கதையாசிரியர்:
கதை வகை: தொடர்கதை
தின/வார இதழ்: குமுதம்
கதைத்தொகுப்பு: கிரைம்
கதைப்பதிவு: November 11, 2023
பார்வையிட்டோர்: 8,448 
 
 

அத்தியாயம்-11-12 | அத்தியாயம்-13-14

அத்தியாயம்-13

கணேஷ் ஓடினான். வேகம் முக்கியம். வேறு யோசனை இல்லாத வேகம். மெயின் ரோடை அடைந்து ஷாத்ரா டெலிபோன் எக்ஸ்சேஞ்சைக் கடக்கையில் நின்றான். மூச்சு வாங்கிக் கொண்டான். சற்றுமுற்றும் பார்த்தான். டெலிபோன் எக்ஸ்சேஞ்சின் முகப்பில் ஒரு பப்ளிக் கால் டெலிபோன் இருந்தது. அதை அடைந்து காசு தேடி டயல் சுழற்றி, ‘ஹலோ!’ என்றான். 

சில நேரம் நான் சரியான முட்டாள். இதை எப்போதோ சுலபமாகத் தெரிந்துகொண்டிருக்கலாம். சே! 

‘ராஜேஷ் ஸ்பீக்கிங்’. 

‘கணேஷ் பேசுகிறேன். ஒரு மிக முக்கியமான விஷயம், ஷர்மா கேஸில். நீங்கள் உடனே ஜீப் எடுத்துக்கொண்டு ஷாத்ரா வர முடியுமா?’

‘என்ன விஷயம்?’ 

‘கேஸ் முடிந்து விட்டது இன்ஸ்பெக்டர் ஸாப்’. 

‘எந்த கேஸ்? ஷர்மா, பாஸ்கர் இரண்டு கொலை இருக்கிறதே?’ 

‘இரண்டும்.’ 

‘கோவிந்த் அகப்பட்டுவிட்டானா?’ 

‘அவனைப் பற்றித் தகவல் தெரிந்துவிட்டது. உடனே வாருங்கள். நாலைந்து ஆட்களுடன். எல்லாம் தீர்ந்துவிடும். டெலிபோனில் சொல்ல முடியாதபடி சிக்கலானது. மற்றொரு விஷயம். என் வீட்டுக்குச் சென்று – ஷர்மாவின் டாட்டர் மோனிக்கா அங்கே இருக்கிறாள். அவளையும் உடன் அழைத்து வரவேண்டும். நான் . அவளுக்கு ஃபோன் செய்கிறேன். உடனே வாருங்கள். என் வீட்டு விலாசம் தெரியுமில்லை?’

‘தெரியும். நேற்று எழுதிக்கொண்டிருக்கிறோமே. கணேஷ், இன்னும் கொஞ்சம் விவரமாகச் சொல்லலாம். ஒன்றுமே புரியவில்லை.’ 

‘நான் எதுவும் ப்ளஃப் பண்ணவில்லை. முழுவதும் ஆதியோடு அந்தமாகச் சொல்கிறேன். அவசரப்படாதீர்கள். இப்போது சமயமில்லை.’

‘ஷாத்ராவில் எங்கே?’ 

‘மெயின் ரோடில் அப்ஸரா தியேட்டர் இருக்கிறது. அதை ஒட்டி லெஃப்ட் டர்ன் எடுங்கள். கரும்புக் காட்டுக்குப் பிறகு காலி மனைகளின் நடுவில் ஒரே ஒரு புதிதாகக் கட்டிய வீடு இருக்கிறது. யூ காண்ட் மிஸ் இட். ஆனால் உடனே வரவேண்டும்’. டெலிபோனை வைத்தான். 

மறுபடி பையில் காசு தேடினான். சில்லறை இல்லாததால் எதிரே ஒரு கடைக்குச் சென்று சில்லரை மாற்றிக்கொண்டு வந்து தன் வீட்டு டெலிபோனின் நம்பரைச் சுழற்றினான். 

‘மோனிக்கா! எழுந்துவிட்டாயா?’

‘கணேஷ்! வேர் ஆர் யூ?’

‘ஷாத்ரா.’ 

‘வேர் த ஹெல் இஸ் ஷாத்ரா?’ 

‘சொல்கிறேன். மோ, கவனி, சற்று நேரத்தில் அங்கே இன்ஸ்பெக்டர் ராஜேஷ் வருவார். அவருடன் நீ இங்கே வரவேண்டும். நான் உனக்காகக் காத்திருக்கிறேன். நிச்சயம் வரவேண்டும்.’ 

‘வாட் ஹாப்பண்ட்?’ 

‘உன் அப்பா கேஸ் முடிந்துவிட்டது’. 

‘கண்டுபிடித்து விட்டாயா? யார்?’ 

‘நீதான் வந்து பாரேன்!” 

‘கணேஷ்! அனிதாதானே?’ 

‘சே!’ 

‘பின்னே யார்?’ 

‘டெலிபோனில் சொல்லக்கூடாது. நீ வரவேண்டும். நீ வர வேண்டியது முக்கியம். தெரிகிறதா? நீ வரவேண்டியது மிக முக்கியம். நீ தேவை. எனக்குச் சமயமில்லை. மன்னித்துக்கொள்’ என்று டெலிபோனை அதன் கொக்கியின் கழுத்தில் மாட்டினான். 

ஏதோ கோளாறினால் டெலிபோன் இருபது பைசாவைத் துப்பியது. ‘இன்று என் அதிர்ஷ்ட தினம் போலும்.’ 

கணேஷ் நடந்தான். எதிரே ஒரு தேர்தல் அலுவலகம். சின்னச் சின்னப் பையன்கள் துல்லியமான எதுகை மோனையில் (பஸ்தி, சஸ்தி) இந்திராவுக்கு எதிராகப் பாடிக்கொண்டிருந்தார்கள். 

‘எது சோஷலிசம்?’ என்று ஒலி பெருக்கி அதட்டிக் கேட்டது. ஒரு பசு மாடு சந்தேகத்துடன் திரும்பிப் பார்த்தது. 

கணேஷ் யோசித்தான். தீர்மானித்தான். அந்தக் கடைக்குச் சென்று கிளிப் வைத்த அட்டை ஒன்று, பென்சில் ஒன்று (சீவிக் கொடுங்கள்), சில வெள்ளைக் காகிதங்கள் வாங்கிக்கொண்டான். தேர்தல் அலுவலகத்துக்குச் சென்று அந்தக் கட்சிக்காரர்கள் வினியோகித்துக்கொண்டிருந்த விளக்கு படம் அச்சிட்ட வட்ட அட்டை ஒன்றை வாங்கிக்கொண்டான். அதைத் தன் மார்புச் சட்டையில் பொருத்திக்கொண்டான். 

மிக வேகமாக அந்த வீட்டை நோக்கி நடந்தான். பத்து நிமிஷம் த் நடந்தபிறகு அந்தத் தனி வீட்டு வாசலுக்கு வந்து கேட்டைத் திறக்கையில் முன் தடவை போல் எச்சரிக்கையாக இல்லை. நேராகச் சென்று காலிங் பெல்லை அழுத்தினான். மூடியிருந்த கதவில் கண்ணாடிகள் பொருத்தி இருந்தன வெளியே நிற்பவர்களை உள்ளேயிருந்து பூதம் பார்க்க. கணேஷ் அதற்கு முதுகைக் காட்டிக்கொண்டு திரும்பிக்கொண்டான்.

சற்று நேரமாயிற்று. மறுபடி அழுத்தினான். 

இன்னும் சற்று நேரமாயிற்று. கதவு திறந்தது. மெதுவாக ஒரு கோட்டின் அளவுக்கு. ‘யார் அது?’ அனிதாவின் குரல்? கோடு விரிந்தது. அனிதா தெரிந்தாள். கலைந்திருந்தாள். 

கணேஷ் தன் வாயில் சுட்டுவிரலை வைத்து, ‘பேசாதே’ என்று சைகை காட்டினான். அனிதாவின் கண்களில் ஆச்சரியம். பயம், திகில், ஓரத்தில் கொஞ்சம் சந்தோஷம், எல்லாவற்றையும் காட்டின.

அவள் சைகை செய்தாள். ‘போய்விடு. உடனே போய் விடு’

‘ஏன்?’ என்று கையைக் காட்டினான். 

அவள் விரல்களைத் துப்பாக்கிபோல் காட்டி அந்த விரல் துப்பாக்கியை அவன் மார்புக்கு நேர் சுட்டாள். ‘உயிருக்கு ஆபத்து’ என்று காட்டினாள். 

கணேஷ் தன் இரண்டு கைகளையும் இரண்டு துப்பாக்கிகளாக்கி இரண்டு தடவை சுட்டு, ‘பயப்படாதே’ என்றான். 

எதிரே இடது பக்கத்தில் தொங்கிய திரைக்குப் பின்னாலிருந்து ‘ஹூ இஸ் இட்?’ என்று ஆண் குரல் கேட்டது. கணேஷ் அந்தக் குரலை அறிந்துகொண்டான். 

‘எலக்ஷன் சார். ஓட்டு கேட்க வந்திருக்கிறேன்’ என்றான் கணேஷ். 

‘போய்விடு, போய்விடு’ என்று அனிதா அபிநயித்தாள். 

‘இங்கே ஒருவருக்கும் ஓட்டு இல்லை என்று சொல்.’

‘அதுதான் சொல்லிப்…’ 

‘மன்னிக்கணும் சார். பட்டியலில் இங்கே இரண்டு ஓட்டு இருக்கிறது. மிஸ்டர் மதன்கோபால், அப்புறம் மிஸஸ் ஸுஷ்மா யாதவ்.நீங்கள்தானே திருமதி யாதவ்?’ 

அனிதா ‘ப்ளீஸ்!’ என்று தலையை ஆட்டினாள். அவனைச் சேவித்தாள். தவித்தாள்.

‘அப்படி ஒருவரும் இல்லை. தப்பு விலாசம். அவனைப் போகச் சொல்’ என்று குரல் வந்தது.

ஆனால் திரையை விட்டு வெளியே வரவில்லை. 

‘இல்லை சார், விலாசம் சரியாகத்தான் வந்திருக்கிறேன். சார், கொஞ்சம் வருகிறீர்களா?’

‘அனிதா, அவனைப் போகச் சொல்!’

‘மாட்டேன் என்கிறான்!’ 

‘கழுத்தைப் பிடித்துத் தள்ளுவோம் என்று சொல்’. 

‘அப்படிச் சொல்லாதீர்கள். நான் ஓட்டு கேட்கவந்தேன். அவ்வளவுதான். நான் உள்ளே வரலாமா?’

‘வரக்கூடாது!’ என்றது திரை. 

‘வருகிறேன்!’ 

‘உள்ளே வந்தால் அவன் எலும்பு முறிந்துவிடும் என்று சொல். ஓட்டும் கிடையாது. ஒன்றும் கிடையாது. படிக்கு வெளியே நிற்கச் சொல். நாம் இங்கே புதிது. எங்களுக்கு இந்த ஏரியாவில் ஓட்டு கிடையாது.’

‘நீங்கள் மிஸ்டர் யாதவ் இல்லையா சார்!’ 

‘கெட் அவுட்!’ 

‘கொஞ்சம் வருகிறீர்களா! காட்டமாகப் பேசுகிறீர்களே?’ 

‘ப்ளீஸ். வேண்டாம் வேண்டாம். ஆபத்து’ என்றாள் அனிதா சப்தமில்லாமல். 

‘இரு’ என்றான். 

‘போகிறானா இல்லையா?’

‘இல்லை சார்!’ 

‘ஐல் டீச் ஹிம் எ லெஸன்’ 

திரை சலசலத்தது. அந்த ஆசாமி தெரிந்தார். மெல்லிய உதடுகள். அடர்த்தியான புருவங்கள். பெரிய நெற்றி. சில தினங்களாக ஷேவ் செய்யாத முகம். 

கண்களில் குரூரம். 

‘ப்ளீஸ்ட் டு மீட் யூ சார். இந்திரா கட்சிக்காரர்கள் ராஜ மானியம் ஒழிப்பதை அவ்வளவு பெரிதுபடுத்துகிறார்களே, அந்தப் பணம் எவ்வளவு தெரியுமா? ஹிந்துஸ்தான் ஸ்டீலின் நஷ்டத்தில் நாலில் ஒரு பங்…’ 

‘கெட் லாஸ்ட்.’

‘ஏன் சார், நீங்கள் காங்கிரஸ் ஆளா?’ 

‘காங்கிரஸ் எம்! எம் ஃபார் மர்டர்’. 

‘ஒரு டம்ளர் தண்ணீர் தருகிறீர்களா? இந்தப் பெண் யார்? உங்கள் பெண்ணா?’ என்று கேட்டான் கணேஷ் அனிதாவைப் பார்த்து. 

‘என் கையில் என்ன இருக்கிறது தெரியுமா?’ 

‘துப்பாக்கியா அது?’ 

‘ப்ளீஸ் வேண்டாம். ப்ளீஸ் எனக்குப் பயமாக இருக்கிறது,’ என்றாள் அனிதா. 

‘அனிதா, நீ உள்ளே வா’ என்றார் அந்த ஆசாமி. 

அனிதா மலைத்து நின்றாள். 

‘நிஜத் துப்பாக்கி, போ வெளியே!’ 

‘நான் என்ன குற்றம் செய்தேன்? ஜனசங்குக்கு ஓட்டு கேட்டால் குற்றமா! துப்பாக்கியைக் காட்டுகிறீர்களே!’ 

‘பஹதூர்! எங்கே போய்த் தொலைந்தான்’ 

‘பஹதூர் யார்? பாடிகார்டா?’ 

‘டேய், நீ போடா வெளியே’ என்று அருகில் வந்தார். 

‘மிஸ்டர் யாதவ்!’

‘நான் யாதவ் இல்லை!’

கணேஷ் மிக வேகமாகக் காலால் உதைத்தான். துப்பாக்கி தூர விழுந்தது, அனிதாவின் அருகில். 

‘நான ஓட்டு கேட்க வந்தவன் இல்லை. என் பெயர் கணேஷ்.’ அவன் கண், விழுந்த துப்பாக்கியின்மேல் கவனமாக இருந்தது.

எதிரே இருந்தவர் முகம் மாறி விட்டது. 

‘கணேஷ்! நீ இங்கேயும் வந்து விட்டாயா? பஹதூர்! பஹதூர்!’ என்று அந்தத் துப்பாக்கியை நோக்கி நடந்தார். 

‘நகராதே! நகர்ந்தால் உன்னை…’ என்றான் கணேஷ். ‘அனிதா, அந்தத் துப்பாக்கியை எடுத்துக் கொள்ளுங்கள். பயப்படாதீர்கள்’. 

‘அனிதா, இவனுக்கு நான் யார் என்று தெரியுமா?’ என்று கேட்டார் அந்த ஆசாமி. ‘நீ சொல்லியிருக்கிறாயா?’

‘இல்லை.’ அவள் தலையை ஆட்டினாள்.

‘அனிதா! அந்தத் துப்பாக்கியை எடுங்கள்’ என்றான் கணேஷ்.

‘எடுத்து என்னிடம் கொடு அனிதா!’ என்றார் அவர்.

‘எதற்காக மற்றொரு கொலை செய்ய விரும்புகிறீர்கள்! எனக்கு உன்னை நன்றாகத் தெரியும். நீ யார் என்பது தெரியும்!’ 

அந்த ஆசாமி கணேஷின்மேல் பாய்ந்தார். கணேஷ் இளைஞன். பாய்ந்தது, சாமர்த்தியமில்லாத பாய்ச்சல். அதன் வேகத்தை உபயோகப்படுத்திக்கொண்டு கணேஷ் ஓர் இடறு இடறினான். அ வர் நாற்காலியில் மோதி விழுந்தார். எழுந்தார். ஆத்திரம் அதிகமாகி, ‘அனிதா, கொடு துப்பாக்கியை!’ என்று சொல்ல, ‘அனிதா! கொடுக்காதே!’ என்றான் கணேஷ். 

அனிதாவின் கையில் அந்தத் துப்பாக்கி இருந்தது. 

‘அனிதா! சுடு இவனை! சுடு.’ 

அனிதா இரண்டு கைகளையும் சேர்த்து, ‘கணேஷ்!’ என்றாள். 

அவன் மேல் குறிவைத்தாள். 

‘அனிதா, நீ என்னைச் சுடுவாயா?’ 

‘சுடு அனிதா! சுடு!” 

‘அனிதா! அந்தத் துப்பாக்கியைத் தூர எறி! ஜன்னலுக்கு எறி!’

‘எறியாதே! எறியாதே!’ 

அனிதா பின்வாங்கினாள். ஜன்னல் கதவைத் திறந்தாள். அவளை நோக்கி ஓடியவரை கணேஷ் அப்படியே பிடித்து இறுக்கி நிறுத்தினான். 

‘விடு. என்னை என்னைத் தெரியாது உனக்கு. என்னைப் பார்த்தபின் இந்த வீட்டை விட்டு நீ உயிருடன் போகப் போவதில்லை. உன்னைக் கொன்று சமாதி கட்டிவிட்டுத்தான் நான் போகப் போகிறேன். தெரியுமா?’

‘நகராதீர்கள்! அனிதா… ம்.’ 

அனிதா அந்த துப்பாக்கியை ஜன்னலுக்கு வெளியே எறிந்தாள். அந்த ஆசாமியின் பாதி பலம் வெளியே விழுந்துவிட்டது. அந்த ஆத்திரத்தில் கணேஷை வீழ்த்த முயன்றார். முடியவில்லை. கணேஷ் அவரைச் சுவரில் ஒரு தள்ளு தள்ளிவிட்டு ஒரு மோது மோதி, ‘வலிக்கிறதா?’ என்றான். சரியான அப்பர் கட் ஒன்று கொடுத்து, ‘வலிக்கிறதா?’ என்றான். ரத்தக்கோடு ஒன்று வாயில் தெரிந்தது. 

அனிதா கண்கொட்டாமல் பார்த்துக்கொண்டிருந்தாள்.

‘அனிதா, என்ன செய்ய வேண்டும்?’ என்றான் கணேஷ். பிபே 

‘கில் ஹிம்’ என்றாள். ‘மெதுவாக நிதானமாகக் கொல்லுங்கள்’ என்றாள். 

‘பஹதூர்!’ என்று மிக உரக்க, தொண்டை நரம்புகள் வெடிக்கக் கத்தினார் அந்த ஆள். 

தடதடவென்று யாரோ ஓடி வரும் சத்தம் கேட்டது. 

உள்ளே நுழைந்த பஹதூர் வாட்டசாட்டமாக இருந்தான். காக்கிச் சட்டை, மங்கோல் கண்கள், மீசை, புல்வொர்கர் விளம்பரத்தில் போல புஜங்கள். 

‘அனிதா, அந்த அறைக்குச் செல்லுங்கள். உள்ளே தாளிட்டுக் கொண்டு விடுங்கள்! க்விக்…’ என்று கத்தினான் கணேஷ்.

பஹதூர் – கணேஷ்.

கணேஷ் – பஹதூர். 

பஹதூர் கணேஷை நெருங்கினான். அனிதா தற்சமயத்துக்குப் பத்திரமாக இருக்கிறாள். துப்பாக்கி வெளியே கிடக்கிறதே!

கணேஷ் கவலைப்பட்டான். 

‘எதிராளி உன்னை விடப் பலமாக இருக்கும்போது, நீ ஆயுதமின்றி இருக்கும்போது, அவனை ஒரே தாக்குதலில் வெல்ல இரண்டு முறைகள் உள்ளன. ஒன்று அவன் இடுப்பின் கீழ் நேர்த் தாக்குதல், இரண்டு அவன் முழுப்பலத்தையும் திசைதிருப்பி அவனை விழவைப்பது.’ பெற்றிருந்த ஜூடோ பயிற்சி முழுவதும் கணேஷுக்குத் தேவையாக இருந்தது. 

பஹதூர் மெதுவாகத்தான் நெருங்கினான். கணேஷ் மிக வேகமாக அவன் இடுப்பை இலக்காக வைத்துக்கொண்டு உதைத்தான். 

பஹதூர் விலகிக்கொண்டு சிரித்தான். ஹாஸ்யமில்லாத சிரிப்பு. விஷயம் தெரிந்தவன்! 

வட்ட மின்னலாக கணேஷின் பஹதூரின் இடது புறங்கை அரை வட்ட மின்னலாக கணேஷின் தாடையில் இறங்கியது. 

கணேஷ் சரிவதைப் பார்த்து, அவர் ‘அடி வயிற்றில் ஒன்று கொடு’ என்றார். ‘பிடித்துக்கொள். நான் வருகிறேன்’ என்றார். 

பஹதூரின் கவனம் தடைப்பட்டது. அது போதும். அந்த சமயத் தில் கணேஷின் முழங்கால் அவன் நினைத்த இலக்கில் பஹதூரில் அழுத்த, முதல் தடவையாக பஹதூருக்கு வலித்திருக்க வேண்டும். ஆத்திரத்தில் கணேஷின்மேல் வேகமாகப் பாய்ந் தான். கணேஷ் சுதாரித்துக்கொண்டு விலக, பஹதூர் கதவின் முனைமேல் மோதி, கதவு பைத்தியக்காரத்தனமாகச் சாத்திக் கொண்டு திறந்தது. பஹதூரை கணேஷ் எழுந்திருக்க விட வில்லை. அவர் கணேஷின்மேல் பாய்ந்தார். பஹதூர் எழுந் திருந்தான். அவனிடம் நிறைய ஸ்டாமினா இருக்கவேண்டும். மறுபடியும் இருவரும் சேர்ந்து கொண்டு அவனை அடித்தார்கள். 

கணேஷ் உடம்பு முழுவதும் தனித்தனியாக உடைந்து போனது போல் உணர்ந்தான், விழுந்தான். 

‘பஹதூர், ஜன்னலுக்கு வெளியே ஒரு துப்பாக்கி கிடக்கிறது. எடுத்து வா’ என்றார் அந்த ஆள். 

பஹதூர் வெளியில் சென்றான். 

அவர் கணேஷைப் பார்த்து, ‘எங்கே சுட வேண்டும்? நெற்றிப் பொட்டிலா, அடிவயிற்றிலா?’ என்று கேட்டார். 

ஜீப் நின்றது.யோசித்தது. 

அத்தியாயம்-14

கணேஷ் நேராக அவரைப் பார்த்தான். 

‘என்னைக் கொல்வதால் என்ன லாபம்?’ என்றான். 

‘என்னை நீ பார்த்ததே தப்பு.’ 

‘என் மனத்தில் நான் பார்த்த செய்தி புரிவதற்கு முன்பே என்னைக் கொன்றுவிட…’ 

‘பேசாதே! பஹதூர்! துப்பாக்கி அகப் பட்டதா?’ 

பதிலில்லை. கணேஷ், ‘அந்தக் காலண்டர் அழகாக இருக்கிறது’ என்றான். க 

‘சாவதற்குமுன் அவ்வளவு அலட்சியமாக இருப்பதாகக் காட்டிக் கொள்கிறாயா? காலண்டர் அழகாக இருக்கிறதா என்பதை உன்னுள் ஈயம் பாய்ந்ததும் சொல். என்ன!” 

‘ஈயம்!’ 

‘ஆம், பஹதூர்!’ 

‘ஜீ ஸாப்!’ என்று ஜன்னலுக்கு வெளியே இருந்து பதில் வந்தது. 

‘கிடைத்ததா?’ 

‘புல் அதிகமாக வளர்ந்திருக்கிறது… ஸாப்! அதோ பாருங்கள்!’ 

‘என்ன?’ 

‘ஜீப் வருகிறது! போலீஸ் ஜீப் போலத் தோன்றுகிறது!’ 

அவர் சட்டென்று ஜன்னலுக்கு போய்ப் பார்த்தார், ‘பஹதூர்! ஜுல்தி! கராஜுக்குப் போ! காரைக் கிளப்பு!’ கணேஷின் பக்கம் திரும்பினார். 

அவர் பார்வையில் இருந்த கொடூரம் கணேஷைக் கலவரப் படுத்தியது.

‘எலக்ஷன் ஜீப்பாக இருக்கும்’ என்றான்.

‘பாஸ்டர்ட்! உன்னை… உன்னை…’ என்று அருகில் வந்தார். 

‘ஈஸி சார், ஈஸி! என்னைக் கையால் கொல்வதற்குச் சற்று நேரமாகும்.’ கணேஷ் தன்னைப் பந்தாகச் சுருட்டிக் கொண்டான். 

வெளியே ரோலிங் ஷட்டர்கள் திறக்கும் சப்தம் கேட்டது. காரில் கதவை மூடும் சப்தம் கேட்டது. அவசர அவசரமாக உதறி, செஃல்ப் எடுத்து, சீறி, கார் சப்தம் அருகில் வந்தது. 

‘ஸாப்! வேகமாக வருகிறார்கள்!’ 

அவர் அடித்த அடி கணேஷின் தோளில் அரை குறையாக விழுந்தது. 

‘ம்! மெதுவாக, நிதானமாக அடியுங்கள். அவசரமில்லை.’

பூட்ஸ் காலால் உதைத்தார். அதைப் பிடித்துக்கொண்டான். 

காரின் ஹார்ன் கேட்டது. ‘ஸாப்’

காலை உதறினார். மறுபடி ஜன்னல்வரை சென்று எட்டிப் பார்த்துவிட்டு, ‘டேய்! உன்னை நான் மறக்க மாட்டேன். உன்னை நான் கொல்லுகிறவரை மறக்கப் போவதில்லை!’ என்றார். 

‘சார், என்ன அவசரம்!” 

ஓடினார். ஒரு காலில் பூட்ஸ் இல்லாமல் ஓடினார். கணேஷினால் பிடியத்தனத்துடன்தான் நகர முடிந்தது. நொண்டி வந்து ஜன்னல் வழியாக எட்டிப் பார்த்தான். 

மண் ரோடில் புழுதியைக் கிளப்பிக்கொண்டு ஒரு ஜீப் வந்து கொண்டிருக்க, ஒரு கறுப்பு அம்பாஸ்டர் அதிவேகமாக வீட்டை விட்டு கிளம்பி, சரியாகச் செப்பனிடப்படாத குறுக்குப் பாதையில் அந்த ஜீப்பை எதிர்கொள்ள விரும்பமில்லாமல் ஒரு விரியும் கோணத்தில் விலகிச் சென்றது. 

ஜீப் நின்றது. யோசித்தது. 

‘துரத்துங்கள்! துரத்துங்கள் அதை!” எனறு கணேஷ் கத்தினான். அது கேட்டிருக்காது. 

அந்தக் கார் புழுதிப் படலத்தின் ஊடே ஸ்டண்ட் படத்தில் போல் குதித்துக் குதித்து மெயின் ரோட்டை நோக்கிச் செல்ல, தயங்கின ஜீப் கணேஷை நோக்கி வந்தது.

கணேஷ், ‘சே!’ என்று அலுத்துக்கொண்டான். மெயின் ரோட்டை அடைந்த அம்பாஸிடர் வடக்குப்புறமாகச் செல்வதைப் பார்த்தான். 

ஜீப் வீட்டு வாயிலில் வந்து நின்றது. அதிலிருந்து மோனிக்கா குதித்து இறங்கினாள். சற்றும் முற்றும் பார்த்தாள். ‘இங்கே இருக்கிறேன்!’ என்றான் கணேஷ். 

அவனைப் பார்த்துச் சிரித்தாள். இன்ஸ்பெக்டர் ராஜேஷும் இரண்டு மூன்று கான்ஸ்டபிள்களும் இறங்கினார்கள். 

நின்று ‘சீக்கிரம் வாருங்கள்!’ என்று கத்தினான் கணேஷ்.

மோனிக்கா உள்ளே நுழைந்து, ‘மை காட்! என்ன ஆயிற்று கணேஷ்? ஏன் இவ்வளவு ரத்தம்?’ என்றாள். 

‘சண்டை. அவர்கள் என்னை அடித்துவிட்டு ஓடிவிட்டார்கள். ராஜேஷ்! க்விக்… அந்த அம்பாஸடரைத் தொடருங்கள்.

‘அதில் யார் இருக்கிறார்கள்?’ 

‘குற்றவாளி’

‘யார்?’

‘சொல்கிறேன்.’

‘மற்றொரு ஜீப் வந்துகொண்டிருக்கிறது.’ 

‘நேரம் தாழ்த்தாதீர்கள். உடனே அதைத் தொடருங்கள். வடக்குப் பக்கம் மெயின் ரோடில் சென்றது’. 

ராஜேஷ் உடனே வெளியே ஓடினார். 

‘அனிதா எங்கே?’ என்றாள் மோனிக்கா. 

‘அந்த அறைக்குள் தாளிட்டுக்கொண்டிருக்கிறாள்.’ 

ஜீப் புறப்படும் சப்தம் கேட்டது. ராஜேஷ் உள்ளே வந்தார். 

‘நீங்கள் போகவில்லையா?’ என்றான் கணேஷ். 

‘மற்றொரு ஜீப் வருகிறது. அதில் நாம் எல்லோரும் போகலாம். அதில் ரேடியோ இருக்கிறது. கண்ட்ரோல் ரூமுக்குச் சொல்லி செய்தி அனுப்பலாம். மீரட்டுக்குச் செல்வோம்… பிடித்து விடலாம். கார் நம்பர் என்ன?’ 

கணேஷ் கதவைத் தட்டினான், ‘அனிதா! அனிதா!’ பதில் கேட்டதா என்ன? 

‘அனிதா, நான்தான் கணேஷ். அவர்கள் போய்விட்டார்கள். நான், இன்ஸ்பெக்டர் ராஜேஷ், மோனிக்கா மூன்று பேர்தான் இருக்கிறோம். கதவைத் திறவுங்கள்.’ 

மெலிதாகக் குரல் கேட்டது. ‘இன்ஸ்பெக்டர் எதற்கு? என்னைக் கைது செய்யவா!” 

‘இல்லை’ என்றான் கணேஷ்.

‘என்ன இது? புரியவில்லையே!’ என்றார் ராஜேஷ். 

‘போகும்போது சொல்கிறேன்… அனிதா! உங்களுக்கு ஒன்றும் நேராது. நான் உத்தரவாதம். நான் லாயர்!’ 

‘கணேஷ் என்னைக் காப்பாற்றுவீர்களா?’ 

‘கடைசி வரையில் அனிதா!’ 

கதவு திறந்தது. அனிதா நின்றாள். பொறியைத் திறந்ததும் எலியின் கண்கள் போல் பயம், இல்லை. முயல், இல்லை, மான், இல்லை, யோசிக்க நேரமில்லை… 

‘அனிதா!’ என்றாள் மோனிக்கா. 

‘மோனி! உனக்குத் தெரியுமா?’ 

‘தெரியாது அனிதா! என்ன?’ 

‘நான் எல்லாவற்றையும் சொல்கிறேன். அனிதா நீங்கள் சற்று நேரம் பேசாமல் இருங்கள். இன்ஸ்பெக்டர் ராஜேஷ், அனிதாவின் ஸ்டேட்மெண்ட்டை நீங்கள் அப்புறம் எழுதிக் கொள்ளலாம். 

‘எனக்கு ஒன்றும் புரியவில்லை கணேஷ்!’ 

‘சொல்கிறேன் இன்ஸ்பெக்டர்! இப்போது மிக முக்கியம். அந்த காரைப் பிடிப்பது!’

‘பிடித்துவிடலாம்’. 

மற்றொரு ஜீப் வெளியே வந்து ஹார்ன் அடித்தது. 

‘லெட்ஸ் கோ!” என்று கத்தினான் கணேஷ்! ‘அனிதா! மோனிக்கா, நீங்களும் வரவேண்டும்!’ என்று வெளியே ஓடினான்.

அவர்கள் அவனைத் தொடர்ந்தார்கள். 

‘வெல்கம் டு மீரட்’ என்றது போர்டு. 

அங்கிருந்து சற்றுத் தூரத்தில் குறுக்கே சாலையைத் தடுப்பதற்கு நீண்ட, கறுப்பு மஞ்சள் அடித்த அந்தக் கம்பம் ஏற்றம்போல ஒரு முனையில் பாறாங்கல் கனத்தில் உயர்ந்து நின்று கொண்டிருந்தது. 

பக்கத்தில் ஒரு தாற்காலிகக் கொட்டகையில் ஒரு மேஜை, ஒரு நாற்காலி, ஒரு பென்ச், ஒரு சுராய், அதன் மேல் கவிழ்த்த ஒரு கிளாஸ், இரண்டு சோம்பேறிகள். ஆக்ட்ராய் சுங்கவரி வசூலுக் காக ஓர் இடம் இருந்தது. சில லாரிகள் நின்று கொண்டிருந்தன. சில சர்தார்ஜிகள், எதிரே டீக் கடையில் பெரிய கிளாஸ்களில் டீ உறிஞ்சிக்கொண்டிருந்தார்கள். நாற்காலியில் உட்கார்ந்திருந்த அவன் மறுபடி தப்பாகக் கூட்டிக் கொண்டிருந்தான். அப்போது ஒரு உள்ளூர் போலீஸ் ஜீப் வந்து நின்றது. அதில் இருந்து இறங்கிய இருவர் அவசரமாகச் சென்று அந்தக் கூட்டல் ஆசாமியுடன் பேச, அந்தச் சோம்பேறிகளில் ஒருவன் எழுந்து வந்து அந்தக் கம்பத்தைக் கீழே தாழ்த்தினான். மற்றொருவன் சற்றுத் தூரம் சென்று சிவப்புக் கொடியுடன் ஓர் எச்சரிக்கைப் பலகையை வைத்தான். 

கான்ஸ்டபிள் சிகரெட் பற்றவைத்துக் கொண்டார். 

‘அம்பாஸிடர் கறுப்பு டி.எல்.கே. 1836 அல்லது 1386. மற்றவர்களை விட்டுவிடலாம்! அவ்வளவுதானே!’ என்றார் மற்றவரிடம்.

மற்றவர் தலையசைத்து நெருப்பு கேட்டார் . 

பஹதூர் கண்ணாடியில் பார்த்தான். 

‘சார், ஜீப் தெரிகிறது. அவர்கள் பின்தொடர்கிறார்கள்.’ 

அவர் திரும்பிப் பார்த்தார். ‘ஸ்டெப் ஆன் இட்! மிதி!”

முள் 100-ஐ எட்டியது. 

‘நான் போய் அந்தப் பக்கம் நிற்கிறேன்’ என்றார் கான்ஸ்டபிள்.

‘டேய், கம்பை இன்னும் தாழ்த்திப் பிடி!’ 

‘கட்டிவிடவா ஸாப்?’ 

‘கட்டாதே, பிடித்துக்கொண்டிரு. பஸ் லாரி எல்லாம் விட்டு விடு, கார் வந்தால் தழை’ 

100-க்கும் 110-க்கும் இடையில் முள் நடனமாடியது.

“தும் ஹஸீ மே ஜவா’ பார்த்தாயா?’ என்றார் கான்ஸ்டபிள்

‘இல்லை;. 

‘ஹேமமாலினி, தர்மேந்தர், அச்சா பிக்சர் சார்.

‘இடியட்! மிதி!’ 

‘ஸாப், ஆக்ஸிலேட்டர் கீழே படுகிறது’.

‘வெல்கம் டு மீரட்!’ என்றது போர்டு. அங்கிருந்து சற்று தூரத்தில் குறுக்கே சாலையைத் தடுப்பதற்காக…

‘லுக் அவுட் பஹதூர்…’

டூ லேட்.

அந்தக் குறுக்குக் கம்பம் விண்ட் ஷீல்டின் கண்ணாடியின் குறுக்கே நொறுங்க, சிலந்தி வலைபோல் உடனே அதில் விரிசல்கள் தோன்ற –  

110 கிலோமீட்டர் வேகத்தில் பஹதூர் நிலையிழந்தான்.

அந்த அம்பாஸடர் மிக அழகாகச் சாலையை விட்டு விலகி, இரண்டு சக்கரங்களில் பாதி தூக்கிக்கொண்டு இரண்டு அல்லது மூன்று செகண்ட் சென்று அந்த மரத்தில் பட்டு, திடீரென்று அதன் உருக்கு அந்தரங்கங்கள் அனைத்தும் தெரியக் கவிழ்ந்து பின் மட்டும் வெகு வேகமாகச் சுழல… அதன் ஹாரன் தொடர்ந்து ஒலிக்க ஆரம்பித்தது. 

சர்தார்ஜிகள், இரண்டு சோம்பேறிகள், இரண்டு கான்ஸ்டபிள்கள் அந்தக் காரை நோக்கி ஓடினார்கள்.

‘என்ன ஆயிற்று?’ என்றார் ராஜேஷ்.

‘சார், டில்லியிலிருந்து மெஸெஜ் வந்தது. கறுப்பு அம்பாஸிடர் காரை நிறுத்தும்படி. ரோட் பளாக் செய்திருக்கிறோம். கண்மூடித்தனமாக வந்தது அந்தக் கார்.’ 

‘அதில் இருந்தவர்கள் என்ன ஆனார்கள்?’ என்றான் கணேஷ்.

‘அந்த டிரைவர் உயிருடன் மயக்கத்தில் இருக்கிறான். முன் சீட்டில் இருந்த மற்ற ஆசாமி போய்விட்டார். சான்ஸே இல்லை.’

‘மோனிக்கா!’ என்று கூப்பிட்டான் கணேஷ். மோனிக்கா ஜீப்பிலிருந்து இறங்கி வந்தாள். ‘அனிதா, நீங்கள் இருங்கள். ராஜேஷ் வாருங்கள்’.

கணேஷ் சொன்னான்: ‘மோனிக்கா, நீ பார்க்கப் போவது உனக்கு மிகவும் அதிர்ச்சியைத் தரும். உனக்கு இந்தக் காட்சியைக் காட்ட அழைத்துச் செல்வது பற்றி நான் மிகவும் வருத்தப்படுகிறேன். ஆனால் நீ வந்து பார்க்கவேண்டியது அவசியம். என்னை மன்னித்துக் கொள் மோனிக்கா. நீ பார்த்தாக வேண்டும். ராஜேஷ், வாருங்கள்.’ 

அனிதா தலையைக் குனிந்துகொண்டு ஜீப்பில் உட்கார்ந்திருக்க, அவர்கள் மூவரும் அந்தக் கவிழ்ந்த காரை நோக்கிச் சென்றார்கள். தூரத்தில் ஆம்புலன்ஸ் நின்றுகொண்டிருந்கதது. அதிலிருந்த ஸ்ட்ரெச்சர் கீழே காரின் அருகில் வைக்கப்பட்டிருந்தது. இரண்டு வெள்ளை உடை அணிந்த சிப்பந்திகள் அந்த உடலை அதன் மேல் மெதுவாக வைத்தார்கள். 

‘மோனிக்கா, அருகே போய்ப் பார்’. 

மோனிக்கா அருகே சென்று பார்த்தாள். அவளது கிறீச்சிட்ட அலறலில் அந்த மரத்திலிருந்து பறவைகள் படபடவென்று சிறகடித்துப் பறந்தன. 

‘அப்பா! டாடி! அப்பா!’ கூவிக்கொண்டேயிருந்தாள் மோனிக்கா! 

‘இது எப்படி சாத்தியம்? கணேஷ்! மை காட்! என்னால் நம்பவே முடியவில்லை!’ என்றார் ராஜேஷ். 

ஜீப்பில் அவர்கள் திரும்பிக்கொண்டிருந்தார்கள். மோனிக்கா உடை கலைந்து தலை கலைந்து வெற்றுப்பார்வை பார்த்துக் கொண்டிருந்தாள். ஒரு கிலோ மீட்டருக்கு ஒரு தடவை விசித்துக் கொண்டிருந்தாள். ‘எனக்கு ஆஸ்பிரின் வேண்டும்’ என்றாள் அனிதா. 

‘கடை வந்ததும் நிறுத்தச் சொல்கிறேன். ராஜேஷ், என்ன சொன்னீர்கள்?’ 

‘இட்ஸ் அன்பிலீவபிள்.’ 

‘அனிதா, சொல்லுங்கள்.’ 

‘கணேஷ், எனக்குச் சிறைவாசம் கிடைக்குமா?’ 

‘எதற்கு?’

‘பொய் சொன்னதற்கு?’ 

‘உங்களைப் பொய் சொல்லவைத்த சூழ்நிலையை இன்ஸ்பெக்டருக்குச் சொல்லுங்களேன். இன்ஸ்பெக்டர், இப்போது குறித்துக்கொள்ள வேண்டாம். கொஞ்சம் கவனிக்கிறீர்களா? அனிதா, உங்கள் கணவர் பொறாமைக்காரர் அல்லவா?’

‘ஆம்’. 

‘அவர் உங்களை முழுவதும் தனக்கே சொந்த உரிமையாக்கிக் கொண்டது உண்மைதானே?’ 

‘ஆம், முழுவதும் அடிமையாக’. 

‘அதனால் உங்களுக்கு அவர்மேல் அளவுக்கு மீறிய வெறுப்பு ஏற்பட்டது இல்லையா?’ 

‘உண்மைதான்.’

‘அவருக்கு உங்கள்மேல்?’ 

‘காமம். பொறாமை. மிகக் காமம். மிகப் பொறாமை.’

‘கோவிந்த் எப்படிப்பட்டவன் அனிதா?’ 

‘மௌனமானவன். அடக்கமானவன். ஆழமானவன். எனக்குப் படுக்கை தட்டிப் போடுவான். செருப்புகளை எடுத்து வைப்பான். என் பாதங்களையே பார்த்துக்கொண்டிருப்பான். ஆனால்…’

‘ஆனால்?’ 

‘ஒரு தடவை என்னை அவன் என் அறையில்…’

‘அதை உங்கள் கணவரிடம் சொன்னீர்களா?’

‘இல்லை. அவரே பார்த்துவிட்டார்’. 

‘என்ன செய்தார்?’ 

‘ஒரு சவுக்கை உபயோகப்படுத்தினார். நிறைய அடித்தார். அவன் மயங்கி விழுந்ததால் அவனுக்குத் தண்ணீர் கொடுத்துத் தெளிய வைத்து மறுபடி அடித்தார். என் கண் முன்னால்! எனக்கும் அது எச்சரிக்கையாம்!’ 

‘கோவிந்த் என்ன ஆனான்?’

‘இறந்து போனான்.’ 

‘உங்கள் கணவர் என்ன செய்தார்?’ 

‘கலவரப்பட்டார். அவர் அதை த எதிர்பார்க்கவில்லை. பாஸ்கரைக் கூப்பிட்டார்.’ 

‘அவன் என்ன செய்தான்?’

‘யோசித்தான். அவரிடம் பேசினான். அவருடைய ஷர்ட்டைக் கேட்டான். ஷுவைக் கேட்டான். பர்ஸைக் கேட்டான். அடையாள கார்டு கேட்டான். சின்ன காரின் சாவியைக் கேட்டான். கோவிந்தைத் தரதரவென்று தரையோடு இழுத்துக் கொண்டு சென்றான்…’ 

‘உங்கள் கணவர் அப்புறம் உங்களிடம் என்ன சொன்னார்?’

‘கோவிந்தின் உடல் ரிட்ஜ் ரோடு அருகில் கண்டுபிடிக்கப்படும். போலீஸ் உன்னைக் கூப்பிடுவார்கள். உடலை அடையாளம் காட்டச் சொல்வார்கள். அது என் உடல்தான் என்று நீ அடையாளம் காட்ட வேண்டும்’ என்றார். இறந்தது ஷர்மா, காணாமல் போனது கோவிந்த் என்று போலீசில் நினைக்க வேண்டுமாம்.’

‘நீங்கள் ஏன் அதற்குச் சம்மதித்தீர்கள்?’

‘வேண்டுமென்றுதான். என்னை வருஷக் கணக்கில் ஆண்டார். அவரை நான் ஆள்வதற்கு ஒரு சந்தர்ப்பம் கிடைக்கிறது. எத்தனை நாள் என்னைப் பூட்டி வைத்திருக்கிறார்! அவரை நான் ஆள, சூரிய வெளிச்சம் தெரியாமல் தலைமறைவாக அடைத்து வைக்க, அவர் உயிர் என் உதடுகளில் ஊசலாட, சந்தர்ப்பம் கிடைத்தது.’ 

‘பாஸ்கர் எப்படிப்பட்டவன்?’

‘சந்தர்ப்பவாதி… கோவிந்தின் உடலை நான் என் கணவர் என்று அடையாளம் காட்டியவுடனே மற்ற எல்லா விஷயங்களையும் அவன்தான் பார்த்துக்கொண்டான். போஸ்ட்மார்ட்டமான உடனேயே அவசர அவசரமாக எரித்துவிட ஏற்பாடுகள் செய்தான்.’ 

‘மோனிக்காவுக்கு அவர் தந்தை இறந்த செய்தி தாமதமாக அனுப்பப்பட்டதல்லவா?’

‘ஆம்’.

‘போலீஸில் கோவிந்தின் போட்டோ வேண்டுமென்று கேட்டபோது இல்லை என்று சொன்னீர்கள் அல்லவா?’

‘ஆம்.’

‘அதற்கெல்லாம் காரணம், இறந்தவர் ஷர்மா அல்ல என்பதை யாரும் கண்டு சொல்லிவிடக்கூடாது என்பதுதானே?’ 

‘ஆம்’. 

‘ஷர்மா எங்கிருந்தார்?’ 

‘அவசர அவசரமாக ஷாத்ராவில் வாங்கப்பட்ட ஒரு தனி வீட்டில் போய்த் தலைமறைந்தார்.’ 

‘பிறகு ஷாத்ரா வீட்டை விட்டு வெளியே வரவேயில்லையா?’

‘ஒரு தடவை வெளியே வந்தார்.’ 

‘எதற்கு?’ 

‘பாஸ்கரைக் கொல்வதற்கு’ என்றாள் அனிதா. ஜீப்புக்குள் நிசப்தம் ஆண்டது. 

‘பாஸ்கர் துணிச்சல் அடைந்துவிட்டான். ஷர்மாவின் உயிர் அவன் கையில் இருந்ததால் துணிச்சல். அவரை ப்ளாக்மெயில் செய்தான். நிறையப் பணம் கேட்டான்! என்னிடமும் சற்று தைரியமடைந்தான்… வாலாட்டினான். சொன்னேனே!” 

‘பாஸ்கரைக் கொன்றது…’ 

‘ஷர்மாதான். பாஸ்கருக்கு ஒன்று தெரியவில்லை. அவன் விரித்த வலை அவனையே வீழ்த்தும் என்பது. சுட்டுத் தீர்த்துவிட்டார்’.

‘பின்?’

‘அன்றிரவுதான் உங்கள் டெலிபோன் வந்தது. நான் தப்பிக்க நினைப்பதற்குள் அவர் வீட்டுக்கே வந்து விட்டார். என்னைத் துப்பாக்கி முனையில் ஷாத்ரா வீட்டுக்கு இழுத்துக்கொண்டு போனார். அங்கே தன்னுடன் வைத்துக்கொண்டார். மூன்று நாட்கள், கணேஷ்! மூன்று நாட்கள் நான் அனுபவித்த வேதனை! ஷர்மா இந்த கார் விபத்தில் இத்தனை சீக்கிரம் இறந்திருக்கக் கூடாது.. ‘

‘மோனிக்கா, நான் அழகாக இருந்தது போதும். செல்வத்தில் இருந்தது போதும். அது தந்த அற்ப சுகங்கள் போதும். இப்படித் துப்பாக்கி முனைகளில் உடை உரியப்பட்டது போதும்… மோனிக்கா, நீயே உன் அப்பாவின் செல்வத்துடன் அந்த ராட் சதன் கட்டின தங்க மாளிகையில் வாழு! எனக்கு ஒரு பைசா வேண்டாம்! எனக்கு ஒருவரும் இல்லை. எனக்கு ஒருவரும் இல்லை.’ 

‘அனிதா, நான் இருக்கிறேன்’ என்றான். ‘கணேஷ்’ என்றாள் மோனிக்கா. 

முடிக்குமுன் 

அவன் பெயர் ஆனந்த், அவள் பெயர் ராதிகா. அவன் அவளை அழைத்துச் செல்கிறான். 

சிமெண்ட் கான்க்கிரீட்டினால் கட்டப்பட்ட ஓவர்சைஸ் சுவர். அதன் பின் தேங்கிய தண்ணீர், ஒரு செயற்கை நீரோடை. 

‘ஆனந்த், நாம் ஏன் பயப்பட்டு பயப்பட்டு இனிமேல் தனி இடத்தை நாடவேண்டும்? நமக்குத்தான் கல்யாணம் ஆகிவிட்டதே!’ 

‘பேபி உனக்குத் தெரியாது. இதில் ஒரு த்ரில் இருக்கிறது’ என்றான் ஆனந்த். 

(முற்றும்)

– அனிதா – இளம் மனைவி (தொடர்கதை), வெளிவந்த ஆண்டு: 1974, குமுதம்.

Print Friendly, PDF & Email

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *