(1996ல் வெளியான சிறுகதை, ஸ்கேன் செய்யப்பட்ட படக்கோப்பிலிருந்து எளிதாக படிக்கக்கூடிய உரையாக மாற்றியுள்ளோம்)
அலமேலு என்று யாழ்ப்பாணத்தில் ஒருவரும் பெயர் வைப்பதில்லை. அது காரணமாயிருக்கலாம். அவருக்கு அந்தப் பெயரில் அப்படி ஒரு மோகம். இறுக்கிப் பிடித்துக் கட்டிய இரட்டைப் பின்னல்களோடு அவள் காணப்படுவாள். அன்ன நடை என்று சொல்வதுண்டு; பிடி நடை என்றும் வர்ணிப்பதுண்ட. ஆனால் அலமேலுவின் நடை என்றால் மத்து கடைவது போன்ற ஓர் அழகு. இடைக்கு கீழே நேராக இருக்க மேலுக்கு மாத்திரம் இடமும் வலமும் அசைந்து கொடிபோல வருவாள். அந்த நேரங்களில் சோதிநாதன் மாஸ்ரர் மனசை என்னவோ செய்யும்.
மனசை தொடுவது ஒன்று; ஆனால் துளைப்பது என்பது வேறு. இப்ப கொஞ்சக் காலமாக இந்த எண்ணம் அவர் மனசைத் துளைத்து வேதனை செய்தது. தலையிடி வந்து போதுபோல இதுவும் விரைவில் போய்விடும் என்றுதான் எதிர்பார்த்தார். போவதற்கு பதிலாக அது நன்றாக வேரூன்றி நின்றுவிட்டது. அவருக்கு எரிச்சல் எரிச்சலாக வந்தது.
சோதிநாதன் மாஸ்ரர் பயந்தங்கொடிபோல நெடுநேரம் வளர்ந்திருந்தாலும் முதுகு கூனாமல் நிமிர்ந்துதான் நடப்பார். நெற்றியிலே பளிச்சென்று திருநீறு. மார்பிலே அங்கங்கே வெள்ளி மயிர்கள் குடியிருக்கும். ஏதாவது தீவிரமாக யோசனை செய்வதென்றால் அவர் மஸாய் வீரன்போல ஒற்றைக்காலில் நின்றுதான் அதைச் செய்து முடிப்பார். நிற்கும் காலில் கச்சை முடிச்சுகள் ஆலம் விழுதுகள்போல கீழும் மேலுமாக ஓடித்திரியும்.
அவருடைய வாடகை அறையில் நாற்பது வருடத்திய பத்திரிகை நறுக்குகள் இடத்தை அடைத்துக்கிடந்தன. அவ்வப்போது வெளியாகிய அவருடைய கட்டுரைகளும் அதில் அடக்கம். இவற்றையெல்லாம் ஒருநாளைக்கு தரம் பிரித்து அடுக்கி வைக்கவேண்டும் என்று அவருக்கு ஆசைதான். ஆனால் அந்தச் சிறு அறையில் அது நடக்கிற காரியமா? இவ்வளவு காலமும் சிலந்தியுடனும், கரப்பான் பூச்சியுடனும்,சொடுகுடனும் வாழ்ந்து பழகிவிட்டார். அவற்றைவிட்டுப் பிரிவதும் அவருக்கு கஷ்டமாக இருந்திருக்கலாம்.
அவர் வெக சிரத்தை எடுத்து அந்த அறையை அப்படி அழுக்குப்பட வைத்திருந்தார், என்றாலும்கூட வெளியே போகும்போது நன்றாகக் கஞ்சிபோட்டு சலவை செய்த உடுப்பை அணிந்து கைகளை 15 டிகரி கோணத்தில் விரித்துக் கொண்டுதான் நடப்பார். பார்ப்பவர்களுக்கு உடனே மரியாதை செய்யத்தோன்றும். அப்பழுக்கில்லாத மனிதர் என்றுதான் எல்லோருக்கும் அவரை நினைத்திருந்தார்கள்.
குறையே இல்லாத சோதிநாதன் மாஸ்ரரில் இரண்டே இரண்டு குறைகளை மட்டும் சொல்லலாம். கட்டுரை எழுதத் தொடங்கினால் அவருக்கு நிறுத்தத் தெரியாது. எழுதிக்கொண்டே போவார். பேப்பர் முடியவேண்டும் அல்லது மை முடியவேண்டும். இரண்டாவது, காலையிலே வரும் பேப்பரை யாராவது அபர் படிக்குமுன் கலைத்துவிட்டால் அவருக்கு கெட்ட கோபம் வந்துவிடும். மற்றும்படிக்கு சாந்த சொரூபமானவர்.
இப்படிப்பட்ட சோதிநாதன் மாஸ்ரர் நித்திரை கொள்ள முடியாமல் தவித்தார். காரணம் அவருடைய மனதை ஒரு சிறுபெண் ஆழமாக காலைவிட்டு கலக்கிக் கொண்டிந்தது தான்.
பூமியின முகத்தை மூடி அந்தகாரம் சூழ்ந்திருந்தது. அந்த அதிகாலையிலேயே அவர் எழுந்துவிட்டார். கிணற்றடியில் போய் தண்ர் பிடித்துவந்து கேத்திலில் சூடாக்கி தேநீர் போட்டு அருந்தினார். நேற்றுவரை மொட்டாக இருந்த நந்தியாவட்டை இன்று பூத்திருந்தது. அதிலே இரண்டு பூவைப் பிடுங்கி வந்து சாமி படத்துக்கு வைத்து அரைமணி நேரம் தியாணம் பண்ணினார். அப்பவும் மனம் அமைதியடையவில்லை.
வெளியே வந்து பார்த்தபோது சிவசம்பு வீட்டுப்பகுதி இன்னும் தூக்கத்திலேயே இருந்தது. வழக்கமாக அவர்களும் இந்நேரம் எழும்பி தங்கள் காரியங்களை தொடங்கியிருப்பார்கள். அலமேலுவின் பள்ளிக்கூட ஆரவாரங்கள் இன்னும் ஆரம்பமாகவில்லை.
அவளோ மொட்டவிழும் பிராயத்துப் பெண். ஒருவித பிரயத்தனமும் இன்றி இவர் மனதில் புகுந்து இவரை இம்சைப் படுத்தினாள். இந்த வெட்கக்கேட்டை யாரிடம் போய் சொல்லி அழுவார். ஒரு பக்கத்தில் பிறவிப் பயனை அடைந்துவிட்டதுபோல அவருடைய உள்மனது துள்ளியது. அதே சமயத்தில் பரம்பரை பரம்பரையாக சேர்த்துவைத்த கோழைத்தனமும் வெளியே வந்து அவரை வெருட்டியது. சோதிநாதன் மாஸ்ரர் ஒரு முடிவும் எடுக்க முடியாமல் சிறு பிள்ளைபோல தத்தளித்தார்.
கோயில் வீதிகளில் இரவுக்கிரவாகவே புதுக்கடகள் எல்லாம் முளைத்துவிடும். இந்தக் கடைகளை பிரதானமாக மொய்ப்பது பெண்களும், குழந்தைகளும் தான். பெண்களுக்கு பாத்திரக்கடைகள், வளையல் கடைகள் என்று ஏராளமாக இருக்கும். சிறுவர்களுக்கு விளையாட்டு சாமான்கள் வைத்திருக்கும் கடைகளில் தான் மோகம் அதிகம். ஆனால் அவற்றை வாங்கும் பண வசதி எல்லாருக்கும் கிடைப்பதில்லை. ஆகவே அவர்கள் ஐந்து சதம், பத்து சதம் என்று கைகளிலே வைத்துக் கொண்டு இங்கம் அங்குமாக அலைவார்கள். கடலை, பம்பாய் மிட்டாய், ஐஸ் பழம் இதில் எதை வாங்குவது, எதை விடுவது. இதுதான் அவர்களது முக்கிய ஏக்கம். அந்த சிறுவர்கள் குழம்பிப்போய் ஒரு முடிவும் எடுக்கமுடியாமல் தவித்துப்போய் நிற்பார்கள்.
அந்த வீடு அதி பயங்கரமான பாதுகாப்புகளுடன் இருந்தது. அதந் சொந்தக்காரர்தான் சிவசம்பு. அவருடைய தாத்தா ‘கள்ள யாவாரம்’ செய்து கட்டிய வீடு. சுற்றிலும் இருக்கும் மதில் சுவர்களில் விதம்விதமான கண்ணாடித் துண்டுகள் பதித்திருந்தன. உள்ளே இரும்புக் கிராதிகள் காரண காரியமில்லாமல் கண்ட இடத்திலும் போடப்பட்டுக் கிடந்தன. நடுநடுவே வலைக் கம்பிகள் வேறு. முழுக்க முழுக்க கள்ளனை மனத்திலே நிறுத்தி கட்டிய வீடு.
