மேட் இன் இந்திய ஆண்கள்

0
கதையாசிரியர்:
கதைத்தொகுப்பு: காதல்
கதைப்பதிவு: May 2, 2012
பார்வையிட்டோர்: 10,390 
 

முகத்தில் அறைந்தாற்போன்று சொல்லிவிட்டு அவள் போய்க்கொண்டே இருந்தாள். திரும்பிப் பார்ப்பாள் என ஏக்கத்துடன் நான் அவள் சென்று கொண்டிருப்பதை பார்த்துக் கொண்டு நின்றிருப்பேன் என அவள் மனதுக்குள் வெகுளியாய் நினைத்துக் கொண்டிருக்கலாம். அவள் கோபமாக இதைச் சொல்லிவிட்டு சென்றிருந்தாள்.

‘ஐ ஹேட் யூ. நாம ரெண்டுபேரும் நண்பர்களாகவே இருந்திருக்கலாம்”

அவளுக்கு ஐ ஹேட் யு சொல்ல காரண காரியங்கள் எல்லாம் தேவையில்லை. பத்து நிமிட காலதாமதம் போதும். 9 மணிக்கு போன் செய்ய வேண்டிய நான் 9:10க்கு போன் செய்யக் கூடிய அளவிற்கு தைரியசாலி இல்லையென்றாலும், ஒரு வித மரண தைரியத்தில், அவளால் என்னை என்ன செய்துவிட முடியும் என்கிற போதையில் ஆண்வர்க்கமாகிய நான், பெண் வர்க்கத்தைச் சேர்ந்த அவளை அடக்கி ஆளப்பிறந்தவன் என்கிற மூடநம்பிக்கையில், ஒரு குருட்டுத் தைரியத்தில், 10 நிமிடங்கள் இதயம் படபடக்க காலம் கடத்தி 9:10க்கும் போன் செய்தேன்.

என் மீது ஆண்டவனுக்கு கருணையா, அவளுக்கு கருணையா என்று தெரியவில்லை. வெறும் 30 நிமிடங்கள் மட்டுமே திட்டித் தீர்த்தாள். அவளுக்கு தூக்கம் வந்து விட்டது போல. யாரோ ஒரு தீர்க்கதரிசி அவளிடம் இவ்வாறு கூறியிருக்கிறார் போல. இரவு நேரத்தில் தூக்கம் கெட்டுப் போனால் முக அழகு கெட்டுவிடும் என்று. அந்த மகானுக்கு எனது நெஞ்சார்ந்த நன்றியை கூறிக் கொண்டேன். ஆனால் சூரியன் மறுநாளும் உதிக்கும் என்பதை நான் எப்படி மறந்து போனேன் என்று தெரியவில்லை. எதார்த்தமாக அவள் கூப்பிட்டாளே என மதித்து கோவிலுக்குச் சென்றால் 90 நிமிடங்கள் மூச்சு விடாமல் திட்டுகிறாள். இறுதியாக அவள் இவ்வாறு கூறிவிட்டுச் சென்றாள்.

‘ஐ ஹேட் யு. என் மூஞ்சியிலேயே முழிக்காத’

‘சரி’

‘என்ன சரியா’

‘ஆமா…………. சரிதான்’

‘பளார்…’

திரும்பிப் பார்க்காமல் சென்று கொண்டிருந்தாள்.

அவளுக்கு எப்பொழுதுமே என் கன்னத்தில் செல்லமாக தட்டுவது என்றால் பிடிக்கும். ஆனால் அவள் துணிகளை இப்பொழுதெல்லாம் அவளே துவைக்கிறாள் போல. அவள் கைகளில் சற்று பலம் அதிகரித்து விட்டதை என்னால் உணர முடிகிறது. இடது காதில் ஏதேதோ வித்தியாசமான ரீங்காரம் எல்லாம் கேட்கிறது. அந்த சம்பவத்தை யாரும் பார்க்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

—————————–

அவள் : இரண்டாவது திருமணம் செய்து கொள்வதைப் பற்றி நீ என்ன நினைக்கிற

அவன் : இன்னொருமுறை என் காதில் விழும்படி இரண்டாவது திருமணம் என்கிற வார்த்தையை உபயோகிக்காத.

அவள் : உன்னால முடிஞ்சா பழைய தமிழ் படங்கள் பார்ப்பதை கொஞ்சம் குறைச்சிக்கோ

அவன் :ஏன்

அவள் : சரோஜாதேவி, சிவாஜிகிட்ட சொல்ற டயலாக்க எல்லாம் என்கிட்ட சொல்லிகிட்டு இருக்க

அவன் : ஹூ இஸ் சரோஜா தேவி (2 நிமிட மவுனத்திற்குப் பிறகு)

அவள் : உனக்கு 2வது வாய்ப்பு தர்றேன். 2வது திருமணத்தை பற்றி உன்னோட அபிப்பிராயத்தை சொல்லு

அவன் : (மனதிற்குள்ளாக) (உயிரே போனாலும் பயத்தை மட்டும் வெளியில காட்டக் கூடாதுடா, கேஷுவலாக இரு. அதுதான் ஆம்பிளைக்கு அழகு)

அவள் : காதுல விழாத மாதிரி நடிக்கிறது எல்லாம் பழைய ட்ரிக்

அவன் : இல்ல, நான் ட்ரிக் எதுவும் பண்ணல, காது நல்லாத்தான் கேக்குது. யோசிச்சுகிட்டு இருக்கேன். (அவள் பார்வையை நிலைகுத்தி வைத்திருப்பது சிந்தனையை கலைத்தது)

இரண்டாவது திருமணம் செய்து கொள்ளலாம் என்று கூறினால் என்னை மறந்துவிட்டு இன்னொரு பெண்ணை திருமணம் செய்து கொள்ளக் கூடிய அளவிற்கு நீ கொடியவனா? என்று கேட்பாள். இல்லை 2வது திருமணம் எல்லாம் செய்து கொள்ளக்கூடாது. கடைசிவரை ஒருவருக்கு மட்டும் தான் வாழ்க்கையில் இடம் கொடுக்க வேண்டும் என்று கூறினால், ‘நீ செத்து போயிட்டா நான் வேற யாரையும் கல்யாணம் பண்ணிக்கக்கூடாது, உன்னையே நெனைச்சுக்கிட்டு மூளியா வாழனும். முடிஞ்சா உடன் கட்டை ஏறச் சொல்வீங்க, நீ சரியான ஆணாதிக்கவாதியாடா’ என்று பொறிந்து தள்ளுவாள். இரண்டாவது திருமணத்தை மறுப்பதற்கும், ஏற்றுக்கொள்வதற்கும் நடுவில் அல்லது அப்பாற்பட்டு ஏதேனும் பதில் கூற வேண்டும். அதுவும் 2 நிமிடத்திற்குள் கூற வேண்டும். யோசி……யோசி………. யோசி……

அவன் : ம்ம்ம்… 2 வது திருமணம் செய்து கொள்ளலாம். முதல் மனைவி உயிரோடு இல்லையென்றால் மட்டுமே…

(ஆச்சரியப்படத்தக்க வகையில் அவள் கோபப்படவில்லை)

அவள் : எத்தனை வருஷம் கழிச்சு 2வது கல்யாணம் பண்ணிக்குவ

அவன் : ஒரு 2 வருஷம்

அவள் : எனக்கு வாங்கிக் கொடுத்த மாதிரி பிங்க் கலர் சுடிதார் எல்லாம் அவளுக்கும் வாங்கிக் கொடுப்பியா (அவள் சிரித்துக் கொண்டே கேட்டாள்)

அவன் : சே…….சே…….. அந்த சுடிதார் சைஸ் அவளுக்கு பத்தாது, அவ கொஞ்சம் குண்டு

அவள் : பளார்……. (15 வினாடிகள் கேப்) பளார்…….(5 விநாடி)…….. பளார்

அவன் : (நான் மனதிற்குள்ளாக அந்த குண்டு நடிகையை நினைத்துக் கொண்டு பேசிவிட்டேன்…..எப்படி போட்டு வாங்குகிறாள் ….. ஷி இஸ் பிரில்லியண்ட்

அவளிடம் சொல்ல வேண்டும் வீட்டில் சப்பாத்தி மாவு தேய்க்கும் வேலையை எல்லாம் அவள் அம்மாவிடம் கொடுத்துவிடுமாறு சொல்ல வேண்டும். வரவர ஒரு குத்துச் சண்டை வீராங்கனையைப் போல் மாறி வருகிறாள்.

————————————

இரவு 8:03க்கு அவளிடமிருந்து கைப்பேசி அழைப்பு வந்தது. பிரதமர் அலுவலகத்தில் இருந்து வரும் தொலைபேசி அழைப்புக்கு எவ்வளவு மரியாதை கொடுக்கப்படுமோ, அவ்வளவு பயபக்தியுடன் எடுத்து ஹலோ என்று கூறினேன். மறுமுனையில் பதற்றத்துடன் அவள்.

‘சீக்கிரம் விஜய் டி.வி. பாரு’

கைகள் நடுங்கியதில் 2 முறை ரிமோட்டை கீழே போட்டுவிட்டேன். கடவுளே 5 விநாடிகள் வீணாக போய்விட்டதே, என்ன செய்வேன் நான்.

பழைய குண்டு சீரியல் நடிகை ஒருத்தி சமையல் நேரம் ப்ரொகிராம் ஒன்றை நடத்திக் கொண்டிருந்தார்.

அவள் : முழுசா இந்த ப்ரோகிராம பாருடா, அந்த ரெசிப்பி எப்படி பண்ணனும்னு கத்துக்க

அவன் : ஐயோ எனக்கு கேஸ் அடுப்பு கூட பத்த வைக்கத் தெரியாது. எனனைப் போய் சமையல் புரோகிராம் எல்லாம் பாக்கச்சொல்ற. அதுவுமில்லாம எனக்கு நெருப்புல கண்டம்னு ஜோசியர் சொல்லியிருக்காரு.

அவள் : இல்லடா உனக்கு செருப்புலதான் கண்டம். அந்த ஜோசியர் மாத்தி சொல்லிட்டாரு.

அவன் : (மனதிற்குள்ளாக) பார்ப்பதற்கு த்ரிஷா போல ஸ்லிம்மாக அழகாக இருக்கிறாள் என ஒன்றரை வருடங்களாக, இருக்கின்ற வேலையை எல்லாம் விட்டுவிட்டு அவள் பின்னே சுற்றி, பரிதாபப்பட வைத்து, ஏக்கம் கொள்ளச் செய்து காதலிக்க வைத்தால் அவள் இதுவும் சொல்வாள், இன்னமும் சொல்வாள். இதையெல்லாம் சும்மா விடக்கூடாது. ஆரம்பத்திலேயே கிள்ளி எறிந்துவிட வேண்டும். அவளுக்கு சரியான பதிலடி கொடுக்க வேண்டும். ஒரு வார்த்தையில் அவளை அமைதியாக்கிவிட வேண்டும். என்னை எதிர்த்து இனி ஒரு வார்த்தை கூட பேசக்கூடாது அவள். பேசுவது என்ன பேசுவது… பேசுவதற்கு நினைத்துக் கூட பார்க்கக் கூடாது…………அவளை……)

அவன் : இப்ப என்ன அந்த ப்ரோகிராம் பார்க்கனும் அவ்வளவுதான,…. நானே என் கையால அந்த டிஷ்ஷ செஞ்சு உனக்கு எடுத்துக்கிட்டு வருவேன். அத நீ சாப்டே தீரணும். இது என் ஆர்டர். அதுவரை ஒரு வார்த்தை பேசக் கூடாது நீ. அமைதியா இருக்கணும் புரியுதா.

——————————-

அவள் : எனக்கு வீட்ல மாப்ள பாத்துட்டாங்க. அவர் ஸ்டேட்ஸ்ல இருக்காரு. பொலாரிஸ்ல ப்ரொகிராம் சி.இ.ஓ.வா இருக்காரு.

அவர்………….. அந்த வார்த்தைதான் என் தலையில் பேரிடியாக இறங்கியது.

அமெரிக்காவானாலும் சரி, அமெரிக்க மாப்பிள்ளையானாலும் சரி யார் தலையிலாவது குண்டை தூக்கி போடவில்லை என்றால் தூக்கம் வராது போல. அதுவும் சாதாரண குண்டு அல்ல. அணுஆயுதமாக தூக்கி போட்டுக் கொண்டே இருப்பார்கள் ஒன்றன் பின் ஒன்றாக. இவர்களுக்கெல்லாம் அமெரிக்காவில் பெண்ணே கிடைக்காதா? சம்பளம் மட்டும் அமெரிக்க சம்பளம் வேண்டுமாம். பெண் என்று வந்துவிட்டால் இந்தியப் பெண்கள்தான் வேண்டுமாம். இந்திய பெண்களையும் சும்மா சொல்லக் கூடாது. இந்திய மாப்பிள்ளைகள் மட்டும்தான் ஒழுக்கத்தில் சிறந்த ராமனாக இருக்க வேண்டும். யுனைட்டட் ஸ்டேட்ஸ் மாப்பிள்ளை அப்படி இப்படி என்று இருந்தாலும் நோ அப்ஜெக்சன். எப்படி ஒரு நொடியில் மாறி விடுகிறார்கள். இதைத்தான் சூழ்நிலைக்குத் தகுந்தாற் போன்று வாழும் தகுதி படைத்த உயிரினம் என்று டார்வின் சொல்லியிருக்கிறாரோ என்னவோ. ஒருவேளை டார்வின் தன் காதலியைப் பற்றி எழுதி வைத்த குறிப்புகள் தவறுதலாக அறிவியல் உலகத்தில் பிரபலமாகிவிட்டதோ என்னவோ? யார் கண்டது.

ஆனால், அவள் ஏன் அவர் என்று அவனை குறிப்பிட்டாள். இவ்வளவு நாள் என்னை அவனே, இவனே என்று குறிப்பிட்டது எல்லாம் அன்பினால் இல்லையா? உண்மையிலேயே என்னுடைய தகுதியாக நினைத்து எனக்கு கொடுத்த மரியாதைகள் தான் அவைகளா? ஒரு நொடியில் அவராகிப்போன அவரை நான் சந்தித்தே ஆக வேண்டும். அவர், எப்படி அவராகிப் போனார் அவளுக்கு…ஒரே நாளில் மரியாதைக்குரியவராகிப் போனார் அவர்ர்ர்ர்….அவள் அவளுக்குரிய அவரை தேர்ந்தெடுத்துவிட்டாள். எப்பொழுது அது நடந்தது என்றுதான் தெரியவில்லை.

அவர்……..அவர்………அவர் அமெரிக்காவில் உயர்பதவியில் இருக்கிறார். அவர் வாங்கும் சம்பளம் நிச்சயம் நினைத்துக் கூட பார்க்க முடியாததாக இருக்கும். அவரால் அவளுடைய பல கனவுகளை நிஜமாக்கி விட முடியும். அவரால் அதிக கவுரவத்தை அவளுக்கு கொடுத்துவிட முடியும். நிச்சயம் இந்த வாழ்க்கை அவளுக்கு இனிமையானதாக முடிந்துவிடும். அவளுடைய அறிவிப்பு என்னவென்றால், அவர்…….அவர் என்று சொல்லக்கூடிய முழுமையான தகுதியுடன் இருக்கிறார். அதனால் அவரை அவர் என்று அழைத்து கவுரவமளிக்கிறாள்.

தோற்றுப் போவதற்கு முன்னாலேயே தோல்வியை ஒப்புக்கொள் என்று கூறுவது போல் இருக்கிறது. நீ ஆட்டத்துக்கு லாயக்கில்லை, களத்தை விட்டு வெளியே போ என பொடனியில் கையை வைத்து தள்ளுவது போல் இருக்கிறது. எது உண்மை, இவ்வளவு நாள் நடந்தது எல்லாம் கனவா?

அவள் உரிமையுடன் என்னைப் பார்த்து ஐ ஹேட் யூ என்று கூறினாள்.

அவள் உரிமையுடன் கன்னத்தில் அறைந்தாள்

அவள் உரிமையுடன் சமைத்துப் போடக் கூறினாள்

அவள் உரிமையுடன் மற்றொரு பெண்ணுக்கு உன் வாழ்க்கையில் இடமில்லை என்று கூறினாள்.

உரிமையுடன் என்னை விட்டு விலகிவிடு என்று கூறுவது கூட அப்படித்தானா? நீ வாழ்க்கை என்னும் பந்தயத்தில் தோற்றுப் போனாய் அதனால் களத்தைவிட்டு வெளியேறு என்று கூறுவது போல. ஒருவேளை நான் வேகமாக ஓடி வெற்றி பெற்றிருந்தால் கூட, வெற்றி பெற்றதனால் மட்டும்தான் அவள் எனக்கு என்று ஆகுமா? ஒருவர் மேல் ஒருவர் வைத்திருக்கும் நம்பிக்கை என்பது இவ்வளவுதானா?

அந்த அவரிடம் கேட்க வேண்டும். அவரை விட இன்னொரு பெரிய அவர்ர்ர் அமெரிக்காவில் இருக்கிறாரா என்று. அவரை அவளுக்கு அறிமுகப்படுத்தி வைத்துவிடாதே என்றும் சொல்ல வேண்டும். இல்லையென்றால் வீணாக அவள் குழம்பிவிடக் கூடும், எந்த அவரை தேர்ந்தெடுப்பது என்று….அவர் அதைப்பற்றி கவலைப்படாதவராகக் கூட இருக்கலாம். அவருக்கு நிறைய அவள்கள் பற்றி தெரிந்திருக்கலாம். வாழ்க்கையில் நிறைய கற்றுக் கொள்ள வேண்டியதிருக்கிறது. மேட் இந்திய பொருட்கள் மட்டுமல்ல, மேட் இன் இந்திய ஆண்கள் கூட இரண்டாம் பட்சமாகத்தான் இருக்கிறார்கள்.

எவ்வளவு புலம்பினாலும் ஒரு விஷயம் மட்டும் அழுத்தமான உண்மை. அவள், அவரை ஏற்றுக் கொண்டாள்.

அந்த பாட்டு ஓடிக்கொண்டிருந்த போது டி.வி.யை உடைக்க வேண்டும் என்பது போல ஆவேசம் பிறந்தது.

‘எங்கிருந்தாலும் வாழ்க…….’

யாராவது இப்பொழுது செருப்பால் அடித்தால் நன்றாக இருக்கும் என்று தோன்றுகிறது.

Print Friendly, PDF & Email

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *