(1999ல் வெளியான நாவல், ஸ்கேன் செய்யப்பட்ட படக்கோப்பிலிருந்து எளிதாக படிக்கக்கூடிய உரையாக மாற்றியுள்ளோம்)
அத்தியாயம் 6-10 | அத்தியாயம் 11-15 | அத்தியாயம் 16-20
அத்தியாயம் பதினொன்று
திரையரங்கினில் படம் ஓடிக் கொண்டிருந்தது. அது ஒரு காதல் கதை. வயது கூடிய பெண்ணுக்கும் டீன்ஏஜ் வாலிபனுக்கும் ஏற்பட்ட காதல் சொல்லவும் முடியாமல் மெல்லவும் முடியாமல் தனித்து வெந்து இறுதியில் நிலைமாறிப் போகும் மனதுகளின் கதை.
பிருந்தா கதையில் ஒன்றிப் போனாள். ஒரு பக்கத்தில் நவீனும் மறுபக்கத்தில் பிருந்தாவின் அம்மாவும் இருந்தனர்.
படம் ஆரம்பம் முதல் முடிவுவரை பிருந்தாவை ஆடாமல் அசையாமல் இருத்தி வைத்திருந்தது. படத்தின் கதை, டைரக்ஷன், படப்பிடிப்பு…….
தன்னையும் நவீனையும் இணைத்துச் சமூகம் கதைக்கிறது. அவளுக்குத் தெரியாமலில்லை. அவளாலும் நவீனின் நட்பை இழக்கவும் முடியவில்லை. பாசமா காதலா என்று சொல்ல முடியாதபடி…… இடை இடையே பாடல் காட்சி வந்தது.
கதாநாயகியினதும், நாயகனதும் கற்பனையில் இசைப் பாடல்கள் – நன்றக இருந்தன. குறிப்பாகக கமராப் படப்பிடிப்பைப் பெரிதும் ரசித்தாள்.
“பாட்டு நன்றாக இருக்கிறது டீச்சர்”
“ம்….. கதாநாயகன் எவ்வளவு அழகாக இருக்கிறார் நவீன் உண்மையில் அழகுதான்”.
“ராதா பாத்திரம் அழுகைப் பாத்திரம், ஆனாலும் அவள் அழகாக உள்ளாள்.”
பெண்கள் ஆண்களில் மயங்குவதும் ஆண்கள் பெண்களின் அழகில் வயப்படுவதும் இயற்கை. இவர்கள் கூடவிதிவிலக்கல்லவே. இடைவேளையில் சோடா வந்தது. தாய்க்கு ஒன்று வாங்கிக் கொடுத்து விட்டு நவீனைக் கேட்டாள் “என்ன குடிக்கிறீர்?”
“கோக்” என்றான்.
கோக் ஒன்று வாங்கிக் கொடுத்தாள்.
“உங்களுக்கு டீச்சர்?” – கேட்டான்.
“இருவரும் பாதி பாதியாக அடிப்போம்”
என்று மெதுவாக அவனது காதுக்குள் சொன்னாள். நவீனுக்கு சூடேறியமாதிரி இருந்தது.
நெஞ்சுக் குழிக்குள் வியர்த்தது.
ஒரக்கண்ணால் அவளைப் பார்த்தான்.
அதே புன்னகை….மாறாத நிலையில் “சும்மா இரும்” என்றாள் பார்வையால்.
இவன் குடித்து விட்டுப் பாதியை அவளிடம் நீட்டினான். அவள் குடித்து விட்டு சோடா தந்த பையனிடம் நீட்டினாள்.
படம் முடியும் வரை நவீனால் கதைக்குப் போக முடியவில்லை. படத்திலும் ஒன்ற முடியவில்லை. பிருந்தாவின் நடத்தை இவனை ஆகாயத்தில் பறக்க வைத்தது. டியத்தலாவ பயிற்சிச் சாலையில் ‘க்டேட்’ பயிற்சிக்குப் போன போது விமானத்தில் பறந்து பார்த்தது நினைவுக்கு வந்தது.
பிருந்தா மட்டும் கதையில் லயித்துப் போயிருந்தாள். படம் முடிந்தும் இருவரும் கதைத்துக் கொள்ளவில்லை. பிருந்தா கதையிலும், நவீன் பிருந்தாவிலும் லயித்துப் போனதால் கதைக்க வார்த்ததை வரவேயில்லை மனமும் இல்லை. இரட்டைத்தட்டு பஸ்சில் ஏறி வீடுவந்து சேர்ந்தனர்.
அத்தியாயம் பன்னிரண்டு
வீடு வந்தவனுக்கு அதிர்ச்சி காத்திருந்தது.
அங்கே ஒரு சாமியார் தரையில் உட்கார்ந்திருக்க, மான் தோல் அவருடைய பாதங்களில் மிதிபட…
அம்மா ஓடி ஓடிப் பணிவிடை செய்து கொண்டிருந்தாள். அவர்களைச் சுற்றி நாலைந்து பெண்கள் வீபூதி வாங்கி ஆசிர்வாதம் பெற்றுக் கொண்டிருந்தனர்.
“இன்று அம்மாவுக்கு என்ன நடந்தது”?
அதிர்ச்சியுடன் உள் நுழைந்தான்.
தாய் அறிமுகப்படுத்தினாள்.
சாமியார் விழிகளை மலர்த்தி நவீனைப் பார்த்தார்.
நவீனுக்கு ஒன்றும் புரியவில்லை.
“அம்மா சாமிபக்தி உள்ளவள்தான். சமயம் சாத்திரம் என்று கோயில்களுக்குச் செய்பவள்தான். ஆனால் இப்படி வீட்டிலேயே சாமியாரை வைத்துக் கொண்டு ஜனங்களை வந்து வந்து போக….”
“என்னம்மா இது”
மெதுவாகக் கேட்டான்,
தாய் பணிவாக “சாமியை வணங்குப்பா”
ஏன் என்பது போலத் தாயைப் பார்த்தான் நவீன். “எல்லாம் விபரமாக அப்புறம் சொல்கிறேன். சாமியின் அனுக்கிரகம் உனக்கும் கிடைக்கட்டுமே. பரீட்சையில் நிச்சயம் வெற்றி பெறப் பிரார்த்தித்து வீபூதியை வாங்கிப் பூசிக் கொள்ளப்பா!”
நவீனுக்குப் புரியவில்லை.
வலது கையை நீட்டி வீபூதியை வாங்கிப் பூசினான்.
சாமியார் எதுவும் பேசவில்லை.
தியானத்தில் இருந்தார்.
கூட்டம் கலைந்தது.
நேரம் நாலுமணி இருக்கும்.
இவன் பிருந்தாவின் வீட்டுக்குப் புறப்படத் தயாராகிக் கொண்டிருந்தபோது தாய் வந்து மெதுவாக ஆரம்பித்தாள்.
“நவீன்! சாமியரை உனக்கு அடையாளம் தெரிகிறதா”?
“இல்லை” – தலையாட்டினான்.
“உனக்கு ஆறுவயது இருக்கும் போது எங்களைத் தவிக்க விட்டு விட்டு ஓடிப்போன உங்க அப்பா – எனது கணவர்.”
தாயை ஏறிட்டுப் பார்த்தான்.
கண்களில் நீர் பெருக் கெடுத்திருந்தது.
“ஓ அம்மா நீயா?… எங்களைத் தவிக்க விட்டுவிட்டு ஓடிப்போனது.. உருத்தெரியமுதலே, தந்தை முகத்தை ஞாபகத்தில் இருக்கு முதலே இடம் பெயர்ந்து… இறந்து போனதாகச் செய்திகள் கிடைத்துப் பூவும் பொட்டும் இழந்து, வெள்ளைப்புடவைக்குள் நுழைந்து, கோயிலும் வீடுமாய் வாழ்கின்ற அம்மா நீயா இன்று கணவன் என்று உரிமை கொண்டாடுகிறாய்? உன்னைப் புரிந்து கொள்ள முடியவில்லை. இன்று இருக்கின்ற பழி தீர்க்கும் உணர்ச்சிகளை உன் கண்ணீரால் தகர்த்து விடுகிறாயே!”
மௌனமானான். தாயின் விசும்பல் இன்னும் அவனுக்குக் கேட்டுக் கொண்டிருந்தது.
தீடீரென ஆத்திரத்துடன் எழுந்தான்.
முற்றும் சூழலை மறத்தான். குசினிக்குள் கிடந்த இறைச்சி வெட்டும் நீளக் கத்தியை எடுத்துக் கொண்டு திரும்பியவனைத் தாய் தடுத்து நிறுத்தினாள்.
கண்கள் சீவப்பேறி இருந்தது அவனுக்கு. “என்னைத் தடுக்காதேம்மா…உன் கண்ணீருக்குக் காரணமானவன் உன் கணவனாக இருக்கக் கூடாது. அழித்தால்தான் ஆத்திரம் அடங்கும். கூடவே இவனைப் போன்ற ஆட்களும் திருந்துவார்கள்…”
திமிறினான்.
“உள்ளுக்குள் எத்தனை காலத்திற்கு அழுது கொண்டிருக்கிறது. மகனே எனியாவது நமக்கு நல்ல காலம் பிறந்தது மாதிரித் தானே! உன்னையும் தகப்பன் இல்லாத பிள்ளை என்று யாரும் சொல்ல மாட்டார்கள் தானே”
“அம்மா, தந்தை செத்திருந்தால் துரதிஷ்டம் என்று இருந்து விடலாம். ஓடிப்போனால் எப்படிச் சும்மா இருந்துவிடுவது. உன்னை மேலும் அழித்துக் கொள்ளவா?”
“உன்வீட்டு அப்பாவாக இல்லா விட்டாலும், வீட்டுக்குத் தலைவனாகவாவது இருந்துவிட்டுப் போகட்டுமே”. கெஞ்சினள் தாய். “வேண்டாம், வேண்டாம். என் தந்தை செத்துவிட்டதாகவே எனது முடிவு. உனது மஞ்சள் குங்குமம் மீண்டும் நெற்றியில் உனக்குத் தேவையாயின் நீ வேறொரு கல்யாணம் செய்து கொள்ளம்மா…” முடிக்கவில்லை….
தாயின் கரம் அவனது கன்னத்தில் பதிந்தது.
எதிர்பார்க்கவில்லை இருவரும். “கணவன் உயிருடன் இருக்கும் போது மறுமணமா? – தமிழ்ப் பண்பாட்டில் வளர்ந்த பெண்ணுக்கு…… எனக்கு நீ இப்படி சொல்லலாமா? கரகரத்த குரலில் சொன்னாள்.”
மகனை அடித்த கரத்தைச் சுவரில் அடித்தாள்.
“முடியலையே மகனே….. முடியலையே”
“என்னாலும் முடியலையே அம்மா…அவரை அப்பா என்று ஏற்றும் கொள்ள முடியலையே. உங்களை ஏமாற்றியவனைத் தெய்வத்துடன் ஒப்பிட்டுப் பேசியது என்னால் முடியலையே அம்மா” கண்களிலிருந்தும் கண்ணீர் பெருகியது. கன்னத்தில் அறை விழுந்ததும் கத்தி நிலத்தில் வீழ்ந்தது. காலில் தட்டுப்படக் குனிந்துபார்த்தான். தாயையும் பார்த்தாள்.
இருதலைக் கொள்ளியானான்.
எதுவுமே பேசாது வெளியேறினான்.
இவனின் முகவாட்டத்தைக் கண்டதும் பிருந்தா கேட்டாள் “என்ன நடந்தது நவீன்?”
தரையில் போய் உட்கார்ந்தான். அவளும் ஒரு நாற்காலியை இழுத்து முன்னால் நெருங்கி இருந்தாள்.
தலையை வருடிக் கொடுத்தாள்.
அவனது அழுகையைப் பார்த்ததும் இவளுக்கு ஒரு மாதிரி இருந்தது.
டி.வியை நிறுத்திவிட்டுத் திரும்பவும் கேட்டாள். எல்லா வற்றையும் சொன்னான்,
அழுகையை நிறுத்தத்தான் முடியவில்லை.
கன்னத்தில் தட்டிக் கொடுத்தாள். “கவலையை விடும், விடுமென்கிறேன்”
ஒரு தாய் சொல்வது போலிருந்தது அவனுக்கு. இன்னும் நெருங்கி இருந்ததால் நிச்சயமாக அவனுக்கு ஆறுதல் தேவைப்பட்டது.
திடீரென்று…
அவளது மடியில் தலை புதைத்துக் குலுங்கிக் குலுங்கி அழுதான். பிருந்தா தடுமாறிப் போனாள். இருந்தும் ஆதரவாகத் தலையை வருடிக் கொடுத்தாள்.
எழுந்து “மன்னிச்சிடுங்க டீச்சர்” என்றான்.
“ஓ.. ஒன்றுமில்லை” என்றாள் பதிலுக்கு.
“நவீன், மனதை ஆறுதல் படுத்தும் எல்லாம் சரியாய்விடும்” என்றாள். சுவிட்சை மெல்லியதாக ஒடவிட்டாள். டி.வியை வீடியோவிற்குப் பொருத்தி மடோனா பாடல் பார்க்கச் சொன்னாள்.
அவனால் முடியவில்லை.
மேசையில் தலை வைத்துச் சரிந்து கொண்டான்.
பிருந்தா காற்றாடியைச் சுழலவிட்டு, சூடாகக் காப்பி கொண்டு வந்து கொடுத்தாள்.
டிஸ்பிறின் ஒன்றை வாயில் போட்டுக் கொண்டான்.
“நித்திரை வந்தால் இங்கேயே படும்” கைகளைப் பிடித்து எழுந்திருக்கச் சொன்னாள்.
அவளது குளிர்ச்சியான கை பட்டதும், அவனது உணர்வுகள் விழித்துக் கொண்டன.
“நித்திரை வரேல்லை டீச்சர்”
“சரி, ஆறுதலாய் இரும்”
அவள் டீயூசனுக்குத் தயாராகி வெளி அறைக்குச் சென்று விட்டாள்.
நேரம் ஏழு மணி.
அத்தியாயம் பதின்மூன்று
வாரங்கள் பல கடந்தன.
ஒரு நாள் அதிகாலையில்
ஜனங்கள் கூடத் தொடங்கினர்.
நவீன் நினைத்தான்…
வழமை போல் சாமியாரிடம் விபூதி – சாஸ்திரம் – அதுக்கொன ஜனங்கள் வருகிறது என்பது.
பிறகுதான் புரிந்தது.
வந்த ஜனங்கள் வீபூதிக்காகவோ சாஸ்திரம் கேட்பதற்காகவோ வரவில்லை என்பது.
தாயைக் கேட்டான்.
தாய் அழுதபடி –
“உன் அப்பா…அதுதான் என் கணவர் மீண்டும் ஓடிவிட்டார்” சிரித்தான் நவீன்.
“ஏன் சிரிக்கிறாய்” தாய் கேட்டாள்.
“பின் என்னம்மா. முன்பே ஓடிப் போனவர் தானே… பிறகு வந்த போது நல்ல பாடம் உன்னால் படிப்பிக்க முடியவில்லையே. கணவர் என்கிற ஸ்தானத்தைக் கொடுத்தாய்…. பூச்சூடிக் கொண்டாய்…. குதூகலமானாய்…. உன் சந்தோஷத்தில் தலையிட நானும் விரும்பவில்லை. சாமிசாமி என்று நீயும் ஜனங்களுடன் சேர்த்து தேவாரம் பாடினாய் – இப்போ…?” நிறுத்தினான்.
தாய் கூரையைப் பார்த்தபடி சொன்னாள்.
“முன்பு ஓடிப்போனது உன்னை மட்டும், என்னை மட்டும் தான் தவிக்க விட்டது…. இப்போ ஜனங்களைத் தவிக்க விட்டுட்டாரே….!”
துனுக்குற்றான்.
“என்னை?” – பார்த்தான்.
“ஆமாம். கோயில், சாமி, என்று ஜனங்களிடம் பணமாகவும் நகையாகவும் வாங்கி இப்போது தலைமறைவாகி விட்டார்”
தலையிலடித்துக் கொண்டான்.
“பகலில் ஜனங்களையும் இரவில் உன்னையும் நல்லா ஏமாத்திப் போட்டார். எனியாவது யாரையும் நம்பாதேயம்மா” விசும்பல் கேட்டுக் கொண்டிருந்தது.
வாசலுக்கு வந்தான்.
அவனால் முடியுமா ஜனங்களுக்குச் சமாதானம் கூற? முற்றத்து மாமரத்தடிக்கு வந்தான்.
கந்தன் தென்னை மரத்திலிருந்து தேங்காய்களைப் பறித்து விட்டு இறங்கி வந்தான்.
காசைக் கொடுத்து விட்டுத் தேங்காய்களை ஒவ்வொன்றாகப் பொறுக்கிச் சாக்கில் போட்டு விட்டுச் சுவரோரத்தில் வைத்தான். பக்கத்து வீட்டு மாமி கிணற்றடியில் குளிப்பது தெரிந்தது. “உன் அம்மா முந்தி தலைமுழுகினதோட விட்டிருக்கலாம். பூச்சூட ஆசைப் பட்டாள். பிறகும் மனிசன் எல்லாத்தையும் சுருட்டி விட்டு ஓடி விட்டான்”.
பதில் இவனிடமிருந்து வராததினால் மாமி தொடர்ந்து பேசவில்லை. மௌனமாகிவிட்டாள்.
பரீட்சை நடந்து கொண்டிருந்தது.
ஆகஸ்ட் 27ம் தேதி – அவனது பிறந்த நாள் கூட அன்று தான். பரீட்சை முடிந்ததும் பிருந்தாவிற்குச் சுவிட்டை நீட்டினான். ‘நன்றி இன்று போல் என்றும் வாழ்க” என வாழ்த்தினாள். தலையைத் தாழ்த்தி நன்றி சொன்னான்.
“எப்படி?…. பரீட்சை எழுதினீரா?”
‘ம்’ கொட்டினான்.
“நீர் பாஸ்பண்ணுவீர் என்று. எனது பிரார்த்தனை கூடத்தான்”.
நவீன் சிரித்தான்.
“ஏன் சிரிக்கிறீர் நவீன்?”
“சும்மா” என்று விட்டு, பின் சொன்னான் “எனது அம்மாவை விட நீங்கள் நிறைய அக்கறை எடுக்கிறீர்கள் அதுதான்”
“ஏன் நவீன், ஒருவர் மீது ஒருவர் அக்கறை காட்டுவது தவறா?”
“எனது கருத்து அப்படியல்ல. உங்களது அக்கறைக்கு என்னால் அர்த்தம் காணமுடியவில்லை, அதுதான்”
“ஒரு ஆண் பெண்மீது கொள்வதோ, பெண் ஆண் மீது கொள்வதோ, காதல் என்பதைத் தவிர எப்படி வெறும் அக்கறை என்பது?”
“ஏன் ஆபாசமாகக் கூட இருக்கலாம் இல்லையா”?
“இருக்கலாம் ஆனால் 80/100 வீதமே காதல் என்பது தான் ஒத்துக் கொள்ளப்படுகிறது.”
“என்னைப் பொறுத்தவரை ‘வெறும் அக்கறை’ மட்டும் தான்.” சொன்னாள் பிருந்தா.
அதிபர் அவர்களைக் கடந்து போனர்.
கன்டீனில் டீ சாப்பிட்டார்கள்.
“காதலர் கன்டீனையும் அலங்கரிக்கினம்”
யாரோ சொன்னது காதில் வீழ்ந்தது.
பதில் ஏதும் இவர்களிடமிருந்து வரவில்லை.
வெளியேறினார்கள்.
இருவர் மனதிலும் ஏதோ ஒன்று அலைபாய்ந்து கொண்டிருந்தது.
பிருந்தா புரண்டு படுத்தாள்.
தூக்கம் வரவில்லை.
“நவீனைத் நான் காதலா பண்ணுகிறேன்?”
“ஏன் காதல் பண்ணக் கூடாதா?”
“அவனும் தனி நானும் மணமாகதவள்”
“வயது…..”
“ப்பூ என்ன வயது…. மனதுகள் ஒன்றுபட்டபின்”
“வாழ்க்கையில் திருமணம் என்றால் ஆண் வயது கூடியவனாகவும் இருக்க வேண்டும்”
“ஏன் பக்கத்து வீட்டு மாமிக்கு வயது கூடத்தானே. அவர்கள் சந்தோஷமாக வாழவில்லையா?”
“உடல் சுகம் கிடைக்காது”
“ஏன் யார் சொன்னது?”
“எல்லாம் எழுத்துக்கு மட்டும் தான்”
“தவிர, உடலின்பம் வாழ்வின் ஒரு பகுதிதான், காதல் ஒருவரின் வாழ்க்கை முழுவதுக்கும்”
“காதல் தான் வாழ்க்கை”
“காமம் இப்போ இரண்டாம் பட்சம்தான்”
தலையணையை அணைத்தபடி தூக்கத்தை வரவழைக்கப் பாடுபட்டுத் தோற்றுப் போனாள்.
அத்தியாயம் பதின்னான்கு
கணவன் மீண்டும் காணமல் போனதிலிருந்து அம்மாவின் போக்கு மாறி இருந்தது. யாருடனும் கதைப்பதில்லை. நவீனைக் கூட நிமிர்ந்து பார்த்துக் கதைக்கச் கூச்சப்பட்டாள்.
“ஏன் அம்மா நீ மாறிப் போனாய்?”
பதில் வரவில்லை. பெருமூச்சுத்தான். நவீன் பின் எதுவுமே கேட்கவில்லை.
பென்ஷன் காசு எடுக்க வெளியில் மார்க்கட்டுக்கு நடை நடந்தால் ஜனங்களின் கேள்விகளுக்கு பார்வைகளுக்குத் தப்ப முடியவில்லை. பின், நவீன் வெளியில் போய் வரத் தொடங்கினான்.
இன்பம் நாணயத்தின் ஒரு பக்கம் மாதிரி ஆனால் ஏன் அடிக்கடி மறைந்து போகிறது. சோகத்துப் பக்கங்களுக்குச் சந்தர்ப்பம் கொடுக்கவா?
“என்னப்பா நவீன், உங்க அப்பா எப்ப மீண்டும் வருகிறதாம்?” கடை முதலாளி கேட்டார்.
நவீனுக்குப் பார்வை நெருப்பாகியது.
நிமிர்ந்து பார்த்தான்.
கடை முதலாளியால் தொடர முடியவில்லை.
வீதியில் நடந்தான்.
எரிச்சலாக வந்தது.
“தெளிந்த நீரோடையில் ஏன் மீண்டும் அந்தக்கல்…. அப்பாவும் பசிவரும் போது உணவைத் தேடுவது போல…. பசிவந்ததோ….? ஓ அம்மா! நீ பூச்சூடுவதில் ஆசைப்படுவது தவறில்லையம்மா! உனது காதல் வாழ்க்கையில் சந்தேகப்பட்டோ…. சாப்பாடு புளித்தோ… ஓடிப்போய் எத்தனை ஆண்டுகள்… மனைவியைப் பிள்ளையை மறந்து,…. இறந்தார்களா உண்டார்களா படுத்தார்களா என்று பாராது இப்போது என்ன வேண்டிக் கிடந்தது.
திக்விஜயம்…. பிறகு ஜனங்களையும் ஏமாத்தி – சாமியின் பேரால்- ஓ…. கடவுள் கூட சும்மா விடாது.”
வெக்கைக் காற்று இவனைக் கிழித்துச் சென்றது.
ஏ லெவல் சோதினை முடிவு வந்திருந்தது.
நவீனின் முடிவைப் பார்ப்பதில் ஆர்வம் கூடிய பிருந்தா சோர்ந்து போய் ஆசிரியர் அறைக்குள் நுழைந்தாள். யாருமே அங்கிருக்கவில்லை. கைகளைத் தலைக்கு முண்டு கொடுத்துக் கொண்டு உட்கார்ந்திருந்தாள்.
சிறிது நேரத்தில் அதிபர் அழைத்ததால் எழுந்து சென்றாள். அதிபர் அவளைப் பாராட்டி விட்டு நவீனைப் பற்றியும் சொல்லி வைத்தார்.
அதிபர் கடைசியாகத் துப்பிய வார்த்தை அவளால் ஜீரணிக்க முடியாதிருந்தது.
“ஓ……. அவனின் இந்த நிலைக்கு நானா காரணம்?”
ஒங்கி மேசையில் அடித்து அதிபரைக் கேட்க வேண்டும் போலிருந்தது.
கேட்கவில்லை.
மௌனமாகத் தலை குனிந்தபடி நின்றிருந்தாள்.
“மிஸ் பிருந்தா எனியாவது இப்படியானதுகளுக்கு படிப்பிக்கிறதை விட்டுடுப் போ…
அவன் அப்பாகூட ஓடுகாலி தானே…….?”
அதிபரின் வார்த்தைகள் கூரிய அம்பென வந்து இதயத்தில் தைத்தது.
மின் விசிறி சுழன்றும் கூட இவளுக்கு வியர்த்தது.
வெளியேறினாள்…
யாருடனும் எதுவும் பேசவில்லை.
“ஏன் டீச்சர் உங்களுக்கென்னாச்சு”
‘ஒன்று மில்லை’ தலையாட்டினாள்.
கேட்டவளுக்குத் தெரியும் தெரிந்துதான் கேட்டாள்.
“ஒன்று மில்லை என்பது என்னால் ஏற்றுக் கொள்ள முடியவில்லை. உங்களால் ஏற்றுக் கொள்ள முடியாவிட்டால் அதுக்கென்ன என்றாலும், ஜிரணிக்க முடியாமல் தானே உள்ளுக்குள் அழுதபடி…. உங்களுக்குப் புரியலையே?” அழுகை வெடித்தது. கேட்டவள் தொடரவில்லை.
கன்டீனில் டீ சாப்பிட்டுவிட்டு ஆசிரியர் அறைக்குள் நுழைந்தாள்,
அத்தியாயம் பதினைந்து
“அவருக்குப் பசிச்சப்போ இங்க வந்தாரம்மா. உனக்குப் பசி எடுத்தா யார்கிட்ட போவேம்மா?”
நவீன் கேட்டான்.
தாய் கூரையையே பார்த்துக் கொண்டிருந்தாள்.
-தனது தோல்வியை ஒத்துக் கொள்ளும் வீரனைப் போல். ஆனாலும் தன்னை விட அனுபவம் குறைந்தவனால் எப்படி யெல்லாமே பேசமுடியும் என்பதையும் உணர்ந்தாள்.
“காதல் என்பது சமுத்திரம் மாதிரி”
“இவனுக்கு இது புரியவா போகிறது”
“மனிதனுக்கு வயித்துப் பசி, உடற்பசி இரண்டும் இருக்கிறது. இவன் உடற்பசியை மட்டுமே வாழ்க்கை என்று நினைத்துப் பேசுகிறான்”.
“நான் எல்லாவற்றிற்கும் மேலாக வாழ்க்கைப் பசியை அதாவது நாலுபேர் வாழ்கிற மாதிரி வாழனும் என்கிற பசியை நினைத்து வாழ்கிறேன், ஏங்குகிறேன்”.
ஐந்து நிமிட சந்தோஷ வாழ்வு கூட அவளை யுகம் யுகமாய் சந்தோஷத்தில் இருத்திவிடும்.
சிட்டுக் குருவிகள் இரண்டு மாமரத்திலிருந்து சிறகடித்துப் பறந்து போயின…. ஜன்னலூடே பார்த்த நவீனுக்கு அந்த இரு குருவிகளிடயே ஏதோ ஒரு பிணைப்பு அவர்களின் மொழியில்- வாழ்க்கையைப் பற்றியா பேசிவிட்டு சுதந்திரமாக வான வெளியில் பறந்து போகின்றன?
கரங்கள் ஜன்னல் கம்பிகளைப் பற்றின.
காதல் ஒரு சமுத்திரம் தான்…. சில சமயம் முத்தும் வரும். சில சமயங்களில் சோகங்களையும் அழைத்து வரும் அம்மாவின் காதல் எனக்கு அப்பா என்பவரைத் தந்தது. அம்மாவுக்குக் கணவனாக மட்டுமே இருந்துவிட்டு…
கோடிப்புறத்தில் வாழை இலையைப் பக்கத்து வீட்டு மாமி அறுத்துக் கொண்டு போனாள்.
யாரோ விருந்தினர்கள் வந்துள்ளனர் போலும்.
பிருந்தாவின் ஞாபகம் வந்தது.
பிளாஸ்கில் சுடச்சுடத் தேநீர் இருந்தது. ஊற்றிக் குடித்து விட்டுப் புறப்பட்டான் பிருந்தாவினைப் பார்ப்பதற்கு.
“மனதுள் ஓராயிரம் கேள்விகள்…. சோகங்கள் பயங்கள் எழுந்து மோதின”
நேயல் கபேயில் டீ சாப்பிட்டுக் கொண்டிருந்த போது கூட அவன் நண்பன் கேட்டான்,
“ஏண்டா மச்சான் பிருந்தா டீச்சர் போற போக்கைப் பார்த்தால் விரைவில் கல்யாணம் முடித்துவிடுவாள் போலிருக்கிறது”
நவீன் எதுவும் பேசவில்லை.
சில நண்பர்களின் கைகளில் சிகரட் புகைத்துக் கொண்டிருந்தது. கல்லூரி மாணவர்கள் சிகரட் குடிப்பது யரார்த்தமாகி விட்டது. நவீன் சிகரட் குடிப்பதில்லை.
ஒரு நாள் நண்பனின் வேண்டுகோளுக்கு ஒரு சிகரட் குடித்து விட்டு, வெங்காயத்தை வாயில் போட்டுக் குதப்பி விட்டு பிருந்தாவைப் பார்க்கப் போனபோது இவனின் வாயிலிருந்து சிகரட் குடித்த மணம் வந்ததை உணர்ந்து கண்டித்தாள்.
“நீர் சிகரட் குடிக்கிறீர்”
பதில் இல்லை.
“உடம்புக்கு கூடாது. எனக்கு சிகரட் குடிக்கிறவர்களைக் கண்டால் பிடிக்காது”
பதில் இல்லை.
“எனி மேலும் சிகரட் குடிப்பதாயின் தயவு செய்து இங்கு வரவேண்டாம் நான் உம்மோட கதைக்க மாட்டன்”
“மன்னிச்சுங்க டீச்சர் இனி சிகரட் குடிக்க மாட்டன்” சத்தியமாகச் சொல்லி விட்டான்.
பிருந்தாவிற்கு திருப்தி – தனக்கு கட்டுப்பட்டது.
“இன்று முதல் நவீன் நல்ல பிள்ளையாகத்தான் தோன்றுவான்”. அன்று கூட நவீனை நண்பன் கரைச்சல் படுத்தினான். “முடியாது” மறுத்தான்.
பில்லை இவனே கட்டி விட்டு நடந்தான்.
– தொடரும்…
– ஸ்நேகம் (நாவல்), முதற் பதிப்பு: சித்திரை 1999, காந்தளகம், யாழ்ப்பாணம்.