கள்ளனுக்கு அடுத்தபடி சூரியன். என்னதான் உக்கிரமாக வெய்யில் எரித்தாலும் ஒரு சின்ன ஒளிக்கீற்றுகூட உள்ளே போக முடியாதபடிக்கு ஒரு தந்திரத்துடனும், சூட்சுமத்துடனும் அது கட்டப்பட்டிருந்தது. நடுப்பகலில்கூட விளக்கை ஏற்றினால்தான் நடமாடமுடியும். இந்த வீட்டிலேதான் ஒரு அறையில் சோதிநாதன் வாடகைக்கு இருந்தார்.
சிவசம்புவுக்கு மாஸ்ரரைப் பிடிக்காது. ஏன் இந்த உலகத்திலேயே சிவசம்பு ஒரு ‘கறுவம்’ வைத்திருந்தார். கைகளைப் பின்னுக்க் கட்டியபடி ஆகாயத்தைப் பார்த்துக் கொண்டுதான் உடப்பார். சிறுநீர் பாயும் தூரத்துக்குகூட அவரை நம்புவதற்கு அந்த ஊரில் ஆள் கிடையாது. அவர் வேலை முடிந்து வீட்டுக்கு பத்தடி தூரத்தில் வரும்போதே சேட்டைக் கழற்றிவிடுவார். அவர் மனைவி வாசலிலே காத்திருப்பாள். கொஞ்சம் வெற்றிலை போட்டு, கொஞ்சம் பவுடர் பூசி, கொஞ்சம் கர்ப்பமாக பிரசாதம் வாங்குவதுபோல மிகவும் பவ்வியமாக அந்த சேட்டைக் கையிலே வாங்கி அவரை அவசரமாக உள்ளே கூட்டிக்கொண்டு போவாள். பார்ப்பவர்கள் மிகவும் அந்யோன்யமான தம்பதிகள் என்றுகூட நினைக்கலாம்.
ஆனால் உள்ளே போன சிறிது நேரத்திலேயே பல விநோதமான ஓசைகள் கிளம்பும். சிவசம்பு தன் மனைவியின் இடுப்பிலே ஓங்கி உதைக்கும் சத்தம் கேட்கும். பிறகு அவளுடைய கர்ப்பப் பிறப்புகளின் ஓலம். அவளுடைய ஓலம். ஊமையர்களின் வருடாந்தக் கூட்டம்போல வசனமில்லாத ஒலிகள். தினம் தினம் இது தவறாமல் நடக்கும். இருந்தாலும் இந்த மனுசி ஒரு நாளாவது வாசலில் நின்று அவரை வரவேற்கத் தவறியது கிடையாது.
அவர்களுடைய மூத்த பிறப்புதான் அலமேலு. வீட்டுச் சூழ்நிலையைத் தவிர்ப்பதற்காக அடிக்கடி மாஸ்ரரின் அறைக்கு ஓடி வரத்தொடங்கினாள். அப்படித்தான் அவருக்கும் அவள்மேல் ஒரு பரிவு ஏற்பட்டது. அந்தப் பரிவுதான் இன்று வேறு உருவம் எடுத்து அவரை மிரட்டிக்கொண்டு இருந்தது.
சோதிநாதனுக்கு கணக்குத்தான் பாடம். ஆனால் தமிழிலும் நல்ல புலமை பெற்றவர். அவர் ஓய்வுபெற்ற பிறகு பழந்தமிழ் இலக்கியங்களைத் தேடிப் படிப்பதில் மிக்க ஆர்வமாய் இருந்தார்.
முதன்முதலில் அலமேலு அவரிடம் தமிழ்ப்பாடத்தில் சந்தேகம் கேட்டுத்தான் வந்தாள் அவர் பாடம் சொல்லிக் கொடுக்கும் விதம் அவளுக்கு நல்லாகப் பிடித்துக்கொண்டு விட்டது. எந்தப் பாடமாயிருந்தாலும் கதைகளும், உதாரணங்களுமாக உணர்ச்சி வயப்பட்டுவிடுவார். கணக்குப் பாடம் எடுக்கும்போது யாராவது கண்ர்விட்டு உருகுவார்களா? சோதிநாதன் செய்வார்.
அலமேலுவின் உடம்பு முழுக்க சந்தேகங்கள் பொங்கும். அவளுடைய பல சந்தேகங்களை சோதிநாதன் தீர்த்துவைத்தாலும் பதிலுக்கு அலமேலுவும் அவருடைய ஒரு பெரிய சந்தேகத்தை ஒருநாள் தீர்த்துவைத்தான். ஆனால் அந்த விஷயம் அவளுக்கே தெரியாது.
விளக்கின் ஒளியில் அவள் மேசையில் இருந்து எழுதிக்கொண்டிருந்தாள். அவருடைய கைவிரல்கள் குவிந்து போய் பென்சிலை இறுக்கிப்பிடித்திருந்தது. ‘கைவழி நயனம்’ என்பதுபோல அவளுடைய வாய் கோணியபடி கைபோன பக்கம் இழுத்துக்கொண்டு போனது வெகு சிரமப்பட்டு தன்னுடைய பென்சில் இலகுவில் தர மறுத்த வார்த்தைகளை அவள் பலவந்தமாக பிடுங்கிக் கொண்டிருப்பதுபோல பட்டது.
தமிழ் பாடல்களில் ‘பந்தார் விரலி’ என்ற தொடர் அடிக்கடி வரும். அதற்கு அர்த்தம் ‘பந்துபொருந்திய விரல்கள்’ என்று சொல்வார்கள். சோதிநாதனின் மனக்கண்ணில் சங்க காலத்துப் பெண்கள் நிரையாக வந்து போவார்கள். அவர்கள் கைவிரல்கள் எல்லாம் நகச்சுத்து வந்து எலுமிச்சம்பழம் சொருகியதுபோல உருண்டு திரண்டுபோய் இருக்கும்.
அலமேலு கைகளைக் குவித்து எழுதும்போதுதான் அவருக்கு உண்மையான அர்த்தம் புரிந்தது. ஒரு சிறந்த கண்ணாடிப் பந்துபோல அது இருந்தது. பல்லியின் வயிற்றில் குட்டி தெரிவதுபோல அவள் கைவிரல்களில் ஓடும் ரத்தம் கூட அவருக்கு தெரிந்தது. பந்துபோன்ற அந்த கைவிரல் குவியலை எடுத்து முத்தமிடவேண்டும் போல பட்டது.
ஆனால் அப்போதுகூட அவருக்கு அந்த வித்தியாசமான எண்ணம் தோன்றவில்லை.
அவருடைய மனைவி இறந்தபோது அவருக்கு நாப்பத்தைந்து வயது. அந்த மரணம் இடி விழுந்ததுபோல வந்தது. இரண்டு வருடம் கழித்து அவருடைய மகளுக்கு நல்ல இடத்தில் சடங்கு பேசி வந்தார்கள். அது கடவுள் செயல்தான் என்று அவருக்குப் பட்டது. இப்படியான சம்பந்தத்தை அவர் கனவிலும் நினைத்திருக்க முடியாது. பையன் அவுஸ்திரேலியாவில் வதிவிடம் பெற்று நல்ல வேலையில் இருந்தான். இருந்த ஒரே வீட்டையும் விற்று கலியாணத்தை சிறப்பாகச் செய்து மகளை அனுப்பிவைத்தார்.
அவருடைய மகன் கதை வேறு. ஒரு நாள் விடிய எழும்பிப் பார்த்தால் ஆளைக் காணவில்லை. இயக்கத்தில் சேர்ந்துவிட்டதாகச் சொன்னார்கள். ஒரு கடிதம் கூட தனக்கு எழுதிவைக்கவில்லையே என்று அவருக்கு கவலை. ஒரு நாளைக்கு அவனைப் பார்ப்போம் என்ற நம்பிக்கை கனகாலம் இருந்தது. பிறகு அதுவும் போய்விட்டது.
அவுஸ்திரேலியா போன கையோடு மகள் அடிக்கடி கடிதம் போட்டபடி இருந்தாள். பிறகு சில காலமாக வருடத்திற்கு ஒரு கடிதம் என்று ஆகிவிட்டது. தனித்து விடப்பட்ட மரமாய் அடிமண்ணுக்குள் போய் புதைந்துகொண்டார்.
சிகாடா பூச்சிபோல. இந்தப் பூச்சி பதினேழு வருடம் மண்ணுக்கு அடியில் புதையுண்டுபோய் கிடக்கமாம். பதினேழு வருட முடிவில் இது வெளியே வந்து இனச்சேர்க்கையில் ஈடுபட்டு பிறகு இறந்துபோகும். குஞ்சுகள் மீண்டும் மண்ணுக்குள் போய் புதைந்து கொள்ளும். இப்படி பதினேழு வருடங்கள் தவம் செய்தபிறகு இந்தக் குஞ்சுகளும் பெரிசாகி வெளியே வருமாம், சாவைத்தேடி.
அவர் மனைவி இறந்து பதினேழு வருடங்களாக இவர் செய்த தவம் ஒருநாள் திடீரென்று முறிவதற்கு இருந்தது. ஒளித்திருந்து எய்த பாணம்போல இவரைத் தாக்குவதற்கு அது தருணம் பார்த்திருந்தது. ஆனால் இது அவருக்கு அப்ப தெரியவில்லை.
வீட்டை விற்ற நாளில் இருந்து அவர் சிவசம்பு வீட்டில் ஓர் அறையில் வாடகைக்கு இருந்தார். பனங்கட்டிக் குட்டான் போல சின்ன வயசாக இருக்கும்போதே அலமேலு அடிக்கடி தத்திதத்தி அவருடைய அறைக்கு வருவாள். கொஞ்சம் வளர்ந்து கண்கள் மேசைக்குமேல் தெரியும் வயசில் ஓசைப்படாமல் வந்து இவர் எழுதுவதையே கண்வெட்டாமல் பார்த்துக்கொண்டு இருப்பாள். இவர் கதிரையிலே ஏற்றிவிடுவார். சிறிது நேரத்தில் சறுக்கி இறங்கிப் போய்விடுவாள். அவள் வளர வளர அவளில் பல மாற்றங்கள் தென்பட்டன. இவர்தான் அவற்றை கவனிக்கத் தவறிவிட்டார்.
இப்பொழுதெல்லாம் அவள் கிட்ட வரும் சமயங்களில் இரண்டு நாள் தண்ரில் ஊறுவைத்த பயறுபோல ஒரு விதமான பச்சை வாசனை வருகிறது. அவளுடைய குரல் உடைந்து ரஹஸ்யம் பேசுவதுபோல இருக்கிறது. எவ்வளவுதான் உரத்துப் பேசினாலும் கசகசவென்றுதான் கேட்கிறது.
அவர் அறியாமல் இந்த விஷயங்கள் நடந்து முடிந்துவிட்டன. நேற்றுப் பார்த்தபோது மொட்டாக இருந்த நந்தியாவட்டை இன்று பூத்துப்போய் கிடக்கிறது. இரவுக்கிரவாகவே சதியாக ஒரு மணமும், அழகும் அதற்கு வந்து சேர்ந்துவிட்டது. ஓர் இரவுக்குள் நடந்த இந்த அதிசயம் போலத்தான் இதுவும் இருந்தது.
சங்க காலத்து தமிழில் ‘டீன் ஏஸ்’ பெண்ணை ‘மடந்தை’ என்று சொல்வார்கள். ஆனால் மடந்தை என்ற சொல் அலமேலுவின் அழகை பூரணமாக கொண்டுவரவில்லை என்று இவருக்குப் பட்டது. அவளைப் பார்க்கும் போதெல்லாம் ‘முற்றா முகிழ்முலை’ என்ற பாடல் வரிகள்தான் அவர் ஞாபகத்துக்கு வரும். ஒரு டீன் ஏஜ் பெண்ணை இந்த சொற்றொடர் முற்றிலும் வர்ணிக்கிறது என்று அவர் நினைத்தார். ஆனால் அப்போது கூட அவருக்கு அந்த எண்ணம் வந்தது கிடையாது.
ஒரு நாள் பைதகரஸ் என்ற கிரேக்க ஞானி 2500 வருடங்களுக்கு முன்பு கண்டுபிடித்த சித்தாந்தத்தை அலமேலுவுக்கு விளக்கிக்கொண்டிருந்தார். இரவு நேரம், விளக்கின் ஒளி அவள் முகத்தில் பட்டு பட்டு விழுந்து கொண்டிருந்தது. உறைந்த மழைபோல கேசங்கள் அவள் கன்னத்தில் வழிந்து கிடந்தன. கண்களை கையகலத்துக்கு பெரிதாக்கி அவர் சொல்லுவதையே அலமேலு கவனித்துக் கொண்டிருந்தாள்.
முதலில் அந்த மகா ஞானியின் வாழ்க்கையைப் பற்றி சொன்னார். இந்தப் பிரபஞ்சத்தின் சாகசங்கள் எல்லாம் ஓர் ஒழுங்கோடும் எண்ணங்களின் அடிப்படையிலும் நடப்பதை விளக்கினார். பிறகு அந்த ஞானி எப்படி முக்கோணங்களையும், சதுரங்களையும் உபாசித்தார் என்பதையும், அவற்றில் இருந்து அவர் சிருஷ்டித்த சித்தாந்தத்தின் மகிமையையும் கூறினார்.
ஒரு செங்கோண முக்கோணத்தில், அதன் கர்ணத்தின் வர்க்கமானது மற்ற இரண்டு பக்கங்களினதும் தனித்தனி வர்க்கங்களின் கூட்டுத்தொகைக்கு சமமாகும்.
அலமேலு மேற்படி சித்தாந்தத்தை வரி பிசகாமல் திருப்பித் திருப்பி மனனம் செய்தாள். இந்த பழம்பெரும் சித்தாந்தத்தின் அருமையை சோதிநாதன் உற்சாகத்துடன் விளக்கி அதை மூன்று வெவ்வேறு வழிகளில் நிரூபித்துக் காட்டினார்.
அலமேலு வைத்த கண் வாங்காமல் அவரையே பார்த்துக் கொண்டிருந்தாள். அவர் வாயிலிருந்து விழும் வார்த்தைகளை கையேந்தி பிடித்துக் கொண்டிருந்தாள். அவள் கண்களின் ரப்பைகள் துடித்தன. இந்த சித்தாந்தத்தை இவ்வளவு எளிதாக, இவ்வளவு உணர்ச்சி பூர்வமாக யாரும் இதற்கு முன்பு அவளுக்கு விளக்கியது கிடையாது. சோதிநாதனின் இமையோரத்தில் சில நீர்த்துளிகள் சேர்ந்திருப்பதை அவள் அப்போதுதான் கவனித்தாள்.
மேளக்கச்சேரி என்றால் இங்கே நாதஸ்வரத்துக்கு இரண்டாவது இடம்தான். சுற்றுவட்டார ஊர்களிலிருந்தெல்லாம் தவில் வித்துவான்கள் வந்திருப்பார்கள். இந்த தவில் சமாவைக் கேட்பதற்கு சனங்கள் பொறுமையோடு இடம்பிடித்து மூன்று நான்கு மணித்தியாலங்கள் கூட சலிக்காமல் காத்திருப்பார்கள்.
தனியாவர்த்தனம் வழக்கமாக மேல் நீதியில்தான் நடக்கும் ஐந்து, ஆறு கூட்டம் என்று தவில் வாத்தியக்காரர்கள் சுற்றிவர நின்றுகொண்டே வாசிக்கும்போது பக்தர்கள் தங்களை மறந்து ரஸ’ப்பார்கள். இந்த ஆவர்த்தனம் முதலில் பெரிசாக தொடங்கி ஒவ்வொறு சுற்றும் வரவர சிறுத்துக்கொண்டே போகும். விறுவிறுப்பும் கூடும். கடைசியில் தீர்மானம் வைக்கும்போது சில பேருக்கு ஆவேசம் வந்துவிடும்; சிலருக்கு கண்ர் வந்துவிடும்.
இருபத்தைந்து நூற்றாண்டுகள் கடந்து கண்கள் கலங்க, திரும்பவும் எண்கள் மயமான இந்த. உலகத்துக்கு வந்தபோதுதான் சோதிநாதன் மறுபடியும் அலமேலுவைக் கண்டார்.
நேர்வடிவான தாடையை கைகளில் ஏந்தி முழங்கையில் முட்டுக்கொடுத்து அவரையே பார்த்தபடி இருந்தாள், அலமேலு. சீரில்லாத பல் வரிசை பளிச்சென்றது. அந்தக் கணத்தில் ஏதோ ஒன்று அவரைப் பற்றி இழுத்தது. பதினேழு வருடங்கள் தூங்கிய சிக்காடா பூச்சி அப்போது வெளியே வந்துவிட்டது.
அவளுடைய கன்னங்கள் சதுரமாகவும், அந்த மோவாய் முக்கோணமாகவும் இருந்தது. விடியவிடிய சந்திரவதனத்தை பாடிய தமிழ்ப் புலவர்கள் இந்த அழகைப்பாட மறந்துவிட்டார்கள். சதுரங்களும், முக்கோணமாகவும் பைதகரஸ”க்காகவே படைக்கப்பட்ட இந்த முகம் விளக்கின் வெளிச்சத்தில் ஒரு பிரமையாக அவருக்கு தெரிந்தது.
அன்று படுக்கப் போனபோது அவருடைய நித்திரை எதிர்த்திசையில் போய்விட்டது. மறுபடியும் யௌவனமாகி விட்டார். ஒரு நீண்ட பயணத்தின் ஆரம்பத்தில் நிற்பதுபோல குறுகுறுப்பாக மனம் துள்ளியது. விமான ஓடுதரை விளக்குகள் போல எண்ணங்கள் வந்து அவரைத்தாக்கின.
அவர் உதடுகளில் இன்னும் கொடுக்கப்படாத முத்தங்கள் பல இருந்தன. அவர் விரல் நுனிகளில் இன்னும் தொட்டுப் பார்க்கவேண்டிய சமாச்சாரங்கள் நிறைய இருப்பதுபோல பட்டது. அவர் வயிற்றுக்குள்ளே இவ்வளவு காலமும் அடக்கி வைத்திருந்த ஆசைகள் இப்போது வெளியே வரத் துடித்தன. எல்லாத்தையும் அவிச்சு, வடித்துப் பார்த்தால் மிஞ்சியது ஒன்றுதான். அலமேலுவை அவரால் மறக்க முடியவில்லை. அவர் வாழ்ந்த வாழ்க்கையின் உண்மையான காரணம் அவளிடத்தில் தான் இருப்பதுபோல அவருக்கு பட்டது.
அவள் வாயிலே எச்சில் குமிழ்கள் செய்து ஊதிய காலத்திலே இருந்து அவளை அவருக்கு தெரியும். ஆனால் இதற்குமுன் இப்படி நூதனமான அநுபவம் அவருக்கு ஏற்பட்டதில்லை. அந்தச் சிறு பெண்ணின் மனதில் என்ன இருந்ததென்றும் தெரியவில்லை. இரண்டு பேருக்கும் சேர்த்து அவரிடம் போதிய காதல் இருந்தது. இவ்வளவு காதலை வைத்துக்கொண்டு என்ன செய்வது என்று திகைத்தார்.
மூன்று நாட்களாக அவர் வெளியே வரவில்லை. அழுக்குத் திரைச்சீலையும், தண்ணிப்பானையும், வட்டம் வட்டமாக நீர்பட்ட தலையணையுமாக அவர் உள்ளே அடைந்து கிடந்தார். அப்படியாவது அவர் அடிவயிற்றில் மூண்ட ஆசைத்தீயை அடக்கிவிடலாம் என்று எண்ணினார்.
மூன்றாம் இரவு நடுநிசியில் அவருக்கு ஒரு ஞானோதயம் ஏற்பட்டது. கட்டை அறுத்துக்கொண்டு ஓடித்திரியும் காளைமாட்டை அடக்கி இழுத்துக்கொண்டு வருவதுபோல் மனதை திரும்பவும் இழுத்துப் பிடித்து அடக்கிவிட்டார். வயதுக்கு ஒவ்வாத சிந்தனைகளை நினைத்து நாணமாக வந்தது. ஓவென்று ஓடிய நதி சமநிலைக்கு வந்து அவர் அடிமனதில் ஒரு நிம்மதி பிறந்தது.
கிணற்றடியில் போய் முகம் கழுவிக்கொண்டு தேநீர் வைப்பதற்கு ஒரு வாளி தண்ர் பிடித்துக்கொண்டிருந்தார். துலாக்கொடி சரசரவென்று வழுக்கிக்கொண்டு வந்தது. அவர் வேட்டியை மடித்துக் கட்டிக்கொண்டு வாளியை எடுக்கப் போகும்போதுதான் அது நடந்தது.
அலமேலு வந்துகொண்டிருந்தாள். மத்து கடைவதுபோல அசைந்து. அவளுடைய தலைமயிர் கற்றைகள் கலைந்திருந்தன. அவை சூரிய ஓளிபட்டு தங்க நிறத்துடன் ஜொலித்தன. கண்கள் இன்னும் தூக்கம் கலையாமல் அரை மூடியில் இருந்தன. பாவாடையும் சட்டையும் உடுத்தியிருந்தாள். மேற்சட்டை அவசரத்தில் போட்டதுபோல ஒரு பக்கத்துக்கு தூக்கிக்கொண்டு நின்றது. பொங்களுலுக்குப் பிடித்த அடுப்புக்கட்டி போல அவள் புஜங்கள் வழவழவென்றும், இறுக்கமாகவும் இருந்தன. அருகில் வந்ததும் அவளுக்கே உரிய பெண் வாசனை சொட்டு நீலம் தண்ரில் பரவுவதுபோல மெல்ல பரவியது.
சோதிநாதன் மாஸ்ரர் கவிகள் பாட மறந்த சதுரமான முகத்தையும், முக்கோண வடிவமான தாடைகளையும் பார்த்தார். இன்றுதான் முதல்முதல் பார்ப்பதுபோல அவரால் கண்களை எடுக்க முடியவில்லை. பிறந்த நாளிலிருந்து அவரில் விடுபட்டுபோன ஒரு துண்டு மீண்டும் சேர்ந்து கொண்டது போல ஒர் உணர்வு. இவ்வளவு காலமும் அவர் வாழ்ந்ததின் அர்த்தம் அவர் முன்னே நின்றுகொண்டிருந்தது. அவள் புஜத்தை எட்டி ஒரு கையால் தொட்டு தடவினார்.
அலமேலு பதறிவிட்டாள். ஐயோ! அங்கிள், என்ன செய்யுது? என்று சொல்லியபடி அவரைப்பிடித்து இரண்டு கைகளாலும் அணைத்துக் கொண்டுபோல் துணி துவைக்கும் கல்லிலே உட்கார வைத்தாள். தன்னுடைய இரண்டு கைகளையும் மார்புக்கு பக்கத்தில் வைத்துக்கொண்டு அவர் மூன்றாக மடிந்துபோய் உட்கார்ந்தார். அவருக்கு வசதியாக அவருடைய கால் பெருவிரல்கள் அவருக்கு முன்பாக இருந்தன. அவற்றை முதன்முதல் பார்ப்பதுபோல உற்று பார்த்தபடியே இருந்தார். அந்த நேரத்தில் அப்படி இருப்பதுதான் அவருக்கு சரிபோல பட்டது.
சுவாமி புறப்பாடு ஆரம்பிக்கும்போது இரவு ஒரு மணி ஆகிவிடும். தெற்குவீதி தாண்டி மேல்வீதியில் நீண்ட மேளச்சமா முடித்து வடக்கு வீதிக்கு சுவாமி வரும்போது நாலுமணி ஆகிவிடும். எல்லோருக்கும் நித்திரை கண்ணுக்குள் வந்துவிடும். பக்தர்கள் எல்லாம் மெள்ள மெள்ள கழன்றுவிடுவார்கள். அப்போது எண்ணிப் பதினைந்தே பேர் இருப்பார்கள். அதில் தவில்காரர், நாயனம், பந்தம் பிடிப்பவர், எண்ணெய் ஊற்றுபவர் குருக்கள் என்று எல்லோருமே அடக்கம். இப்படி சுவாமி இருப்பிடத்துக்கு போக முடியாமல் தவியாய் தவிப்பார்.
இதைத் தவிர்க்க ஒரு தந்திரம் செய்வார்கள். கோயில் முன்றலில் சதிராடிய தேவடியாள்கள் இப்ப வந்து வடக்குவீதியில் ஒரு கும்மி அடிப்பார்கள். அவர்கள் தூக்கக் கலக்கத்தில் குனிந்து, குனிந்து உடலை வருத்தி கும்மி அடிப்பார்கள். தலைமயிர் கலைந்திருக்கம்; கண்மை கரைந்திருக்கும். நித்திரையின் மணம் அங்கே நிறைந் திருக்கும். பக்தர்கள் எல்லாம் தங்கள் தங்கள் சயணத்தை தள்ளி வைத்துவிட்டு இந்த நித்திரை கும்மியை ரசிப்பதற்காக நிற்பார்கள். கும்மி முடிந்ததும் கூட்டம் கலையப் பார்க்கும். அதற்குமுன் சுவாமியை தரதரவென்று இழுத்துக்கொண்டு போய் இருப்பிடத்தல் சேர்த்துவிடுவார்கள்.
திருவிழா என்றால் வடக்குவீதியைத் தாண்டிவிட்டால் நேராக இருப்பிடம் தான்.
சோதிநாதன் இப்போது வடக்குவீதியில் இருந்தார். நித்திரை கும்மியில் சிறு சபலம் இனிமேல் நேராக இருப்பிடம்தான்.
– 1996-97, வடக்கு வீதி (சிறுகதைத் தொகுப்பு), மணிமேகலைப் பிரசுரம், நவம்பர் 1997
– அ.முத்துலிங்கம் கதைகள், முதற் பதிப்பு: டிசம்பர் 2003, தமிழினி, சென்னை.