(1999ல் வெளியான நாவல், ஸ்கேன் செய்யப்பட்ட படக்கோப்பிலிருந்து எளிதாக படிக்கக்கூடிய உரையாக மாற்றியுள்ளோம்)
அத்தியாயம் 1-5 | அத்தியாயம் 6-10 | அத்தியாயம் 11-15
அத்தியாயம் ஆறு
லைபிரரியில் இருந்து எடுத்து வந்த உன்னை ஒன்று கேட்பேன் நாவலை அப்போதுதான் வாசித்து முடித்தாள். ரேடியோவில் மெல்லிய சுருதியில் காதல் பாட்டுகளை ஓடவிட்டாள். ரூபவாஹினியிலும் நல்ல நிகழ்ச்சி இருந்ததனால் இசையில் மூழ்கிப் போனாள்.
நேரம் தன்பாட்டிற்கு ஹாயாய்ச் சென்று கொண்டிருக்க .. முற்றத்துத் தென்னை மரத்தினூடே மெல்லியதாக வந்த குளிர் காற்று காதோரம் தடவிச் சென்றது.
நிமிர்ந்து இருந்து பார்த்தாள். அடுக்களையில் அம்மா பால் சுடவைத்துக் கொண்டிருப்பது மெல்லியதாகத் திறந்திருந்த கதவினூடே தெரிந்தது.
காலாற எழுந்து நடந்துவிட்டு,
பக்கத்து வீட்டு அன்ரின் வீடு நோக்கிச் சென்றாள்.
“அவர்கள் ஏதாவது வீடியோவில் படங்கள் போட்டாலும் போடுவார்கள்”
ஆனால் அன்று படம் போடவில்லை.
டி.வியில் கால் பந்தாட்டம் ஓடி ஓடி விளையாடிக் கொண்டிருந்தான். 10 மரடோனாவினுடையது. அவனைப் பார்த்தால் அச்சொட்டாக நவீன் மாதிரி இருக்கும்.
“ச்சா, நம்ம நவீன் மாதிரி இருக்கானே!”
முன்பு கூட பாடசாலை இல்ல உதை பந்தாட்டத்தின்போது கென்னடி இல்லத்தின் சார்பில் நவீன் விளையாடியது நினைவில் வந்து ஓடியது.
மெல்லியதாய் அரும்பியது புன்னகை.
உள்ளே அன்ரியின் பிள்ளைகள் படித்துக் கொண்டிருந்தார்கள். மாமா மட்டும் டிவிக்கு முன்னால் – கால் பந்தாட்டம் பார்த்தபடி. சிறிது நேரம் இருந்து பார்த்தாள் – மனதில் ஏதோ கள்ளம் புகுந்த மாதிரி ….
மரடோனாவும் நவீனும் கண்முன்னால் ….. சிறிது பொழுதுதான் தன்னைச் சுதாகரித்துக் கொண்டு எழுந்தாள்.
அன்ரி கேட்டார்-
“பிருந்தா டீ சாப்பிட்டு போயேன்”
மறுக்க முடியவில்லை.
இதழுடன் பொருத்தி டீ ஐக் குடித்தாள்.
“மாலையில் நவீன் சொன்னது ஞாபகத்தில் வந்தது. “டீச்சர், நதியா மாதிரி இருக்கிறது உங்களைப் பார்க்க ….. சில சமயம் பொறாமை தான் … உங்களை love பண்ணணும் மாதிரி ஒரு துடிப்பு …… கனவில் நதியாவுடன் சல்லாபித்த ஒரு விதக் களிப்பு மாதிரியோ தெரியாது …..”
சிரித்த படி சொன்னவனைப் பார்த்து –
“நல்லா ஜோக்கடிக்கத் தெரியுது. காதல் முத்திப் போச்சு. நல்லாப் பழுத்த எலுமிச்சம் பழத்தைத் தலைக்குத் தேய்த்து முழுகும் சரியாப்போம்”
“உண்மையாக ஐ லவ் யு டீச்சர்”
என்றானே சிறியவனான மாதிரி.
இவளுக்குத் தூக்கி வாரிப்போட்டது. “எப்படி இவனால்?”
