கதையாசிரியர்:
கதை வகை: தொடர்கதை
கதைத்தொகுப்பு: காதல்
கதைப்பதிவு: September 26, 2024
பார்வையிட்டோர்: 1,597 
 
 

(1999ல் வெளியான நாவல், ஸ்கேன் செய்யப்பட்ட படக்கோப்பிலிருந்து எளிதாக படிக்கக்கூடிய உரையாக மாற்றியுள்ளோம்)

அத்தியாயம் 11-15 | அத்தியாயம் 16-20 | அத்தியாயம் 21-26

அத்தியாயம் பதினாறு

வாசலில் கோலிங் பெல்லை அழுத்தியதும் பிருந்தாதான் திறந்தாள். நவீன் புன்னகைத்தான். 

பேசவில்லை. 

தன் பாட்டி கிச்சன் பக்கம் போய் விட்டாள். 

தொடர்ந்தான். 

தேநீர் தயாரிப்பதில் மும்முரமாக இருந்ததைக் கண்டு நிலைமையை உணர்ந்து கொண்டான் நவீன். ஏதோ ஒன்று நடந்து விட்டது. 

சிறிது மௌன இடைவெளிக்கு பிறகு நவீன் கேட்டான் 

“என்ன நடந்தது டீச்சர்?” 

பதில் வரவில்லை. 

பல நாட்கள் பழகியபின் திடீரென்று இப்படி கோபப்பட்டால் நவீனுக்கு ஏதோ மாதிரி இருந்தது. 

“என் மீது கோபமா?” 

மீண்டும் மௌனம். 

“ஓ! டீச்சர் பூக்களால் எறிந்து கொல்கிறீர்களா? 

மௌனத் தீயில் சுட்டுக் கொல்கிறீர்களா?” 

கேட்கவில்லை…… 

“நான் பிழை விட்டிருந்தால் மன்னியுங்கோ டீச்சர்….” 

முடிக்க வில்லை – 

நிமிர்ந்து பார்த்தாள். 

அப்பார்வையைத் தாக்குப் பிடிக்க அவனால் முடியவில்லை. பதறிப் போனான். தலைகுனிந்து கொண்டான். கணப் பொழுதில் அவளது வலதுகரம் நவீனின் கன்னத்தில் பதிந்து திரும்பியது. நவீன் நிச்சயமாக எதிர்பார்க்கவில்லை. தடுமாறிப் போனான். கண்கள் கலங்கின ஏதோ சொல்லத் துடித்தான். முடியவில்லை ஏதோ ஒன்று தடுத்தது. 

கண்கள் நீர் பெருக்கியது. முதல் முறையாக அழுதான். பிருந்தா அவனைத்தள்ளி விட்டு குசினிக் கதவைச் சாத்திக் கொண்டாள். 

உள்ளே பிருந்தா குமுறிக்குமுறி அழுதது கேட்டது 

“ஐயோ ஏன் அழுகிறீங்க டீச்சர்” 

“என் குரு நாதர் நீங்கள். உங்களுக்கும் எனக்கும் ஏற்பட்ட பிணைப்பு…எனக்கென்று ஒன்றென்றால் நீங்களும்… ஏன் உங்களை என்னால் புரிந்து கொள்ள முடியவில்லையே. நீங்கள் அடித்ததை விட நீங்கள் அழும் போது தான் எனக்கு வலிக்கிறது.” 

நேரம் கடந்தது. 

அவளே கதவைத் திறந்து வந்தாள். 

பார்வைகள் மோதின. பின் தாழ்ந்து கொண்டன. 

“ஐ ஆம் சொறி நவீன்” 

“உங்களது இன்றைய கோபத்திற்கான காரணம் யாது?” 

“உமக்கே தெரியும். உம்மிட படிப்பில் முழுக்க கவனம் எடுத்து படிப்பீர். நீர் பெயில் ஆனதும் எனக்குத் தாங்க முடியவில்லை.” 

“ஒரு மாணவன் பாசாகிறதும் பெயிலாகிறதும் அவரவர் கையில் உள்ளது என்பது வாஸ்தம் தான். அதையும் மீறி பெயிலாயிடும் போது கோபப்பட்டு என்ன செய்வது.” 

“இருந்தும் உமது தோல்வியை என்னால் தாங்க முடியவில்லையே நவீன்” 

அவளை ஊடுருவிப் பார்த்தான். 

“ஏன்” 

‘ஏன்’ என்று கேட்டதும் அதை அவள் எதிர்பார்க்கவில்லை.

“உங்க பாஷையில் வெறும் அக்கறை என்பது தான் சரியா”? நவீன் தொடர்ந்தான். 

“என்னால் கூட சரியாகப் புரிந்து கொள்ளமுடியவில்லை உங்களை,” 

சுவரில் சாய்த்து நின்றவள் மெதுவாக நடந்து ஷோபாவில் உட்கார்ந்து கொண்டாள். 

அப்போதும் அவனது கன்னம் சிவந்திருந்தது. 

“நவீன், நம்மைப் பற்றி ஜனங்கள் என்ன மாதிரி எல்லாம் கற்பனை பண்ணி காது மூக்கு வைத்துக் கதைக்கிறது தெரியுமா?” 

“தெரியும். இருந்தும் நமது நட்பின் இறுக்கம் மேலும் மேலும் வலுப்பெற்று வந்துள்ளது என்பதற்கு உங்களது அடியே சாட்சி” 

அருகில் வந்து அமர்ந்து கொண்டான். 

“என்னால் உமது படிப்பு, வாழ்வு பாதிப்பதை நான் விரும்ப வில்லை நவீன்” 

“உங்கள் தொடர்பால் தான் எனது படிப்பு பாழாகிற்று என நீங்கள் கருதுகிறீர்களா?” நவீன் கேட்டான். 

“…அப்படித்தான் எல்லோரும் கதைக்கிறார்கள்” 

“அதிபர் கூட என்னை நேரடியாகக் கேட்டதும் என்னால் ஆத்திரப்படாமல் இருக்க முடியவில்லை…அதுதான்.” 

“அவர் சொன்னார் என்பதற்காக நீங்கள் ஆத்திரப் பட்டீர்களாயின் சொல்லுங்கள் டீச்சர், நீங்கள் என்னை விரும்புகிறீர்களா?” இந்தக் கேள்வியை அவனிடமிருந்து அவள் எதிர்பார்க்கவில்லை. மௌனமாகி விட்டாள். 

சிறிய மௌன இடைவேளையை நவீன் உடைத்தான். 

“என்னால் கூட சொல்ல முடியவில்லை பாருங்கள் – டீச்சர் வெறும் அக்கறை தான். அதை என்னால் கூட என்னை புரிந்து கொள்ள முடியவில்லை பாருங்கள்….

இதில் தான் நாம் ஒன்று படுகிறோம்”. 

“இதைக் காதல் என்கிறீரா?” 

“என்னாலை சொல்ல முடியவில்லை ஆனால் எனக்குத் தெரியும் இருவரும் ஒருவரை ஒருவர் அளவுக்கு மீறி விரும்புகிறோம் என்பது எனக்குத் தெரியும்…” 

எதுவுமே பேசாமல் இருந்தாள். 

“நீங்கள் உண்மையில் விரும்புகிறீர்களா என்பதை ஏன் நீங்கள் மறுபரிசீலனை செய்யக் கூடாது….?” 

“மறு பரிசீலனை மூலம் சரியான தீர்ப்பு இதற்குக் கிடைக்கும் என நம்புகிறீரா?” 

“நிச்சயமாக உங்களது வெறும் அக்கறைக்கு விடை கிடைக்கும். என்றலும் ஒரு பாதை வகுக்க இது உதவும்”. 

“எனக்கு விளங்கேல்லை” 

“ஏ லெவல் சோதனையில் தான் பெயில். வாழ்க்கைச் சோதனைக்கு நீங்கள் விடை தந்தால்… பாஸ் பண்ண முடியு மில்லையா?” 

நிமிர்ந்து உட்கார்ந்தாள் 

“வயது, காமம் இவைகளுக்கப்பாற்பட்டது தான் உண்மையான அன்பு, காதல், நமக்குள் புரியாத தவிப்புக்கு விடை கிடைத்தது மாதிரி இருக்கும்.” 

“என்ன சொல்கிறீர்கள்?” 

“மனதுகள் ஒத்துழைத்தால் மணமேடை தான் பாக்கி என்கிறேன்” 

திடீரென எழுந்து கொண்டாள். 

“முடியாது நவீன்” 

“பறந்த பறவை ஏன் மீண்டும் சிறகுகளை முறித்துக் கொண்டு அடைபட்டது மாதிரி ஒரு தவிப்பு?” 

-சுவரில் பல்லி கத்தியது. 

“என்னால் உமது படிப்பு நாசமானது மாதிரி உமது வாழ்க்கையையும் நாசமாக்க மாட்டேன்” 

“யார் சொன்னது வாழ்க்கையை நாசமாக்க?” 

“நாங்கள் இருவரும் எங்களுக்குள் உண்மையைத் தேடவேண்டும் அதைச் செய்வம். அப்ப பதில் தெரியும்” 

போவதற்கு வாசல் பக்கம் போனான். 

கதவைத் திறந்தபடி திரும்பிச் சொன்னான், 

“எங்கள் இருவரின் தனித்தனி வாழ்க்கையை மட்டுமல்ல எங்கள் காதலையும்…” 

சென்று விட்டான். 

அதே நேரம் இருட்டில் இருந்தவள் தாயின் குரல் கேட்டு. எழுந்து லைட்டைப் போட்டாள். டீ.வியைப் போடவோ ரேடியோவைப் போடவோ மனமில்லாதவளாய் மெதுவாகக் கிணற்றடி நோக்கிப் போனாள். 

தாய் அவளையே பார்த்துக் கொண்டு நின்றாள். 

அத்தியாயம் பதினேழு 

அன்றும் வழமை போலவே கல்லூரி தொடங்கிற்று. வழிபாடு, பேச்சு இத்தியாதி இத்தியாதியான தொடர்களின் பின் வகுப்புகளை அடைந்தனர் மாணவர்கள். 

ஒரு மாத மெடிக்கல் லீவிற்குப் பின் அன்று தான் வந்திருந்தாள். வகுப்பிற்கு வந்ததும் நவீனின் வரவு இல்லாதது வெறுமையைத் தந்தது. “சோதனை பெயில் என்றால் திரும்பி ஒரு வருஷம் படிச்சு எடுக்கலாம் தானே நவீன். வரேல்லை” நினைத்துக் கொண்டாள். 

பாடத்தை ஆரம்பித்தாள். 

அன்று அந்த வகுப்புக்கு ஆங்கில இலக்கியப் பாடமாதலால் இலக்கியப் புத்தகத்திலிருந்தது ஒரு கதையை எடுத்து விளக்கினாள். ரோமியோ + ஜூலியட் காதல் சோகம் ஆங்கில உச்சரிப்புகள் மாணவர்களிடம் சரியாகச் சென்றடைய முயற்சித்து வென்றடைந்து விட்டாள். 

அதிபர் அழைத்ததை பியோன் வந்து சொன்னான். 

சென்றாள். 

சொன்னார் அதிபர் 

“டீச்சர்… நவீனும் மற்ற நான்கு பெடியளும் பெயில் ஆனதால் வெட்கத்தில் வராமலேயே விட்டினம்” 

கதிரையில் இருந்து கொண்டாள். 

அதிபரின் தலைக்கு நேரே பின்னால் நமது நாட்டு ஜனாதிபதியின் படம் பெரிதாகத் தோன்றியது. அரசாங்க ஆதரவாளரான அதிபர் படத்தினைப் பெரிதாக்கித் தனது ஆதரவைக் காட்டிக் கொண்டார் போலும். 

பிருந்தா நினைத்தாள். 

அருகே அலுமாரியில் பலவித வடிவங்களிலான வெற்றிக் கிண்ணங்களிலும் புத்தகங்களிலும் பைல்களிலும் கண்கள் பதிந்து பின் அதிபரை நோக்கின. 

மீண்டும் அவரே தொடர்ந்தார், 

“டீச்சர், நவீன் உங்களுக்குத் தெரிந்த மாணவன் ஆதலால் அவனிட்ட நீங்களே கேட்டு அவனைத் தொடர்ந்து படிக்கச் செய்யுங்களேன். நல்ல பையன். படிக்காமல் விட்டால் அவனது எதிர்காலம் பாழாய்ப் போகும்”. 

“இவர் ஏன் என்னைக் கேட்க வேண்டும். தானே நேரடியாகக் கேட்டிருக்கலாம் தானே” பிருந்தாவிற்கு எரிச்சலாக இருந்தது. 

“ஏதோ இந்த முறை பெயில் ஆயிட்டான். அடுத்த முறையாவது….” 

குறுக்கிட்டாள் 

“ஏன் சேர்! நீங்களே கேட்டிருக்கலாம் தானே, அதிபர் என்கிற தோரனையில்”. 

“ஓ, கேட்டிருக்கலாம் தான். இருந்தாலும் நீங்களும் நானும் அவனுடன் பழகும் முறை வித்தியாசமானது தானே!” 

நிமிர்ந்து கொண்டாள். 

“பழகும் விதம் வித்தியாசமானது என்றால்…?” 

“பிழையாக அர்த்தம் பண்ணாதீங்கள்! உங்களைக் கேட்டுப்பார்க்கலாம் என நினைத்தேன் உங்களுக்கு விருப்ப மில்லாட்டி விட்டு விடுங்கோ” – தொடர்ந்தார், “எல்லோரும் விரும்பீனம் நீங்கள் கேட்கலாம் என்று – நீங்கள் கூட நவீனைக் காதல் பண்ணுகிறீர்கள் என்று…” 

கண்கள் சிவந்தன! கன்னம் கோபத்தால் எரிந்தது. “யார் அப்படிச் சொன்னது” பொரிந்தாள். 

அவளை அந்தக் கோலத்தில் முன்பு காணவில்லை. 

“கோபப்படாதேயுங்கோ பிருந்தா, எல்லாரும் கதைக்கினம். ஆறுதலா இருங்கோ அவ்வளவுதான்!” முடித்தார் அதிபர்.

மேல் மூச்சு கீழ்மூச்சு வாங்கியது, தலைவலித்தது. 

எதுவுமே பேசாது எழுந்து கொண்டாள். 

அதிபர் கூப்பிட்டதை எங்கே அவள் பொருட்படுத்தப் போகிறாள்? 

அதிபருக்கு உள்ளூரே பயம்…”இதனால் விபரீதம் ஏதும் நடந்து விடுமோ? எனக்குத் தான் தலையிடி” 

கதவு அடித்துச் சாத்திக் கொண்டது. 

அதிபருக்கு இதயம் படபடக்கத் தொடங்கி அதிக நேரமாகியிருந்தது. 

அத்தியாயம் பதினெட்டு

பல நாட்களாகியும் நவீனைக் காணத தவிப்பு பிருந்தாவுக்குத் இருக்கத்தான் செய்தது. யாவரும் நம்மை இணைத்துப் பேசுவது நவீனின் மீது ஆத்திரத்தையும் உண்டாக்கத் தவறவில்லை. 

“பிருந்தா! உன்னாலேயே என்னைப் புரிந்து கொள்ள முடியாத போது பலரும் கதைக்கிறார்கள் என்பதற்காக நவீனின் மீது ஆத்திரப்படுதல் நியாயமா?” மனச்சாட்சி கேட்டது. 

“நியாயமில்லைதான்….. அதுக்காக ஜனங்கள் கதைப்பதை நிறுத்த வழி தான் என்ன?” 

“சமாதான உடன்படிக்கை செய்து கொள்வதா?” 

“சமாதான உடன்படிக்கைகள் எல்லாம் தோற்றுப் போன மண்ணில் வாழ்கின்ற நீ, வீதிக்கு வந்து பார் அவனது வீட்டை – விடை தெரியும்” 

“எப்படி?” 

“உன்னுடன் எத்தனை பழக்கம். நீ அடித்ததால் அவன் வராமல் விட்டிருக்கலாம். அல்லது சோதனை பெயில் ஆனதால் வெட்கத்தால் வராமல் விட்டிருக்கலாம்…. எனவே நீயே அவனது வீட்டிற்குப் போய்வா. அவனும் மனம் மாறிச் சமாதானம் செய்து கொள்ளலாம்.” 

“நிச்சயமாக” 

“நிச்சயமாக…. ஒரு வேளை அவன் உன்னை விரும்பியும் இருக்கலாம் உனது இழப்பு அவனை வேதனைப் படுத்தியிருக்கும் நீ போவதால் அவன் சந்தோஷப் படவும் கூடும்.” 

மனச்சாட்சி வெற்றி பெற்றது. 

“அவன் உண்மையிலேயே விரும்பியிருந்தானே? அப்படி யானால் நான் நவீன்!… என்னால் விடை காண முடியவில்லையே! என்னுள் ஏற்பட்ட கிளர்ச்சி காதலா…?” 

பொங்கி வந்து பின் வடிந்து விடும் பால் போல – எழுந்து 

கரையை முத்தமிட்டுவிட்டப் பின் ஒடுங்கிக் கொள்ளும் அலைபோல – அவளுள் கணப்பொழுதில் சந்தோஷமும் சோகமும் மாறிமாறி மோதி ஓய்ந்தன. 

“உண்மையிலேயே நான் அவனை விரும்பியிருந்தால் ஏன் நான் நேரடியாகக் கேட்டிருக்கவில்லை? ஏன் அவன் கூடக் கேட்டிருக்கலாமே…?” 

கடைசியாக நவீன் கூறிச் சென்ற வார்த்தைகளை இப்போது அவள் தனது உதடுகளால் உச்சரித்துப் பார்த்துக் கொண்டள். 

“எங்கள் இருவரின் தனித்தனி வாழ்க்கையை மட்டுமல்ல எங்கள் காதலையும்…” 

வழமை போல ஆசிரியர் அறையில் கலகலப்பு அதிகமாயிருந்தது. சம்பள நாள் ஆதலால் எல்லோரும் சம்பளம் எடுத்த கையுடன் சிறிய தேனீர் விருந்திற்கு ஆயத்தம் செய்து விட்டு இவ்வருட இல்ல விளையாட்டுப் போட்டி, நாடகப் போட்டி எல்லாவற்றையும் அலசினார்கள். பிருந்தா ஓர் மூலையில் “அந்தரங்க கீதம்” நாவலில் லயித்திருந்தாள். 

“ஏன் மிஸ் பிருந்தா இன்று மெளனம்?” புன்னகைத்தாள். 

திருமதி. நாகராஜனுக்கு பதில் அந்தப் புன்னகை தான் பாத்திமா டீச்சர் சொன்னாள் 

“நவீன் பாடசாலைக்கு வருவதில்லை அதனால் தானே?”

“அதுதானாக்கும்!” திருமதி. நாகராஜன் தோளில் தட்டினாள்.

பிருந்தா எதுவுமே பேசவில்லை, அதற்கும் புன்னகைதான்.

“என்ன தான் இருந்தாலும் நவீன் தொடர்ந்து படித்திருக்கலாம்”

“பயலுக்கு வெட்கமாக்கும்”. 

“எதுக்கு சோதினை பெயில் எண்டா? அல்லது காதல் பெயில் எண்டா?” 

பிருந்தாவின் அந்தரங்க கீதத்தில் சிறிது தடங்கல் – கீறல் வீழ்ந்தது மாதிரி. ஆத்திரத்தை அடக்கிக் கொண்டாள். “கண்ணாடி உடைந்தால் சேதம் யாருக்கு? கல் தன்பாட்டில் உடைத்து விடும்…மனது?” 

பிருந்தாவின் இமை கோடியில் கோடிட்டது. 

திடலில் மாணவர்கள் விளையாடிக் கொண்டிருந்தனர். 

“இந்த முறை நவீன் இருந்திருந்தால் நாடகப் போட்டியில் பிருந்தாவிற்குத் துணையாய் இருந்திருப்பான்.” 

“போன வருசம் கூட நவீன் நடித்ததாலோ பிருந்தா இயக்கியதாலோ நாடகம் முதல் பரிசு வாங்கிக் கொண்டது.” 

“நாடகப் பரிசு வாங்கினதை விட இருவருக்குமிடையே நெருக்கம் ஏற்பட்டதே! அது தான் முக்கியம்.” 

“இந்ந ஆண்டு?” 

“கடவுளே” பாத்திமா டீச்சர் வேண்டுமென்றுதான் பெரு மூச்சு விட்டாளோ? 

சுவரில் கடிகாரம் 11.30 காட்டியது. 

பிருந்தா எழுந்து கொண்டாள். பன்னிரண்டாம் வகுப்பு ‘சி’ பிரிவுக்கு பாடம் எடுக்கப்புறப்பட்டாள். இன்னும் இங்கிருந்தால் தன் தவிப்பு உடைந்து விபரீதம் நிகழ்ந்து விடலாம் என்பதும் முக்கியமே. ஏனென்றால் அவளால் அதிபருடன் மோதியது இன்னும் மறக்க முடியவில்லை. 

“வணக்கம்” 

மாணவர்களின் வரவேற்புடன் நுழைந்தாள். 

அத்தியாயம் பத்தொன்பது

திரையரங்கில் நண்பர்களுடன் ‘என்ட்லெஸ்’ ஆங்கிலப்படம் பார்த்து விட்டுத் திரும்பிக் கொண்டிருந்தான் நவீன். வழியில் பல நினைவுகள் அவனை அலைக்கழித்தன. பிருந்தாவுடன் படம் பார்த்தது, அவளுடன் கோயிலுக்குச் சென்றது, ஓட்டலிற்கு சாப்பிடப் போனது மாணவர்களுக்கான சுற்றுலாவில் அவளுடன் சென்றது, தனிமையில் அவளுடன் இருக்கும் சந்தர்ப்பங்கள் கிடைத்த போதெல்லாம் சிரித்துச் சிரித்துப் பேசியது…… 

இப்போதும் மறக்க முடியாமல் இருந்தது. 

மின்சார பல்ப்புகள் கடைகளிலிருந்து ஒளி உமிழ்ந்து வீதிகளுக்கு வெளிச்சம் தந்தன. 

இவனைக் கடந்து போலிஸ் ஜீப் ஒன்றும் சென்றது. 

“ஓ டீச்சர் பழகி வந்த பழக்கம் பாதியில் நின்று விட்டதும் ஏற்படுகின்ற தவிப்பு சொல்லில் முடியாது. எனக்குள் மோதும் வேதனைகளை ஆற்றுப்படுத்த நீங்கள் அருகில் இல்லையே! என்னுள் இருந்து விடை தராமல் இருந்த புதிர் கூடப்பழகிய போது தெரியவில்லை. இப்போது காதல் என்று மனம் அடித்துச் சொல்கிறதே! சொல்லத்துடிக்குது என் மனது…ஓ டீச்சர் ஐ லவ் யு” 

கால்கள் வேகமாகச் சைக்கிள் பெடலை மிதித்தன. 

பிருந்தாவின் வீட்டைக் கடக்கும்போது மனதுள் ஏதோ செய்தது. 

ஓங்கிக் கத்தவேண்டும் போலிருந்தது. 

மதிலால் எட்டிப் பார்த்தான். 

விதவிதமான பூக்கள் இருந்தன. 

பூக்களுடன் பூக்களாகய் பிருந்தா நிற்பாளோ என்ற தவிப்பு. உற்றுப்பார்த்தான். 

ஏமாற்றம் தான். 

கூப்பன்கடையில் பிருந்தாவின் அம்மா பொருட்கள் வாங்குவது தெரிந்தது. 

“அவ கண்டாவெண்டால் மதிப்புக் கெட்டுப் போகும் ஏன் வீட்டை வரேல்லை எண்டு நானும் ஏறுமாறு பதில் சொல்லிப் போட்டா பிரச்சனைதான்.” 

“நல்லவேளை அவள் காணவில்லை” 

ரேடியோவில் நினைவில் நிறைந்தவை நிகழ்ச்சி போய்க் கொண்டிருந்தது. 

நெஞ்சம் மறக்காத பாடல்களை ஒலிபரப்பிக் கொண்டிருக்கும் போது – பிருந்தா மட்டும் கனவுகளுடன் போராடிக் கொண்டிருந்தாள். கனவுகளைக் கொடுத்து விட்டு வராமலேயே விட்டு விட்ட நவீனின் மீது ஏற்பட்டிருந்த எரிச்சல் சற்று தணிந்து இருந்தது. பார்க்க வேண்டும் என்கிற தவிப்பு நாளுக்கு நாள் அதிகாரித்துக் கொண்டிருந்தது. தாயும் கேட்டுப் பார்த்தாள். “ஏன் நவீன் வருவதை நிறுத்திக் கொண்டான்? நீ ஏதாவது சொன்னாயா?” 

‘இல்லை’ என்று பிருந்தா தலையாட்டினாள். “பிறகு ஏன் வருவதில்லை? சின்னப் பையன் ஏதாவது நினைத்துக் கொண்டானோ? நீயாவது போய் அழைத்துக் கூட்டிக் கொண்டுவா!” 

சுவரில் பறவைச் சித்திரத்தைப் பார்த்துக் கொண்டிருந்தாள் பிருந்தா. ஜோடிப் பறவைகள். ஒன்று ஆண், மற்றையது பெண். 

“ஒன்று நவீன், மற்றது நான்.” 

“அப்படியாயின் ஜோடிப்பறவைகள் போல் நாங்களும் காதல் பறவைகளோ?” 

“எனது வயது அவனுடன் வாழ ஒத்துவருமா?” 

“மனது ஒன்றுபட்டுவிட்டதா என்று பார்… பிறகு முடிவுசெய். வயதை சிந்திக்காதே…..” 

“எனக்குள் எழுந்துள்ள உணர்வுகள் காதலா?” 

நிச்சயமாகக் “காதலாகத் தான் இருக்கமுடியும்.” 

‘அப்படியாயின் நவீனைக் காதலிக்கும் தகுதி எனக்கிருக்கிறதா?” 

“கொண்டவர்கள் வாழ்வுக்கு இதுவே போதும்” 

“என்னால் கேட்க முடியுமா? நவீன்… நவீன்..

“ஐலவ்யு….”

உரத்துச் சொன்னாள். 

“ஐலவ்யு” 

சுவரில் மோதித் திரும்பியது. 

“உறவு என்றொரு சொல்லிருந்தால்….! நவீன், உமக்காக நானும் எனக்காக நீரும் வாழ்கின்ற வாழ்வை ஏற்படுத்திக் கொள்வோமே!” 

மார்பு உயர்ந்து தணித்தது. 

“எங்கள் இருவரின் தனித்தனி வாழ்க்கையை மட்டுமல்ல எங்கள் காதலையும்…” 

நவீன் அன்று சொன்னது திரும்ப நினைவுக்கு வந்தது. 

எழுந்து கொண்டாள். 

முகம் கழுவித் தலைவாரிப் பொட்டிட்டு…அழகிய புடவைக்குள் நுழைந்து கண்ணாடி முன் நின்றாள். 

அவளால் கூட அவளை நம்பமுடியவில்லை. 

“நான் அழகாய் உள்ளேனா?” 

உதடுகள் புன்னைகத்தன. 

வாசலில் கிடந்த செருப்பினுள் கால்கள் நுழைத்து நடந்தன. 

அத்தியாயம் இருபது

“நவீன் வீட்டிலிருக்கவில்லை ஏதோ படத்திற்குப் போய் விட்டான்” என்று தாய் சொன்னாள். 

“நவீன்! நானும் படம் பார்த்து ரொம்ப நாளாயிட்டுது. உங்களுடன் கடைசியாகப் பார்த்த ‘சொல்லத்தான் நினைக்கிறேன்’ படத்திற்குப் பிறகு படமே பார்க்கவில்லை,” நினைத்துக் கொண்டாள். 

“நீர் இல்லாமல் என்னால் படமே ரசிக்க முடியவில்லை. ஆனால் உம்மால் மட்டும் எப்படி இதுமுடிகிறது” 

“அப்படியானால் என்னை நீர் காதல் பண்ணவேயில்லையா?”

“உமது பார்வைகள் பேச்சுக்கள் – குறும்புகள் – அனைத்தும் வெறும் அக்கறை தானா?” 

“உம்மை விளங்கிக் கொள்ள முடியவில்லை” 

“முன்பொரு முறை படம் பார்த்துக் கொண்டிருந்த போது உணர்ச்சி வசப்பட்டு என் கைகளை அழுத்தியது… நான் தட்டிவிட்டுக் கொண்டதும், பின் நான் தவறுதலாக உம்மில் உரசியதும் நீர் விலகிக் கொண்டது…. அர்த்தம் புரிய வில்லையே?” 

“ஓ நவீன்! உண்மையாகவே உம்மை விரும்புகிறேன்” 

தனிமை வாட்ட, நவீனின் அம்மா தந்த தேனீரை அருந்தி விட்டுக் கப்பை நீட்டினாள். முன்பு போல் கலகலப்பாக அவர்களால் பேச முடியவில்லை. இருவரும் வெவ்வேறு கவலைகளில். “அம்மா நான் பிறகு வருகிறேன்” என்று எழுந்து கொண்டாள். 

அன்றைய கலைவிழாப் போட்டியில் பிருந்தா இலக்கிய உறவு என்றொரு சொல்லிருந்தால்! நாகப் பேரிவை இழந்தது யாவருக்கும் அதிர்ச்சியே. 

சென்ற முறை போட்டியில் முதல் பரிசைத் தட்டிக் கொண்டதும் நவீனின் நடிப்புத்தானே. 

சோபை இழந்து காணப்பட்டாள். 

யாவருடனும் பேசவில்லை. சோகம் நெஞ்சை அழுத்தியது 

இரவு பதினொரு மணியாற்று. 

போட்டி முடிவு அறிவிக்கப்பட்ட பின் அங்கிருக்க அவள் விரும்பவில்லை. 

திருமதி. நாகராஜன் கேட்டாள். 

“நில்லு பிருந்தா! நான் கொண்டுபோய் விடுகிறேன்” 

“பரவாயில்லை. நான் பஸ்ஸிலேயே போய்க் கொள்கிறேன்.’ திருமதி. நாகராஜன் பாத்திமா டீச்சரிடம் முசுமுசுத்தது இவளுக்குக் கேட்டது. 

திரும்பிப் பார்க்காமல் நடந்து கொண்டிருந்தாள் வீதியில். 

வாகனங்கள் அதிகமாகத்தான் காணப்பட்டன. 

பழைய மாணவர் சங்கம் கூட அழைப்பிதழ் பெற்று வந்திருந்ததால், பணக்காரப் பழைய மாணவர்களின் சகாக்கள் வந்திருந்ததில் அவளுக்கும் வியப்பில்லை. 

தகப்பன் கூட ஒரு முறை சொன்னது ஞாபகத்திற்கு வந்தது. 

“நான் உயிருடன் இருந்தால் சுவீப் விழுந்தாவது ஒரு அம்பாஸிடர் காரில் ஒடித்திரிவோம்” 

சிரிப்புடன் அழுகையும் வந்தது. 

தகப்பனும் இல்லை. இப்போது நட்பென்று இருந்த நவீன்……? அவளைக் கடந்து வெஸ்ப்பா சென்றது.

– தொடரும்…

– ஸ்நேகம் (நாவல்), முதற் பதிப்பு: சித்திரை 1999, காந்தளகம், யாழ்ப்பாணம்.

எழுத்தாளர் முல்லை அமுதன் கல்லியங்காடு, யாழ்ப்பாணத்தைப் பிறப்பிடமாகக் கொண்டவர். முல்லைஅமுதன் எனும் பேயரில் 80களில் இருந்து எழுதி வருகிறார். அவர் திருகோணமலை பெருந்தெரு தமிழ்க் கலவன் பாடசாலை, யாழ்/செங்குந்தா இந்துக் கல்லூரி, கனகரத்தினம் மத்திய மகா வித்தியாலயம், மானிப்பாய் இந்துக் கல்லூரி, ஆகியவற்றில் தன் கல்வியைத் தொடர்ந்தார்.புலம்பெயர்ந்து இங்கிலாந்தில் வசித்து வருகிறார். கவிதை, சிறுகதை, நாவல், விமர்சனம் எனப் பல தளங்களிலும் கால் பதித்தவர். வருடந்தோரும் இங்கிலாந்தில் ஈழத்து எழுத்தாளர்களின்…மேலும் படிக்க...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *