வசு சித்தியின் காதல்

1
கதையாசிரியர்:
தின/வார இதழ்: கல்கி
கதைத்தொகுப்பு: காதல்
கதைப்பதிவு: March 11, 2015
பார்வையிட்டோர்: 37,051 
 

“என்னம்மா சொல்ற?ஏன் இந்த கல்யாணம் வேண்டாமாம்?”

“பையன் எப்ப பாத்தாலும் வொர்க் ல இருக்கிறப்ப போன் பண்ணி மொக்கை போடறார்..சொன்னாலும் கேக்க மாட்டேங்கிறார்..எனக்கு பிடிக்கிலை, இந்த கல்யாணம் வேனாம்..நான் பண்ணிக்க மாட்டேன் ன்னு உன் தங்கச்சி அடம் பிடிக்கிறா.நாங்களும் எவ்வளவோ சமாதானம் செஞ்சு பார்த்தோம்.வேற மாப்பிள்ளை பாக்க சொல்றா…நீயே சொல்லு”

“நிச்சயதார்த்தம் முடிஞ்சதும் இப்படி சொன்னா எப்படிமா?அவளுக்கு என்ன திமிரா?…நான் அவ கிட்ட பேசி பாக்கிறேன்” போனை வைத்தேன்..

அடுத்து தங்கைக்கு போன் போட்டேன்…விஷயம் கேட்டதும் பிடிவாதமாய் மறுத்தாள்.அவள் முடிவில் அழுத்தமாக இருந்தாள்..கார்ப்பரேட் கம்பனி கை கொள்ளா சம்பளம்…அவளை பேச வைக்கிறது…பெரு மூச்சு விட்டேன்

எனக்கு வசு சித்தி ஞாபகம் வந்தது…

என் அம்மாவின் ஒரே தங்கை வசுந்த்ரா நாங்கள் வசு சித்தி என்று கூப்பிடுவோம்….தாத்தா பாட்டி இறந்ததும் எங்கள் வீட்டில் அடைக்கலம் வந்து சேர்ந்தாள்..எனக்கும் என் தங்கைகளுக்கும் சாதம் ஊட்டி விடுவது கதை சொல்வது என சகலமும் எங்கள் சித்தி தான்..எனக்கு கூடதலாக என் சித்தியை பிடிக்கும் ..எல்லாரும் என்னை ரவி,குமாரு என கூப்பிடும் போது என் சித்தி மட்டும் என்னை பப்பு என கூப்பிடுவாள்..காரணம் கேட்டால் கொழுக் மொழுக் கென இருகிறதால் அப்படி கூப்பிடனும்னு போல இருக்கு என்று சொல்வாள்….

மருதாணி கைகள் தாவணி பாவாடை,தலை முடியை எப்பொழுதும் தாழ்ந்து சடை பின்னி அதில் ஒற்றை சரமாக முல்லைப் பூ வைத்துக் கொல்வாள்..அது வாடியதும் அவள் ஏற்கனவே கட்டி வைத்திருந்த மற்றொரு சரத்தை வைத்துக் கொள்வாள்…முகம் எப்பொழுதும் இரவு கூட பளிச் என்று வைத்திருப்பாள்..அது எனக்கு பிரியத்தை மேலும் கூட்டியது…அவள் மாலை நேரம் தவறாமல் கோவிலுக்கு செல்வாள்..அவளுடன் நான்தான் கூட செல்வேன்..தரிசனம் முடிந்ததும் தெப்பக் குளத்தில் உட்காந்து நிறைய பேசுவாள்..அவளுக்கென்று இருக்கும் கனவுகளை ஆசை ஆசையாக சொல்வாள்…மிக ரசனையாக பேசுவாள்..அவள் பேச்சை கேட்கவே ஆசையாக இருக்கும்…

அவளுக்கு என் அப்பாவை கண்டாலே பயம்..என் அப்பா வீட்ட்ற்கு வர இரவு பத்தாகி விடும்..நாங்கள் சாப்பிடும் நேரத்தில்,அந்த நிமிடங்களை என் சித்தி முழுவதும் ஆட்கொண்டு விடுவாள்..அக்கம் பக்கத்து இருப்பவர்களை போலவே அவர்கள் பேசுவது போல் நடப்பது போல் அப்படியே பாவனை செய்து காண்பிப்பாள்.எங்களுக்கு சிரித்து புரை ஏறிவிடும்….என் அப்பா வந்து விட்டால் என் சித்தி இருக்குமிடம் தெரியாது ..சத்தமில்லாமல்தான் பேசுவாள்….

சாப்பிட பின் அவரவர் தூங்க சென்றுவிடுவார்கள்.. நானும் என் சித்தி மட்டும் மொட்டை மாடிக்கு செல்வோம்..அவளுக்கு ட்ரான்சிஸ்டரில் இரவு நேரத்தில் மொட்டை மாடியில் பாட்டு கேக்க ரொம்ப பிடிக்கும்..அவளை போல வாழ்க்கையின் ஒவ்வொரு நிமிடமும் ரசித்து வாழ்ந்ததை நான் இது வரை பார்த்ததில்லை..மென்மையாய் செடியிலிருந்து பூக்களை பறிப்பாள்..அவசரம் என்பதே கிடையாது…பாட்டு பாடிக் கொண்டே சமையல் செய்வாள்…நாசூக்காய் எப்படி சாப்பிடுவது என நான் அவளிடம்தான் கற்றுக் கொண்டேன்…..அவளும் அம்மா போலவே எல்லா வேலைகளும் செய்வாள் சமையல் செய்வதிலிருந்து பாத்திரம் விலக்கி வீடு பெருக்கி துடைத்து கொல்லைப்புறம் சுத்தம் செய்து துணிகளை துவைத்து என சகலமும் செய்வாள் கொஞ்சமும் கூட முகத்தில் சலிப்பு தெரிந்ததில்லை…

என் அம்மாவிடம் சொல்வேன்

“ஏம்மா சித்தியும் தானே வேலை செய்யறா..உன்னை விட அதிகமாவே செய்யறா..ஆனா நீ மட்டும் ஏம்மா சிடுசிடு ன்னு இருக்கிற”

“ம்ம்ம்..உன் சித்திக்கு இன்னும் கல்யாணம் ஆகல அதான் அவளுக்கு எல்லாமே பதுவிசாதான் இருக்கும்”
ஒரு வரியில் முடித்துவிடுவாள்

ஆனால் என் சித்தி திருமணம் ஆனாலும் அப்படித்தான் இருப்பாள் ரசனை என்பது பிறவியிலேயே இருக்கும்.எந்த ஒரு கஷ்டமான வேலையையும் ரசித்து வாழ்தல் என்பது யோகி நிலை..அந்த தன்மை என் சித்தியிடம் இருக்கிறது…அது எந்த காலத்திலும் சூழ் நிலையால் மாறாது என திடமாக நம்பினேன்..அவளுக்கு திருமணம் ஆனதும் எப்படி வாழ்கிறாள் என பார்க்க வேண்டும் என ஆசையாக இருந்தது…ஆனால் திருமணம் அவள் வாழ்க்கையில் கைகூடாது என அப்பொழுது எனக்கு தெரிந்திருக்கவில்லை…

எங்கள் வீட்டிற்கு எதிர் வீட்டில் மேலே ஒரு அறையில் கல்லூரி மாணவர்கள் தங்கி இருந்தனர்…அதில் ஒருவன் என் சித்தியை அடிக்கடி பார்த்து கொண்டிருந்தாக எனக்கு பட்டது…

தெப்பக் குளத்தில் இருக்கும் பொழுது ஒரு நாள்..

“சித்தி நம்ம வீட்டுக்கு எதிர்ல இருக்கிற பசங்கல்ல ஒருத்தன் அடிக்கடி உன்னையே பாக்கிறான் தெரியுமா?
சித்தி அவசரமாக மறுத்தாள்

“ஏய் என்ன நீ இப்படி எல்லாம் கேக்கற…வீட்டுல தெரிஞ்சா நம்ம ரெண்டு பேரையும் வெளிய விட மாட்டாங்க புரிஞ்சுதா?”

சித்தி சொன்னாலும் அவள் மனதிலும் அப்படி ஒரு சந்தேகம் இருந்தது

அவள் வெளியெ வரும் போதெல்லாம் அவன்

“பூ மாலையே தோள் சேர வா”

பாட்டை டேப்பில் வைப்பான்..

இரவு மொட்டை மாடிக்கு சித்தி வரும் போது

“கண்மணி நில்லு காதலை சொல்லு
காதல் கிளியே கோபமா”

பாடலும் ஒலிக்கும்…

அதற்காக சித்தி மொட்டை மாடி வருவதை தவிர்க்கவில்லை…

கோவிலுக்கு செல்லும்போது பின்னாடியே வருவான்

“சித்தி சொன்னேன்ல..அங்க பாரு நம்ம பின்னடியே வர்றான்”

“பேசாம வாடா பப்பூபூ” என் பெயரை இழுத்தபடி வெட்கம் கலந்து சொன்னாள்..

ஆனால் கோபத்தில் சொல்வது போல் காட்டிக்கொண்டாள்..

ஒரு நாள் நான் பள்ளி விட்டு வரும் நேரத்தில் அவன் கூப்பிட்டான்..இதை நான் எதிர் பார்த்ததுதான்..

“என்ன படிக்கிற?”

“சிக்ஸ்த் படிக்கிறேன்”

“அது யாரு உங்க அக்காவா?”

“இல்ல சித்தி ”

“பேரு என்ன?”

“ரவி குமார்”..நான் வேண்டுமென்ற என் பெயரை சொன்னேன்.

சரி உன் சித்தி பேரென்ன

சொல்ல மாட்டேன் என்று தலை ஆட்டியபடி வேகமாக வந்தேன்

வந்ததும் என் சித்தியிடம் ரகசியமா சொன்னேன்..அவள் முகம் அப்படி சிவந்து நான் பார்த்தே யில்லை..

என் சித்தி இப்படி இருந்தது எனக்கு பிடித்தது..அவளது ரசனை அவளது அழகு போல அவள் காதலிக்கவும் வேண்டும்..அந்த உணர்வையும் அவள் ரசிக்க வேண்டும் என ஆசைப்பட்டேன்..

ஒரு நாள் கோவிலில் சித்தியிடம் அவன் பேசிக் கொண்டிருந்தான்..என்னைப் பார்த்தும் அவனிடம் விடைப் பெற்று என்னை நோக்கி வந்தாள்.

“சித்தி அவன் என்ன கேட்டான்”?

“ஒன்னுமில்லைடா”…சிரிப்போடு சொன்னாள்

“சொல்ல்லு சித்தி..சொல்லைனா நான் போய் அவங்கிட்டையே கேட்டிடுவேன்” எனக்கு தெரிந்து கொள்ள வேண்டுமென துடிப்பு..

என் பேரு கேட்டான்..சொன்னேன் பப்பு”

அவ்வளவுதானா..அவன் பேரு சொல்லி இருப்பானே

“பிரபு வாம்..” சிரித்தாள்.

அதன் பிறகு அவர்களின் சந்திப்பு தெப்பக்குளத்திலும் இரவு மொட்டை மாடியில் சைகை மொழியிலும் அவ்வப்போது என் மூலமாக கடித தொடர்பிலும் வளர்ந்து கொண்டிருந்தது..என் சித்தி அவன் பெயரை ரகசியமாக நோட்டில் எழுதிப் பார்த்து அதே வேகத்தில் அழித்தும் விடுவாள்..அதில் அவளுக்கு ஒரு சந்தோஷம்

“தூங்காத விழிகள் ரெண்டு-உன்
துணை தேடும் நெஞ்சம் ஒன்று”

அதன் பின் இந்த பாடலே அடிக்கடி அவன் டேப்பில் ஒழிக்க ஆரம்பித்தது..

வீட்டில் எல்லாரும் இருக்கும் நேரம் ரேடியோவில் இந்த பாடல் கேட்கும்போது நானும் என் சித்தியும் ஒருவரை ஒருவர் பார்த்துக் கொண்டு ரகசியமாக சிரித்துக் கொள்வோம்…

ஒரு நாள் எப்படியோ என் அம்மாவிற்கு விஷயம் தெரிந்து விட்டிருந்தது..என் சித்தியை காய்ச்சி வறுத்து எடுத்திருந்தாள்..என்னை வெயிலில் முட்டி போடச் செய்தாள்…இரு முட்டிகளும் வெயில் பழுத்த போதிலும் என் சித்தியை என் அம்மா திட்டியது என்னால் தாங்கிக்க இயலவில்லை…என் சித்தி அழுது பார்த்ததில்லை…பெற்ற அம்மா அப்பா இல்லாத போதிலும் ஒரு நாளும் சுய பச்சாதாபம் கொண்டதில்லை என் சித்தி…ஆனால் இப்பொழுது?…..காதல் எல்லாவற்றையும் செய்யுமா?

என் சித்தியை காதலை மறந்துவிடும்படி என் அம்மா அழுதாள்..மீறினால் தான் தற்கொலை செய்வதாகவும் மிரட்டினாள்

என் சித்தி அமைதி ஆனாள்..அதன் பிறகு அவள் கோவில் செல்வதும் மொட்டை மாடி செல்வதும் தவிர்த்தாள்..அவளின் இயல்பற்ற வாழ்க்க்கை பிடிக்கவில்லை எனக்கு..

அவளுக்கு மாப்பிளை பார்ப்பதில் அம்மா துரிதமாக செயல்பட்டாள்..ஒரு நாள் சித்தி என்னிடம் ஒரு கடிதம் கொடுத்து பிரபுவிடம் கொடுக்க சொன்னாள்..எனக்கு அதில் என்ன எழுதி இருக்கும் என தெரியும்
நான் அவளுக்கு தெரியாமல் கிழித்துப் போட்டேன்..

பிரபுவிடமும் வீட்டில் நடப்பதை கூறினேன்..எப்படியாவது இவர்கள் ரெண்டு பேரையும் சேர்த்துவிட வேண்டும் என உறுதி கொண்டு எப்படி செய்யலாம் என கனவு கண்டேன்..

ஒரு நாள் சித்தியிடம்

“சித்தி பிரபுவுக்கு இன்னையோட எக்ஸாம் முடிஞ்சுதாம்.. ..இன்னைக்கு அவர் சாயங்கலம் உன்னை கோவிலுக்கு கண்டிப்பா வரச் சொன்னார்…உங்கிட்ட பேசனுமாம்..ரெண்டு பேரும் எங்கேயாவது போயிடுங்க சித்தி”

“சப்ப்”

என் கன்னத்தில் அறைந்திருந்தாள்

புரியாம பேசாதடா ரவி…நான் போயிடுவேன்..அப்புறம் உன் அம்மா நிலைமையை யோசிச்சியா?மாமா பயங்கர கோபக்காரர்.அவருக்கு விஷயம் தெரிஞ்சா என்ன நடக்கும்னு நினைச்சுப் பாத்தியா….அக்கா என்னை கூட்டி வந்து இங்க வச்சுகிட்டதுக்கு நான் அவன் கூட ஓடிப் போனா அது துரோகம் ஆயிடாதா …அவளுக்கு செய்யற கைமாறு இப்படிதானாசொல்லு “..

ரவி என்று அவள் என்னை சொன்னதில் அந்நியப்பட்டு போனேன்..பின்ன எதுக்கு அவனை காதலிக்கனும்..இதெல்லாம் காதலிக்கும்போது தெரியலையா..உலகமகா பொது கேள்வி ஆகிப் போன இந்த கேள்வி எனக்கும் தோன்றியது..

அதன் பிறகு அவன் அடிக்கடி தென்பட்டான்.அவன் என்னை கூப்பிடும்போது சித்தி அடித்த அறை ஞாபகத்துக்கு வரும் நிக்காமலேயே ஓடி வந்துவிடுவேன்..பின் ஒரு நாள் காணாமல் போனான்..என் சித்தி வெகு சுலபத்தில் தன் இயல்புக்கு வந்தாள்.. நிஜமாகவே இயல்புக்கு வந்தாளா இல்லை அப்படி நடிக்கிறாளா என புரியவில்லை..பெண்களை புரிந்து கொள்வதில் நிஜமாகவே கஷ்டம்தான்..

என் சித்திக்கு நிறைய மாப்பிள்ளை பார்த்தாயிற்று..எதுவும் கூடவில்லை…வரதட்சணையால் தட்டிக் கொண்டே போனது….வயது ஏற ஏற வரதட்சணையும் அதிகமாயிற்று..எங்களின் பள்ளி செலவுகள் வீட்டு செலவுகள் இதில் என் சித்தியின் கல்யாணத்திற்கு எதுவுமே பண்ண முடியாத இயலாமையில் என் அப்பா இருந்தார்….என் சித்திக்கு மாப்பிள்ளை பார்த்தல் படலம் மெள்ள குறைந்து அடியோடு நின்றுவிட்டிருந்த நேரத்தில் நாங்களும் வளர்ந்து விட்டிருந்தோம்..எல்லாரும் படித்து சென்னையில் வேலையில் சேர்ந்து இங்கே வந்தோம்..என் சித்தி மட்டும் எங்கள் ஊரிலேயே எங்கள் வீட்டில் தங்கி விட்டிருந்தாள்..ஏறக்குறைய நாங்கள் எவ்வளவு சுய நலமாக வாழ்ந்து கொண்டிருக்கிறோம் என புரிந்தது…என் அம்மாவிற்கு இப்பொழுதும் என் சித்தியின் முகத்தை பார்த்து பேச முடியாது….மனிதனின் எல்லா நல்ல, கெட்ட குணங்களுடன் கூடவே குற்ற உணர்வையும் சேர்த்துக் கொண்டு வாழ்ந்து கொண்டிருந்தாள்…

என் குடும்பத்தினர் சித்தியை பார்த்து வருடங்கள் ஆயிற்று..இங்கே வேலைப் பளு குடும்பம் என ஆன பிறகு ஊருக்கு செல்லும் வாய்ப்பு குறைந்து போனது..ஆனால் நான் மட்டும் ஒவ்வொரு வருடமும் போய் சித்தியை பார்த்துவிடுவேன்…

சித்தியை போய் பார்க்க வேண்டுமென இருந்தது…வார இறுதியில் கிளம்பினேன்.

வீட்டை நெருங்கியதும்..மனதில் துக்கம் தானாகவே அடைத்தது…வழக்கம் போலவே எதிர் வீட்டு மாடி அறையை என் கண்கள் தானாக பார்த்தது..கதவு திறந்ததும் சித்திக்கு இன்ப அதிர்ச்சி

“பப்பூபூ என்னடா சொல்லாம கொள்லாம வந்து இருக்க..” கண்களில் கண்ணீர் தேங்கியது…அவளது வறண்ட கைகளால் அழுத்திப் பிடித்தாள்..

“சும்மாதான் சித்தி உன்ன பாக்கனும்னு இருந்துச்சு அதான் வந்தேன்”…

சுருக்கங்கள் என் சித்தியின் முகத்தில் மெல்ல வருகை புரிந்தது கண்கூடாக தெரிந்தது…

சூடாக டீயும் பக்கோடாவும் செய்து கொடுத்தாள்..மதியம் சாப்பிட்டு விட்டு என் தங்கையின் கல்யாணம் பற்றி கேட்டாள்..

பணம் சம்பாதிக்கும் மமதையில் இவன் இல்லைனா என்ன வெறொருவன் வராமலா போயிடுவான் என நினைக்கும் தங்கையின் எண்ணம்,கல்யாணமே நடக்காமல் முதிர்கன்னியாக இருக்கும் என் சித்திக்கு வலிக்கும் என அதைப் பற்றி பட்டும் படாமல் சொன்னேன்..அவளுக்குப் புரிந்தது..

சித்தி சாயங்காலம் கோவிலுக்கு போலாமா? பழைய பப்புவாக கேட்டேன்..அவளும் ஆர்வமாக தலை ஆட்டினாள்..

பழையபடி மாயம் ஏதாவது நடந்து அவளின் ஒற்றை முல்லைசரம்,பாவாடை தாவணி ,மருதாணி பளிச் முகம் என வந்துவிடக் கூடாதா என இருந்தது.

கோவிலுக்குகு செல்லும் பொழுது சித்தி கேட்டாள்

“ஏன் பப்பு உன்னை ஒன்னு கேக்கட்டுமா?

“கேளு சித்தி”

நீ சின்ன பையன இருக்கிறப்ப ஒரு நாள் நீ சொன்னியே பிரபு கூட ஓடி போக சொல்லி..ஞாபகம் இருக்கா?..பேசாம, நீ சொன்ன மாதிரி நான் அவங்கூட போய் அவனையே கல்யாணம் பண்ணிருக்கலாம்ல”..

சுரிரென இருந்தது..அவளது மொட்டை மாடி ட்ரான்சிஸ்டர் ,அடுப்படி பாடல்,தெப்பக்குள கற்பனைக் கதைகள்,மருதாணி என ஏனோ அடுத்தடுத்து பின்னோக்கி சுழன்றது போல ஒரு பிரம்மை..

நான் என்ன பேசுவது என தெரியாமல் அடி வாங்கிய மனதுடன் நடந்து சென்றேன்….

– 10-6-2012

Print Friendly, PDF & Email

1 thought on “வசு சித்தியின் காதல்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *