயிருக்கு. சரி, நீ என்ன செய்ற, அன்னிக்கி சொன்ன மாதிரி இன்னிக்கி நைட் சாப்பாட்டுல ஒரு ஐட்டத்ல இந்த மருந்தக் கலந்து குடுத்துர்ற. மத்தத நா பாத்துக்கறேன். இதப் பத்தி யார்ட்டயும் மூச்சு விடக்கூடாது. தெரிஞ்சதா?”

ராணியம்மா கொடுத்த ‘மருந்து’ப்புட்டியை எந்திரம் மாதிரி பெற்றுக் கொண்டான் மாணிக்கம்.

ஐயையோ, இப்போது என்ன செய்வது, இன்னும் சில மணிநேரமே உள்ள நிலையில் இந்தக் கொலையை எப்படித் தடுப்பது? யாரிடம் போய் யோசனை கேட்பது, யாரிடம் உதவி கோருவது?

மாணிக்கத்தின் முன்னே அப்துல்காதர் ஒருவன் மட்டுமே இருந்தான்.

அப்துல்காதரால் என்ன செய்யக்கூடும் என்கிற அவநம்பிக்கை இருந்தாலும், அவனோடு இந்த விஷயத்தைப் பகிர்ந்து கொள்வதையன்றி இப்போது வேறெதுவும் செய்வதற்கில்லை யென்கிற சூழ்நிலையில், அப்துல்காதரை இழுத்துக் கொண்டு, அவர்கள் படுக்கிற அறைக்குள் போய்க் கதவைத் தாளிட்டான்.

பிறகு, கலவரக் குரலில் எல்லாவற்றையும் கடகடவென்று அவனிடம் ஒப்பித்தான்.

மஹாராஜாவை சிவலோகப் பதவியடையச் செய்தது, சிவகாமியைக் காவு கொடுக்க ஏற்பாடாகியிருப்பது எல்லாவற்றையும் விலாவாரியாய்ச் சொன்னான்.

எல்லாவற்றையும் கேட்டுக் கொண்ட அப்துல் காதர் நம்பிக்கையோடு பேசினான்.

“நீங்க கவலையேப்படாதீங்க அண்ணாச்சி. நானும் எல்லாத் தையும் நோட் பண்ணிக்கிட்டுத்தான் இருக்கேன். சிவகாமியக் காப்பாத்திருவோம். இந்த ராட்சசி ராணியம்மாவையும் அந்த மந்திரவாதியையும் புடிச்சி உள்ள தள்ள ஏற்பாடு பணிருவோம். எங்கிட்ட பொறுப்ப விட்டுட்டு நீங்க நிம்மதியாயிருங்க.”

“நீ என்ன தம்பி எரும மாட்டு மேல மழ பெஞ்ச மாதிரி சாவகாசமாப் பேசிட்டு நிக்கிற. டைம் ஓடிட்டிருக்கு. சிவகாமிய எப்பக் காப்பாத்தப் போற, எப்படிக் காப்பாத்தப் போற.”

படபடவென்று பேசிய மாணிக்கத்தை முதுகில் தட்டி அப்துல்காதர் சமாதானப்படுத்தினான்.

“அண்ணாச்சி, பொறுமையாயிருங்க அண்ணாச்சி. நீங்க என்ட்ட ஒரு பெரீய ரகசியத்தச் சொன்னீக. இப்ப நா ஒங்ககிட்ட ஒரு சின்ன ரகசியத்தச் சொல்லுதேன், கேக்கிகளா?”

மாணிக்கம் அவனை வெறுமையாய்ப் பார்த்துக் கொண்டிருக்க, அப்துல்காதர் அழுத்தமாய்ச் சொன்னான்:

“அண்ணாச்சி, நா ஒரு அநாதையுமில்ல, நா பட்லருமில்ல, எம்ப்பேர் அப்துல்காதருமில்ல.”

“பெறவு?”

“நா ஒரு போலீஸ் ஸி ஐ டி.”

– சமநிலைச் சமுதாயம், ஜூன் 2008

Print Friendly, PDF & Email

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *