கதை ஆசிரியர்: விமலா ரமணி
இனி ரேவதியின் அழுகை ஓயப்போவதில்லை. நரேனுக்குத் தெரிந்து விட்டது. இனி அவன் என்னதான் சமாதானப்படுத்தினாலும் அவள் கண்ணீரைத் துடைக்க சக்தி இல்லை. ஏன்?
திருமணமாகி ஐந்து வருடங்களாகியும் குழந்தை பிறக்கவில்லை. கோவில், குளம், டாக்டர் என்று எல்லா தரப்பையும் பார்த்தாகிவிட்டது. கர்ப்பப்பை சற்றே சரிந்திருப்பதாகச் சொன்னதால் ‘ஆபரேஷன்’ செய்து அதையும் சரிசெய்தாகிவிட்டது. ஆனால் ரேவதி தரித்த கர்ப்பங்கள் ‘ஓவரீஸிலே’யே தங்கி வளர்ச்சி பெறாமல் ‘அபார்ஷன்’ ஆனபோது ரேவதி துவண்டு போனாள். அதன் பிறகு கர்ப்பப்பையில் ‘பைபராய்ட்’ என்ற கட்டி வந்துவிடவே கர்ப்பப்பையையே எடுக்கும்படி ஆகிவிட்டது.
இனி தாய்மை என்பது கனவுதான்! உறங்கத் தாயின் மடியும், வளரத் தந்தையின் தோளும், வாழ நம்பிக்கையெனும் தாரக மந்திரமும் இனி மறைந்துபோன பழங்கதைகள்.
இவளுக்குக் கிடைத்த இந்தப் பேறுகள் இனி இவள் வம்சத்துக்கு இல்லை! வம்சமே அற்றுப் போய் விட்டது! பின் எங்கிருந்து வரும் வாரிசு? நரேன் இவளைத் தேற்றினான்.
“இதோபார் ரேவதி. குழந்தை இல்லாட்டி என்ன? எனக்கு நீ குழந்தை உனக்கு நான் குழந்தை..”
ரேவதி முகம் திருப்பினாள்.
“பேசாம ஒரு குழந்தையைத் தத்து எடுத்துக்கலாம்..”
“வேண்டாங்க. அந்த குழந்தையைப் பார்க்கும் போதெல்லாம் எனக்குக் கோபம்தான் வரும். ஒரு தாய் ஆகமுடியலியேங்கிற தாழ்வு மனப்பான்மைதான் வரும்.”
எதைச் சொன்னாலும் அதைத் தான் அடைய முடியாத தாய்மையோடு தொடர்புபடுத்தி அழுவதே அவள் வழக்கமாகிப் போனது.
நரேனுக்குப் புரியவில்லை. என்ன வியாதி இது? தன்னைத் தானே நொந்துகொண்டு, தன்னைத் தானே கழிவிரக்கத்தால் இழிவுபடுத்திக் கொண்டு… இந்த உணர்வுகளுக்கு என்ன வடிகால்? இந்த உணர்ச்சிச் சிறையிலிருந்து ரேவதி எப்படி மீளப்போகிறாள்? இந்த மன இறுக்கமே வியாதியாகி அவளை ஒரு பைத்தியமாக்கி விடுமோ?
‘சைக்கியாட்ரிட்ஸ்டி’டம் அழைத்துப் போக விரும்பினால் சம்மதிக்காமல் அழுது ஆர்ப்பாட்டம் செய்தாள். நரேன் விட்டுவிட்டான்.
அன்று அலுவலகத்திலிருந்து நரேன் வீடு திரும்பியபோது வீட்டு வாசலில் கேட்டுக்கு அருகில் ஒரு நாய் படுத்திருந்தது. இவனைக் கண்டது ‘சட்’டென்று குரைக்க ஆரம்பித்தபோது… ரேவதி உள்ளே இருந்து வந்தாள்.
“ரோஸி… சும்மா இரு… அது நம்ம சார்… உன்னோட எஜமான்!”
ரோஸி என்ற அந்த நாயும் ஏதோ புரிந்துகொண்டதைப் போல் அவனைப் பார்த்து வாலாட்டிவிட்டு அவனை முகர்ந்து பார்த்துவிட்டு உள்ளே அனுமதித்தது…
“என்ன ரேவதி இது புது வரவு?”
“ஏதோ தெரு நாய், சாப்பிட்ட இலையை வெளியே போட வந்தேன். மோப்பம் புடிச்சுட்டு வந்திடிச்சு. சொன்னாலும் கேட்காம வாசலிலேயே பழியாகிடந்தது. பாவமா இருந்தது. சரின்னு கேட்டைத் திறந்து விட்டேன். பால் விட்டேன். இப்போது சோறு போட ஆரம்பிச்சிருக்கேன். நல்ல ‘வாட்ச்’ டாக். தனியா அழுதுட்டு இருக்கிற எனக்கு இது ஒரு ஆறுதல்…”
நரேன் பேசவில்லை. ஏதோ இந்த அளவுக்கு அவள் மனம் இளகி ஒரு நாயின் மீது பாசம் காட்டக்கூடிய வகையில் விரிவடைந்தது பற்றி மகிழ்ச்சி. இது தாய்ப்பாசமல்ல நாய்ப்பாசம்.
மெல்ல மெல்ல நாயின் சமோச்சாரம் பெருகிவிட்டது! அதற்கு ஒரு கழுத்துப்பட்டி… டாக் பிஸ்கட்… சோறு போட தட்டு… பால்விட குவளை… இரவு படுக்க மெத்தை என்று வாசல் வராண்டாவில் அதன் சாம்ராஜ்யம்!
நரேன் மறுப்புச் சொல்லவில்லை. இப்போதெல்லாம் சங்கிலி போட்டபடி ரோஸியுடன் காலை ‘வாக்’ போகிறாள் ரேவதி. ஏதோ ரேவதியின் மன அழுத்தம் குறைந்தால் சரி…
அன்று… “ஏங்க நம்ம ரோஸி கர்ப்பமா இருக்கு தெரியுமா?” என்றாள் ரேவதி. ஸ்வீட் தராத குறைதான்.
“எனக்குத்தான் தாயாகக் கொடுப்பினை இல்லை. நாயாவது நல்லா இருக்கட்டும்”. வழக்கமான முத்தாய்ப்பு.
அந்த வாசல் திண்ணையிலேயே அழகான இரண்டு புஸுபுஸுத்த குட்டிகளை ரோஸி போட்டது.
நரேனுக்கு இப்போது நிம்மதி. நாய்க்குட்டிகளுக்குக் கண் திறக்கிறதோ இல்லையோ, இவனுக்காக அந்த ஆண்டவன் கண் திறந்துவிட்டான்! ரேவதியின் மன இறுக்கம் கொஞ்சம் கொஞ்சமாகக் குறைந்துவிட்டது போன்ற உணர்வு.
அன்று இரவு… ரோஸி திடீரென்று ஊளையிட்டது. குரைத்தது. அழுதது. என்னவாயிற்று? இவர்கள் இருவரும் கதவு திறந்து வெளியே வந்து பார்த்தார்கள். நாய்க் குட்டிகள் இருந்த இடம் காலியாக இருந்தது. யாரோ குட்டிகளைத் தூக்கிச் சென்றிருக்கின்றனர். எதிர்த்த ரோஸியைக் கல்லெறிந்து காயப்படுத்தி இருக்கிறார்கள்.
ரோஸியின் காலில், நெற்றியில் எல்லாம் ரத்தக் காயம்! ரோஸி ரேவதியை முகர்ந்து பார்த்து, முகர்ந்து பார்த்து ஊளையிட்டது. “என் குட்டிகளைக் கண்டுபிடித்துத்தா” என்று கேட்பது போல் ஊளையிட்டது. இவள் புடவையைப் பிடித்து இழுத்து குட்டி இருந்த இடத்திற்குக் கூட்டிச் சென்று ஓலமிட்டது. பார்க்க மிகவும் வேதனையாக இருந்தது. அந்த வாயில்லா ஜீவனின் தாய்ப்பாசம் நெஞ்சைப் பிழிந்தது.
நாள் முழுவதும் குட்டிகள் கிடந்த இடத்தில் படுத்தபடி ஆகாரம் எதுவும் இல்லாமல் சக்தியின்றி… ரோஸி கிடந்தது. ரேவதி பார்த்தாள். ஐந்தறிவுள்ள நாய்க்குக் கூட இத்தனை தாய்மை உணர்வா? மீண்டும் தன் இயலாமை, வேதனை எல்லாம் இவளைத் தாக்கின.
“என்னங்க ரோஸியை எங்கேயாவது கொண்டு போய் விட்டுட்டு வந்துடுங்க. ஆகாரம் எடுக்காம அது கதர்றது சகிக்கலை. அதோட ஊளையை என்னால் தாங்க முடியலை!” என்று அவள் நரேனிடம் அழுதாள்.
அன்று இரவு நிசப்தமாக இருந்தது ரோஸி ஏன் அழவில்லை? அழுதழுது உயிரை விட்டுவிட்டதா? ரேவதி மெல்லக் கதவு திறந்து பார்த்தாள். அங்கே ரோஸி படுத்திருந்தது. இவள் மதியம் போட்ட சாப்பாட்டைக் கூட சாப்பிட்டிருந்தது. அதோடு… ரோஸியிடம் மூன்று சின்னஞ்சிறிய பூனைக்குட்டிகள் பால் அருந்திக் கொண்டிருந்தன. இவளைக் கண்டதும் ரோஸி மசிழ்ச்சியுடன் வாலாட்டியது. பத்துப் பதினைந்தே நாட்கள் ஆகிய குட்டிகள்… அப்போதுதான் கண் திறந்த குட்டிகள். அம்மா பூனை அடிபட்டு செத்துவிட்டதோ என்னவோ! பால் தேடி வீதி வழியே அலைந்த அந்தக் குட்டிகளுக்கு ரோஸி பால் தருகிறதா? புகலிடம் தருகிறதா?
அந்த ஐந்தறிவு ஜீவன் தன் தாய்மை உணர்ச்சியை இப்படி வெளிப்படுத்துகிறதா? தன் இனம், தன் உறவு, தன் வம்சம் என்று பார்க்காமல் தாய்க்குரிய கருணையோடு தன் பாலைப் பருகத் தருகிறதா? உயிர் வாழ உறவுகள் தேவை இல்லையோ? உணர்வுகள் போதுமோ?
அன்பைத் தர வாரிசு தேவை இல்லை. வம்சம் தேவையில்லை. வாஞ்சை போதும். நேசிக்கும் மனமும், அன்பைச் சுவாசிக்கும் இதயமும் இருந்தால் போதும்! குனிந்து அமர்ந்தபடி ரோஸியைத் தடவித் தருகிறாள் ரேவதி.
தன் அருகில் வந்து நின்ற தன் கணவனைப் பார்க்கிறாள் ரேவதி. எழுந்து நிற்கிறாள். “நாளைக்கே நாம ஒரு குழந்தைங்க ஆர்பனேஜ் போலாங்க. ஒரு… ஒரு குழந்தையைத் ‘தத்து’ எடுத்துக்கலாம்” என்று கண்ணீருடன் கூறிய ரேவதியை அணைத்தபடி நரேன் வீட்டினுள் போகிறான்.
‘விடிவது நமக்கு வயதாவதற்காக மட்டுமல்ல! நாம் வாழ்வதற்காகவும் தான்’ என்கிற புதிய பாடம் ரேவதிக்குப் புரிந்ததில் இவனுக்கும் மகிழ்ச்சிதான்!