ஆத்திரப்படவோ அனுதாபப் படவோ முடியவில்லை. “டீன்ஏஜ் ஆசைதான் …… கனவுகள் இப்படித்தான் யாரையும் அலைக்கழிக்கும். நவீன்!, நான் உமக்குப் பாடம் போதிக்கும் குரு மாதிரி …. ச்சி நவீன், இப்படிப் பேசாதீர்” சொல்லத்துடித்தாள்.
பதிலுக்கு அவன் காத்திருந்தால்தானே. சென்று விட்டான். தூரத்தே சைக்கிளை வேகமாக ஓட்டிச் செல்வது இவளுக்குத் தெரிந்தது.
இன்னும் காதல் பாட்டு ஓடிக்கொண்டிருந்தது. கட்டிலில் உட்கார்ந்தாள்.
“சரீ… நவீன்… உம்மிடம் மரியாதை கொடுத்து நட்பாயிருத்தேன்? என்ன கேட்கிறீர்? உமது கேள்விக்கு விடை சொல்ல முடியாது. கடவுளே! உமக்கு எப்படிச் சொல்லித் தருவது?”
தாய் வந்து கூப்பிட்டாள்.
சாப்பிட்டாள். மனதுள் இன்னும் ஏதோ ஒன்று… “அது என்ன பிருந்தா நீ காட்டியது பாசமா காதலா? உன்னாலேயே தீர்மானிக்க முடியாதபோது, யாரோ ஆண் சிறுபிள்ளை எப்படி முடியும்? உன் அடிமனதைத் தொட்டுச் சொல் நீ கூட வெளியிட முடியாதளவிற்கு பண்ணுகிறாய்… காதல் தானே..? ஒரு பொருட்டல்ல எனினும் காதல் காதல் தானே?”
எங்கிருந்தோ உள் மனது சொல்லியது – அடித்துச் சொல்லிற்று.
அத்தியாயம் ஏழு
அன்று –
வழக்கம் போலவே தாயின் துன்புறுத்தலின் பேரில் எழுந்து காலைக்கடனை முடித்து விட்டுப் புறப்பட்டான்.
“இன்று பிருந்தா டீச்சரின் பேச்சு இருக்கு” வழிபாடு முடிய நண்பன் சொன்னான்.
இவனது அலுப்புப் பறந்து விட்டது.
தலையச் சரித்துக் கொண்டு தூரத்தே பார்த்தான்.
“பிருந்தா வரவில்லை……
பெண்கள் பஸ் போய் விட்டது”
நண்பன் நினைப்பூட்டினான்.
“நான் பிந்திப் போனேன்”
இவர்களுக்கு பஸ் வந்தது.
ஏறிக்கொண்டான்.
இன்றும் வழக்கம் போலே ‘புட்போட்’ பிரயாணம் தான். இவனைப் போலவே பலருக்கும் – குறிப்பாக டீன்ஏஞ் இளைஞர் களுக்கு புட்போட் பிரயாணம் விருப்பமானது. கண்டக்டர் கத்துவார்…..
“உள்ளே போ” என்று.
யாரும் கேட்கத் தயாரயில்லை.
ஒரு நாள் பஸ்ஸை வழியில் நிறுத்தி “நீங்கள் உள்ளே போகா விட்டால் பஸ் நகராது” என்ற கண்டக்டரின் சொல்லுக்கு அடங்கி உள்ளே சென்றனர். பின் வழமை போலவே ……
“ஒரு நாளைக்குத் தவறி விழப்போகினம்” ஒரு வயோதிக மாலு சொன்னது.
“அவங்கள் கேட்க மாட்டினமம்மா”
“விழுந்தாப் பிறகு தானே ஞானம் வருகுது”.
திரும்பவும் அதே மாதிரி பாடசாலை மணி ஒலித்து ஓய்ந்தது. மாணவர்கள் வழமை போலவே வரிசை வரிசையாக மண்டபத்தில்.
“பிருந்தா டீச்சர் பேசுவார்”
நவீனுக்கு இருப்புக் கொள்வில்லை.
அவளின் முகத்தைப் பார்த்து விடவேண்டும் என்கிற துடிப்பு.
நேற்று முழுவதும் அவளைப் பார்க்காததால் ஏற்பட்டதுடிப்பு. நேற்று லீவு நாளாதலாலும், டீயூசன் கூட இல்லாததினாலும் பிருந்தாவைச் சந்திக்கும் வாய்ப்பு இல்லாமல் போய்விட்டது நவீனுக்கு.
“இன்று… அவள் எப்படிப் பேசுவாள்? இப்படித்தான் பேசுவாளோ!” மனது நினைத்துப் பார்த்தது.
பின்னால் இருந்தவன் நவீனைக் கிள்ளினான்.
“என்ன? உனது ஆள் இன்று பேசுகிறாளாமே!. உன்னை நினைத்துக் கொண்டு அவள் என்னென்ன உளறப் போகிறாளோ? பாவம் டீச்சர் அவருக்கேன் இந்த வேலை”……. சொன்னான்.
நவீனுக்கு ஒரு மாதிரி இருந்தாலும் “ச்சீ டீச்சர் நன்றாகப் பேச வேண்டும், இல்லையெனில் உங்களுக்கு மட்டுமில்லை எனக்கும் தான் அவமானம்,” நவீனின் மனது படபடத்தது.
அதே சமயம் –
பிருந்தா ஆசிரியர் அறையில் தனது பேச்சுக்கான ஆயத்தங்களைச் செய்து கொண்டிருந்தாள். பாடசாலை வாழ்விலும் பல்கலைக்கழக வாழ்விலும் ஆசிரியப்பயிற்சிக் காலங்களிலும் பேச்சுப் போட்டிகளில் பங்கு பற்றியவள், நீண்ட இடைவெளிக்குப் பிறகு இன்று பேச நடுக்கம் பிடித்தாலும், மனதைத் திடப்படுத்திக் கொண்டு தயாராகி விட்டாள்.
ஒரத்தில் பாத்திமா டீச்சர் ‘சார்’ எண்ணிக் கொண்டிருந்தார். அவர் முஸ்லிம் ஆதலால் அவர் தனியே தனது தொழுகையை மேற்கொண்டார்.
திருப்புராணத்துடன் யாவரும் அமைதியாகி விட, நிமிர்ந்தபடி மேடையில் தோன்றினாள் பிருந்தா. இரட்டைப் பின்னல், சாந்துப் பொட்டு, மெல்லிய வீபூதிக் கோட்டுடன் தனது முத்துப்பல் உதடுகளில் சிரிப்பொன்று உதிர்த்த வண்ணம் ஆரம்பித்தாள்.
அவள் பேசுகையில், பச்சை நிற சாறியும் அதற்கேற்றாப் போன்ற பிளவுஸ்உம் அவளுக்கு மேலும் அழகூட்டின.
“வானத்துத் தாமரை தரையில் பூத்ததுவா?”
நவீனைக் கிண்டல் பண்ண எண்ணி நண்பன் சொன்னான்.
நவீன் நிச்சயமாக இந்த உலகத்தில் இல்லை
‘இளைஞர் எதிர்காலம்’ –
காதல் ரசனை ததும்பப் பேச்சைப் பேசி முடித்தாள்.
கை தட்டல் ஒலித்தது. சிரிப்புடன் வரவேற்பை ஏற்றுக் கொண்டாள்.
அதிபர் சொன்னார்,
“பிருந்தா டீச்சர் நன்றாக மாணவர்களுக்காகவே அவர்கள் வரவேற்கும் விதத்தில் பேசினார். தொடர்ந்து ஒவ்வொரு வெள்ளிக்கிழமையும் அவரது பேச்சைக் கேட்க நாங்களும் விரும்புகிறோம்.”
மாணவர்கள் குதூகலித்து
கரகோஷம் எழுப்பினார்கள்.
நவீன் இந்த உலகத்தில் இல்லை.
மாணவர்கள் வகுப்புக்குத் திரும்பினர்.
நான்கு சுவர்களிலிருந்தும் ‘நவீன்,’ ‘நவீன்’ என்று பிருந்தா கூப்பிடுவது போல ஒரு பிரமை.
“என்ன பலமான யோசனை?”
