“எங்க அப்பாவுக்கு ஒரு பையன் வேணும்னு ஆசையா இருந்துச்சா…. வேணி அம்மு துர்கான்னு வரிசையா பொட்டையா போச்சா அப்பரம் நான் வேர பொண்ணா போய்ட்டனா… ரொம்ப கசந்துட்டனா……அதா வேம்புன்னு பேர் வெச்சுட்டாங்க.. அப்படி வெச்சா அடுத்து பையனா பொறக்கும்னு எவனோ சொன்னானா.. அதே மாதிரி என் தம்பி பொறந்தான்.. அதனால எங்கப்பாக்கு என்ன புடிக்காமயே போயிருச்சு.. நீயே சொல்லு……..அது ஏந்தப்பா…?”
“ஏந்தப்ப்பா” எனும் போது அவள் கண்கள் சொருகும். நறுக்கிய தேன்மிட்டாய் வாசம் அப்போது எழும்பும்.
கனவுக்குள் இருந்து குரல் மட்டுமே கொட்டுவது போல அமர்ந்திருந்தேன். நேரம் பற்றிய கவலை இல்லை எனக்கு. ஏனோ தூரம் பற்றிய கவலை இருந்தது. வேம்பு எப்போதோ யாரிடமோ சமாதானமற்ற குரலில் மெல்ல கூறியது, இப்போது தெளிவாக கேட்டது.
வேம்புவின் குரலில் ஒரு வகை ஈர்ப்பு இருக்கும். இனிமையானது என்றெல்லாம் சொல்ல முடியாது. தெனாவெட்டு தெறிக்க பாவாடை சட்டை போட்டிருக்கும் அந்த குரல். அப்படி சொல்லி விட்டு வெகு இயல்பாக தன் நடையை கட்டிய வேம்புக்கு திரிஷாவின் நடை. இன்னும் கொஞ்சம் விவரிக்க வேண்டுமெனில் அவள் நடக்கையில் வெளி அசைந்து அசைந்து முன்னும் பின்னும் நகரும். எல்லாவற்றுக்கும் டோன்ட் கேர் மனநிலை தான். ஊரிலிருக்கும் பெரும்பாலான பையன்களின் கண்ணில் அவள் தான் ராணி. தனக்கு வேம்பு என்ற பெயர் பிடிக்காது என்று பள்ளி சேர்க்கையில் தானே தனக்கு வைத்துக் கொண்ட பெயர் தேவமங்கை. நிஜமாலுமே அவள் தேவமங்கை மாதிரி தான் இருந்தாள். எங்களூர் தேவமங்கைக்கு ரெபரன்ஸ் வேம்பு தான்.
சற்று முன்பு வரை என் உலகில் இருந்து வேம்பு என்ற ஒரு பேரழகி காணாமல் தான் போயிருந்தாள்.
சாவு வீட்டுக்கு வந்து விட்டு அழவும் முடியாமல்…. அழுவது போலவும் இருக்க முடியாமல் தவித்திருப்பது மிகவும் கடினம். தாத்தாவின் தம்பி தான். அவரும் தாத்தா தான். விருப்பு வெறுப்பு தாண்டி நிலைத்த பார்வையில் இடைவெளியற்ற நேர்நோக்கில் அமர்ந்திருந்த போது பழைய முகங்கள் சில, என்னை சூழ்ந்து கொண்டன.
“டேய்…. அதியா … எவ்ளோ வருசமாச்சுடா… ஊருக்கு வந்து…. நல்லா, பெரிய ஆளா ஆகிட்ட…. என்ன முடியெல்லாம் கொட்டி போய்ச்சு போல…. கல்யாணம் கட்டிக்கிட்டயாமா…… இந்த மாலினி புள்ளைய கட்டிக்கவன்னு தான் நினைச்சோம்.. கடுக்கா குடுத்துட்டு போய்ட்டியே… மாலினிய மட்டுமா… வனிதா புள்ளையும் தான்டா லவ் பண்ணுன….”
எனக்கு சிரிப்பு வந்தது. ஆனாலும்… கண்கள் அடக்கிக் கொண்டேன். என்னை சுற்றி அமர்ந்திருந்த பெண்களை பொதுவாக பார்த்தே பேசினேன். சிலரை நன்றாகவே அடையாளம் தெரிந்தது. சிலரை கொஞ்சமாக. சிலரை… சற்று தூர நினைவுகளில். ஒருவர் விட்ட இடத்தில் இன்னொருவர் தொடர…… சாவு வீட்டுக்கு போன நான்.. ஆட்டோகிராப் சினிமா போல பழைய நினைவுகளில் மூழ்க வேண்டியதாகிப் போனது. தொடர் பேச்சினூடாக எனக்கு இடப்பக்கம் அமர்ந்து, ஒடுங்கிய கன்னங்களில் இல்லாத சிரிப்பை பூட்டிக் கொண்ட ஒருத்தி.. “அதி…… என்னமோ சினிமா படம் எடுக்க போறியாமா….. கேள்விப்பட்டேன்” என்றாள்.
நான் வெறுமனே வேறு ஏதோ சொல்லி சமாளிக்க எத்தனித்த போதும்… அந்த பெண்ணை எனக்கு சுத்தமாக அடையாளம் தெரியவில்லை.
*
மிகவும் பிடித்தவர்களை ரெம்ப இயல்பாக “தேவிடியா புள்ள…….தேவிடியா பையா” என்று அழைப்பாள். அவள் சொல்லும் போது அது சொல்லக்கூடாத வார்த்தையாகவே தெரியாது. அவள் பெரும்பாலும் தனித்தே தான் இருந்திருக்கிறாள். அவளை எப்போது பார்க்க நேரிட்டாலும்.. நாடகத்தில் அவசரத்துக்கு வந்து நடிப்பது மாதிரியேயான உடல் மொழியில் தான் இருப்பாள். பூமியின் எந்த மூலைக்குள் இருந்து வந்தாள் என்றே தெரியாது. அவளின் ஆரம்பமும் எதுவென்று தெரியாது. முடிவும் எதுவென்று தெரியாது. எங்கிருந்து வந்தால் என்றே தெரியாத ஒரு சிறுகுறிப்பு அவளின் சிரிப்பை அங்கே பிடித்து வைத்திருக்கும்.
“என்னடா இப்படி பாக்குற… உங்கம்மாவுக்கும் இது தான் இருக்கும்.. சைஸ் பெருசாவே இருக்கும்.. போய் உத்து பாரு” என்பாள். அதன் பிறகு எவன் அவள் கழுத்தை காண்பான். யாரெல்லாம் அவளை ரசிக்கிறார்கள்.. யாரெல்லாம் அவளை புணர விரும்புகிறார்கள்…-புணர என்பதை இன்னும் கொச்சை தமிழில் அவள் சொல்வதை கேட்கவே ஒரு கூட்டம் வாய் பிளந்து பார்க்கும்- என்று கணக்கு போட்டு சொல்லி சிரிப்பாள். சில நாட்களில் பின்னிரவில் புளிய மரத்தினடியில் நின்று கருப்பசாமியுடன் பேசிக் கொண்டிருப்பாள்.
“கருப்பு நம்ம சாமி தான்” என்பாள். கிறுக்கு என்பவர்களை சிரித்தே நொறுக்குவாள். வார்த்தைகளின் கூட்டு பின்னி பிணைந்து முறுக்கு தின்னும் அவள் அதிகாலை. அவள் அம்மா அடிக்க விரட்டுவாள். வேம்பு என்று யார் கூப்பிட்டாலும்.. அவளுக்கு உள்ளே எதுவோ செய்யும். “நாலாவதும் பொண்ணா பொறந்ததுக்கு நானா காரணம்……. அதுக்கு வேம்புனு பேர் வெப்பாங்களா…….. நான் தேவமங்கை” என்பாள். மீறி பேசுவோரை தயவு தாட்சணியமின்றி இடம் பொருள் ஏதுமின்றி “மூடிட்டு போ..” என்பாள்.
அவள் பேசுவதற்கு தகுந்தாற் போன்ற பதிலை தலையில் அப்படியும் இப்படியும் வைத்து வெற்றிடம் ஆட்டிக் கொண்டே கண்கள் யோசிக்க நெற்றி குவிய பார்த்துக் கொண்டேயிருந்தேன். என் தடுமாற்றம் புரிந்த…….எதிரே இருந்த வனமோஹினிக்கா,……” டே அதியா…….. உனக்கு இவளை மறந்து போச்சுதான.. அதான் பேய் முழி முழிக்கற” என்று சொல்லிக் கொண்டே வெற்றிலை எச்சிலைத் துப்பியது. சிவந்து கிடந்த கால குளறுபடியில் வனமோஹினியின் சிரிப்பு சிதறல் அது.
“என்னடா….. மோஹினியெல்லாம் ஞாபகம் இருக்கு. என்ன மறந்து போய்ட்ட…” என்றவளின் கண்களில் வருந்திக் கிடந்த ஒளியை ஊடுருவினேன்.
“டே.. இவ…” என்று வனமோஹினி சொல்வதற்குள், நானே கண்டெடுத்து விட்டேன். பட்டாம் பூச்சிகள் காட்டுக்குள் சிறு பாறையில் அமர்ந்திருந்த ஊர்க்குருவியின் புன்னகையை உணர்ந்த போது திக்கென்றது.
“ஹே…… நீங்க வேம்பு தான..” என்று கண்கள் மலர்ந்தேன். மறதியின் ஞாபகம் பொல்லாதது. பொலபொலவென தோண்டி எடுத்து கொட்டியதில் வேம்புவின் நடை… பேச்சு.. குரலை… ஒளி படித்த கண்கள்….கோடு போட்ட நெற்றி… கூர் நாசியின் குறும்பு…..என்று குறிப்பெடுத்தேன்…. காலத்தின் குறுக்கு வெட்டில் உடல் நடுங்கி ……….”ச்சே……” என்று தலையில் கை கொண்டு அடித்துக் கொண்டேன்.
“ஏன்டா…” என்ற வேம்புவின் குரலில் அதே கரகரப்பு. அது வேம்பு முகமே இல்லை. அது வேம்பின் உடல் இல்லை. அது வேம்புவே இல்லை. 20 வருடங்களில் எல்லாமே மாறி இருந்தது. பேரழகிக்கான ஒன்றுமே அவளிடம் இல்லை. நரை கூடிய நெற்றியில் கூந்தலின் வெண்மை. சுருக்கங்கள் கொண்ட முகத்தில்… காலத்தின் அறியாமை.
“என்னக்கா இப்டி ஆகிட்டிங்க……? என்னாச்சு…!…..ஐயோ?! என்று கண்கள் குறுக நான் தடுமாறியதை மற்றவர்களும் கண்டார்கள். அடுத்த கொஞ்ச நேரத்துக்கு அங்கே பேச்சு இல்லை. பார்வைகள் தடுமாறின. இனம் புரியாத வெம்மை அங்கே சூழ்ந்தது. இறப்பு வீட்டு வாசலில் இருக்கும் சூழலை விட கொடிய நிறத்தில் எங்களை சுற்றிய வட்டத்தை உணர்ந்தேன். கண்கள் மருள சிரித்துக் கொண்டே, ” ஆமாண்டா பையா… வசயாகுதுல…” என்று சொல்லிக் கொண்டே எழுந்து சென்றாள் வேம்பு.
நேர்மையின் வழி நிற்பவளுக்கு உதட்டோரம் ஒரு வகை புன்னகை எப்போதும் பூத்திருக்கும். எனக்கு தெரிந்து அவளுக்கு நெருங்கிய தோழிகள்…….நண்பர்கள் இருந்ததில்லை. சில காதல்களில் இருந்ததாக ஊருக்குள் பேச்சு. கண்களில் எப்போதும் சோகம் ததும்பும் கேள்விகள் இருக்கும். அவளிடம் எல்லா கேள்விகளுக்கும் பதில் இருந்திருக்கிறது. 90களிலேயே பெண்ணுரிமை குறித்த உடல் மொழி இருந்தது. முற்போக்கு சிந்தனை என்றே தெரியாமல் அதையே தன் இயல்பாக கொண்டிருந்தாள். கிழக்கு கிணற்றில் நீர் எடுத்து சட்டை பாவாடை நனைய ஒரு செங்கல் சிற்பம் போல நடந்து வருவது தான் எப்போது நினைத்தாலும் அவளுக்கான பிம்பமாக என்னில் இருக்கிறது. எங்கிருந்தோ எங்கோ போய்க்கொண்டே இருக்கும் ஒரு தொலை தூர தவிப்பு அவள் நடையில் கண்டிருக்கிறேன்.
அவள் எழுந்து, எதற்கும் எனக்கும் தொடர்பு…… எப்போதும் இல்லை என்பது போல நடந்தாள்.
எப்படி இருந்தவள் இப்படி மாறி போனது குறித்த கவலை என்னை ஆக்கிரமித்தது. நான் அமர்ந்திருக்கும் இருக்கையில் என்னை எதுவோ இன்னும் இன்னும் ஆழமாக அழுத்தியது. முள் கொண்டு கிளறும் பூக்களின் நுனியில் எல்லாம் என் போன்ற யோசனைகள்.
நான் எதோ ஒரு புள்ளியில் தனித்து விடப்பட்டவனானேன். அதுவரைக்கும் என்னை சுற்றி அமர்திருந்த சொந்தங்கள் ஊர் உறவுகள்… தோழிகள்.. நண்பர்கள்.. என்று கூட்டம் கலைந்து விட்டிருந்தது. தாத்தாவை தூக்கும் நேரம் சற்று நேரத்தில் வந்து விடும். கூட்டம் விலக்கி வீதியின் ஓரத்தில் நிகழ்ந்து கொண்டிருந்த வேம்புவின் நடை, சற்று கால் தாழ்த்தி தாழ்த்தி இருந்ததை பார்க்க முடிந்தது.
ஓர் அனிச்சையின் மலருதல் அரும்புதலின் தீவிரத்தில் இருக்கிறது. நான் எழுந்து அவள் சென்ற வீதியில் நடக்க ஆரம்பித்தேன்.
பின்னிரவு பயணம் அலாதியானது. ஆரவாரமற்ற ஆழ்மன குறிப்புகள் அரங்கேறும் ஆகாய நீலத்தில் சற்று ஊதா நிறம் கலந்திருந்தது. தூக்கத்தின் வரைவுகளை சொல்லொணாத் துயரமாக்கிய அவ்விரவை நடுக்கத்தோடு காண்கிறேன். நெடுஞ்சாலையின் நிதர்சனம் நிம்மதியற்றது. லாரியின் அசைவு… அசையாத தூரங்களில் நிமித்தம் தன்னை வேகமாய் மிக வேகமாய் நகர்த்திக் கொண்டிருந்தது.
உள்ளே அதிரும் உடல்மொழியின் சப்தம், வெற்று அமைதியில் கண்கள் மூடியிருக்க… நகர்ந்து கொண்டிருந்ததாக நினைத்த லாரியின் பின்புறம் இந்த லாரியின் வேகம் தன்னை இணைத்துக் கொண்டது. குளிர் காற்றின் உரைதல் வண்டியும் வண்டியும் மோதிய சத்தத்தில் சூடு பரவ உலகம் ஒரு முறை கணம் ஒன்றில் நின்று விட்டு கதறியது.
கண நேரம்தான்.
எல்லாமே மாறிப் போனது.
என்ன நடந்தது என்று யோசிப்பதற்குள் வேம்புவின் அம்மா தலை நசுங்கி மரித்திருந்தது. வேம்புவின் அக்கா குழந்தை எதிரே உள் நுழைந்து சப்பளிந்திருந்த லாரியில் இருந்த கம்பிகளில் குத்தி செத்து விட்டிருந்தான்.
யாரின் கவனம் யாருக்கு பிசகியதோ.. யாரின் சோகம் யாரை கவ்வியதோ.. யாரின் விதி யாரை துரத்தியதோ..
சுத்தியலைக் கொண்டு நான்கு பக்கமிருந்தும் ஒரே நேரத்தில் அடித்தது போல சத்தம் வேம்புவின் காதில் ரத்தம் வர வைத்திருந்தது. நெற்றி கிழித்த ஆணியின் கூர்மையில் குத்திக் கிழிக்கும் நேர்மை. வேம்புவின் இடுப்பு கழன்று கண்கள் மறத்து வானம் பார்த்த போது விடிந்திருந்தது. அவ்வழியே வந்த கடவுளும் சாத்தானும் கூட்டத்தோடு நின்று கை குலுக்கிக் கொண்டிருந்த காட்சி…… கோர விபத்தின் நடுவே ரத்த வாடையின் சாட்சியை சுமந்து கொண்டிருந்தது.
சொல்லி முடிக்கையில் வனமோஹி கண்கள் கண்ணீரால் நிறைந்திருந்தன.
“ஊரே பதபதைச்சு.. அழுது பிரண்டு… மிரண்டு கிடந்துச்சு அதியா. வேம்பு நடை இப்படியா இருக்கும்.. அது ராணி நடையால்ல இருக்கும்…” வாய்விட்டே அழுதாள். அருகில் இருந்தவள் வாய் பொத்தி அழுதாள்.
வனமோஹினியின் அழுகை அங்கே ஆங்காங்கே நின்றவர்களையும் தொற்றிக் கொண்டது. எனக்குள்ளும் என்னவோ புரட்டியது. வேம்புவின் அம்மா என்னை, ” டேய் அதியா….. உங்க பாட்டி எங்க……. கறி எடுக்கவா?….” என்று கேட்கும் குரல் இப்போது என் செவி அருகே இருள் கவ்விய மரணத்தின் சாயலில் கேட்டது.
நான் யோசித்து யோசித்து வேம்புவின் வீ ட்டு வாசலுக்கு சென்றிருந்தேன்.
நிலம் குறுகும்… நிஜம் குறுகும்…….காலத்தின் ஓடைக்குள் நீந்தும் மீனும் குறுகும்.
வாசல் சுருங்கிய நிலத்தில் கால்கள் நடுங்க நின்றேன். ஏனோ வேம்புவை தனியாக பார்க்க வேண்டும் போல தோன்றியது. அந்த வீட்டில் வேம்பின் வாசம் துளி கூட இல்லை. வியர்வை அப்பிய புன்னகையின் வாசத்தில் வேம்புவின் சொத்தை பற்கள் காண ஆவலாய் நின்றேன். வீட்டுக்குள்ளிருந்து வந்து கொண்டிருந்த விசும்பல் சத்தத்தை எனக்குள் உழன்ற சத்தம் நின்ற பிறகு உணர முடிந்தது.
உள்ளேயிருந்து வரும் அழுகை சத்தம் அதிகமாக……. தொண்டை வரண்டு எட்டிப் பார்த்தேன். ஒற்றை அறையின் வாசம் கப்பென்று என்னை அப்பியது.
உள்ளே இருந்த பாதரசமற்ற கண்ணாடி முன் ஒரு யட்சியைப் போல நின்று அழுது கொண்டிருந்தாள். தன்னைத் தானே பார்த்து அழும் போக்கு என்னில் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. வேம்பு விதவிதமாய் அழுது கொண்டிருந்தாள். அழுதழுதே நிலைக் கண்ணாடியை உடைத்து விடும் பொருட்டு தொண்டையை கீச்சிக் கொண்டு வரும் திறந்த வாயின் தீவிரம் நீர் ஒழுக வலித்த காலத்தின் குளறுபடி. அழுது அழுது முகம் வீங்க உயிர் நோக நின்றிருந்தவள்……சட்டேன பின்னால் நிற்கும் என்னை, எதுவோ உந்த…….திரும்பி பார்த்தாள். திரும்பிய நொடி அழுகை அப்படியே……….அப்படியே சிரிப்பாக மாறியது.
அழுகையை கூட சிரித்துக் கொண்டே செய்யும் அவளிடம் எனக்கு உடனடியாக சொல்லத் தோன்றியது….
“வேம்பு உங்களை நான் காதலிக்கறேன்…”