கதையாசிரியர்:
கதைத்தொகுப்பு: காதல்  
கதைப்பதிவு: July 15, 2016
பார்வையிட்டோர்: 24,824 
 
 

கதவு தட்டப் பட்டது…..

கண்கள் எரிய… மெல்லத் திறந்தவன்… கதவு விரிய பார்த்தான்….. திரும்பி மேசையில் இருந்த கடிகாரத்தில் நேரம் பார்த்தான்…

“ஓ…வெண்பனி வந்துட்டா போல…..”- என்று மனதுக்குள் துள்ளிய கன்னியை திறந்தபடியே எழுந்து ஓடிச் சென்று கதவைத் திறந்தான்….. ஒரே மூச்சில்.

கதவைத் திறந்த கனவைப் போல.. காலை மலரென பூத்து நின்றிருந்தாள் வெண்பனி…

“இவள் மட்டும் எப்போதும் எப்படி இத்தனை மலர்ச்சியாக இருக்கிறாள்”- என்று நொடிக்கும் குறைவான நேரத்தில்……புன்னகை அள்ளி அணைத்து….. தூக்கி வந்து கட்டிலில் போட்டான்.

“கனவு மாதிரி இருக்குடி…..”- என்றான் யுத்தன்.

“சரி…. கனவா இருந்தாலும்… பல்லு விலக்கனும்.. பேபி…. முதல்ல போய் குளிச்சிட்டு வா…”என்றாள்…. வெண்பனி, சிரித்துக் கொண்டே.

காலை வெயில்…….ஜன்னல் தாண்டி தன்னை சிதறலாக்கிக் கொண்டிருந்தது. அதே சூரியன்…… அதே வெயில்……. ஆனாலும் புதுக் கீற்று. மனம் பொங்க.. அவளையும் தூக்கிக் கொண்டு குளியலறைக்குள் சென்றான்….யுத்தன்.

“அய்…..யோ…. இப்பவே ஆரம்பிச்சா.. இன்னைக்கு பகல் முழுக்க நான் செத்தேன்..” என்றாள், உடலை விரித்து……

அதன் பின்னான வார்த்தைகளை ஷவர்….. பேசிக் கொண்டது. கதவின் அசைவு….. கேட்டுக் கொண்டது. காதலின் சொர்க்கத்தை அவர்கள்.. குளியலறையிலிருந்து திறப்பதாக அறைக்குள் அரசல் புரசலாக அலையும்… காமம்…..காது பொத்திக் கேட்டுக் கொண்டது… அல்லது வாய் பொத்தி பேசிக் கொண்டது.

தலை துவட்டியவள்… தாடி பிடித்திழுத்தாள். கூந்தலுக்குள் நுழைந்த கைகளில்…மலர் கூட்டம்.. விதைத்தான்.

பார்த்த நான்கு கண்களும்… பதறியது… திடும்மென முளைத்த கண்ணீரின் சூடு…..இறுக அணைத்துக் கொள்ளத் தூண்டியது… யுத்தனின் நெஞ்சில் சாய்ந்து கொண்டாள், வெண்பனி. சாய்ந்த அவளை…. இன்னும் சாய்த்துக் கொண்டான் யுத்தன்.

“சரி… நாமளும் கேட்டுப் பார்த்தோம்.. கெஞ்சிப் பார்த்தோம்… உங்க வீட்ல ஒத்துக்கற மாதிரி தெரியல….. வேற வழியில்லாமதான் இந்த முடிவுக்கு வந்ருக்கோம்…… இல்லையா…?”-என்று அவளின் முகம் தூக்கி நெற்றியில் நிறங்களின் கனவைப் போல முத்தம் வைத்தான் யுத்தன்.

சத்தம் இன்றி தனை எக்கி அவன் கன்னம் கடித்தவள்…….”ம்ம்ம்……” என்று தலை ஆட்டினாள்.

மௌனம் புரண்ட நொடிகளைக் கலைத்தான் யுத்தன்…

“வீட்ல என்ன சொல்லிட்டு வந்த….?”

“கல்யாணம் பண்ணிக்க போறோம்னு சொல்லல… சென்னைல தங்கச்சி கூட தங்கி வேலை தேடிக்க போறேன்னு சொன்னேன்…”

“நம்புனாங்களா….?”

“நம்பற மாதிரிதான் இருந்தாங்க…பாப்போம்…… சரி.. எப்போ என்னை கட்டிக்க போற…..”-என்று கேட்டாள்….. இதழை சுழித்து.

“இப்பவே கட்டிட்டுதான இருக்கேன்…..” என்றான் பட்டென்று அந்த இதழைக் கடித்து.

“என்ன அம்மாவாக்காம விட மாட்ட போல…”என்று சொல்லி முகம் பொத்திக் கொண்டாள்…. வெண்பனி.

“அதுக்குதான இந்தப் பிறவியே……. பெண்ணா….. வா… பகல் முழுக்க சம்போகித்துக் கிடக்கலாம்… எவனாது ஒளிந்து நின்று பார்த்து கவிதை செய்யட்டும்” என்று சொல்லி செந்தமிழ் கண்ணடித்தான்.

“பா…..வி…. இரு……..!?”-என்று போலியாக நாக்கு கடித்தபடியே எழுந்து சென்று கொஞ்சம் திறந்திருந்த ஜன்னலையும் இழுத்தடைத்தாள்.

“வீடு மாதிரியா இருக்கு.. லூசு.. பாரு….” என்று வீட்டை ஒரு முறை தன் உடலால் சுற்றிப் பார்த்தாள்.

“ஒட்டடை அடிப்பது பிறகு……” என்று சொல்லி…காதுக்குள்.. ஏதோ கூற …….”அயே…. சீ போடா….”-என்று சிரித்துக் கொண்டே……வெட்கம் தாங்காமல்… சமையல் அறைக்குள் ஓடினாள் வெண்பனி.

வெங்காயம் வெட்டினாள்….காய்கறிகள் வெட்டினாள். அந்த வீடே மணம் வீசியது. பெண்ணின் வாசம் புகுந்து விட்டால் வீட்டுக்குள் சொர்க்கம் வந்து விடும் என்று எழுதி குவித்த வரியின்……. தொடர்ச்சியை அவளின் முதுகில் விரலால் வருடி சொன்னான். நெளிந்து திரும்பியவள்.. அவனின் தோள் சரிந்து…… கேரட்.. துண்டை தன் வாயால் அவன் வாயில் திணித்தாள்… இருவரின் கண்களும் இன்னும் ஆழமாக பார்க்க பார்க்க… அவளின் முகம் மெல்ல ஏதோ ஒரு வட்டத்துக்குள் சுழலுவதைப் போல அவள் உணர உணர….. பட் பட்டென்று கதவு தட்டப் பட்டது…

கதவு வேகமாய் தட்டப் பட்டது….

கண்கள் எரிய… பட்டென்று விழித்தவன்…”ஓ… எல்லாம் கனவா…..?” என்று முணு முணுத்தபடியே கதவு விரிய பார்த்தான்….. திரும்பி மேசையில் இருந்த கடிகாரத்தில் நேரம் பார்த்தான்.

“ஓ…வெண்பனி நிஜமா வந்துட்டா போல…..”- என்று மனதுக்குள் துள்ளிய கன்னியை திறந்தபடியே…..” எழுந்து ஓடிச் சென்று கதவைத் திறந்தான்….. ஒரே மூச்சில்.

“தம்பி….. தண்ணி வருது…..”- என்று சொல்லிப் போனாள் வெளியே நின்றிருந்த பக்கத்து வீட்டு பாட்டி.

கணம் ஒன்றில்.. ஸ்தம்பித்து…. நிதானித்து…… தூக்கத்திலிருந்து முழுவதுமாக வெளியேறியவன்…..” இன்னும் வரல பிசாசு…..” என்று சாலையைப் பார்த்தபடியே தண்ணீர் பிடிக்க ஆயத்தமானான் யுத்தன்.

நேரம் ஓடத் துவங்கியது.. அதன் போக்கில்….

நேரம் ஓட ஓட….. மனதுக்குள் ஏதோ சரி இல்லை என்பது தட தடத்து வலுத்தது. அலைபேசியை எடுத்து வெண்பனிக்கு அழைத்துப் பார்த்தான்…. நாட் ரீச்சப்ள்…….

ஏதோ யோசித்தவனாக அவளின் குறுஞ்செய்திகளை………ஒவ்வொன்றாக பார்த்தான். நேற்று…… மாலை அனுப்பிய செய்திகள்.. அவனின் பயத்தை உறுதி செய்தது.

“இரவு கூட பேருந்தில் இருப்பதாகவும்… இருவருக்கும் பிடித்த ‘வண்ணம் கொண்ட வெண்ணிலவே’ பாடல்.. பேருந்தில் ஒலிப்பதாவும் செய்தி அனுப்பினாளே… கணக்குப் படி பார்த்தால்.. அதிகபட்சம் 9 மணிக்குள்ளாவது வந்திருக்க வேண்டும்….. மணி 12 ஆகிறது… என்னாச்சு….?!”- அவனுக்குள் உதறல்… பின் பின்னாக யோசிக்க வைத்தது. புள்ளியற்ற வளைவுகளில் திரும்பவும் வளைந்து….. அங்கேயே வந்து விடுவது போல உணர்ந்தான்.

பட்டென்று… சென்னையில் இருக்கும்… வெண்பனியின் தங்கை சைதன்யாவுக்கு அலை பேசினான்….

“இன்னும் வரலியா மாமா…ஏன் மாமா.. ஏதும் ப்ரோப்ளமா…. என்னாச்சு….”என்று அவள் படபடக்க……

“ஹே.. ஒன்னும் இல்ல… நான் பாத்துக்கறேன்…… ஒருவேளை பஸ் லேட்டாகிருக்கலாம்…. இன்னும் கொஞ்ச நேரம் பார்த்துட்டு… நானே லைன்ல வரேன்.. அதுக்குள்ளே நீ ஊருக்கு போன் பண்ணி… ஒருவேளை.. வீட்ல இருக்காளானு கன்பாம் பண்ணேன்….” என்றான், படபடப்பை அடக்கிக் கொண்டு.

அடுத்த பத்து நிமிடங்களில்…. சைதன்யா அழைத்திருந்தாள்.

“மாமா.. அவ சென்னை வர்றன்னு சொல்லி நைட் கிளம்பினது… நிஜம்…. ஆனா.. இங்க வராம உங்கள பார்க்க வர்றதுதான் அவளோடு திட்டம்… சோ………”

அதற்கு மேல் என்ன சொல்வதென்று தெரியாமல்……மௌனமானாள், சைதன்யா.

நிலைமையை புரிந்து கொண்டவனாக……..”சரி ஒன்னும் பயப்படாத….. அமைதியா இரு…. நான் பாத்துக்கறேன்…. எங்கியும் போயிருக்க மாட்டா.. எதோ விளையாடற மாதிரி தோணுது…… இப்போ போன் வை….. நான் மறுபடியும் பேசறேன்..” என்று அலைபேசியை அணைத்து விட்டு ஆழ்ந்த யோசனையில் மூழ்கினான்…. யுத்தன்…

“எங்க போயிருப்பா.. யாராவது கடத்திருப்பாங்களா….ஏதும் அக்சிடெண்டா… இல்ல….. லூசு விளையாடுதா….?…… கடவுளே… பிரச்சினை பெருசானா கஷ்டமாச்சே…இப்ப என்னதான் பண்ண……?”- தானாக புலம்பியவன்….தன் நண்பன் ருத்ரனுக்கு அலைபேசி விஷயத்தைக்…கூறினான்…

“போன் பண்ணி பாத்தியாடா…..” என்றான், ருத்ரன்… ஆரம்பத்தின் புள்ளியில் இருந்து.

“எல்லாம் பண்ணிட்டேன்டா.. நாட் ரீச்சப்ள்ன்னு சொல்லுது… எனக்கென்னமோ பயமா இருக்குடா.. கொஞ்சம் வீட்டுக்கு வாயேன்..” என்றான், யுத்தன்…படபடத்தபடியே…

“என்னண்ணே… ….யுத்தண்ணே வீட்டுக்கு டிஸ்டப் பண்ண போற மாதிரி இருக்கு………”- என்று நமட்டு சிரிப்பு சிரித்த சைக்கிள் கடைக்கார பையனைப் பார்த்து……சற்று நின்று… அவன் கூறியதை மீண்டும் ஒரு முறை அசை போட்டு…”என்னடா….. டிஸ்டப்”- என்றான் ருத்ரன், குழம்பிய ஆவலுடன்…..

“சும்மா தெரியாத மாதிரி கேக்காதிங்க…”-என்று முணங்கிக் கொண்டே…”காலையிலயே ஒரு பொண்ணு யுத்தண்ணே வீட்டுக்குள்ள போச்சில்ல…தெரியாதாக்கும்….”என்று சொல்லி கண்ணடித்தான்……

கணத்தைக் கடந்த வேகத்தில்.. இன்னும் வேகமாய் குழப்பத்தோடு ஓடி வந்து வீட்டுக்குள் நுழைந்தான் ருத்ரன்…

விஷயம் கேட்டதும்… மீண்டும் இருவரும் சைக்கில் கடைக்கார பையனை நோக்கி ஓடி வந்து மூச்சிரைக்க நின்று… பர்சில் இருந்த போட்டோவை காட்டி… “இவளையா வீட்டு வாசல்ல பார்த்த…..”என்று கேட்டான் யுத்தன்…

அவன் மூளை…மடிப்புகளை விட்டு எட்டிப் பார்ப்பது போல உணர்ந்தான்…

சற்று உற்றுப் பார்த்த பையன்……”ஆமாண்ணே இவுங்கதான்… அதும் இதே ட்ரெஸ்லதான் இருந்தாங்க…”என்றான் கண்கள் விரிய…

“நானும் உன்னோடு சேர்த்து நீல வண்ண பைத்தியம் ஆகிட்டேன்டா”- என்று வெண்பனி என்றோ கூறியது சட்டென நினைவுக்குள் வந்து மினுங்கியது…. நீல வண்ண விரிப்புகளாக……

இருவரும்…. வீட்டுக்குள் அங்கும் இங்கும் தேடினார்கள். வீதியில்…… வேறு யாரின் வீட்டிலாவது இருக்கிறாளா…என்று நோட்டம் விட்டார்கள்.. விளையாடுகிறாளோ… இல்லை … ஏதாவது குழிக்குள் விழுந்து விட்டாளோ…. ?…எங்கு போயிருப்பாள்……!

வீட்டுக்குள் நுழைந்ததாக அவன் சத்தியம் செய்து கூறுகிறான்…. அவன் பொய் சொல்ல வேண்டிய அவசியம் இல்லை..

யுத்தன் குழம்பி சோபாவில் சாய்ந்து அமர்ந்தான்…

“மச்சான் பயப்படாம இரு.. நான் வீடு வரைக்கும் போயிட்டு வந்தறேன்… பாப்போம்… கொஞ்சம் வெயிட் பண்ணி பாரேன்….. வேற பிரெண்டு யாரையாவது பாக்க போயிருக்கலாம்….. சாயந்தரத்துக்குள்ள வரலன்னா அப்புறம் வேற ஏதாவது யோசிப்போம்”-. என்றபடியே வெளியே கிளம்பி சென்றான்… ருத்ரன்…

அலைந்து திரிந்த மனதுக்குள் பயம் அரூபம் விதைக்க… அவனையும் அறியாமல் அசந்து தூங்கி போனான்….யுத்தன்…அது ஒரு பேய் தூக்கம்….

வெண்பனியும்.. யுத்தனும் வீட்டில் ஒட்டடை அடித்தார்கள்.. அவ்வப்போது கட்டிப் பிடித்துக் கொண்டார்கள்.. முத்தமிட்டார்கள்.. அலமாரியில் புத்தகங்களை அடுக்கி வைத்தார்கள்… வீடு முழுக்க. வெண்டைக்காய் புளி குழம்பு வாசம்… கம கமத்தது……

நீல வண்ண உடையில்…. ஓடை கடந்த வெயிலென வேர்த்து.. முத்துக்கள் கொட்டினாள் வெண்பனியும்…

“இன்னைக்கே இதெல்லாம் பண்ணனுமா……” கொஞ்சலோடு கேட்டான் யுத்தன்..

“வீடுங்கறது கோயில் மாதிரி இருந்தா தான்….. காதலும்.. கலவியும் கடவுள் மாதிரி நிரம்பும்”- என்று சொல்லி நாக்கு கடித்தாள் வெண்பனி…

வீடு முழுக்க ஓடிப் பிடித்து விளையாடியதில்.. யுத்தன் கீழே விழ அவன் மீது.. ஏறி அமர்ந்த வெண்பனி.. அவனின் கழுத்தில் கை வைத்து அழுத்தினாள்…

“உன்னைக் கொன்று தின்ன போகிறேன்…..மனிதா’- என்று காதுக்குள் கிசுகிசுத்து…தன் முகத்தை இன்னும் பெரிதாக்கி அவன் அருகே வந்து ஆ….. “என கத்த கழுத்திறுகி…. மூச்சு திணறி…கால் உதறி… உடல் அசைக்க முடியாமல்….. புரண்டு.. நீருக்குள் இருந்து வெளியே வந்து மூச்சு கொட்டுபவன் போல படக்கென்று எழுந்து அமர்ந்து அடித் தொண்டையில்….. வறட்டு சப்தத்தை சிதற விட்டான்…

அந்த அறை எங்கும்….. நிஷப்தம் அவனை நெருக்குவதாகப் பட்டது…. சுற்றும் முற்றும் பார்த்தான்…. வெண்டைக்காய் புளிக் குழம்பு வாசம்.. இன்னும் அடித்துக் கொண்டிருந்தது. பட்டென்று ஏதோ தூண்ட… எழுந்து சென்று அறை முழுக்க பார்க்க.. நேற்று வரை கலைந்து கிடந்த புத்தகங்கள் அலமாரியில் அடுக்கி வைக்கப் பட்டிருந்தன. வீடு முழுக்க தொங்கிக் கொண்டிருந்த ஒட்டடைகள்.. சுத்தமாக்கிப் பட்டு.. பளிச்சென இருந்தது வீடு……

“என்னடா சொல்ற….. அப்போ.. கனவுல நடந்தது நிஜம்ங்ரியா” என்றான்.. ருத்ரன்…அவன்… தலை சுற்றுவது போல..உணர்ந்தான்…

நிஜமா பொய்யான்னு தெரில….. ஆனா.. இந்தக் கனவுக்கும்.. வெண்பனி காணாம போனதுக்கும் ஏதோ சம்பந்தம் இருக்கு… பாரு… கனவுல சுத்தம் பண்ணி வீடுதான் இது… நான் ஒட்டடை அடிக்கவே இல்லையே… கனவுல அடுக்கி வெச்ச புத்தகம்தான் இது….பாரு… நான் அடுக்கி வைக்கவே இல்லையே…. பாரு… பாரு “-என்று வீட்டையும் அலமாரியும் சுற்றி சுற்றி சுட்டிக் காட்டினான்… யுத்தன்.. அவன் முகம் பட படத்துக் கொண்டிருந்தது…

‘என்னடா நடக்குது’ என்று சுற்றும் முற்றும் பார்த்தபடி யுத்தனையே பார்த்துக் கொண்டிருந்தான் ருத்ரன்…

“அதுமட்டுமில்ல. கனவுக்குள்ள வெச்ச வெண்டக்காய் குழம்பு வாசம் வெளியவும் எப்டிடா வீசும்.. என்னால உணர முடியுதே…. சம்திங் ராங்டா…. ஏதாவது பண்ணு…”- பயத்தில் சோபாவில் ஓரமாய் அமர்ந்து வீட்டையே வெறித்தான் யுத்தன்…

சற்று நேரம் மௌனமாய்…. நடந்த எல்லாவற்றையும் வரிசையாக உள்ளுக்குள் அடுக்கி யோசித்த ருத்ரன்.. ஒரு முடிவுக்கு வந்தவனாக…”சரி டா.. நான் நம்பறேன்….. சரி… கனவுல…… வேற என்னெல்லாம் பார்த்த சொல்லு”- என்றான்…. அவனின் கேள்விக்குள்.. அதீத ஆர்வத்தின் தேவையும் இருந்தது.. ஒரு துப்பறிவாளன் போல… அவனின் ஆய்வு மொழியும் இருந்தது…

“ம்ம்ம்…”-என்று தலை கவிழ்ந்து யோசித்த யுத்தன்….”வேற எதுவும் ஞாபகம் வரலடா…” என்றான் இயலாமையின் காகிதமாக…

அவனின் காது விடைத்து…..திரும்பிய நொடியில்… … கனவுக்குள் ஓடிய வெண்பனியின் கொலுசொலியை நன்றாக அவனால் கேட்க முடிந்தது..