பதில் வர மறுத்தது.
அவளே கேட்டாள்,
“பேச்சு எப்படி இருந்தது?”
“வொண்டர்பூல்” என்று சைகையில் சொன்னான்.
இருவரும் நடந்தார்கள்.
ஆசிரியர் அறையைக் கடக்கும்போது திருமதி. நாகராஜா டீச்சர் சொல்வது காதில் விழுகிறது –
“பிருந்தா டீச்சரும் நவீனும் நல்ல ஒட்டு – காதலர் மாதிரி.” ‘வித்தியாசமான வயது. எப்படி காதல் சாத்தியமாகும்?” பாத்திமா டீச்சர் சொன்னாள்.
“அபூர்வராகங்கள் பார்க்கேல்லையா?”…. திருமதி. நாகராஜா டீச்சர்.
-பதில் ஏதும் வரவில்லை. பாத்திமா ‘டீச்சர் மெளனமாகி விட்டார்.
இவர்களைக் கடந்து அதிபர் செல்வது தெரிந்தது. நவீன் எந்தவித சலனமுமின்றி வகுப்பறையினுள் சென்றான். பிருந்தவின் முகத்தில் புன்னகை மறைந்திருந்தது. எல்லாரும் எழுந்து “வணக்கம் டீச்சர்” என்று சொன்னார்கள். பதிலுக்குச் சுரமில்லாமல் “வணக்கம்” என்றபடி பாடத்தை ஆரம்பித்தாள்.
அத்தியாம் எட்டு
அஞ்சலகம் போய்த் தனது கணவனின் பென்ஷன் பணத்தை எடுத்து வீட்டிற்குள் நுழைந்ததும் பிருந்தா கட்டிலில் படுத்திருந்ததைக் கண்ட அவளது தாயார், குடையையும் பேர்ஸ்சையும் மேசைமீது வைத்துவிட்டு, பிருந்தாவின் அருகில் உட்கார்ந்து, ஆதரவாக அவளது தலையை கோதி விட்டாள். அவளது தலையைத் தூக்கித் தன்மடிமீது வைத்துத் தடவிக் கொடுத்தாள். பின் –
எழுந்து பிளாஸ்க்கில் இருந்த பாலை எடுத்துக் கப்பில் ஊற்றி அலுமாரியில் புரொட்டீனெக்ஸ் போத்தலை எடுத்துக் கரண்டியால் சிறிதளவு போட்டுக் கலக்கி பிருந்தாவிற்குப் பருக்கி விட்டாள்.
தாயார் அதுவரை எதுவும் கேட்கவில்லை.
மகளைப் பற்றித் தெரிந்தது தானே. களைத்து வந்திருக்கிறாள். எவ்வளவுதான் வளர்ந்தாலும் பெற்றவளுக்கு அவள் என்றும் குழந்தையே. பிருந்தாவிற்கும் தாயாரின் மடியில் படுத்திருந்து பருகுவது ஆறுதலாகவும் சுகமாகவும் இருந்தது.
கணவன் இறந்த பின் அவரின் பென்ஷன் பணம் போதாதிருந்தும் பிருந்தாவின் ஆசிரியத் தொழில் மூலம் மாதாந்தச் செலவைச் சமாளிக்க முடிகிறது. பிருந்தாவிற்கு என்று சீதனமாகக் கொடுக்க இருப்பது வெறும் காணி மட்டுமே. வங்கியில் இருந்த பணம் கணவன் இறந்த போது எடுத்துப் பின் சிறுகச் சிறுகக் கனத்து இப்போது வெறுமையாக உள்ளது.
இருவராலும் முடியவில்லை வங்கியில் பணம் நிரப்புவதற்கு. பிருந்தாவிற்கு என்று நல்ல வாழ்க்கை வராமலா போய் விடும். வேண்டாத தெய்வங்களில்லை. விரதங்களுக்குக் கடவுள் பதில் தந்துதானே ஆக வேண்டும்? – நம்பினர்.
முன்பு வந்த வரன்களெல்லாம் சீதனம் அது இது என்று குழம்பிப் போயிற்று. சென்றவாரம் கூட புரோக்கர் கொண்டு வந்த பொருத்தம் எட்டில் செவ்வாய் என்று தவறிப் போயிற்று.
“ம்…..” பெருமூச்சொன்று விட்டாள் தாயார். “கணவன் இருந்திருந்தால் ஓரளவு பாதுகாப்பாக இருக்கும். வீட்டுத் தலைவன் என்கிற அந்தஸ்தில் பிருந்தாவின் திருமணத்தை ஓடி ஓடி முடித்திருப்பார்.”
கணவனின் நினைவு அவளை அழச் செய்தது.
அந்த விபத்து நடந்து, அவளது பூவையும், பொட்டையும் பறித்து, பிரேதமாக நாலு பேரின் உதவியுடன் ஹாலுக்குள் கொண்டு வந்து கிடத்திய போது –
“ஓ…”
மார்பில் ஓங்கி அடித்து அடித்து அழுதாள். கதறினாள். பிருந்தா அப்போது ஆசிரியப் பயிற்சியில் இருந்தபடியால் பிறகு செய்தி கேட்டுத் துடித்து ஓடிவந்து அழுதாள் உலகமே அவர்களுக்கு இருண்டது மாதிரி…
“கடவுளே இது என்ன சோதனை?”
ஜனங்கள் கூடினர்.
அழுதார்கள்.
குருக்கள் வந்தார். ஈமக் கிரியைகள் நடத்தினார். பிரேதம் நாலு பேரின் உதவியுடன் ஊர்வலமாய்ச் சுடுக்காடு நோக்கிப் போனது.
இவர்கள் மட்டும்
அழுதபடி அழுதபடி…
பிருந்தா சிறிது நேரம் அசந்து தூங்கிப் போனாள்.
தாயார் எழுந்து சாமி அறைக்குள் நுழைந்தாள்.
முருகன் – விஷ்ணு படங்களுக்கிடையே –
கணவனின் படம் சிரித்தபடி.
சந்தனக்குச்சியை எடுத்துக் கொளுத்தி வைத்தாள்.
கைகூப்பிக் கண்களை மூடித் தியானத்தில் ஆழ்ந்து விட்டாள்.
கண்கள் மட்டும் கண்ணீரைச் சிந்தியபடி…
துன்பம் மனதை அழுத்தும் போது அவள் இப்படித்தான்
தணிந்து வந்து தியானத்தில் ஆழ்ந்து விடுகிறாள்.
வாசிலில் சத்தம் கேட்கத் திரும்பிப் பார்த்தாள்.
பிருந்தா நின்றிருந்தாள்.
வரும்படி கண்களால் அழைத்தாள்.
வந்து உட்கார்ந்து கொண்டாள்.
தந்தையின் படத்தையே உற்று நோக்கினாள்.
“தெய்வீகத் தன்மை பொருந்திய உடல், கண்கள், விபூதி ஓடி வீற்றிருக்கும் உங்கள் நெற்றி, புன்கைமட்டுமே எனக்கும் சொந்தம் என்கிற சிரிப்பு, ஓ அப்பா! எப்படி உங்களால் சீக்கிரம் கடவுளிடம் செல்ல முடிந்தது. நான் இப்போ நரகத்தில்……”
கண்களை மெல்ல மூடினாள் –
மனது ஒருமுகப்பட்டது போல.
சிறிது ஆறுதலாக இருந்தது.
பாடசாலையில் நவீனையும் தன்னையும் இணைத்துப் பேசிய சுவரில் எழுதிய வாசகங்கள் ….. மனதில் சபலத்துடன் திரியும் ஆடவர்கள்….. எல்லாவற்றையும் விழுங்கும் வாழ்க்கைச் சுறாக்கள்….. எல்லாம் ஒரு கணம் மறந்து அன்பாயிற்றே! வீடுவரும்வரை …. இப்போது வரை இருந்த அந்த நிகழ்ச்சிகள், எரிச்சல்கள், ஆத்திரங்கள், நெருப்புப் பார்வைகள் எங்கே ஒளிந்து கொண்டன?
கடவுளே யாவருக்கும் நல்ல மனங்களைக் கொடு.
பிரார்த்தித்தாள்.
அத்தியாயம் ஒன்பது
மாணவர்கள் அனைவரையும் பரீட்சைக்குத் தயார் படுத்திக் கொண்டிருந்தார்கள். சிறப்பு வகுப்புகள் எல்லாம் எடுத்துப் படிப்பித்தார்கள். ஒவ்வொரு ஆண்டும் நல்ல திறமைச் சித்திகள் பெற்றுப் பல்கலைக்கழகத்திற்கு எடுபடும் மாணவர்களைக் கொண்டது அக்கல்லூரி. தலைநகரின் நடுமையத்தில் இரண்டு மாடிக் கட்டிடங்களைக் கொண்டது அது.
அருகே பெரிய விளையாட்டு மைதானம்.
நூறு யார் தள்ளி நகரின் கலைக்கல்வித்துறைக்கென லைப்ரறி……அப்பால் ரீகல் தியோட்டர்…. முனியப்பர் கோயில்…. திறந்த வெளி அரங்கு…. ஹோட்டல்…. மகளிர் கல்லூரி….
பிருந்தா படிப்பிக்கும் கல்லூரியில் உயர்தர வகுப்பு மட்டுமே பெண்களைப் படிக்க அனுமதித்திருந்தார்கள்.
இதனால் இளைய உள்ளங்களுக்குக் குதூகலத்திற்கும் குறைவில்லை.
அதிபர் கடுமையானவர். கட்டுப்பாடுகளில் கவனம் செலுத்தி வருபவர்; நல்லவர். பிருந்தா கூட. கவனமெடுத்து மாணவர்களுக்குப் படிப்பிக்கவும் கல்லூரி விழாக்களில் விளையாட்டுப் போட்டிகள் போன்ற நிகழ்ச்சிகளில் கல்லூரிக்காக உழைக்கவும் முடிகிறது.
இப்போது கூட –
பரீட்சைக்கு சிறப்பு வகுப்பு எடுத்து மாணவர்களுக்கு மீளப்படிப்பு நடத்தத் தொடங்கியிருந்தாள்.
மாணவர்களின் கல்வி வளர்ச்சியில் தனி அக்கறை கொண்டிருந்த பிருந்தா, நவீனின் பரீட்சை வெற்றியிலும் தனது முழுப்பங்கையும் செலுத்தினாள்.
வகுப்பிலேயே நல்ல மாணவனும் படிப்பில் கெட்டிக் காரனுமான நவீன் சிறந்த புள்ளிகளுடன் பல்கலைக்கழகத்திற்குள் அனுமதி பெற வேண்டும் என்பது அவளது முழுமூச்சுடன் கூடிய உழைப்பு மட்டுமின்றிப் பிரார்த்தனையாகவும்கூட இருந்தது.
அதனால்தான் நவீனைத் தனது வீட்டிற்கு அழைத்துச் சென்று சிறப்பு வகுப்பு கூட நடத்தினாள்.
“நவீன்! நீர் நல்லாப் படிக்கக்கூடியவர். மனதுகளை அலைய விடாது நல்லாப்படியும்…. நான் என்றும் உறுதுணையாக இருப்பேன்….. நிச்சயமாக நீர் பல்கலைக்கழகத்துக்கு எடுபட்டு எமது கல்லூரிக்குப் பெருமை வாங்கித் தருவது மாத்திரமன்றிப் பிறகு ஐந்தாண்டுகளில் ஒரு பட்டதாரியாகவும் கூட வருவீர்”.
“ம்….. நான் பட்டதாரியாக வந்தபின் நாட்டிலுள்ள வேலையற்றோர் சங்கத்தில் உறுப்பினர் ஆகிறதா?” சிரித்தபடி கேட்டான்.
அவனது தலைமயிரை வருடி….. தலையை உலுப்பி விட்டாள். பின் தலையைத் தாழ்த்தி, முகத்தைச் சரித்து, கூர்ந்து நவீனைப் பார்த்தபடி கேட்டாள்.
“நவீன் எனக்காகவாவது பரீட்சையில் பாஸ் பண்ணுவீர்தானே” “கட்டாயம்……. நான் பெயிலாகிவிட்டால் உங்களது காதலை இழந்திடுவேனே”.
அவளும் சேர்ந்து சிரித்தாள்.
வெளியே மெல்லிய குளிந்த காற்று வீசிக் கொண்டிருந்தது. பிருந்தாவின் தயார் பக்கத்து வீட்டுக்கு டிவி பார்க்கப் போயிருந்தாள்.
பிருந்தா நவீனைப் பரீட்சைக்குத் தயார் படுத்திக் கொண்டிருந்தாள்.
“நவீன் சோதனைக்கு ஒரு கிழமை இருக்கு. கவனமாகப் படியும். விடியவும் எழும்பிப் படிக்கிறனீரே?” கேட்டாள்.
“அதிகாலையில் நித்திரையை விட்டுத் தாய் வந்து உலுப்பி எழுப்பாவிடில் பாடசலைக்கு அரோகரா தானே”…… சொல்லவில்லை.
‘ம்’ கொட்டினான்
“விடிய எழும்பிப் படிக்கேலாட்டி இங்க வந்து படும், நான் எழுப்பி விடுறேன் நீர் படிக்கலாம்”
நவீன் நிமிர்ந்து அவளைப் பார்த்தான்.
“டீச்சர் நீங்கள் ஏன் இப்படிக் கூடுதலாக அக்கறை எடுக்கிறீர்கள்? உள்ளத்தைத் தொட்டு சொல்லுங்கள்…… என்னைப் போலவே நீங்களும் என்னை விரும்புகிறீர்களா? நேரே சொல்லுங்கோ, உன்னைக் காதலிக்கிறேன் என்று சொல்லுங்கோ” சொல்ல நினைத்தான்.
அவனது பார்வையின் அர்த்தத்தினைப் புரிந்து கொண்டாள் அவள்.
சிறிது நேரம் இருவரும் மௌனமானார்கள்.
நேரம் பதினொரு மணி. வீட்டுக்குப் போக எழுப்பினான்.
“அம்மா தேடுவாள்” மனது சொல்லியது.
ஏன் இன்று மட்டும் மனது சொல்லிற்று?
இப்படி இருவரும் தனியே எத்தனை நாட்கள் இருந்திருக்கிறார்கள். இன்று மட்டும் நவீனின் உடல் சூடு கண்டது. அவசரமாக எழுந்து சென்றான்.
அவள் எதுவும் கேட்கவில்லை.
அத்தியாயம் பத்து
“நவீன் உன்னை டீச்சருடன் இணைத்துக் கதைக்கினமே, உன் காதில் விழவில்லையா?”
தாய் கேட்டாள்.
நவீன் விளக்கைக் குறைத்து வைத்து விட்டு நிமிர்ந்து சாய்ந்து உட்கார்ந்தபடி தாயைப் பார்த்தான்.
“என்னடாப்பா அப்படிப் பார்க்கிறாய்?”
“உனக்கும் டீச்சருக்கும் காதல் என்டு சனம் கதைக்குதே அதான் கேட்டேன்”
சிரித்தான் அவன்.
“அம்மா உங்களுக்குத் தெரியும் தானே டீச்சர் எப்படிப்பட்டவர் என்று. கஷ்டப்பட்டு உழைக்கிறார். மாணவர்களைப் பிடித்துப் போய் விட்டால் இலவசமாகவே பாடம் சொல்லிக் கொடுக்கிறார். எல்லா மாணவர்களையும் போலவே எனக்கும் தனிக் கவனம் செலுத்திப் படிப்பிக்கிறார். என்னை முழுதாக நம்புகிறார். ஏனெனில் ஆண் துணை இல்லாத வீட்டில் எனக்கு இவ்வளவு உரிமை தந்து உலாவ விட்டிருக்கிறாவே. கடைப்பக்கம் போவதற்குக் கூட என்னைத்தானே அழைக்கிறா. சனம் ஆயிரம் சொல்லட்டுமம்மா. நம்மிடையே எந்தவித தவறும் இல்லாமல் பழகி வருகிறோம்”.
தாய் பெருமூச்சு விட்டாள்…….
அம்மாவுக்குத் தெரியாது தானே .. எனது மனம் பிருந்தாவின் மீது படர்ந்தது…… கவிதையாய் ……. கனவாய். இப்போதும் எனது மனம் சொல்லத் துடிக்குது. ஆனாலும் ஏதோ தடுக்க… ஓ டீச்சர் ஐ லவ் யு. உங்களது பார்வை…. ஏக்கம்… என்மீது உங்கள் மனமும் தாவுகிறது புரிகிறது. ஆனாலும் சொல்ல முடியாமல் ஏதோ தடுக்கிறது…வயது கட்டுப்பாடு…ஆசிரியர் மாணவர் தகுதி…இவைகளே தடைகளாகின…
கண்களில் எரிச்சல் எடுத்தது. அழுத்தித் துடைத்தான்.
கட்டிலில் சாய்ந்தபடி தலையணையை மடிமீது வைத்து ‘அம்மா காற்றாடியைப் போட்டுவிடும்மா” என்றான்.
தாயும் மின்விசிறி சுழல சுவிட்சை அழுத்தினாள். மீண்டும் தாய் கேட்டாள்.
“நவீன் உன்னைத்தான் நம்பியிருக்கிறேன். நீ சின்னப் பிள்ளையாக இருக்கும் போது உன் அப்பா சொல்லிக் கொள்ளாமல் ஓடிப்போனார்….”
நவீன் தாயையே பார்த்துக் கொண்டிருந்தான். “எந்தவிதச் செய்தியும் கிடைக்காமல்… அவர் இறந்து போனார், என்று ஜனங்கள் சொல்ல… எனது பூவும் மஞ்சளும் இழந்து, வெள்ளைப் புடவைக்குள் விதவையாக நுழைந்து, உன்னை ஆளாக்கப் பட்ட கஷ்டம்….”
தாய் அழுவது இவனுக்கு ஏதோ மாதிரி இருந்தது. எழுந்து தாயை அணைத்தபடி கட்டிலில் உட்கார வைத்தான்.
“அழாதீர்கள் அம்மா… அப்பா ஓடும்போது நீங்கள் வெள்ளைப் புறாவானது….. நான் மனிதனாக நீங்கள் உழைத்தது… தெரியாதும்மா. போனது போகட்டும் நானிருக்கிறேன் அம்மா.”
தாய் நவீனைப் பார்த்து…அவனை அணைத்து நெற்றியில் முத்தமிட்டாள்.
”அப்பா! அம்மாவின் கண்ணீருக்குக் காரணமான நீ திரும்பி வந்தால் நான் நிச்சயம் கொலைக்காரனாவேன். செத்துப் போனவர் செத்தவராகவே இருக்கட்டும்”.
மனதுள் நினைத்தான்.
எங்கோ சாமக்கோழி கூவி ஓய்ந்தது.
முன்பெல்லாம் தாய் இப்படிச் சொல்லி அழும்போது ஆத்திரப்பட்டிருக்கிறான். ஆனால் இப்போது பிருந்தாவின் நட்புக் கிடைத்தபின் நவீன் மாறியே போயிருந்தான். கோபப்படுவதைக் குறைத்திருந்தான். சில சமயம் தன்னையே நினைத்துச் சிரித்தும் கொள்வான்.
“அப்பாவால் எங்கள் குடும்பத்திற்கு ஏற்பட்ட களங்கத்தை என்னால் சரிக்கட்ட அம்மா நினைக்கிறாள். என்னால் சோதனை நேரத்திலும் படிக்க முடியவில்லையே….. டீச்சரின் கனவுகள் பொடியாய்த்தான் போகுமோ?”
தாய் தூங்கி வெகு நேரமாகியிருந்தது.
எழுந்து பின் பக்கம் போய்விட்டுக் கிணற்றடியில் கால்களைக் கழுவிவிட்டு வந்து தரையில் உட்கார்ந்தான்.
“இண்டைக்கு நித்திரை கொண்ட மாதிரித்தான்” கஸட்டை மெல்லியதாக ஓடவிட்டான்.
இளையராஜா பாடல் ஒலித்தது.
– தொடரும்…
– ஸ்நேகம் (நாவல்), முதற் பதிப்பு: சித்திரை 1999, காந்தளகம், யாழ்ப்பாணம்.