கதையாசிரியர்:
கதை வகை: தொடர்கதை
கதை வகை: முதல் அத்தியாயம்
கதைத்தொகுப்பு: காதல்
கதைப்பதிவு: September 20, 2024
பார்வையிட்டோர்: 2,144 
 
 

(1999ல் வெளியான நாவல், ஸ்கேன் செய்யப்பட்ட படக்கோப்பிலிருந்து எளிதாக படிக்கக்கூடிய உரையாக மாற்றியுள்ளோம்)

அத்தியாயம் 1-5 | அத்தியாயம் 6-10

அத்தியாயம் ஒன்று 

மனிதன் தன் கடமையைச் சில சமயம் மறந்தாலும் கடிகாரம் தனது கடமையை மறப்பதில்லை…… மனிதனைப் போலச் சிலசமயங்களில் ஓய்வும் எடுத்துக் கொள்ளும். 

பூபாளம் மீட்டும் காலை நேரக் குளிர் காற்று அந்த அறையினுள் சில்லென்று வீசுகிறது. 

போர்வையை இழுத்து மூடிப்படுத்திருந்தவன் உதறிப் போட்டுக் கொண்டு எழுந்து பின்கட்டுப் பக்கம் போனான். மார்பில் ஒன்றும் அணிந்திருக்காததால் சதைப் பிடிப்பான அவனது மார்பு மயிர்கள் சிலிர்த்து நின்றன. 

வானொலியில் பொங்கும் பூம்புனல் நடந்து கொண்டிருந்தது. இனிமையான பாடல் ஒன்று அறிவிப்பாளரின் குரலோடு ஒலிபரப்பபாகிக் கொண்டிருந்தது…

குளித்து முழுகி, தலையைத் துவட்டியபடி ஹாலுக்குள் வந்து நின்ற நவீன் முற்றத்தில் நின்று கொண்டிருந்த பேப்பர்க்காரனைப் பார்த்ததும் முற்றத்திற்குச் சென்று பத்திரிகையை வாங்கிக் கொண்டான். 

மணியை அடித்தபடி பக்கத்து வீடுகளுக்குப் பவனிவரத் தொடங்கி விட்டான் பத்திரிகைக்காரன். 

பத்திரிகையின் முகப்புச் செய்தியை மனதுள் வாசித்தபடி உள்ளே வந்தான்…. 

ஷோபாக்களுக்கு நடுவில் இருந்த ஸ்ரூலில் பரப்பிவிட்டிருந்த பத்திரிகைகளை ஒவ்வொன்றாக வாசிக்கத் தொடங்கி விட்டான் ….. 

தாயின் குரல் கேட்டுச் சாப்பாட்டிற்கு ஆயத்தமானான் நவீன். 

நவீன் கல்லூரி மாணவன்….. அவன் யாழ்ப்பாணத்தில் உள்ள பிரபலமான கல்லூரியில் உயர்தர வகுப்புப் படித்துக்கொண்டிருந்தான். 

வீட்டில் சைக்கிள் ஒன்று இருந்தும் ஒருசில சௌகரியங் களுக்காக பஸ்ஸிலேயே சென்று வருவான். 

டீன்ஏஜ் வாலிபனான நவீன் இன்றும் கல்லூரிக்குத் தயாராகி விட்டான். 

தலைக்கிராப்பு அழகாக வாரிவிட்டு அரும்பு மீசை கடைவாயில் தவழ – புறுஸ்லீ பனியன் மார்பை அலங்கரிக்க எலிபன்ட் பெல்ஸ் இடையில் தொங்க – 

ஆயத்தமாகி விட்டான் ….. 

கனவுலக ரதி மாறனோ ….. திரையுலக யுவராஜாவோ! 

அம்மா போயிட்டு வருகிறேன் தாயின் பதிலுக்குக் காத்திராமல் வாசலைக் கடந்து பஸ் ஸ்டாண்டிற்கு நடக்கத் தொடங்கினான். 

வீட்டினுள்ளே – 

தாயின் பிரார்த்தனை மகனைப் பற்றியதாகவே இருந்தது. கட்டுக்கடங்காமல் வளர்ந்து விட்டான். எங்கே போய் முடியப் போகுதோ? 

சாதாரண ஒரு தாயின் பிராத்தனை தான் இருந்தும் அவளின் பெருமூச்சு…. ஓ . அந்த நினைவுகளே வேண்டாம்…. மாறாத வடுவாகிப் போன அந்த நிகழ்ச்சி – கண்களைத் துடைத்துக் கொண்டாள். 

பூஜை அறையினுள் கால்கள் சென்றன. முருகா ….. முருகா ….. மனம் ஓலமிட – கண்ணில் கங்கை பாய்ந்தது ….. 

மனதில் துன்பம் நெருடல்களை வெளிப்படுத்தி ஒத்தடம் கொடுப்பது, கண்ணீரும் – தெய்வப் பிராத்தனையும்தான். 

அவளும் அதையேதான் கடைப்பிடித்து வந்தாள். 

பஸ் நிலையத்திற்கு வந்த நவீன் – 

“ஹாய் – என்னடா இன்று லேட்டாயிட்டுது …. மதன் ரதியின் நினைப்பில் இருந்திருக்கிறாரோ ….?” கிண்டல் பண்ணினான் நண்பன். அவனுக்கு ஒத்து ஊதினான் மற்றவன். 

தலையைத் தாழ்த்திப் புன்னகை ஒன்றை உதிர்த்துக் கொண்டான். அவனது சிரிப்பில்தான் எவ்வளவு அழகு. 

சிரிப்பே சீவியமாக நடத்துவோரும் உண்டு….. சிரித்து வரும் உறவு நிலைப்பது இல்லை என்போரும் உண்டு. இங்கே- 

நவீனின் சிரிப்பிற்காக எவ்வளவு பேர் காத்திருக்கின்றார்கள் … இவனது சிரிப்பில் தானே கலக்கத்தினை வினையாக்கிக் கொண்டாள் இவளது தாய். 

தலையைச் சாய்த்து பெண்கள் கூட்டத்தினை நோட்டம் விட்டான். 

“ம்” உதட்டைப் பிதுக்கிக் கொண்டான். 

விஷயத்தைப் புரிந்து கொண்ட ஒருவன், “ரதியை இன்று காணவில்லை. சுகமில்லையோ யார் கண்டார்” அவனைச் சீண்டினான். 

“பிருந்தா இன்று வரவில்லைதான்” நவீன் நினைத்துக் கொண்டான், “சுகமில்லையோ …. என்ன நோயோ?” மனம் அழுதது. 

‘மாலை வரை பொறுத்திருப்போம்,’ என்று மனதிற்குச் சமாதானம் செய்தபடி தலையைச் சிலிர்த்துக் கொண்டான். 

தலையின் சிலிர்ப்பில் – 

ஷாம்போ போட்டு முழுகிய தலைமயிர்கள் அழகாக நடனமாடிவிட்டு மீண்டும் தூங்கி விட்டன. அவன் வாரிவிட்ட அழகு கவர்ச்சியாகத்தான் இருந்தது. 

அரை மணி நேரம் காத்திருந்த பின்னரே பஸ் வந்தது….. பிரசவமாகப் போகிறவள் மாதிரி தள்ளாடியபடி வந்து நின்ற பஸ்ஸில் தொற்றிக் கொண்டான். 

பஸ் ஊர்ந்த படி சென்றது. 

வீதி மருங்கில் எல்லாம் பூவரச மரங்களின் கிளைகள் ஆடி அசைந்து சாமரை வீசுவது போலிருந்தன. ரோட்டின் மேலாக வளைந்து நிற்கின்ற தென்னை மரத்தைத் தாண்டும் வரை பயமாகத்தானிருக்கும். 

யார் தலையில் எப்போது விழுமோ? கல்லூரி ஆரம்பமாகி விட்டது. 

முதல் மணி அடித்துப் பிரார்த்தனை மண்டபத்தில் எல்லா வகுப்பு மாணவர்களும் ஒன்று கூடிப் பக்தியுடனும் தியானத்துடனும் (ஏதோ ஒப்புக்காகவேனும்) தேவாரம், திருவாசகம், திருப்புகழ், புராணம் எல்லாம் முடிந்து ‘அரகர மகாதேவா’வின் பின் அதிபரின் அறிவுரை நடந்து முடிந்து விட்டது. 

பிரார்த்தனை முடிந்து வகுப்பிற்குச் செல்லும் மாணவர்களை மாணவர் தலைவர்கள் ஒழுங்குடன் அனுப்பிக் கொண்டிருந்தனர். 

நவீன் கூட மாணவர் தலைவர்தான்….. அவன் தெரிவு செய்யப்பட்டு இரண்டு வாரங்கள் தான் ஆகியிருக்கும். படிப்பில் மகா கெட்டிக்காரனான நவீன், அழகை ரசிப்பதிலும் அழகுடன் வாழ்வதிலும் விருப்பம் அதிகம் கொண்டவன். அழகினால் அனைவரின் அன்பினையும் சம்பாதித்துக் கொண்டான். 

நீண்டு சென்ற வராண்டாவின் வளைவிலுள்ள சில நுழை வாயில்களில் நுழைந்த பின் கிழக்குப்புறமாக உள்ள அறைதான் நவீனின் வகுப்பறை. நவீனின் வகுப்பில் நாற்பது பேர் உள்ளனர். 

இரண்டாவது வரிசையில்தான் உட்கார்வான் எப்போதும். அதுவே அவனுக்கு சௌகரியமானதும் கூட. அன்றும் அங்கேயே உட்கார்ந்தான். 

பாடம் நடைபெற்றுக் கொண்டிருந்தது. 

பொருளியல் பாடமாகையால் நாட்டின் பொருளாதாரநிலை – பெட்ரோல், அரிசி, சீனி போன்ற பொருட்களின் விலை அதிகரிப்பு அன்றைய பாடத்தில் முக்கிய இடம் பிடித்துக் கொண்டிருந்தது. பொருளியல் பாடம் திலகநாதன் ஆசிரியர்தான் படிப்பிப்பார். அவர் அதில் டபிள் ஒனர்ஸ் செய்தவர். அத்துடன் ஆர்ட் ஒவ் ரீச்சிங் தெரிந்தவர். ஆதலால் அவரைப் பெரிதும் மாணவர்கள் விரும்புவர். முன்புறச் சுவரில் பதிந்துள்ள நீளமான கரும்பலகையில் வரை படங்களைப் போட்டு விளக்கமளிப்பதில் அவருக்கு நிகர் அவரே தான். நேரம் போவதே தெரிவதில்லை. 

பகல் மதிய உணவிற்கான இடைவேளை மணி ஒலித்ததும் வகுப்பறையில் இருந்து வெளிவந்த மாணவர்களின் முகத்தில் பசியைப் போக்கத் துடிக்கின்ற துடிதுடிப்பு அவசரம் ….. ஸ்டாப் ரூமினுள் ஆசிரியர்கள் நுழைகின்றனர். 

நவீன் தன் நண்பர்களுடன் கேன்டீன் நோக்கிப் புறப்படுகின்றான். நல்லபசி…சிறு குடலைப் பெருங்குடல் தின்பது போன்று என்பார்களே அதுவோ?… 

மதிய உணவினைச் சுடச்சுட உண்டபின் ஏற்படும் அசதியைப் போக்கடிக்க, முன் வராண்டாவில் வந்து நின்றாள் பிருந்தா. 

தென்னந் தோப்பில் இருந்து வந்த காற்று அவளுக்குச் சுகமாக இருந்தது. 

பாடசாலைக்குச் செல்லாததால் இன்று அவளுக்குப் பொழுது போவதே கஷ்டமாக இருந்தது. அங்கும் இங்கும் உலாவினாள் இருப்புக் கொள்ளவில்லை. 

“நாவல் ஏதாவது வாசிக்கலாம் என்றால் எல்லாம் நான் வாசித்து முடிந்தாகி விட்டது”- ஞாபகத்தில் உறைக்கிறது. பத்திரிகைகளில் விஷயங்கள் வாசிக்கக் கூடியதாக அவளுக்கு படாததினால் முற்றத்திற்கு இறங்கி வந்து வேலி ஓரத்தில் ஓங்கிக் கிளை விட்டு வளர்திருந்த சீமைக்கிளுவை மரத்திலிருந்து கரைந்து கொண்டிருந்த காகத்தினை ‘ச்சூ’ கொட்டிக் கலைத்தாள். 

பின் – 

முற்றத்தில் நின்றவாறே உள்ளே போகத் திரும்பினாள். உள்ளே ஒரு மூலையில் அவளது தாய் சீலையை விரித்துப் போட்டுச் சௌகரியமாகப் படுத்திருந்தாள். 

தனது அறைக்குள் நுழைந்த பிருந்தா, கட்டிலில் சாய்ந்தவாறு பக்கத்து சிறிய மேசையில் இருந்த ஜெயகாந்தனின் இந்த நேரத்தில் இவள் என்ற புத்தகத்தை எடுத்துப் புரட்டினாள் ….. 

ஜெயகாந்தன் அவளது பிரியமுள்ள எழுத்தாளன். அவனின் நூல்களை ஒன்றும் விடாமல் படிப்பாள். அவள் கையிலிருந்த கதையை எத்தனை தடவை படித்திருப்பாளோ தெரியாது. 

நாலைந்து பக்கங்களைப் புரட்டியவள் இனிய கனவுகளைச் சுமக்கின்ற தூக்கம் அழைக்க அயர்ந்து தூங்கிவிட்டாள். 

இனிய கனவுளைச் சுமக்கின்ற தூக்கம் அவளைப் போன்றவர் களுக்குத் தேவையானது தான். தூக்கம் தவிர்க்க முடியாத ஒன்று. 

கடிகாரம் நான்கு முறை அடித்து ஓய்ந்தது. 

புரண்டு படுத்த பிருந்தாவைத் தட்டி எழுப்பினாள் அவளது அம்மா. 

பின்னேர டீயூசனுக்கு மாணவர்கள் வரப் போகிறார்களல்லவா? அதனால்தான் பாதியில் அவளது தூக்கத்தைக் கலைத்தாள் அவளது தாயார். 

‘உம்’ கொட்டிப் பெரிதாகக் கொட்டாவியை விட்டவாறே எழும்பி முகம் கழுவுவதற்காக டவலையும் சோப்பையும் எடுத்துக் கொண்டு கிணற்றுப் பக்கம் போனாள். 

ஐந்து மணி – 

தயாராகி விட்டாள்…

அரசாங்கப் பாடசாலைகளில் படிப்பிப்பவர்கள் டீயூசன் கொடுக்கக் கூடாது என்று சட்டம் வைத்தாலும் அதை தடுக்க யாராலும் முடிவதில்லை. 

வருவாயைப் பெருக்க வழி இது என்றால் யார் தான் சும்மா இருப்பார்கள். பிருந்தா கற்பிக்கும் கல்லூரியில்தான் நவீனும் கற்கிறான். படிப்பில் சூரனான நவீனைத் தனது மாணவனாகக் கூறுவதில் பெருமையும் கொண்டாள் பிருந்தா. இல்லாவிட்டால் மற்றவர்களின் எதிர்ப்பினையும் பொருட்படுத்தாது நவீனை டியூசன் வகுப்பில் சேர்த்துக் கொண்டிருப்பாளா? 

அவள் துணிச்சல்காரிதான். 

தனக்கென்று ஒரு வாழ்வு அமையவில்லையே என்ற அவளது ஆதங்கத்தின் நடுவிலும், அவளது சேவை மனப்பான்மையும் தியாக உணர்வும் அவளை ஆசிரியத் தொழிலில் ஈடுபடவைத்தன. 

தனது எதிர்காலமே சூன்ய வெளியாகத் தெரிந்த அவள் ஆசிரியத் தொழில் என்ற கலங்கரை விளக்கின் ஒளியுடன் நம்பிக்கை நட்சத்திரத்தினைத் தேடிப் பயணம் செய்கின்றாள். 

பாடம் நடந்து கொண்டிருந்தது. 

பிருந்தாவையே கண் வெட்டாது பார்த்துக் கொண்டிருந்தான் நவீன். 

அவள் கற்பிப்பது அவனுக்குப் பாடமாகின்றனவா? அல்லது அவளது அழகை ரசனைக்குரிய பாடமாக்குகின்றானா? 

இதைக் கண்ட பிருந்தா நவீனின் சிந்தனையைத் திசை திருப்ப எண்ணி வினா ஒன்றைப் போட்டாள்… 

தடுமாறினான் அவன். 

சிரித்து விட்டு அவனுக்குப் புத்தி சொல்லிவிட்டுப் பாடத்தைத் தொடர்ந்தாள்… அவனது பார்வையும் தொடர்ந்தது. 

படிப்பு ஏனோ அவனுக்கு அன்று ஏறவில்லை…. 

பிருந்தாவும் உணர்ந்தாள் 

‘என்ன காரணமாயிருக்கும்?’ 

‘விசாரித்துத் தெரிந்து கொள்ளலாமா?” 

‘என்ன நினைப்பானோ?’ 

பிருந்தாவின் சிந்தனை படர்ந்தது. 

நல்ல மாணவனின் வாழ்வு தன்னால் பாழாகக் கூடாது. திடமாக்கிக் கொண்டாள். கூடவே கேள்வியும் தயாராகி விட்டது. 

பாடம் முடிந்து வீடு செல்ல எல்லோரும் ஆயத்தமான போது நவீனைத் தனியே அழைத்தாள். ‘எப்படிப் பேசுவது?’ தடுமாறினாள். ஒரு நிமிடம் விட்டு, “நவீன், நீர் ஒரு நல்ல குடும்பத்தில் பிறந்த பிள்ளை. நல்ல எதிர்காலம் உமக்கிருக்கு. நல்லாப் படிக்க முடியும் உம்மால். ஏன் இன்று மட்டும் ஏதோ பாதை மாறச் சிந்தனையை அலையவிடுகிறீர்?” கேட்டுவிட்டாள். 

கேட்டேவிட்டாள். 

தடுமாறிப் போனான் நவீன். 

“டீச்சரா இப்படிக் கேட்டார்… எவ்வளவு இனிமையான ஒரு வார்த்தையிலே எல்லாவற்றையும் ஒருங்கிணைத்துக் கேட்டு விட்டார்.” மிடறு விழுங்கினான். 

“வந்து… வந்து டீச்சர்…” இழுத்தான். 

“நவீன், வாலிப வயது இருக்கிறதே அது பொல்லாத வயது. கட்டுக்கடங்காமல் திமிறும். நாம்தான் கட்டுப்படுத்த வேண்டும். இப்போதே நமது மனத்தினைத் திசை திருப்பாவிட்டால் நமது பலம் அத்தனையும் பலவீனமாகிவிடும். எதிர்காலத்தில் நீரும் ஒரு பெரிய மனிதனாய் வாழ வேண்டும். வாழ முடியும் என்ற நம்பிக்கையில் தான் உம்மை எனது மாணவனாகச் சேர்த்துக் கொண்டேன். உமது எதிர்காலம் ஒன்றே எனது குறிக்கோள் என்று கூடச் சொல்லலாம். நீர் யாரோ நான் யாரோ. இருந்தும் ஏதோ ஒருவித உறவு எம்மை இணைத்திருக்கிறது போலும். உமது பார்வையில் வெறி ஏற்படக் கூடாது. அப்படியான நோக்கு இனிமேல் வேண்டாம். உம்மைக் கெடுத்து விட்டேன் என்று ஊரார் பழி சொல்லக் கூடாது. இப்போது கூட உம்மையும் என்னையும்”…. முடிக்கவில்லை. 

நவீன் நிமிர்ந்து பார்த்தான். 

அவள் கண்களில் நீர் பரவி இருந்தது……. 

“ஓ! டீச்சர் அழுகின்றாவா?…” நவீன் மனம் புலம்பியது. “நோ.. நோ…… டீச்சர் அழக் கூடாது. என்னால் அவள் அழக் கூடாது. யாரும் அழக் கூடாது” – மனம் மீண்டும் மீண்டும் புலம்பியது இதய நெருடல் அவனையும் அழ வைத்து விட்டது. 

அங்கே அப்போது யாரும் இருக்கவில்லை. 

நிசப்தம் சில நிமிடம்வரை தொடர்ந்தது. 

“உறவு என்றொரு சொல்லிருந்தால்…. ஓ……” 

பிருந்தாவின் கரங்கள் அவனது கண்ணீரைத் துடைத்து விட்டன. பிருந்தாவின் கண்ணீரை அவனது கரம் துடைக்கத் துடித்தது. அடக்கி அடக்கிப் பார்த்தும் முடியாததால் துடைத்து விட்டான். 

இதை பிருந்தா எதிர்பார்க்கவில்லை அங்கே யாரும் இல்லாததால் அவள் தடுக்கவில்லை…

ஒருவர் மீது ஒருவர் ஏன் அன்பு வைத்திருக்கிறார்கள். இனம் புரியாதது அன்பு தானோ…இரத்த உறவே இல்லாத அவர்களுள் என்னதான் அப்படி இருக்கிறது? 

பிருந்தா மாநிறம்…. அழகி என்று சொல்ல முடியாவிட்டாலும் சுமாரானவள் …… தலை மயிர் வெளிறத் தொடங்கிய நேரம் அது இருபத்தைந்து வயது இன்றோ நாளையோ அவளைத் தாண்டிச் சென்று விடும். 

அரும்பு மீசையுடனும் வாலிப மிடுக்குடனும் காதல் யுவராஜாவாகக் காட்சி அளிக்கும் நவீனுக்குப் பதினெட்டு தான் இருக்கும். சுயநினைவிற்கு வந்த நவீன், “டீச்சர் இருட்டிப் போய் விட்டது” என்றான். 

பிருந்தாவின் மனதில் அவ்வார்த்தை தைத்தது. 

“விளக்கைப் போடட்டுமா?” நவீன் தான் சொன்னான். ”ம்ம்”….. என்றாள் பிருந்தா. 

கண்களைத் துடைத்தபடி “நில்லும் நவீன், முகம் கழுவிக் கொண்டு வாறன், டீ சாப்பிட்டுப் போகலாம். கதைத்துக் கொண்டிருந்ததில் நேரம் போனதே தெரியவில்லை…” 

நவீன் பெருமூச்சொன்றை விட்டவாறு நிமிர்ந்து உட்கார்ந்தான். உள்ளே சென்ற பிருந்தா சிறிது நேரத்தில் டீ கொண்டுவந்து நவீனிடம் நீட்டினாள். 

“தாங்ஸ்” என்றான் நவீன். 

”யாருக்கு?” – பிருந்தா. 

“டீச்சருக்குத் தான்” – நவீன். 

“எனக்கில்லையா” – இருந்தபடி பிருந்தா… 

சிரிப்பொன்றைப் பதிலாக்கிவிட்டு வீட்டுக்குப் போகத் தயாரானான் நவீன்- 

எட்டுமணி ஆகிவிட்டது. 

அத்தியாயம் இரண்டு 

அன்று வெள்ளிக்கிழமை 

மாணவர்கள் எல்லோரும் பிரார்த்தனை மண்டபத்தில் கூடினார்கள். வெள்ளிக்கிழமை ஆதலால் தேவாரத்துடன் ஆரம்ப மாகிய பிரார்த்தனை “நமச்சிவாய வாழ்க” எனத் தொடர்ந்தது. 

ஆனைமுகனை அழைத்து நமப்பார்வதிபதையே என முடிந்ததும் அதிபர் சொற்பொழிவுக்குத் தயாரானார். அன்று இரண்டு மூன்று பேச்சுக்கள் இருக்கும். 

நேரம் சென்று கொண்டிருந்தது. 

பிரார்த்தனை முதலாம் பாடத்திற்குரிய நேரத்தினையும் விழுங்கிவிட்டது. 

அன்று சிவக்கொழுந்து மாஸ்டரின் சொற்பொழிவு நன்றாகத் தானிருந்தது. தனது கரிய உதடுகளைப் பிதுக்கி அனைத்து ராகத்துடன் கூடிய பாடல்களையும் பாடித் தனது ‘சிற்றுரையை’ முடித்தார். 

மாணவர்கள் ‘அப்பாடா’ போட்டார்கள். 

பெருமூச்சுடன் ஒப்புக்காக்க் கைதட்டினார்கள். அதில் சலிப்புத் தன்மை தெரிந்தது. இந்த நாளில் யார்தான் பக்திச் சொற்பொழிவுகளைக் கேட்கிறார்கள் கால்வலிக்க மனம் சலிக்க, “ஏன் இந்த வெள்ளிக் கிழமை வருகின்றதுவோ”…. மாணவர்கள் மனம் நினைத்தது. 

இரண்டாவது பாடத்தினையும் தனதாக்கிக்கொண்ட பிரார்த்தனைக் கூட்டம் ஒருவாறு முடிந்து மாணவர்கள் தங்கள் வகுப்பறை நோக்கிப் புறப்பட்டுக் கொண்டிருந்தனர். வழமைபோல் மாணவர் தலைவர்களின் வழி நடத்தலில் வரிசை வரிசையாக மாணவர்கள் விரைந்தனர். 

பட்டு வேட்டி கட்டி, சில்க் சேட் அணிந்து வந்திருந்தான் நவீன். பெல்ஸ்ஸூம் மொடேன் கேட்டுகளுடனும் காட்சி தருகின்ற அவனை இன்று இக்கோலத்தில் பார்த்ததும் வித்தியாசமாக இருந்தது. 

“என்ன தம்பி! சிவப்பழமாகக் காட்சி தருகின்றீர்” ராமனாதன் ஆசிரியர் நவீனிடம் கேட்டார். 

சிரிப்பொன்றைப் பதிலாக்கிவிட்டு நழுவிவிட்டான் நவீன். அவனது கண்கள் பிருந்தாவைத் தேடின. 

அப்போது- 

பிருந்தா ஆசிரியர் அறையில் இருந்தாள். அன்றைய தினசரியைப் புரட்டிய வண்ணம் இருந்தாள். பத்திரிகைகளில் வழமையான செய்திகளை விடப் புதிதாக ஏதும் இல்லாததால் திருமதி நாகநாதன் ஆசிரியரின் பக்கம் திரும்பி, “மிஸ், சிரித்திரன் ஒருக்காத் தருகிறீர்களா?” என்றாள் திருமதி நாகநாதன் தன்னிடமிருந்த சிரித்திரன் சஞ்சிகையை நீட்டினார். 

பக்கங்களைப் புரட்டிய பிருந்தா – 

பதினெட்டாம் பக்கத்தில் வந்திருந்த புதுக்கவிதையைத் திரும்பத் திரும்ப விரும்பிப் படித்தாள். 

