(1999ல் வெளியான நாவல், ஸ்கேன் செய்யப்பட்ட படக்கோப்பிலிருந்து எளிதாக படிக்கக்கூடிய உரையாக மாற்றியுள்ளோம்)
அத்தியாயம் 16-20 | அத்தியாயம் 21-26
அத்தியாயம் இருபத்தொன்று
காலம் எவ்வளவு தான் மாறிப் போயிருந்தது.
நவீன் கூட முன்புபோல் இல்லை. தலை மயிரைக் குறைத்து வெட்டி… அழகாக அரும்பு மீசை… பார்ப்பதற்கு ஸ்மாட்டாகக் காட்சியளித்தான். இருந்தும் ஒரு சோகம் அவனுள் அழுத்தியது.
பிருந்தாவைப் பார்க்காமல் இவ்வளவு நாட்களைக் கடத்தி விட்டோமே என்கிற அரிப்பு.
“ஏன் நான் மாறிப் போனேன்? இருந்தாலும் நான் முட்டாள் தனமாக நடந்து கொண்டு விட்டேன். அவளுடன் பழகும் போது புதிராகவும், இப்போது வாஸ்தவமான காதலாகவும், முகிழ்ந்து, அரும்பாகி, மலராகி, மலரும் பூவல்லவா காதல் என்பார்களே… அதுமாதிரி இதயங்கள் பேசும்… கண்கள் உறவாகும்…. உதடுகள் சங்கமிக்காமலேயே உடலில் குளிர் ஓடும்……”
“ஓ… நான் பித்தனாகி விட்டோனே?”
உதடுகளில் ஒரு சிறு புன்னகை ஓடி மறைந்தது.
இன்று தலைநகரில் உள்ள பினான்ஸ் கொம்பனி ஒன்றுக்கு கணக்கு எழுது வினைஞர் வந்திருந்தான். பழைய நண்பர்களையும் சந்தித்தான். விக்ரோறியாவில் நண்பர் நரேனுடன் சேர்ந்து பியர் குடித்தான் கடற்கரைப் பக்கம் போன போது –
காதலர்கள் தங்களை மெய் மறந்து இருந்த நிலமை இவனைச் சங்கடப்படுத்தியது. பிருந்தாவை நினைவுக்குக் கொண்டு வந்தது.
ஒ பிருந்தா ஐ லவ் யு. நாங்களும் இப்படி மகிழ்ந்து ஆடிப்பாடி… நீங்கள் சொன்ன மாதிரி நான் ரஹ்மான் மாதிரியும், நீங்கள் நதியா மாதிரியும் டூயட்பாடி-
கனவுகளின் சல்லாபம்.
நவீன் நெடுந்தூரம் நடந்தான்.
மணல் காலில் மிதிபட்டு இவனுக்குச் சந்தோஷத்தைக் கொடுத்துக் கொண்டிருந்தது. கடற்காற்று மெல்லிதாக வீச, கடற்பறவை ஒன்று உயரே சிறகடித்துப் பறந்து போயிற்று.
அன்று மாலையே ஊர் திரும்பி விட்டான்.
நரேன் சொன்னது ஞாபகத்தில் இருக்க
பிருந்தாவைச் சந்தித்தான்.
மாலைப் பொழுது அவனுக்குள் குதூகலத்தைத் தந்தது.
கதவைத் தட்டினான்.
திறந்தது.
குளித்து விட்டுத் தலையைத் துடைத்தபடியே திறந்தவளுக்கு நவீனைக் கண்டதும் ஆச்சரியமாக இருந்தது. விழிகளை மலர்தினாள். தன் கண்களையே நம்ப முடியாமல் இருந்தாள். “எவ்வளவு நாட்கள் உம்மைக் காணாமல்…. என் மனம் என்ன பாடு பட்டிருக்கும். உமக்குத் தெரிந்தால் தானே?” விழிகள் பேசின. “நீங்கள் மட்டும் என்னவாம்? உங்களைப் புரிந்து கொள்ள முடியாத நட்புடன் என்னால் எப்படி? நான் உங்களைக் காதலிப்பது உறுதி செய்யப்பட்டதும் என்னுள் ஏற்பட்ட தவிப்பு, குழந்தையின் முன்னால் விளையாட்டுப் பொருட்களை நீட்டியதும் ஏற்படும் குதுகலம் – அதுமாதிரி எனக்குள்” அவனது விழிகள் பேசின.
சோபாவில் உட்காரச் சென்றான்.
பிறகு நாவல் நிற சாரிக்குள் நுழைந்து தலையைப் பின்னலிடாமலேயே அழகு சொட்ட தேவதையாய் வந்தாள்.
கதைத்தாள்… அவனும் தொடர்ந்தான்.
பலதும் பத்துமாய் மாறிக் கதை தங்களுக்குள் வர இருவரும் விழித்துக் கொண்டனர்.
காப்பியைக் குடித்தபடி சொன்னான்… “கோப்பி இதமாக இனிமையாக உள்ளது உங்களைப் போல்”
“இன்றைக்கு ஒன்றுமில்லாதவாறு அழகாயிருக்கிறீர்”
“நீங்கள் மட்டும் என்னவாம் பனியில் குளித்த ரோஜாமலர் மாதிரி..”
சிரித்தாள்.
திடீரென்று நவீன் கேட்டான்.
“நான் ஒன்று கேட்கட்டுமா?”
“கேளுமன். ஏன் புதிர் போடுகிறீர்?”
“வாழ்க்கையே புதிர்தானே”
“விசயத்திற்கு வாரும்”
“நாங்கள் எங்களது வாழ்வைத் தீர்மானித்துக் கொள்ளும் நேரம் இது என நினைக்கிறேன்”
‘எனது வாழ்வைப்பற்றி நான் இன்னும் முடிவுக்கே வரவில்லை. உமது வாழ்வு பற்றி?”
“திருமணம் செய்து கொள்ளப் போகிறேன்.” நவீன் சொன்னான். பிருந்தா நிமிர்ந்து உட்கார்ந்து கொண்டாள்.
“சுவாரஸ்யமாய் இருக்கிறதே என்று நினைத்துக் கொண்டாளோ?” நவீன் நினைத்தான்
“யார் அந்த பாக்கியசாலி? ஏற்கனவே பார்த்து வைத்திருக்கிறீரா…?”
“நான் பார்த்து வைத்திருக்கிறேன். ஆனால்……”
“என்ன? ஆனால்…”
“ஒரு பக்கமான முடிவு தான். பெண் சம்மதித்தால்…?”
“உம்மேட முடிவுப்படியே அவளும் சம்மதிப்பாள். கவலைப் படாதீர் நவீன்” நிம்மதிப் பெருமூச்சு ஒன்று விட்டுக் கொண்டான்.
“அந்த அதிர்ஷ்டசாலி யார்?”
மீண்டும் கேட்டதும் –
“பார்வையாலேயே நீங்கள் தான்” என்றான்.
தடுமாறிப் போனாள்.
“முடியாது!…நவீன் முடியாது!…என்னால் முடியாது….” நா தழதழத்தது.
“நான் உங்களைக் காதலிக்கிறேன்! மிஸ் பிருந்தா!!”
அழுத்திச் சொன்னதும் பிருந்தாவிற்குத் தூக்கி வாரிப் போட்டது. “என்னமாய் உச்சரிக்கிறான் இவன்….. மிஸ் பிருந்தா…. டீச்சர் எல்லாம் பொய். படிக்கும் போது மட்டும்தான் உலகில் யாவரும் மாணவர்கள்.”
“கற்றது கையளவு…பழமொழி மாதிரி நமது காதலுக்கு இது முட்டுக்கட்டையாக இருக்க கூடாது!”
“என் வயது?”
“வயது பார்த்தால் காதலின் அர்த்தம் வேறு விதமாயிருந்திருக்கும்”.
“சமூகம் எம்மை நிந்தனை செய்யும்”
“நாங்கள் தானே வாழப் போகிறோம்”.
“சமூகத்தின் வட்டத்திற்குள் வாழ்ந்தாக வேண்டுமே?”
“நான் முடிவு செய்தாச்சு. நான் உங்களைத்தான் கல்யாணம் செய்வேன்” எழுந்து கொண்டாள்.
“கல்யாணம் செய்து கொள்ள எனக்குச் சம்மதமே. இப்போது நீங்கள் சம்மதித்தால்….?”
தடுமாறினாள் பிருந்தா.
அவளது காதல் வித்தியாசமானது. திருமணம் என்பதை அவளால் நினைத்துப் பார்க்க முடியவில்லை. தான் அவனின் இதயத்தை மட்டுமே விரும்புவதை உணர்ந்தாள். ஆனால் நவீனின் முடிவு இளமைக் கனவுகளைச் சுமந்து காம உணர்ச்சி மட்டுமே நிறைந்த காதலாக இவளுள் உணரச் செய்தது.
சாதாரணமாக ஐ லவ் யு என்று சொல்லியிருந்தால் ஒருவித ஆறுதல் தந்திருக்கும். கல்யாணம் என்கிற முடிவு அவளை நவீனின் மீது இருந்த மதிப்பைக் குறைத்துப் பார்க்க நினைத்தது. “அவனது அறிவு மங்கி விட்டதோ?”
நவீனும் எழுந்து அவளருகில் சென்றான்.
ஜன்னலூடே மாலைக் காற்று குளிரச் செய்தது.
பிருந்தாவின் இரு கரங்களையும் எடுத்து கண்களில் ஒத்திக் கொள்ளப் போனான்.
கைகளை உதறி விலகிப் போனாள்.
மெல்லிய குரலில் “பிருந்தா ஐ லவ் யு” என்றான்.
கண்ணிமைக்கும் நேரத்தில் அது நடந்து முடிந்தது.
வெட்கத்தால்…. ஆத்திரத்தால் – துணியால் முகத்தைத் துடைத்தபடி படியிறங்கி நடந்தாள்.
சிந்தனை அலைபாய்ந்தது.
“காதலிக்கும் போது மலர்களைப் போல் இருக்க வேண்டும். மலர்களை ருசிக்க மட்டுமே காதலுக்குத் தெரிந்திருக்க வேண்டும்.
முரட்டுத்தனம் இருக்கக் கூடாது. கவிஞனாக அனுபவிக்க வேண்டும். அப்படியானால் நான் ஏன் தோற்றுப் போனேன்?”
“புரிந்து கொள்ளாமையா?”
“அப்படியானால் அவளது பார்வையின் அர்த்தம்….”
வீதியில் பூவரசமரங்கள் அழுது வடிந்து கொண்டிருந்தன.
அத்தியாயம் இருபத்திரண்டு
அன்றைய பத்திரிகைச் செய்தியைப் படித்ததும் நவீனும் தடுமாறிச் செய்வதறியாது திகைத்து நின்றான்.
கண்கள் பனித்ன…. விழிகள் புரண்டன.
தாயும் அழத் தொடங்கி விட்டாள்.
“ஓ! அம்மா இன்று தான் நீ உண்மையிலேயே விதவையாகி விட்டாய்! சாமியாராய்ப் போனவர் சமாதியாகியிருந்தால் பெருமையாய் இருந்திருக்கும். காடையர்களால் அடிபட்டு இறந்தல்லவோ போனார் உன்கணவர். என்னால் அப்பா என்று சொல்ல முடியவில்லை மன்னித்துக் கொள்ளம்மா”
படத்துடன் செய்தியாய் வெளிவந்தது. “சாமியார் கோலத்தி லிருந்த பலரை ஏமாற்றி போலீசாருக்கு டிமிக்கி கொடுத்த பேர்வழி இன்று காடையர்களால் அடிபட்டு மரணமடைந்து விட்டார்” என்பதே அச் செய்தி கணவனே தெய்வம் என வாழும் நவீனின் தாய்க்கு அது மேலும் அதிர்ச்சியைத் தந்ததில் வியப்பில்லை.
நெற்றியில் இருந்த குங்குமத்தை அழித்துக் கொண்டாள். கொண்டையில் சூடியிருந்த பூக்களை விலக்கிக் கொண்டாள். மீண்டும் கண்ணீரைச் சுமந்து கொண்டு அவள், “நீ ஒரு விதவை….. விதவை எனச் சமூகம் சொல்லுமே” – தயாராகி விட்டாள். அவளின் செய்கையைப் பார்த்துக் கொண்டிருந்த நவீனினால் எதுவுமே சொல்ல முடியவில்லை.
‘எனி மேல் முற்றத்து மல்லிகை தன் பாட்டில் பூத்துச் சாய்த்து நிலத்தில் விழும் – அம்மாவின் கூந்தலுக்கு வந்து ஒட்டிக் கொள்ளாது. சிவக்கொழுந்துவின் கடைக்கு அம்மாவால் குங்குமம் விலைப்படாது.’
அவனையும் அறியாது நீண்டதொரு பெருமூச்சு வந்தது.
கதிரையில் இருந்தவாறே தூங்கிப் போனான்.
விழித்தபோது அம்மா சொன்னாள் பிருந்தாவின் அம்மா வந்து விட்டுப் போனதாக திக்கென்றது அவனுக்கு.
“ஏன்?” என்ற கேள்வி எழுந்து மடிந்தது.
“அன்று நடந்த சம்பவத்திற்கு மன்னிப்புக் கேட்கத்தான் கூப்பிட்டாளா?”
“அன்று நடந்தது என் தவறல்லவே”
காதல் என்பது கண்களின் சந்திப்பால் – கருத்தொருமித்த இரு இதயங்களின் சங்கமத்தில் பிறப்பதுதான். எனது காதல் அப்படித்தான். உங்களின் கருத்துப்படி வெறும் உடற்பசிக்குப் பெயர் காதலல்ல…. எனது காதல் வெறும் நீரில் தோன்றும் நிழலல்ல – அழிந்து போவதற்கு.
கண்களில் நீர் கட்டியது
கூரைக்கு மேலாக ஹெலிகொப்டர் தாழ்ந்து பறந்தது. பனை மரங்கள் சலசலத்தன.
“கரவோலிகள் அதிகமாய்ப் போச்சு. வெட்டவேண்டும்”
அம்மா சொல்லியிருந்தாள் முன்பு.
“எப்படிப் போவது?. எப்படிப் பேசுவது? முன்பு மாதிரி கலகலப்பை ஏற்ப்படுத்தலாமா?” மனது பரபரத்தது.
எனக்கென்ன நான் ஆம்பிளை. போய்த்தான் பார்ப்போமே. கால்கள் முன்னேறின.
நடையில் பழைய வீரியம் இல்லைதான். எனினும் நடந்தான்.
கோவில்களில், கடற்கரையில், பாடசாலையில், சினிமா கொட்டகைகளில் எல்லாம் கலகலத்ததுத் திரிந்த நாங்கள் ஒரு கணப் பொழுதில் வெட்கப்படவேண்டியதாயிற்று. நான் ஏன் வெட்கப்பட வேண்டும்?ஆம்பிளை நான். அவளல்லவா நாண வேண்டும். சந்தியைக் கடந்து திரும்பினான்.
“அந்த ஒரு கணப்பொழுதில் ஏன் மாறிப் போனாள்? அப்படி என்ன தான் சொல்லிட்டேன்? ஐ லவ் யு என்று சொன்னது தப்பா….? அதற்குப் பிழையாய் அர்த்தம் கற்பித்துக் கொண்டு அப்படி….. அப்படி….சீ….டீச்சர் நீங்களா அப்படி வெட்கப்படும்படி நடந்தீர்கள்? நம்பமுடியவில்லையே. நான் காதலித்தது உங்கள் உள்ளத்தைத் தானே….! உடம்பை நான் விரும்பியிருந்தால் தனிமையில் கழித்த எத்தனையோ நாட்களில் தொட்டிருக்க முடியும்…. உங்களால் கூட என்னை…. இதயத்துள் கட்டி எழுப்பப்பட்ட கோயிலை அதில் நீங்கள் என்றும் குடியிருப்பதைப் புரிந்து கொள்ளாமல் போய் விட்டீர்களே!”
வாசலில் ரோஷன் குரைத்து வரவேற்றது.
தடவிவிட்டுக் கொண்டு பெல்லை அழுத்தினான். உள்ளே தட்டாமலேயே போயிருக்க முடியும். இன்று மட்டும் ஏதோ தடுத்தது. டீச்சரின் தாய் தான் திறந்தாள்.
“வா தம்பி. பிருந்தா உள்ளே இருக்கிறாள். போய்க் கதையும். நான் பக்கத்து வீட்டில் புதுப் படம் போடுகிறார்களாம் போய்ட்டு வாறன்” சென்று விட்டாள்.
தயங்கியபடியே நுழைந்தான்.
கட்டிலில் ஒருக்கழித்துப் படுத்திருந்தாள் பிருந்தா. அருகே போய் மெதுவாக “டீச்சர்” என்றான்.
மெதுவாகக் கண்களை மலர்த்தியவள் கண்களை ஒரு கணம் மூடிப் பெருமூச்சொன்றை விட்டுவிட்டுத்திறந்தாள். பார்வை பேசியது.
அருகில் உட்கார்ந்து கொண்டான். எழுந்திருக்க முயன்றாள் முடியவில்லை.
“படுத்திருங்கள் ‘டீச்சர். என்னாச்சு உங்களுக்கு?” கேட்டான்.
“ஒன்றுமில்லை தலையிடியும் காய்ச்சலும் தான்.” நவீன் நினைத்தான் – இவளுக்கு இங்கே காய்ச்சலும் தலையிடியும், அவள் தாய் மட்டும் புதுப்படம் பார்க்கப் போய்விட்டாள். புன்கை உதடுகளில் மலர்ந்து மறைந்து போயிற்று.
ஒரு நீண்ட மௌனம்.
பிருந்தா கலைத்தாள்.
“எப்படி இருக்கிறீர்?”
“நான் நன்றாய் இருக்கிறேன், நன்றி”
புன்னகை இருவர் உதடுகளிலும் தவழ்ந்தது. “ஏதாவது மருந்து எடுத்தீர்களா? கேட்டான் நவீன்.
“சும்மா அஸ்பிரின் மட்டும்”
“ஏதாவது சீரியஸாயின் டாக்டரிடம் போகலாம் தானே?”
“நத்திங் சீரியஸ் ஹியர்” என்றாள்.
சிறிது நேரம் யோசித்து விட்டு சொன்னாள்…
“மன்னித்து விடும் நவீன்….. நான் அன்று அப்படி நடந்து கொண்டதற்கு…… அது என்னுடைய பிழை…”
“…எனது அன்பை நீங்கள் பிழையாக விளங்கிக் கொண்டதே அந்த அர்த்தத்திற்குக் காரணம்.”
“இப்ப கூட நினைத்தாலே வெட்கமாயிருக்கிறது நவீன்”
“எனக்கு என்மேலேயே கோபம்”
“இதில் எனக்குப் பங்கு இருக்கு தானே?”
“எனது வயது அனுபவமும் வித்தியாசமானது. ஆனால் நீர் இன்னும் டீன் ஏஜ்ஜாகத்தான் இருக்கிறீர். அதனால் தான் எனது தவறுக்கு உமது தூய்மையான காதலுக்கு நான் காமம் என்கிற அர்த்தம் கொடுத்து நடந்து கொண்டேன்…”
“இப்போது கூட நான் உங்களை விரும்புகிறேன்.”
“மனசுக்கு மனசு, கண்ணுக்குக் கண், காமத்துக்கல்ல”
“நவீன் என்னால் என்னையே புரிந்து கொள்ளாத வாழ்வு வாழ்ந்த எனக்கு அன்றைய நிகழ்ச்சி ஒரு திருப்பம். என்னையே புரிந்து கொள்ளவதற்கு….. நமது தொடர்புக்குச் சரியான அர்த்தம் கண்டு கொள்வதற்கு…..”
மேசையில் கிடந்த விசிறியை எடுத்து விசிறிக் கொண்டான். “வியர்க்கிறதா நவீன்?….காற்றாடியைப் போடட்டுமா?”
“பரவாயில்லை….நான் வரட்டுமா?”
“நவீன்”….
அவனது கரங்களைப் பற்றிக் கொண்டாள்.
“போகாதீர், இரும். என்னோடு இரும்.”
நின்று நிதானித்து அவளையே பார்த்தான் நவீன்.
கண்களில் எதையோ தேடினான்…ஏதோ புரிந்தது.
அவள் பார்வையால் அவனது இதயத்தில் ஏதோ எழுதிச் சுதாகரித்துக் கொண்டாள்.
“என்னை விரும்பினால் இப்பொழுது போகாதீர்.” கெஞ்சியது போலிருந்தது அவனுக்கு இருந்தான்.
கேட்டாள் –
“என்னைத் திருமணம் செய்வதால் சமுதாயத்தின் எதிர்ப்பை எப்படிச் சமாளிப்பது!”
கேள்வியை அவளிடமிருந்து எதிர்பார்க்கவில்லை அவன். அதுவும் அவ்வளவு சீக்கிரத்தில்…..
யோசித்தான்….
அன்று அவள் நடந்து கொண்டது கண்முன்னால் ஒடியது.
ஐ லவ் யு என்கிற விமானம் பிருந்தாவில் மோதி தடுமாறி நொறுங்கு முன் –
அவள் செயலிழந்து விட்டாள்.
நவீனின் வார்த்தைகள் அவளை நிலைகுலையச் செய்து விட்டன.
கணப்பொழுதில்
அவளது உடைகள் நிலத்தை முத்தமிட்டன.
நவீன் நிலைகுத்தி நின்றான்.
வார்த்தைகள் மறந்து போயின.
அவள் நெருங்கி வந்தாள்.
இவன் பின்னோக்கிப் போனான்.
எதிர்பாராத மோதல். ஆதலால் பதில் தர வார்த்தையைத் தேடினான்.
பின்னோக்கி நடந்த நவீன் சுவரில் சாய்ந்து நிமிர்ந்தான்.
கண்கள் வெட்கத்தால் மூடிக் கொண்டன.
இதயப் படபடப்பு அதிகரித்ததை உணர்ந்தான்.
மாறி மாறி அவனை முத்தமிட்டாள்.
அவளது கரங்கள் நடுங்கின. சுவரில் ஆத்திரத்தால் அறைந்தான். ஒன்றுமே செய்ய இயலாமல் எதையோ இழந்தவனாய் – காதல் ஒரு கோயிலுக்குச் சமனானது புனிதமானது, போற்றப்படவேண்டியது என்கிற அவனது கணிப்பு கவனிப்பாரற்றுப் போனதுவோ? “டீச்சர்…. டீச்சர்….ம்…பிருந்தா” ஆத்திரமாய் வந்தன!! அவளது கரங்கள் மார்பில் பிரம்பாய் ஊர்ந்து கீழே இறங்க….
பலம் எல்லாம் கூட்டி அவளைத் தள்ளினான்.
சுவரில் மோதுண்டு வீழ்ந்தான்.
அவளது கண்கள் ஒரு வித வெறியால் சிவந்திருந்தன.
நவீனின் கண்கள் பொல பொல வென முதன் முறையாக அழுதான். “இப்போது திருப்தி தானா…..என் உடலை விரும்பித்தானே ஐலவ்யு என்று எல்லாரும் பாவிக்கிற ஆயுதத்தை என்மீதும் எறிந்தீர்….ம் என் உடல் உமக்காகக் காத்திருக்கிறது. நீர் விரும்பியதை எடுத்துக் கொள்ளும்”
வார்த்தைகள் அவளிடமிருந்து விசிறு துப்பாக்கியிலிருந்து சிதறும் குண்டுகள் மாதிரி பொழிந்தன.
நவீன் தனது ஆத்திரத்தை விழுங்கிக் கொண்டு மெதுவாக அவளிடம் சென்று சேலையால் அவளது உடலை முடிவிட்டான். மூலையில் குந்தியிருந்து காலைகளை கைளால் மடித்துக் கட்டி முகத்தைப் புதைத்துக் கொண்டு குலுங்கிக் அழுதாள்.
அவளருகில் சென்று முழந்தாளிட்டு அமர்ந்து மெதுவாக வாய் திறந்தான்.
ஐலவ் யு என்கிறது உங்களுக்கு அம்பாய்த் தைத்தது. வாஸ்தவம் தான் அதுவே எனது உள்ளத்திலிருந்து வெளி வந்த…. என்னால் பூஜிக்கப்படுகின்ற அன்புத் தெய்வத்திற்கு அர்ப்பணித்த காதல் மலர் என்பதாக எனக்குத் தெரிந்தது….”
அவள் இன்னமும் அழுது கொண்டிருந்தாள்.
“உங்களது செயலால் நான் நிலைமாறவில்லை. எத்தனையோ தனிமைகளை நாங்கள் அனுபவித்திருக்கிறோம். அப்போதில்லாத உணர்ச்சி இப்போதா வந்து விடப்போகிறது.
“காதல்தான் முழுமையானது. அன்பாக ஆசையாக ஒரு கவிதையாக அர்ச்சனை மலராக ஸ்பரிக்க வேண்டியது…… காமம் என்னைப் பொறுத்தவரை இரண்டாம் பட்சம் தான்.”
“உங்கள் நிர்வாணம் எந்த முனிவனையும் சபலப்படுத்தும். ஆனால் என்னைப் பொறுத்தவரை நான் முற்றும் துறந்த முனிவனல்ல. தங்கள் இளமையைப் பயன்படுத்தித் தங்களது சுகத்தை அனுபவிக்க எத்தனையோ மாணவர்கள் உண்டு. ஆனால் நான் இன்னும் உங்களது பக்தனாக மட்டுமே உங்களது வாசகராக மட்டுமே இருக்க ஆசைப்படுகிறேன்.”
“சமூகத் தடைகள் முறிந்து போய் எங்களுக்கு வணக்கம் செலுத்திக் கொள்ளும் ஒரு நாளில் வயதுகள் தொலைந்து போகும். காதல் பறவைகள் வலம்வர முட்கள் பூக்கள் சிந்திக் கொள்ளும்- ….நீங்கள் சம்மதித்திருந்தால்.” கலைந்திருந்த மயிரைக் கோதி விட்டு சேட்டுப் பொத்தானைகளை மாட்டியபடி வெளியேறினான்.
இப்போது
திருமணத்திற்கான எனது விருப்பத்தை கேட்கிறாளே… எவ்வளவோ மாறி விட்டாள்.
கண்கள் மூடாது அவனையே பார்த்தான்.
கட்டிலில் முதுகிற்குத் தலையணையை அணை கொடுத்து, கூந்தல் பரவி இருக்க சாய்ந்திருந்ததே ஒரு அழகுதான். நாவல் கலரில் சாரி உடுத்தியிருந்தாள் அவளுக்கு மேலும் அழகு சேர்த்தது மாதிரி
சூரிய காந்தியாய் மலர்ந்து சூரியனின் வரவிற்காய்க் காத்திருந்தவன் இப்போது சூரிய பகவானின் தேவாரத்திற்காகக் காத்திருக்கிறனோ
சம்மதமே நீ பூவானால்
சரம் தொடுக்க….
இங்கே-
ஒளி கண்டு மலர்
மலர்ந்ததா இல்லை
மலர் கண்டு ஒளி
வந்ததா?
முல்லை அமுதன்
மலர் வனக்காடுகளில் பூப்பறிக்க வந்தவள்
மாலைக் கரங்கள் வாழ்த்த
இங்கே
சம்மதமே – நான் பூவாக….நீ மேசையில் கிடந்த கவிதையை நவீனின் கண்கள் வாசித்தன.
கடிகாரத்தைப் பார்த்தவன் பிருந்தா தனது பிறந்த நாளுக்குப் பிரசன்ட் பண்ணியது நினைவுக்கு வந்தது.
“இது உமக்கு நவீன்”
நிமிர்ந்து பார்த்தான்.
“இன்று உமது பிறந்த நாள்”
அவனுக்கே நினைவில்லை, அவளுக்கு மட்டும் எப்படி? தடுமாறித்தான் போனான்.
அவளே தெரிவு செய்து அவனது கரத்தில் மாட்டி விட்டாள்.
வானத்தில் பறப்பது போன்ற ஓர் உணர்வு.
“மெத்தப் பெரிய உபகாரம்” மெதுவாகச் சொன்னான்.
பிறகு…. பிறகு –
சேர்ட் வாங்கித் தந்தது… சினிமாவிற்குப் போனது…. நினைவை அரித்தபடி மீண்டும் கேட்டது. அவனுள் உறைத்தது.
“அம்மி மிதித்து அருந்ததி பார்த்து நாலுபேர் மத்தியில் நான் உங்களுக்குத் தாலிகட்டி மனைவியாக்கி…
முழுமனிதனாக வாழ எனக்குச் சம்மதமே…”
சொன்னதும் மகிழ்ச்சியால் துள்ளி எழுந்து கொண்டாள்.
“ஓ மெத்தப் பெரிய உபகாரம்.”
இருவரின் உதடுகளும் சிரிப்பைப் பரிமாறிக் கொண்டன.
“இருவரது அம்மாக்களும் முதலில் இதற்குச் சம்மதிப்பார்களா?” இப்போதும் அவர்களது மனதுகளில் ஆட்டம் கண்டன. “சமாளித்துக் கொள்ளலாம்.” சமாதான உடன் படிக்கைகளும் அவரவர் மனதுகளில் நடந்து முடிந்தன.
இரண்டு இதயங்கள் பிரகடனப் படுத்தப்பட்டு இந்தக் காதலுக்குப் பூ மழைதூவி வானவர்கள் வாழ்த்துச் சொன்னது மாதிரி அவர்களுள் ஒரு பிரமை.
அத்தியாயம் இருபத்தி மூன்று
களைத்துப் போய்க் கல்லூரியால் வந்து வாசலின் உட்பக்கம் செருப்பைக் கழற்றி வைத்து விட்டு உள் நுழைந்தாள். மேசையில் குடையையும், புத்தகத்தையும் வைத்து விட்டுக் கூந்தலைக் கலைத்தாள், வியர்த்திருந்தது.
“ப்பூ…… சரியான களைப்பு” முணுமுணுத்தாள். உடைகளைக் களைந்து கொடியில் போட்டு விட்டு உடலை மறைத்துத் துணியால் கட்டியபடி கிணற்றடிக்குப் போய் நன்றாகக் குளித்தாள்.
சூடும் பறந்தது.
களைப்பும் சிறிது குறைந்தது.
தாய் சமையலில் மும்முரமாக இருந்தாள் – நேரத்திற்குச் சமையல் முடிந்து விட்டால் பக்கத்து வீட்டுக்குப் படம் பார்க்கப் போகலாமல்லவா?
அந்த அவசரம் அவளில் துரிதம் காட்டியது. தானே பிளாஸ்கில் தேனீரை ஊற்றி இதழ்களில் பொருத்தி உறிஞ்சினாள்.
“இன்று எப்படியாவது கேட்டுவிடவேண்டும். எனி என்ன வெட்கப்பட இருக்கிறது. எனது திருமணத்தை நானே முடிவெடுப்பதில் தவறில்லையே. உழைக்கிறேன், நாலுபணம் கைகளில் புரள்கிறது, டியுசன் வேறு. கவலைப் படாமல் வாழலாம். அம்மாவும் மறுப்புத் தெரிவிக்கமாட்டாள். எப்படி அவளால் எதிர்ப்புக் கொடி காட்ட முடியும். பெத்த மகளின் உழைப்பால் சாப்பிடுகிறதே ஒரு சந்தோஷமான பச்சை விளக்குக் காட்டும் நிகழ்ச்சி தானே.”
நினைத்தபடி திரும்பினாள்.
கிணற்றடிப் பக்கமிருந்து மெல்லிய காற்று வந்து அவளது மேனியை முத்தமிட்டுச் சென்றது. சிலிர்த்துக் கொண்டாள்.
“அப்பா இருந்தால் எவ்வளவு தைரியமாக நடத்தி வைத்திருப்பார். அப்பா ஒரு முற்போக்குவாதி. கண்டிப்புத்தான் எனினும் அன்பானவர். நான் காதலிக்கும் விடயம் தெரிந்ததும் பச்சை சிக்னல் விழுந்திருக்கும். ம்….அவரின்ஆத்மாவும்…..” கண்கள் பனித்தன.”அப்பாவும் உயிருடன் இல்லையே …. அம்மா அதை மறந்துவிட்டாளா? அப்பாவுடன் வாழ்ந்த காலங்களை மறந்து விட அவளால் எப்படி முடிந்தது? காலம் தான் அவளை மாற்றி விட்டதா? அல்லது என்னால் அவளது கவலைகள் மறக்கடிக்கப் பட்டு விட்டனவா?”
“வெறுமை படிந்த அம்மாவின் நெற்றி…. எப்போதும் தயாராய் சீவிக் குடுமி கட்டி… கூந்தல் என்றும் அவளுக்கு அழகுதான். உனது மகளல்லவா நான். உன்னால் நிச்சயிக்கப்பட்ட எனது பழக்கங்கள். உன்னால் வளர்த்தெடுக்கப்பட்ட எனது அழகுகள், எனது கல்வி வளர்ச்சி, தொழில், இப்போது திருமணம்….”
அம்மா ஆரம்பித்தாள்.
தாய் மகளைப் பார்த்தாள்.
கேட்டேவிட்டாள். ஆச்சரியமும், அதிர்ச்சியும்தான் முகத்தில். காதலை அங்கீகரிக்க…. அவளால் அவளின்
அவளின் நாயகனை
அங்கீகரிப்பதில் தாமதம். வயது….
“மனதுகளின் சங்கமத்தில் வயது கடைசிப்பட்சம்தானே?’
“இருந்தாலும் பருவம் வாழ்க்கை என்று வரும்போது பெண் கணவனினும் வயது குறைந்ததாய் இருப்பது சிறந்தது. குடும்ப நலன் பாதிக்கப்படாது.”
தாயின் அருகில் போய்த் தரையில் உட்கார்ந்து கொண்டாள். பிருந்தா. மனதை ஒரு நிலைப்படுத்திக் கொண்டு கேட்டாள்.
“ஏனம்மா பக்கத்து வீட்டு மஞ்சுளாவின் கணவன் வயதில் குறைவு. அவர்கள் சந்தோஷமாக இல்லையா? அழகான பிள்ளைகள் வேறு. என்னுடன் படிப்பிக்கிற உஸ்மான் மாஸ்டரின் மனைவி ஆறுவயது மூந்தவள். லவ்மரேஜ். நல்ல அமைதியான குடும்பம், அழகான குழந்தைகள். நடைமுறைக்கு இது ஒத்துவருமோ இல்லையோ அனுசரித்துப் போவது நானும் அவரும் தானே?”
அவர் என்ற உச்சரிப்பைத் தாய் ஊன்றிக் கவனித்தாள். “என்னமோம்மா….. எனக்கும் சரியாப்படவில்லை. ஏனென்றால் சமூகத்தின்ற எதிர்ப்பைச் சம்பாதிச்சு வாழ முடியாது. அதுக்குத்தான்.”
“நிச்சயமா…வாழமுடியாதம்மா…ஆனால் இத்தனை வயதாகியும் உன்னாலும் எனக்கு வரன் பார்க்க முடியலையேம்மா? சீதனம், செவ்வாய் தோஷம், கிரகங்கள் பகை…இப்போ வயது ஏறிவிட்டது. வெள்ளிக் கம்பியாய் தலை மயிர் மாறுகின்ற பருவம். எனி உன்னாலும் வரன் பார்க்க முடியாதம்மா – கிழவி எனக்கு புரோக்கரும் நழுவி விடுவார். எனிமேலாவது என்னை வாழ விடுங்களம்மா” கெஞ்சினாள்.
தாய் பிருந்தாவின் தலையை வருடிக் கொடுத்தாள்.
“அம்மா நீதான் இப்போ அப்பா அம்மா எல்லாம். நீயும் எதிர்ப்புக் காட்டி விட்டால்….. ஓ கிழவியானாலும் கன்னியாகவே இருக்கிற போது ரொம்ப கவலைப்படுவோம். இன்னும் கொஞ்சக் காலத்திற்குத் தான் உழைக்கவும் முடியும்.” பிறகு சென்னாள்…. “எனக்கென்று வேலியை உன்னால் போடமுடியாத பட்சத்தில் எனக்கு நானே வரன் அமைத்துக் கொள்வதில் தவறில்லையம்மா?”
தாயும் கற்பனை பண்ணிப் பார்த்தாள்.
“நானும் கிழடு தட்டும் வயது…. எங்களால் முடியாத போது இளையதுகளுக்கு வழிவிட்டுத்தனேயாக வேண்டும். பிறகு இவள் கிழவியாகி… கன்னி கழியாமல்… அனாதையாகி …. கொடுமையிலும் கொடுமை. சீதனம் இன்றி இவளைக் கட்ட எந்த ஆம்பிளையும் தயாராய் இல்லை. படங்களிலே வாறமாதிரி எனது மகளுக்கும் ஓர் இக்கட்டான நிகழ்வு…..கூடாது. எதிர்ப்பைக் காட்டுகிற சக்தி என்னிடம் இல்லை. இளைய தலைமுறையை எதிர்காலத்தில் நிறுத்த முடியாது.” தாயும் சொல்லத்துடித்தாள். அவளது முடிவை பிருந்தாவும் எதிர்பார்த்தாள்.
“உன் விருப்பப் படியே நடக்கட்டும்.” சேலைத்தலைப்பால் கண்ணீரைத் துடைத்தாள்……. எந்தத் தலைமுறை தோற்றது? எந்தத் தலைமுறை வென்றது?
தாயைப் பார்த்து “……. ரொம்பத்தாங்ஸ்” என்றாள். கன்னத்தில் முத்தங்கள் பதித்தாள். தாயோ தனது எதிர்ப்பைக் காட்டமுடியாத தோல்வியில் டெபாசிட் இழந்த அரசியல்வாதி போல இருந்தாள்.
பிருந்தா எழுந்துகொண்டாள்.
நவீன் வருவான் என்கிற அவளது எதிர்பார்ப்பு, இரவு பதினொரு மணியாகியும் அவன் வராதது அவளுக்குப் பெருத்த ஏமாற்றமாயிருந்தது.
“நாளை அட்வான்ஸ் லெவல் ரிசல்ட் வரும். வருவான் தானே, கதைத்துக் கொள்ளலாம்.”
இரவு முழுவதும் கனவில் கிடந்தாள்.
கனவில் முதலிரவுச் சந்தோஷங்களை அன்றே அனுபவித்தாள்.
விடியலை நோக்கி அந்த இரவும் மெல்ல நகர்ந்தது.
அத்தியாயம் இருபத்தி நான்கு
பரீட்சை முடிவு வெளிவந்திருந்தது.
சந்தோஷ ரேகை படர்ந்த முகங்களை உடையவர்களின் போக்கில் பெருமிதம் தென்பட்டது. ஒரு குதூகலம்… புலரும் பொழுதில் பாடும் பூபாளக் களிப்பு மறுகோடியில் ஒதுங்கியபடி எதிலும் ஒட்டாத உணர்வில் சோகம் கொப்பளிக்க நின்றிருக்கும் பெயில் ஆன மாணவர்கள்…
இத்தனைக்கும் மத்தியில் தானே ராஜாவாய் மாணவர் தலைவனாய்… மக்களின் பேராதரவினால் வெற்றியீட்டிய முதலமைச்சர் மாதிரி நவீன் காணப்பட்டான்.
அதே கிராப் தலை….. ஐ லவ் யு பனியன்….. அமெரிக்கா ஸ்டைல் காற்சட்டை….உதட்டில் என்னமாய்ப் புன்னகை.
சென்ற ஆண்டு கிடைத்த தோல்வி….இவ்வாண்டு வெற்றி…. அரசியல்வாதிமாதிரி.
இவர்களின் குதூகலத்தினைத் தூரத்தே ஸ்டாப் ரூமில் இருந்த படியே பார்த்துக் கொண்டிருந்தாள் பிருந்தா.
அவனது வெற்றிக்குத், தானே காரணம் பிருந்தாவின் இதயத்தில் பிடிபடாத சந்தோஷம்.
இந்தக் குதிரை தான் வெல்லும் என்று பணம் கட்டியதும் குதிரை வென்று பணமும் இரட்டிப்பாய்க் கிடைக்குமே! அது மாதிரி சந்தோஷம்.
மெல்ல எழுந்து வாசலுக்கு வந்தாள்.
மாணவர்களை விலக்கிக் கொண்டு அவளிடம் வந்தான் நவீன்.
“வாழ்த்துக்கள் நவீன்”
கைகளை நீட்டினாள் குலுக்கிக் கொள்ள அவனும் கைகளை நீட்டி….. குலுக்கிக் கொண்டான்.
இரு நாட்டு அதிகாரிகள் வந்து குலுக்கிக் கொள்வார்களே. அதுபோல. அவளது வலதுகரம் நவீனது தலையைக் கோதியபடி…
ரொம்ப சந்தோஷம். என் பிரார்த்தனை வீண் போகவில்லை… எனது வாழ்த்துகள் மீண்டும் மீண்டும்”.
மெல்லியதாகக் கன்னத்தில் தட்டி விட்டுக் கொண்டாள்.
“இவ்வளவு தானா? வேறொன்று மில்லையா?” சிரித்தபடி கேட்டான் நவீன்
“என்ன வேண்டும்? கேளும் தருகிறேன்.”
“ஒரு பெண்ணிடமிருந்து விலைமதிக்க முடியாத பரிசு இப்போது எனக்குத் தேவையாயின் அதை உங்களால் ஊகிக்க முடியாதா?”
சிரித்தாள்.
பிறகு சொன்னாள்….
“திருமணத்திற்குப் பிற்பாடு மொத்தமாகத் தருகிறேனே! அதற்குள் என்ன அவசரம்?”
“அட்வான்ஸ் ஏதாச்சும்….” கண்களால் சொல்ல, அவளுக்கு அது விளங்கியிருக்க வேண்டும்.
“வீட்டிற்கும் வாரும் தருகிறேன்”
“உண்மையாக வா?”
“ஏன், நம்பமாட்டீரா?”
“எப்படி நம்புவது?”
“மனதுகள் ஒத்துப் போனபின் நம்பமாட்டீரா? இப்போதே தந்துவிட்டால் வேறு இனிமையாக இருக்காது.”
“ஓ! ஸ்வீட்டுடன் வேறு ஏதாவது வீட்டிற்கு வந்ததும் தரப்போகிறீர்களாக்கும்”
இருவரும் சிரித்தனர். சிறிது நேரம் மௌனம்.
மௌனத்தைக் கலைத்த படியே அவள்,
“உமது எதிர்காலப் படிப்பிற்கு எனது வாழ்த்துக்கள்” என்றதும், “தாங்ஸ்” என்றான்.
அவர்களது சந்தோஷம் நிரந்தரமாக இருந்திட வேண்டுமே.
விதியின் எழுத்தை மாற்ற இந்த மானிடர்களால் முடிந்த காரியமா என்ன?
நவீன் தனது பாக்கட்டிலிருந்து ஒரு துண்டை எடுத்து அவளிடம் நீட்டினான்.
“இது என்ன?” என்று பிருத்தா கேட்டாள்.
“ஓ! கவிதை! யார் எழுதியது?”-இது பிருந்தா.
“ஏன்? நான்தான். நம்பமுடியவில்லையோ?”
“நம்புகிறேன்…..காதல் வயப்பட்டபின் கவிதை தானாக வரும்தானே?”
“படியுங்கள்”
“வாசகராக வேண்டும். கவிஞன் நிலையில்” நவீன் சொன்னான் வாசித்தாள்.
“காதலின் அத்தியாயங்கள் புரியவைத்தது உனது –
விழிகளைப் படித்த போதுதான்
உன் இதயத்தைக் கேட்டேன்
அங்கே –
நீ குடியிருப்பதை இழந்தால்
என்னையே இழப்பது போல –
என்றாய்
இப்போது புரிகிறது?
இதயமே உன்னில் தொலைந்ததாய்!
நீ-
எழுதிக் கொண்டிருக்கும்
காதல் கவிதைகளை முடித்து விடாதே
அங்கே தானே –
எனது ஆத்மாவின் ஓசை கேட்டுக் கொண்டிருக்கிறது!
உன் பேனாவைக் கீழே வைத்துவிட்டால் –
என் இதயத்துடிப்பு நின்று விடுவதாய் –
ஒரு அச்சம்!
எனவே தேவி –
கவிதைகளில் வாழ்வோம்!
-நவீன் 20.02.84
வாசித்து முடிந்ததும் நவீனைப் பார்தாள் – பழுத்த அனுபவாதி யைப் போல், தன்னை விட உயர்ந்தவனாய்த் தோன்றினான் அவன்.
அப்படியே அள்ளி அணைத்து முத்தமிட ஒரு துடிப்பு எழுந்தது. கண்களால் அவனைப் பாராட்டினாள்.
விழிகளின் சந்திப்பில்தானே கதையே ஆரம்பம்.
இங்கே நான்கு விழிகள் மட்டுமென்ன வீரியமற்றவைகளா என்ன?
அவை காதலுக்கு
விழிகளின் அழைப்பிதழ் அல்லவா?
கன்டீனில் நுழைந்தனர்.
ஸ்வீட்ஸ் வந்தது.
இரண்டு பெப்சிக்கு ஆடர் கொடுத்தாள் பிருந்தா. சாப்பிட்டபடி கேட்டாள் –
“உம்மட அம்மாட்ட கேட்டுவிட்டீரா?”
“இல்லை, ஒருவித பயம். இன்று வந்த ரிஸல்ட் பற்றிச் சொல்லி அந்தச் சந்தோஷத்துடன் கேட்டால் பதில் நமக்குச் சாதகமாக வரும். அதனால்தான் நேற்று கேட்கவில்லை.”
தலை குனிந்தபடி பெப்சியை உறிஞ்சினாள் பிருந்தா.
நவீன் கேட்டான் “உங்கட அம்மா….”
“அவ ஒரு மாதிரி ஓம் எண்டிட்டா”
“ஓ உங்கட பக்கம் பச்சை விளக்கு விழுந்திட்டுது…..” கன்டீனில் அவ்வளவு கூட்டமில்லை.
பிருந்தாவே பில்லைக் கட்டினாள்.
இருவரும் கன்டீனை விட்டு வெளி வரும் போது தூரத்தே அதிபர் இவர்களையே பார்த்துக் கொண்டிருப்பதைக் கண்டார்கள். இருவரும் ஒருவரை ஒருவர் பார்த்துக் கொண்டார்கள்.
பிறகு பிருந்தா சொன்னாள். நீர் கிளாஸிற்குப் போம் நான் ஆசிரியர் அறைக்குப் போகிறேன்.
நகர்த்தனர்.
விதி இவர்களைப் பார்த்துச் சிரித்துக் கொண்டு நின்றது.
அத்தியாயம் இருபத்தைந்து
மாலைப் பொழுதில் புகையிரத நிலையத்தில் அதிகம் கூட்டம். நவீனும் அன்று தான் பயணமாகிறான் பல்கலைக்கழகப் படிப்பிற்கு…..
“கடவுள் புண்ணியத்தில் நீ பாசாகிட்டாய்…. கவனமாய்ப் படிச்சுக் குடும்ப மானத்தைக் காப்பாத்திப் போடு” – தாய் கண்ணீரோடு வழியனுப்பியிருந்தாள்.
புகையிரத நிலையத்திற்குத் தாயார் வரவில்லை. வீட்டிலேயே தங்கி விட்டாள். பிருந்தாவை எதிர்பார்த்தான் வரவில்லை. ஏமாற்றம் தான். நெஞ்சில் ஒரு தவிப்பு.
“உம்மை எவ்வளவு விரும்புகிறேன் தெரியுமா? என்னை நல்ல நிலைக்கு அழைத்துச் செல்லும் உமது பிரார்த்தனை, உமது அன்பு என்னால் மறக்க முடியாத ஒன்று. என்னை வழியனுப்ப வருவதாகச் சொல்லிவிட்டு என்னை ஏமாற்றி விடும் எண்ணமோ?”
புகையிரதம் புறப்படத் தயாராகும் பச்சை விளக்கு விழுந்தது. சத்தத்திலிருந்து புகையிரதம் தயாராய் விட்டதை நவீன் உணர்ந்தான்.
“அவள் வராமலேயே விட்டுவிடுவாளோ?
ஐந்து ஆண்டுகள் பிரிந்து
முகங்களை…. பழகிய நினைவுகள்….. பழகிய உணர்வுகளை மறக்க முடியுமா?”
கூவி அழைக்க வேண்டும் என்கிற தவிப்பு….
“பிருந்தா ஐ லவ் யு! உரத்துக் கத்த வேண்டும்…… அது எதிரொலித்து அவளது குரலுடன் இணைந்து என்னிடம் திரும்பி வரவேண்டும்” இப்படி ஒரு எதிர்பார்ப்பு அவனிடம்.
யார் யாரோ வந்தார்கள். வழி அனுப்ப வந்தவர்கள்….. பழகிய நண்பர்கள்…. படிப்பித்த ஆசிரியர்கள்…. இன்னும் இன்னும்….. அவளைத் தவிர.
விழிகள் தேடின.
“கூட்டத்தில் அவள் இருக்கக் கூடாதா?”
புகையிரதத்தின் இறுதிச் சத்தம் ஒங்கி ஒலித்துத் தணிந்தது. இருக்கையில் வந்து அமர்ந்து கொண்டான்.
“இனி அவளைப் பார்க்க முடியாது. சில நிமிடங்களில் புகையிரதம் புறப்பட்டு விடும். மைல் கற்கள் நம்மைப் பிரித்து விடும். காலம் நம்மைத் தூரக் கொண்டு போய் விடும்…காதலுடன் நாங்கள்…”
முன் ஆசனத்தில் உட்கார்ந்திருந்த பெண்மணி ஒரு நாவல் ஒன்றில் மூழ்கியிருந்தாள். “பேச்சுத் தொடுக்கலாமா? சற்று ஆறுதலாக இருக்குமே. ச்சி…..பிருந்தா பார்த்தால் தப்பாகப் புரிந்து கொள்வாள். எல்லாப் பெண்களும் போலவா அவள்? …….வித்தியாசமானவள் சுதந்திர உணர்வுடன் வாழத்துடிப்பவள்…..வட்டத்திற்கு வெளியே வந்து விடத் துடிப்பவள்…. தப்பாய்ப் புரிந்து கொள்வாளா?” மனதை அடக்கிக் கொண்டான்.
அவளே பேச்சுக் கொடுத்தாள்.
புரிந்தது. அவளும் பல்கலைக்கழகம் செல்லுகிறாள் என்று கரைந்தாள்…
நவீனுக்குத் தனது சோகத்தை சொல்லி அழவேண்டும் போல் இருந்தது.
“அந்நியப் பெண்ணிடமா?” வெட்கப்பட்டான்.
அவள் கேட்டாள் “உமது முகத்தில் ஏதோ ஏமாற்றத்தின் சாயல் தெரிகிறதே!”
மௌனமாக இருந்தான்.
கைகள் சேட் பட்டனைச் சரிசெய்து கொண்டிருந்தது.
மீண்டும் கேட்டாள்.
“நவீன்! இருவரும் ஒன்றாகப் பயணம் செல்கிறோம். சற்று ஆறுதலாகப் பேசிக் கொண்டே போவோம்…. பொழுதும் போகுமல்லவா?’
அவள் சொன்னதும் நவீன் சிரித்தான். ‘அப்பொழுதுகளை’ நினைத்துக் கொண்டானோ?
“சொல்ல முடியாவிட்டால் விட்டுவிடுங்கள். இந்த நாவலை நவீன் படித்தீர்களா?”
‘நெஞ்சிருந்தால் நினைவிருக்கும்’
“படிக்கவில்லை” நவீன் சொன்னான்.
“இது ஒரு காதல் கதை. வயது ஒத்துவராத மனது ஒத்துப் போன இரு இதயங்களின் காதல் கதை”
நிமிர்ந்து உட்கார்ந்து கொண்டான் நவீன்.
“வயது ஒத்துவராத மனது ஒத்துப் போன இரு இதயங்களின் காதல் கதை” – உச்சரித்தன அவனது உதடுகள்.
சொன்னான் அவளிடம் ஆரம்பம் முதல் முழுவதையும் கேட்டுக் கொண்டிருந்த அவள் சொன்னாள் –
“இதோ பாருங்கள் நான் கூட ஒருவரை காதல் பண்ணுகிறேன். இருவரும் நன்றாகப் பழகினோம். அவர் கூட என்னை அனுப்ப வருவதாகச் சொல்லி இருந்தார்..வரவில்லை.. எனினும் கவலைப் படவில்லை. புத்தகத்தில் முழ்கிவிட்டேன்.”
“உங்களால் முடிந்திருக்கிறது. என்னால் முடியவில்லை….. நான் அவளது உடலை அல்ல உள்ளத்தை மட்டுமே விரும்புகிறேன்”
“ஏன் நான் மட்டும் உடலை மட்டுமா விரும்பியிருந்தேன்? இல்லவே இல்லை. ஒருவரை ஒருவர் புரிந்து கொள்ளுதலே காதலின் முக்கியத்துவம். அவர் வந்தால் என்ன வராவிட்டால் என்ன காதல் காதல்தான். மீண்டும் சந்திப்போம் என்கிற ஆறுதல். இது ஒரு தற்காலிகப் பிரிவுதான்.”
“என்னால் அந்தத் தற்காலிகப் பிரிவைக் கூடத் தாங்கிக் கொள்ள முடியவில்லையே?”
நவீன் அப்படிச் சொல்லும் போது முகம் வியர்ந்திருந்தது. ஜன்னலைத் திறந்து விட்டபடி அவள் சொன்னாள். “மிஸ்டர் நவீன், இந்தக் குளிர் காற்றைச் சுவாசித்துக் கொள்ளுங்கள் சுகமாக இருக்கும்….இதோ எனது டிரான்சிஸ்டரில் பாட்டுக் கேளுங்கள் தூக்கம் வரும்.’
நவீன் சிரித்தபடி “தூக்கம் வந்தால் கனவு வரும் என்கிற பயம் எனக்கு”
“கனவே ஒரு சுகம் தானே….என்னைப் பொறுத்த வரை…..
நாம் சுதந்திரமாக உலவுவதற்கு… சட்டங்களை உடைப்பதற்கு… வட்டத்தைக் கிழித்து வெளியே வருவதற்கு…. இன்னும் மேலே காதலனுடன் கட்டுப் பாடின்றிச் சல்லாபிப்பதற்கு….”
அவள் சிரித்தாள் நவீனும் சிரித்தான்.
புகையிரதம் தனது நீண்ட பயணத்தைத் தொடங்கி வெகு நேரமாகியிருந்தது.
அத்தியாயம் இருபத்தாறு
படுக்கையில் புரண்டு படுத்தபடி பிருந்தா அழுது கொண்டிருந்தாள். வெகு நேரமாகியும் படுக்கையை விட்டு எழுந்து வெளியே வரவில்லை. தாய் வந்து சென்னாள் – “ஏண்டியம்மா விளக்கும் கூட போடாமல்…. இருண்டு வெகு நேரமாகி விட்டதே…..எழுந்து முகம் கழுவிச் சாமிப்படத்திற்கு விளக்குக் கொளுத்தக் கூடாதா? கிருஷ்ணன் படத்தைத் தூசி தட்டி வைக்கும்படி காலையில் சொன்னேனே. ஏன் செய்யவில்லை.”
பிருந்தா எதுவும் பேசவில்லை.
விளக்கு ஒளிர்ந்தது – தாய் தான் ஏற்றினாள்.
ஜன்னலூடே குளிர்ந்த காற்று வந்து உடலெங்கும் சில்லிடச் செய்தது. திரும்பிப் படுத்தாள்.
தாய் அருகில் வந்து கட்டிலின் விளிம்பில் உட்கார்ந்து கொண்டு பிருந்தாவின் நெற்றியில் கைவைத்துப் பார்த்தாள் சுட்டது….தாய்க்குத் திக்கென்றது.
மனமோ பற்றி எரிந்தது. உடல் சுடும் தானே?
அவளை ஆதரவாகப் பற்றி உட்காரவைத்துத் தன்னுடன் அணைத்துக்கொண்டு அவளது விழிகளிலிருந்து வழிந்த கண்ணீரைத் துடைத்து விட்டாள். பின்னர் கூந்தலைச் சரிப்படுத்திப் பின்னி விட்டாள்.
ம்…. எழுந்திரம்மா……சுடுத்தண்ணி போட்டுத்தாரன் முகம் கழுவி விட்டு வா! பிருந்தா தாயைப் பார்த்துக் கொண்டிருந்தாள்.
அப்பாவைப் பிணமாகத் தோளில் கொண்டு வந்து நான்கு பேர் வைத்த போதும், பிறகு ஈமக்கிரியைகளுக்காக அவரைத் தூக்கிக் கொண்டு வாசலுக்குப் போனபோதும், முப்பது நாளும் கண்ணீரும் கம்பலையுமாகக் கிடந்த போதும் ஆறுதல் படுத்திய பிருந்தாவிற்கு இப்போது அதே அம்மா ஆறுதல் சொல்லும் நிலை…..அதுதான் அனுபவ முதிர்ச்சியோ?
“புத்தனாகி விட
போதிமரம் தேவையில்லை
சிறு கொடி கூட போதும்
எந்தச் சித்தார்த்தனும் ஞானியாகி விட”
நவீனின் கவிதை வரிகளை நினைத்துப் பார்த்தாள் பிருந்தா…. “நவீன் சாரி….. உம்மை நான் ஏமாற்றிவிட்டேன்.” இதயம் இரத்தக் கண்ணீர் வடித்தது.
“வழியனுப்ப வருவீர்கள் தானே?” – நவீன் கேட்டபோது,
“நிச்சயம்மாக வருவேன். எத்தனை தடைகள் வரினும் நிச்சயம் வருவேன்” என்று சொன்ன பிருந்தாவை எவ்வளவு தூரம் எதிர் பார்த்து இருந்தான் நவீன். பிருந்தா ஏமாற்றித்தான் விட்டாள். அழுகை மீண்டும் வர….. அழுதாள்.
எழுந்து சென்று முகம் கழுவிவிட்டு வந்தாள்.
சுடச்சுடத் தேனீர் தாய்தர வாங்கி உதட்டில் பொருத்தினாள். தொண்டைக் குழிக்குள் இறங்கியதும் ஒரு ஆறுதல்…. கதிரையில் உட்கார்ந்து கொண்டாள்.
சுவரில் நவீனின் படங்கள்…. நாடகப் போட்டியில் வெற்றியீட்டிப் பரிசுப் கோப்பையுடன்…. பேச்சுப்போட்டியில் முதலாமிடம் பெற்றுத் தங்கக் கேடயத்துடன்…..
திருக்குறள் மனைப் போட்டியில்….சமய பாடப் பரீட்சையில் சித்தி பெற்று பரிசில்களுடன் நவீன்-
“இந்த முன்னேற்றத்திற்கு நீங்கள்தானே காரணம் என்றால் இவைகளை மறக்கவே முடியாது” – நவீன் சொல்ல,
பிருந்தா சிரித்தபடி வாழ்த்துத் தெரிவிக்க, அவன் கேட்டான் – “வாழ்த்து மட்டுமா? பரிசு ஒன்றும் இல்லையா?” பிருந்தாவும் ஹோட்டலுக்கு அழைத்துச் சென்று சுவீட்ஸ் வாங்கித் தந்தாள்,
“இந்த ஸ்வீட்ஸ் தருகின்ற இனிப்பை விட உங்களுடன் இணைந்திருப்பது இனிமை தருகிறது!”
பிருந்தா செல்லமாகி தலையில் குட்டினாள். இருவரும் சேர்ந்து சிரித்தனர். இப்போது படத்திலிருந்து நவீன் சிரித்தபடி இவளையே நோக்கிய வண்ணம்…. பிருந்தா கதிரை விளிம்பில் சரிந்து கொண்டாள். “இந்நேரம் நவீன் போய் விட்டிருப்பான்! என்னை நினைத்துக் கொண்டானோ?”
வேதனைப்பட்டாள்…..
“தனது நீண்ட பயணத்தைப் புகையிரதம் ஆரம்பிக்க…. தொடர… நவீனும் ஏமாற்றத்துடன் தூங்கிப் போவான். கனவு வரும். நிச்சயமாய் கனவு வரும் என்னுடன் பழகிய அனுபவங்களை திரைப்படமாக்கித் கனவு தரும். என்னுடன் காதலில் திக்குமுக்காடிப் போவான். டிக்கட் பரிசோதக்கர் வந்து உலுப்பும் வரை கனவு தொடரும்…”
சோகத்துடன் சிரிப்பு வர பிருந்தா சிரித்தாள். கண்கள் மட்டும் கண்ணீரை வடித்துக் கன்னத்தை நனைத்துக் கொண்டிருந்தன.
தாய் வந்து பார்த்து விட்டுப் போனாள். சமையலறையிலிருந்து இரவுச் சாப்பாட்டிற்கான ஆயத்தங்களில் மூழ்கி விட்டாள் தாயார். தாயக்கு அவசரம். பக்கத்து வீட்டில் புதுத்தமிழ்ப் படம் வீடியோவில் காட்டுகிறார்களாம். மகளின் சோகம் மறந்து போயிற்றே அவளுக்கு!
நேரம் சென்று கொண்டிருந்தது.
தாயார் சாப்பாட்டைத் தயார் செய்து விட்டு போய் விட்டாள். பிருந்தா தனிமையில் விடப்பட்டிருந்தாள். அப்போதும் நவீன் அவளைப் பார்த்துச் சிரித்தபடி படத்தில் தெரிந்தான்.
“நவீன் மன்னித்துவிடும். சொறி. நான் வரமுடியவில்லை. ஏனென்றால், ஏனென்றால் …அது…. என்னுள்ளே புதைந்து போகட்டும் அந்த ரகசியம்….. ஓ நவீன்….” அடக்கிப் பார்த்தாள். முடியவில்லை. சில சமயம் குதூகலம் கரையை உடைக்கும். பின்பு சோகம் வந்து விட்டாலோ காயப்படுத்திச் செல்லும். இது இயல்பு. பிருந்தாவும் அதே நிலைமையில் தான் இருந்தாள்.
நவீனின் தாயார் வந்து அவளிடம் காலில் வீழ்ந்து கெஞ்சிக் கேட்டுச் சத்தியமும் வாங்கிச் சென்றதை நினைத்துப் பார்த்தாள். அன்று காலை நடந்ததை நினைவு படுத்திப் பார்த்தாள். சம்பவங்கள் கோர்வைப் படுத்தப்பட்டுத் தயாராய் நின்றன.
அன்று காலை ஒன்பது மணியிருக்கும்.
தலையிடி என்று சிறு விடுப்பு எடுத்து விட்டு நின்று விட்டாள் பிருந்தா. நவீனின் பயணத்திற்கு வழி அனுப்பப் போகவும் வேண்டும் என்கிறதும் அவள் பாடசாலை போகததிற்கு ஒரு காரணம்.
குளித்து விட்டுக் கூந்தலை வாரிக் கொண்டை போட்டுக் கொண்டு பொட்டுத் துலங்கக் கண்ணடி முன் தன் அழகைப் பார்த்துக் கொண்டாள். இந்த அழகுக்குச் சொந்தக்காரன் வந்துவிட்டால்…. முழுமையாக அர்ப்பணிக்கும் நேரம் கூடத்தான் வந்துவிட்டது. காதலாகக் கனிந்து தீர்மானமும் ஆகிய பின் ஒருவித சந்தோசம், குதூகலம் வருமே. அதை விபரிக்க வார்த்தைகளே வராது. சாப்பிட்டுக் கைகழுவிவிட்டுத் துண்டால் கைகளைத் துடைத்துக் கொண்டு வந்த போது தான் நவீனின் தாயார் வந்திருந்தாள்.
“வாருங்கள் ஆன்டி”
பிருந்தாதான் வரவேற்றாள்.
தாயார் மார்க்கெட்டுக்குப் போயிருந்ததால் பிருந்தாமட்டும் தனியாகவே இருந்தாள். இதுவே நவீனின் தாய்க்குப் பேசுவதற்குச் சாதகமாகி விட்டது. பச்சைக் கொடி காட்டியது மாதிரி அவளுக்குப் புலப்பட்டதோ?
“உட்காருங்கள்”
பிளாஸ்கில் இருந்த தேனீரைக் கப்பில் ஊற்றிக் கொடுத்து விட்டு தானும் தரையில் உட்கார்ந்து கொண்டாள்.
யார் ஆரம்பிப்பது? எப்படி ஆரம்பிப்பது?
சிறிது மௌனம். மௌத்தை நவீனின் அம்மாதான் கிழித்தாள். “அம்மா பிருந்தா….” நிறுத்தி, பிருந்தாவைப் பார்த்துவிட்டுத் தலையைத் தாழ்த்திக் கொண்டு தொடர்ந்தாள் –
“நீயும் நவீனும் பழகியது, காதல் நிலைக்குத் தள்ளப்பட்டது, திருமணம் செய்யவும் துணிந்தது, நவீன் சொல்லித்தான் தெரிந்தது. எனக்குள் அதிர்ச்சிதான். நவீனை உன்னுடன் பழகி விட்டது ஒரு ஆசிரிய மாணவ ஸ்தானத்தில் தான். இருவரும் அதுக்கும் மேலாக நாங்கள் மனிதர்கள் என்பதை நிரூபித்து விட்டீர்கள். என்னிடம் சொல்லி எனது பச்சைக் கொடிக்கு, சிக்கனலுக்கு எதிர் பார்த்த நவீனுக்குப் பதில் எதுவும் கூறமுடியாமல் தவித்த தவிப்பு….அம்மா பிருந்தா! திருமணம் என்பது இரு இதயங்களின் இடம் பெயர்ச்சி ஒத்துக் கொள்கிறேன்…..”
பிருந்தா இமை கெட்டாது பார்த்துக் கொண்டிருந்தாள்.
“வயது அந்தஸ்து-சாதி-சமுதாயம் என்பது பாராதது காதல் ஒன்றுதான். என் மகனின் வாழ்விலாவது ஒளி பிறக்கும் என எதிர் பார்த்தேன். தகப்பன் ஒரு ஓடுகாலி….மகனும் அந்த நிலைக்குத் தள்ளப்படக் கூடாது என எதிர் பார்த்துத் தான் உன்னிடம் யாசிக்க வந்திருக்கிறேன்….”
நிறுத்திவிட்டு மூச்சை. நன்றாக உள் இழுத்து வெளியே விட்டாள். பிருந்தாவைப் பார்த்தாள்
“என்ன சிலையான முகம்…. ஆனாலும் என்னால் மருமகளாக ஒத்துக்க சமுதாயச் சங்கிலி தடையாக உள்ளது.” வெளியே வாகனங்கள் வேகத்துடன் வந்து மோதிய சத்தம் உள்ளே கேட்டது.
இருவரும் எழுந்து கொள்ளவில்லை.
தாயார் தொடர்ந்தாள்.
“நவீன் படித்துப் பட்டம் பெற்று ஆளாகி விட்டால் நமது குடும்ப மானம் நிலை நிறுத்தப் படலாம் என எதிர்பார்க்கிறேன். திருமணத்தால் அவன் கல்வி தடைப்பட்டு விட்டால் விளைவு பாரதூரமாகலாம். எனது கனவுகள் கூடச் சிதைந்து போகலாம். எனவே தாயே! நவீனை மறந்துவிடு…அவனுக்கு ஆசிகூறி மாணவனாகவே வாழ்த்துக் கூறி வழி அனுப்பு – உன் இதயத்திலிருந்து கூட. நமது குடும்பங்களுக்கிடையே பகை வரக்கூடாதம்மா”
இப்போது பிருந்தா நிமிர்ந்து உட்கார்ந்தாள். அந்தத் தாயின் விழிகளில் கண்ணீர்….. “கெஞ்சுகிற ஒரு தாயின் உணர்வுகளை மிதித்து கொண்டா நமது திருமணம்?” நினைத்துப் பார்த்தாள் ஒரு கணம். எழுந்து கொண்டாள்.
ஜன்னல் பக்கம் சென்று கதவுகளைத் திறந்து விட்டாள். சிட்டுக்குருவிகள் சிறகடித்துப் பறந்தன.
பக்கத்து வீட்டு மாமியின் வளர்க்கும் கிளி ஏதோ பேசுவது கேட்டது. மெதுவாகத் திரும்பிக் கேட்டாள்.
“இப்போது நான் என்ன செய்ய வேண்டும்?”
‘அப்பாடா’ என்பது போல் நிம்மதிப் பெருமூச்சு விடுவது மாதிரி உணர்வு அந்தத் தாயிடம்.
“தந்தை ஒரு ஒடுகாலி என்கிற இழி சொல் அழிய வேண்டும். மகனாவது படித்து ஆளாகிக் குடும்ப மானத்தைக் காப்பாற்ற வேண்டும்.”
“அதற்கு?”
“நவீன் பயணமாகும் போது நீ போகாதே…. பிறகு ஐந்து ஆண்டுகளில் மறந்தே போய் விடுவான்.”
பிருந்தா நினைத்தாள் – “எவ்வளவு சுயநலவாதிகள்… மறந்து விடு என்று தாயே சொல்வது…மறந்து விட்டு மட்டும் இங்கே வாழ்வா போவது? அவர்களது மானம் காப்பாற்றப்பட எனது மறத்தலா அவசியம்? ஒன்றை அழித்துத்தான இன்னொன்று உருவாகிறது? ஐந்து ஆண்டுகளில் அவன் மறந்து விடுவானாம் என்று சொல்ல அந்தத் தாயால் எப்படி முடிகிறது? அவளும் ஒரு பெண்ணல்லவா? நான் வடிக்கின்ற கண்ணீர் யாருக்குப் புரியப் போகிறது?”
கேட்டு விட்டாள், “அம்மா! ஐந்தாண்டுகளில் மறந்து விடுவான் – பால்யக் கனவாய்? அது எப்படிச் சாத்தியமாகும்? அப்படி நவீன் மறக்கவில்லையானால்?”
தாய் சொன்னாள் “படிப்பு – பழக்கம் – பட்டம் – பதவி – இவை நிச்சயம் அவனை மாற்றும்.” இப்படிச் சொன்ன அவள், தாயின் நிலையிலிருந்து இறங்கி விட்டதாய் பிருந்தா உணர்ந்தாள்.
“என்னால் முடியுமா?” தன்னையே கேட்டாள் பிருந்தா.
தாயின் கண்ணீர் கண் முன்னால் தெரிந்தது.
“தன் மகளின் வாழ்க்கைத் துணைபற்றித் தெரிந்தும் வாழ்த்துத் தெரிவித்த என்னம்மா எங்கே – என் மகனை மறந்து விடு என்கிற இந்தத்தாய் எங்கே – எங்கே சுயநலம்? எது பொதுநலம்?” எரிச்சல் கூட பிருந்தாவிற்கு ஏற்பட்டது.
கண்ணாடி முன் வந்து நின்றாள்.
‘நவீன் எவ்வளவு ஆசையுடன் வேண்டுகோள் விடுத்தான் – வழி அனுப்ப வரவேண்டும் எதிர்பார்த்திருப்பேன்’ என்று.
எனி எந்த முகத்துடன் அவனின் முகத்தில் விழிப்பேன்?
“என்னை ஏமாற்றி விடாதீர்கள்”
“எத்தனை கனவுகள்….கற்பனைகள்…… எல்லாமே காகிதப் பதிவுகள் தானா?”
விழிகளில் பொங்கிய கண்ணீரைத் துடைத்துவிட்டு மனதைத் திடப்படுத்திக் கொண்டாள்.
அப்போது –
நவீனின் தாயார் மிக அருகில் வந்து நிற்பதை உணர்ந்தாள். திரும்பிப் பார்த்தாள்.
“உனது முடிவு தான் என்ன? உனது காலில் வீழ்ந்து கெஞ்சி….”
காலில் விழுப்போன அந்தத் தாயைத் தூக்கி நிறுத்திச் சொன்னாள்.
“உங்கள் ஆசைப்படியே நடக்கட்டும்.”
அப்போது தான் நவீனின் தாயார் நிம்மதிப் பெருமூச்சு விட்டாள். படியிறங்கி வீதிகளில் மறையும் வரை பிருந்தா அந்தத் தாயையே பார்த்துக் கொண்டிருந்தாள்.
“முடிவானது…முடிந்த கதை தொடரக் கூடாது…!
நவீனின் எதிர்காலமே எனது நோக்கமாகும். எனது மாணவன் நவீன் என்கிற பெருமையே எனக்குப் போதும். நான் ஏமாற்றுக்காரி என்று நவீன் நினைத்தாலும் பரவாயில்லை. அவனின் தாயின் கனவு அழிந்துவிட நான் காரணமாக மாட்டேன். என்னிடம் சத்தியம் வாங்கிப் போன அந்தத் தாயின் கனவுகள் நனவாகும். என்னால் அது நனவாகட்டும் என்கிற பெருமிதமே போதும். நவீனிடம் சொல்லக் கூடாது தாய் வாங்கிக் கொண்ட சத்தியம் பற்றி! வழி அனுப்ப நான் வருவேன் என்று ஏமாற்தோடு போகட்டும்… பட்டம் படிப்பு பதவி சூழ்நிலை மாற்றம் அவனை மாற்றட்டும். என்னில் மாற்றம் வருமா?”
குலுங்கிக் குலுங்கி அழுதாள்…..தாய் வரும் வரை. அந்தப் படத்தில் அப்போதும் அதே சிரிப்புடன் நவீன்…..
“பழகிய நட்பு கெட்ட கனவாகிப் போகுமா?”
“பிருந்தா நான் உம்மைக் காதலிக்கிறேன்” அழுத புன்னகையும்….இதழ் குவித்து…
“நவீன்!….. மன்னியுங்கள், உங்களை ஏமாற்றியதற்கு. ஒரு தாயின் கனவை நனவாக்கிக் கொள்ள இந்தப் பெண்ணின் சிறு முயற்சி இது. தியாகம் என்றாலும் ஆகட்டும்.”
தாய் வந்து சொன்னாள் —
“நல்ல படம் பாரதிராஜா டைரஷன் பண்ணியது…என்ன மாதிரி கதை அப்பப்பா புல்லரிக்கிறது.”
தாயைப் பார்த்தால் சிரிப்புத்தான் வரும்.
வேதனையிலும் சிரிக்க முயன்றாள் பிருந்தா.
“அங்கே என்னவென்றால் ஓடிப்போன கணவனால் ஏற்பட்ட களங்கத்தை நினைத்து நினைத்து அழும் தாய்! மகனின் எதிர் காலம் ஒன்றே வாழ்வின் லட்சியமாய்க் கொண்ட தாய்! தனது எதிர்காலம் ஒன்றிற்கான படிக்கட்டுகளை மிதித்தபடி பயணமாகிய அவனது மகன்! அந்த மகளைக் காதலித்த நான்! எனக்கொரு அம்மா – மகளின் துயரத்தை விடப் படக் கதைநாயகியின் துயரம் அவளுக்கு உசத்தி! இவர்களை யெல்லாம் தீயிட்டுப் பொசுக்கி விடவேண்டும்”- எரிச்சல் வந்தது.
விம்மித் தணிந்தது மார்பகம்.
“ஒரு நிஜத்தின் தரிசனத்தில் எரிந்து கொண்டிருக்கும் எனது சோகங்களை யார்தான் புரிந்து கொள்ளப் போகிறார்கள்? நவீன் அருகில் இருந்திருந்தால் சோகங்களைப் பகிர்ந்து கொண்டிருக்கலாம். சோகங்கள் எழும் போது நிச்சயம் நட்புக்கள் தேவை – பங்கிட்டுக் கொள்வதற்கு…”
உள்ளே இருந்தால் இருதயம் வெடித்துப் போய்விடும் என்று நினைத்துக் கதவுகளைத் தாண்டி படிகளில் இறங்கி வீதியில் கால்களைப் பதித்தாள்.
வாகனங்கள் அங்கும் இங்கும் ஓடிக் கொண்டிருந்தன.
உயரே விமானம் ஒன்று தாழ்ந்து ஏதோ நோட்டம் விட்டுப் போவது போல் பறந்து போனது.
நடந்தபடி புகையிரத நிலைய மேடைக்கு வந்தாள்.
அங்கு யாருமே இருக்கவில்லை. வெறிச் சோடி இருந்தது.
தூரத்தே ஒரிருவர் தூங்கிவழிந்த வண்ணம் இருந்தனர்.
“இங்கே தானே எவ்வளவு ஆசையுடன் நவீன் காத்துக் கொண்டிருந்திருப்பான். நான் வராதபோது ஏமாற்றத்துடன் பயணமாகி இருப்பான்.”
“நான் எவ்வளவு ஏமாற்றுக்காரி…. யாரோ ஒருத்தியின் கனவுக்காகச் சத்தியம் செய்துவிட்டு எனது கனவை எரிந்து விட்டு…..” கண்கள் பனித்தன.
குளிர்ந்த காற்று வந்து காதோரம் ஏதோ ரகசியம் பேசிச் சென்றது. நெற்றியில் படர்ந்த தலைமயிரைப் பின்னால் தள்ளி விட்டபடி…
“காத்திருக்கையிலும் ஒரு சுகம் உள்ளது…. எனினும் இது காத்திருக்கையில்லையே …… கனவுகளை விலை கூறி வியாபாரம் செய்து விட்ட வியாபாரியைப் போல…..எல்லாமே இழுந்து போனநிலை.”
புகையிரதம் ஒன்று வந்து நின்று விட்டுப் புறப்பட்டது. பிருந்தா புகையிரதம் சென்று மறையும்வரை பார்த்துக் கொண்டு நின்றாள்.
இப்படித்தான் நவீனையும் சுமந்து புகையிரதம் சென்றிருக்கும் என்கிற நினைவுடன்……
நீண்ட நேரம் நின்றாள்.
முற்றும்.
– ஸ்நேகம் (நாவல்), முதற் பதிப்பு: சித்திரை 1999, காந்தளகம், யாழ்ப்பாணம்.