“பாரு பாரு.. கேளு கேளு.. கொலுசொலி கேக்குதே” என்றான், பதட்டத்துடன்……

சுற்றும் முற்றும் காதால் பார்த்த ருத்ரன்….. அவனும் பதறி.. ஆனால் அடுத்த நொடியே நிதானத்தை வலுக்கட்டாயமாக வரவழைத்துக் கொண்டு…”டேய் கொஞ்சம் அமைதியா இரு. நீ ரெம்ப குழம்பிருக்க….கொஞ்சம் ரெஸ்ட் எடு….. நாம மார்னிங் பேசுவோம்.. ஆனா நைட் கனவு வந்தா கொஞ்சம் கவனி.. உத்து கவனி…”என்றான்…. ஏதேதோ சிந்தித்தவனாக…

சட்டென அவனை உற்றுப் பார்த்த….. தலைக்குள் ஏதோ ஓடுவதாக உணர்ந்த யுத்தன்…”என்னது…கனவை கவனிக்கறதா…. கனவை எப்டிடா கவனிக்கறது…?!!”- என்றான்.. குழம்பிய பாஷையில்…

“முடியும்…. லூசிட் ட்ரீம்ஸ் மாதிரி… கனவை உன் கட்டுப்பாட்டுக்குள்ள எடுத்துக்கறது…… நீ பிளான் பண்ணி கனவு காண்பது….. அதாவது… கனவுக்குள்ள ஏற்கனவே பார்த்த உன்னையும்… வெச்சு… ஒரு சினிமா மாதிரி நீயே பாக்கறது…… அப்போ ரெண்டு பேரோட உடல் மொழி கவனி..பின் புலத்துல என்னெல்லாம் இருக்குனு பாரு.. இந்த வீடு தானா..எந்த சூழல்ல வீடு இருக்குனு பாரு… வேற அமானுஷ்யங்கள் உணரப் படுதான்னு பாரு…. அதாவது உன் கனவை உன் தூக்கத்தோட விழிப்பு நிலையில இருந்து கவனி…… அந்தக் கனவுல கண்டிப்பா ஏதாவது க்ளு கிடைக்கும்….. கண்டு பிடி…”என்றான்… ருத்ரன்…ஒரு மனோதத்துவ மருத்துவன் போல…

யுத்தன்… வெறுமனே பார்த்தான்.. அப்போது அதை மட்டும்தான் செய்ய முடிந்தது…

“என்ன பாக்கற… எவ்ளோ இங்கிலீஷ் படம் பாக்கறோம்… கத்துக்க வேண்டியதுதான்…. பயப்படாம ட்ரை பண்ணு…. நீ கனவ பத்தி அவ்ளோ அழுத்தமா சொன்னதுனாலதான் நான் இப்டி ஒரு முயற்சிய பண்ண சொல்றேன்… வொர்க்கவுட் ஆகலைனா போலிஸ்ட்ட போய்டலாம்…. சரியா….?” என்றான் ருத்ரன்…. ஒரு முடிவுக்கு வந்தவனாக……”நானும் இன்னைக்கு இங்கயே இருக்கேன்… பார்த்துடுவோம்….. வெண்பனிய கண்டுபிடிக்காம விடக் கூடாது…”-என்றான்… நம்பிக்கையாக….

கனவு திறந்தது…..

மூச்சு திணறி எழுந்தான்… யுத்தன்…

“என்னாச்சுடா……?…. என்ன பார்த்த…..!?”-ஆர்வத்தின் விளிம்பில் நின்று பதறியபடியே கேட்டான் ருத்ரன்….

“மச்சான்…. கூட இருக்கறது………..நானே…… இல்லடா………” என்றான் யுத்தன், சற்று நிதானித்து… அழுத்தமாக…….

அறை முழுக்க ஸ்தம்பித்த தடுமாற்றம்.. அவர்களை சுற்றி ரீங்காரமிட்டு… குலுங்குவது போல உணர்ந்தான்… ருத்ரன்.

யுத்தனின் உடல் இன்னும் நடுங்கிக் கொண்டே….வியர்த்துக் கொண்டிருந்தது….

“எஸ்டா… இதே வீடு…… நல்லா தெளிவா இருக்கு….. என் முகம்தான்…..ஆனா என் பார்வை இல்ல… என் உடல்தான்… ஆனா என் நடை இல்ல…”-புதிர் அவிழ்ப்பவன் போல… பேசினான்…. யுத்தன்…

“என்னடா குழப்பற…” -புதிருக்குள் இருப்பவன் போல கேட்டான் ருத்ரன்

“இல்லடா… நான் குழப்பவும் இல்ல… குழம்பவும் இல்ல…”-தெளிவாக ஒரு அதீத ஆர்வத்தின் வெளிப்பாட்டின் சுவடாக யுத்தனின் உடல் பேச உள்ளம்… தெரிவதைப் போல இருந்தது…

‘சரி…. என்னாச்சு… மேல சொல்லு…”- ஆர்வத்தின் நரம்புகளில்.. அவன் ஒரு கரப்பான் பூச்சியின் பரிதவிப்பைக் கொண்டவனாக கேட்டான் ருத்ரன்…

“கனவுக்குள்ள என்ன மாதிரியே இருக்கறவன் ஒரு கவிதை எழுதி வெண்பனிகிட்ட குடுத்தான்..என்னால நல்லாவே படிக்க முடிஞ்சது… பார்த்தா அது என் கவிதை……. ஆனா கையெழுத்து என்னுதில்ல….. இன்னும் சொல்லப் போனா அவன் கையில…..ஏதோ பேரை பச்சை குத்திருந்தான்…… எவ்ளோ ட்ரை பண்ணியும்.. அந்த அந்தப் பச்சைய படிக்க முடியல………. அவன் அவகிட்ட ரெம்ப அன்பா இருக்கான்டா… அவளக் கொண்டாடறான்…..வெண்பனியும் அது நாந்தான்னு நினைச்சு…நெருங்கிட்டு இருக்கா…… எப்போ கல்யணம் பண்ணிக்கலாம்னு கேக்கறா… வீட்டுக்கு போன் பண்ணி கல்யாண மேட்டர சொல்லனும்னு சொல்றா….நல்லா தெரியுது… அது வெண்பனியேதான்… ஏதோ ட்ரேப்ல மாட்டிருக்காடா……”- மனப்பாடம் பண்ணியதை ஒப்பிப்பது போல…பட படவென கொட்டித் தீர்த்தான் யுத்தன்.

ருத்ரன் மௌனமாக அவன் கூறியதை எல்லாம்… அசை போட்டான்… அந்த வீட்டை நகர்த்துவது போல.. வெளியே காற்று பலமாக வீசிக் கொண்டிருந்தது…இருண்மைக் காடுகளின் வெளிகளின் விழிகளின் வெளிச்சமென நிகழ்வுகள்…. தன்னை விஸ்தரித்துக் கொண்டிருந்தன…வீடு நிறையும் சாயலோடு… துக்கத்தின்….விரிசல்களை உணர முடிந்தது.

திடீரென நினைவு வந்தவனாக…….”ஆமா…..வெண்பனி நீல கலர் ட்ரெஸ்தான்….போட்ருக்கா…. அவன் கொண்டு வந்த பேக் இதே வீட்லதான் இருக்கு… வெண்டைக்காய் புளிக் குழம்பு வெச்சிருக்கா….. ரெண்டு பெரும் சாப்ட்டாங்க……எனக்கு ஒன்னும் புரியல……என்னடா நடக்குது..இங்க.. இது என்ன மாதிரி சூழ்ச்சி…..அவன் யாரு.. என்னை மாதிரியே இருக்கற அவன் யாரா இருக்கும்…….”-கத்திய யுத்தன்….தலையில் கை வைத்து தடுமாறி….தவித்தான்..

எல்லாவற்றையும் உற்றுக் கேட்டுக் கொண்டு அமர்ந்திருந்த ருத்ரன்…….. “மச்சான் எனக்கு விஷயம் புரிபடத் தொடங்குது…… சரி.. நான் கேக்கற கேள்விக்கு பதில் சொல்லு……”என்று தன்னை சுதாரித்துக் கொண்டவன்….” இந்த வீடு எப்போ கட்டினது”..என்றான்…கூரின் மொத்தக் குவிதலைப் போல…

சற்று யோசித்த யுத்தன்…”இருக்குன்டா…..200 வருஷம் இருக்கு…நாங்க ஜாமீன் பரம்பரைடா.. நான்தான் கடைசி வாரிசு…. என்றவன்.. சட்டென நினைவு வந்தவன் போல…..” மச்சான்…. அந்த கையெழுத்த நான் எங்கையோ பாத்திருகேன்டா…”என்றான்.. இன்னொரு குண்டைப் போட்டவன் போல…

நடந்து கொண்டே வீட்டை சுற்றி சுற்றி உள் கட்டமைப்புகளை ராஜா காலத்து வடிவமைப்புகளை நோட்டம் விட்டுக் கொண்டிருந்த ருத்ரன்.. சட்டென நின்று….”என்ன சொன்ன…..கையெழுத்த பாத்ருக்கியா…..!….. எங்க பாத்ருக்க…….சொல்லு….எங்க பாத்ருக்க…….. அது தெரிஞ்சாதான் வெண்பனிய நாம நெருங்க முடியும்…” என்றான்…பதட்டத்துடன்….ஆனால் தெளிவாக…

யுத்தன் யோசித்தான்.. யோசித்தான்….. யோசித்தான்.. அவன் மூளை வலிக்கும் அளவுக்கு யோசித்தான்…

“எங்க பார்த்தேன்……. எங்க பார்த்தேன்……..?….. ‘ஆனா பார்த்திருக்கேன்…..” -அவன் மூளைக்குள் மங்கலாக அந்த எழுத்து….அந்த எழுத்து…… தன்னை எழுதிக் கொண்டேயிருந்தது…

“நான் பாத்ருக்கேன்.. எங்க பார்த்தேன்….சின்ன வயசுல……சின்ன வயசுல…… நான் பாத்ருக்கேன்…… இங்கதான்……. எங்கையோ… இங்கதான்……”- என்று யோசித்துக் கொண்டும்.. வாய் விட்டு புலம்பிக் கொண்டும்….. அங்கும் இங்கும் நடந்தவன். சட்டென பரண் மேல் இருக்கும் பழைய நோட்டு புத்தகங்களை எடுத்து கீழே தள்ளினான்….

அவனையும் அவன் செயல்களையும் உன்னிப்பாக கவனித்த ருத்ரன்… அவனின் தொடர் செயலுக்கு காத்திருந்தான்….

கீழே விழுந்த புத்தகங்களில்… நோட்டுகளில்..யுத்தன்… எதையோ அதில் தேடத் துவங்கினான்… பழுப்பின் வாசத்தில் தூசுகளின் நிறத்தில் கனவுக்குள் இருந்து வெளியே விழுந்த யோசனையைப் போல தன்னைத் திறந்து கொண்டு ஆ வெனக் கிடந்தன.. புத்தகங்களும்… நோட்டுகளும். தேட தேட….. தேட தேட… ஒரு நோட்டில் முதல் பக்கத்தில் பளிச்சென கண்கள் சிமிட்டிக் கிடந்தது அந்த எழுத்து…..கணம் ஒன்றில் ஆழமாக மூச்சிழுத்துப் பார்த்தவன்… அதை தடவி துடைத்தான். தூசுகள்…மெலிந்து……வார்த்தைகள் தெரிய… காலத்தின் வாசம்.. மெல்ல கசியத் துவங்கியது……. தும்மல் வந்தது… துக்கம் வந்தது….. கண்கள் சுழல…. படித்தான்.. படித்த மாத்திரத்தில்… தலை சுற்றி தடுமாறி….விழுந்தான்…

கவனித்துக் கொண்டிருந்த ருத்ரன் சட்டென அவனைத் தாங்கி பிடித்தபடியே …”என்ன ஆச்சுடா…. “-என்று அவனை பிடித்து உலுக்கி கேட்க… கேட்க…… நொடி நேரத்தில்… யுத்தன் வேறு யாரோவாக…..தெரிந்தான்.

உலுக்க உலுக்க.. சுயம் வந்த யுத்தன்…….எங்கெல்லாமோ சுற்றிய நினைவுகளை ஒரு சேர இழுத்து வந்து ஒரு குவிதலின் புள்ளிக்குள் வைத்து…

“மச்சான்.. பார்த்தியா…..பாரு… பாரு’- என்று அந்த பழைய நோட்டில் இருந்த கவிதையைக் காட்டி….”இது என் கவிதையடா…” என்று மெல்லிய அதிர்வுகளினால் நெய்யப் பட்டவனின் உடல் மொழியில் கூறினான்…. ருத்ரன் கண்கள் எடுக்காமல் படிக்க….படிக்கவே.. எழுந்த யுத்தன்…. தன் மேஜையின் மீதிருந்த தன் லட்டர் பேடை எடுத்து அவன் கடைசியாக எழுதி இருந்த கவிதையையும் காட்டினான்….

ருத்ரன் இரண்டு கவிதைகளையும் உற்றுப் பார்த்து அசை போட்டபடி….. அதிர்வுகளின் வசத்தோடு…..” இது யார் எழுதின கவிதைடா” என்றான்.. பழைய கவிதையைப் பார்த்து…

இரண்டு கவிதைகளையும் பார்த்துக் கொண்டேயிருந்த இருந்த யுத்தனின் கண்கள் ருத்ரனின் கேள்வியில் அசைந்து மெல்ல தலை திருப்பி.. “அது என் தாத்தாவோட அப்பா எழுதினதாத்தான் இருக்கும்…. எங்க தாத்தா சொல்லிருக்கார்.. அவுங்க அப்பா ஒரு கவிஞர்னு…”

ருத்ரன்… ஸ்தம்பித்து எதையோ யோசித்து எங்கயோ நிற்க….. யுத்தனே தொடர்ந்தான்…

“நான் எழுதிய அதே கவிதைய என்னைக்கோ என் தாத்தாவோட அப்பாவும் எழுதிருக்கிறார்…. எப்டிடா…..?….அப்புறம்… இதே கையெழுத்த தான் கனவுலயும் பார்த்தேன்….என்னமோ சரி இல்லடா… “-என்று சொல்லி பெரு மூச்சு விட்டான். அவனின் உடல் ஒரு நிலையில் இல்லாமல் தடுமாறிக் கொண்டிருந்தது…

சற்று ஆழ்ந்து யோசித்த ருத்ரன்…இரண்டு கவிதைகளையும் மாற்றி மாற்றி படித்தபடியே….. ஆரம்பித்திலிருந்து நடந்து கொண்டிருக்கும் எல்லா நிகழ்வுகளையும் மனதுக்குள் ஒரு முறை ஓட்டிப் பார்த்து அலசினான்….வீட்டை தன் கண்களால் சுழற்றினான்….

“நாங்க ஜமீன் பரம்பரைடா…. இந்த வீடு கட்டி 200 வருஷம் இருக்கும்.. இது எங்க தாத்தோவோட அப்பா எழுதின கவிதை….வெண்பனி ஏதோ ட்ரேப்ல மாட்டிருக்காடா…” என்று சற்று முன் மூளைக்குள் சென்ற வார்த்தைகள் எல்லாம் மீண்டும் மீண்டும் தன்னை ஸ்திரப்படுத்தி வெளிப்படுத்திக் கொண்டேயிருந்தன… மீண்டும் மீண்டும் மனதால் கேட்டு….மனதால் படித்து.. ஒரு தீர்க்கத்தின் வளைவுக்குள் வந்து நின்ற..ருத்ரன்……”மச்சான்… இப்போ நான் ஒன்னு சொல்றேன்…. அது… கற்பனையா கூட இருக்கலாம்…. ஆனா… நிஜமாவும் இருக்க சாத்தியம் இருக்கு….” என்று பூதாகரமாக ஆரம்பித்தான்…

வெளியில் விடுபட்டவனைப் போல…அவனைக் கூர்ந்து கவனிக்கத் துவங்கினான் யுத்தன்…

“நீ உங்க பாட்டனோட மறு பிறவிடா…..அவர் எழுதிய அதே கவிதையைத்தான்… இந்த ஜென்மத்தில் நீ எழுதிருக்க……இங்க நம்மள சுத்தி நடக்கறதப் பார்த்தா…இந்த ஜென்மத்து உன் காதலிதான்.. அவரோட காதலியாகவும் அந்த ஜென்மத்துல இருந்திருக்கணும். நீயா மறு பிறவியா பிறந்த பின்னாலும் உன் பாட்டனோட அந்த ஜென்மத்து ஆன்மா இன்னும் இந்த வீட்டுல அந்த உலகத்துலேயே இருக்குது. உன்ன பாக்க வந்த உன் வெண்பனிய அவரோட அந்த ஜென்மத்து காதலின்னு நினைச்சு அவரோட உலகத்துக்கு இழுத்துட்டு போயிருக்காரு…..வெண்பனியும் உன்ன மாதிரியே இருக்கற உன் பாட்டன நீ தான்னு நினைச்சு அவர் கூட இருக்குது……ஆனா அங்க நடக்கறது எப்டியோ உன் கனவு மூலமா உனக்கு வெளிப்படுது… அது நமக்கு சாதகம் தான்…இதுதான் இங்க நம்மள சுத்தி நடக்கற கதை… கற்பனை மாதிரி இருந்தாலும்… அதுக்குள்ள நிஜமா ஒரு ஒரு கற்பனை தாண்டிய ஒரு நூல் இருக்கறத கவனி… இந்த உலகத்துல எதுவும் நடக்கும் மச்சான்… இங்க… ஆரம்பவும் முடிவும் மட்டுமில்ல… இடையில என்ன நடக்குதுங்கறதும் நம்ம கையில இல்ல…..” என்று கூறி ஒரு புதிரை மீண்டும் இழுத்துக் கட்டினான்.. ருத்ரன்.

கூர்ந்து கேட்ட யுத்தன்… தலையை மெதுவாக ஆட்டியபடியே…”எஸ்டா.. எனக்கு புரியுது……. அவரோட ஆன்மா இங்கதான் இருக்கு….. பல நாள் நான் உணர்ந்திருக்கேன்…… என்ன தாண்டி இந்த வீட்ல வேற யாரோ இருக்காங்கன்னு நிறைய தடவ பீல் பண்ணிருக்கேன்……இப்போ நீ சொன்னத எல்லாம் வெச்சு பார்த்தா நிஜம்தான் போல…” என்றவன்….. சற்று மௌனமாகி பின் அவனே… தொடர்ந்தான்… “சரி… இப்போ வெண்பனிய எப்டி வெளிய கொண்டு வர. இதப் பத்தி யார்கிட்ட சொன்னாலும் யாரும் நம்ப போறது இல்ல. நாமதான் எப்டியாவது அவள வெளிய கொண்டு வரனும்…..அவ கூட இருக்கறது நான் இல்லன்னு எப்டி அவளுக்கு புரிய வைக்கறது…?” என்று கேட்டுக் கொண்டே…கனவைத் தேடும்…. நிறத்தின் மொத்தமாக தடுமாறிக் கொண்டிருந்தான்…..

இருவரும் அறைக்குள் பேய்களைப் போல நடந்தார்கள்… யோசித்தார்கள்…. இரவு… தன்னை இன்னும் அழுத்தமாக அந்த வீட்டின் மேல் போர்த்திக் கொண்டிருந்தது…

நிறைய யோசித்த யுத்தன்.. ஒரு புள்ளியில்… அகம் மலர்ந்தான் ….வழி கிடைத்து விட்ட தருணத்தை… அவன் இன்னும் மிக கெட்டியாகப் பிடித்துக் கொண்டவனாக… சட்டென மேசை மீது இருந்த காகிதம் ஒன்றில் எழுதத் தொடங்கினான் யுத்தன்………

“வெண்பனி கவனி……. முதலில் புரியாதது போலத் தான் இருக்கும்… ஆனால் அதுதான் நிஜம்….குழம்பாமல் தெளிவாக கேள்…உன்னுடன் இருப்பது நான் அல்ல… என் முந்தைய ஜென்மம்…. என் பாட்டனார்…. நீ இப்போது அவரின் வேறு உலகத்தில் அடை பட்டிருக்கிறாய்……யோசிக்காமல் அவரைக் கொன்று விட்டு வெளியே … வாசலுக்கு வா… சந்தேகம் இருந்தால் கதவைத் திறக்க முயற்சி செய்……. அவர் விடவே மாட்டார்… புரிந்து கொள்…என்னை கவனி…. நான் உன்னைப் பார்த்துக் கொண்டுதான் இருக்கிறேன்..என்னை ஆழமாக உணர்.. நான் சொல்வதை பின் தொடர்…… வெளியே வந்து விடலாம்…” என்று ஆங்கிலத்தில் எழுதி….அந்தக் காகிதத்தை….. சமையலறைக்குள்…சர்க்கரை டப்பாவுக்கு பின்புறம் ஒட்டி வைத்தான்…

ருத்ரன் புரிந்து கொண்டான்… “டன் டா மச்சான்… ஓகே….நீ கனவு காணத் தொடங்கு….” என்றான் நம்பிக்கையாக…..

வேகமாக படுக்கைக்கு சென்ற யுத்தன்……படுத்துக் கொண்டான். கண நேரத்தில் கனவு திறந்தது. வெண்ணிறம் சூழ… அந்த வீடு… ஒரு மாளிகையின் கணப்பில்… பூக்களின் கொண்டாட்டத்தில்… குவிந்திருக்க.. அறையெங்கும்.. ஆன்மாவின் வாசம். சில்லிட்ட பனித்துளிகளின் ஸ்பரிசத்தில்….. யுத்தனின் முந்தைய ஜென்மம்.. தலை விரிந்து…… ஓர் அரசனைப் போல.. கம்பீரமாக அமர்ந்திருக்க….எதிரே வெண்பனி… குழல் அவிழ்ந்து.. ஒரு கானுயிர் இரவைப் போல… குளிர்ந்திருந்தாள்…

“எப்டி நினைச்ச உடன கவிதை எழுதற…”

“கவிதை அப்டி தான் வரும்…”

“எங்க இப்போ ஒரு கவிதை சொல்லு…”

“இப்போதும் கவிதை நீ….”

“அயோ கொல்றடா…”

“உயிரும் கொடுப்பேன்…

“எப்போ கல்யாணம் பண்ணிக்கலாம்…”

“எப்பவும் கல்யாணம் பண்ணிக்கலாம்…”

கண்கள் ..சுருக்கி…..முகத்தை மெல்ல ஆட்டி… வெட்கம் தந்து…. சட்டென….’ சரி…விளையாட்டு போதும்’ என்ற பாவனையில்..

“ஆமா… உன் குரல் கொஞ்சம் வித்தியாசமா இருக்கே….. என்னாச்சு……..?… பீர் நிறைய குடிச்சியா…!” என்றாள் வெண்பனி……

“காலத்தின் தாகத்தில் குரல் மாறி இருக்கும்.. காதலின் வாசத்தில்… நீயாகி அணை வா….”என்று பேச்சை வழக்கம் போல மாற்றினான்… முன் ஜென்மம்…

“ஆள் செம ரொமாண்டிக் மூட்ல இருக்க போல…”-கண்ணடித்து புருவங்களை இரண்டு மூன்று முறை தனி தனியாக தூக்கி இறக்கினாள் வெண்பனி..

“வெண்பனி என்னை கவனி…. வெண்பனி… என்னைப்….. பார்.. அவன் நான் அல்ல.. நான்.. இங்கிருக்கிறேன்.. திரும்பு……திரும்பு…”- கனவுக்குள் விழித்த யுத்தன்… விடாமல் நினைவின் வழி துரத்திக் கொண்டேயிருந்தான்….. ஒரு கணத்தில் சட்டென யாரோ கூப்பிட்டது போல அவள் திரும்ப.. நம்பிக்கை பிறந்தது யுத்தனுக்கு…

“என்ன… என்னைத்தாண்டி கவனம் கலைகிறாய்.. பெண்ணே…”

“அயே… கவிதையா பேசறத நிறுத்துடா.. மாமா.. யாரோ கூப்பிட்ட மாதிரி இருந்துச்சு… அதான்…” என்று பேசியபடியே அவள் அவனை நெருங்கினாள்…

“போகாத.. அவனருகே போகாத.. போ.. சமையலறைக்கு போ…போ….. போ.. சக்கரை டப்பாவை எடுத்து விட்டு பார்…. படி….. போ.. வெண்பனி….போ… சொன்னால் கேள்.. போ..”- யுத்தனின் உதடு துடித்தது…..உள்ளம் சத்தமிட்டது…

ஏதோ உந்துவதை உணர்ந்தபடியே எழுந்தாள் வெண்பனி…

“ஏய் .. எங்க போற…?”

“இரு மாமா.. டி போட்டுட்டு வரேன்”- என்றபடியே… எழுந்து சமையலறை நோக்கி நடந்தாள்….வெண்பனி…

கண்கள் மூடிக் கிடக்கும்…யுத்தன் அருகில் தடுமாற்றத்துடன் என்ன நடக்கிறது…ஏது நடக்கிறது என்று புரியாமல் தவிப்போடு அமர்வதும்.. நடப்பதும்… இருந்தான் ருத்ரன்…

“டப்பாவை தாண்டி உள்ளே பார்… உள்ளே பார்… அதைப் படி.. அந்தக் கடிதத்தைப் படி…”

கனவின் வேகத்தில்…. அசுர பலத்தின் நினைவோடு….யுத்தன் மனதுக்குள் இட்ட கட்டளையை கணம் ஒன்றில்… கவனித்து விட்ட வெண்பனி……கவனம் நிறைந்த… உணர்வு பொங்க…கண்கள் விரிய பார்த்தாள்….. காலத்தின் நீட்சி நிறுத்திய நொடியில்….உற்றுப்பார்த்து கடிதம் படிக்கத் துவங்கினாள்……”இங்கு எப்படி கடிதம்.. யார் வைத்தது…”போன்ற யோசனைகளின் ஊடாகவும் கடிதத்தின் ஆங்கில வரிகளை.. உள் வாங்கவும் முடிந்தது அவளால்….மீண்டும் ஒரு முறை வேகமாய் படித்தாள்… இரண்டாம் முறை அவளின் உடல் தடுமாறியது….. சட்டென திரும்பி ஏதோ சூனியத்தை நோக்க………

“எஸ்….வெண்பனி…… நான் சொல்றது நிஜம்… நம்பு… உன் யுத்தன் நானே. அவன் இல்லை…….. போ… வாசலுக்கு போ…வாசலுக்கு போ…”என்று மந்திரத்தைப் போல திரும்ப திரும்ப சொல்லிக் கொண்டேயிருந்தது யுத்தனின் மனது…

தடுமாறிய வெண்பனி.. குழப்பத்தோடு……என்ன நடக்கிறது என்று புரியாமல் ஆழத் தேடும் மனதோடு… தடுமாறும் உடல் மொழியோடு….. திரும்பி அவனிடத்தில் வந்தவள் அவனை உற்றுப் பார்த்தாள் ….சற்று முன் படித்த விஷயத்தை மனதுக்குள் மீண்டும் மீண்டும்… படித்தபடியே பொருத்திப் பார்த்தாள்…

அவளின் யோசனை விதமாக ……”என்னாச்சுமா…..டீ போடலையா……?” என்றான் முன் ஜென்மம்…

சட்டென சமாளிக்கும் விதமாக…”இல்ல வீட்டுக்குள்ளேயே இருக்க ஒரு மாதிரி இருக்கு.. கொஞ்சம் வெளிய போலாமா” என்றபடியே…அவனைப் பார்த்துக் கொண்டே…. வாசல் பக்கம் செல்ல முற்பட.. முன்ஜென்மம் ஓடி வந்து கதவைத் திறக்க விடாமல் அணை கொடுத்து நின்றான்..

இருவரின் கண்களும் நொடி நேரம் படு பயங்கரமாக சந்தித்துக் கொண்டன…

அவளின் பயந்த கண்கள்…. சிமிட்ட மறந்து நிலை குத்தி இருக்க…….”அயே.. லூசு…. சாயந்தரம் ஆகட்டும் வெளிய போலாம்.. இப்போ வேண்டாமே…”- என்று சூட்சமத்தின் வழியாக முன் ஜென்மம் கூற……”அவன் அப்டிதான் பண்ணுவான்… நீ போ… அவன் கைய பாரு….. அவன் கையில் பச்சை குத்தி இருக்கறத பாரு….”என்று தொடர்ந்து அவளை கட்டுப் படுத்தும் நோக்கத்தோடு… கனவு வழியாக யுத்தன் கத்திக் கொண்டிருக்க….. தூக்கத்திலிருந்து விழித்தவள் போல…. சட்டென நிதானம் வந்து……”ஹே கைய காட்டு… நீ பச்சை குத்த மாட்டியே…இதென்ன புதுசா? “-என்றபடியே சட்டென முன் ஜென்மத்தின் கையைப் பிடித்துப் பார்க்க….. அதற்குள் முன் ஜென்மம் கையை காட்டாமல்.. முழுக்கை சட்டையை…. இழுத்து விட… அதற்குள் அப்படி இப்படி என்று அவள் பார்த்தும் விட்டாள்…..படித்தும் விட்டாள் ….

மனதுக்குள் பயம் மெல்ல பரவ…… பரவ.. இருந்தாலும் காட்டிக் கொள்ளாமல்… திக்கிய வார்த்தைகளைக் கொண்டு கவனமாக கட்டமைத்துக் கொண்டு…”யா…..ர்…… மாமா ……..அது மின்மினி தாரகை…”என்று கேட்டாள் துப்பறியும் பார்வையோடு …

அவளின் கண்கள் அவனிடம் இருந்தாலும்.. கவனம்… கனவு காண்பவன் மீது வைக்க……..” எஸ்…… கேளு….. விடாத…… கேளு…….. கேளு…. இதுதான் சான்ஸ்…..கேளு.. கேட்டு அவன் கூட சண்டை போட்டு வாசலுக்கு வா…”-யுத்தன்…. மொத்த சத்தத்தையும்….. உணர்வாக்கி… உயிராக்கி அவள் மீது திணித்துக் கொண்டிருந்தான்….

“எல்லாம் தெரிந்து விட்டதா…..!?” என்பது போல.. கையை நன்றாக காட்டி… “பாரு….. மின்மினி தாரகை…. உன் பேருதான்….. உனக்கு தெரியலயா.. உனக்கு ஞாபகம் வரலியா….. காடு மலை… ஜமீன்னு சுத்தி சுத்தி காதலிச்சது நினைவுக்கு வரலயா….. மின்மினி தாரகை….”-.முன் ஜென்மம்..உணர்வுப்பூர்வமாக…கண்கள் சிமிட்டாமல்… அதிகாரத் தோரணையில்….ஆழ் மனக் காதலின் பாரத்தில் பேசினான்…

அவள் கண்கள் விரிய திக்கித்து நின்றாள்.

இப்போதான் நீ வெண்பனி.. அப்போ நீ மின்மினி தாரகை…..என் காதலி… நீ இருக்க வேண்டியது இந்த சிம்மாசனத்தில்தான்… வா…”- என்று செந்தமிழில் முன்ஜென்மம் கர்ஜிக்க…..

“எஸ்… பார்த்தியா….?…. அவனே ஒத்துகிட்டான்,… அவன் என் பாட்டன்தான்… நீ அவனை தாக்கிட்டு வெளிய வா…. வெளிய நான் நிக்கறேன்.. வா…. சண்டை போடு……யோசிக்க நேரமில்லை…… சண்டை போடு வெண்பனி.. உன் ஆத்திரத்தை எல்லாம் ஒன்று திரட்டு.. அவன் உன்ன ஏமாத்தறான்.. உன் வாழ்க்கை…. உன் உயிர்….. உனக்கு வேணும்னா சண்டை ..போடு……எப்டியாவது….. அந்த ட்ரேப் விட்டு வெளிய வா….” யுத்தன் தொடர்ந்து எச்சரித்துக் கொண்டும்… கத்திக் கொண்டும் இருக்க….கனவுக்குள் என்ன செய்வதென்று தெரியாமல் தடுமாறி.. பயந்து நின்ற வெண்பனியை.. தொடர்ந்து இயக்கத் தொடங்கினான்…. யுத்தன்…

“அடி.. பலம் கொண்டு அவனை வீழ்த்து..”- திரும்ப திரும்ப காதுக்குள் இரையும் இறையின் வாளென வார்த்தைகள்…. வந்து வந்து மோத .. வெண்பனியும்…அவனை அடிக்கத் துவங்கினாள்….. வீழ்த்தத் துவங்கினாள்… பெண்ணின் பலம் மரணத்தின் சூதை முறியடிக்கும் வல்லமை பெற்றவை என்பதை மீண்டும் மீண்டும்…அவள் மூலம் பெண்மை நிலை நாட்டியது..

ஒரு கட்டம் அது அவளின் கட்டம்….என…..அவனை வீழ்த்திய……மணித் துளியில்……அவனைத் தாண்டி வெளியே ஓடி வந்த….. வெண்பனி…கதவைத் திறந்தபடியே ஓடினாள்…அது ராட்சசத்தனமான ஓட்டம்…

மூச்சு திணற எழுந்த யுத்தன்…..’மச்சான்….. அவ வெளிய வந்துட்டாடா….”- என்று கத்திக் கொண்டே வாசல் பக்கம் ஓட.. பின்னால்.. தொடர்ந்து ஓடினான்.. ருத்ரன்.

நேரம் ஓட ஓட… மௌனித்துக் கிடந்த கதவின் வழியாக நிஷப்தம் மட்டுமே வெளி வர… இருவரும் ஒருவரை ஒருவர் பார்த்துக் கொண்டார்கள்…. அர்த்தத்தின் தேடலை அர்த்தப்படுத்த வேண்டுமென….. வேகமாய் உள்ளே நுழைந்தவன்.. பட்டெனப் படுத்து கனவு காணத் துவங்கினான்….. கை பிசைந்து உடல் நெளிய அவனையே வெறிக்கப் பார்த்துக் கொண்டிருந்தான்….ருத்ரன்….

சற்று நேரத்தில் மூச்சு பிடித்து எழுந்தமர்ந்த யுத்தன்.. பேயை கண்டவன் போல வியந்து வியர்த்து.. தடுமாறி……உடல் தூக்கிப் போட…..ருத்ரனின் தோளில் சாய்ந்து அழத் தொடங்கினான்…..

மிரட்சியின் பிடியில் நின்று கொண்டிருக்கும் ருத்ரன்…..” என்ன மச்சான்… என்னாச்சுடா…. ..சொல்லுடா….. என்னதான்.. ஆச்சு…???” உலுக்கிக் கேட்டான் ருத்ரன்…அது பயத்தின் நுழைவாயிலில் நிற்கும்.. சிறுவனைப் போல ஒரு தோற்றத்தை கொடுத்தது….

அவனையே உற்றுப் பார்த்தவன் கண்களில் யுத்தன் கண்ட கனவு மீண்டும் ஓடத் தொடங்கியது…

அவள் கதவு தாண்டி ஓட அது இன்னொரு கதவுக்குள் அவளை இழுத்துக் கொண்டு சென்று… பட்டென கதவைச் சாத்தியது…… அங்கே யுத்தனின் உருவத்தில்… நீண்ட சடை முடியோடு… பாட்டனின் பாட்டன் நின்று பேசத் தொடங்கியிருந்தார்……..

“வா….சாந்தகுமாரி…. உனக்காகத்தான்…. காத்துக் கொண்டிருக்கிறேன்….”

1 thought on “யுத்தன்

  1. உங்களால் மட்டும்தான் இப்படியெல்லாம் எழுத முடியும்.. உங்கள் எழுத்து நடைக்கு அடிமையாகி போனது மனது… நன்றிகள் பல… என்னை உணர்கிறேன் உங்கள் கதைகளின் பல இடங்களில்…

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

* Copy This Password *

* Type Or Paste Password Here *