என் பெயர் ராம். அதாகப்பட்டது கே.ராமச்சந்திரன். பதினேழு வருஷங்களுக்கு முன்னாடி லயோலாவில் பி.எஸ்சி. (விஸ்காம்). இன்று, வைல்ட்லைஃப் போட்டோகிராஃபர். ஒரு ஆங்கில சேனலுக்காக வேலை செய்கிறேன்.
அசைன்மென்ட் விஷயமாக யாங்கூனுக்கு கிளம்பிக் கொண்டிருக்கிறேன். சென்னை சர்வதேச விமான நிலையம். ஃப்ளைட்டுக்காகக் காத்திருந்த நேரத்தில்தான் அவளைப் பார்த்தேன்.
அவளை என்று ஒருமையிலா சொன்னேன்?
அவள்களைப் பார்த்தேன் என்று பன்மையில் திருத்தி வாசியுங்கள். முகங்களைப் பார்க்கவில்லை. முதுகுகளைத்தான் பார்த்தேன்.
எங்கேயோ கண்ட முதுகுகள்!
ஜானகியும், மைதிலியுமா?
யெஸ். அப்படித்தான் தோன்றுகிறது.
அன்று 35 எம்.எம். இப்போது 70 எம்.எம். அகன்ற திரை. அகலம்தான் வித்தியாசம்.
நொடியில் சிலிர்த்த ஆழ்மனசு, 22 ஆண்டுகளுக்குப் பின்னோக்கி ஃப்ளாஷ்பேக்கில் பயணித்தது.
அது 96ம் வருடம். பத்தாம் வகுப்பு ‘அ’ பிரிவு. தந்தை பெரியார் அரசினர் உயர்நிலைப் பள்ளி. புழுதிவாக்கம். பரங்கிமலை ஒன்றியம். காஞ்சிபுரம் மாவட்டம்.
தூக்கம் கண்ணைச் சுழற்றிக் கொண்டிருந்த ஒரு சோம்பலான, சோர்வான மதியப் பொழுது. தமிழய்யா வகுப்பு எடுத்துக் கொண்டிருந்தார்.
கைக்கிளை, பெருந்திணை, பசலை என்றெல்லாம் போடு போடென போட்டுக் கொண்டிருந்தார். பக்கத்து சீட்டு சதீஷ், குறட்டை விட்டுக் கொண்டிருந்தான். கண்களைத் திறந்து கொண்டே எப்படித் தூங்குவது என்று அவனிடம்தான் பயிற்சி எடுக்க வேண்டும்.
அய்யாவோ கர்மமே கண்ணாக தலைவன், தலைவி என்றெல்லாம் சொற்பொழிவு ஆற்றிக் கொண்டிருந்தார். எனக்குத் தெரிந்த தலைவன் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த். தலைவி குஷ்பூ. அய்யாவின் தலைவன், தலைவியெல்லாம் ஆயிரக்கணக்கான ஆண்டுகளுக்கு முன்பாக சங்க காலத்தில் வாழ்ந்தவர்கள்.
வகுப்பில் பாதிப்பேர் அரைத்தூக்கத்திலும், மீதிப் பேர் முழுத்தூக்கத்திலும் ஆழ்ந்து விட்டதை அய்யா கவனித்து விட்டார். இதுமாதிரி சமயங்களில் சட்டென்று கியர் மாற்றி ஆக்ஸிலேட்டரை முறுக்குவது அவர் வழக்கம்.
எருமை மாட்டுக்கு வாழைப்பழத்துக்கு நடுவில் மாத்திரை வைத்துத் தருவது மாதிரி ‘சூடாக’ ஏதாவது மேட்டர் பிடித்து, வகுப்பறை கும்பகர்ணன்களை எழுப்புவார். அன்றும் அப்படித்தான்.
“எலேய் ராமச்சந்திரன், உன்னை ஒரு பொண்ணு காதலிக்கிறா. அவளுக்கு உன்னைப் புடிச்சிருக்குன்னு எப்படிய்யா தெரிஞ்சுக்குவே?”என்னை நோக்கி அணுகுண்டு வீசுவார் என்று கொஞ்சமும் எதிர்பார்க்கவில்லை.
அச்சம், மடம், நாணம், பயிர்ப்பு போன்ற உணர்வுகளெல்லாம் கலந்து கட்டி புயலாய் என் நெஞ்சுக்குள் வீசின. ஒட்டுமொத்த வகுப்பும் என்னைப் பார்த்து ‘கொல்’லென்று சிரித்து வைக்க, தயக்கத்தோடு எழுந்தேன் “ம்ம்… அய்யா… அது வந்து…” காலால் கோலம் போட்டேன்.
“ஆம்புளைப் புள்ளே தானே? என்னலே வெக்கம்?”
“வந்து… வந்து… என்னை புடிச்சிருக்கான்னு கேட்பேன். அவளுக்கு புடிச்சிருந்தா ‘புடிச்சிருக்கு’ன்னு சொல்லுவா…”
“தூத்தேறி.. புடிக்கலைன்னா செருப்பால அடிப்பாளா?”
நான் அவமானப்படுவது கண்டு வகுப்பு குதூகலம் அடைந்தது.
டி.எஸ்.பாலையா மாதிரி விஸ்தாரமான சிரிப்பு ஒன்றைச் சிரித்தார் தமிழய்யா. அவர் நல்ல திராவிட நிறம். பல் மட்டும் பளீரென்று மல்லிகைப்பூ மாதிரி வெள்ளை வெளேரென்று மினுக்கும்.
‘இன்னைக்கு ஏதோ தரமான சம்பவம் நடக்கப் போவுது’ என்று ஒட்டுமொத்த வகுப்பறையும் சுவாரஸ்யமாக கவனிக்க ஆரம்பித்தது.
“தெரியலீங்க அய்யா. நீங்களே சொல்லிடுங்க…”
“மூதி. இதெல்லாம் கூட உங்களுக்குச் சொல்லிக் கொடுக்கணும். அதுக்குதான்டா சங்கத்தமிழ் படிக்கணுங்கிறது. நான் பாடம் நடத்துனா எல்லாப் பயலும் தூங்குறீங்க. நீங்க எப்படி காதலிச்சி, கல்யாணம் பண்ணி, புள்ளை பெத்து வாழப்போறீங்களோ. தமிழைப் படிச்சவனுக்கு தமிழே வழிகாட்டும்…”
அய்யா ஒரு சின்ன சஸ்பென்ஸ் வைத்துவிட்டு, சொம்பில் நிறைந்திருந்த தண்ணீரை எடுத்துக் குடித்தார். அவரே திரும்ப ஆரம்பிக்கட்டும் என்று நாங்களெல்லாம் உன்னிப்பானோம்.
“ஒரு தெருவோட இந்த முனையிலே இருந்து நீ நடக்குற. இன்னொரு முனையிலே இருந்து உன்னை விரும்பற பொண்ணு நடந்து வர்றா. இடையிலே ரெண்டு பேரும் ஒருத்தரை ஒருத்தரு தாண்டி நடக்குறீங்க. வெட்கங்கெட்ட ஆம்பளைப் பய நீ. சட்டுன்னு நிமிர்ந்து பார்த்துடுவே. அவ, பொண்ணு இல்லையா? அப்படியெல்லாம் பார்க்க மாட்டா. ஓரக்கண்ணுலே பார்ப்பா. அது உனக்குத் தெரியாது.
ஆனா, தெரு முக்குலே திரும்பறதுக்குள்ளே ஒரு முறையாவது தீர்க்கமா திரும்பி விரும்பி முழுசா உன்னைப் பார்ப்பா. அவ அப்படிப் பார்க்குறாளான்னு நீ உறுதிப்படுத்திக்கணும்…”
“திரும்பிப் பார்க்கலைன்னா அய்யா?” சதீஷ், ஆர்வமாகக் கேட்டான்.
“இந்த எருமை அந்தப் பசுவோட மனசுலே இல்லேன்னு அர்த்தம்!”
அட. காதலிக்கிறவளின் மனசில் நாம் இருக்கிறோமா என்று தெரிந்துகொள்வதற்கு இவ்வளவு சுலபமான வழியா?
‘இதயம்’ முரளிக்கு இந்த சூத்திரம் தெரிந்திருந்தால், எத்தனையோ படங்களின் கிளைமேக்ஸே மாறியிருக்குமே?
அய்யா, மீண்டும் பாடத்தைத் தொடர என் மனசோ ஜிவ்வென்று றெக்கை கட்டி ராக்கெட் மாதிரி சஞ்சாரமற்ற சூனிய வெளியில், சத்தமற்ற முத்தங்களைப் பறக்கவிட்டுக் கொண்டே பயணிக்கத் தொடங்கியது.
அன்று பள்ளி முடிந்தது. டியூஷனுக்குச் செல்ல வேண்டும். சதீஷும் என்னோடு டியூஷனுக்கு வருவான். சைக்கிள் ஸ்டேண்டுக்கு வரும் வரையில் அவனிடம் பேசாமலேயே மிதந்து வந்துகொண்டிருந்தேன்.
“மச்சி. தமிழய்யா சொன்னதை டெஸ்ட் பண்ணி பார்க்கப் போறேண்டா…” என்றேன்.
கொஞ்சம் ஆவலோடு கேட்டான். “ஜானகி கிட்டேயா?”
ராமச்சந்திரனுக்கு ஜானகிதான் ஹீரோயினாக முடியும் என்பதெல்லாம் விதி. களிமண் மண்டையன் சதீஷுக்கே இது தெரிந்திருப்பது கடவுளின் சதி. அனைத்துக்கும் மேல் நான் ஜானகியிடம் ஃப்ளாட் ஆகியிருந்தேன் என்பதையும் ஒப்புக்கொண்டுதான் ஆக வேண்டும்.
கடலளவு காதல் அது. மீடியம் சைஸ் மெரூன் ஸ்டிக்கர் பொட்டு. அதற்கு இருபக்கத்திலும் 3 மில்லிமீட்டர் சுற்றளவுக்கு வெள்ளை சாந்து வைத்து டக்கராக இருப்பாள். வட்ட முகம். சிவப்பு என்று சொல்லிவிட முடியாது. கருப்பு என்றும் கழற்றிவிட முடியாது. மாநிறம். வெள்ளை ஜாக்கெட். பச்சைப் பாவாடை தாவணியில் அவளைப் பார்த்ததுமே ‘மாங்குயிலே பூங்குயிலே’ பாட்டு மனசுக்குள் லூப்பில் ஓடும்.
சதீஷ் என் நம்பிக்கையை சுக்குநூறாக உடைத்தான்.
“மச்சீ. தப்பா நினைச்சுக்காதே. அது திம்சுக்கட்டை மாதிரி இருக்கு. நீயோ கிரிக்கெட் ஸ்டெம்பு மாதிரி இருக்கே! வேலைக்கு ஆவும்னு நெனைக்கறீயாடா?”
அவன் சொன்னதும் என் பர்சனாலிட்டியை நினைத்து நானே கழிவிரக்கம் கொண்டேன். இருந்தாலும் கண்ணாடியில் பார்க்கும்போது ‘ரசிகன்’ விஜய் மாதிரிதான் என் முகமும் இருந்தது. கன்னத்தில் லேசாக டொக்கு விழுந்திருப்பதால் அழகு இல்லை என்றாகிவிடுமா? அஜீத்குமாரேகூட ‘காதல் கோட்டை’ படத்தில் இப்படித்தானே இருக்கிறார்? அவரை ஹீரா துரத்தித் துரத்திக் காதலிக்கவில்லையா? பெருத்த நம்பிக்கையோடு சொன்னேன். “இல்லை மாமா. எனக்குத் தோணுது. ஜானுவும் என்னை லவ் பண்ணுறா. FLAMES போட்டுப் பார்த்தப்போகூடாதுனு வந்தது!”
“சரி மச்சான். உன் நம்பிக்கையைக் கெடுப்பானேன். இப்போ ஜானகி, சைக்கிள் எடுக்க வருவா இல்லே. தமிழய்யாவோட ஃபார்முலாபடி நடந்துட்டா நீங்க லவ்வர்ஸுன்னு ஏத்துக்கறேன்…”
நல்ல வேளையாக அந்தக் காலத்தில் ஒவ்வொரு விஜய்க்கும், அஜீத்துக்கும் சின்னி ஜெயந்த், விவேக், கரண் மாதிரி காதலுக்கு உதவிக்கரம் நீட்டும் நண்பர்கள் அமைந்திருந்தார்கள். எனக்கு சதீஷ்.
‘ஆ’ பிரிவிலிருந்து ஜானு வருவதற்கு பத்து நிமிடம் காத்திருக்க வேண்டும். ஏனெனில் ‘அ’ பிரிவு ஆண்கள் எல்லாரும் கிளம்பியபிறகே, ‘ஆ’ பிரிவு பெண்களை பாதுகாப்பு நிமித்தமாக புஷ்பவல்லி மேடம் அனுப்புவார்.
இந்த விஷயத்தில் மேடம் ரொம்பவே ஸ்ட்ரிக்ட். மேடத்தின் இதுமாதிரி தீவிரமான கண்டிஷன்களால் கடுப்பான சில மாணவர்கள், வெறுத்துப்போய் அந்த மேடத்தையே சைட் அடிக்கும் சம்பவங்களும் சமயங்களில் நடந்ததுண்டு.
அன்றைய பத்து நிமிடம், பத்து ஆண்டுகளாய் எனக்குக் கழிந்தது. பத்து விரல் நகங்களையும் கடித்துத் துப்பியிருந்தேன். கடிக்க மேலும் நகம் இல்லாமல், கால் நகங்களைக் கடிக்கலாமா என்று எண்ணிய வேளையில், பச்சைத் தாவணிகள் பட்டாம்பூச்சிகளாகப் பறந்துவரத் தொடங்கியிருந்தன. ஜானு, தூரத்தில் ஒளியாய்த் தெரிந்தாள்.
புத்தகப்பையை மார்போடு அணைத்துக் கொண்டிருந்தாள். கண்ணில் பட்டையாக மை வைப்பது அவளது ஸ்பெஷாலிட்டி. ட்ரிம் செய்த புருவம். இமைகளின் இருபுறமும் லேசாக மையைத் தீற்றியிருந்தது அன்று கூடுதல் கவர்ச்சியாக எனக்குப் பட்டது. அவள் சைக்கிள் எடுக்கும்போது அவளது கண்பார்வையில் படும்படி நின்றுகொண்டேன்.
சதீஷ், பாதுகாப்பாக தலைமறைவாகி எங்களைக் கவனித்துக் கொண்டிருந்தான். என்னை ஒரு பொருட்டாகவே நினைக்காமல், சைக்கிளை ஸ்டாண்டில் இருந்து விடுவித்தாள். தமிழய்யாவின் குரல் அசரீரியாய் ஒலித்தது.
“வெட்கங்கெட்ட ஆம்பளைப் பய நீ. சட்டுன்னு நிமிர்ந்து பார்த்துடுவே. அவ, பொண்ணு இல்லையா? அப்படியெல்லாம் பார்க்க மாட்டா. ஓரக்கண்ணுலே பார்ப்பா. அது உனக்குத் தெரியாது…”
ஹேண்டில்பாரை லாவகமாகப் பிடித்து சைக்கிளை ரிவர்ஸ் எடுத்தவள், பெடலை மிதிக்க ஆரம்பித்தாள்.
‘போகுதே போகுதே என் பைங்கிளி வானிலே’ என்று பேத்தோஸாக எஸ்.பி.பாலசுப்பிரமணியம் எனக்கு மட்டும் கேட்கும் குரலில் பாட ஆரம்பித்தார்.
கொஞ்சம் கொஞ்சமாக ஜானு என்னைவிட்டு தூரமாகப் போய்க் கொண்டிருக்கிறாள். ‘திரும்பிப்பாரு ஜானு, திரும்பிப்பாரு ஜானு’ என்று மனசுக்குள் மந்திரம் ஒலிக்க ஆரம்பித்தேன். திருப்பத்துக்கு இன்னும் பதினைந்து, இருபது அடி தூரம்தான்.
திரும்பிப் பார்க்காமல் போய்விட்டால் எனக்கு மனசு தாங்காது. சதீஷ் வேறு கிண்டலடித்தே சாகடிப்பான். சட்டென்று அனிச்சையாக சைக்கிள் பெல்லை இருமுறை அடித்தேன்.
திருப்பத்தில் திரும்புவதற்கு முன்பாக எனக்கே எனக்கான ஜானு ஒன்றரை நொடி திரும்பிப் பார்த்து மறைந்தாள். அந்த ஒன்றரை நொடிக்குள் அவள் சிந்திய புன்னகையை அப்படியே ஸ்க்ரீன்ஷாட் எடுத்து வைத்துக் கொண்டேன்.
“மச்சான், சக்சஸ்டா!” சதீஷைப் பார்த்து உற்சாகமாகச் சொன்னேன்.
“போடா இவனே. பெல்லு அடிச்சா பொண்ணு என்னா… கிழவி, எருமை, ஆடு, நாயி எல்லாம்தாண்டா திரும்பிப் பார்க்கும்…”
மெதுவாக மிதக்க ஆரம்பித்திருந்த நான், சதீஷ் சொன்ன யதார்த்தமான உண்மையைக் கேட்டதும் பொத்தென்று தரையில் விழுந்தேன்.
அதன்பின் பல சந்தர்ப்பங்கள். பிரேயரில், டியூஷனில், கோயிலில், பிளேகிரவுண்டில், மாணவர் தேர்தலுக்கு ஓட்டு கேட்க ‘ஆ’ பிரிவுக்குச் சென்ற நேரத்தில் என்று ஏகப்பட்ட இடங்களிலும் என்னைப் பார்க்கிறாளா என்று பார்த்துப் பார்த்து ஏங்கினேன்.
ஒருவேளை ஸ்கூல் யூனிஃபார்மில் என்னுடைய பர்சனாலிட்டி கொஞ்சம் கம்மியாக இருப்பதால்தான் பார்க்க மறுக்கிறாளோ என்று சந்தேகம். சதீஷுக்கும் சொல்லாமல் ஒரு ரகசியத் திட்டம் தீட்டினேன். மானை, மான் வசிக்கும் இடத்திலேயே மடக்குவது என்று முடிவெடுத்தேன்.
டார்க் ப்ளூ ஜீன்ஸ் பேண்ட், பூனை படம் போட்ட ஒரு ஸ்கை ப்ளூ டீஷர்ட், பச்சைக்கலர் கூலிங் கிளாஸ் சகிதமாக அந்த சனிக்கிழமை காலை சீக்கிரமே சுறுசுறுப்பாகி விட்டேன். ட்யூஷனுக்குக் கிளம்புவதாக வீட்டில் சொல்லி, நம்பகத்தன்மை ஏற்படுத்துவதற்காக ரஃப்பாக ஒரு ரஃப் நோட்டை கையில் வைத்துக்கொண்டு, பிஎஸ்ஏ சைக்கிளைக் கிளப்பினேன்.
ஜானுவை பல மாதங்களாக புலனாய்வு செய்ததில் எனக்குக் கிடைத்திருந்த தகவல்கள் ஆயிரம் பக்க ஆவணமாக இருந்தன. அதன்படி பள்ளி விடுமுறை நாட்களில் காலை பத்து மணி வாக்கில், அவள் வீட்டின் தெருமுனை கைப்பம்பில் தண்ணீர் இறைக்க வருவாள்.
ஒன்பதே முக்காலுக்கு கைப்பம்புக்கு இருபத்தைந்து அடி தூரத்தில் பாதுகாப்பான இடத்தில் நிலைகொண்டேன். வேண்டுமென்றே சைக்கிள் செயினைக் கழற்றிவிட்டு, அதை மாட்டுவது போல நடித்துக்கொண்டிருந்தேன். இதைத்தவிர வேறு டெக்னிக் எதுவும் எனக்குத் தோன்றவில்லை. வெட்டியாக சைக்கிளோடு நின்றுகொண்டிருந்தால் போவோர், வருவோர் ஒரு மாதிரியாக பார்ப்பார்கள். ஏரியாவில் இமேஜ் ரொம்ப முக்கியம்.
பத்துமணிக்கு ஐந்து நிமிடங்கள் முன்பாகவோ அல்லது பின்பாகவோ ஜானு, குடத்துடன் வந்தாள். எப்போதும் யூனிஃபார்மில் பார்த்தவளை வண்ண உடையில் கண்டபோது கூடுதல் கவர்ச்சி தெரிந்தது.
அவளுக்கும் அப்படித்தான் என்னைப் பார்க்கும்போது இருக்குமென்ற நினைப்பே கிளுகிளுவென்றிருந்தது. ஜானுவின் கூடவே ஒரு வாண்டு. அச்சு அசல் ஜானு மாதிரியே இருந்தாள். அவளை மினியேச்சர் செய்தமாதிரி இருந்தவளின் பெயர் மைதிலி என்று பிற்பாடுதான் அறிந்தேன்.
‘மச்சினிச்சி வர்ற நேரம் மண் மணக்குது, மனசுக்குள்ளே பஞ்சவர்ணக் கிளி பறக்குது…’ ஜானு, கைப்பம்பில் தண்ணீர் அடித்துக் கொண்டிருக்க என் மனசோ கூட்ஸ் வண்டியாக தடதடத்துக் கொண்டிருந்தது.
படபடப்பைக் குறைக்க சைக்கிள் செயினை மாட்டிவிட்டு பெடலை வேகமாகச் சுற்றி விட்டுக் கொண்டிருந்தேன்.
ஜானு என்னைக் கண்டு கொண்டதாகவே தெரியவில்லை. ஒருவேளை மாறு வேடத்தில் வந்திருப்பதால் அடையாளம் தெரியவில்லையோ? என்னுடைய தன்னம்பிக்கையின் டெம்ரேச்சர் குறையத் தொடங்கியது.
குடத்தில் தண்ணீர் நிரம்பியவுடன் இருவரும் கிளம்பினார்கள்.
‘திரும்பிப் பாரு ஜானு… திரும்பிப் பாரு ஜானு…’ ஸ்ரீராமஜெயம் மாதிரி நூற்றியெட்டு முறை எனக்கு மட்டுமே கேட்பது போல சன்னமான குரலில் பிதற்ற ஆரம்பித்தேன். என் பிரார்த்தனை வீண் போனது. தெருமுனையை எட்டிவிட்டாள் ஜானு. இதற்கு மேல் என்னைப் பார்ப்பதற்கு வாய்ப்பே இல்லை.
சங்கக்கால தமிழில் எழுதப்பட்ட காதல் சூத்திரமெல்லாம் எனக்கு வேலைக்கு ஆகவில்லை. திருப்பத்தில் திடீர் திருப்பம். திரும்பிப் பார்த்தாள்.
‘பார்த்தாள்’ என்று ஒருமையிலா சொன்னேன்?
‘பார்த்தார்கள்’ என்று பன்மையில் திருத்திக் கொள்ளுங்கள்.
ஆமாம். அக்கா, தங்கை இருவருமே திரும்பிப் பார்த்தார்கள்!
இருவருமே காதலோடு சிரித்தது மாதிரிகூட எனக்குத் தோன்றியது. தமிழய்யாவின் குரலில் மீண்டும் அசரீரி.
“ஆனா, தெரு முக்குலே திரும்பறதுக்குள்ளே ஒரு முறையாவது தீர்க்கமா திரும்பி விரும்பி முழுசா உன்னைப் பார்ப்பா..!”
யாங்கூன் விமானத்துக்காகக் காத்துக் கொண்டிருக்கிறேன்.
என்னைக் கடந்து போன இருவர் ஜானகி, மைதிலி மாதிரிதான் தோன்றுகிறார்கள்.
மீண்டும் 22 ஆண்டுகள் கழித்து ஸ்ரீராம ஜெயம் மாதிரி, ‘திரும்பிப் பாரு ஜானு… திரும்பிப் பாரு மைதிலி…’ என்று மந்திரம் ஓத ஆரம்பிக்கிறேன்.
ம்ஹூம். இது 2018. ஃபார்முலாவெல்லாம் மாறிவிட்டது போலிருக்கிறது. அவர்கள் ஜானுவும், மைதிலியும்தானா என்றுகூடத் தெரியவில்லை.
எனக்கும் ஃப்ளைட்டுக்கு நேரமாச்சு. ஜானுவின் குரலில் போர்டிங்குக்கு யாரோ அழைக்கிறார்கள்.
Tata bye bye!
– நவம்பர் 2018