கதைக்குள் செல்லும் முன்…
நான் எப்பொழுதுமே அகிம்சை வாதி..காந்தீய வழியில் வாழ்பவள்..சிறு உயிருக்கும் தீங்கு நினைக்காதவள்..அடி தடி எல்லாம் எனக்கு பிடிப்பதில்லை..இப்படி ஒரு கதை எழுதவா என்று ஓராயிரம் முறை யோசித்து, கடைசியில், நான்கு பேருக்கு நன்மை நடக்குதுன்னா எத எழுதினாலும் தப்பில்லை என்று தோன்றவே இதை துணிந்து எழுதினேன்.பொறுமையாக படியுங்கள்.
—–
அதிகாலை பொழுது..
எல்லோரும் வாக்கிங் ஜாகிங் என்று உடம்பை பேணி பாதுகாத்துக்கொள்ள துவங்கியிருப்பதால், அடிக்கும் குளிரையும் பொருட்படுத்தாது நடப்பதும் ஓடுவதுமாய் இருந்தனர்.
நமது கதாநாயகி ரேஷ்மியும் வாக்கிங் செல்ல தயாரானாள் ராஜுவுடன்..கழுத்தில் ஸ்கார்ப் கட்டிக்கொண்டாள். குளிருக்காக..
வாக்கிங் செல்லும்போதே ஒரு எண்ணம் அவளுக்கு..இன்று அவன் வருவானா?
நல்ல கட்டுமஸ்தான தேகத்தோடு பார்ப்பவரை திரும்பி அதுவும் பயத்தோடு பார்க்க வைக்கும் கம்பீரம் அவனுக்கு..மற்றவர்கள் கூப்பிட்டதை வைத்து அவன் பெயர் ஜெர்ரி என்று தெரிந்தது..இவளை பார்க்கும் பார்வையில் மட்டும் ஏதோ மாற்றம் தெரியும் ரேஷ்மிக்கு..மற்றவர்களை பார்த்து முறைக்கும் அவன் இவளை கண்டால் சற்றே வழிவது போல் இருக்கும்.
இது தனது எண்ணம் போலும் என்று கூட சமயத்தில் தோன்றும். வாக்கிங் செல்லும்போது, ராஜுவும், கென்னடியும் பேசிக்கொள்வார்கள். எப்பொழுதும் கென்னடியோடு தான் ஜெர்ரியும் வாக்கிங் வருவான் என்றாலும், அவர்கள் இருவரும் பேசிக்கொள்வார்களே தவிர, இவர்கள் இருவரும் பேசி கொள்வதில்லை.
பீச்சில் உள்ள ஜூஸ் கடையில், வாக்கிங் முடித்து விட்டு என்றாவது ஓய்வாக அமர்ந்தால் அங்கே ஜூஸ் குடிப்பது வழக்கம்.அப்போதுதான் ரேஷ்மிக்கு அந்த விஷயம் தெரிய வந்தது.ஜெர்ரிக்கு பைன் ஆப்பிள் ஜூஸ் பிடிக்கும் என்று..அன்றிலிருந்து பைன் ஆப்பிள் என்றாலே பயந்து ஓடும் ரேஷ்மி, இன்று பைன் ஆப்பிள் கு விசிறி யாகி விட்டாள்.
சில சமயம் ஜூஸ் குடிக்கும்போது வேண்டுமென்றே, ஜெர்ரி மிச்சம் வைக்க, அதை ரேஷ்மி குடிக்க என்று சத்தமில்லாமல் ஒரு நேசம் அரங்கேறிக் கொண்டிருந்தது.
இதையெல்லாம் வைத்து பார்த்தால், தான் ஜெர்ரியை நேசிக்கிறோமோ என்று தோன்ற ஆரம்பித்தது.முதலில் அவள் யோசித்தது மதம் குறித்து தான்..இருவரும் வேறு வேறு மதம்..ஆனால் ராஜுவும் கென்னடியும் நண்பர்கள் என்பதால் பிரச்சனை வர வாய்ப்பில்லை என்று நினைத்து தன் நினைப்பினை தொடர ஆரம்பித்தாள்.ஆனால் அவளுக்கு ஒன்று மட்டும் நிச்சய படுத்த வேண்டியிருந்தது. ஜெர்ரிக்கும் தன் மீது நாட்டம் உள்ளதா என்று தெரிய வேண்டியிருந்தது.
அதை பற்றிய நினைவில் தான் இன்று கிளம்புகையிலேயே, அவன் வருவானா என்று நினைத்து கொண்டு அப்படியே நின்றிருந்தவளை ராஜுவின் குரல் தன்னிலைக்கு கொண்டு வந்தது..
“என்ன ரேஷ்மி..அப்படியே நிக்கிற..கம்மான் குவிக்..கெட் பாஸ்ட்” என்று சொல்லி விட்டு முன்னே செல்ல தொடங்கினான். ராஜூவை பின் தொடர்ந்த ரேஷ்மி, வேக வேகமாக நடக்க தொடங்கினாள்.பத்தடி தூரம் கடந்ததும், கென்னடியின் தலை தெரிந்தது..ஆனால் கூட ஜெர்ரியை காண வில்லை..ரேஷ்மி யின் முகம் வாடி விட்டது. எப்படி கேட்பது என்று நினைத்து கொண்டிருக்கையிலேயே,
“என்ன கென்னடி, ஜெர்ரி வரலையா….வாட் ஹாப்பண்ட் டு ஹிம்? என்று கேள்வி கேட்டு ரேஷ்மியின் வயிற்றில் பாலை வார்த்தான் ராஜு.
நன்றியோடு ராஜூவை பார்த்து விட்டு, கென்னடியின் பதிலுக்காக காத்திருக்க தொடங்கினாள்.
“அதுவா ராஜூ, அவனுக்கு லேசா உடம்புக்கு முடிலன்னு நினைக்கிறேன்.ஈவ்னிங் வந்து தான் ஆஸ்பிட்டலுக்கு கூட்டிகிட்டு போக முடியும்.வேற யார்கூடவும் போகவும் மாட்டான்.இவனோட இது வேற பிரச்சனை..’என்றான் கென்னடி.
அதை கேட்டதும் ரேஷ்மிக்கு மனதுக்கு கஷ்டமாகி விட்டது.ஐயோ இன்னிக்கு அவன பாக்க முடியாதே..இப்போது ராஜூவும் தன்னை தனியாக அனுப்ப மாட்டானே..அப்படியே இருந்தாலும் என்ன சொல்லி விட்டு,அவனை சென்று பார்ப்பது என்று தவிக்க தொடங்கினாள்.அதோடு கூட, தான் பேசுவதை ராஜூ சரியாக புரிந்து கொள்வானா என்ற சந்தேகம் வேறு..
சரி,, கடவுளிடம் வேண்டிகொள்வதை தவிர வேறு வழியில்லை என்று நினைத்து, செல்லும் வழியில் உள்ள விநாயகர் கோவிலுக்கு ஒரு அப்ளிகேஷனை போட்டு விட்டு, விரதிமிருப்பதாக வேண்டிக்கொண்டு வீட்டுக்கு வந்தாள் ரேஷ்மி..
இன்று மட்டும் அவனை பார்த்திருந்தால், தன் மனதை வெளிப்படுத்தியிருக்கலாமே என்ற எண்ணத்தை அவளால் தவிர்க்க முடியவில்லை.சரி நாளை பார்த்து கொள்ளலாம் என்று மனதை தேற்றி கொண்டு அன்றாட வேளைகளில் மூழ்கினாள்.
மறுநாள் காலையில் கண்விழித்த ரேஷ்மி, முதல் ஆளாக வாக்கிங் கிளம்ப ரெடியாகி நிற்க, ராஜூ சற்றே ஆச்சர்யத்துடன் பார்த்து விட்டு ஒன்றும் சொல்லாமலே கிளம்பினான்.
வழக்கம் போல், பாதி வழியிலேயே இருவரும் சந்தித்து கொள்ள ரேஷ்மியின் முகம் தௌசண்ட் வாட்ஸ் பல்ப் போட்டாற்போல் பிரகாசமாயிற்று..ஜெர்ரி மட்டும் குறைந்தவனா..அவனும் நேரடியாக ரேஷ்மி யை நோக்கி அமர்த்தலாக பார்த்தான்.
ராஜூவும், “என்னடா ஜெர்ரி உடம்பு சரி ஆகிட்டு போல” என்றவன் வாஞ்சையாக தலையை கோதி விட்டான்.
வாக்கிங் செல்லும் நேரம் முழுதுமே, இருவரும் அருகருகே நடக்க, என்றும் போல் இல்லாமல் அடிக்கடி முகம் பார்க்க என்று சுகமான நாடகம் நடந்தது.வார்த்தைகளின்றியே ஒருவர் மீது ஒருவர் கொண்ட நேசம் வெளிப்படையாக தெரிந்தது.
அன்று மாலை கென்னடியின் வீட்டில் ஒரு கெட் டு கெதர் நிகழ்ச்சி நடந்தது
.
அதற்கு ராஜூவும் அருகிலேயே வீடு என்பதால் ரேஷ்மி யையும் கூட்டிக்கொண்டு போனான். விருந்தில் அசைவ சாப்பாடு பரிமாறப்பட ரேஷ்மி ஒதுங்கினாள்.ராஜூ அவளை விசித்திரமாக பார்த்தான்.அசைவம் அவளுக்கு பிடிக்கும் என்பது தெரியும்.இருந்தும் கேள்வி எழுப்பாமல் அவள் விருப்ப படி விட்டு விட்டான்.
ராஜூவும் கென்னடியும் பேசிக்கொண்டே நகர, ஜெர்ரி மெதுவாக ரேஷ்மி யின் அருகில் வந்தான். பார்வையாலேயே ஏன் அசைவம் சாப்பிட வில்லை என்று கேட்க, ரேஷ்மி, தான் ஒருவாரம் அசைவம் சாப்பிடாமல் விரதம் இருப்பதாக வேண்டிக்கொண்டதை கூற, அவள் அன்பில் விக்கித்து நின்றான் ஜெர்ரி.
மணவாழ்க்கை என்றால் ரேஷ்மியோடு தான் என்று அந்த நிமிடத்தில் முடிவு செய்தான் ஜெர்ரி. விரைவில் இரண்டு வீட்டிலும் பேசி திருமண ஏற்பாடு செய்வதாக வாக்களித்தான் ஜெர்ரி. ரேஷ்மி யும் சந்தோசமாக, தன்னை வெளிப்படுத்தி விட்ட மகிழ்ச்சியோடு வீடு திரும்பினாள். அதிகமாக பேசாத,பழகாத நேசமானாலும், உண்மை நேசம் என்றால் வெற்றி பெறுதல் உறுதி.
பின் குறிப்பு: ராஜுவும் கென்னடியும் எஜமானர்கள்.
ஜெர்ரியும், ரேஷ்மியும் அவர்கள் வளர்க்கும் நாய்கள்.
சூப்பர் பின்குறிப்பு:
தயவு செய்து யாரும் கோப பட கூடாது..கோபம் உடம்பிற்கு ஆகாது..அது மனதை பாதிக்கும் என்று பெரியவர்கள் சொல்கிறார்கள்.அது bp ,tension ஆகியவற்றை ஏற வைக்குமாம்.எனவே பெரியவர்கள் சொல்வதை கேட்கும் பொருட்டு, யாரும் என்மீது கல்லேரியவோ , முட்டை எறியவோ கூடாது என்று கேட்டு கொள்கிறேன்.
ஏனென்றால்…….( மீண்டும் முன்னுரையை படிக்கவும்)
ரொம்ப நல்ல இருக்கு…. இ லவ் இட்….