நன்றாக இருந்த அக்கவிதையைத் திரும்பத் திரும்ப மனதில் ரசித்துப் பார்த்தாள். ஆழப் பதிந்துவிட்டது. புதுக்கவிதையை அவள் விரும்பிப் படிப்பவள். அப்படியானால் மரபுக்கவிதைக்கு விரோதியல்ல.. ஏதோ ஒரு ஈர்ப்பு. சிறுகதை நாவல்களில் உள்ள ஈர்ப்பு புதுக்கவிதையிலும் அவளுக்குண்டு. 

முன்பு இப்படித்தான், 

ராஜநாயகம் ஆசிரியர் பிருந்தாவிடம் ஒரு சஞ்சிகையை நீட்டி, “மிஸ், இதில் உள்ள புதுக்கவிதை பற்றி என்ன நினைக்கிறீர்?” என்றார். அவரை நிமிர்ந்து பார்த்த பிருந்தா, 

“மாஸ்டர், இப்ப வருகின்ற புதுக்கவிதைகளை விரும்பி வாசிப்பவர் ஒரு சிலரே….. ஈழத்தைப் பொறுத்தவரை, சிந்தாமணி,தினகரன், வீரகேசரி, மல்லிகை, சுடர், சிரித்திரன் இன்னும் எத்தனையோ பத்திரிகைகள், சஞ்சிகைகள் புதுக்கவிதைக்கு முக்கியத்துவம் கொடுக்கின்றன. இவற்றில் மனதில் நிற்கும் கவிதைகள் ஒரு சிலவே. அப்படியாயின் தரமற்றவையை ஒதுக்கிவிடமுடியாது. தரமற்றவை எனினும் அவற்றை விமர்சித்தாவது தரமானது உருவாக வழி அமைக்கலாம் ….. நீங்கள் தந்த சஞ்சிகை கூட ஈழத்தில் இலக்கியத் தாக்கம் ஏற்படுத்தியதுதான். இப்போது இதில் உள்ள கவிதை ஏதோ என் மனதில் பதிய மறுக்கிறது.” 

“ஏன்” என்று இடைமறித்தார் ராஜநாயகம் மாஸ்டர், “கவிதைக்கு அழகு தேவைதான் ….. அது ஆபாசமாகக் கூடாது என்பதை விரும்புபவள்” என்று கூறினாள். நறுக்குத் தெரிந்தால் போலிருக்கிறது. 

“இன்று வரவேற்கப்படுவது இப்படியான கவிதைகள் தானே” என்றார் ராஜநாயகம். 

“இன்று வரவேற்கப்படலாம். நாளைய சரித்திரத்தில் இடம் பெறுமா என்பது சந்தேகமே”- கூறினாள் பிருந்தா. “கோவில்களின் கோபுரங்களில் உள்ள சிற்பங்கள் பற்றி என்ன கூறுகின்றீர்கள்? அதுவும் ஆபாசம் தானே?” – இது அவர். 

விடமாட்டார் போலிருந்தது பிருந்தாவிற்கு. “சிற்பி வடித்தது அது ….. கலை நெஞ்சத்துடன் பயபக்தியுடன் பார்த்தால் அது ஆபாசமாகப் படாது”. 

அவளது பதிலைக் கேட்டு மடங்கி விட்டார் ராஜநாயகம் மாஸ்டர். வகுப்பிற்கு வந்தாள் பிருந்தா. 

அப்போது தேனீர் இடைவேளை விட்டுத் தொடங்கியிருந்தது. 

அன்று இலக்கியத் தர்க்கம் புரிந்த ராஜநாயகம் மாஸ்டர் இன்று வேறு பாடசாலையில் படிப்பிக்கிறார். மாற்றத்தில் சென்று விட்டார். பாடத்தில் முழுக்கவனத்தையும் செலுத்திப் படிப்பித்துக் கொண்டிருந்தாள் பிருந்தா. 

இடையில் சுற்றறிக்கை ஒன்று வந்தது. 

ஆசிரியர் சங்கக் கூட்டத்திற்கான அழைப்பு…… அதில் கையொப்பமிட்டுவிட்டுப் பாடத்தைத் தொடர்ந்தாள். பசி வந்த நேரமோ என்னமோ மாணவர்கள் அமைதியாக இருந்தார்கள். அவர்களின் அமைதி பிருந்தாவிற்கு நன்றாகப் பட்டாலும் ஏதோ மாதிரி இருந்தது. 

நவீன், அதிபரின் அறைக்கு அருகில் இருந்த அறைக்குள் நுழைந்து வெண்கட்டிகளைப் பெற்றுத் தனது வகுப்பிற்குள் நுழைந்தான். 

வகுப்பறைகளுக்கு அருகில் மாமரங்கள் அடர்ந்து பரவி வளர்ந்திருப்பதால் மத்தியான வேளையிலும் குளிர்ச்சியாகத்தான் இருக்கும். 

அத்தியாயம் மூன்று 

“நவீன் வாரீரா யாழ்ப்பாணம் கடைப்பக்கம் போயிட்டு வருவோம்”. 

வாசலில் படியேறி வந்தவனை பிருந்தா கேட்டாள். நடந்து கொண்டே பிருந்தாவைப் பார்த்தான். 

அப்போதுதான் குளித்திருந்தாள் பிருந்தா. 

மணம் இனிதாக வீசியது பவுடர் அளவாகப் பூசிய அவளது முகம் செம்மை படர்ந்திருந்தது. 

நான் ரெடி என்றான் நவீன். அவன் மட்டும் என்னவாம் அழகாகத்தான் இருந்தான். ஐ லவ் யு பனியன் மார்பை அலங்கரிக்க, சிஸ் மீ என்று முழங்காலுக்கு மேலாகத் தொடையில் ஒட்டப்பட்ட பெல்ஸ், செருப்பு, மார்பில் தொங்குகின்ற ‘234’ நம்பர் பொறித்த வெள்ளிச் செயின்- டீன் ஏஜ் வாலிபனல்லவா? கண்ணுக்கு அழகாகத்தான் இருந்தான். 

பிருந்தாவும் நவீனும் தேனீர் அருந்திவிட்டுப் புறப்பட்டனர். 

வெகு நேரம் காத்திருக்க வைக்காது பஸ் வந்து அவர்களை ஏற்றிச் சென்றது. 

ஒவ்வொரு கடையாக ஏறி இறங்கி வாங்கி முடித்துவிட்டுப் பஸ் நிலையம் நோக்கித் திரும்பினார்கள். 

“வாரும் டீ குடிச்சிட்டுப் போகலாம்” பிருந்தா அருகிலிருந்த ரெஸ்ரோரன்ட்டுக்கு அழைத்தாள். 

‘டீ’ என்றதும் நாவில் நீர் ஊறியது நவீனுக்கு. 

திரும்பி பிருந்தாவுடன் நடந்தான் ….. 

உள்ளே- 

பிருந்தாவே ஆடர் கொடுத்தாள். வெயிட்டர் வெள்ளித் தட்டில் பலகாரங்களைக் கொண்டு வந்து வைத்தான். 

“சாப்பிடுமன்” அவள்தான் கூறினாள். 

எடுக்க அவன் மனம் துடித்தது. நாகரீகம் பார்க்கவும் மனம் பரபரத்தது. 

டீ சாப்பிட்டதும் வெயிட்டர், பில்லைக் கொண்டு வந்து மேசை மீது வைத்தான். 

நவீன் பாக்கெட்டுக்குள்ளிருந்து காசை எடுக்க முன்னர் பிருந்தா முந்திக் கொண்டாள். “சும்மா இரும் நவீன் நான் தானே உம்மை அழைத்தது. நீர் கொடுப்பது முறையல்ல. நான் கொடுக்கிறேன்”. பிருந்தா பில்லுக்குப் பணத்தைச் செலுத்தினாள். 

“டீச்சர் இதுக்காவது நான் …. ஆம்பிளைக்குப் பெண் செலவழிக்க நான் சலுகைகளை அனுபவிப்பது எனக்கு ஒரு மாதிரி இருக்கிறது. என்னை இன்சல்ட் பண்ணி விட்டீர்கள்”. நவீன் வேதனையுடன் கூறினான். “நவீன் …. நான் உமக்கு இன்சல்ட் பண்ணவில்லை. வயதில் குறைந்த நீர் எனது மாணவன் கூட. அதோட எனது தேவைக்காக கடைப்பக்கம் நான் அழைத்ததும் மறுக்காமல் நீர் வந்தனீர். உமக்கு நான் ஏதாவது வாங்கித் தராட்டி எனக்கு நன்றாக இராது. அது தான் இப்படி…..” பிருந்தாவின் கண்கள் பனித்திருந்தன……. 

நவீனின் மனம் சீயென்றது. பாவம் டீச்சரின் மனம் தன்னால் வேதனைப் பட்டு விட்டது. “ஓ! ஐ ஆம் சாரி டீச்சர்…”

சொல்லத்துடித்தான் முடியவில்லை. மனதுள் சொல்லிக் கொண்டான். அவளை எப்படியாவது சிரிக்க வைக்க வேண்டும் என்பதற்காக “டீ வாங்கித் தந்தீர்கள். சாப்பிட்டதும் அது மறந்து ஞாபகத்தில் இருந்து அழிந்து விடும். ஞாபகம் வைத்திருக்கக் கூடியதாக ஏதாவது வாங்கித் தந்திருக்கலாமில்லையா?”…

இதைக் கேட்டு பிருந்தா சிரித்தாள். 

“ஓ அப்படியா? வாரும் வாங்கித் தருகிறேன்” என்றாள் பிருந்தா. பேனை ஒன்றைப் பரிசாக அவனுக்குத் தந்தாள் பிருந்தா. அதைப் பெற்றுக் கொண்ட நவீன், “மாணவனை வழிநடத்த இந்த எழுதுகோல் போதும் என்று நினைக்கிறீர்களா டீச்சர்?” என்று கேட்டான். 

அவள் சிரித்தாள். 

இருவரும் வீதியில் இறங்கி நடந்தார்கள். 

அவர்கள் செல்ல வேண்டிய பஸ், காத்திருந்தது போல் இவர்கள் ஏறியதும் சீறிக் கொண்டு புறப்பட்டது. 

டீசல் நாற்றம் மூக்கைத் துளைக்க, புகையைப் பின்னோக்கித் தள்ளியபடி பஸ் புறப்பட்டது. 

முன்னாலிருந்து மூன்றாவது சீட்டில் வசதியாக நவீனும் பிருந்தாவும் அருகருகே அமர்ந்து கொண்டனர். 

வீட்டிற்கு வந்ததும் – 

நவீன் பார்சல்களை மேசையில் வைத்து விட்டு “டீச்சர் நான் போய் வருகிறேன்” என்றான். 

“நன்றி நவீன். உமது உதவியை நான் மறக்கமாட்டேன்” என்ற பிருந்தாவைப் பார்த்துச் சிரித்து விட்டு. 

“நானும் தான் மறக்க மாட்டேன் – ஐமீன் உங்கள் அன்புப் பரிசு” பேனாவைக் காட்டினான் ….. 

அவனது மார்பில் ஐ லவ் யு பெரிதாகப் பார்த்துச் சிரித்தது… கேற்றைத் தாண்டி வீடு நோக்கிப் புறப்பட்டான் நவீன். 

அத்தியாயம் நான்கு 

வானொலியில் இன்றைய நேயர் நிகழ்ச்சி நடந்து கொண்டிருந்தது. படுக்கையில் சாய்ந்தபடி கேட்டுக் கொண்டிருந்தாள் பிருந்தா. 

தலைமாட்டில் இரண்டு மொத்தமான தலையணைகள் வைத்திருந்ததால் கொஞ்ச நேரம் வசதியாக இருந்தது அவளுக்கு. இன்றைய நேயரின் தெரிவுகளில் ஒன்றான – மாடப்புறா படத்தில் சுசீலாவும் சூலமங்கலம் ராஜலட்சுமியும் பாடிய ‘மனதில் கொண்ட ஆசைகளை மறந்து போய் விடு’ பாடல் நடந்தது. கேட்டுக் கொண்டிருந்த பிருந்தாவின் மனதில் சிறிது மாறுதல் காணப்பட்டது. 

கண்கள் ஏனோ பனிக்கத் தொடங்கின. 

ஏன்? 

அவளது கலக்கத்தின் காரணம் என்ன? 

அந்த நிகழ்ச்சி ஞாபகத்தில் வருகிறது …… 

‘எது எது எப்ப வரணுமோ அது அது அப்பப்ப வந்துதான் தீருமோ?’ பிருந்தா…..! 

அழகில்லாவிட்டாலும் அற்புதமான மலர் ….. 

அந்த மலர் கருகி நிலத்தில் வீழ்ந்து மண்ணாகப் போகின்றது ….. விதைப்பதெல்லாம் முளைப்பதில்லை. அப்படியாயின் அவள் விதைத்தது தான் என்ன? 

கண்ணீர் தலையணையை நனைத்தது. 

ஓ…ஓ…இடது கை விரல்களால் தலையணையின் மூலையை உருட்டி…உருட்டி……. 

அழுகையைக் கட்டுப்படுத்தும் பிரயத்தனம் வெற்றியளிக்க வில்லை ஏன்? இந்த நேரத்தில் அவளது கடந்து போன, மறக்கத் துடிக்கின்ற நினைவுகள் வருகின்றன. 

தனிமை தான் காரணமோ? 

அப்படியாயின்……? 

துணையேயில்லாமல் காலம் காலமாக வாழ்வற்ற வாழ்வு வாழ்வது தான் அவளது விதியா? 

விதியை மாற்றிவிடலாம் என்கிறார்களே …. 

அது முடியுமா…..? 

விழிகளில் தேங்கிக் கன்னங்களை நனைத்துக் கொண்டிருக்கும் உப்பு நீர் ஆறாகப் பெருகியது ….. அழுகையை அவளால் கட்டுப் படுத்த முடியவில்லை …… குமுறிக் குமுறி அழுதாள். 

மனதில் கொந்தளிக்கும் அலைகடல் பெருக்கெடுக்க கண்ணீராகப் பெருகும். கண்ணீராக வெளிவராவிட்டால் உடல் நலத்தைப் பாதிக்கும். இங்கு இவளுக்கு அழுகையை அடக்க முடியவில்லை. 

கல்யாணமே ஆகாமல் கன்னித் தன்மையே இன்னும் கழியாமல் ஒருத்தி எத்தனை காலத்திற்குத்தான் வாழ முடியும்? அவளை ஒத்த பெண்களெல்லாம் பிள்ளை குட்டிகளோடு வாழ்ந்து கொண்டிருக்கிறார்கள் இவளுக்கோ …..? 

இவளுக்கு வாழ்வு இல்லையா……? சபிக்கப்பட்ட மலரோ …? 

திரும்பிப் படுத்தவள் ஜன்னல் ஓரம் உள்ள கதவுகளிரண்டையும் திறந்து விட்டாள். 

காற்று உள்ளே வீசும்போது 

மனதுக்கு……? 

இதமாகத்தானிருந்தது. 

சிவந்திருந்த கண்களை ஒரு முறை அழுத்தி ஒதுக்கிக் கொண்டபோது கடி எடுத்தது .. எரிச்சலாகவும் இருந்தது. 

தந்தை என்ற ஒரு காவலன் இருந்தாலாவது பாதுகாப்பாக இருந்திருக்கும். இப்போது – தனிமரமாக, தாய்க்குத் துணையாக அவளும், அவளுக்குத் துணையாகத் தாயும் இருந்து வருகின்றனர். 

அவளது தந்தை இறந்து இன்னும் ஓராண்டு நிறைவடையவில்லை. இன்னும் இரண்டொரு மாதத்தில் ஆண்டுத் திவசம் வந்துவிடும். 

கல்வித் திணைக்களத்தில் குமாஸ்தாவாகக் கடமையாற்றிய அவளது தந்தை வீதியில் வரும் போது கார் ஒன்றினால் மோதுண்டு அவளது தாயாரின் பூவையும் பொட்டையும் பறித்து வெண்துகிலை மட்டும் பரிசளித்து விட்டுச் சென்று விட்டார். 

தந்தையின் படத்தைப் பார்த்துக் கொண்டிருந்தவளுக்குத் தொண்டையில் ஏதோ ஒன்று அழுத்த விறைத்து நின்றாள். நேரம் தன் பாட்டிற்குப் பயணத்தைத் தொடர்ந்து கொண்டிருந்தது. 

“பிருந்தா” – அம்மா. 

“பிருந்தா” 

“என்னம்மா”? 

‘இப்படி எத்தனை தடவை கூறுவது? உட்கார்ந்து கொண்டிருக்காதே மூதேவி பிடித்துவிடும் என்றால் கேட்கிறாயில்லையே ……. எழுந்திரம்மா” என்று தாயார் கூறினார். 

”என்னம்மா? பிடித்த மூதேவி போதாத எனிமேல் தான் அது பிடிக்கப் போகுதா?” என்று கூறத்துடித்தாள் சொல்லவில்லை. 

கலைந்திருந்த தலைமயிரைக் கோதி முடிந்து விட்டாள் தாயார். “என்னால் தாயாருக்குத்தான் எவ்வளவு வேதனை….’ 

பின்பு வீட்டிற்குள் முகம் கழுவச் சென்றாள் பிருந்தா. 

கிணற்றடிக் கல்லொன்றில் ஜோடிப்புறாக்கள் சல்லாபித்துக் கொண்டிருந்தன. அதைச் சிறிது நேரம் பார்த்துக் கொண்டிருந்தவள் ஆத்திரம் பொங்கச் சிறிய கல்லொன்றை எடுத்தெறிந்து கலைத்தாள். ஏமாற்றங்கள் தந்த விரக்தி இப்போது ஆத்திரமாக வெளிவந்தது. எந்தப் பெண்ணும் தன் உணர்ச்சி வெளிப்பாட்டிற்கு யாரையும் நாடமாட்டாள். அவளை அவளது கவசங்கள் தடுத்துவிடும். பெற்றவர்களிடமோ தன்னினத்தவர்களிடமோ தனக்குத் திருமணம் செய்து வைக்கும்படி கேட்க மாட்டாத மனநிலை பெண்ணுக்கு உண்டு. ஆணுக்கும்தான். பிருந்தா இதற்கு விதிவிலக்கல்ல. கல்பட்டதும் புறாக்கள் கத்திக் கொண்டு பறந்தன …… 

அவளுக்குத் திருப்தி ஏற்படவில்லை. என்ன செய்வாள் பாவம்? முகம் கழுவிக்கொண்டு சாமியறை நோக்கித் திரும்பினாள். கண்ணனின் படத்திற்கு முன் மண்டியிட்டுக் கண் மூடித் தியானித்தபடி இருந்துவிட்டுத் தேனீர் குடிக்க வெளியேறினாள். வேதனைகள் காஞ்சோண்டி இலை மாதிரி ….. மனதில் பட்டுவிட்டால் அதன் அரிப்புவேதனை மாறாது. பிருந்தாவுக்கும் அப்படித்தான் சில சமயங்களில் செந்தமிழ்ச் செல்வி மாதிரிச் சிரித்துக் கலகலப்பாக இருக்கிறாள். சிலசமயங்களில் கண்ணீரே துணை என அடங்கி விடுகின்றாள். பார்ப்பவர்களுக்கு அழகிய புறா தான் ஆனால் அவளோ தனக்குள் எரி நட்சத்திரமாய் அல்லவா இருக்கிறாள். 

அத்தியாயம் ஐந்து 

அன்று வெள்ளிக்கிழமை – 

பிருந்தாவின் அழைப்பின் பேரில் நவீனும் புறப்பட்டான் கோவிலுக்கு. 

“நீர் எவ்வளவு வடிவாயிருக்கறீர் இந்தப் பட்டு வேட்டி சால்வைக்கு?” குளித்து, புதிய பட்டு வேட்டிக்குள் நுழைந்து தோளில் ஒரு சால்வையைச் சுற்றிக்கொண்டு நெற்றியில் மெல்லிய திருநீற்றுக் கோட்டுடன் சிரித்தபடி நின்றவனைப் பார்த்துக் கேட்டாள் பிருந்தா. 

“நீங்கள் மட்டும் என்னவாம்? நதியா மாதிரி….”. என்றான். சிரித்து விட்டு நன்றி என்றாள். 

‘”டீச்சர், நதியாவும் இப்படித்தான். அவளுக்கும் எந்த உடுப்பும் பொருந்தும். இக்கால ஆடைகள் எல்லாம் அவளுக்கு அழகூட்டும்”. 

“ஏன், நீர் நதியாவின் ரசிகனோ!” 

“நதியா மட்டுமில்லை. அழகு எங்கு இருந்தாலும் ரசிப்பேன். அழகை ரசிக்கத் தெரியாட்டி மனிதன் பேயன் தான்.” இருவரும் நடந்தார்கள். 

அவனே தொடர்ந்தான் – 

“ஏன் டீச்சர் நீங்கள் அழகு என்பதில் சந்தேகமில்லை. அன்பின் இருப்பிடம் அழகின் உறைவிடம் என்பார்கள் அது மாதிரி” 

“என்ன நவீன், நீர் நல்ல ரசிகன் தான்” 

“நன்றி” 

மௌனமானார்கள். வழியில் ராஜநாயகன் மாஸ்டர் அவரது ‘வெஸ்பா’ ஸ்கூட்டரில் கடந்து சென்றார் – புன்னகை ஒன்றை உதிர்த்தபடி. 

“நவீன், உந்த மாஸ்டர் எங்கட பள்ளிக்கூடத்தில் தான் படிப்பிக்கிறார். எப்பவும் அவருடன் புதுக்கவிதை பற்றிச் சர்ச்சை நடக்கும்.” 

“ஏன் டீச்சர், நீங்களும் புதுக்கவிதைகளை ரசிப்பீர்களா?” 

“நல்லவை எங்கிருந்தாலும் அதுமரபுக்கவிதையாயினும், புதுக்கவிதையாயினும் நிச்சயம் ரசிப்பேன்” 

“உங்களுக்குப் பிடித்த நூலாசிரியர் யார் டீச்சர்?” 

“ஜெயகாந்தன்” 

“நான் கூடத்தான் டீச்சர். அவர் எழுதிய கங்கை எங்கே போகிறாள் நாவலை ஐந்து முறை 

முறை வாசித்திருக்கிறேன்”. காலில் மிதிபடுகின்ற குருமணலை மோதியபடியே தெற்கு வாசலையும் கடந்து தேர் முட்டியடிக்கு வந்தார்கள். 

”உள்ளே வாரீரா? சுத்திக் கும்பிடுவோம்” 

“நீங்கள் எங்க கூப்பிட்டாலும் வரத் தயாராய் இருக்கிறேன்”. 

சிரித்தாள். 

“அங்கு மட்டுமல்ல, வாழ்க்கைத் துணையாகவும்தான்” 

சொல்லவில்லை, நினைத்தான். 

முருகன், பிள்ளையார், வயிரவர் எல்லாரையும் கும்பிட்டு விட்டுச் சனீஸ்வரனுக்கு அர்ச்சனை பண்ணினாள். 

“நீர் அர்ச்சனை செய்யேல்லையே?” கேட்டாள். 

‘இல்லை’ எனத் தலையாட்டினான் நவீன். 

ஐயரிடம் ஒரு ரூபா டிக்கட்டை நீட்டி “நவீன் மக நட்சத்திரம்” என்றாள். 

நவீனுக்குத் தூக்கிவாரிப் போட்டது. 

‘இவளுக்கு எப்படித் தெரிந்தது எனது நட்சத்திரம்?’ 

ஐயர் பிரசாதம் தந்தார். 

வாங்கியபடி வெளியேறினார்கள். 

மேற்கு வீதியில் கச்சான் ஒரு பக்கட் வாங்கிக் கொண்டாள். 

இருவருமாக வீடு நோக்கி நடைபயின்றார்கள். 

கச்சானை பிருந்தாவே உடைத்துக் கொடுத்தாள். 

வாங்கி வாயில் போட்டபடியே நடந்த நவீனுக்கு அவளின் செய்கையை ரசிக்காமல் இருக்கவும் முடியவில்லை. 

“இவள் என்னை லவ் பண்ணுகிறளா?” 

“ஏன் நேரடியாகவே கேட்டிருக்கலாமே ‘நவீன் ஐ லவ் யு என்று”

“ஓ டீச்சர், என்னை நீங்கள் குழப்புகிறீர்கள்”…. நினைத்தான் இப்படி. ஆனால் கேட்கவில்லை. 

பிருந்தாவின் தாயார் தந்த சூடான தேனீரை வாங்கிப் பருகிய பின், தன் வீடு போவதற்கு எழுந்தான். 

“மெத்தப் பெரிய உபகாரம் தம்பி….. பிருந்தாவுக்குத் துணையாக நீங்கள் இருக்கிறதாலே எனக்குச் சந்தோஷமே”. பிருந்தாவின் தாயார் சொன்னது இவனுக்குள் குதூகலம் வந்தது மாதிரி இருந்தது. 

“வழித்துணை மட்டுமா அம்மா?… காலமெல்லாம் வாழ்க்கைத் துணையாக்கக் கூட இருந்து விடுகிறேன் – நீங்கள் விரும்பினால்” சொல்லவில்லை நடந்தான். 

முன் வீட்டு வேலியில் யாரோ கறையான் தட்டியது இவனுக்குக் கேட்டது. என்னுள்ளும் கறையான் ஒட்டிக் கொண் தே! யார் தட்டி விடப் போகிறார்கள்?

– தொடரும்…

– ஸ்நேகம் (நாவல்), முதற் பதிப்பு: சித்திரை 1999, காந்தளகம், யாழ்ப்பாணம்.

எழுத்தாளர் முல்லை அமுதன் கல்லியங்காடு, யாழ்ப்பாணத்தைப் பிறப்பிடமாகக் கொண்டவர். முல்லைஅமுதன் எனும் பேயரில் 80களில் இருந்து எழுதி வருகிறார். அவர் திருகோணமலை பெருந்தெரு தமிழ்க் கலவன் பாடசாலை, யாழ்/செங்குந்தா இந்துக் கல்லூரி, கனகரத்தினம் மத்திய மகா வித்தியாலயம், மானிப்பாய் இந்துக் கல்லூரி, ஆகியவற்றில் தன் கல்வியைத் தொடர்ந்தார்.புலம்பெயர்ந்து இங்கிலாந்தில் வசித்து வருகிறார். கவிதை, சிறுகதை, நாவல், விமர்சனம் எனப் பல தளங்களிலும் கால் பதித்தவர். வருடந்தோரும் இங்கிலாந்தில் ஈழத்து எழுத்தாளர்களின்…மேலும் படிக்க...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *