ஸோ வாட்? தத்துவம் தெரியுமா உங்களுக்கு? நம்மைப் பாதிக்கப்போகும் நிகழ்வை எதிர்கொள்ளும் முன், ‘அதனால் என்ன?’ என்று கேட்டுக்கொள்ள வேண்டும். இரண்டு பதில்கள் கிடைக்கும். அதில் இரண்டாவது பதிலுக்கு மனசாட்சிக்கு விரோதம் இல்லாமல் உங்களுக்கு நீங்களே பதில் சொல்லிக் கொள்ளுங்கள். அவ்வளவுதான் அடுத்து என்ன செய்ய வேண்டும் என்ற தெளிவு வந்துவிடும்.
இதைச் சொல்லும்பொழுது எனக்கு ஏன் இவ்வளவு மூச்சு வாங்குகிறது என்று நினைக்கிறீர்களா? ரயிலைப் பிடிக்க ஓடிக் கொண்டிருக்கிறேன். நேரமாகிவிட்டது. ரயிலைப் பிடிக்க முடியாவிட்டால் என்னவாகும் என்ற என் கேள்விக்கு நானே கேட்டுக்கொண்ட So what – க்கான பதில்கள், 1. இன்று வரவில்லை என வீட்டில் சொல்லிவிடலாம். இன்னொரு நாள் போய்க்கொள்ளலாம். 2. ஐய்யய்யோ நாளை பெண்ணைப் பார்த்தே ஆக வேண்டும். இல்லையெனில் கல்யாணம் நடக்க இன்னும் தாமதமாகலாம்.
அதுதான், அந்த இரண்டாவது பதிலின் பதற்றம் தான் என்னை ஓடவைத்து.. இதோ..இரை முடித்த மலைப்பாம்பு மெல்ல அசைவது போல் நகரும் ரயிலைப் பி… நல்லவேளை விழ இருந்தேன். இருங்கள் சற்று ஆசுவாசப்படுத்திக் கொண்டு, என் இருக்கையில் அமர்ந்து கொள்கிறேன்.
ஒவ்வொரு முறையும் வெகு முன்னதாகவே வந்துவிடுவேன். ரயில் நிலையங்களில் தென்படும் அனைத்துரக மனிதர்களின் முகபாவங்களைப் பார்ப்பது எனக்குப் பிடித்தவைகளுள் ஒன்று. அப்புறம் சார்ட் தயாராகி ஒட்டியவுடன் பசை காவதற்கு முன்னர், என் பெயரையும் இருக்கையையும் விரலால் ஒத்தி உறுதிபடுத்திக் கொண்டு, அப்படியே மெல்ல அக்கம் பக்க இருக்கைகளில் எத்தனை “F” எனப் பார்த்துவிடுவதும் வாடிக்கை. பெரும்பாலும் M50கள். அருதிப் பெரும்பாலும் F70 என்றே சார்ட்கள் செப்பும். ஏண்டாப்பா, பாட்டியோட மிடில் பர்த்துல படுத்துக்கோயேன்”களும், குறட்டைகளின் விதவிதமான ரீங்கார ஓங்காரங்களும்தான் என் வழித்துணை.
எவ்வளவு திடமாகத் தெரிந்தாலும் சில விஷயங்களை மீண்டும் மீண்டும் உறுதி செய்துகொள்ள வேண்டி இருக்கும். ஜிப் போட்டிருக்கிறதா, தலை கலையாமல் இருக்கிறதா என்பது போலவே அது 5 என்று தெரிந்திருந்தாலும், கடக்கும் டி.டி.ஆரிடம் அது 5 தான் என்பதை உறுதி செய்துகொண்டு, என் எண்ணுக்கு…
வார்த்தைகளைக் காணவில்லை என்று பார்க்கிறீர்களா? வரவில்லை சார். அப்படி ஓர் அழகு. அதுவும் என் இருக்கையில் அமர்ந்திருக்கிறாள். இதுவரையில் நான் செய்த ரயில் பயணங்களின் மொத்த டிக்கெட்டுகளின் விலைக்கும் இன்று நியாயம் செய்துவிட்டது IRCTC – ஆரம்பத்தில் இதைப் பாம்பு கீம்பு என்று ஏதோ சொன்னேன் இல்லையா, மறந்துவிடுங்கள். தாயின் சேலையில் கட்டிய தொட்டில் போன்றல்லவா நம்மை ஒரு இடத்தில் இருந்து இன்னொரு இடத்துக்கு ஏந்திச் செல்கிறது இந்த ரயிலம்மை.
என்னை நிமிர்ந்து பார்த்தவளின் கண்கள் ‘என்ன’ என்றன. நம்பரைப் பார்த்தேன். புரிந்துகொண்டவளாய் நகர்ந்து அமர்ந்தாள்.
நானும் அவளும் மட்டும். சற்றுத் தள்ளி சைட் அப்பரில் ஒரு ‘வயிறுதள்ளி’ அங்கிள் அமர்ந்து எதையோ சாப்பிட்டுக் கொண்டிருந்தார். மசாலா வாசனை பசியைக் கிளப்பியது.
பதற்றப்படாதது போலவே அமர்ந்து பயணக்காற்றை முழுதாக முகத்தில் வாங்கிக் கொண்டேன். யாருடனோ போனில் பேசிக் கொண்டிருந்தவள், பேச்சு முடிந்துவிட்டது என்பதை உணர்த்தும் விதமாய், போனை காதிலிருந்து விடுவிக்கும்பொழுது முடியைச் சிலுப்பிக் கொண்டாள். கண்டீஷ்னர் வாசம் மசாலாவை மங்கச் செய்தது.
ஹாய். எப்பிடியும் இன்னும் கொஞ்ச நேரத்துல ஏதாவது கேட்டு பேச ஆரம்பிப்பீங்க, எனிவேஸ் ஐ’ம் விபா.”
அவ்வளவுதான். படீர் எனக் கேட்டுவிட்டாள். பெண்களுக்கு எல்லாமே வெகு எளிது, அவர்கள் மனது வைத்துவிட்டால். இதே வார்த்தைகளை நான் சொல்ல நினைத்திருந்தால் திருச்சி, திண்டுக்கல், மதுரை போர்ட்டர் எல்லாம் வந்தபின்னும் சொல்லலாமா வேண்டாமா என்று யோசித்துக் கொண்டிருந்திருப்பேன்.
ஹ..ஹாய்.” இப்படியே மீண்டும் ஒருமுறை படித்துப் பாருங்கள். இவ்வளவு நேரமாக எல்லாவற்றுக்கும் எவ்வளவு வியாக்கியானமாக விளக்கிக் கொண்டிருந்தேன். இப்பொழுது ஒரு வார்த்தைக் கூட வரவில்லை. ம், எப்படி இருக்கிறது பாருங்கள்.
அவள் தோளைக் குலுக்கிக்கொண்டு ஜன்னலைப் பார்த்தாள்.
சென்னையா நீங்க? ட்ராவலிங் டு மதுரை?”
கேட்டது நான்தான். என் தலைமுடி சரியாக இருக்கிறதா என்ற கவலை வேறு ஆட்கொண்டுவிட்டது என்னை. நான் கேட்டதும் என்னைத் திரும்பி அமைதியாகப் பார்த்தாள்.
யெப். சென்னைல வொர்க் பண்றேன். ஆனா மதுரைலதான் வீடு. உடனே வீடு எங்கன்னு கேட்காதீங்க. டாக் அபொட் சம்திங்.. சம் மூவி, சாங்க்.. சம் ஜென்ரல் ஸ்டஃப்ஸ்.. ரைட்ட்ட்…”
அவள்soன்னது சற்றே கோபம் வரவழைத்தது. அதற்காக,விட்டுவிடமுடியுமா? அழகாக இருக்கிறாள் என்பதையும் தாண்டி, இப்பொழுது அவள் மீது ஈர்ப்பு அதிகமாக, அவளுடைய தெளிவான அணுகுமுறை காரணமாயிற்று.
நான், கேஜரிவாலையும் ‘முதல்வன்’ அர்ஜுனையும் முடிச்சுப்போட்டு பேச ஆரம்பித்து கொஞ்சம் கொஞ்சமாக அஜித்தின் ‘சால்ட் பெப்பர்’, ‘மங்காத்தா’ வில் பிடித்தது எனவும் ‘வீரத்’தில் பிடிக்கவில்லையெனவும் கருத்துகள் பரிமாறினேன். ஆமோதித்து முடியசைத்துச் சிரித்தாள். அப்பர் அங்கிள் தூங்க ஆரம்பித்திருக்கிறார் என்பதை லேசான சப்தம் உணர்த்தத் தொடங்கியது.
உங்க லவ்வருக்கு உங்க ஹியூமர் சென்ஸ் ரொம்பப் பிடிக்குமா?” என்றாள். விஷம் இருந்தால் குடித்துவிடலாம் போல் இருந்தது. லவ்வரே இல்லை என்பது ஒரு பக்கமும், காமெடியனாக்கி விட்டாளே என்பது நடுப்புறமும் வருத்தியது.
பொண்ணு பார்க்கத்தான் இந்த ட்ராவல். வீட்ல பேசிட்டு லாஸ்ட் மினிட்ல சொன்னாங்க. அதான்.”
ஓஹ்” என்று தலையசைத்தவள் கொஞ்ச நேரம் ஜன்னலைப் பார்த்துக் கொண்டிருந்தாள். இரவில் ஜன்னல், ரயில் பயணம், நிலவு என்று நிறைய பேர் கவிதை எழுதி அக்கப்போர் பண்ணி இருக்கிறார்கள் என்பதை அறிவேன். ஆனாலும் அந்தச் சூழல் எனக்கு ரம்மியமாத்தான் இருந்தது. அவளின் ‘ஓஹ்’வுக்குப் பின்னால் ஏதோ இருப்பது போல் இருந்ததால் அவள் முகத்தைப் பார்த்தேன்.
லவ் மேரேஜ்ல்லாம் ஐடியா இல்லையா உங்களுக்கு?”
மீண்டும் விஷம். மெதுவாகச் சொன்னேன் : அது எப்பிடி இல்லாம இருக்கும். பட். ஒரு அனலைஸ் பண்ணிப் பார்த்தீங்கன்னா, படிக்கும்போதே லவ் பண்ணி, அத சக்ஸஸ்ஃபுல்லா கன்ட்டினியூவ் பண்ணாத்தான் லவ் மேரேஜ்க்கு சான்ஸஸ் அதிகம். அப்போ யாரையும் லவ் பண்ணாம அதுக்கப்புறம் வேல, அதுல ப்ரஷர், செட்டில் ஆகணும்னு ஓடிட்டு இருக்கும்போது.. நின்னு நிதானமா லவ் பண்ண முடியறது இல்ல..”
புருவம் நெளித்துப் பார்த்தாள். தொடர்ந்தேன் :
வொர்க் பண்ற இடத்துல லவ் பண்றது மட்டும்தான் அடுத்த சான்ஸ். பட். ரொம்ப ரேர்தான். ஒண்ணு அல்ரெடி மேரீட், இல்லேன்னா எங்கேஜ்டா இருக்காங்க.”
சிரித்துவிட்டாள். சிரிப்பினூடே, ட்ரூ ட்ரூ” என்றாள்.
ஜில்லென்று காற்று உள் நுழைந்து கொண்டிருந்தது.
டோன்ட் யூ திங்க்.. முன்ன பின்ன தெரியாத ரெண்டு பேர் கல்யாணம் பண்ணிக்கிட்டு…” எனத் தோளைக் குலுக்கி, விட்டால் வாந்தியே எடுத்துவிடுவது போல் பாவனை செய்தாள்.
திக் என்றது. ஆம் என்றும் தோன்றியது. இருபது இருபத்தைந்து வருடங்களாக வெவ்வேறு இடத்தில் வளர்ந்து, யாரென்றே தெரியாத ஆணும் பெண்ணும் பூர்ணமாய் அடுத்தவரது பெயரின் ஸ்பெல்லிங்கைக்கூட தெரிந்து வைத்திருக்காத நிலையில் இணைவது என்பது முட்டாள் தனமாகத்தான் பட்டது.
தொடர்ந்தாள் : காதல்ங்குறது புனிதம், இட்ஸ் டிவைன் அப்பிடி இப்பிடில்லாம் சொல்ல வர்ல.. ஆனா இப்போதைக்கு இந்த ஜாதி எக்ஸட்ரால இருந்து கொஞ்சம் கொஞ்சமா வெளில வர்றதுக்கு லவ் மேரேஜ்ஜஸ் மட்டும்தான் ஒரே டூல்னு நினைக்கிறேன்.”
உடனே மறுப்பதுதானே ஹீரோத்தனம். இல்ல. பையன் என்ன ஜாதியோ அதத்தான் ஃபாலோ பண்றாங்க.”
தோளைக் குலுக்கினாள். இருக்கலாம். ஆனா ஓவர் எ ப்ரீயட், அது சரியாகிடும். எங்க தாத்தாவும் பாட்டியும் வேற வேற கேஸ்ட், அப்பாவும் அம்மாவும் வேற.. இப்போ கொஞ்சம் தெளிவா இருக்கோம். எங்க வீட்டோட அடுத்த ஜெனரேஷன் இன்னும் தெளிவா இருக்கும்னு நினைக்கிறேன்.”
அதுக்காக, லவ் பண்ணாதவங்கள்ளாம் அப்பிடியே இருக்குறதாங்க? எவ்வளவோ காரணங்களால லவ்வே பண்ண முடியாம, லவ் பண்ணப்படாத ஆட்கள்லாம் என்ன பண்றது?”
என் கவலையையும் என் நிலையையும் என் கோபத்தையும் ஒருங்கே சேர்த்து அந்தக் கேள்வியைக் கேட்டேன் என்பது அவள் பார்வையில் தெரிந்தது.
இப்படி பலமுறை நடந்திருக்கிறது எனக்கு. யாரிடமாவது எதைக் குறித்தாவது மிகத் தீவிரமாகப் பேசிக்கொண்டிருக்கும் பொழுது சட்டென்று ஒரு மௌனம் ஆட்கொண்டுவிடும் அந்த இடத்தை. அதுவரை பேசிய வார்த்தைகள் எதுவும் அங்கு நிலைகொள்ளாமல் நிச்சலனமாக இருப்பது போல் ஒரு தோற்றம் ஏற்படும். அப்படித்தான் இருந்தது.
இருவரும் ஜன்னலின் வழியே தெரியும் திடீர் வெளிச்சக் கீற்றுகளையும் இருளையும் பார்த்துக்கொண்டே இருந்தோம். வெளிச்சம்-இருள் இரண்டுக்குமிடையே சோடிய வெளிச்சங்கள் வசீகரமாய்க் கடந்து கொண்டிருந்தன அவ்வப்பொழுது. அதுபோலத்தான் வாழ்க்கையும். இந்தப் பயணமும் அப்படியான ஒரு சோடிய மஞ்சள் கீற்றாகத்தான் தெரிந்தது.
மௌனப் பனிக்கட்டியை உடைத்தாள்.
அப்போ படிக்கும்போதே லவ் பண்ணலேன்னா, லவ் மேரேஜ் நடக்குறதுக்கு சான்ஸே இல்லைன்னு சொல்றீங்க?”
இல்லைன்னு சொல்லல, கம்மின்னு சொல்றேன்.”
மீண்டும் மௌனம்.
பை த வே.. உங்க லவ்வர் லக்கி. இவ்ளோ தெளிவா பேசுற பொண்ணு, இவ்ளோ அழகாவும் இருக்குறது ரேர் காம்பினேஷன்.. அதான்.”
சிரித்தாள். அந்தச் சிரிப்பில் முதல்முறையாக வெட்கம் புகுந்துகொண்டது போல் இருந்தது. இப்படி நேருக்கு நேர் சோல்வேன் என்று எதிர்பார்த்திருக்கமாட்டாள் போல.
நானும் படிக்கும்போது யாரையும் லவ் பண்ணது இல்ல. இப்போ ஒர்க் ப்ளேஸ்ல ஏகப்பட்ட பசங்க. ஒண்ணு ஒரேயடியா அல்ட்ரா மாடர்னா இருக்காங்க.. இல்ல ரொம்ப கண்ட்ரி சைடா இருக்காங்க.”
கடவுள் பாதி மிருகம் பாதியா வேணுமா?” கேட்டதும் சிரிப்பாள் என்று நினைத்தேன்.
எக்ஸ்கியூஸ்மி” என்று சொல்லி எழுந்து பாத்ரூம் நோக்கிப் போனாள்.
வந்து, படுக்கையைச் சரிசெய்து ஓக் கேஸ்ஸ். செமயா டைம் போச்சு.. ஸ்லீப்பி.”
இவ்வளவு நேரம் கேட்காத அப்பர் பெர்த் அங்கிளின் குறட்டைச் சத்தம் கேட்கத் தொடங்கியது.
பெண் பார்த்து, ஓ.கே. செய்து, கல்யாணத் தில் ஏக கலாட்டா, தடபுடல், அப்பாவுக்குக் காய்ச்சல் என ஏதேதோ கனவுக்காட்சிகள் மங்கலாகத் தெரியத் தெரியத் தூங்கிப் போனேன், ரயிலின் இரும்பு வாடையோடு.
முகத்துக்கு நேரே சொடுக்குப் போடும் சத்தம் கேட்டதும் எழுந்தேன். மசமசவென விடிந்து கொண்டிருக்க, மதுரையில் நங்கூரமிட்டு நின்றது ரயில்.
சார், செம தூக்கமா,” கேட்டவளைப் பார்த்துச் சிரித்துவிட்டு, அவசர அவசரமாக முகம் கழுவிக்கொண்டு வந்து அவள் சொல்லாமலே அவள் பேக்கேஜையும் எடுத்துக்கொண்டு இறங்கி, படிகளில் ஏறி வெளியே வந்து ஆட்டோக்கள் அருகில் பெட்டியைக் கீழே வைத்து விட்டுத் திரும்பிப் பார்த்தால், போனில் பேசிக்கொண்டே தூரத்தில் வந்துகொண்டிருந்தாள்.
ஆட்டோக்காரர்களிடம் ‘வேண்டாம்’ எனத் தலையாட்டிக் கொண்டிருக்கும் பொழுது அருகில் வந்தவள்.
ஓக்கேஸ்.. தேங்க்யூ..” என்றாள். எப்போது பெர்ஃப்யூம் போட்டாள்?
ஒரு கண் சிமிட்டலில் விடைபெற முயன்றேன்.
இன்னிக்கு ஈவ்னிங் விஷால் மால் வரீங்களா, கேன் வீ மீட்?”
சரியென்று தலையாட்ட நினைத்து, சட்டென்று சுதாரித்தேன். ஹலோ, விளையாடுறீங்களா, ஈவ்னிங் பொண்ணு பார்க்கப் போறேங்க. போகலேன்னா அவ்ளோதான்.”
என்னாகும், ஸோ வாட்?” என்று கேட்டுச் சிரித்தாள்.
இரண்டு கேள்விகள் கேட்டுக் கொண்டேன். 1. போனால் பெண் பார்க்கலாம். 2. போகாமல் விஷால்மால் போனால், காதல் திருமணம்.
எனக்குள் என்ன பதிலைச் சொல்லிக்கொண்டேன் என்றா கேட்கிறீர்கள்?
ஆட்டோ எஃப்.எம்.மில் எஸ்.பி.பி.யின் குரல் ரம்மியாய்க் கேட்கிறது பாருங்கள்.
வாழ்க.. காதல்.. காதலின் தீபமொன்று…”
– மார்ச் 2014
சூப்பர்
So வாட்